சிக்கன வாழ்வு (சிக்கனம், மன நிறைவு மற்றும் வீண் விரயம் தொடர்பானது) بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ كُلُوا وَ اش۟رَبُوا وَ لَا تُس۟رِفُوا இந்த வசனம் சிக்கன வாழ்வுக்கான திட்டவட்டமான ஏவல்களோடும் வீண் விரயத்துக்கெதிரான தெளிவான விலக்கல்களோடும் மிக முக்கியமானதொரு வாழ்க்கைத் தத்துவத்தைக் கற்றுத் தருகின்றது. இதில் ஏழு அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Lem'alar
The Nineteenth Gleam
பேரன்பும் அருளும் மிக்க படைப்பாளனாகிய ரப்புல் ஆலமீன் மனித குலத்துக்கு அருளிய அருட்கொடைகளுக்காக அவனிடம் நன்றியை எதிர்பார்க்கிறான். வீண்விரயமானது நன்றிக்கு நேர் முரணான, அருட்கொடைகளை அலட்சியம் செய்கின்ற ஒரு செயலாகும். ஆம், சிக்கன வாழ்வானது தன்னளவிலேயே ஒரு வகை உள்ளார்ந்த நன்றியும் அருட்கொடைகளில் பொதிந்திருக்கும் இறை கருணைக்குச் செலுத்தும் கண்ணியமுமாகும். அதேவேளை, பரக்கத்துக்கான காரணியாகவும் உடலுக்கு ஒளஷதம் போன்ற ஓர் ஆரோக்கியக் காரணியாகவும் உள ரீதியான யாசகத்தினால் ஏற்படும் அவமானத்திலிருந்து பாதுகாப்பளிக்கும் ஒரு கண்ணியக் காரணியாகவும் திகழ்கின்றது. மேலும், அருட்கொடைகளோடு ஒட்டியுள்ள சுவைகள், இன்பங்களை, குறிப்பாக மறைவான இன்பங்களை அனுபவிக்கச் செய்யும் வலுவானதொரு காரணியாகவும் திகழ்கின்றது. வீண்விரயத்தைப் பொருத்தவரை அது மேற் கூறப்பட்ட உண்மைகளுக்கு நேர் முரணானது என்பதால் அதன் விளைவுகளும்கூடப் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன.
சர்வஞானமிக்க படைப்பாளன் மனித உடலைப் பரிபூரணத்துவமான ஒரு மாளிகை போன்று அல்லது மிகவும் நேர்த்தியான ஒரு நகரம் போன்று படைத்துள்ளான். நாவிலுள்ள சுவையுணர்வானது அந்த மாளிகையின் ஒரு வாயிற் காவலனாகும். இந்த வாயிற்காவலன் வாய்க்கு வரும் பண்டம் தொடர்பான தகவல்களைத் தொலைத்தொடர்பு சாதனங்களின் இணைப்புக் கம்பிகள் போன்று செயற்படும் நரம்புநாளங்களூடாகத் தேவையான இடங்களுக்கு வழங்குகின்றது. அந்த உணவு உடம்புக்கும் இரைப்பைக்கும் அவசியமற்றதெனில் தடை உத்தரவு பிறப்பித்து வெளியேற்றிவிடும். சில வேளை அந்த உணவு உடலுக்கு எவ்வித நன்மையும் அற்ற தீங்கான அல்லது கசப்பான ஒரு பொருளெனில் உடனடியாக அதனை வெளியேற்றி அதன் மீது காறித்துப்பிவிடும். ஆம், வாயிலுள்ள சுவை உணர்வானது வெறுமனே ஒரு வாயிற்காவலனாகும். இரைப்பையைப் பொருத்தவரை உடலின் நிர்வாக விடயத்தில் அதுவே அரசனாகும். அந்த அரண்மனைக்கு அதன் அரசனுக்காக வரும் அன்பளிப்புக்களின் பெறுமதி நூறு தங்கம் எனில் வாயிற் காவலனுக்கான அன்பளிப்பு என்ற வகையில் அதிக பட்சம் ஐந்து தங்கம் போதுமானதாகும். அதை விட அதிகரிக்க முடியாது. அப்போதுதான் வாயிற் காவலன் அகம்பாவம் கொண்டு, தனது பணியை மறந்து அதிகமான அன்பளிப்புகளைக் கொடுக்கும் கலகக்காரர்களைத் தன் இஷ்டத்துக்கு அரண்மனைக்குள் அனுமதிக்காதிருப்பான். ஆம், இந்த உண்மையின் அடிப்படையில் இரண்டு கவளம் உணவை எடுத்துக்கொள்வோம். ஒன்று பால் முட்டை போன்ற ஊட்டம் நிறைந்த, செலவின் அடிப்படையில் நான்கு காசு பெறுமதியான ஒரு கவளம் உணவு. மற்றது மிக உயர்தரமான, செலவின் அடிப்படையில் நாற்பது காசு பெறுமதியான ஒரு கவளம் இனிப்புப் பண்டம். இந்த இரண்டு கவளங்களிலும் வாயினுள் நுழைய முன்னர் தோற்றத்தளவில் பாரிய வேறுபாடுகள் கிடையாது. ஒன்றையொன்று ஒத்தவையாகும். தொண்டைக் குழியைத் தாண்டிய பிறகு உடலைப் போசிப்பதிலும் எந்த வேறுபாடுகளும் கிடையாது. சிலவேளை, நான்கு காசு பெறுமதியான முட்டை மிகவும் சிறப்பாகப் போசிக்கும். வெறுமனே நாவிலிருக்கும் சுவை உணர்வைத் தடவிக் கொடுக்கும் விடயத்தில் அரை நிமிட வேறுபாடு உள்ளது. அரை நிமிட வேறுபாட்டுக்காக நாலு காசிலிருந்து நாற்பதுக்குத் தாவுவது எப்படிப்பட்ட அர்த்தமற்ற, இழப்பு மிக்க வீண்விரயம் என்பதை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு, அரண்மனையில் அரசனுக்கு வரும் அன்பளிப்பு நாலு காசு பெறுமதியானதாக இருக்கும் போது, வாயிற் காவலனுக்கு மேலும் ஒன்பது பங்கு அதிகமான அன்பளிப்பைக் கொடுப்பது வாயிற்காவலனைத் தன் இஷ்டத்துக்குச் செயற்பட வைக்கும். தானே அரசன் என்ற நினைப்பில் செயற்பட ஆரம்பிப்பான்; அதிக அன்பளிப்பும், சுவையும் கொடுப்பவர்களை உள் நுழைய அனுமதிப்பான்; கலகம் ஆரம்பமாகும்; நெருப்பு மூட்டப்படும். இறுதியில் மனிதன் வைத்தியரின் காலில் விழுந்து “வெப்பத்தைத் தணித்து விடுங்கள், நெருப்பை அணைத்து விடுங்கள்” என்று மன்றாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவான். ஆம், சிக்கனமும் மன நிறைவும் இறை ஞானத்தை அடியொட்டிய செயற்பாடுகளாகும். அவ்விரு பண்புகளும் சுவை உணர்வை வாயிற் காவலன் என்ற அந்தஸ்தில் வைத்து அதற்குரிய அன்பளிப்பைக் கொடுக்கும். மாறாக வீண்விரயம் இறை ஞானத்துக்குப் புறம்பான செயற்பாடு என்பதால் விரைவாகவே அதற்கான தண்டனையைப் பெற்றுக்கொள்ளும்; வயிற்றைக் குழப்பி உண்மையான பசியுணர்வை மழுங்கடிக்கச் செய்துவிடும்; வகை வகையான உணவுகளுக்கு முன்னால் வரும் செயற்கையான போலிப் பசியுணர்வால் உண்ணத் தூண்டும்; சமிபாடின்மைக்குக் காரணமாக அமையும்; இறுதியில் மனிதனை நோயாளியாக்கிவிடும்.
இரண்டாவது அம்சத்தில் சுவை உணர்வு ஒரு வாயிற் காவலனாகும் என்று கூறினோம். ஆம்! பொடுபோக்குக்காரர்களுக்கும் ஆன்மீக ரீதியான பக்குவத்தை அடையாதவர்களுக்கும் இறைவனுக்கு நன்றியுடையவர்களாக வாழ்வதில் பின்தங்கியுள்ளவர்களுக்கும் அது ஒரு வாயிற் காவலனுடைய நிலையை ஒத்ததேயாகும். அதன் சுவையுணர்வைப் போஷிப்பதற்காக வீண்விரயம் செய்யாதிருப்பதும் செலவை ஒன்றிலிருந்து பத்தாக அதிகரிக்காதிருப்பதும் அவசியமானதாகும். ஆனால், உண்மையாகவே உள்ளத்தில் இறைவனுக்கான நன்றியுணர்வை சுமப்பவர்கள், சத்தியவான்கள், ஆத்மீகவாதிகள் போன்றவர்களின் சுவை உணர்வானது -ரிஸாலே-இ நூர் தொகுப்பின் ஆறாவது வார்த்தையிலுள்ள மதிப்பீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று- ரஹ்மத்தின் வெளிப்பாடாகப் பூமியெங்கும் வகை வகையான ஆகாரங்களைத் தயாரிக்கும் சமையல் கூடங்களுக்கான ஓர் உயர்நிலைக் கண்காணிப்பாளன் அல்லது பரிசோதகன் என்ற அந்தஸ்தை அடைகின்றது. இந்தச் சுவையுணர்வானது, தன்னகத்தே கொண்டுள்ள உணவுப் பண்டங்கள் எண்ணிக்கையளவு ஏராளமான அளவீடுகளின் உதவியுடன் வகை வகையான இறை அருட்கொடைகளை இனங்கண்டு, எடைபோட்டு ஓர் ஆத்ம நன்றியுணர்வுடன் கூடவே உடலுக்கும் இரைப்பைக்கும் தகவல் கொடுக்கின்றது. ஆம்! இப்படியான சுவை உணர்வு வெறுமனே பௌதீக உடலைச் சார்ந்ததல்ல. மாறாக அது உள்ளம், ஆத்மா, அறிவு, பகுத்தறிவு என்பவற்றையும் சார்ந்துள்ள காரணத்தினால் இரைப்பையை விட அந்தஸ்தில் உயர்ந்ததாகும். வீண்விரயம் செய்யாதிருக்கும் நிபந்தனையுடன், உங்களை இழிவுக்கும் யாசகத்துக்கும் இட்டுச் செல்லாத வகையில், இறைவனுக்கு நன்றி செலுத்தும் கடமையை நிறைவேற்றுவதற்காகவும் வகை வகையான இறை அருட்கொடைகளை இனங்கண்டு அறிந்துகொள்வதற்காகவும் அனுமதிக்கப்பட்ட சுவைகளை நீங்கள் பின் தொடரலாம். மேலும் சுவை உணர்வைச் சுமந்திருக்கும் நாவை இறைவனுக்கான நன்றியில் திளைத்திருக்கச் செய்வதற்காகவும் அறுசுவை உணவுகளைத் தெரிவு செய்யலாம். இந்த உண்மையை கௌதுல் ஆஃஸ்ம் ஷெய்க் அப்துல் காதிர் ஜெய்லானி அவர்களது வாழ்வில் நிகழ்ந்த கராமத் பொருந்திய ஒரு சம்பவம் நமக்குத் தெளிவுபடுத்தும். ஒரு சமயம் அன்னாரிடம் கிராமப் புறத்தைச் சேர்ந்த வயது முதிர்ந்த ஒரு பெண்ணின் ஒரே மகன் ஆன்மீகப் பயிற்சி பெற்று வந்தான். மதிப்புக்குரிய, ஆனால் சற்று முரட்டு சுபாவமுள்ள அந்தப் பெண் ஒரு முறை தனது புதல்வனைச் சந்திக்கச் சென்ற வேளை அவன் தனது அறைக்குள் காய்ந்து போன ஒரு ரொட்டித் துண்டை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். குறை உணவால் மெலிந்து போன அவனைக் கண்டு தாயுள்ளம் வருந்தியது. பின்னர் அதுபற்றி முறையிடுவதற்காக ஷெய்கிடம் சென்ற போது, அங்கே கௌதுல் ஆஃஸம் அவர்கள் ஒரு பொறித்த கோழியைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்ட அவள் தனது முரட்டு சுபாவம் காரணமாக, “ஷெய்க் அவர்களே! அங்கே எனது மகன் பசியால் செத்துக் கொண்டிருக்கிறான். நீங்களோ இங்கே பொறித்த கோழி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றீர்கள்” என்றாள். பதிலுக்கு கௌதுல் ஆஃலம் அவர்கள் கோழியைப் பார்த்து “கும் பிஇதினில்லாஹ் - அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு எழுந்திரு” என்று கூறினார். உடனே சமைக்கப்பட்ட அந்தக் கோழியின் முட்கள் ஒன்றோடொன்றிணைந்து முழுக் கோழியாக உணவுத் தட்டிலிருந்து குதித்த சம்பவம் உண்மைக்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமான அறிவிப்பாளர்களூடாக வியக்கத்தக்க கராமத்துகள் விடயத்தில் உலகளவில் பிரசித்தம் பெற்ற ஷெய்க் கௌதுல் ஆஃஸம் அவர்களது ஒரு கராமத்தாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிறகு ஷெய்க் அவர்கள் அந்தப் பெண்ணிடம் இவ்வாறு கூறினார்: “உனது மகனும் எப்போது இந்நிலையை அடைகின்றானோ அப்போது அவனும் கோழி சாப்பிடட்டும்.” ஆம். ஷெய்க் அவர்களது இந்தக் கூற்றின் அர்த்தமானது “எப்போது உனது மகனின் ஆன்மா உடம்பின் மீதும் மனசாட்சி நஃப்ஸின் மீதும் அறிவு வயிற்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றதோ, எப்போது அறுசுவை ஆகாரங்களை இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக ஆகுவதற்காக வேண்டுகின்றானோ அப்போது அவனும் சுவையான உணவுகளைச் சாப்பிடலாம்” என்பதாகும்.
“சிக்கனமாக வாழ்பவர் வாழ்வாதார விடயத்தில் குடும்பக் கஷ்டத்தை அனுபவிக்க மாட்டார்” என்ற அர்த்தத்தில் வரும் لاَ يَعُولُ مَنِ اقْتَصَدَ என்ற ஹதீஸின் அடிப்படையில் சிக்கனம் பேணுபவன் வாழ்வாதாரங்களுடன் தொடர்பான விடயங்களில் குடும்பக் கஷ்டங்களுக்கு ஆளாவது மிகவும் அரிதாகவே இருக்கும். ஆம், சிக்கனமானது பரக்கத்துக்கான வலுவான ஒரு வஸீலாவாகவும், அழகிய வாழ்வாதாரத்துக்கான ஒரு நிபந்தனையாகவும் உள்ளது என்பதற்கான ஆதாரங்களை எண்ணி முடிக்க இயலாது. உதாரணமாக, இங்கு எனது உதவிக்காக நிற்கும் நெருக்கமான தோழர்களின் சாட்சியுடன் எனது சொந்த வாழ்வில் கண்ட ஒரு விடயத்தை கூறுகிறேன். சிக்கனத்தின் காரணமாக, ஆகார விடயங்களில் சில வேளைகளில் ஒன்றுக்குப் பத்து மடங்கு அபிவிருத்தியை, பரக்கத்தைக் கண்டுகொண்டேன். எனது தோழர்களும் கண்டு கொண்டார்கள். ஒன்பது வருடங்களுக்கு முன்னர் (தற்போது முப்பது வருடங்கள்) என்னோடு புர்தூர் பிரதேசத்துக்கு நாடு கடத்தப்பட்ட தலைவர்களுள் சிலர் நான் பணமின்றி வறுமைக்கும் கஷ்டங்களுக்கும் முகம்கொடுத்து இழிவடையும் நிலைக்குச் சென்றுவிடக்கூடாது என்ற எண்ணத்தில் தமது ஸக்காத் பணத்தை எடுத்துக்கொள்ளுமாறு என்னை மிகவும் வற்புறுத்தினர். நான் அவர்களிடம் “உண்மையில் என்னிடம் இருக்கும் பணம் மிகக் குறைவானதாகும். ஆனால் நான் சிக்கனமாக வாழ்கிறேன். மன நிறைவோடும் திருப்தியோடும் வாழப் பழகிவிட்டேன். அந்த வகையில் நான் உங்களை விட செல்வந்தனாவேன்” என்று கூறிவிட்டு அவர்களின் வற்புறுத்தல்களை நிராகரித்துவிட்டேன். கூற வந்த விடயம் என்னவென்றால், இரண்டு வருடங்களின் பின்னர் எனக்கு ஸக்காத் தர முன் வந்தவர்களுள் சிலர் சிக்கனமின்மை காரணமாகக் கடனாளியாகினர். புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, அதனைத் தொடர்ந்து மேலும் ஏழு வருடங்களுக்கு கைவசமிருந்த குறைவான அந்தப் பணம் சிக்கன வாழ்வு காரணமாக எனக்குப் போதுமாகியது. மக்களிடம் கை நீட்டுகின்ற நிலை எனக்கு ஏற்படவில்லை. மேலும், “மனிதர்களிடம் தங்கி வாழாதிருத்தல்” என்ற எனது ஒரு வாழ்க்கைக் கோட்பாட்டை மீறாதிருக்க அது எனக்கு உதவியாக இருந்தது. ஆம், சிக்கனமாக வாழாதவன் இழிவையும் உள்ளார்ந்த யாசகத்தையும் வறுமையையும் அடைந்து கொள்வதற்கான வேட்பாளனாகிறான். இன்றைய காலத்தில் வீண்விரயத்துக்குக் காரணமாகும் செலவினங்கள் விலை கூடியதாகும். சிலசமயம் விலையாக மானம் மரியாதையும் கண்ணியமும் இலஞ்சமாகக் கேட்கப்படுகின்றது. சிலவேளை, புனிதமான மார்க்கமும் கூட அதன்பொருட்டு அடகு வைக்கப்படுகின்றது. இறுதியில் சாபக்கேடான ஒரு தொகைப் பணம் தரப்படுகின்றது. அதாவது, ஆன்மீக ரீதியான நூறு தீனார் இழப்பால் சட ரீதியான நூறு தீனார் பெறுமதியான ஒரு பொருள் வாங்கப்பட முடியுமாக உள்ளது. ஆனால், சிக்கனத்தைக் கடைப்பிடித்து, அடிப்படைத் தேவைகளை அளவாகக் குறைத்து, اِنَّ اللهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ என்ற வசனத்தில் பொதிந்துள்ள தாத்பரியத்தின் பிரகாரமும்وَمَا مِنْ دَۤابَّةٍ فِى اْلاَرْضِ اِلاَّ عَلَى اللهِ رِزْقُهَا என்ற வசனத்தின் தெளிவான கருத்தின் அடிப்படையிலும் வாழ்பவர்கள் நினைத்துப் பாராதவிதமாக வாழ்க்கைக்குத் தேவையான வாழ்வாதாரத்தைப் பெற்றுக் கொள்வார்கள். ஏனெனில், மேற்படி வசனங்கள் இறை வாக்குறுதிகளாகும். ஆம்! வாழ்வாதாரம் இரண்டு வகையானதாகும். முதலாவது: அடிப்படை வாழ்வாதாரம். இது வாழ்வதற்குப் போதுமானதாகும். மேற்படி வசனத்தின் அடிப்படையில் இந்த வாழ்வாதாரம் இறை உத்தரவாதத்துக்குற்பட்டதாகும். மனிதனுடைய தெரிவுத் துஷ்பிரயோகம் குறுக்கிடாவிட்டால் அந்த அடிப்படை ஆகாரத்தை எந்நிலையிலும் பெற்றுக் கொள்ள முடியும். மார்க்கத்தையோ மானம், மரியாதையையோ அடகு வைக்க வேண்டியதில்லை. இரண்டாவது: தோற்றுவிக்கப்பட்ட வாழ்வாதாரமாகும். துஷ்பிரயோகம் காரணமாக அத்தியாவசியமற்றவைகளும் அத்தியாவசியமான தேவைகள் என்ற நிலையை அடைந்து, பகட்டு வாழ்க்கை என்ற வியாதியினால் வேரூண்டி, அதுவே பழக்கதோஷமாகவும் மாறி தவிர்க்க முடியாத நிலையை அடைகின்றது. இந்த வாழ்வாதாரம் இறை வாக்குறுதிக்குட்பட்டதல்ல என்பதால் இந்த ரிஸ்க்கைப் பெற்றுக்கொள்வது குறிப்பாக இந்தக் காலத்தில் மிகுந்த செலவினமுடையதாகும். ஏனைய விடயங்களாக இருந்தால் பரவாயில்லை. ஆனால் கண்ணியத்தை அடகு வைத்து இழிவைப் பொருந்திக்கொள்வதன் மூலமும், சிலவேளை இழிந்த மனிதர்களின் காலை முத்தமிடுகின்ற அளவுக்கு உள்ளார்ந்த யாசக நிலைக்குத் தன்னை ஆளாக்கிக்கொள்வதன் மூலமும், இன்னும் சிலவேளைகளில் நித்திய வாழ்வின் விமோசனத்துக்கான ஒளியாகத் திகழும் மார்க்கத்தின் புனிதங்களை அடகு வைப்பதன் மூலமும் அந்த பரக்கத் அகன்ற, தரித்திரம் நிறைந்த பொருட்களை மனிதர்கள் அடைந்து கொள்கின்றனர். மேலும், வறுமையும் துன்ப துயரங்களும் மேலோங்கிய இந்த யுகத்தில் பசியாலும் வறுமையாலும் பீடிக்கப்பட்ட மனிதர்களுடைய வலிகளின் ஒரு பகுதி, மனசாட்சி உள்ளவர்களுக்கு மனிதாபிமானம் மூலம் தொற்றிக்கொள்கிறது. அந்த வலியானது, மேற்படி ஹராம் கலப்படமான சம்பாத்தியத்தின் மூலம் அனுபவிக்கும் இன்பங்களை -உண்மையாகவே மனசாட்சி இன்னும் இறக்கவில்லை எனில்- மென்மேலும் வேதனையாக மாற்றும். இப்படிப்பட்ட ஒரு காலத்தில் சந்தேகத்துக்கிடமான பொருட்களை அத்தியாவசிய நிலையோடு நிறுத்திக்கொள்வது கட்டாயமாகும். ஏனெனில், اِنَّ الضَّرُورَةَ تُقَدَّرُ بِقَدْرِهَا என்ற விதியின் பிரகாரம் நிர்ப்பந்த நிலையில் ஹராமான பொருட்களில் அத்தியாவசியமான அளவு மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும். மேலதிகமானதை எடுக்க முடியாது. ஆம்! கஷ்டத்தில் வீழ்ந்த மனிதன், அசுத்தமான இறைச்சியிலிருந்து வயிறு புடைக்கின்ற அளவு சாப்பிட முடியாது. மாறாக, மரணிக்காதிருக்கத் தேவையான அளவு மாத்திரமே சாப்பிட முடியும். யதார்த்தம் இவ்வாறிருக்க, பசியால் வாடும் பல நூறு மனிதர்களின் முன்னிலையில் பூரண சுவையை அனுபவித்து வயிறு முட்ட உண்டு புடைப்பது எங்கனம்? சிக்கனம் கண்ணியத்தையும் உயர்ச்சியையும் பெற்றுத்தரும் காரணியாகும் என்பதைப் பின்வரும் சம்பவம் நிரூபிக்கிறது. ஒரு சமயம் தயாள குணத்தில் உலகப் புகழ் பெற்ற வள்ளல் ஹாத்திம் தாஈ பெரும் விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்தார். அதில் தனது விருந்தினர்களுக்காக அன்பளிப்புக்களை வாரி வழங்கினார். அச்சமயம் யாரும் எஞ்சியுள்ளார்களோ என்பதை அறிந்து கொள்வதற்காக மண்டபத்திலிருந்து வெளியேறி பாலை வெளியை நோட்டமிட்டார். அங்கே ஒரு வயதான எளிய மனிதர் ஒரு பொதி முட்கள் நிறைந்த மூலிகைகளையும் சில உணவுகளையும் சுமந்து செல்வதைக் கண்டார். அந்த முட்கள் அவரது உடம்பைக் கீறி ஆங்காங்கே இரத்தம் கசிந்துகொண்டிருந்தது. ஹாத்திம் தாஈ முதியவரிடம் சென்று “இதோ ஹாத்திம் தாஈ பெரும் அன்பளிப்புக்களோடு விருந்துபசாரம் நடாத்துகிறார். அங்கே சென்றால் ஐந்து காசு பெறுமதியான இந்த மூலிகைகளுக்குப் பதிலாக ஐநூறு காசு பெற்றுக் கொள்வீர்” என்றார். அந்த முதியவர் பின்வருமாறு பதிலளித்தார்: “என்னால் இந்த முட்கள் நிறைந்த சுமையை கண்ணியத்தோடு சுமக்க முடியும். ஆனால், ஹாத்திம் தாஈயுடைய நன்றிக் கடனைச் சுமக்க முடியாது”. பின்னொரு காலத்தில் “நீங்கள் உங்களைவிட தயாளத் தன்மையிலும் கண்ணியத்திலும் உயர்ந்த யாரையும் கண்டதுண்டா?” என்று ஹாத்திம் தாஈயிடம் வினவப்பட்ட போது “அன்றைய தினம் பாலை வெளியில் சந்தித்த, மன நிறைவோடும் சிக்கனத்தோடும் வாழும் அந்த முதியவரை என்னைவிட கண்ணியத்திலும் தயாள குணத்திலும் உயர்ந்தவராகக் காண்கிறேன்” என்று பதிலளித்தார்.
கருணையாளனாகிய அல்லாஹ், தனது தயாளத்தன்மை காரணமாக மிகவும் வறிய மனிதனுக்கு மிகப் பெரிய செல்வந்தனைப் போன்றும் ஏழைக்கு அரசர்களைப் போன்றும் அருட்கொடைகளில் இருக்கும் சுவைகளை அனுபவிக்கச் செய்கிறான். ஆம்! ஓர் ஏழை பசியும் சிக்கனமும் காரணமாக ஒரு காய்ந்த ரொட்டித் துண்டிலிருந்து பெற்றுக்கொள்ளும் சுவையானது ஓர் அரசன் அல்லது செல்வந்தன் வீண்விரயம் காரணமாக ஏற்படும் அலுப்போடும் பசியின்மையோடும் உண்ணும் மிக உயர் தரமான இனிப்புப் பண்டத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் சுவையை விட அதிக சுவையைக் கொண்டதாகும். ஆச்சரியம் என்னவெனில், வீண்விரயமும் ஊதாரித்தனமும் கொண்ட சில மனிதர்கள் இப்படிப்பட்ட சிக்கனதாரிகளை “உலோபி” என்று குறைபட்டுக் கொள்கின்றனர். நிச்சயமாக அவ்வாறல்ல. சிக்கனம் என்பது கண்ணியமும் தயாளத்தன்மையுமாகும். உலோபித்தனமும் இழிவும் ஊதாரிகளின் பார்வைக்கு வள்ளல் போன்று தோற்றமளிக்கும் ஆடம்பர வாழ்வின் அகத் தோற்றங்களாகும். இஸ்பார்த்தா நகரில் எனது குடிசையில், இந்த நூலை எழுதிக் கொண்டிருந்த சமயம் நிகழ்ந்த பின்வரும் சம்பவம் இந்த உண்மைக்குப் பலம் சேர்க்கும் விதமாக உள்ளது: எனது நெறிமுறைகளுக்கும் வாழ்க்கைக் கோட்பாட்டுக்கும் முரணான வகையில், எனது மாணவர்களுள் ஒருவர் இரண்டரைக் கிலோ அளவு தேனை அன்பளிப்பாக எடுத்துக் கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார். எவ்வளவுதான் நான் பேணி வருகின்ற வாழ்க்கை முறையை அவரிடம் முன்வைத்த போதிலும் அவர் அதற்கு செவிசாய்க்கவில்லை. இறுதியில் நிர்ப்பந்த மேலீட்டால் அப்போது என்னுடன் அருகில் இருந்த மூன்று சகோதரர்களும் ஷஃபானிலும் ரமழானிலும் முப்பது நாற்பது நாட்கள் இனிப்பு சாப்பிடட்டும் என்ற எண்ணத்திலும் கொண்டு வந்த மாணவனும் நன்மையைப் பெற்றுக் கொள்ளட்டும் என்ற நோக்கத்திலும் அந்த சகோதரர்களிடம் தேனைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினேன். என்னிடமும் ஏற்கனவே ஒரு கிலோ தேன் இருந்தது. அந்த மூன்று தோழர்களும் உண்மையிலேயே இஸ்திகாமத்தை உடையவர்களாகவும் சிக்கனத்தைக் கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தனர். எனினும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளுதல், தன்னை விட மற்றவர்களுக்காகத் தாராளத் தன்மையுடன் நடந்து கொள்ளுதல் போன்ற தமது உயர் பண்புகள் காரணமாக அவர்கள் சிக்கனத்தை மறந்துவிட்டனர். மூன்றே இரவுகளில் இரண்டரைக் கிலோ தேனையும் காலி செய்து விட்டனர். நான் புன்னகைத்தவாறு “உங்கள் நாவுகளை முப்பது நாற்பது நாட்களுக்கு அந்தத் தேனினால் சுவையூட்ட நாடினேன். நீங்களோ முப்பதை மூன்றாகக் குறைத்துவிட்டீர்கள், நிறைவானதாக ஆகட்டும்!” என்று கூறினேன். நானோ என்னிடமிருந்த தேனை சிக்கனத்தோடு செலவு செய்தேன். ஷஃபான் மற்றும் ரமழான் மாதங்கள் முழுவதும் நானும் சாப்பிட்டேன். அல்லாஹ்வின் அருளால் அந்தச் சகோதரர்களுக்கும் இஃப்தார் வேளைகளில் ஒவ்வொரு பெரிய தேக்கரண்டியளவு கொடுத்தேன். இவ்வாறு அந்தப் புனிதமான நாட்களில் பெரியதொரு நன்மையைச் சம்பாதித்துக்கொள்ள அந்தச சிக்கனப் பண்பே காரணமாக அமைந்தது. எனது நிலையை அவதானிப்பவர்கள், சில வேளை எனது இந்த நடவடிக்கையைக் கஞ்சத்தனமாக எண்ணலாம். ஏனைய மூன்று சகோதரர்களின் மூன்று நாள் நிலைமையைத் தாராளத்தன்மையாகக் கணிக்கலாம். ஆனால், யதார்த்தத்தில் பார்வைக்கு உலோபித்தனம் போன்று தோன்றும் எனது அந்த நடவடிக்கைக்குப் பின்னால் உயர்ந்த ஒரு கண்ணியமும் பெரியதொரு பரக்கத்தும் மிகையானதொரு நன்மையும் மறைந்திருப்பதைக் கண்டு கொண்டிருப்பீர்கள். மேலும், அந்தத் தாராளத்தன்மை போன்று தோற்றமளிக்கும் வீண்விரயத்தைத் தொடர்ந்து அந்த நிலையிலிருந்து மீளவில்லை என்றிருப்பின் உலோபித்தனத்தை விடவும் மோசமான ஒருவகை கையேந்தும் நிலைக்கும் பிறரில் தங்கி வாழும் நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டிருக்கலாம்.
சிக்கனத்துக்கும் உலோபித்தனத்துக்கும் இடையில் பாரிய வேறுபாடு உள்ளது. பணிவானது எவ்வாறு இழி குணமான கூழைக்கும்பிடு போடுகின்ற குணத்தோடு செயலளவில் ஒத்தும், உள்ளுற வேறுபட்டும் இருக்கின்ற சிறப்புக்குரிய ஒரு பண்பாக உள்ளதோ, வகார் என்ற தலை நிமிர்ந்து நிற்கும் பண்பானது மோசமான குணமான அகம்பாவத்தோடு செயலளவில் ஒத்தும் உள்ளுற வேறுபட்டும் இருக்கின்ற சிரேஷ்டமான ஒரு பண்பாக இருக்கின்றதோ, அவ்வாறே இறைத்தூதர்களின் உன்னதப் பண்புகளுள் ஒன்றாகவும் பிரபஞ்ச வெளியில் கோலோச்சும் சர்வஞானமிக்க இறை ஒழுங்கிற்குப் பின்னாலுள்ள ஞானங்களுள் ஒன்றாகவும் திகழும் சிக்கனமானது ஈனத்தனம், கருமித்தனம், பேராசை மற்றும் அவா போன்ற இழி குணங்களின் கலவையான உலோபித்தனத்தோடு எந்தவிதத் தொடர்பும் அற்றதாகும்; வெறுமனே செயலளவில் ஓர் ஒற்றுமை இருக்கின்றது, அவ்வளவே! இந்தத் தாத்பரியத்தை நிரூபிக்கும் ஒரு நிகழ்வினை நோக்குவோம். ஸஹாபாப் பெருமக்களுள் புகழ் பெற்ற ஏழு அப்துல்லாக்களுள் ஒருவரும் நீதியின் சின்னம் உமரே ஃபாரூக் (ரழி) அவர்களது கண்ணியமிக்க மூத்த புதல்வரும் ஸஹாபா அறிஞர்களுள் தலை சிறந்த ஒருவருமான வள்ளல் அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் ஒரு முறை சந்தையில் கொடுக்கல் வாங்கலின் போது நாற்பது காசு விடயத்தில் சிக்கனம் மற்றும் வியாபாரத்தின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு பலமானதொரு வாதத்தில் இறங்குகின்றார். இதை அவதானித்த ஒரு ஸஹாபி ‘அமீருள் முஃமினீன் கலீபா உமர் (ரழி) அவர்களின் புதல்வன் நாற்பது காசுக்காக இவ்வாறு நடந்து கொள்வதா?’ என்று அங்கலாய்த்தவராக உண்மைத் தன்மையை அறிந்துகொள்வதற்காக அந்த இமாமைப் பின்தொடர்கிறார். அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அவர்கள் தனது வீட்டினுள் நுழைகின்றார். அப்போது அங்கே வாயிற்படியில் ஓர் ஏழை மனிதனைக் காண்கிறார். அவருடன் சற்று அளவளாவிவிட்டு அவ்விடம் விட்டகல்கிறார். சிறிது நேரத்தின் பின் வீட்டிலிருந்து வெளியேறுகின்றார். அப்போது அங்கே இன்னுமோர் ஏழையை அவதானிக்கிறார். அவரோடும் சிறிது அளவளாவிவிட்டு அவ்விடம் விட்டகல்கிறார். தூரத்திலிருந்து நடப்பவற்றை அவதானித்துக்கொண்டிருந்த அந்த ஸஹாபி வியப்பு மேலீட்டால் அந்த ஏழைகளை அணுகி, “இமாம் உங்களுக்கருகில் என்ன செய்தார்?” என்று வினவினார். இருவருமே இமாமவர்கள் தமக்கு ஒவ்வொரு தங்கம் தந்ததாகக் கூறினர். அந்த ஸஹாபி ஆச்சரியமேலீட்டால் “ஃபஸுபுஹானல்லாஹ், அங்கே சந்தையில் நாற்பது காசுக்காக வாதிக்கிறார், இங்கே வீட்டில் எண்ணாயிரம் காசு பெறுமதியான தங்கத்தை யாரும் காணாத வகையில் பூரண மனத் திருப்தியோடு அன்பளிப்புச் செய்கிறார்” என்று வியந்தவராக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரழி) அவர்களைச் சந்தித்துக் காரணத்தை வினவுகிறார். “இமாம் அவர்களே எனது சந்தேகத்தைத் தீர்த்து விடுங்கள். சந்தையில் அவ்வாறு நடந்து கொண்டீர்கள். வீட்டில் இவ்வாறு நடந்து கொண்டீர்கள்.. ஏன்?”. இமாமவர்கள், “சந்தையில் நடந்த நிகழ்வின் பின்புலத்தில் சிக்கனம், முன்னெச்சரிக்கை, வியாபாரத்தின் உயிர் நாடியான பாதுகாப்பையும் நம்பிக்கை நாணயத்தையும் நிலைநாட்டல் போன்ற அம்சங்கள் அடிப்படையாக இருந்தன. இது உலோபித்தனம் அல்ல. அவ்வாறே வீட்டில் அந்த ஏழைகள் விடயத்தில் கருணையுணர்வு, ஆத்மாவின் திருப்தி என்பவற்றின் வெளிப்பாடாகவே அவ்வாறு நடந்துகொண்டேன். முதலாவது உலோபித்தனமல்லாததைப் போன்றே இது இது வீண்விரயமுமல்ல” என்று பதிலளித்தார்கள். இமாம் அபூ ஹனீஃபா அவர்கள் இந்த உண்மையைப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: لاَ اِسْرَافَ فِى الْخَيْرِ كَمَا لاَ خَيْرَ فِى اْلاِسْرَافِ “வீண்விரயத்தில் நலவு என்பது கிடையாது. அவ்வாறே (தகுதி உடையவர்களுக்;கு செய்யப்படும்) நற்செயல்களிலும் நல்லறத்திலும் எத்தகைய வீண்விரயமும் கிடையாது.”

