بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اِذ۟ نَادٰى رَبَّهُٓ اَنّٖى مَسَّنِىَ الضُّرُّ وَاَن۟تَ اَر۟حَمُ الرَّاحِمٖينَ பொறுமைக் கதாநாயகர் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் இந்த முனாஜாத் பரிசீலிக்கப்பட்டதாக இருப்பதுடன் மிகவும் வினைத்திறன் மிக்க ஒரு முனாஜாத்தாகும். மேற்படி வசனத்திலிருந்து நாம் எமது முனாஜாத்தின் போது رَبِّ اِنِّى مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرَّاحِمِينَ என்று கூற வேண்டும். அய்யூம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் பிரபலமான சம்பவத்தின் சுருக்கம் பின்வருமாறு. ஏராளமான காயங்களும் பிணிகளும் மிக நீண்ட காலமாக அண்ணாரைப் பீடித்திருந்த போதிலும் அந்த நோயின் உன்னதமான பிரதிபலன்களை சிந்தித்தவர்களாக பரிபூரண பொறுமையோடு அவற்றைச் சகித்துக் கொண்டார்கள். இறுதியில் அழுகிப்போன புண்களிலிருந்து வெளிப்பட்ட புழுக்கள், இதயத்தையும் நாவையும் தீண்ட ஆரம்பித்த போது இறை துதிக்கும் இறை சிந்தனைக்குமுரிய இடங்களான நாவும் இதயமும் தீண்டப்பட்ட காரணத்தினால் தனது உபூதிய்யத் பணிக்கு இடையூறு ஏற்பட்டு விடுமே என்ற பயத்தில் தனது சுகத்துக்காகவன்றி இறை தியானத்தைத் தொடர்வதற்காக “யா ரப்! தீங்கு என்னைத் தீண்டி விட்டது, நாவால் உன்னைத் துதிப்பதற்கும் உள்ளத்தால் உன்னைத் தியானிப்பதற்கும் தடையாக இருக்கின்றது.” என்று முறையிட்டார்கள். ரப்புல் ஆலமீன் வேறு எந்த நோக்கங்களுமின்றித் தனியாக அல்லாஹ்வுக்காகக மட்டுமே என்றிருந்த, தூய, கலப்படமற்ற அந்த முனாஜாத்தைத் தனிச்சிறப்புமிக்கதோர் அமைப்பில் ஏற்றுக் கொண்டு பூரண தேகாரோக்கியத்தை வழங்கி தனது விதவிதமான அருள் பாக்கியங்களுக்குப் பாத்திரமானவர்களாக அவரை ஆக்கினான். இந்த வகையில் இந்த மின்னல் ஐந்து குறிப்புக்களைக் கொண்டுள்ளது.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Lem'alar
The Second Gleam
அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வெளிப்படையான காயங்கள், நோய்களுக்குப் பகரமாக உள்ளத்தையும் ஆன்மாவையும் தீண்டும் உள்ளார்ந்த நோய்கள் எம்மிடம் இருக்கின்றன. அகம் புறமாகவும் புறம் அகமாகவும் புறட்டப்பட்டால் நாம் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விட பன்மடங்கு அதிகமான அழுகிய புண்களோடும் வியாதிகளோடும் காட்சியளிப்போம். ஏனெனில் நாம் செய்த ஒவ்வொரு பாவச்செயலும், எமது தலைக்குள் நுழையும் ஒவ்வொரு சந்தேகமும் எமது ஆன்மாவிலும் உள்ளத்திலும் காயங்களை ஏற்படுத்துகின்றன. அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களது காயங்கள் குறுகிய உலக வாழ்வை அழித்துக் கொண்டிருந்தன. எமது ஆன்மீக ரீதியான காயங்களோ நீண்ட நித்திய வாழ்வை அழித்துக் கொண்டிருக்கின்றன. அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அந்த முனாஜாத் மீது அன்னாரை விட ஆயிரம் மடங்கு அதிகமான தேவை உடையவர்களாக நாம் இருக்கின்றோம். இன்னும் பாரதூரமான விடயம் என்னவென்றால், அந்த நபியின் புண்களிலிருந்து தோன்றிய புழுக்கள் இதயத்தையும் நாவையும் தீண்டியதைப் போன்றே, எமது பாவங்களிலிருந்து தோன்றும் பிணிகளும், அந்தப் பிணிகளிலிருந்து பிரவாகிக்கும் சந்தேகங்கள், ஊசலாட்டங்களும் –நஊது பில்லாஹ்- ஈமானின் இருப்பிடமான இதயத்தின் ஆழத்தைத் தீண்டி ஈமானைக் கலங்கடித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் ஈமானின் மொழிபெயர்ப்பாளனாக இருக்கின்ற நாவின் ரூஹானியத்தான இன்பங்களை விட்டும் அதனை மழுங்கச் செய்து திக்ர் அவ்ராத்களின் மீதான வெறுப்பை ஏற்படுத்தி அவற்றை விட்டும் நாவைத் தூரப்படுத்தி விடுகின்றன. ஆம் பாவங்கள் உள்ளத்தைத் தீண்டி காலம் செல்லச் செல்ல கருமையானதாக மாற்றி இறுதியில் ஈமானின் ஒளி அகழும் வரை கரைபிடிக்கச் செய்கின்றது. ஒவ்வொரு பாவத்தினுள்ளும் குப்ரை நோக்கிச் செல்லும் ஒரு பாதை இருக்கின்றது. அந்தப் பாவம் இஸ்திஃபார் மூலமாக உடனடியாக அழித்து விடப்படாவிட்டால் புழு அல்ல சிறியதொரு பாம்பாக மாறி உள்ளத்தை தீண்ட ஆரம்பிக்கின்றது. உதாரணமாக, அவமானத்துக்குரிய ஒரு பாவத்தை மறைவில் செய்யும் ஒரு மனிதன், பிறர் அறிந்து கொள்வதையிட்டும் அதிகம் சங்கடப்படும் போது, மலக்கு மார்களின் இருப்பு அவனுக்கு மிகவும் பாரமாக அமைகின்றது. சிறியதொரு துரும்பைக் கொண்டு அவர்களை நிராகரிக்க விரும்புகின்றான். அவ்வாறே, நரக வேதனையை விளைவாகத் தரக் கூடிய பெரியதொரு பாவத்தை செய்யும் ஒரு மனிதன், நரகத்தைக் கொண்டான எச்சரிக்கைகளை செவிமடுக்கும் போதெல்லாம் இஸ்திஃபாரைக் கொண்டு அதற்கெதிராகக் கலசமணியாதிருந்தால், ஆழ் மனதால் நரகம் இல்லாதிருந்திருக்க வேண்டுமே என்று ஆசிக்க ஆரம்பிப்பான். இந்நிலையில், சிறியதொரு சந்தேகம் அல்லது துரும்பு நரகத்தின் இருப்பை நிராகரிப்பதற்கான பலத்தை அவனுக்கு வழங்குகின்றது. மேலும், பர்ளான தொழுகையை நிறைவேற்றாமல் தனது உபூதிய்யத் பணியைப் புறக்கணிக்கும் ஒரு மனிதன் –சிறியதொரு மேற்பார்வையாளரிடமிருந்து சிறியதொரு கடமையை நிறைவேற்றத் தவறும் போது வாங்கும் அரட்டலால் கூட பாதிப்படைவனாக இருக்கின்ற போது- ஆதி அந்தங்களின் அரசனான அல்லாஹ்வின் தொடர்ந்தேர்ச்சையான கட்டளைகளுக்கு முன்னால் அந்த பர்ளான தொழுகையில் காட்டும் சோம்பேறித்தனம் அவனுக்குப் பெரியதொரு பாதிப்பையும் சுமையையும் ஏற்படுத்துகின்றது. விளைவாக அந்தச் சுமையிலிருந்தும் கஷ்டங்களிலிருந்தும் தப்பித்துக் கொள்வதற்காக “இப்படியொரு உபூதியத் பணி இல்லாதிருந்திருக்க வேண்டுமே” என்று உள் மனதால் ஆசிப்பான். அத்தோடு அந்த விருப்பம் அல்லாஹ்வின் மீதான ஒரு வகை வெறுப்புக்குத் தூபமிடும். ஒரு வகை உள்ளார்ந்த நிராகரிப்புக்கு வழிவகுக்கும். இந்த நிலையில் இறை இருப்போடு சம்பந்தப்பட்ட ஒரு சிறு சந்தேகம் உள்ளத்துக்கு வந்தால், உறுதியான ஓர் அத்தாட்சி போன்று அதனைப் பற்றிக்கொள்ள முனைவான். பெரியதொரு அழிவின் வாயில் அவனுக்குத் திறக்கப்படும். அந்த அபாக்கியசாலி தனது நிராகரிப்புக் காரணமாக உபூதிய்யத் பணியில் ஏற்படும் சிறியதொரு கஷ்டத்திற்குப் பதிலாக, நிராகரிப்பில் இருக்கும் பல மில்லியன் மடங்கு அதிகமான கஷ்டங்களை உடமையாக்கிக் கொண்டதை அறியாதிருக்கின்றான். நுளம்புக் கடியிலிருந்து தப்பி பாம்பு தீண்டுவதைப் பொருந்திக் கொள்கிறான். இந்த மூன்று தீங்குகளையும் ஒப்பிட்டு بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ என்ற மறை வாக்கிலிருக்கும் இரகசியத்தை அறிந்து கொள்ளுங்கள்.
இருபத்தி ஆறாவது வார்த்தையில் விதியின் தாத்பரியங்கள் என்ற பகுதியில் விளக்கப்பட்டது போல் மனிதர்களுக்கு முஸீபத் மற்றும் நோய்களின் போது மூன்று காரணங்களால் ஒப்பாரி வைப்பதற்கான உரிமை கிடையாது.
ரப்புல் ஆலமீன், மனிதனுக்கு அணிவித்த உடல் என்ற ஆடையை தனது அத்தனை கலை நுட்பங்களினதும் உள்ளடக்கமாக அமைத்து, மனிதனையும் கூட ஒரு மாதிரியாகப் படைத்துள்ளான். உடல் என்ற ஆடையை அந்த மாதிரியின் மீது பொருத்துவதற்காக அதில் கூட்டல் குறைத்தல்களையும் சில பல மாற்றங்களை மேற்கொள்கின்றான். இதன் மூலம் தனது இன்னோரன்ன நாமங்களின் பிரதிபளிப்பை வெளிக்காட்டுகின்றான். ஷாஃபீ நாமம் நோய் நொடிகளை வேண்டி நிற்பதைப் போன்றே ரஸ்ஸாக் நாமமும் கூட பசி பட்டினியை வேண்டி நிற்கின்றது. இந்த விடயத்தில் இது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.. مَالِكُ ال۟مُل۟كِ يَتَصَرَّفُ فٖى مُل۟كِهٖ كَي۟فَ يَشَٓاءُ
வாழ்க்கையானது நோய்நொடிகள் மூலமாகவும் முஸீபத்கள் மூலமாகவும் தூய்மையும் பூரணத்துவமும் பலமும் முன்னேற்றமும் முதிர்ச்சியும் அடைந்து பயன் மிக்கதாக மாறுகின்றது. இந்த வகையில் நோய் நொடிகளானது வாழ்க்கையின் ஈடேற்றத்துக்காக தமக்கு விதிக்கப்பட்ட பணிகளை நிறைவேற்றுகின்றன. ஒரே சீரான சுகபோக வாழ்க்கையானது பரிபூரண நலவான மெய்நிலையை அதாவது வுஜூதை விட பரிபூரண தீங்கான சூன்யத்திற்கு அல்லது இல்லாமைக்கு மிகவும் நெருக்கமானதாகும். சூன்யத்தை நெருங்கச் செய்வதாகும்.
இந்த உலக வீடானது சோதனைக் களமும் பணிக்குறிய இடமுமாகும். மாறாக அனுபவிப்பதற்கும் கூலி பெறுவதற்குமுரிய இடமல்ல. ஆகவே நோய்நொடிகளும் முஸீபத்களும், மார்க்கம் சாராததாகவும் பொறுமையோடும் இருக்கும் நிபந்தனைகளுடன் அவனுடைய பணிக்கும் உபூதிய்யத்திற்கும் மிகவுமே உகந்த ஒன்றாக இருப்பதோடு அவற்றுக்குப் பலமும் கொடுக்கின்றது. மேலும் நோயோடு கழியும் ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு நாள் வணக்கத்துடைய அந்தஸ்த்தை அடைவதால் முறைப்பட்டுக் கொள்வதன்றி நன்றி செலுத்துவதே அவசியப்படுகின்றது. ஆம் இபாதத் இரண்டு வகையானதாகும். ஒன்று வெளிப்படையானதாகும். மற்றது மறைமுகமானவையாகும். வெளிப்படையானவை அனைவராலும் அறியப்பட்ட வணக்க வழிபாடுகளாகும். மறைமுகமானவற்றைப் பொருத்தவரை, உதாரணமாக, நோய்நொடிகள் இழப்புக்களால் பாதிக்கப்பட்ட ஒருவன் தனது இயலாமை மற்றும் பலவீனத்தை உணர்ந்து பேரன்பும் கருணையும் மிக்க தனது ரப்பிடம் இறைஞ்சுகின்றான். அவன் பக்கம் தனது முகத்தைத் திருப்பி, அவனை சிந்தித்து, அவனிடம் கூனிக் குறுகியவனாக தூயதொரு வணக்கத்தில் ஈடுபடுகின்றான். இது முகஸ்துதி கலக்க முடியாத தூய்மையான ஒரு வணக்கமாகும். பொறுமையோடிருந்து அந்த முஸீபத்தால் கிடைக்கின்ற வெகுமதிகளை சிந்தித்து நன்றி செலுத்தினால், இந்நிலையில் கழியும் ஒவ்வொரு மணித்தியாலமும் ஒரு நாள் இபாதத்துடைய அந்தஸ்த்தை அடையும். குறுகியதொரு வாழ்வு நீண்டதொரு வாழ்வாகப் பரிணாமமடையும். சிலபோது இந்நிலையில் கழியும் ஒரு நிமிடமும் கூட ஒரு நாள் இபாதத்துடைய அந்தஸ்த்தை அடைகின்றது. ஹாஃபிஸ் அஹமத் என்ற பெயரைக்கொண்ட எனது ஒரு மறுமைச் சகோதரனைத் தொற்றியிருந்த பயங்கரமானதொரு நோயைப் பற்றி நான் அதிகமாக அலட்டிக்கொண்டிருந்தேன். அப்போது எனது உள்ளத்தில். “அவருக்கு வாழ்த்துக் கூறு, அவரது ஒவ்வொரு நிமிடமும் ஒரு நாள் இபாதத் அந்தஸ்த்தை அடைந்து கொண்டிருக்கின்றது.” என்ற சுபசோபனம் நினைவூட்டப்பட்டது. பின்னர் ஆராய்ந்து பார்த்த போது உண்மையாகவே அந்தச் சகோதரன் பொறுமையோடு நன்றி செலுத்துபவராக இருப்பதைக் கண்டேன்.
ரிஸாலே நூரின் சில பகுதிகளில் தெளிவு படுத்தப்பட்டதைப் போன்று, ஒவ்வொரு மனிதனும் தனது இறந்தகால வாழ்வை நினைவுபடுத்திப் பார்த்தால் உள்ளத்திலிருந்தும் நாவிலிருந்தும் ஒன்றோ கைசேதத்தின் அல்லது மகிழ்ச்சியின் என்ற எதிரொலிகள் வெளிப்படும். ஒன்றோ கைசேதத்தால் விரக்தி அடைவான் அல்லது மகிழ்ச்சியால் அல்ஹம்துலில்லாஹ் என்று கூறுவான். அவனைக் “கைசேதமே!” என்று கூற வைப்பது, கடந்த கால இன்பங்கள் முடிவடைந்ததால் அல்லது தன்னை விட்டும் பிரிந்து சென்றதால் பிரவாகமெடுக்கும் ஆன்மீக வேதனைகளாகும். ஏனெனில் இன்பங்களின் முடிவு வேதனையாகும். சிலபோது கணப்பொழுதேயான ஓர் இன்பம் சதாவும் வேதனை அளித்துக்கொண்டிருக்கும். அந்த இன்பத்தைப் பற்றி சிந்திப்பது அந்த வேதனையைக் கிளறி கைசேதத்தை ஊற்றெடுக்கச் செய்யும். அவ்வாறே, கடந்தகால வாழ்க்கையில் கடந்து சென்ற தற்காலிக வேதனைகளிலிருந்து தோற்றமெடுக்கும் ஆத்ம இன்பம் சதாவும் “அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்ல வைக்கும். இந்த இயல்பான நிலையோடு கூடவே முஸீபத்களின் விளைவுகளான நன்மைகள் மற்றும் மறுமைப் பெறுபேறுகள் காரணமாக முஸீபத்தோடு கழியும் குறுகிய பொழுதுகள் நீண்ட பொழுதுகளாக பரிணாமமடைகின்ற விடயத்தையும் சிந்தித்தால் பொறுமைக்கு அப்பால் நன்றி செலுத்துவது அவசியமாகின்றது. அதாவது. “அல்ஹம்துலில்லாஹி அலா குல்லிஹால் ஸிவல் குஃப்ரி வத்தலால்” என்று மனதார மொழிவது அவசியமாகின்றது. பிரபலமான ஒரு வார்த்தை “முஸீபத்துடைய காலம் நீண்டதாகும்” என்று கூறுகின்றது. ஆம் முஸீபத்துடைய காலம் நீளமானதாகும். ஆனால் மனிதர்களின் பொதுவான சிந்தனை வழக்கில் உள்ளது போன்று கஷ்டகரமானது என்பதால் நீளமானது அல்ல, மாறாக நீண்டதொரு வாழ்க்கை போன்ற வாழ்க்கைப் பெறுபேறுகளையும் நீண்ட வாழ்க்கைப் பாடங்களையும் கற்றுத்தருவதால் நீளமானதாகும்.
இருபத்தியோராம் வார்த்தையின் முதற் படித்தரத்தில் தெளிவுபடுத்தப்பட்டதற்கிணங்க அல்லாஹ்வால் மனிதனுக்கு வழங்கப்பட்ட பொறுமை என்ற ஆயுதம், மாயையான விடயங்களில் சிதறடிக்கப்படாவிட்டால் அனைத்து விதமான முஸீபத்களையும் எதிர்கொள்வதற்கு அதுவே போதுமானதாகும். ஆனால் மனிதன் மாயைகளின் அழுத்தத்தாலும் பொடுபோக்கு மேலீட்டாலும் தனது தற்காலிக வாழ்வை நித்தியமானதாக சித்தரித்துக் கொண்டதன் விளைவாக பொறுமை என்ற ஆயுதத்தை கடந்த மற்றும் எதிர்காலங்களில் சிதறடிக்கின்றான். இந்த நிலையில் உடனடி முஸீபத்தை எதிர்கொள்வதற்கு கைவசமிருக்கும் பொறுமை என்ற ஆயுதம் கட்டுப்படியாகாமல் போய் விடுகின்றது. உண்மையில் அத்துமீறிச் சென்று வல்லோன் அல்லாஹ்வை மனிதர்களிடம் முறைப்பட்டுக் கொள்வதும் இந்த நிலையின் மிக மோசமான ஒரு வெளிப்பாடாகும். எனவே எந்த வித உரிமையுமின்றி புத்தி பேதலித்தவனைப் போல் அல்லாஹ்வை முறைப்பட்டுக் கொண்டு பொறுமையின்மையை வெளிக்காட்டுவான். யதார்த்தம் என்னவென்றால், கடந்து சென்ற நாட்கள் முஸீபத்தானவையாக இருந்திருப்பின் அதனால் ஏற்பட்ட கஷ்டங்களும் வேதனைகளும் நோவினைகளும் கடந்து அவை விட்டுச் சென்ற நிம்மதியும் இன்பங்களும் நன்மைகளுமே எஞ்சியிருக்கின்றன. ஆகவே இதற்காக முறைப்பட்டுக்கொண்டு முஸீபத்களைத் திட்டித் தீர்ப்பதன்றி முகம் மலர நன்றி செலுத்துவதும் நேசம் கொள்வது அவசியப்படுகின்றது. ஆம், அவனுடைய அந்தக் கடந்து சென்ற தற்காலிக வாழ்க்கை முஸீபத்கள் காரணமாக நித்தியமானதும் மகிழ்ச்சிகரமானதுமான ஒரு வாழ்க்கையாகப் பரிணாமமடைந்து விட்டன. இவ்வாறிருக்க, மாயையான சிந்தனைகளுக்கு கடந்து சென்ற முஸீபத்களில் காணப்பட்ட வேதனைகளைச் சிந்தித்து ஒரு பகுதி பொறுமையை அவைகளுக்கெதிராக விரயப்படுத்துவது புத்திபேதலித்த நிலையாகும். அவ்வாறே எதிர்வர இருக்கும் நாட்களைப் பொருத்தவரை, அவற்றையும் நாம் இன்னும் அடைந்து கொள்ளவில்லை, அந்த நாட்களில் சந்திக்கப்போகும் நோய்நொடிகள், முஸீபத்களை இப்போதிலிருந்தே சிந்தித்து பொறுமையின்மையை வெளிக்காட்டுவதும் முறைப்பட்டுக்கொள்வதும் மடத்தனமாகும். நாளை பட்டினி கிடக்க வேண்டி வருமே, தாகம் எடுக்குமே என்பதற்காக, இன்று இடைவிடாது நீர் அருந்துவதும் சாப்பிடுவதும் எப்படிப்பட்ட மடத்தனமோ, எதிர்காலத்தில் வர இருக்கும், ஆனால் தற்போது இல்லாமையிலிருக்கும் முஸீபத்களையும் நோய்நொடிகளையும் எண்ணியவனாக, தற்போதிருந்தே இல்லாத வலியை வரவழைத்துக்கொண்டு பொறுமையின்மையை வெளிக்காட்டுவதும் தனக்குத்தானே அநியாயம் இழைத்துக்கொள்வதும் அப்படிப்பட்டதொரு மடத்தனமாகும். இவர்கள் அன்பும் பரிவும் செலுத்தப்படுவதற்கான தகுதியையும் இழந்து விடுகின்றனர். சுருக்கமாக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவது அருள்களில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதைப் போன்றே முறைப்பட்டுக்கொள்வது முஸீபத்களை இன்னுமின்னும் அதிகரிக்கச் செய்வதோடு இரக்கம் காட்டப்படுவதற்கான தகுதியையும் இல்லாமலாக்கி விடுகின்றது. முதலாம் உலகப் போரின் முதல் வருடம், எர்ஜுரும் நகரில் கண்ணியத்திற்குரிய ஒருவர் மிகவும் பயங்கரமானதொரு நோய்க்கு ஆட்பட்டிருந்தார். அன்னாரை சுகம் விசாரிப்பதற்காக அருகில் சென்ற போது “நூறு இறவுகளாக நான் தலையனையில் தலைசாய்த்து உறங்க முடியாதவனாக இருக்கின்றேன்.” என்று மிகவும் வருத்தத்தோடு முறைப்பட்டுக்கொண்டார். நானும் கூட மிகவும் கவலைப்பட்டேன். பின்னர் உடனே நினைவுக்கு வந்த பின்வரும் விடயத்தைக் கூறினேன்.. “சகோதரா! கடந்து சென்ற கஷ்டகரமான நூறு நாட்களும் தற்போது மகிழ்ச்சிகரமான நூறு நாட்களாக பரிணாமமடைந்து விட்டன. அவற்றை எண்ணி முறைப்பட்டுக் கொள்வதல்ல மாறாக அவற்றுக்காக நன்றி செலுத்துங்கள். எதிர்வரும் நாட்களோ உண்மையில் உங்களை இன்னும் அடையவில்லை. ரஹ்மானுர்ரஹீம் ஆகிய ரப்புடைய ரஹ்மத்தின் மீது நம்பிக்கை வைத்து, அடி வாங்க முன் அழுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்! இல்லாமையை எண்ணி அஞ்ச வேண்டாம்! மெய்நிலையில் இல்லாத ஒன்றுக்கு மாயை நிறத்தைத் தெளித்து மெய்நிலைக்கு இழுத்து வர வேண்டாம்! இந்த மணித்தியாலத்தை மாத்திரம் சிந்தியுங்கள்! உங்களிடமிருக்கும் பொறுமை என்ற ஆயுதம் அதற்குப் போதுமானதாகும். தலை குழம்பிய ஒரு தளபதி இடப்பக்கத்திலிருக்கும் எதிரிப்படையை வீழ்த்த கைவசமிருக்கும் படையணி போதுமானதாக இருக்கும் போது என்றோ வலப்புறமாக வர இருக்கும் ஒரு எதிர்ப்படைக்காக மொத்த படையையும் வலமாகவும் இடமாகவும் சிதறடித்து மையத்தைப் பலவீனப்படுத்தி, இறுதியில் எதிரி சிறியதொரு படையுடன் மையத்தை சின்னாபின்னப்படுத்தக் காரணமாக அமைகிறான். சகோதரா, நீங்களும் இந்தத் தளபதியின் நிலைக்கு வீழ்ந்து விட வேண்டாம், ஒட்டுமொத்த பலத்தையும் இந்த மணித்தியாலத்திற்கெதிராக அதை மிகைப்பதற்காகப் பிரயோகியுங்கள்! அதிலிருக்கின்ற அல்லாஹ்வின் ரஹ்மத்தையும், மறுமைப் பிரதிபலன்களையும், அது இந்தத் தற்காலிகமான குறுகிய ஆயுளை நீண்ட, நித்திய ஆயுளாக மாற்றியதையும் சிந்தியுங்கள்! வேதனையோடு முறைப்பட்டுக்கொள்வதற்குப் பதிலாக ஆத்ம திருப்தியோடு நன்றி செலுத்துங்கள்..!” என்று கூறினேன். அன்னாரும் பூரண ஆறுதல் பெற்றவராக “அல்ஹம்துலில்லாஹ், எனது நோய் பத்திலிருந்து ஒன்றாகக் குறைந்து விட்டது” என்று கூறினார்.
மூன்று விடயங்களாகும்.
அசலானதும், பயங்கரமானதுமான முஸீபத் மார்க்கத்துக்கு வரும் முஸீபத் ஆகும். மார்க்கத்துக்கு வரக்கூடிய முஸீபத்களிலிருந்து பாதுகாப்புத் தேடி மன்றாடுவது அவசியமாகும். மறுபுறம் மார்க்கம் சாராத முஸீபத்களை யதார்தத்தில் முஸீபத் என்று சொல்ல முடியாது. அவற்றின் ஒரு பகுதி இறை எச்சரிக்கைகளாகும். பிறர் வளவுக்குள் சென்று மேயும் ஆடுகளை நோக்கி அதன் எஜமான் கல் எறியும் போது, அந்த ஆடுகள், நாம் எல்லை மீறி விட்டோம், இது எம்மைப் பாதுகாப்பதற்கான எச்சரிக்கையாகும் என்பதை உணர்ந்து உடனடியாக திரும்பி விடுகின்றன. அதே போன்றே வெளிப்படையான சில முஸீபத்களானது, அல்லாஹ்வின் எச்சரிக்கைகளும் விளிப்பூட்டல்களுமாகும். அவற்றுள் இன்னுமொரு பகுதியானது பாவப்பரிகாரமாகும். மூன்றாவது பகுதியானது பொடுபோக்குத்தனத்தைக் களைந்து மனிதனுக்கேயான இயலாமை, பலவீனம் என்பவற்றை உணர்த்தி ஒரு வகை ஆத்மார்த்தமான நிம்மதியை வழங்குபவையாகும். ஆம், முஸீபத்களாகப் பார்க்கப்படுபவற்றில் நோய்நொடிகள் உள்ளடங்கிய பகுதியானது ஏலவே குறிப்பிடப்பட்டதைப் போன்று உண்மையில் முஸீபத்களல்ல. மாறாக அவை ரப்புடைய புறத்திலிருந்துமுள்ள அடியான் மீதான ஆதரவாகும், அவ்வாறான முஸீபத்கள் அந்த அடியானைப் பரிசுத்தப்படுத்தி விடுகின்றன. அறிவிப்புக்களில் “முதிர்ந்த ஒரு மரத்தை குலுக்கும் போது இலைகள் உதிர்வதைப் போன்றே இருமலின் அதிர்வால் பாவங்களும் உதிர்ந்து விழுகின்றன.” என்று வருகின்றது. அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது முனாஜாத்தில் தனது நஃப்ஸை திருப்திப்படுத்துவதற்காக துஆ செய்யவில்லை. மாறாக நாவால் திக்ரும், உள்ளத்தால் இறை துதியும் தடைப்பட்ட போது தன்னுடைய உபூதிய்யத்தைச் செவ்வனே நிறைவேற்றுவதற்காகவே நிவாரணம் வேண்டினார்கள். நாம் அந்த முனாஜாத்தின் போது முதல் நோக்கமாக பாவங்களால் ஏற்படும் ஆன்மா, ரூஹ் சார்ந்த நோய்களுக்கான நிவாரணத்திற்கு நிய்யத் வைத்துக்கொள்ள வேண்டும். உபூதிய்யத் தடைப்படக் காரணமாக இருக்கின்ற பௌதீக நோய்களுக்காகவும் நிவாரணம் கேட்டு மன்றாடலாம். ஆனால் உடைந்து நொறுங்கிப் போய் முறைப்பட்டுக்கொள்ளும் விதமாக அன்றி உதவி தேடும் விதமாகவே மன்றாட வேண்டும். எந்தவித சந்தேகமுமின்றி அவனது ருபூபிய்யத்தை பொருந்திக் கொண்டோம். அவ்வாறெனில் அவன் அந்த ருபூபிய்யத்தின் அடிப்படையில் வழங்கியவற்றையும் பொருந்திக்கொள்ள வேண்டும். விதியை எதிர்ப்பதை வெளிக்காட்டும் விதமாக அவலக் குரலெழுப்புவதும் முறைப்பட்டுக்கொள்வதும் ஒரு வகையில் விதியை விமர்சிக்கின்ற செயலாகவும் அல்லாஹ்வுடைய ரஹீமிய்யத்தைக் குற்றம் சாட்டுகின்ற செயலாகவுமே இருக்கின்றன. விதியை விமர்சிப்பவன் தலையை சம்மட்டியில் அடித்து உடைத்துக்கொண்டவன் போலாவான். ரஹ்மத்தை குற்றம் சாட்டுபவன் ரஹ்மத்திலிருந்தும் தூரமாவான். உடைந்த கையோடு பலிதீர்ப்பதற்காக அதே கையைப் பிரயோகிப்பது, கையிலுள்ள உடைவை அதிகரிக்கச் செய்வதைப் போன்றே முஸீபத்துக்குள்ளாகிய மனிதன், அதைப் பற்றி முறைப்பட்டுக்கொண்டு வீண் மாயைகளைக் கட்டியெழுப்புவதும் அந்த முஸீபத்தை இரட்டிப்பாக்கும்.
சட ரீதியான முஸீபத்கள் பெரிது படுத்துகின்ற அளவு பெரிதாகும், சிறிது படுத்துகின்ற அளவு சிறிதாகும். உதாரணமாக நடு நிசியில் மனிதனுடைய கண்களுக்கு ஏதேனும் மாயையான ஒரு விடயம் தென்பட்டால், அது அவன் அலட்டிக் கொள்கின்ற அளவுக்கு ஊதிப் பெருக்கும், அலட்டிக்கொள்ளாமல் விட்டால் மறைந்து போய் விடும். அவ்வாறே சட ரீதியான முஸீபத்கள் முக்கியத்துவமளிக்கின்ற அளவுக்குப் பெரிதாக மாறி, ஆர்வக் கோளாறு காரணமாக உடலைத் தாண்டி உள்ளத்திலும் வேரூண்டும். இறுதியில் ஒரு ஆன்மீக முஸீபத்தையும் விளைவாகத் தரும். மாறாக அந்த மாயையைத் தவக்குல் மூலமாகவும் விதியைப் பொருந்திக்கொள்வதன் மூலமாகவும் அகற்றி விட்டால் சடரீதியான அந்த முஸீபத் வேரறுந்த மரம் போல் காய்ந்து உக்கிப்போய் விடும். இந்த உண்மையை தெளிவுபடுத்துவதற்காக ஒரு சமயம் பின்வருமாறு கூறியிருந்தேன். ஓ நாதியற்றவனே! விட்டு விடு அவல ஓலங்களை, அவலங்களை தவக்குலால் எதிர்கொள்! அவல ஓலங்கள் அவலத்திற்குள் அவலமாகும், துன்பத்திற்குள் துன்பமாகும், அறிந்து கொள்! அவலம் அளித்தவனை அறிவாயெனில், அவலங்கள், நிம்மதியும் இன்பமும் சுமந்து வரும், அறிந்துகொள்! அறியான் எனில், அகிலம் முழுவதும், அவலத்தால் நிறைந்ததாகும், அறிந்துகொள்! அகிலம் நிறை அவலங்கள் தலை மீதிருக்க, அற்ப அவலத்திற்காக ஏது இந்த ஓலங்கள்!? ஆக, தவக்குலோடு அவலத்தின் முகத்தில் புன்னகையை ஏந்து! ஆக அதுவும் புன்னகைக்கட்டும்; புன்னகைத்து புன்னகைக்குள் புதைந்து விடட்டும். அம், சண்டை நேரத்தில் ஒரு பயங்கர எதிரியைப் பார்த்து புன்னகைக்கும் போது பரஸ்பர குரோதம் பரஸ்பர புரிந்துணர்வுக்கும், பரஸ்பர வெறுப்பு பரஸ்பர தோழமைக்கும் வழிவகுக்கும். தவக்குலோடு முஸீபத்களை எதிர்கொள்வதும் இதைப் போன்று தான்.
ஒவ்வொரு காலத்துக்கும் என்று ஒரு விதி இருக்கின்றது. பொடுபோக்குத்தனம் மேலோங்கியிருக்கும் இந்தக் காலத்தில் முஸீபத்கள் தமது வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளன. சில போது சிலருக்கு வரும் துன்பங்களைத் துன்பங்களாகவே பார்க்க முடியாது. மாறாக இறை அருட்கொடைகளாகவே அவற்றைப் பார்க்க வேண்டும். நான் இந்த நவீன யுகத்தில் நோய்நொடிகளோடும் இன்ன பிற துன்பதுயரங்களோடும் வாழும் முஸீபத்துகுள்ளானவர்களை (ஆனால் அந்த முஸீபத் மார்க்கத்தை தீண்டாதிருக்கும் நிபந்தனையுடன்) பாக்கியசாலிகளாகக் காண்பதால் அவ்வாறான நோய்நொடிகளுக்கும் துன்பதுயரங்களுக்கும் எதிரானவனாக இருப்பதற்கான எந்த வித நியாயங்களையும் என்னால் பெற்றுக்கொள்ள முடியவில்ல. மேலும் அவர்களுக்காக வருத்தப்படும் உணர்வும் என்னுள் தூண்டப்படுவதில்லை. ஏனெனில் எந்தவொரு நோயாளியான இளைஞன் அருகில் வந்தாலும் அவனுடன் சம தரத்திலுள்ள பிற இளைஞர்களை விட அதிகமாக மார்க்கக் கடமைகளோடும் மறுமையோடும் பிணைப்போடிருப்பதை அவதானித்தேன். இதிலிருந்து இப்படியானவர்களுக்கு வரும் நோய்கள் முஸீபத்களாக அன்றி ஒரு வகை இறை அருள்களாக இருப்பதை அறிந்து கொண்டேன். ஏனெனில் அந்த நோய் அவர்களுடைய உலகியல் ரீதியான தற்காலிக குறுகிய வாழ்க்கையில் ஒரு சில கஷ்டங்களை ஏற்படுத்தினாலும் அவர்களுடைய நித்திய வாழ்வை வளமாக்குபவையாகவே இருக்கின்றன. அவர்களுடைய வாழ்வில் கழிகிந்து செல்கின்ற பொழுதுகளை ஒரு வகை இபாதத் அந்தஸ்த்துக்குரியவையாக மாற்றுகின்றன. ஒரு வேளை சுகம் பெறுவானாயின், இளமையின் போதை தலைக்கேறி, காலத்தின் படுபாதகங்களுக்காட்பட்டு நோயின் போதான நிலமையை பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலமைக்குத் தள்ளப்படுகின்ற அபாயம் காணப்படுகின்றது.
நித்திய இரட்சகன் தனது எல்லையில்லாத வல்லமையையும் முடிவில்லாத ரஹ்மத்தையும் வெளிக்காட்டுவதற்காக மனிதனோடு முடிவில்லாத இயலாமையையும் எல்லையில்லாத வறுமையையும் ஒட்டி வைத்துள்ளான். அவ்வாறே தன்னுடைய திரு நாமங்களின் பிரதிபலிப்புகளையும் ஈடிணையற்ற கலை நுட்பங்களையும் வெளிப்படுத்துவதற்காக மனிதனை எண்ணற்ற கோணங்களில் வேதனைகளை அனுபவிக்க முடியுமானவனாகவும், சம நேரத்தில் எண்ணற்ற கோணங்களில் இன்பங்களை அனுபவிக்க முடியுமானவனாகவும் இருக்கின்ற ஒரு நிலையில் படைத்துள்ளான். மேலும் மனிதன் என்ற அந்த இயந்திரத்தில் நூற்றுக்கணக்கான உதிரிப்பாகங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றுக்கும் வெவ்வேறான வேதனைகளும் வெவ்வேறான இன்பங்களும் வெவ்வேறான பணிகளும் வெவ்வேறான பிரதிபலன்களும் காணப்படுகின்றன. மொத்தமாகச் சொன்னால் இன்ஸானுல் அக்பர், அதாவது மிகப்பெரிய மனிதனாக இருக்கும் பிரபஞ்சத்தில் பிரதிபலிக்கும் அத்தனை இறை நாமங்களும் ஆலமுல் அஸ்ஃகர், அதாவது சிறியதொரு பிரபஞ்சமாக இருக்கின்ற மனிதனிலும் கூட முழு மொத்தமாகப் பிரதிபலிக்கின்றன. இங்கு இன்பம், சுகம், ஆரோக்கியம் போன்ற பயனுள்ள அம்சங்கள் மூலமாக வெளிப்படும் நன்றிகள் அந்த இயந்திரம் தனது பணிகளை செவ்வனே நிறைவேற்றுவதற்கான உந்துதலை வழங்குகின்றன. அதாவது மனிதனை ஒரு நன்றித் தொழிற்சாலையாக மாறி விடுகின்றான். இவ்வாறே முஸீபத்கள், நோய்நொடிகள், வேதனைகள் மற்றும் இன்னபிற குறைபாடுகள் ஊடாக அந்த இயந்திரத்தின் வேறு சில சக்கரங்கள் தொழிற்பட ஆரம்பிக்கின்றன. மனித இயல்பில் குடிகொண்டிருக்கும் இயலாமை, பலவீனம், வக்கற்ற தன்மை போன்ற கணியங்களை தொழிற்பாட்டுக்கு உற்படுத்துகின்றன. இவ்வாறு மனிதன் ஒரு நாவுக்குப் பதிலாக எல்லா அவயங்களுக்குமுரிய நாவுகளாலும் இறைஞ்சல், உதவிதேடல் போன்ற பணிகளில் ஈடுபடுகின்ற நிலையை அடைகின்றான். அதாவது ஒரு வகையில் மனிதன் அந்த எல்லாக் குறைபாடுகளுடன், விதவிதமான ஆயிரக்கணக்கான எழுதுகோல்கள் உள்ளடங்களான நடமாடும் ஓர் எழுதுகோலாக மாறுகின்றான். அதன் மூலம் தன்னுடைய வாழ்க்கைப் பக்கங்களில் அல்லது பட்டோலையில் தனது வாழ்க்கையின் விதிகளையும் வினைகளையும் எழுதி இறை நாமங்களுடைய ஓர் அறிவிப்புப் பலகை என்ற அந்தஸ்த்தை அல்லது எவ்வித குறைகளையும் விட்டுத் தூய்மையான பரிசுத்த இரட்சகனின் அழகியதொரு கஸீதா என்ற அந்தஸ்த்தை அடைந்து தனது வாழ்வின் இயல்பான பணியை சமர்பித்தவனாக ஆகுவான்.

