Lem'alar

The Twenty-Fourth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

பதினைந்தாவது குறிப்பின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அம்சங்களாக இருந்தாலும் முக்கியத்துவம் கருதி இருபத்தி நான்காவது மின்னலாக இடம்பிடித்துள்ளது. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ يَا اَيُّهَا النَّبِىُّ قُلْ لِاَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَٓاءِ الْمُؤْمِن۪ينَ يُدْن۪ينَ عَلَيْهِنَّ مِنْ جَلَاب۪يبِهِنَّ... اِلٰى اٰخِرِ என்ற வசனம் மறைக்குமாறு ஏவுகின்றது. நவநாகரிகமோ குர்ஆனுடைய இந்தத் தீர்ப்புக்கு எதிராகச் செல்வதோடு மறைப்பதை இயல்பான ஒரு விடயமாகக் காண்பதுமில்லை. "ஓர் அடிமைத்தனம்" என்று கூறுகிறது. பதில்: சர்வ ஞானமிக்க குர்ஆனின் இந்தத் தீர்ப்பு முற்றிலும் இயல்புக்குப் பொருத்தமானது என்பதற்கும் அந்தத் தீர்ப்புக்கு மாற்றமானதே இயல்புக்கு முரணானது என்பதற்கும் சான்றாக உள்ள பல்வேறு தாத்பரியங்களுள் நான்கை மாத்திரம் தெளிவுபடுத்துகிறோம்.

§2

மறைத்தல் என்பது பெண்ணைப் பொருத்தவரை இயல்பூக்கமானதாகும், அவர்களுடைய இயல்பு அதையே வேண்டி நிற்கின்றது. ஏனெனில் பெண்கள் படைப்பளவில் நலினமும் மென்மையும் உடையவர்களாக இருப்பதாலும் எனவே தம்மையும் தம் உயிரைவிட நேசிக்கின்ற தமது குழந்தைகளையும் பாதுகாக்கக்கூடிய ஓர் ஆணின் பாதுகாப்பும் உதவியும் தேவைப்படுவதாலும் தன்னை நேசிக்கச் செய்வதிலும் தன் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதிலும் அவர்களிடம் இயல்பாகவே ஓர் உந்தல் காணப்படுகின்றது. அத்துடன் பத்துப் பெண்களுள் ஆறு அல்லது ஏழு பேர் ஒன்றோ வயோதிபர்களாக அல்லது அழகற்றவர்களாகவே இருப்பதால் தமது முதுமையையும் அழகின்மையையும் எல்லோருக்கும் காண்பிக்க விரும்பமாட்டார்கள். அதாவது, ஒன்றோ பெண்மையின் பொறாமையுணர்வு தன்னைவிட அழகிய பெண்கள் முன்னிலையில் அசிங்கமான நிலைக்கு ஆளாகவிடாது. அல்லது மோசமான பார்வைகள், அத்துமீறல்கள், அவதூறுகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்வதற்காக அல்லது கணவனின் பார்வையில் நம்பிக்கையின்மை வந்துவிடக்கூடாது என்பதற்காக என்று பலவாறான காரணங்களுக்காக ஒரு பெண் இயல்பாகவே மறைக்க விரும்புவாள். ஏன் சற்றுக் கூர்ந்து அவதானித்தால் மிக அதிகமாகத் தம்மை மறைத்துக்கொள்பவர்கள் வயோதிபர்களாவர். அத்துடன் பத்துப் பேரில் அதிகபட்சம் மூன்று பேரே சம நேரத்தில் யுவதிகளாகவும் அழகானவர்களாகவும் தன்னைக் காட்ச்சிப் பொருளாக்குவதில் சலிக்காதவளாகவும் இருப்பர். எனினும், மனிதன் தான் விரும்பாத, தனக்கு ஒவ்வாத மனிதர்களின் பார்வையால் சலிப்பும் எரிச்சலும் அடைவார்கள் என்பதே யதார்த்தமாகும். எனவே அரைகுறை ஆடை அணிகின்ற, தான் ரசிக்கப்படுவதை விரும்புகின்ற ஓர் அழகிய பெண்ணாகத்தான் இருந்தாலும் அது நிச்சயமாக மஹ்ரமல்லாத பத்து ஆண்களுள் வெறும் இருவர் அல்லது மூவராகவே இருப்பார்கள். ஏனைய ஏழ்வர் அல்லது எண்மரின் பார்வை நிச்சயமாக அவளை எரிச்சலூட்டும். அத்துடன் விபச்சாரத்தை விரும்பாத, கெட்டுப் போகாத அழகிய ஒரு பெண் மென்மையானவளாகவும் விரைவாக சூழல் தாக்கத்துக்குற்படுபவளாகவும் இருப்பதால் பௌதீக ரீதியாகவே தாக்கம் செலுத்தத்தக்க, சில வேளை நச்சுக் கதிர்களைப் பாய்ச்சி சோர்வடையச் செய்யும் விதமான பார்வைகளால் நிச்சயம் சலிப்புறுவாள். ஏன் ஐரோப்பாவில் பல பெண்கள் "இந்த வெளிறிய பார்வைகள் மூலம் இந்தக் கேடிகள் எம்மைப் பார்வைச் சிறைக்குள் சிறைப்படுத்தி வதைக்கின்றனர்" என்று போலீஸில் முறைப்பாடு செய்கின்ற செய்திகள் எமது செவிகளை எட்டுகின்றன. ஆகவே நவ நாகரிகத்தின் மறைப்பதை ஒழிக்கும் திட்டம் இயல்புக்கு முரணானதாகும். மறைக்குமாறு குர்ஆன் கூறும் கட்டளை இயல்புக்கு மிக உகந்ததாக இருப்பதுடன் கூடவே பாசத்தின் ஊற்றாகவும் பெறுமதி வாய்ந்த ஒவ்வொரு நித்திய தோழியாகவும் திகழும் பெண் குலத்தைத் தாழ்விலிருந்தும் இழிவிலிருந்தும் ஆத்மார்த்தமான அடிமைத்தனத்திலிருந்தும் பாதுகாக்கின்றது. மேலும், பெண்களிடம் அன்னியமான ஆண்கள் விடயத்தில் இயல்பாகவே ஓர் அச்ச உணர்வு உள்ளது. அச்சமானது இயல்பாகவே மறைத்தலை வேண்டி நிற்கின்றது. ஏனெனில் வெறும் எட்டு, ஒன்பது நிமிடங்கள் அளவான ஓர் இன்பம் அந்த இன்பத்தையே மிகத் தீவிரமான வேதனையாக மாற்றிவிடக்கூடிய எட்டு ஒன்பது மாதங்கள் நீளமான, பல்வேறு கஷ்டங்களுடன் கூடிய கருக் காலச் சுமையையும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பற்ற ஒரு குழந்தையை எட்டு, ஒன்பது வருடங்கள் வளர்த்தெருக்கின்ற பாதுகாவலர் சுமையையும் தந்துவிட்டுச் செல்கின்ற சாத்தியப்பாடு உள்ளது. இது போன்ற நிகழ்வுகள் அதிகமாகவே நிகழ்ந்தேறுவதால் அவர்கள் இயல்பிலேயே அன்னிய ஆடவர்கள் விடயத்தில் மிகத் தீவிரமாகப் பயப்படுவார்கள். அவர்களின் இயல்பூக்கம் மறைந்துகொள்ளவே நாடும். மேலும் மறைத்தல் மூலம் மஹ்ரமல்லாதவர்களின் பசியைத் தூண்ட வழிசெய்யாதிருக்குமாறும் அத்துமீறலுக்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காதிருக்குமாறும் அவர்களின் படைப்பிலுள்ள நலின சுபாவம் கட்டளையிடுவதோடு மறைத்தல் அவர்களுக்கான கலசமாகவும் கோட்டையாகவும் உள்ளது என்பதையும் காண்பிக்கின்றது. நான் கேள்விப்பட்டதற்கிணங்க தலை நகரத்தின் மத்தியில், பட்டப் பகலில், மக்களுடைய கண் முன்னால் மிகவும் மட்டமான ஓர் அங்காடித் தொழிலாளி மிகப் பெரிய பதவியிலுள்ள ஒருவரின் அரைகுறையாக ஆடை அணிந்த மனைவியுடன் வெளிப்படையாகவே பொருக்கித்தனமாக நடந்துகொண்ட நிகழ்வு மறைத்தலுக்கு எதிராக நிற்பவர்களின் வெட்கம் கெட்ட முகங்களில் போடப்பட்ட ஓர் அரையாகும்.

§3

பெண்ணுக்கும் ஆணுக்கும் மத்தியிலுள்ள மிக அடிப்படையான, மிக வீரியமான தொடர்பும் அன்பும் ஆதரவும் வெறுமனே உலக வாழ்வின் தேவைகள் நிமித்தமாக வருபவையல்ல. ஆம், ஒரு பெண் தனது கணவனுக்கு வெறுமனே உலக வாழ்வுடன் முற்றுப்பெறுகின்ற ஒரு வாழ்க்கைத் தோழியல்ல. மாறாக நித்திய வாழ்வு வரை தொடரப் போகின்ற ஒரு வாழ்க்கைத் தோழியாவாள். இதுவே யதார்த்தம் என்பதால் தனது நித்தியத் தோழனாகிய கணவனின் பார்வையைத் தவிர வேறு எந்தப் பார்வையையும் தன்பால் ஈர்க்காதிருப்பதும் அந்தத் தோழனை மனஸ்தாபத்துக்கோ பொறாமைகள் சந்தேகங்களுக்கோ ஆளாக்காதிருப்பதும் அவளது கடமையாகும். உண்மையில் முஃமினான கணவனின் -ஈமானிய மாண்பின் அடிப்படையில்- அவளுடனான தொடர்பு வெறுமனே உலக வாழ்வுடன் மட்டுப்பட்ட, விலங்கியல் தேவைகளுக்கும் அழகியல் உணர்வுகளுக்கும் மாத்திரம் உரிய தற்காகிகமான ஒரு காதலாக இருக்காது. மாறாக நித்திய வாழ்வுக்கான ஒரு வாழ்க்கைத் தோழி என்ற வகையில் மிக அடிப்படையான, மிக ஆழமான ஒரு காதலும் மரியாதையும் உடையதாகவே அந்தத் தொடர்பும் உறவும் இருக்கும். அத்துடன் ஈமானிய அடிப்படையிலிருந்து வரும் அந்த ஆழமான காதல் வெறுமனே வாலிபப் பருவத்தின் அழகான காலங்களில் மாத்திரமன்றி முதுமையின் அசிங்கமான காலத்தையும் கடந்து தொடர்வதாகும். எனவே அதற்குப் பகரமாக அவளும் தனது அழகை அவனது பார்வைக்காக மாத்திரம் ஒதுக்குவதும் தனது காதலை அவனில் சிறை வைப்பதும் மனிதம் வேண்டி நிற்கின்ற ஒரு மாண்பாகும். இல்லாவிட்டால் மிகக் குறைவாகவே அடைந்துகொள்வாள், மிக அதிகமானதை இழந்துவிடுவாள். ஷரீஅத்தின் அடிப்படையில் கணவன் மனைவிக்கு ஒப்பாக இருக்க வேண்டும். அதாவது ஒருவருக்கொருவர் பொருத்தமாக இருக்க வேண்டும். ஒப்பாகவும் பொருத்தமாகவும் இருக்க வேண்டிய விடயங்களுள் மிக மகத்தானது மார்க்க விடயமாகும். எத்தனை பெரிய மகிழ்ச்சி அந்தக் கணவனுக்கு? அவன் தனது மனைவியின் மார்க்கத்தைப் பார்த்து, அந்த வாழ்க்கைத் தோழியை நித்திய வாழ்விலும் இழந்துவிடக் கூடாது என்பதற்காக அவளைத் தக்லீத் செய்து மார்க்கத்தைப் பற்றிக்கொள்கிறான். எவ்வளவு பெரிய பாக்கியசாலி அந்தப் பெண்? அவள் தனது கணவனின் மார்க்கத்தைப் பார்த்துத் தனது நித்தியத் தோழனை இழந்துவிடக் கூடாது என்பதற்காகத் தக்வாவை அணிகலனாக அணிந்துகொள்கிறாள். அந்த ஆணின் மீது நாசம் உண்டாவதாக! அவனோ ஸாலிஹான பெண்ணை நித்தியமாக இழப்பதற்குக் காரணமாக உள்ள பாவங்களை நாடிச் செல்கிறான். எவ்வளவு பெரிய அபாக்கியசாலி அந்தப் பெண்! அவள் தக்வாதாரியான தனது கணவனின் வழியில் செல்லாமல் தனது நித்திய வாழ்க்கைத் தோழனை இழந்துவிடுகிறாள். எத்தனை ஆயிரம் நாசங்கள் அந்தக் கணவனுக்கும் மனைவிக்கும்? அவர்களோ பாவங்களிலும் தீமைகளிலும் ஒருவரையொருவர் தக்லீத் செய்கின்றனர். ஒருவரையொருவர் நெருப்பில் தள்ளுவதற்குப் பரஸ்பரம் உதவி செய்கின்றனர்.

§4

ஒரு குடும்பத்தின் நிம்மதியான வாழ்வு கணவன் மனைவிக்கு மத்தியிலுள்ள பரஸ்பர நம்பிக்கை, உண்மையான மதிப்பு, மரியாதை, அன்பு என்பவற்றின் மூலமே தொடர்கின்றது. மறைத்தலின்றிய அரைகுறை ஆடைகள் அந்த நம்பிக்கையைக் குழைப்பதோடு பரஸ்பர மரியாதை, அன்பு என்பவற்றையும் சிதைத்துவிடும். ஏனெனில் அரைகுறை ஆடையை நாடுகின்ற பத்துப் பெண்களுள் அதிகபட்சம் ஒரு பெண்ணே தனது கணவனைவிட அழகான ஒருவனைக் காணாமையினால் அண்ணிய ஆடவர்களிடம் தன் மீதான நேசத்தை உண்டாக்குவதற்கான பிரயத்தனங்களில் இறங்கமாட்டாள். ஒன்பது பேர் தனது கணவனைவிட சிறந்தவனைக் காண்பார்கள். அவ்வாறே இருபது ஆண்களில் அதிகபட்சம் ஒரு ஆணே தனது மனைவியைவிட அழகான ஒருவளைக் காணாதிருக்கின்றான். இந்த நிலையில் அந்தத் தூய அன்பும் பரஸ்பர மதிப்பும் அகன்று செல்வதற்கான சூழல் உருவாகின்றது. கூடவே இன்னொரு பக்கம் மிக அசிங்கமான, மிகக் கீழ்த்தரமான ஓர் உணர்வைத் தூண்டிவிடவும் காரணியாக அமையலாம். அதாவது: மனிதன் தனது சகோதரியைப் போன்றே மஹ்ரமானவர்களின் விடயத்திலும் இயல்பாகவே இச்சையுணர்வைக் கொண்டிருப்பதில்லை. ஏனெனில் மஹ்ரமான முகங்கள் நெருக்கம், மஹ்ரமியத் அடிப்படையிலான பாசம், ஆகுமாக்கப்பட்ட அன்புணர்வு என்பவற்றைத் தூண்டிவிடுவதால் நஃப்ஸானியத்தான, இச்சையின் பாற்பட்ட உந்தல்களை முளைக்க முன்னரே அழித்துவிடுகின்றன. ஆனால் கால்களைப் போன்று ஷரீஅத்தின் அடிப்படையில் மஹ்ரமானவர்களுக்கும் காண்பிப்பது தடை செய்யப்பட்ட பிரதேசங்களைத் திறந்துவிடுவது மட்டரகமான நஃப்ஸுகளில் மிக அசிங்கமான ஓர் உணர்வு மேலோங்குவதற்குக் காரணமாக அமையலாம். ஏனெனில் மஹ்ரமானவர்களின் முகம் மஹ்ரமியத்தின் செய்தியைச் சொல்லும். அது மஹ்ரமல்லாத முகத்துக்கு ஒப்பாகாது. ஆனால், உதாரணமாக திறக்கப்பட்ட காலைப் பொருத்தவரை மஹ்ரமான, மஹ்ரமல்லாத இரண்டும் ஒப்பானதாகும். மஹ்ரமியத்தைப் பற்றிச் சொல்லக்கூடிய ஒரு வேறுபாடு இல்லாத காரணத்தினால் மிருகத்தனமான ஓர் இச்சையுணர்வை சில மஹ்ரமானவர்களுக்கு மத்தியிலேயே ஏற்படுத்திவிடுவதற்கான வாய்ப்பும் உள்ளது. இது நினைக்கும் போதே அதிர்ச்சியளிக்கின்ற, மானுடத்தின் மிகத் தாழ்ந்த ஒரு நிலையாகும்.

§5

சந்ததிகளின் விருத்தி எல்லோராலும் வேண்டப்படுகின்ற ஒரு விடயம் என்பது பொது உண்மையாகும். சந்ததிகளின் விருத்திக்குச் சார்பாக இல்லாத எந்த ஒரு சமூகமும் எந்த ஒரு நாடும் இல்லை. ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களும் கூட تَنَاكَحُوا تَكَاثَرُوا فَاِنّ۪ى اُبَاه۪ى بِكُمُ الْاُمَمَ -اَوْ كَمَا قَالَ என்று கூறுகிறார்கள். அதாவது "திருமணம் செய்யுங்கள், விருத்தி அடையுங்கள். நான் மறுமைநாளில் உங்களுடைய மிகையான எண்ணிக்கையையிட்டுப் பெருமைப்படுவேன்." என்று கூறுகிறார்கள். ஆனால், மறைத்தலை ஒழிப்பது திருமணங்களை அதிகரிக்கச் செய்வதற்குப் பதிலாக நன்றாகவே குறைத்துவிடுகின்றது. ஏனெனில் மிகவுமே காவாலித்தனமான மிகவுமே போக்கிரித்தனமான ஒரு வாலிபனும் கூடத் தனது மனைவி கண்ணியமானவளாக இருக்க வேண்டும் என்றே விரும்புவான். தன்னைப் போன்று காவாலித் தனமாக அல்லது அரைகுறையாக இருப்பதை விரும்பமாட்டான். எனவே அவ்வாறான ஒரு நிலை தோன்றுமாக இருந்தால் அதைவிட திருமணமாகாமல் தனிமையாக இருப்பதையே தெரிவுசெய்வான். அல்லது விபச்சாரத்துக்குத் தாழ்ந்துவிடுவான். ஆனால், பெண் அவ்வாறல்ல. அவளால் அந்த அளவு கணவன் விடயத்தில் ஏகபோகம் கொண்டாட முடியாது. ஏனெனில் பெண் குடும்ப வாழ்வில் வீட்டின் நிர்வாகியாகவும் தனது கணவனின் சொத்துகள், பிள்ளைகள் என்று அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பிலும் இருப்பதால் அவளுக்குத் தேவையான மிக அடிப்படைக் குணங்கள் உண்மையும் நம்பிக்கையும் விசுவாசமுமாகும். அரைகுறை ஆடைகள் அந்த நம்பிக்கையை சிதைத்துத் தனது கணவனின் பார்வையில் தன் மீதான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் மாத்திரமன்றி அவனின் நிம்மதியையும் இல்லாமலாக்கிவிடுகின்றது. மேலும் ஆண்களிடம் உள்ள இரண்டு அழகிய குணங்களாகிய தற்துணிச்சலும் தாராளத் தன்மையும் பெண்களிடம் காணப்படுவது நம்பிக்கையைப் பாதிக்கும் அம்சங்களாக இருப்பதால் தீய குணங்களாகவே கருதப்படுகின்றன. ஆனால் கணவனின் அடிப்படைப் பொறுப்பு அவளுடைய பொருளாளராகவோ நம்பிக்கையாளராகவோ இருப்பதன்றி பாதுகாப்பையும் அன்பையும் ஆதரவையும் மதிப்பு மரியாதையையும் வழங்குவதாகும். எனவேதான் ஆண் ஏகபோகத்துக்கோ தனியுரிமைக்கோ உற்படுவதில்லை. வேறு பெண்களையும் மணமுடிக்க அனுமதியுள்ளது. எமது நாட்டையோ பிராந்தியத்தையோ ஐரோப்பாவுக்கு ஒப்பிட முடியாது. ஏனெனில் அங்கு சண்டைக் கலாச்சாரம் (Duel) போன்ற மிகக் கடுமையான வழிகளூடாக அறைகுறை ஆடைகளுக்கு மத்தியிலும் கண்ணியமும் கற்பும் ஓரளவு பாதுகாக்கப்படுகின்றது. கண்ணியம் பேணும் ஒருவரின் பெண்ணைக் கெட்ட நோக்கத்துடன் பார்க்கின்ற ஒருவன் கபனை அணிந்துகொண்டே பார்க்க வேண்டும். அத்துடன் குளிர்த் தேசங்களாகிய ஐரோப்பாவின் இயல்புகள் அந்தத் தேசங்களைப் போன்றே குளிர்மையும் சடத்தன்மையும் வாய்ந்தவையாகும். ஆசியாவை, அதாவது இஸ்லாமியப் பிராந்தியத்தைப் பொருத்தவரை ஐரோப்பாவுடன் ஒப்பிடும் போது வெப்ப வலயத்தில் வருகின்ற வெதுவெதுப்பான நாடுகளாகும். மனித நடத்தையில் சூழலின் தாக்கத்தை எல்லோரும் அறிவார்கள். அந்தக் குளிர்ந்த தேசங்களில் குளிர்மையான தன்மை வாய்ந்த மனிதர்கள் மத்தியில் மிருக உணர்வுகளைத் தூண்டிவிடுவதற்கும் தாகத்தை உண்டாக்குவதற்கும் அரைகுறை ஆடைகள் ஒரு வேளை அவ்வளவாகப் பங்களிப்புச் செய்யாதிருக்க முடியும். எனவே அது அதிகரித்த துஷ்பிரயோகங்களுக்கோ வீண்விரயங்களுக்கோ வழிவகுக்காதிருக்க முடியும். ஆனால், விரைவாக சூழலின் பாதிப்புக்குள்ளாகின்ற வெப்ப வலய நாடுகளில் உள்ள மனிதர்களின் நஃப்ஸானிய இச்சைகளைத் தொடர்ச்சியாகப் பரவசப்படுத்தி வைத்திருக்க உதவும் அரைகுறை ஆடைக் கலாச்சாரம் நிச்சயமாக அதிகரித்த துஷ்பிரயோகங்களுக்கும் வீண்விரயங்களுக்கும் சந்ததிகள் பலமிழந்து செல்வதற்கும் காரணமாக அமையும். ஒரு மாதத்தில் அல்லது இருபது நாட்களுள் ஏற்படுகின்ற இயல்பான தேவைக்குப் பகரமாக ஓரிரு நாட்களுக்கொரு முறை வீண்விரயம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகக் கருதுவான். எனவே ஒவ்வொரு மாதமும் பதினைந்து நாட்களளவு மாதவிடாய் போன்ற காரணங்களால் பெண்ணிடமிருந்து விலகியிருக்கும் நிர்ப்பந்தம் உள்ளதால், நஃப்ஸுக்கு அடிமையானவன் விபச்சாரத்தின்பால் உந்தப்படுவான். அவ்வாறே நகரவாசிகள் கிராமவாசிகளையும் நாடோடிகளையும் பார்த்து மறைத்தலை ஒழிக்க முடியாது. ஏனெனில் கிராமங்களிலும் நாடோடிகள் மத்தியிலும் வாழ்க்கைச் சுமையைப் போக்குவதற்காக உடல் ரீதியாக உழைக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால் அதனால் ஏற்படுகின்ற சோர்வும் காணப்படும். அத்துடன் நகரங்களோடு ஒப்பிடும் போது பெண்கள் பார்வையைக் குறைவாகவே ஈர்க்கத்தக்க நிலையில் மாஃஸூமான உழைப்பாளிகளாகவும் ஓரளவு பருமனாகவுமே இருப்பார்கள். எனவே இத்தகைய சூழலில் பெண்கள் ஓரளவு திறந்திருப்பது நஃப்ஸானிய இச்சைகளைத் தூண்டிவிடக் காரணமாக அமைவதில்லை. மேலும் கிராமங்களில் தான்தோன்றித்தனமாக அழையும் வேலையில்லாத போக்கிரிகள் மிகக் குறைவாகவே இருப்பதால் நகரங்களிலுள்ள குழப்பங்கள் அங்கு இருக்காது. எனவே அவர்களுடன் ஒப்பிட முடியாது. بِاس۟مِهٖ سُب۟حَانَهُ

§6

சில நகரங்களில் பெண் சமூகத்துக்கு மத்தியில் ரிஸாலே நூர் மீதுள்ள அதிகரித்த, அலாதியான ஈடுபாட்டைக் கண்டவன் என்ற வகையிலும் எனது தகுதியை விஞ்சி அவர்கள் ரிஸாலே நூருக்கான எனது விளக்க வகுப்புகளில் ஆர்வமாக உள்ளார்கள் என்பதை அறிந்தவன் என்ற வகையிலும் முபாரக்கான இஸ்பார்த்தா நகருக்கு, அதாவது ஆத்மார்த்தமான மத்ரஸதுஸ் ஸஹ்ராவுக்கு மூன்றாவது முறையாக வந்த போது எனது மறுமைச் சகோதரிகளான அந்த முபாரக்கான பெண்கள் சமூகம் என்னிடம் ஒரு பாடத்தைச் செவிமடுக்க விரும்புகிறார்கள் என்பதைச் செவிமடுத்தேன். அதாவது பள்ளிவாசலில் ஓர் உரையாக அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் நானோ நான்கு ஐந்து வகைகளில் சுகயீனனாகவும் மிகவுமே நொந்து நொடிந்து போன நிலையிலும் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் கூடக் கஷ்டப்படுபவனாகவும் இருக்கிறேன். என்றாலும், இன்றிரவு மிக வலிமையான ஒரு நினைவு உள்ளத்துக்கு வந்தது. அதாவது, பதினைந்து வருடங்களுக்கு முன்னர் வாலிபர்களின் வேண்டுகோளுக்கமைய “வாலிபர்களுக்கான வழிகாட்டல்” என்ற சிறு நூலை எழுதிய போது அதனால் அதிகமான பயன் கிடைத்தது. இன்று பெண்கள் சமூகம் வாலிபர்களைவிட அதிகம் அத்தகைய ஒரு வழிகாட்டலில் தேவையுடையவர்களாக உள்ள விடயம் நினைவில் தோன்றியது. எனவே மிகவும் இயலாத, கஷ்டகரமான நிலையில் இருந்தாலும் மிக அவசியமான சில அம்சங்களை மிகவும் சுருக்கமான மூன்று குறிப்புகளில் எனது முபாரக்கான அந்தச் சகோதரிகளுக்கும் ஆத்மார்த்தமான மகள்களாகிய யுவதிகளுக்கும் தெளிவுபடுத்துகிறேன்.

§7

ரிஸாலே நூருடைய மிக மகத்தான ஓர் அடிப்படை பாசம் என்ற வகையில், பாசத்தின் கதாநாயகர்களாகிய பெண்களிடம் இயல்பாகவே ரிஸாலே நூருடனான ஓர் ஈடுபாடு காணப்படுகின்றது. அத்துடன் புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே, இந்த இயல்பான ஈடுபாடு பல்வேறு இடங்களில், பல்வேறு வகைகளில் உணரப்படுகின்றது. பாசத்தில் பொதிந்துள்ள அர்ப்பணத்தில் ஹகீகத்தான இஹ்லாஸும் பிரதியுபகாரம் எதிர்பாராத தூய்மையும் பொதிந்திருப்பதால் இந்தக் காலத்தில் இதற்கு மகத்தான ஒரு முக்கியத்துவம் காணப்படுகின்றது. ஆம், ஒரு தாய் தனது பிள்ளையை ஆபத்திலிருந்து பாதுகாப்பதற்காக எந்த ஒரு பிரதியுபகாரமும் எதிர்பாராமல் தனது ஆத்மாவை அர்ப்பணம் செய்வதும் தனது இயல்பான பொறுப்பின் பிரகாரம் ஹகீகத்தான ஓர் இஹ்லாஸுடன் தன்னையே தனது பிள்ளைக்காகக் குர்பான் கொடுத்துவிடுவதும் பெண்களிடம் மிக உயர்வான ஒரு வீரம் உள்ளதையே காட்டி நிற்கின்றது. இந்த வீரத் தன்மையை விருத்தி செய்துகொள்வதன் மூலம் தனதும் தனது பிள்ளையினதும் இம்மை, மறுமை ஈருலக வாழ்வையும் சம நேரத்தில் பாதுகாத்துக்கொள்ள முடியும். ஆனால், சில ஆபத்தான அலைகளுக்கு அள்ளுண்டு செல்வதன் மூலம் அந்தப் பலமான, பெறுமதிவாய்ந்த விழுமியம் விருத்தி அடையாது. விருத்தியடைந்தாலும் துஷ்பிரயோகத்துக்கு வழிவகுக்கும். நூற்றுக்கணக்கான உதாரணங்களுள் இலகுவான ஓர் உதாரணம் இதோ: அந்தப் பாசமுள்ள தாய், தனது பிள்ளை உலக வாழ்வில் ஆபத்துகளை எதிர்நோக்கிவிடக் கூடாது என்பதற்காகவும் அதன் நலன்களைக் காண வேண்டும் என்பதற்காகவும் எல்லா வகையான தியாகங்களையும் மனமுவந்து ஏற்றுக்கொள்வாள். அதற்கேற்றவாறே தனது பிள்ளையைப் பயிற்றுவிப்பாள். ஏன் தனது பிள்ளை ராஜாவாக வரவேண்டும் என்பதற்காக அருகிலுள்ள ஹாஃபிஸ் மக்தபிலிருந்து இடைநிறுத்தம் செய்துவிட்டுத் தனது மொத்த சொத்துகளையும் விற்று ஐரோப்பாவுக்கு அனுப்பி வைப்பாள். ஆனால் ஈந்த நடவடிக்கைகளால் அவள் தனது பிள்ளையின் மறுமை வாழ்வு ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படுவதை சிந்திப்பதில்லை. வெறுமனே உலகச் சிறையிலிருந்து பாதுகாக்கின்ற முயற்சி மறுமைச் சிறையை உதாசீனம் செய்ய வைக்கின்றது. எனவே அந்த இயல்பான பாசத்துக்குப் பகரமாக மறுமையில் தனது பிள்ளையின் பரிந்துரை அவசியப்படும் போது மாஃஸூமான அந்தப் பிள்ளையை தனக்கெதிராக முறையீடு செய்யும் நிலைக்கு ஆளாக்கிவிடுகிறாள். அந்தப் பிள்ளை “ஏன் எனது ஈமானைப் பலப்படுத்தாமல் எனது இந்த நிலைக்குக் காரணமாக அமைந்தாய்?” என்று கேட்கின்ற நேரம் வரப் போகின்றது. அத்துடன் உலகிலும் கூட இஸ்லாமியப் பயிற்றுவிப்புகளை முறைப்படி பெற்றுக்கொள்ளாத காரணத்தினால் தாயின் அற்புதமான பாசத்தின் ஹக்கைக் கொடுக்கவோ அதற்குப் பகரமாக உரிய பிரதியீட்டை, பணிவிடையை வழங்கவோ முடியாத நிலை ஏற்படும். இந்த அடிப்படையான விடயத்திலும் ஏகப்பட்ட குறைகள் விடப்படும். மாறாக ஹகீகத்தான அந்தப் பாசத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் அதன் மூலம் தனது பிள்ளையை நித்திய சிறைச்சாலையாகிய நரகத்திலிருந்தும் நித்திய பலிபீடமாகிய வழிகேட்டுக்குள் மரணிப்பதிலிருந்தும் பாதுகாப்பதற்காக முயற்சித்தால் அந்தப் பிள்ளைகள் தமது அத்தனை நன்மைகள் மூலமும் -அவற்றின் ஒரு பகுதி தாயுடைய நல்லமல்கள் பதிவேட்டிலும் சேர்க்கப்படுவதால்- தமது தாயின் வபாத்துக்குப் பின்னரும் எல்லாக் காலங்களிலும் அவளது ஆத்மாவை ஒளியேற்றி ஈடேற்றும் பிள்ளைகளாகவும் மறுமையில் முறைப்பாடு செய்பவர்களாக அன்றி உயிருக்குயிராக அவளுக்காகப் பரிந்து பேசுகின்ற பிள்ளைகளாகவும் அனைத்துக்கும் முத்தாய்ப்பாய் நித்திய வாழ்விலும் அவளுடைய முபாரக்கான பிள்ளைகளாகவும் இருப்பார்கள். ஆம், மனிதனின் மிக முதன்மையான உஸ்தாதும் மிகத் தாக்கம் செலுத்துகின்ற ஆசானாகவும் இருப்பது அவனது தாயாகும். இந்த வகையில் நான் என்னில் திட்டமாகவும் தொடர்ச்சியாகவும் ஒரு விடயத்தை உணர்கிறேன்: நான் எனது இந்த எண்பது வருட வாழ்வில் எண்பதாயிரம் மனிதர்களிடம் பாடங்களைக் கற்றுக்கொண்ட போதிலும் ஓர் உண்மையைச் சத்தியம் செய்து கூறுகிறேன்: நான் கற்றுக்கொண்ட மிக அடிப்படையான, மிக அசைக்க முடியாத, எப்போதுமே எனதுள்ளத்தில் பசுமையாக இருக்கும் பாடங்கள் எனது மர்ஹூமான தாயிடமிருந்து பெற்றுக்கொண்ட போதனைகளும் ஆத்மார்த்தமான பாடங்களுமாகும். அந்தப் பாடங்கள் அனைத்தும் என்னில் விதைகளைப் போன்று தடம்பதித்துள்ளன. ஏனைய அனைத்துப் பாடங்களும் அந்த விதைகளின் மீதே எழுப்பப்பட்டுள்ளன என்பதைத் தெளிவாகக் காண்கிறேன். அதாவது ஒரு வயதிலிருந்தே எனது இயல்பிலும் ஆத்மாவிலும் மர்ஹூமான எனது தாயால் ஊட்டப்பட்ட பாடங்களும் உணர்வுகளும் தற்போது எண்பதாவது வயதில் காண்கின்ற மிகப் பெரும் சத்தியங்களுக்குள் ஒவ்வொரு மூல விதையாகத் தென்படுவதைக் காண்கிறேன். அந்த வகையில், என்னுடைய மஸ்லக், மஷ்ரபின் நான்கு அடிப்படைகளுள் மிக முக்கியமானதாகத் திகழும் பாசத்தையும், ரிஸாலே நூரின் மிகப் பெரிய சத்தியமாகத் திகழும் கவலை, இரக்கம், கருணை என்பவற்றையும் எனது தாயின் பாசம் கமழும் நடவடிக்கைகள், நிலைமைகள் ஊடாகவும் அந்த ஆத்மார்த்தமான பாடங்களினூடாகவுமே பெற்றுக்கொண்டேன் என்பதை யகீனாகக் காண்கிறேன். ஆம், ஹகீகத்தான இஹ்லாஸுடன் ஹகீகத்தான ஒரு தியாகத்தைச் சுமக்கும் தாய்மையின் பாசத்தைத் மாஃஸூமான தனது பிள்ளையின் மிகப் பெரும் செல்வமாகத் திகழும் மறுமையைச் சிந்திக்காமல் தற்காலிகமான, உடைந்து போகும் கண்ணாடித் துண்டாகத் திகழும் உலகை நோக்கி அந்தப் பிள்ளையின் மொத்தக் கவனத்தையும் திருப்புவதும் இந்த வகையில் அந்தப் பிள்ளை மீது பாசத்தை வெளிப்படுத்துவதும் உண்மையில் அந்தப் பாசத்தைத் துஷ்பிரயோகம் செய்கின்ற செயலாகும். ஆம், பெண்மையின் பாசத்தை அடியாகக் கொண்ட வீரமானது எவ்வித கூலியோ பிரதியுபகாரங்களோ எதிர்பாராமல் எவ்வித சுய நலன்களோ பகட்டுகளோ பாராட்டாமல் தனது ஆத்மாவை அர்ப்பணிக்கும் புனிதமான ஒரு வீரமாகும். அந்தப் பாசத்தின் சிறிய ஒரு மாதிரியாகத் திகழும் ஒரு கோழி தனது குஞ்சைக் காப்பதற்காக ஒரு சிங்கத்தைத் தாக்குவதும் அந்த வழியில் தனது ஆத்மாவைத் தியாகம் செய்வதும் இந்த உண்மையை நிரூபிக்கும் ஓர் அத்தாட்சியாகும். மேலும் தற்போதைய இஸ்லாமியப் பயிற்றுவிப்புகளிலும் மறுமைக்கான அமல்களிலும் இருக்க வேண்டிய மிகப் பெறுமதிவாய்ந்த, மிக அவசியமான அடிப்படை இஹ்லாஸ் ஆகும். அந்த வகையில் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட வீரத்தில் அந்த ஹகீகத்தான இஹ்லாஸ் காணப்படுகின்றது. எனவே இந்த இரண்டு அம்சங்களும் முபாரக்கான பெண் சமூகத்துக்கு மத்தியில் விருத்தியடைய ஆரம்பிக்குமாக இருந்தால் இஸ்லாமிய வட்டத்துக்குள் மிகப் பெரிய ஒரு நிம்மதிக்கும் அமைதிக்கும் காரணியாக அமையும். ஆனால், ஆண்களின் வீரம் எதிர்பார்ப்புகளின்றி ஆகுவதில்லை. நூறு வழிகளில் பிரதிபலனை எதிர்பார்ப்பார்கள். எதுவும் இல்லாவிட்டால் புகழையும் கண்ணியத்தையுமாவது எதிர்பார்ப்பார்கள். ஆனால், இத்தகைய சிறப்பைக் கொண்ட பெண்கள் துரதிஷ்டவசமாக, சில அநியாயக்கார ஆண்களின் தீங்குகள், அடக்குமுறைகளிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வதற்காக, வேறொரு வகையில் அதாவது தமது இயலாமை பலவீனம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்ட வேறொரு கோணத்தில் முகஸ்துதியை நோக்கிச் செல்கிறார்கள்.

§8

இந்த வருடம் தனிமையில் இருக்கும் போது, முற்றாகவே சமூக வாழ்விலிருந்து ஒதுங்கியிருந்தாலும் ரிஸாலே நூர் மாணவர்களாகத் திகழும் சில சகோதர, சகோதரிகளின் பொருட்டுக்காக உலகைத் திரும்பிப் பார்த்தேன். என்னைச் சந்திக்கும் பெரும்பாலான தோழர்களின் குடும்ப வாழ்வு தொடர்பான பிரச்சினைகளையும் முறைப்பாடுகளையும் செவிமடுத்த போது “ஐயையோ” என்று கூறிவிட்டேன். மனிதனின், குறிப்பாக ஒரு முஸ்லிமின் புகலிடமாகவும் ஒரு வகைச் சுவனத்துப் பூங்காவாகவும் சிறிய ஓர் உலகமாகவும் இருப்பது குடும்ப வாழ்வாகும். இதுவும் சிதைய ஆரம்பித்துவிட்டதா என்று கவலைப்பட்டேன். காரணத்தை ஆராய்ந்து பார்த்த போது இஸ்லாமிய சமூக வாழ்வுக்கும் அதன் மூலம் தீனுல் இஸ்லாத்துக்கும் தீங்கு விளைவிப்பதற்காக சமூகத்தின் முதுகெளும்பாகத் திகழும் வாலிபர்களை வழி கெடுத்து, வாலிப இச்சைகளுக்கு இறையாக்கி நெறி பிறழச் செய்யும் நோக்குடன் ஒரு சில குழுக்கள் திட்டமிட்டு இயங்குவதைப் போன்றே பாவப்பட்ட பெண் சமூகத்தின் பொடுபோக்கான பிரிவினரையும் தவறான வழிகளில் இட்டுச் செல்வதற்காக ஒரு சில குழுக்கள் திட்டமிட்ட அடிப்படையில் மிகத் தீவிரமாக இயங்குவதை உணர்ந்தேன். இஸ்லாமிய சமூகத்தின் மீதான பயங்கரமான ஒரு தாக்குதல் அந்தத் திசையால் வருவதை அறிந்துகொண்டேன். நானும் எனது சகோதரிகளுக்கும் எனது ஆத்மார்த்தமான மகள்களாக இருக்கும் யுவதிகளுக்கும் திட்டமாக ஒரு விடயத்தைக் கூறுகிறேன்: பெண்களின் மறுமை விமோசனத்தைப் போன்றே உலக வாழ்வின் நிம்மதியையும் தமது இயல்பில் குடிகொண்டுள்ள உயர்வான சிறப்பம்சங்களையும் சிதையாமல் பாதுகாப்பதற்கான ஒரே வழி இஸ்லாத்தின் வட்டத்துக்குள் உள்ள பயிற்றுவிப்பு மாத்திரமேயாகும். இதற்கான வேறொரு வழி கிடையவே கிடையாது. ரஷ்யாவில் பாவப்பட்ட அந்தப் பெண்ணினத்தை எத்தகைய நிலைக்கு ஆளாக்கியுள்ளார்கள் என்பதைச் செவிமடுக்கிறீர்கள். ரிஸாலே நூருடைய ஒரு பகுதியில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: புத்தி பேதலிக்காத எந்த ஓர் ஆணும் தனது வாழ்க்கைத் தோழியின் மீதான அன்பை ஐந்து, பத்து வருடங்களே தொடரப் போகும் தற்காலிகமான வெளிப்படை அழகின் மீதோ தோற்றத்தின் மீதோ கட்டியெழுப்பமாட்டான். மாறாக பெண்களுடைய அழகுகளில் மிக அழகான, மிக நிலையான அவளது பாசத்தின் மீதும் பெண்மைக்கே உரிய அழகிய குண இயல்புகளின் மீதுமே கட்டியெழுப்ப வேண்டும். அந்த அபலை முதுமை அடைந்த பின்னரும் அவள் மீதான அந்த அன்பு தொடர்வதாக இருக்க வேண்டும். ஏனெனில் அவள் வெறுமனே உலக வாழ்வில் உதவிக்காக வந்த தற்காலிகமான ஒரு துணையாக அன்றி நித்திய வாழ்வு வரை தொடர்கின்ற, நித்தியமான, இனிமையான ஒரு வாழ்க்கைத் தோழியாக இருப்பதால் முதுமை அடைந்து செல்லச் செல்ல மென்மேலும் பரஸ்பர பதிப்பும் மரியாதையும் அன்பும் அதிகரிப்பது அவசியப்படுகின்றது. தற்போது நாகரிகம் என்ற திரைக்குப் பின்னால் கொடுக்கப்படுகின்ற பயிற்றுவிப்பின் கீழ், தற்காலிகமான ஒரு தோழமையின் பின்னர் நிரந்தரமான ஒரு பிரிவுக்கும் பிளவுக்கும் ஆளாகின்ற ஒரு குடும்ப வாழ்வு அடிப்படையிலேயே சிதைந்து போன அத்திவாரத்தின் மீது கட்டப்படுவதாகும். மேலும் ரிஸாலே நூருடைய ஓரிடத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது: ஆம், அவனே பாக்கியசாலியான அந்த ஆணாவான்: அவன் தனது நித்திய வாழ்க்கைத் தோழியை இழக்காதிருப்பதற்காக ஸாலிஹான தனது மனைவியைத் தக்லீத் செய்து தானும் ஸாலிஹானவனாக மாறுகிறான். அவளே பாக்கியசாலியான அந்தப் பெண்ணாவாள்: அவள் மார்க்கப் பற்றுள்ள தனது கணவனைப் பார்த்து, தனது நித்திய தோழனை இழந்துவிடாதிருப்பதற்காகத் தானும் மார்க்கத்தைப் பற்றிக்கொள்கிறாள். தனது உலக நிம்மதிக்குள் மறுமை நிம்மதியையும் தேடிக்கொள்கிறாள். அவனே அபாக்கியசாலியான அந்த ஆணாவான்: அவன் பாவங்களில் மூழ்கிய தனது மனைவியின் வழியில் செல்கிறான். அவளை அதிலிருந்து மீட்க முயற்சிக்காமல் அவளுடனே அதில் பங்கேற்கிறான். அவளே அந்த அபாக்கியசாலியான பெண்ணாவாள்: அவள் தனது கணவனின் பாவத்தைக் கண்ட பின்னர் அதை வேறொரு வகையில் தக்லீத் செய்கிறாள். அந்தக் கணவன், மனைவி இருவர் மீதும் நாசம் உண்டாவதாக: அவர்கள் ஒருவரையொருவர் நெருப்பில் தள்ளிவிட பரஸ்பரம் உதவியாக இருக்கின்றனர். நாகரிகம் என்ற பெயரில் பாவங்களிலும் களியாட்டங்களில் ஒருவருக்கொருவர் ஊக்கமாக இருக்கின்றனர். ஆம், இந்த அர்த்தத்தில் ரிஸாலே நூரில் கூறப்பட்டுள்ள வார்த்தைகளின் அர்த்தம் “இன்றைய காலத்தில் குடும்ப வாழ்வின் வெற்றியும் இம்மை, மறுமை நிம்மதியும் பெண்களின் உன்னதமான குணாம்சங்களின் விருத்தியும் ஷரீஅத்துடைய வட்டத்துக்குள் வருகின்ற இஸ்லாமிய ஆதாபுகள் மூலம் மாத்திரமே சாத்தியமாகும்” என்பதாகும். தற்போதைய குடும்ப வாழ்வின் மிக முக்கியமான ஓர் அம்சம்: அதாவது பெண் கணவனிடம் தீங்கையும் நம்பகமற்ற நிலையையும் காணும் போது அவளும் முரண்டுக்காகப் பெண்ணின் குடும்பப் பொறுப்பாகிய உண்மை, நம்பிக்கை, விசுவாசம் என்பவற்றை சிதைத்தால் அது சரியாக இராணுவத்தில் கட்டுப்பாடு சிதைவதைப் போன்று குடும்ப வாழ்வின் சக்கரங்களை சின்னாபின்னமாக்கிவிடும். மாறாக அந்தப் பெண் தனது நித்திய வாழ்க்கைத் தோழனைப் பாதுகாப்பதற்காக உரிய முறையில், முடியுமான அளவு தனது கணவனின் குறைகளைச் சீர்செய்ய முயற்சிக்க வேண்டும். அதுவன்றி அவளும் அரைகுறை ஆடைகளுடன் தன்னைப் பிறருக்குக் காட்சிப்படுத்தவும் பிறரின் நேசத்தைப் பெறுவதற்கான முயற்சியிலும் இறங்கினால் அது அவளுக்கு எல்லா வகைகளிலும் நஷ்டமாகவே அமையும். ஏனெனில் ஹகீகத்தான நம்பகத்தைத் துறந்தால் உலகிலேயே அதற்கான தண்டனையும் கிடைக்கும். ஏனெனில் மஹ்ரமல்லாதவர்களின் பார்வை அவளுக்கு அச்சத்தையும் சலிப்பையும் அசௌகரியத்தையும் மன உளைச்சலையுமே ஏற்படுத்தும். மஹ்ரமல்லாத இருபது ஆடவர்களுள் பதினெட்டுப் பேரின் பார்வை அவளுக்கு மன உளைச்சல் தருவதாகவே அமையும். ஆணைப் பொருத்தவரை மஹ்ரமல்லாத நூறு பெண்களுள் அதிகபட்சம் ஒருவருடைய பார்வையே அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தும். எனவே பெண் இந்தக் கோணத்தில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் மேலதிகமாக நம்பகமற்றவள் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாவாள். தனது பலவீனமான நிலையுடன் உரிமையையும் பாதுகாக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவாள். சுருக்கமாக: பெண்கள் வீரத்திலும் இஹ்லாஸிலும் பாசத்தின் அடிப்படையில் ஆண்களைவிட எவ்வளவோ முன்னணியில் இருப்பதைப் போன்றே ஆண்களாலும் அந்த வீரத்தில் அவர்களை எட்ட முடிவதில்லை. அவ்வாறே அந்த அபலைப் பெண்களால் பாவங்கள் விடயத்திலும் எந்த வகையிலும் ஆண்களை எட்ட முடியாது. எனவேதான் தமது இயல்பின் அடிப்படையிலும் நலினமான படைப்பின் அடிப்படையிலும் மஹ்ரமல்லாதவர்களிடம் பயப்படுவார்கள். மறைப்பதை நிர்ப்பந்தமாகக் கருதுவார்கள். ஏனெனில் ஆண் எட்டு நிமிடங்கள் அளவான ஓர் இன்பத்துக்காகப் பாவத்துக்குள் நுழைந்தால் அதிகபட்சம் எட்டு திர்ஹத்தையே இழப்பான். ஆனால் பெண் எட்டு நிமிடங்கள் அளவு இன்பத்துக்காக நுழையும் பாவத்துக்கான தண்டனையாக உலகிலேயே எட்டு மாதங்கள் பாரமான ஒரு சுமையைத் தனது வயிற்றில் சுமப்பாள். பின்னரும் எட்டு வருடங்கள் பாதுகாவலனற்ற ஒரு குழந்தையை வளர்க்கின்ற கஷ்டங்களுக்கு முகம்கொடுப்பாள். எனவே அவளால் பாவங்களில் ஆண்களை எட்ட முடியாது. நூறு மடங்கு அதிகமான தண்டனையை அனுபவிப்பாள். எந்த வகையிலும் குறைவற்ற இவ்வகை நிகழ்வுகளும் கூட, முபாரக்கான பெண்ணினம் இயல்பில் உயர் குணாம்சங்களின் ஊற்றுவாயாக இருப்பதைப் போன்றே பாவங்கள், களியாட்டங்கள் போன்ற உலகாயுத இன்பங்களை அனுபவிக்கும் விடயத்திலும் அவர்களுடைய திறன் -இல்லை என்ற அளவு- மிகச் சொற்பமானதாகும் என்பதையே காட்டி நிற்கின்றன. உண்மையில் அவர்கள் இஸ்லாத்துடைய பயிற்றுவிப்பின் கீழ் மகிழ்ச்சியானதோர் குடும்ப வாழ்க்கைக்குரிய சிறப்பம்சங்களைக் கொண்ட முபாரக்கான ஒரு படைப்பினமாகும். இந்த முபாரக்கான அபலை சமூகத்தை சிதைப்பதற்காக உழைக்கின்ற சக்திகள் நாசமாகட்டும். அல்லாஹ் எனது சகோதரிகளாகிய உங்களையும் இத்தகைய காவாலிகளின் தீங்குகளிலிருந்து பாதுகாப்பானாக, ஆமீன். சகோதரிகளே! மஹ்ரமாக இந்த வார்த்தைகளை உங்களிடம் கூறுகிறேன். வாழ்க்கைத் தேவைகளுக்காக போக்கிரித்தனமான, ஒழுக்கமற்ற, மேற்கத்தேய மோகம் கொண்ட ஒரு கணவனின் அடக்குமுறைக்குக் கீழ் செல்லும் நிலை இருந்தால், அதைவிட உங்களுடைய இயல்பிலேயே குடிகொண்டுள்ள சிக்கனம், மனத் திருப்தி என்பவற்றின் மூலமும் மாஃஸூமான கிராமியப் பெண்கள் தமது வாழ்வாதாரங்களைத் தாமே தேடிக்கொள்வதற்காக உழைப்பது போன்ற வழிவகைகள் மூலமும் நீங்களே உங்களை நிர்வகிக்க முயற்சி செய்யுங்கள். விலை போக முயற்சிக்காதீர்கள். எப்படியோ உங்களுக்குப் பொருத்தமற்ற ஓர் ஆண் வாய்த்தாகிவிட்டதெனில் அதைப் பொருந்தி, மனத் திருப்தியுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். இன்ஷா அல்லாஹ் உங்கள் பொருத்தமும் திருப்தியும் உங்கள் கணவனைச் சீர்திருத்தும். இல்லாவிட்டால் தற்போது அதிகமாகச் செவிமடுப்பதைப் போன்று விவாகரத்துப் பெறுவதற்காக நீதிமன்றங்கள் வழியே அலைவீர்கள். இந்த அதிகரிப்பு இஸ்லாமிய மாண்புகளுக்கும் சமூக கண்ணியத்துக்கும் அழகானதாக இருக்காது.

§9

கண்ணியத்துக்குரிய சகோதரிகளே! திட்டமாக அறிந்துகொள்ளுங்கள்: ஆகுமான வட்டத்துக்கு அப்பாலுள்ள இன்பங்களில் அவற்றைவிடப் பத்து மடங்கு அதிகமான வேதனைகளும் கஷ்டங்களும் கைசேதங்களும் இருப்பதை ரிஸாலே நூர் தலா நூறு பலம்வாய்ந்த அத்தாட்சிகள் மூலமும் உதாரணங்கள் மூலமும் நிறுவியுள்ளது. எனவே நீண்ட தெளிவுகளை ரிஸாலே நூரில் கண்டுகொள்ளலாம். அந்த வகையில் சிறிய வார்த்தைகளுள் ஆறாவது, ஏழாவது, எட்டாவது வார்த்தைகளும் வாலிபர்களுக்கான வழிகாட்டல் என்ற சிற்றேடும் எனக்குப் பதிலாக இந்த சத்தியத்தை உங்களுடன் பேசும். எனவே ஆகுமான வட்டத்துக்குள் உள்ள இன்பங்களைப் போதுமாக்கிக்கொள்ளுங்கள். அவற்றில் மனத்திருப்தி கொள்ளுங்கள். உங்கள் இல்லங்களிலுள்ள மாஃஸூமான பிள்ளைகளுடன் இடம்பெறும் மாஃஸூமியத்தான உரையாடல்கள் பல நூறு சினிமாக்களைவிட இன்பம் நிறைந்ததாகும். அத்துடன் பின்வரும் விடயத்தையும் திட்டமாக அறிந்துகொள்ளுங்கள்: இந்த உலக வாழ்வின் ஹகீகத்தான இன்பம் ஈமானிலும் ஈமானிய வட்டத்துக்குள்ளுமே உள்ளது. மேலும் உங்களுடைய ஒவ்வொரு ஸாலிஹான அமலிலும் ஒவ்வோர் ஆத்மார்த்தமான இன்பம் உள்ளது. வழிகேட்டிலும் பாவங்களிலும் மறுமைக்கு முன்னர் இம்மையிலும் கூட மிகவுமே வலி மிக்க, மிகவுமே கஷ்டகரமான வேதனைகள் காணப்படுவதை ரிஸாலே நூர் தலா நூறு திட்டமான அத்தாட்சிகள் மூலம் நிறுவியுள்ளது. ஆம், ஈமானில் ஒரு சுவனத்து விதையும் வழிகேட்டிலும் பாவங்களிலும் ஒரு நரகத்து விதையும் இருப்பதை நான் ஏராளமான அனுபவங்கள் மூலமும் நிகழ்வுகள் மூலமும் ஐனல் யகீனாகக் கண்டுகொண்டேன். ரிஸாலே நூரிலும் இந்த சத்தியம் பல்வேறு இடங்களில் எழுதப்பட்டுள்ளது. மிகத் தீவிரமான பிடிவாதக்காரர்களின், சூழ்ச்சிக்காரர்களின் கரங்களுக்குச் சென்ற பின்னரும், உத்தியோகபூர்வமாக நிபுணர்கள், நீதிமன்றங்களின் கரங்களில் பகுப்பாய்வுக்குற்பட்ட பின்னரும் யாராலும் அந்த சத்தியங்களை மறுக்கவோ பொய்ப்பிக்கவோ முடியவில்லை. தற்போது உங்களைப் போன்ற முபாரக்கான, மாஃஸூமான சகோதரிகளோடும் எனது பிள்ளைகள் போன்ற சிறியவர்களோடும் ஹிஜாபுடைய ரஸாயில், வாலிபர்களுக்கான வழிகாட்டல், சிறிய வார்த்தைகள் போன்ற ரஸாயில்கள் எனக்குப் பதிலாகப் பேசட்டும். நான் உங்களுக்குப் பள்ளிவாசலில் ஒரு பாடத்தைக் கற்றுத் தர வேண்டும் என்று நீங்கள் விரும்புவதாக நான் செவிமடுத்தேன். ஆனால் நான் மிகவுமே நலிவான நிலையில் இருப்பதாலும் நோய்கள் உற்பட பல காரணங்களாலும் எனது தற்போதைய நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை. எனவே உங்களுக்காக எழுதிய இந்தத் தெளிவுரையை வாசிக்கின்ற, ஏற்றுக்கொள்கின்ற எல்லா சகோதரிகளையும் ரிஸாலே நூர் மாணவர்களைப் போன்று என்னுடைய எல்லா சம்பாத்தியங்களிலும் எல்லா துஆக்களிலும் இணைத்துக்கொள்ள முடிவு செய்தேன். எனவே நீங்கள் எனக்குப் பதிலாக ரிஸாலே நூரின் ஏதேனும் ஒரு பகுதியைக் கையிலெடுத்து வாசிப்பீர்களாயின் அல்லது செவிமடுப்பீர்களாயின் அப்போது எமது கூட்டாத்மாவுக்குரிய கூட்டு விதிகளின் பிரகாரம் உமது சகோதரர்களாகிய ஒட்டுமொத்த ரிஸாலே நூர் மாணவர்களின் ஆத்மார்த்தமான சம்பாத்தியங்களிலும் துஆக்களிலும் பங்குதாரர்களாக ஆகிவிடுவீர்கள். இந்த சந்தர்ப்பத்தில் இன்னும் அதிகமாக எழுதவே விரும்புகிறேன். எனினும் மிகுந்த நோய்வாய்ப்பட்டு, மிகப் பலவீனமான, மிக நலிவடைந்த நிலையிலும் திருத்தப் பணிகள் போன்ற பல்வேறு சோலிகளும் இருப்பதால் இப்போதைக்கு இத்துடன் போதுமாக்கிக்கொள்கிறேன். اَل۟بَاقٖى هُوَ ال۟بَاقٖى உங்கள் பிரார்த்தனைகளில் தேவையுள்ள ஸஈத் நூர்ஸி

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters