Lem'alar

The First Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ فَنَادٰى فِى الظُّلُمَاتِ اَن۟ لَٓا اِلٰهَ اِلَّٓا اَن۟تَ سُب۟حَانَكَ اِنّٖى كُن۟تُ مِنَ الظَّالِمٖينَ ۝ اِذ۟ نَادٰى رَبَّهُٓ اَنّٖى مَسَّنِىَ الضُّرُّ وَاَن۟تَ اَر۟حَمُ الرَّاحِمٖينَ ۝ فَاِن۟ تَوَلَّو۟ا فَقُل۟ حَس۟بِىَ اللّٰهُ لَٓا اِلٰهَ اِلَّا هُوَ عَلَي۟هِ تَوَكَّل۟تُ وَهُوَ رَبُّ ال۟عَر۟شِ ال۟عَظٖيمِ ۝ حَس۟بُنَا اللّٰهُ وَنِع۟مَ ال۟وَكٖيلُ ۝ لَا حَو۟لَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ ال۟عَلِىِّ ال۟عَظٖيمِ ۝ يَا بَاقٖى اَن۟تَ ال۟بَاقٖى ۝ يَا بَاقٖى اَن۟تَ ال۟بَاقٖى ۝ لِلَّذٖينَ اٰمَنُوا هُدًى وَ شِفَٓاءٌ (இந்த முப்பத்தொன்றாவது கடிதத்தின் முதல் பகுதியானது, எல்லா நிலமைகளிலும், குறிப்பாக மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடைப்பட்ட காலத்தில் தலா முப்பத்து மூன்று தடவைகள் ஓதுவதால் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத்தரக்கூடிய மேற்படி அருள்பாளிக்கப்பட்ட வசனங்கள் ஒவ்வொன்றிலும் பொதியப்பெற்றிருக்கும் பல்வேறு ஒளிக் கீற்றுகளுள் தலா ஒவ்வோர் ஒளிக்கீற்றைக் காட்டும் ஆறு மின்னல்களை உள்ளடக்கியதாகும்.)

§2

யூனுஸ் இப்னு மெத்தா நபிய்யுனா அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய முனாஜாத்தானது மிக உன்னதாமானதொரு முனாஜாத் ஆகும். இந்த வகையில் துஆ ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான மிக முக்கியமானதொரு காரணியாகவும் அது அமைந்து விட்டது. இப்போது விடயத்துக்குள் நுழைய முன்னர் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய பிரபலமான சம்பவத்தை சுருக்கமாக நோக்குவோம். அது பாரெங்கும் இரவின் இருளில் மூழ்கிக் கிடந்த நேரமாகும். கடல் பயங்கர புயல் காற்றோடு கோர தாண்டவமாடிக்கொண்டிருந்தது. இந்த நிலையில் அண்ணவர்கள் நடுக்கடலில் தூக்கி எறியப்படுகிறார்கள். பெரியதொரு மீன் அவர்களை விழுங்கிக் கொள்கின்றது. எல்லாப் புறத்திலிருந்தும் எல்லா விதமான நம்பிக்கைகளும் துண்டிக்கப்பட்டிருந்த அந்த சந்தர்ப்பத்தில் لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كُنْتُ مِنَ الظَّالِمِينَ என்ற முனாஜாத் வெகு விரைவாகவே அண்ணவர்களுடைய விமோசனத்துக்கான காரணியாக ஆகியது. இந்த வகையில் மேற்படி முனாஜாத்தில் பொதிந்துள்ள உன்னதமான தாத்பரியங்களை நோக்கி எமது கவனத்தை செலுத்துவோம். அது காரணகாரியங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாகத் தமது தோல்வியை ஒப்புக்கொண்ட பொழுதுகளாகும். அதாவது அந்த நிலையிலிருந்து அண்ணவர்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பது எந்தவிதமான காரணகாரியங்களாலும் சாத்தியமற்ற ஒரு விடயமாக இருந்தது. மாறாக, மீனின் மீதும் சமுத்திரத்தின் மீதும் இரவின் மீதும் வான வெளியின் மீதும் சம நேரத்தில் அதிகாரம் செலுத்த முடியுமான ஒருவனால் மாத்திரமே அந்த நிலையிலிருந்து அண்ணாருக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுக்க முடியுமாக இருந்தது. ஏனெனில் அண்ணவர்களுக்கு எதிராக இரவும் சமுத்திரமும் மீனும் கூட்டுச் சேர்ந்திருந்தன. இந்த மூன்றையும் ஒருமிக்க தனது கட்டளைக்கு அடிபணியச் செய்ய முடியுமான ஒருவனால் மாத்திரமே அண்ணாரை அந்நிலையிலிருந்து கரை சேர்க்க முடியுமாக இருந்தது. ஒரு வேளை ஒட்டுமொத்த மனிதர்களும் தம்முடைய ஒட்டுமொத்த ஆற்றல்களையும் திரட்டிக்கொண்டு அண்ணாருக்கு சேவகர்களாகவும் உதவியாளர்களாகவும் ஆகியிருந்தாலும் கூட ஐந்து காசு பிரயோசனம் இருந்திருக்காது. அதாவது காரணகாரியங்களிடம் எந்த விதமான வினைத்திறனும் கிடையாது என்பதே இதன் அர்த்தமாகும். எனவே அண்ணார் அந்த நிலையில் காரணகாரியங்களின் காரணகர்த்தாவைத் தவிர வேறு புகழிடம் கிடையாது என்ற உண்மையைக் கண்ணால் காண்பதைப் போன்று (ஐனல் யகீன்) கண்டுகொண்டதாலும், தவ்ஹீதுடைய ஒளிக்குள் இருந்த அஹதிய்யத்துடைய இரகசியம் பளிச்சென்று தென்பட்டதாலும், இந்த முனாஜாத் உடனடியாக இரவையும் மீனையும் சமுத்திரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரக் காரணியாக அமைந்து விட்டது. தவ்ஹீதுடைய அந்த ஒளி மீனின் வயிற்றை ஒரு நீர்மூழ்கிக் கப்பலாக மாற்றியது; கோர தாண்டவமாடும் அலைகளால் நிரம்பிய சமுத்திரத்தை பாதுகாப்பான ஒரு பல்லத்தாக்காகவும் சுற்றுலாத்தளமாகவும் மாற்றியது; ஆகாயவெளியை கார்மேகங்களிலிருந்து தூய்மைப்படுத்தி நிலவை ஓர் ஒளி விளக்காக உலாவரச் செய்தது. நாலாபுறங்களிலிருந்தும் அண்ணாருக்கு அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்துவதாக இருந்த அந்த அத்தனை படைப்பினங்களும் எல்லா வகையிலும் அண்ணாருக்குத் தமது நற்புக் கரங்களை நீட்டின. இறுதியில் சௌகரியமாகக் கரை சேர்ந்து யக்தீன் மரத்தின் நிழலில் தனது ரப்புடைய உதவியைக் கண்டுகொண்டார்கள். ஆம், உண்மையில் யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய ஆரம்ப நிலமையை விட மிகவும் பயங்கரமானதொரு நிலையிலேயே நாங்கள் இருக்கின்றோம். எமது இரவு எமது எதிர்காலமாகும். ஆம் எமது எதிர்காலமானது எமது பொடுபோக்கு மேலிட்ட பார்வை காராணமாக அண்ணார் எதிர்கொண்ட இரவை விட நூறு மடங்கு அதிக இருள் சூழ்ந்ததாகவும் பயங்கரமானதாகவும் காணப்படுகின்றது. நாம் மூழ்கியிருக்கின்ற சமுத்திரமானது, நாம் திக்குத் தெரியாமல் அலைந்து திரிகின்ற இந்த உலகமாகும். இந்த சமுத்திரத்தின் ஒவ்வோர் அலையிலும் ஆயிரக்கணக்கான பிணங்கள் மூழ்கிப் போகின்றன. நாம் மூழ்கியிருக்கின்ற இந்த சமுத்திரமானது, அண்ணார் மூழ்கிய சமுத்திரத்தை விட ஆயிரம் மடங்கு அதிக பயங்கரமானதாகும். மேலும் எமது நஃப்ஸானியத்தான இச்சைகள் தான் எம்மை விழுங்கியிருக்கின்ற மீனாகும். அது எமது நித்திய வாழ்வையே அழித்து விடக் கங்கனம் கட்டியிருக்கின்றது. இது யூனுஸ் அலைஹிஸ்ஸ்லாம் அவர்களை விழுங்கிய மீனை விட ஆயிரம் மடங்கு அதிக தீங்கு விளைவிக்கக் கூடியதாகும். ஏனெனில் அந்த மீன் மிஞ்சிப் போனால் ஒரு நூறு வருட வாழ்க்கையைத் தான் அழித்து விடக் கூடியதாக இருந்தது. ஆனால் எம்மை விழுங்கியிருக்கின்ற இந்த மீனோ எமது மில்லியன் கணக்கான வருட வாழ்வை அழித்து நாசமாக்க முனைந்து கொண்டிருக்கின்றது. நாம் முகம்கொடுத்திருக்கக் கூடிய உண்மையான நிலை சந்தேகத்துக்கிடமின்றி இதுவென்பதால் நாமும் யூனுஸ் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை அடியொட்டி, ஒட்டுமொத்த காரண காரியங்களை விட்டும் முகத்தைத் திருப்பி, நேரடியாக காரணகாரியங்களின் காரணகர்த்தாவான எமது ரப்பிடம் இருகரமேந்தி لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كُنْتُ مِنَ الظَّالِمِينَ என்று சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். மேலும் எமது பொடுபோக்குத்தனம் காரணமாகவும் நெறிபிறழ்வின் காரணமாகவும் எமக்கெதிராகக் கூட்டுச் சேர்ந்திருக்கும் எதிர்காலம், உலகம், நஃப்ஸ் போன்றவற்றின் தீங்குகளை அகற்றக் கூடியவன் அந்த ஒருவன் மாத்திரமே என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அவனே எதிர்காலம் உற்பட எல்லாக் காலங்களையும் தனது கட்டளைக்குக் கீழ் வைத்திருக்கின்றான். உலகமும் கூட அவனது ஆட்சியதிகாரத்துக்குக் கீழ் இருக்கின்றது. எமது நஃப்ஸுகளும் அவனது கட்டளைக்கு அடிபணிந்தே இருக்கின்றன. மனிதா! எமது ஆழ் மனதில் மின்னி மறையும் மிகவுமே இரகசியமான எண்ண அலைகளையும் ஆசைகளையும் விளங்கி, எமக்காக மறுமை உலகத்தைப் படைத்து, அதன் மூலம் எமது எதிர்காலத்தை ஒளிமயமானதாக ஆக்கி, அதன் மூலம் உலகின் திணரடிக்கும் எண்ணற்ற கொந்தளிப்புக்களிலிருந்து எமக்கு விமோசனமளிக்க முடியுமானவன், வானங்கள் பூமியின் படைப்பாளனைத் தவிற வேறு எந்தக் காரணகர்த்தாவாகத் தான் இருக்க முடியும்? நிச்சயமாக, ஒருபோதும், வாஜிபுல் வுஜூத் (இருப்பு கட்டாயமானவன்) ஆகிய அந்த ஏகனைத் தவிற வேறு எந்த ஒன்றும் எந்த வகையிலும் அவனது அனுமதியும் நாட்டமும் இன்றி எமக்கு உதவி செய்யவோ பாதுகாப்பளிக்கவோ முடியாது. உண்மையில் இதுவே எம்முடைய யதார்த்தமான நிலையாகும். எனவே நாமும் அந்த முனாஜாத்தில் சாடையாக இலையோடியிருக்கின்ற மேற்படி அர்த்தங்களைக் கருத்தில் கொண்டு لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كُنْتُ مِنَ الظَّالِمِينَ என்று சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றோம். யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய அந்த முனாஜாத்தின் விளைவாக மீன் அண்ணாருக்கு ஒரு வாகனமாகவும் சமுத்திரம் ஒரு சமவெளியாகவும், இரவு நிலவொளி படர்ந்த ரம்மியமான ஒரு காட்சியாகவும் எப்படி மாறியதோ, அவ்வாறே நாமும் لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ என்ற வசனத்தினூடாக எமது எதிர்காலத்தை நோக்கியும், سُبْحَانَكَ என்ற சொல்லினூடாக எமது உலகத்தை நோக்கியும், اِنِّى كُنْتُ مِنَ الظَّالِمِينَ என்ற வசனத்தினூடாக எமது நஃப்ஸை நோக்கியும் ரப்புடைய கருணைப் பார்வையை ஈர்க்க வேண்டும். அப்போது அந்த ஈமானிய ஒளியும் குர்ஆனுடைய பிரகாசமும் எமது எதிர்காலத்தை ஒளிமயமானதாகவும் பிரகாசமானதாகவும் ஆக்கி விடும். அச்சம், அநாதரவு போன்ற இருள்களால் எம்மைச் சூழ்ந்திருக்கும் எதிர்காலம் என்ற இரவு ரம்மியமானதாகவும் அன்னியோன்யமானதாகவும் நிலை மாறிவிடும். மேலும் காலங்கள், வருடங்கள், யுகங்கள் என்ற அலைககளால் விழுங்கப்பட்டு சதாவும் சூன்யத்தை நோக்கி அள்ளிச் செல்லப்படுகின்ற பிணங்களால் நிறைந்திருக்கும் உலகம் என்ற இந்த சமுத்திரத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கின்ற நாம், சர்வ ஞானம் பொருந்திய குர்ஆனுடைய ஒளியால் நிர்மானிக்கப்பட்ட ஓர் ஆன்மீகக் கப்பல் என்ற அந்தஸ்துக்குறிய சத்திய இஸ்லாத்தினுள் முழுமையாக நுழைந்து கொள்வதன் மூலம் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் கரை சேர்ந்து எமது வாழ்க்கைப் பணிகளுக்கு இனிதான முத்தாய்ப்பு வைக்க முடியும். அப்போது அந்த சமுத்திரத்தின் கொந்தளிப்புகளும் அலைகளும் சினிமாத் திரைகள் போன்று அந்தப் பயனத்தின் போதான காட்சிகளைப் புதுப்பித்து அச்சத்திற்கும் ஆதங்கத்திற்கும் பதிலாக படிப்பிணைகளுக்கும் இறை சிந்தனைக்கும் உற்சாகமூட்டி எமது பார்வைகளைப் பிரகாசமாக்கிவிடும். அத்தோடு அந்தக் குர்ஆனின் தூதும் அதன் பயிற்றுவிப்பும் நஃப்ஸ் எம்மீது சவாரி செய்வதைத் தடுத்து எம்மை அதன் மீது சவாரி செய்ய வைத்து வாழ்க்கையின் விமோசனத்தை நோக்கி எம்மை அழைத்துச் செல்லும். சுருக்கமாக உண்மையில் மனிதன் ஏனைய உயிரினங்களை விட சில இயல்பான தன்மைகளைக் கொண்டவனாகப் படைக்கப்பட்டிருக்கின்றான், அந்தத் தன்மைகள் காரணமாக அவன் மலேரியா போன்ற ஒரு நோயினால் வேதனைப் படுவதைப் போன்றே பூமிப்பந்தில் ஏற்படுகின்ற அனர்த்தங்கள், கொந்தளிப்புக்கள் காரணமாகவும், ஏன் பிரபஞ்சத்தில் ஏற்பட இருக்கும் மாபெரும் கொந்தளிப்பான கியாமத் காரணமாகவும் வேதனை அடைகின்றான். அவ்வாறே அற்பமானதொரு பக்ரீறியாவைக் கண்டு அஞ்சி நடுங்குவதைப் போன்றே, ஆகாய வெளியில் வான்பொருட்களுக்கு மத்தியில் தோற்றமெடுக்கும் வால் நட்சத்திரங்களைக் கண்டும் அஞ்சி நடுங்குகின்றான். மறு பக்கம் தனது வீட்டை எவ்வாறு நேசிக்கின்றானோ பிரமாண்டமான உலகத்தையும் அவ்வாறே நேசிக்கின்றான். மேலும் தனது சிறிய பூந்தோப்பை நேசிப்பதைப் போன்றே எல்லை காண முடியாத சுவனத்து நந்தவனங்களையும் வெறிபிடித்தவனைப் போன்று நேசிக்கின்றான். எனவே அணுவிலிருந்து அண்டசராசரங்கள் வரை அனைத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்ற ஒருவனே நிச்சயமாக இப்படிப்பட்ட ஒரு மனிதனுடைய படைப்பாளனாகவும், அவனைப் பரிபாலிப்பவனாகவும், அவனது வணக்கத்திற்குறியவனாகவும், அவனது இரட்சகனாகவும், அவனுக்கு அடைக்கலமும் விமோசனமும் அளிக்கக் கூடியவனாகவும் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒருவனே அவனது இலக்காக இருக்க வேண்டும். எனவே நிச்சயமாக இப்படிப்பட்ட மனிதன் ரப்புல் இஸ்ஸத் ஆகிய அல்லாஹ்விடம் கையேந்தி தொடர்ந்தேர்ச்சையாக யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் போன்று لاَ اِلَهَ اِلاَّ اَنْتَ سُبْحَانَكَ اِنِّى كُنْتُ مِنَ الظَّالِمِينَ என்று சொல்லும் தேவையுடையவனாக இருக்கின்றான். سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters