Lem'alar

The Third Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

(இந்த மின்னலில் ஓரளவு உணர்வுகளும் ஆன்மீக இன்ப நிலையும் கலந்து விட்டது. உணர்வுகளும் ஆன்மீக இன்ப நிலையும் அறிவின் விதிமுறைகளுக்கும் சிந்தனையின் அளவைகளுக்கும் அவ்வளவாக செவிசாய்க்காது. அவற்றின் சுவடுகளைப் பின்தொடரவுமாது. எனவே இந்த மூன்றாவது மின்னல் தர்க்க ரீதியான அளவைகளைக் கொண்டு நிறுக்கப்படக் கூடாது.) بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ كُلُّ شَيْءٍ هَالِكٌ اِلاَّ وَجْهَهُ لَهُ الْحُكْمُ وَاِلَيْهِ تُرْجَعُونَ என்ற வசனத்தின் அர்த்தத்தைப் பிரஸ்தாபிக்கும் يَا بَاقِى اَنْتَ الْبَاقِى * يَا بَاقِى اَنْتَ الْبَاقِى என்ற இரண்டு அடிகளும் இரண்டு உன்னதாமான சத்தியங்களைப் பொதியப்பெற்றவையாக இருக்கின்றன. அதனால் தான் நக்ஷபந்தி தரீக்காவிலுள்ள ஒரு பிரிவினர் இந்த சுருக்கமான இரண்டு வசனங்களையும் தமது தனிப்பட்ட ஹல்காக்களில் ஓதி வருகின்றனர். ஆம், உண்மையில் இந்த இரண்டு அடிகளும் அந்த உன்னத மறை வசனத்தின் அர்த்தத்தைப் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கின்ற வசனங்களாகும். எனவே இங்கு இந்த இரண்டு அடிகளிலும் பிரஸ்தாபிக்கப்படுகின்ற இரண்டு மேலான சத்தியங்களில் பொதிந்துள்ள ஒரு சில குறிப்புக்களைத் தெளிவு படுத்துகின்றோம்.

§2

முதலாவது முறை சொல்லப்படும் يَا بَاقِى اَنْتَ الْبَاقِى ஒரு சத்திர சிகிச்சை போன்று உள்ளத்திலிருந்து அல்லாஹ்வைத் தவிற அனைத்தையும் தூரமாக்குகின்றது. அதாவது, மனிதன் தன்னுள் பொதியப்பெற்றிருக்கும் தன்மைகளுக்கேற்ப ஏறக்குறைய ஏனைய அனைத்து சிருஷ்டிக்களுடனும் தொடர்புடையவனாக இருக்கின்றான். கூடவே மனிதனுடைய மொத்த இயல்பிலும் எல்லையில்லாத ஒரு நேசிக்கும் ஆற்றல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனால் தான் மனிதன் ஒட்டுமொத்த படைப்புக்களோடும் ஒரு காதல் பிணைப்பை வளர்த்துக் கொள்கின்றான். பிரமாண்டமான உலகத்தை சொந்த வீடு போன்று நேசிக்கின்றான். நித்திய சுவனத்து நந்தவனங்களைத் தன் வீட்டு முற்றத்தைப் போன்று காதலிக்கின்றான். ஆனால் நிதர்சனம் என்னவென்றால் தான் நேசிக்கும் அனைத்துப் படைப்புகளும் நிலைத்து நிற்காமல் அழிந்து போய் விடுகின்றன. எனவே அந்த அழிவுகள் காரணமாக்வும் பிரிவுகள் காரணமாகவும் மனிதன் சதாவும் வேதனை அனுபவிக்கின்றான். அவனிடமுள்ள எல்லையில்லாத காதலானது எல்லையில்லாத ஆத்மார்த்தமான கைசேதங்களுக்கும் வேதனைகளுக்குமான காரணியாக அமைந்து விடுகின்றது. உண்மையில் அந்தக் கைசேதங்களுக்கும் வேதனைகளுக்கும் அவனுடைய குற்றம் குறைகளே காரணமாகும். ஏனெனில் உள்ளத்திலிருக்கும் அந்த எல்லையில்லாத காதலானது எல்லையில்லாத நித்திய அழகுக்குச் சொந்தக்காரனான ஒருவனை நோக்கி நெருங்குவதற்காக வழங்கப்பட்டதாகும். ஆனால் மனிதனோ துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு அந்தக் காதலையும் நேசத்தையும் அழிந்துபோகக் கூடிய தற்காலிகமான படைப்புகளுக்கு வழங்குவதன் மூலம் குற்றமிழைக்கின்றான். குற்றத்தின் தண்டனையை பிரிவின் வேதனையால் அனுபவிக்கின்றான். இதோ! இந்தக் குற்றத்திலிருந்து மீண்டு, தற்காலிகமான அந்தப் படைப்புகளை விட்டும் முகத்தைத் திருப்பி, அவை தன்னை விட்டகழ முன்னர் தான் அவற்றை விட்டும் ஒதுங்கி, நித்திய நேசத்துக்குத் தகுதியானவனை நோக்கி ஒட்டுமொத்த நேசத்தையும் திருப்புவதைக் குறிக்கும் يَا بَاقِى اَنْتَ الْبَاقِى என்ற அடியானது, “உண்மையான நித்தியன் உன்னையன்றி வேறில்லை. மற்ற அனைத்தும் தற்காலிகமானவையே. தற்காலிகமான எந்த ஒன்றும் நிச்சயமாக நித்தியமானதொரு நேசத்துக்கோ ஆதி அந்தமில்லாததொரு காதலுக்கோ நித்திய வாழ்வுக்காகப் படைக்கப்பட்ட ஒரு ஆத்மாவை ஆட்கொள்வதற்கோ அருகதையற்றதாகும்.” என்ற அர்த்தத்தைக் கொடுக்கின்றது. அல்லது “உண்மையாகவே அந்த எண்ணற்றுக் கிடக்கின்ற அந்த நேசத்துக்குரியவைகள் அனைத்தும் தற்காலிகமானவையாகும். அவை என்னை விட்டும் விரண்டோடிக்கொண்டிருக்கின்றன. அவை என்னை விட்டகழ முன்னர் நான் அவற்றை விட்டும் يَا بَاقِى اَنْتَ الْبَاقِى என்று கூறுவதன் மூலம் ஒதுங்கிக் கொள்கிறேன். ஏக நித்தியன் நீயாவாய், நீ அருளினால் மாத்திரமே ஏனைய அனைத்தும் நித்தியத்தை எய்த முடியும் என்பதை அறிந்து ஈமான் கொள்கிறேன். எனவே உன் மீதான முஹப்பத்தைக் கொண்டே அவையும் நேசிக்கப்பட முடியும். இல்லாவிட்டால் அவை எதுவுமே உள்ளத்தளவிலான ஈடுபாட்டிற்கு அருகதையற்றவையாகும்.” என்ற அர்த்தத்தையும் கொடுக்கின்றது. இதோ இந்தப் பதவியை அடைகின்ற உள்ளம் எண்ணற்ற நேசத்துக்குரியவைகளை விட்டும் தனது முகத்தைத் திருப்பிக் கொள்கின்றது. அப்போது மனிதன், அழகு, வனப்பு, கவர்ச்சி, அலங்காரம் போன்றவற்றின் மீதுள்ள தற்காலிகத்துவ முத்திரையைக் கண்டுகொள்வான். எனவே அவற்றுடனான உள்ளத்தின் தொடர்பை துண்டித்துக் கொள்வான். மாறாக துண்டிக்காது விடுகின்ற போது அந்த நேசத்துக்குரியவைகளின் எண்ணிக்கையளவு ஆத்மார்த்தமான காயங்கள் அவனில் ஏற்பட்டு விடுகின்றன. இரண்டாவது அடியாகிய يَا بَاقِى اَنْتَ الْبَاقِى அந்த எண்ணற்ற காயங்களுக்கான ஒரு மருந்தாகவும் ஒரு சஞ்சீவியாகவும் இருக்கின்றது. يَا بَاقِى اَنْتَ الْبَاقِى என்பதன் மூலம் “உண்மையான நித்தியன் நீயாவாய், இதுவொன்றே எனக்குப் போதுமானதாகும். நீயே அனைத்துக்குமான மாற்றீடாவாய். உனது இருப்பு சந்தேகத்துக்கிடமற்றது. ஆகவே எனக்காக அனைத்துமே இருக்கின்றன” என்று கூறுகின்றான். ஆம் சிருஷ்டிக்களின் மீதான நேசத்துக்கும் காதலுக்கும் காரணமாக இருக்கும் அழகு, வனப்பு, ஈகை, பூரணத்துவம் என்பன ஒட்டு மொத்தமாக உண்மை நித்தியன் ஆகிய அந்த ஏகனின் அழகுக்கும் ஈகைக்கும் பரிபூரணத்துவத்துக்குமான அத்தாட்சிகளாகும்; ஏராளமான திரைகளைத் தாண்டி வரும் நளிவான விம்பங்களாகும். அதாவது அவனது அழகிய திருநாமங்களுடைய பிரதிபளிப்புக்களுடைய நிழல்களின் நிழல்களாகும்.

§3

மனித இயல்பில் அனைத்துமே நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற கடுமையானதொரு காதல் பொதிந்திருக்கின்றது. எந்த அளவுக்கெனில் தான் காதலிக்கின்ற, நேசிக்கின்ற ஒவ்வொன்றிலும் தனது கற்பனா சக்திக்கேற்ப முதலில் ஒருவகை நித்தியத்தன்மையை உருவகித்துக் கொள்வான், அதன் பிறகே அதைக் காதலிப்பான். எப்போது அதன் முடிவு அல்லது அழிவு நினைவுக்கு வருகின்றதோ அல்லது அதன் முடிவைக்காண நேரிடுகின்றதோ அப்போது அவனுடைய ஆழ்மனதின் ஆழங்களிலிருந்து கைசேதங்களும் அவல ஓலங்களும் பிரவாகமெடுக்கின்றன. பிரிவுகள் காரணமாக வருகின்ற அனைத்து விதமான ஒப்பாரிகளும் நித்தியத்தின் மீதான காதலிலிருந்து பிரவாகமெடுக்கும் கைசேதங்களின் மொழிபெயர்ப்புகளாகும். உண்மையில் ஒன்றை நித்தியமானதாக உருவகித்துக் கொள்ளாவிட்டால் அதனைக் காதலிக்கவும் முடியாது. இந்த வகையில் நிரந்தர உலகத்தினதும் நித்திய சுவனத்தினதும் இருப்புக்கு, மனித இயல்பில் குடிகொண்டிருக்கும் இந்த வலுவான நித்திய வேட்கையே காரணியாக அமைந்துள்ளது. அதாவது, நித்தியத்தின் மீதான தீராத காதலினதும், இதனடியாக மனித குலத்தின் கூட்டான்மாவிலிருந்து ஊற்றெடுக்கும் உள்ளார்ந்த, இயல்பான, ஒருமித்த கூட்டுப் பிரார்த்தனையினதும் விளைவே நித்திய வாழ்வின் இருப்புக்கான காரணி என்று கூற முடியும். ஆம் நித்திய வல்லோன் அல்லாஹ் வலிமையும் தீர்க்கமும் மிக்க அந்த இயல்பான வேண்டலையும் பலமான அந்தக் கூட்டுப் பிரார்த்தனையையும் ஏற்றுக்கொண்டு அழிந்து மறைந்து போகக் கூடிய மனிதனுக்காக நித்தியமான உலகத்தைப் படைத்திருக்கின்றான். மேலும் பேரன்பும் அருளும் தயாள குணமும் கொண்ட படைப்பாளன் ஒருபுறம், சின்னஞ்சிறு இறைப்பையின் அற்பமானதொரு வேண்டலை அதாவது, தற்காலிகமானதொரு வாழ்வின் தொடர்சிக்காக அவற்றின் மெய்ம்மொழிகளால் கேட்கப்படும் துஆக்களை எண்ணற்ற சுவைமிக்க ஆகார வஸ்துக்களைப் படைத்ததனூடாக ஏற்றுக்கொண்டு விட்டு, மறுபுறம் பூரா மனித குலத்தினதும் இயல்பிலேயே குடிகொண்டிருக்கும் மிகப்பெரிய தேவை ஒன்றின் அடியாகத் தோன்றும் மிகவும் வலிமையான ஒரு வேண்டலை, அதாவது ஒருமித்ததும் உண்மையானதும் தூய்மையானதும் உள்ளத்தாலும் நாவாலும் சதாவும் கேட்கப்பட்டுக் கொண்டிருப்பதுமான ஒரு கூட்டுப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்ளாதிருப்பானா!? நிச்சயமாக அவ்வாறிருக்க முடியாது. இப்படிப்பட்டதொரு பிரார்த்தனையை அந்த தயாளன் ஏற்றுக்கொள்ளாதிருப்பது அசாத்தியமானதாகும். அவனது ஞானத்திற்கும் நீதிக்கும் கருணைக்கும் வல்லமைக்கும் எந்த விதத்திலுமே பொருந்தாத ஒரு விடயமாகும். உண்மையில் மனிதன் நித்தியத்தைக் காதலிப்பவனாக இருக்கின்றான். ஆகவே எந்த வித சந்தேகமுமின்றி அனைத்து விதமான பூரணத்துவங்களும் இன்பங்களும் நித்தியத்துக்குப் பிறகானதாகும். மேலும், சந்தேகத்திற்கிடமின்றி நித்தியமானது நித்திய வல்லோன் ஆகிய அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமேயான ஒரு சிறப்பாகும். எனவே அந்த நித்தியனுடைய நாமங்களும் பண்புகளும் கூட நித்தியமானவையாகும். அவ்வாறே அந்த நித்தியனின் கண்ணாடிகளாக இருக்கின்ற பிரதிபலிப்பிடங்களும் கூட நித்தியத்தின் நிறத்தையும் நியதிகளையும் பொதியப்பெற்றவையாகும். ஒரு வகையில் நித்தியத்துக்குப் பாத்திரமானவையாகும். ஆகவே நித்தியப் பாதைக்காக அர்ப்பணிக்கப்படும் அனைத்தும் ஒருவகையில் நித்தியத்துக்குப் பாத்திரமானவையாக ஆகி விடுகின்றன என்ற வகையில் சந்தேகத்துக்கிடமின்றி மனிதனுடைய மிக அடிப்படையான கடமையாகவும் மிகக் கட்டாயமான பணியாகவும் இருப்பது அந்த நித்தியனின் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொள்வதும் அவனது திருநாமங்களைப் பற்றிக் கொள்வதுமாகும். ஆம் இந்த இரண்டாவது يَا بَاقِى اَنْتَ الْبَاقِى என்ற அடியானது இந்த சத்தியத்தையே பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கின்றது. இந்த வகையில் மனிதனின் எண்ணற்ற பிணிகளுக்கு நிவாரணம் அளிப்பதோடு கூடவே, அவனது இயல்பில் பொதிந்திருக்கும் வலிமையான, தீராத நித்தியத்தின் மீதான காதலுக்கு விமோசனமும் அளிக்கின்றது.

§4

இந்த உலகத்தில் பொருட்களின் அழிவுகள் மீதும் முடிவுகள் மீதும் ‘காலம்’ செலுத்துகின்ற தாக்கம் பலவிதமானதாகும். அவ்வாறே வஸ்துகள் ஒன்றுக்குள் ஒன்றாக, ஒன்றாலொன்று சூழப்பட்ட வலயங்களைப் போன்று இருந்தாலும் கூட அழிவு விடயத்தில் அவற்றின் நிலைமைகள் வெவ்வேறானவையாகும். உதாரணமாக, மணிக்கூட்டில் வினாடிகளைக் கணிக்கும் ஊசியின் வீச்செல்லையும் நிமிடங்கள், மணித்தியாலங்கள், நாற்கள் என்பவற்றைக் கணிக்கும் ஊசிகளின் வீச்செல்லைகளும் பார்வைக்கு ஒன்றையொன்று ஒத்தவையாக இருந்தாலும் வேகத்தின் அடிப்படையில் ஒன்றுக்கொன்று மாற்றமானவையாக இருக்கின்றன. அவ்வாறே, மனிதனில் இருக்கும் உடல், உள்ளம், நஃப்ஸ், ஆன்மா போன்றவற்றின் வீச்செல்லைகளும் கூட ஒன்றுக்கொன்று வேறுபட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, உடலின் வாழ்வும் இருப்பும் தொடர்ச்சியும் அடைந்துகொண்ட இந்த நாள் அல்லது இந்த மணித்தியாலமாக இருப்பதோடு, இறந்த மற்றும் எதிர்காலங்கள் அதற்கு மய்யித் நிலையில் அல்லது இல்லாத நிலையிலேயே இருக்கின்றன. உள்ளத்தைப் பொருத்தவரையில் அதற்கு, மிக நீண்ட முன்னைய நாட்களையும் மிக நீண்ட பின்னைய நாட்களையும் உள்ளடக்கிய விசாலமானதோர் இருப்பெல்லையும் வாழ்வெல்லையும் காணப்படுகின்றது. ஆன்மாவுடைய விடயத்தில் அதைவிட மிக நீண்ட முன்னைய வருடங்களையும் மிக நீண்ட பின்னைய வருடங்களையும் உள்ளடக்கிய விசாலமானதொரு பரப்பு அதன் வாழ்வெல்லைக்கும் இருப்பெல்லைக்கும் உட்பட்டதாக இருக்கின்றது. ஆம் மனிதனில் இருக்கின்ற இந்த இயல்புகள், திறன்களின் அடிப்படையில் உள்ளம், ஆன்மா என்பவற்றின் வாழ்வுக்குத் தேவையான ஊட்டங்களாக இருக்கின்ற மஃரிபதுல்லாஹ், முஹப்பதுல்லாஹ், உபூதியதுல்லாஹ், மர்ழியதுர்ரஹ்மான் என்பன இந்த உலகிலுள்ள தற்காலிகமான வாழ்வை நித்தியமானதொரு வாழ்வின் உள்ளடக்கமாகவும் நித்தியமானதொரு வாழ்வை விளைவாகத் தரக்கூடியதாகவும் மாற்றுகின்றது. இதன் மூலம் இந்த வாழ்வும் கூட நித்தியமான ஒரு வாழ்வு என்ற அந்தஸ்துக்கு உயரிந்து விடுகின்றது. ஆம் சத்திய நித்தியனாகிய அந்த ஏகனின் அன்பையும், அவன் பற்றிய அறிவையும், அவனது திருப்பொருத்தத்தையும் பெற்றுக்கொள்வதற்கான பாதையில் அர்ப்பணமாகும் ஒரு கணப்பொழுது ஒரு வருடத்தைப் போன்றதாகும். அவனது பாதைக்காக அல்லாமல் செலவாகும் ஒரு வருடம் ஒரு கணப்பொழுதைப் போன்றதாகும். சில போது முன்னையவனின் பாதையில் ஒரு கணப்பொழுது மரணத்தை விஞ்சியதாகும். உலகளவில் பொடுபோக்குக்காரர்களின் நூறு வருடங்களும் கூட ஒரு கணப்பொழுதைப் போன்றதாகும். பிரபலமான ஒரு வசனம் سِنَةُ الْفِرَاقِ سَنَةٌ وَ سَنَةُ الْوِصَالِ سِنَةٌ என்று வருகின்றது. அதாவது, “பிரிவில் கழியும் ஒரு கணம் ஒரு வருடம் அளவு நீளமானதாகும், இணைவில் கழியும் ஒரு வருடம் ஒரு கணப்பொழுதளவு குறுகியதாகும்.” நான் இந்த வசனத்துக்கு முற்றிலும் முரணான வகையில் பின்வருமாறு கூறுகின்றேன். “இணைவு என்பது, அதாவது நித்திய வல்லோனின் திருப்பொருத்தத்திற்காக இணைவதென்பது வெறுமனே ஒரு வருடம் அல்ல, மாறாக நீண்ட நித்தியமானதோர் ஒன்றிணைவுக்காகத் திறக்கப்படும் யன்னலாகும். பொடுபோக்கிலும் வழிகேட்டிலும் கழியும் இணைவுகளும் கூடல்களும் ஒரு வருடமல்ல, ஆயிரம் வருடங்களாகத்தான் இருந்தாலும் அது ஒரு நொடிப்பொழுதைப் போன்று குறுகியதாகும். முன்னைய வசனத்தை விட மிகவும் பிரபலமான பின்வரும் வசனம் இந்தக் கருத்துக்கு வலுவூட்டுகின்றது. اَرْضُ الْفَلاَتِ مَعَ اْلاَعْدَاءِ فِنْجَانٌ سَمُّ الْخِيَاطِ مَعَ اْلاَحْبَابِ مَيْدَانٌ இந்த வசனத்தின் ஒரு ஸஹீஹான அர்த்தமானது, “தற்காலிக வஸ்துக்களுடனான இணைவுகளும் கூடத் தற்காலிகமானவையாகும். அவை எவ்வளவு தான் விசாலமானவையாக இருப்பினும் குறுகியவையாகும். ஒரு வருடம் ஒரு நொடிப்பொழுதைப் போன்று கடந்து சென்று விடும். அந்த இணைவுகள் அனைத்தும் அதிகபட்சம் ஏக்கத்துடன் கூடியதொரு கற்பனையாகவும், வேதனைகளை விட்டுச்சென்ற ஒரு கனவாகவுமே இருந்துவிட்டுப் போகும். ஆம், நித்தியத்தை மோகம் கொள்ளும் மனித உள்ளத்தால் ஒரு வருட இணைவில் அதிகபட்சம் ஒரு நொடிப்பொழுதுக்குரிய ஓர் இன்பத்தையே அனுபவிக்க முடியும். பிரிவைப் பொருத்தவரையில் அதில் கழியும் ஒரு கணப்பொழுது, ஒன்றல்ல பல வருடங்கள் அளவு நீளமானதாகும். ஏனெனில் பிரிவின் எல்லைகள் விசாலமானதாகும். நித்திய மோகத்தில் திளைத்திருக்கும் ஓர் உள்ளத்தின் பார்வைக்குப் பிரிவானது ஒரு வினாடியாகத் தான் இருந்தாலும் பல வருடங்களின் கைசேதங்களை ஏற்படுத்தக் கூடியதாகும். ஏனெனில் ஒரு பிரிவு எண்ணற்ற பிரிவுகளை நினைவுக்குக் கொண்டுவரும். எனவேதான் சடரீதியான சாமான்யக் காதல்கள் விடயத்தில் இறந்த மற்றும் எதிர்காலங்கள் முழுவதுமே பிரிவால் நிறைந்ததாகும். இந்த விடயத்தோடுள்ள தொடர்பு காரணமாகக் கூறுகின்றோம்: மனிதர்களே! பிரயோசனமின்றிக் கழிந்துகொண்டிருக்கும் தற்காலிகமான, குறுகிய இந்த வாழ்க்கையை நித்தியமானதாகவும், பயன்மிக்கதாகவும், கணிமயமானதாகவும் ஆக்க விரும்புகின்றீர்களா? உண்மையில் விருப்பம் கொள்வது மனிதத்துக்கென்றே உள்ள ஒரு மாண்பாக இருக்கின்றது. ஆகவே அந்த வாழ்வை சத்திய நித்தியனின் பாதைக்கு அர்ப்பணியுங்கள். ஏனெனில் நித்தியனை நோக்கித் திரும்புபவைகள் நித்தியத்தின் பிரதிபலிப்புகளுக்குத் தன்னைப் பாத்திரமாக்கிக் கொள்கின்றன. நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் ஒருவகையான வெறியோடு நீண்டதொரு ஆயுளை விரும்புபவனாகவும் நித்தியத்தைக் காதலிப்பவனாகவும் இருக்கின்றான். கூடவே எந்தவித சந்தேகமுமின்றி தற்காலிகமான இந்த வாழ்வை நித்திய வாழ்வாகப் பரிணமிக்கச் செய்வதற்கான ஒரு பாதை இருக்கின்றது. இந்தப் பாதை தெட்டத் தெளிவானதும் அறிவுபூர்வமானதுமாகும். எனவே நிச்சயமாக மனிதம் மழுங்கிப் போகாத எந்தவொரு மனிதனும் அந்தப் பாதையைத் தேடுவான்; அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முயசிப்பான்; தனது வாழ்வை அந்த வழிக்குப் பொருத்தமானதாக மாற்றுவான். அந்தப் பாதையிலுள்ள தாரக மந்திரம் இதுவாகும்: அல்லாஹ்வுக்காக செயற்படுங்கள்! அல்லாஹ்வுக்காக இணையுங்கள்! அல்லாஹ்வுக்காக உழையுங்கள்! “லில்லாஹ், லிவஜ்ஹில்லாஹ், லிஅஜ்லில்லாஹ்” அவனது திருப்பொருத்தத்துக்குற்பட்ட எல்லைக்குள் காரியமாற்றுங்கள்! அப்பொழுது உங்கள் ஆயுளில் கழியும் ஒவ்வொரு பொழுதும் ஏகப்பட்ட வருடங்களுடைய அந்தஸ்த்தை அடைந்து கொள்ளும். குர்ஆனுடைய தெளிவான வசனங்களின்படி லைலதுல் கத்ர் போன்ற தனி ஓர் இரவு ஆயிரம் மாதங்களுடைய அந்தஸ்தைக் கொண்டதாக இருக்கின்ற விடயமும் கூட உண்மையில் இந்த சத்தியத்தைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே அமைந்துள்ளது. மேலும் அஹ்லுல் விலாயத்தினருக்கும் சத்தியவான்களுக்கும் மத்தியில் ஏகோபித்த ஒரு சத்திய விதியாக இருக்கின்ற காலவிரிவுக் கோட்பாடும் மிஃராஜும் கூட அதற்கான அத்தாட்சிகளாகும். ஆம் கால விரிவுக்கான மிகப் பெரிய அத்தாட்சியாக இருக்கின்ற மிஃராஜின் வெறும் ஓரிரு வினாடிகள் ஏராளமான வருடங்களை உள்ளடக்கியதாகும். மிஃராஜுடைய ஓரிரு மணித்தியால கால இடைவெளிக்குள் ஆயிரக்கணக்கான வருடங்களை சூழ்ந்து கொள்ளக்கூடிய காலவிரிவு காணப்படுகின்றது. ஏனெனில் ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் அந்த மிஃராஜுடைய பாதையால் நித்திய உலகுக்குள் நுழைந்தார்கள். நித்திய உலகின் ஓரிரு நிமிடங்கள் இந்த உலகின் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு சமனானதாகும். இவ்வாறே இந்த சத்தியத்திற்கான இன்னுமோர் ஆதாரம், அவ்லியாக்களுக்கு மத்தியில் நிகழ்ந்த கால விரிவோடு தொடர்புபட்ட நிகழ்வுகளாகும். சில அவ்லியாக்கள் ஒரே நிமிடத்தில் ஒரு நாளின் வேளைகளைப் பூர்த்தி செய்துள்ளார்கள். இன்னும் சிலர் ஒரு மணித்தியாலத்தில் ஒரு வருடத்துக்குறிய பணிகளைப் பூர்த்தி செய்துள்ளார்கள். இன்னும் சிலர் ஒரே நிமிடத்தில் முழுக் குர்ஆனையும் தமாம் செய்த விடயத்தை ரிவாயத் செய்துள்ளார்கள். உண்மையில் இப்படிப்பட்ட நம்பிக்கைக்குப் பாத்திரமான சத்தியவான்கள் அறிந்துகொண்டே பொய்யை இட்டுக்கட்ட மாட்டார்கள். எந்த அளவுக்கெனில் “கால விரிவை”(குறிப்பு ) சந்தேகத்துக்கிடமின்றி நிதர்சனமாகக் கண்டுள்ளார்கள் என்பதற்கான முதவாதிர் அந்தஸ்துப் பெற்ற ஆதாரங்கள் எண்ணி முடிக்க இயலாத அளவு ஏராளமானதாகும், உண்மையில் இந்த ஏராளத்தண்மையும் கூட இந்த சத்தியத்திற்கு முதவாதிர் அந்தஸ்தைப் பெற்றுக் கொடுக்கின்ற ஓர் அம்சமாகக் காணப்படுகின்றது. மேலும் இந்தக் கால விரிவிற்கு ஒரு வகையில் அனைவரும் தமது கனவுகளில் சாட்சி பகர்கின்றனர். சில போது ஒரு நிமிடத்தில் மனிதன் தான் கண்ட கனவுகளையும், அதில் ஏற்பட்ட அனுபவங்களையும் பேசிய வார்த்தைகளையும் அனுபவித்த இன்பங்கள் வேதனைகளையும் காண்பதற்கு நிதர்சன உலகில் ஒரு நாள் அல்லது பல நாட்கள் தேவைப்படும். சுருக்கமாக மனிதன் தற்காலிகமானவனாக இருந்தாலும், உண்மையில் நித்தியத்துக்காகப் படைக்கப்பட்டவனாக இருக்கின்றான். மேலும் அவன் நித்திய ஏகனின் கண்ணாடியாகவும் பிரதிபலிப்பிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளதோடு நித்திய கனிகளைப் பெற்றுத்தரக்கூடிய பணிகளில் பொறுப்புச் சாட்டப்பட்டுள்ளான். கூடவே நித்திய ஏகனுடைய நித்திய நாமங்களின் பிரதிபலிப்புக்களுக்கும் கலையம்சங்களுக்கும் பாத்திரமாக இருக்கக்கூடிய ஒரு தோற்றமும் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறெனில் இப்படிப்பட்ட மனிதனுக்கான உண்மை நிம்மதியும் விமோசனமும் தனது ஒட்டு மொத்த அவயவங்களையும் ஆற்றல்களையும் திரட்டி அந்த ஏக நித்தியனின் திருப்பொருத்தத்துக்குற்பட்ட எல்லைக்குள் நித்தியத்தின் பாதையில் அந்த நித்தியனை நோக்கிப் பயணிப்பதாகும். இதுவே அவனது உண்மையான பணியுமாகும். அவனுடைய நாவு يَا بَاقِى اَنْتَ الْبَاقِى என்று கூறுவதைப் போன்றே, உள்ளம், ஆன்மா, அறிவு போன்ற அனைத்து அவயவங்களும் “ஹுவல் (b)பாகீ, ஹுவல் அ(z)ஸலிய்யுல் அ(b)பத், ஹுவஸ் ஸர்மதீ, ஹுவத் (d)தாஇம், ஹுவல் மத்லூப், ஹுவல் மக்ஸூத், ஹுவல் மா(b)பூத் என்று கூற வேண்டும். سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ رَبَّنَا لَا تُؤَاخِذ۟نَٓا اِن۟ نَسٖينَٓا اَو۟ اَخ۟طَا۟نَا

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters