Şualar

Second Chapter of the Twenty-Ninth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِاس۟مِهٖ سُب۟حَانَهُ (இந்த இரண்டாவது வாயில் “அல்ஹம்துலில்லாஹ்” தொடர்பானதாகும்.) இரண்டாவது வாயிலான இச் சிறு ஏட்டில் “அல்ஹம்துலில்லாஹ்” என்ற வார்த்தையை மனிதர்களுக்குச் சொல்ல வைக்கும் ஈமானுடைய எண்ணற்ற நன்மைகள் மற்றும் ஒளியிலிருந்து ஒன்பதை மாத்திரம் தெளிவுபடுத்துகிறோம். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ

§2

முதலில் இரண்டு விடயங்கள் நினைவூட்டப்பட வேண்டும். 1- மெய்யியல் ஞானம் அனைத்துப் பொருட்களையும் அவலட்சணமாகவும் பயங்கரமானதாகவும் காட்டும் ஓர் இருண்ட கண்ணாடியாகும். ஈமானிய ஞானம் அனைத்தையும் அழகானதாகவும் அன்னியோன்யமானதாகவும் காட்டும் ஊடுபுகு தன்மை உடைய ஒளிமயமானதொரு கண்ணாடியாகும். 2-எல்லாப் படைப்பினங்களோடும் சகவாசம் கொண்ட, எல்லாவற்றோடும் ஒரு வகைக் கொடுக்கல் வாங்கல் புரியும் தேவையுடைய, தன்னைச் சூழ உள்ள வஸ்துகளோடு உடல் உள ரீதியாகப் பரஸ்பரம் உறவு கொள்வதற்குப் படைப்பளவில் நிர்ப்பந்தமான மனிதனின் வலது, இடது, முன், பின், மேல், கீழ் என்ற ஆறு திசைகள் காணப்படுகின்றன. மனிதன் மேற் கூறப்பட்ட இரண்டு வகைக் கண்ணாடிகளையும் அணிந்து மேற்படி ஆறு திசைகளிலும் காணப்படும் படைப்பினங்களையும் அவற்றின் நிலவரங்களையும் அவதானிக்க முடியும். வலது திசை: இதனால் குறிப்பிடப்படுவது இறந்த காலமாகும். மெய்யியல் கண்ணாடியூடாக வலது புறத்தைப் பார்ப்பவன் கடந்தகால தேசத்தை ஒரு பேரழிவைச் சந்தித்து தலைகீழாகப் புரண்டுள்ள, இருண்ட, பயங்கரமான ஒரு மயான வெளியாகக் கண்டுகொள்வான். அதனூடாகப் பாக்கின்ற மனிதன் பயங்கரமானதோர் ஆதங்கத்துக்கும் விரக்திக்கும் ஆட்படுவதைவிட்டும் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ள முடியாது. ஆனால், ஈமானியக் கண்ணாடியை அணிந்து வலது புறத்தைப் பார்த்தால் உண்மையில் அந்தக் கடந்தகால தேசத்தைத் தலைகீழாகப் புரண்டு அழிந்த நிலையில் கண்டுகொண்டாலும்கூட அங்கு உயிர்கள் அழிந்து போகாதிருப்பதை அவன் கண்டுகொள்வான். அங்கிருந்த மக்களும் சேவகர்களும் அதைவிட அழகான, ஒளிமயமான ஒரு தேசத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பதை அவன் புரிந்துகொள்வான். அங்குள்ள மண்ணறைகளை ஒளிமயமான ஓர் உலகுக்குச் செல்வதற்கான நிலக்கீழ் சுரங்க வாயில்களாகக் காண்பான். ஈமானிய அருள் மனிதனுக்கு வழங்கும் இந்த மகிழ்ச்சிக்காகவும் நிம்மதிக்காகவும் ஆறுதலுக்காகவும் மனத்திருப்திக்காகவும் அந்த அல்லாஹ் ஒருவனுக்கே ஆயிரம் ஆயிரம் புகழ்கள் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. இடது திசை: அதாவது எதிர் காலத்தை மெய்யியல் கண்ணாடியூடாகப் பார்த்தால் அங்கே எம்மை அழித்து, மண்ணோடு மண்ணாக்கி, புழு பூச்சிகளுக்கும் விஷஜந்துகளுக்கும் இரையாக்கக்கூடிய இருண்ட, பயங்கரமான, பாரியதொரு மண்ணறையைக் கண்டுகொள்வான். ஆனால் ஈமானியக் கண்ணாடியூடாகப் பார்த்தால் பேரன்பும் அருளும் சர்வ வல்லமையும் மிக்க படைப்பாளனால் மனிதர்களுக்காகத் தயார் செய்யப்பட்ட வகை வகையான அறுசுவை உணவுகளாலும் பானங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ஓர் அருள்பாலிக்கப்பட்ட உணவு விரிப்பாக அதனைக் கண்டு கொள்வான். எதிர்காலத்தை இவ்வாறு அலங்கரிக்கின்ற ஈமானிய அருளுக்காக ஆயிரமாயிரம் நன்றிகளும் புகழ்களும் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உண்டாவதாக! “அல்ஹம்துலில்லாஹ்”. மேற் திசை: அதாவது, வான வெளியை மெய்யியல் கண்ணாடியூடாகப் பார்த்தால் இந்த எல்லையில்லாத இடைவெளியில் பில்லியன் கணக்கான நட்சத்திரங்களும் கோல்களும் அங்குமிங்குமாக பயங்கர வேகத்தில் இயங்குவதைக் கண்டு பாரிய பீதிக்கும் நடுக்கத்துக்கும் ஆளாவான். ஆனால், ஈமானியக் கண்ணாடியூடாகப் பார்க்கின்ற மனிதன் அந்த வியக்கத்தக்க, விசித்திரமான நிகழ்வுகள் ஒரு தளபதியின் கட்டளைக்கிணங்க அவனது மேற்பார்வையின் கீழ் இடம்பெறுகிறது என்பதையும் வானலோகத்தை அலங்கரித்திருக்கும் அந்த நட்சத்திரங்கள் யாவும் எமக்காக எரியும் ஒளிச்சுடர்கள் என்பதையும் அறிந்துகொள்வான். அவற்றின் அசுர இயக்கத்தின் காரணமாக பீதிக்கும் நடுக்கத்துக்குமன்றி ஒரு வகை பரஸ்பர நேசத்தையும் நெருக்கத்தையும் உணர்வான். ஆகாய வெளியை இவ்வாறு திரையிட்டுக் காட்சிப்படுத்தும் ஈமானிய அருளுக்காக அந்த றப்புல் ஆலமீன் ஆகிய அல்லாஹ் ஒருவன் மீதே வான்பொருட்களின் எண்ணிக்கையளவு நன்றிகளும் புகழ்களும் ஹம்த்களும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. கீழ்த் திசை: அதாவது பூமியை மெய்யியல் கண்ணாடியூடாகப் பார்க்கும் மனிதன் அதைத் திக்குத் தெரியாமல் ஆகாயத்தில் உலாவும் வரும் கடிவாளமற்ற ஒரு வாகனமாக அல்லது சமுத்திரத்தில் தத்தளிக்கும் மாலுமியற்ற, பழுதடைந்த ஒரு வள்ளமாகக் கண்டுகொள்வதால் அச்சத்துக்கும் நடுக்கத்துக்கும் ஆளாவான். ஆனால், ஈமானியக் கண்ணாடியூடாகப் பார்ப்பவன் பூமியை ரஹ்மானியத்தான ஒரு கப்பலாக அதாவது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க வித விதமான உணவுகள், பானங்கள், ஆடையணிகள் என்று அனைத்தையும் சுமந்துகொண்டு மனித குலத்தை பிரபஞ்ச வெளியில் சுற்றுலா அழைத்துச் செல்லும் ஒரு கப்பல் வடிவில் கண்டுகொள்வான். ஈமானிய அருள் காரணமாக அடைந்துகொண்ட இந்த இன்ப அருளுக்காகவும் அந்த அல்லாஹ் ஒருவன் மீது பெரும் பெரும் புகழ்களையும் நன்றிகளையும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. முன் திசை: ஒரு மெய்யியல் மேதையின் இந்தத் திசையை நோக்கிய பார்வையில் மனிதனாகட்டும் மிருகங்களாகட்டும் உயிருள்ள படைப்புகள் அனைத்தும் கூட்டம் கூட்டமாக அந்தத் திசையை நோக்கி அசுர வேகத்தில் சென்று மறைந்துவிடுகின்றன. அதாவது சூன்யத்தை அடைந்து அழிந்து போய்விடுகின்றன. தானும் கூட அந்தப் பாதையின் பாதசாரி என்பதால் மனிதன் விரக்தியால் புத்தி பேதலிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஆனால், ஈமானிய நோக்கில் பார்க்கும் ஒரு முஃமினின் பார்வையில் அந்தத் திசை நோக்கிய பயணமானது சூன்யத்தை நோக்கிய பயணமன்றி, தேசாந்திரப் பயணிகள் போன்று ஒரு சோலை நிலத்திலிருந்து இன்னுமொரு சோலை நிலத்தை அல்லது நந்தவனத்தை நோக்கிய பயணமாகும்; தற்காலிக வீட்டிலிருந்து நித்திய மாளிகையை நோக்கிய, பணியகத்திலிருந்து ஊதியம் பெறும் இடத்தை நோக்கிய, கவலைகள் தேசத்திலிருந்து கருணையின் தேசத்தை நோக்கியதொரு பயணமாகும். ஆகையால், அந்தத் திசையில் சூன்யமும் அழிவும் கிடையாது என்பதை அறிந்து, அந்தத் திசையில் அவன் நிம்மதியாகப் பயணிப்பான். இந்தத் திசையை இவ்வாறு ஒளிமயமாக்கும் ஈமானிய அருளுக்காக அந்த ஈருலக அரசனான அல்லாஹ் ஒருவன் மீது கோடான கோடி புகழ்களும் ஹம்த்களும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ”. மேலும் அந்த முஃமினின் பார்வைக்கு பாதை வழியில் தென்படும் மரணம், மண்ணறை போன்ற கஷ்டங்கள் கூட அவற்றின் விளைவுகளின் அடிப்படையில் நிம்மதியாகும். ஏனெனில், ஒளிமயமான உலகங்களை நோக்கிய பாதை மண்ணறையைத் தாண்டிச் செல்கின்றது. மிகப் பெரிய இன்பங்கள், நிம்மதிகள் மிகப் பெரிய வேதனைகளின் அழிவுகளின் விளைவுகளாகும். உதாரணமாக, யூஸுஃப் (அலை) அவர்கள் எகிப்தின் அரியாசனம் போன்றதொரு நிம்மதியை, தனது சகோதரர்களால் கைவிடப்பட்ட படுகுழி என்ற பாதையில் ஸுலைஹாவின் அவதூறு காரணமாக அடைக்கப்பட்ட சிறைச்சாலை வாயிலைக் கடந்து அடைந்துகொண்டார். அவ்வாறே தாயின் கருவறையிலிருந்து உலகுக்கு வரும் பாலகன் பெருங்குடல் என்ற சுரங்கத்தில் படும் நெருக்கடியான அவஸ்தையின் பிரதிபலனாக உலக மாளிகையில் நிம்மதியை அடைந்துகொள்கின்றான். பின் திசை: பின் திசையிலிருந்து வருபவர்களை மெய்யியல் கண்ணாடியூடாகப் பார்க்கும் ஒருவன் “சாபமே! இவை எங்கிருந்து வந்து எங்கே செல்கின்றன? எந்த நோக்கத்துக்காக இந்த உலகுக்கு வருகின்றன?” போன்ற மிகப் பெரிய கேள்விகளுக்கான பதில்களை அறிந்துகொள்ளாமையினால் -மனித இயல்புக்கிணங்க- வியப்புக் கலந்த சங்கடத்தோடும் மயக்கத்தோடும் இவற்றிலிருந்து வெளிப்படும் சில வகை வேதனைகளோடும் வாழ்க்கையைக் கழிப்பான். ஆனால் ஈமானியக் கண்ணாடியை அணிந்துகொண்டால் மனிதர்கள் அனைவரும் பிரபஞ்சக் காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வியத்தகு வல்லமையின் ஆச்சரியத்துக்குரிய அற்புதங்களைக் கண்டு களித்து, ஆராய்ந்து, அறிவு பெறுவதற்காக நித்திய அரசனால் அனுப்பப்பட்ட பார்வையாளர்கள் என்பதையும் அந்த உன்னத அற்புதங்களின் பெறுமதியையும் அந்தஸ்துகளையும் அறிந்து, அவை அந்த நித்திய அரசனின் பேராற்றலுக்கான சான்றுகள் என்ற வகையில் அவற்றினூடாக அந்த நித்திய அரசனை அறிந்துகொள்கின்ற அளவு அந்தஸ்துகளைப் பெற்று மீண்டும் நித்திய அரசனின் பிறிதொரு உலகிற்குச் செல்ல வந்தவர்கள் என்பதையும் அறிந்துகொள்வான். இந்தப் புரிதலை வழங்கிய ஈமானிய அருளுக்காக அல்லாஹ்வுக்கே ஆயிரம் ஆயிரம் நன்றிகளையும் புகழகளையும் குஊறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. நினைவூட்டல்: மேற்படி இருள்களை அகற்றும் ஈமானிய அருளுக்காக மொழியப்படும் “அல்ஹம்துலில்லாஹ்” என்ற அருளுக்காகவும் அல்லாஹ்வின் மீது புகழ் கூறக் கடமைப்பட்டுள்ளோம்! “அல்ஹம்துலில்லாஹ்”. ஏனெனில். “அல்ஹம்துலில்லாஹ்” என்ற ஹம்த் தன்னளவிலும் ஓர் அருள் என்பதால், அதற்காகவும் இன்னுமொரு ஹம்த் அவசியமானதாகும். இந்த இரண்டாவது ஹம்துக்கு மூன்றாவது ஒரு ஹம்த், மூன்றாவதற்கு நான்காவது ஒரு ஹம்த் அவசியமாகும். وَهَلُّمَ جَرًّا , அதாவது, தனி ஒரு ஹம்திலிருந்து வெளிப்படும் ஹம்த்களிலிருந்து முடிவற்ற சங்கிலித் தொடரான ஹம்த்கள் பிறக்கின்றன.

§3

ஆறு திசைகளையும் ஒளிமயமானதாக ஆக்கும் ஈமானிய அருளுக்காக மீண்டுமொருமுறை முகழ் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. ஏனெனில், ஈமான் ஆறு திசைகளிலும் சூழ்ந்த இருளை அகற்றுவதனூடாக “விமோசனம்” என்ற வகையில் பெரியதோர் அருளாக இருப்பது போன்றே -இயல்பாகவே- அந்த ஆறு திசைகளையும் ஒளிமயமாக்கிய காரணத்தினால் “சுபீட்சத்தை வரவழைத்தது” என்ற வகையில் இரண்டாவது பெரியதொரு அருளாகும். ஆகையால், மனிதன் இயல்பிலேயே நாகரிகப் பிரியன் என்ற வகையில், அந்த ஆறு திசையிலுமுள்ள படைப்பினங்களோடு தொடர்புகொள்ள வேண்டி இருப்பதால் ஈமானிய அருளின் மூலம் அந்த ஆறு திசைகளிலிருந்தும் மிகவும் அன்னியோன்யமான முறையில் பயன் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறே فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللهِ என்ற வசனத்துடைய குறிப்பர்த்தத்தின் மூலம் அந்த ஆறு திசைகளிலும் ஒரு முஃமின் பிரகாசமிக்கவனாக மாறுவான். ஏன், முஃமினான ஒரு மனிதனுக்கு உலகம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து முடிவு வரை நீளுகின்ற ஓர் ஆத்மீக வாழ்வு இருக்கின்றது. மேலும், அவனது இந்த ஆத்மீக ஆயுளானது ஆதி அந்தமில்லாத ஒரு வாழ்வுடைய ஒளியிலிருந்து நம்பிக்கையும் உதவியும் பெற்றுக்கொள்கின்றது. அவ்வாறே அந்த ஆறு திசைகளையும் ஒளியூட்டும் ஈமான் மூலம் மனிதனுடைய இந்தக் குறுகிய இடமும் காலமும் மிகவும் விசாலமான ஓர் உலகமாக நிலை மாற்றமடையும். அப்போது இந்த உலகம் அவனுடைய ஒரு மாளிகையாக மாறிவிடும். இறந்த மற்றும் எதிர் காலங்கள் மனித ஆத்மாவுக்கும் உள்ளத்துக்கும் நிகழ்காலம் போன்றாகி இடையே உள்ள தூரம் மறைந்து விடும்.

§4

ஈமான் ஓர் ஆதாரத்தளமாகவும் உதவித்தளமாகவும் இருப்பதால் அதற்காகவும் அந்த சர்வ வல்லோனாகிய அல்லாஹ் ஒருவனுக்கு முடிவற்ற நன்றிகளும் புகழும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. ஆம்! மனிதன் எல்லையற்ற இயலாமையோடும் அதே சமயம் எண்ணற்ற எதிரிகளால் சூழப்பட்டவனாகவும் இருக்கின்ற காரணத்தினால் அவற்றை எதிர்கொள்வதற்குப் பக்கபலமாக இருக்கக் கூடிய ஓர் ஆதாரத்தளத்தின் மீது தேவையுடையவனாக இருக்கின்றான். அவ்வாறே, எண்ணற்ற தேவைகளை உடையவனாக இருக்கின்ற அதே சமயம் முடிவற்ற பலவீனனாகவும் இருக்கின்ற காரணத்தினால் அந்தத் தேவைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக இருக்கத்தக்க ஓர் உதவித்தளத்தின் மீதும் தேவை உடையவனாக இருக்கின்றான். மனிதனே! உனக்கான முதலும் இறுதியுமான ஆதாரத்தளம் அல்லாஹ் மீதான ஈமானாகும். அதேபோன்று உனது ஆன்மாவுக்கும் மனசாட்சிக்குமான ஒரே உதவித்தளம் மறுமை நம்பிக்கையாகும். இந்த இரண்டு தளங்களையும் அறிந்துகொள்ளாத ஒரு மனிதனின் உள்ளமும் ஆத்மாவும் அச்சத்தால் உறையும். அவனது மனசாட்சி அவனை எப்போதுமே வதைக்கு மேல் வதைப்படுத்தும். ஆனால், முதல் தளத்தை ஆதாரமாகவும் இரண்டாவது தளத்தை உதவியாகவும் எடுத்துக்கொள்ளும் மனிதன் உள ரீதியாகவும் ஆத்ம ரீதியாகவும் ஏராளமான இன்பங்களையும் நிம்மதிகளையும் உணர்ந்துகொள்வான். மிகுந்த ஆறுதலடைந்தவனாகவும் முத்மஈன் ஆகவும் ஆகிவிடுவான்.

§5

ஆகுமாக்கப்பட்ட இன்பங்கள் தீர்ந்து போக ஆரம்பமாகும் போது அது மனிதனுக்கு கைசேதத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. இந்தக் கைசேதத்தையும் துக்கத்தையும் மேற்படி இன்பங்களின் தொடர்ச்சி வந்துகொண்டிருக்கின்றது என்பதை உறுதியாகக் காண்பிப்பதன் மூலமும் அந்த அருட்கொடைகள் தொடர்ந்து வருவதால் குறைந்தோ அழிந்தோ போவதில்லை என்பதை அந்த அருட்கொடைகளின் தோற்றுவாயாக இருக்கும் அவற்றின் வற்றாத ஊற்றுகளைக் காண்பித்து உத்தரவாதப்படுத்துவதன் மூலமும் அகற்றி விடுகின்ற ஈமானிய ஒளிக்காகவும் அந்த மகா கருணையாளனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே கோடானுகோடி நன்றிகளும் புகழும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. அவ்வாறே ஈமானிய ஒளி பிரிவின் காரணமாக ஏற்படும் துக்கங்கள், கைசேதங்களை அதற்கொப்பான புதுப்பிக்கப்படும் இன்பங்களைக் காண்பிப்பதன் மூலம் அகற்றிவிடுகின்றது. அதாவது தீர்ந்து, அழிந்து போவதை சிந்திப்பதனூடாக ஒவ்வோர் இன்பத்தினுள்ளும் ஏராளமான துக்கங்கள் இடம்பிடித்துக்கொள்கின்றன. ஈமானிய ஒளியானது புதுப்பிக்கப்படும் அதை ஒத்த இன்பங்களைக் காண்பிப்பதன் மூலம் இன்பங்களோடு ஒட்டியிருக்கும் அந்த வேதனைகளைத் துடைத்தெறிந்துவிடுகின்றது. அத்துடன் இன்பங்கள் புதுப்பிக்கப்படுவதிலும் அலாதியான ஓர் இன்பம் உள்ளது. ஆம்! ஒரு கனி, அதன் மரம் இல்லாததாக இருந்திருப்பின், அந்தக் கனிக்குள் சுருங்கிய அதன் சுவை அதைச் சாப்பிட்ட உடனே தீர்ந்து போய்விடும். அந்த அழிவு கைசேதத்தையும் துக்கத்தையுமே விளைவாகத் தரும். ஆனால், அந்தக் கனியின் மரம் அறியப்படுகின்ற போது, அந்தக் கனியின் முடிவு கைசேதத்தை ஏற்படுவதில்லை. ஏனெனில், அந்த இடம் அதை ஒத்த ஏராளமான கனிகள் மூலம் மீள நிரப்பப்படுவதை மனிதன் அறிகிறான். ஆகவே, புதுப்பித்தல் செயற்பாடானது தன்னளவில் இன்பம் நிறைந்ததாகும். அவ்வாறே மனித ஆத்மாவை மிக மோசமாக வதைப்பது பிரிவால் ஏற்படும் வேதனைகளாகும். ஈமானிய ஒளியானது அந்த வேதனைகளைப் புதுப்பிக்கப்படும் ஒத்த இன்பங்களைக் காண்பிப்பதன் மூலமும் மீளிணைவு என்ற சுபசோபனத்தின் மூலமும் போக்கிவிடுகின்றது.

§6

மனிதன் படைப்பினங்களில் தனக்கு எதிரிகளாகவும் அன்னியர்களாகவும் அல்லது உயிரற்ற சடலங்களைப் போன்று மரணித்தவைகளாகவும் அநாதரவானவைகளாகவும் திக்குத் தெரியாதவைகளாகவும் சித்திரித்துக்கொண்ட வஸ்துகளை நேசத்துக்குரிய சகோதரர்களை, சகாக்களைப் போன்றும் திக்ரிலும் தஸ்பீஹிலும் திளைத்திருக்கின்ற வாழ்வுள்ள இறை தியானிகளாகவும் காண்பிக்கின்ற ஈமானிய ஒளிக்காகவும் அல்லாஹ்வுக்கு ஆயிரமாயிரம் நன்றிகளும் புகழும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. அதாவது, பொடுபோக்குக்காரர்களின் பார்வையில் படைப்பினங்கள் தமக்குத் தீங்கிழைக்கக்கூடிய எதிரிகளைப் போன்றே தென்படும். இதனால் பீதியும் அச்சமும் அடைவான். அவ்வாறே வழிகேட்டிலுள்ளவன் வஸ்துகளை அன்னியமானவையாகப் பார்ப்பான். ஏனெனில், வழிகேட்டில் உள்ளவர்களின் பார்வையில் இறந்த மற்றும் எதிர்காலங்களிலுள்ள வஸ்துகளோடு சகோதரத்துவ உறவுகளோ பிணைப்புகளோ இணைப்புகளோ கிடையாது. வெறுமனே நிகழ்கால வஸ்துகளோடு சுயநலன் சார்ந்த, குறுகிய, சிறியதொரு தொடர்பு காணப்படும். எனவே வழிகேட்டிலுள்ளவர்களுக்குப் பிறிதொன்றோடுள்ள சகோதரத்துவமும் நேசமும் பல்லாயிரக்கணக்கான வருடங்கள் மிக நீண்டதொரு காலப் பரப்பிலுள்ள ஒரு நிமிடத்தை ஒத்ததாகும். ஈமானியப் பார்வையானது பிரமாண்டமான வான் பொருட்களையும்கூட உயிர்ப்புள்ளவையாகவும் அன்னியோன்யமானவையாகவும் பரஸ்பரம் பின்னிப் பிணைந்தவையாகவும் கண்டுகொள்ளும். மேலும், ஒவ்வொரு வான்பொருளும் தத்தமது மெய்மொழிகளால் படைப்பாளனுக்குத் துதி செய்துகொண்டிருப்பதைக் காட்டித் தரும். அந்த வகையில் ஒவ்வொரு வான்பொருளுக்கும் அதற்கே உரிய அமைப்பில் ஒரு வகையான வாழ்வும் ரூஹும் காணப்படுகின்றன. ஆகவே, ஈமானியப் பார்வையில் அந்த வான்பொருட்களுக்கிடையில் குழப்ப நிலை காணப்படாது. மாறாக, அன்னியோன்யமும் அன்புப் பிணைப்புமே காணப்படும். வழிபிறழ்ந்த பார்வையானது தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத, இயலாமையின் மொத்த உருவான மனிதனைக் கேட்பார் பார்ப்பாரற்றவர்களாகவும் பாதுகாப்பற்றவர்களாகவும் துக்கம், துயரம், இயலாமை காரணமாக அழுது புலம்பும் அனாதரவானவர்களாகவும் கண்டுகொள்ளும். ஈமானியப் பார்வையானது உயிரினங்களை அழுது புலம்பும் அநாதரவானவைகளைப் போலன்றி பொறுப்புகள் சுமத்தப்பட்ட உத்தியோகத்தர்களாகவும் தியானத்தில் ஈடுபடும் அடியார்களாகவும் காண்பிக்கும்.

§7

இம்மை உலகையும் மறுமை உலகையும் விதவிதமான அருள்பாக்கியங்களைத் தாங்கிய இருவேறு அருள் விரிப்புக்களாகப் பிரஸ்தாபிக்கின்ற ஈமானிய ஒளிக்காக அளவற்ற அருளாலனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த அல்லாஹ் ஒருவனுக்கு எல்லா வகையான நன்றிகளையும் புகழ்களையும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். அல்ஹம்துலில்லாஹ். ஆம்! முஃமினான எந்த ஒருவனும் தனது ஈமானியக் கரத்தினாலும் கிரகித்துக்கொள்ள முடியுமான, முடியாத புலனுணர்வுகளாலும் உளரீதியான மற்றும் ஆத்மார்த்தமான சாதனங்கள் மூலமாகவும் அந்த அருள் விரிப்புகளிலிருந்து பயன் பெற்று இன்பம் அனுபவிப்பான். வழிபிறழ்ந்த பார்வையிலோ உயிரினங்களின் பயன்பெற முடியுமான எல்லை மிகவும் குறுகிவிடுகின்றது; லௌகீக இன்பங்களோடு சுருங்கிக்கொள்கின்றது. ஈமானியப் பார்வையில் இந்த எல்லையானது, வானம் பூமியை உள்ளடக்கக் கூடிய அளவும் இம்மை மறுமை உலகங்களை உள்ளடக்கக் கூடிய அளவும் விசாலமானதாகும். ஆம்! ஒரு முஃமின், சூரியனைத் தனது இல்லத்தின் முகட்டில் பொருத்தப்பட்ட ஓர் ஒளி விளக்காகவும் சந்திரனை ஓர் அலங்கார விளக்காகவும் பார்க்க முடியும். அந்த வகையில் சூரியனும் சந்திரனும் தனக்கான ஒவ்வோர் அருளாக ஆகிவிடுகின்றது. இவ்வாறு முஃமினான மனிதனின் பயன்பெறும் எல்லை வானம் பூமியைவிட விசாலமானதாகும். அற்புதக் குர்ஆன் وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ * سَخَّرَ لَكُمْ مَا فِى اْلاَرْضِ என்ற வசனங்களின் ஆழமான கருத்தினூடாக ஈமானிலிருந்து ஊற்றெடுக்கும் மேற்படி அருட்கொடைகளையும் செல்வங்களையும் சுட்டிக்காட்டுகின்றது.

§8

எண்ணற்ற, வகை வகையான அருட் பாக்கியங்களையும் முடிவற்ற, விதவிதமான ஈகைகளையும் அளவிட முடியாத அளவு வெவ்வேறுபட்ட அன்பளிப்புகளையும் முழுமொத்தமாக உள்ளடக்கிய, எல்லா வகை அருட்கொடைகளுக்குமான ஊற்றுவாயாகவும் அந்த அனைத்து அருட்கொடைகளையும் விஞ்சியதாகவும் திகழ்கின்ற மிகப் பெரிய அருள் வாஜிபுல் வுஜூத் ஆகிய அல்லாஹ்வின் இருப்பாகும். அவனது இருப்புக்காக பிரபஞ்சத்திலுள்ள அணுக்களின் எண்ணிக்கையளவு நன்றிகளும் புகழும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். சர்வலோக இரட்சகனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே புகழனைத்தும் உண்டாவதாக! “அல்ஹம்துலில்லாஹ்”. இந்த அருளின் தாத்பரியங்கள் தொடர்பான குறிப்புகள் ரிஸாலே நூரின் பல பகுதிகளில் விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஈமான் பில்லாஹ் தொடர்பாகப் பேசும் பகுதிகளில் திரைகள் மிகவும் விசாலமான அமைப்பில் நீக்கப்படுகின்றன. اَلْحَمْدُ لِلَّهِ வில் உள்ள “லாமுல் இஸ்திஃராக்” எனப்படும் பொதுமையாக்கும் லாம் உள்ளடக்குகின்ற ஒட்டுமொத்த ஹம்துகள் மூலமும் ஹம்து செய்யப்பட வேண்டிய அருள்களுள் ஒன்று ரஹ்மானியத் ஆகும். அந்த அருளுக்காக அளவற்ற அருளாலனாகிய அந்த ரஹ்மானுக்கு உயிரினங்களின் எண்ணிக்கையளவு நன்றிகளும் புகழும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. ஏனெனில் மனிதன் ஏனைய அனைத்து உயிரினங்களோடும் ஆழமான தொடர்புகளை உடையவனாக இருக்கின்றான். இந்தத் தொடர்புகள் காரணமாக மனிதன் எல்லா உயிரினங்களின் மகிழ்ச்சிகளாலும் மகிழ்ச்சியடைபவனாகவும் அவற்றின் வேதனைகளால் வேதனையடைபவனாகவும் இருக்கின்றான். அவ்வாறாயின் ஏதேனும் ஒன்றுக்கான அருள்கள் அதனோடு தொடர்புபட்ட அனைத்துக்கும் அனைவருக்குமான அருள்களாகும். மேலும், தாய்க் குலத்தின் அன்பால் அருள்பாலிக்கப்பட்டுள்ள பாலகர்களின் எண்ணிக்கையளவு அல்லாஹ்வுடைய ரஹீமியத்தில் பொதிந்துள்ள அருட்கொடைகளுக்காக நிகரற்ற அன்புடையோனாகிய அந்த அல்லாஹ் ஒருவனுக்கே நன்றிகளும் புகழ்களும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. ஆம்! தாயின் அரவணைப்பைவிட்டும் தூரமான ஒரு குழந்தையின் அழுகையால் தாக்கமடைகின்ற, கவலைப்படுகின்ற ஒவ்வொரு மனசாட்சி உடையவனும் நிச்சயமாக தாயின் குழந்தை மீதுள்ள பாசம் காரணமாக இன்பமும் மகிழ்ச்சியும் ஆறுதலும் அடைவான். ஆகவே இது போன்ற இன்பங்கள் அனைத்தும் புகழையும் நன்றியையும் வேண்டி நிற்கின்ற அருள்களாகும். மேலும், அல்லாஹ்வுடைய ஹகீமியத் உள்ளடக்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்காகவும் பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ள வித விதமான நுண்ணிய ஞானங்களின் எண்ணிக்கையளவு சர்வ ஞானமிக்க அந்த அல்லாஹ்வுக்கு நன்றிகளும் புகழும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. ஏனெனில் மனித நஃப்ஸ் ரஹ்மானிய்யத்தின் பிரதிபலிப்புக்களாலும் உள்ளம் ரஹீமியத்தின் பிரதிபலிப்புக்களாலும் அருள்பாலிக்கப்படுவது போன்றே மனிதனின் பகுத்தறிவானது ஹகீமியத்தின் நுண்ணிய, வியக்கத்தக்க பிரதிபலிப்புகளால் இன்பமும் சுவையும் அனுபவிக்கின்றது. எனவே இத்தகைய அருட்கொடைகளுக்காகவும் மனதாற “அல்ஹம்துலில்லாஹ்” சொல்வதனூடாக புகழும் நன்றியும் செலுத்துவது கடமையாகின்றது. மேலும், அல்லாஹ்வுடைய ஹஃபீழியத் உள்ளடக்கியிருக்கின்ற அருட்கொடைகளுக்காக அஸ்மாஉல் ஹுஸ்னாவில் உள்ள “வாரிஸ்” நாமத்தின் பிரதிபலிப்புகளின் எண்ணிக்கையளவும் தந்தை போன்ற மூதாதையரின் இறப்பைத் தொடர்ந்து நிலைத்து நிற்கும் அவர்களது வழித்தோன்றல்களின் எண்ணிக்கையளவும் மரத்தை ஒத்த அஸல்களுடைய இறப்பைத் தொடர்ந்து அவற்றின் இடத்தை நிரப்புவதற்காகப் பாதுகாக்கப்படும் ஏராளமான விதைகளின் எண்ணிக்கையளவும் மறுமை உலகின் இருப்புக்களின் எண்ணிக்கையளவும் மறுமைப் பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்வதற்காகப் பாதுகாக்கப்படும் மனிதனுடைய செயல்களின் எண்ணிக்கையளவும் வான முகட்டில் எதிரொலிக்கும் அளவு முழக்கத்துடன் அந்த சர்வ ஞானமிக்க பாதுகாவலனாகிய அல்லாஹ்வுக்கு நன்றிகளும் புகழும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. ஏனெனில், அருட்கொடைகளின் தொடர்ச்சி அருட்கொடைகளைவிட அதிகம் பெறுமதியானதாகும். இன்பத்தின் தொடர்ச்சி இன்பத்தைவிட அதிகம் இனிமையானதாகும். சுவனத்தில் நிரந்தரம் சுவனத்தைவிட சிரேஷ்டமானதாகும். இன்னும் இந்தப் பட்டியலை நீட்டிக்கொண்டே செல்லலாம். இதற்கமைய அல்லாஹ்வின் “ஹஃபீழியத்” உள்ளடக்கும் அருட்கொடைகள் ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் உள்ள ஒட்டுமொத்த அருட்கொடைகளைவிடவும் மிக அதிகமானதும் மிக உயர்ந்ததுமாகும். மேலும், மேற்படி விளக்கத்துக்கெடுத்துக்கொள்ளப்பட்ட “ரஹ்மான், ரஹீம், ஹகீம், ஹஃபீழ்” ஆகிய நாமங்களைப் போன்றே அஸ்மாஉல் ஹுஸ்னாவிலுள்ள ஒவ்வொரு நாமமும் முடிவற்ற அருட்கொடைகளை உள்ளடக்கியதாக இருப்பதால் அந்த ஒவ்வொரு நாமத்துக்காகவும் முடிவற்ற புகழும் நன்றிகளும் செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். புகழனைத்தும் அவனொருவனுக்கே! “அல்ஹம்துலில்லாஹ்”. மேலும், முடிவில்லாத அருட்கொடைகளையும் சௌபாக்கியங்களையும் சுமந்து வந்த குர்ஆனுக்காகவும் எல்லையில்லாத புகழும் நன்றிகளும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. ஏனெனில் அந்தக் குர்ஆன் இதுவரை சொல்லப்பட்ட எல்லா வகை அருட்கொடைகளைப் பற்றியும் எமக்கு வியாக்கியானம் செய்கின்ற ஒரு மொழிபெயர்ப்பியாகத் திகழ்கின்றது. மேலும், கண்மணி நாயகம் ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அண்ணவர்களுக்காகவும் அல்லாஹ் ஒருவனுக்கே முடிவில்லாத நன்றிகளும் புகழும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”. ஏனெனில், இங்கு கூறப்பட்ட ஒட்டுமொத்த அருள் கஜானாக்களினதும் திறவுகோலாக இருக்கின்ற ஈமானிய அருளுக்கு அண்ணவர்களே வஸீலாவாக அமைந்தார்கள். கூடவே ஆன்மீக மற்றும் லௌகீக ரீதியான எல்லா வகையான அருட்கொடைகளுக்குமான உள்ளடக்கமான ஊற்றாகத் திகழும் இஸ்லாம் என்ற அருளுக்காகவும் ஏக இரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லையில்லாத புகழும் நன்றிகளும் கூறக் கடமைப்பட்டுள்ளோம். “அல்ஹம்துலில்லாஹ்”.

§9

புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு மாத்திரமே உண்டாவதாக. அவனது மகத்துவம் எத்தகையதெனில், -இந்தப் பெரும் புத்தகமான பிரபஞ்சப் புத்தகத்துடைய விரிவுரையான சங்கைமிக்க குர்ஆனின் தெளிவுரைக்கமைய- பிரபஞ்சப் புத்தகத்தின் அத்தனை பாகங்களும் அத்தியாயங்களும், அத்தனை பக்கங்களும் பத்திகளும், அத்தனை வரிகளும் வார்த்தைகளும், அத்தனை எழுத்துக்களும் புள்ளிகளும் -அவற்றுக்கென்றே உள்ள தனித்துவத்தோடு அவற்றை அந்தப் புத்தகத்தில் பதித்த- அந்த சங்கைமிக்க படைப்பாளனாகிய ழாதுல் அக்தஸை, அவனது ஜமால் மற்றும் கமால் என்ற பண்புகளைப் பிரதிபலிப்பதனூடாகப் புகழ்பாடி வாழ்த்திக் கொண்டிருக்கின்றன. மேலும், சிறிதாகட்டும் பெரிதாகட்டும் அந்தப் பிரபஞ்சப் புத்தகத்தில் உள்ள ஒட்டுமொத்த கலையம்சங்களும் வாஹிதுஸ் ஸமத் ஆகிய அந்த அழகிய வடிவமைப்பாளனின் மாட்சிமை சார்ந்த பண்புகளை வெளிப்படுத்துவதன் மூலம் புகழ்பாடி வாழ்த்திக்கொண்டிருக்கின்றன. மேலும், அந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்தும் ரஹ்மானுர் ரஹீம் ஆகிய அதன் எழுத்தாளனின் அழகுடன் சார்ந்த பண்புகளை வெளிப்படுத்துவதன் மூலம் புகழ்பாடி வாழ்த்துகின்றன. மேலும் அந்தப் புத்தகத்தின் நயமும் அர்த்தபுஷ்டியும்மிக்க ஒவ்வொரு கஸீதாவும் கதீர், அலீம் ஆகிய ஒழுங்கமைப்பாளனை தக்தீஸ் செய்துகொண்டும் வாழ்த்துக் கூறி புகழ் பாடிக்கொண்டும் இருக்கின்றன. அவ்வாறே, அந்தப் புத்தகத்தின் ஒவ்வோர் எழுத்தும், ஒவ்வொரு புள்ளியும், ஒவ்வொரு வடிவமைப்பும் அஸ்மாஉல் ஹுஸ்னாவின் பிரதிபலிப்புகளாகவும் அவற்றால் ஆகர்ஷிக்கப்பட்டவைகளாகவும் இருந்து அந்த தாதுல் அக்தஸை தக்தீஸ் செய்துகொண்டும் வாழ்த்திக்கொண்டும் கண்ணியப்படுத்திக்கொண்டும் இருக்கின்றன.

§10

(மொழ்பெயர்க்கப்படவில்லை.) ஸஈத் நூர்ஸி

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters