Lem'alar

The Fourth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

“மின்ஹாஜுஸ் ஸுன்னத் – ஸுன்னத்துடைய பாதை” என்ற கருப்பொருள் இந்த ரஸாஇலிற்குப் பொருத்தமாக தெறிவு செய்யப்பட்டுள்ளது. [இமாமத் விடயமானது அடிப்படைகளோடு சம்பந்தப்படாத ஒரு விடயமாயினும் அளவுக்கதிகம் முக்கியத்துவமளிக்கப்பட்ட ஒரு விடயமாக இருப்பதன் காரணமாக ஈமானிய அடிப்படைகளின் வரிசைக்குள் நுழைந்துள்ளதோடு இல்முல் கலாம் மற்றும் உஸூலுத்தீன் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவமளிக்கப்பட்டுப் பார்க்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் குர்ஆனுக்கும் ஈமானுக்கும் சொந்தமான எமது அடிப்படைப் பணியோடு தொடர்புகள் இருக்கின்ற காரணத்தினாலும் இங்கு சிறிதளவு வியாக்கியானத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றது.] بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ لَقَد۟ جَٓاءَكُم۟ رَسُولٌ مِن۟ اَن۟فُسِكُم۟ عَزٖيزٌ عَلَي۟هِ مَا عَنِتُّم۟ حَرٖيصٌ عَلَي۟كُم۟ بِال۟مُؤ۟مِنٖينَ رَؤُفٌ رَحٖيمٌ ۝ فَاِن۟ تَوَلَّو۟ا فَقُل۟ حَس۟بِىَ اللّٰهُ لَٓا اِلٰهَ اِلَّا هُوَ عَلَي۟هِ تَوَكَّل۟تُ وَهُوَ رَبُّ ال۟عَر۟شِ ال۟عَظٖيمِ ۝ قُل۟ لَٓا اَس۟ئَلُكُم۟ عَلَي۟هِ اَج۟رًا اِلَّا ال۟مَوَدَّةَ فِى ال۟قُر۟بٰى இந்த சங்கையான வசனங்களில் பொதிந்துள்ள பல்வேறு சத்தியங்களிலிருந்து ஓரிரு சத்தியங்கள் இரண்டு அத்தியாயங்களில் விளக்கத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

§2

“நான்கு குறிப்புக்களாகும்.”

§3

இந்த வசனங்கள் தனது உம்மத் மீது ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அண்ணவர்கள் வைத்துள்ள பரிபூரணத்துவமான அன்பையும் கருணையையும் பிரஸ்தாபிக்கின்றன. ஆம் ஸஹீஹான அறிவிப்புக்களின்படி மஹ்ஷருடைய பயங்கரத்தின் காரணமாக அனைவரும், ஏன் நபி மார்களும் கூட நஃப்ஸீ, நஃப்ஸீ என்று கூறும் போது, மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உம்மதீ, உம்மதீ என்று கூறுவதனூடாக உம்மத்தின் மீதான தனது பேரன்பையும் கருணையையும் வெளிக்காட்டுவார்கள். அதே போன்றே, அஹ்லுல் கஷ்ஃபுடைய உண்மைப்படுத்தலுக்கிணங்க, அன்று பிறந்த பாலகனாக தனது தாயின் மடியில் இருக்கின்ற போதே தாயார் அன்னாருடைய முனகலில் “உம்மதீ”, ”உம்மதீ” என்று கூறப்படுவதைச் செவிமடுத்துள்ளார்கள். மேலும் அண்ணலவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையும் அந்த வாழ்க்கையில் எடுத்தொழுகிய அன்பு பிரவாகிக்கும் அழகிய பண்பாடுகளும் அன்னாரது அன்பினதும் கருணையினதும் பரிபூரணத்தன்மையை வெளிக்காட்டுவதாக இருப்பதைப் போன்றே, தனது உம்மத் தன் மீது எண்ணற்ற ஸலவாத்துக்களை சொல்வதாக இருக்க வேண்டும் என்பதற்கான எல்லையற்றதொரு தேவையை வெளிப்படுத்தி, அதனூடாக உம்மத்துடைய ஒட்டுமொத்த நிம்மதி மற்றும் சந்தோச நிலமைகளிலும் தானும் உம்மத்தோடு தொடர்பு பட்டிருக்கின்ற உண்மையை எடுத்துரைக்கின்றார்கள். இந்த வகையிலும் உண்மையில் தனது எல்லையற்ற அன்பையும் கருணையையுமே பறைசாற்றுகின்றார்கள். ஆம், இந்த அளவு எம்மீது அன்பும் கருணையும் கொண்ட ஒரு வழிகாட்டியின் உன்னதமான வழிகாட்டல்களாகத் திகழும் மேலான சுன்னத்களுக்கு அமைவாக செயற்படாதிருப்பது, எப்படிப்பட்டதொரு நன்றி கெட்ட நிலை என்பதை ஒப்பிட்டு அறிந்து கொள்ளுங்கள்.

§4

மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், விசாலமானதும் அகிலார்ந்ததுமான நுபுவ்வத் பணியை சுமந்தவர்களாக இருக்க, ஒப்பீட்டளவில் சிறிய சில தனி நபர்கள் மீது அளப்பரியதோர் அன்பை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். உண்மையில், பார்வைக்கு அப்படிப்பட்ட உன்னதமானதோர் அன்பையும் இரக்கத்தையும் தனி நபர்கள் மீது செலுத்துவதானது நுபுவ்வத் பணியுடைய அளவிட முடியாத முக்கியத்துவத்திற்கு முன்னால் பொருத்தமற்றதாகத் தென்பட வாய்ப்பிருக்கின்றது. என்றாலும் நிதர்சனத்தில் அந்தத் தனி நபர்கள் விசாலமானதும் அகிலார்ந்த்துமான நுபுவ்வத்துடைய பணிக்கு அர்ப்பணமாகக் கூடியதொரு சங்கிலித் தொடரின் தொடக்க முனையில் அந்த மொத்த சங்கிலித் தொடரையும் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருந்தமையினால் அந்த உன்னதமான சங்கிலித் தொடரின் முக்கியத்துவத்தைக் கருத்திற் கொண்டு அதன் ஆரம்பப் பிரதிநிதிகளாகிய ஆகிய அந்தத் தனிநபர்களுக்கு அதி உச்ச மட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஹழரத் ஹஸன் மற்றும் ஹுஸைன் ஆகியோர் மீது அவர்களின் பால்ய வயதிலிருந்தே வெளிக்காட்டிய மிதமிஞ்சிய அன்பும் முக்கியத்துவமும், வெறுமனே இரக்க சுபாவத்தினாலோ அல்லது உறவு முறை உணர்வினாலோ வெளிப்பட்ட ஓர் அன்பன்றி, அது அவர்கள் நுபுவ்வத்துடைய பணிக்கு அர்ப்பணமாகக் கூடிய ஒளிமயமான ஒரு சங்கிலித்தொடரின் ஒரு முனையாகவும் நபியுடைய வாரிஸாக வர இருக்கின்ற மிகவும் மகத்துவம் பொருந்திய ஒரு ஜமாத்துடைய ஊற்றுக்கண்களாகவும் பிரதிநிதிகளாகவும் இருந்த காரணத்தினால் வெளிப்பட்ட அன்பாகும். ஆம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது மாசற்ற கருணையின் வெளிப்பாடாக ஹழரத் ஹஸன் (ரழி) அவர்களை தனது கைகளில் சுமந்து ஆரத்தழுவி நெற்றிதனில் முத்தமிடும் போது, ஹழரத் ஹஸன் (ரழி) அவர்களிலிருந்து சங்கிலிப் பிணைப்பெடுக்கும் பாக்கியம் பெற்ற பரம்பரையிலிருந்துமுள்ள கௌஸுல் அஃலம் ஷாஹ் ஜைலானி போன்ற மஹ்திக்கு ஒப்பான நபியுடைய வாரிஸுகள், ஷரீஅதே அஹமதிய்யாவைத் தம் தோள்களில் சுமந்து பாதுகாக்கப் புறப்பட்ட உத்தமர்கள் என்று அனைவரது பங்கிற்கும் சேர்த்தே அன்னாரது நெற்றியை முத்தமிட்டுள்ளார்கள். அதாவது அந்த உத்தமர்கள் எதிர்காலத்தில் ஆற்ற இருக்கும் மகத்தான பணிகளை தனது நுபுவ்வத்துடைய கண்களால் கண்டு ஆணந்தமும் பரவசமும் அடைந்துள்ளார்கள். அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடாக அவர்களைத் தட்டிக் கொடுத்து ஆர்வமூட்டுவதற்கான ஒரு சமிக்ஞையாக அந்த அனைவரது பங்கிற்கும் சேர்த்து ஹழரத் ஹஸன் (ரழி) அவர்களின் நெற்றிதனில் முத்தமிட்டுள்ளார்கள். அவ்வாறே, ஹழரத் ஹுஸைன் (ரழி) அவர்களின் பிரகாசமான பரம்பரையில் தோன்றிய ஜைனுல் ஆப்தீன், ஜாஃபர் ஸாதிக் போன்ற உன்னதமான இமாம்கள் மற்றும் நபியுடைய உண்மையான வாரிஸுகளாகத் திகழ்ந்த மஹ்தியை ஒத்த ஏராளமான உத்தம புருஷர்களின் பெயரால் ஹழரத் ஹுஸைன் (ரழி) அவர்கள் மீது அதீத ஈடுபாடும் இரக்கமும் காட்டியுள்ளார்கள். அதாவது இஸ்லாத்தினதும் ரிஸாலத் பணியினதும் பெயரால் இவர்களின் நெற்றிகளில் முத்தமிட்டு தனது மாசற்ற நேசத்தையும் ஈடுபாட்டையும் வெளிக்காட்டியுள்ளார்கள். ஆம்! அந்த உத்தமத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய காலத்தை விஞ்சிய பிரகாசமான கண்கள் அராபியப் பாலை வெளியிலிருந்து, முடிவிலியாக வியாபித்துள்ள நித்திய உலகத்தின் ஓர் ஓரத்தில் இருக்கும் மஹ்ஷர் வெளியைத் தரிசித்த கண்களாகும். மண்ணுலகிலிருந்து கொண்டே சுவனலோகத்தைக் கண்டு களித்த கண்களாகும். பூமியிலிருந்து கொண்டே விண்ணுலகிலிருக்கும் மலக்குமார்களோடு சம்பாஷணை செய்த கண்களாகும். மேலும், ஆதம் அலைஹிஸ்ஸலாமுடைய காலம் முதல் இறந்த காலத்தின் இருண்ட திரைகளுக்குப் பின்னால் மறைந்து கொண்ட நிகழ்வுகளைத் தெளிவாகக் கண்டு கொண்ட கண்களாகும். அனைத்துக்கும் மேலால், அந்த பரக்கத் பொருந்திய கண்கள் சர்வ மாட்சிமை மிக்க வல்லோன் அல்லாஹ்வைக் காண்கின்ற பாக்கியத்தைப் பெற்ற கண்களாகும். ஆம்! இப்படிப்பட்ட நபியவர்கள் தனது காலத்தை விஞ்சிய பிரகாசமான அந்தக் கண்களாலும் மறைவை அறிந்த உள்ளத்தாலும் நிச்சயமாக ஹழரத் ஹஸன் மற்றும் ஹுஸைன் (ரழி) அவர்களுடைய வழித்தோன்றல்களில் வாரிசுகளாக வர இருக்கின்ற குதுப்மார்களையும் இமாம்களையும் முஜத்தித்களையும் கண்டுள்ளார்கள். அவர்கள் அனைவரது பெயராலும் இவர்களின் நெற்றிகளை முத்தமிட்டுள்ளார்கள். ஆம்! நபியவர்கள் ஹழரத் ஹஸன் (ரழி) அவர்களது நெற்றியில் இட்ட முத்தத்தில், ஷாஹ் ஜைலானி அவர்களுக்கு உன்னதமானதொரு பங்கு இருக்கின்றது.

§5

اِلاَّ الْمَوَدَّةَ فِى الْقُرْبَى என்ற மறை வசனத்தின் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அர்த்தம், “நபியவர்கள் தனது ரிஸாலத் பணியை நிறைவேற்றியதற்குப் பகரமாக கூலி வேண்ட மாட்டார்கள். ஆனால் ஆலுபைத் மீதான தோழமையையும் நேசத்தையும் வேண்டுகிறார்கள்” என்பதாகும். ஒரு வேளை பின்வருமாறு கேட்கப்பட்டால்: இந்த அர்த்தத்திற்கமைய பரம்பரை உறவுமுறை நெறுக்கத்திலிருந்து தோன்றும் ஒரு பிரதிபலன் நாடப்பட்டுள்ளதல்லவா! ஆனால் اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ اَتْقَيكُمْ என்ற மறை வசனத்துக்கிணங்க, பரம்பறை உறவிலிருந்தன்றி அல்லாஹ்வுடனான நெருக்கத்தின் அடிப்படையில் அல்லவா ரிஸாலத் பணி உருண்டோடுகின்றது? பதில்: கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், ஆலுபைத் இஸ்லாமிய உலகில் ஒளிமயமானதொரு விருட்சமாக ஆகப்போவதையும், இஸ்லாமிய உலகின் அனைத்து மட்டங்களிலும் மனிதன் பூரணத்துவத்தை அடைவதற்கான கல்வியில் வழிகாட்டிகளாகவும் முர்ஷித்களாகவும் பணி புரியப் போகும் உத்தமர்களில் பெரும்பாண்மையினர் ஆலுபைத்திலிருந்தே தோன்றப் போகின்றார்கள் என்பதையும், அத்தஹியாத்தில் உம்மத் தனது “ஆல்” சம்பந்தமாகக் கேட்கும் اَللَّهُمَّ صَلِّ عَلَى سَيِّدِنَا مُحَمَّدٍ وَ عَلَى اۤلِ سَيِّدِنَا مُحَمَّدٍ * كَمَا صَلَّيْتَ عَلَى اِبْرَاهِيمَ وَ عَلَى اۤلِ اِبْرَاهِيمَ اِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ என்ற துஆ ஏற்றுக்கொள்ளப்படும் என்பதையும் காலத்தை விஞ்சிய தனது நுபுவ்வத்துடைய பார்வையால் கண்டு கொண்டுள்ளார்கள். அத்துடன், இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்தில் தோன்றிய வழிகாட்டிகள் உச்சமட்டப் பெரும்பாண்மையோடு ஹழரத் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய ஆலில் இருந்து அதாவது பரம்பரையிலிருந்து தோன்றிய பனூ இஸ்ராஈலைச் சேர்ந்த நபிமார்களாக இருந்ததைப் போன்றே, தனது உம்மத்திலும் கூட இஸ்லாத்துடைய உன்னத பணிகளிலும் பெரும்பாலான தரீககளிலும் தனது ஆலுபைத்தைச் சேர்ந்த அக்தாப்கள் முன்னணியில் நிற்பதைக் கண்டுள்ளார்கள். இதன் காரணமாகவே قُلْ لاَ اَسْئَلُكُمْ عَلَيْهِ اَجْرًا اِلاَّ الْمَوَدَّةَ فِى الْقُرْبَى என்ற மறை வசனம் தனக்கிட்ட கட்டளைக்கமைய, ஆலுபைத்துக்காகத் தனது உம்மத்தின் தோழமையையும் நேசத்தையும் வேண்டினார்கள். இந்த உண்மையை பிறிதொரு அறிவிப்பினூடாகவும் வலியுறுத்துகின்றார்கள். “உங்களிடம் இரண்டு விடயங்களை விட்டுச் செல்கிறேன், அவற்றைப் பற்றிக் கொள்கின்ற காலமெல்லாம் விமோசனம் அடைவீர்கள். ஒன்று கிதாபுல்லாஹ், மற்றது என்னுடைய ஆலுபைத் ஆகும்.” ஆம், மேலான சுன்னத்களின் தோற்றுவாயாகவும், அவற்றின் பாதுகாவலர்களாகவும், அனைத்துக் கோணங்களிலிருந்தும் அந்த சுன்னத்களுக்குச் சார்பானவர்களாகவும் அவர்களே இருக்கின்றார்கள். இந்தத் தாத்பர்யத்தின் காரணமாகத் தான், குர்ஆன், சுன்னாவுக்குக் கட்டுப்படுமாறு ஏவுவதற்கு ஒத்த அந்தஸ்தைக் கொண்டதாக மேற்படி ஹதீஸிலுள்ள உண்மை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், ஆலுபைத்திடமிருந்து ரிஸாலத் பணியினூடாக எதிர்பார்க்கப்படுவது நபியுடைய மேலான சுன்னத்களாகும் என்பதே இதன் அர்த்தமாகும். சுன்னத் வழிப்படி நடவாது புறக்கணிப்பவன், உண்மையான ஆலுபைத்தைச் சேர்ந்தவனாக ஆக முடியாததைப் போன்றே, ஆலு பைத்துடன் உண்மைத் தோழமை கொள்ளவும் முடியாது. மேலும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது உம்மத்தை ஆலுபைத்தைச் சூழ ஒன்று திரட்ட விரும்பியதற்குப் பின்னாலுள்ள தாத்பரியத்தை நோக்கினால், காலவோட்டத்தில் ஆலுபைத் மிகவும் பல்கிப் பெருகப் போவதையும், அதே நேரம் இஸ்லாமிய உலகம் மிகவும் பலவீனப்படப் போவதையும் அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அறிந்து கொண்டார்கள். ஆக இப்படிப்பட்ட ஒரு காலத்தில் அந்த உம்மத்துடைய ஆன்மீக மேம்பாட்டுக்கான காரணிகளாகவும் மத்தியஸ்தளங்களாகவும் இருப்பதற்காக ஆன்ம பலத்திலும் ஆளணியிலும் சக்தி வாய்ந்த பரஸ்பரம் ஒத்துழைக்கக் கூடிய ஒரு ஜமாத்துடைய இருப்பு அவசியப்படுகின்றது. இந்த சூழ்நிலையை அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு சிந்தித்த நபியவர்கள் தனது உம்மத்தை ஆலுபைத்தைச் சூழ ஒன்றினைப்பதற்கு விறும்பினார்கள். ஆம், ஆலுபைத்தைச் சேர்ந்த உத்தமர்கள், ஈமான், நம்பிக்கை விடயங்களில் பிறரை விட மிகவுமே மிகைத்தவர்கள் அல்லாவிட்டாலும், விசுவாசம், சரனாகதித் தன்மை, சார்பு நிலை போன்ற விடயங்களில் மிகவுமே முன்னிலையில் உள்ளனர். ஏனெனில் அவர்கள் இயல்பு ரீதியாகவும், பரம்பரை ரீதியாகவும், பிறப்பாலும் இஸ்லாத்துக்குச் சார்பானவர்களாவர். பிறப்பிலிருந்து வரும் சார்பு நிலையானது நலிவானதாகவும், கண்ணியக் குறைவானதாகவும், ஏன் அநீதியானதாகவும் தான் இருந்தாலும் கூட விட்டுக்கொடுக்கப் படுவதில்லை. நிலமை இவ்வாறிருக்க, மிகப் பலம் வாய்ந்ததும், மிகச் சரியானதும், அதிக கௌரவத்தைக் கொண்டு வந்து சேர்க்கக் கூடியதும், சங்கிலித் தொடராக ஒட்டுமொத்த முன்னோர்களையும் பிணைக்கின்றதும், அந்த முன்னோர்களுக்கு கண்ணியத்தையும் உயர்வையும் பெற்றுக் கொடுத்ததும், அவர்கள் அதற்காக தமது உயிரையே அர்ப்பணம் செய்ததுமான ஒரு சத்தியத்துக்குப் பக்கச்சார்பாக இருப்பது எந்த அளவு அடிப்படையானதும் இயல்பூக்கமானதும் என்பதை தெட்டத் தெளிவாக உணர்ந்துகொள்ளும் ஒருவர் அந்த சார்பு நிலையை விட்டுக்கொடுப்பது சாத்தியமாகுமா? அஹ்லுல் பைத்கள், இந்த வலுவான பிணைப்பின் காரணமாகவும் இஸ்லாத்துடனான இயல்பான உறவின் காரணமாகவும் தீனுல் இஸ்லாத்துக்குச் சார்பான மிகச் சிறியதொரு துரும்பைக் கூட மிகப்பெரியதோர் அத்தாட்சியைப் போன்று ஏற்றுக்கொள்வார்கள். ஏனெனில் இயல்பாகவே அதற்குப் சார்பானவர்களாக இருக்கின்றார்கள். பிறரைப் பொருத்தவரை அவர்கள் பலமானதோர் அத்தாட்சிக்கும் கூட மெதுவாகவே துலக்கம் காட்டுவார்கள்.

§6

மூன்றாவது குறிப்பின் நிழலில் ஷீஆக்களுக்கும் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்துக்குமிடையிலுள்ள மோதலுக்கான காரணியாகவும், ஈமானிய அடிப்படைகள் வரிசைக்குள் நுழைந்து அகாஇதுல் ஈமான் நூல்களில் இடம்பிடிக்கின்ற அளவு பெரிதுபடுத்தப்பட்டதுமான ஒரு விடயத்தை சுருக்கமாகத் தொட்டுக் காட்டுகின்றோம். அந்த விடயம் பின்வருமாறு; அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினர் “ஹழரத் அலி (ரழி) அவர்கள் நான்கு கலீபாக்களிலும் நான்காமவர் ஆவார்கள். ஹழரத் ஸித்தீக் (ரழி) அவர்கள் அதிக ஏற்றமிக்கவராகவும், பொருத்தமானவராகவும் இருந்தமையினால் தான் முதலில் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது” என்று கூறுகின்றனர். ஷீஆக்களோ “கிலாபத் ஹழரத் அலி (ரழி) அவர்களுடைய உரிமையாக இருக்க ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. அனைவரை விடவும் அதிக ஏற்றமானவர்கள் ஹழரத் அலி (ரழி) அவர்களேயாவார்கள்” என்று கூறுகின்றனர். ஷீஆக்கள் தமது வாதங்களுக்கான ஆதாரங்களாக ஹழரத் அலி (ரழி) அவர்களின் மகத்துவம் சம்பந்தமாக வரும் ஹதீஸ்களையும், ஹழரத் அலி (ரழி) அவர்கள் தனது ஷாஹுல் விலாயத் பட்டத்தினூடாக பூரா அவ்லியாக்கள் மற்றும் தரீகத்துக்களின் ஊற்றுவாயாக இருக்கின்ற விடயத்தையும், அறிவு, வலிமை மற்றும் இபாதத் விடயங்களில் அண்ணாரது பிரமிப்பூட்டக் கூடிய பண்புகளையும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அண்ணார் மீதும் அண்ணாரிலிருந்து தொடர் சங்கிலியாக நீளப்போகும் ஆலுபைத் மீதும் காட்டிய அதீத ஈடுபாடு போன்ற விடயங்களையும் முன் வைக்கின்றனர். இவற்றிலிருந்து மிகச்சிறந்தவர் ஹழரத் அலி (ரழி) அவர்களே என்றும் கிலாபத் எப்போதுமே அவர்களது உரிமையாக இருக்க ஒவ்வொரு முறையும் அது அவர்களிடமிருந்து பலாத்காரமாக பறிக்கப்பட்டது என்றும் வாதிடுகின்றனர். இந்த வாதத்திற்கான பதில்: ஹழரத் அலி (ரழி) அவர்கள் தொடர்ந்து இருபது வருடங்களுக்கும் அதிகமாக தனது முழுப்பொருத்தத்தோடு முன்சென்ற மூன்று கலீபாக்களுக்கும் கட்டுப்பட்டு அவர்களது அவையில் ஷைகுல் இஸ்லாம் பதவியில் இருந்தமையானது ஷீஆக்களின் மேற்படி வாதம் பசப்பானது என்பதற்குப் போதுமான சான்றாகும். கூடவே முன்சென்ற மூன்று கலீபாக்களுடைய காலங்களில் நிகழ்ந்த இஸ்லாத்தின் எதிரிகளுடனான போராட்டங்கள் மற்றும் இஸ்லாத்துக்காக ஈட்டப்பட்ட வெற்றிகளும், ஹழரத் அலி (ரழி) அவர்களுடைய காலத்தில் நிகழ்ந்த அசம்பாவிதங்களும் மீண்டும் மீண்டும் இஸ்லாமிய கிலாபத்துடைய விடயத்தில் ஷீஆக்களுடைய வாதங்களைப் பொய்யாக்குகின்றன. எனவே இவ்விடத்தில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் வாதங்களே சத்தியமானதாகும். ஒரு வேளை பின்வருமாறு வினவப்பட்டால்: அடிப்படைகளை வேத்து நோக்கும் போது விலாயத் கோரும் ஷீஆக்கள் என்றும் கிலாபத் கோரும் ஷீஆக்கள் என்றும் ஷீஆக்களை இரண்டு வகையாக நோக்கலாம். இந்த இரண்டாவது பகுதிக்குள் உள்நோக்கங்களும் அரசியலும் களந்து மாசடைந்து விட்டமையினால் இந்தப் பகுதியை ஒதுக்கி விட்டு இவர்களின் வாதம் உண்மையற்றது என்பதை ஏற்றுக்கொள்வோம். ஆனால் முதலாவது பகுதியில் உள்நோக்கங்களோ அரசியலோ கிடையாது. இந்த வகையில் மாசடையாத விலாயத் கோரும் ஷீஆக்களும் கூட கிலாபத் கோரும் ஷீஆக்களை உண்மைப்படுத்திச் சரி காண்கின்றனர். அதாவது தரீக்கத்துகளைச் சேர்ந்த அவ்லியாக்களுள் ஒரு பகுதியினரும் கூட ஹழரத் அலி (ரழி) அவர்களையே ஏற்றம் மிக்கவர்களாகக் கருதுகின்றனர். இந்த வகையில் அரசியலை மையப்படுத்தி வாதிக்கும் ஷீஆக்களுடைய வாதங்களை இவர்கள் உண்மைப்படுத்துகின்றனர். இதிலுள்ள மர்மம் என்ன? பதில்: ஹழரத் அலி (ரழி) அவர்களை இரண்டு அடிப்படைகளில் பார்ப்பது அவசியப்படுகின்றது. முதலாவது தனிப்பட்ட அந்தஸ்துக்கள் அடைவுகள் என்ற அடிப்படையிலாகும். இரண்டாவது ஆலுபைத்துடைய கூட்டாண்மாவைப் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற அடிப்படையிலாகும். ஆலுபைத்துடைய கூட்டான்மாவானது ஒரு வகையில் ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய தன்மை பொதியப்பெற்றதாகும். இந்த வகையில் முதலாவது அடிப்படையை வைத்துப் பார்க்கும் போது, பூரா சத்தியவான்களும் ஏகமனதாக அபூபக்கர் மற்றும் உமர் (ரழி) ஆகியோரை முற்படுத்துகின்றனர். இஸ்லாத்துக்கான தியாகங்கள், இறை நெருக்கம் போன்ற விடயங்களில் அவர்களையே உயர் பதவிகளை உடையவர்களாகக் காண்கின்றனர். இரண்டாவது அடிப்படையை வைத்துப் பார்த்தால், அலி (ரழி) அவர்கள் ஆலுபைத்துடைய கூட்டான்மாவின் பிரதிநிதியாகவும், ஆலுபைத்துடைய கூட்டான்மாவானது ஒரு வகையில் ஹகீகதுல் முஹம்மதிய்யாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் இருப்பதால் இந்த அடிப்படையில் ஒப்பீட்டுக்கேனும் எடுக்க முடியாததாகும். ஆம், ஹழரத் அலி (ரழி) அவர்கள் சம்பந்தமாக பிரமாதமாகப் புகழப்பட்டு வரும் நபியுடைய வார்த்தைகள் இந்த இரண்டாவது அடிப்படையோடு சம்பந்தப்பட்டவையாகும். “ஒவ்வொரு நபியுடைய பரம்பரையும் அவர்களிலிருந்துமுள்ளதாகும். எனது பரம்பரை அலி (ரழி) உடைய பரம்பரையாகும்.” என்ற ஸஹீஹான அறிவிப்பு இந்த உண்மைக்கு வலுச்சேர்க்கின்றது. ஏனைய கலீபாக்களை விட ஹழரத் அலி(ரழி) அவர்களைப் புகழும் விதமாக வரும் ஹதீஸ்கள் அதிகமதிகம் பரவியமைக்குப் பின்னாலுள்ள தாத்பரியம் சற்று வித்தியாசமானதாகும். உமையாக்களும் கவாரிஜ்களும் பொய்களையும் புரட்டுகளையும் கட்டவிழ்த்துவிட்டு அநீதியான முறையில் அண்ணவர்களை சிறுமைப்படுத்த முயற்சித்த வேளை, அவற்றுக்குப் பகரமாக அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாத்தினராகிய சத்தியவான்கள், அண்ணவர்கள் சம்பந்தமாக வந்த ஹதீஸ்களை அதிகமதிகம் பரப்பினார்கள். பிற குலாபாஉர் ராஷிதீன்கள் இப்படிப்பட்ட பொய்ப் புரட்டுகளுக்கு முகம் கொடுக்காமையினால் அவர்கள் சம்பந்தமாக வந்த ஹதீஸ்களை பரப்புவதற்கான தேவை இந்த அளவு முக்கியத்துவம் பெறவில்லை. கூடவே எதிர்காலத்தில் அலி (ரழி) அண்ணவர்கள் இது போன்ற வேதனை மிக்க நிகழ்வுகளுக்கும் உள்ளிருந்தும் வெளியிருந்துமான பித்னாக்களுக்கும் முகம் கொடுக்கப்போவதை மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தனது நுபுவ்வத்துடைய கண்களால் பார்த்து, ஹழரத் அலி (ரழி) அவர்களை நம்பிக்கையீனத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும், உம்மத் அவர்கள் மீது தப்பெண்ணம் கொள்வதை விட்டும் தடுப்பதற்காகவும் مَنْ كُنْتُ مَوْلاَهُ فَعَلِىٌّ مَوْلاَهُ போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களை மொழிந்துள்ளார்கள். இதன் மூலம் அலி (ரழி) அவர்களுக்கு ஆறுதலையும், உம்மத்துக்குத் தெளிவையும் வழங்கியுள்ளார்கள். விலாயத் கோரும் ஷீஆக்கள் ஹழரத் அலி (ரழி) அவர்கள் மீது செலுத்தும் அதி தீவிர காதலும், தரீக்கத்துகளால் வழங்கப்படும் உயர் அந்தஸ்துகளும் -கிலாபத் கோரும் ஷீஆக்களின் அளவுக்கு- அவர்களை அவர்களுடைய செயல்களுக்கான குற்றவாளிகளாக ஆக்காது. ஏனெனில் அஹ்லுல் விலாயத் –தமது பாதையின் தன்மைக்கேற்ப- தமது உஸ்தாத் மார்களோடும் முர்ஷித்களோடும் முஹப்பத்வயப்பட்டவர்களாகவே இருப்பார்கள். முஹப்பத்துடைய, அதாவது காதலுடைய வினை தீவிரத்தன்மையாகும். எதைக் காதலிக்கின்றானோ அதை அதன் அந்தஸ்தை விட உயர்த்திப் பார்க்க ஆசைப்படுவான்; அவ்வாறே செய்வான். எனவே காதல் போதையில் தத்தளிப்பவர்கள் மண்ணிப்புக்குரியவர்களாக ஆகலாம். ஆனால் அண்ணவர்களின் மீதான முஹப்பதிலிருந்து வரும் போற்றல் புகழ்ச்சிகள் பிற குலபாஉர் ராஷிதீன்கள் மீதான நிந்தனைக்கோ, அவர்கள் மீது வெறுப்புக்கோ காரணிகளாக அமையாதிருப்பதோடு இஸ்லாத்தின் அடிப்படைகளை மீறாதிருக்கும் நிபந்தனைகளுடனேயே மண்ணிப்புக்குற்பட்டவையாகும். கிலாபத் கோரும் ஷீஆக்களைப் பொருத்தவரை, அரசியல் அழுக்குகளும் அரசியல் உள்நோக்கங்களும் அதற்குள் மிதமிஞ்சி நுழைந்து அப்படியே ஆக்கிரமித்து விட்டதால் பொய்ப்புரட்டுகள், பசப்பு வாதங்களிலிருந்தும் துர் நடத்தைகளிலிருந்தும் மீள முடியாதவர்களாக இருக்கின்றனர். எந்த அளவுக்கெனில் لاَ لِحُبِّ عَلِىٍّ بَلْ لِبُغْضِ عُمَرَ என்ற வார்த்தையைக் கட்டியம் கூறுவதைப் போன்று –ஹழரத் உமர் (ரழி) அவர்களது கையால் பாரசீக சாம்ராஜ்யம் கவிழ்க்கப்பட்டதால்- அலி (ரழி) அவர்கள் மீதான நேசம் என்ற போர்வையில் உண்மையிலேயே, உமர் (ரழி) அவர்களைப் பழிதீர்ப்பதற்காக அவர்கள் மீது வஞ்சனையைக் கக்குகின்றனர். அத்தோடு அம்ர் இப்னு ஆஸ் அவர்கள் ஹழரத் அலி (ரழி) அவர்களை எதிர்த்து நின்றமை மற்றும் உமர் இப்னு ஸஅத் ஹழரத் ஹுஸைன் (ரழி) அவர்களோடு மேற்கொண்ட இரத்தக் களரியான யுத்தம் என்பன “உமர்” என்ற பெயர் மீதான பயங்கரமானதொரு வெறுப்பையும் குரோதத்தையும் ஷீஆக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தை விமர்சிப்பதற்கு விலாயத் கோரும் ஷீஆக்களுக்கு எந்த விதமான உரிமையும் கிடையாது. ஏனெனில் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் அலி (ரழி) அவர்கள் மீது எந்த வகையிலும் குறை கூறாததைப் போன்றே அண்ணவர்களை மிகப் பலமாக நேசிக்கின்றனர். ஆனால் ஹதீஸ்களின் எச்சரிக்கைப் படி ஆபத்தானதாக இருக்கின்ற காதல் தீவிரத்தை விட்டும் ஒதுங்கி நிற்கின்றனர். ஹதீஸ்களில் அலி (ரழி) அவர்களின் நேசர்களைப் போற்றி வரும் நபிகளாரின் வார்த்தைகளுக்குப் பாத்திரமானவர்களாக அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரே இருக்கின்றனர். ஏனெனில் நெறிதவறாத நேசத்தை வெளிப்படுத்துவதன் மூலமாக அவர்கள் மீது உண்மை நேசம் செலுத்துபவர்கள் சத்தியவான்களான அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் ஆவார்கள். ஹழரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் மீதான தீவிர காதல் கிறிஸ்தவர்களுக்கு எப்படி ஆபத்தானதாக மாறியதோ, அவ்வாறே அலி (ரழி) அவர்கள் மீது செலுத்தப்படும் அதை ஒத்த தீவர காதலும் ஆபத்தானதாகும் என்பதை ஸஹீஹான ஹதீஸ்களிலிருந்து விளங்கிக்கொள்ள முடியும். “அலி (ரழி) அவர்களுடைய மேற்படி அதி உயர் அந்தஸ்துகள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்ததால், அதன் பின்னர், அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அவர்களை தெரிவு செய்வது ஏற்றுக்கொள்ளப்பட முடியாததாகும்.” என்று ஷீஆஉல் விலாயத்தினர் கூறுவார்களாயின்! பதில்: அபூபக்கர் ஸித்தீக் (ரழி), ஹழரத் உமர் ஃபாரூக் (ரழி) ஆகியோரின் தனிப்பட்ட அந்தஸ்துகளும் நுபுவ்வத்துத்துடைய வாரிஸாக அவர்கள் ஆற்றிய பணிகளும் தமது கிலாபத் காலங்களில் அவர்கள் அடைந்து கொண்ட அந்தஸ்துக்களும் என்று இவர்களுடைய உயர் பதவிகள் தனித்தனியாக ஒரு தட்டிலும், அலி (ரழி) அவர்களின் தனிப்பட்ட அந்தஸ்துக்கள், பதவிகள், தனது கிலாபத் காலத்தில் நிர்ப்பந்தமாக சந்திக்க நேரிட்ட வேதனை மிக்க சம்பவங்களாலும் தப்பெண்ணங்களுக்கு வழிவகுத்த அளப்பெரிய போராட்டங்களாலும் ஈட்டிக்கொண்ட நன்மைகள், அந்தஸ்துகள் என்பன அடுத்த தட்டிலும் வைக்கப்பட்டால், நிச்சயமாக அபூபக்கர் ஸித்தீக் (ரழி) அல்லது உமரே ஃபாரூக் (ரழி) அல்லது உஸ்மான் துன்நூரைன் (ரழி) ஆகியோருடைய தட்டே கனதியானதாக இருக்கும் என்பதை அஹ்லுஸ்ஸுன்னத்தினர் கண்டு கொண்டனர். இந்த அடிப்படையிலேயே முதலில் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். மேலும் ரிஸாலே நூர் தொகுப்பின் பன்னிரண்டாவது மற்றும் இருபத்தி நான்காவது வார்த்தைகளில் நிறுவப்பட்டதற்கிணங்க, நுபுவ்வத்தானது விலாயத்தோடு ஒப்பிடும் போது அந்தஸ்தில் மிக மிக உயர்ந்ததாகும். ஒரு திர்ஹம் அளவான நுபுவ்வத்துடைய ஒரு பிரதிபலிப்பானது ஒரு குவியல் அளவான விலாயத்துடைய பிரதிபலிப்புகளுக்குப் பகரமானதாகும். இந்த அடிப்படையில் ஹழரத் அபூபக்கர் ஸித்தீக் (ரழி), ஹழரத் உமரே ஃபாரூக் (ரழி) ஆகியோருக்கு நுபுவ்வத்துடைய வாரிஸுத்துவத்திலிருந்தும் ரிஸாலத்துடைய சட்டங்களை நிலைநாட்டுவதிலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அதிகமான பங்குகள் வழங்கப்பட்டிருந்தன என்பதற்கு அவர்களுடைய கிலாபத்கால அடைவுகள் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினருக்கு ஆதாரமாக உள்ளன. ஹழரத் அலி (ரழி) அவர்களுடைய தனிப்பட்ட உயர் அந்தஸ்துக்களும் பதவிகளும், நுபுவ்வத்துடைய வாரிஸுத்துவத்திலிருந்து கிடைக்கும் அந்த அதிகரித்த பங்கை அதன் அந்தஸ்திலிருந்து இறக்கும் பலம் அற்றவை என்பதால், ஹழரத் அலி (ரழி) அவர்கள் ஷைகைனி முகர்ரமைன் அவர்களுடைய கிலாபத் காலங்களில் அவர்களின் அவையில் ஷைகுல் இஸ்லாமாகக் கடமையாற்றி பணிவிடை செய்தார்கள். ஆகவே இந்த வகையில், ஹழரத் அலி (ரழி) அவர்களை அதிகம் நேசிக்கின்ற, கௌரவிக்கின்ற அஹ்லுல்ஹக் வஸ்ஸுன்னத்தைச் சேர்ந்தவர்கள், ஹழரத் அலி (ரழி) அவர்கள் அதிகமதிகம் நேசித்து கௌரவித்த ஷைகைன்களை எவ்வாறு நேசிக்காதிருக்க முடியும்!? எவ்வாறு கௌரவிக்காதிருக்க முடியும்!? இந்த உண்மையை ஒரு உதாரணம் மூலமாக விளக்குவதாயின்: மிகவும் செல்வந்தரான ஒருவர் தனது செல்வத்திலிருந்து வாரிசுறிமைச் சொத்தாக தனது பிள்ளைகளுல் ஒருவருக்கு இருபது குவியல் வெள்ளியும் நான்கு குவியல் தங்கமும் கொடுக்கின்றார். மற்றவருக்கு ஐந்து குவியல் வெள்ளியும் ஐந்து குவியல் தங்கமும் கொடுக்கின்றார். மற்றவருக்கு மூன்று குவியல் வெள்ளியும் ஐந்து குவியல் தங்கமும் கொடுக்கின்றார். இந்த நிலையில் நிச்சயமாக இறுதி இருவரும் பெறுமானத்தின் அடிப்படையில் குறைவாகப் பெற்றுக் கொண்டாலும் பெறுமதியின் அடிப்படையில் அதிகமாகப் பெற்றுக் கொள்கின்றனர். ஆம் இந்த உதாரணத்தைப் போன்றே ஷைகைன்களிடம் நுபுவ்வத் வாரிஸுத்துவத்தின் அடிப்படையிலும் ரிஸாலத்துடைய கோட்பாடுகளை நிலைநாட்டும் பணியின் அடிப்படையிலும் பிரதிபலிக்கும் அக்ரபிய்யதுல் இலாஹிய்யா ஹகீகத் என்ற தங்கத்திலிருந்து கிடைக்கும் சிறிதளவு அதிகரித்த பங்கானது, தனிப்பட்ட உயர் அந்தஸ்துக்கள் மூலமாகவும் விலாயத் மூலமாகவும் ஈட்டப்படும் குர்பிய்யதுல் இலாஹிய்யா மற்றும் உச்சமட்ட விலாயத் அந்தஸ்து என்பவற்றில் ஏற்படும் மிகையான அதிகரிப்புக்களைக் கூட மிகைத்து விடும். ஒப்பீட்டின் போது இந்த நுணுக்கமான விடயங்களும் கருத்திற்கொள்ளப்பட வேண்டும். மாறாக வெறுமனே தனிப்பட்ட வீரம், அறிவு, விலாயத் போன்ற விடயங்கள் மாத்திரம் ஒன்றோடொன்று ஒப்பிடப்பட்டால் சத்தியத்தின் தன்மை புரட்டப்பட்டு விடும். மேலும் ஹழரத் அலி (ரழி) அவர்களிடம் பிரகாசிக்கும் ஆலுபைத்துடைய கூட்டான்மாவின் அடிப்படையிலும் அந்தக் கூட்டான்மாவில் அதற்குச் சொந்தமான சம்பூரண வாரிசுரிமையின் அடியாகப் பிரதிபலிக்கும் ஹகீகதுல் முஹம்மதிய்யாவின் (அலை) அடிப்படையிலும் ஒப்பீடு செய்யப்பட முடியாது. ஏனெனில் இங்கு பெறுமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உன்னதமான இரகசியம் பொதியப்பெற்றுள்ளது. மறு பக்கம் கிலாபத் கோரும் ஷீஆக்களுக்கோ அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்துக்கு முன்னால் தலைகுணிவதைத் தவிற வேறு எந்த வித உரிமையும் கிடையாது. ஏனெனில் இவர்கள் ஹழரத் அலி (ரழி) அவர்களின் மீது அளப்பறிய அன்பு செலுத்துவதாக வாதித்த போதிலும் யதார்த்தத்தில் அவர்களை அவமதிக்கின்றார்கள். அதாவது அந்த உத்தமர் ஈனச்செயலில் ஈடுபடுபவராக இருந்திருக்க வேண்டும் என்பது இவர்களுடைய மத்ஹபின் அடிப்படை வேண்டுதலாகும். ஏனெனில் இவர்களது கூற்றுப்படி, “ஹழரத் அபூபக்கர் ஸித்தீக் மற்றும் ஹழரத் உமரே ஃபாரூக் (ரழி) ஆகியோர் அசத்தியத்தில் இருக்கின்ற நிலையில் ஹழரத் அலி (ரழி) அவர்கள், அவர்களுடன் தோழமை கொள்வது போன்று போலியாக நடித்துள்ளார்கள். ஷீஆக்களின் நம்பிக்கைப்படி தகிய்யா செய்துள்ளார்கள். அதாவது முன்னைய கலீபாக்களுக்கு அஞ்சி முகஸ்துதி செய்துள்ளார்கள்.” மனசாட்சி உடையவர்களே! கேட்கிறேன், உலகம் போற்றும் இஸ்லாமியக் கதாநாயகனாக இருந்து, அதற்கு மகுடமாக அஸதுல்லாஹ் என்ற பட்டத்தை வென்று, உண்மையாளர்களின் தளபதியாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்த ஓர் உத்தமரை, முகஸ்துதி மற்றும் பயத்தைக் கொண்டும், அசத்தியத்தில் இருக்கும் விரும்பத்தகாத மனிதர்களுக்கு முன்னால் போலியாக அன்பு செலுத்துவதாகப் பாசாங்கு செய்வதைக் கொண்டும், இருபதுக்கும் அதிகமான வருடங்கள் அச்சத்துக்கு மத்தியில் போலியான ஒரு வாழ்க்கை வாழ்வதைக் கொண்டும், அசத்தியவாதிகளிடம் அடிபணிவதைக் கொண்டும் அலங்கரிக்க முற்படுவது அந்த உத்தமருக்கு செலுத்தும் அன்பாக இருக்க முடியுமா!? இப்படிப்பட்ட அவலட்சனமான அன்பை அனைவருக்கும் முதலில் ஹழரத் அலி (ரழி) அவர்களே வெறுத்தொதுக்குவார்கள். ஆம் சத்தியவான்களின் மத்ஹபானது எந்த வகையிலும் ஹழரத் அலி (ரழி) அவர்களை இவ்வாறு அவமதிக்கவோ நடத்தை பிறழ்ந்தவர்களாக சித்தரிக்கவோ முற்படுவதில்லை. அப்படிப்பட்டதொரு வீர வேங்கைக்கு கோழைத்தனத்தை அணிகலனாக அணிவித்து அழகு பார்க்க நினைப்பதில்லை. மாறாக, “ஹழரத் அலி (ரழி) அவர்கள் முன் சென்ற குலபாஉர் ராஷிதீன்களை அசத்தியத்தின் மீது கண்டுகொண்டிருப்பின் ஒரு கனப்பொழுதேனும் அவர்களை ஏற்றுக்கொண்டிருக்கவோ அவர்களுக்குக் கட்டுப்பட்டிருக்கவோ மாட்டார்கள். எனவே அவர்களை சத்தியத்தின் மீதும் அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகவும் கண்டு கொண்டமையினால் தான், தனது ஒட்டுமொத்த ஆற்றல்களையும் பலத்தையும் அவர்கள் சென்ற சத்தியப் பாதைக்கு அர்ப்பணம் செய்தார்கள்” என்று கூறுவர். சுருக்கமாக எந்தவொன்றிலும் இஃப்ராத், தஃப்ரீத் எனப்படும் இருதுறுவ நிலைகளாகிய அதிதீவிர மற்றும் அசமந்த நிலைகள் நல்லதல்ல. எப்போதுமே இஸ்திகாமத்தை உடையது வஸத் என்ற நடுநிலையாகும். அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் இதையே தெரிவு செய்துள்ளனர். ஆனால் துரதிஷ்டவசமாக அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத் எல்லைக்குள் கவாரிஜிய்ய சிந்தனைகள் பகுதியளவு நுழைந்தமையினால், அதற்குள் இருக்கும் ஒரு பகுதி அரசியல் ஆர்வலர்களும் முனாபிக்களும் ஹழரத் அலி (ரழி) அவர்களை விமர்சிக்க முற்படுகின்றனர். அரசியல் அறியாமையினால் கிலாபத்துக்குரிய பூரண உரிமத்தை வெளிக்காட்ட முடியாது போய்விட்டார், நிர்வாகத் திறமை இல்லாதவராக இருந்தார் என்று இல்லாதவற்றையெல்லாம் இட்டுக்கட்டுகின்றனர். ஆம் இவர்களது இந்த உண்மைக்குப் புறம்பான சாடல்களால் அலவிகள் அஹ்லுஸ்ஸுன்னத்தைச் சேர்ந்தவர்களுக்கெதிராக குரோதத்தைக் கக்குகின்றனர். ஆனால் உண்மை நிலை முற்றிலும் மாற்றமானதாகும். அஹ்லுஸ்ஸுன்னத்துடைய கோட்பாடுகளும் அடிப்படை மத்ஹப்களும் மேற்படி சிந்தனைப் பிறழ்வுகளை சரி காண்பதில்லை. மாறாக பிழை என்பதை நிறுவுகின்றன. கவாரிஜ்களினதும் முனாபிக்களினதும் வட்டத்துக்குள் இருந்து வரும் இப்படிப்பட்ட சிந்தனைகள் அஹ்லுஸ்ஸுன்னத்தை குற்றவாளியாக்காது. மாறாக அஹ்லுஸ்ஸுன்னத், ஹழரத் அலி (ரழி) அவர்களுக்கு ஆதரவாக இருக்கின்ற விடயத்தில் அலவிகளையும் மிகைத்து விட்டனர். தமது அனைத்து குத்பாக்களிலும் துஆக்களிலும், ஹழரத் அலி (ரழி) அவர்களை அண்ணாரின் அந்தஸ்தை அலங்கரிக்கும் வார்த்தைகளைக் கொண்டு நினைவு கூறுகின்றனர். விஷேடமாக அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த அவ்லியாக்களும் அஸ்ஃபியாக்களும், அண்ணவர்களைத் தமது முர்ஷிதாகவும் ஷாகுல் விலாயத்தாகவும் பார்க்கின்றனர். அலவிகள், தமதும் அஹ்லுஸ்ஸுன்னத்தினரதும் வெறுப்பை உடமையாக்கிக் கொண்ட கவாரிஜ்களையும் முனாபிக்களையும் ஒரு பக்கமாக வைத்து விட்டு ஹழரத் அலி (ரழி) அவர்களை உண்மையாக நேசிக்கின்ற அஹ்லுஸ்ஸுன்னத்தினருக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருப்பது தான் வேதனைக்குரிய விடயமாகும். நிலமையின் அகோரம் எந்த அளவுக்குச் சென்றுள்ளது எனில், ஒரு பகுதி அலவிகள் அஹ்லுஸ்ஸுன்னத் மீது கொண்ட வெறுப்பு மற்றும் பிடிவாதத்தின் காரணமாக மேலான சுன்னத்களுக்கு மாறு செய்கின்ற ஆபத்தான ஒரு நிலையில் இருக்கின்றனர். எதுவாயினும், உலமாக்களுக்கு மத்தியிலும் பேசுபொருளாக இருக்கின்ற காரணத்தனால் இந்த விடயத்தில் அதிகமாகவே பேசி விட்டோம். சத்தியவான்களான அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரே! ஆலுபைத்துடனான முஹப்பத்தை தமது பாதையாகத் தெறிவு செய்திருக்கும் அலவிகளே! விரைவாக இந்த அர்த்தமற்ற, உண்மைக்கு அப்பாற்பட்ட, விபரீதமான முரண்பாட்டை உங்களுக்கு மத்தியிலிருந்து அகற்றி விடுங்கள். இல்லாவிட்டால் தற்போது மிகப் பலமாகக் கோலோச்சிக் கொண்டிருக்கும் அநியாயக்கார மார்க்க விரோத சக்திகள் சூழ்ச்சி செய்து, உங்களில் ஒருவரை மற்றவர் மீது தூண்டி விட்டு அவர்களை அழிப்பதற்கு உங்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்துவார்கள். பின்னர் பகடைக்காயாகப் பயன்படுத்தப்பட்டவர்களையும் துவம்சம் செய்து விடுவார்கள். நீங்கள் இருதரப்பினருமே தவ்ஹீத் மீது இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தையும் ஒருமைப்பாட்டையும் நிலைநாட்டக்கூடிய அடிப்படைகளும் புனிதமான பிணைப்புக்களும் பலநூறு இருக்கின்ற போது, பிளவை வளர்க்கும் சிறிய உபரிகளை வீசி எறிவது கட்டாயமானதாகும்.

§7

ﻓَﺎِﻥْ ﺗَﻮَﻟَّﻮْﺍ ﻓَﻘُﻞْ ﺣَﺴْﺒِﻰَ ﺍﻟﻠّٰﻪُ ﻟﺎَٓ ﺍِﻟٰﻪَ ﺍِﻟﺎَّ ﻫُﻮَ ﻋَﻠَﻴْﻪِ ﺗَﻮَﻛَّﻠْﺖُ ﻭَﻫُﻮَ ﺭَﺏُّ ﺍﻟْﻌَﺮْﺵِ ﺍﻟْﻌَﻈِﻴﻢِ என்ற மறைவசனத்தில் பொதிந்துள்ள இரண்டாவது சத்தியம் சம்பந்தமானதாகும். [இந்த இரண்டாவது அத்தியாயம் பதினோராவது மின்னலாக இணைக்கப்பட்டுள்ளது]

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters