بِاس۟مِهٖ سُب۟حَانَهُ இஸ்பார்த்தா நகரின் நீதிமிக்க ஆளுனரே! நீதி மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளே! இருபத்தி இரண்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்பார்த்தா நகரின் பார்ளாப் பட்டினத்தில் இருக்கும் போது மிகவும் மஹ்ரமான முறையில் மிக நெருக்கமான, மிக உண்மையான எனது சகோதரர்களுக்கு மாத்திரம் எழுதிய இந்த ரஸாயில் இஸ்பார்த்தா நகர மக்களோடும் நகராட்சி மன்றத்தோடும் நெருங்கிய தொடர்புடையது என்பதால் இதை உங்களுக்கு சமர்ப்பனம் செய்கிறேன். பொருத்தமாக இருந்தால் பழைய அல்லது புதிய எழுத்துகள் மூலம் ஓரிரு தட்டச்சுப் பிரதிகளை பிரசுரம் செய்யுங்கள். அதன் மூலம் இருபத்தைந்து முப்பது வருடங்களாக எனது இரகசியங்களைத் தேடுபவர்களும் கண்காணிப்பவர்களும் எம்மிடம் மறைத்து வைப்பதற்கு எந்த இரகசியங்களும் இல்லை என்பதையும் எம்மிடமுள்ள மிகப் பெரிய இரகசியம் இதோ இந்த ரஸாயிலாகும் என்பதையும் அறிந்துகொள்ளட்டும். ஸஈத் நூர்ஸி மூன்று அடையாளங்கள் பதினேழாவது மின்னலின் பதினேழாவது குறிப்பின் மூன்றாவது அம்சமாக இருந்தாலும் கேள்விகளின் வீரியம், பொதுமை என்பவற்றின் காரணமாகவும் பதில்களின் வலிமை, தெளிவு என்பவற்றின் காரணமாகவும் முப்பத்தியோறாவது கடிதத்தின் இருபத்தி இரண்டாவது மின்னலாக இடம்பெற்றுள்ளது. இந்த மஹ்ரமான ரஸாயில் மிக நெருங்கிய, உண்மையும் வாய்மையும் விசுவாசமுமிக்க சகோதரர்களுக்கானதாகும். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ وَمَن۟ يَتَوَكَّل۟ عَلَى اللّٰهِ فَهُوَ حَس۟بُهُ اِنَّ اللّٰهَ بَالِغُ اَم۟رِهٖ قَد۟ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَى۟ءٍ قَد۟رًا மூன்று அம்சங்கள், மூன்று அடையாளங்களாகும்.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Lem'alar
The Twenty-Second Gleam
என்னைப் பற்றியும் ரிஸாலே நூர் பற்றியும் வினவப்படும் முக்கியமானதொரு கேள்வி. அதிகமானவர்கள் வினவுகின்றனர்: நீங்கள் உலகாயுதவாதிகளின் உலக விவகாரங்களில் தலையிடாத போதிலும் அவர்கள் உங்களுடைய எல்லா சிறிய விடயங்களிலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் தலையிடுகின்றனர். ஆனால் எந்த ஓர் அரசின் சட்டங்களும் உலகைத் துறந்து அல்லது ஏகாந்தமாக வாழ்பவர்களின் விவகாரங்களில் தலையிடுவதில்லை? பதில்: இந்தக் கேள்விக்கான புதிய ஸஈதின் பதில் மௌனமாகும். இறை விதியே பதிலை வழங்கட்டும் என்பதே புதிய ஸஈதின் நிலைப்பாடாகும். அதே சமயம் நிர்ப்பந்தம் காரணமாக இந்தக் கேள்வியின் பதிலுக்காக பழைய ஸஈதிடம் அமானிதமாக விண்ணப்பித்தேன். பழைய ஸஈதின் மனம் கூறுவதாவது: இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க வேண்டிய கடப்பாடு இஸ்பார்த்தா நகரின் நகராட்சி மன்றத்துக்கும் மக்களுக்குமுரியதாகும். ஏனெனில் இந்த நகராட்சி மன்றமும் மக்களுமே இந்தக் கேள்வியின் பின்னணியிலுள்ள யதார்த்தத்துடன் என்னைவிட தொடர்பானவர்களாக உள்ளனர். எனவே பல ஆயிரம் உத்தியோகத்தர்களைக் கொண்ட நகராட்சி மன்றமும் பல இலட்சம் அங்கத்தவர்களைக் கொண்ட நகர மக்களும் எனக்குப் பதிலாக சிந்திப்பதற்கும் குரல் கொடுத்து வாதாடுவதற்கும் கடப்பாடுடையவர்களாக இருக்கும் போது நான் ஏன் அவசியமின்றி இதைத் தூக்கிப் பிடிக்கும் முறையீட்டாளர்களோடு வாதாட வேண்டும்? ஏனெனில் ஒன்பது வருடங்களாக இந்த நகரில் உள்ளேன். ஒவ்வொரு அடுத்த நாளும் முன்னைய நாளைவிட சற்று அதிகமாக அவர்களின் உலகைவிட்டும் முகத்தைத் திருப்பிக்கொள்கிறேன். என்னுடைய எந்த ஒரு நிலைமையும் எனக்கென்று அந்தரங்கமாக விட்டு வைக்கப்படவில்லை. எனது மிக இரகசியமான, மிக மஹ்ரமான ரஸாயில்களும்கூட அரசாங்கத்தினதும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் கரங்களை எட்டியுள்ளன. இத்தனைக்கும் பிறகு அந்த உலகப் பித்தர்களை சஞ்சலத்துக்கும் அசௌகரியத்துக்கும் ஆளாக்கத்தக்க ஏதேனும் உலகாயித முஸ்தீபுகளோ சதித்திட்டங்களோ சிந்தனைகளோ இருந்திருப்பின் எனது நடவடிக்கைகள் அனைத்தையும் அணு அணுவாக அவதானித்துத் துப்புப் பார்த்துக்கொண்டும் அரசாங்கமும் நிர்வாககத் துறையும் அதை எவ்வாறு அறியாதிருக்க முடியும். மறு பக்கம் நானோ வருகின்ற எல்லோரிடமும் எனது இரகசியங்களனைத்தையும் எந்தத் தயக்கங்களுமின்றி கூறிக்கொண்டிருக்கிறேன். இவ்வாறிருக்கும் போது இந்த நகராட்சியோ என்னுடைய விடயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாகவே இருக்கின்றது. அதாவது இந்த மக்களினதும் நாட்டினதும் நிம்மதிக்கும் எதிர்காலத்துக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய ஏதேனும் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் கடந்த ஒன்பது வருடங்களாக ஆளுனர் முதல் கிராமிய காவல்துறைத் தளபதி வரை அனைவரும் பொறுப்புதாரிகளாகின்றனர். அவர்கள் அந்தப் பொறுப்பிலிருந்து தப்ப வேண்டுமாயின் எனது விடயத்தில் அணுவை அண்டமாகக் காட்ட முனைபவர்களுக்கெதிராக அது அண்டமல்ல, அணுவாகும் என்று வாதாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர்களே உள்ளார்கள். இதுவே யதார்த்தம் என்பதால் இந்தக் கேள்விக்கான பதிலை அவர்களிடமே ஒப்படைக்கிறேன். ஆனால், இந்த நகர மக்கள் என்னைவிட எனக்காக வாதாட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளமைக்கான காரணம் வேறாகும். அதாவது கடந்த ஒன்பது வருடங்களாக என்னுடன் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் உறவாடும் முபாரக்கான இந்த மக்களுடைய நித்திய வாழ்வின் விமோசனத்துக்காகவும் ஈமானியப் பலத்துக்காகவும் இம்மை வாழ்வின் நிம்மதிக்காகவும் -இந்த மக்களின் வாழ்வில் நிதர்சனமாகவே அழகிய விளைவுகளையும் வினைத்திறனையும் காண முடியுமாக உள்ள- நூற்றுக்கும் மேற்பட்ட ரஸாயில்கள் மூலம் நாம் மேற்கொண்ட முயற்சியும் அந்த ரஸாயில்களால் யாருக்கும் எந்த ஒரு தீங்கோ கஷ்ட நஷ்டமோ ஏற்படாமையும் அதில் எத்தகைய அரசியல் அல்லது உலகாயித முஸ்தீபுகளும் புலப்படாமையும் அந்த ரஸாயில்களின் வஸீலாவால் -லில்லாஹில் ஹம்த்- இந்த இஸ்பார்த்தா நகரம் ஆரம்ப கால ஷாம் நகரத்தினதும் முஸ்லிம் உலகின் பொது மத்ரஸாவாகத் திகழும் எகிப்து, ஜாமிஉல் அஸ்ஹரினதும் பரக்கத்தை ஒத்த ஒரு பரக்கத்துடைய மகாமை ஈமானியப் பலம், மார்க்கப் பற்று போன்ற கோணங்களில் அடைந்துள்ளமையும் அந்த வகையில் இந்த நகரில் பொடுபோக்கைவிட ஈமானியப் பலமும் பாவங்கள் மீதான ஈடுபாட்டைவிட இபாதத்கள் மீதான தாகமும் மிகைத்திருப்பதும் விளைவாக ஏனைய நகரங்களைவிட இந்த நகரம் -ரிஸாலே நூர் காரணமாக- மார்க்கப் பற்றில் உயர்ந்து விளங்குவதும் இந்த நகர மக்கள் மீது ரிஸாலே நூருக்காகவும் எனக்காகவும் வாதாட வேண்டிய கடப்பாட்டை ஏற்படுத்துகின்றது. அவர்கள் வாதாட வேண்டியதற்கான இந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்த நியாயங்கள் இருக்கும் போது என்னைப் போன்று கடமையை முடித்துவிட்டு, இறையருளால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் என்னைப் போன்ற ஒரு பலவீனனின் இடத்தில் அர்ப்பணத்துடன் உழைத்துக்கொண்டிருக்கும் நிலையில் இத்தகைய முக்கியத்துவமற்ற, அற்பமான உரிமைகளுக்காக வாதாடுவதற்கான உந்தலை எனக்குத் தருவதில்லை. ஆம், தனக்காக வாதாடுவதற்காக இவ்வாறு ஆயிரக்கணக்கான மாணவர்களையும் வக்கீல்களையும் கொண்டுள்ள ஒருவர் தனது வழக்குக்காகத் தானே வாதாடச் செல்லமாட்டார்.
வினாவாக முன்வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டுக்கான பதில். உலகாயுதவாதிகளால் கூறப்படுகின்றது: எம்மை ஏன் தொடர்ந்தும் ஊதாசீனம் செய்கிறீர்? ஒரு தடவையேனும் எம்மிடம் விண்ணப்பிக்காமல் “எனக்கு அநியாயம் இழைக்கிறீர்கள்” என்று எம்மைக் கடுமையாகக் கண்டனம் மாத்திரம் செய்கிறீர். ஆனால் எம்மிடம் சில கொள்கைகள் உள்ளன. இந்தக் காலத்தின் வேண்டல்களைக் கருத்தில்கொண்ட விஷேட சட்டங்கள் உள்ளன. அவற்றின் அமுலாக்கத்தை உமதளவில் நீர் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் சட்டத்தை அமுலாக்குபவன் அநீதி இழைத்தவனாக ஆக மாட்டான். ஆனால் ஏற்றுக்கொள்ளாதவன் கலகம் விளைவிக்கிறான் என்றே அர்த்தமாகும். அந்த வகையில் இந்த சுதந்திர யுகத்தில் நாம் புதிதாக உருவாக்கிய குடியரசின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒழுங்கில் வேறு வகையான ஆதிக்க முகாம்களையும் சர்வாதிகாரத்தையும் ஒழிப்பதை நாம் ஒரு கொள்கையாகவும் அடிப்படைச் சட்டமாகவுமே கொண்டுள்ளோம். அப்படியிருக்க ஏதோ உஸ்தாத் போலும் பற்றற்றவர் போலும் ஒரு வகையான கோலத்தில் மக்களின் ஈடுபாட்டை வென்று அரசின் செல்வாக்குக்கு அப்பால் ஒரு பலத்தையும் சமூக அந்தஸ்த்தையும் ஈட்டிக்கொள்ள முயற்சிப்பதை உமது வெளிப்படையான செயற்பாடுகள் மூலமும் முற்பட்ட கால வாழ்க்கையின் மூலமும் எம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது. உமது இந்த நிலை -இன்றைய வழக்கின்படி- பூர்ஷுவாக்களின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தில் விருப்பத்துக்குரிய ஒன்றாக இருக்க முடியும். ஆனால் நாமோ கீழ் வகுப்பு மக்களின் வெற்றியின் மூலம் எழுச்சி பெற்ற சோஸியலிஸம், போல்ஷிவிஸம் போன்ற கொள்கைகளின் கோட்பாட்டு விதிகளை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதால் உமது இந்த நிலை எமக்குப் பாரதூரமானதாகத் தெரிகின்றது. எனவே எமது சட்டங்களின் பிரகாரம் வழங்கப்படும் தொல்லைகள், தொந்தரவுகளையிட்டு கண்டனம் தெரிவிப்பதற்கான உரிமை உமக்குக் கிடையாது! பதில்: மனிதனின் சமூக வாழ்வில் புதிய ஓர் அத்தியாயத்தைத் திறந்து தடம் பதிக்கும் ஒரு மனிதன் பிரபஞ்ச விதிகளுக்குப் பொருத்தமாகச் செல்லாவிட்டால் அதன் மூலம் நாடப்படுகின்ற நற்பணிகளிலும் ஈடேற்றத்திலும் காரியச்சித்தம் காண முடியாது. அவனது முன்னெடுப்புகள் அனைத்தும் தீமைகளுக்கும் சீர்கேடுகளுக்குமே காரணியாக அமையும். எனவே பிரபஞ்ச விதிகளுக்கும் அதன் இயல்புக்கும் பொருத்தமாக செயற்படுவது கட்டாயமானதாகும். இல்லாவிட்டால் மனித இயல்பை மாற்றுவதன் மூலமும் மனித வர்க்கத்தின் படைப்பிலுள்ள அடிப்படைத் தாத்பரியத்தை நீக்குவதன் மூலமுமே முத்லக்கான சமத்துவச் சட்டத்தை அமுல்படுத்த முடியும். ஆம், நான் வம்சாவழி ரீதியாகவும் வாழ்க்கை நிலை ரீதியாகவும் சாமானிய வகுப்பைச் சேர்ந்தவனாவேன். அத்துடன் சிந்தனா ரீதியாகவும் கொள்கை ரீதியாகவும் “சட்டத்துக்கு முன் அனைவரும் சமமானவர்கள்” என்பதை வலியுறுத்துபவன். மேலும் எனது இரக்க உணர்வு காரணமாகவும் இஸ்லாம் வலியுறுத்துகின்ற நீதியுணர்வு காரணமாகவும் பூர்ஷுவா எனப்படும் மேல்வகுப்பினரின் ஏகாதிபத்திய அடக்குமுறைகளை ஆரம்ப காலம் முதலே எதிர்த்து வருகிறேன். எனது மொத்தப் பலமும் என்றைக்குமே முழுமையான நீதிக்காகவும் அடக்குமுறை, அராஜகம் என்பவற்றுக்கு எதிரானதாகவுமே இருந்தது, இனிமேலும் அவ்வாறுதான் இருக்கப் போகின்றது. ஆனால், மனித இயல்பும் அவனது படைப்பிலுள்ள தாத்பரியமும் முத்லக்கான சமத்துவத் தத்துவத்துக்கு முற்றிலும் முரணானதாகும். ஏனெனில் சொற்பமான பொருளிலிருந்து மிகையான விளைச்சல்களை உண்டாக்குவதன் மூலமும் ஒரே பக்கத்தில் ஏராளமான புத்தகங்களை எழுதுவிப்பதன் மூலமும் ஒரே வஸ்தின் மூலம் பல்வேறு காரியங்களை நிறைவேற்றுவதன் மூலமும் தனது பூர்த்தியான வல்லமையையும் ஞானத்தையும் வெளிப்படுத்துகின்ற சரவ ஞானமிக்க படைப்பாளன் மனித இனத்தின் மூலமும் இந்தப் பிரபஞ்சத்தில் பல்லாயிரம் இனங்களுடைய பணிகளை நிறைவேற்றி விளைவுகளை வெளிப்படுத்துகிறான். ஆம், இந்த மகத்தான தாத்பரியத்தின் காரணமாகத்தான் சத்திய இரட்சகன் மனித இனத்தைப் பல்லாயிரம் இனக் குழுமங்களைத் தோற்றுவிக்கும் திறன் மிக்கதாகவும் ஏனைய விலங்கினங்களின் எண்ணிக்கையளவு தராதரங்களைக் காண்பிக்கத்தக்க இயல்பைக் கொண்டதாகாவும் படைத்துள்ளான். ஏனைய விலங்கினங்களைப் போல் அவனது ஆற்றல்களுக்கும் உணர்வுகள், உளக்கிடக்கைகளுக்கும் எந்த வரையறைகளும் போடப்படாமல் சுயாதீனமாக விடப்பட்டு எண்ணற்ற தராதரங்களுக்கு மத்தியில் ஏறி இறங்கும் திறன் வழங்கப்பட்டுள்ள காரணத்தினால் ஓரினமாக இருந்தாலும் பல்லாயிரம் இனங்களுக்கு ஈடானவனாக இருக்கின்றான். இந்தக் காரணங்களினால்தான் மனிதன் பூமியின் கலீபாவாகவும் பிரபஞ்சத்தின் விளைவாகவும் உயிரினங்களின் ஸுல்தானாகவும் உயர் அந்தஸ்த்துக்குரியவனாக இருக்கின்றான். மேலும் மனித இனத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வகைமையின் அடிப்படையாகவும் அச்சாணியாகவும் திகழ்வது போட்டியும் ஹகீகத்தான ஈமானிய உய்வுமாகும். அந்த உய்வை அகற்றுவது மனிதனுடைய மாஹியத்தை மாற்றுவதன் மூலமும் ஆத்மாவைக் கொலை செய்வதன் மூலமுமே சாத்தியமாகும். ஆம், சுதந்திரம் என்ற திரைக்குப் பின்னால் படுபயங்கரமான ஓர் அடக்குமுறையைச் சுமந்துள்ள இந்த யுகத்தின் கொடூரமான முகத்தின் மீது ஓங்கி எறிவதற்கு மிகப் பொருத்தமானதாக இருக்க, அதற்கு எந்த வகையிலும் தகுதியற்ற ஒரு மாமனிதரின் முகத்தில் வீசி எறியப்பட்ட ஒரு நிறைவான வார்த்தைக்குப் பதிலாக, அதாவது “எங்கே சாத்தியம் அநீதியாலும் அடக்குமுறையாலும் சுதந்திரத்தின் அடக்கம்? முடிந்தால் அகற்றிவிடு சிந்தையை, மனிதனின் தலையெழுத்திலிருந்து.” என்ற வார்த்தையுடன் இந்தப் படுபயங்கரமான யுகத்தின் முகத்தில் ஓங்கி அறைவதற்காக` நானும் மேலதிகமாக சில வார்த்தைகளைக் கூறுகிறேன்: “எங்கே சாத்தியம் அநீதியாலும் அடக்குமுறையாலும் சத்தியத்தின் அடக்கம்? முடிந்தால் அகற்றிவிடு உள்ளத்தை, மனிதனின் தலையெழுத்திலிருந்து.” அல்லது “எங்கே சாத்தியம் அநீதியாலும் அடக்குமுறையாலும் உய்வின் முடக்கம்? முடிந்தால் அகற்றிவிடு மனசாட்சியை, மனிதனின் தலையெழுத்திலிருந்து.” ஆம், ஈமானிய உய்வும் அது உள்ளடக்குகின்ற விழுமியங்களும் அழுத்தக் காரணிகளாக இல்லாததைப் போன்றே அடக்குமுறைக்கான காரணிகளாகவும் இருக்க முடியாது. அடக்குமுறையும் அராஜகமும் உய்வற்ற, விழுமியமற்ற நிலையாகும். குறிப்பாக உய்வடைந்த, விழுமியங்களை உடைய மக்களின் மிக முக்கியமான வழிமுறை சமூக வாழ்வில் இயலாமை, பலவீனம், பணிவு என்பவற்றுடன் ஊடாடுவதாகும். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், எமது வழ்வும் இந்த வழிமுறையின், இந்த மஷ்ரபின் மீதே சென்றது; சென்றுகொண்டுள்ளது. இங்கு நான் உய்வை அடைந்துவிட்டதாக பெருமையோடு வாதாட முனையவில்லை. ஆனால், இறை அருளை எடுத்துக்காட்டும் வகையில் நன்றி செலுத்தும் எண்ணத்தோடு கூறுகிறேன்: சத்திய இரட்சகனின் ஈகையாலும் உதவியாலும் அருட்கொடையாலும் ஈமானிய மற்றும் குர்ஆனிய அறிவுக்காக உழைப்பதிலும் அவற்றைக் கிரகிப்பதிலும் ஓர் உய்வும் ஒரு மேன்மையும் எனக்கு அருளப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், இந்த இறை அருளை எனது மொத்த வாழ்விலும் இறை உதவியால் இந்த இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்காகவும் நிம்மதிக்காகவுமே செலவு செய்துள்ளேன். மாறாக அவை எனது கரங்களில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அடக்குமுறைக்கு அல்லது அராஜகத்துக்கான சாதனமாக இருக்கவில்லை. அத்துடன் பெரும்பாலான பொடுபோக்குக்காரர்களால் ஆசிக்கப்படுகின்ற மனிதர்களின் ஈடுபாடு, மக்கள் அங்கீகாரம் போன்ற விடயங்களும் கூட -முக்கியமான ஒரு தாத்பரியத்துக்காக- எனக்கு மிகவும் வெறுப்புக்குரிய ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது. அவற்றிலிருந்து நான் விரண்டோடுகிறேன். அவை என்னுடைய முன்னைய இருபது வருட வாழ்க்கையைப் பாலாக்கிவிட்டதால் நான் அவற்றைத் தரித்திரம் மிக்கவையாகவே காண்கிறேன். ஆனால், அவை மக்கள் ரிஸாலே நூரை விரும்புவதற்கான ஒரு வஸீலாவாக இருப்பதால் அவர்களை வெருண்டோடச் செய்யாதிருக்கிறேன். இதோ உலகப் பித்தர்களே! உங்களிடம் கேட்கிறேன். உங்கள் உலகத்தில் எந்தத் தலையீடும் செய்யாதவனாகவும் உங்கள் கொள்கைகளோடு எந்த வகையான தொடர்புகளும் இல்லாதவனாகவும் -ஏன் கைதியாக இருக்கும் கடந்த ஒன்பது வருட வாழ்வின் சாட்சிக்கமைய- மீண்டும் உலக சமாச்சாரங்களில் கலப்பதற்கான எந்த எண்ணமோ ஆசையோ கிஞ்சித்தும் இல்லாதவனாகவும் இருக்கின்ற என்னை, ஏதோ பழைய ஓர் அடக்குமுறையாளன் போன்றும் எதேச்சாதிகார சிந்தனையுடன் சதாவும் தருணம் பார்த்துக் காத்திருக்கும் ஒரு பேர்வழி போன்றும் என் மீது நீங்கள் கட்டவிழ்த்துவிட்டுள்ள இத்தனை அடக்குமுறைகளும் கண்காணிப்புகளும் தொல்லைகளும் உங்களுடைய எந்த சட்டத்தின் பிரகாரம் என்பதைக் கூறுங்கள். இல்லை எந்த நலனுக்காக என்பதையாவது கூறுங்கள். உலகில் எந்த ஓர் அரசாங்கமும் இவ்வாறு சட்டத்துக்கு அப்பால் சென்று தன்னிச்சையாக ஒரு மனிதனுடைய விடயத்தில் இத்தகைய கெடுபிடிகளை அனுமதிக்காத போது, என் மீது மேற்கொள்ளப்படும் இத்தகைய மோசமான கெடுபிடிகளை அறிந்தால் மனித குலமே உங்கள் மீது காரித் துப்பும். அல்லாஹ்வின் இந்தப் படைப்புகள் உங்கள் மீது காரித் துப்பிக்கொண்டுதான் இருக்கின்றன போலும்!..
(அர்த்தமற்ற மடத்தனமான ஒரு கேள்வி.) ஒரு சில நீதித்துறை சார்ந்தவர்கள் கேட்கிறார்கள்: நீங்கள் இந்த நாட்டிலேயே உள்ளீர்கள். இதுவே யதார்த்தமாகும். எனவே இந்த நாட்டின் குடியரசுச் சட்டங்களுக்கு வழிப்பட வேண்டிய கட்டாயம் இருக்கும் போது நீங்கள் மாத்திரம் துறவு என்ற பெயரில் அந்த சட்டங்களிலிருந்து விலகி நிற்கிறீர்கள். அந்த வகையில் இந்த நாட்டின் குடியரசுச் சட்டங்களின் பிரகாரம் நீங்கள் செய்வது குற்றமாகும். தனது உத்தியோகத்துக்கப்பால் ஒரு சிறப்பையும் மேன்மையையும் உய்வையும் தனக்குத் தானே வைத்துக்கொண்டு அதன் மூலம் மக்களுள் ஒரு பகுதியினர் மீது செல்வாக்குச் செலுத்தி அடக்கியாள முனைவது தற்போதைய அரசாங்கத்தின் சட்டங்களின் பிரகாரம் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட குடியரசுச் சட்டத்துக்கு முரணானதாகும். எனவே நீங்கள் எந்தப் பொறுப்பிலும் இல்லாத நிலையில் மக்களுக்கு ஏன் உங்கள் கைகளை முத்தமிடச் செய்கிறீர்கள்? மக்கள் எனக்குச் செவிதாழ்த்த வேண்டும் என்று சுயமுனைப்பான ஒரு போக்கைக் கடைப்பிடிக்கிறீர்கள்? பதில்: சட்டத்தைப் பிரயோகிப்பவர்கள் முதலில் அந்த சட்டத்துக்குத் தாம் வழிப்பட வேண்டும். அதன் பின்னரே பிறரையும் வழிப்படுமாறு சொல்ல முடியும். நீங்களோ, நீங்களே வழிப்படாத சட்டங்களைப் பிறர் மீது திணிப்பதன் மூலம் எல்லோருக்கும் முன்னர் நீங்களே உங்கள் சட்டங்களையும் விதிமுறைகளையும் கொள்கைகளையும் மீறுகிறீர்கள். ஏனெனில் இந்த முத்லக்கான சமத்துவக் கோட்பாட்டுக்கு வழிப்படுமாறு என்னைக் கோருகிறீர்கள். நானும் கூறுகிறேன்: எப்போது ஒரு சாதாரண சிப்பாய் ஒரு தளபதியின் சமூக அந்தஸ்தைப் பெறுகிறானோ, அந்தத் தளபதிக்கு வழங்கப்படும் மதிப்பிலும் மரியாதையிலும் எப்போது அந்த சிப்பாயும் பங்குதாரனாகிறானோ அல்லது எப்போது அந்தத் தளபதி ஒரு சிப்பாயைப் போன்று ஒரு சாமான்யனாக, தனது கடமைக்கு அப்பால் எந்த முக்கியத்துவமுமற்ற ஒருவராக மாறிவிடுகிறாரோ அல்லது எப்போது ஒரு படையின் வெற்றிக்குக் காரணியாக இருந்த மிக விவேகமான ஒரு படைத் தளபதி மிக மந்த புத்தி உடைய ஒரு சிப்பாயுடன் மக்கள் மன்றத்தில் சம அந்தஸ்தையும் சம அளவிலான மதிப்பு மரியாதையையும் பெறுவாரோ அப்போது உங்கள் சமத்துவச் சட்டத்தின் பிரகாரம் உங்களால் என்னிடம் வந்து “நீரே உம்மை உஸ்தாத் என்று கூறிக்கொள்ள வேண்டாம்! மக்கள் தருகின்ற மதிப்பு, மரியாதையை ஏற்றுக்கொள்ள வேண்டாம்! உமது சேவகனுக்குச் சேவகம் செய்யவும்! பிச்சைக்காரர்களுடன் நண்பனாக இருக்கவும்!” என்றெல்லாம் கூறுகின்ற உரிமையைப் பெற்றுக்கொள்வீர்கள். இல்லை “அந்த மதிப்பும் மரியாதையும் மகாமும் பொறுப்பில் உள்ள காலத்துடனும் பொறுப்புதாரிகளுடனும் மட்டுப்படுத்தப்பட்டதாகும். ஆனால் நீரோ பொறுப்புகளில் இல்லாத ஒருவர். எனவே பொறுப்பில் உள்ளவர்களைப் போன்று மக்கள் தருகின்ற மதிப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறுவீர்களாயின்! பதில்: மனிதன் வெறுமனே உடலை மாத்திரம் உடையவனாகவும் இந்த உலகில் மரணிக்காமல் நிரந்தரமாகவே வாழப் போகின்றவனாகவும் ஆகிவிட்டால், அதாவது மண்ணறை வாசலை மூடி, மரணத்தைக் கொலை செய்துவிட முடியுமென்றால், அதனைத் தொடர்ந்து பொறுப்புகள் அனைத்தும் இராணுவத்துக்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் மாத்திரமானதாக ஆகிய பின்னர் உங்கள் கோரிக்கையில் ஏதாவது அர்த்தம் இருந்திருக்கும். ஆனால் மனிதன் என்பவன் வெறுமனே இந்த உடலை மாத்திரம் உடையவனல்லன். அந்த உடலை மாத்திரம் போஷிப்பதற்காக உள்ளத்தையும் புத்தியையும் ஆத்மாவையும் பிரக்ஞையையும் வெட்டி எடுத்து உடலுக்கு ஊட்டவோ அல்லது அவற்றை அழித்துப் போடவோ முடியாது. அவையும் பராமரிக்கப்பட வேண்டிய தேவை உடையவையாகவே இருக்கின்றன. மேலும் மண்ணறை வாசலை மூடவும் முடியாது. மண்ணறையைக் கடந்த பின்னர் வருகின்ற எதிர்காலம் பற்றிய கலக்கம் ஒவ்வொரு நபருக்கும் முன்னாலுள்ள மிக முக்கியமான, மிக முன்னுரிமை வாய்ந்த அம்சமாகும். எனவே நிச்சயமாக மக்களின் மதிப்பையும் மரியாதையையும் பெற்றுத் தருகின்ற, அவர்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயங்கள் வெறுமனே மனிதர்களின் உலக வாழ்வுடன் தொடர்பான சமூக, அரசியல், இராணுவ விவகாரங்களுடன் மட்டுப்பட்டதாக இருக்க முடியாது. ஆம், பயணிகள் பயணிப்பதற்கான பயணச் சீட்டை வழங்குவது ஒரு பணியாக உள்ளதைப் போன்றே நித்தியத்தின் பக்கமாகச் செல்லும் பயணிகளுக்குப் பயணச் சீட்டை வழங்குவதும் அந்த இருண்ட பாதையில் செல்வதற்கான ஒளியை வழங்குவதும் கூட மகத்தான ஒரு பணியாகும். இந்த உலகிலுள்ள எந்த ஒரு பணியும் இந்தப் பணியைவிட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க முடியாது. இப்படிப்பட்ட ஒரு பணியை நிராகரிப்பது மரணத்தை நிராகரிப்பதன் மூலமும் ஒவ்வொரு நாளும் اَلْمَوْتُ حَقٌّ என்ற வாதத்துக்கு தமது சடலங்கள் மூலம் ஒப்பம் வைக்கும் முப்பதாயிரம் சாட்சிகளைப் பொய்ப்பித்து நிராகரிப்பதன் மூலமுமே சாத்தியமாகும். ஆம், சந்தேகமின்றி மனிதனின் மிக அடிப்படையான ஆத்மீகத் தேவைகளைச் சார்ந்துள்ள ஆத்மீகப் பணிகளும் பொறுப்புகளும் கடமைகளும் உள்ளன. மேலும் அத்தகைய பணிகளுள் மிக மகத்தானது, நித்தியப் பாதையில் பயணிப்பதற்கான கடவுச் சீட்டாகவும் பர்ஸஹுடைய இருளில் உள்ளத்தின் ஒளி விளக்காகவும் நித்திய நிம்மதிக்கான திறவுகோளாகவும் உள்ள ஈமானும் ஈமானைக் கற்றுப் பலப்படுத்துவதுமாகும். எனவே அந்தப் பணியைச் செய்கின்ற அஹ்லுல் மாரிஃபத் தமக்குக் கிடைத்த அருள்களை நிராகரிக்கும் வகையில் தமக்கு அருளப்பட்ட இறை அருள்களையும் ஈமானிய உய்வுகளையும் மறைத்துவிட்டு அல்லது தட்டிக்கழித்துவிட்டுப் பாவிகளினதும் குழப்பக்காரர்களினதும் மட்டத்துக்குத் தாழ்வதற்கோ அத்தகைய தாழ்ந்தவர்கள் உருவாக்கிக்கொள்ளும் நூதனங்களோடும் பஞ்சமா பாதகங்களோடும் தம்மைப் பூசிக்கொள்வதற்கோ எத்தகைய தேவையும் இல்லை. நீங்கள் விரும்பாத, ஏதோ சமத்துவமின்மையாகச் சித்திரிக்கும் அந்தத் துறவு இதோ இந்தக் காரணத்துக்காகத்தான். எனவே இந்த யதார்த்தத்துடன் கூடவே என்னை எந்தக் காரணமுமின்றி சித்திரவதைகளாலும் அராஜகங்களாலும் கொடுமைப்படுத்தத் தயங்காத, அனானியத்திலும் சமத்துவத்தை மீறுவதிலும் பிர்அவ்னியத்தான நிலையை அடைந்துள்ள அகம்பாவக்காரர்களைப் பார்த்துப் பேசுவதற்கு எதுவுமில்லை. ஏனெனில் அகம்பாவக்காரர்களுக்கு முன்னால் காட்டப்படுகின்ற பணிவு இழிவாகக் கருதப்படுவதால் அத்தகையவர்களுக்கு முன்னால் பணிவாக நடக்காதிருப்பது அவசியமாகும். மாறாகப் பணிவும் நீதி, நியாயமும் மிக்க நல்லுள்ளம் படைத்தவர்களைப் பார்த்துப் பேசுகிறேன்: “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். நான் எனது குறைகளையும் இயலாமை, பலவீனங்களையும் அறிந்தே இருக்கிறேன். முஸ்லிமான இந்த மக்கள் மத்தியில் அகம்பாவத்தனமாக மதிப்புக்குரிய ஒரு மகாமைக் கோருவது இருக்கட்டும், நானோ ஒவ்வொரு கணமும் எனது எண்ணற்ற குறைகளையும் பலவீனங்களையும் நினைத்து இஸ்திஃபார் மூலம் ஆறுதல் தேடுபவனாகவும் மக்களிடம் மதிப்பு, மரியாதையன்றி துஆக்களை எதிர்பார்ப்பவனாகவுமே இருக்கிறேன். அத்துடன் எனது இந்த மஸ்லக்கை என்னுடைய எல்லாத் தோழர்களும் அறிவார்கள் என்று நினைக்கிறேன். என்றாலும் மேலதிகமாக உள்ள சில அம்சங்களையும் கூற வேண்டும். அதாவது சங்கைமிக்க குர்ஆனுக்கான சேவகத்தின் போதும் ஈமானிய சத்தியங்களைக் கற்பிக்கும் போதும் அந்த சத்தியங்களினதும் குர்ஆனினதும் சங்கையின் பொருட்டுக்காக அந்த மகாமுடைய கண்ணியம் வேண்டி நிற்கும் அறிவுக்குரிய மிடுக்கையும் மாண்பையும் மேன்மையையும் பாதுகாக்கிறேன். வழிகேடர்களுக்கு முன்னால் தவறியும் தலைசாய்ந்துவிடக் கூடாது என்பதற்காக குறித்த நேரங்களிலும் அந்த மிடுக்கான குணத்தைத் தற்காலிகமாக அணிந்துகொள்கிறேன். எனவே இந்த விடயங்களில் தலையிடுவதற்கோ அல்லது எதிர்த்து நிற்பதற்கோ இந்த உலகப் பித்தர்களின் சட்டங்களுக்கு அருகதை இல்லை என்றே நினைக்கிறேன். ஆச்சரியத்தில் ஆழ்த்தும் ஓர் அணுகுமுறை: எல்லா இடங்களிலும் அறிஞர்கள் அறிவை வைத்தே மதிப்பிடுவார்கள். எங்கு, யாரிடம் அறிவைக் கண்டாலும் துறை சார்ந்த ரீதியில் அவருடன் ஒரு நட்பையும் மதிப்பையும் கட்டியெழுப்புவார்கள். ஏன் ஓர் எதிரி நாட்டுக் கலாநிதிதான் இந்த நாட்டுக்கு வந்தாலும் இந்த நாட்டின் அறிவுப் புலத்தைச் சேர்ந்தவர்கள் அவரது அறிவையும் மாரிஃபத்தையும் மதித்து அவரைச் சந்திக்கச் செல்வார்கள். அவருக்கு மரியாதை செய்வார்கள். இதுவே யதார்த்தமாகவும் முறையாகவும் இருக்க, ஆங்கிலேயர்களின் மிக உயர் அறிவியல் பீடம் ஆறு கேள்விகளைக் கேட்டு அவற்றுக்கான பதில்களை அறுநூறு சொற்களுக்குள் வழங்குமாறு முஸ்லிம்களின் மார்க்க பீடத்தைக் கேட்ட போது அந்த ஆறு கேள்விகளுக்கும் வெறும் ஆறு சொற்களில் எல்லோருடைய ஏகமனதான ஆதரவையும் பெற்ற ஒரு பதிலை வழங்கியமை, ஐரோப்பாவின் மிகச் சிறந்த ஹுகமாக்கள், தத்துவ ஞானிகளுடைய மிக அடிப்படையான தத்துவக் கோட்பாடுகளை ஹகீகத்தான அறிவு, மாரிஃபத் என்பவற்றின் மூலம் புஷ்வானமாக்கியமை, குர்ஆனின் பலம்வாய்ந்த மாரிஃபத்தின் மூலமும் இல்மின் மூலமும் ஐரோப்பிய தத்துவ ஞானிகளுக்கெல்லாம் சவால் விட்டு வருகின்றமை, சுதந்திரத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் இஸ்தான்பூலில் உலமாக்களையும் கலாசாலை மாணவர்களையும் விவாதத்துக்கு அழைத்து தான் எந்தக் கேள்வியும் கேட்காமல் கேட்கப்பட்ட எல்லாக் கேள்விகளுக்கும் குறைகளின்றி சரியான பதிலை வழங்கியமை மொத்த வாழ்வையும் இந்தத் தேசத்தின் நிம்மதிக்காக அர்ப்பணித்து, நூற்றுக்கும் மேற்பட்ட ரஸாயில்களை இந்தத் தேசத்தின் தாய்மொழியாகிய துருக்கி மொழியில் வெளியிட்டமை, அதன் மூலம் ஆரம்பமாக அவர்களுக்குத் தெளிவை வழங்கியமை என்று எத்தனை எத்தனையோ அறிவுப் புலச் செயற்பாடுகள் இருக்கும் போது, தமது நாட்டைச் சேர்ந்தவனாகவும் தமது மார்க்கத்தைச் சேர்ந்தவனாகவும் தமது தோழனாகவும் சகோதரனாகவும் திகழும் இத்தகைய அறிவுப் பின்னணி உள்ள ஒருவனுக்கு மிக அதிகமாகத் தொல்லை தருபவர்களும் மிக மோசமாகக் குரோதம் வளர்ப்பவர்களும் மிக மோசமாக அவமரியாதை செய்பவர்களும் அறிவுப் புலத்தைச் சார்ந்த ஒரு பிரிவினராகவும் உத்தியோகபூர்வ ஆலிம்களுள் ஒரு பிரிவினராகவுமே உள்ளனர். இதோ இந்த நிலைக்கு என்ன விளக்கம் சொல்வது? நாகரிகம் என்று கூறுவதா? அறிவுத் தாகம் என்று கூறுவதா? தேசப்பற்று என்று கூறுவதா? இனப் பற்று என்று கூறுவதா? இல்லை குடியரசுக்கான ஆதரவு என்றுதான் கூறுவதா? இல்லை, நிச்சயமாக இவை எதுவும் இல்லை. மாறாக இறை சித்தமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இறை சித்தமானது அறிவுப் புலத்தைச் சேர்ந்த ஒருவன் நட்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கின்ற இடத்திலிருந்து வெறுப்பைக் காண்பித்ததன் மூலம், எதிர்பார்க்கப்பட்ட மதிப்பு காரணமாக அவனது அறிவில் முகஸ்துதி கலந்துவிடாமல் பாதுகாத்து, இஹ்லாஸை அடைந்துகொள்வதற்கு வழிவகுத்துள்ளது.
என்னைப் பொருத்தவரை வியப்பைத் தருவதாகவும் அதே சமயம் நன்றி செலுத்துவதற்கான காரணியாகவும் உள்ள ஒரு முஸ்தீபு: அசாதாரணமான அனானியத்தை உடைய இந்த உலகப் பித்தர்களிடம் அனானியத் விடயத்தில் எந்த அளவு மிகையான, நுட்பமான ஒரு துல்லியம் காணப்படுகின்றதெனில், அது பிரக்ஞைபூர்வமாக நிகழும் பட்சத்தில் ஒரு கராமத்தின் அந்தஸ்தை உடைய அல்லது மா பெரும் மேதையின் மேதமையை உடைய ஒரு நடத்தையாகவே அமைந்துவிடும். இதுதான் அந்த நடத்தை: அதாவது, எப்போதாவது எனது நஃப்ஸாலும் பகுத்தறிவாலும்கூட உணர முடியாத வகையில் ஒரு வகை முகஸ்துதிவயப்பட்ட அனானியத்துடைய நிலை வெளிப்படும் போது, ஏதோ தம்முடைய அனானியத்தின் நுண்திறன் மிக்க அளவைகளால் என்னாலேயே உணர்ந்துகொள்ள முடியாமல் போன அந்த அனானியத்தை உணர்ந்துகொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றும் வகையில் மிகக் கடுமையான முறையில் எனக்கெதிராக அடர்ந்தேறுகின்றனர். கடந்த எட்டு ஒன்பது வருடங்களில் எட்டு ஒன்பது தடவைகள் இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது அவர்கள் இவ்வாறு அடாவடித்தனமாக என் மீது அடர்ந்தேறி வந்த நிகழ்வுகளின் பின்னர் இறை சித்தத்தை சிந்தித்தவனாக “எந்தக் காரணத்துக்காக இவர்கள் என் மீது ஏவிவிடப்பட்டார்கள்?” என்று எனது நஃப்ஸின் திருகுதாளங்களைத் தேடுவேன். ஒவ்வொரு தடவையும் எனது நஃப்ஸ் பிரக்ஞையின்றியே அனானியத்தின்பால் இயல்பாக உந்தப்பட்டிருப்பது அல்லது அறிந்துகொண்டே என்னை ஏமாற்றியுள்ளமை புரியவந்தது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இறை சித்தம் அந்த அக்கிரமக்காரர்களின் அக்கிரமத்துக்கு மத்தியில் எனது விடயத்தில் நீதியை நிலைநாட்டியுள்ளது என்று கூறுவேன். அந்த வகையில்: ஒரு தடவை ஒரு கோடை காலத்தில் எனது தோழர்கள் என்னை அழகிய ஒரு குதிரையில் ஏற்றிவிட்டார்கள். நானும் சற்று உலாவச் சென்றேன். அப்போது பிரக்ஞையின்றியே எனது நஃப்ஸில் தற்பெருமை கலந்த ஒரு களிப்புணர்வும் ஆசையும் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த எந்த அளவு பயங்கரமான முறையில் என் மீது அடர்ந்தேறி வந்தார்களெனில் அது அந்த ஆசையை மாத்திரமன்றி அதனோடு சேர்த்து இன்னும் ஏராளமான தாகங்களையும் பசிகளையும் துண்டித்துவிட்டது. அவ்வாறே இந்தத் தடவை ரமழானின் பின்னர் ஆரம்ப காலத்தைச் சேர்ந்த, குத்ஸியத்தான பெரிய ஓர் இமாம் எம்முடைய விடயத்தில் காண்பித்த தீர்க்கதரிசனமான கராமத்தையும் ஈடுபாட்டையும் கண்டமை, சகோதரர்களின் தக்வா, இஹ்லாஸ், சந்திக்க வருபவர்களின் மரியாதை, ஈடுபாடு என்று அனைத்துக்கும் மத்தியில் -நான் அறியாமலேயே- எனது நஃப்ஸ் பெருமிதத்தோடு, ஆனால் நன்றிக்கடன் என்ற திரைக்குப் பின்னால் முகஸ்துதிவயமான ஓர் அனானியத்துடைய நிலையை எடுக்க நாடியது. அப்போது திடீரென்று உலகாயுதவாதிகள் மட்டற்ற ஓர் நுண்திறனுடன், ஏன் முகஸ்துதியின் ஓர் அணுவையும் உணரும் திறன் படைத்தவர்களைப் போன்று உடனடியாக என்னைத் தீண்டினார்கள். நான் சத்திய இரட்சகனுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்துகிறேன். இவர்களுடைய அநியாயங்கள் எனக்கு இஹ்லாஸை அடைவதற்கான சாதனங்களாக ஆகிவிடுகின்றன. رَبِّ اَعُوذُ بِكَ مِن۟ هَمَزَاتِ الشَّيَاطٖينِ وَاَعُوذُ بِكَ رَبِّ اَن۟ يَح۟ضُرُونِ اَللّٰهُمَّ يَا حَافِظُ يَا حَفٖيظُ يَا خَي۟رَ ال۟حَافِظٖينَ اِح۟فَظ۟نٖى وَ اح۟فَظ۟ رُفَقَائٖى مِن۟ شَرِّ النَّف۟سِ وَ الشَّي۟طَانِ وَ مِن۟ شَرِّ ال۟جِنِّ وَ ال۟اِن۟سَانِ وَ مِن۟ شَرِّ اَه۟لِ الضَّلَالَةِ وَ اَه۟لِ الطُّغ۟يَانِ اٰمٖينَ اٰمٖينَ اٰمٖينَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

