(சகோதரன் ரஃபத்துடைய இரண்டு சிறிய கேள்விகளின் அடியாகத் தோன்றிய இரண்டு குர்ஆனியக் குறிப்புக்களுக்கான தெளிவுரையாகும்.) بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ اَلسَّلَامُ عَلَي۟كُم۟ وَ عَلٰى اِخ۟وَانِكُم۟ وَ رَح۟مَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ கண்ணியத்துக்குறிய விசுவாசமான சகோதரன் ரஃபத்துக்கு! பொருத்தமற்ற நேரத்தில் வந்து சேர்ந்த உங்களது இந்தக் கேள்விகள் என்னை சிக்கலுக்குள் தள்ளி விட்டது. இந்த முறை உங்கள் இரண்டு கேள்விகளும் உண்மையில் சிறிய விடயங்களாக இருப்பினும், இருவேறு குர்ஆனியக் குறிப்புக்களோடு தொடர்புபட்டவையாக இருப்பதாலும், குறிப்பாக பூமிப்பந்தோடு சம்பந்தப்பட்ட கேள்வியானது, வானவியலும் புவியியலும் ஏழு தட்டு வானங்கள், ஏழு தட்டுப் பூமிகள் என்ற குர்ஆனியக் கருத்துக்களை நிராகரிக்கின்ற விடயத்தோடு சம்பந்தப்பட்டதாக இருப்பதாலும் இவை எனக்கு முக்கியத்துவமிக்கவையாகத் தென்பட்டன. எனவே அறிவியல் ரீதியாகவும், குர்ஆனுடைய விசாலமான பார்வையை அடிப்படையாக வைத்தும் இரண்டு மறை வசனங்களின் பின்னணியில் இரண்டு குறிப்புக்கள் சுருக்கமாக விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Lem'alar
The Twelfth Gleam
“இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாகும்.”
ﻭَﻛَﺎَﻳِّﻦْ ﻣِﻦْ ﺩَٓﺍﺑَّﺔٍ ﻟﺎَ ﺗَﺤْﻤِﻞُ ﺭِﺯْﻗَﻬَﺎ ﺍَﻟﻠّٰﻪُ ﻳَﺮْﺯُﻗُﻬَﺎ ﻭَﺍِﻳَّﺎﻛُﻢْ ٭ ﺍِﻥَّ ﺍﻟﻠّٰﻪَ ﻫُﻮَ ﺍﻟﺮَّﺯَّﺍﻕُ ﺫُﻭ ﺍﻟْﻘُﻮَّﺓِ ﺍﻟْﻤَﺘِﻴﻦُ என்ற வசனங்களின் தெளிவின்படி ரிஸ்க்கானது நேரடியாக சர்வ வல்லமை மிக்க அல்லாஹ்வின் கைகளில் உள்ளதாகும். அந்த ரிஸ்க் அவனது ரஹ்மத் கஜானாக்களில் இருந்தே வெளிப்படுகின்றது. அதாவது தனித்தனி ஒவ்வொரு ஜீவராசியின் ரிஸ்க்கும் இறை உத்தரவாதத்துக்கு உற்பட்டுள்ளதால், ஆகாரமின்மையால் ஏற்படும் பட்டிணிச்ச்சாவு என்ற ஒரு விடயம் இல்லாதிருப்பது அவசியப்படுகின்றது. ஆனால், ஆகாரமின்றி பட்டிணியால் மரணிக்கும் ஏராளமான நிகழ்வுகளை எம்மால் காணமுடியுமாக உள்ளதே என்ற ஒரு கேள்வி எழுகின்றது. ஆம் மேற்கூறப்பட்ட வசனங்கள் கூற வருகின்ற செய்தி உண்மையானதாகும்; ஆகார விடயத்தில் இறை உத்தரவாதமானது சத்தியமானதாகும். ஆகாரமின்மையால் மரணம் ஏற்படுகின்றது என்ற விடயம் யதார்த்தத்தில் கிடையாது. ஏனெனில் சர்வ வல்லமை மிக்க இரட்சகன், ஜீவராசிகளின் உடலுக்கு அனுப்பி வைத்த ஆகாரங்களின் ஒரு பகுதியை முன்னெச்சரிக்கைக்காக உடலில் கொழுப்பாக சேமிக்கின்றான். எந்த அளவுக்கெனில் உடலிலிருக்கும் ஒவ்வொரு கலத்துக்காகவும் அனுப்பி வைத்த ஆகாரங்களின் ஒரு பகுதியை அந்தக் கலங்களிலேயே ஒரு மூலையில் சேமித்து வைக்கின்றான். எப்போதாவது வெளியிலிருந்து ஆகாரங்கள் தடைப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அவசரகால நிலமைகளை எதிர்கொள்வதற்கான ஒரு வகை முன்னேற்பாடாகவே அந்த ஆகாரத்தை அவ்வாறு சேமித்து வைத்துளான். ஆம் உண்மை நிலை என்னவென்றால், சேமிக்கப்பட்ட அந்த ஆகாரம் தீர்ர்ந்து போவதற்கு முன்னரே அனைவரும் மரணித்து விடுகின்றனர். ஆகவே எந்த மரணத்துக்கான காரணமாகவும் ஆகாரமிண்மை இருக்க முடியாது. மாறாக, தெரிவுத் துஷ்பிரயோகத்தின் காரணமாகத் தோன்றிய ஒரு வழக்கத்தினாலும், அந்த வழக்கத்தைப் புறக்கணிப்பதால் ஏற்படுகின்ற ஒரு வகை நோயினாலுமே இவ்வாறான மரணங்கள் சம்பவிக்கின்றன. ஆம், ஜீவராசிகளின் உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டுள்ள இயல்பான ஆகாரமானது, சராசரியாக நாற்பது நாட்களுக்குத் தங்குதடையின்றி விநியோகிக்கப்படும். அத்தோடு, சில நோய்களின் போது அல்லது ஆத்மார்த்த ஏகாந்திர நிலைமைகளின் போது இரண்டு நாற்பதுகளையும் கூடத் தாண்டலாம். ஒரு மனிதன் லண்டன் சிறைச்சாலையில் தனது பலமான பிடிவாதத்தின் காரணமாக எழுபது நாட்கள் எதையும் உண்ணாமல் தேகாரோக்கியத்தோடு வாழ்ந்த சம்பவத்தை பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பத்திரிகைகள் பிரசுரித்தன. ஆகவே, யதார்த்தத்தில் நாற்பதிலிருந்து எழுபது எண்பது நாட்கள் வரை இயல்பான ஆகார விநியோகம் இடம்பெறுகின்றது. மேலும் ரஸ்ஸாக் நாமமானது பூமிப்பந்தின் மீது மிகவும் விசாலமானதோர் அமைப்பில் பிரதிபலித்துக்கொண்டிருப்பதைக் காணலாம். அந்த நாமத்தின் பிரதிபலிப்பாக இருக்கின்ற அருள் ஆகாரங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக முலைக் காம்புகளிலிருந்தும் கட்டைத் துண்டுகளிலிருந்தும் பிரவாகித்துக்கொண்டிருக்கின்றன. ஆக, பாவக்கறை படிந்த மனிதன், தனது தெரிவுத் துஷ்பிரயோகத்தின் மூலமாகத் தலையீடு செய்து குழப்பாவிட்டால், அனைத்து நிலைமைகளிலும் இயல்பான ஆகாரம் தீர்ந்து போவதற்கு முன்னர் அந்த நாமம் ஒவ்வொரு ஜீவனுடைய உதவிக்காகவும் விரைகின்றது. பட்டினிச்சாவுக்கான வாயில் மூடப்படுகின்றது. அவ்வாறெனில் பட்டிணியால் மரணிப்பதாகக் கூறப்படுபவர்கள், நாற்பது நாற்களுக்கு முன்னமே மரணிப்பார்களாயின், அது நிச்சயமாக ஆகாரமின்மையால் ஏற்பட்ட மரணமல்ல. மாறாக “தர்குல் ஆதாத், மினல் முஹ்லிகாத்” அதாவது “வழக்கங்களை விடுவது அழிவாகும்” என்ற விதியின் பிரகாரம், தெரிவுத் துஷ்பிரயோகத்தின் மூலமாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு வழக்கம் காரணமாகவும், அந்த வழக்கத்தை விடுவதால் ஏற்படுகின்ற ஒரு வகை வியாதியின் காரணமாகவுமே மரணம் சம்பவிக்கின்றது. எனவே, பட்டிணியால் மரணிப்பது சாத்தியமற்றதாகும் என்று கூற முடியும். ஆம், ரிஸ்க்கானது, வலிமை மற்றும் சுயதெறிவாற்றல் என்பவற்றோடு எதிரிலியான தொடர்பைக் கொண்டதாகும். இது நாம் எமது கண்களால் தெட்டத் தெளிவாகக் காண்கின்ற ஓர் உண்மையாகும். உதாரணமாக, தாயின் கருவறையில் இருக்கின்ற ஒரு சிசு, இன்னும் வலிமையோ சுயதெறிவாற்றலோ கிஞ்சித்தும் பெற்றிராத நிலையில் இருக்கும் போது, வாயைக் கூட அசைக்க வேண்டிய தேவை இன்றி அதற்குரிய ஆகாரம் வழங்கப்படுகின்றது. பிறகு உலகத்தில் கால்பதித்த பின்னர், இன்னும் வலிமையோ சுயதெறிவாற்றலோ பெற்றிராவிட்டாலும், ஓரளவு திறனும் உணர்வு ரீதியான சிறியதொரு பலமும் இருப்பதால், வாயை வைத்து மெல்லுகின்ற அளவு சிறியதோர் அசைவினூடாக, அதி பூரணத்துவமும் அதி ஊட்டமும் கொண்ட மிகவுமே மிருதுவான ஓர் ஆகாரம் முலைக் காம்புகளிலிருந்து அந்தப் பிள்ளையின் வாயை நோக்கிப் பீறிடுகின்றது. பிறகு அதன் வலிமையும் சுயதெறிவாற்றலும் ஓரளவு அதிகரிக்க அதிகரிக்க, அந்த இலகுவான அழகிய ஆகாரத்தில் தட்டுப்பாடு ஏற்பட ஆரம்பிக்கும். இறுதியில் அந்த ஊற்றுகள் தூர்ந்துவிடும். அந்தப் பிள்ளைக்குரிய ஆகாரம் பிற இடங்களிலிருந்து வழங்கப்பட ஆரம்பமாகும். என்றாலும், அந்தப் பிள்ளையின் வலிமையும் சுயதெறிவாற்றலும் தனது ரிஸ்க்கைத் தானாகத் தேடிச்சென்று பெற்றுக்கொள்கின்ற பக்குவத்தை இன்னும் அடையாதிருப்பதால், ரஸ்ஸாகுல் கரீம் ஆகிய அல்லாஹ் தாய், தந்தையரின் அன்பையும் பாசத்தையும் அந்தப்பிள்ளையின் இன்னும் பக்குவப்படாத வலிமை மற்றும் சுயதெறிவாற்றலுக்கான பக்கபலமாக கொடுக்கின்றான். எப்போது அவனுடைய வலிமையும் சுயதெறிவாற்றலும் பூரண முதிர்ச்சி நிலையை அடைகின்றதோ, அப்போது அவனது ரிஸ்க் அவனை நோக்கிச் செல்லாது, அவனுக்காக அனுப்பி வைக்கப்படவும் மாட்டாது. மாறாக அது தனக்குறிய இடத்தில் இருந்து கொண்டு, “வா!, வந்து என்னைத் தேடிப் பெற்றுக்கொள்” என்று கூறும். ஆம் இதிலிருந்து, ரிஸ்க்கானது வலிமை மற்றும் சுயதெறிவாற்றலோடு எதிர்மறைத் தொடர்பைக்கொண்டதாகும் என்பது தெளிவாகின்றது. மேலு பல ரஸாஇல்களில் தெளிவுபடுத்தப்பட்டதற்கிணங்க, வலிமை மற்றும் சுயதெறிவாற்றல் விடயத்தில் மிகவுமே பலவீனமான விலங்குகள், அதிக செலுமையோடு வாழ்ந்து, சிறப்பான ஆகாரங்களைப் பெற்றுக்கொள்வதை எல்லா இடங்களிலும் கண்டுகொள்ள முடியும்.
சாத்தியப்பாட்டின் வகைகள் காணப்படுகின்றன. பகுத்தறிவு ரீதியான சாத்தியப்பாடு, அரிதான சாத்தியப்பாடு, வழக்கமான சாத்தியப்பாடு போன்றவை அவற்றுள் சிலவாகும். ஒரு நிகழ்வு பகுத்தறிவு ரீதியான சாத்தியப்பாட்டு எல்லைக்குள் அடங்காவிட்டால் அது நிராகரிக்கப்படும். அரிதான சாத்தியப்பாட்டெல்லைக்கும் அப்பாற்பட்ட ஒரு நிகழ்வாயின் அது ஓர் அற்புதமாகவே (முஃஜிஸா) இருக்க முடியும். இது கராமத்தாக இருப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாகும். இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில், குறித்த ஒரு நிகழ்வு அன்றாடம் நிகழ்கின்ற சாதாரணமான ஒரு நிகழ்வாக, அல்லது உலக நியதிகளுக்குற்பட்ட ஒரு நிகழ்வாக இல்லாதிருப்பின், கண் காண் சாட்சிகளை வைத்தும், வலுவான ஆதாரங்களைக் கொண்டும் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ஆம், இந்த வரையறைகளின்படி, நாற்பது நாற்கள் உணவு உண்ணாத ஸையித் அஹமத் பதவீ அவர்களுடைய அசாதாரண நிலைமைகள் அரிதான சாத்தியப்பாட்டு எல்லைக்குற்பட்டவையாகும். ஆகவே இது ஒரு கராமத்தாகவே இருக்க முடியும். சிலவேளை அசாதரணமான அல்லது அரிதான ஒரு வழக்கமாகவும் கூட இருக்கலாம். ஆம், சையித் அஹமத் பதவீ அவர்கள் ஆன்மீக லயிப்பில் திளைத்திருந்த போது அவதானிக்கப்பட்ட அசாதாரண நிலைமைகள் முதவாதிர் அந்தஸ்த்தில் அறிவிப்புச் செய்யப்படுகின்றன. இவற்றில் நாற்பது நாற்களுக்கு ஒரு முறை உணவு உண்ட நிகழ்வுகளும் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த நிலைமை தொடர்ந்தேர்ச்சையானதல்ல. கராமத்தாக அவ்வப்போது இடம்பெற்றுள்ளது. ஒருவேளை அண்ணார் ஏகாந்திர நிலையில் லயித்திருக்கின்ற போது உணவு உண்பதற்கான தேவையை உணர்ந்துகொள்ளாமையினால் அவரளவில் அது ஒரு வழக்கம் என்ற நிலையை அடைந்திருக்கவும் முடியும். அஹமத் பதவீ அவர்களைப் போன்றே ஏராளமான அவ்லியாக்களிடமிருந்து இந்த வகையைச் சார்ந்த அசாதாரண நிலைமைகள் பலமான ஆதாரங்களோடு அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளன. உண்மையில் முதலாவது அம்சத்தில் நாம் நிறுவியதைப் போன்று, சேமிக்கப்பட்ட ஆகாரத்தின் விநியோகமானது, நாற்பது நாட்கள் வரை தொடரக் கூடியதாகும். எனவே நாற்பது நாட்கள் சாப்பிடாமல் இருப்பதென்பது வழக்கமாக்கிக்கொள்ளும் பட்சத்தில் சாத்தியமான ஒரு விடயமாகும். அத்தோடு இவ்வாறான நிலைமைகள் இப்படிப்பட்ட உத்தமர்களிடம் காணப்பட்டமைக்கான வலுவான அறிவிப்புக்கள் கிடைக்கப்பெறுகின்றன. ஆகவே இவற்றை நிராகரித்து விட முடியாது. அடுத்து இரண்டாவது வினாவுடன் தொடர்புபட்ட இரண்டு முக்கியமான விடயங்களைப் பார்ப்போம். புவியியல் மற்றும் வானவியல் துறைகள், தமது குறுகிய விதிகளினதும் குருட்டுப் பார்வைகளினதும் அற்பமான நிறுவைகளினதும் துணைகொண்டு குர்ஆனிய எல்லைகளை எட்ட முடியாதுள்ளன; அதன் வசனங்களில் விண்மீன்களைப் போன்று மின்னுகின்ற ஏழு தட்டு அர்த்தங்களைக் கண்டுகொள்ள முடியாதுள்ளன. எனவே தமது மடமையை ஏற்றுக்கொள்வதற்குப் பதிலாக அந்த வசனங்களை விமர்சிக்கவும் நிராகரிக்கவும் முற்படுகின்றனர்.
வானங்களைப் போன்றே பூமியிலும் ஏழு தட்டுக்கள் காணப்படுகின்ற விடயத்தோடு சம்பந்தமானதாகும். இந்த விடயம் நவீன விஞ்ஞானிகளுக்கு உண்மைத் தன்மையற்றதாகத் தென்படுகின்றது. அவர்களின் புவியியல், வானவியல் சம்பந்தப்பட்ட விஞ்ஞானங்கள் இதை ஏற்றுக்கொள்வதில்லை. எனவே இந்த விடயத்தைச் சாட்டாக வைத்து குர்ஆனிய சத்தியங்களை நிராகரிக்கின்றனர். இது சம்பந்தமாக சுருக்கமான ஒரு சில குறிப்புக்களைப் பதிவு செய்கின்றோம்.
முதலில், அந்த வசனத்துடைய அர்த்தம் வேறு, அந்த அர்த்தத்துடைய உள்ளடக்கங்களும் அதனால் நாடப்படுகின்ற உதாரணங்களும் வேறாகும் என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஆம், இவ்வாறு வியாபித்த உள்ளடக்கங்களைக் கொண்ட, பல்வேறு அர்த்தப்பாடுகளுக்குற்பட்ட, ஏராளமான சாத்தியப்பாடுகளை உள்ளடக்குகின்ற ஒரு வசனத்தில் ஏதேனும் ஓர் உபரியான அர்த்தம் அல்லது உதாரணம் கண்களுக்குப் புலப்படவில்லை என்பதற்காக அந்த அர்த்தத்தை அடிப்படையாக வைத்துக் குறித்த வசனம் நிராகரிக்கப்பட முடியாது. வானங்களிலும் பூமியிலும் இருக்கும் ஏழு தட்டுகள் என்பதன் மூலம் நாடப்படும் பல உபரியான அர்த்தங்களிலிருந்து ஏழு உதாரணங்களை எம்மால் தெளிவாகக் காண முடியுமாக உள்ளது. கூடவே அந்த வசனத்தின் நேரடி அர்த்தத்தின்படி ‘ஏழு தட்டுப் பூமிகள்’ என்ற பிரயோகம் அங்கு இல்லை. மாறாக ﺍَﻟﻠّٰﻪُ ﺍﻟَّﺬِﻯ ﺧَﻠَﻖَ ﺳَﺒْﻊَ ﺳَﻤٰﻮَﺍﺕٍ ﻭَﻣِﻦَ ﺍﻟْﺎَﺭْﺽِ ﻣِﺜْﻠَﻬُﻦَّ என்று தொடரும் வசனம் “பூமியையும் அந்த ஏழு வானங்களைப் போன்று படைத்து தனது படைப்புக்களுக்கு அதை உறைவிடமாக ஆக்கினான்.” என்ற அர்த்தத்தையே கொடுக்கின்றது. “ஏழு தட்டுகளாகப் படைத்தேன்” என்று கூறப்படாததால், அந்த வசனத்தில் வரும் ஒப்பீடானது, படைப்பினங்கள் சம்பந்தமாகவும் படைப்பினங்களின் உறைவிடம் சம்பந்தமாகவும் வருகின்ற ஓர் ஒப்பீடாகும்.
பூமிப்பந்தானது வானவெளியோடு ஒப்பிடப்படும் போது எவ்வளவு தான் சிறியதாக இருப்பினும், அல்லாஹ்வுடைய எண்ணற்ற சிருஷ்டிக்களுக்கான இருப்பிடமாகவும் அடைக்களமாகவும் காட்சிக்கூடமாகவும், மைதானமாகவும் இருப்பதால் உள்ளம் உடலுக்கு ஈடாவதைப் போன்று பூமிப்பந்தும் கூட எல்லைகள் காண முடியாத பிரமாணடமான இந்தப் பிரபஞ்சத்தின் உள்ளம் அல்லது ஆத்மார்த்த மையம் என்ற வகையில் பிரபஞ்சத்துக்கு ஈடானதாகும். இதன் காரணமாகத் தான், ஆரம்ப காலம் தொட்டே ஏழு காலநிலைகள் அல்லது காலநிலை வலயங்கள் என்றும், ஐரோப்பா, ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, இரண்டு ஆசியாக்கள் (அந்தார்டிகா, ஆசியா), இரண்டு அமெரிக்காக்கள் உற்பட மொத்தம் ஏழு கண்டங்கள் என்றும், கடல் – நிலம், பழைய கண்டம் – புதிய கண்டம், கிழக்கு - மேற்கு, வடக்கு - தெற்கு என்ற வகையில் பல வகைப் பிராந்தியங்கள் என்றும், புவி மையத்திலிருந்து புறப் பரப்பு வரையிலும் காணப்படுகின்ற -அறிவியல், விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட- ஒன்றோடொன்று சங்கமிக்கின்ற ஆனால் வித்தியாசமான தன்மைகளை உடைய ஏழு மண்டலங்கள் என்றும், வளி, நீர், மண், நெருப்பு ஆகிய நான்கு மூலங்களோடு சேர்த்து முப்பிறவிகள் என்றழைக்கப்படும், கணியங்கள், தாவரங்கள் (தாவரக் களங்கள்) மற்றும் விலங்குகள் (விலங்குக் களங்கள்) என்று உயிர் வாழ்வுக்கு உகந்தவையாகவும் எழுபது சாதாரண மூலகங்களின் உள்ளடக்கமாகவும் திகழும் பிரபலமான ஏழு வகை மூலத்தொகுப்புகள் என்றும், ஜின்கள், இஃப்ரித்கள் உற்பட இன்னும் பிற உயிரும் உணர்வும் உள்ள படைப்பினங்களினதும் வாழ்விடங்களாக இருக்கின்ற பூமியில் உள்ள ஏழு வகை உலகங்கள் என்றும் பல்வேறுபட்ட அர்த்தங்கள் மேற்படி வசனங்களிலிருந்து விளங்கிக்கொள்ளப்பட்டுளன. அத்தோடு எமது பூமிப்பந்தை ஒத்த, உயிர் வாழ்வதற்கு உகந்த ஏழு பிற கோள்கள் இருக்கின்றன என்ற விடயமும் கூட அந்த வசனத்தின் அர்த்தப்பரப்புக்குள் உற்பட்டதாகும். இதோ, இங்கு பூமியில் ஏழு தட்டுக்கள் காணப்படுகின்றன என்ற விடயம் ஏழு வகைகளில் நிரூபனமாகின்றது. எட்டாவதாக இருக்கின்ற இறுதி வியாக்கியமானது, வேறு கோணத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆரம்பமாக உள்ள ஏழுக்குள் உள்ளடங்காது.
உண்மையில் சர்வஞானமிக்க படைப்பாளனுடைய நிர்வாகத்தில் எங்கும் எந்த வகியிலும் வீண்விரயம் இடம்பெறுவதில்லை. அவன் எந்த ஒன்றையும் வீணுக்காகப் படைக்கவில்லை. மேலும் ஒட்டுமொத்த வஸ்துகளுடைய இருப்பும் அவனுடைய பிரக்ஞையுள்ள படைப்புகளுக்கானதாகும். பிரக்ஞையுள்ள படைப்புகளின் மூலமே அனைத்துமே பூரணத்துவத்தையும் பசுமையையும் செளுமையையும் அர்த்தபூர்வமான நிலையையும் பயனற்ற தன்மையிலிருந்து விடுதலையும் அடைகின்றன. மேலும், வளியும் நீரும் ஜீவராசிகளின் நடமாட்டத்துக்குத் தடையாக இருக்காததைப் போன்றே, கல், மண் போன்ற திண்மப் பொருட்களும் கூட மின்சாரம், ராடியோக் கதிர்கள் போன்ற வஸ்துக்களின் பயணத்துக்குத் தடையாக இருப்பதில்லை. ஆகவே, நிச்சயமாக சர்வ ஞானமும் வல்லமையும் மிக்க அந்த வடிவமைப்பாளன், பூமிப்பந்தின் மையத்திலிருந்து எமது வதிவிடமான மேற்பரப்பு வரை ஒன்றோடொன்று இணைந்துள்ள ஏழு பிரமாண்டமான மண்டலங்களையும் விசாலமான பரப்புக்களையும் வித்தியாசமான உலகங்களையும் ஒரு போது வெறுமையாக அதன் பாட்டில் பாழடைந்து போக விடமாட்டான். நிச்சயமாக அந்த உலகங்களையும் செழுமையாக்கியிருப்பான். அந்த உலகங்கள் செழுமையாக இருப்பதற்குப் பொருத்தமான தகுதி வாய்ந்த பிரக்ஞையுள்ள படைப்புகளை அங்கெல்லாம் குடியமர்த்தியிருப்பான். அவர்கள் நிச்சயமாக மலக்கினத்தைச் சேர்ந்தவர்களாக அல்லது ரூஹானிய இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பது அவசியப்படுகின்றது. மிகக் கடினமான, மிகத் திண்மமான மண்டலங்கள் அவர்களைப் பொறுத்தவரை மீனுக்கு நீரைப் போன்றதாக அல்லது பறவைக்கு வளியைப் போன்றதாகவே இருக்கும். புவிமையத்திலிருக்கும் அந்தப் பயங்கர நெருப்பானது அவர்களுக்கு இளம் சூட்டைப் போன்று வெதுவெதுப்பானதாக இருக்க வேண்டும். ஆம், அந்த ரூஹானிய ஜீவன்கள் ஒளியால் ஆக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நெருப்பு ஒளியைப் போன்றிருப்பது அவசியப்படுகின்றது.
பதினெட்டாவது கடிதத்தில், புவி மண்டலங்கள் சம்பந்தமாக கஷ்ஃபை உடையவர்களால் கூறப்பட்டுள்ள புத்திக்கு எட்டாத விடயங்களுக்கான காரணத்தை விளக்கும் உதாரணம் ஒன்று கூறப்பட்டுள்ளது. அந்த உதாரணத்திற்கான சுருக்கமான விளக்கத்தைப் பினவருமாறு கூறலாம். அதாவது பூமிப்பந்தானது ஆலமுஷ் ஷாஹாதத் எனப்படும் புலனாகின்ற இந்த உலகத்தில் ஒரு விதையைப் போன்றதாகும். ஆனால், ஆலமுல் மிஸால் மற்றும் ஆலமுல் பர்ஸஹிலும் ஒரு பெரும் விருட்சத்தைப் போன்று பிரபஞ்சத்தோடு தோலுக்குத் தோல் நிற்கக் கூடிய அளவு பிரமாணடமானதாகும். அஹ்லுல் கஷ்ஃப், பூமிப்பந்திலிருக்கும் இஃப்ரித் எனப்படும் ஜின் இனத்துக்குரித்தான மண்டலத்தின் அளவை ஆயிரம் வருடங்கள் என்று குறிப்பிடுவது, ஆலமுஷ் ஷஹாதத்தில் விதையாக இருக்கின்ற இந்தப் பூமிப்பந்தை அடிப்படையாக வைத்தன்றி, ஆலமுல் மிஸாலில் இருக்கும் இந்த விதையின் விருட்சத்துடைய கிளைகளையும் மண்டலங்களையும் அடிப்படையாக வைத்தாகும். உண்மையில் பூமிப்பந்தில் பார்வைக்கு முக்கியத்துவமுமற்ற ஒருவகுப்பினருக்கு பிற உலகங்களில் இவ்வாறு பிரமாண்டமான தோற்றப்பாடுகள் காணப்படுகின்ற போது, ஏழு தட்டு வானங்களுக்கு ஒப்பீடாகப் பூமியையும் ஏழு தட்டுக்களாகக் கூறலாம். ஆம், வியாக்கியானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட மேற்படி மறை வசனமானது, இந்தச் சின்னம் சிறிய உலகத்தை ஏழு வானங்களோடு ஒப்பீடு செய்வதன் மூலம், அற்புதமானதும் சொற்செறிவு மிக்கதுமான ஓர் அமைப்பில், மேலே உள்ள குறிப்புக்களில் கூறப்பட்டுள்ள அனைத்து அர்த்தங்களையும் நினைவில் கொண்டு வருகின்றது.
تُسَبِّحُ لَهُ السَّمٰوَاتُ السَّب۟عُ وَال۟اَر۟ضُ وَمَن۟ فٖيهِنَّ என்று தொடர்கின்ற வசனமும் ثُمَّ اس۟تَوٰٓى اِلَى السَّمَٓاءِ فَسَوّٰيهُنَّ سَب۟عَ سَمٰوَاتٍ وَهُوَ بِكُلِّ شَى۟ءٍ عَلٖيمٌ என்ற வசனமும் இவை போன்ற இன்னும் பல வசனங்களும் வானங்களை ஏழு வானங்கள் என்று பிரஸ்தாபிக்கின்றன. இஷாரதுல் இஃஜாஸ் தஃப்ஸீரில், முதலாம் உலகப் போரின் முதலாம் வருடத்தில் யுத்தகளத்தில் இருக்கும் சமயம் நிர்ப்பந்தம் காரணமாக மிகவும் இரத்தினச் சுருக்கமாகத் தொட்டுக்காட்டப்பட்ட இந்த அம்சத்தின் ஒரு பகுதியை இவ்விடத்தில் சுருக்கமாக வியாக்கியானம் செய்வது பொறுத்தமாகும். கோட்பாடு புராதன தத்துவவியல் முன்வைக்கும் “ஒன்பது வானங்கள்” என்ற ஷரீஅத்துடைய மொழியிலும் உள்வாங்கப்பட்டு ஏழுவானங்களோடு அர்ஷையும் குர்ஷையும் சேர்த்து அபூர்வமான ஓர் அமைப்பில் வானங்களை சித்திரிக்கின்றனர். உண்மையில் அந்தப் புராதண தத்துவவியல் ஞானிகளின் ஆரவாரமான வியாக்கியானங்கள், பலயுகங்களாக மனித குலத்தைத் தனது அலுங்குப் பிடிக்குள் வைத்திருந்ததால் பல்வேறு தஃப்ஸீர் ஆசிரியர்களும் அவற்றின் தாக்கத்துக்குற்பட்டு வசனத்தின் வெளிப்படையான அர்த்தத்தை, அந்தப் புராதன மத்ஹபுகளுக்கு ஏற்றாற் போல் வளைத்துக்கொடுக்க நிர்ப்பந்தமாகியுள்ளனர். துரதிஷ்டவசமாக இவர்களது இந்த செயலானது, சர்வஞானம் பொருந்திய குர்ஆனுடைய அற்புதத் தன்மைக்கு இடப்பட்ட ஒரு திரையாக அமைந்து விட்டது. புராதன தத்துவவியலானது தாம் குறிப்பிடுகின்ற வானத் தட்டுக்களுக்கிடையில் எந்தவித இடைத்தொடர்புகளோ, கடவைகளோ, பிணைப்புக்களோ காணப்படுவதிலை என்று ஒரு வகை தீவிரப்போக்கான நிலைப்பாட்டில் இருக்க, நவீன விஞ்ஞானமோ புராதன தத்துவவியலின் இந்தத் தீவிரப் போக்கான வாதத்துக்குப் பகரமாக அசமந்தப் போக்கான ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து முற்று முழுதாக வானங்களின் இருப்பை நிராகரிக்க முற்படுகின்றது. முன்னையவர்கள் அதி தீவிரப் போக்கிலும் பின்னையவர்கள் அசமந்தப் போக்கிலும் சிக்குண்டு யதார்த்தம் என்ன என்பதைக் கோட்டை விட்டுவிட்டனர். சர்வஞானம் பொருந்திய குர்ஆனுடைய பரிசுத்த ஞானமானது, இஃப்ராத், தஃரீத் எனப்படும் அதிதீவிர மற்றும் அசமந்த நிலைமைகளை விட்டும் தூய்மைபெற்ற நடுநிலமையை உடையதாகும். எனவே குர்ஆன் வானங்கள் சம்பந்தமாகப் பேசும் போது “சர்வவல்லமை மிக்க படைப்பாளன் ஏழு தட்டு வானங்களைப் படைத்துள்ளான். அங்கு புலனாகின்ற விண்மீன்களானது மீன்களைப் போன்று வானவெளியில் நீந்துகின்றன; அல்லாஹ்வைத் துதியும் செய்கின்றன.” என்று கூறுகின்றது. இவ்வாறே, ஹதீஸிலும் ﺍَﻟﺴَّﻤَٓﺎﺀُ ﻣَﻮْﺝٌ ﻣَﻜْﻔُﻮﻑٌ என்று வருகின்றது. அதாவது, “வானமானது, அதன் அலைகள் நிலையாக்கப்பட்ட ஒரு கடலாகும்.” இங்கு இந்தக் குர்ஆனிய சத்தியத்தை ஏழு விதிகளைக்கொண்டும் ஏழு வகையான அர்த்தங்களைக்கொண்டும் மிகவும் சுருக்கமாக நிறுவுகின்றோம்.
விஞ்ஞான மற்றும் தர்க்கவியல் ரீதியாக, எல்லையில்லாத இந்தப் பிரபஞ்ச வெளியானது, எல்லைகளே இல்லாத ஒரு வெற்றிடமோ அல்லது சூன்யமோ அல்ல என்பதும், மாறாக ‘அஸீர்’ அல்லது ‘நீலை’ என்ற ஒரு வகைப் பதார்த்தத்தால் முழுவதுமாக நிரம்பியுள்ளது என்பதும் நிரூபணமான ஒன்றாகும்.
பிரபஞ்சப் பொருட்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற ஈர்ப்பு விசை, தள்ளு விசை போன்ற விதிகளின் இயக்கவியல் பிணைப்புக்களாகவும், ஒளி, வெப்பம், மின்சாரம் போன்ற வஸ்துக்களில் பொதிந்துள்ள சக்தியின் கடத்திகளாகவும் பரப்பிகளாகவும் இருக்கின்ற, பிரபஞ்சம் பூராகவும் நிரம்பியுள்ள ஒரு பதார்த்தத்தின் இருப்பானது, விஞ்ஞான மற்றும் பகுத்தறிவு ரீதியாக நிரூபணமான ஒரு விடயமாகும்.
இந்த நீலை என்ற பதார்த்தமானது, நீலையாகவே இருந்துகொண்டு, பிற பதார்த்தங்களைப் போன்றே வடிவமாற்றத்துக்குற்பட்டு வெவ்வேறு நிலைமைகளை அடைவது அன்றாடம் நாம் நிதர்சனமாகக் காண்பதைப் போன்ற ஒரு நிகழ்வாகும். ஆம், ஆவி, நீர், பணிக்கட்டி போன்ற வளிசார், திண்மசார், திரவசார் மூன்று வகைப் பொருட்கள் ஒரே பதார்த்தத்திலிருந்து எவ்வாறு தோன்றுகின்றதோ, அதே போன்றே, சூனி என்ற பதார்த்தமும் கூட ஏழு வகையான வடிவங்களில், ஏழு வகையான மண்டலங்களில் இருக்க முடியும் என்பதற்கு அறிவியல் மற்றும் தர்க்கவியல் ரீதியில் எந்த விதமான தடைகளும் இல்லாததைப் போன்றே, இதை எந்த விதத்திலும் நிராகரிக்கவும் முடியாது.
இந்தப் பிரபஞ்ச வெளியை ஆராய்ந்தால், அதன் மாபெரும் மண்டலங்களுக்கு மத்தியில் முரண் நிலைகள் இருப்பதை அவதானிக்கலாம். உதாரணமாக, ஆகாய நதி என்று அறியப்படுகின்ற பால் வீதி என்ற புகை மூட்டங்கள் போன்ற பிரமாண்டமான வெளி அமையப்பெற்றுள்ள மண்டலமானது, நிச்சயமாக நிலையான உடுக்களின் மண்டலத்தோடு ஒத்ததாக இல்லை. அந்த நிலை மண்டல உடுக்கள் ஏதோ முற்றிக் கனிந்த கோடைகாலக் கனிகளைப் போன்று காட்சியளிக்கின்றன. ஆனால், பால் வீதியில் புகை மூட்டம் போன்று காட்சியளிக்கும் எண்ணிலடங்காத நட்சத்திரங்களானது புதிது புதிதாகத் தோன்றி முதிர்ச்சி அடைய ஆரம்பிக்கின்றன. அவ்வாறே நிலை மண்டலத்துக்கும் ஞாயிற்றுத்தொகுதி மண்டலத்துக்கும் இடையிலும் கூட வேறுபட்ட தன்மைகள் இருப்பதைத் தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். இந்த வகையில் இவ்வாறான வெவ்வேறுபட்ட ஏழு மண்டலங்களின் அல்லது ஏழு தட்டுகளின் இருப்பு இலகுவாகப் புரிந்துகொள்ள முடியுமான ஓர் அம்சமாகும்..
ஒரு பதார்த்தம், தாக்கத்துக்கும் தொழிற்பாட்டுக்கும் ஆக்கத்துக்கும் உற்படுத்தப்பட்டு அந்தப் பதார்த்தத்திலிருந்து வேறு வஸ்துகள் ஆக்கப்படும் போது அதிலிருந்து வித்தியாசமான தராதரங்களைக் கொண்ட பல்வேறு படிமங்களும் வடிவங்களும் தோற்றம்பெறுகின்ற விடயம், அனுபவ ரீதியாகவும் பரிசோதனா ரீதியாகவும் ஊர்ஜிதமான ஒரு யதார்த்தமாகும். உதாரணமாக, வைரப் படிவுகளில் ஆக்கச் செயற்பாடு ஆரம்பமாகின்ற போது, அதிலிருந்து வித்தியாசமான தராதரங்களைக் கொண்ட சாம்பல், கரி, வைரம் போன்ற பொருட்கள் வெளிப்படுகின்றன. அவ்வாறே, நெருப்பு வெளிப்பட ஆரம்பித்ததும் அது தீச் சுவாலைகள், புகை, தணல், அனல் போன்ற பல படலங்களாகப் பிரிவடைகின்றன. அவ்வாறே, ஹைட்ரஜனும் ஒட்சிசனும் தாக்கத்துக்குற்படும் போது அந்தத் தாக்கத்திலிருந்து நீர், நீராவி, பணிக்கட்டி போன்ற படலங்கள் தோற்றம் பெறுகின்றன. அதாவது, தனி ஒரு வஸ்த்தில் தாக்கங்களோ தொழிற்பாடுகளோ ஆக்கமோ நிகழும் போது அது பல்வேறு படலங்களாகப் பிரிவடைவது யதார்த்தமானதாகும். எனவே சர்வ வல்லமைமிக்க அல்லாஹ் நீலை என்ற பதார்த்தத்தை தொழிற்பாட்டுக்கும் ஆக்கத்துக்கும் உற்படுத்திய போது அதை வெவ்வேறு மண்டலங்களாகப் பிரிப்பதும் ﻓَﺴَﻮّٰﻳﻬُﻦَّ ﺳَﺒْﻊَ ﺳَﻤٰﻮَﺍﺕٍ என்ற வசனத்துக்கேற்ப ஏழு வகையான வானங்களை அதிலிருந்து படைப்பதும் அவனுடைய வல்லமையிலிருந்துமுள்ளதாகும்.
மேலே விவரிக்கப்பட்ட தடயங்கள் அனைத்தும் வானங்களின் இருப்புக்கும், அவற்றின் எண்ணிக்கை ஒன்றுக்கதிகமானது என்பதற்குமான சான்றுகளாக இருக்கின்றன. எனவே பல வானங்கள் இருக்கின்றன என்ற செய்தி எந்த விதமான சந்தேகங்களுக்குமிடமின்றி உறுதியானதாகும். அன்றியும் சத்தியமான செய்தியாகவும் அற்புதமான தெளிவுரையாகவும் இருக்கின்ற சங்கைமிகு குர்ஆன் “ஏழாகும்” என்று கூறுகின்றது. ஆகவே நிச்சயமாக அவற்றின் எண்ணிக்கை ஏழாகும்.
ஏழு, எழுபது, எழுநூறு போன்ற பிரயோகங்கள், அரபு மொழி வழக்கில் ஏராளத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுவதால், அந்த ஏழும் இன்னும் ஏராளமான உப மண்டலங்களை உள்ளடக்கிய பிரதான மண்டலங்களாக அல்லது தட்டுகளாகக் கூட இருக்கலாம். சுருக்கமாக சர்வ வல்லமையும் மாட்சிமையும் மிக்க படைப்பாளன் நீலை என்ற பதார்த்தத்திலிருந்து ஏழு தட்டு வானங்களைப் படைத்து, நிலைப்படுத்தி, மிகவும் நுணுக்கமாகவும் ஆச்சரியப்படத்தக்க விதமாகவும் அவற்றை ஒழுங்குபடுத்தி, நட்சத்திரங்களை அதில் தூவி வைத்துள்ளான். மேலும், சர்வஞானமிக்க குர்ஆனும் கூட, மனித மற்றும் ஜின் வர்க்கத்தைச் சேர்ந்த அனைவரையும், அனைத்து வகுப்பினரையும் விளித்துப் பேசுகின்ற ஒரு நித்திய தெளிவுரையாகும். எனவே மனித வர்க்கத்தின் ஒவ்வொரு வகுப்பினரும் ஒவ்வொரு தனி குர்ஆனிய வசனத்திலிருந்தும் தமக்குரிய பங்கை நிச்சயமாகப் பெற்றுக்கொள்வார்கள். உண்மையில் குர்ஆனிய வசனங்களும் கூட எல்லா வகுப்பினருடைய கிரகிப்புகளுக்கும் ஏற்ற வகையில் மறைவானதும் சாடையானதுமான பல்வேறு அர்த்தப்பாடுகளை பொதியப்பெற்றதாகவே இருக்கின்றன. ஆம், குர்ஆனுடைய வார்த்தைகளில் காணப்படுகின்ற அதன் விடயப்பரப்பு, அர்த்தப்பரப்பு, சாடைகள் சமிக்ஞைகள் என்பவற்றில் இருக்கும் விசாளத் தன்மையும், சாதாரண வகுப்பைச் சேர்ந்த அதி பாமரனிலிருந்து, அறிஞர்களில் அதி சிறந்தவர் வரை அனைவரது கிரகிப்புக்கும் ஏற்றாற்போல் அனைவரையும் அரவனைத்துச் செல்லும் போக்கும், ஒவ்வொரு தனி வசனத்திலும் ஒவ்வொரு வகுப்பினரையும் பார்க்கின்ற கோனங்கள் இருக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆம் இந்த உண்மையின் அடிப்படையில், “ஏழு வானங்கள்” என்ற பிரயோகத்தின் விசாலமான அர்த்தப் பரப்பிலிருந்து வெவ்வேறான ஏழு வகுப்பு மனிதர்கள் ஏழு விதமான அர்த்தங்களைக் கிரகித்துக்கொள்கின்றனர். ஆம், ﻓَﺴَﻮّٰﻳﻬُﻦَّ ﺳَﺒْﻊَ ﺳَﻤٰﻮَﺍﺕٍ என்ற வசனத்திலிருந்து, குறுகிய பார்வையும் மட்டான சிந்தனையும் கொண்ட ஒரு வகுப்பு மனிதர்கள், வளிமண்டலத்துக்குற்பட்ட ஏழு மண்டலங்களாக அவற்றைக் கற்பனை செய்கின்றனர். வானவியலில் ஊரிப்போன இன்னுமொரு வகுப்பு மனிதர்கள், மக்கள் வழக்கில் ஏழு கிரகங்கள் என்று பிரபல்யமான நட்சத்திரங்களை அந்த வசனத்திலிருந்து நாடப்படுகின்ற அர்த்தமாகக் கிரகித்துக்கொள்வர். இன்னுமொரு வகுப்பினர், எமது பூகோலத்தை ஒத்த உயிரினங்களுக்கான வாழ்விடமாக உள்ள ஆகாயத்தில் இருக்கும் வேறு ஏழு கோல்களை கிரகித்துக்கொள்வார்கள். இன்னுமொரு வகுப்பினர், எமது ஞாயிற்றுத் தொகுதி ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதாகவும், அதே போன்று எமது ஞாயிற்றுத் தொகுதியை ஒத்த இன்னும் ஏழு ஞாயிற்றுத் தொகுதிகள் இருப்பதாகவும் கிரகித்துக்கொள்வர். இன்னுமொரு வகுப்பு மனிதர்கள், நீலை என்ற பதார்த்தத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்கங்கள் மற்றும் ஆக்கங்கள் மூலமாக பிரபஞ்சத்தில் உருவான ஏழு வகை மண்டலங்களை கிரகித்துக்கொள்வார்கள். தமது சிந்தனைகள் விண்மீன்களைப் போன்று மின்னுகின்ற, பரந்த சிந்தனை படைத்த இன்னுமொரு பகுதி மனிதர்களோ, எமக்குப் புலனாகின்ற மொத்த வான் பரப்பையும் ஒரு வானமாகக் கணித்து, அதை இந்த உலகத்தின் வானமாகப் பார்த்து, அதற்கும் அப்பால் மேலும் ஆறு தட்டு வானங்கள் இருப்பதாகக் கிரகித்துக்கொள்வார்கள். அதற்கும் மேலால் மனிதகுலத்தின் ஏழாவதும் அதி உயர்தரமானதுமான வகுப்பினரோ, ஏழு வானங்களையும் ஆலமுஷ் ஷஹாதத் ஆகிய எமக்குப் புலனாகின்ற இந்த வானத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை. மாறாக மறுமையின் மறைவான உலகங்கள், ஆலமுல் மிஸால் எனப்படும் நிழல் உலகம் போன்ற உலகங்களின் விசாலமான ஒவ்வொரு உறையாக அல்லது முகடாக இருக்கக்கூடிய ஏழு வானங்கள் இருக்கின்றன என்பதைக் கிரகித்துக்கொள்கின்றனர். இவ்வாறு மேற்படி வசனத்தின் பரப்பெல்லைக்குள், மேற்படி ஏழு வகுப்பினரும் பெற்றுக்கொண்ட ஏழு மட்ட அர்த்தங்களைப் போன்றே, இன்னும் ஏராளமான உபரியான அர்த்தகளும் இருக்கின்றன.ஒவ்வொரு வகுப்பினரும் தத்தமது கிரகிப்பாற்றலுக்கேற்ப தமது பங்கைப் பெற்றுக்கொள்வார்கள். அந்த அகிலார்ந்த விரிப்பிலிருந்து தமக்குறிய ஆகாரத்தை சுவைப்பார்கள். எனவே, உண்மையில், மேற்படி வசனத்துக்கு இவ்வாறான நம்பகரமான ஏராளமான அர்த்தங்கள் காணப்படுகின்றன. இக்காலத்தைச் சேர்ந்த புத்தி பேதலித்த தத்துவவியலாளர்களும், வெற்று வானவியலாளர்களும் ஏழு வானங்கள் என்பதைத் தமது மண்டைகளில் ஏதோ ஒரு வகையில் சித்திரித்துக்கொண்டு, பின்னர் அப்படி ஒன்றையும் காணவில்லையே என்பதைச் சாட்டாக வைத்து இவ்வாறான வசனங்களோடு மோத முனைகின்றனர். இவர்களுடைய இந்த செயலானது வானத்திலிருக்கும் நட்சத்திரங்களுள் ஒன்றை வீழ்த்துவதற்காகக் கல்லெறியும் மடமையும் அடங்காப்பிடாரித் தனமும் கொண்ட சிறுபிள்ளைகளின் செயலை ஒத்ததாகும். ஆம், அந்த வசனத்தின் சர்வ விசாலமான அர்த்தப்பரப்புக்குள் வருகின்ற ஏதேனும் ஒன்று உண்மையாக இருந்தாலும் அந்த வசனம் உண்மையானதாகவும் சத்தியமானதாகவும் ஆகிவிடும். அத்தோடு, நிதர்சனத்தில் இல்லாத ஒரு விடயமாயினும், மக்கள் மத்தியில் புலங்குகின்ற ஒரு விளக்கத்தை, மக்களின் பலதரப்பட்ட சிந்தனைகளை அரவனைப்பதற்காக அந்த விசாலமான அர்த்தப்பாட்டுக்குள் உள்ளடக்க முடியும். நிலைமை இவ்வாறிருக்கின்ற போது உண்மையான பல அர்த்தப்பாடுகளை நாம் இங்கு பார்த்தோம். இப்போது, இந்த நேர்மையும் உண்மையுமற்ற புவியியலையும் புத்தி பேதலித்துப் போதையில் தவிக்கும் வானவியலையும் பாருங்கள்! இந்த இரண்டு விஞ்ஞானங்களும் தவறிழைத்து விட்டன. அவை உண்மையான, சத்தியமான, விசாலமான அர்த்தப்பாடுகளை விட்டும் கண்களை மூடிக்கொண்டு, மிகவும் நம்பகரமான அந்த அர்த்தங்களைக் கண்டுகொள்ளாமல், மாயையானதும் நகைப்புக்கிடமானதுமான ஓர் உபரியான அர்த்தத்தை அந்த வசனத்துடைய அர்த்தமாக சித்திரித்து அந்த வசனத்துக்குக் கல்லெறிய முற்பட்டனர். விளைவாக, அவர்களது மண்டையை மட்டுமே அவர்களால் உடைத்துக்கொள்ள முடிந்தது. அந்தோ பரிதாபம் ஈமானை இழந்து தவிக்கின்றார்கள். சுருக்கமாக ஏழு திலாவத் முறைகள், ஏழு கோணங்கள், ஏழு அற்புதங்கள், ஏழு ஹகீகத்துகள், ஏழு அடிப்படைகள் மீது இறக்கப்பட்ட குர்ஆன் தனது அகிலார்ந்த அர்த்தங்களுக்குள் உள்ளடக்கியிருக்கின்ற தலா ஏழு தட்டுகளையும் ஷைத்தானிய அந்தஸ்த்தைக்கொண்ட மௌட்டீக சடவாத சித்தாந்தங்களால் எட்ட முடியாதிருக்கின்றது. எனவே நட்சத்திர்ம் போன்று மின்னுகின்ற அந்த வசனத்தின் அர்த்தம் எதை நாடுகின்றது, எதை நாடவில்லை என்பதைக் கூட கிரகித்துக்கொள்ள முடியாமல் பொய்ப்புரட்டுக்களை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் அந்த நட்சத்திரம் போன்று மின்னுகின்ற அவ்வாறான வசனங்களிலிருந்து இறங்கும் எரி கற்கள் மேற்படி சத்தியங்கள் அவ்வாறான குருட்டுச் சித்தாத்தங்களை எரித்து அழித்து விடுகின்றன. ஆம், சாத்தானியவயப்பட்ட சித்தாந்தவாதிகளுடைய சித்தாந்தங்களின் கைப்பிடித்து குர்ஆனிய வானங்களில் உலாவர முடியாது. மாறாக, அந்த நட்சத்திரம் போன்று மின்னுகின்ற வசனங்களை சத்திய ஞானத்துடைய மிஃராஜ் மூலமாகவும் ஈமான், இஸ்லாம் என்ற இறக்கைகள் மூலமாகவுமே அடைய முடியும். اَللّٰهُمَّ صَلِّ عَلٰى شَم۟سِ سَمَاءِ الرِّسَالَةِ وَ قَمَرِ فَلَكِ النُّبُوَّةِ وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ نُجُومِ ال۟هُدٰى لِمَنِ اه۟تَدٰى سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَللّٰهُمَّ يَا رَبَّ السَّمٰوَاتِ وَ ال۟اَر۟ضِ زَيِّن۟ قُلُوبَ كَاتِبِ هٰذِهِ الرِّسَالَةِ وَ رُفَقَائِهٖ بِنُجُومِ حَقَائِقِ ال۟قُر۟اٰنِ وَ ال۟اٖيمَانِ اٰمٖينَ

