(இருபத்தி ஆறு நம்பிக்கைகளும் ஒளிமயமான ஆறுதல்களும் உள்ளடங்கியுள்ளன.) நினைவூட்டல் ஒவ்வொரு நம்பிக்கையின் ஆரம்பத்திலும் எனது உள்ளமும் ஆத்மாவும் சந்தித்த நிர்க்கதிகளை மிகவும் உருக்கமான முறையில் வாசகர்களுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதியுள்ளேன். இதற்கான காரணம் அவற்றைத் தொடர்ந்து வருகின்ற, சங்கைமிக்க குர்ஆனிலிருந்து நான் பெற்றுக்கொண்ட நிவாரணிகளின் மகத்தான தாக்கத்தையும் வினைத்திறனையும் நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதாகும். வயோதிபர்களுக்கான இந்த ரஸாயிலில் மூன்று, நான்கு காரணங்களுக்காக அழகிய மொழிநடையைப் பேணமுடியாமல் போய்விட்டது. முதலாவது: இது எனது சொந்த வாழ்வில் சந்தித்த நிகழ்வுகளோடு சம்பந்தப்பட்டதாக இருப்பதாலும் அந்தக் கடந்தகால நிகழ்வுகளை சிந்தனையால் சஞ்சரித்த நிலையில் எழுதியதாலும் எனது வார்த்தைகளில் நேர்த்தியைப் பேணிக்கொள்ள முடியாமல் போய்விட்டது. இரண்டாவது: ஸுபுஹுத் தொழுகைக்குப் பின்னர், மிகுந்த களைப்புற்றிருந்த ஒரு சந்தர்ப்பத்தில், வேகமாக எழுதி முடிக்க வேண்டிய நிர்ப்பந்தமான ஒரு சூழலில் எழுதியதால் வார்த்தைகளுக்கிடையில் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது: எண்ணிடமிருந்த மையும் பேனாவும் தீர்ந்து போய் விட்டதாலும் எனக்கு உதவியாக இருந்த எழுத்தாளருக்கும் கூட ரிஸாலே நூரோடு தொடர்பான ஏராளமான சோலிகள் இருந்ததாலும் மீள்வாசிப்புச் செய்து திருத்தங்களை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வாய்க்காததால் ஒழுங்கீனங்களை திருத்தம் செய்யாமல் அவ்வாறே விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நான்காவது: எழுதி முடிந்ததும் இருவருமாக மிகுந்த களைப்படைந்திருந்ததால் அர்த்தங்களை அவதானத்தோடு பார்க்காமல், மிகவுமே மேலோட்டமான ஒரு மீள்வாசிப்போடு நிறுத்திக்கொண்டோம். எனவே வசன நடையில் நிச்சயமாக குறைபாடுகள் ஏற்பட்டிருக்கும். கண்ணியத்துக்குரிய வயோதிபர்களிடம் மொழியிலிருக்கின்ற தவறுகளை பெருமனதோடு பார்க்கும்படியும் வெறுமையாகத் திருப்பிவிடப்படாத தங்கள் கரங்களை இறை சந்நிதானத்தை நோக்கி உயர்த்துகின்ற போது உங்கள் துஆக்களில் எங்களையும் சேர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ كٓهٰيٰعٓصٓ ذِك۟رُ رَح۟مَتِ رَبِّكَ عَب۟دَهُ زَكَرِيَّا اِذ۟ نَادٰى رَبَّهُ نِدَٓاءً خَفِيًّا قَالَ رَبِّ اِنّٖى وَهَنَ ال۟عَظ۟مُ مِنّٖى وَاش۟تَعَلَ الرَّا۟سُ شَي۟بًا وَلَم۟ اَكُن۟ بِدُعَٓائِكَ رَبِّ شَقِيًّا இந்த மின்னலில் இருபத்தி ஆறு நம்பிக்கைகள் உள்ளன.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Lem'alar
The Twenty-Sixth Gleam
எல்லா வகைகளிலும் முதிர்ச்சி நிலையை அடைந்த கண்ணியத்துக்குரிய முதியவர்களே! சகோதர சகோதரிகளே! நானும் உங்களைப் போன்ற ஒரு வயோதிபனாவேன். வயோதிபக் காலத்தில் அவ்வப்போது உதவிக்காகப் பற்றிக்கொண்ட நம்பிக்கைகளும் அந்த நம்பிக்கைகளிலிருந்து படரும் ஆறுதல் ஒளிகளும் உங்களுக்கும் பயனளிக்கட்டும் என்பதற்காக எனது வாழ்வில் சந்திக்க நேர்ந்த சில நிலைமைகளை எழுதப் போகிறேன். நான் கண்ட அந்த ஒளிகளோ எனது குழம்பிப்போன குறைபாடுள்ள அகப் பார்வையால் காணமுடியுமாக இருந்தவையாகும். அந்தப் பார்வையின் அளவே எனது உள்ளத்தின் கதவு அந்த ஒளிக்காகத் திறக்கப்பட்டது. இன்ஷா அல்லாஹ் உங்களது தூய்மையான மாசற்ற அகப் பார்வைகள் நான் கண்ட அந்த ஒளிகளை இன்னும் பிரகாசப்படுத்திவிடும்; அந்த நம்பிக்கைகளால் எனக்குக் கிடைத்த பலனையும் பலத்தையும்விட அதிகமான பலனையும் பலத்தையும் உங்களுக்குப் பெற்றுத்தரும். ஆம், தொடர்ந்து கூறப்படுகின்ற அந்த நம்பிக்கைகளின் ஊற்றுவாய் ஈமானாகும்.
அது ஓர் இலையுதிர்காலம். நான் முதுமைப் பருவத்துக்குள் காலடி எடுத்து வைத்திருந்த அந்த சந்தர்ப்பத்தில், மாலை நேரம் அஸர் வேளையில், உயரமான ஒரு மலையின் உச்சியிலிருந்து உலகத்தைப் பார்தேன். அப்போது திடீரென்று, மிகவுமே சோகமயமான, துக்கரமான, ஒரு வகையில் சொல்லப்போனால் இருள்மயமான ஒரு மனோநிலை என்னைத் தொற்றிக்கொண்டது. அந்த நிலைமைக்குள் எனது வயோதிபம் எனக்குத் தெளிவாகத் தென்பட்டது. கூடவே அந்தப் பகல் பொழுதும் தனது வயோதிபப் பருவமான மாலைப் பொழுதை அடைந்திருந்தது. அந்த வருடமும் கூட தனது வயோதிபப் பருவமான இலையுதிர் காலத்தை அடைந்திருந்தது. மறுமையை நெருங்கியிருக்கின்ற உலகமும் கூட தனது வயோதிபப்பருவத்தை எட்டிப்பிடித்திருந்தது. இந்த வயோதிபங்கள் அனைத்தும் இந்த உலகைவிட்டும் நேசத்துக்குரியவர்களைவிட்டும் பிரியப் போகிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியதால் எனது வயோதிபம் என்னைக் அதிகமாகவே பீடித்துக்கொண்டது. அப்போது அல்லாஹ்வுடைய ரஹ்மத் எனது உதவிக்கு விரைந்தது. அது, அந்த சோகமயமான பிரிவையும் துக்கத்தையும், பலமான ஒரு நம்பிக்கையாகவும் பிரகாசமான ஓர் ஆறுதலாகவும் மாற்றிவிட்டது. ஆம், என்னைப் போன்ற முதியவர்களே! சர்வ ஞானமிக்க குர்ஆனில் நூறு இடங்களில் “அர்ஹமுர் ராஹிமீன்” என்ற பண்பின் மூலம் தன்னை எமக்கு அறிமுகப்படுத்தி, பூமியின் மீது தனது ரஹ்மத்தில் தங்கியுள்ள ஒட்டுமொத்த உயிரினங்களுக்கும் சதா காலமும் தனது ரஹ்மத்தை இறக்கி, ஒவ்வொரு வருடமும் வசந்த காலத்தில் பூமி என்ற உணவு விரிப்பை மறைவிலிருந்துமுள்ள எண்ணற்ற அருள் ஆகாரங்களைக்கொண்டு நிரப்புவதன் மூலம் அந்த விரிப்பை எமக்காகத் தயார்படுத்தி, பலவீனமும் இயலாமையும் உள்ள படைப்புகளுக்குத் தனது ரஹ்மத்தின் பிரதிபலிப்பை அதிகமதிகம் வெளிப்படுத்துகின்ற அளவற்ற அன்பும் நிகரற்ற அருளும் உடைய அந்தப் படைப்பாளனுடைய ரஹ்மத்தானது எமது இந்த முதுமைக்காலத்தில் எமக்கான மிகப்பெரிய நம்பிக்கையாகவும் மிகப் பிரகாசமான ஒளியாகவும் இருக்கின்றது. இந்த ரஹ்மத்தை அடைந்துகொள்வதற்கான வழி ஈமான் மூலம் அந்த ரஹ்மானோடு எம்மைப் பிணைத்துக்கொள்வதும் பர்ளான கடமைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவனுக்கு கட்டுப்படுவதுமாகும்.
வாலிப இறவின் நித்திரையிலிருந்து எழுந்து வயோதிப விடியலில் கண்விழித்த அந்த நாட்களில் என்னை ஒரு முறை நோட்டமிட்டேன். எனது உடல் மண்ணறையை நோக்கிப் பள்ளத்தில் உருண்டோடும் பாரையைப் போன்று வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. நியாஸி மிஸ்ரி என் வாழ்க்கைக் கட்டிடத்தில் நாளும் ஒரு கல் வீழ்கிறது நிலத்தில், உயிரோ உறங்குகிறது அசட்டைத் துயிலில், அதன் கட்டிடமோ கிடக்கிறது அழிவின் விளிம்பில். என்று கூறியதைப் போல், எனது ஆத்மாவின் இருப்பிடமான இந்த உடலும்கூட நாளாந்தம் ஒவ்வொரு கல்லாக வீழ்ந்து சிதைந்துகொண்டிருந்தது. என்னை உலகோடு பலமாகப் பிணைத்து வைத்திருந்த நம்பிக்கைகளும் அறுந்துபோகத் துவங்கியிருந்தன. எனது தோழர்களையும் நேசர்களையும் விட்டுப் பிரியும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர ஆரம்பித்தேன். அப்போது இந்த ஆழமான, ஆத்மார்த்தமான காயத்துக்கு நிவாரணத்தைத் தேடினேன். எனக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. அந்தக் கவலையில் மீண்டும் நியாஸி மிஸ்ரியைப் போன்று கூறினேன்: மனம் உடலின் அதன் நித்தியத்தை ஆசிக்க, சத்தியமோ அதன் அழிவை ஆசித்ததால், நிவாரணம் கிடைக்காத ஒரு நிர்க்கதிக்குள் வீழ்ந்தேன். லுக்மானும் கையை விரித்தார். அப்போது, நிவாரணமே இல்லாத நித்திய காயம் என்று நான் கருதிய அந்த நிர்க்கதிக்கு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் மொழிபெயர்ப்பாளராகவும் மாதிரியாகவும் அத்தாட்சியாகவும் திகழும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஒளியும் ஷஃபாஅத்தும் அண்ணவர்கள் மானுடர்களுக்காகக் கொண்டுவந்த ஹிதாயத் என்ற அன்பளிப்பும் அழகிய ஒரு மருந்தாக ஆகியது. நம்பிக்கையீனத்தால் இருண்டு போயிருந்த இடத்தின் இருளகற்றி ஒளிமயமான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. என்னைப் போன்று முதுமையை சுவைக்க ஆரம்பித்திருக்கும் மதிப்புக்குரிய மூத்த சகோதர சகோதரிகளே! நாம் ஒரு பயணத்தில் இருக்கின்றோம். நாமே எம்மை ஏமாற்றிக்கொள்வதால் எத்தகைய பயனும் வரப்போவதில்லை. நாம் கண்களை மூடிக்கொள்வதால் இங்கேயே விட்டுவிடப்படவும் மாட்டோம். மாறாக வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லப்பட்டுக்கொண்டிருக்கின்றோம். ஆனால், பொடுபோக்குத்தனம் காரணமாகவும் வழிகேட்டின் அகோரம் காரணமாகவும் அவற்றிலிருந்து எம்மைத் தொற்றிக்கொண்ட ஊசலாட்டங்கள் காரணமாகவும் சூன்யமாகவும் இருண்டதாகவும் புலப்படுகின்ற ஆலமுல் பர்ஸஹ் யதார்த்தத்தில் எமது நேசத்துகுரியவர்களோடு நாம் ஒன்றுகூடுவதற்கான இடமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, எமக்கு ஷஃபாஅத் செய்யக்கூடிய ஹபீபுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அண்ணவர்களை சந்திப்பதற்கான இடமாகவும் அது திகழ்கின்றது. ஆம், ஆயிரத்து முன்னூறு வருடங்களாக ஒவ்வொரு வருடமும் முன்னூற்றி ஐம்பது மில்லியன் மக்களுடைய தலைவராகவும் அவர்களுடைய ஆத்மாக்களின் முரப்பியாகவும், அவர்களுடைய அறிவுக்கு ஆசானாகவும் அவர்களுடைய உள்ளங்களுக்கு நேசராகவும் اَلسَّبَبُ كَالْفَاعِلِ என்ற விதியின் பிரகாரம் இந்த உம்மத்தின் எல்லா நல்லமல்களிலும் ஒரு பங்குக்கு சொந்தக்காரராகவும் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததன் மூலம் அல்லாஹ்வால் நாடப்படுகின்ற உன்னதமான நோக்கங்களுக்கான வஸீலாவாகவும் வஸ்துகள் உன்னதமான அந்தஸ்துக்கு உயர்வதற்கான காரணியாகவும் -நம்பகமான கஷ்ஃப், ஸஹீஹான அறிவிப்புகள் என்பவற்றின் பிரகாரம்- உலகில் அவதரித்த அந்த நிமிடமே “உம்மதீ, உம்மதீ” என்று கூறியதைப் போன்று மஹ்ஷர் வெளியிலும் எல்லோரும் “நஃப்ஸீ, நஃப்ஸீ” என்று கூறும் போது “உம்மதீ, உம்மதீ” என்று கூறி தனது புனிதமான, மாசற்ற தியாகத்தின் வெளிப்பாடாக உம்மத்துடைய உதவிக்காக விரையும் கோமானாகவும் திகழும் அந்த ஹபீபுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சென்றடைந்த இடத்துக்கே நாமும் செல்கிறோம். மேலும் அந்த உலகில் அந்த சூரியனைச் சூழ, எண்ணற்ற அஸ்ஃபியாக்களும் அவ்லியாக்களும் நட்சத்திரங்களாக மின்னுகின்றனர். இதோ, அந்த உத்தமரின் ஷஃபாஅத்துக்குத் தகுதியானவர்களாக மாறி, அண்ணாருடைய ஒளியைக்கொண்டு ஒளிமயமாகி, பர்ஸஹில் எதிர்ப்படுகின்ற இருள்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வதற்கான வழி அண்ணவர்கள் காட்டித்தந்த மேலான சுன்னாக்களுக்கு வழிப்படுவதாகும்.
முதுமைப் பருவத்தில் காலடி எடுத்து வைத்த அந்த நாட்களில், மனிதனின் பொடுபோக்குத்தனத்தை நீடூழி வாழ வைக்கின்ற உடலாரோக்கியமும் என்னை விட்டும் பிரிந்து சென்றுவிட்டது. எனவே முதுமையும் நோய் நொடிகளும் கூட்டுச் சேர்ந்து என்னைத் தாக்கத் தொடங்கியிருந்தன. தொடர்ந்தேர்ச்சையான அந்தத் தாக்குதல்களால் எனது தூக்கமும் கலைந்தது. கூடவே பிள்ளை குட்டிகள், சொத்து செல்வங்கள் என்று உலகத்தோடு பிணைத்துவிடக்கூடிய எந்த ஒன்றும் எண்ணிடம் இருக்கவில்லை. இளமையின் போதையில் பாழாக்கிய எனது வாழ்க்கை மூலதனத்தின் கனிகளான பாவங்களும் குற்றங்களும் கண் முன்னால் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. நியாஸி மிஸ்ரியைப் போன்று அழுது புலம்பியவனாகப் பின்வருமாறு கூறினேன்: செய்யவந்த வியாபாரத்தைத் துவங்க முன்னமே, கொண்டுவந்த வாழ்க்கை மூலதனம் அழிந்து போனது! பதறியடித்து விரைந்து வந்தேன் பாதைக்கு, பயணிகள் கூட்டம் புலம்பெயர்ந்துவிட்டதாம். யானறியேன்! அழுது புலம்பி ஒப்பாரியும் வைத்துப் பயணத்தை ஆரம்பித்தேன், தன்னந்தனியாக! கண்களில் கண்ணீர், அறிவு அங்கலாய்ப்பில், நெஞ்சு வெந்த சதையாக! அப்போது எனக்கு அந்நியமான ஓர் இடத்தில் தன்னந்தனியாகவே இருந்தேன். நம்பிக்கையிழந்த ஒரு துக்கமும் உதவியை எதிர்பார்த்த ஓர் ஏக்கமும் என்னை ஆட்கொண்டிருந்தது. அந்நிலையில் இருக்கும் போது, அற்புத குர்ஆன் எனது உதவிக்காக விரைந்தது. அது மிகத் திடமான நம்பிக்கையின் வாயிலை எனக்குத் திறந்து காண்பித்தது. அதனூடாக சத்தியமான, உண்மையான ஓர் ஆறுதல் ஒளி என் மீது பாய்ச்சப்பட்டது. அந்த நம்பிக்கையும் ஆறுதலும் எனக்கு ஏற்பட்டதைவிட நூறு மடங்கு மோசமான நம்பிக்கையீனத்தையும் இருள்களையும்கூட அகற்றிவிடும் அளவு சக்திமிக்கவையாக இருந்தன. ஆம், என்னைப் போல் உலகத்தோடுள்ள தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, பிணைப்புகள் அறுபட ஆரம்பித்திருக்கும் கண்ணியத்துக்குரிய மூத்த சகோதர சகோதரிகளே! இந்த உலகை மிகச் சிறப்பான, மிகப் பூரணத்துவமான ஒரு நகரமாக அல்லது ஒரு மாளிகையாகப் படைத்த அந்த மாட்சிமைமிக்க படைப்பாளன் அந்த நகரத்துக்கு அல்லது மாளிகைக்கு வரும் தனது அதி சிறப்புக்குரிய விருந்தாளிகளுடன் உரையாடமல், அவர்களைப் பொருட்படுத்தாமல் இருப்பது எவ்வாறு சாத்தியமாக முடியும்!? உண்மையில் அறிந்த நிலையில் இந்த மாளிகையைப் படைத்து தனது நாட்டத்தின் மூலமும் அதிகாரத்தின் மூலமும் அதில் ஒழுங்கையும் அழகையும் ஸ்தாபித்துள்ளான். நிச்சயமாக, “ஆக்கியவனே அதைப் பற்றி அறிந்தவனாகவும் இருப்பான்” என்பதைப் போல் “அறிந்தவனே அதைப் பற்றிப் பேசுவான்”. எனவே, இந்த மாளிகையை எமக்கான அழகியதொரு தங்குமிடமாகவும் வியாபாரத் தளமாகவும் ஆக்கித்தந்த அந்தப் படைப்பாளன் அவனோடு எமக்குள்ள தொடர்புகளையும் அவன் எம்மிடம் எதிர்பார்க்கின்ற விடயங்களையும் எடுத்துச் சொல்கின்ற ஒரு கையேட்டை, ஒரு நூலை நிச்சயமாக வைத்திருப்பான். இதோ, அந்தப் புனிதமான நூல்களில் மிகப் பூரணத்துவமானது நாற்பது கோணங்களில் அற்புதமாகத் திகழ்கின்ற, ஒவ்வொரு நிமிடமும் குறைந்தபட்சம் நூறு மில்லியன் மக்களின் நாவுகளில் தவழ்கின்ற, ஒவ்வோர் எழுத்தும் குறைந்தது பத்து நன்மைகளையும் சிலபோது பத்தாயிரம் நன்மைகளையும் லைலதுல் கத்ர் போன்ற இரவுகளில் முப்பதாயிரம் நன்மைகளையும் பெற்றுத் தருகின்ற, சுவனத்துக்கான கனிகளையும் மண்ணறைக்கான ஒளியையும் தருகின்ற குர்ஆனுல் முஃஜிஸுல் பயான் ஆகும். இந்த சிரேஷ்டமான பதவிக்கு உரிமை கோருவதற்கோ போட்டியாக வருவதற்கோ தகுதியான, குர்ஆனுக்கு நிகரான எந்த ஒரு புத்தகமும் இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை. யாராலும் அப்படியான ஒன்றைக் காண்பிக்கவும் முடியாது. உண்மையில் எமது கைகளில் உள்ள இந்தக் குர்ஆன் வானம் பூமியைச் சிருஷ்டித்த மகத்துவமிக்க படைப்பாளனாகிய அல்லாஹ்வின் முத்லக்கான ருபூபிய்யத்திலிருந்தும் உலூஹிய்யத்துடைய மாட்சிமையிலிருந்தும் அனைத்தையும் சூழ்ந்த ரஹ்மத்திலிருந்தும் வருகின்ற அவனது கலாமும் கட்டளைகளுமாகும். மேலும் அது அவனது ரஹ்மத்துடைய ஓர் ஊற்றாகும். அதனைப் பற்றிக்கொள்ளுங்கள். எல்லா நிர்க்கதிகளையும் நீக்கக்கூடிய ஒரு நிவாரணமும் எல்லா இருள்களையும் அகற்றக்கூடிய ஓர் ஒளியும் எல்லா அவநம்பிக்கைகளையும் அழிக்கக்கூடியதொரு நம்பிக்கையும் அதனுள் பொதிந்துள்ளது. இதோ இந்த நித்திய செல்வ ஊற்றுகளுக்கான திறவுகோல் ஈமானும் சரணாகதியும் குர்ஆனுக்குக் காது தாழ்த்தி அதை அவ்வாறே ஏற்றுக்கொள்வதும் அதை வாசிப்பதுமாகும்.
எனது முதுமையின் ஆரம்ப நாட்களில் எனது ஆத்மா தனிமையான ஓர் ஓய்வை வேண்டியிருந்த ஒரு சமயம் சில நாட்களைக் கழிப்பதற்காக இஸ்தான்பூல் பொஸ்பரஸ் கால்வாயின் வட முனையில் இருக்கும் யூஷா மலைச் சிகரத்துக்கு ஏறினேன். ஒரு நாள் அந்த உயர்ந்த சிகரத்தின் மேலிருந்து தொடுவானம் வரை பரந்து விரிந்த காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த சமயம் எனது முதுமையின் நினைவு காரணமாக அழிவின், முடிவின், பிரிவின் மிகவும் சோகமயமான, மிகவும் துக்ககரமான ஒரு காட்சி என் மனக் கண்ணில் ஓடியது. ஆம், நாற்பத்தைந்தாவது வயதை, அதாவது எனது வாழ்க்கை விருட்சத்தின் நாற்பத்தி ஐந்தாவது கிளையாகிய உயரமான அந்த ஸ்தானத்தை எட்டியிருந்திருந்தேன். அங்கிருந்து எனது வாழ்வின் முன்னைய ஸ்தானங்களாகிய கீழுள்ள கிளைகளை நோக்கிப் பார்வையைச் செலுத்திய போது ஒவ்வொரு கிளையிலும் எனது நேசர்கள், என்னுடன் தொடர்புபட்டவர்கள், உறவாடியவர்கள் என்று எண்ணற்றவர்களின் ஜனாஸாக்கள் காணப்பட்டன. அந்தப் பிரிவுகளால் ஆத்மார்த்தமாக மிகவுமே சோகமயமான, மிகவுமே துக்ககரமான ஒரு நிலைக்கு ஆட்பட்டேன். அப்போது என்னை பிரிந்து சென்ற அந்த உறவுகளைச் சிந்தித்தவனாக, ஃபுஸூலி பக்தாதியைப் போன்று இணையும் ஏக்கத்தில் அழுது புலம்புகிறேன், சுவாசம் எஞ்சியிருக்கும் வரை வரண்டு போன இந்த உடல் மீதிருந்து அவலக் குரல் எழுப்புகிறேன். என்று கூறியவனாக ஓர் ஆறுதலை, ஓர் ஒளியை, ஒரு நம்பிக்கையைத் தேடினேன். அப்போது மறுமை நம்பிக்கை எனது உதவிக்காக விரைந்தது. அது அணைந்து போகாத ஒரு ஜோதியையும் தீர்ந்து போகாத ஒரு நம்பிக்கையையும் எனக்களித்தது. ஆம், என்னைப் போன்ற வயதான சகோதர சகோதரிகளே! மறுமையும் அது நித்தியமானது என்பதும் அது இந்த உலகைவிடப் பேரழகுமிக்கது என்பதும் எத்தகைய சந்தேகத்துக்குமிடமின்றி நிச்சயமானதாகும். அனைத்துக்கும் மேலாக எம்மைப் படைத்த ரப்புல் ஆலமீன் சர்வஞானமிக்கவனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்றான். எனவே வயோதிபத்தை இட்டும் முறைப்பட்டுக்கொள்வதோ துக்கத்தில் ஆழ்ந்து கைசேதப்பட்டுக்கொள்வதோ ஆகுமானதல்ல. மாற்றமாக வயோதிபமானது ஈமானோடும் இபாதத்தோடும் உய்வை அடைந்த வாழ்வின் வாழ்க்கைப் பொறுப்புகளிலிருந்து மீண்டு நித்திய நிம்மதியின் இருப்பிடமாகிய அன்பின் தேசத்துக்குச் செல்வதற்கான ஓர் சமிக்ஞையாக இருப்பதால் அதையிட்டு மகிழ்ச்சியடைவதே அவசியமாகும். ஆம், மனித குலத்தின் மிகச் சிரேஷ்டமான, மிக நம்பிக்கைக்குரிய உத்தமர்களாகத் திகழும் ஓரிலட்சத்தி இருபத்தி நான்காயிரம் நபிமார்களும் ஏகமனதாக, ஹக்கல் யகீனோடும் மிகுந்த உறுதியோடும் மறுமை உள்ளது என்பதையும் மனிதர்கள் அந்த இருப்பிடத்தை நோக்கியே அழைத்துச் செல்லப்பட்டுகின்றனர் என்பதையும் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாளிப்பவன் வாக்களித்த பிரகாரம் மறுமையை மனிதர்களுக்காகத் தயார்படுத்தியுள்ளான் என்பதையும் திட்டவட்டமாக அறிவிப்புச் செய்கின்றனர். கூடவே அந்த நபிமார்கள் மத்தியில் சிலர் நேரடியான கண்காண் சாட்சிகளாகவும் இருந்துள்ளனர். மேலும் ஓரிலட்சத்தி இருபத்தி நான்காயிரம் அவ்லியாக்களும் அஸ்ஃபியாக்களும் நபிமர்களின் அந்த செய்திகளைத் தமது கஷ்ஃபுகள் மூலமாகவும் இல்மல் யகீனின் அடிப்படையிலும் உறுதியாக உண்மைப்படுத்துகின்றனர். மேலும் பிரபஞ்சத்தின் படைப்பாளனாகிய சர்வ ஞானமிக்க வல்லோனின் ஒட்டுமொத்த நாமங்களும் இந்தப் பூலோகத்தில் வெளிக்காட்டுகின்ற பிரதிபளிப்புகள் மூலம் நித்தியமான ஓர் உலகத்தின் இருப்பைத் தெட்டத் தெளிவாக வேண்டி நிற்பதால் அந்த ஒவ்வொரு நாமமும் மறுமையின் இருப்புக்கான ஒவ்வோர் உறுதியான அத்தாட்சியாக உள்ளது. மேலும் வருடாந்தம் ஒவ்வொரு வசந்த காலத்திலும் பூமியின் மீது உயிரற்றுக் கிடக்கும் எண்ணற்ற மரணித்த மரங்களின் சடலங்களை “குன் ஃபயகூன்” என்ற கட்டளையைக்கொண்டு உயிர்ப்பித்து மரணத்துக்குப் பிந்திய மீளெழுப்பலை கண்களுக்கு முன்னால் நிகழ்த்திக்காட்டுவதன் மூலம் இலட்சோபலட்சம் உதாரணங்கள் மூலம் மறுமையின் இருப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது. உண்மையில் இந்த வசந்தகால நிகழ்வுகள் எத்தகையதெனில் மேலோட்டமாகப் பார்க்கின்ற ஒருவனாலும் கூடப் பார்க்க முடியுமான அமைப்பில் மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தாவர, விலங்கினங்களை ஒவ்வொரு வருடமும் மீளுயிர்ப்பிக்கின்ற ஆதி அந்தமில்லாத ஒரு சர்வ வல்லமையையும் மகத்தான ஒரு தாராளத் தன்மைக்குள் எத்தகைய வீண்விரயத்துக்கும் இடம் வைக்காத ஓர் அகிலார்ந்த ஞானத்தையும் ஆகாரத் தேவையுடைய எண்ணற்ற ஜீவராசிகளுக்கு பிரமிக்கத்தக்க வகையில் ஆகாரமளிக்கின்ற மகத்துவமிக்க ஒரு ரஹ்மத்தையும் ஒவ்வொரு வசந்தத்திலும் குறுகியதொரு காலத்துக்குள் எண்ணற்ற அழகியல்களையும் அலங்காரங்களையும் காட்சிப்படுத்துகின்ற உன்னதமான, நித்தியமான ஓர் ஈகையையும் கிருபையையும் கண்களுக்கு முன்னால் திரையிட்டு மறுமையின் இருப்பை உறுதிப்படுத்துகின்றது. அத்துடன் இந்தப் பிரபஞ்ச விருட்சத்தின் அதி சிரேஷ்டமான கனியாகவும் பிரபஞ்சத்தின் படைப்பாளனுடைய மிக நேசத்துக்குரிய படைப்பாகவும் பிரபஞ்சத்திலிருக்கும் வஸ்துகளோடு மிக அதிகமான தொடர்புகளைக் கொண்டவனாகவும் திகழ்கின்ற மனிதனிடம் மிகப் பலமாகக் காணப்படும் நித்தியத்தின் மீதான காதலும் நிலைத்த தன்மை மீதான மோகமும் தொடர்ச்சியின் மீதான பற்றும் கூட தற்காலிகமான இந்த உலகத்துக்குப் பின்னால் நிரந்தரமான ஓர் உலகமும் நித்தியமான ஒரு நிம்மதியும் உள்ளன என்பதற்கான தெட்டத் தெளிவான சான்றுகளாகும். மொத்தத்தில் இந்த அத்தனையும் மறுமையின் இருப்பை இந்த உலகத்தின் இருப்பைப் போன்றே ஏற்றுக்கொள்வதற்கு எம்மை நிர்ப்பந்திக்கின்ற அத்தாட்சிகளும் சான்றுகளுமாகும் உண்மையில் சர்வ ஞானமிக்க குர்ஆன் எமக்குக் கற்றுத்தந்த மிக மகத்தான பாடங்களுள் ஒன்றாகத் திகழும் மறுமை நம்பிக்கை இப்பேர்பட்ட வலிமை மிக்க ஒன்றாகவும் திகழ்கின்றது. அது தருகின்ற அந்த வலிமை எத்தகையதெனில் ஓரிலட்சம் பேருடைய வயோதிபம் ஒரு மனிதனுக்கு வந்தாலும் அந்த ஈமானைக்கொண்டு அதையும் மிகைத்துவிடலாம். மறுமை நம்பிக்கை அத்தகையதொரு நம்பிக்கையையும் பலத்தையும் ஆறுதலையும் மனிதனுக்குக் கொடுக்கின்றது. எனவே முதுமையை அடைந்துள்ள நாம், “பூர்த்தியான ஈமானைத் தந்த அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும், அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறி, எமது வயோதிபத்தையிட்டும் திருப்திப்பட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
ஒரு சமயம் ஒரே இடத்தில் சிறைப்பட்டிருப்பதை எண்ணிக் கடுமையான கவலைக்கு ஆளானேன். அந்தக் கவலையின் விளைவாக மனிதர்களைவிட்டும் ஒதுங்கி ‘பார்லா’ பள்ளத்தாக்கை அண்டிய தேவதாறு மழையின் உச்சியில் தனிமையாக இருக்க முடிவு செய்து அங்கு சென்றேன். அங்கு, எனது தனிமை உணர்வை நீக்குவதற்கான ஓர் ஒளியைத் தேடினேன். ஓர் இரவு, அந்த உயர்ந்த மழையின் உச்சத்தில் வானலாவ உயர வளர்ந்திருந்த ஒரு தேவதாறு மரத்தின் உச்சியில் உள்ள கூரையில்லாத சிறிய கூடாரத்தில் இருந்த போது முதுமை ஒன்றுக்குள் ஒன்றாக உள்ள மூன்று நான்கு தனிமைகளை எனது நினைவில் கொண்டு வந்தது. ஆறாவது கடிதத்தில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போன்று அமைதியான, ஆளரவமில்லாத அந்த இரவு மரங்களின் உராய்விலிருந்தும் இலைகளின் சலசலப்பிலிருந்தும் வெளிப்பட்ட சோகமயமான ஓசைகள் எனது இரக்க சுபாவத்தையும் முதுமையையும் தனிமையையும் வருடிச் சென்று எனது சிந்தனையைக் கிளறிவிட்டன. “பகல் பொழுது இரவு என்ற கருப்புக் கபனால் போர்த்தப்பட்டு இருண்டதொரு மண்ணறை போல் மாறிவிட்டதைப் போன்று உனது வாழ்க்கை, உனது உலகம் என்ற பகல் பொழுதுகளும் கூட இரவாகவும் மரணமாகவும் மண்ணறை என்ற இராக் காலமாகவும் மாறப் போகின்றன” என்று முதுமை எனது உள்ளத்தின் செவிப்பறைக்குள் கூறியது. அப்போது எனது நஃப்ஸ் நிர்ப்பந்தமாகப் பேச ஆரம்பித்தது: “ஆம், நான் எனது சொந்த மண்ணைத் துறந்து தொலை தூரத்தில் இருப்பதைப் போன்றே கடந்த ஐம்பது வருட வாழ்க்கையில் மரணித்துச் சென்ற எனது நேசத்துக்குரியவர்களின் பிரிவுகளும் அந்தப் பிரிவுகள் ஏற்படுத்துகின்ற கவலையும் சொந்த மண்ணைத் துறப்பதைவிடப் பெரிய, கவலையும் கைசேதமும் மிக்க ஒரு தனிமையாகும். அவ்வாறே இந்த இரவு இந்த மலை உச்சியில் நான் அனுபவிக்கும் சோகமயமான இந்தத் தனிமையைவிட அதிக சோகமும் வேதனையுமிக்க ஒரு தனிமை என்னை அன்மித்துக்கொண்டிருக்கின்றது. அது முழு உலகையும் ஒரே சமயம் என்னிலிருந்து பிரித்துவிடப் போகின்றது.” இவ்வாறு தனிமைக்குள் தனிமையாகவும் துக்கத்துக்குள் துக்கமாகவும் இருந்த அந்த சந்தர்ப்பத்தில் உதவிக்காக ஓர் ஆதாரத்தை, ஓர் ஒளியைத் தேடினேன். அப்போது அல்லாஹ் மீதான நம்பிக்கை எனது உதவிக்கு விரைந்தது. அந்த உதவியில் மகத்தான ஓர் ஆறுதலையும் அன்னியோன்யத்தையும் உணர்ந்தேன். அந்த ஆறுதல், நான் முகம் கொடுத்திருந்த பல மடங்கு நெருக்கடிகளைவிட ஆயிரம் மடங்கு அதிகமான நெருக்கடிகளையும் மிகைத்துவிடப் போதுமானதாக இருந்தது. ஆம், முதுமையடைந்த சகோதர சகோதரிகளே! உண்மையில் எம்மைப் படைத்தவன் நிகரற்ற அன்புடையோனாக இருக்கின்றான். எனவே எமக்குத் தனிமை என்ற ஒன்று இருக்க முடியாது. அவன் இருக்கின்றான் எனில் எமக்காக அனைத்துமே, ஏன் மலக்குமார்களும் கூட இருக்கிறார்கள் என்று பொருளாகும். அவ்வாறெனில் இந்த உலகம் பாலடைந்து கைவிடப்பட்ட ஓர் இடமல்ல. ஆளரவமற்ற மலையடிவாரங்களும் பொட்டல் வெளிகளான பாலைவனங்களும் கூட அல்லாஹ்வைத் துதி செய்கின்ற அவனது அடியான்களால் நிறைந்த இடங்களாகவே இருக்கின்றன. அவனது பிரக்ஞையுள்ள அடியான்களுக்கப்பால் கட்களும் மரங்களும் கூட அவனது பெயரால் உனது உயிர்த் தோழர்களைப் போன்றாகிவிடும். அவை தத்தமது மெய்ம்மொழிகளால் எம்முடன் அலவளாவி எம்மை ஆணந்தப்படுத்த முடியுமானவையாகவே இருக்கின்றன. ஆம் இந்தப் பிரபஞ்சத்திலிருக்கும் வஸ்துகளின் எண்ணிக்கையளவு எம்மைப் படைத்த அந்த இரட்சகனின் இருப்புக்கான அத்தாட்சிகள் காணப்படுகின்றன. மேலும், உயிரினங்களின் மகிழ்ச்சிக்கும் திருப்திக்கும் சௌக்கியத்துக்கும் காரணமாக இருக்கக்கூடிய அவற்றின் உறுப்புகள், ஆகாரங்கள், அருட்கொடைகளின் எண்ணிக்கையளவு அவனது ரஹ்மத்துக்கான அத்தாட்சிகளும் ஆதாரங்களும் காணப்படுகின்றன. இவை அனைத்தும் எம்மைப் படைத்துப் பரிபாலித்தும் பாதுகாக்கின்ற அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனும் எல்லையற்ற நேசத்துக்குத் தகுதியானவனுமாகிய ரப்புல் ஆலமீனையே காட்டித் தருகின்றன. அவனது சந்நிதானத்தில் மிகவுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரை இயலாமையும் பலவீனமுமாகும். அந்த இயலாமையும் பலவீனமும் உச்ச நிலையை அடைகின்ற நேரம் வயோதிபமாகும். எனவே அத்தகைய மகத்தான ஒரு சந்நிதானத்தில் மிகவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிந்துரையாக இருக்கும் வயோதிபத்தை எண்ணி விழிபிதுங்குவதன்றி, அதனை நேசிப்பது அவசியமாகும்.
எனது முதுமையின் ஆரம்ப நாட்களில், பழைய ஸஈதுடைய சிரிப்புக்கள் புதிய ஸஈதுடைய அழுகைகளாகப் பரிணமித்திருந்த காலப் பகுதியில் அன்காராவின் அதிகாரத்தைக் கையில் வைத்திருந்த உலகாயுதவாதிகள் நான் இன்னும் பழைய ஸஈதாகவே இருப்பதாக எண்ணி என்னை அங்கு வருமாறு அழைத்தனர். நானும் சென்றேன். இலையுதிர்காலத்தின் கடைசிக்கட்டமாக இருந்த அந்த நாட்களில் சிதைந்து, பாழடைந்து போய் என்னைவிட வயதாக இருந்த அன்காரா கோட்டையின் உச்சிக்கு ஏறினேன். அந்தக் கோட்டை ஏதோ கல்வெட்டுகளாகத் திரிபடைந்த வரலாற்று நிகழ்வுகளைப் போன்று எனக்குத் தென்பட்டது. வருடத்தின் வயோதிபமாகிய இலையுதிர்காலம், எனது வயோதிபம், கோட்டையின் வயோதிபம், மனித குலத்தின் வயோதிபம், புகழ் பெற்ற உஸ்மானியப் பேரரசின் வயோதிபம், ஹிலாபத்துடைய வபாத், உலகத்தின் வயோதிபம் என்று அனைத்துமே என்னை சோகக் கடலுக்குள் ஆழ்த்தியிருந்த அந்த சமயம் அந்த உயர்ந்த கோட்டையின் உச்சியிலிருந்து கடந்த காலத்தின் பல்லத்தாக்குகளையும் எதிர்காலத்தின் சிகரங்களையும் நோக்கிப் பார்வையைச் செலுத்தினேன். ஒன்றையொன்று சூழ்ந்திருந்த அந்த வயோதிபங்களின் இருள்களுக்குள் சிறைப்பட்டிருந்த அந்த நிலையில் அன்காரா நகரத்தையும் கூட மிகவுமே இருண்டதோர் ஆத்மார்த்தமான இருள் சூழ்ந்திருப்பதை உணர்ந்தேன் . எனவே எனக்கு ஆறுதலையும் நம்பிக்கையும் தரக்கூடிய ஓர் ஒளியைத் தேடினேன். கடந்தகாலத்தை நோக்கித் திரும்பி அங்கு ஆறுதலைத் தேடிய போது, அது எனது பெற்றோரும் முன்னோரும் அடக்கம் செய்யப்பட்ட பெரியதொரு மையவாடியாகவே எனக்குக் காட்சியளித்தது. அதுவோ ஆறுதலுக்குப் பதிலாக பயங்கரமான ஒரு வேதனையை என்னுள் ஏற்படுத்தியது. பின்னர் நிவாரணம் தேடி இடது புறமாக உள்ள எதிர்காலத்தைப் பார்த்தேன். அதுவும் கூட, எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் அடக்கஸ்தலமாக அமையப் போகின்ற பிரமாண்டமான, இருண்டதொரு மையவாடியாகவே காட்சியளித்தது. ஓர் ஆதரவு கிடைக்குமென்று நினைத்தால் அங்கும் பயங்கரமே காத்திருந்தது. பின்னர் இடதைவிட்டும் வலதைவிட்டும் முகத்தைத் திருப்பி நான் அடைந்துள்ள நடப்பு நாளை அவதானித்தேன். பொடுபோக்கில் வீழ்ந்த எனது பார்வைக்கு அந்த நாளும்கூட அரை உயிர் போய் குற்றுயிராகத் துடித்துக்கொண்டிருக்கும் எனது உடலைச் சுமந்த ஒரு சந்தூக்காகவே காட்சியளித்தது. இந்தத் திசையும் பயங்கரமானதாகவே காட்சியளித்ததால் தலையைத் தூக்கி எனது ஆயுள் என்ற விருட்சத்தின் உச்சத்தைப் பார்த்தேன். அங்கும், அந்த விருட்சத்தின் ஏக கனி எனது ஜனாஸாவாகவே இருந்தது. அந்த ஜனாஸா அந்த விருட்சத்தின் உச்சியிலிருந்து என்னைப் பரிதாபமாகப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தது. அதுவும் என்னுள் அச்சத்தையே ஏற்படுத்தியது. அந்த அச்சத்தால் பார்வையைத் தாழ்த்திக்கொண்டேன். அங்கே அந்த விருட்சத்தின் வேர்களுக்கடியில் உக்கி மண்ணோடு மண்ணாகிப்போன எனது உடல் இருந்தது. அது எனது அதிர்ச்சியையும் அவஸ்தையையும் மேன்மேலும் அதிகரிக்கச் செய்தது. பின்னர் அயர்ந்து போய் பின் நோக்கிப் பார்த்தேன். அங்கு தற்காலிகமான இந்த உலகம் சூன்யப் பள்ளத்தாக்கில், இல்லாமை என்ற இருளில் உருண்டோடிக்கொண்டிருந்தது. அங்கும் நிவாரணத்துக்குப் பதிலாக விஷமே பரிமாறப்பட்டது. பின்னர் முன் நோக்கிப் பார்த்தேன். அங்கும் பாதை நடுவில் வாயைப் பிழந்துகொண்டிருந்த மண்ணரை வாசல் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது. அந்த வாசலைத் தாண்டி நித்தியத்தை நோக்கிச் செல்கின்ற சாலையையும் அந்த சாலையில் செல்கின்ற கூட்டங்களையும் தொலை தூரத்தில் காண முடியுமாக இருந்தது. இவ்வாறு ஆறு திசைகளிலிருந்தும் வரக்கூடிய இந்தப் பயங்கரமான அச்சங்கள், அச்சுறுத்தல்களுக்குத் தாக்குப்பிடிப்பதற்கும் அவற்றிலிருந்து என்னைத் தற்காத்துக்கொள்வதற்கும் அற்பமான தெரிவுச் சுதந்திரத்தைத் தவிர வேறு எந்த ஓர் ஆதாரத் தளமோ சாதனமோ என்னிடம் இருக்கவில்லை. அந்த எண்ணற்ற எதிரிகளுக்கும் ஆபத்துக்களுக்கும் தாக்குப் பிடிப்பதற்காக மனிதனிடம் இருக்கும் அந்தத் தெரிவுச் சுதந்திரத்தைப் பொருத்தவரை அது மிகுந்த குறைபாடுகளை உடையதாகவும் குறுகிய வீச்செல்லை உடையதாகவும் பலவீனத்துக்கு மேல் பலவீனமானதாகவும் ஆக்கும் சக்தி அற்றதாகவும் வெறுமனே ஒரு நாட்டத்துக்கு அப்பால் எதுவும் செய்ய முடியாத ஒன்றாகவுமே உள்ளது. அதாவது, அந்தத் தெரிவுச் சுதந்திரத்தால் கடந்த காலத்துக்குச் சென்று அங்கிருந்து வரும் கவலைகள், கைசேதங்களையோ எதிர்காலத்துக்குச் சென்று அங்கிருந்து வரும் அச்சங்கள், அச்சுறுத்தல்களையோ தடுத்து நிறுத்த முடியாது. எனவே கடந்த மற்றும் எதிர்காலத்துக்குச் சொந்தமான எனது ஆசைகள், அச்சங்களுடைய விடயத்தில் அது எத்தகைய எந்தப் பயனுமற்ற ஒன்றாக இருப்பதைக் கண்டேன். இந்த ஆறு திசைகளிலிருந்து அலை அலையாக வருகின்ற கொடிய வேதனைகளாலும் திக்குத் தெரியாமல் திக்குமுக்காடச் செய்கின்ற கடுமையான இருள்கள், அவநம்பிக்கைகளாலும் அல்லல்பட்டுக்கொண்டிருந்த சமயம் சங்கைமிகு குர்ஆனின் குர்ஆனிய ஆகாயத்தில் பிரகாசிக்கின்ற ஈமானிய ஒளிகள் எனது உதவிக்காக வந்தன. அந்த ஒளிகள் அந்த இருண்ட ஆறு திசைகளையும் ஓளியேற்றிப் பிரகாசிக்கச் செய்தன. அப்போது அந்தக் கொடிய வலிகளும் இருள்களும் அதைவிட நூறு மடங்கு பெரியதாக இருந்திருப்பினும் கூட அந்த ஒளி அவையனைத்தையும் துடைத்தெறிவதற்குப் போதுமானது என்பதைக் கண்டுகொண்டேன். ஆம் அந்த ஒளி ஆறு திசைகளிலிருந்தும் வந்த எல்லா வகையான வலிகளையும் துக்கங்களையும் ஒவ்வொன்றாக ஆறுதலாகவும் அந்நியோன்யமாகவும் மாற்றிவிட்டது. அதாவது: பிரமாண்டமான ஒரு மையவாடியாகத் தெரியும் கடந்தகாலத்தை மூடியிருந்த இருண்ட திரையைக் கிழித்தெறிந்து அதை மிகவும் அந்நியோன்யமான, ஒளிமயமான ஒரு மஜ்லிஸ் வடிவில் அல்லது நேசர்கள் ஒன்று சேர்கின்ற ஒரு சபை வடிவில் ஐனல் யகீனாகவும் ஹக்கல் யகீனாகவவும் காட்சிப்படுத்தியது. அவ்வாறே, பொடுபோக்கான பார்வைக்குப் பிரமாண்டமான ஒரு மண்ணறையாகக் காட்சியளித்த எதிர்காலம் மகிழ்ச்சியாலும் நிம்மதியாலும் சூழப்பட்ட ஒரு மாளிகையில் வழங்கப்படும் ஒரு ரஹ்மானிய விருந்தோம்பல் வடிவில் இல்மல் யகீனாகக் காட்சியளித்தது. மேலும் பொடுபோக்குப் பார்வைக்கு ஒரு சந்தூக்குப் பெட்டியாகக் காட்சியளித்த நடப்பு நாளை அதற்கு மாற்றமாக, எம்மால் தெளிவாகக் கான முடியுமாக உள்ளதைப் போன்று மறுமைக்கான ஓர் அங்காடியாகவும் கோலாகலமாக அலங்கரிக்கப்பட்ட ஒரு ரஹ்மானிய உபசரிப்புக் கூடமாகவும் காட்சிப்படுத்தியது. மேலும், பொடுபோக்குப் பார்வைக்கு ஆயுள் விருட்சத்தின் உச்சியில் உள்ள ஒரு ஜனாஸாவாகக் காட்சியளித்த அந்தக் கனி, உண்மையில் எனது ஜனாஸா அல்ல என்பதையும் மாறாக, பட்டையடித்துப் போன உடல் என்ற இருப்பிடத்திலிருந்து புறப்பட்டு நித்திய உலகத்தில் உலாவச் சென்ற, நித்தியமான ஒரு வாழ்வுக்குப் பாத்திரமான, நித்திய நிம்மதியை ஆசிக்கின்ற எனது ஆத்மாவே அவ்வாறு காட்சியளித்தது என்பதையும் இல்மல் யகீனாகக் காண்பித்தது. மேலும் ஆயுள் மரத்தின் அடியிலிருந்த அந்த மண்ணை எனது உடலும் முள்ளுகளும் உக்கிப் போன சாமான்யமான ஒரு மண்ணாக அன்றி ரஹ்மத்துக்கான ஒரு கதவாகவும் சுவனச் சோலைகளுக்கான ஒரு திரையாகவும் காட்சிப்படுத்தியது. அவ்வாறே, பொடுபோக்கான பார்வைக்கு சூன்யப் பள்ளத்தாக்கில் இல்லாமை என்ற இருளை நோக்கி உருண்டோடிக்கொண்டிருப்பதாகத் தோன்றிய உலகத்தினதும் உலக வஸ்துகளினதும் நிலைமையை ஏதோ வெளிப் பார்வைக்கு அவ்வாறு தோன்றினாலும் குர்ஆனிய நிழலில் உலகத்தில் தமக்கு வழங்கப்பட்ட பணிகளை முடித்துக்கொண்டு தமது அர்த்தங்களை வெளிப்படுத்திய பின்னர் தமக்குப் பதிலாகத் தமது இடங்களில் தமது விளைச்சல்களையும் கனிகளையும் விட்டுச் செல்கின்ற இறை கடிதங்களாகவும் பரிசுத்த இரட்சகனாகிய வல்லோன் அல்லாஹ்வின் நுட்பமான வடிவமைப்புக்களுக்கான மாதிரிகளாகவும் அறிமுகம் செய்து உலகின் யதார்த்த நிலையை இல்மல் யகீனாகக் காண்பித்தது. மேலும், பாதை நடுவே என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் மண்ணறையையும் மண்ணறைக்கு அப்பால் நித்தியத்தை நோக்கிச் செல்லும் பாதையையும் பொடுபோக்குப் பார்வை வெறுமனே ஒரு படுகுழியாகவே எனக்குக் காட்சிப்படுத்தியது. ஆனால் ஈமான் குர்ஆனிய ஒளியைக்கொண்டு அந்தக் கதவு பிரகாசமான ஓர் ஒளி உலகுக்கான நுழைவாயில் என்பதைக் காட்டித் தந்தது. அந்தப் பாதையும் கூட சூன்யத்தை அல்லது இருளை நோக்கியன்றி வேறோர் இருப்பிடத்தை அதாவது ஒளியின் தேசத்தை நோக்கிய அல்லது நித்திய நிம்மதியை நோக்கிய பாதையாகும் என்பதைக் காட்டியது. இது எனது நிலைப்பாட்டை முற்று முழுதாக மாற்றியமைத்ததால் எனது அனைத்து நிர்க்கதிகளுக்கும் நிவாரணமாக அமைந்தது. ஆம், ஈமான் அந்த எண்ணற்ற எதிரிகளுக்கும் முடிவற்ற அபாயங்கள், அச்சுறுத்தல்களுக்கும் முன்னால் தாக்குப் பிடிப்பதற்காக மிகவும் அற்பமான ஒரு நாட்டத்தைத் தவிர எதையும் கைவசம் வைத்திராத தெரிவுச் சுதந்திரத்தை அளவற்ற ஓர் அருளோடு பிணைக்கின்ற ஓர் அத்தாட்சிப் பத்திரமாக மாறி விடுகின்றது. உண்மையில் மனிதனிடமிருக்கும் தெரிவுச் சுதந்திரம் என்பது தன்னளவில் மிகவும் வரையக்கப்பபட்ட, மிகப் பலவீனமான, மிகுந்த குறைபாடுகளைக் கொண்ட ஒரு சாதனமாகும். ஆனால், ஓர் இராணுவ சிப்பாய் தனது அற்பமான பலத்தைத் தனது தேசத்தின் பெயரால் பிரயோகிக்கும் போது தனது சொந்தப் பலத்தால் முடியுமானதைவிட ஆயிரக்கணக்கான மடங்கு அதிகமான காரியங்களைச் சாதிப்பான். அவ்வாறே, ஈமானில் பொதிந்துள்ள தாத்பரியத்துக்கமைய அந்த அற்பமான தெரிவுச் சுதந்திரம் வல்லோன் அல்லாஹ்வின் பெயரால் அவனது பாதையில் பிரயோகிக்கப்படுமாயின் ஐநூறு வருடங்கள் விசாலமான ஒரு சுவனச் சோலையை மிக இலகுவாக அடைந்துகொள்ளலாம். மேலும், ஈமான் கடந்த மற்றும் எதிர் காலங்களில் செல்வாக்குச் செலுத்த முடியாத தெரிவுச் சுதந்திரத்தின் கடிவாளத்தை சடமாக இருக்கின்ற உடலின் கைகளிலிருந்து எடுத்து உள்ளத்திடமும் ஆத்மாவிடமும் கையளிக்கின்றது. உள்ளத்தினதும் ஆன்மாவினதும் வாழ்வெல்லைகள் உடலைப் போன்று நிகழ்காலத்தோடு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அன்றி ஏகப்பட்ட முன்னைய வருடங்களையும் ஏகப்பட்ட பின்னைய வருடங்களையும் உள்ளடக்கிய விசாலமானதொரு பரப்பாகும். எனவே தெரிவுச் சுதந்திரத்தின் தன்மையும் கூட அற்பமான நிலையிலிருந்து அகிலார்ந்த நிலையை எட்டுகின்றது. அப்போது அந்தத் தெரிவுச் சுதந்திரத்தால் ஈமானியப் பலத்தின் மூலம் கடந்த காலத்தின் மிக ஆழமான பள்ளத்தாக்குகளுக்குச் சென்று அங்கிருந்து வருகின்ற துக்கங்களையும் வேதனைகளையும் கைசேதங்களையும் துண்டிக்க முடியும். அவ்வாறே ஈமானிய ஒளியைக் கொண்டு எதிர்காலத்தின் மிகத் தொலை தூரத்திலுள்ள சிகரங்களைத் தாண்டிச் சென்று அங்கிருந்து வரும் அச்சங்களையும் அழித்தொழித்துவிட முடியும். இதோ, என்னைப் போன்று முதுமையின் நோவினைகளால் வாடும் மூத்த சகோதர சகோதரிகளே! அல்ஹம்துலில்லாஹ். உண்மையில் நாம் ஈமான் கொண்ட கூட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றோம். சந்தேகமின்றி அந்த ஈமானில் இப்படிப்பட்ட இனிய, ஒளிமயமான, தேன் போன்று தெவிட்டும் செல்வ ஊற்றுகள் காணப்படுகின்றன. கூடவே இந்த வயோதிபம் எம்மை அத்தகைய செல்வங்களின்பால் ஏனையவர்களைவிட அதிக தேவையுடையவர்களாக மாற்றுகின்றது. எனவே ஈமானோடு அடைந்துகொள்ளக் கிடைத்த வயோதிபத்தையிட்டும் முறைப்பட்டுக்கொள்வதன்றி ஆயிரக்கணாக்கான நன்றிகளைக் கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
முதுமையின் அடையாளமான நரை முடிகள் எனது தலையில் தென்பட ஆரம்பித்த சமயம் இளமையின் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன். முதலாம் உலகப் போர் ஏற்படுத்திய அதிர்வலைகள் அந்த ஆழ்ந்த உறக்கத்துக்கு மென்மேலும் வலுச் சேர்த்தன. பின்னர் கைதியாகக் கழித்த நாட்களும் அதிலிருந்து விடுதலையாகி இஸ்தான்பூலை அடைந்த பிறகு கிடைத்த மகத்தான ஆரவாரம் கண்ணியம் என்பனவும் கலீபா முதல் ஷைகுல் இஸ்லாம் வரை, படைத் தளபதிகள் முதல் இஸ்தான்பூலைச் சேர்ந்த மத்ரஸா மாணவர்கள் வரை எல்லாத் தரப்பினரும் எனது தகுதிக்கு அப்பால் என் மீது காண்பித்த ஈடுபாடு, உபசாரம் என்பனவும் இவற்றால் ஏற்பட்ட ஒரு வகை உள நிலையும் என்னிடமிருந்த அந்த இளமையின் போதையையும் ஆழ்ந்த தூக்கத்தையும் இன்னுமின்னும் ஆழமாக்கின. இதன் தாக்கம் என்னை ஏதோ இரவா வரம் பெற்று வாழப் போகின்றவனைப் போன்று உலகை நித்தியமானதாகப் பார்க்கின்ற ஒரு அசாதாரண நிலைக்குத் தள்ளிவிட்டிருந்தது. அவ்வாறான ஒரு சமயம், ஒரு ரமழானில் இஹ்லாஸான ஹாபிஸ்களை செவிமடுப்பதற்காக இஸ்தான்பூல் பாயெஸீத் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கு சங்கைமிக்க குர்ஆனின் மனிதர்கள் மற்றும் ஒட்டுமொத்த ஜீவராசிகளின் மரணத்தைப் பற்றிய كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ என்ற மிகத் தீர்க்கமான, அகிலார்ந்த பிரகடனத்தை ஹாபிஸ்களுடைய நாவிலிருந்து செவிமடுத்தேன். அந்தப் பிரகடனம் எனது செவிப்பறைகளூடாக உள்ளத்தின் ஆழத்தை அடைந்து, அங்கு மிகவும் கனத்த படிமங்களாக ஆகிப் போயிருந்த கரைகளை உடைத்து எனது பொடுபோக்கையும் போதையையும் மயக்கத்தையும் உறக்கத்தையும் களைத்தது. தொடர்ந்து வந்த சில நாட்கள் அந்த நீண்ட உறக்கத்திலிருந்து விளித்ததன் விளைவாக ஏற்பட்ட ஒரு வகைத் தடுமாற்றத்தில் கழிந்தது. ஒரு சூறாவளியில் மாட்டிக்கொன்டதைப் போன்ற அல்லது ஏதோ மங்கலான ஒரு புகை மூட்டத்துக்குள் திணறிக்கொண்டிருப்பதைப் போன்றதொரு நிலைக்கு ஆளாகியிருந்தேன். கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் நரை முடிகள் என்னைப் பார்த்து “எச்சரிக்கையாக இரு!” என்று கூறின. ஆம், அந்த நரை முடிகளின் எச்சரிக்கை எனது யதார்த்த நிலையை எனக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்தது. நான் மிகவுமே நம்பி, இனிமைதனில் மதிமயங்கியிருந்த வாலிபம் கண் முன்னால் என்னைவிட்டும் விடைபெற்றுச் செல்ல ஆரம்பித்திருந்தது. காதலும் மோகமும் அதிகமான ஈடுபாடும் கொண்டிருந்த எனது உலக வாழ்க்கை அஸ்தமித்துக்கொண்டிருந்தது. உலகம் என்னைப் பார்த்து கையசைத்தவாறு இந்த மடத்திலிருந்து விடைபெற்றுச் செல்லப்போவதை நினைவூட்டியது. கூடவே என்னை வழியனுப்ப வந்த அந்த உலகமும்கூட விடைபெற்றுச் செல்வதற்குத் தயாராகிக்கொண்டிருந்தது. كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ என்ற வசனத்தின் விசாலமான உள்ளடக்கத்திலிருந்து, “மனித குலமும் ஒரு நஃப்ஸாகும், மீள எழுப்பப்படுவதற்காக மரணிக்கப் போகின்றது. அவ்வாறே பூமிப்பந்தும் கூட ஒரு நஃப்ஸாகும், நித்தியமான ஒரு வடிவத்தை அடைவதற்காக வேண்டி அதுவும் மரணிக்கப் போகின்றது. அவ்வாறே இம்மையும் கூட நஃப்ஸாகும், மறுமையாக மாறுவதற்காக அதுவும் மரணிக்கப் போகின்றது!” போன்ற அர்த்தங்களை சங்கைமிக்க குர்ஆன் சாடையான ஓர் அமைப்பில் எனது உள்ளத்துக்குத் திறந்துவிட்டது. இந்த சிந்தனைகளில் இருக்கும் போது எனது நிலையை ஒரு முறை சீர்தூக்கிப் பார்த்தேன். இன்பங்களின் ஊற்றாக இருந்த வாலிபம் என்னைவிட்டுப் போய்க்கொண்டிருக்க துன்ப துயரங்களின் ஊற்றாக இருக்கும் முதுமை அதன் இடத்தைப் பிடித்துக்கொண்டிருந்தது. மிகவும் பிரகாசமான, மங்களகரமான வாழ்க்கை போய்க்கொண்டிருக்க பார்வைக்கு இருண்ட, பயங்கரமான மரணம் அதன் இடத்தை ஆக்கிரமித்துக்கொள்வதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தது. அவ்வாறே நித்தியமானதாகக் கணிக்கப்படுவதால் பொடுபோக்குக் காரர்களின் போதையாக மாறியிருக்கின்ற இந்த உலகமும் அசுற வேகத்தில் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அப்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு, மீண்டும் பழைய நிலைக்கு மீள்வதற்காக இஸ்தான்பூலில் தகுதியை விஞ்சி எனக்கு வழங்கப்பட்டிருந்த பட்டம் பதவிகளால் கிடைத்த அந்தஸ்துகள், அங்கீகாரங்கள், அவை ஏற்படுத்திய மனமகிழ்ச்சி என்பவற்றை நோக்கிப் பார்வையைத் திருப்பினேன். ஆனால் அவை எந்தப் பயனையும் தரவில்லை. மனிதர்களிடமிருந்து கிடைத்த அத்தனை அந்தஸ்துகள், அங்கீகாரங்கள், ஆரவாரங்கள், ஆறுதல்களும் என்னை அண்மித்திருந்த மண்ணறை வாயில் வரை மாத்திரமே வர முடியுமானவையாக இருந்ததைக் கண்டேன். அப்போது புகழ் தேடுபவர்களுடைய ஒரு வாழ்க்கை நோக்கமாக இருக்கும் மதிப்பு மரியாதை என்பன ஓர் அலங்கரிக்கப்பட்ட திரையாக இருப்பதையும் அந்தத் திரைக்குப் பின்னால் அவலட்சனமான ஒரு முகஸ்துதியும் அசிங்கமான ஓர் அகங்காரமும் தற்காலிகமான ஒரு போதையும் மறைந்துள்ளதையும் கண்டுகொண்டேன். அப்போது என்னை அன்று வரை ஏமாற்றிய இந்த சமாச்சாரங்கள் எனக்கு எந்தகைய ஆறுதல்களையோ திருப்தியையோ ஒளியையோ தர முடியாத நிலையில் இருப்பது தெளிவானது. எனவே முற்றிலும் விளித்துக்கொள்வதற்காகவும் குர்ஆனுடைய அகிலார்ந்த பாடங்களை செவிமடுப்பதற்காகவும் மீண்டும் பாயெஸீத் பள்ளிவாசலுக்கு ஹாஃபிஸ்களின் பாராயானத்தைச் செவிமடுப்பபதற்காகச் சென்றேன். அப்போது அந்த அகிலார்ந்த பாடங்களிலிருந்து وَ بَشِّرِ الَّذِينَ اۤمَنُوا என்று தொடர்கின்ற, அதை ஒத்த புனிதமான மறை வாக்குகளையும் நன்மாராயனங்களையும் செவிமடுத்தேன். குர்ஆனிலிருந்த கற்றுக்கொண்ட பாடத்தின் பிரகாரம் வெளியில் ஆறுதல் தேடி அலைவதை நிறுத்திவிட்டு நான் சொந்தமாக துக்கங்களையும் கைசேதங்களையும் நம்பிக்கையீனங்களையும் அனுபவித்த விடயங்களிலேயே ஆறுதலையும் நம்பிக்கையையும் ஒளியையும் தேட ஆரம்பித்தேன். சர்வ வல்லோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும். அப்போது நான் நிவாரணங்கள் நிர்க்கதிகளுக்குள்ளும் ஒளிகள் இருள்களுக்குள்ளும் ஆறுதல்கள் வேதனைகளுக்குள்ளும் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுகொண்டேன். முதலாவதாக, எல்லோருக்கும் அச்சத்தைத் தருகின்ற, எல்லோராலும் மிகப் பயங்கரமானதாகப் பார்க்கப்படுகின்ற மரணத்தின் முகத்தைப் பார்த்தேன். உண்மையில் அது இருண்டதாகவும் பயங்கரமானதாகவும் தெரிந்தாலும் குர்ஆனிய ஒளியூடாகப் பார்க்கும் போது அந்த மரணத்தின் அஸலான தோற்றமானது ஒரு முஃமினைப் பொருத்தவரை பிரகாசமானதாகவும் அழகியதாகவும் இருப்பதைக் கண்டுகொண்டேன். ரிஸாலே நூரின் பல பகுதிகளில் இந்த சத்தியத்தை மிகவும் ஆணித்தரமாக நிறுவியுள்ளோம். எட்டாவது வார்த்தை, இருபதாவது கடிதம் போன்ற பல்வேறு ரஸாயில்களில் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று மரணம் என்பது ஓர் அழிவோ முடிவோ அன்றி நித்திய வாழ்க்கைக்கான ஆரம்பமாகும்; வாழ்க்கைப் பொறுப்புகளின் சுமையிலிருந்து கிடைக்கின்ற ஓர் ஓய்வும் விடுதலையுமாகும்; ஆலமுல் பர்ஸஹுக்குப் புலம்பெயர்ந்து சென்றுவிட்ட நேசத்துக்குரியவர்களைச் சந்திப்பதற்கான ஒரு பயணமாகும். இவ்வாறு, இது போன்ற இன்னும் ஏராளமான சத்தியங்களின் வாயிலாகத் திகழும் மரணத்தின் அஸலான அழகைக் கண்டுகொண்டேன். அச்சத்துக்குப் பதிலாக, ஒரு வகைத் தாகத்தோடு மரணத்தின் முகத்தைப் பார்த்தேன். தரீக்காக்களில் “ராபிததுல் மௌத்” எனப்படும் மௌத்துடைய சிந்தனை பயிற்றுவிக்கப்படுவதிலிருக்கும் ஒரு தாத்பரியத்தைப் புரிந்துகொண்டேன். பின்னர் கடந்து செல்வதையிட்டு எல்லோரும் கைசேதப்படுகின்ற, எல்லோரையும் தன் மீது ஆசையும் மோகமும் கொள்ள வைக்கின்ற வாலிபப் பருவத்தை ஏறெடுத்துப் பார்த்தேன். அது பாவங்களோடும் பொடுபோக்கோடும் கடந்துகொண்டிருந்தது. அழகாகவும் பசுமையாகவும் தென்படுகின்ற அந்த வாலிபப் போர்வைக்குள் மிகவும் அசிங்கமான, போதையில் பேதலித்துப்போன ஒரு முகத்தைக் கண்டேன். அப்போது அதன் யதார்த்தத்தை என்னால் கண்டுகொள்ள முடியாமல் போயிருந்தால் ஒரு வேளை ஒரு சில வருடங்களில் என்னையும் போதைக்குள்ளாக்கி ஓரு போலிப் புன்னகையை அதனால் எனக்குத் தர முடிந்திப்பினும் அதனைத் தொடர்ந்து நூறு வருடங்கள்தான் வாழ்ந்தாலும் நிச்சயமாக என்னை அழுதுபுலம்புகின்ற அவல நிலைக்கு ஆளாக்கியிருக்கும். ஆம், இவ்வாறு வாலிபத்தின் போதைக்குள் சிக்கிய ஒருவர் கண்ணீரோடு பின்வருமாறு கூறுகின்றார். لَي۟تَ الشَّبَابَ يَعُودُ يَو۟مًا فَاُخ۟بِرَهُ بِمَا فَعَلَ ال۟مَشٖيبُ அதாவது, “கைசேதமே, எனது வாலிபம் மீண்டுமொரு தடவை என்னிடம் திரும்பி வருமாக இருந்தால் முதுமை எனக்கு எத்தகைய கைசேதங்களையும் கவலைகளையும் கொண்டு வந்து சேர்த்தது என்பதை அதனிடம் முறையிட்டிருப்பேன்.” ஆம், இந்த மனிதரைப் போன்று வாலிபத்தின் யதார்த்தத்தை அறியாதிருந்த வயோதிபர்கள் தமது வாலிபத்தை எண்ணிக் கைசேதப்பட்டு கவலையோடு அழுகின்றனர். ஆனால், தமது வாலிபப் பருவத்தை விளிப்பான உள்ளத்தோடும் ஆத்மார்த்த அமைதியோடும் புத்தித் தெளிவோடும் கழிக்கின்ற முஃமின்களைப் போல் இபாதத்திலும் நன்மையான காரியங்களிலும் மறுமைக்கான வியாபாரத்திலும் கழிப்பவர்களுக்கு அந்த வாலிபமானது மறுமை வியாபாரத்துக்கான மிகப் பலமான ஒரு வாய்ப்பாகவும் நன்மையான காரியங்களுக்கான மிகச் சிறப்பான ஒரு சந்தர்ப்பமாகவும் இருக்கின்றது. மேலும் வாலிபம் இந்த மார்க்கப் பணிக்காக வழங்கப்பட்ட ஒரு மூலதனமாகும் என்பதை அறிந்து துஷ்பிரயோகம் செய்யாதவர்களுக்கு அதுவே மிகப் பெருமதியான, மிக இன்பகரமான ஓர் இறை அருளாகும். அந்த வாலிபத்தோடு இஸ்திகாமத்தும் தக்வாவும் நாணமும் ஒன்றாக இருக்காவிட்டால் ஏராளமான ஆபத்துக்கள் சூழ்ந்துகொள்ளும். வாலிபத்தின் வேட்கையால் நித்திய மறுமை வாழ்க்கை நாசமாகிவிடும். ஏன் பலபோது உலக வாழ்க்கையையும் கூட சீரழித்துவிடும். சிலபோது வாலிபத்தின் ஓரிரு வருட இன்பங்களுக்கான விலையாக வயோதிபக் காலம் முழுவதும் வேதனைகளையும் கவலைகளையும் அனுபவிப்பர். உண்மையில் அதிகமான மனிதர்கள் வாலிபத்தின் வலையில் வீழ்ந்துவிடுகின்றனர். எனவே வயோதிபர்களான நாம் அந்த வாலிபத்தின் ஆபத்துக்களைவிட்டும் பாதுகாப்புப் பெற்றவர்களாக இருப்பதை எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம். எல்லாவற்றையும் போல் வாலிபத்தின் இன்பங்களும் கூட நிச்சயமாக அழிந்துவிடக் கூடியவையாகும். எனவே அந்த வாலிபம் இபாதத்திலும் நன்மையான காரியங்களிலும் செலவு செய்யப்படுமாயின் அதன் கனிகள் நித்தியமானதாக மாறி நித்தியமான வாழ்வில் பசுமையானதொரு வாலிபத்தை அடைந்துகொள்வதற்கான ஒரு வாய்ப்பாக ஆகிவிடும். பின்னர் பெரும்பாலான மனிதர்கள் காதலும் பற்றும் கொண்டுள்ள உலகத்தைப் பார்த்தேன். குர்ஆனிய ஒளியின் உதவி மூலம் அதில் ஒன்றுக்குள் ஒன்றாக மூன்று விசாலமான முகங்கள் இருப்பதைக் கண்டுகொண்டேன். அவற்றுள் ஒரு முகம் இறை நாமங்களை நோக்கியதாகவும் அந்த நாமங்களுக்கான கண்ணாடியாகவும் இருந்தது. இரண்டாவது முகம் மறுமையை நோக்கியதாகவும் அதற்கான விளை நிலமாகவும் இருந்தது. மூன்றாவது முகமோ உலகப் பித்தர்களை நோக்கியதாகவும் உலகப் பித்தர்களான பொடுபோக்குக்காரர்களின் களியாட்டத் தளங்களாகவும் இருந்தது. மேலும் இந்த உலகத்தில் ஒவ்வொருவருக்கும் என்று தனிப்பட்ட, விசாலமான ஒவ்வோர் உலகம் உள்ளது. அதாவது இந்த உலகில் மனிதர்களின் எண்ணிக்கையளவான உலகங்கள் காணப்படுகின்றன. ஆனால் ஒவ்வொருவருக்குமுரிய அந்தப் பிரத்தியேகமான உலகத்துடைய பிடிமானம் அவரவர் வாழ்வாகும். எப்போது அந்த வாழ்வு குடிகொண்டிருக்கின்ற உடல் சரிந்து வீழ்கின்றதோ அத்துடன் அவனது உலகம் அழிந்து அதனுடைய கியாமத்தும் நிகழ்ந்தேறிவிடும். பொடுபோக்குக்காரர்கள் தமது பிரத்தியேக உலகத்துடைய விரைவாக அழிந்து போகக்கூடிய இந்தத் தன்மையை அறியாதிருப்பதால் இந்த உலகத்தைப் போன்று ஏதோ சற்றுத் தொடர்ந்தேர்ச்சையானது என்றும் நிலையானது என்றும் எண்ணி காதல் கொள்கின்றனர். ஆம், எல்லோருக்கும் போன்றே எனக்கும் விரைவாக அழிந்து சிதைந்து போகக்கூடிய பிரத்தியேகமான ஓர் உலகம் இருக்கின்றது. இந்தப் பிரத்தியேக உலகத்தால் அதாவது இந்தக் குறுகிய வாழ்வால் என்னதான் நலவு வந்துவிடப் போகின்றது என்று சிந்தித்தேன். பின்னர் குர்ஆனிய ஒளியின் துணையால் இந்த உலகம் எனக்கும் எல்லொருக்கும் தற்காலிகமான ஒரு வியாபாரஸ்தலாமாகவும் வழியில் தங்கிவிட்டுச் செல்வதற்கான ஒரு மடமாகவும் கடந்து செல்பவர்கள் கொடுக்கல் வாங்கள் செய்வதற்காகப் பாதை வழியில் நிர்மானிக்கப்பட்ட ஒரு சந்தையாகவும் இருப்பதைக் கண்டுகொண்டேன். மேலும் அந்தக் குர்ஆனிய ஒளி இந்த உலகத்தை நித்திய வடிவமைப்பாளனாகிய அல்லாஹ்வால் தொடர்ந்தேர்ச்சையாகப் புதுப்பிக்கப்படுகின்ற ஒரு புத்தகமாகவும் காட்டித் தந்தது. ஆம், ஒவ்வொரு கோடை காலமும் ஒவ்வொரு பிரகாசமான இறை கடிதமாகும். ஒவ்வொரு வசந்த காலமும் ஒவ்வொரு இனிமையான இறை சங்கீதமாகும். அதாவது அந்த ஒவ்வொரு காலமும் மகத்துவமிக்க வடிவமைப்பாளனுடைய திரு நாமங்களின் பிரதிபலிப்புக்களை வெவ்வேறு வடிவங்களில் புதிது புதிதாக எமக்குக் காட்சிப்படுத்துகின்ற கண்ணாடியாகும். மேலும் இந்த உலகம் மறுமைக்கான ஒரு விளை நிலமாகவும் இறை கருணையின் வெளிப்பாடாகத் திகழும் ஒரு சோலை நிலமாகவும் நித்திய உலகத்தில் எமக்குக் கையளிக்கப்படப் போகும் பட்டோலைகளை எழுதிவிட்டுச் செல்வதற்கான தற்காலிகமான ஒரு பரீட்சைக் கூடமாகவும் இருப்பதை குர்ஆனிய ஒளி தெலிவாகக் காட்டித் தந்தது. ஆம், இந்த உலகை இவ்வாறு படைத்த கீர்த்திமிக்க படைப்பாளனுக்கு இலட்சோப இலட்சம் நன்றிகள் உண்டாவதாக. அப்போது இந்த உலகத்தின் -மறுமையையும் இறை நாமங்களையும் பார்க்கின்ற- அழகிய உள்முகங்களை நேசிப்பதற்காகவே மனிதனுக்கு இப்படிப்பட்ட மகத்தானதொரு முஹப்பத் வழங்கப்பட்டுள்ளது என்பதைப் புரிட்ந்துகொண்டேன். ஆனால் அந்த முஹப்பத்தைத் துஷ்பிரயோகம் செய்து அதை இந்த உலகத்தின் தற்காலிகமான, அசிங்கமான, ஆபத்தான, பொடுபோக்கை ஏற்படுத்தக் கூடிய முகத்துக்காக விரயம் செய்த காரணத்தினால் உலகப் பித்தர்கள் حُبُّ الدُّنْيَا رَاْسُ كُلِّ خَطِيئَةٍ என்ற ஹதீஸுக்குப் பாத்திரமானவர்களாக ஆகிவிட்டனர். இதோ, வயோதிபர்களான சகோதர சகோதரிகளே! ஈமான் எனது கண்களைத் திறந்துவிட்டதால் சங்கைமிக்க குர்ஆனின் ஒளியைக்கொண்டும் முதுமையின் எச்சரிக்கையைக்கொண்டும் இந்த சத்தியங்களைக் கண்டுகொண்டேன். அந்த சத்தியங்களை ரிஸாலே நூரின் பல்வேறு பகுதிகளில் ஆழ அகலங்களுடன் நிறுவியும் உள்ளேன். மேலும் அவற்றிலிருந்து எனது சொந்த வாழ்வுக்கு உண்மையான ஓர் ஆறுதலையும் பலமானதொரு நம்பிக்கையையும் பிரகாசமான ஓர் ஒளியையும் பெற்றுக்கொண்டேன். இதன் காரணமாக எனது வயோதிபத்தை எண்ணி மகிழ்ச்சியும் வாலிபம் விடைபெற்றதை எண்ணி மகிழ்ச்சியும் அடைகிறேன். நீங்களும் அழுவதை நிறுத்திவிட்டு நன்றி செலுத்துங்கள். எவ்வித சந்தேகமுமின்றி மேற்கூறப்பட்டவை சத்தியமாகும். எம்மிடம் உண்மையாகவே ஈமான் என்ற போக்கிஷம் இருக்கின்றது. எனவே அழுது புலம்புவதாக இருந்தால் பொடுபோக்குக்காரர்களும் வழிகேடர்களும் அழுது புலம்பட்டும்.
முதலாம் உலகப் போரின்போது ரஷ்யாவின் வடகிழக்குப் பிராந்தியத்தின் தொலை தூரமொன்றில் இருக்கின்ற கொஸ்துர்மா நகரத்தில் கைதியாக சிறை வைக்கப்பட்டிருந்தேன். அங்கு பிரபல்யமான வோல்கா நதியின் கரையில் ததாரியர்களுக்குச் சொந்தமான சிறியதொரு பள்ளிவாசல் காணப்பட்டது. அங்கு எனக்கு நண்பர்களாகிவிட்ட இராணுவக் கைதிகளுக்கு மத்தியில் சலிப்படைந்திருந்த நான் சற்று தனிமையாக இருக்க ஆசைப்பட்டேன். ஆனால் வெளியில் அனுமதியின்றி நடமாட முடியாத நிலையில் இருந்தேன். அப்போது ததாரிய மஹல்லாவாசிகள் அனைவரும் கஃபீலாக இருந்து என்னை அந்த வோல்கா நதிக்கரையிலுள்ள சிறிய பள்ளிவாசலுக்கு அழைத்துக்கொண்டனர். அவ்வப்போது நான் தனியாகவே அந்தப் பள்ளிவாசலில் உறங்குவேன். வசந்த காலமும் அன்மித்திருந்ததால், அந்த வடக்குத் தேசத்தின் அதற்கே உரிய நீண்ட நெடிய இராப்பொழுதுகளை அதிகமாக விளித்த நிலையிலேயே கழிப்பேன். அந்த இருள் சூழ்ந்த இரவுகளின் நீண்ட நெடிய தனிமையில் வோல்கா நதியுடைய சோகமயமான சலசலப்புச் சத்தங்களும் இலைகளையும் நிலத்தையும் முத்தமிடுகின்ற மலைத் துளிகளின் சோ என்ற சத்தமும், அவ்வப்போது வீசுகின்ற குளிர் காற்று ஏற்படுத்திய பிரிவுத் துயரும் என்னை ஆழ்ந்த பொடுபோக்குத் துயிலிலிருந்து தற்காலிகமாகத் தட்டி எழுப்பிவிட்டன. உண்மையில் அப்போது நான் இன்னும் என்னை வயோதிபனாகப் பார்க்க ஆரம்பித்திருக்கவில்லை. என்றாலும் முதலாம் உலகப் போரைச் சந்தித்தவர்கள் அனைவரும் முதுமை அடைந்துவிட்டதாகவே கருதப்பட வேண்டும். அந்த நாட்கள், ஏதோ يَوْمًا يَجْعَلُ الْوِلْدَانَ شِيبًا என்ற வசனத்தின் தாத்பரியத்துக்கமைய, பிள்ளைகளைக் கூட முதியவர்களாக்கிவிடக் கூடிய ரகத்தைச் சேர்ந்ததாக இருந்ததால் நாற்பது வயதிலிருந்த நான் எண்பது வயதில் இருப்பதைப் போன்று உணர்ந்தேன். தனிமையில் கழிந்த இருள்மயமான நீண்ட நெடிய அந்த இராப் பொழுதுகளில் வாழ்க்கை தொடர்பாகவும் தாய்மண் தொடர்பாகவும் ஆழமான ஒரு நம்பிக்கையீனமும் சோர்வும் என்னுள் ஏற்பட்டது. எனது இயலாமையையும் தனிமையையும் நினைத்துப் பார்த்த போது எனது நம்பிக்கைகள் முற்றாக அறுந்து போயின. கவலைக்கிடமான அந்த நிலையில் இருக்கும் போது சர்வஞானம் பொதிந்த குர்ஆனிலிருந்து ஓர் உதவியைக் கண்டுகொண்டேன். அப்போது எனது நாவு حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ என்று கூறியது போன்றே எனது உள்ளமும் அழுதவாறு غَرٖيبَم۟ بٖى كَسَم۟ ضَعٖيفَم۟ نَاتُوَانَم۟ اَل۟اَمَان۟ گُويَم۟ عَفُو۟ جُويَم۟ مَدَد۟ خٰواهَم۟ زِدَر۟گَاهَت۟ اِلٰهٖى என்று கூறியது. ஆத்மாவும் கூட தாய் மண்ணில் இருக்கும் பழைய நட்புகளின் நினைவில் யாருமில்லாத அந்தத் தேசத்தில் தனிமையாக சந்திக்கப் போகும் மரணத்தை எண்ணியவாறு நியாஸி மிஸ்ரியைப் போன்று, உலக நெருக்கடிகளுக்குள் சுழியோடி, சூன்யத்தை நோக்கிச் சிறகடித்து, காலமெல்லாம் பேராசையோடு சுற்றித் திரிந்துவிட்டு தனிமையில் ஏங்கித் தவிக்கிறேன், நட்புகளின் தரிசனத்துக்காக! என்று கூறி நண்பர்களைத் தேடிக்கொண்டிருந்தது. எதுவானாலும்.. சோகமயமான, துக்ககரமான, பிரிவுத் துயரால் நிறைந்த அந்த இராப் பொழுதுகளில் எனது பரிதாபகரமான நிலையும் இயலாமையும் பலவீனமும் உண்மையில் இறை சந்நிதானத்தில் மிகப்பெரியதொரு பரிந்துரையாகவும் வஸீலாவாகவும் ஆகிவிட்டது. அதை நினைத்து இன்றும் கூட நான் ஆச்சரியப்படுகின்றேன். ஏனெனில் அதற்கு ஒரு சில நாட்களுக்குப் பின்னர், ரஷ்ய மொழி கூடத் தெரியாதிருந்த நான், மறக்க முடியாத ஓர் அமைப்பில், நடை பயணம் மூலம் கடப்பதாக இருந்தால் ஒரு வருடம் பயணிக்க வேண்டிய ஒரு தூரத்தை மிக இலகுவான அமைப்பில் தன்னந்தனியாகக் கடந்து அந்த சிறைச்சாலையிலிருந்து தப்பித்துக்கொண்டேன். உண்மையில் என்னிடமிருந்த இயலாமையினதும் பலவீனத்தினதும் காரணமாக வந்த ஓர் இறை உதவியைக்கொண்டே அவ்வாறு பிரமிக்கத்தக்க விதத்தில் தப்பிக்க முடியுமாக இருந்தது. பின்னர் அங்கிருந்து வார்ஷோவா நகரத்துக்குச் சென்று அங்கிருந்து ஆஸ்திரியா ஊடாக இஸ்தான்பூலை வந்தடைந்தேன். இந்த அளவு இலகுவாகத் தப்பித்தது உண்மையில் எனக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ரஷ்ய மொழி தெரிந்த மிக வலிமையான மிகுந்த லாவகமான மனிதர்களால் கூட முடியாத அந்த நீண்ட தூர விடுதலைப் பயணத்தை எத்தகைய சிரமங்களுமின்றி மிக இலகுவாக முடித்துக்கொண்டேன். ஆனால் அந்த வோல்கா நதிக்கரையிலுள்ள பள்ளிவாசலில் கழித்த நீண்ட நெடிய இரவு என் வாழ்வில் ஒரு தீர்மானத்தை ஏற்படுத்தியிருந்தது. எஞ்சிய வாழ்க்கையை எங்காவது மழைக் குகைகளில் கழிக்க வேண்டு என்பதே அந்தத் தீர்மானமாகும். இந்த மனிதர்களுடைய சமூக வாழ்வில் தலையிடுவது போதுமென்றாகிவிட்டிருந்தது. உண்மையில் இறுதியில் தனியாகவே மண்ணறைக்குச் செல்லப் போகிறேன். எனவே தனிமைக்குப் பழகிக்கொள்வதற்காக இப்போதிருந்தே தனிமையைத் தெரிவு செய்யத் தீர்மானித்திருந்தேன். ஆனால் துரதிஷ்டவசமாக இஸ்தான்பூலில் மிகுந்த ஈடுபாட்டோடிருந்த ஏராளமான தோழர்களும் இஸ்தான்பூலில் காணப்பட்ட பரபரப்பான உலக வாழ்க்கையும் குறிப்பாகத் தகுதியை விஞ்சி எனக்கு வழங்கப்பட்ட மதிப்பு மரியாதை என்ற எத்தகைய பெறுமதியுமற்ற சரக்குகளும் அந்தத் தீர்மானத்தைத் தற்காலிகமாக எனக்கு மறக்கடிக்கச் செய்துவிட்டன. உண்மையில் அந்தத் தனிமையான இரவு எனது வாழ்க்கையில் ஒளிமயமான ஒரு கரும்புள்ளியாக இருந்தது. மறுபுறம் இஸ்தான்பூலுடைய வெண்மையான பரபரப்பான பகல் பொழுதுகளோ எனது வாழ்க்கையின் ஒளியற்ற வெள்ளைப் பக்கங்களாக இருந்தன. எனவே எனது அந்த வாழ்க்கை மீண்டும் முன்னாலிருப்பதைக் காண முடியாத ஓர் உறக்கத்தில் என்னை ஆழ்த்தியது. இரண்டு வருடங்களுக்குப் பிறகு கௌஸுல் ஜைலானி, தனது ஃபுத்ஹுல் கய்ப் என்ற புத்தகத்தின் மூலம் மீண்டும் எனது கண்களைத் திறந்துவிடும் வரை அந்த உறக்கம் நீடித்தது. இதோ, முதுமைப் பருவத்தை அடைந்த சகோதர சகோதரிகளே அறிந்துகொள்ளுங்கள்! வயோதிபத்துடன் ஒட்டியுள்ள இயலாமையும் பலவீனமும் அல்லாஹ்வின் ரஹ்மத்தையும் ஈகையையும் உங்கள்பால் ஈர்த்துக்கொள்வதற்கான ஒரு வஸீலாவாகும். நான் எனது சொந்த வாழ்வில் கண்ட ஏராளமான நிகழ்வுகளுடன் கூடவே பூமிப்பந்தின் மீதுள்ள ரஹ்மத்தின் பிரதிபலிப்புகள் அனைத்தும் தெட்டத் தெளிவாக இந்த சத்தியத்துக்கு அத்தாட்சியாக இருக்கின்றன. உதாரணமாக ஜீவ இனங்களுக்கு மத்தியில் மிகுந்த இயலாமையோடும் பலவீனத்தோடும் இருப்பது குஞ்சிகளும் குட்டிகளுமாகும். அவ்வாறிருந்தும் ரஹ்மத்துடைய மிக அழகான, மிக சிரேஷ்டமான, மிக இதமான பிரதிபலிப்புகளுக்குப் பாத்திரமானவயாக அவையே காணப்படுகின்றன. ஒரு மரத்தின் உச்சியில் கட்டப்பட்ட கூட்டில் இயலாமையின் மொத்த உருவாக வாழ்வை ஆரம்பிக்கும் குஞ்சிகளை எடுத்துக்கொண்டால் அவை தமக்கு மிக விசுவாசமான ஒரு சேவகனாக ஆக்கப்படுள்ள தாய் ஊடாக ரஹ்மத்தின் மிக அழகிய பிரதிபலிப்புகளுக்குப் பாத்திரமாகிக்கொண்டிருக்கின்றன. அவற்றின் ஆகாரங்கள் தாய் மூலம் அவற்றின் காலடிக்கே வந்து சேரும். அந்தக் குஞ்சுகளின் இறக்கைகள் பலம்பெற்று இயலாமை அகன்றுவிடுகின்ற போது தமக்குரிய ஆகாரங்களைத் தேடிக்கொள்கின்ற பொறுப்பை அந்தத் தாய் அவற்றிடமே விட்டுவிடும். அதன் பின்னர் அந்தத் தாய் அந்தக் குஞ்சுகளுக்குச் செவிசாய்க்காது. இதோ, ரஹ்மத்தின் இந்தத் தாத்பரியம் குஞ்சு, குட்டிகளுடைய விடயத்தில் நிகழ்ந்தேறுவதைப் போன்று இயலாமை, பலவீனம் காரணமாக குழந்தைகளை ஒத்த நிலையில் இருக்கும் வயோதிபர்கள் விடயத்திலும் செல்லுபடியானதாகும். இந்த விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டுக்கு வரக்கூடிய அளவு போதுமான அனுபவங்களை நான் சந்தித்துள்ளேன். குழந்தைகளின் இயலாமை காரணமாக ரஹ்மத் கஜானாவிலிருந்து வருகின்ற அவர்களின் ஆகாரங்கள் ஆச்சரியப்படத்தக்க விதமாக பால் மடிகளூடாகப் பீறிடுகின்றன. அவ்வாறே, மாஸூமியத் நிலைக்கு உயர்ந்த ஈமானுள்ள வயோதிபர்களின் ஆகாரங்களும் பரக்கத்தான அமைப்பில் அனுப்பி வைக்கப்படுகின்றன. அத்தோடு ஒரு வீட்டின் வயோதிபர்கள் அந்த வீட்டின் பரக்கத் காரணியாக இருப்பதையும் அவர்கள் மூலம் அந்த வீடு முஸீபத்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றது என்பதையம் ஹதீஸ் ஷரீஃபின் ஒரு பகுதி தெளிவுபடுத்துகின்றது. وَلَوْلاَ الشُّيُوخُ الرُّكَّعُ لَصُبَّ عَلَيْكُمُ الْبَلاَءُ صَبّاً அதாவது, “கூன் விழுந்த வயோதிபர்கள் இல்லாதிருந்திருபின் முஸீபத்துக்கள் வெள்ளம் போன்று உங்கள் மீது பொழிந்திருக்கும்.” என்ற ஹதீஸின் செய்தி மேற்படி சத்தியத்தை உறுதிப்படுத்துகின்றது. ஆம், உண்மையில் முதுமையில் இருக்கும் இயலாமையும் பலவீனமும் இந்த அளவு இறை கருணையை தம்பால் ஈர்த்துக்கொள்வதற்கான ஒரு வஸீலாவாக இருக்கின்றன. அவ்வாறே, சங்கைமிக்க குர்ஆன் ஐந்து கோணங்களில் அற்புதமாகத் திகழும் اِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَا اَوْ كِلاَهُمَا فَلاَ تَقُلْ لَهُمَا اُفٍّ وَلاَ تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلاً كَرِيمًا * وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا என்ற வசனத்தின் மூலம் முதியவர்களான தாய் தந்தையர்களுக்கு கனிவோடும் அன்போடும் பணிவிடை செய்வதற்காக பிள்ளைகளுக்கு அழைப்பு விடுக்கின்றது. மாத்திரமன்றி இஸ்லாம் மார்க்கம் முதியவர்களுக்கு அன்பும் மரியாதையும் செலுத்துமாறு கட்டளை பிறப்பிக்கின்றது. அத்தோடு மனிதனுடைய இயல்பான தன்மையும் கூட முதியவர்களுக்கு அன்பும் மரியாதையும் செலுத்துவதை வேண்டி நிற்கின்றது. எனவே முதியவர்களாகிய நாங்கள் வாலிப மோகத்திலிருந்து பிறக்கும் தற்காலிக உடலியல் வேட்கைகளுக்குப் பகரமாக அல்லாஹ்வின் ரஹ்மத்திலிருந்தும் மனிதர்களின் மனிதாபிமானத்திலிருந்தும் வரும் அழகிய, உளப்பூர்வமான, நித்தியமான அன்பையும் மதிப்பையும் மரியாதையும் பெற்று அந்த ரஹ்மத்திலிருந்தும் மரியாதையிலிருந்தும் ஊற்றெடுக்கின்ற ஆத்மார்த்தமான இன்பங்களை அனுபவிக்கிறோம். எனவே நாங்கள் இந்த முதுமையை நூறு வாலிபப் பருவங்களுக்குப் பகரமாக மாற்றிக்கொள்வ்தும் கூட அறிவுடமையாகாது. ஆம், நான் உங்களிடம் உறுதியாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். “பழைய ஸஈதுடைய பத்து வருட வாலிபம் எனக்கு வழங்கப்பட்டாலும் அதற்குப் பகரமாக புதிய ஸஈதுடைய ஒரு வருட வயோதிபத்தையேனும் வழங்க நான் முன்வரமாட்டேன். நான் எனது முதுமையை உளப்பூர்வமாகப் பொருந்திக்கொண்டு விட்டேன். நீங்களும் பொருந்திக்கொள்ளுங்கள்.
ரஷ்யாவிலிருந்து தப்பி இஸ்தான்பூலை அடைந்த பின்னர் ஓரிரண்டு வருடங்கள் மீண்டும் என்னில் பொடுபோக்குத்தனம் மேலோங்கியிருந்தது. அரசியல் சூழல் எனது பார்வையை எனது நஃப்ஸுடைய சீர்திருத்தத்தைவிட்டும் தூரமாக்கி உலகத்தை நோக்கித் திருப்பியிருந்தது. அப்போது ஒரு நாள் இஸ்தான்பூலில் ஐயூப் ஸுல்தான் மையவாடியில் ஏரியைப் பார்க்கின்ற உயரமான ஓர் இடத்தில் அமர்ந்திருந்து இஸ்தான்பூல் நகரின் நிலவரங்களை அவதானித்துக்கொண்டிருந்தேன். அப்போது என்னை அறியாமலேயே எனது பிரத்தியேக உலகம் இடிந்து, எனது ரூஹ் பிரிந்துகொண்டிருப்பது போன்ற ஒரு தரிசனத்துக்குள் கற்பனா ரீதியாக சஞ்சரித்திருந்தேன். பின்னர் என்னை இவ்வாறான ஒரு கற்பனையில் சஞ்சரிக்க வைத்தது அந்த மையவாடியின் கல்லறைக் கற்களில் காணப்படுகின்ற ஏதேனும் வாசகமாக இருக்குமோ என்று, மையவாடியை நோக்கிப் பார்வையை உலாவவிட்டேன். அப்போது எனது உள்ளம் ஓர் உண்மையை நினைவுபடுத்தியது. “நீ அமர்ந்திருக்கும் இந்த மையவாடியினுள் நூறு இஸ்தான்பூல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. ஏனெனில் இஸ்தான்பூல் நகரம் தனக்கு மேல் நடமாடிக்கொண்டிருந்தவர்களை நூறு முறை முழுவதுமாக இந்த இடத்தில் காலியாக்கிவிட்டது. நூறு இஸ்தான்பூல் நிறைகின்ற அளவு மனிதர்களை இந்த இடத்தில் அடக்கம் செய்துவிட்ட சர்வ ஞானமிக்க வல்லோனுடைய தீர்ப்பிலிருந்து உன்னால் மாத்திரம் தப்பிச் செல்ல முடியாது.” இந்த சிந்தனையில் இருக்கும் போது, நான் மையவாடியிலிருந்து வெளியேறி ஸுல்தான் ஐயூப் பள்ளிவாசலின் மேல் மாடியில் வழமையாகச் செல்கின்ற சிறியதோர் அறைக்குள் நுழைந்தேன். அப்போதும் மையவாடியிலிருந்த சிந்தனையிலேயே இருந்ததால் இன்னுமோர் உண்மையும் அப்போது எனது நினைவில் உதித்தது. அதாவது, “நான் இப்போது மூன்ற வகையில் ஒரு விருந்தாளியாக இருக்கின்றேன். இந்த அறைக்குள் ஒரு விருந்தாளியாக இருப்பதைப் போன்றே இஸ்தான்பூலிலும் ஏன் உலகத்திலும் கூட ஒரு விருந்தாளியாகவே இருக்கின்றேன். விருந்தாளியாக இருக்கின்ற ஒருவன் தனது பாதையையே சிதிக்க வேண்டியவனாக இருக்கின்றான். சற்று நேரத்தின் பின் நான் இந்த அறையைவிட்டும் வெளியேறப் போவதைப் போன்று ஒரு நாள் இஸ்தான்பூலிலிருந்தும் இன்னுமொரு நாள் உலகத்திலிருந்தும் வெளியேறப்போகின்றேன். அவ்வாறெனில் உனது பாதையைப் பற்றி அலட்டிக்கொள்” என்ற சிந்தனை எனது சிந்தையை ஆக்கிரமித்தது. இந்த சிந்தனையில் இருக்கும் போது பிரிவை நினைவூட்டக்கூடிய மிகவும் கஷ்டகரமான, மிகவும் துக்ககரமான ஒரு சிந்தனை எனது தலையையும் உள்ளத்தையும் ஆட்கொண்டது. அதாவது வெறுமனே ஓரிரு தோழர்களையன்றி இஸ்தான்பூலில் எனது அதிக நேசத்துக்குரிய ஆயிரக்கணக்கான தோழர்களைவிட்டும் நான் மிகவுமே காதலிக்கின்ற இஸ்தான்பூல் நகரைவிட்டும் பிரிய வேண்டியிருந்தது. அவ்வாறே உலகம் முழுதும் சிதறியுள்ள இலட்சக்கணக்கான தோழர்களைவிட்டும் நான் நேசிக்கின்ற இந்த அழகிய உலகத்தைவிட்டும் பிரிய வேண்டியிருந்தது. இந்த சிந்தனைகளில் திளைத்தவாறு மீண்டும் அந்த மையவாடியின் உயரமான இடத்துக்குச் சென்றேன். நான் அவ்வப்போது படிப்பினைக்காக சினிமாவுக்குச் செல்வதால், அன்று இஸ்தான்பூலில் நடமாடிக்கொண்டிருந்த மனிதர்கள் எனக்கு சினிமாத் திரையில் நடமாடிக்கொண்டிருப்பதைப் போன்று காட்சியளித்தனர். அதாவது சினிமாத் திரை கடந்த காலத்தில் நிகழ்ந்து முடிந்தவற்றின் நிழல்களை நிகழ் காலத்துக்குக் கொண்டுவந்து, மரணித்தவர்களையும் கூட நடமாடிக்கொண்டிருப்பவர்களைப் போன்று காட்சிப்படுத்துகின்றது. அவ்வாறே நானும் அப்போது கண்ட மனிதர்களை, நடமாடிக்கொண்டிருக்கும் ஜனாஸாக்களைப் போன்று எண்ணிக்கொண்டேன். அதாவது “இந்த மையவாடியில் இருக்க வேண்டியவர்களே சினிமாவில் போன்று இப்போது நடமாடிகொண்டிருக்கின்றனர். அவர்கள் சில நாட்களின் பின்னர் நிச்சயமாக இந்த மண்ணறைக்கு வரத்தான் போகின்றார்கள் என்பதால் வந்து விட்டதைப் போன்று நினைத்துக்கொள்வோம். எனவே அவர்களும் ஜனாஸாக்கள்தான், ஆனால் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்” என்ற ரீதியில் எனது கற்பனை உலாவிக்கொண்டிருந்தது. அந்த சமயம் சங்கைமிக்க குர்ஆனின் ஒளியைக்கொண்டு கௌதுல் ஆஃஸம் ஷைய்க் ஜைலானி அவர்கள் வழிகாட்டினார்கள். அந்த கவலைக்கிடமான நிலைமை, மகிழ்ச்சிகரமான ஒரு நிலைமையாகப் பரிணாமமடைந்தது. அதாவது, அந்தக் கவலைக்கிடமான நிலைமையிலிருக்கும் போது குர்ஆனிலிருந்து கிடைத்த அந்த ஒளி பின்வருமாறு நினைவூட்டியது. வடக்குத் தேசத்தின் ஒரு கோடியில் உள்ள கொஸ்துர்மாவில் நீ தனிமையாக இருக்கும் போது ஒரு சில இராணுவக் கைதிகள் உனக்குத் தோழர்களாக இருந்தனர். அந்த ஒரு சில தோழர்களும் கூட நிச்சயமாக இஸ்தான்பூலுக்கு அனுப்பிவைக்கப்படப் போகிறார்கள் என்பதை அறிந்தே இருந்தாய். அப்போது உன்னிடம் “இஸ்தான்பூலுக்குச் செல்லப் போகிறாயா? அல்லது அந்த ஓரிரு நண்பர்களோடும் இங்கேயே தங்கிவிடப் போகிறாயா?” என்று ஒருவர் கேட்டால், நிச்சயமாக அணுவளவு அறிவிருந்தாலும் மகிழ்ச்சியோடும் புதுத் தெம்போடும் இஸ்தான்பூலுக்குச் செல்வதை ஏற்றுக்கொண்டிருப்பாய். ஏனெனில் உனது ஆயிரத்தி ஒரு தோழர்களுள் தொல்லாயிரத்தித் தொன்னூற்றி ஒன்பது பேர் இஸ்தான்பூலிலேயே இருக்கின்றனர். அங்கு ஓரிருவரே எஞ்சியிருந்தனர். அவர்களும் கூட இஸ்தான்பூலுக்கே வந்து சேர உள்ளனர். எனவே உன்னைப் பொருத்தவரை இஸ்தான்பூலுக்குப் பயனிப்பது துக்ககரமான ஒரு பிரிவோ சோகமயமான ஒரு முடிவோ அல்ல. உண்மையில் இஸ்தான்பூலுக்கு வந்து சேர்ந்ததை எண்ணி எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தாய்? எதிரிகளுடைய அந்தத் தேசத்தில் இருண்ட நீண்ட இராக் காலங்களைவிட்டும் கடும் குளிர் காற்றுடன் கூடிய பணிக்காலங்களைவிட்டும் பாதுகாப்புப் பெற்று -உலகின் சுவனப் பூங்கா போன்ற- இந்த அழகிய இஸ்தான்பூலுக்கு வந்து சேர்ந்தாய். இவ்வாறுதான் உனது சிறு பராயத்திலிருந்து இன்று வரை உனது நேசத்திற்குரியவர்களுல் தொண்ணூற்றொன்பது வீதமானவர்கள் நீ அச்சத்தோடு பார்க்கும் மண்ணறைக்குப் புலம் பெயர்ந்துவிட்டார்கள். இந்த உலகில் ஒரு சில தோழர்கள் மாத்திரமே எஞ்சியுள்ளனர். அவர்களும் கூட அங்கு தான் வந்து சேரப்போகிறார்கள். எனவே இந்த உலகத்தில் நீ சந்திக்கப் போகும் மரணம் ஒரு பிரிவல்ல. மாறாக ஒன்றிணைவதற்கான வாசலாகும். முன்சென்ற உனது நேசத்துக்குரியவர்களோடு சங்கமமாகுவதாகும். அங்கு சென்றவர்கள், அதாவது அவர்களுடைய நித்திய ஆத்மாக்கள் தமது பட்டடித்துப் போன இருப்பிடங்களான உடல்களை மண்ணுக்கடியில் விட்டுவிட்டு ஒரு பகுதியினர் நட்சத்திரங்களிலும் இன்னுமொரு பகுதியினர் ஆலமுல் பர்ஸஹிலும் அவரவருக்குறிய படித்தரங்களில் உலாவிக்கொண்டிருக்கின்றனர். ஆம், இந்த சத்தியத்தை குர்ஆனும் ஈமானும் மிகவும் ஆணித்தரமாக நிரூபித்து விட்டது. முற்று முழுதாக உள்ளத்தைப் பறிகொடுத்து, ஆத்மா மரணித்து, அறிவை வழிகேட்டில் மூழ்கடிக்காத மனிதன் கண்களால் காண்பதைப் போன்று இந்த சத்தியத்தை நம்புவது அவசியமாகும். ஏனெனில் இந்த உலகத்தை எண்ணற்ற அருட்கொடைகளைக்கொண்டு அணுப்பிசகாத நேர்த்தியோடு ஒழுங்குபடுத்தியதன் மூலம் தனது மகத்தான அன்பையும் ஆதரவையும் எல்லையற்ற ருபூபிய்யத்தையும் வெளிக்காட்டி, விதைகள் போன்ற மிகச் சாமான்யமான பொருட்களைக் கூட பாதுகாக்கின்ற அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய படைப்பாளன், தனது படைப்புக்களுக்கு மத்தியில் மிகப் பூரணத்துவத்துவமான மிக சிரேஷ்டமான மிக உள்ளடக்கமான மிக மகத்துவமிக்க தனது மிக நேசத்துக்குப் பாத்திரமான படைப்பாகிய மனிதனை, நிச்சயமாக சத்தியமாக ஏதோ எமது பார்வைக்குத் தென்படுவதைப் போன்று ஈவிரக்கமற்ற ஒரு முடிவுக்குள் தள்ளி அழித்தொழித்துவிட மாட்டான், சூன்யத்துக்குள் தொலைந்து போக அனுமதிக்க மாட்டான். மாறாக ஒரு விவசாயியால் மண்ணில் தவணைப் போடப்படுகின்ற விதைகளைப் போன்று நிகரற்ற அன்புடையோனாகிய அந்தப் படைப்பாளன் தனது மிக நேசத்துக்குரிய படைப்பை இன்னுமொரு வாழ்வில் தளிர்விடச் செய்வதற்காகத் தான் ஏற்பாடு செய்து கருணைத் தேசத்துக்குரிய கதவாக இருக்கின்ற மண்ணுக்குள் குறித்த ஒரு காலத்துக்குத் தவணைப் போட்டுவிடுகின்றான். ஆம், குர்ஆனுடய இந்த நினைவூட்டலை செவிமடுத்த பின்னர், அந்த மையவாடி இஸ்தான்பூலைவிட அதிகம் எனக்கு அந்நியோன்யமானதாக மாறியது. ஏகாந்தமும் தனிமையும் கலகலப்பான சபைகளைவிட எனக்கு இனிமையானதாக மாறியது. நானும் பொஸ்பரஸ் கால்வாயின் ஒரு மருங்கில் உள்ள சரியெர் பட்டணத்தில் ஒரு மடத்தை எனக்காக ஆக்கிக்கொண்டேன். கௌதுல் ஆஃஸம் (ரழி) அவர்கள் ஃபுதூஹுல் ஃகைப் மூலம் எனது உஸ்தாதாகவும் எனக்கான ஒரு வைத்தியராகவும் ஒரு வழிகாட்டியாகவும் ஆகியதைப் போன்று இமாம் ரப்பானி (ரழி) அவர்களும்கூட தனது மக்தூபாத்தின் மூலம் எனக்கு ஒரு நண்பராகவும் ஓர் ஆறுதலாகவும் ஓர் ஆசானாகவும் ஆகினார். அங்கிருந்த காலப்பகுதியில் முதுமைக்குள் காலடி எடுத்து வைத்திருந்தை எண்ணியும் நாகரிகத்துடைய இன்பங்களிலிருந்தும் பொது வாழ்விலிருந்தும் ஒதுங்கிக்கொண்டதை எண்ணியும் பேரானந்தம் அடைந்தேன். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். இதோ, என்னைப் போன்று முதுமைக்குள் காலடி எடுத்து வைத்து முதுமையின் நினைவால் மரணத்தை அதிகம் நினைவுகூர்கின்ற பெரியவர்களே! குர்ஆன் கற்றுத் தருகின்ற ஈமானியப் பாடங்களின் ஒளியைக்கொண்டு வயோதிபத்தையும் மரணத்தையும் நோய்களையும் நல்லதாகவே பார்க்க வேண்டும். ஏன் ஒரு வகையில் அவற்றை நேசிப்பவர்களாகவும் இருக்க வேண்டும். உண்மையில் ஈமான் போன்ற பெறுமதி வாய்ந்ததோர் அருட்கொடை எம்மிடம் இருக்கின்றது. எனவே எமக்கு முதுமையும் இனிப்பானதாகும். நோய் நொடிகளும் இனிப்பானதாகும். மரணமும்கூட இனிப்பானதாகும். கசக்கின்ற ஒரு விடயம் இருக்குமாக இருந்தால் அது பாவங்களும் பாதகங்களும் பித்அத்களும் வழிகேடுகளுமாகும்.
கைதியாக இருந்து தப்பி வந்த பின்னர் இஸ்தான்பூலில் ஷாம்லுஜா சிகரத்தின் உச்சியில் உள்ள ஒரு வில்லாவில் எனது சகோதரர் மகனான மர்ஹூம் அப்துர்ரஹ்மானுடன் வசித்து வந்தோம். இந்த வாழ்க்கையானது உலக வாழ்க்கை என்ற கோணத்தில் பார்த்தால் எம்மைப் போன்றவர்களுக்கு மிக்க மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்க்கையாக கணிக்கப்பட முடியுமாக இருந்தது. ஏனெனில் சிறை வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றிருந்தேன். தாருல் ஹிக்மத்தில் எனது அறிவுப் பணிக்குப் பொருத்தமான வேலைகளில் ஈடுபடுவதற்கும் அறிவைப் பரப்புகின்ற பணிகளில் ஈடுபடுவதற்கும் அவற்றில் அதி உச்ச மட்டத்தில் சாதிப்பதற்குமான அழகிய வாய்ப்பைப் பெற்றிருந்தேன். எனக்குக் கிடைத்துக்கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் கண்ணியமும் எனது தகுதியைவிடப் பல மடங்கு அதிகமாக இருந்தது. நான் தங்குகின்ற இடமும் கூட இஸ்தான்பூலிலுள்ள மிக அழகிய இடமாகிய ஷாம்லுஜாவாக இருந்தது. அனைத்தும் சம்பூரணமாக வாய்க்கப் பெற்றிருந்தேன். எனது சகோதரர் மகனான அப்துர்ரஹ்மானைப் போன்ற மிகவும் புத்திக் கூர்மையும் விவேகமும் தியாகமும் மிக்க ஒருவர் ஒரு மாணவனாகவும் சம நேரத்தில் ஒரு சேவகனாகவும் ஒரு எழுத்துனராகவும் ஓர் ஆன்மீக வாரிஸாகவும் என்னருகில் இருந்தார். உலகத்தில் அனைவரையும்விட மகிழ்ச்சியானவனாக என்னை எண்ணிக்கொண்டிருந்த அந்த சமயம் கண்ணாடியைப் பார்த்த போது எனது தலையிலும் தாடியிலும் நரைத்த முடிகளைக் கண்டேன். அப்போது கொஸ்துர்மா நகரில் கைதியாக இருந்த சந்தர்ப்பத்தில் பள்ளிவாசலில் நிகழ்ந்ததைப் போன்று எனது ஆத்மா மீண்டும் விளித்துக்கொண்டது. அதன் விளைவாக உள்ளார்ந்த ஒரு பற்றுடன் உலக வாழ்வின் நிம்மதியாக மதித்த அந்த நிலைமைகளையும் வசதிகளையும் ஒரு முறை மீள்பரிசீலனை செய்தேன். அப்போது அவை அனைத்தும் சாமான்யமான விடயங்களாகவும் ஈடுபாடு காட்டுகின்ற அளவு பெறுமதி அற்றவையாகவும் ஏமாற்றம் தரக்கூடியவையாகவும் இருப்பதைத் தெளிவாகக் கண்டேன். சரியாக அந்த நேரம் பார்த்து மிகவுமே விசுவாசமானவர் என்று நம்பியிருந்த ஒரு நண்பரிடம் நம்பவே முடியாதவிதத்தில் விசுவாசத்துக்கு முற்றிலும் முரணான ஒரு நடத்தையை, ஒரு மோசடியையும் கண்டேன். அப்போது உலக வாழ்க்கையின் மீது ஒரு வெறுப்பு ஏற்பட்டது. எனது உள்ளத்துக்குள் “நான் முற்று முழுதாக ஏமாற்றப்பட்டுவிட்டேனோ? உண்மையில் அழ வேண்டிய எனது நிலையை ஏராளமான மனிதர்கள் ஏக்கத்தோடு பார்கின்றார்களே! இந்த மனிதர்கள் அனைவருக்கும் புத்தி பேதலித்து விட்டதா? அல்லது எனக்குப் புத்தி பேதலித்துவிட்டதால் தான் உலகப் பித்தர்களான இவர்களை புத்தி பேதலித்தவர்களாகக் காண்கிறேனா?” என்றெல்லாம் அங்கலாய்த்தேன். எதுவாயினும்.. நான், முதுமை ஏற்படுத்திய விளிப்பின் அதிர்ச்சி காரணமாக, எல்லாவற்றுக்கும் முன்னர் முதலில் என்னோடு அதிகமாகத் தொடர்புபட்டிருந்த தற்காலிகமான விடயங்களின் தற்காலிகத் தன்மையைக் கண்டுகொண்டேன். என்னையே ஒரு முறை நோட்டமிட்ட போது எல்லையற்ற பலவீனனாக இருப்பதைக் கண்டுகொண்டேன். அப்போது, நித்தியத்தில் மாத்திரமே மன நிறைவடைகின்ற தன்மையை உடையதால், தற்காலிகமானவற்றை நித்தியமானவை என்று சித்திரித்துக்கொண்டு தற்காலிகமானவற்றின் மீது மோகம்கொண்டலையும் எனது ஆத்மா முழுப்பலத்தையும் திரட்டி “உண்மையில் எனது இந்த உடல் தற்காலிகமானதாகும். எனவே தற்காலிகமானவற்றிலிருந்து எனக்கு எந்த நலவுதான் வந்துவிடப் போகின்றது? மேலும் அந்த உடல் மிகப் பலவீனமானதாகும். அந்தப் பலவீனமானவற்றிடம் எனது நித்திய தேவைகளுக்காக எதைத்தான் எதிர்பார்க்க முடியும்? எனவே எனது நிர்கதிக்கு நிவாரணமளிப்பதற்கு ஆதி அந்தமில்லாத ஒரு நித்தியனால், ஒரு சர்வ வல்லோனால் மாத்திரமே முடியும்.” என்று கூறி அந்த இரட்சகனைத் தேட ஆரம்பித்தது. அந்த சமயம் ஆரம்ப முதலே கற்றுப் பருகிய அறிவிடம் விண்ணப்பித்து அவற்றிடமிருந்து ஓர் ஆறுதலையும் நம்பிக்கையையும் தேட முற்பட்டேன். துரதிஷ்டவசமாக அந்தக் கணம் வரை இஸ்லாமியக் கலைகளுடன் தத்துவவியல் கலைகளையும் பருகியிருந்ததால் அந்தத் தத்துவவியல் கலைகளை அபிவிருத்தியினதும் அறிவொளியினதும் அத்திவாரமாகக் கணித்து பெரியதொரு தவறில் வீழ்ந்திருந்தேன். ஆனால், உண்மையில் அந்த தத்துவவியல் சமாச்சாரங்கள் எனது ஆத்மாவை அதிகமாகக் கரைபடியச் செய்து எனது ஆத்மீக மேம்பாட்டுக்குப் பாரியதொரு தடையாக இருந்து வருவதைக் கண்ணுற்றேன். அப்போது சத்திய இரட்சகனுடைய பேரருளாலும் அன்பாலும் சர்வ ஞானமிக்க குர்ஆனுடைய புனிதமான ஞானம் எனது உதவிக்கு விரைந்தது. அந்தக் குர்ஆனிய ஞானமானது ரிஸாலே நூரின் பல்வேறு பகுதிகளில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போன்று அந்தத் தத்துவவியல் சமாச்சாரங்களின் அழுக்குகளை நீக்கி சுத்தப்படுத்தியது. மெய்ஞ்ஞான அறிவுகளுடன் ஒட்டியுள்ள ஆத்மார்த்தமான இருள்கள் எனது ஆத்மாவை வஸ்துகளுக்குள் மூழ்கடிக்கச் செய்துவிட்டதால் ஒளியைத் தேடி எந்தத் திசையை நோக்கினாலும் அங்கு ஒளியைக் காண முடியாமல் மூச்சுத் திணறியவனாகவே நின்றேன். இப்படியிருக்கும் போது சர்வ ஞானமிக்க குர்ஆனில் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற வசனத்திலிருந்து கற்றுக்கொண்ட தவ்ஹீதியப் பாடம் பிரகாசமான ஓர் ஒளியாக அந்த இருள்களையெல்லாம் அகற்றிவிட்டது. ஆழ்ந்ததொரு நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ஆனால் எனது நஃப்ஸும் ஷைத்தானும் வழிகேடர்களிடமும் தத்துவ ஞானிகளிடமும் கற்றுக்கொண்ட பாடங்களைக்கொண்டு எனது அறிவையும் ஆன்மாவையும் நோக்கித் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தன. இந்தத் தாக்குதலை எதிர்கொள்வதற்காக எனது ஆத்மா எனது நஃப்ஸோடு தொடுத்த விவாதப் போர் “லில்லாஹில்ஹம்த்” ஆத்மாவின் வெற்றியோடு நிறைவுற்றது. அந்த விவாதத்தின் பல பகுதிகளை பல்வேறு ரஸாயில்களில் எழுதியுள்ளேன். எனவே இந்த இடத்தில் எனது ஆத்மா வெற்றிபெற்ற வாதங்களில் நிரூபிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அத்தாட்சிகளுள் ஒன்றை மாத்திரம் இந்த இடத்தில் தெளிவுபடுத்துகிறேன். இதன் மூலம் வாலிபப் பருவத்தில் “மேற்கத்திய விஞ்ஞானம்” அல்லது “நாகரிகக் கல்வி” என்ற சுலோகங்களுக்குக் கீழ் ஒரு பகுதி வழிகேட்டையும் ஒரு பகுதி பொழுதுபோக்குகளையும் கற்றுவிட்டு, கறைபடிந்த ஆத்மாக்களோடும் நோய்வாய்ப்பட்ட உள்ளங்களோடும் வீங்கிப்போன நஃப்ஸுக்களோடும் நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு பகுதி வயோதிபர்களுடைய ஆத்மாக்கள் பரிசுத்தப்படுத்தப்படும் என்றும் தவ்ஹீதுடைய விடயங்களில் ஷைத்தானும் நஃப்ஸும் தீங்கிளைக்காமல் பாதுகாக்கின்ற ஒரு தடுப்பாக அமையும் என்றும் கருதுகிறேன். அதாவது, தத்துவவியல் அறிவுகளின் சார்பாகப் பேசிய எனது நஃப்ஸ் பின்வருமாறு கூறியது: இந்தப் பிரபஞ்சத்திலுள்ள காரணகாரியங்கள் இயற்கையாகவே இங்குள்ள வஸ்துக்கள் மீது செல்வாக்குச் செலுத்துகின்றன. அனைத்து விடயங்களும் ஏதோ ஒரு காரணத்தில் தங்கியுள்ளன. பழங்களை மரத்திலிருந்தும் விதைகளின் வளர்ச்சியை மண்ணிலிருந்துமே எதிர்பார்க்க வேண்டும். மிகவும் அற்பமான மிகவுமே சாமான்யமான ஒரு பொருளையும் கூட அல்லாஹ்விடமிருந்து எதிர்பார்த்து அவனிடம் கூனிக் குறுகிக் கேட்பதற்கு என்ன தேவைதான் இருக்கின்றது? இது அர்த்தமில்லாத ஒரு விடயமாகும். அப்போது, குர்ஆனிய ஒளியிலிருந்து தவ்ஹீதுடைய இரகசியம் பின்வருமாறு வெளிப்பட்டது. எனது உள்ளம், தத்துவ ஞானியாக மாறியிருந்த எனது நஃப்ஸிடம் கூறியது: “மிகப் பிரமாண்டமான ஒரு பொருளைப் போன்றே மிகச் சிறிய, மிக அற்பமான ஒரு பொருளும் கூட நேரடியாகவே மொத்தப் பிரபஞ்சத்தையும் படைத்துப் பரிபாளிக்கின்ற படைப்பாளனுடைய பேராற்றலிலிருந்தும் அவனது கஜானாக்களில் இருந்தும் மாத்திரமே வெளிப்பட முடியும். வேறு வழியிலும் சாத்தியமாவதற்கான எந்த வாய்ப்புமே இல்லை. காரணகாரியங்கள் வெறுமனே ஒரு திரையாகும். ஏனெனில் மிகச் சாமான்யமாக, மிக அற்பமாக நாம் கருதுகின்ற படைப்பினங்களை அவற்றில் காணப்படுகின்ற வடிவமைப்பு, நுண் கலைப்பாடுகளின் அடிப்படையில் பார்த்தால் அவை சில போது மிகப் பெரியதை விடப் பெரியதாக மாறிவிடுகின்றன. ஒரு நுளம்பு நுண் கலைப்பாடுகள் விடயத்தில் ஒரு கோழியை விஞ்ச முடியாவிட்டாலும் தாழவும் முடியாது. அவ்வாறெனில் சிறியது பெரியது என்று பாகுபடுத்திப் பார்க்க முடியாது. ஒன்றோ அனைத்தும் வெறும் சட ரீதியான காரணகாரியங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அல்லது அனைத்துமே ஒட்டுமொத்தமாகத் தனி ஒரு வல்லமையிடம் கையளிக்கப்பட வேண்டும். முதலாவது வாதம் சர்வ சாத்தியமற்ற ஒன்றாக இருப்பதைப் போன்றே, இரண்டாவது வாதத்தை ஏற்றுக்கொள்வது வாஜிபாகும்; கடமையாகும்; வலுக் கட்டாயமானதாகும். ஏனெனில் அனைத்தும் தனி ஒருவனிடம் அதாவது ஒரு நித்திய வல்லோனிடம் கையளிக்கப்பட்டால் மாத்திரமே இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற ஒழுங்கும் நேர்த்தியும் சாத்தியமாக முடியும். உண்மையில் அனைத்து வஸ்துகளிலும் பொதிந்துள்ள ஒழுங்கு, நேர்த்தி, மகத்தான ஞானம் என்பவற்றின் மூலம் அணுவளவேனும் சந்தேகத்திற்கிடமின்றி உறுதியாகிவிட்ட அவனது பேரறிவானது முழுப் பிரபஞ்சத்தையும் சூழ்ந்துள்ளது. அந்த அறிவின் மூலம் ஒவ்வொன்றுக்கும் அதற்கே உரிய அளவைகளை நிர்ணயம் செய்கிறான். மேலும் ஒவ்வொரு கணமும் எமது கண்களுக்கு முன்னால் எண்ணற்ற நுண்கலைப்பாடுகளைக்கொண்ட சிருஷ்டிகள் இல்லாமையிலிருந்து வெளிப்படுகின்றன. உண்மையில் பேரறிவுமிக்க அந்த சர்வ வல்லோன் ஒரு தீக்குச்சை உராய்ந்து நெருப்பெடுப்பதை விடவும் இலகுவாக “குன் ஃபயகூன்” என்ற கட்டளையின் மூலம் எந்த ஒன்றையும் சிருஷ்டிக்கக் கூடிய பேராற்றல் மிக்கவனாக இருக்கின்றான் என்பதற்கான எண்ணற்ற வலுவான அத்தாட்சிகள் எமது கண்களுக்கு முன்னாலேயே காணப்படுகின்றன. ரிஸாலே நூரின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக இருபதாவது கடிதத்திலும் இருபத்தி மூன்றாவது மின்னலின் இறுதிப் பகுதியிலும் நிறுவப்பட்ட இதற்கான அத்தாட்சிகளை விரும்பியவர்கள் பார்த்துக்கொள்ளலாம். எனவே எமது கண்களுக்கு முன்னால் மிகச் சுலபமாகவும் சர்வசாதாரணமாகவும் அரங்கேறிக்கொண்டிருக்கின்ற இந்த ஆக்கங்களும் ஆக்கச் செயற்பாடும் நிச்சயமாக அனைத்தையும் வியாபித்த அறிவுக்கும் மகா வல்லமைக்கும் சொந்தக்காரனான ஒருவனின் புறமிருந்து மாத்திரமே வெளிப்பட முடியும். உதாரணமாக, கண்ணுக்குப் புலப்படாத ஒரு வகை மையைக்கொண்டு எழுதப்பட்ட ஒரு புத்தகத்துக்கு, அந்த எழுத்துகளைப் புலப்படுத்தக்கூடிய தனித்துவமான ஒரு பதார்த்தம் பூசப்படும் போது அந்தப் புத்தகம் உடனடியாக அனைத்துக் கண்களாலும் வாசிக்க முடியுமான ஒரு புத்தகமாக மாறி மறைவாக இருந்த தனது இருப்பை வெளிக்காட்டுகின்றது. அவ்வாறே, பேராற்றல் மிக்க நித்திய இரட்சகனுடைய அனைத்தையும் வியாபித்த பேரறிவில், தனித்தனி ஒவ்வொரு வஸ்துக்களுக்குமான விஷேட தோற்றங்கள் நுணுக்கமான அளவைகளோடு நிர்ணயிக்கப்பட்டுவிட்டன. அதாவது அனைத்தும் அறிவியல் ரீதியான இருப்பைப் பெற்றுவிட்டன. அந்தப் பேராற்றல் மிக்க சர்வ வல்லோன் “குன் ஃபயகூன்” என்ற கட்டளை மூலமும் தனது எல்லையற்ற வல்லமை மூலமும் அனைத்தையும் ஊடறுத்துச் செல்லும் செல்வாக்குமிக்க அதிகாரத்தின் மூலமும் -அந்த எழுத்துக்களுக்கு மேல் பூசப்பட்ட பதார்த்தத்தைப் போன்று- தனது பேராற்றலின் ஒரு பிரதிபலிப்பாக இருக்கின்ற சக்தியை அந்த அறிவியல் ரீதியான இருப்பின் மீது பூசி அந்த வஸ்துக்கு மிக இலகுவாகவும் மிகச் சுலபமாகவும் வெளிப்படையான தோற்றத்தை வழங்குகின்றான்; கண்களால் பார்க்க முடியுமானதாக ஆக்கிவிடுகின்றான்; தனது வடிவமைப்பில் பொதிந்திருக்கின்ற மகத்தான ஞானங்களை வாசிக்கச் செய்கின்றான். மாற்றமாக எல்லா வஸ்துகளும் ஒட்டுமொத்தமாக அந்த நித்திய வல்லோனிடம், அனைத்தையும் அறிந்த பேரறிவாளனிடம் ஒப்படைக்கப்படாவிட்டால் அப்போது ஈயைப் போன்ற மிகச் சிறிய ஒரு வஸ்துடைய உடலை ஆக்குவது கூட சர்வ சாத்தியமற்ற ஒரு விடயமாக மாறிவிடும். ஏனெனில் அவ்வாறு ஆக்குவதாக இருந்தால் அதற்குத் தேவையான அத்தனை அம்சங்களையும் ஒன்றில் காரண காரணிகளோ அல்லது இயற்கையோ அல்லது தானாகவோ உலகின் நாலா புறங்களிலிருந்தும் மிக நுணுக்கமான அளவைகளைக்கொண்டு சேகரிப்பது அவசியப்படுகின்றது. மாத்திரமன்றி அந்தச் சிறிய ஈயின் உடலில் தொழிற்படுகின்ற அணுக்கள் அனைத்தும் அந்த ஈயின் படைப்பிலிருக்கின்ற இரகசியங்கள், அதன் உடலிலிருக்கின்ற அங்கசம்பூரணமான நுண் கலைப்பாடுகள் என்பவற்றை அனைத்து ஆல அகலங்களோடும் அறிந்திருப்பது அவசியப்படுகின்றது. ஏனெனில் இயற்கையாலும் சட ரீதியான காரணகாரியங்களாலும் இல்லாமையிலிருந்து எதையும் ஏன் ஓர் அணுவையும் கூட ஆக்க முடியாது என்பது புத்திக்கூர்மை உடைய அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏகமனதான முடிவாகும்; தெட்டத்தெளிவான நிலைப்பாடாகும். நிலைமை இதுவென்பதால் அப்படியே அவை சிருஷ்டிக்கின்றன என்று வைத்துக்கொண்டாலும் அவை அந்த சிருஷ்டிக்குத் தேவையான அனைத்தையும் வலுக்கட்டாயமாக சேகரித்தே ஆக வேண்டும். அப்படியே சேகரிக்கின்றன என்று வைத்துக்கொண்டாலும் நாம் பார்க்கின்ற எந்த ஒரு ஜீவராசியிலும் எல்லா வகயான கனியங்களும் கூறுகளும் காணப்படுகின்றன. உண்மையில் ஒவ்வொரு ஜீவராசியும் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு சாராம்சமாக அல்லது ஒரு விதையாக உள்ளது என்றும் கூற முடியும். எனவே நிச்சயமாக, ஒரு விதைக்குத் தேவையானவற்றை அதன் மரத்திலிருந்தும் ஒரு ஜீவராசிக்குத் தேவையானவற்றை மொத்த பூமிப்பரப்பிலிருந்தும் மெல்லிய சீவைகளைக்கொண்டு சீவி நுணுக்கமான அளவைகளைக்கொண்டு அளந்து சேகரித்தெடுப்பது அவசியப்படுகின்றது. மேலும், இயற்கையான காரணகாரியங்கள் ஜாஹிலானவையாகவும் சடங்களாகவுமே இருக்கின்றன. ஒரு திட்டத்தையோ மாதிரியையோ உள்ளடக்கத்தையோ சாராம்சத்தையோ வகுத்து அவற்றின் மூலக்கூறுகளான அணுக்களை ஒவ்வொன்றுக்குமுரிய உள்ளார்ந்த அச்சுகளில் வார்த்தெடுத்து, அவற்றில் சிதைவுகளோ ஒழுங்கீனங்களோ ஏற்பட்டுவிடாமல் நிர்மாணிப்பதற்கு அந்த இயற்கையான காரணகாரியங்கள் அறிவு ஞானம் அற்றவையாக இருக்கின்றன. நிலைமை இவ்வாறிருக்க நாம் வஸ்துக்களைக் கூர்ந்து பார்த்தால் ஒவ்வொரு வஸ்துக்கும் அதன் வடிவம், தோற்றம் என்பவற்றுக்கும் எண்ணற்ற அடையாளங்களையும் வடிவங்களையும் பெற முடியுமான சாத்தியப்பாடு இருக்கு போது, அந்த எண்ணற்ற வடிவங்களுக்கு மத்தியில் தீர்க்கமான ஒரு வடிவம் மாத்திரம் எத்தகைய அச்சுகள், அளவைகளின் துணையுமின்றி வெள்ளம் போன்று திக்குத் தெரியாமல் அள்ளுண்டு செல்லும் அணுக்களைக்கொண்டு வடிவமைக்கப்படுகின்றது. அத்துடன், திக்குத் தெரியாமல் அள்ளுண்டு செல்லும் அந்த அணுக்கள் எத்தகைய குளறுபடிகளோ சிதைவுகளோ இன்றி எத்தகைய அச்சுகளின் துணைகளுமின்றி கணகச்சிதமாக ஒன்றுக்கு மேல் ஒன்றாக அடுக்கப்படுவதன் மூலம் உயிரினங்களின் உடல்கள் வடிவமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இந்த மகத்தான நிகழ்வை எத்தகைய அறிவு ஞானமுமற்ற இயற்கையான காரணகாரியங்களிடம் ஒப்படைப்பது எந்த அளவு அறிவு ஞானத்துக்கு, ஏன் எதேச்சையான சாத்தியப்பாட்டுக்கும் கூட அப்பாற்பட்டது என்பது தெட்டத் தெளிவானதாகும். நிச்சயமாக உள்ளம் குருடாகாத எந்த ஒருவனும் இதனைக் கண்டுகொள்வான். ஆம், இந்த சத்தியத்தின் அடிப்படையிலும் இந்த சத்தியத்தை ஆணித்தரமாகப் பிரகடனம் செய்கின்ற اِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ என்ற உன்னதமான வசனத்தின் அடிப்படையிலும், சட ரீதியான அத்தனை காரணகாரியங்களும் கூட்டுச் சேர்ந்து அவை அனைத்திடமும் தெரிவுச் சுதந்திரம் காணப்பட்டாலும் அவற்றால் ஓர் ஈயின் உடலுக்கும் உறுப்புகளுக்கும் தேவையான பதார்த்தங்களையும் பிரத்தியேகமான அளவைகளில் சேகரிக்க முடியாது. அப்படியே சேகரித்தாலும் அந்த உடலுக்குத் தேவையான நுணுக்கமான அளவைகளைக்கொண்டு அந்த உடலை நிர்மாணிக்க முடியாது. அப்படியே நிர்மானித்ததாக வைத்துக்கொண்டாலும் தொடர்ந்தேர்ச்சையாக புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அந்த உடலுக்கு வந்து பணியாற்றுகின்ற அணுக்களை பரிபூரண ஒழுங்கோடு சீர்குழைவுகள் ஏற்பட்டு விடாமல் பணியாற்ற வைக்க முடியாது. எனவே, “சாமான்யமான காரணகாரியங்களால் எந்த ஒரு வஸ்துக்கும் உரிமை கோர முடியாது. அவற்றின் உண்மையான உறித்தாளன் வேறொருவனாக இருக்கின்றான்” என்ற பேருண்மையை எவ்விதத் தயக்கமுமின்றி அடித்துக் கூற முடியும். ஆம், அந்த உண்மையான உரித்தாளன் எத்தகையவனென்றால், அவன் مَا خَلْقُكُمْ وَلاَ بَعْثُكُمْ اِلاَّ كَنَفْسٍ وَاحِدَةٍ என்ற வசனத்தின் வாக்குப்படி பூமியின் மீதுள்ள ஒட்டுமொத்த உயிரினங்களையும் ஓர் ஈயைப் படைப்பதைப் போன்று இலகுவாகப் படைத்துவிடுவான். வசந்த காலத்தை ஒரு பூவைப் படைப்பதைப் போன்று சுலபமாகப் படைத்து விடுவான். ஒன்றைப் படைக்க நாடினால் அதற்குத் தேவையானவற்றை சேகரித்துக்கொண்டிருக்கின்ற அவசியம் அவனுக்குக் கிடையாது. “குன் ஃபயகூன்” என்ற கட்டளையின் சொந்தக்காரனாக அவன் இருப்பதால் ஒவ்வொரு வசந்த காலத்திலும் எண்ணற்ற வசந்தகால வஸ்துகளோடு கூடவே ஒவ்வொன்றுக்குமுரிய எண்ணற்ற பண்புகளையும் அடையாளங்களையும் நிலைமைகளையும் வடிவங்களையும் இல்லாமையிலிருந்தே தோற்றுவிக்கிறான். மாத்திரமன்றி அவனது அறிவில் ஒவ்வொரு வஸ்துக்குமுரிய திட்டமும் மாதிரியும் உள்ளடக்கமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாலும் பூரா அணுக்களும் அவனது அறிவுக்கும் ஆற்றலுக்கும் உற்பட்டவை என்பதாலும் ஒவ்வொரு வஸ்தையும் தீக்குச்சியை எரிப்பதைப் போன்று மிகச் சுலபமாகப் படைத்துவிடுகிறான். எந்த ஒரு பொருளும் தமது செயற்பாடுகளில் அணுவளவேனும் பிசகாது. உடுக்களும் கோல்களும் அவனுக்கு வழிப்படுகின்ற பெரும் படைகளுல் ஒன்றாக இருப்பதைப் போன்று அணுக்களும் கூட அவனது மிக நேர்த்தியான படையணிகளுள் ஒன்றாகும். இவ்வாறு அனைத்தும் அந்த நித்திய வல்லமையைச் சார்ந்தே இயங்குகின்றன. ஆதி அந்தமில்லாத அந்த அறிவு ஞானத்தின் விதிகளுக்கும் திட்டங்களுக்கும் உற்பட்டே காரியமாற்றுகின்றன. எனவே அந்த ஆக்கங்கள் அனைத்தும் அந்த மகா வல்லமையின் வெளிப்பாடாகவே மெய் நிலையை அடைகின்றன. மாறாக அற்பமான, முக்கியத்துவமற்ற வெற்றுச் சடங்களிடம் கையளிப்பதன் மூலம் அந்த ஆக்கங்களின் அந்தஸ்த்து அதலபாதாலத்துக்குத் தாழ்ந்து போக இடமளிக்க முடியாது. அந்த வல்லமையில் சார்ந்திருப்பதன் மூலம் கிடைக்கின்ற பலத்தைக்கொண்டு ஓர் ஈ நும்ரூதையே கொன்றுவிடும்; கரையான் பிர்அவ்னுடைய மாளிகையை நிர்மூலமாக்கிவிடும்; அணுவளவேயான தேவதாறு மரத்தின் விதை மழை போன்று பிரமாண்டமான தேவதாறு மரத்தின் சுமையை தனது தோளில் சுமக்கின்றது. இந்த சத்தியத்தை ரிஸாலே நூரின் பல்வேறு பகுதிகளில் நிறுவியுள்ளோம். ஓர் இராணுவ வீரன் தனது இராணுவப் பத்திரத்தின் மூலம் மன்னரில் சார்ந்திருப்பதால் கிடைக்கின்ற பலத்தைக்கொண்டு தனது சொந்தப் பலத்தை விட இலட்சம் மடங்கு பலமிக்க ஓர் ஆளுனரைக் கைது செய்வான். அவ்வாறே, ஒவ்வொரு வஸ்தும் அந்த நித்திய வல்லமையைச் சார்ந்திருப்பதன் மூலம் இயற்கையான காரிய காரியங்களைவிட ஓரிலட்சம் மடங்கு அதிகமான அற்புதமிக்க வடிவமைப்புக்களுக்குப் பாத்திரமாக அமைகின்றன. சுருக்கமாக எல்லா வஸ்துகளும் உன்னதமான நுண்கலைப்பாடுகளோடும் சுலபமாகவும் வெளிப்படுகின்றமை அந்த வஸ்துகள் அனைத்தையும் வியாபித்த அறிவு ஞானத்துக்குச் சொந்தக்காரனான ஒரு நித்திய வல்லோனின் சிருஷ்டிகளாகும் என்பதையே காட்டி நிற்கின்றன. இல்லாவிட்டால் இலட்சோபலட்சம் அசாத்தியப்பாடுகளுக்கு மத்தியில் வஸ்துகள் மெய் நிலையை அடைவது எப்படிப் போனாலும், சாத்தியப்பாட்டு எல்லைக்குள் இருப்பதும் கூட அதிலிருந்து நழுவி அசாத்தியப்பாட்டு வட்டத்துக்குள் நுழைந்துவிடும்; மெய்த் தன்மையை இழந்து சூன்யத் தன்மையைப் பெற்றுவிடும். மேலும் இந்த நிலையில் எந்த ஒரு வஸ்தும் மெய் நிலையை அடையாது, மெய் நிலையை அடைவதென்பது முற்றிலும் சாத்தியமற்ற ஒரு சமாச்சாரமாக ஆகிவிடும். ஆம், மிகவுமே நுட்பமான, பலமான, ஆழமான, தெளிவான இந்த அத்தாட்சியைத் தொடர்ந்து ஷைத்தானுடைய தற்காலிகமான ஒரு மாணவனாகவும் வழிகேடர்கள், தத்துவ ஞானிகளின் பிரதிநிதியாகவும் இருந்த எனது நஃப்ஸ் மௌனித்துப் போனது. “லில்லாஹில்ஹம்த்” முற்றாக ஈமான் கொண்ட எனது நஃப்ஸ் பின்வருமாறு கூறியது: ஆம், எனது ஆழ் மனதில் தோன்றி மறைகின்ற மிகச் சிறிய எண்ணங்கள், மிக இரகசியமான ஆசைகளை அறிந்தவனாகவும் எனது ஆத்மாவுடைய மிக மறைவான தேவைகளை நிறைவேற்றி வைப்பதைப் போன்று எனக்கு நித்திய நிம்மதியைத் தருவதற்காக இந்தப் பிரமாண்டமான உலகத்தை மறுமையைக்கொண்டு மாற்றீடு செய்து உலகத்தின் இடத்தில் மறுமையை நிர்மானிக்கும் சக்தி பெற்றவனாகவும் ஓர் ஈயைச் சிருஷ்டிப்பது போன்று சுலபமாக வானங்கள், பூமிகளை சிருஷ்டிக்கும் ஆற்றல் மிக்கவனாகவும் சூரியனை வான வெளியில் ஒரு கண்ணாகப் பதித்ததைப் போன்று ஓர் அணுவை எனது கண்மணியில் எந்தக் குறைபாடுகளுமின்றிப் பதிக்கின்ற ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்ற ஒருவனே என்னைப் படைத்துப் பரிபாலிக்கின்ற படைப்பாளனாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், ஓர் ஈயைச் சிருஷ்டிக்க முடியாதவனால் எனது உள்ளத்தில் தோன்றுகின்ற எண்ணங்களில் செல்வாக்குச் செலுத்தவோ எனது ஆத்மாவின் அலறல்களை செவிமடுக்கவோ முடியாது. வானங்களைப் படைக்க முடியாதவனால் நித்திய நிம்மதிக்கான மறுமை உலகைத் தயார்படுத்த முடியாது. அவ்வாறெனில் எனது ரப் எத்தகையவனென்றால் அவனே எனது உள்ளத்தில் தோன்றும் எண்ணங்களை சீர்படுத்தும் ஆற்றல் மிக்கவனாக இருக்கின்றான். மேலும், அவனே வெறுமனே ஒரு மணி நேரத்துக்குள் ஆகாய வெளியை மேகங்களைக்கொண்டு நிரப்பிவிட்டுக் காலியாக்குவதைப் போன்று உலகையும் மறுமையைக்கொண்டு மாற்றீடு செய்து, சுவனலோகத்தைப் படைத்து, அதன் கதவுகளை எனக்காகத் திறந்து, உள்ளே நுழைவதற்கான அனுமதியையும் தரக்கூடியவனாக இருக்கின்றான். ஆம், எனது பாக்கியமற்ற நஃப்ஸைப் போன்று வாழ்க்கையின் ஒரு பகுதியை ஒளியின் வாடையற்ற தத்துவவியல் சமாச்சாரங்களையும் மேற்கின் சடத்தைத் தாண்டாத விஞ்ஞானக் கல்விகளையும் கற்பதில் செலவழித்த வயோதிபச் சகோதரர்களே! குர்ஆன் தொடர்ந்தேர்ச்சையாகப் பிரகடனம் செய்கின்ற “லா இலாஹ இல்லாஹு” என்ற புனித வாக்கு பிரகடனம் செய்கின்ற ஈமானின் புனிதமான தூண் எந்த அளவு பலமானதும் உண்மையானதும் உறுதியானதுமாகும் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். அது எவ்வாறு ஆத்மார்த்தமான இருள்களை அகற்றி ஆத்மாவின் காயங்களுக்கு நிவாரணமளிக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். இந்த நீண்ட சமாச்சாரத்தை உண்மையில் எனது நாட்டத்தோடு நான் இந்த இடத்தில் எழுதவில்லை. இந்த இடத்தில் இதை எழுதுவதை விரும்பவுமில்லை, சிலவேளை சலிப்பை ஏற்படுத்தி விடலாம் என்பதால் விடயதானத்துக்கு வெளியே செல்வதற்குத் தயங்கியவனாகவே இருந்தேன். இந்த இடத்தில் இந்த விடயத்தை நிர்ப்பந்தமாக எழுத வைக்கப்பட்டேன் என்று கூறுவது பொருத்தமாகும். (எதுவாயினும், இப்போது எமது விடயத்துக்கு வருவோம்.) தலையிலும் தாடியிலுமிருந்த நரைத்த முடிகள் காரணமாகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரின் நம்பிக்கைத் துரோகம் காரணமாகவும் அந்த டாம்பீகமான, பார்வைக்கு இனிமையான, அலங்காரமான இஸ்தான்பூல் வாழ்க்கையின் மீது எனக்கு ஒரு வெறுப்பு ஏற்பட்டது. நஃப்ஸ், தன்னை ஆனந்தப்படுத்துகின்ற உலகியல் இன்பங்களுக்குப் பதிலாக ஆத்மீக இன்பங்களைத் தேட ஆரம்பித்தது. பொடுபோக்குக்காரர்களின் பார்வைக்கு வெறுப்பானதாகவும் கடினமானதாகவும் தோன்றுகின்ற முதுமையில் ஓர் ஆறுதலையும் ஓர் ஒளியையும் வேண்டியது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், அந்த சத்திய இரட்சகனுக்கு இலட்சோபலட்சம் நன்றிகள் உரித்தாகட்டுமாக! அந்த அசத்தியமான, இன்பங்களோ பலாபலன்களோ அற்ற உலகாயுத இன்பங்களுக்குப் பதிலாக சத்தியமான, இனிமையான, நித்தியமான ஈமானிய இன்பங்களை “லா இலாஹ இல்லல்லாஹு” என்ற புனித வாக்கினூடாக அதாவது தவ்ஹீதுடைய ஒளியிலிருந்து எனக்கு அருளினான். அவ்வாறே பொடுபோக்குக்காரர்களின் பார்வைக்கு வெறுப்பு மிக்கதாகவும் கடுமையானதாகவும் தோற்றமளிக்கின்ற வயோதிபத்தை அந்த தவ்ஹீதிய ஒளியின் மூலம் இலகுவானதாகவும் நேசத்துக்குரியதாகவும் ஒளிமயமானதாகவும் கண்டுகொண்டேன். வயோதிபத்தை அடைந்திருக்கும் சகோதர சகோதரிகளே! உண்மையில் நீங்கள் ஈமான் கொண்டவர்களாகவும் ஈமானின் பிரகாசத்தை அதிகரிக்கச் செய்கின்ற தொழுகை, பிரார்த்தனைகளைப் பேணி வருபவர்களாகவும் இருக்கின்ற காரணத்தினால் உங்கள் வயோதிபத்தை நித்தியமான ஒரு வாலிப் பருவத்தைப் போன்று உங்களுக்குப் பார்க்க முடியும். ஏனெனில் இவற்றைக்கொண்டு நித்தியமான ஒரு வாலிபத்தை உங்களால் வெற்றிகொள்ள முடியும். யதார்த்தத்தில் முதுமைகளுள் மிகவும் இருக்கமான, மிகவும் வெறுப்புக்குரிய, மிகவும் அவலட்சனமான, மிகவும் இருள்மயமான, மிகவும் வலி மிக்க முதுமையானது வழிகேடர்களுக்கு வரக்கூடிய வயோதிபமாகும். ஏன் அவர்களுடைய வாலிபப் பருவமும் கூட இப்படிப்பட்டதுதான். அவர்கள்தான் அழுது புலம்ப வேண்டியவர்களாகவும் கைசேதப்பட்டு விரக்தி அடைய வேண்டியவர்களாகவும் உள்ளார்கள். கண்ணியத்துக்குரிய ஈமானிய வயோதிபர்களே! நீங்கள் “அல்ஹம்துலில்லாஹி அலாகுல்லிஹால்” என்று கூறி மகிழ்ச்சியோடு நன்றி செலுத்துங்கள்.
ஒரு சமயம் இஸ்பார்த்தா நகரின் பார்லாப் பட்டினத்தில் நாடு கடத்தல் என்ற பெயரில் சித்திரவதைகளுக்கும் தொந்தரவுகளுக்கும் ஆளாகியிருந்தேன். அங்கு பிறரோடு கூடுவதும் கலந்துரையாடுவதும் தடுக்கப்பட்ட நிலையில் யாருமின்றி தன்னந்தனியாக இருந்த சமயம் என்னைப் பீடித்திருந்த நோயும் முதுமையும் என்னை இன்னுமின்னும் வாட்டி வதைத்துக்கொண்டிருந்தன. அப்போது, சத்திய இரட்சகன் அல்லாஹ்வின் பேரருளால் சங்கைமிக்க குர்ஆனின் இரகசியங்கள் தொடர்பான ஓர் ஒளியை எனக்கருளினான். அது எனக்குப் பேராருதலாக அமைந்தது. அந்த ஆருதலைக்கொண்டு எனது கவலைகள், துக்கங்கள், வலிகளை மறந்துவிட முயற்சித்துக்கொண்டிருந்தேன். அதன் மூலம் எனது தாய் மண்ணையும் உற்றார் உறவினர்களையும் மறந்து சுமுகமான ஒரு நிலைக்கு என்னால் வர முடிந்தாலும் எவ்வளவு முயற்சித்தும் ஒருவரை மாத்திரம் என்னால் மறந்துவிட முடியாதிருந்தது. அவர், எனது சகோதரர் மகனாகவும் எனது மாணவர்களுள் மிக அர்ப்பணம் மிக்கவராகவும் எனது தோழர்களுக்கு மத்தியில் மிகப் பலம் வாய்ந்தவராகவும் இருந்த மர்ஹூம் அப்துர்ரஹ்மான் ஆவார். அப்போதைக்கு ஆறேழு வருடங்களுக்கு முன்னர் நாமிருவரும் பிரிய நேரிட்டிருந்தோம். எனது உதவிக்காகவும் ஆறுதலுக்காகவும் வந்து சேர்வதற்கு அவர் எனது இடத்தை அறியாதவராக இருந்தார். அவரோடு தோடர்புகளை ஏற்படுத்திக்கொள்வதற்கு நானும் அவரது நிலைமைகளை அறியாதவனாக இருந்தேன். எனது இந்த முதுமைக் காலகட்டத்தில் உண்மையில் அப்படிப்பட்ட அர்ப்பணமும் விசுவாசமும்மிக்க ஒருவர் எனக்குத் தேவைப்பட்டார். பின்னர், திடீரென்று வந்த ஒருவர் என்னிடம் ஒரு கடிதத்தைக் கையளித்தார். கடிதத்தைத் திறந்தபோது அது அப்துர்ரஹ்மானிடமிருந்து வந்தது என்பதை அறிந்துகொண்டேன். உண்மையில் அந்தக் கடிதம் அப்துர்ரஹ்மான் யார் என்பதைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்தது. அந்தக் கடிதத்தின் ஒரு பகுதி இருபத்தி ஏழாவது கடிதத்தின் ஒரு பகுதியில் மூன்று தெளிவான கராமத்துக்களோடு தொடர்புபடுத்தி இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் எனக்குக் கடுமையான அழுகையை ஏற்படுத்தியது. மர்ஹூம் அப்துர்ரஹ்மான் அந்தக் கடிதத்தில் மிக உறுதியாகவும் உண்மையாகவும் உலகாயுத இன்பங்களை வெறுப்பதாகவும் தனது மிகப் பெரிய ஆசை எவ்வாறேனும் என்னிடம் வந்து அவர் சிறுவயதில் இருக்கும் போது நான் அவரைக் கவனித்ததைப் போன்று நான் முதுமையாக இருக்கின்ற இந்த நிலையில் எனக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்பதே என்றும் குறிப்பிட்டிருந்தார். அத்தோடு இந்த உலகில் குர்ஆனிய சத்தியங்களை எழுதுகின்ற எனது பணியில் தனது பலமிக்க பேனாவைக்கொண்டு எனக்கு ஒத்தசையாக இருக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும் அந்தக் கடிதத்தில், “நீங்கள் இது வரை எழுதிய இருபது முப்பது ரஸாஇல்களையும் எனக்கு அனுப்பி வையுங்கள், ஒவ்வொன்றிலும் இருபது முப்பது பிரதிகளை எழுதி அனுப்புகிறேன்.” என்றும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதம் எனக்கு உலக விவகாரங்களுக்கு முன்னால் பலமான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியது. மாமேதைகளைப் போன்ற புத்திக்கூர்மையும் விவேகமும் கொண்ட, சொந்தப் பிள்ளையைவிட விசுவாசத்தோடும் அர்ப்பணத்தோடும் எனக்குப் பணிவிடை செய்யக்கூடிய இப்படிப்பட்ட ஒரு மாணவனை மீண்டும் அடைந்துகொண்டதை எண்ணிப் பேராணந்தம் அடைந்தேன். அந்த மகிழ்ச்சியில் அந்தச் சித்திரவதைகளையும் நோவினைகளையும் தனிமையையையும் முதுமையையும் மறந்துவிட்டேன். உண்மையில் அந்தக் கடிதத்தை எழுத முன்னர் மறுமை நம்பிக்கை தொடர்பாக எழுதப்பட்ட பத்தாவது வார்த்தையின் ஒரு பிரதி அவரது கரங்களை எட்டியுள்ளது. அந்தப் பிரதி அவருக்கு ஒரு பெரும் நிவாரணியாக, அதாவது ஆறேழு வருடங்களாக ஏற்பட்ட அத்தனை ஆத்மார்த்த காயங்களுக்குமான நிவாரணியாக அமைந்துவிட்டது. அதன் பின்னரே மிகப் பிரகாசமான, மிகப் பலமான ஓர் ஈமானுடன் ஏதோ அஜலை எதிர்பார்த்திருப்பதைப் போன்று அந்தக் கடிதத்தை எனக்கு எழுதியுள்ளார். இவ்வாறு அப்துர்ரஹ்மானோடு இணைந்து எனது பணிகளைத் திருப்திகரமாக முன்னெடுத்துச் செல்லலாம் என்ற சந்தோசத்தில் இருக்கும் போது அந்தக் கடிதம் வந்து ஓரிரண்டு மாதங்களில் திடீரென்று அவரது மரணச் செய்தி என்னை எட்டியது. இந்தச் செய்தி எந்த அளவு என்னை ஆட்டம்காணச் செய்ததெனில் ஐந்து வருடங்களாக இன்றும் அதன் வலி சற்றேனும் என்னை விட்டகழவில்லை. அந்த செய்தி என்னை எட்டிய போது என்னை ஆட்கொண்டிருந்த சித்திரவதைகளும் தனிமையும் முதுமையும் நோய்நொடிகளும் இருந்ததைவிடப் பத்து மடங்கு அதிகமான வலியையும் துக்கத்தையும் எனக்குள் ஏற்படுத்தியது. மர்ஹூமாவாகிய எனது தாயின் வபாத்தோடு “எனது உலகத்தின் அரைவாசி மரணித்துவிட்டது” என்று கூறியவனாக இருந்தேன். அப்துர்ரஹ்மானுடைய வபாத்தோடு எஞ்சியிருந்த அரைவாசி உலகமும் கூட மரணித்துவிட்டதாக உணர்ந்தேன். உலகோடு எனக்கிருந்த அத்தனை பிணைப்புக்களும் அறுந்து போய்விட்டன. ஏனெனில் அவர் இந்த உலகில் இன்னும் வாழ்ந்திருந்தால் எனது மறுமைப் பணிகளுக்கான பலமானதொரு துணையாகவும் எனக்குப் பின்னர் எனது இடத்தை நிரப்பக்கூடிய மிகச் சிறந்த ஒரு வாரிஸாகவும் இந்த உலகத்தில் மிகுந்த அர்ப்பணத்துடன் எனக்கு ஒத்துழைப்பாகவும் ஆறுதலாகவும் இருக்கக்கூடிய ஒரு தோழனாகவும் இருந்திருப்பார். மாத்திரமல்ல, மிகவும் விவேகமான ஒரு மாணவனாகவும் ரிஸாலே நூரிலுள்ள பொக்கிஷங்களுக்கான மிகவும் நம்பகரமான ஒரு பாதுகாவலராகவும் இருந்திருப்பார். ஆம், மனிதன் என்ற வகையில் இப்படிப்பட்ட ஓர் இழப்பு என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். உண்மையில் வெளியில் தெரியாமல் தாங்கிக்கொள்வதற்கு முயற்சித்தேன். ஆனால் எனது ஆத்மாவில் கடுமையான கொந்தளிப்பு நிலை காணப்பட்டது. ஒரு வேளை அவ்வப்போது குர்ஆனிய ஒளியிலிருந்து வந்த ஆறுதல்கள் என்னை ஆசுவாசப்படுத்தியிருக்காவிட்டால் என்னைப் பொருத்தவரை அந்த நிலைமையைத் தாக்குப்பிடிப்பது சாத்தியமற்ற ஒன்றாகவே இருந்தது. தாங்க முடியாத அந்த சந்தர்ப்பங்களில் பார்லாவின் நீரோடைகளுக்கும் மலைச்சாரல்களுக்கும் சென்று நடமாடுபவனாக இருந்தேன். அமைதியான ஆளரவமில்லாத அந்த இடங்களில் அமர்ந்துகொண்டு கவலையில் ஆழ்ந்திருந்த சமயங்களில் ஆரம்ப காலங்களில் அப்துர்ரஹ்மான் போன்ற விசுவாசமான மாணவர்களுடன் கழித்த ஆணந்தமான வாழ்க்கைப் பொழுதுகள் சினிமாத் திரையில் காட்சியளிப்பதைப் போன்று எனது கற்பனையில் நிழலாடிக்கொண்டிருக்கும். கூடவே முதுமை, தனிமை என்பன காரணமாக புற நிகழ்வுகளால் விரைவாகப் பாதிப்புக்காளாகின்ற நிலையில் நான் இருந்ததால் அது என்னிடமிருந்த தாக்குப்பிடிக்கும் சக்தியையும் சிதைத்துக்கொண்டிருந்தது. இவ்வாறிருக்கும்போது كُلُّ شَيْءٍ هَالِكٌ اِلاَّ وَجْهَهُ لَهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُونَ என்ற புனித வசனத்தில் பொதிந்துள்ள பிரகாசமான சத்தியம் எனது உள்ளத்தில் உதித்தது. அப்போது எனது நாவு “யா பாகீ அன்தல் பாகீ! யா பாகீ அன்தல் பாகீ” என்று கூறியது. எனது உள்ளத்திலும் ஆத்மாவிலும் உண்மையான ஓர் அமைதியையும் ஆறுதலையும் கண்டுகொண்டேன். அந்த அமைதியான மழைச்சாரலின் கீழ் ஓடிய நீரோட்டத்தின் அருகில் கவலையோடு அமர்ந்திருந்த போது ஏலவே “சுன்னத்துடைய படித்தரங்கள்” என்ற நூலில் குறிப்பிட்டதைப் போன்று நான் மூன்று பெரிய ஜனாஸாக்களின் தலைமாட்டில் அமர்ந்திருப்பதைக் கண்டுகொண்டேன். முதலாவது: ஐம்பத்தைந்து வயதாகும் வரை ஐம்பத்தைந்து முறை மரணித்து எனது வாழ்க்கைக் காலத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்ட ஸஈதின் ஐம்பத்தைந்து உடல்களுடைய அடக்கஸ்தளங்களுக்கு மேலாலுள்ள மண்ணரைக் கல்லாக என்னைக் கண்டுகொண்டேன். இரண்டாவது: மனித குலத்தில் ஆதம் (அலை) அவர்களுடைய காலம் முதல் இன்று வரை தோன்றியவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இறந்தகாலம் என்ற கல்லறைக்குள் இருக்கின்ற பிரமாண்டமான ஜனாஸாவுடைய தலைமாட்டில் கல்லறைக்கல்லாக நடப்பட்டுள்ள இந்த யுகத்தின் முகப்பரப்பில் நடமாடிக்கொண்டிருக்கின்ற ஓர் எறும்பாக அல்லது ஒரு புள்ளியாக நான் என்னைக்கண்டுகொண்டேன். மூன்றாவது: மனிதர்களைப் போன்றே, இந்தப் பிரமாண்டமான உலகத்தின் மரணமும் கூட மேற்படி வசனத்துக்கமைய நிச்சயமானது என்பதால் அந்தப் பிரமான்டமான ஜனாஸாவும் அந்த சந்தர்ப்பத்தில் எனது கற்பனையில் நிழலாடியது. அப்துர்ரஹ்மானுடைய மரணத்தைத்தொடர்ந்து என்னுள் ஏற்பட்ட இந்தப் பயங்கரமான அனுபவத்தை முற்று முழுதாக ஒளியேற்றி உண்மையான ஆறுதலையும் அணையாத ஒளியையும் தந்த فَاِن۟ تَوَلَّو۟ا فَقُل۟ حَس۟بِىَ اللّٰهُ لَٓا اِلٰهَ اِلَّا هُوَ عَلَي۟هِ تَوَكَّل۟تُ وَهُوَ رَبُّ ال۟عَر۟شِ ال۟عَظٖيمِ என்ற மறை வசனம் தனது சாடையான அர்த்தத்தின் மூலம் எனது உதவிக்கு விரைந்தது. ஆம், இந்த வசனம் தெளிவாக “அல்லாஹ்வின் இருப்பு சத்தியமானதாகும். அவன் அனைத்துக்கும் போதுமானவனாக இருக்கின்றான். அவனது இருப்பைப் போன்றே அவனது நித்தியமும் சத்தியமானதாகும். அவ்வாறெனில் அதுவொன்றே போதுமானதாகும். அவனது ஈகையுடைய சிறிய ஒரு பிரதிபலிப்பு ஒட்டுமொத்த உலகுக்குமே பிரதியீடானதாகும்” என்ற பேருண்மையைப் பிரகடனம் செய்தது. அந்த சத்திய ஒளியின் ஒரு சிறிய பிரதிபலிப்பு மேற்கூறப்பட்ட மூன்று ஜனாஸாக்களுக்கும் ஆத்மார்த்தமாக உயிரளித்தது. உண்மையில் அவை ஜனாஸாக்கள் அல்ல என்பதையும் மாறாகத் தமது பணிகளை முடித்துவிட்டு வேறோர் உலகுக்குச் சென்றுள்ளன என்பதையும் தெளிவாகக் காட்டித் தந்தது. மூன்றாவது மின்னலில் இந்த இரகசியம் தெளிவாக நிறுவப்பட்டுள்ளதால் அத்துடன் போதுமாக்கிக்கொண்டு இந்த இடத்தில் சுருக்கமாக ஒரு விடயத்தை மாத்திரம் குறிப்பிடுகிறேன். كُلُّ شَيْءٍ هَالِكٌ اِلاَّ وَجْهَهُ என்று தொடரும் வசனத்துடைய அர்த்தத்தைப் பிரஸ்தாபிக்கின்ற “யா பாகீ அன்தல் பாகீ! யா பாகீ அன்தல் பாகீ!” என்ற இரண்டு அடிகளும் என்னை மிகவும் கவலைக்கிடமான, வேதனைமிக்க அந்த நிலைமையிலிருந்து பாதுகாத்தது. எவ்வாறெனில்: முதலாவது முறை “யா பாகீ, அன்தல் பாகீ!” என்று கூறினேன். அது, உலகத்தினதும் உலகத்தில் அப்துர்ரஹ்னாபைப் போன்று நான் தொடர்பு வைத்திருந்த எண்ணற்ற நேசத்திற்குறியவர்களினதும் பிரிவுத் துயரினால் உள்ளத்தில் ஏற்பட்ட அளவிட முடியாத ஆத்மார்த்தமான காயங்களுக்கு சத்திரசிகிச்சைக்கு ஒப்பான ஒரு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தது. இரண்டாவது முறை “யா பாகீ, அன்தல் பாகீ!” என்று கூறிய போது அது அந்த அளவிட முடியாத ஆத்மார்த்தமான காயங்களுக்கு ஓர் ஔடதமாகவும் மருந்தாகவும் அமைந்தது. அதாவது, “நீயே நித்தியமானவனாவாய். எனவே போகின்றவை போகட்டும். உனது இருப்பொன்றே எனக்குப் போதுமானது. நீயே சத்திய நித்தியனாவாய், பிரிந்து செல்கின்ற அனைத்துக்கும் பகரமாக உனது கருணையின் சிறியதொரு பிரதிபலிப்பே போதுமானதாகும். உண்மையில் நீ இருக்கின்றாய். அவ்வாறெனில் ஈமான் மூலம் தன்னை உன்னோடு பிணைத்து, இஸ்லாத்தின் மூலம் அந்தப் பிணைப்பின் வேண்டலுக்கமைய செயற்படுபவனுக்கு அனைத்துமே இருக்கின்றது. அப்போது மரணமும் அழிவும் இல்லாமையும் சூன்யமும் வெறுமனே ஒரு திரையாகவும் ஒரு புதுப்பித்தல் செயற்பாடாகவும் வெவ்வேறு இருப்பிடங்களுக்கான பயணமாகவுமே இருக்கும் என்பதை சிந்தித்த போது கவலையும் வேதனையும் துக்கமும் நிறைந்த பயங்கரமான அந்த நிலைமை மகிழ்ச்சியும் இன்பமும் ஒளியும் தருகின்ற அந்நியோன்னியமான ஒரு நிலைமையாக நிலை மாற்றமடைந்தது. எனது உள்ளத்தோடும் நாவோடும் இணைந்து எனது உடலிலிருக்கின்ற அத்தனை அணுக்களும் தத்தமது மெய்ம்மொழிகளால் ஒரே குரலில் “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறின. ஆம், அல்லாஹ்வுடைய கருணையின் அரவணைப்பிற்கான ஆயிரம் உதாரணங்களுள் ஒன்றை அப்போது கண்டுகொண்டேன். நான் கவலையோடு நாட்களைக் கழித்துக்கொண்டிருந்த அந்த மழைச்சாரலிலிருந்து பார்லாப் பட்டிணத்துக்குத் திரும்பினேன். அப்போது அங்கு குலேஒனு என்ற கிராமத்திலிருந்து முஸ்தபா என்ற பெயரை உடைய ஒரு வாலிபர் தொழுகை, வுழூ, அன்றாட ஆதாபுகள் என்பவற்றோடு தொடர்பான சில கேள்விகளைக் கேட்பதற்காக எனது இடத்திற்கு வந்திருந்தார். அந்த நாட்களில் நான் யாரையும் சந்திக்காமல் தனிமையாகவே இருந்த போதிலும் அவரது உள்ளத்திலிருந்த இஹ்லாஸையும் எதிர்காலத்தில் தனது வாழ்க்கையை ரிஸாலே நூருடைய பணிக்காக அர்ப்பணிக்கப் போவதையும் ஓர் உள்ளுணர்வின் மூலம் புரிந்துகொண்டேன். எனவே அந்த வாலிபனை ஏற்றுக்கொண்டேன். பின்னர், ரிஸாலே நூர் பணியில் எனக்குப் பிறகு சிறந்த ஒரு வாரிஸாக எனது பணிகளை உண்மையாகவும் முழுமையாகவும் நிறைவேற்றத் தகுதியடையவராக இருந்த அப்துர்ரஹ்மானுடைய இடத்தை நிறப்புவதற்கு முஸ்தபாவை ஓர் உதாரணமாக அல்லாஹ் என்னிடம் அனுப்பி வைத்தான் என்பது தெளிவாகியது. முஸ்தபாவுடைய நிகழ்வுகள் ஏதோ “நான் உன்னிடமிருந்து ஓர் அப்துர்ரஹ்மானை எடுத்துக்கொண்டேன். அதற்குப் பகரமாக இதோ உனது கண் முன்னால் இருக்கின்ற முஸ்தபாவைப் போன்று இந்த தீனுடைய பணியில் உனது மாணவர்களாகவும் சம நேரத்தில் சகோதரர்களாகவும் சகோதரன் மகன்களாகவும் ஆத்மீக வாரிசுகளாகவும், அர்ப்பணமிக்க தோழர்களாகவும் இருக்கக்கூடிய முப்பது அப்துர்ரஹ்மான்களை தந்தருளப் போகிறேன்” என்று கூறுவது போன்றிருந்தது. ஆம், “அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்” முப்பது அப்துர்ரஹ்மான்களை எனக்காகத் தந்தருளினான். அப்போது “அழுது புலம்பும் எனது உள்ளமே! இப்போது உனக்கு முன்னால் ஒரு மாதிரியையே காண்கிறாய். முஸ்தபா ஒரு உதாரணம் மாத்திரமே. முஸ்தபா மூலம் உன்னில் ஏற்பட்ட ஆழந்த ஆத்மார்த்தமான காயத்துக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொண்டாய். எனவே உனக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஏனைய எல்லாக் காயங்களையும் அவன் தேற்றி வைப்பான் என்ற நம்பிக்கையை உன்னில் ஏற்படுத்திக்கொள்” என்று எனது உள்ளத்தைப் பார்த்துக் கூறினேன். இதோ, என்னைப் போன்று முதிய வயதில் மிகவுமே நேசத்துக்குரிய மகனை அல்லது ஓர் உறவை இழந்து தவிக்கும் மூத்த சகோதர சகோதரிகளே! நீங்கள் ஏற்கனவே சுமக்கின்ற முதுமையின் சுமையோடு அந்தப் பிரிவு ஏற்படுத்திய கடுமையான தாக்கம் உங்களை இன்னும் வாட்டி வதைக்கின்றது என்பது உண்மைதான். எனது நிலைமையையும் படித்தீர்கள். அநேகமாக உங்கள் நிலையைவிட கடுமையானது என்பதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். அந்த நிலையிலும் கூட இவ்வாறான ஒரு மறை வசனம் எனக்கு சிகிச்சை அளித்து பூரண நிவாரணத்தைத் தந்தது. சங்கைமிக்க குர்ஆனின் விசாலமான மருந்தகத்திலிருந்து உங்கள் நிர்க்கதிகளுக்கு நிவாரணியாக அமையக் கூடிய மருந்துகள் நிச்சயமாக இருக்கின்றன. ஈமானோடு அவற்றை நாடி இபாதத்தோடு அவற்றை உட்கொள்வீர்கள் என்றால் நீங்கள் சுமக்கின்ற முதுமை, கவலைகளின் சுமைகள் நிச்சயமாக இலகுவானவையாக மாறிவிடும். இந்தப் பகுதியை சற்று நீளமாக அமைத்துக்கொண்டதற்கான காரணம், மர்ஹூம் அப்துர்ரஹ்மானுக்கு அதிகமாக துஆவைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையாகும். இது உங்களை அழுப்புத்தட்டச் செய்து விடாதிருக்கட்டுமாக. அத்துடன் சில வேளை உங்களையும் ஆழமாகப் பாதிக்கக் கூடிய எனது வெறுப்பூட்டக்கூடிய பயங்கரமான காயங்களையும் வலிகளையும் பொருத்தமற்ற முறையில் துக்ககரமாக உங்களுக்கு முன்னால் சமர்ப்பித்ததன் நோக்கம் சங்கைமிக்க குர்ஆனுடைய சஞ்சீவிகள் எந்த அளவு அற்புதமான நிவாரணிகளாகும் என்பதையும் எந்த அளவு பிரகாசமான ஒளிகளாகும் என்பதையும் எடுத்துக் காட்டுவதாகும்.
இந்த நம்பிக்கையில் எனது வாழ்க்கைப் பாதையில் கடந்து வந்த முக்கியமான ஒரு நிகழ்வைப் பற்றிக் கூறப்போவதால் ஒரளவு நீளமாக அமையலாம். நீங்கள் அலுப்புத்தட்டிவிடாதிருக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக்கொள்கிறேன். முதலாம் உலகப் போரின் பின்னர் ரஷ்யர்களிடம் கைதியாக இருந்து தப்பித்து வந்த பின்னர், இஸ்தான்பூலில் “தாருல் ஹிக்மத்தில்” செய்ய வேண்டியிருந்த மார்க்கப் பணிகள் காரணமாக இரண்டு மூன்று வருடங்கள் இஸ்தான்பூலிலேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பின்னர் சங்கைமிக்க குர்ஆனின் வழிகாட்டலுக்கமைவாகவும் கௌதுல் ஆஃஸம் அவர்களுடைய உதவியோடும் வயோதிபம் காரணமாக ஏற்பட்ட விளிப்புக் காரணமாகவும் இஸ்தான்பூலில் அனுபவித்து வந்த நாகரீக வாழ்க்கை மீது ஓர் அழுப்பும் இஸ்தான்பூலுடைய பரபரப்பான சமூக வாழ்க்கை மீது ஒரு வெறுப்பும் ஏற்பட்டது. தாய் மண் மீதான நேசமும் அதனால் ஏற்பட்ட ஓர் உள்ளுணர்வும் தாய் மண்ணை நோக்கி என்னை அழைத்தது. மரணம் நெருங்குகிறது, மரணிப்பதாக இருந்தால் தாய் மண்ணிலேயே மரணிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் “வான்” நகருக்கு வந்தேன். வான் நகருக்கு வந்ததும் வராததுமாக முன்னர் நானே முன்நின்று நடாத்திவந்த “ஹோர்ஹோர்” மத்ரஸாவைத் தரிசிப்பதற்காகச் சென்றேன். அப்போது அந்த வட்டாரத்திலிருந்த எல்லா வீடுகளும் ரஷ்யப் படையெடுப்பின் போது ஆர்மேனியர்களால் எரிக்கப்பட்டிருந்ததைக் கண்டேன். அந்த மத்ரஸாவும் எரிந்துபோய்க் காணப்பட்டது. பிரபலமான வான் கோட்டை அமைந்திருந்த இடம் மலை போன்ற பிரமாண்டமான ஒரு பாரையாகும். எனது மத்ரஸா சரியாக அந்தக் கோட்டையின் அடிப்பகுதியில் கோட்டையோடு ஒட்டியதாக அமைந்திருந்தது. ஆறேழு வருடங்களுக்கு முன்னர் அந்த மத்ரஸாவைத் துறக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட போது முள்ளும் சதையும் போன்று உண்மையான தோழர்களாகவும் சகோதரர்களாகவும் மாறியிருந்த அந்த மத்ரஸா மாணவர்களுடைய நினைவுகள் எனது கண் முன் நிழலாடியது. தியாகச் செம்மல்களான அந்த மாணவர்களுள் பெரும் பகுதியினர் யுத்தத்தின் போது ஷஹீதாகியிருந்தனர். எஞ்சியவர்களும் அந்த யுத்தத்தின் போது ஏற்பட்ட முஸீபத்துகள் காரணமாக ஆத்மார்த்தமான ஷஹீதுகளாக மரணித்துவிட்டனர். இந்த நினைவுகளோடு அந்தக் காட்சிகளைப் பார்க்கும் போது எனது கண்களிலிருந்து நீர் சொட்டுவதை என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. பின்னர் அந்தக் கோட்டைக்கு ஏறி எனது மத்ரஸாவுக்கு சரி உச்சியில் இரண்டு மினாராக்கள் அளவு உயரமான ஓர் இடத்தில் அமர்ந்துகொண்டேன். அந்த இடத்திலிருந்து பார்த்தால் மத்ரஸா தெளிவாகத் தென்படும் விதமாக இருந்தது. அப்போது எனது கற்பனைகள் ஏழெட்டு வருடங்களுக்கு முற்பட்ட காலத்துக்கு என்னை அழைத்துச் சென்றது. எனது கற்பனை ஆற்றல் பலமாக இருந்ததால் அந்தக் காலத்தில் என்னை வெகுவாகவே சஞ்சரிக்கச் செய்துவிட்டது. எனக்கு இடையூறை ஏற்படுத்தி, அந்தக் கற்பனைச் சஞ்சாரத்திலிருந்து திசை திருப்புவதற்கு அங்கு வேறு யாரும் இருக்காததால் என்னை அறியாமலேயே நீண்ட நேரம் அந்த சஞ்சாரத்தில் கழிந்தது. அது வெறும் ஏழு எட்டு வருடங்களாக இருந்தாலும் கற்பனை ஆழமாகச் செல்லும் போது ஏதோ ஒரு யுகம் கடந்துவிட்டதைப் போன்ற மாற்றங்கள் அங்கு அரங்கேறியிருப்பதைக் காண முடிந்தது. கோட்டையொடு கீழ்ப்பகுதியில் எனது மத்ரஸா அமைந்திருந்த குடியேற்றம் முற்று முழுதாக எறிக்கப்பட்டு சாம்பல் மேடாகக் காட்சியளித்தது. இறுதியாகப் பார்க்கும் போது இருந்த நிலைமைக்கும் அன்றைய நிலைமைக்கும் இடையில் ஏதோ இருநூறு வருடங்கள் கடந்துவிட்டதைப் போன்று அந்தப் பட்டிணம் காட்சியளித்தது. அந்தக் கணம் பொங்கியெழுந்த கவலைகளாலும் உணர்வலைகளாலும் ஸ்தம்பித்துப் போனேன். அந்தப் பட்டிணத்தில் வாழ்ந்த அதிகமானவர்கள் என்னோடு நண்பர்களாக இருந்தனர். அதில் பெரும்பாலானவர்கள் –அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக- புலம்பெயரும் போது மரணித்துவிட்டார்கள். எஞ்சிய சிலரும் தாய் மண்ணைத் துறந்ததால் பேரவலங்களோடு வாழ்க்கையைக் கடத்திக்கொண்டிருந்தனர். மாத்திரமல்ல, ஆர்மேனியர்கள் வாழ்ந்த பட்டிணத்தைத் தவிர வான் நகரத்திலுள்ள ஏனைய எல்லா முஸ்லிம் குடியிருப்புகளும் சின்னாபின்னமாக்கப்பட்டிருந்தன. இந்த சோகக் காட்சி எந்த அளவு என்னைப் பாதித்ததெனில் அப்போது ஏற்பட்ட உணர்வலைகளையும் உளக்கிடக்கைகளையும் கொட்டித் தீர்த்து அழுவதற்கு ஆயிரம் கண்கள் இருந்தாலும் போதுமாக இருந்திருக்காது. தாய் மண்ணைத் துறந்ததால் ஏற்பட்ட தனிமையில் வாடிக்கொண்டிருந்த நான், தாய் மண்ணுக்குத் திரும்பும் போது தனிமையும் நீங்கிவிடும் என்று நினைத்திருந்தேன். துரதிஷ்டம்! மிகப் பயங்கரமான தனிமை தாய் மண்ணிலேயே எனக்காகக் காத்திருந்தது. ஏலவே குறிப்பிட்ட அப்துர்ரஹ்மானைப் போன்று எனது ஆத்மாவோடு இரண்டறக் கலந்துவிட்ட நூற்றுக்கணக்கான எனது மாணவர்களும் தோழர்களும் மண்ணோடு சங்கமித்திருந்தனர். அவர்களின் இருப்பிடங்கள் அழித்து நாசம் செய்யப்பட்டிருந்தன. அப்போது சிறு வயது முதலே எனது நினைவில் பதிந்திருந்த பின்வரும் கவி வரிகள் மீண்டும் நினைவுக்கு வந்தது. لَو۟لَا مُفَارَقَةُ ال۟اَح۟بَابِ مَا وَجَدَت۟ لَهَا ال۟مَنَايَا اِلٰى اَر۟وَاحِنَا سُبُلًا அதாவது “பிரிவு நேசர்களை அழைத்துச் செல்லாதிருந்திருப்பின் மரணம் அழைத்துச் செல்வதற்காக ஆத்மாக்களின் இடத்தைக் கண்டுபிடித்திருக்காது.” இந்தக் கவி வரிகளின் முழுமையான அர்த்தத்தை அந்த நாள் வரை புரிந்துகொள்ள முடியாதவனாகவே இருந்தேன். ஆம், மிக அதிகமாக மனிதர்களை மரணிக்கச் செய்வது நேசர்களைப் பிரிவதாகும். என்னை எதுவும் அந்த அளவு உருக்குழைக்கவோ அழவைக்கவோ இல்லை. குர்ஆனும் ஈமானும் உதவிக்காக இல்லாதிருந்திருப்பின் அந்தத் துக்கமும் அவலமும் நிர்க்கதியும் எனது நெஞ்சைப் பிளக்க வைத்திருக்கும். ஆரம்ப காலம் தொட்டே கவிஞர்கள் தமது நேசர்களோடு அளவளாவிய இடங்கள் காலவோட்டத்தில் பாலடைந்து போனதையிட்டுத் தமது கவிதைகளில் அழுது புலம்புவதைக் கண்டுள்ளேன். நான் சந்தித்ததோ மிகக் கடுமையாகப் பிரிவின் வலியை உணரச் செய்வதாக இருந்தது. இருநூறு வருடங்களுக்குப் பிறகு மிகவும் நேசத்துக்குரியவர்கள் வாழ்ந்த இடத்துக்குச் செல்லும் ஒரு மனிதனுடைய மனதைச் சுமந்தவனாக நான் இருந்தேன். எனது உள்ளமும் ஆத்மாவும் கண்களோடு சேர்ந்து அழுதுகொண்டிருந்தன. கண் முன்னால் சிதைந்து சின்னாபின்னமாகிக் காட்சியளித்த அந்தப் பட்டிணத்தில் ஏழு வருடங்களுக்கு முன்னர் கம்பீரமாக வீற்றிருந்த கட்டிடங்களும் அவற்றுக்கு மத்தியில் மகிழ்ச்சியும் சந்தோசமும் களைகட்டி, எப்போதுமே கலகலப்பாக இருந்த வீதிகளும் நான் அங்கு கழித்த இருபது வருட வாழ்க்கையும் ஏரத்தாழ இருபது வருடங்கள் ஓர் ஆசானாக எனது மாணவர்களோடு கழித்த அந்த இனிய பொழுதுகளின் நினைவுகளும் ஒவ்வொன்றாக கண்களுக்கு முன்னால் வந்து மறைந்துகொண்டிருந்தன. அவை சினிமாத் திரையில் காட்சிகள் மாறுவதைப் போல் எனது கண்களுக்கு முன்னால் வந்து மரணித்துச் செல்வதைப் போல் விலகிச் சென்றன. அந்த நிலையில் உலகாயுத வாதிகளின் நிலைகளை எண்ணிப் பேராச்சரியம் அடைந்தேன். “எவ்வாறு இவர்களால் இந்த அளவு தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள முடிகின்றது?” என்று அதிர்ச்சியடைந்தேன். அந்த நிலைமை உலகமும் அதிலுள்ள அனைத்தும் முற்றிலும் தற்காலிகமானது என்பதையும் மனிதர்கள் அங்கு விருந்தாளிகளாகவே இருக்கின்றனர் என்பதையும் தெட்டத் தெளிவாகக் காட்டியது. சத்தியவான்கள் உலகம் கொடுமையானதாகும்; ஏமாற்றாகும்; தற்காலிகமானதாகும்; ஏமாறிவிடாதீர்கள் என்றெல்லாம் சதாவும் கூறிக்கொண்டிருப்பது எந்த அளவு உண்மையானதாகும் என்பதை எனது கண்களுக்கு முன்னால் கண்டேன். மாத்திரமன்றி மனிதன் தனது உடலோடும் இல்லத்தோடும் தொடர்புகளும் பிணைப்புக்களும் உள்ளவனாக இருப்பதைப் போன்றே தான் வாழ்கின்ற ஊரோடும் நாட்டோடும் ஏன் முழு உலகோடும் ஆழமான, உணர்வுபூர்வமான தொடர்புகளை உடையவனாக இருக்கின்றான் என்பதையும் நான் அப்போது நிதர்சனமாகக் கண்டுகொண்டேன். ஏனெனில், உடலில் வயோதிபம் ஏற்படுத்திய வலிகள் காரணமாக நான் எனது இரண்டு கண்களால் அழும் போது எனது மத்ரஸாவுடைய மரணத்தை எண்ணி பத்துக் கண்களால் அழ வேண்டும் போலிருந்தது. அவ்வாரே அந்தக் கலகலப்பான பட்டினத்தின் அரை மரணத்துக்காகப் பல நூறு கண்களால் அழுது தீர்க்க வேண்டிய தேவை உடையவனாக இருந்தேன். ஹதீஸ் ஒன்றில் வருவதாவது: ஒவ்வொரு காலைப்பொழுதிலும் ஒரு மலக்கு பின்வருமாறு அழைப்பு விடுத்துக்கொண்டிருக்கின்றார். لِدُوا لِلْمَوْتِ وَابْنُوا لِلْخَرَابِ அதாவது, “மரணிப்பதற்காகப் பிறந்து உலகுக்கு வருகிறீர்கள். அழிந்தொழிந்து போவதற்காக கட்டிடங்களை எழுப்புகிறீர்கள்.” அப்போது நான் இந்த சத்தியத்தைக் செவிகளாலன்றி எனது கண்களால் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆம், அந்த நிலைமை அந்த சந்தர்ப்பத்தில் என்னை எந்த அளவு அழவைத்ததோ அவ்வாறே பத்து வருடங்களாக இன்றும் எனது நினைவுகள் அந்த நாட்களைச் சஞ்சரிக்கும் போதெல்லாம் அழுகின்றேன். ஆம், அந்தக் கோட்டையை அண்டியுள்ள குடியிருப்புகள் சிதைந்து சின்னாபின்னமாகிப் போயிருந்தமை, அந்தப் பட்டிணம் வெறும் எட்டு வருட இடைவெளியில் எண்ணூறு வருடங்கள் பழைமை ஆகிப் போயிருந்தமை, கோட்டைக்கடியில் நண்பர்கள் ஒன்று சேர்கின்ற உயிரோட்டமான ஓர் இடமாக இருந்த மத்ரஸா மரணித்துப் போயிருந்தமை, ஒட்டுமொத்த உதுமானியத் தேசத்திலுமிருந்த இது போன்ற உயிரோட்டமான மத்ரஸாக்கள் அனைத்தும் மரணித்துப் போனமை என்று இந்த எல்லா அமர்க்களங்களுக்கும் முன்னால் ஒரு தனிப் பாரையால் ஆன வான் கோட்டையானது ஏதோ அந்த எல்லா மரணங்களையும் உள்ளடக்கிய பிரமாண்டமான ஓர் ஆத்மார்த்த ஜனாஸாவுடைய கல்லறைக்கல்லைப் போன்று அந்த இடத்தில் வீற்றிருந்தது. ஏதோ, எட்டு வருடங்களுக்கு முன்னர் என்னோடு ஒன்றாக இருந்து ஷஹீதாகிய எனது மாணவர்களும் கூட தமது கபுறுகளில் என்னோடு சேர்ந்து அழுவதைப் போன்று உணர்ந்தேன். அவ்வாறே அந்தப் பட்டிணத்தில் ஆங்காங்கே நின்றுகொண்டிருந்த சுவர்களும் உடைந்து சிதைந்து போன கற்களும் என்னோடு சேர்ந்து அழுதுகொண்டிருப்பது போல் தோன்றின. அப்போது, தாய் மண்ணிலேயே சந்திக்க நேரிட்ட அந்தத் தனிமையை அதற்கு மேலும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஒன்றோ நானும் அவர்களுக்கருகில் செல்வதற்காக கபுறுக்குச் செல்ல வேண்டும் அல்லது மழை உச்சியொன்றில் ஒரு குகைக்குள் சென்று அஜலுடைய நேரம் வரும் வரை அங்கு காத்திருக்க வேண்டும் என்று சிந்தித்தேன். எனது நாவும், “உண்மையில் இந்த உலகில் இவ்வாறு தாங்க முடியாத, பொறுமையை ஆட்டங்காணச் செய்து மனிதனை உருக்குலைத்துப் போடுகின்ற பிரிவுகள் இருக்கின்றன. எனவே நிச்சயமாக மரணம் வாழ்வை விடச் சிறந்ததாகும். வாழ்வின் இந்தக் கடுமையான நிலைமைகள் தாங்கிக்கொள்ளும் ரகத்தைச் சேர்ந்தவையல்ல” என்று கூறியது. அப்போது மனிதனுக்கு முன்னாலுள்ள ஆறு திக்குகளை நோக்கிப் பார்வையைச் செலுத்தினேன். எல்லாத் திக்குகளும் இருள் சூழ்ந்தவையாகவே இருந்தன. அந்தக் கடுமையான தாக்கம் காரணமாக ஏற்பட்ட ஒரு வகைப் பொடுபோக்கு உலகத்தைப் பயங்கரமானதாகவும் கைவிடப்பட்டுப் பாழடைந்துபோன ஓர் இடமாகவும் எனக்குக் காட்டியது. எனது ஆத்மாவோ அந்த நிலைமையிலிருந்து விடுதலை பெறுவதற்காக எனக்கு எதிரிகளாக மாறியிருந்த எண்ணற்ற முஸீபத்துகளுக்கெதிராகத் தாக்குப் பிடிப்பதற்கான ஓர் ஆதாரத் தளத்தையும் ஆத்மாவில் நித்தியம் வரை நீண்டுள்ள எண்ணற்ற ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளக்கூடிய ஓர் உதவித் தளத்தையும் எண்ணற்ற அழிவுகள், பிரிவுகள், இழப்புக்களால் ஏற்படும் துக்கங்களையும் கைசேதங்களையும் களைவதற்கான ஓர் ஆறுதலையும் தேடிக்கொண்டிருந்தது. அப்போது சர்வ ஞானம் பொருந்திய குர்ஆனின் سَبَّحَ لِلَّهِ مَا فِى السَّمَوَاتِ وَاْلاَرْضِ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ * لَهُ مُلْكُ السَّمَوَاتِ وَ اْلاَرْضِ يُحْيِى وَ يُمِيتُ وَ هُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ என்ற வசனத்தில் பொதிந்துள்ள சத்தியம் பிரதிபலித்தது. அது கவலைகளையும் கைசேதங்களையும் தந்துகொண்டிருந்த துக்ககரமான அந்த சஞ்சாரத்திலிருந்து என்னை மீட்டு சத்தியத்தின்பால் எனது அகக் கண்களைத் திறக்கச் செய்தது. அப்போது அந்த வட்டாரத்தில் காய்த்துக் குழுங்கியிருந்த கனி மரங்களில் தொங்கிய கனிகள் ஏதோ புன்னகைத்தவாறு எம்மையும் பார்! வெறுமனே சிதறிச் சின்னாபின்னமாகிப் போயுள்ள காட்டிடங்களை மாத்திரம் பார்த்துக்கொண்டு எதைக் காணப் போகிறாய் என்று கூறுவதைப் போன்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவற்றின் பார்வையூடாக மேலுள்ள வசனத்தில் பொதிந்துள்ள சத்தியம் எனக்குப் பின்வரும் செய்திகளைச் சொன்னது: வான் நகரம் என்ற புத்தகத்தின் மீது, அங்கு விருந்தினராக வந்த மனிதர்களின் கரங்களால் எழுதப்பட்ட ஒரு பக்கமாகத் திகழ்ந்த அந்தப் பட்டிணம் ரஷ்ய ஆக்கிரமிப்பு என்ற பயங்கரமான ஒரு வெள்ள அனர்த்தத்துக்குற்பட்டு அழிந்து போனமை உன்னை ஏன் இந்த அளவு பாதிப்படையச் செய்ய வேண்டும்? நீ அடிப்படையில் பார்க்க வேண்டியது எல்லா வஸ்துகளுக்கும் உண்மை எஜமானனாகிய சர்வலோக அரசன் இந்தப் புத்தகத்தின் மீது எழுதி வைத்துள்ள அற்புதமான கடிதங்களையாகும். அவை நீ முன்னர் பார்த்த போது எப்படி இருந்தனவோ பூரண செலிப்போடு அதே நிலையில் சதாவும் புதுப்பிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. சிதைந்து சின்னாபின்னமாகிப் பாலடைந்து போயுள்ள அந்த இடங்களைப் பார்த்து நீ அழுது புலம்புவதற்கான காரணம் உண்மையான எஜமானனாகிய சர்வலோக இரட்சகனை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக்கொண்டதும் மனிதர்களை விருந்தினர்களாக அன்றி அவற்றின் எஜமானர்களாகப் பார்ப்பதுமாகும். நீ விடும் அந்தக் குற்றத்திற்கான தண்டனையாகவே நீ அழவைக்கப்படுகின்றாய். அப்போது அந்தக் குற்றத்திலிருந்தும் அவல நிலையிலிருந்தும் மீள்வதற்கான சத்திய வாசல் எனக்காகத் திறந்துகொண்டது. அத்துடன் அந்த சத்தியத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு எனது நஃப்ஸும் தயாராக இருந்தது. ஆம், ஓர் இரும்புப் பாலம் மிருதுவானதாக மாறி அழகிய பயனுள்ள ஒரு வடிவைப் பெற்றுக்கொள்ளட்டும் என்பதற்காக நெருப்பில் போடப்படுகின்றது. அவ்வாறே, அந்தத் துக்ககரமான, பயங்கரமான நிலை ஒரு கோர நெருப்பாக மாறி எனது நஃப்ஸை பதப்படுத்தி மிருதுவாக்கியது. அற்புத குர்ஆன் மேலே குறிப்பிட்ட வசனத்தில் பொதிந்துள்ள சத்தியத்தின் மூலம் ஈமானிய சத்தியங்களிலிருக்கும் அமைதியையும் சாந்தியையும் முழுமையாக எனது நஃப்ஸுக்குக் காண்பித்து அதையும் மசிய வைத்தது. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அந்த வசனத்தில் பொதிந்துள்ள சத்தியம் அவரவர் ஈமானியப் பலத்துக்கேற்ப பிரகாசிக்கக்கூடிய மிகப் பலமனதோர் ஆதாரத் தளத்தை ஆத்மாவுக்கும் உள்ளத்துக்கும் தந்தது. அந்த ஆதாரத் தளமானது நான் சந்தித்த அந்த நிலைமையைவிட நூறு மடங்கு பயங்கரமான முஸீபத்களையும் கூடத் தாக்குப் பிடிக்கின்ற திராணியை அல்லாஹ்வின் மீதான ஈமான் மூலம் எனக்கு வழங்கியது. கூடவே “எல்லா வஸ்துகளும் உனதும் ஒட்டுமொத்த வஸ்துகளினதும் படைப்பாளனாகிய உண்மை எஜமானன் அல்லாஹ்வுடைய கட்டளைக்குற்பட்டவையாகும். எல்லா வஸ்துகளின் கடிவாளங்களும் அவனது கைவசமே உள்ளன. அவனோடு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வதொன்றே உனக்குப் போதுமான ஆதாரமாகும்” என்ற பேருண்மையையும் எனக்கு நினைவூட்டியது. எனது படைப்பாளனை ஒரே ஆதாரத் தளமாக எடுத்துக்கொண்டு அவனைக் கண்டுகொண்ட அந்தக் கணம் எதிரிகளைப் போன்று காட்சியளித்த எல்லா வஸ்துகளும் எல்லா நிலைமைகளும் அவற்றின் தோற்றத்தை மாற்றிக்கொண்டன. என்னை அழ வைத்த கவலைக்கிடமான காட்சிகள் என்னை மகிழ்விக்கச் செய்ய ஆரம்பித்தன. அவ்வாறே ரிஸாலே நூரின் பல்வேறு இடங்களில் ஆதாரங்களுடன் நிறுவப்பட்டதைப் போன்று நிறைவேற்றிக்கொள்ள முடியாத எண்ணற்ற எதிர்பார்ப்புக்களுக்கும் ஆசைகளுக்கும் முன்னால் “மறுமை நம்பிக்கை” மூலம் கிடைத்த ஒளி மகத்தானதோர் உதவித் தளமாக அமைந்தது. அந்த உதவித்தளம் வெறுமனே அற்பமான, தற்காலிகமான, குறுகிய உலக வாழ்வில் சந்திக்க நேர்கின்ற நேசர்களோடுள்ள பிணைப்புகள், எதிர்பார்ப்புகளை மாத்திரமன்றி எல்லையற்ற, நித்தியமான ஓர் உலகில் நித்தியமான நிம்மதிக்காக வைத்திருக்கின்ற எண்ணற்ற தீராத ஆசைகள், எதிர்பார்ப்புக்களை எதிர்கொள்வதற்கும் போதுமானதாக இருந்தது. ஆம், இந்தப் பூமியின் மீது தனது விருந்தினர்களைக் குறுகிய ஒரு காலம் மகிழ்விப்பதற்காக வசந்த கால ஆகார விரிப்பில் எண்ணற்ற ஆகாரங்களை அழகிய, கண்குளிர்ச்சி தரக்கூடிய அமைப்பில் ஏற்பாடு செய்து, மறுமைக்காக முடிவற்ற அருட்பாக்கியங்களால் நிறைந்த எட்டு நித்திய சுவனங்களை காலங்களை விஞ்சிய ஓர் இடத்தில் படைத்து அவற்றைத் தனது ரஹ்மத்தின் ஒரு பிரதிபலிப்பாகத் தனது அடியார்களுக்கு அருளுகின்ற ரஹ்மானுர் ரஹீமுடைய ரஹ்மத்தை ஈமான் மூலம் ஆதாரமாகக் கொண்டு அந்தப் பிணைப்பின் வலிமையை உணர்பவனுக்கு உண்மையில் மிகப் பலமான ஓர் உதவித் தளம் கிடைத்துவிடுகின்றது. அந்த உதவித் தளத்தோடுள்ள மிகச் சிறிய ஒரு தொடர்பும் கட்டுக்கடங்காத நித்திய ஆசைகள் எதிர்பார்ப்புகளின் போது உதவிக்கரம் நீட்டிக் கரை சேர்க்கும். மேலும் அந்த வசனத்தில் பொதிந்துள்ள ஈமானிய சத்தியத்திலிருந்து வெளிப்பட்ட பிரகாசம் இருள் சூழ்ந்திருந்த ஆறு திசைகளையும் பகல் போன்று ஒளிமயமாக்கியது. நான் இந்த நகரத்திலும் மத்ரஸாவிலும் மரணித்துப் போன எனது மாணவர்களுக்காகவும் நேசர்களுக்காகவும் அழுதுகொண்டிருக்கும் போது “உனது நேசர்கள் சென்ற இடம் இருள் சூழ்ந்த சூன்யமல்ல, வெறுமனே வேறோர் இடத்துக்கு இடம்பெயர்ந்துள்ளனர். மீண்டும் சந்திக்கத்தான் போகிறீர்கள்” என்பதை நினைவூட்டி என்னைச் சூழ்ந்திருந்த இருளை அகற்றிவிட்டது. அத்துடன் எனது அழுகை முழுமையாக நின்றுவிட்டது. பின்னர் அவர்களுக்குப் பதிலாக அவர்களை ஒத்தவர்களை அனுப்பி வைப்பதற்கு அல்லாஹ் சக்தியுடையவனாகவே இருக்கின்றான் என்ற விடயத்தை நினைவூட்டியது. ஆம், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் “வான்” நகரில் அழிந்து போன மத்ரஸாவை “இஸ்பார்த்தா” மத்ரஸாவைக்கொண்டு ஹயாத்தாக்கி, வான் நகரத்திலிருந்த நேசர்களைக்கூட இஸ்பார்த்தா நகரில் கிடைத்த அதைவிட அதிகமான பெருமதி வாய்ந்த மாணவர்களையும் நேசர்களையும் கொண்டு வல்லோன் அல்லாஹ் மீள் நிரப்பினான். மேலும், உலகம் கைவிடப்பட்டுப் பாலடைந்துபோன ஓர் இடமல்ல என்பதையும் வெளிப்பார்வைக்கு சின்னாபின்னமாகிப் போயிருந்த அந்த நகரத்தின் நிலைமையை நான் பிழையாகப் புரிந்துகொண்டேன் என்பதையும் அவற்றின் உண்மை அதிபதி தனது ஞானத்தின் வெளிப்பாடாக மனிதர்களால் செயற்கையாக நிர்மாணிக்கப்பட்ட பக்கங்களை காலத்துக்குக் காலம் மாற்றிப் புதுப்பிக்கிறான் என்பதையும் நினைவூட்டியது. ஆம், ஒரு மரத்திலுள்ள கனிகளைப் பறித்த பின்னர் அவற்றின் இடத்துக்குப் புதிய கனிகள் வருவதைப் போன்று மனித குலத்துக்கு ஏற்படுகின்ற இது போன்ற அழிவுகளும் பிரிவுகளும் கூட ஒரு புதுப்பித்தலாகும். ஈமானியப் பார்வையில் இத்தகைய நிகழ்வுகள் நேசத்துக்குரியவர்களை இழந்து கைசேதத்தைத் தருகின்ற துக்ககரமான ஒரு நிகழ்வல்ல. மாறாக வேறோர் அழகிய தேசத்தில் சந்தித்துக்கொள்வதற்காக கவலையுடன் பிரிந்து செல்கின்ற, ஆனால் இன்பம் கலந்த ஒரு பிரியாவிடை நிகழ்வாகும். மேலும், அந்தப் பயங்கரமான நிலைமை காரணமாக இருண்டதாகத் தெரிந்த பிரபஞ்ச வஸ்துகளுடைய நிலைமையையும் ஒளிமயமாநதாகக் காண்பித்தது. அப்போது அதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த நாடிய போது அரபு மொழியிலான பின்வரும் வரிகள் எனது மனதில் உதித்தன. அது அந்த சத்தியத்தைப் தத்ரூபமாகச் சித்திரித்தது. அந்த வரிகள் பின்வருமாறு: اَل۟حَم۟دُ لِلّٰهِ عَلٰى نُورِ ال۟اٖيمَانِ ال۟مُصَوِّرِ مَا يُتَوَهَّمُ اَجَانِبَ اَع۟دَاءً اَم۟وَاتًا مُوَحِّشٖينَ اَي۟تَامًا بَاكٖينَ ؛ اَوِدَّاءَ اِخ۟وَانًا اَح۟يَاءً مُونِسٖينَ مُرَخَّصٖينَ مَس۟رُورٖينَ ذَاكِرٖينَ مُسَبِّحٖينَ அதாவது இதன் விளக்கம்: “அந்தப் பயங்கரமான நிலைமையின் தாக்கம் காரணமாக என்னுள் ஏற்பட்ட பொடுபோக்கு பிரபஞ்ச வஸ்துகளுள் ஒரு பகுதியை எதிரிகளைப் போன்றும் இன்னொரு பகுதியை அந்நிய ஆக்கிரமிப்பாளர்களைப் போன்றும் இன்னுமொரு பகுதியை பிரமாண்டமான பிணங்களைப் போன்றும் இன்னுமொரு பகுதியை அநாதரவாகக் கைவிடப்பட்ட அநாதைகளைப் போன்றும் எனது நஃப்ஸுக்குக் காண்பித்த போது ஈமானிய ஒளியின் துனையால் அந்தப் பயங்கரமான காட்சியின் யதார்த்த நிலையைக் கண்டுகொண்டேன். அப்போது அந்நிய ஆக்கிரமிப்பாளர்களைப் போன்றும் எதிரிகளைப் போன்றும் காட்சியளிப்பவை உண்மையில் நண்பர்களாக, உறவுகளாக இருப்பதையும் பிரமாண்டமான பிணங்களைப் போன்று காட்சியளிப்பவை அவற்றின் பணிகளுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தாலும் உண்மையில் உயிரோட்டமானவையாகவே இருப்பதையும் அழுது புலம்பும் அநாதைகளைப் போன்று காட்சியளிப்பவற்றின் அவல ஓலங்கள் உண்மையில் திக்ர், தஸ்பீஹ்களின் போது வெளிப்படுகின்ற அழகிய தாளங்களாக இருப்பதையும் கண்டுகொண்டேன். பின்னர் அந்த அனைத்தும் எனக்கு மாபெரும் அருட்கொடைகளாக மாறிவிட்டன. எனது உள்ளமோ அந்த எண்ணற்ற அருட்கொடைகளின் ஊற்று வாயாகத் திகழும் ஈமானை எனக்களித்த மாட்சிமை மிக்க படைப்பாளனாகிய அல்லாஹ்வுக்கு எண்ணற்ற உளப்பூர்வமான நன்றிகளையும் புகழ்களையும் சமர்ப்பித்தது. அத்துடன் இந்த உலகிலும் உலகளவு பிரமாண்டமான எனது பிரத்தியேக உலகத்திலும் உள்ள அத்தனை வஸ்துகளையும் நிதர்சனமாக முடியாவிட்டாலும் நிய்யத்தின் மூலமாக இறைவனைப் புகழ்வதிலும் துதிப்பதிலும் இணைத்துக்கொள்வது எமது உரிமை என்பதால் அந்த அத்தனை வஸ்துகளினதும் ஒட்டுமொத்த மெய்ம்மொழிகளாலும், அலம்துலில்லாஹி அலா நூருல் ஈமான் என்று கூறுகிறேன்.” மேலும் பொடுபோக்கு என்னை ஆட்கொண்ட அந்தப் பயங்கரமான நிலையின் போது என்னில் வாழ்வின் இனிமை முற்றாக அனைந்து வாழ்க்கை மீதிருந்த நம்பிக்கைகளும் பிடிப்புகளும் ஒட்டுமொத்தமாக வரண்டு போயிருந்தது. அந்த ஒடுக்கமான நிலைமைக்குள் எனக்கு அருளப்பட்ட தனிப்பட்ட அருட்கொடைகள் அனைத்தும் புஷ்வானமாகிப் போவதை உணர்ந்தேன். அப்போது, ஈமானுடைய ஒளி எனது உள்ளத்தைச் சூழ்ந்திருந்த அந்த ஒடுக்கமான எல்லையை மகத்தான ஓர் அமைப்பில் விசாலமானதாக மாற்றியது. முழுப் பிரபஞ்சமுமே அந்த எல்லைக்குள் உள்ளடங்கியது. ஹோஹோர் மத்ரஸா வட்டாரத்தில் தீயில் கருகி சுவையிழந்து போன அருட்கொடைகளுக்குப் பதிலாக உலக வீட்டையும் மறுமை வீட்டையும் அங்கிருந்த எல்லா வகை அருட்கொடைகளையும் அதற்கு அதிகமானதையும் உள்ளடக்கிய ஒவ்வொரு அருள் விரிப்பாக எனது கண்களுக்கு முன்னால் கொண்டு வந்தது. மாத்திரமன்றி கண், காது, உள்ளம் போன்ற நூற்றுக்கணக்கான அவயங்களையும் சாதனங்களையும் ஒவ்வொரு நீண்ட கரமாகவும் அந்த ஒவ்வொரு கரத்தையும் கொண்டு ஒவ்வொரு முஃமினும் தத்தமது அந்தஸ்துக்கேற்ப அந்த இரண்டு அருள் விரிப்புக்களிலிருந்தும் அருட்கொடைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதையும் காட்டித்தந்தது. எனவே இந்த உன்னதமான சத்தியத்தைப் பிரஸ்தாபிப்பதற்காகவும், அந்த எண்ணற்ற அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்துவதற்காகவும் அந்த சந்தர்ப்பத்தில் பின்வருமாறு கூறினேன். اَل۟حَم۟دُ لِلّٰهِ عَلٰى نُورِ ال۟اٖيمَانِ ال۟مُصَوِّرِ لِلدَّارَي۟نِ مَم۟لُوؤَتَي۟نِ مِنَ النِّع۟مَةِ وَ الرَّح۟مَةِ لِكُلِّ مُؤ۟مِنٍ حَقًّا يَس۟تَفٖيدُ مِن۟هُمَا بِحَوَاسِّهِ ال۟كَثٖيرَةِ ال۟مُن۟كَشِفَةِ بِاِذ۟نِ خَالِقِهٖ அதாவது “சர்வலோக இரட்சகன் அல்லாஹ் இவ்வுலகையும் மறுமையையும் தனது ரஹ்மத்தைக்கொண்டும் அருட்கொடைகளைக்கொண்டும் நிரப்பினான். பின்னர் ஈமானிய ஒளியின் மூலமும் இஸ்லாத்தின் மூலமும் ஒளியையும் விசாலத் தன்மையையும் பெற்றுக்கொண்ட புலனுணர்வுகளின் கரங்களைக் கொண்டு அந்த இரண்டு பிரமாண்டமான அருள் விரிப்புகளிலிருந்தும் பயன்பெற்றுக்கொள்வதற்கான வழியை முஃமின்களுக்குக் காண்பித்தான். இந்த ஈமானிய ஒளியை எனக்கருளிய எனது படைப்பாளனுக்கு எனது உடம்பிலிருக்கும் வெல்லாக் கலங்களோடும் அணுக்களோடும் இணைந்து உலகமும் மறுமையும் நிரம்புகின்ற அளவு நன்றிகளும் புகழ்களும் உண்டாவதாக.” Madem iman bu âlemde bu tesirat-ı azîmeyi yapar, elbette dâr-ı bekada öyle semerat ve füyuzatı olacak ki bu dünyadaki akıl ile onlar ihata edilmez ve tarif edilmez. இதோ, என்னைப் போன்று முதுமையில் ஏராளமான உறவுகளின் பிரிவுத் துயரால் வாடுகின்ற மூதிய சகோதர சகோதரிகளே! உங்கள் மத்தியில் மிகவுமே வயதானவர் வெளிப்பார்வைக்கு எவ்வளவுதான் என்னைவிட வயதானவராக இருந்தாலும் உள்ளத்தால் நான் எல்லோரைவிடவும் முதுமை அடைந்தவனாக இருக்கிறேன் என்றே நினைக்கிறேன். ஏனெனில், எனது இயல்பில் பிற மனிதர்களுக்காக வருத்தப்படும் தன்மை மிகவுமே அதிகமாக இருப்பதாலும் அந்த இரக்க உணர்வு காரணமாக எனது வலிகளோடு கூடவே ஆயிரக்கணக்கான எனது சகோதர உறவுகளின் வலிகளையும் சுமப்பதாலும் பல நூறு வருடங்கள் வாழ்ந்ததைப் போன்று முதுமையை உணர்கிறேன். நீங்கள் எவ்வளவுதான் பிரிவுத் துயரைச் சந்தித்திருந்தாலும் நான் சந்தித்த அளவு அந்தத் துயரை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் பிள்ளைகளோடு மாத்திரம் நிறுத்திக்கொள்வதற்கு பிள்ளைகளென்று யாரும் எனக்கில்லை. அவ்வாறே, வீட்டுடன் மாத்திரம் நிறுத்திக்கொள்வதற்கு எனக்கென்று வீடுவாசல்களும் இல்லை. ஆனால் என்னிடம் இயல்பாகவே இருக்கின்ற இந்த அதிகரித்த இரக்க சுபாவம் காரணமாக ஆயிரக்கணக்கான முஸ்லிம் பிள்ளைகள் படுகின்ற கஷ்டங்களை நினைத்தும் ஏன் பாவமறியாத ஜீவராசிகளின் கஷ்டங்களை நினைத்தும் ஒரு வலியையும் வேதனையையும் எனதுள்ளத்தில் உணர்கிறேன். அவ்வாறே இந்த நாட்டோடும் ஏன் இஸ்லாமிய உலகின் நிலப்பரப்புக்களோடும் இஸ்லாமிய உணர்வின் காரணமாக எனது சொந்த வீட்டைப் போன்று தொடர்புபட்டவனாக இருக்கிறேன். எனவே இந்த இரு பெரும் வீடுகளிலும் இருக்கின்ற எனது இஸ்லாமிய உறவுகளின் துன்ப துயரங்களால் வேதனையையும் அவர்களின் பிரிவுகளால் துக்கத்தையும் அனுபவிக்கின்றேன். ஆம், முதுமையுடன் கூடவே மேற்குறிப்பிட்ட பிரிவுகள், வலிகள், அனர்த்தங்கள் காரணமாக எனக்குள் ஏற்பட்ட வலிகளையும் வேதனைகளையும் தாக்குப் பிடிப்பதற்கு அந்த ஈமானிய ஒளி தாராளமாகவே போதுமாக இருந்தது. அது உடைந்து போகாத ஒரு நம்பிக்கையையும் அணையாத ஓர் ஒளியையும் தீர்ந்து போகாத ஓர் ஆறுதலையும் எனக்களித்தது. எனவே, முதுமை காரணமாக உங்களைச் சூழ்ந்துகொள்ளும் இருளையும் பொடுபோக்கையும் கஷ்டங்கள், கவலைகள், வேதனைகளையும் மிகைப்பதற்கு ஈமான் ஒன்றே போதுமான ஆதாரமாகும். உண்மையில் மிக இருள்மயமான, மிக நெருக்கடியான, மிக ஆறுதலற்ற வயோதிபமும் மிகுந்த கைசேதத்தைத் தருகின்ற பிரிவுத் துயரும் வழிகேடர்களுக்கும் பாவிகளுக்கும் ஏற்படுகின்ற முதுமையும் பிரிவுகளுமாகும். நம்பிக்கையும் பிரகாசமும் ஆறுதலும் அளிக்கின்ற ஒரு முதுமை அவசியமாக இருந்தால் ஈமானை சுவைத்து அதன் பிரதிபலன்களை அனுபவிப்பதன் மூலம் வயோதிபத்துக்கும் இஸ்லாத்துக்கும் பொருத்தமான ஓர் அமைப்பில் வணக்கவழிபாடுகளோடும் பிரக்ஞையோடும் அந்த வயோதிபத்தை கழிப்பது அவசியமாகும். மாறாக, வாலிபர்களுக்கு நிகராக முயற்சிப்பதும் அவர்கள் மூழ்கியிருக்கும் பொடுபோக்குத்தனமான போதைகளுக்குள் நுழைந்து உங்கள் வயோதிபத்தை மறக்கடிக்க முயற்சிப்பதும் அந்த சுவையை அணுபவிப்பதற்கான வழியல்ல. خَيْرُ شَبَابِكُمْ مَنْ تَشَبَّهَ بِكُهُولِكُمْ وَشَرُّ كُهُولِكُمْ مَنْ تَشَبَّهَ بِشَبَابِكُمْ என்று தொடர்கின்ற ஹதீஸின் செய்தியை சிந்தித்துப் பாருங்கள். அதாவது: “வாலிபர்களுள் மிகச் சிறந்தவர் தாந்தோன்றித்தனமான வாழ்க்கையிலிருந்தும் பாவங்களிலிருந்தும் விலகி நடப்பதன் மூலம் வயோதிபர்களுக்கு ஒப்பாக நடப்பவராவார். வயோதிபர்களுள் மிக மோசமானவர் பாவங்களிலும் பொடுபோக்குத் தனமான வாழ்க்கையிலும் வாலிபர்களுக்கு ஒப்பாக நடப்பவராவார்.” எனது சகோதர சகோதரிகளான வயோதிபர்களே! ஒரு ஹதீஸின் அர்த்தம் “அறுபது எழுபது வயதுகளைக் கடந்த முஃமினான ஒரு வயோதிபர் இறைவனிடம் இரு கரமேந்திப் பிரார்த்திக்கும் போது அல்லாஹ்வின் ரஹ்மத் அவரது கைகளை வெறுமையாகத் திருப்பிவிட வெட்கப்படுகிறது” என்று வருகின்றது. ஆம், அல்லாஹ்வுடைய ரஹ்மத்திடம் உங்கள் நிலைமைக்கு இந்த அளவு கண்ணியம் உள்ளது. நீங்களும் அந்த ரஹ்மத்துக்கு உங்கள் வணக்க வழிபாடுகள் மூலம் கண்ணியம் செலுத்துங்கள்.
முதலில் நான்காவது சுடர் ஆகிய “ஆயதுன் நூர்” உடைய விளக்கத்தின் ஆரம்பப் பகுதிக்கான சுருக்கத்தைப் பார்த்துவிட்டு விடயத்துக்கு வருகிறேன். உலகப் பித்தர்கள் என்னை எல்லா விடயங்களைவிட்டும் ஒதுக்கித் தனிமையில் இருக்க நிர்ப்பந்தித்ததன் காரணமாக ஐந்து வகையான தனிமைகளுக்கு ஆளாகினேன். அந்த வலிகள் என்னில் ஏற்படுத்திய ஒரு வகைப் பொடுபோக்குத்தனம் காரணமாக ரிஸாலே நூரின் ஆறுதலும் உதவியும் அளிக்கின்ற ஒளிக்கீற்றுக்களைப் பார்க்காமல் நேரடியாக எனது உள்ளத்தைப் பார்த்து எனது ஆத்மாவைப் பரிசீலித்தேன். அப்போது என்னிடம் நித்தியத்தின் மீது மிகப் பலமானதொரு காதல் இருப்பதையும் இருப்பின் மீது மிக வலிமையானதொரு பற்று இருப்பதையும் வாழ்க்கை மீது மிகக் கடுமையானதொரு மோகம் இருப்பதையும் அதே சமயம் எல்லையில்லாத ஓர் இயாலாமையும் பலவீனமும் உடையவனாக இருப்பதையும் கண்டுகொண்டேன். ஆனால் பயங்கரமானதோர் அழிவு அந்த நித்தியத்தை மறித்துக்கொண்டிருந்தது. அந்த நிலைமையில் இருக்கும் போது உடைந்து போன ஒரு கவிஞன் கூறியது போன்று பின்வருமாறு கூறினேன். உடல் என்ற உடமை; ஆத்மா அதன் நித்தியத்தை ஆசிக்க, சத்தியமோ அதன் அழிவை ஆசித்ததால், நிவாரணமற்ற ஒரு நிர்க்கதிக்குள் வீழ்ந்தேன். லுக்மானுல் ஹகீமும் கையை விரித்தார். அப்போது மிகுந்த கவலையோடும் பாரத்தோடும் எனது தலை தொங்கிய சந்தர்ப்பத்தில் حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ என்ற மறை வசனம் எனது உதவிக்காக வந்தது, “என்னைக் கவனமாக ஓதுவாயாக” என்று கூறியது. நானும் ஒரே நாளில் ஐநூறு தடவைகள் அந்த வசனத்தை ஓதினேன். ஓதிக்கொண்டு செல்லச் செல்ல, அந்த வசனத்திலுள்ள மிகப் பெருமதி வாய்ந்த ஒளிச் சுடர்களிள் ஒன்பது ஒளிமயமான அந்தஸ்துகள் “இல்மல் யகீன்”ஐயும் தாண்டி “ஐனல் யகீன்” ஆக எனக்குத் தென்பட்டன. முதலாவது ஒளிமயமான அந்தஸ்து என்னிடமிருக்கும் நித்தியத்தின் மீதான காதலானது என்னிடம் எனக்குரியதாக இருக்கின்ற நித்தியத் தன்மை மீதானதன்றி எத்தகைய காரணங்களுக்கும் தேவையின்றி நேரடியாகவே நேசத்துக்குத் தகுதியானவனாகவும் மகத்துவமும் பரிபூரணத்துவமும் மிக்கவனாகவும் இருக்கின்ற அல்லாஹ்வுடைய ஒரு திருநாமத்தின் பிரதிபலிப்புடைய ஒரு நிழல் எனது இயல்பிலும் காணப்படுவதால் இயல்பாகவே அந்த மகத்துவமிக்க இரட்சகனின் இருப்பையும் பரிபூரணத்துவத்தையும் நித்தியத்தையும் நோக்கியிருக்கின்ற காதல் பொடுபோக்குக் காரணமாக பாதை தவறி நிழலை நோக்கி அல்லது விம்பத்தை நோக்கித் திரும்பியிருந்தது. அதாவது சூரியனுக்குப் பதிலாக கண்ணாடியின் நித்தியத்தை நோக்கித் திரும்பியிருந்தது. இந்நிலையில் حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ என்ற வசனம் திரைகளை நீக்கி யதார்த்தத்தை நோக்கி எனது கவனத்தைத் திருப்பியது. அப்போது நித்தியத்தின் மீதான காதலின் உண்மை நிம்மதியையும் சுவையையும் காண்பது ஏக நித்தியனின் நித்தியத்தின் மூலமும் அவனை எனது இரட்சகனாகவும் இலாஹாகவும் ஏற்று, ஈமான்கொள்வதன் மூலமும் மாத்திரமே சாத்தியமாகும் என்பதை எனது எல்லா உணர்வுகள் மூலமாகவும் ஐனல் யகீனாகவும் கண்டுகொண்டேன். அதிலுள்ள பேரின்பத்தை “ஹக்கல் யகீனாக” அனுபவித்தேன். இதற்கான சான்றுகள் உணர்ந்துகொள்ள முடியுமானவர்களை பிரமிப்பில் ஆழ்த்தக்கூடிய ஆழமான, நுட்பமான பண்ணிரண்டு ஈமானியப் பிரக்ஞைகள் மூலம் நான்காவது சுடரில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அந்தஸ்து எனது எல்லையற்ற இயலாமையுடன் கூடவே முதுமையும் தனிமையும் துறவும் என்னை வாட்டி வதைத்துக்கொண்டிருக்க மறு பக்கம் உலகப் பித்தர்கள் சதிகள் மூலமும் உளவாளிகள் மூலமும் என்னைத் துன்புறுத்திக்கொண்டிருந்த சமயம் “கைகள் கட்டப்பட்டு, நோய்நொடிகளோடு, மிகப் பலவீனமாக இருக்கும் ஒரு மனிதனுக்கெதிராகப் படைபட்டாளங்களையெல்லாம் அனுப்புகிறார்களே! எனக்கான ஓர் ஆதாரத் தளம் இருக்காதா?” என்று அங்கலாய்த்தவனாக حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ என்ற வசனத்திடம் விண்ணப்பித்தேன். அந்த வசனம் எனக்குப் பின்வருமாறு கூறியது. “நீ ஈமானியப் பிணைப்பின் மூலம் சர்வ மாட்சிமை மிக்க பேரரசன் ஒருவனோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்கிறாய். அவன் எத்தகையவனென்றால் பூமியின் மேல் ஒவ்வொரு வசந்த காலத்திலும் அவனது படை பட்டாளங்களில் நாநூறாயிரம் இனங்களைச் சேர்ந்த இலட்சோப இலட்சம் தாவரங்களும் விலங்குகளும் அவற்றுக்குத் தேவையான ஆகாரங்களும் தயார் செய்யப்படுகின்றன. அந்த ஆகாரங்கள் மனிதர்களால் செய்யப்படுகின்ற பண்டங்களை விடப் பல நூறு மடங்கு அங்கசம்பூரணமானவையாகவும் சிறப்பானவையாகவும் இருக்கின்றன. அந்த ஆகாரங்களை அவற்றின் வளர்ச்சி, நீட்சி, சிறப்பம்சங்கள் போன்ற எல்லா விதியியல் சார்ந்த விடயங்களையும் உள்ளடக்கிய ரஹ்மானிய சாராம்சங்களாகத் திகளும் சிறிய விதைகள் மகரந்தங்களுக்குள் பாதுகாத்து அந்த விதைகளையும் சிறிய பெட்டகங்களில் பாதுகாக்கிறான். அந்தப் பெட்டகங்களின் தயாரிப்பு ‘ஆகு என்றால் ஆகிவிடும்’ என்று குர்ஆன் குறிப்பிடுவதைப் போன்று மிகச் சுலபமாகவும் மிக வேகமாகவும் தட்டுப்பாடுகளின்றித் தாராளமாகவும் இடம்பெறுகின்றது. உண்மையில் ஈமானியப் பிணைப்பு என்ற அத்தாட்சிப் பத்திரத்தின் மூலம் நீ இத்தகைய ஓர் அரசனைச் சார்ந்தவனாகிவிடுகின்றாய். உனக்கு மகத்தான ஓர் ஆதாரத் தளம் கிடைத்துவிடுகின்றது. எல்லையில்லாத ஒரு சர்வ வல்லமையைச் சார்ந்திருப்பதால் கிடைக்கின்ற பலம் உனக்குக் கிடைக்கும். நானும் குறித்த வசனத்திலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளும் போதெல்லாம் மிக வலிமை வாய்ந்த ஓர் ஆத்மார்த்த பலத்தைப் பெற்றுக்கொண்டேன். அந்தப் பலத்தின் மூலம் வெறுமனே தற்போதைய எதிரிகளை மாத்திரமன்றி முழு உலகுமே ஒன்று திரண்டு வந்தாலும் அதற்கெதிராகச் சவால் விடுக்கக்கூடிய ஓர் ஈமானியப் பலத்தை என்னுள் உணர்ந்தவனாக எனது முழுப்பலத்தையும் திரட்டி ஆழ் மனதால் حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ என்று கூறினேன். மூன்றாவது அந்தஸ்து பல வகையான தனிமைகள், நோய் நொடிகள் காரணமாக உலகத்தோடுள்ள தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையிலிருந்த போது நித்தியமான ஓர் உலகில் நித்தியமான ஓர் இருப்பிடத்தில் நித்தியமான ஒரு நிம்மதி உனக்காகக் காத்திருக்கின்றது என்ற ஈமானின் சத்தியப் பாடம் எனது நாவில் “ஐயோ, அநியாயமே” போன்ற கைசேதத்தின் வாடை வீசும் வார்த்தைகளைத் தூர்ந்து போகச் செய்து ஆணந்த மணம் கமழும் “ஆஹா, அருமை” போன்ற வார்த்தைகளை ஊற்றெடுக்கச் செய்தன. ஆனால் ஆத்மாவின் தீராத ஆசையாகவும் மனித இயல்பின் இறுதி விளைவாகவும் திகழும் அந்த ஆசை எல்லா வஸ்துகளின் எல்லா வகையான விருப்பு வெறுப்புகளையும் எல்லா ஆழ அகலங்களோடும் அறிந்த, இயலாமையின் மொத்த உருவான மனிதனைப் பூமியில் தனது பிரதிநிதியாக ஆக்கிய, எல்லா சிருஷ்டிகளுக்கும் மேலால் மனிதனுக்கு மகத்தான ஓர் அந்தஸ்த்தைக் கொடுத்த ஏக வல்லோன் அல்லாஹ்வின் மட்டற்ற அருளாலும் ஆதரவாலும் வல்லமையாலும் மனிதன் மீது அவனது பிரத்தியேக முக்கியத்துவத்தாலும் மாத்திரமே நிறைவேற்றித் தரப்பட முடியும். இந்த விடயத்தைச் சிந்தித்துக்கொண்டிருக்கும் போது இந்த இரண்டு அம்சங்களுக்கும் அதாவது இப்படிப்பட்ட ஒரு வல்லமையின் மகத்தான செயற்பாடுகளுக்குப் பின்னாலுள்ள தாத்பரியம் என்ன என்பதற்கும் அந்த மகத்தான செயற்பாடுகளுக்கு மத்தியில் பார்வைக்கு முக்கியத்துவமற்ற அற்பமான மனிதனுடைய உண்மையான முக்கியத்துவமும் பெறுமதியும் என்ன என்பதற்கும் ஈமானை அதிகரிக்கச் செய்து ஆத்மாவைத் திருப்திப்படுத்துகின்ற ஒரு விளக்கத்தை ஆசித்தவனாக மீண்டும் அதே வசனத்திடம் விண்ணப்பித்தேன். அந்த வசனம் “حَسْبُنَا விலுள்ள نَا வைப் பார்! உன்னோடு இணைந்து எவர்கள், எவைகளெல்லாம் தத்தமமது மெய்ம்மொழிகளாலும் நாவுகளாம் حَسْبُنَا என்று கூறுகின்றன என்பதைக் கவனி!” என்று கட்டளையிட்டது. அப்போது படைப்புகளை நோக்கிப் பார்வையைச் செலுத்தினேன். எண்ணற்ற பறவைகளும் பூச்சி புழுக்களும் தாவர விலங்குகளும் புற் பூண்டுகளும் என்னைப் போன்று, தத்தமது மெய்ம் மொழிகளால் حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ உடைய அர்த்தத்தைப் பாராயணம் செய்வதைக் கண்டுகொண்டேன். ஏனெனில் அவற்றின் வாழ்வாதாரங்களைப் பொறுப்பேற்று நிறைவேற்றி வைக்கின்ற எத்தகைய ஒரு பொறுப்புதாரி (وَكِيلُ) இருக்கின்றான் எனில் அவன் எமது கண்களுக்கு முன்னால் ஒன்றுக்கொன்று ஒப்பான, ஒரே வகை மூலக்கூறுகளால் ஆக்கப்பட்ட எண்ணற்ற முட்டைகளிலும் ஒன்றையொன்று ஒத்த எண்ணற்ற விதைகளிலும் இருந்து தலா ஒவ்வொரு இலட்சம் வகையான பூச்சி இனங்களையும் பறவை இனங்களையும் தாவர, விலங்கினங்களையும் குறைகள் குழப்பங்களோ தப்புத் தவறுகளோ ஏற்பட்டுவிடாமல் பிரத்தியேகமான அழகிய வடிவங்களில் ஒழுங்காகவும் நேர்த்தியாகவும் சிருஷ்டிக்கிறான். குறிப்பாக ஒவ்வொரு வசந்த காலத்திலும் விசாலமான ஒரு வட்டத்தில் மிகையாகவும் மிகச் சுலபமாகவும் சாரி சாரியாக அவற்றைப் படைக்கிறான். ஆம், இத்தகைய ஒரு வல்லமையின் மகத்துவத்துக்கும் கீர்த்திக்கும் கீழ் ஒன்றுக்குள் ஒன்றாக, ஒன்றையொன்று ஒத்த, கூட்டுறவைப் பிரதிபலிக்கும் செயற்பாடுகளும் நிகழ்வுகளும் உண்மையில் அந்த வல்லமையின் வஹ்தத்தையும் அகதியத்தையுமே எமக்குக் காண்பிக்கின்றன. இவ்வாறு எண்ணற்ற அற்புதங்களை எமது கண்களுக்கு முன்னால் காட்சிப்படுத்துகின்ற ஒரு வல்லமையின் வியக்கத்தக்க பரிபாலிப்பிலும் சிருஷ்டிப்பிலும் புறத் தலையீடுகளோ பங்குதாரர்களோ எந்த விதத்திலும் சாத்தியமில்லை என்பதை அந்த வசனத்தின் அர்த்தம் பிரகடனம் செய்வதைக் கண்டுகொண்டேன். ஒவ்வொரு முஃமினுடையதையும் போல், எனது ஆளுமையின் தன்மை, மானுடத்தின் இயல்பு என்பவற்றை விளங்கிக்கொள்ள விரும்புபவர்களும் அந்த விடயங்களில் என்னைப் போன்று ஆக விரும்புபவர்களும் حَسْبُنَا விலுள்ள نَا உடைய உள்ளடக்கத்துக்குள் வருகின்ற “அன” அதாவது எனது நஃப்ஸுடைய தஃப்ஸீரைப் பார்க்கட்டும். முக்கியத்துவமற்ற, அற்பமான, பலவீனமான எனது உடலின் தன்மை -எல்லா முஃமின்களுடைய உடள்களையும் போன்று- என்ன? வாழ்க்கை என்றால் என்ன? மனிதன் என்றால் என்ன? இஸ்லாமியத் என்றால் என்ன? தஹ்கீக்கான ஈமான் என்றால் என்ன? மாஃரிபதுல்லாஹ் என்றால் என்ன? முஹப்பத் எவ்வாறு அமைய வேண்டும்? போன்ற விடயங்களைப் புரிந்து, தத்தமக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்ளட்டும். நான்காவது அந்தஸ்த்து வயோதிபம், தனிமை, நோய்நொடிகள், தோல்விகள் என்று உடலை வதைக்கும் நிர்க்கதிகளுடன் கூடவே பொடுபோக்கிலும் மூழ்கியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் நான் கடுமையாகக் காதலும் மோகமும் கொண்டுள்ள எனது இருப்பும் ஏனைய வஸ்துகளுடைய இருப்புகளும் இல்லாமை நோக்கிச் செல்கின்றனவே என்ற ஆதங்கம் என்னுள் மிகப் பயங்கரமான ஓர் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மீண்டும் அந்தச் சங்கையான வசனத்திடம் விண்ணப்பித்தேன். அந்த வசனம் “ஈமானியத் தொலைகாட்டியூடாக எனது அர்த்தத்தை உன்னிப்பாகப் பார்!” என்று கூறியது. நானும் அவ்வாறே பார்த்தேன். அப்போது என்னுடைய இந்த அற்பமான உடல் எல்லா முஃமின்களுடைய உடல்களையும் போன்றே வரம்புகளோ வரையறைகளோ அற்ற ஓர் இருப்பின் கண்ணாடியாகவும் எல்லையில்லாத ஓர் ஈடேற்றத்தின் மூலம் முடிவற்ற இருப்பைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு வஸீலாவாகவும் தன்னைவிடப் பெறுமதியில் உயர்ந்த, நித்தியமான பல்வேறு இருப்புகளைக் கணிகளாகத் தரக்கூடிய ஒரு ஞானம் பொதிந்த வார்த்தையாகவும் அல்லாஹ்வுடனான வலுவான பிணைப்புக் காரணமாக தனது கனப்பொழுது வாழ்க்கை நித்தியமான ஓர் உடலைப் போன்று பெறுமதிமிக்கதாக இருப்பதையும் இல்மல் யகீனாக அறிந்துகொண்டேன். அதாவது, ஈமானியப் பிரக்ஞையூடாக எனது இந்த உடல் வாஜிபுல் வுஜூதுடைய ஓர் ஆக்கமாகவும் கலைப்பாடாகவும் பிரதிபலிப்பாகவும் இருப்பதைப் புரிந்துகொண்டதால் பயங்கரமான சந்தேகங்களிலிருந்தும் எண்ணற்ற பிரிவுகளிலிருந்தும் முடிவில்லாத பிரிவுகள் இழப்புகளால் ஏற்படுகின்ற வலிகளிலிருந்தும் விடுதலை பெற்றேன். அத்துடன் வஸ்துகளுக்கு மத்தியிலுள்ள குறிப்பாக ஜீவ இனங்களுக்கு மத்தியிலுள்ள தெய்வீகத் தொழிற்பாடுகளினதும் அவற்றில் பிரதிபலிக்கின்ற இறை நாமங்களினதும் எண்ணிக்கையளவு சகோதரத்துவப் பிணைப்புகள் மூலம் நான் தொடர்புபட்டுள்ள எனது நேசத்துக்குரிய எல்லா சிருஷ்டிகளுக்கும் தற்காலிகமான ஒரு பிரிவுக்குள் நிரந்தரமான ஒரு மீளிணைவு காத்திருக்கின்றது என்பதையும் அந்த ஈமானியப் பிரக்ஞையூடாகத் தெளிவாக அறிந்துகொண்டேன். ஆம், ஈமான் மூலமும் ஈமானில் பொதிந்துள்ள வலுவான பிணைப்பின் மூலமும் ஒவ்வொரு முஃமினுடையதையும் போன்று, எனது இந்த உடலும் கூட பிரிவின் வாசனைகளற்ற எண்ணற்ற உடல்களின் ஒளியைப் பெற்றுக்கொள்ளும்; இந்த உடல் போனாலும் ஏனையவை நிலைத்திருப்பதால் தானும் இருப்பதைப் போன்று மகிழ்ச்சியடையும். சுருக்கமாக: மரணம் என்பது பிரிவல்ல. மாறாக அது ஓர் இணைவாகும்; இடமாற்றமாகும்; நித்தியமான ஒரு கணியின் தளிராகும். ஐந்தாவது அந்தஸ்த்து எனது வாழ்க்கை மிகக் கடுமையான சூழ்நிலைகளால் சூழப்பட்டிருந்த வேறொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் எனது பார்வை வாழ்க்கையை நோக்கியும் ஆயுளை நோக்கியும் திருப்பியது. அப்போது எனது கெடு வேகமாகக் கடந்துகொண்டிருப்பதையும் மறுமை என்னை மிகவும் அன்மித்திருப்பதையும் கண்டுகொண்டேன். எனது வாழ்வும் கூட நிர்க்கதிகளுக்கு மத்தியில் அணைந்து போய்க்கொண்டிருந்தது. ஆனால், அல்லாஹ்வுடைய “ஹய்” என்ற நாமம் தொடர்பாக ரிஸாலே நூரில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போன்று வாழ்வின் மகத்தான பணிகளும் பெருமதிவாய்ந்த பிரதிபலன்களும் சிறப்புகளும் இவ்வாறு விரைவாக மங்கி அழிந்து போவதற்கன்றி நீண்ட நெடிய காலம் நீடூழி வாழ்வதற்கு அருகதையுடையவையாகவே இருக்கின்றன. இந்த உண்மை எனது வலிகளையும் வேதனைகளையும் ஊடறுத்துக்கொண்டு எனது சிந்தனையில் நிழலாட ஆரம்பித்தது. எனவே, மீண்டும் எனது உஸ்தாகிய حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ என்ற அதே வசனத்திடம் விண்ணப்பித்தேன். அந்த வசனம் “உனக்கு வாழ்வை அளித்த ஹய்யுல் கய்யூம் ஆகிய வல்லோன் எந்தக் கோணத்தில் வாழ்வைப் பார்க்கிறானோ நீயும் அதே கோணத்தில் பார்” என்று கூறியது. நானும் அதே கோணத்தில் பார்த்த போது வாழ்வின் யதார்த்தத்தைக் கண்டுகொண்டேன். ஆம், எனது வாழ்வு என்னை ஒரு கோணத்தில் நோக்கியுள்ளதெனில் எனக்கு வாழ்வை அளித்த அந்த ஹய்யு கய்யூமை நூறு கோணங்களில் நோக்கியிருப்பதையும் அவ்வாறே அந்த வாழ்வின் என்னுடன் தொடர்பான விளைவுகளும் பிரதிபலன்களும் ஒன்றெனில் எனது படைப்பாளனுக்குரியவை நூறாக இருப்பதையும் எனவே அவனது பொருத்தத்தைப் பெற்றுத்தரக்கூடிய வட்டத்துக்குள் ஒரு கனப்பொழுது வாழ்வும் கூடத் தாராளமாகப் போதுமானதாகும் என்பதையும் நீண்ட நெடிய காலம் வாழ்ந்துதான் வாழ்வின் பலனை அடைய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்பதையும் அந்தக் கோணத்தில் பார்த்த போது கண்டுகொண்டேன். இந்த சத்தியம் நான்கு அம்சங்களூடாகத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மரணிக்காதவர்களும் புத்துயிர் பெற விரும்புபவர்களும் வாழ்வின் தன்மையையும் யதார்த்தத்தையும் அதன் உண்மையன அந்தஸ்து, உரிமை என்பவற்றையும் அந்த நான்கு அம்சங்களுக்குள்ளும் தேடிக் கண்டுபிடித்து புத்துயிர் பெற்றுக்கொள்ளட்டும். அந்த நான்கு விடயங்களினதும் சுருக்கம் பின்வருமாறு: வாழ்க்கை ஹய்யு கய்யூம் ஆகிய வல்லோனை நோக்கியிருக்கும் வரை, ஈமானும் கூட அந்த வாழ்வின் உயிராகவும் ஆத்மாவாகவும் இருக்கும் வரை அந்த வாழ்வு நித்தியமானதாகப் பரிணமிக்கும்; நித்திய கனிகளைப் பெற்றுத் தரும். அத்துடன் அந்த வாழ்வு எந்த அளவு கீர்த்தியையும் உன்னதத்தையும் அடைந்துகொள்ளும் எனில், “ஸர்மதிய்யத்” என்ற நித்தியத்துவம் அதில் பிரதிபலிக்க ஆரம்பிக்கும். அதன் பிறகு ஆயுளுடைய நீளம் குறைவானதா அல்லது நீளமானதா என்பது முக்கியமற்றுப் போய்விடும். ஆறாவது அந்தஸ்த்து ஒரு சமயம் எல்லா வஸ்துகளும் பரஸ்பரம் பிரியப் போகின்ற உலக அழிவைப் பற்றியும் இறுதிக் காலத்தைப் பற்றியும் வருகின்ற செய்திகளைப் பற்றிய சிந்தனையில் இருக்கும் போது நானும் எனது தனிப்பட்ட பிரிவை நினைவூட்ட முதுமையையும் ஆயுளின் இருதிப் பகுதியையும் அடைந்திருந்தேன். மறுபக்கம் எனது இயல்பில் உள்ள அழகின் மீதான நேசம் கவர்ச்சியின் மீதான மோகம் பூரணத்துவம் மீதான பற்று போன்ற உணர்வுகள் என்னுள் பொங்கிப் பிரவாகித்துக்கொண்டிருந்தது. அந்த சமயம் சதாவும் அனர்த்தங்களையும் பிரிவுகளையும் ஏற்படுத்திக்கொண்டிருந்த அழிவும் முடிவும் மரணமும் சூன்யமும் இந்த அழகிய உலகத்தையும் அதிலுள்ள அழகிய வஸ்துகளையும் மிகப் பயங்கரமாக சிதைத்து சின்னாபின்னப்படுத்தி அவற்றின் அழகை அசிங்கப்படுத்திக்கொண்டிருப்பதை ஆழமான ஓர் அவஸ்தையோடும் வலியோடும் அவதானித்தேன். எனது இயல்பில் பொதிந்துள்ள அடையாள ரீதியான காதலுணர்வு இந்த நிலைமைக்கு முன்னால் கடுமையாகத் தாக்கப்பட்டு நிலை தடுமாறிப் போயிருந்த வேளை ஓர் ஆறுதலைத் தேடி மீண்டும் மேற்படி வசனத்திடம் விண்ணப்பித்தேன். அது “என்னைக் கவனமாக வாசி! கவனமாக எனது அர்த்தத்தைப் பார்!” என்று கூறியது. நானும் ஸூரதுந் நூரில் اَللَّهُ نُورُ السَّمَوَاتِ وَاْلاَرْضِ என்று தொடர்கின்ற வசனத்தின் ஆத்மார்த்தமான சிகரத்தின் மீதேறி ஈமானியத் தொலைகாட்டியினூடாக மேற்படி வசனத்தின் அர்த்தப் பரப்புக்குள் உள்ளடங்குகின்ற மிகத் தொலைவான தராதரங்களையும் அங்குள்ள மிகத் துல்லியமான இரகசியங்களையும் பார்த்தேன். ஆம், விதவிதமான கண்ணாடிகளும் ஊடுபுகு தன்மை உடைய பதார்த்தங்களும் ஏன் நீர்க் குமிழிகளும் கூட சூரிய ஒளியின் பல்வேறுபட்ட இரகசியமான அழகியல்களையும அந்த ஒளியின் ஏழு நிறங்களுடைய வகை வகையான, கவர்ச்சிகரமான அழகிய பிரதிபலிப்புகளையும் காண்பிக்கின்ற அதே சமயம் புதுப்பித்தல்கள் மூலமாகவும் அசைவுகள் மூலமாகவும் வெவ்வேறான ஆற்றல்கள், திறன்கள் மூலமாகவும் ஏன் வெடிப்புகள், உடைவுகள் மூலமாகவும் அந்த அழகையும் கவர்ச்சியையும் சதாவும் புதுப்பிக்கொண்டும் பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்திக்கொண்டும் இருக்கின்றன. அவ்வாறே நித்திய ஒளியாகிய பேரழகும் மாட்சிமையுமிக்க வல்லோனின் புனிதமான அழகுக்கும் அவனது எண்ணற்ற அழகிய அஸ்மாஉல் ஹுஸ்னாக்களுடைய நித்தியமான அழகியல்களுக்கும் ஆடிகளாகத் தொழிற்படுவதற்காகவும் அவற்றின் பிரதிபலிப்புக்களைப் புதுப்பிப்பதற்காகவும் இந்த அழகிய, கண்குளிர்ச்சி தருகின்ற சிருஷ்டிகள் சதாவும் வந்து செல்கின்றன. அவற்றில் புலப்படுகின்ற அழகும் கவர்ச்சியும் அவற்றின் சொந்த உடமைகள் அல்ல. மாறாக அவை நித்தியமான, புனிதமான, தூய்மையான, தெளிவான ஓர் அழகின் கீற்றுகளும் பிரதிபலிப்புகளும் புலப்படுவதை நாடுகின்ற அந்த அழகின் தடயங்களும் ஆகும். இந்த சத்தியத்துக்கான மிக வலுவான அத்தாட்சிகள் ரிஸாலே நூரின் பல்வேறு பகுதிகளில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக “இந்த இடத்தில் அந்த அத்தாட்சிகளிலிருந்து மூன்று மாத்திரம் சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது...” என்று ஆரம்பிக்கின்ற ரஸாயில் முக்கியமானதாகும். இந்தப் பகுதியை முழுமையாக அனுபவித்து வாசிக்கின்ற ஒவ்வொருவரும் வியப்பில் ஆழ்வதையும் பிறரும் அதன் மூலம் பயனடைந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் உழைப்பதைத் தம்மீது கடமையாக்கிக்கொள்வதையும் காண்கிறோம். குறிப்பாக இரண்டாவது அத்தாட்ச்சியில் ஐந்து குறிப்புக்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன. அறிவு மங்கி, உள்ளம் அழுகிப் போகாதவர்கள் நிச்சயமாக ‘மாஷா அல்லாஹ், ஃபதபாரகல்லாஹ்’ என்று வாழ்த்துக் கூறி மகிழ்வார்கள். பலவீனமானதாகவும் அற்பமானதாகவும் புலப்படுகின்ற தமது உடலை மகத்துவம் மிக்கதாக மாற்றுகின்ற ஓர் அற்புதமாக அது இருப்பதை ஏற்று உண்மைப்படுத்துவார்கள்.
தள்ளாடும் வயதில் இருந்த ஒரு சமயம் ‘எமிர்டாஃக்’ நகரில் ஒரு வீட்டில் தன்னந்தனியாக வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தேன். அங்கு என் மீது ஏவிவிடப்பட்டிருந்த கடுமையான கண்காணிப்பும் அழுத்தங்களும் என்னைச் சித்திரவதைப்படுத்துவதாக இருந்ததால் வாழ்க்கையில் ஒரு சோர்வு ஏற்பட்டது. சிறையிலிருந்து விடுதலையானதை எண்ணியும் கவலையடைந்தேன். எனவே ‘டெனிஸ்லி’ சிறைச்சாலைக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்று மனதார விரும்பினேன். அல்லது மண்ணறைக்குச் செல்வதை ஆசித்தேன். அதாவாது, சிறைச்சாலை அல்லது மண்ணறை இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை விடச் சிறந்ததாகும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் அருள் எனது உதவிக்கு வந்தது. பேனாக்களை அச்சியந்திரங்களைப் போல் பயன்படுத்திக்கொண்டிருந்த நூர் மாணவர்களுடைய கரங்களுக்கு புதிதாக சந்தைக்கு வந்த அச்சியந்திரமொன்றை அருளினான். இதன் மூலம் குறுகிய காலத்துக்குள் ரிஸாலே நூரின் ஒவ்வொரு பாகத்திலும் தலா ஐநூறு பதிப்புக்கள் அச்சிடப்பட்டன. இத்தகைய ஒரு மைல்கல் அந்த வேதனைமிக்க வாழ்க்கையை எனக்கு இனிக்கச் செய்தது. “ரப்புக்கு எண்ணற்ற நன்றிகள் உண்டாவதாக!” என்று என்னைக் கூற வைத்தது. சிறிது காலத்துக்குப் பிறகு திரை மறைவில் செயற்படுகின்ற ரிஸாலே நூரின் இரகசிய எதிரிகளுக்கு இந்த விடயம் பீதியை ஏற்படுத்தியதால் மீண்டும் சூழ்ச்சி செய்து அரசாங்கத்தை எமக்கெதிராகத் திருப்பிவிட்டனர். அதைத் தொடர்ந்து வாழ்க்கை மீண்டும் எனக்குக் கடினமானதாக மாறத் தொடங்கிய வேளை மீண்டும் இறை அருளின் நிழல் கிடைத்தது. ரிஸாலே நூரின்பால் மிக அதிகமான தேவையுடைய அரச அதிகாரிகள் ரிஸாலே நூரரைத் தடை செய்வதற்கான சாட்டுப் போக்குகளைத் தேடுவதற்காக ரிஸாலே நூரின் பாகங்களை மிக அவதானத்தோடு ஆராய ஆரம்பித்தனர். ஆனால், ரிஸாலே நூர் அவர்களைத் தன் பக்கம் கவர்ந்துகொண்டது. அவர்கள் குறைகளுக்குப் பதிலாக அதன் பெறுமதியைப் புரிந்துகொண்டதால் நூர் மத்ரஸாக்களின் எல்லை விரிவடைய ஆரம்பித்தது. சட ரீதியான இழப்புகளைவிட நூறு மடங்கு அதிகமான நலவுகளுக்குக் காரணியாக அமைந்த இத்தகைய நிகழ்வுகள் எமது ஆதங்கங்களையும் அச்சங்களையும் முழுமையாக நீக்கிவிட்டது. பின்னர் இரகசிய எதிரிகளான முனாஃபிக்கள் அரசாங்கத்தின் அவதானத்தை தனிப்பட்ட முறையில் என் மீது திருப்ப முயற்சித்தனர். எனது பழைய அரசியல் வாழ்க்கையை அவர்களுக்கு நினைவூட்டி நீதித்துரையினருக்கும் கல்வி அமைச்சுக்கும் உள்துறை அமைச்சுக்கும் பொலிஸாருக்கும் மத்தியில் என் மீதான சந்தேகங்களைக் கிளறிவிட்டனர். ஏகப்பட்ட கட்சிகளின் தோற்றமும் கம்யூனிஸ திரைக்குப் பின்னால் அனார்கிஸ்ட்களுடைய அடாவடித்தனங்களும் அந்த சந்தேகத்துக்க்கு மென்மேலும் எண்ணை ஊற்றியது. எனவே மீண்டும் எம்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கவும் எமது செயற்பாடுகளை முடக்கவும் மக்களிடமுள்ள ரிஸாலே நூர் பிரதிகளைச் சேகரிக்கவும் ஆரம்பித்தனர். மீண்டும் ரிஸாலே நூர் மாணவர்களுடைய செயற்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டது. தனிப்பட்ட முறையில் என் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சில அரச அதிகாரிகள் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத இட்டுக்கட்டல்களைப் பரப்பினர். ஆனால், அவற்றை யாருமே நம்பவில்லை. பின்னர் மார்களி மாதம், பணி மழை கொட்டிக்கொண்டிருந்த கடுமையான குளிர் நாட்களில் ஏதேதொ சாட்டுகளைக் கூறி வலுக் கட்டாயமாக என்னை அழைத்துச் சென்று குளிருக்கு எரிப்பதற்குத் தேவையான விறகுக் கட்டைகளோ சூட்டடுப்போ இல்லாத நிலையில் அகண்ட, கடும் குளிரான ஒரு மண்டபத்தில் வீட்டுக்காவலில் வைத்தார்கள். ஏலவே இருந்த அறை சிறியதாகவும் சூடேற்றுவதற்குத் தேவையான ஏற்பாடுகளோடுமே இருந்தது. ஆனால் நான் கடுமையான நோய் காரணமாகவும் முதுமை காரணமாகவும் மிகவும் நலிந்து போயிருந்ததால் அதைக் கூட மிகுந்த கஷ்டத்தோடே தாக்குப் பிடித்தேன். இப்போது இந்த அறையில் கடும் குளிர் காரணமாக ஆஸ்துமா நோயினாலும், தாங்க முடியாத நடுக்கத்தினாலும் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். அவ்வாறிருக்கும் போது அருள் வடிவான ஒரு சுபசோபனம் எனது உள்ளத்தில் உதித்தது. அதாவது: “சிறைச்சாலைக்கு ‘மத்ரஸா யூஸுஃபிய்யா’ என்று பெயர் சூட்டியவனே! ‘டெனிஸ்லி’ சிறைச்சாலையில் எதிர்கொண்ட துன்பங்களைவிட ஆயிரம் மடங்கு அதிகமான சுகமும் ஆத்மார்த்தமான இலாபங்களும் உமக்குக் கிடைத்துவிட்டன. அத்துடன் அங்கிருந்த கைதிகள் ரிஸாலே நூர் மாணவர்களாக மாறியமை, மேல் மட்டங்கள் வரை ரிஸாலே நூர் மாணவர்கள் தோற்றம் பெறக் காரணியாக அமைந்தமை போன்ற விளைவுகள் உண்மையில் உங்கள் அனைவரையும் முறைப்பட்டுக்கொள்ளவதற்குப் பதிலாக நன்றி செலுத்த வைத்தன. சிறையில் கழித்த ஒவ்வொரு மனித்தியாலத்தையும் பத்து மணித்தியால வணக்கங்களாகவும் அந்தத் தற்காலிகமான பொழுதுகளை நித்தியமான பொழுதுகளாகவும் மாற்றிவிட்டன. இன்ஷா அல்லாஹ் இந்த மூன்றாவது மத்ரஸா யூஸுஃபியாவில் இருக்கும் பாவப்பட்ட மனிதர்கள் ரிஸாலே நூர் மூலம் பயனடைவதும் நிம்மதியான ஒரு வாழ்வைப் பெற்றுக்கொள்வதும் கடும் குளிரில், உடலை நடுங்க வைக்கின்ற உமது இந்த அவஸ்தைகளை சூடான நினைவுகளாகவும் மகிழ்ச்சியான பொழுதுகளாகவும் மாற்றிவிடும். உமக்குக் கொடுமை செய்பவர்கள் ஏமாற்றி அழைத்துவரப்பட்டவர்கள் எனில் அறியாமை காரணமாகவே கொடுமை செய்கின்றனர். உண்மையில் கோபத்தைக் கொட்டித் தீர்ப்பதற்கு அவர்கள் லாயக்கானவர்கள் அல்லர். மாறாக அறிந்துகொண்டே விருப்பத்தோடும் வழிகேடர்களின் பொருட்டுக்காகவும் உம்மைத் துண்புறுத்தி சித்திரவதைப் படுத்துகிறார்கள் எனில் அவர்கள் மிகச் சொற்ப காலத்துக்குள் நிச்சயமாக மரணம் என்ற மரண தண்டனையால் கைதாகி மண்ணறை என்ற வீட்டுக்காவலில் தடுத்து வைக்கப்பட்டு முடிவற்ற வேதனைகளையும் துன்பங்களையும் அனுபவிக்கத்தான் போகிறார்கள். ஆனால் அவர்கள் புரிகின்ற இந்தக் கொடுமைகளால் உமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்ற அதே சமயம் கழிந்து செல்கின்ற தற்காலிகமான பொழுதுகளை நித்தியமானவையாக மாற்றியும் தருகின்றன. அத்துடன் ஆத்மார்த்தமான இன்பங்களுடன் கூடவே உமது அறிவுப் பணியை இஹ்லாஸோடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கின்றது!” என்று எனது ஆத்மாவில் ஓர் உபதேசமாக உதித்தது. நானும், எனது முழுப் பலத்தையும் பிரயோகித்து “அல்ஹம்துலில்லாஹ்” என்றேன். மனிதாபிமான அடிப்படையில் அந்தக் கொடுங்கோலர்களுக்காக வருத்தப்பட்டேன். “யா ரப்பி! அவர்களை நேர்வழிப்படுத்துவாயாக!” என்று துஆச் செய்தேன். இந்த நிகழ்வு தொடர்பாக எனது வாக்குமூலத்தில் உள்துறை அமைச்சுக்கு எழுதியதைப் போன்று பத்துக் கோணங்களில் சட்டவிரோதமாக செயற்பட்டு, சட்டத்தின் பெயராலேயே சட்டத்தை மீறும் உண்மையான குற்றவாளிகளாகிய அந்தக் கொடுங்கோலர்கள் நகைப்புக்கிடமான சாட்டுப் போக்குகளையும் நீதியை விரும்பும் உள்ளங்களை அழ வைக்கின்ற அவதூறுகளையும் இட்டுக்கட்டினார்கள். இவ்வாறு பொய்களையும் அவதூறுகளையும் நாடியதன் மூலம் உண்மையில் ரிஸாலே நூரின் மீதும் அதன் மாணவர்கள் மீதும் குற்றம் சுமத்துவதற்கு சட்டத்தினதும் நீதியினதும் அடிப்படையில் எந்த ஒரு சான்றும் கிடையாது என்பதை சிந்திக்கின்ற மனிதர்களுக்கு நிரூபித்துவிட்டார்கள். இவர்கள் பித்துப் பிடித்தலைவதற்கான காரணம் இது தான். இந்த விடயத்தின் தொடராக.. ஒரு மாதமாக எம்மை உலவு பார்க்கின்ற அதிகாரிகள் குற்றம் சுமத்துவதற்கு எந்த ஒரு சாட்டுப் போக்கையும் கண்டுபிடிக்க முடியாமல் போனதால் நான் ஒருவரை அனுப்பி எனக்காகச் சாராயம் வாங்கினேன் என்று நிரூபிப்பதற்காக ஒரு பற்றுச் சீட்டை எழுதி அதற்கு ஒப்பம் வைக்க ஒருவரைத் தேடியுள்ளனர். யாருமே முன்வராததால் இறுதியாக அந்த மஹல்லாவில் சுற்றித் திரிகின்ற ஒரு குடிகாரனிடம் போய்ப் பலவந்தமாக ஒப்பம் வாங்க முனைந்துள்ளனர். அந்த மனிதன் “தவ்பா, தவ்பா... இவ்வளவு கோமாளித்தனமான ஒரு பொய்யை யார் நம்புவார்கள்? அதன் மீது யார்தான் ஒப்பம் வைப்பார்கள்!?” என்று கூற, அவர்கள் வேறு வழியின்றி அந்தப் பற்றுச் சீட்டைக் கிழித்துப் போட்டுள்ளனர். இரண்டாவது ஓர் உதாரணம் நான் அறிந்தேயிராத, இன்றுவரை யாரென்று தெரியாத ஒரு மனிதர் தனது குதிரையை எனது தேவைகளுக்காக என்று வழங்கியுள்ளார். நானும் கஷ்ட நிலைமைகளின் போது காற்றாறுவதற்காக கோடை காலத்தின் அதிகமான நாட்களில் நாளாந்தம் ஓரிரு மணித்தியாலங்கள் குதிரைச் சவாரி செய்வேன். எனது வாழ்க்கைக் கோட்பாட்டை மீறாதிருப்பதையும் பிறருக்கு நன்றிக்கடன் பட்டவனாக வாழாதிருப்பதையும் நோக்காகக்கொண்டு அந்தக் குதிரையின் உரிமையாளருக்கு ஐம்பது லீரா பெருமதியான புத்தகங்களை வழங்குவதாக வாக்களித்திருந்தேன். எப்படியோ இது யாருக்கும் எந்தத் தீங்கும் இல்லாத ஒரு சமாச்சாரமாகும் என்பதை சிறு பிள்ளையும் அறியும். நிலைமை இவ்வாறிருக்க “அந்தக் குதிரை யாருடையது?” என்று கேட்டு குறைந்தது ஐம்பது முறையாவது அந்த நகரத்தின் ஆளுனரும் நீதித் துறையினரும் பொலீஸாரும் நச்சரித்தவண்ணமிருந்தனர். ஏதோ பெரியதோர் அரசியல் விவகாரம் போன்று அல்லது தேசிய பாதுகாப்போடு தொடர்பான ஒரு சம்பவத்தைப் போன்று பெரிதுபடுத்த முனைந்தனர். பின்னர் இந்த அர்த்தமற்ற நச்சரிப்புகளைத் தடுப்பதற்காக இருவர் முன்வந்து ஒருவர் “குதிரை என்னுடையது” என்றும் மற்றவர் “குதிரை வண்டி என்னுடையது” என்றும் கூறினர். இறுதியில் என்னுடன் அந்த இருவருக்கும் பிடியாணை பிறப்பித்தார்கள். இத்தகைய நிகழ்வுகளின் போதெல்லாம் சிறுவர்களின் கோமாளிக் கூத்துகளைப் பார்த்து சிரிப்பதைப் போன்று சிரித்துக்கொண்டே அவர்களது பரிதாப நிலைக்காக அழுதோம். மக்கள் முன்னிலையிலும் அதே நிலைமைக்கே ஆளானார்கள். ரிஸாலே நூரையும் அதன் மாணவர்களையும் சீண்ட வருபவர்கள் இவ்வாறு நகைப்புக்கிடமான நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்பதையும் விளங்கிக்கொண்டோம். இத்தகைய உதாரணங்களின் போது இடம்பெற்ற அழகிய ஒரு சம்பாஷனை என்னுடைய பிடியாணையில் “பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்” என்ற விடயம் நான் கைது செய்வதற்கான காரணமாக எழுதப்பட்டிருந்தது. நான் அந்தப் பிடியாணையைப் பார்க்க முன்னரே அரசாங்க வழக்கறிஞரிடம் “கடந்த இரவு உம்மைப் பற்றிப் புறம் பேசினோம்” என்று கூறினேன். அதாவது பொலிஸ் அதிகாரியின் பெயரால் என்னைப் பேச வைத்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தரிடம் “ஆயிரம் அரசாங்க வழக்கறிஞர்களினதும், ஆயிரம் பொலிஸ் அதிகாரிகளினது அளவு இந்த நாட்டின் பாதுகாப்புக்காக நான் பங்களிப்புச் செய்யவில்லை என்றிருந்தால் அல்லாஹ் என்னை மூன்று முறை நாசமாக்குவானாக!” என்று கூறினேன். பின்னர் ஈத்தகைய ஒரு நிலையில் அந்தக் கடும் குளிருக்கு மத்தியில் மிகுந்த ஓய்வுக்கும் இதமான வெப்ப நிலைக்கும் உலகைப் பற்றிய சிந்தனையின்றி இருப்பதற்கும் எப்போதும் இல்லாத அளவு மிகுந்த தேவையுடையவனாக இருந்த வேளையில் வேண்டுமென்றே செய்வதைப் போன்று என்னை எனது சக்திக்கு அதிகமான இடமாற்றங்களுக்கும் அழுத்தங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் தனிமைக்கும் ஆளாக்கினார்கள். இதன் காரணமாக எனக்கு அவர்கள் மீது ஒரு வெறுப்பும் கோபமும் ஏற்பட்டது. அப்போது ஓர் இறை ஈகை எனது உதவிக்காக வந்தது. எனது உள்ளத்தில் பின்வருமாறு நினைவூட்டப்பட்டது. “மனிதர்கள் உமக்குப் புரிகின்ற கொடுமைகளில் நீதியின் மொத்த வடிவமான இறை நியதிக்குரிய பெரியதொரு பங்கும் இருக்கின்றது. கூடவே இந்தச் சிறைச்சாலையில் உமக்கான ரிஸ்கும் உள்ளது. உமக்கான அந்த ரிஸ்க் உம்மை இங்கு அழைத்துக்கொண்டது. எனவே அவற்றை பொருத்தத்தோடும் சரணாகதியோடும் எதிர்கொள்வது அவசியமாகும். அத்துடன் இறை ஞானம், இறை கருணை என்பவற்றுக்கும் பெரியதொரு பங்கு இருக்கின்றது. அதாவது இங்கு சிறைச்சாலையில் இருப்பவர்களுக்கு பிரகாசமான ஒரு பாதையைக் காண்பித்துக்கொடுப்பதன் மூலம் நிம்மதியும் உமக்கு நன்மைகளை அள்ளி வழங்குவதற்கான வாயிலும் திறந்து தரப்படுகின்றது. எனவே இதற்காகவும் பொருமையோடு ஆயிரமாயிரம் நன்றி செலுத்துவது அவசியமாகின்றது. அத்துடன் உமது நஃப்ஸில் உம்மை அறியாமலேயே குடிகொண்டுள்ள குற்றம் குறைகளுக்கும் ஒரு பங்கு இருக்கின்றது. எனவே அவற்றுக்காக இஸ்திஃபாரும் தௌபாவும் செய்து, உமது நஃப்ஸிடம் “நீ இந்தத் தண்டனைளுக்கு அருகதையாகிவிட்டாய்” என்று கூறுவது அவசியமாகும். மேலும் திரைமறைவில் இயங்கும் எதிரிகள் சதித் திட்டங்கள் மூலம் சில ஏமாளி அதிகாரிகளை ஏமாற்றி அத்தகைய அக்கிரமங்களைப் புரிவதற்கு அவர்களை நிர்ப்பந்திப்பதால் திரைமறைவில் செயற்படுகின்ற அந்த எதிரிகளுக்குரிய ஒரு பங்கும் இருக்கின்றது. ரிஸாலே நூர் இப்படிப்பட்ட முனாபிக்குகளுக்குக் கொடுத்த ஆத்மார்த்தமான பயங்கர எச்சரிக்கை அடிகள் மூலமாக அவர்களுடைய செயல்களுக்கு மொத்தமாகவே பலி தீர்க்கப்பட்டுவிட்டது. அது அவர்களுக்குத் தாராளமாகவே போதுமானதாகும். இறுதிப் பங்கு நேரடியாகக் கொடுமை புரிகின்ற அதிகாரிகளுக்குரியதாகும். இந்தப் பங்கு விடயத்தில் அவர்கள் ரிஸாலே நூரை வெறுப்போடு பார்க்காதிருப்பதற்கும் விரும்பியோ விரும்பாமலோ ஈமானிய விடயத்தில் அதிலிருந்து பயன் பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ என்ற விதியின் பிரகாரம் அவர்களை மண்ணித்துவிடுவதே பெருந்தன்மையாகும்.” இந்த சத்தியமான நினைவூட்டலுக்குப் பின்னர் நான் பூரண திருப்தியோடு, இந்தப் புதிய யூஸுஃபிய்ய மத்ரஸாவில் தங்குவதற்கும், எனக்கெதிராக நிற்பவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக என்னை உண்மையிலேயே குற்றவாளியாக்குகின்ற பாதிப்பேதும் இல்லாத ஒரு குற்றத்தைப் புரிவதற்கும் தீர்மானித்தேன். அத்துடன் என்னைப் போன்று அகவை எழுபத்தி ஐந்தை எட்டிய, யாரும் அலட்டிக்கொள்ளாத, மிஞ்சிப் போனால் ஐந்தாறு நண்பர்கள் மாத்திரமே உயிர் வாழ்கின்ற ஒருவருக்குத் தான் முன்னெடுத்துச் சென்ற ஈமானியப் பணியை நிறைவேற்றுவதற்காக எழுபதாயிரம் ரிஸாலே நூர் பிரதிகள் எல்லாத் தடைகளையும் கடந்து சுதந்திரமாக நடமாடிக்கொண்டிருப்பதும் தனது ஒரு நாவுக்குப் பதிலாக ஆயிரக்கணக்கான நாவுகளால் இந்த ஈமானியப் பணியை செய்யக்கூடிய சகோதர உறவுகளும் வாரிஸுகளும் வாய்க்கப் பெற்றிருப்பதும் மிகப் பெரிய ஒரு பாக்கியமாகும். ஏனவே என்னைப் பொருத்தவரை மண்ணறையானது இந்த சிறைச்சாலையைவிட நூறு மடங்கு சிறந்ததாகும். அவ்வாறே இந்த சிறைச்சாலையும் கூட வெளியில் சுதந்திரமின்றி அழுத்தங்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் மத்தியில் கழிகின்ற ஒரு வாழ்க்கையை விட நூறு மடங்கு சிறப்புக்குரியதாகும். ஏனெனில், வெளியில் என் மீது ஏவிவிடப்பட்ட நூற்றுக்கணக்கான உத்தியோகத்தர்களின் ஈனச் செயல்களோடு தன்னந்தனியாக மல்லுக்கு நிற்பதற்குப் பதிலாக சிறைச் சாலையில் நூற்றுக்கணக்கான கைதிகளுடன் இணைந்து வெறுமனே சிறைச்சாலை அதிகாரி, கங்காணி ஆகிய ஓரிருவரின் சிறு சிறு அழுத்தங்களுக்கே ஆளாகறேன். அதே சமயம் சிறைச்சாலையில் ஏராளமான, உளப்பூர்வமான தோழர்கள் கிடைக்கின்றனர். அவர்களிடம் சகோதர வாஞ்சையுடன் கூடிய உதவிகளையும் ஆறுதல்களையும் கண்டுகொள்ளலாம். மேலும் இஸ்லாம் கற்றுத் தருகின்ற கருணை உணர்வும் மனிதனுடைய இயல்பும் இந்த நிலையிலுள்ள ஒரு வயோதிபரை இரக்க உணர்வோடு பார்க்க வைப்பதால் அது சிறைச்சாலையின் கஷ்டங்களை அருள்களாக மாற்றிவிடுகின்றது. எனவே சிறை வாழ்வைப் பொருந்திக்கொண்டேன். இந்த மூன்றாவது நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக வந்த போது உடல் பலவீனம், முதுமை, நோய்நொடிகள் காரணமாக தொடர்ந்தும் நின்றுகொண்டிருக்க முடியாததால் நீதிமன்றக் கதவுக்கு வெளியில் ஒரமாக உள்ள ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். அப்போது அங்கு வந்த ஒரு நீதிபதி பொங்கியெழ ஆரம்பித்தார். “ஏன் இவரால் மாத்திரம் நின்றுகொண்டிருக்க முடியாது?” என்று குமுறினார். நானும் வயோதிபன் என்ற வகையில் இந்த ஈவிரக்கமற்ற நடத்தையை ஆட்சேபித்தேன். அப்போது அங்கு குழுமிய ஏராளமான முஸ்லிம்கள் அன்போடும் சகோதர வாஞ்சையுடனும் எனக்கு ஆதரவாக நின்றனர். அந்தச் சந்தர்ப்பத்தில் “இரண்டு சத்தியங்கள்” எனது நினைவுக்கு வந்தன. ஒன்று எனக்கும் ரிஸாலே நூருக்கும் எதிராகத் திரை மறைவில் செயற்படுகின்ற எதிரிகள் நான் விரும்பாமலேயே மக்கள் என் மீது வைத்துள்ள ஈடுபாடுட்டை இல்லாமல் செய்வதற்காகவும் அதன் மூலம் ரிஸாலே நூருடைய வெற்றிகளைத் தடுத்து நிருத்துவதற்காகவும் சில ஏமாளி உத்தியோகத்தர்களைப் பயன்படுத்தி இவ்வாறு அசிங்கமான அமைப்பில் என்னை மக்கள் முன்னிலையில் இழிவுபடுத்த முயற்சித்துள்ளனர். இதற்குப் பதிலாக அல்லாஹ்வுடைய உதவி ரிஸாலே நூருடைய ஈமானியப் பணிக்குப் பகரமான ஓர் அன்பளிப்பாக எனக்கு முன்னால் வந்தது. ஆம், அந்த ஒருவர் அரங்கேற்றிய அசிங்கத்துக்குப் பதிலாக இந்த நூறு மனிதர்களும் இந்த ஈமானியப் பணியைப் பாராட்டும் விதமாக என் மீது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தி, இந்தப் பணியுடைய எதிர்காலத்தைப் பற்றி சுபசோபனம் கூறிக்கொண்டிருந்தனர். அவ்வாறே இரண்டாவது நாள் நான் விசாரனைக்கு ஆஜராகி வழக்கறிஞருடைய கேள்விகளுக்குப் பதிலளித்துக்கொண்டிருக்கும் போது ஏரத்தாள ஆயிரம் அளவிலான மக்கள் நீதிமன்ற வலாகத்தில் உணர்வுபூர்வமாகவும் மிகுந்த அமைதியாகவும் திரண்டிருந்தனர். அவர்களுடைய கண்கள் “இவர்களுக்குத் தீங்கிழைக்காதீர்கள்” என்று கூறிக்கொண்டிருந்தன. பொலீஸாரும் கூட அவர்களைக் களைப்பதற்கான தேவையை உணரவில்லை. அப்போது எனது உள்ளத்தில் பின்வரும் எண்ணம் தோன்றியது: “இந்த மக்கள் இன்றைய நவீன யுகத்தின் பயங்கரமான நிலைமைகளுக்கு முன்னால் தாக்குப் பிடிப்பதற்காக பூர்த்தியான ஓர் ஆறுதலையும் அணையாத ஓர் ஒளியையும் பலமான ஓர் ஈமானையும் நித்திய வாழ்வுக்கான உண்மையான ஓர் அத்தாட்சியையும் ஆசிக்கின்றனர். அவர்களுடைய மானுட உணர்வுகளும் இயல்புகளும் இயல்பாகவே இப்படியான ஒன்றைத் தேடிக்கொண்டிருக்கும் போது தாம் தேடுகின்ற விடயம் ரிஸாலே நூரில் கிடைத்ததால் எவ்வித முக்கியத்துவமும் அற்ற எனக்கு -ஏதோ ஈமானுக்காக ஓரளவு தொண்டாற்றியதன் காரணமாகப் போலும்- எனது தகுதியையும் விஞ்சிய ஈடுபாட்டைக் காட்டுகின்றனர்.” இரண்டாவது சத்தியம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற புறளியை வைத்து எம்மை அடக்கி ஒடுக்குவதற்கும் எம்மீதான மக்களின் ஈடுபாட்டை இல்லாமலாக்குவதற்கும் ஏவிவிடப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இழிந்த ஏமாளிகளுக்குப் பதிலாக எண்ணற்ற சத்தியவான்களும் எதிர்கால சந்ததியினரும் எம்மை ஆதரிப்பதும் வாழ்த்துவதும் எமக்காகக் காத்திருப்பதும் நினைவூட்டப்பட்டது. ஆம், கம்யூனிஸ திரைக்குப் பின்னால் அனார்கிஸ்டுகள் தேசியப் பாதுகாப்பை சீர்குழைப்பதற்காகக் கடுமையான முஸ்தீபுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது ரிஸாலே நூரும் அதன் மாணவர்களும் தஹ்கீகான ஈமானியப் பலத்தைக்கொண்டு இந்த நாட்டின் மூளைமுடுக்கெங்கும் முளைவிட்டுப் படர்ந்து வருகின்ற அந்தப் பயங்கரமான ஃபஸாதுகளை தடுத்து நிறுத்தும் மகத்தான பணியைச் செய்கின்றனர். பாதுகாப்பையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்காக அதி உச்ச பங்களிப்பை வழங்குகின்றனர். எந்த அளவுக்கெனில் நாட்டின் நாலா புறங்களிலும் ஏராளமான ரிஸாலே நூர் மாணவர்கள் இருக்கின்ற போது, கடந்த இருபது வருடங்களாக எமக்கெதிரான வழக்குகளை விசாரித்த மூன்று நீதிமன்றங்களாலும் பத்து மாநகரங்களின் குற்றத்தடுப்புப் பிரிவினராலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற பெயரில் அவர்களுடைய ஒரு நடவடிக்கையையேனும் கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டது. மேலும் மூன்று மாநகரங்களின் நேர்மையான குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் “ரிஸாலே நூர் மாணவர்கள் ஆத்மீகப் பொலீஸாரைப் போன்றவர்கள். குற்றங்களைத் தடுத்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் எமக்குப் பேருதவியாக இருக்கின்றனர். தஹ்கீகான ஈமான் மூலம் ரிஸாலே நூரை வாசிக்கின்ற ஒவ்வொருவருடைய தலையிலும் ஓர் எச்சரிக்கையாக அது நிலைகொள்கின்றது. இது பாதுகாப்பை நிலைநாட்டுவதற்கு எமக்குப் பேருதவியாக அமைகின்றது” என்று அறிக்கை விட்டுள்ளனர். இதற்கான மிகச் சிறந்த உதரணம் “டெனிஸ்லி” சிறைச்சாலையாகும். அங்கு ரிஸாலே நூரும் அந்தக் கைதிகளுக்காகவே எழுதப்பட்ட “ஈமானியக் கனிகள்” என்ற ரஸாயிலும் நுழைந்த பின்னர் வெறும் மூன்று நான்கு மாதங்களுக்குள் இருநூறுக்கும் மேற்பட்ட கைதிகள் வியக்கத்தக்க விதமாக தீன்தாரிகளாகவும் கட்டுப்படுபவர்களாகவும் மாறித் தொழுகையை நிலைநாட்ட ஆரம்பித்தனர். அவர்கள் மத்தியில் மூன்று நாங்கு பேரைக் கொலை செய்த ஒருவர் எறும்புகளை நசுக்குவதற்குக் கூடத் தயங்குபவராக மாறினார். அவர்கள் முற்றிலும் இரக்க சுபாவம் உடையவர்களாகவும் தீங்கற்றவர்களாகவும், நாட்டுக்குப் பிரயோசனமான பிரஜைகளாகவும் மாற ஆரம்பித்தார்கள். எந்த அங்கிருந்த அதிகாரிகளும் கூட இந்த மாற்றங்களை வியப்போடும் ஆச்சர்யத்தோடும் அவதானித்தனர். இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சில வாலிபர்கள் “ரிஸாலே நூர் மாணவர்கள் தொடர்ந்தும் இங்கிருப்பார்களேயானால் நாம் எம்மை குற்றவாளிகளாகக் காட்டி தண்டனையைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்போம். இவ்வாறு, அவர்களிடம் இருந்து இன்னும் கற்றுக்கொள்ளவும் அவர்களைப் போன்று எம்மைச் சீர்திருத்திக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைக்கும்” என்று கூறுபவர்களாக இருந்தனர். இதோ இப்படிப்பட்ட ரிஸாலே நூர் மாணவர்களை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனர் என்று குற்றம் சுமத்துபவர்கள் எவ்வித சந்தேகமுமின்றி மிக மோசமான ஓர் அமைப்பில் ஏமாற்றப்பட்டுள்ளதோடு அறிந்தோ அறியாமலோ அனார்கிஸ்டுகளைப் பாதுகாக்கும் நோக்கில் அரசாங்கத்தின் கவனத்தை எம்மீது திருப்பி அரசாங்கத்தை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். நாங்கள் இப்படிப்பட்டவர்களுக்கெதிராக ஒர் விடயத்தைக் கூறுகிறோம்: உண்மையில் மரணம் மரணிக்கச் செய்வதில்லை. மண்ணறை வாசலும் மூடப்படுவதில்லை. உலகம் என்ற விடுதிக்கு வருகின்ற பயணிகள் அசுர வேகத்தில் கூட்டம் கூட்டமாகச் சென்று மண்ணுக்கடியில் மறைந்து போகின்றனர். எனவே சந்தேகமின்றி மிகக் குறுகிய காலத்துக்குள் எம்மை விட்டு நீங்களும் உங்களை விட்டு நாமும் பிரியப் போகின்றோம். நீங்கள் உங்களது அக்கிரமங்களுக்கான தண்டனையை மிகப் பயங்கரமான ஓர் அமைப்பில் கண்டுகொள்ளத்தான் போகிறீர்கள். ஈமான்கொண்டவர்களைப் பொருத்தவரை ஒரு பயணச் சீட்டாக இருக்கின்ற மரணம் உங்களைப் பொருத்தவரை குறைந்தபட்சம் நிரந்தர அழிவுக்கான ஒரு தூக்கு மேடையாக உங்கள் முன்னால் உங்களுக்காகக் காத்திருக்கின்றது. எனவே நீங்கள் இந்த உலகத்தில் நிரந்தரமானது என்ற மாயையில் அனுபவிக்கின்ற இன்பங்களும் கூட உண்மையில் நிரந்தர வலிகளாகவும் வேதனைகளாகவும் உங்களைப் பிடித்துக்கொள்ளும். துரதிஷ்டவசமாக திரை மறைவில் எமக்கெதிராக செயற்படும் முனாஃபிக்கான எதிரிகள் மார்க்கப் பற்றுள்ள இந்த சமூகத்தில் வலிமார்களின் அந்தஸ்த்தைப் பெற்று நூறு மில்லியன் ஷஹீதுகளுடைய இரத்தத்தால் பாதுகாக்கப்பட்ட இஸ்லாமிய சத்தியங்களுக்கு “தரீக்கத்” என்ற பெரைச் சூட்டி, இஸ்லாம் என்ற அந்தச் சூரியனின் வெறுமனே ஒரு சிறு கீற்றாகிய “தரீக்கத்” வழிமுறையை, மொத்த சூரியனாகவும் சித்திரிக்கின்றனர். பின்னர் அரசாங்கத்தில் கிடக்கும் தீட்ண்யமற்ற, கவனக்குறைவான அதிகாரிகளை ஏமாற்றி, குர்ஆனிய சத்தியங்களுக்காகவும் ஈமானிய சத்தியங்களுக்காகவும் உழைக்கின்ற ரிஸாலே நூர் மாணவர்களுக்கு “தரீக்கத்வாதிகள்” அல்லது “இயக்கவாதிகள்” என்று முத்திரை குத்தி எமக்கெதிராக அவர்களை ஏவிவிட முயற்சிக்கின்றனர். நாம் அவர்களிடமும் எமக்கெதிராக அவர்களுக்கு செவிசாய்ப்பவர்களுக்கும் “டெனிஸ்லி” நீதிமன்றத்தில் கூறியதைப் போன்று மீண்டும் கூறுகிறோம்: “பல நூறு மில்லியன் தலைகள் அர்ப்பணம் செய்யப்பட்ட இந்தப் புனிதமான சத்தியங்களுக்கு எமது தலைகளும் அர்ப்பணமாகட்டும். உலகத்தையே வெடிகுண்டாக மாற்றி எமது தலை மீதெறிந்தாலும் குர்ஆனிய சத்தியங்களுக்கு அர்ப்பணமான தலைகள் மார்க்க விரோதிகளுக்கு முன்னால் தலைசாயப் போவதில்லை. அவர்கள் இந்தப் புனிதமான பணியிலிருந்து வாபஸ் வாங்கிக்கொள்ளப் போவதுமில்லை. இன்ஷா அல்லாஹ்.” இதோ இந்த முதுமைக் காலத்தில் இத்தனை சுமைகள், வலிகள், நம்பிக்கையீனங்களைச் சந்தித்த பின்னரும் ஈமானிலும் குர்ஆனிலுமிருந்து கிடைக்கின்ற சங்கையான ஆறுதல்கள் முதுமையை நேசிக்கச் செய்கின்றது. எனவே முதுமையின் மிகக் கடினமான ஒரு வருடத்துக்குப் பகரமாக எனது வாலிபத்தின் மிக மகிழ்ச்சிகரமான பத்து வருடங்கள் தரப்பட்டாலும் பிரதியீடு செய்ய மாட்டேன் என்று உறுது பூண்டேன். குறிப்பாக சிறைச்சாலையில் பர்ள் தொழுகைகளை நிறைவேற்றிக்கொண்டு தனது குற்றத்துக்காகத் தௌபா செய்கின்ற ஒருவரின் ஒவ்வொரு மணித்தியாளமும் பத்து மணித்தியாள வணக்க அந்தஸ்த்தைப் பெறுவதாலும் அதிலும் குறிப்பாக நிரபராதியாகவும் நோயாளியாகவும் இருக்கின்ற ஓருவரின் ஒவ்வொரு நாளும் நன்மைகளைப் பெற்றுத்தருகின்ற விடயத்தில் பத்து நித்திய நாட்களுக்கு ஈடானதாக இருப்பதாலும் மண்ணறை வாசலில் காத்திருக்கும் என்னைப் போன்ற ஒரு மனிதனுக்கு இது எவ்வளவு மகத்தான ஓர் அருளாக உள்ளது என்பதையும் அதற்காக எவ்வளவு நன்றி செலுத்த வேண்டியவனாக உள்ளேன் என்பதையும் மேற்படி உதிப்பின் போது கண்டுகொண்டேன். எனவே எனது இரட்சகனுக்கு எண்ணற்ற நன்றிகள் கூறி, எனது முதுமைக்காக மகிழ்ச்சியடைந்தேன்; சிறை வாழ்வையும் பொருந்திக்கொண்டேன். வாழ்க்கை என்பது எமக்காகத் தரிப்பதில்லை. மாறாக வேகமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அது இன்பமாகவும் நிம்மதியாகவும் கடந்து சென்றால் இன்பத்தின் முடிவில் கைசேதம் இருப்பதால் துக்கத்தையும் நன்றியின்மையையும் பொடுபோக்கையும் சில பாவங்களையுமே விட்டுச் செல்லும். மாறாக, கஷ்ட நஷ்டங்களோடும் குறிப்பாக சிறைச்சாலையிலும் கடக்குமாக இருந்தால் வலிகளின் முடிவில் ஓர் ஆத்மார்த்தமான இன்பம் இருப்பதாலும் அந்தக் கஷ்டங்கள் ஒரு வகை இபாதத்தாகக் கணிக்கப்படுவதாலும் அவை நன்மையான கனிகளையே விட்டுச் செல்லும். அந்த ஆத்மார்த்தமான இன்பங்களும் நிரந்தரமான ஒரு வாழ்வை ஈட்டித் தரும். மேலும் அந்த சிறை வாழ்க்கை கடந்த காலப் பாவங்களுக்கும் சிறைக்குச் செல்லக் காரணமாக அமைந்த குற்றங்களுக்கும் பாவப்பரிகாரமாக அமைவதால் அந்தப் பாவக் கறைகளையும் சுத்தப்படுத்திவிடும். இந்தக் காரணத்தினால் பர்ளுகளை நிறைவேற்றுகின்ற சிறைக்கைதிகள் பொறுமையோடு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.
முதுமைப் பருவத்தில் இருக்கும் போது “எஸ்கிஷெஹிர்” சிறைச்சாலையில் அடைத்தார்கள். “ஒரு வருடம் சிறைவாசம் அனுபவித்த பின்னர் அங்கிருந்து “கஸ்தமோனு” நகருக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அங்கு பொலிஸ் நிலையத்தில் இரண்டு மூன்று மாதங்கள் வைத்திருந்தனர். என்னைப் போன்று நெருங்கிய, விசுவாசமான தோழர்களுடன் அலவலாவும் போதே விரைவாக அலுப்புத் தட்டுகின்ற தனிமைப்பித்தனாகவும் மக்கள் முன்னிலையில் மேலாடைகளை மாற்றிக்கொள்வதற்கும் விரும்பாத வெட்க உணர்வு கொண்டவனாகவும் உள்ள ஒருவர் இவ்வாறான இடங்களில் எந்த அளவு சங்கடப்படுவார்கள் என்பதை விளங்கிக்கொள்வதற்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன். நான் இவற்றையெல்லாம் நினைத்து சோர்வடைந்திருந்த போது அல்லாஹ்வின் அருள் எனது உதவிக்காக வந்தது. அந்தப் பொலிஸ் நிலையத்திலிருந்த மேலதிகாரி உட்பட அனைவரும் எனக்கு மிகவும் விசுவாசமான நண்பர்களாக மாறிவிட்டனர். எந்த சந்தர்ப்பத்திலும் பிரிட்டிஷ் தொப்பியை அணியுமாறு அவர்கள் என்னை வலியுறுத்தவில்லை. மாறாக எனது சேவகர்களைப் போன்று நான் விரும்பிய நேரத்தில் என்னை நகரத்தின் சுற்றுப் புறத்தில் காற்றார அழைத்துச் சென்றனர். பின்னர் அந்தப் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் இருக்கின்ற “கஸ்தமோனு” ரிஸாலே நூர் மத்ரஸாவுக்குச் சென்று ரிஸாலே நூரை எழுத ஆரம்பித்தேன். ஃபௌஸி, அமீன், ஹில்மி, ஸாதிக், நாஸிஃப், ஸலாஹுத்தீன் போன்ற ரிஸாலே நூர் மாணவர்கள் ரிஸாலே நூரின் வெளியீட்டுக்காகவும் பதிப்புக்காகவும் மத்ரஸாவுக்கு தொடர்ந்தும் வருகை தந்தார்கள். வாலிப வயதில் எனது பழைய மாணவர்களுடன் கழித்த பெறுமதிமிக்க அறிவியல் கலந்துரையாடல்களை அதைவிடப் பிரகாசமான ஓர் அமைப்பில் நிறைவேற்ற ஒத்துழைத்தார்கள். பின்னர் மீண்டும் திரைமறைவில் செயற்பட்ட எதிரிகள் ஒரு சில அரச அதிகாரிகளையும் அனானியத்தோடு திரிகின்ற ஒரு சில ஆலிம்கள், ஷைக் மார்களையும் எமக்கெதிராகத் தூண்டிவிட்டனர். இறுதியில் நான்கைந்து நகரங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட ரிஸாலே நூர் மாணவர்கள் “டெனிஸ்லி” யூஸுஃபிய்யா மத்ரஸாவில் உறவாடுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தனர். இந்தப் பதினாறாவது நம்பிக்கையின் விரிவான வியாக்கியானம் “கஸ்தமோனு மடல்கள்” என்ற தொகுப்பிலும், “டெனிஸ்லி” சிறைச்சாலையில் இருக்கும் போது அங்குள்ள சகோதரர்களுக்கு இரகசியமாக அனுப்பி வைத்த சிறிய கடிதங்களிளும் அங்கு நிகழ்ந்த நீதிமன்ற வாதாட்டங்களிலும் காணப்படுகின்றன. அவை இந்தப் பதினாறாவது நம்பிக்கையில் கூற வந்த சத்தியங்களை மிகத் தெளிவான அமைப்பில் பிரஸ்தாபிக்கின்றன. எனவே அவற்றை குறித்த இடங்களில் வாசித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இவ்விடத்தில் மிகவும் சுருக்கமான ஒரு சில விடயங்களை தொட்டுக்காட்டுகின்றோம். நான் மஹ்ரமான ரஸாயில்களை, குறிப்பாக “சுஃபியான்” தொடர்பாகவும், ரிஸாலே நூருடைய கராமத்துக்கள் தொடர்பாகவும் எழுதப்பட்ட ரஸாயில்களை ஒழித்து வைத்து, ஒன்றோ எனது வபாத்துக்குப் பிறகு அல்லது தலைமைப் பதவிகளில் இருக்கின்ற தலைகளில் புத்தி தலைக்கேறி, சத்தியத்துக்குச் செவிமடுப்பவர்களாக மாறிய பின்னர் அவை பகிரங்கமாக வெளியிடப்படுவது நல்லது என்று தீர்மானித்திருந்தேன். அப்போது திடீரென்று நுழைந்த பொலீஸாரும் அரச வழக்கறிஞருடைய உதவியாளரும் வீட்டை சல்லடைபோட்டுத் தேட ஆரம்பித்தனர். அதன் போது கொல்லைப் புறமாக விறகடுக்குகளுக்குப் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த ரஸாயில்களை கைப்பற்றிக்கொண்டனர். பின்னர் அதைச் சாட்டாக வைத்து என்னைக் கைது செய்து உடல் நிலை மிக மோசமாக இருந்ததையும் பொருட்படுத்தாமல் “இஸ்பார்த்தா” சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தனர். நான் என்னளவில் மிகக் கஷ்டத்தோடும் ரிஸாலே நூருக்கு வந்த இந்தச் சோதனை காரணமாக மிகுந்த கவளையோடும் இருக்கும் போது மீண்டும் இறை உதவியைக் கண்டுகொண்டேன். இரகசியமாக வைக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அந்த ரஸாஇல்களை அவற்றின்பால் அதிக தேவையுடைய அரசாங்க அதிகாரிகள் முழுமையான கவனத்தோடும் வியப்போடும் வாசிக்க ஆரம்பித்தனர். அவை அதிகாரிகளுக்கு மத்தியில் கைமாறிக் கைமாறி சங்கிலித்தொடராகப் பல இடங்களுக்குச் சென்றதால் அரசாங்க அலவலகங்கள் நூர் மத்ரஸாக்களாக மாறுவதற்கு வஸீலாவாக அமைந்தன. விமர்சிப்பதற்காக வாசித்தவர்கள் வாழ்த்துக் கூற ஆரம்பித்தார்கள். “டெனிஸ்லி” நகரத்தில் எமக்கே தெரியாமல், அரசாங்க உத்தியோகத்தர்கள் முதல் பொதுமக்கள் வரை ஏராளமானவர்கள் “ஆயதுல் குப்ரா” என்ற ரஸாயிலை இரகசியமாக வாசித்துத் தமது ஈமானைப் பலப்படுத்திக்கொண்டனர். இதன் மூலம் எமது சிறைச்சாலை முஸீபத் இல்லை என்ற அளவுக்குக் குறைந்துவிட்டது. பின்னர் எம்மை “டெனிஸ்லி” சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்று, என்னை மாத்திரம் தனியாக துர்நாற்றமும் கடும் குளிரும் மிக்க ஓர் அறைக்குள் அடைத்து வைத்தனர். முதுமை, நோய் என்பவற்றாலும் என்னால் எனது அப்பாவித் தோழர்கள் கஷ்டத்துக்குள்ளாக நேர்ந்ததால் ஏற்பட்ட கடுமையான கவலை காரணமாகவும் ரிஸாலே நூர் தடை செய்யப்பட்டு சேகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட துக்கம் காரணமாகவும் நான் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த போது மீண்டும் அல்லாஹ்வின் உதவியைக் கண்டுகொண்டேன். அல்லாஹ்வின் அருளால் அந்தப் பெரிய சிறைச்சாலையை ஒரு நூர் மத்ரஸாவாக மாறியதோடு அந்த யூஸுஃபிய்யாப் பாசறையில் உருவாகிய கதாநாயகர்களுடைய வைரப் பேனாக்கள் மூலமாக ரிஸாலே நூர் அங்கிருந்து பரவ ஆரம்பித்தது. அவர்களுள் ஒருவர் சிறைச்சாலையின் கடுமையான நிலைமைகளுக்குள் வெறும் மூன்று நான்கு மாதங்களில் “ஈமானியக் கனிகள்” என்ற ரஸாயிலினதும் “நீதிமன்ற வாதங்கள்” என்ற தொகுப்பினதும் தலா இருபதுக்கும் மேற்பட்ட பிரதிகளை எழுதினார். அந்தக் காலப்பகுதியில் ரிஸாலே நூர் சிறைச்சாலைக்குள்ளும் வெளியிலும் தனது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தது. அந்த முஸீபத்தால் ஏற்பட்ட இழப்புக்களை பெரும் இலாபங்களாகவும் கஷ்டங்களை இன்பங்களாகவும் மாற்றிவிட்டது. عَسَى اَنْ تَكْرَهُو اشَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ என்ற மறை வசனத்தின் ஒரு தாத்பரியத்தை மீண்டும் எமது கண்களுக்கு முன்னால் திரையிட்டுக் காண்பித்தது. பின்னர் நிபுணர்கள் குழு பொய்யான, மேலோட்டமான வாக்குமூலப் பிரதிகளை அடிப்படையாக வைத்து எம்மீது முன்வைத்த கடுமையான விமர்சனங்களும் அதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சரால் எம்மீது எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகளும் அவர்கள் எமக்கெதிராகப் பிரசுரித்த சுற்றறிக்கையும் மற்றொரு பக்கம் சில பத்திரிகைகள் எம்மில் சிலருக்கு மரண தண்டனை பெற்றுக்கொடுப்பதற்காக மேற்கொண்ட பிரயத்தனங்களும் எம்மை மிகுந்த கவலையில் ஆழ்த்தியிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் அல்லாஹ்வுடைய உதவியைக் கண்டுகொண்டோம். ஆம், இந்த அத்தனை அசாதகமான நிகழ்வுகளுக்கும் பின்னர் அன்காராவிலுள்ள நிபுணர் குழுவின் மிகக் கடுமையான விமர்சன அறிக்கையை எதிர்பார்த்திருந்தபோது அவர்களது அறிக்கை எம்மை வாழ்த்துகின்ற விதமாக அமைந்திருந்தது. மாத்திரமன்றி ஐந்து பெட்டிகள் நிரம்பக் காணப்பட்ட ரஸாயில்களில் பத்து அளவிளான பிழைகள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்த போதிலும் அவர்கள் பிழை என்று குறிப்பிட்ட புள்ளிகள் அனைத்தும் சரியானவை, சத்தியமானவை என்பதையும் அவற்றை நிபுணர் குழு பிழையாக விளங்கிக்கொண்டமையே அவற்றில் பிழை பிடிப்பதற்கான காரணம் என்பதையும் நீதிமன்றத்தில் நிரூபித்தோம். கூடவே ஐந்து பக்கங்களைக்கொண்ட அந்த அறிக்கையில் காணப்பட்ட ஐந்துக்கு மேற்பட்ட தவறுகளையும் பிழைகளையும் சுட்டிக்காட்டினோம். அத்துடன் “ஈமானியக் கனிகள்”, “நீதிமன்ற வாதங்கள்” ஆகிய ரஸாயில்களை ஏழு அமைச்சுகளுக்கும் ஆத்மார்த்தமான அரைகளை வழங்கக்கூடிய மஹ்ரமான ரஸாயில்கள் உற்பட மொத்த ரிஸாலே நூர் தொகுப்பையும் நீதிமன்ற வழக்கறிஞர்கள் ஒன்றியத்துக்கும் அனுப்பி வைத்த காரணத்தினால் அவர்களிடமிருந்து கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படலாம் என்று எதிர்பார்த்திருந்த போது மிகவும் மிதமான, ஆறுதல் தரக்கூடிய ஒரு கடிதத்தையே பிரதமர் அவர்கள் எமக்கு அனுப்பியிருந்தார்கள். மேலும் ஏதோ சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டதைப் போன்று அவர்கள் எம்மைத் தீண்டாதிருந்தார்கள். இது உண்மையில் இறை ஈகையின் கராமத்தால் ரிஸாலே நூரிலுள்ள சத்தியங்கள் அவர்களது உள்ளங்களை வெற்றிகொண்டுள்ளது என்பதற்கும் அவர்களை நேர்வழிப்படுத்தும் விதமாக தன்னை அவர்களுக்கு வாசிக்கச் செய்துள்ளது என்பதற்குமான ஓர் அத்தாட்சியாகும். ஆம், அந்த விசாலமான எல்லைகள் ஒரு வகை நூர் மத்ரஸாக்களாக மாறியது மாத்திரமன்றி அந்த ரஸாயில்கள் மூலம் இரண்டும் கெட்டான் நிலையிலிருந்த பலரும் ஆர்வமுள்ள பலரும் தமது ஈமானைப் பாதுகாத்துக்கொண்டுள்ளனர். இது எமக்கு எமது கஷ்டங்களைவிட நூறு மடங்கு அதிகமான நிம்மதியையும் பலன்களையும் தந்தது. இந்தத் திட்டமும் கைகூடாததால் திரை மறைவில் செயற்பட்ட எதிரிகள் எனக்கு நஞ்சூட்டினார்கள். இதன் போது ஷஹீதாகிய ரிஸாலே நூர் கதாநாயகன் மர்ஹூம் ஹாஃபிஸ் அலி எனக்குப் பதிலாக வைத்தியசாலைக்குச் சென்று, எனக்குப் பதிலாக ஆலமுல் பர்ஸஹை நோக்கிப் பயணித்து எம்மை மிகவுமே கவலையில் ஆழ்த்திவிட்டார். இந்த முஸீபத் நிகழ்வதற்கு முன்னர் நான் “கஸ்தமோனு” நகரிலுள்ள ஒரு மலை மீதேறி உரத்த குரலில் “சகோதரர்களே, குதிரைக்கு இறைச்சியும், சிங்கத்துக்குப் புல்லும் போடாதீர்கள்” என்று கூறினேன். அதாவது எல்லா ரஸாயில்களையும் எல்லோருக்கும் கொடுத்து, அவர்கள் எம்மீது வெறுப்போடு பாய்வதற்கு வழி சமைத்துக் கொடுக்காதீர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். அந்த சமயம் குறித்த இடத்திலிருந்து நடந்து சென்றால் ஏழு நாள் தூரத்திலிருந்த ஹாஃபிஸ் அலி (ரஹ்மதுல்லாஹி அலைஹ்) ஏதோ தொலைபேசி வாயிலாக நான் சொல்பவற்றையெல்லாம் கேட்பதைப் போன்று எனக்குப் பின்வருமாறு கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். “உஸ்தாத் அவர்களே! குதிரைக்கு இறைச்சியும், சிங்கத்துக்குப் புல்லும் போடாதிருப்பது ரிஸாலே நூருடைய ஒரு கராமத்தாகும். உண்மையில் ரிஸாலே நூர் குதிரைக்குப் புல்லும் சிங்கத்துக்கு இறைச்சியும் போடுகின்றது என்பதால்தான் அது அந்த ஆலிமுடைய கைக்கு ‘உளத்தூய்மை’ என்ற ரஸாயிலைக் கொண்டுபோய்ச் சேர்த்தது.” ஹாஃபிஸ் அலியிடமிருந்து வந்த இந்தப் பகுதி உள்ளடங்கிய கடிதம் ஏழு நாட்களின் பின்னர் எனது கைக்குக் கிடைத்தது. உடனே கணக்குப் போட்டுப் பார்த்தோம். நான் மலை உச்சியிலிருந்து அந்த வாசகத்தைக் கூறிக்கொண்டிருந்த அதே சமயம் அவரும் அந்தக் கடிதத்தை எனக்கு எழுதிக்கொண்டிருந்துள்ளார். ஆம், ரிஸாலே நூருடைய இப்படிப்பட்ட ஓர் ஆத்மீகக் கதாநாயகனுடைய வபாத்தால் ஏற்பட்ட கவலையும் இரகசிய முனாபிக்குகள் எமக்குக் கடும் தண்டனைகளைப் பெற்றுத் தருவதற்கான சதி முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதும் நான் நஞ்சூட்டப்பட்டுக் கடுமையான பாதிப்புக்குட்பட்டிருந்தமையினால் அதைச் சாட்டாக வைத்து என்னையும் வைத்தியசாலைக்கு நிர்ப்பந்தமாக அழைத்துச் சென்றுவிடுவார்களோ என்ற பதட்டமும் எம்மைத் தடுமாறச் செய்த வேளை மீண்டும் அல்லாஹ்வுடைய உதவியை நாம் கண்டுகொண்டோம். அருள்பாலிக்கப்பட்ட எனது சகோதரர்களுடைய தூய்மையான துஆக்கள் காரணமாக நஞ்சுடைய கோரம் அடங்கி ஆபத்தான கட்டத்திலிருந்து மீள ஆரம்பித்தேன். அத்துடன் ஷஹீத் ஹாஃபிஸ் -ஆத்மீக ரீதியான வலுவான தடயங்களின் அடிப்படையில்- மண்ணறையில் மலக்குமார்களின் கேள்விகளுக்கு ரிஸாலே நூரிலுள்ள வாசகங்களைக்கொண்டு பதிலளித்தமை, அந்த ஷஹீதுக்குப் பதிலாக அவருடைய அதே பாணியில் ரிஸாலே நூர் பணிகளில் ஈடுபட்ட “டெனிஸ்லி” நகரைச் சேர்ந்த கதாநாயகன் ஹஸன ஃபௌஸி (ரஹ்மதுல்லாஹி அலைஹ்) அவர்களுடைய வரவு, அவருடன் சேர்ந்து அவருடைய நண்பர்கள் திரைக்குப் பின்னாலிருந்து ஆற்றிய மகத்தான பணிகள், ரிஸாலே நூர் மூலமாக சிறைக்கைதிகளுக்கு மத்தியில் ஏற்பட்ட பாரிய மாற்றத்தைக் கண்ட ரிஸாலே நூரின் எதிரிகளும் கூட எம்மைச் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்க நாட்டம் கொண்டமை, அந்தக் கஷ்டகரமான சிறைச்சாலை ரிஸாலே நூர் மாணவர்களுக்கு குகை வாசிகளுடைய குகையைப் போன்றும் ஆரம்பகாலத் துறவிகளுடைய ஆசிரமங்களைப் போன்றும் மாறியதால் வேறு எந்தக் கவளைகளுமின்றி நிம்மதியாக ரிஸாலே நூரைப் பிரசுரிப்பதற்கும் அதற்காக உழைப்பதற்கும் வாய்ப்பாக மாறியமை என்று அனைத்துமே அல்லாஹ்வுடைய உதவி எம்மோடே இருந்தன என்பதற்கான அத்தாட்சிகளாக அமைந்தன. மேலும் எனது எண்ணத்தில் இன்னுமொரு விடயமும் உதித்தது: அதாவது இமாமுல் ஆஃஸம் அபூ ஹனீஃபா போன்ற மிகப் பெரிய முஜ்தஹித்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளார்கள். அவ்வாறே இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் போன்ற மிகப் பெரிய முஜாஹித்கள் குர்ஆனுடைய ஒரே ஓர் அம்சத்துக்காக சிறையில் பெரும் பெரும் சித்திரவதைகளுக்கு முகம்கொடுத்துள்ளார்கள். அத்தகைய சந்தர்ப்பங்களிலெல்லாம் அல்லாஹ்வை எந்த வகையிலும் முறைப்பட்டுக்கொள்ளாமல், தாம் வாதாடிய உண்மைகளை எந்த வகையிலும் விட்டுக் கொடுக்காமல் முழுமையான பொருமையோடு அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டுள்ளார்கள். அவ்வாறே, ஏராளமான இமாம்களும் அல்லாமாக்களும் உம்மைவிட அதிகமான கொடுமைகளுக்கும் அநீதிகளுக்கும் ஆளாகியுள்ள போதிலும் அவர்கள் தளர்ந்து போகாமல் முழுப் பொறுமையோடு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியுள்ளார்கள். எனவே இந்தக் குர்ஆனிய மற்றும் ஈமானியப் பணியின் மூலம் கிடைக்கும் மிகப் பெரிய நன்மைகளோடும் இலாபங்களோடும் ஒப்பிடும் போது உமது கஷ்டங்கள் மிகச் சொற்பமானவை என்பதால் பல்லாயிரக்கணக்கில் நன்றி செலுத்துவதே உம் மீது கடமையானதாகும். ஆம், மனிதர்கள் புரிகின்ற அக்கிரமங்களுக்குள் இறை நியதியுடைய நீதியின் ஒரு பிரதிபலிப்பையும் எனது வயோதிபத்தின் போது முகம்கொடுக்க நேர்ந்த கடுமையான கஷ்டங்களுக்குள் இறை அருளின் ஒரு பிரதிபலிப்பையும் இந்த இடத்தில் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறேன். நான் இருபது வயதில் இருக்கும் போது, “ஆரம்ப காலத்தில் உலகத்தைத் துறந்து மலைகளிலும் குகைகளிலும் துறவரம் பூண்டவர்களைப் போன்று, எனது வாழ்க்கையின் இறுதிப் பகுதியில் நானும் ஒரு மலைக் குகைக்குச் சென்று மனிதர்களின் சமூக வாழ்விலிருந்து தூரமாகவேண்டும்” என்று அடிக்கடி சிந்திப்பவனாகவும் அதைப் பிறரிடம் கூறுபபனாகவும் இருந்தேன். அத்துடன் முதலாம் உலகப் போரின் போது ரஷ்யாவில் கைதியாக இருந்த காலப் பகுதியிலும் “எஞ்சியுள்ள வாழ்க்கையை குகைகளிலேயே கழிக்க வேண்டும். அரசியல் வாழ்விலிருந்தும் சமூக வாழ்விலிருந்தும் ஒதுங்கிக்கொள்ள வேண்டும். இந்தச் சமாச்சாரங்களிலெல்லாம் தலையிட்டது போதும்” என்று தீர்மாணித்திருந்தேன். இவ்வாறிருக்கும் போது அல்லாஹ்வுடையை உதவியும், இறை நியதியின் நீதியும் வேறொரு வகையில் பிரதிபலித்தன. எனது விருப்பத்தையும் தீர்மானத்தையும்விட மிகச் சிறந்த ஓர் அமைப்பில், எனது முதுமை நிலைமைக்கான ஒரு புண்ணியமாக, எனது சிந்தனையிலிருந்த மலைக் குகைகளுக்குப் பதிலாக சிறைச்சாலைகளையும் சித்திரவதைக் கூடங்களையும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளையும் மக்கள் நடமாட்டமில்லாத பட்டினங்களையும் எனக்கருளினான். கூடவே அவற்றின் மூலம் குகைகளில் துறவரத்தின் மூலம் கிடைக்கின்ற மறுமைப் பலன்களையும் மேலதிகமாக குர்ஆனிய மற்றும் ஈமானியச் சத்தியங்களுக்காகப் போராடுகின்ற பாக்கியத்தையும் எனக்கருளினான். உண்மையில் நான் எனது நண்பர்களுக்கு விடுதலை கிடைத்த பின்னர் ஏதேனுமொரு குற்றத்தைக் காண்பித்து சிறைச்சாலையிலேயே தங்கிவிட உத்தேசித்திருந்தேன். ஹுஸ்ரவ், ஃபௌஸி போன்ற திருமணமாகாதவர்கள் என்னோடு இங்கு இருந்தால் போதும். மற்றப்படி மனிதர்களோடு அதிகம் புலங்கி வீண் அரட்டைகளிலும் பகட்டான நடவடிக்கைகளிலும் சுயபுகழ் தேடுவதிலும் காலத்தைக் கடத்தாதிருப்பதற்காக இந்த சிறைச்சாலையில் இருப்பதே சிறந்தது என்று தீர்மாணித்திருந்தேன். ஆனால் எமது நஸீபோ வேறாக இருந்தது. விதி எம்மை வேறோரு சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றது. اَلْخَيْرُ فِى مَا اخْتَارَهُ اللَّهُ * عَسَى اَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ என்ற மறை வசனத்தின் தாத்பரியத்துக்கமைய எனது முதுமையின் புண்ணியத்துக்காகவும் ஈமானியப் பணியில் இன்னும் அதிகம் தொண்டு புரிவதற்காகவும் எமது முன்னேற்பாடுகளுக்கும் நாட்டத்துக்கும் மாற்றமாக இந்த மூன்றாவது யூஸுஃபிய்யா மத்ரஸாவில் எமக்கான நியமணம் வழங்கப்பட்டது. ஆம், இறை கருணையானது எனது முதுமை நிலை மீதான ஓர் ஆதரவாக பலமான வாலிபப்பருவத்துக்கு உகந்த குகைகளை சிறைச்சாலையின் தனிமையான அறைகளாக மாற்றியமையில் மூன்று தாத்பரியங்களும் ரிஸாலே நூர் பணிக்கான மூன்று நன்மைகளும் காணப்படுகின்றன. முதலாவது தாத்பரியமும் நன்மையும் இந்தக் காலகட்டத்தில் ரிஸாலே நூர் மாணவர்கள் எவ்வித எதிர்ப்புகளோ இழப்புகளோ இன்றி ஒன்றுசேரக்கூடிய இடம் சிறைச்சாலைகளாகும். ஏனெனில் சிறைச்சாலைக்கு வெளியில் ஒன்று சேர்ந்து கலந்துரையாடல்களில் ஈடுபடுவது சந்தேகத்திற்கிடமானதும் செலவினமிக்கதுமாகும். என்னைச் சந்திப்பதற்காக சிலர் நாற்பது ஐம்பது லீராக்களைச் செலவளித்து வந்து வெறுமனே பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள் சந்தித்துவிட்டு அல்லது சந்திக்கவே முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர். நான் சில சகோதரர்களோடு நேரில் சந்திப்பதற்காக, சிறைச்சாலையின் வேதனைகளை சந்தோசமாக எதிர்கொள்ளத் தயாராகவே இருந்தேன். இந்த வகையில் சிறைச்சாலை எமக்கான ஓர் அருளாகவும் ஒரு ரஹ்மத்தாகவும் அமைந்துள்ளது. இரண்டாவது தாத்பரியமும் நன்மையும் இந்தக் காலகட்டத்தில் ரிஸாலே நூர் மூலம் ஈமானியப் பணி புரிவது எல்லா இடங்களிலும் எத்திவைப்பதன் மூலமும் தேவை உடையவர்களுடைய கவனத்தை அதன்பால் ஈர்ப்பதன் மூலமுமே சாத்தியமாகும். ஆம், எமது சிறைவாசம் காரணமாக ரிஸாலே நூரை நோக்கி மனிதர்களது பார்வை ஈர்க்கப்படும். ரிஸாலே நூருக்கான ஒரு பகிரங்க விளம்பரமாக அவை மாறும். இவ்வாறு அதன்பால் அதிக தேவை உடையவர்களும் பிடிவாதமாகப் பின்வாங்குபவர்களும் அதைத் தேடிப் பெற்றுத் தமது ஈமானைப் பாதுகாத்துக்கொள்ள வழி ஏற்படும். இதன் மூலம் அவர்களது பிடிவாதப்போக்கு நீங்கி மிகப் ஆபத்திலிருந்து பாதுகாப்பும் பெற்றுக்கொள்வார்கள். நூர் மத்ரஸாக்களுடைய எல்லை விசாலமடையும். மூன்றாவது ஞானமும் நன்மையும் சிறைச்சாலை நுழைகின்ற ரிஸாலே நூர் மாணவர்கள் பரஸ்பரம் அடுத்தவரின் நிலைமைகள், நன்நெறிகள், இஹ்லாஸ், அர்ப்பணம் என்பவற்றிலிருந்து தமக்குத் தேவையான பாடங்களைக் கற்றுக்கொள்வதுடன் இந்தப் பணிக்குப் பகரமாக உலகாயுத இலாபங்கள் தேடுவதையும் விட்டுவிடுகிறார்கள். ஆம், யூஸுஃபிய்யா மத்ரஸாவில் நாம் எதிர்கொண்ட ஒவ்வொரு கஷ்டங்களின் போதும் அதைவிடப் பத்து அல்லது நூறு மடங்கு அதிகமான ஆத்மீக மற்றும் லௌகீக ரீதியான நன்மைகளையும் அழகிய விளைவுகளையும் ஈமானியப் பணியில் ஏற்படுகின்ற தூய்மையான, விசாலமான எழுச்சிகளையும் அவற்றுக்கான பல்வேறு அத்தாட்சிகளையும் கண்களுக்கு முன்னால் கண்ட பின்னர் பூர்த்தியான இஹ்லாஸைப் பெற்றுக்கொள்வார்கள். அதன் பிறகும் அற்பமான தனிப்பட்ட இலாபங்களுக்காக தமது நிலையைத் தாழ்த்திக்கொள்ள மாட்டார்கள். இந்த வதை முகாம்களில் எனக்கென்று பிரத்தியேகமான ஒரு சிறப்பம்சமும் துக்ககரமான ஆனால் இனிமையான ஒரு நிலைமையும் காணப்படுகின்றது. அதாவது: நான் வாலிபப் பருவத்தில் இருக்கும் போது எமதூரில் இருந்த பழைய மத்ரஸாவின் அதே நிலைமையையே இங்கும் காண்கிறேன். ஏனெனில், கிழக்குப் பிராந்தியத்தில் பழைய வழக்கத்தில் இயங்கிய மத்ரஸாக்களில் மத்ரஸா மாணவர்களுடைய தேவைகள் வெளியிலிருந்தே நிவர்த்தி செய்யப்பட்டன. சில மத்ரஸாக்களில் மத்ரஸாவிற்குள் கொண்டுவந்தே அவை சமைக்கப்பட்டன. இந்த வகையிலும் இது போன்ற இன்னும் சில அமைப்புகளிலும் இந்த வதை முகாம்கள் அந்த மத்ரஸாக்களை ஒத்தவையாக இருந்தன. நான் இவற்றைப் பார்க்கின்ற போதெல்லாம் வாலிபக் காலத்தின் அந்த இனிமையான பழைய நினைவுகளோடு கற்பனை உலகில் சஞ்சரித்துவிடுவேன். அப்போதெல்லாம் எனது முதுமை நிலைமை முற்றாக மறந்து போய்விடும்.
இது இருபத்தி ஒராவது கடிதமாகும். கடிதங்கள் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளதால் இங்கு இணைத்துக்கொள்ளப்படவில்லை.

