Lem'alar

The Tenth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

இறை கண்டிப்புகள் بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ ﻳَﻮْﻡَ ﺗَﺠِﺪُ ﻛُﻞُّ ﻧَﻔْﺲٍ ﻣَﺎ ﻋَﻤِﻠَﺖْ ﻣِﻦْ ﺧَﻴْﺮٍ ﻣُﺤْﻀَﺮًﺍ ﻭَﻣَﺎ ﻋَﻤِﻠَﺖْ ﻣِﻦْ ﺳُٓﻮﺀٍ ﺗَﻮَﺩُّ ﻟَﻮْ ﺍَﻥَّ ﺑَﻴْﻨَﻬَﺎ ﻭَﺑَﻴْﻨَﻪُٓ ﺍَﻣَﺪًﺍ ﺑَﻌِﻴﺪًﺍ ﻭَﻳُﺤَﺬِّﺭُﻛُﻢُ ﺍﻟﻠّٰﻪُ ﻧَﻔْﺴَﻪُ ﻭَﺍﻟﻠّٰﻪُ ﺭَﺅُﻑٌ ﺑِﺎﻟْﻌِﺒَﺎﺩِ இந்த அத்தியாயம் குர்ஆனியப் பணியில் உழைக்கின்ற சில தோழர்கள் மனிதன் என்ற வகையில் விட்ட சில தவறுகளின் விளைவாகப் பெற்றுக்கொண்ட இறை கண்டிப்புகளையும் அவற்றினூடாக மேலுள்ள வசனத்தின் ஒரு தாத்பரியத்தையும் வியாக்கியானம் செய்கின்றது. அத்தோடு குர்ஆனியப் பணியில் சங்கிலித் தொடராகத் தொடர்கின்ற ஒரு கராமத்தாக அல்லாஹ்வின் அனுமதியோடும் துஆவின் மூலமும் இந்தப் பணிக்கு ஒத்துழைப்பாகவும் பாதுகாப்பாகவும் இருக்கின்ற கௌதுல் அஃஸம் அவர்களுடைய ஒரு வகையான கராமத்தும் இந்த இடத்தில் தெளிவுபடுத்தப்படும். இந்தப் புனிதமான சேவையில் தளராமல் ஊக்கத்தோடு ஈடுபடுகின்ற சகோதரர்கள் தொடர்ந்தும் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த விடயங்களைப் பேசுவதற்கான நோக்கமாகும். இந்தப் புனிதமான பணியில் மூன்று வகையான கராமத்களைக் காண்கிறோம். முதலாவது வகை: இந்தப் பணிக்கான ஆயத்தங்களும், அதற்குத் தேவையான சேவகர்களும் எம்மை அறியாமல் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படுவது. இரண்டாவது வகை: இந்தப் பணிக்கு முட்டுக்கட்டையாக இருக்கின்ற தடைகள் நீக்கப்படுவதும் தீய சக்திகளின் தீங்குகள் அவர்களுக்கெதிராகவே திருப்பிவிடப்படுவதும்.. இந்த இரண்டையும் உண்மைப்படுத்துகின்ற ஏராளமான நிகழ்வுகள் உள்ளன. அவை நீண்டு செல்லும் என்பதால் இந்த இடத்தில் விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. [குடியரசுக் கட்சியினர் ரிஸாலே நூர் மாணவர்ககுக்குச் செய்த கொடுமைகளைத் தொடர்ந்து அவர்கள் அதைவிட அதிகமானதை இந்த உலகிலேயே பெற்றுக்கொண்டதை சிறிய ஓர் உதாரணமாகக் குறிப்பிடலாம்.] அதை வேறொரு சந்தர்ப்பத்துக்கு ஒத்திவைத்துவிட்டு இந்த இடத்தில் மூன்றாவது வகைக் கராமத்தையே விளக்கத்துக்கு எடுத்துக்கொள்கிறோம். மூன்றாவது வகை: இந்தச் சேவையில் உளத்தூய்மையோடு உழைப்பவர்களை பொடுபோக்கு அல்லது அசட்டைப் போக்கு ஆட்கொள்ள ஆரம்பிக்கும் போது இறை கருணையிலிருந்துமுள்ள ஒரு கண்டிப்பு அவர்களை அந்த நிலையிலிருந்து மீட்டெடுத்துவிடுகின்றது. அதன் பின்னர் அவர்கள் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பிவிடுகிறார்கள். இந்த வகையைச் சேர்ந்த பல நூறு நிகழ்வுகள் உள்ளன. சில கண்டனங்கள் சிலரை இந்தப் பணியிலிருந்து முற்றாக வெளித் தள்ளுகின்ற அளவுக்குக் கொண்டுசென்றுள்ளன. இவை கண்டிப்பு என்பதைவிட ஒரு வகையான தண்டனையாகும். இப்போது இவற்றுக்கு உதாரணமான சில நிகழ்வுகளைப் பார்ப்போம்.

§2

வக்கற்ற இந்த ஸஈதுக்கு வந்த சோதனைகளாகும். குர்ஆனுக்குச் சேவகம் செய்கின்ற இந்தப் பணியில் தளர்வடைந்து, ஓய்வுக்காக எப்போதெல்லாம் எனது நஃப்ஸை மாத்திரம் சிந்திக்க ஆரம்பித்தேனோ அப்போதெல்லாம் கருணை வடிவிலான கண்டிப்புகளைக் கண்டுகொண்டேன். அந்தக் கண்டிப்புகள் அனைத்தும் எனது பொடுபோக்கு, புறக்கணிப்புகள் காரணமாகவே வந்தன என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் எந்த நோக்கம் என்னில் தளர்வை ஏற்படுத்தியதோ அந்த நோக்கத்துக்கு நேர் முரணான விளைவைக் கொண்டே தொடர்ந்தும் கண்டிக்கப்பட்டேன். இந்தப் பணியில் தூய்மையாக உழைக்கின்ற ஏனைய சகோதரர்களும் இவ்வாறே நேரெதிர் விளைவுகளைக் கொண்டு கண்டிக்கப்படுவதைத் தொடர்ந்தும் பார்த்த பின்னர் இந்த நிகழ்வுகள் அனைத்தும் குர்ஆனியப் பணிக்குரிய கராமத்கள் என்பதைத் தெளிவாக உணர்ந்துகொண்டோம். உதாரணமாக: இந்த வக்கற்ற ஸஈத் வான் நகரில் குர்ஆனிய சத்தியங்களைக் கற்பதிலும் கற்பிப்பதிலும் ஈடுபாட்டோடு இருந்த சந்தர்ப்பத்தில் சுற்றுவட்டாரம் ஷேக் ஸைத் புரட்சியைப் போன்ற அரசியல் நிகழ்வுகளால் கொந்தளித்துக்கொண்டிருந்தாலும் மிகவுமே சந்தேகக் குடுக்கையாக இருந்த அரசு என்னை எந்த சந்தர்ப்பத்திலும் தீண்டவில்லை. எப்போது “ஓய்வு தேவை” என்று என்னுடைய நஃப்ஸை மாத்திரம் சிந்தித்து எனது மறுமையைக் காப்பாற்றிக்கொள்வதற்காக “எரக்” மலையிலுள்ள “ஹராபே” என்ற குகையில் தனிமையைத் தேடிச் சென்றேனோ அதிக நாட்கள் செல்ல முன்னர் அரசு என்னைத் தேடி அங்கு வந்தது. எந்தக் காரணமுமின்றி என்னை அங்கிருந்து நாடுகடத்தி புர்தூர் நகருக்கு அழைத்து வந்தார்கள். அங்கும் நகரம் முழுவதும் கடுமையான அரசாங்கக் கெடுபிடிகள் இருந்த போதிலும் குர்ஆனுக்குச் சேவகம் செய்வதில் தொடர்ந்தும் ஈடுபட்ட காலமெல்லாம் எந்த சிக்கலும் இருக்கவில்லை. ஊரிலுள்ள அதிகமானவர்களைப் போல் நாமும் நாளாந்த ஒப்பப் பிணையில் இருந்தபோது நானோ எனது விசுவாசமான மாணவர்களோ என்றுமே ஒப்பம் வைப்பதற்காகச் செல்லவில்லை. இந்த விடயத்தை புர்தூர் நகர மேயர் அங்கு வந்த அரசாங்க உயரதிகாரி பௌஸி அவர்களிடம் முறையிட்ட போது “அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அவருக்கு மரியாதை செலுத்துங்கள்” என்று கூறியுள்ளார். இந்த வாரத்தையை அவருக்கு சொல்ல வைத்தது நிச்சயமாக குர்ஆனியப் பணியின் மகிமையாகவே இருக்க வேண்டும். எப்போது மீண்டும் என்னிடம் எனது நஃப்ஸுக்காக எனது மறுமையை மாத்திரம் சிந்திக்கின்ற போக்கு மேலோங்கியதோ குர்ஆனிய சேவகத்துக்கு சற்று ஓய்வு கொடுக்க முனைந்தேன். மீண்டும் நேரெதிர் விளைவைக் கொண்டு கண்டிக்கப்பட்டேன். மீண்டும் அங்கிருந்தும் நாடுகடத்தி இஸ்பார்த்தா நகருக்கு அனுப்பி வைத்தார்கள். இஸ்பார்த்தாவிலும் இந்தப் பணியை சிரமேற்கொண்டு செய்ய ஆரம்பித்தேன். இருபது நாட்களின் பின்னர் சில பயந்த மனிதர்கள் “இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் சகித்துக்கொள்ளாது, ஓரளவு விட்டுப் பிடித்தால் சிறப்பாக இருக்குமல்லவா” என்று கூறினார்கள். பின்னர் மீண்டும் என்னைப் பற்றிய சிந்தனை என்னில் பலம் பெற்றது. யாரையும் சந்திக்காமல் மீண்டும் தனிமையை நாடினேன். அப்போது மூன்றாவது முறையாக நாடுகடத்தி அங்கிருந்து பார்ளாக் கிராமத்துக்கு அனுப்பி வைத்தார்கள். பார்ளாவிலும் எப்போதெல்லாம் என்னை மாத்திரம் சிந்திக்க ஆரம்பித்தேனோ அப்போதெல்லாம் ஏதோ ஏவிவிடப்பட்டதைப் போன்று யாராவது ஓர் உலகாயுதவாதியின் அல்லது முனாஃபிக்கின் தொந்தரவுக்கு ஆளாகினேன். கடந்த எட்டு வருடங்களில் இது போன்ற எண்பது நிகழ்வுகளைக் கூற முடியும். அலுப்புத் தட்டாதிருப்பதற்காக இத்தோடு சுருக்கிக்கொள்கிறேன். என்னுடைய சகோதரர்களே என்னுடைய தலைக்கு வந்த சில இறை கண்டிப்புகளைக் கூறினேன். நீங்கள் அனுமதி தந்து ஹலாலும் செய்துகொள்வீர்கள் என்றால் நீங்கள் எதிர்கொண்ட சில நிகழ்வுகளையும் கூறுகிறேன். தர்மசங்கடப்படத் தேவையில்லை. தர்மசங்கடமாக இருந்தால் பெயர்களை நீக்கிவிடுகிறேன்.

§3

எனது சொந்தச் சகோதரனும் தியாகத்தில் உயர்ந்த முதன்மை மாணவனுமாகிய அப்துல் மஜீதுக்கு வான் நகரில் அழகான ஒரு வீடு இருந்தது. நல்ல வசதியும் வாய்ப்பும் உள்ள ஓர் ஆசிரியராக அவர் இருந்தார். அப்போது குர்ஆனியப் பணிக்கு மிகவும் உகந்த ஒரு பிரதேசமாக விளங்கிய அந்தப் பகுதிக்கு என்னை அழைத்துச் செல்வதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்ட சகோதரர்களுக்கு அவருடைய இஜ்திஹாதின் பிரகாரம் எனது நலவைக் கருத்திற்கொண்டு ஒத்துழைப்பு வழங்காதிருந்துவிட்டார். ஏதோ நான் அங்கு சென்றால் இந்தப் பணி அரசியல் கலப்படமாகித் தூய்மையிழப்பதற்கான வாய்ப்பிருப்பதாகவும் அதற்கான முஸ்தீபுகளில் இறங்கினால் அவர் அந்த நகரிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்பிருப்பதாகவும் கருதினார். ஆனால் அவருடைய எதிர்பார்ப்புக்கு மாற்றமான ஒன்று இறை கண்டிப்பாக அவரை வந்தடைந்தது. வான் நகரிலிருந்தும் அந்த அழகிய வீட்டிலிருந்தும் வெளியேறி எர்கெனி என்ற பிரதேசத்துக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்.

§4

இந்தக் குர்ஆனியச் சேவையில் மிக முக்கியமான ஒரு தூணாக இருக்கும் ஹுலூஸி பாய் ஏர்திர் நகரிலிருந்து தனது ஊருக்குச் சென்ற வேளை அங்கு நிம்மதியான ஓர் உலக வாழ்வைக் கட்டியெழுப்புவதற்கு உகந்த வாய்ப்புகள் காணப்பட்டதால் முற்றிலும் மறுமை சார்ந்த இந்தக் குர்ஆனியப் பணியில் தளர்வை ஏற்படுத்தக்கூடிய காரணிகள் ஓரளவு களைகட்ட ஆரம்பித்தன. ஒருபக்கம் நீண்டகாலம் காணாதிருந்த பெற்றோரையும் சொந்த மண்ணையும் காண்கிறார். மறுபக்கம் கண்ணியத்தோடும் உயர் அந்தஸ்துகளோடும் சென்றதால் உலகம் அவரைப் பார்த்துப் புன்னகைத்தது. ஆனால் குர்ஆனியப் பணியில் ஈடுபடுவதாக இருந்தால் ஒன்றோ உலகம் அவரைப் பார்த்து முகம் சுளிக்கும். அல்லது அவர் உலகத்தைப் பார்த்து முகம் சுளிக்க வேண்டும். அப்போதுதான் இஹ்லாஸுடனும் உண்மையாகவும் இந்தப் பணியில் ஈடுபட முடியும். ஆம், ஹுலூஸியுடைய உள்ளம் உண்மையில் தடுமாற்றமில்லாத உள்ளமாகவே இருந்தது. ஆனால் மேற்படி சூழ்நிலை அவரிடம் ஒரு வகையான தளர்வை ஏற்படுத்திய வேளை கருணை வடிவிலான ஒரு கண்டிப்புக்கு ஆளானார். ஓரிரண்டு வருடங்கள் தொடர்ச்சியாக சில முனாபிக்களின் தொல்லைகளுக்கு ஆளாகினார். அவர்கள் அவருடைய உலக நிம்மதியை முழுமையாகக் குழைத்துவிட்டார்கள். உலகத்தை அவரைப் பார்த்தும் அவரை உலகத்தைப் பார்த்தும் முகம் சுளிக்கச் செய்தார்கள். அப்போது இந்த ஆத்மீகப் பணியை இன்னும் உறுதியாகவும் உளப்பூர்வமாகவும் அரவனைத்துக்கொண்டார்.

§5

முஹாஜிர் ஹாஃபிஸ் அஹமத் தன்னுடைய வார்த்தைகளிலேயே தனக்கு நிகழ்ந்ததைக் கூறுகிறார்: ஆம், இந்தக் குர்ஆனியச் சேவையில் -மறுமைக் கண்ணோட்டத்தின் அடிப்படையில்- நான் செய்த இஜ்திஹாதில் தவறிழைத்தேன். இந்தப் பணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு விடயத்தை ஆசித்தேன். முடிவில் அதற்குக் பாவப்பரிகாரமாக அமையக் கூடிய வகையில் அன்பானதும் அதே அளவு கடுமையானதுமானதுமான ஒரு இறை கண்டிப்புக்கு ஆளானேன். அதாவது உஸ்தாத் அவர்கள் துருக்கி மொழியில் அதான் கூறுவது போன்ற ஷரீஅத்துக்கு முற்றிலும் மாற்றமான பித்அத்களுக்கு முற்றிலும் எதிராக இருந்தார்கள். நான் இமாமாக இருந்த பள்ளிவாசலோ உஸ்தாதுடைய வீட்டோடு பக்கத்தில் இருந்தது. அப்போது சங்கைமிக்க மூன்று மாதங்கள் நெருங்கிக்கொண்டிருந்தன. பள்ளிவாசலைத் துறந்தால் எனக்கும் ஏராளமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போவதோடு மஹல்லாவாசிகளும் தொழுகையை விடுவதற்குப் பழக்கப்படுவார்கள். பித்அத்களைச் செய்யாமல் உறுதியாக இருந்தால் பணி நீக்கம் செய்யப்படுவேன் என்ற நிலையில் உஸ்தாத் அவர்களுக்கு விருப்பமில்லாத ஓர் இஜ்திஹாதை சரி கண்டேன். மாத்திரமன்றி உஸ்தாதின் முன்னிலையில் உஸ்தாதுக்கு விருப்பமில்லாத ஒன்றை செய்ய விரும்பாததால் நான் உயிரைவிட நேசித்த உஸ்தாத் அவர்களைக் குறுகிய காலத்துக்கு வேறொரு பிரதேசத்துக்கு அனுப்ப விரும்பினேன். உஸ்தாத் இடம் மாறி வேறொரு பிரதேசத்துக்குச் சென்றால் இந்தப் பணியில் பின்னடைவு ஏற்பட்டுவிடுமே என்பதை சிந்திக்கவில்லை. சரியாக அந்தச் சமயம் அன்பான ஆனால் மிகக் கடுமையான ஒரு கண்டிப்புக்கு ஆளானேன். மூன்று மாதங்களாகியும் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து முழுமையாக சுதாகரித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், உஸ்தாத் அவர்களுக்குத் திட்டவட்டமான முறையில் ஏற்பட்ட உதிப்பின் பிரகாரம் அந்த முஸீபத்தின் ஒவ்வொரு நிமிடமும் ஒரு நாள் இபாதத்துடைய அந்தஸ்த்தைக் கொண்டதாக அமையும் என்பதில் அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் ஆதரவு வைத்துள்ளேன். ஏனெனில் அந்தத் தவறு ஒரு மோசமான எண்ணத்தில் ஏற்பட்டதல்ல. மாறாக என்னுடைய மறுமையை மாத்திரம் சிந்தித்த காரணத்தினாலேயே அப்படியான ஓர் எண்ணம் தோன்றியது.

§6

ஹக் எபெந்தி எதிர்கொண்ட ஒரு நிகழ்வாகும். அவர் இப்போது இங்கு இல்லாததால் ஹுலூஸியுடைய விடயத்தில் நானே வக்கீலாகப் பேசியதைப் போன்றே இவருடைய விடயத்திலும் பேசுகிறேன். ஹக் எபெந்தி ஒரு குர்ஆனிய மாணவனாகத் தனது சேவையைச் சிரமேற்கொண்டு சிறப்பாக செய்துகொண்டிருந்த சமயம் ஒழுக்கம், நீதி, நேர்மை என்று எதுவுமே இல்லாத ஒருவர் அந்தப் பிரதேசத்தில் ஆளுனராக நியமனம் பெற்றார். ஹக் எபெந்தி தனது உஸ்தாதுக்கும் தனக்கும் அவரால் ஆபத்துகள் வந்துவிடக் கூடாது என்பதற்காக தான் எழுதியவைகளை ஒழித்துவிட்டுத் தற்காலிகமாக புனிதமான இந்தக் குர்ஆனியப் பணியிலிருந்து ஒதுங்கிக்கொண்டார். அந்த சமயம் எதை நினைத்து அஞ்சினாரோ அதுவே அவரது தலைக்கு வந்தது. -கருணை வடிவிலான ஒரு கண்டிப்பாக- சம்பந்தேமே இல்லாமல் ஆயிரம் லீராக்களை தண்டப் பணமாகக் கட்ட வேண்டிய ஒரு வழக்கு அவர் மீது தொடுக்கப்பட்டது. ஒரு வருடம் அந்த அச்சுறுத்தல் தொடர்ந்தது. அந்த நிலையில் இங்கு வந்து மீண்டும் இந்தச் சேவகத்தில் முழு மூச்சாக இறங்கினார். அதைத் தொடர்ந்து அந்தக் கண்டிப்புக்கான காரணியும் நீங்கிவிட்டதால் நிரபராதியாக அறிவிக்கப்பட்டு அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் குர்ஆனின் எழுத்துகளிலும் சொற்களிலும் வெளிப்படையாகத் தோன்றும் தவாஃபூக் வகையைச் சேர்ந்த அற்புதங்களை வெளிப்படுத்தும் அமைப்பில் குர்ஆனை எழுதும் பணி ரிஸாலே நூர் மாணவர்களுக்கு முன்னால் வந்தது. அதில் ஹக் எபெந்திக்கும் பொறுப்புகள் வழங்கப்பட்டன. அவர் அந்தப் பொறுப்பையும் சிறப்பாக நிறைவேற்றி ஒரு ஜுஸ்உவை அழகாக எழுதி முடித்தார். ஆனால் வாழ்வாதாரத் தேவை காரணமாக நிர்ப்பந்தமாகக் கருதி வழக்கறிஞராகத் தொழில் முயற்சியில் இறங்குவதற்கான முஸ்தீபுகளில் இறங்கினார். அப்போது மீண்டும் உடனடியாக ஒரு கருணைக் கண்டனத்துக்கு ஆளானார். பேனா பிடிக்கும் அவருடைய விரலில் தற்காலிகமான ஒரு முறிவு ஏற்பட்டது. இந்த விரலால் வழக்கு வேலைகளையும் குர்ஆனையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாது என்பதை அந்த முறிவு சூசகமாக அவருக்கு உணர்த்தியது. நாம் அப்போது அவருடைய அந்த முன்னெடுப்புகளை அறியாதிருந்த காரணத்தினால் இத்தகைய மகத்தான ஒரு பணியில் ஈடுபட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஒரு முறிவு ஏற்பட்டதையிட்டு வியப்பில் ஆழ்ந்தோம். பின்னர்தான் இந்தப் புனிதமான, தூய குர்ஆனியப் பணி தனக்கென்று அர்ப்பனமான தூய கரங்களை வேறொரு பணியில் ஈடுபடுத்த அனுமதிக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்டோம். ஹூலூஸியை என்னைப் போன்ற ஒருவராகவே பார்க்கிறேன். எனவே அவருக்குப் பதிலாகப் பேசினேன். ஹக் எபென்டியையும் அவ்வாறே பார்க்கிறேன். இது பொருத்தமாக இல்லாவிட்டால் அவருடைய வார்த்தைகளிலேயே எழுதச் சொல்லுங்கள்.

§7

bபெகிர் எபெந்தியுடைய ஒரு சம்பவமாகும். அவரும் தற்போது அருகில் இல்லாததால் எனது சகோதரன் அப்துல் மஜீதுக்கு வக்கீலாக நின்று எழுதியதைப் போன்று அவர் மீதுள்ள பரஸ்பர நம்பிக்கையில் நம்பிக்கை வைத்தவனாகவும் அருகில் இருக்கும் ஷாமைச் சேர்ந்த ஹாஃபிஸ் மற்றும் சுலைமான் எபெந்தி ஆகியோர் அவரிடமிருந்து அறிந்துகொண்டவற்றை அடிப்படையாகவும் வைத்து இதை எழுதுகிறேன். பெகிர் எபெந்தி பத்தாவது வார்த்தையைத் தனது அச்சகத்தில் அச்சிட்டிருந்தார். நாம் குர்ஆனிய அற்புதங்கள் தொடர்பான இருபத்தைந்தாவது வார்த்தையையும் லத்தீன் எழுத்து சட்டம் அமுலுக்கு வர முன்னர் அச்சிட்டுக்கொள்வதற்காக அவருக்கு அனுப்பி வைத்தோம். பத்தாவது வார்த்தைக்கான அச்சக செலவை அனுப்பியதைப் போன்று இதற்கான செலவையும் அனுப்புவதாகவும் தகவல் அனுப்பினோம். அவர் நானூறு லீராக்கள் செலவாகும் என்று கணக்குப்போட்ட பின்னர் என்னுடைய வறுமை நிலையையும், தானே பணத்தைப் போட்டால் அதை நான் விரும்பமாட்டேன் என்பதையும் அடிப்படையாக வைத்து அச்சிடாமல் வைத்துவிட்டார். உண்மையில் அவருடைய நஃப்ஸ் அவரை ஏமாற்றிவிட்டது. அது உண்மையில் இந்தப் பணிக்குப் பாரிய ஓர் இழப்பாக அமைந்துவிட்டது. இரண்டு மாதத்தில் சரியாக அவருடைய நானூறு லீராக்கள் திருட்டுப் போனது. இந்தக் கண்டிப்பு அவருடைய விடயத்தில் சற்றுக் கடுமையானதாகவும் அமைந்துவிட்டது. இன்ஷா அல்லாஹ் அந்தப் பணம் ஸதகாவாக எழுதப்பட்டிருக்கும்.

§8

ஷாமைச் சேர்ந்த ஹாஃபிஸ் தௌபீக் உடைய சம்பவமாகும். அவருடைய வார்த்தைகளிலே கேளுங்கள்: ஆம், நான் அறிவீனத்தாலும் தவறான கணிப்பாலும் குர்ஆனியப் பணிக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயற்பட்ட காரணத்தினால் இரண்டு இறை கண்டிப்புகளுக்கு ஆளானேன். அவை இரண்டும் இந்தக் காரணத்துக்கானவையே என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை. முதலாவது: லில்லாஹில்ஹம்த், அரபு மொழியில் என்னுடைய கையெழுத்து குர்ஆனை எழுதுவதற்கு ஓரளவு உகந்த அமைப்பில் அருளப்பட்டிருந்தது. உஸ்தாத் அவர்கள் ஆரம்பமாக மூன்று ஜுஸ்உகளை எனக்கும் ஏனையவற்றைப் பிறருக்கும் பகிர்ந்தளித்தார். குர்ஆனை எழுதுவதற்கான தாகம் ரிஸாலே நூரை எழுதுவதற்கும் ஒழுங்குபடுத்துவதற்குமான ஆர்வத்தைக் குறைத்துவிட்டது. மாத்திரமன்றி அரபியில் எழுத முடியாத ஏனைய சகோதரர்களைவிட என்னை சற்று உயர்வாக எண்ணி ஒரு வகையான அகங்காரத்துடன் இருந்தேன். அந்த சந்தர்ப்பத்தில் உஸ்தாத் அவர்கள் இந்த எழுத்துப்பணி தொடர்பாக சில ஆலோசனைகளை வழங்கிய போது “நான் இதை அறிவேன். இந்த விடயத்தில் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை எனக்கில்லை” என்ற அர்த்தப்பட “இந்த வேலை எனக்குரியது” என்று கூறினேன். இதோ இந்தத் தவறின் காரணமாக அரபிக் கையெழுத்தில் மிகப் பலவீனமான ஒரு சகோதரனைக் கூட (ஹுஸ்ரெவ்) என்னால் முந்த முடியவில்லை. என்னுடைய இந்த நிலையையிட்டு எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள். பின்னர் அது ஒரு கண்டிப்பாகும் என்பதைப் புரிந்துகொண்டேன். இரண்டாவது: குர்ஆனியப் பணியில் அல்லாஹ்வுக்காக மாத்திரம் பூர்த்தியான இஹ்லாஸோடு ஈடுபடுவதற்கு என்னுடைய இரண்டு நிலைமைகள் தடையாக இருந்தன. இதனால் கடுமையான ஓர் இறை கண்டிப்புக்கு ஆளானேன். இந்த ஊரில் எனக்கென்று உறவுகள் யாரும் இல்லை. அத்தோடு உஸ்தாத் அவர்கள் ஒரு கொள்கையாகவே பேணி வருகின்ற சிக்கனம், மனத் திருப்தி போன்ற உயர் விழுமியங்களைக் கடைப்பிடிக்காத காரணத்தினால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டேன். இதை யாரும் முறைப்படுவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அகம்பாவமும் சுயநலமும் மிக்க மனிதர்களுக்கு மத்தியில் அதிகம் புழங்க வேண்டிய நிலமை காணப்படுவதால் -அல்லாஹ் மண்ணித்துக்கொள்வானாக!- துணிச்சலோடு முஹஸ்துதியிலும் கண்ணியத்தை அடகு வைக்கும் பாசாங்குகளிலும் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானேன். உஸ்தாத் அவர்கள் பல தடவை என்னை இந்த விடயத்தில் எச்சரித்தார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த நிலையிலிருந்து வெளியேற முடியாதவனாக இருந்தேன். சங்கைமிக்க குர்ஆனியப் பணியின் ரூஹோடு ஒன்றித்துப் போகாத இந்த நிலைமை மனித, ஜின் ஷைத்தான்களின் வேலைக்கு ஆகியதைப் போன்றே எமக்கு மத்தியில் ஒரு வகையான மந்த நிலை உருவாவதற்கும் பின்னடைவுக்கும் காரணியாக அமைந்தது. இந்த நிலையில் நான் எனது இந்தத் தவறுக்குப் பகரமாக கடுமையான ஒரு தண்டனையைப் பெற்றுக்கொண்டேன். இன்ஷா அல்லாஹ் அது ஒரு கருணைக் கண்டனமாகவே இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நான் எட்டு வருடங்களாக உஸ்தாதுடைய அருகில் எல்லாப் பாடங்களிலும் பங்கேற்பவனாகவும் அவற்றை எழுதுபவனாகவும் எழுதப்பட்டவற்றைத் திருத்துபவனாகவும் இருந்த நிலையில் கடந்த எட்டு மாதங்களாக அவை என்னில் எவ்வித தாக்கங்களையும் உணர்வுகளையும் ஏற்படுத்தாதிருந்தது. இது என்னை அதிக சிந்தனையில் ஆழ்த்தியது. உஸ்தாத் அவர்களிடம் கூறிய போது இருவரும் இதற்கான காரணத்தை சிந்தித்தோம். பின்னர் இந்த விடயத்துக்குப் பின்னாலுள்ள உண்மையைத் தெளிவாகக் கண்டுகொண்டோம். அதாவது அந்தக் குர்ஆனிய சத்தியங்கள் ஒளியாகும். அந்த ஒளி பொய்யான நடத்தைகள், முகஸ்துதி, பாசாங்கு, கண்ணியத்தை அடகு வைத்தல் போன்ற இருள்களோடு ஒன்றிணைவதில்லை. எனவே அந்த சத்திய ஒளியின் அர்த்தங்கள் என்னில் பிரதிபலிக்காமல் ஏதோ அன்னியமான ஒருவனைக் கண்டதைப் போல் என்னைவிட்டும் தூரமாகிக்கொண்டிருந்தன. நான் இந்த குர்ஆனியப் பணிக்கும் குர்ஆனிய சத்தியங்களுக்கும் அருகதையுள்ள ஒருவனாக இருப்பதற்காகப் பிரார்த்திக்கிறேன். ஆரம்பமாக உஸ்தாதிடமும் சகோதரர்களிடமும் எனக்காககப் பிரார்த்திக்குமாறு தயவாகக் கேட்டுக்கொள்கிறேன். குறைகள் நிறைந்த மாணவன் ஷாமைச் சேர்ந்த ஹாஃபிஸ் தவ்ஃபீக்

§9

ஸைரானியுடன் தொடர்பான நிகழ்வாகும். இவரும் ஹுஸ்ரவைப் போன்று ரிஸாலே நூரைத் தாகத்தோடும் ஆர்வத்தோடும் படிக்கின்ற என்னுடைய மாணவர்களுள் ஒருவராவார். குர்ஆனிய இரகசியங்களின் ஒரு திறவுகோலாகவும் இல்முல் ஜிஃப்ருடைய பிரதானமான ஒரு திறவுகோலாகவும் உள்ள தவாஃபூகாத் விடயத்தில் இஸ்பார்த்தா நகரிலுள்ள மாணவர்களின் கருத்துகளைக் கோரியிருந்தேன். அவர் வேறொரு விடயத்தில் ஈடுபாடு காட்டியதால் இதற்கு ஒழுத்துழைப்பு வழங்க மறுத்ததோடு மாத்திரம் நின்றுவிடாமல் என்னையும்கூட நான் திட்டவட்டமாக அறிந்து வைத்திருந்த இந்த உண்மையிலிருந்து திசை திருப்புவதற்கும் தடுத்து நிறுத்துவதற்கும் முயற்சித்தார். மிகவும் கடுமையாக என்னை நிந்தனை செய்யக்கூடிய ஒரு கடிதமும் எழுதினார். நான் “ஒரு மாணவனை இழந்துவிட்டேனே” என்று மிகவும் கவலையடைந்தேன். பின்னர் உண்மையாகவே அவருடைய கருத்தில் உள்ள கோளாறை சீர் செய்ய முயற்சித்தேன். இடையில் இன்னொரு விடயமும் குறுக்கிட அதற்குள் அவர் ஒரு கருணைப் பிடிக்குள் மாட்டிக்கொண்டார். ஒரு வருடம் சிறைச்சாலையில் கல்வத்தில் இருக்க நேரிட்டார்.

§10

ஹாஃபிஸ் ஸுஹ்து உடன் தொடர்பான ஒரு நிகழ்வாகும். இவர் ஆருஸ் நகரிலுள்ள ரிஸாலே நூர் மாணவர்களுக்கு மத்தியில் பொறுப்பான ஓர் ஸ்தானத்தில் இருந்த சமயம் மேலான சுன்னாக்களுக்கு வழிப்படுவதையும் புதிது புதிதாகத் தோன்றும் நூதனங்களுக்குத் தலைசாய்க்காதிருப்பதையும் தம்முடைய பாதையாகக் கொண்டிருந்த அந்த மாணவர்களுடன் இருந்து அவர்களுக்குக் கிடைக்கின்ற உன்னதமான ஆத்மீக அந்தஸ்துகளில் திருப்தி காணாமல் உலகாயுதவாதிகளுக்கு மத்தியிலும் ஓர் இடத்தைப் பிடித்துக்கொள்வதற்காக மிகவும் பாரதூரமான ஒரு நூதனத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்ற வேலையில் ஈடுபட்டார். இவ்வாறு எமது பாதைக்கு முற்றிலும் முரணான ஒரு தவறைச் செய்தார். பின்னர் அதே அளவு பாரதூரமான ஓர் இறை கண்டனத்துக்கு ஆளானார். தன்னுடைய குடும்ப கண்ணியத்தைச் சீரழிக்கக்கூடிய ஒரு நிகழ்வில் மாட்டிக்கொண்டார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் பாரதூரமான நிகழ்வு எவ்விதக் காரணங்களும் இல்லாத நிலையில் சிறிய ஹாஃபிஸ் ஸுஹ்துவையும் தீண்டியது. இன்ஷா அல்லாஹ் இந்த நிகழ்வு அவருடைய உள்ளத்தை உலகத்திலிருந்து திருப்பி முற்று முழுதாகக் குர்ஆனுக்காக அர்ப்பணிப்பதற்கான ஓர் சத்திரசிகிச்சையாக அமைந்திருக்கும் என்று ஆசிக்கிறோம்.

§11

ஹாஃபிஸ் அஹ்மத் (ரஹ்) என்ற பெயரை உடைய ஒருவரின் சம்பவமாகும். இவர் ரிஸாலே நூரை எழுதும் பணியில் இரண்டு மூன்று வருடங்கள் மிகவும் ஆர்வமாக ஈடுபட்டதோடு அதனால் அதிக பயனடைபவராகவும் இருந்தார். பின்னர் உலகாயுதவாதிகள் அவருடைய நலிவான ஒரு பக்கத்தைப் பயன்படுத்தி விளையாட ஆடம்பித்த போது அவரிடமிருந்த உற்சாகம் குறைந்தது. அவர்களுடனான தொடர்புகளை அதிகரித்துக்கொண்டார். அவர்களுடைய தொந்தரவுகளிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வதற்கும் அவர்களுக்கு மத்தியில் ஒரு பதவியைப் பெற்றுக்கொள்வதற்கும் குறைவாக இருந்த தனது வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவதற்குமானன ஒரு வாய்ப்பாகவும் அதைப் பார்த்தார். இதனால் குர்ஆனியப் பணிகளில் ஏற்பட்ட பின்னடைவு அவருக்கு ஏற்பட்ட இரண்டு கண்டனங்களுக்குக் காரணியாக அமைந்தது. முதலாவது: குறைவான வருமானத்துடன் கூடவே அவருடைய குடும்பத்தில் திடீரென்று ஐந்து உறுப்பினர்கள் அதிகரித்தார்கள். அவருடைய வறுமையும் கஷ்டங்களும் பல மடங்கு அதிகரித்தன. இரண்டாவது: கண்ணியம், மரியாதை விடயத்தில் மிகவும் கராரான அவர் யாருடைய நன் மதிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக சிரத்தை எடுத்துக்கொண்டாரோ அவர்களுக்கு மத்தியில் உள்ள சிலரின் சூழ்ச்சியால் அவர்களுக்கு மத்தியிலேயே பல பேர் முன்னிலையில் அவமானப்பட்டார். அவருடைய மரியாதையும் கௌரவமும் காலடியில் மிதிக்கப்பட்டன. அவர்களுக்கு மத்தியில் தொண்ணூறு வீதமானவர்கள் அவருக்கு எதிராக மாறிவிட்டார்கள். எப்படியோ, அல்லாஹ் அவரை மண்ணித்துக்கொள்வானாக. இன்ஷா அல்லாஹ் அவர் நல்லுணர்வு பெற்று மீண்டும் பகுதியளவாவது தனது பணிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று ஆசிக்கிறோம்.

§12

குறித்த நபரின் பொருத்தம் இல்லாத காரணத்தால் எழுதப்படவில்லை.

§13

முஅல்லிம் காலிப் (ரஹ்) அவர்களுடன் தொடர்பான ஒரு நிகழ்வாகும். இவர் மிகவும் விசுவாசமாகவும் பாராட்டத்தக்க விதத்திலும் ரிஸாலே நூருடைய எழுத்துப் பணிகளில் அர்ப்பனத்தோடு ஈடுபட்டார். எல்லாவிதமான கஷ்ட நஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் எந்தத் தளர்வுமின்றி தனது பணிகளைத் தொடர்ந்து வந்தார். பெரும்பாலான நாட்கள் இங்கு வந்து கலந்துரையாடல்களிலும் கலந்துகொள்வார். ஒரு சமயம் தனது ஊர் மக்களும் பயனடைய வேண்டும் என்ற நன் நோக்கில் அதுவரை எழுதப்பட்ட எல்லா வார்த்தைகளையும் கடிதங்களையும் முப்பது லீராக்களைக் கொடுத்து எழுதி எடுத்துக் கொண்டார். பின்னர் அவருடைய உள்ளத்தில் தோன்றிய சில எண்ணங்கள் காரணமாக எழுதப்பட்ட எதையும் தனது ஊரில் பகிராமல் மறைத்துவிட்டார். அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிகவும் துக்ககரமான ஒரு நிகழ்வால் ஒரு வருடம் மிகவும் கவலைக்கிடமான நிலைக்குத் தள்ளப்பட்டார். ரிஸாலே நூரைத் தனது ஊரில் பகிர்வதன் மூலம் சம்பாதித்துக்கொள்ள வேண்டி ஏற்படுமே என்று அஞ்சிய ஒரு சில அரச எதிரிகளுக்குப் பதிலாக மிகவும் ஈவிரக்கமற்ற ஏராளமான எதிரிகளைக் குறுகிய காலத்துக்குள் சம்பாதித்துக்கொண்டார். பல்வேறு நல்ல நண்பர்களையும் கூட இழக்க வேண்டிய நிலமைக்கு ஆளானார்.

§14

ஹாஃபிஸ் ஹாலித் (ரஹ்) அவர்களுடைய நிகழ்வாகும். அவருடைய வார்த்தைகளிலேயே கேளுங்கள்: ஆம், உஸ்தாத் அவர்கள் குர்ஆனியப் பணிக்காக எழுதிய இந்த ஈமானியப் பொக்கிஷங்களை எழுதுகின்ற பணிகளில் மிகவும் உத்வேகத்தோடு ஈடுபட்டுக்கொண்டிருந்த சமயம் எமது மஹல்லாவிலுள்ள பள்ளிவாசலில் உத்தியோகபூர்வ இமாமாகவும் பணியில் சேர்க்கப்பட்டேன். அப்போது ஆலிம்களுக்கான ஆடையை அணிந்து தலைப்பாகையைக் கட்டுகின்ற ஆவலில் தற்காலிகமாக இந்தப் பணிகளை ஒத்தி வைத்தேன். ஆனால் எவ்வளவு முயன்றும் எனது நோக்கம் நிறைவேறவில்லை. ஒன்பது மாதங்கள் இமாமாக இருந்த போதிலும் அப்போதைய சூழ்நிலையில் பிரதேச முஃப்தி அவற்றை அணிவதைவிட்டும் தொடர்ந்தும் என்னைத் தடுத்தார். இது என்னுடைய தவறான முடிவுக்குக் கிடைத்த ஓர் இறை கண்டிப்பு என்பதில் எனக்கு எவ்வித சந்தேகங்களும் இல்லை. நான் உஸ்தாதுடைய மாணவராகவும் எழுத்தாளராகவும் இருந்தேன். நான் ஒதுங்கிய பின்னர் எழுத்துப் பணிகளில் உஸ்தாத் அவர்கள் மிகவும் பின்னடைவை எதிர்நோக்கியிருந்தார்கள். எப்படியோ.. அல்லாஹ்வுக்கே புகழனைத்தும், எனது தவறை உணர்ந்து கொண்டேன். இந்தப் பணி எவ்வளவு புனிதமானது என்பதையும் எமக்குப் பின்னாலும் ஷாஹ் ஜைலானி போன்ற ஓர் உஸ்தாத் இருப்பதையும் உறுதியாகக் கண்டுகொண்டேன். அல்லாஹ்வின் மிகப் பலவீனமான அடியான் ஹாஃபிஸ் ஹாலித்

§15

மூன்று முஸ்தஃபாக்ளுடைய நிகழ்வுகளாகும். முதலாவது: முஸ்தஃபா ஷவுஸ் (ரஹ்) அவர்களுடைய நிகழ்வாகும். இவர் எட்டு வருடங்களாக எமது சிறிய பள்ளிவாசலின் சூட்டடுப்பு, விளக்கு என்பன முதல் அவற்றுக்குத் தேவையான மண்ணெண்ணெய், தீக்குச்சி போன்ற தேவைகள் வரை அனைத்தையும் பொறுப்போடு பராமரித்து வந்தார். பராமரிப்பதற்கு அப்பால் மண்ணெண்ணெய், தீக்குச்சி போன்றவற்றுக்கான செலவுகளையும் தனது சொந்தப் பணத்திலிருந்தே செலவு செய்துள்ளார் என்பதைப் பின்னரே அறிந்துகொண்டோம். தவிர்க்க முடியாத நிலைமைகள் இல்லாவிட்டால் ஜமாஅத்தை, குறிப்பாக ஜும்மா இரவுகளை என்றுமே தவறவிடுவதில்லை. இந்த சந்தர்ப்பத்தில் அரசின் நூதனமான நடவடிக்கைகளுக்குத் தாளம் போடுகின்ற சில உலகாயுதவாதிகள் அவருடைய நயவஞ்சகமற்ற உள்ளத்தைப் பயன்படுத்தி விளையாட முயன்றார்கள். “ரிஸாலே நூரை எழுதும் ஹாஃபிஸுடைய தலைப்பாகையில் கைவைக்கப் போகிறார்கள். எதற்கும் ஏதேனும் விபரீதங்கள் நிகழ முன்னர் நீங்களே விடயத்தை ஹாஃபிஸிடம் எத்தி வைப்பதோடு தலைப்பாகையைக் கழட்டிக்கொள்ளுமாறு சொல்லி வைத்தால் நல்லது. அத்துடன் உள் வீட்டில் அவர் இரகசியமாகக் கூறும் அதானையும் நிறுத்திக்கொள்வது இப்போதைக்கு நல்லது” என்று கூறிச் சென்றார்கள். அவர் குர்ஆனுக்கு சேவகம் செய்கின்ற பணியில் உள்ள ஒருவரின் தலைப்பாகையைக் கழட்டுவதற்கான கட்டளையை எத்தி வைப்பது முஸ்தபா ஷவுஸ் போன்ற உயர்ந்த ஓர் ஆத்மாவுக்கு மிகவும் சுமையானது என்பதை அறியாமல் அந்தத் தவறை செய்தார். அன்றைய இரவு முஸ்தபா ஷவுஸ் அழுக்குப்படிந்த கரங்களோடு நகர மேயரின் பின்னால் எனது அறைக்குள் நுழைவதைக் கனவில் கண்டேன். அடுத்த நாள் காலை அவரைச் சந்தித்த போது கனவு விடயத்தைக் கூறி “நேற்று யாரைச் சந்தித்தீர்கள்?” என்று கேட்டேன். அப்போதுதான் அவர் தான் செய்த செயலின் பாரதூரத்தை உணர்ந்துகொண்டார். கிராம சேவகர் தன்னிடம் கூறியவற்றையும் அதன் உண்மை நிலையைத் தான் அறியாதிருந்ததையும் கூறினார். அத்தோடு அன்றைய தினம் நிகழ்ந்த வியக்கத்தக்க ஒரு நிகழ்வையும் கூறினார். அப்போதே அவரும் அந்த நிகழ்வின் தாத்பரியத்தை உணர்ந்துகொண்டார். அதாவது, அன்றைய தினம் அவர் ஒன்றறை லீட்டர் வு மண்ணெண்ணெய்யைப் பள்ளியில் கொண்டு வந்து வைத்துள்ளார். வழமைக்கு மாறாக அன்றைய தினம் கதவைத் திறந்து வைத்துவிட்டுப் போயுள்ளார். அந்த சமயம் பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஓர் ஆட்டுக் குட்டி என்னுடைய முஸல்லாவுக்கு அருகில் மலம் கழித்துள்ளது. இதைக் கண்ட ஒரு பெரியவர் அந்த இடத்தைத் துப்புறவு செய்வதற்காக நீர் என்று நிணைத்து முஸ்தபா வைத்துவிட்டு வந்த மண்ணெண்ணெய்யை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். வியக்கத்தக்க விதமாக அவர் அதன் வாசத்தை உணரவில்லை. அதாவது அந்தப் பள்ளிவாசல் தன்னுடைய மெய்ம்மொழியால் முஸ்தபாவுக்கு “உன்னுடைய எதுவும் எனக்குத் தேவையில்லை. நீ செய்த தவறுக்காக உன்னுடைய மண்ணெண்ணெய்யை நான் ஏற்றுக்கொள்ளவில்லை” என்று கூறயது போல் அந்த சம்பவம் அமைந்திருந்தது. எனவேதான் அந்தப் பெரியவருக்கு அதன் வாசம் உணர வைக்கப்படவில்லை. அவ்வாறே அந்த வாரம் ஜும்மா இரவிலும் தொழுகைகளில் கலந்துகொள்வதற்கு கடும் பிரயத்தனம் செய்த போதிலும் அவரால் ஜமாத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. பின்னர் மிகவும் மன்றாடி இஸ்திஃபாரில் ஈடுபட்டபின்னர் தன்னுடைய முன்னைய நிலைக்கு மீண்டு வந்தார். இரண்டாவது: இரண்டு முஸ்தபாக்கள் எதிர்நோக்கிய சம்பவமாகும். மிகவும் தியாகத்தோடு உழைக்கின்ற எனது மாணவனான முஸ்தபாவும் அவருக்கு மிகவும் விசுவாசமான நண்பர் ஹாஃபிஸ் முஸ்தபாவும் (ரஹ்) குலே ஒனு என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். அருகில் என்பதால் அவ்வப்போது வந்து செல்வார்கள். தற்போது அரசு எம்மீதான நெருக்கடிகளை அதிகரித்துள்ள காரணத்தினால் எமது பணியில் எவ்விதப் பின்னடைவுகளும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பெருநாளைக்குப் பிறகு வர வேண்டாம் என்றும் அப்படியே வருவதாக இருந்தால் ஒவ்வொருவராக வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வருமாறும் அவர்களுக்கு ஏலவே தகவல் அனுப்பியிருந்தேன். ஆனால், ஓரிரவு இவர்கள் இருவரும் இன்னுமொருவரையும் சேர்த்துக்கொண்டு திடீரென்று இங்கு வந்தார்கள். நிலைமையைக் கருத்தில்கொண்டு காலநிலை சீராக இருந்தால் அதிகாலைக்கு முன்னரே இங்கிருந்து புறப்பட்டுச் செல்வதற்கு நிய்யத்து வைத்துக்கொண்டார்கள். அன்று வழமைக்கு மாறாக அவர்களோ அல்லது இங்கிருந்த முஸ்தபா ஷவுஸோ அல்லது ஸுலைமான் எஃபென்தியோ அல்லது நானோ அவர்களுடைய பயணத்துக்கான முன்னெச்சரிக்கைக்காக எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. ஒவ்வொருவரும் அடுத்தவருடைய தலையில் போட்டுவிட்டு அசட்டையாக இருந்துவிட்டோம். அல்லது மறக்கடிக்கச் செய்யப்பட்டோம். அவர்களும் அதிகாலைக்கு முன்னரே புறப்பட்டார்கள். அவர்கள் சரியாக அரைவாசித் தூரம் சென்ற பின்னர் அந்தப் பருவ காலத்தில் அதுவரை நாம் கண்டிராத பயங்கரமான ஒரு புயல் காற்று வீச ஆரம்பித்தது. இரண்டு மணித்தியாலங்கள் தொடராக வீசிய அந்தப் புயல் காற்று அவர்களைக் கடுமையாகப் பதம் பார்த்துவிட்டது. அவர்களுடைய பாதுகாப்பையிட்டு அதிகம் சிந்தித்தோம். நான் அது வரை யாருக்காகவும் அந்த அளவு வருந்தியிருக்கவில்லை. பின்னர் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்யாமைக்கான தண்டனையாக ஸுலைமானைப் பின்னால் அனுப்பி அவர்களுடைய நிலமையை அறிந்துகொள்ள எண்ணினேன். இதைக் கூறிய போது முஸ்தபா ஷவுஸ் “முன்னெச்சரிக்கையாக செயற்படாததில் எமக்கும் ஒரு பங்கு உள்ளது. எனவே ஸுலைமான் போனால் அவரும் மாட்டிக்கொள்வார். அப்போது அவரைத் தேடி நானும் பின்னர் என்னைத் தேடி அப்துல்லாஹ் ஷவுஸும் வர வேண்டி ஏற்படும்” என்று கூறினார். இறுதியில் தவக்கல்னா அலல்லாஹ் என்று கூறி அவர்களுடைய செய்திக்காகக் காத்திருந்தோம். கேள்வி: உற்ற தோழர்களுக்கு வரும் முஸீபத்களை குர்ஆனியப் பணியில் ஏற்படுகின்ற பின்னடைவுகளுக்கான இறை கண்டிப்புகள் என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்களுக்கும் குர்ஆனியப் பணிக்கும் உண்மையான எதிரிகளாக இருப்பவர்கள் நன்றாகவும் நலமாகவும் இருக்கிறார்கள். ஏன் நண்பர்கள் கண்டிக்கப்படுகின்ற போது எதிரிகள் விட்டுவைக்கப்படுகிறார்கள்? பதில்: ﺍَﻟﻈُّﻠْﻢُ ﻟﺎَ ﻳَﺪُﻭﻡُ ﻭَﺍﻟْﻜُﻔْﺮُ ﻳَﺪُﻭﻡُஎன்ற கூற்றின் ஒரு தாத்பரியத்துக்கமைய நண்பர்களின் தவறுகள் இந்தப் பணிக்குச் செய்கின்ற ஒரு வகையான அத்துமீறலாக, அநீதியாக இருப்பதால் விரைவாகவே கண்டனத்துக்கு ஆளாகிறார்கள். கருணை வடிவிலான அந்தக் கண்டனங்கள் இன்னும் புத்தி மழுங்காதவர்களுக்குத் தெளிவைக் கொடுக்கின்ற சாதனங்களாகும். எதிரிகளைப் பொருத்தவரை அவர்கள் இந்தப் பணிக்கெதிராக அறிந்தோ அறியாமலோ மேற்கொள்கின்ற எதிர்ப்பும் முட்டுக்கட்டைகளும் வழிகேடு, குஃப்ர் என்பவற்றின் கணக்கிலேயே சேர்க்கப்படுகின்றன. குஃப்ர் தொடர முடியும் என்பதால் அவர்கள் பெரும்பாலும் விரைவான கண்டனங்களுக்கோ தண்டனைகளுக்கோ ஆளாவதில்லை. சிறிய குற்றங்களுக்குப் பஞ்சாயத்திலும் பெரிய குற்றங்களுக்கு உயர் நீதிமன்றங்களிலும் தண்டனை வழங்கப்படுகின்றன. அவ்வாறே முஃமின்களும் உற்ற நண்பர்களும் இழைக்கின்ற சிறிய தவறுகளின் போது விரைவாக அவர்களைத் தூய்மைப்படுத்துவதற்காக இந்த உலகிலேயே உடனடியான கண்டனங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். வழிகேடர்களுடைய அக்கிரமங்களும் அத்துமீறல்களும் மிகப் பிரமாண்டமானவையாகும். அவற்றுக்கான தண்டனைகளை இந்த உலகம் தாங்காது என்பதால் அல்லது இந்த உலக வாழ்வுக்குள் உள்ளடக்க முடியாதவை என்பதால் நீதியின் வேண்டலுக்கமைய நித்திய உலகின் மாபெரும் தீர்ப்பு நாளுக்காக ஒத்தி வைக்கப்படுகின்றன. பெரும்பாலும் இந்த உலகத்தில் விட்டுவிடப்படுகின்றது. இந்த உண்மையை ﺍَﻟﺪُّﻧْﻴَﺎ ﺳِﺠْﻦُ ﺍﻟْﻤُﺆْﻣِﻦِ ﻭَﺟَﻨَّﺔُ ﺍﻟْﻜَﺎﻓِﺮِ என்ற ஹதீஸும் குறிப்பிடுகின்றது. அதாவது முஃமின்கள் இந்த உலகிலேயே தமக்குரிய தண்டனைகளுள் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்வதால் இந்த உலகம் அவர்களைப் பொருத்தவரை தண்டனைக்கான இடமாகும். அத்துடன் மறுமையில் அவர்களுக்குக் கிடைக்க இருக்கும் நித்திய நிம்மதிகள் நிறைந்த சுவன வாழ்வுடன் ஒப்பிடும் போதும் இது ஒரு சிறைச்சாலை அல்லது நரக வாழ்க்கையாகும். அவ்வாறே காபிர்கள் நரகத்தில் நிரந்தரமாகத் தங்கி இருக்கப் போகின்ற காரணத்தினாலும் தமது நலவுகளுக்கான பிரதிபலன்களுள் ஒரு பகுதியை உலகிலேயே கண்டுகொள்வதாலும் பெரிய குற்றங்களுக்கான தண்டனைகள் மறுமைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ள காரணத்தினாலும் அவர்களுடைய மறுமையுடன் ஒப்பிடும் போது இந்த உலகம் ஒரு சுவர்க்கமாகும். இல்லாவிட்டால் முஃமின் இந்த உலகத்திலும் உள ரீதியாகவும் ஆத்மீக ரீதியாகவும் காபிர்களைவிட மகிழ்ச்சியாகவே இருக்கிறான். முஃமினுடைய ஈமான் காரணமாக அவனுடைய உள்ளத்தில் எப்போதும் ஓர் ஆத்மார்த்தமான சுவனத்துத் தென்றல் வீசிக்கொண்டே இருக்கும். அது அவனது வாழ்வில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் கொடுத்துக்கொண்டிருக்கும். அவ்வாறே காபிருடைய குப்ர் அவனுடைய உள்ளத்தில் ஆத்மார்த்தமான ஒரு நரகத்தைப் பற்றி எரித்துக்கொண்டே இருக்கும். அது அவனுடைய இம்மை வாழ்வையும் மகிழ்ச்சியற்றதாக ஆக்கிவிடுகின்றது. سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters