اَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ என்ற வசனத்தில் பொதிந்துள்ள தாத்பரியங்களோடு சம்பந்தப்பட்டதாகும். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ وَقُل۟ رَبِّ اَعُوذُ بِكَ مِن۟ هَمَزَاتِ الشَّيَاطٖينِ وَاَعُوذُ بِكَ رَبِّ اَن۟ يَح۟ضُرُونِ (இந்த வசனங்கள் ஷைத்தானைவிட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதிலுள்ள ஞானங்களோடு சம்பந்தப்பட்டதாகும். இங்கு இந்தத் தாத்பரியங்கள் பதிமூன்று அடையாளங்களாக விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அவற்றுள் சில, ரிஸாலே நூரின் ஆறாவது வார்த்தை போன்ற சில பகுதிகளில் வேறு அமைப்புகளில் விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதால் அவ்வாறான பகுதிகள் இங்கு சுருக்கமாகவே விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.)
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Lem'alar
The Thirteenth Gleam
கேள்வி: பிரபஞ்சத்தில் நிகழ்கின்ற நிர்மான விடயங்களில் ஷைத்தானுடைய எந்தவிதத் தலையீடுகளும் இல்லாதிருக்கின்ற போது, சத்திய இரட்சகன் தனது பேரருளின் மூலமாகவும் பேரன்பின் மூலமாகவும் எப்போதுமே சத்தியவானன்களின் பக்கமாக இருக்கின்ற போது, உண்மைகளும் சத்தியங்களும் அவற்றின் கவர்ந்திழுக்கின்ற தன்மையும் அவற்றால் ஏற்படுகின்ற நன்மைகளும் சத்தியவான்களுக்கான மிகப் பெரும் பலமாகவும் ஊக்கமாகவும் இருக்கின்ற போது, வழிகேடர்களுடைய அசிங்கமான அருவருக்கத்தக்க நடத்தைகள் அந்த வழிகேடர்களையே வெறுப்படையச் செய்வதாக இருக்கின்ற போது ஹிஸ்புஸ் ஷைத்தானாகிய ஷைத்தானுடைய அடிவருடிகள், அதிகமான சந்தர்ப்பங்களில் வெற்றி வாகை சூடுகின்றனர். இதற்குப் பின்னாலுள்ள தாத்பரியம் என்ன? சத்தியவான்கள் சதாவும் ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேட வேண்டியவர்களாக இருப்பதற்கான காரணம் என்ன!? பதில்: இந்த விடயத்தில் முக்கியமான ஓர் இரகசியம் பொதியப்பெற்றுள்ளது. ஏறத்தாள அனைத்து வழிகேடுகள், தீமைகள், பாவங்களும் எதிர்முகமானவையாகவும் இல்லாமை அல்லது சூன்யம் சார்ந்தவையாகவும் சீர்குழைத்தல் அல்லது அழித்தலாகவுமே இருக்கின்றன. மறுபுறம், ஏறக்குறைய அனைத்து நன்மைகள், நேர்வழிகளும் நேர்முகமானவையாகவும் சாத்வீகமானவையாகவும் மெய்த்தன்மை வாய்ந்தவையாகவும் நிர்மானமாகவுமே காணப்படுகின்றன. இருபது மனிதர்கள் இருபது நாட்களில் கட்டிய ஒரு கட்டிடத்தை ஒரு மனிதனால் ஒரே நாளில் நிர்மூலமாக்க முடியும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆம், ஒட்டுமொத்தமான அடிப்படை அங்க அவயவங்களின் இருப்பின் மூலமாகவும், வாழ்வுக்குத் தேவையான ஒட்டுமொத்த வாழ்வாதாரங்களின் இருப்பின் மூலமாகவும், தனது இருப்பைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் மனிதனுடைய வாழ்வானது, தனியாக சர்வ வல்லமை மிக்க படைப்பாளனுடைய குத்ரத்தின் வெளிப்பாடாக இருக்கின்றது. இவ்வாறிருக்கும் போது ஓர் அநியாயக்காரன் வந்து அவனது ஒரு நரம்பைத் துண்டித்து விடுவதன் மூலம், வாழ்வோடு ஒப்பிடும் போது சூன்யமாக இருக்கின்ற மரணத்துக்குள் அவனைத் தள்ளி விடுகின்றான். இதனால் தான் “அத்தஹ்ரிபு அஸ்ஹல் - அழித்தல் இலகுவானதாகும்” என்பது முதுமொழியாகப் பிரபலமடைந்திருக்கின்றது. ஆம், இந்தத் தாத்பரியத்தின் அடிப்படையில் தான், வழிகேடர்கள், யதார்த்தத்தில் அற்பமானதொரு பலத்தைக்கொண்டு, பலமிக்க சத்தியவான்களை சிலபோது வெற்றிகொண்டு விடுகின்றனர். ஆனால், இந்த ஆபத்திலிருந்து அடைக்கலம் தேடுவதற்கு சத்தியவான்களிடம் மிகப்பலமான ஒரு கோட்டை இருக்கின்றது. அதற்குள் அடைக்கலம் தேடுபவர்களை அந்தப் பயங்கர எதிரிகளால் அண்டவோ, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தவோ முடியாது. ஒருவேளை தற்காலிகமான ஓர் இழப்பை ஏற்படுத்தினாலும் وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ என்ற வசனம் சமிக்ஞையாகக் கூறும் செய்திக்கிணங்க நிரந்தர நன்மைகளையும் பிரதிபலன்களையும் பெற்றுத்தரக்கூடிய காரியங்களின் மூலம் அந்த இழப்புகள் ஈடுசெய்யப்படும். ஆம், அந்த உருக்காலான, வலிமை குன்றாத கோட்டையானது முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடய ஷரீஅத்தும் சுன்னத்தும் ஆகும்.
கேள்வி: சுத்தத் தீங்காக இருக்கின்ற ஷைத்தான்களுடைய படைப்பும், ஈமான்கொண்டவர்கள் மீதான அவற்றின் அத்துமீறல்களும், அந்த ஷைத்தான்கள் காரணமாக ஏராளமான மனிதர்கள் குஃப்ரில் நுழைந்து நரகம் செல்வதும் மிகவும் பயங்கரமானதாகவும் அசிங்கமானதாகவும் தென்படுகின்றது. இப்படியிருக்கும் போது எந்தவிதக் குறைபாடுகளும் அற்ற அழகுக்கு சொந்தக்காரனாகவும், மகா கருணையாளனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்ற அல்லாஹ்வுடைய ரஹ்மத்தும், அழகும் இந்த அளவில்லாத அசிங்கத்தினதும் பயங்கரமான முஸீபத்தினதும் வெளிப்பாட்டை எவ்வாறு அனுமதித்து அங்கீகரிக்க முடியும்? இந்தக் கேள்வியைப் பலர் வினவுகின்றனர். பலருடைய உள்ளங்களில் உதிக்கின்றது. பதில்: ஷைத்தானுடைய படைப்பில், சிறு சிறு தீங்குகளோடு கூடவே, ஏராளமான அகிலார்ந்த நல்ல விளைவுகள் காணப்படுகின்றன. மனிதனுடைய பரிபூரணத்துவமும் கூட ஷைத்தானுடைய இருப்பில் தங்கியுள்ள ஓர் அம்சமாகும். ஆம் மரங்களை எடுத்துக் கொண்டால் விதையிலிருந்து விருட்சம் வரை எத்தனை எத்தனை படித்தரங்கள் காணப்படுகின்றன. மனிதனது இயல்பில் பொதிந்திருக்கின்ற உள்ளார்ந்த ஆற்றலிலும் கூட அதைவிட அதிகமான படித்தரங்கள் காணப்படுகின்றன. சிலபோது அந்தப் படித்தரங்களுக்கு மத்தியில் அணுவிலிருந்து சூரியன் வரையிலான வேறுபாடுகள் காணப்படுகின்றன. அந்த ஆற்றலின் வளர்ச்சியும் முன்னேற்றமும் நிச்சயமாக ஓர் இயக்கத்தை, ஒரு தொழிற்பாட்டை வேண்டி நிற்கின்றது. அந்த இயக்கத்தின் மூலம் முன்னேற்றச் சக்கரம் சுழல்வதற்கு ஓர் எதிர் விசை அல்லது போராட்டம் அவசியப்படுகின்றது. அந்தப் போராட்டமானது ஷைத்தான்களினதும் தீய விடயங்களினதும் இருப்பின் மூலமே சாத்தியப்படும். இல்லாவிட்டால், மலக்குமார்களைப் போன்று மனிதர்களுடைய தராதரங்களும் அந்தஸ்த்துகளும் நிலையானதாக இருந்திருக்கும். மனித வர்க்கத்தில் காணப்படுகின்ற ஆயிரக்கணக்கான தராதரங்களும் அந்தஸ்துகளும் இல்லாது போயிருக்கும். ஒரு சிறிய தீங்கு வந்துவிடும் என்பதற்காக ஆயிரம் நலவுகளைப் புறந்தள்ளி விடுவது ஞானத்துக்கும் நீதிக்கும் புறம்பானதாகும். ஷைத்தான் காரணமாக பெரும்பாலான மனிதர்கள் வழிகேட்டுக்குச் செல்வது உண்மை தான். ஆனால் பெறுமதியும் முக்கியத்துவமும் சிறப்பும் தரத்திலேயே தங்கியுள்ளன. தரத்துக்கு முன்னால் எண்ணிக்கை அவ்வளவாகப் பொருட்படுத்தப்படுவதில்லை. பலபோது பார்க்கப்படுவதே இல்லை. ஆயிரம் விதைகளையும் பத்து விதைகளையும் வைத்திருக்கின்ற ஒரு மனிதன், அந்த விதைகளை மண்ணுக்குக் கீழ் ஓர் இரசாயனத் தொழிற்பாட்டுக்கு உட்படுத்துகின்றான். அதில் பத்து விதைகள் விருட்சமாக ஆக, மிகுதி ஆயிரமும் அழுகிப் போய் விடுகின்றன. இந்நிலையில் விருட்சமாக வளர்ந்தோங்கிய அந்தப் பத்து விதைகளாலும் அவனுக்குக் கிடைக்கும் இலாபமானது, அழுகிப் போன ஆயிரம் விதைகளால் ஏற்பட்ட நட்டத்தைப் பூச்சுயத்துக்கு சமமாக்கி விடுகின்றது. அவ்வாறே, நஃப்ஸுடனும் ஷைத்தானுடனும் மேற்கொள்ளும் போராட்டத்தின் மூலமாக மனித குலத்துக்கே பெருமை சேர்த்து, நட்சத்திரங்களைப் போன்று பிரகாசிக்கின்ற உத்தமர்கள் மூலமாக மனித குலத்துக்குக் கிடைக்கும் கண்ணியமும் பெருமையும் நண்மைகளும் நிச்சயமாக ஈசல் இனத்தைப் போன்ற ஈனர்களான வழிகேடர்கள் குஃப்ரில் நுழைவதன் காரணமாக மனித குலத்துக்கு ஏற்படுத்துகின்ற இழிவையும் இழப்புக்களையும் பூச்சியத்துக்கு நிகராக்கிவிடும்; பொருட்படுத்தப்பட வேண்டிய அளவு முக்கியத்துவமற்ற ஒன்றாக ஆக்கிவிடும். இதன் காரணமாகத் தான், அல்லாஹ் தனது ரஹ்மத்தினதும், ஞானத்தினதும் நீதியினதும் வெளிப்பாடாக ஷைத்தானுடைய இருப்பை அனுமதித்து, அவற்றின் ஊசலாட்டங்களுக்கு இடமளித்துள்ளான். ஈமான் கொண்டவர்களே! இந்தப் பயங்கர எதிரிகளுக்கெதிராக உங்களிடமிருக்கும் கேடயமானது, குர்ஆன் கற்றுத்தருகின்ற தக்வாவாகும். உங்களுக்கான கலசமானது, ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய தன்நிகரற்ற சுன்னத்தாகும். உங்களுக்கான ஆயுதமானது, அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடி மன்றாடுவதும், இஸ்திஃபாருமாகும்.
கேள்வி: சர்வ ஞானம் பொருந்திய குர்ஆனில் வழிகேடர்களுக்கெதிராக வரும் கடுமையான கண்டனங்களும் மிகையான அச்சுறுத்தல்களும் மேலோட்டமாகப் பார்க்கும் போது நீதியான சொல்லாட்சிக்குப் பொருந்தாதவைகவும், வசன நடையில் இருக்க வேண்டிய அளவான, நடுநிலையான தன்மைக்கு ஒவ்வாதவையாகவும் காணப்படுகின்றன. மாத்திரமன்றி அவனுடைய அற்பமான செயலுக்கெதிராக ஏதோ ஆயிரக்கணக்கான கொலைகள் புரிந்ததைப் போன்ற கண்டனங்கள் மழையாகப் பொழிகின்றன. வங்குரோத்து நிலையில் உள்ளவனாகவும், ஆட்சியதிகாரத்தில் எந்தவிதமான பங்கும் அளிக்கப்படாதவனாகவும் இருக்கின்ற போது, ஏதோ அத்துமீறித் துரோகம் செய்கின்ற பங்குதாரரைப் போன்று கண்டனத்துக்குற்படுத்தப்படுகின்றான். இந்தத் தொனியானது, பலவீனமான மனிதனுக்கெதிராக ஏதோ பெரும் பெரும் படைபட்டாளங்களை ஏவிவிடுவதற்கு ஒப்பானதாக இருக்கின்றது. இதிலுள்ள தாத்பரியம் என்ன? பதில்: இதிலுள்ள தாத்பரியம் பின்வரும் யதார்தத்தோடு சம்பந்தப்பட்டதாகும். ஆம் ஷைத்தான்களும் ஷைத்தான்களுக்கு வழிப்படுபவர்களும் தமது பாதையில் இன்னுமின்னும் மோசமடைந்து செல்வதன் மூலம் சிறியதொரு காரியத்தைக்கொண்டு ஏராளமான அழிவுகளை ஏற்படுத்த முடியுமானவர்களாக இருக்கின்றனர். அற்பமான ஒரு நடத்தையைக்கொண்டு ஏனைய ஏராளமான படைப்பினங்களின் உரிமைகளுக்குப் பாரிய பங்கங்களை ஏற்படுத்தி விடுகின்றனர். உதாரணமாக ஒரு மன்னருக்குச் சொந்தமான கப்பலில் ஓர் ஊழியனின் சிறியதொரு செயல், அல்லது சில போது அவன் தன் மீது சுமத்தப்பட்ட சிறியதொரு கடமையைப் புறக்கணிப்பது, அந்தக் கப்பலோடு தொடர்புபட்ட மொத்தப் பணியாளர்களுடைய மொத்த உழைப்பையும் அந்த உழைப்பின் பிரதிபலன்களையும் அதன் நல்ல விளைவுகளையும் அழித்து அவர்களுடைய மொத்த உழைப்பும் அர்த்தமற்றவையாகிச் செல்வதற்கும் காரணியாக அமைந்துவிட முடியும். எனவே அந்தக் கப்பலுடைய கண்ணியத்துக்குறிய எஜமான், அந்தக் கப்பலோடு தொடர்புபட்ட தனது பாதுகாப்புக்குக் கீழுள்ள மக்களின் பெயரால் கடுமையான அச்சுறுத்தல்களையும் கண்டனங்களையும் விடுக்கின்றார். ஆம் இந்தப் பயங்கரமான கண்டனங்களும் அச்சுறுத்தல்களும் அவனது அந்தச் சிறிய செயலுக்காகவன்றி அந்தச் செயல் ஏற்படுத்துகின்ற பயங்கர விளைவுகளைக் கருத்திற்கொண்டாகும். எனவே அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அந்த எஜமான் தனது சொந்த நஃப்ஸுக்காக அன்றி அந்த மக்களுக்காக அவர்களுடைய உரிமையின் பெயரால் கடுமையானதொரு தண்டனையை வழங்குவார். இவ்வாறே ஆதி அந்தங்களின் அரசன் தனது அதிகாரத்தின் கீழுள்ள பூலோகக் கப்பலில் ஹிதாயத்தைப் பெற்றுக்கொண்டோருடன் பயணித்துக்கொண்டிருக்கும் ஷைத்தானின் கூட்டத்தைச் சேர்ந்த வழிகேடர்கள், தாம் புரியும் பார்வைக்குச் சிறிய குற்றங்கள் மற்றும் கலகங்கள் மூலமாக ஏராளமான படைப்பினங்களின் உரிமைகளில் அத்துமீறல் செய்வதாலும், அவற்றின் உன்னதமான உயர்தரமான பணிகளுடைய விளைவுகளை நாசம் செய்வதற்குக் காரணியாக அமைவதாலும், அவர்கள் மீது கடும் அச்சுறுத்தல்களையும் அவர்களது அக்கிரமங்களுக்கெதிராகப் பயங்கரமான எச்சரிக்கைகளையும் விடுப்பது அணுப்பிசகாத ஞானத்தினதும் அந்த ஞானத்திலிருந்து பிறக்கின்ற அச்சொட்டான சொல்லாட்சியினதும் வெளிப்பாடாகும்; நிலைமையின் தன்மைக்கேற்ற சாலப் பொருத்தமான பிரயோகங்களாகும். இந்த வகையில் இது போன்ற வசனங்கள் சொல்லாட்சிக் கலையின் அடிப்படையாகவும் ஏன் அதற்கான வரைவிலக்கணமாகவும் கூட இருக்கின்றன. மாத்திரமன்றி சொல்லாட்சிக் கலையில் வார்த்தை விரயமாகக் கருதப்படுகின்ற பூதாகரப்படுத்தலை விட்டும் பரிசுத்தமானவையாகும். ஆம், இவ்வாறு சிறியதொரு காரியத்தைக்கொண்டு ஏகப்பட்ட அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்தப் பயங்கர எதிரிகளை எதிர்கொள்வதற்கு மிகப் பலமான ஒரு கோட்டைக்குள் சென்று பாதுகாப்புத் தேடுவது கட்டாயமானதாகும். இல்லாவிட்டால் அந்த மனிதன் மிகப் பரிதாபகரமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுவான் என்பதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. ஈமான் கொண்டவர்களே! உங்கள் அனைவருக்கும் புகழிடமளிக்கக் கூடிய உருக்காலான விசாலமான ஒரு கோட்டை இருக்குமெனில் அது குர்ஆனுடைய கோட்டையாகும். அதற்குள் நுழைந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளுங்கள்.
சூன்யம் அல்லது இல்லாமையானது சுத்த தீங்காகும். வுஜூத் அல்லது மெய்ந்நிலை என்பது சுத்த நலவாகும். இந்த விடயத்தில் பூரா சத்தியவான்களும் அஹ்லுல் கஷ்ஃபும் ஏகமனதாக உடன்படுகின்றனர். ஆம், ஏரத்தாள அனைத்து நலவுகளும் நன்மைகளும் அனைத்து பரிபூரணத்துவங்களும் வுஜூதைச் சார்ந்தவையாகும்; வுஜூதோடு தொடர்பானவையாகும்; வுஜூதோடு சங்கமிப்பவையாகும். சில போது பார்வைக்கு எதிர்முகமானவையாகவும் இல்லாமை சார்ந்தவையாகவும் தென்பட்டாலும் கூட அவற்றின் அடிப்படைகள் நிர்மானம் சார்ந்தவையாகவும் நிறுவல்கள் சார்ந்தவையாகவும் மெய்ப்பண்பு கொண்டவையாகவுமே இருக்கின்றன. மறுபுறம் வழிகேடுகள், தீமைகள், முஸீபத்கள், பாவங்கள், சீர்கேடுகள் போன்ற அத்தனை வகையான அசிங்கங்களின் அடிப்படைகளும் மூல ஊற்றுகளும் சூன்யமாகும்; புறக்கணிப்பாகும். அவற்றில் பொதிந்துள்ள தீங்குகளும் அசிங்கங்களும் சூன்யத்திலிருந்துமுள்ளவையாகும். சில போது புறத் தோற்றத்துக்கு நேர்முகமானவையாகவும் மெய்ப்பண்பு கொண்டவையாகவும் தென்பட்டாலும் கூட அவற்றின் அடிப்படைகள் சூன்யம் சார்ந்தவையாகவும் நிராகரிப்பாகவும் புறக்கணிப்பாகவுமே திகழ்கின்றன. உதாரணமாக கட்டிடம் போன்ற ஒரு மெய்ப் பொருளின் இருப்பானது அதிலுள்ள அத்தனை உதிரிகளினதும் இருப்பின் மூலமாக நிலைகொண்டிருக்கும் போது, அதன் அழிவும், இல்லாமையும் அதிலிருக்கின்ற ஒரு தூணின் இல்லாமையின் மூலமாக அரங்கேறிவிடுகின்றது என்ற விடயம் எமது கண்களுக்கு முன்னால் நிகழ்கின்ற ஒரு யதார்த்தமாகும். மாத்திரமன்றி இருப்பானது ஆனது எல்லா நிலைமைகளிலும் இருப்பியல் ரீதியானதொரு மூலகாரணியை (இல்லத்) வேண்டி நிற்கின்றது. கட்டாயமாக ஒரு காரணியைச் சார்ந்தே இருக்கும். இல்லாமையானது இல்லாமை சார்ந்த விடயங்களையே சார்ந்திருக்க முடியும். இல்லாமை சார்ந்ததொரு விடயம் இல்லாத ஒரு விடயத்துக்கே இல்லத்தாக அமைய முடியும். ஆம் இந்த இரண்டு விதிகளின் அடிப்படையில் தான் மனித, ஜின் ஷைத்தான்கள் பிரபஞ்சமெங்கும் பயங்கரமான அழிவுகளையும் அழிவியல் சார் ஆக்கங்களையும் கட்டவிழ்த்துவிட்டு அவற்றின் மூலம் விதவிதமான குஃப்ர்கள், வழிகேடுகள், பாவங்கள் மற்றும் தீங்குகளை அரங்கேற்றிக்கொண்டிருக்கின்ற போதிலும், அவர்கள் அந்த அழிவியல் சார்ந்த ஆக்கங்களைக்கொண்டு சிருஷ்டிப்புச் செயற்பாட்டிலோ அல்லது பிரபஞ்சத்தில் நிகழ்கின்ற நிர்மானப் பணிகளிலோ அணுவளவேனும் தலையீடு செய்ய முடியாதுள்ளனர். அவ்வாறே அல்லாஹ்வுடைய ஆட்சியிலும் அவர்களால் பங்குதாரர்களாக முடியாது. கூடவே அவர்கள் அந்தக் காரியங்களையும் கூட தம்முடைய ஆற்றல்கள் அல்லது அதிகாரங்கள் மூலமாகச் செய்வதில்லை. ஆம், அவர்களுடைய அதிகமான காரியங்களில் ஆற்றல்களோ அதிகாரங்களோ செயற்பாடுகளோ காணப்படுவதில்லை. மாறாக -ஆன்மீக மற்றும் லௌகீக ரீதியான- புறக்கணிப்பும் சோம்பலும் தேக்க நிலையும் தடைகளுமே காணப்படுகின்றன. நல்லவைகளுக்கு இடைஞ்சலாகவும் உசிதமற்ற நிலையிலும் இருப்பதன் மூலம் தீங்குகளை அரங்கேற்றித் தீமையின் உருவமாக மாறிவிடுகின்றனர். ஆம், பாவங்களும் தீங்குகளும் அழித்தல் வகையைச் சேர்ந்தவை என்பதால், அவற்றுக்கான மூல காரணிகள் இருப்பியல் ரீதியானதோர் அதிகாரமாகவோ, மெய்ப்பண்பு கொண்ட ஓர் ஆற்றலாகவோ அல்லது ஒரு நிர்மானிப்பாளராகவோ இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மாறாக ஒரு தேவையின் இல்லாமையினூடாக அல்லது ஓர் உதிரி சீர்குழைவதனூடாக பெரியதோர் அழிவு ஏற்பட முடியும். மஜூஸிகள் இந்தத் தாத்பரியத்தைப் புரிந்துகொள்ளததன் காரணமாகத் தான், பிரபஞ்சத்தில் நல்லவற்றின் படைப்பாளனாக “யஸ்தான்” என்ற நாமத்தில் ஒருவனும், தீயவைகளின் படைப்பாளனாக “அஹ்ரிமான்” என்ற நாமத்தில் ஒருவனுமாக இரண்டு படைப்பாளர்கள் இருப்பதாக ஒரு நம்பிக்கைக் கோட்பாட்டை வகுத்துக்கொண்டனர். யதார்த்தம் என்னவெனில், அவர்கள் “அஹ்ரிமான்” என்று மாயையாகக் கற்பனை செய்துகொண்ட தீமைகளின் கடவுளானது, தேர்வுச் சுதந்திரம் மூலமாகவும், வெறுமனே -நிர்மானிக்கும் வல்லமையற்ற- ஓர் உந்தல் மூலமாகவும் தீமைகளுக்கான காரணியாக இருக்கின்ற ஷைத்தான் ஆகும். ஈமான்கொண்டவர்களே! ஷைத்தான்கள் புரியும் இப்படிப்பட்ட பயங்கரமான அழிவுகளுக்கு முன்னால் தாக்குப்பிடிப்பதற்காக உங்களிடமிருக்கும் மிகப் பெரிய ஆயுதமும் அவ்வப்போது ஏற்படுகின்ற அனர்த்தங்களைப் புனர் நிர்மானம் செய்வதற்கான சாதனமும் இஸ்திஃபாரும் “அஊது பில்லாஹ்” என்று கூறி அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவதாகும். உங்களுக்கான பாதுகாப்பான கோட்டை மேலான சுன்னத்துக்களாகும்.
மாட்சிமைமிக்க அல்லாஹ்வால் இறக்கி வைக்கப்பட்ட வேதங்கள் மனிதர்களுக்கு சுவனம் போன்ற உயர்தரமான சுபசோபனங்களையும் நரகம் போன்ற பயங்கரமான தண்டனைகளையும் வாக்களித்துக்கொண்டிருக்கின்றன. மாத்திரமன்றி மனிதர்களுக்குப் பலதரப்பட்ட வழிகாட்டல்கள் புத்திமதிகளையும் எச்சரிக்கைகள், நினைவூட்டல்களையும் அச்சுறுத்தல்கள், ஆர்வமூட்டல்களையும் செய்துகொண்டிருக்கின்றன. இவ்வாறான ஒரு சூழலில் மனிதர்கள் தம்முடைய எல்லா நிலைமைகளிலும் ஹிதாயத்தை அடைந்துகொள்வதற்கான இந்த அளவு பலமான காரணிகளும் வாய்ப்புகளும் இருக்கின்ற போது, ஈமான் கொண்டவர்கள் ஷைத்தானின் அடிவருடிகளுடைய எந்தவிதமான சுபசோபனங்களும் நலவுகளும் அற்ற ஊசலாட்டங்களுக்கு முன்னால் தோல்வியடைந்துவிடுகின்றனர். இந்த அம்சம் ஒரு சமயம் எனது சிந்தனையை வாட்டி வதைத்துக்கொண்டிருந்தது. உள்ளத்தில் ஈமானைச் சுமந்த ஒருவர் தனது மாட்சிமைமிக்க இரட்சகனுடைய இப்படிப்பட்ட பயங்கரமான அச்சுறுத்தல்களுக்கு முக்கியத்துவமளிக்காதிருப்பது எவ்வாறு சாத்தியமாகின்றது? இது ஈமானையே இல்லாமலாக்கக் கூடிய ஒரு விடயமாக இருக்க, ஈமான் எவ்வாறு சென்றுவிடாமல் பாதுகாக்கப்படுகின்றது? اِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا என்ற வசனத்தில் பொதிந்துள்ள தாத்பரியத்துக்கமைவாக ஷத்தானுடைய மிகவும் பலவீனமான ஊசலாட்டங்களுக்குள் மாட்டிக்கொண்டு அல்லாஹ்வுக்கெதிராகக் கலகம் விளைவிக்கின்றனரே! எனது நண்பர்களுள் சிலர் நூற்றுக்கும் மேற்பட்ட ஈமானியப் பாடங்களை -அந்தச் சத்தியங்களுக்கு முன்னால் உளமாறச் சரணடைந்தவர்களாக- என்னிடமிருந்து செவிமடுத்து, என் மீதும் தகுதியை விஞ்சிய மதிப்பும் மரியாதையும் செலுத்துபவர்களாக இருந்த ஒரு சமயம், நெஞ்சில் வஞ்சனை சுமந்த, முகஸ்துதிக்காரனான, எவ்வித முக்கியத்துவமுமற்ற ஒரு கெட்ட மனிதருடன் சகவாசம் கொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் அதற்கு சில நாட்களுக்குள்ளேயே எனக்கு எதிராகவும் அவருக்குச் சார்பாகவும் அவதாரமெடுத்தனர். ஆச்சர்யத்தால் “ஃபஸுபுஹானல்லாஹ்” என்றேன். பின்னர், “மனிதன் இந்த அளவு இழி நிலையை எவ்வாறு அடைய முடியும்? இந்த அளவு உண்மையற்ற மனிதர்களாக இருந்து விட்டனரே!” என்று அங்கலாய்த்து அந்த அப்பாவி மனிதர்கள் மீது புறம் சுமத்திய பாவத்தை செய்துவிட்டேன். ஆம், பிறகு தான் முன்னைய அடையாளங்களில் விளக்கப்பட்ட சத்தியங்கள் எனது சிந்தனையில் மலர்ந்தன. அவை இருள்மயமாக இருந்த பல அம்சங்களை ஒளிமயமாக்கியது. அப்போது அந்த ஒளியின் மூலமாக –அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்- சர்வ ஞானம் பொருந்திய குர்ஆன் உன்னதமான ஓர் அமைப்பில் அடிக்கடி நம்பிக்கையும் ஆர்வமும் ஊட்டிக்கொண்டிருப்பது சாலப் பொருத்தமானது என்பதையும், ஈமான்கொண்டவர்கள் ஷைத்தானுடைய ஊசலாட்டங்களுக்குள் சிக்குவது ஈமான் இன்மையாலோ அல்லது ஈமானுடைய பலவீனத்தாலோ அல்ல என்பதையும், பெரும் பாவங்களைச் செய்துவிடுபவர்கள் குஃப்ரில் நுழையவில்லை என்பதையும், “பெரும் பாவங்களைச் செய்பவர்கள் காபிராகிவிடுவார்கள் அல்லது ஈமானுக்கும் குஃப்ருக்கும் சரி மத்தியில் இருப்பார்கள்” என்று முஃதஸிலாக்களும் சில கவாரிஜிய்ய மத்ஹபைச் சேர்ந்தவர்களும் வழங்கிய தீர்ப்புகள் தவறானவை எபதையும், எனது அந்த நண்பர்களும் கூட நூறு சத்தியப் பாடங்களை ஒரு கேடியின் சகவாசத்துக்காகத் தியாகம் செய்த விடயம் நான் நினைத்ததைப் போன்ற இழி நிலையோ அல்லது ஈனத்தனமோ அல்ல என்பதையும் விளங்கிக்கொண்டேன். அல்லாஹ்வுக்கு அதிகமான நன்றிகளும் புகழ்களும் செய்தேன். அப்படிப்பட்ட ஓர் அதளபாதாலத்தில் வீழ்வதிலிருந்து பாதுகாப்ப்புப் பெற்றேன். ஏனெனில் முன்னர் கூறியதைப் போன்று, ஷைத்தான் ஓர் இல்லாமை சார்ந்த செயலினூடாக மனிதனைப் பெரும் ஆபத்துக்களுக்குள் தள்ளிவிடுகின்றான். மாத்திரமன்றி மனிதனுடைய நஃப்ஸானது, எப்போதுமே ஷைத்தானுக்கு செவிசாய்க்கக் கூடியதாகும். உடலியல் வேட்கைகளும் ஆவேச உணர்வுகளும் ஷைத்தனிய ஊசலாட்டங்களுக்கான வாங்கியாகவும் வழங்கியாகவும் இருக்கின்ற இரண்டு சாதனங்களாகும். ஆம், இதன் காரணமாகத் தான் மாட்சிமைமிக்க அல்லாஹ்வுடைய “கஃபூர்”, “ரஹீம்” போன்ற இரண்டு நாமங்கள், உன்னதமான பிரதிபலிப்புக்களின் மூலமாக ஈமான்கொண்டவர்களைச் சார்ந்திருக்கின்றன. மாத்திரமன்றி சர்வ ஞானமிக்க குர்ஆன் நபிமார்களுக்கான மிகச் சிரேஷ்டமான அருள் மஃரிபத் ஆகும் என்பதைக் காட்டி, அவர்களை இஸ்திஃபார் செய்யுமாறு அழைப்புவிடுக்கின்றது. மேலும் குர்ஆன் بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ என்ற புனித வசனத்தை ஒவ்வோர் அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் மீட்டுவதனூடாகவும், அத்தனை நல்ல காரியங்களின் போதும் அந்த வார்த்தைகளைச் சொல்வதற்கு கட்டளை பிரப்பிப்பதனூடாகவும் முழுப் பிரபஞ்சத்தையும் சூழ்ந்திருக்கும் வியாபித்த ரஹ்மத்தை அல்லாஹ்வின் அடியார்களுக்கான புகழிடமாகக் காட்டித் தருகின்றது. அவ்வாறே فَاسْتَعِذْ என்ற கட்டளையினூடாக “அஊது பில்லாஹி மினஷ்ஷைதானிர்ரஜீம்” என்ற வார்த்தையை கேடயமாகக் கற்றுத் தருகின்றது.
ஷைத்தானுடைய மிகவும் ஆபத்தான ஒரு சூழ்ச்சி இருக்கின்றது. அதாவது விரைவாகத் தாக்கங்களுக்கு ஆற்படும் மென்மையான உள்ளம் படைத்த மனிதர்களுக்கு அவர்களின் உள்ளங்களில் தோன்றும் குஃப்ர் சார்ந்த எண்ண அலைகளை குஃப்ர் மீதான நம்பிக்கையோடு குழப்பியடித்து விடுகின்றான். சிந்தனையில் உதித்து மறைகின்ற வழிகேட்டை வழிகேட்டின் மீதான விசுவாசம் போன்று காட்டுகிறான். அவ்வாறே பரிசுத்தமான மனிதர்களோடும் புனிதமான பொருட்களோடும் சம்பந்தப்பட்ட மிகவும் அசிங்கமான நிலைமைகளை கற்பனைக்குக் கொண்டுவருகின்றான். பின்னர் இருப்பளவில் சாத்தியப்பட முடியுமான ஒரு நிலைமையை தர்க்கபூர்வமான சாத்தியப்பாட்டுக்குற்பட்ட ஒன்றாகச் சித்திரித்து ஈமானிலும் நம்பிக்கையிலும் விசுவாசத்திலும் இருக்கின்ற யகீனியத்தானதும் சந்தேகத்துக்கிடமற்றதுமான உறுதிக்கு முரணான ஓர் ஊசலாட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றான். அப்போது அந்த நாதியற்ற மென்மையான மனிதன் தான் வழிகேட்டிலும் குஃப்ரிலும் வீழ்ந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு தனது ஈமானிலிருக்கும் யகீனியத்தான தன்மையைத் தற்காலிகமானதாகக் கருதி நம்பிக்கையீனத்துக்கு ஆற்படுவான். இதன் பிறகு ஷைத்தான் அந்த மனிதனுடைய நம்பிக்கையீனத்தையும் நலிவான நரம்பையும் குழப்ப நிலையையும் நன்றாகப் பயன்படுத்திப் புகுந்து விளையாடுவான். இறுதியில் அந்த மனிதன் பித்துப் பிடித்தவனைப் போலாவான் அல்லது “எதுவானாலும் ஆகட்டும்” என்று கூறி வழிகேட்டிற்குள் வீழ்ந்து விடுவான். ஷைத்தான் ஏற்படுத்துகின்ற இவ்வாறான ஊசலாட்டங்களின் உண்மைத் தன்மை எந்த அளவு அடிப்படைக்கு முரணானது என்பது வேறு சில இடங்களில் தெளிவுபடுத்தப்பட்டிருந்தாலும் இங்கும் சற்று சுருக்கமாக விளக்கத்துக்கு எடுத்துக்கொள்கின்றோம். கண்ணாடியில் தோன்றுகின்ற பாம்பின் உருவம் தீண்டாது, நெருப்பின் சுடர் எரிக்காது, அழுக்கின் விம்பம் அசுத்தப்படுத்தாது என்பதை அறிவீர்கள். அவ்வாறே, கற்பனை அல்லது சிந்தனை போன்ற கண்ணாடிகளில் தென்படும் குஃப்ர், ஷிர்க் போன்றவற்றின் விம்பங்களும் வழிகேட்டின் நிழல்களும் அசிங்கமான தூசன வார்த்தைகளின் நிழலாட்டங்களும் முஃமினுடைய ஈமானை மழுங்கடிக்காது; அகீதாவை சீர்குழைக்காது; பரிசுத்தமான மனிதர்கள் மீது வைத்திருக்கின்ற மரியாதையிலும் கண்ணியத்திலும் கலங்கத்தை ஏற்படுத்தாது. ஆம் “கற்பனையில் உதிக்கும் தூஷண வார்த்தைகள் தூஷணமாகாது. சிந்தனையில் தோன்றும் குஃப்ரிய மற்றும் வழிகெட்ட சிந்தனைகள் குஃப்ராகவோ வழிகேடாகவோ மாட்டாது” என்பது பிரபலமானதொரு விதியாகும். ஈமானில் ஏற்படுகின்ற சந்தேகங்கள் சம்பந்தமான விடயத்தைப் பொருத்தவரை இருப்பியல் ரீதியான சாத்தியப்பாடுகளின் அடிப்படையில் உள்ளத்தில் தோன்றும் சாத்தியக்கூறுகள் ஈமானிலுள்ள யகீனியத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது. உஸூலுத் தீன் கலையில் ﺍِﻥَّ ﺍﻟْﺎِﻣْﻜَﺎﻥَ ﺍﻟﺬَّﺍﺗِﻰَّ ﻟﺎَ ﻳُﻨَﺎﻓِﻰ ﺍﻟْﻴَﻘِﻴﻦَ ﺍﻟْﻌِﻠْﻤِﻰَّ என்பது முடிவான ஒரு சட்டமாகும். உதாரணமாக, bபார்லாக் குலம் தண்ணீரால் நிரம்பி அதற்குறிய இடத்தில் உள்ளவாறே இருக்கின்றது என்பதில் எம்மனைவருக்கும் யகீனான நம்பிக்கை இருக்கின்றது. என்றாலும் அதன் இருப்பில் இந்தக் கனம் புதைந்து மறைந்து போவது சாத்தியப்பாட்டுக்குற்பட்ட ஒன்றாகும். அதாவது பல்வேறு சாத்தியப்பாடுகளுக்கு மத்தியிலுள்ள ஒரு சாத்தியக்கூறாகும். அதாவது இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு சாத்தியப்பாட்டுக்கு அப்பாற்பட்ட ஒன்றல்ல. இப்போது இருப்போட் சம்பந்தப்பட்ட இந்த சாத்தியக்கூறு ஓர் அத்தாட்சியின் அல்லது ஆதாரத்தின் அடியாக வந்த ஒன்றல்ல. வெறுமனே எண்ணம் சார்ந்த ஒரு சாத்தியக்கூறாகும். வெறுமனே எண்ணம் சார்ந்த ஒரு சாத்தியக்கூறு சாத்தியப்பட்டிருக்க முடியாது, சாத்தியப்படவும் முடியாது. ஆகவே அதை நினைத்துச் சந்தேகம்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் உஸூலுத் தீன் கலையின் இன்னுமொரு தீர்க்கமான விதி لَا عِب۟رَةَ لِل۟اِح۟تِمَالِ ال۟غَي۟رِ النَّاشِئِ عَن۟ دَلٖيلٍ என்பதாகும். அதாவது, “ஓர் அத்தாட்சியிலிருந்து தோற்றம் பெறாத, இருப்போடு சம்பந்தப்பட்ட ஒரு சாத்தியக்கூறு, வெறுமனே எண்ணம் சார்ந்த ஒரு சாத்தியக்கூறாக இருப்பதால் அதைப் பற்றி ஆராயவோ அல்லது அலட்டிக்கொள்ளவோ அவசியமில்லை.” ஆம் இந்த ஷைத்தானிய ஊசலாட்டத்தில் சிக்கிக்கொள்ளும் நாதியற்ற மனிதன், இருப்போடு சம்பந்தப்பட்ட இவ்வாறான சந்தேகங்கள், ஈமானிய சத்தியங்கள் மீதான தனது யகீனான நம்பிக்கையில் இழப்பை ஏற்படுவதாக எண்ணிக்கொள்வான். உதாரணமாக, நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சம்பந்தமாக மனிதன் என்ற வகையில் இருப்போடு சம்பந்தப்பட்ட சில சாத்தியக்கூறுகள் நினைவுக்கு வருகின்றன. ஆயினும் அது அவனிடம் தீர்க்கமாக இடம்பிடித்திருக்கின்ற யகீனான ஈமானுக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. ஆனால் அவன் ஆபத்து ஏற்பட்டுவிட்டதாக எண்ணி தன்னைப் ஆபத்துக்குள்ளாக்கிக்கொள்கின்றான். சில போது ஷைத்தான் தனக்கு மனித உள்ளத்தின் மீதிருக்கும் ஊசலாட்டத் திறன் மூலம் சத்திய இரட்சகன் சம்பந்தமான சில தகாத வார்த்தைகளைக் கிசுகிசுத்துவிட்டுச் செல்வான். அந்த மனிதனோ, தனது உள்ளம் கெட்டுப்போய்விட்டது, அதனால் தான் இவ்வாறெல்லாம் முணுமுணுக்கின்றது என்று நினைத்து நடுநடுங்க ஆரம்பிப்பான். ஆனால் உண்மையில் அவனில் ஏற்படுகின்ற அந்த நடுக்கமும் அச்சமும், குறித்த வார்த்தைகள் அவனது உள்ளத்திலிருந்து பிறக்கவில்லை என்பதற்கும் மாறாக ஷைத்தானுடைய ஊசலாட்டம் காரணமாகத் தோன்றியவை என்பதற்குமான சான்றாகும். அவனுடைய உடன்பாடின்மை அதனையே எடுத்துக்காட்டுகின்றது. அத்தோடு மனித உணர்வுகளுக்கு மத்தியில் என்னால் சரியாகப் பகுத்தறிந்துகொள்ள முடியாது போன, மனிதனுடைய தெரிவுக்கும் தீர்மானத்துக்கும் கட்டுப்படாத ஓரிரண்டு உணர்வுகள் காணப்படுகின்றன. சில போது அந்த உணர்வுகள் ஆதிக்கம் செலுத்தும் போது அவற்றுக்கு மனிதன் பொறுப்புதாரியாக முடியாதவனாக இருக்கின்றான். ஆம் சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான உணர்வுகள் மனிதனில் ஆதிக்கம் செலுத்தி, சத்தியத்துக்குக் காதுகொடுக்க விடாமல் தவறான விடயங்களின்பால் அழைத்துச் செல்கின்றன. சரியாக அந்த நேரம் ஷைத்தான் அவனுடைய காதில் ரீங்காரமிட ஆரம்பிப்பான். “உனது திறனும் ஆற்றலும் சத்தியத்துக்கும் ஈமானுக்கும் உகந்ததல்ல. இது உன்னால் முடியாத காரியமாகும். அதனால்தான் இவ்வாறு உன்னையும் மீறி பாத்திலான விடயங்களுக்குள் நுழைகின்றாய். இதன் அர்த்தம் விதி உன்னைப் பாவங்களுக்குள் சிறைப்படுத்திவிட்டது என்பதாகும். எனவே இது தான் உன் மீது விதிக்கப்பட்டதாகும். இதிலிருந்து உன்னால் மீள முடியாது” என்று அவ நம்பிக்கையூட்டுவான். அந்த நாதியற்ற மனிதனும் கூட அவநம்பிக்கையில் வீழ்ந்து அழிவை நோக்கிச் செல்வான். ஆம், ஷைத்தானுடைய ஆரம்பத்திலுள்ள சூழ்ச்சிகளுக்கு முன்னால் முஃமின்களுக்கான அடைக்கலம் சத்தியவான்களான அஸ்ஃபியாக்கள் தொகுத்தளித்த தெளிவான விதிகள் மூலமாக எல்லைக் கோடுகள் பிரகாசமாகப் புலப்படுகின்ற ஈமானிய சத்தியங்களும் குர்ஆனிய வரம்புகளுமாகும். இறுதியில் வருகின்ற சூழ்ச்சிகளுக்கு முன்னாலுள்ள அடைக்கலமானது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதும், முக்கியத்துவமளிக்காதிருப்பதுமாகும். ஏனெனில் முக்கியத்துவமளிக்கின்ற அளவுக்கு கவனம் அதன் பால் ஈர்க்கப்பட்டுக்கொண்டே இருக்கும். முஃமின்களுக்கு ஏற்படுகின்ற இவ்வாறான ஆத்மார்த்த வியாதிகளுக்கான சஞ்சீவி மேலான சுன்னத்துகளாகும்.
கேள்வி: முஃதஸிலா இமாம்கள். தீமைகளின் படைப்பையும் தீமையாகக் கருதுவதன் காரணமாக குஃப்ர், வழிகேடு ஆகியவற்றின் படைப்பை அல்லாஹ்வுக்கு வழங்க மறுக்கின்றனர். இதன் மூலம் ஏதோ அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துவதாக நினைத்துக்கொள்கின்றனர். “மனிதனே தனது செயல்களின் சிருஷ்டிகர்த்தா ஆவான்” என்று கூறி வழிகேட்டுக்குச் சென்றுவிடுகின்றனர். அவ்வாறே பெரும் பாவங்கள் விடயத்திலும், “ஒரு பெரும் பாவத்தைச் செய்கின்ற மனிதனுடைய ஈமான் சென்றுவிடும். ஏனெனில் அல்லாஹ்வை ஈமான் கொண்டு நரகத்தை நம்புகின்ற விடயம் அப்படிப்பட்ட பெரும் பாவங்களுடன் சமரசமாகாது. அதாவது உலகின் மிகவும் சாதாரணமான ஒரு சிறைச்சாலை மீதான அச்சம் காரணமாகத் தன்னை சட்டத்துக்கு முரணான அனைத்திலிருந்தும் தவிர்த்துக்கொள்ளும் மனிதன், நீண்ட நித்தியமானதொரு நரக வேதனையையும் படைப்பாளனுடைய கோபத்தையும் அலட்டிக்கொள்ளாத வகையில் பெரும் பாவங்களைச் செய்வானெனில் அது நிச்சயமாக ஈமானின்மைக்கான சான்றாகும்” என்று கூறுகின்றனர். பதில்: முதல் பகுதிக்கான பதில் ஏற்கனவே விதியோடு சம்பந்தப்பட்ட ரஸாஇலில் பின்வருமாறு நிறுவப்பட்டுள்ளது. ஆம், தீமையின் படைப்பு தீமையாகாது. மாறாக தீமையின் மீதான ஈடுபாடே தீமையாகும். ஏனெனில் எந்த ஒன்றின் படைப்பும் விசாலமான அகிலார்ந்த விளைவுகளோடு சம்பந்தப்பட்டதாகவே இருக்கின்றது. ஒரு தீமையின் படைப்பு ஏகப்பட்ட நல்ல விளைவுகளுக்குக்கான முன்னாயத்தமாக இருப்பதால், உண்மையில் அந்தத் தீமையின் படைப்பு விளைவுகளின் அடிப்படையில் நன்மையானதாகும். நன்மைகள் வரிசைக்குள் நுழைந்துவிடும். உதாரணமாக, நெருப்பில் பல நூறு நல்ல விளைவுகள் இருக்கின்றன. ஆனால் சில மனிதர்கள் போய் நெருப்பைத் தமக்குத் தீங்கானதாக மாற்றிக்கொண்டுவிட்டு “நெருப்பின் படைப்பு தீங்காகும்” என்று கூற முடியாது. அவ்வாறே, ஷைத்தானுடைய படைப்பில் மனிதர்களுடைய உயர்ச்சி, சிறப்பு, தராதரங்கள் போன்ற பல்வேறுபட்ட உன்னதமான நலவுகள் இருக்கின்ற போது, மனிதன் தனது தெரிவுத் துஷ்பிரயோகத்தின் மூலமாகவும் பிழையான தீர்மானங்கள் மூலமாகவும் தவறான ஈடுபாடுகள் மூலமாகவும் ஷைத்தானுக்கு வழிப்பட்டுவிட்டு “ஷைத்தான் படைக்கப்பட்டது தீங்கானதாகும்” என்று கூற முடியாது. மாறாக அவன் தனது சொந்த ஈடுபாட்டின் மூலம் அல்லது தீர்மானத்தின் மூலம் ஷைத்தானைத் தனக்குத் தானே தீங்காக ஆக்கிக்கொண்டான். ஆம், ஈடுபாடு என்பது மிகச் சிறியதொரு செயலாக இருப்பதாலும் அது தனிப்பட்ட அமைப்பில் ஒரு தீய விளைவுக்குப் பாத்திரமாக அமைவதாலும் தீமை மீதான ஈடுபாடே தீமையாகும். ஆனால் அதன் படைப்பு விசாலமான நல்ல விளைவுகளுக்குப் பாத்திரமாக இருப்பதால், தீமையின் படைப்பு தீமையாகாது. மாறாக நன்மையாகும். ஆம் முஃதஸிலாக்கள் இந்தத் தாத்பரியத்தை விளங்கிக்கொள்ளாமையினால் தான், “தீமையின் படைப்பு தீமையாகும், அசிங்கத்தின் படைப்பு அசிங்கமாகும்” என்று கூறி அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு -தீமைகளின் படைப்பை அவனிடம் ஒப்படைக்காமல்- வழிகேட்டில் வீழ்ந்துவிட்டனர். وَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ என்ற ஈமானுடைய ஒரு தூணுக்கு இல்லாத வியாக்கியானங்களை அளித்தனர். கேளிவியிலிருக்கும் இரண்டாவது பகுதி, “பெரும் பவங்களை செய்பவன் எவ்வாறு முஃமினாக இருக்க முடியும்?” என்பதாகும். அதற்கான பதில்: முதலாவதாக, அவர்களுடைய தவறுகள் எத்தகையவை என்பது முன்னைய அடையாளங்களில் சந்தேகத்துக்கிடமின்றித் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதால் அவற்றை மீட்டுவதற்கான அவசியம் கிடையாது. இரண்டாவதாக, மனித நஃப்ஸானது தயார் நிலையிலுள்ள, உடனடியான ஒரு பிடி இன்பத்தை, ஒத்திவைக்கப்பட்ட மறைவான ஒரு குவியல் இன்பத்துக்குப் பதிலாக தெரிவுசெய்யக் கூடியதாக இருப்பதைப் போன்றே உடனடியாகக் கிடைக்கப் போகும் ஓர் அடி மீதான அச்சம் காரணமாக, என்றோ வர இருக்கும் ஒரு வருடம் நீளமான சித்திரவதைகளை விட அதிகமாக தயக்கத்துக்காளாகும். அவ்வாறே மனிதனில் உணர்ச்சிகள் மேலோங்குமாக இருந்தால், அந்த நிலையில் அறிவின் புத்திமதிகளுக்குக் காதுகொடுப்பதில்லை. இந்நிலையில் இச்சைகளும் மாயைகளும் ஆதிக்கம் செலுத்தி மிக அற்பமான, எந்தவிதப் பயனுமற்ற ஒரு தயார் நிலை இன்பத்தைப் பின்னர் வர இருக்கும் மிகப் பெரியதொரு பிரதிபலனுக்குப் பதிலாகத் தெரிவுசெய்யும். அத்தோடு கண் முன்னால் தயார் நிலையில் இருக்கின்ற சிறியதொரு இன்னலிலிருந்து, பின்னால் ஒத்திவைக்கப்பட்ட மிகப் பெரியதொரு வேதனையைவிட அதிகம் தயக்கம்கொள்வான். ஏனெனில் மாயைகளும் இச்சைகளும் உணர்ச்சிகளும் எதிர்காலத்தைப் பார்க்க முடியாத அளவு குருடானவையாகும். சில போது அப்படியொன்று இருப்பதையே நிராகரிக்கின்றன. இவற்றுக்கு நஃப்ஸும் பக்கபலமாக இருந்தால் ஈமானுக்குரிய இடங்களான உள்ளமும் அறிவும் மௌனித்துப் போய்த் தோல்வியடைந்து விடுகின்றன. இந்நிலையில் மனிதர்கள் ஈமான் இன்மையால் அன்றி உணர்ச்சிகள், மாயைகள், இச்சைகள் என்பவற்றின் மேலாதிக்கத்தினாலும் அறிவு, ஆன்மா என்பவற்றின் தோல்வியினாலுமே பெரும் பாவங்களில் நுழைகின்றனர். மேலும் முன்னைய அடையாளங்களில் தெளிவுபடுத்தப்பட்டதைப் போன்று தீமைகளினதும் இச்சைகளினதும் பாதை சீர்குழைத்தல் என்பதால், அது மிகவும் இலகுவான பாதையாகும். மனித ஜின் ஷைத்தான்கள் மனிதர்களை விரைவாக அந்தப் பாதைக்கு இழுத்தெடுக்கின்றனர். தெளிவான ஹதீஸ்களின்படி, நித்திய உலகில் ஈயின் இறக்கை அளவான ஓர் இன்பமும் நித்தியமானது என்பதால், அது இந்த உலகில் ஒரு மனிதனின் ஆயுட்காலம் முழுவதிலும் கண்டுகொண்ட அத்தனை இன்பங்களுக்கும் ஈடானதாக இருக்கின்ற போது, சில நாதியற்ற மனிதர்கள் ஓர் ஈயின் இறக்கை அளவேயான இந்தத் தற்காலிக உலகின் இன்பங்களை, இந்த உலகோடு எந்த வகையிலும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாத நித்திய உலகின் இன்பங்களுக்குப் பகரமாகத் தெரிவு செய்து ஷைத்தானின் பின்னால் செல்வது, உண்மையில் மிகவும் ஆச்சரியப்படத்தக்க ஒரு நிலைமை தான். இதோ இவ்வாறான யதார்த்தங்களின் காரணமாகத் தான் சர்வ ஞானம் பொருந்திய குர்ஆன் ஒரே விடயத்தை அதிகமதிகம் மீட்டுவதன் மூலமும் பலமான அச்சுறுத்தல்கள் ஆர்வமூட்டல்கள் மூலமும் பாவங்களிலிருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறும் நண்மைகளின்பால் விரையுமாறும் அழைப்பு விடுக்கின்றது. ஒரு சமயம் சர்வ ஞானமிக்க குர்ஆனுடைய இந்த மீட்டல்களுடன் கூடிய கடுமையான உபதேசங்கள் எனக்குள் பின்வரும் சிந்தனைக் கிளறலை ஏற்படுத்தியது. இந்த அளவு தொடர்ந்தேர்ச்சையான நினைவூட்டல்களும் புத்திமதிகளும் முஃமின்கள் உறுதியற்றவர்கள் அல்லது சத்தியத்தைவிட்டும் தொலைவானவர்கள் போன்ற தோற்றப்பாட்டை வழங்குகின்றதே. இது மனிதனுடைய கண்ணியத்துக்குப் பங்கம் ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலைமையை ஏற்படுத்துவதாக அல்லவா இருக்கின்றது. ஏனெனில், ஓர் உத்தியோகத்தன் தனது மேலதிகாரிக்கு வழிப்படுவதற்கு அவரிடமிருந்து வருகின்ற ஒரு கட்டளையே போதுமானதாக இருக்கின்ற போது, ஒரே கட்டளை பத்து முறை மீட்டப்பட்டால் அந்த உத்தியோகத்தன் உண்மையிலேயே சங்கடப்படுவான். என் மீது நீங்கள் சந்தேகப்படுகின்றீர்கள், நான் துரோகி அல்ல என்று முகத்தில் எறிவான். ஆனால் மிகப் பரிசுத்தமான முஃமின்களுக்கு சர்வ ஞானமிக்க குர்ஆன் ஏதோ நச்சரிப்பதைப் போன்று தொடர்ந்தேர்ச்சையாகக் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருக்கின்றதே என்று அங்கலாய்த்தேன். இந்த சிந்தனை எனது மூளையைக் காவிக்கொண்டிருந்த ஒரு சமயம் எனக்கருகில் மிகவுமே விசுவாசமான இரண்டு, மூன்று தோழர்கள் காணப்பட்டனர். அந்த நாட்களில் அவர்கள் மனித ஷைத்தான்களின் சூழ்ச்சிகளுக்குள் அகப்பட்டுவிடாதிருக்க வேண்டும் என்பதற்காக நான் அவர்களுக்கு அதிகமதிகம் புத்திமதி கூறுபவனாகவும் நினைவூட்டுபவனாகவும் இருந்தேன். என்றாலும் “எம் மீது சந்தேகப்படுகின்றீர்கள்” என்று அவர்கள் சங்கடத்துக்காளாகவில்லை. ஆனால் நானோ எனதுள்ளத்தில் “இதனால் இவர்கள் சங்கடப்படுகின்றார்களோ! விசுவாசமின்மை, பற்றுறுதியின்மை என்பவற்றைக்கொண்டு அவர்களை கேள்விக்குட்படுத்துகிறேனோ!” என்று நினைத்தவனாக இருந்தேன். பிறகு முன்னைய அடையாளங்களில் தெளிவுபடுத்தி நிரூபிக்கப்பட்ட உண்மைகள் சடுதியாக எனதுள்ளத்தில் உதித்தன. அந்த உண்மைகளின் மூலமாக சர்வ ஞானம் பொருந்திய குர்ஆனானது சரியான இடத்தில், சரியான நேரத்தில், எந்த விதமான வீண்விரயமுமின்றி, மகத்தான ஞானத்தோடு, நிலைமையின் வேண்டலுக்கு சாலப் பொருத்தமான அமைப்பில், விசுவாசம், பற்றுறுதி என்பவற்றை கேள்விக்குற்படுத்தாத விதத்திலேயே தொடர்ந்தேர்ச்சையாக நினைவூட்டிக்கொண்டிருக்கின்றது என்பதையும், இது தூய ஞானத்தின் வெளிப்பாடான அச்சொட்டான சொல்லாட்சியாகும் என்பதையும் அறிந்துகொண்டேன். ஆம் மேற்படி சத்தியத்தை சுருக்கமாகப் பின்வருமாறு கூறலாம். ஷைத்தான்கள் அழித்தலை நோக்கி அழைத்துச் செல்கின்ற காரணத்தினால் சிறியதொரு காரியத்தின் மூலமாக ஏகப்பட்ட மகத்தான தீங்குகளை அரங்கேற்றுகின்றன. எனவே சத்தியப் பாதையில் பயணிக்கின்ற ஹிதாயத்தை உடையவர்கள் அதிக முன்னெச்சரிக்கையோடும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் இருப்பதற்கு தொடர்ந்தேச்சையான நினைவூட்டல்களின்பாலும் அதிகரித்த உதவி ஒத்தாசைகளின்பாலும் தேவையுடையவர்களாக இருக்கின்றனர். எனவே தான் வல்லோன் அல்லாஹ் அந்தத் தொடர்ந்தேர்ச்சையான மீட்டல்களின் மூலமாகவும் தனது ஆயிரத்தி ஒரு நாமங்களின் மூலமாகவும் ஈமான் கொண்டவர்களுக்கு உதவியளிக்கின்றான். தனது ஆயிரமாயிரம் கருணைக் கரங்களை நீட்டுகின்றான். இதன் மூலம் மனிதனுடைய கண்ணியத்துக்கு எந்த விதமான கலங்கமும் ஏற்படுத்தப்படுவதில்லை. மாறாக அவனது கண்ணியம் பாதுகாக்கப்படுகின்றது. மனிதனுடைய அந்தஸ்தில் குறைவு ஏற்படுத்தப்படுவதில்லை. மாறாக ஷைத்தானுடைய தீங்குகளின் பாரதூரம் உணர்த்தப்படுகின்றது. இதோ! சத்தியப் பாதையில் பயணிக்கும் ஹிதாயத்தை உடையவர்களே! மனித, ஜின் ஷைத்தான்களின் மேற்படி சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு, அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் ஆகிய சத்தியவான்களுடைய மத்ஹபை மத்தியஸ்தளமாகக்கொள்ளுங்கள்! அற்புதமிக்க தெளிவுரையாகிய குர்ஆனுடைய உறுதியான கோட்டைக்குள் நுழைந்துகொள்ளுங்கள்! மேலான சுன்னாக்களை வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளுங்கள்! நிம்மதியும் மகிழ்ச்சியும் இவற்றில் தான் இருக்கின்றன.
கேள்வி: முன்னைய அடையாளங்களில், வழிகேட்டின் பாதை இலகுவானதாகவும் சீர்குழைத்தலாகவும் அத்துமீறலாகவும் இருப்பதால் அதிகமானவர்கள் அந்தப் பாதையில் முன்னேறுகின்றனர் என்பதைப் பார்த்தோம். ஆனால் ரிஸாலே நூரின் வேறு பல இடங்களில் மிகவுமே உறுதியான அத்தாட்சிகளின் மூலமாக “குஃப்ர் மற்றும் வழிகேட்டுடைய பாதையானது ஏகப்பட்ட கஷ்டங்களாலும் சிக்கல்களாலும் அசாத்தியப்பாடுகளாலும் நிறைந்தது என்பதையும், புத்தியுள்ள எந்த ஒருவனும் அந்தப் பாதையில் அடியெடுத்து வைக்காதிருப்பது அவ்சியப்படுகின்றது என்பதையும், அதே நேரம் ஈமான் மற்றும் ஹிதாயத்துடைய பாதையானது மிக இலகுவானதும் தெளிவானதும் பிரகாசமானதும் என்பதையும், அனைவரும் அதில் பயணம் செய்வதற்காக முந்தியடித்துக்கொள்வது அவசியப்படுகின்றது என்பதையும்” நிறுவியுள்ளீர்கள்? பதில்: குஃப்ரும் வழிகேடும் இரண்டு பகுதிகளைக்கொண்டதாகும். அதில் ஒரு பகுதி அமல் சார்ந்த கிளையம்சமாகும். இந்தப் பகுதி இலகுவானதாகும். இங்குள்ள வழிமுறை ஈமானிய அடிப்படைகளை மறுப்பதும் ஏற்றுக்கொள்ளாதிருப்பதுமாகும். அதாவது சத்தியத்தை ஏற்றுக்கொள்ளாமல் புறக்கணிப்பதாகும். இது சூன்யம் அல்லது இல்லாமை சார்ந்த ஒரு செயலாகும்; இல்லாமையை ஏற்றுக்கொள்வதாகும். இந்தப் பகுதியே ரிஸாலே நூரின் பல்வேறு இடங்களில் இலகுவானதாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பகுதியைப் பொருத்தவரை, அது அமல் சார்ந்ததாகவோ அல்லது கிளை சார்ந்ததாகவோ அன்றி நம்பிக்கைக் கோட்பாடு சார்ந்த, சிந்தனா ரீதியான ஒரு தீர்ப்பாகும். இது வெறுமனே ஈமானை மறுத்துவிட்டுச் செல்கின்ற ஒரு செயலன்றி ஈமானிய சத்தியங்களுக்கு நேரெதிராகச் சென்று நேர் முரணான ஒரு பாதையைத் திறப்பதாகும். இந்தச் சமாச்சாரம் பொய்யை ஏற்றுக்கொள்வதாகும்; சத்தியத்துக்குப் புறம்பானதை நிறுவுவதற்கான முயற்சியாகும். இந்தப் பகுதி வெறுமனே ஈமானை மறுப்பதோ அல்லது நிராகரிப்பதோ அன்றி ஈமானுக்கு நேர் முரணானதை ஏற்றுக்கொள்வதாகும். இது இருப்பை ஏற்றுக்கொள்ளாமலிருப்பதைப் போன்ற இலகுவான ஒரு காரியமல்ல. மாறாக, சூன்யத்தையும் இல்லாமையையும் ஏற்றுக்கொள்வதாகும். அவ்வாறெனில் நிரூபிக்கப்பட்டால் மாத்திரமே அவ்வாறானதொரு சூன்யம் ஏற்றுக்கொள்ளப்பட முடியும். اَلْعَدَمُ لاَ يُثْبَتُ என்ற விதியின்படி இல்லாமையை நிறுவுவது எந்த வகையிலும் இலகுவான காரியமல்ல. ஆம், ரிஸாலே நூரின் பிற பகுதிகளில் சாத்தியமற்றதாகவும் சிக்கல்கள் நிறைந்ததாகவும் காட்டப்படுவது குஃப்ர் மற்றும் வழிகேட்டுடைய இந்தப் பகுதியாகும். அணுவளவேனும் பிரக்ஞையுள்ள ஒருவன் இந்தப் பாதையில் பயணிக்காதிருப்பது அவசியமாகும். இந்தப் பாதையில் காணப்படுகின்ற பயங்கர வேதனைகளும் திணரடிக்கும் இருள்களும் அறிவு தெளிந்த நிலையிலுள்ள எவரையும் அதில் செல்லவிடாது தடுக்கும் என்பதை பல்வேறு இடங்களில் ஆணித்தரமாக நிறுவியுள்ளோம். ஒரு வேளை வினவப்பட்டால்: இந்த அளவு இருள் சூழ்ந்த, வேதனைகளும் சிக்கல்களும் நிறைந்த இந்தப் பாதையில் அதிகமான மனிதர்கள் எவ்வாறு பயணித்துக்கொண்டிருக்கின்றனர். பதில்: உள்ளே வீழ்ந்து கிடப்பதால் வெளியேற முடியாதவர்களாக இருக்கின்றனர். மனிதனில் காணப்படுகின்ற தாவரம் சார்ந்த உணர்வுகளும் மிருக இச்சைகளும் இறுதி முடிவைக் காண முடியாதவையாகவும், அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவோ சிந்திக்கவோ முடியாதவையாகவும், மனிதனிடமுள்ள மனித உணர்வுகளை மிகைத்துவிடுவதாகவும் இருப்பதால் மனிதன் அந்த நிலைமையிலிருந்து வெளியேற விரும்பாமல், தயார் நிலையிலுள்ள தற்காலிகமான இன்பங்களைக்கொண்டு தன்னைத் தானே ஆசுவாசப்படுத்திக்கொள்கின்றான். கேள்வி: வழிகேட்டில் இப்படிப்பட்ட பயங்கரமான வேதனைகளும் ஒரு வகை அச்ச நிலையும் காணப்படும் போது நிராகரிப்பாளர்களுடைய வாழ்க்கையில் இன்பம், மகிழ்ச்சி போன்ற விடயங்களெல்லாம் ஒரு புறமிருக்க, அவர்கள் வாழாமல் தற்கொலை செய்துகொள்வது அவசியப்படுகின்றது. ஏனெனில் நிராகரிப்பிலுள்ள வேதனை அவனைக் கசக்கிப் பிழியக் கூடியதாகவும் அந்த அச்சம் அவனது நெஞ்சை வெடிக்கச் செய்வதாகவும் இருக்கின்றது. ஏனெனில் மனிதன், மனிதன் என்ற வகையில் வஸ்துக்கள் மீதான எல்லையற்ற ஒரு மோகமும் வாழ்க்கையின் மீதான தீராத ஒரு காதலும் கொண்டவனாக இருக்கின்றான். ஆனால் குஃப்ரோ, மரணத்தை ஒரு நித்திய அழிவாகவும், மீட்சியே இல்லாத ஒரு பிரிவாகவும், வஸ்துக்களுடைய முடிவாகவும் காட்டிக்கொண்டிருக்கின்றது. மாத்திரமல்ல உற்றார், உறவினர்கள், நேசத்துக்குறியவர்களுடைய மரணத்தையும் கூட முடிவான அழிவாகவும் முடிவே இல்லாத பிரிவாகவும் காட்டுகின்றது. இந்த நம்பிக்கையோடு இப்படிப்பட்ட அழிவுகள் பிரிவுகளையெல்லாம் கண்களுக்கு முன்னால் காண்கின்ற மனிதன் எவ்வாறு மனிதனாக வாழ முடியும்? எவ்வாறு வாழ்விலிருந்து இன்பம் அனுபவிக்க முடியும்? பதில்: விசித்திரமானதும் மாயைமானதுமான ஒரு ஷைத்தானியப் பசப்புக்கு மயங்கி, தம்மைத் தாமே ஏமாற்றிக்கொண்டவர்களாக வாழ்வைத் தொடர்வார்கள். வெளிப்படையில் மாத்திரம் ஏதோ இன்பமனுபவிப்பதாக நினைத்துக்கொள்வார்கள். பிரபலமான ஓர் உதாரணத்தின் மூலமாக இந்த மனிதனுடைய உண்மை நிலையை விளங்கிக்கொள்ள முடியும். அதாவது, “ஒட்டகப் பறவை என்றழைக்கப்படும் தீக்கோழியிடம் “உன்னிடம் இறக்கைகள் இருக்கின்றன, பறந்து செல்! என்று கூறப்பட்டது.” அது தனது இறக்கைகளை மடித்துக்கொண்டு, “நான் ஒட்டகமாவேன்” என்று கூறி பறக்காமல் இருந்து விட்டது. பின்னர் வேட்டைக் காரனின் வலைக்குள் மாட்டிக்கொண்ட சமயம், வேடன் தன்னைக் கண்டுவிடக் கூடாதே என்று தலையை மண்ணுக்குள் புதைத்துக்கொண்டது. ஆனால் தனது பெருத்த முண்டம் வேட்டைக்காரனுக்கு இலக்காகும் வண்ணம் அப்படியே இருந்தது. பின்னர் அதனிடம் மீண்டும், “உண்மையிலேயே நீ ஒட்டகமாவாய். உன்னிடம் பலமும் இருக்கின்றது. சுமைகளை இழுப்பதற்கு ஒத்துக்கொள்!” என்று கூறப்பட்டது. அப்பொழுது தனது இறக்கைகளை விரித்து “நான் பறவையாவேன்” என்று கூறிவிட்டு அந்தச் சுமையால் ஏற்படுகின்ற கஷ்டத்திலிருந்தும் தன்னை விடுவித்துக்கொண்டது. ஆனால் இறுதியில் வேட்டைக் காரர்களுடைய இறையாக மாறியது. சரியாக இதைப் போன்றே, காபிர் குர்ஆனுடைய அகிலார்ந்த அழைப்புக்கு முன்னால் முத்லக்கான குஃப்ரை விட்டுவிட்டு பசப்பான ஒரு குஃப்ரை நோக்கிப் பின்வாங்கிக்கொண்டான். அவனிடம், “உண்மையிலேயே மரணத்தையும் பிரிவையும் நித்திய அழிவாகவும் நித்திய பிரிவாகவும் கருதுகின்றாய். மரணம் என்ற அந்தத் தூக்கு மேடையும் கூட எப்போதுமே உனது கண்களுக்கு முன்னால் காட்சியளித்துக்கொண்டிருக்கின்றது. சதாவும் அதைப் பார்த்துக்கொண்டிருப்பவனால் எவ்வாறு வாழ முடியும்? அப்படிப்பட்ட ஒரு வாழ்வில் எவ்வாறு இன்பமனுபவிக்க முடியும்?” என்று கேட்கப்பட்டால், அந்த மனிதன் குர்ஆனுடைய வியாபித்த ரஹ்மத்தின் ஒரு சிறிய கீற்றிலிருந்து படரும் ஒளியின் துனைகொண்டு, “மரணம் ஒரு நித்திய அழிவாக இருக்க முடியாது. அதில் நித்திய வாழ்வுக்கான ஒரு சாத்தியப்பாடு இருக்கின்றது” என்று கூறிக்கொள்வான். அல்லது தீக்கோழியைப் போன்று தனது தலையை பொடுபோக்கு என்ற மண்ணுக்குள் புதைத்துக்கொள்வான். இதன் மூலம் அஜல் தன்னைப் பார்க்காதிருக்கட்டும் என்றும் மண்ணறை அவனைக் காணாதிருக்கட்டும் என்றும் வஸ்துக்களுடைய மரணங்கள் அவனை நோக்கி அம்பெறியாதிருக்கட்டும் என்று ஆசிப்பான். சுருக்கமாக இவ்வாறு சந்தேகத்துக்கிடமான குஃப்ருக்குள் இருந்துகொண்டு -தீக்கோழியைப் போன்று- மரணத்தையும் பிரிவையும் நித்திய அழிவாகக் காண்கின்ற போது, குர்ஆனினதும் பிற இறை வேதங்களினதும் மறுமையை ஈமான் கொள்வது சம்பந்தமான தீர்க்கமான செய்திகளின் அடிப்படையில் மறுமை இருக்கலாம் என்பதை ஒரு சாத்தியக்கூறாக எடுத்து அப்போதைக்கு அந்த நிலைமையை சமாளித்துக்கொள்கிறான். இவ்வாறு அந்த நிராகரிப்பாளன் மரணத்தையும் பிரிவையும் நித்திய அழிவாகக் காண்பதால் ஏற்படும் பயங்கரமான வேதனைகளைத் தன் மீது ஏற்றுக்கொள்ளாது உதறித் தள்ளிவிடுகின்றான். அப்போது அவனிடம், “உண்மையிலேயே நித்தியமான ஓர் உலகிற்குப் போகப் போகின்றாய். அந்த உலகில் அழகாக வாழ்வதற்கு -ஒரு சில கஷ்டங்கள் இருந்தாலும்- மார்க்கத்தின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பது அவசியமாகும்” என்று கூறப்பட்டால், அந்தக் கஷ்டங்களிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக மீண்டும் சந்தேகத்துக்கிடமான குஃப்ருடைய நாவினால், “சிலவேளை அப்படியெல்லாம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை. இல்லாத ஒன்றுக்காக ஏன் வீனாகக் கஷ்டப்பட வேண்டும்” என்று கூறுவான். அதாவது சந்தர்ப்பத்திற்கேற்ப அந்தக் குர்ஆனியத் தீர்ப்பிலிருந்து பெற்றுக்கொண்ட நித்திய வாழ்வுக்கான சாத்தியப்பாட்டைச் சார்ந்து நின்று நித்திய அழிவைச் சிந்திப்பதால் ஏற்படுகின்ற வேதனைகளிலிருந்து தப்பித்துக்கொள்வான். மறுபுறம் மார்க்கக் கட்டளைகளிலுள்ள கஷ்டங்கள் அவனை அணுக முனையும் போது, அந்தக் கஷ்டங்களுக்கு முகம் கொடுப்பதற்காக சந்தேகத்துக்கிடமான குஃப்ர் அவனுக்கு வழங்கிய இல்லாமைக்காக்கான சாத்தியப்பாட்டைப் பற்றிக்கொண்டு அதனால் ஏற்படுகின்ற கஷ்டங்களிலிருந்தும் தப்பித்துக்கொள்வான். ஆகவே முஃமினைவிட அதிகமாக இந்த வாழ்வில் இன்பம் அனுபவிப்பதாக நினைத்துக்கொள்கின்றனர். ஏனெனில் தீனுடைய கட்டளைகள் காரணமாகப் பிறக்கின்ற கஷ்டங்களிலிருந்து குஃப்ரிய்ய சாத்தியப்பாட்டைக்கொண்டு தப்பித்துக்கொள்கிறான். மறுபுறம், நித்திய அழிவைச் சிந்திப்பதன் காரணமாக ஏற்படுகின்ற எண்ணிலடங்கா வேதனைகள் கைசேதங்களை ஈமானிய சாத்தியப்பாட்டைக்கொண்டு தன்னைவிட்டும் திசை திருப்பிவிடுகின்றான். உண்மை என்னவென்றால், இந்த ஷைத்தானிய மாயையுடைய மட்டு பகல் குருட்டுத்தனமானதும் பிரயோசனமற்றதும் தற்காலிகமானதுமாகும். ஆம், சர்வ ஞானம் பொருந்திய குர்ஆனுடைய ரஹ்மத்திலிருந்து குஃப்பார்களுக்கும் ஒரு பங்கு இருக்கின்றது. இதனால் தான் அவர்களுடைய உலக வாழ்க்கை நரக வாழ்க்கையாக மாறிவிடாமலிருக்கின்றது. குர்ஆன் அவர்களுடைய உள்ளங்களில் ஒரு வகையான சந்தேகத்தைப் போட, அவர்கள் அந்த சந்தேகத்தைக்கொண்டு ஆறாத வேதனைகளை தற்காலிகமாகவேனும் திசைதிருப்பி விடுகின்றனர். இல்லாவிட்டால் இந்த உலகிலும் கூட மறுமையுடைய நரகத்தைக் கண் முன்னால் நிழலாடச் செய்கின்ற அளவு ஆத்மார்த்தமான ஒரு வேதனையை அனுபவித்திருப்பார்கள். ஈமான்கொண்டவர்களே! உங்களை நித்திய அழிவிலிருந்தும் உலக மற்றும் மறுமை நரகங்களிலிருந்தும் பாதுகாக்கின்ற குர்ஆனுடைய குடைக்குக் கீழால் முஃமின்களைப் போல், உண்மையான விசுவாசிகளைப் போல் நுழைந்துகொள்ளுங்கள்! மேலான சுன்னாக்களுடைய எல்லைக்குள் சரனாகதியோடும் சந்தோசமாகவும் சங்கமமாகிவிடுங்கள்! உலகியல் நெருக்கடிகளிலிருந்தும் மறுமை வேதனைகளிலிருந்தும் விடுதலை பெற்றுக்கொள்ளுங்கள்!
கேள்வி: ஹிஸ்புல்லாஹ் ஆகிய ஹிதாயத்தை உடையவர்களும் குறிப்பாக அந்த அணியின் தலைவர்களான நபிமார்களும் அதிலும் குறிப்பாக பிரபஞ்சத்துக்கே பெருமையாகத் திகழ்ந்த ஃபஹ்ருல் ஆலம் ரஸுலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களும், அந்த அளவு அல்லாஹ்வுடைய ஈகைகளாலும் ரஹ்மத்தாலும் உதவிகளாலும் ஆகர்ஷிக்கப்பட்டவர்களாக இருக்க, ஏன் பல தடவைகள் ஹிஸ்புஷ் ஷைத்தான்களாகிய வழிகேடர்களிடம் தோல்வியடைந்தனர்? கூடவே ஹாதமுல் அன்பியா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய சூரியன் போன்று பிரகாசமான நுபுவ்வதுக்கும் ரிஸாலத்துக்கும், அவர்களுக்கு இறக்கிவைக்கப்பட்ட ஒட்டுமொத்தப் பிரபஞ்சத்துடைய ஈர்ப்புச் சக்தியை விடவும் ஈர்ப்புச் சக்தி வாய்ந்த குர்ஆனிய சத்தியங்களுக்கும், அந்தச் சத்தியங்களுடைய சஞ்சீவி போன்ற நேர்வழிக்கும் முன்னால், மதீனத்து முனாபிக்கள் வழிகேட்டில் விடாப்பிடியாக இருந்துகொண்டு ஹிதாயத்தினுள் நுழையாதிருந்தமைக்கான காரணம் என்ன? இதிலுள்ள தாத்பரியம் என்ன? பதில்: இந்த இரு பகுதிகளைக்கொண்ட கடுமையான கேள்விக்குள் இருக்கின்ற சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆழமான தாத்பரியங்களைப் பொதியப்பெற்ற இரண்டு அடிப்படைகளைத் தெளிவுபடுத்துவது அவசியமாகும். இந்தப் பிரபஞ்சத்துடைய மாட்சிமைமிக்க படைப்பாளனுடைய இரண்டு வகையான நாமங்கள் காணப்படுகின்றன. ஒன்று அவனது அழகு (ஜமால்) சார்ந்த நாமங்களும் மற்றது அவனது மாட்சிமை “ஜலால்” சார்ந்த நாமங்களுமாகும். இந்த இரண்டு வகையான நாமங்களும் அவற்றின் நியதிகளை வெவ்வேறுபட்ட பிரதிபலிப்புகளினூடாக வெளிப்படுத்துவது அவசியப்படுகின்றது. இதனால் மாட்சிமைமிக்க படைப்பாளன், பிரபஞ்சத்தில் முரண்பாடுகளை ஒன்றோடொன்று கலந்து, ஒன்றையொன்று எதிரெதிரே கொண்டுவந்து, அவற்றுக்கு மத்தியில் ஒன்றின் மீது ஒன்று அத்துமீறுதல், ஒன்றிடமிருந்து ஒன்று தற்காத்துக்கொள்ளல் போன்ற நிலைமைகளை வழங்கி இவற்றின் மூலமாக பல்வேறு தாத்பரியங்களையும் பயன்களையும் பொதியப்பெற்ற மோதல்களைத் தோற்றுவிக்கின்றான். அதாவது முரண் நிலைகளை ஏனையவற்றின் எல்லைகளில் நிறுத்தி முரண்பாடுகளையும் மாற்றங்களையும் தோற்றுவிப்பதன் மூலமாக இந்தப் பிரபஞ்சத்தில் நிலை மாற்றச் சட்டங்களை நிறுவி அந்தப் பிரபஞ்சத்தை முன்னேற்றம் அபிவிருத்தி பூரணத்துவம் போன்றவற்றுக்குப் பாத்திரமானதாக ஆக்கியுள்ளான். ஆம், இந்தப் பிரபஞ்ச விருட்சத்தின் மிகவும் உள்ளடக்கமான கனியாகிய மனித வர்க்கத்துக்குள்ளும் அந்த மோதல் விதியை மிகவுமே ஆச்சரியத்துக்குரிய ஓர் அமைப்புக்குள் கொண்டு வந்து, அதை மொத்த மனித மேம்பாட்டுக்குமான ஒரு வாயிலாக ஆக்கி வைத்துள்ளான். எனவே அல்லாஹ்வின் அணியினருடன் மோத முடியுமான அமைப்பில் ஷைத்தானிய அணியினருக்கு சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆம், இந்த நுணுக்கமான தாத்பரியத்தின் காரணமாகத் தான், நபிமார்கள் பல தடவைகள் வழிகேடர்களுக்கு முன்னால் தோல்வியடைய நேர்ந்தனர். மிகுந்த இயலாமையிலும் பலவீனத்திலும் இருக்கின்ற வழிகேடர்களும் கூட ஆன்மீக ரீதியில் மிகவுமே பலம் வாய்ந்த சத்தியவான்களுக்கெதிராக ஒரு தற்காலிக வெற்றியைப் பெற்றுக்கொண்டு அதன் மூலம் சத்தியவான்களுக்கெதிரான தமது போராட்டத்தில் தாக்குப்பிடிக்கின்றனர். உண்மையில் இவ்வாறு தொடர்ந்தும் தாக்குப் பிடிப்பது ஆச்சரியப்படத்தக்க ஒரு விடயம் தான். அதிலுள்ள தாத்பரியம் ஏற்கனவே கூறப்பட்டுள்ளதைப் போன்று, வழிகேடும் குஃப்ரும் இல்லாமை சார்ந்தவையாகவும் புறக்கணிப்பாகவும் இருப்பதாகும். எனவே இவை செயற்பாடற்றவை என்பதால் மிகவும் இலகுவானவையாகும். அவ்வாறே வழிகேட்டிலும் குஃப்ரிலும் இருக்கின்ற இன்னுமொரு அம்சம் அழித்தலாகும். இதற்கும் அற்பமானதொரு செயற்பாடு போதுமாக இருப்பதால் மிகச் சுலபமான ஓர் அம்சமாகும். அதன் இன்னுமொரு பண்பாக இருப்பது அத்துமீறலாகும். இங்கும் சிறிய ஒரு நடவடிக்கை மூலமாக ஏராளமானவர்களுக்கு இழப்புகளையும் பயத்தையும் பீதியையும் ஏற்படுத்த முடியுமாக இருக்கின்றது. அந்தப் பயத்தைக் கொண்டு பிர்அவ்னியத்தான முறையில் அவர்கள் மீது ஒரு பதவியைப் பெற்றுக்கொள்கின்றனர். மாத்திரமன்றி விளைவைக் கண்டுகொள்ள முடியாதவையாகவும், தயார் நிலை இன்பங்களுக்கு முன்னால் மயங்குபவையாகவும் இருக்கின்ற மனிதனுடைய மிருக மற்றும் தாவரம் சார்ந்த உந்தல்களுக்கு, அவற்றுக்கென்றே உரிய இன்பங்களும் சுவைகளும் தன்னிச்சைப் போக்குகளும் காணப்படுகின்றன. இவை அறிவு, உள்ளம் போன்ற அழகிய அவயவங்களை, அவற்றின் -மனிதனுக்கு மான்பு சேர்க்கின்ற- அறிவுபூர்வமான பணிகளிலிருந்தும் விளைவுகளைச் சிந்தித்து அதற்கேற்ப எச்சரிக்கையாக செயற்படுவதிலிருந்தும் தடுக்கின்றன. ஆனால் நேர்வழியிலுள்ளவர்களுடைய, குறிப்பாக நபிமார்களுடைய, அதிலும் குறிப்பாக ஹபீபு ரப்புல் ஆலமீன் ஆகிய ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய புனிதமான பணிகள் மெய்ந்நிலை சார்ந்தவையாகவும், தர்க்கபூர்வமானவையாகவும், தெளிவான வறையறைகளைக் கொண்டவையாகவும், நிறுவலாகவும், நிர்மானமாகவும் சீரமைப்பதாகவும், இறுதி விளைவைப் பற்றி சிந்திப்பதாகவும், உபூதியத்தாகவும், நஃப்ஸுல் அம்மாராவுடைய பிர்அவ்னியத்தான சுயாதீனப் போக்கை உடைப்பதாகவும் இருக்கின்றன. இந்த உன்னதமான அடிப்படைகளின் காரணமாகத் தான், மதீனா முனவ்வராவில் வாழ்ந்த அந்தக் காலத்து முனாபிக்கள், அந்தப் பிரகாசமான சூரியனுக்கு முன்னால் வௌவ்வால் போன்று தமது கண்களை மூடிக்கொண்டு, அந்த மாபெரும் ஈர்ப்புச் சக்திக்கு முன்னால் ஒரு ஷைத்தானியக் கயிற்றைப் பற்றிக்கொண்டு வழிகேட்டிலேயே இருந்துவிட்டனர். இந்த இடத்தில் பின்வருமாறு வினவப்பட்டால்: உண்மையில் ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் ஹபூபுர் ரப்புல் ஆலமீன் ஆவார்கள். எப்போதும் அவர்களுடைய கையில் சத்தியமும் நாவில் உண்மையுமே காணப்பட்டன. அண்ணாருடைய இராணுவத்தின் ஒரு பகுதி மலக்குமார்களாக இருந்தனர். அவ்வாறே தனக்கு வழங்கப்பட்ட அற்புதங்களின் மூலமாக ஒரு கவளம் நீரைக்கொண்டு ஒரு படைக்கே நீரும், நான்கு பிடி கோதுமையையும் ஓர் ஆட்டுக்குட்டியின் இறைச்சியையும் வைத்து ஆயிரம் பேருக்கு வயிறு நிறைய ஆகாரமும் புகட்டினார்கள். ஒரு பிடி மண்ணை எறிவதன் மூலமாக அனைத்துக் குஃப்பார்களுடைய கண்களுக்குள்ளும் ஒரு பிடி மண்ணை நுழையச் செய்து அவர்களை விழிபிதுங்கச் செய்தார்கள். இவையும் இவை போன்ற அற்புதங்களையும் வைத்திருந்த ஒரு ரப்பானியத் தளபதி, உஹதின் முடிவிலும் ஹுனைனின் ஆரம்பத்திலும் எவ்வாறு தோல்வியைத் தழுவ நேர்ந்தது. பதில்: ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் மனித குலத்துக்கான முன்னோடியாகவும் இமாமாகவும் வழிகாட்டியாகவும் அனுப்பப்பட்டவர் ஆவார்கள். அந்த மனித குலம் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்வுக்கான விதிகளையும் சர்வ ஞானமிக்க அல்லாஹ்வுடைய கட்டளைகள் என்ன என்பதையும் அவற்றுக்கு எவ்வாறு வழிப்படுவதென்பதையும் அண்ணவர்களிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சமூக மற்றும் தனிப்பட்ட வாழ்வை சதாவும் அற்புதங்கள், ஆச்சர்யங்களோடு கடத்தியிருப்பின், அவர்கள் பூர்த்தியான ஓர் இமாமாகவும் மிகப் பெரிய ஒரு வழிகாட்டியாகவும் இருந்திருக்க முடியாது. ஆம், இந்த உண்மையின் அடிப்படையில் தான் தனது தூதை உண்மைப்படுத்துவதற்காகவும், அவ்வப்போது நிராகரிப்பாளர்களுடைய நிராகரிப்பைப் பொய்யாக்குவதற்காகவும் அற்புதங்களை வெளிப்படுத்தினார்கள். பிற நேரங்களில் ஏனைய அனைவரையும்விட அதிகமாக இறை கட்டளைகளுக்கு அடிபணிந்து நடந்ததைப் போன்றே, இறை ஞானத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட ஆ(d)ததுல்லாஹ் எனப்படும் இறை நியதிகளின் பிரகாரம் காரியமாற்றுவதிலும் ஏனைய அனைவரையும்விட முன்நிலையில் திகழ்ந்தார்கள். எதிரிகளுக்கு முன்னால் கவசமும் அணிந்தார்கள், பதுங்கு குழிகளை அமைக்குமாறு கட்டளையும் இட்டார்கள். காயப் பட்டார்கள், கஷ்டமும் பட்டார்கள். ஆம் இந்த வகையில் இறை ஞானத்துடைய விதிகளுக்கும், பிரபஞ்சத்திலுள்ள “ஷரீஅதுல் ஃபித்ரதுல் குbப்ரா” எனப்படும் மாபெரும் இயல்பு நியதிகளுக்கும் அடிபணிந்து அதன் பிரகாரம் வாழ்வதிலும் ஓர் உதாரணபுருஷராகத் திகழ்ந்தார்கள்.
இப்லீஸுடைய சூழ்ச்சிகளுள் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஒரு சூழ்ச்சி இருக்கின்றது. அதாவது இப்லீஸ் தனது இருப்பைத் தனக்கு வழிப்படுபவர்களுக்கே நிராகரிக்கச் செய்து விடுகின்றான். இந்தக் காலத்தில் குறிப்பாக சடவாதிகளும் இயற்கை விஞ்ஞானத்தின் மூலமாக மண்டையைக் குழப்பிக்கொண்டவர்களும் இந்தத் தெளிவான விடயத்தில் தெளிவற்றவர்களாக இருக்கின்ற காரணத்தினால், ஷைத்தானுடைய இந்தச் சூழ்ச்சி சம்பந்தமாகவும் ஓரிரண்டு வார்த்தைகளைக் கூறுகின்றோம். மனிதர்களுக்கு மத்தியில் ஷைத்தானியப் பணியைச் சிரமேற்கொண்டு செய்யும், உடலுள்ள கெட்ட ஆன்மாக்களை எமது கண்களுக்கு முன்னால் அன்றாடம் காண்கின்றோம். ஜின் இனத்தினுள்ளும் உடலில்லாத கெட்ட ஆன்மாக்களுடைய இருப்பும் அதே அளவு உறுதியானதாகும். ஒரு வேளை அவற்றுக்கு சட ரீதியான உடல்கள் அணிவிக்கப்பட்டால், இந்தத் தீய மனிதர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இருந்திருக்காது. அவ்வாறே மனித உருவில் நடமாடுகின்ற மனித ஷைத்தான்களுடைய உடலை கெட்ட ஆன்மாக்களிலிருந்து பிரித்தெடுக்க முடியுமாக இருப்பின் மீண்டும் ஜின் ஷைத்தான்களோடு அந்தஸ்தில் சரிசமனாக இருந்திருப்பார்கள். இந்த ஒற்றுமையினதும் இருக்கமான தொடர்பினதும் காரணமாகத் தான், ஒரு வழி கெட்ட சிந்தனைப் பிரிவினர், மனித உருவத்தில் நடமாடும் மிகவும் மோசமான கெட்ட ஆன்மாக்கள் மரணித்த பின்னர் ஷைத்தானாக மாறிவிடுகின்றனர் என்று தீர்ப்பு வழங்கியுள்ளனர். உயர் தரமான ஒரு பொருள் கெட்டால், சாமான்யமான ஒரு பொருள் கெடுவதை விட அதிகமாகக் கெட்டுவிடும் என்பது நாமறிந்ததே. உதாரணமாக பாலும் தயிரும் கெட்டுப் போனாலும் கூட இன்னும் சாப்பிட முடியுமாகவே இருக்கும். ஆனால் அவற்றிலிருந்து பெறப்படும் நெய் கெட்டுப் போனால் அதை உண்ண முடியாது, சில போது நஞ்சாகக் கூட ஆகிவிடலாம். அவ்வாறே, சிருஷ்டிகளுக்கு மத்தியில் அதிக கண்ணியத்துக்கும் சங்கைக்குமுரிய மனிதன் கெட்டுப் போனால் கெட்டுப் போன மிருகத்தைவிட அதிகமாகக் கெட்டுவிடுவான். நஜீஸான பொருட்களை மோப்பமிட்டு இன்பமனுபவிக்கும் வண்டுகளைப் போன்று அல்லது பிறரைத் தீண்டி நஞ்சூட்டுவதன் மூலம் களிப்படையும் பாம்புகளைப் போன்று வழிகேட்டுச் சகதிக்குள் இருக்கும் தீமைகள் மற்றும் கெட்ட நடத்தைகளுக்குள் மூழ்கி இன்பமனுபவிப்பான். அதை நினைத்துப் பெருமையும் பட்டுக்கொள்வான். இதன் உச்ச கட்டமாக அக்கிரமங்களையும் கொலைகளையும் அழிவுகளையும் அரங்கேற்றி அதிலும் சுவை காண்பான். இவ்வாறு முழுமையாக ஷைத்தானுடைய தன்மைகளைப் பெற்றுக்கொள்வான். ஆம், ஜின்னின ஷைத்தான்களுடைய இருப்பிற்கான மிகப் பெரிய சான்று, மனித இனத்தில் காணப்படுகின்ற இவ்வாறான ஷைத்தான்களாகும். இரண்டாவதாக, இருபத்தி ஒன்பதாவது வார்த்தையில் மிகத் திட்டவட்டமான பல்வேறு அத்தாட்சிகள் மூலம் மலக்குமார்கள் மற்றும் அவர்களைப் போன்ற ரூஹானிய்ய படைப்புகளின் இருப்பு நிறுவப்பட்டுள்ளது. இந்த வகையில் அங்கு முன்வைக்கப்பட்டுள்ள அனைத்து சான்றுகளும் ஷைத்தான்களுடைய இருப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய சான்றுகளாகும். எனவே இந்த விடயத்தை அந்த வார்த்தைக்கு விட்டுவிடுகின்றோம். மூன்றாவதாக, பிரபஞ்சத்தில் நல்ல, அழகியவிடயங்களின் ஒரு வகைப் பிரதிநிதிகளாகவும் கண்காணிப்பாளர்களாகவும் திகழ்கின்ற மலக்குமார்களின் இருப்பு அனைத்து வேதங்களினதும் ஏகோபித்த தீர்ப்பின்படி தீர்க்கமான ஒரு விடயமாகும். அவ்வாறே கெட்ட விடயங்களுக்கான பிரதிநிதிகளாகவும் அவற்றை நோக்கி அறைகூவல் விடுப்பவர்களாகவும் அவற்றுக்கான காரணிகளாகவும் திகழ்கின்ற கெட்ட ஆன்மாக்கள் மற்றும் ஷைத்தான்களுடைய இருப்பும் கூட ஞானத்தின் அடிப்படையிலும் யதார்தத்தின் அடிப்படையிலும் தீர்க்கமானதாகும். ஏனெனில், கெட்ட விடயங்களுக்கு பிரக்ஞையுள்ள ஒரு ஜீவன் திரையாக அமைவது இன்றியமையாத ஓர் அம்சமாகும். ஆம் இருபத்தி இரண்டாவது வார்த்தையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, அனைவரும் அனைத்து விடயங்களிலும் காணப்படுகின்ற அழகிய ஞானங்களைக் கண்டுகொள்ள முடியாதவர்களாக இருக்கின்றனர். எனவே அவர்களுடைய கண்களுக்குத் தீங்காகவும் குறைபாடாகவும் புலனாகின்ற அம்சங்களை வைத்துக்கொண்டு, மாட்சிமைமிக்க படைப்பாளன் மீது குறைப்பட்டுக் கொள்ளாதிருப்பதற்காகவும், அவனது ரஹ்மத்தைக் கேள்விக்குற்படுத்தாதிருப்பதற்காகவும், அவனது ஞானத்தை விமர்சிக்காதிருப்பதற்காகவும், உண்மைக்குப் புறம்பாக ஒப்பாரி வைத்து குறைப்படாதிருக்கவும் புலனாகின்ற சில காரணிகள் திரையாக ஆக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த உண்மைக்குப் புறம்பான கண்டனங்களும் விமர்சனங்களும் முறைப்பாடுகளும் முத்லக்கான (தீர்க்கமான) ஞானத்துக்கு சொந்தக்காரனாக இருக்கின்ற மாட்சிமைமிக்க படைப்பாளனை அடையாமல், அந்தத் திரைகளை நோக்கித் திருப்பப்படுகின்றன. உதாரணமாக மரணிக்கின்ற அடியார்களின் வெறுப்பிலிருந்து இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாமைப் பாதுகாப்பதற்காக நோய் நொடிகள் மரணத்துக்கான திரையாக ஆக்கப்பட்டுள்ளது. இஸ்ராயீல் அலைஹிஸ்ஸலாமும் கூட ரூஹ் கைப்பற்றப்படுகின்ற நேரத்தில் ஈவிரக்கமற்றதாகப் பார்க்கப்படுகின்ற நிலைமைகள் காரணமாக எழுகின்ற கண்டனங்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பாதிருப்பதற்கான ஒரு திரையாகும். அவ்வாறே -இதைவிடத் தீர்க்கமாக- தீமைகள் காரணமாகவும் மோசமான விடயங்கள் காரணமாகவும் ஏற்படுகின்ற முறைப்பாடுகளும் கண்டனங்களும் மாட்சிமைமிக்க படைப்பாளனை நோக்கித் திரும்பாதிருப்பதற்காக இறை ஞானம் ஷைத்தானுடைய இருப்பை நாடியிருக்கின்றது. நான்காவது: மனிதன் சிரியதொரு பிரபஞ்சமாக இருப்பது போல், பிரபஞ்சமும் கூடப் பெரியதொரு மனிதனாக இருக்கின்றது. இந்தச் சிறிய மனிதன் அந்தப் பெரிய மனிதனுடைய உள்ளடக்கமாகவும் சாராம்சமாகவும் இருக்கின்றான். மனிதனில் காணப்படுகின்ற மாதிரிகளுக்கான பிரமாணடமான அஸல்கள் இன்ஸானுல் அக்பரான அந்தப் பெரிய மனிதனிடமும் காணப்படும். உதாரணமாக, மனிதனில் காணப்படுகின்ற மனன சக்தியின் இருப்பானது லௌஹுல் மஹ்ஃபூழுடைய இருப்புக்கான உறுதியான அத்தாட்சியாக இருக்கின்றது. அவ்வாறே மனித உள்ளத்தின் ஒரு மூலையில் ஓர் ஊசலாட்டத் தளமும் ஊகங்களின் தூண்டலால் கிசுகிசுக்கின்ற ஒரு நாவும் மனிதனுக்குள் சிறியதொரு ஷைத்தானாக, மனிதனுடைய தீர்மானங்களுக்கு எதிராகவும் விருப்பங்களுக்கு முரணாகவும் கங்கணம்கட்டிக்கொண்டு செயற்படுவதை அனைவரும் அவ்வப்போது உள்ளுணர்வின் மூலமாகவும் உதிப்பின் மூலமாகவும் உணர்ந்துகொள்ள முடியுமானவர்களாக இருக்கின்றனர். மனிதனுக்குள் இருக்கின்ற இந்த சிறிய ஷைத்தான் பிரபஞ்சத்தில் இருக்கின்ற பெரிய ஷைத்தானுடைய இருப்புக்கான உறுதியானதோர் அத்தாட்சியாகும். மாத்திரமன்றி அந்த ஊசலாட்டத் தளமும் கிசிகிசுக்கும் நாவும் ஒரு செவியாகவும் நாவாகவும் தொழிற்படுவதால், உண்மையில் இது அந்த செவிக்குள் ஊதிவிட்டு இந்த நாவைப் பேச வைக்கின்ற வெளியிலிருந்துமுள்ள ஒரு கெட்ட ஆன்மாவின் இருப்பை உணரச் செய்கின்றது.
வழிகேடர்கள் கட்டவிழ்த்துவிடுகின்ற அக்கிரமங்கள் காரணமாக பிரபஞ்சமும் அதிலுள்ள வஸ்துகளும் கடும் சினம்கொள்கின்ற விடயத்தை சர்வ ஞானமிக்க குர்ஆன் அற்புதமான ஓர் அமைப்பில் சுட்டிக்காட்டுகின்றது. அதாவது, நூஹ் சமூகத்தின் தலைக்கு வந்த வெள்ளத்தின் மூலமாக வானம் பூமியுடைய ஆர்ப்பரிப்பையும், ஆத், ஸமூத் கூட்டத்தினரின் நிராகரிப்புக் காரணமாக காற்றுடைய கடுகடுப்பையும், பிர்அவ்னுடைய சமூகத்துக்கெதிராக நீருடைய அதாவது கடலுடைய கொந்தளிப்பையும், காரூனுக்கெதிராக நிலத்துடைய மிரட்சியையும் குர்ஆன் அற்புதமான ஓர் அமைப்பில் பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கின்றது. அவ்வாறே ﺗَﻜَﺎﺩُ ﺗَﻤَﻴَّﺰُ ﻣِﻦَ ﺍﻟْﻐَﻴْﻆ என்ற மறை வசனமும் கூட மறுமையில் நிராகரிப்பாளர்கள் மீது நரகம் கொள்கின்ற சீற்றத்தையும் கடுகடுப்பையும் சுட்டிக் காட்டுகின்றது. இவ்வாறு குர்ஆன் கலகம் விளைவிக்கின்ற வழிகேடர்கள் மீது ஒட்டுமொத்தப் படைப்பினங்களும் கொண்டிருக்கின்ற வெறுப்பையும் சீற்றத்தையும் மிகப் பயங்கரமான ஒரு தோரணையிலும் மிக அற்புதமானதோர் அமைப்பிலும் எடுத்துக் கூறி கலகம் விளைவிக்கும் வழிகேடர்களைக் கண்டனம் செய்கின்றது. கேள்வி: இப்படிப்பட்ட இழிந்த மனிதர்களுடைய இழிந்த செயல்கள் ஏன் பிரபஞ்சத்துடைய சீற்றத்தைத் தூண்டிவிட வேண்டும்? பதில்: வேறு சில பகுதிகளிலும் முன்னைய அடையாளங்களிலும் நிறுவப்பட்டதற்கிணங்க, குஃப்ரும் வழிகேடும் பயங்கரமான அத்துமீறல்களாகும்; ஒட்டுமொத்த படைப்பினங்களோடும் சம்பந்தப்பட்ட ஒரு படுகொலையாகும். ஏனெனில் பிரபஞ்சத்தின் படைப்பிலுள்ள ஓர் உன்னதமான விளைவு (வேறொரு வார்த்தையில் சொல்வதாக இருந்தால் பிரபஞ்சம் என்ற தொழிற்சாலையின் மிக மகத்தான ஓர் உற்பத்தி) மனிதனுடைய உபூதியத்தாகும்; அல்லாஹ்வுடைய ருபூபியத்துக்கு முன்னால் ஈமான் கொண்டு வழிப்படுவதன் மூலம் பதிலளிப்பதாகும். ஆனால் குஃப்ரிலும் வழிகேட்டிலும் இருப்பவர்கள் தமது நிராகரிப்பின் மூலமாக, இருப்புகளின் இருப்புக்கான நோக்கமாகவும் அவை நித்தியத்தை அடைந்துகொள்வதற்கான காரணியாகவும் இருக்கின்ற அந்த உன்னதமான விளைவுகளைப் புறக்கணித்து அல்லது நிராகரித்து விடுகின்றனர். இதம் மூலம் ஒட்டுமொத்த படைப்புகளின் உரிமையிலும் ஒரு வகையில் அத்துமீறல் செய்கின்றனர். மாத்திரமன்றி, இறை நாமங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாக இருக்கின்ற ஒவ்வொரு வஸ்தினதும் பெறுமதிக்கும் சங்கைக்கும் காரணிகளாக இருப்பது அவற்றில் பிரதிபலிக்கின்ற இறை நாமங்களாகும். இப்படியிருக்க இந்த இறை நாமங்களின் பிரதிபலிப்புக்களையும் இறை நாமங்களையும் அதன் சொந்தக்காரனையும் நிராகரிப்பது அனைத்துக்கும் முதலில் கண்ணியத்துக்குறிய அந்த இறைவனையும் அவனது புனித நாமங்களையும் அவமதிக்கின்ற ஒரு செயலாக இருப்பதைப் போன்றே, ஒட்டுமொத்த வஸ்துகளின் அந்தஸ்துக்களையும் பெறுமதிகளையும் மட்டம்தட்டி அவற்றை சிறுமைப்படுத்துகின்ற ஒரு செயலுமாகும். அத்தோடு, ஒவ்வொரு வஸ்தும் பல பணிகளைச் சுமந்த ஒவ்வொரு இறை பணியாளர்களாக இருக்கின்ற போது, மனிதன் குஃப்ர் மூலமாக அவற்றை சிறுமைப்படுத்தி, எவ்வித அர்த்தமுமற்ற சாமான்யமான ஒவ்வொரு வஸ்தாகக் காட்டி அந்த வஸ்துக்களுடைய உரிமைகளில் பாரிய பங்கத்தை ஏற்படுத்திவிடுகின்றான். ஆம், வழிகேட்டின் எல்லா வகைகளும் அதனதன் படித்தரத்துக்கேற்ப, கூடுதலாகவோ குறைவாகவோ பிரபஞ்சம் படைக்கப்பட்டதிலுள்ள ரப்பானிய ஞானங்களுக்கும் நோக்கங்களுக்கும் பங்கம் விளைவிப்பதன் காரணமாக அந்த நிராகரிப்பாளர்களுக்கும் வழிகேடர்களுக்கும் எதிராக பிரபஞ்சமும் அதிலுள்ள படைப்பினங்களும் சீற்றம்கொள்கின்றன. உடலும் தலையும் சிறிதான, பாவங்கள் பாதகங்களும் அநீதி அக்கிரமங்களும் பெரிதான, நாதியற்ற மனிதனே! பிரபஞ்சத்தின் சீற்றத்திலிருந்தும் வஸ்துக்களின் வெறுப்பிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ள விரும்பினால், அதற்கான வழி சர்வ ஞானமிக்க குர்ஆன் வகுத்துத் தந்த எல்லைகளுக்குள் நுழைந்துகொள்வதாகும்; அந்தக் குர்ஆனை நோக்கி அழைப்புவிடுக்கின்ற மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய மேலான சுன்னாக்களுக்கு வழிப்படுவதாகும். உடனடியாக அதற்குள் நுழைந்துகொள்ளுங்கள்!
(நான்கு வினாக்களும் அவற்றுக்கான விடைகளுமாகும்)
ஒரு குறிப்பிட்ட கால வாழ்வில் புரிகின்ற வரையறுக்கப்பட்ட பாவங்களுக்குப் பகரமாக எல்லையில்லாத ஒரு வேதனையும் முடிவில்லாத ஒரு நரகமும் எவ்வாறு நீதியானதாக இருக்க முடியும்? பதில்: முன்னைய அடையாளங்களிலும். குறிப்பாகப் பதினோராவது அடையாளத்திலும் குஃப்ர் மற்றும் வழிகேட்டின் மூலமாக அரங்கேற்றப்படுகின்ற படுகொலைகள் அளவற்ற படுகொலைகளாகும் என்பதும் எண்ணற்ற உரிமைகள் மீதான அத்துமீறல்களாகும் என்பதும் தெளிவாகிவிட்டது.
ஷரீஅத்தில் “நரகம் மனிதனுடைய செயல்களுக்கான பிரதியீடாகும். ஆனால் சுவர்க்கமோ இறை அன்பளிப்பாகும்” என்று சொல்லப்பட்டுள்ளது. இதிலுள்ள தாத்பரியம் என்ன? பதில்: முன்னைய அடையாளங்களில் தெளிவுபடுத்தப்பட்டதற்கிணங்க, மனிதன் நிர்மானிக்கும் ஆற்றல் அற்ற தேர்வுச் சுதந்திரத்தின் மூலமாகவும், ஈடுபாட்டின் மூலமாகவும், உடன்பாட்டின் மூலமாகவும், இல்லாமை சார்ந்த அல்லது வெறும் சிந்தனை அளவிலேயான ஒரு செயல் மூலமாகவும், ஒரு தீர்மானத்தின் மூலமாகவும், ஒரு நாட்டத்தின் மூலமாகவும் பயங்கரமான அழிவுகளுக்கும் தீங்குகளுக்கும் காரணியாக இருக்கின்றான். கூடவே மனிதனுடைய நஃப்ஸும் இச்சைகளும் கூட தொடர்ந்தும் தீமைகளின்பாலும் அழிவின்பாலும் நாட்டம் கொண்டவையாகவே இருக்கின்றன. எனவே மனிதன் தனது சொந்த உடன்பாட்டின் மூலம் தோற்றுவித்த தீங்குகளின் பொறுப்பை தானே சுமக்க வேண்டும். தீமைகள் இல்லாமை சார்ந்த அல்லது புறக்கணிப்பு சார்ந்த செயற்பாடுகள் என்பதால் மனிதன் அந்த செயலுக்கான காரணியாகின்றான். பிறகு அல்லாஹ்வே அந்த நிலைமையையும் படைக்கின்றான் என்பது வேறு விடயமாகும். எனவே மனிதன் தான் காரணியாக இருக்கின்ற எல்லையற்ற படுகொலைகளின் பொறுப்பை முடிவில்லாத ஒரு வேதனையைக்கொண்டு அனுபவிப்பதற்குத் தகுதியுடையவனாக மாறுகின்றான். ஆனால் நன்மைகளையும் நலவுகளையும் பொறுத்தவரை அவை மெய்ந்நிலை சார்ந்தவையாகவும் நிர்மானம் சார்ந்தவையாகவும் இருப்பதால், மனிதனுடைய உடன்பாடோ அல்லது நாட்டமோ அல்லது தெரிவோ அவற்றின் படைப்புக்கான காரணகர்த்தாவாக அல்லது மூல காரணியாக ஆகிவிட முடியாது. மாறாக ரப்புடைய ரஹ்மத் அந்த நண்மைகளை வேண்ட, அவனுடைய வல்லமை அவற்றைப் படைக்கின்றது. மனிதன் வெறுமனே ஈமான் மூலமாகவும் விருப்பம் மூலமாகவும் நிய்யத் மூலமாகவுமே அவற்றுக்கு உரிமை கொண்டாட முடியும். அவ்வாறு உரித்தாளனாகினாலும் கூட, அந்த நண்மைகள் அவனுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள மெய்ந்நிலை அந்தஸ்த்து, ஈமானிய அருள் போன்ற எண்ணற்ற இறை அருட்கொடைகளுக்கான ஒரு நன்றியாகவே அவை இருக்க முடியும். இந்த வகையில் இறை வாக்குறுதிக்கமைய வழங்கப்பட இருக்கும் சுவனமானது, இறை அன்பளிப்புக்களிலிருந்துமுள்ளதாகும். பார்வைக்கு ஒரு பிரதியீடாகத் தோன்றினாலும் கூட யதார்தத்தில் ஓர் அன்பளிப்பாகும். ஆனால் தீமைகளுக்கான காரணி நஃப்ஸாகும். எனவே தண்டனையையும் தானே சுமக்க வேண்டும். நண்மைகளுக்கான காரணியும் மூலமும் சத்திய இரட்சகனின் புறத்திலிருந்துமுள்ளதாகும். மனிதன் வெறுமனே ஈமான் மூலமாக உரிமைகொண்டாட முடியுமான நிலையில் இருக்கின்றான். எனவே “பிரதிபலனை எதிர்பார்க்கின்றேன்” என்று அவனால் கூற முடியாது. “அவனது ரஹ்மத்தையும் அன்பளிப்பையும் எதிர்பார்க்கின்றேன்” என்றே கூற வேண்டும்.
முன்னைய விளக்கங்களின் தெளிவுக்கமைய, தீமைகளானது பரவல் தன்மை காரணமாகவும் ஏகப்பட்ட உரிமைகள் மீதான அத்துமீறல்களாக இருக்கின்ற காரணத்தினாலும் ஒன்று பலதாகப் பல்கிப் பெருகுவதால் ஒரு பாவம் ஆயிரமாக எழுதப்பட வேண்டியிருக்கின்றது. நண்மைகளோ மெய்ப்பண்பு கொண்டவையாக இருப்பதாலும் சட ரீதியாகப் பல்கிப் பெருகாத காரணத்தினாலும் மனிதனுடைய ஆக்கத்தினால் அல்லது நஃப்ஸுடைய நாட்டத்தினால் வெளிப்படாத காரணத்தினாலும் எதுவுமே எழுதப்படாதிருக்க வேண்டும் அல்லது வெறுமனே ஒரு நண்மை மாத்திரம் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு தீமை வெறுமனே ஒரு தீமையாக எழுதப்பட, நண்மைகளோ பத்தாகவும் சில போது ஆயிரமாகவும் எழுதப்படுகின்றது. இதிலுள்ள தாத்பரியம் என்ன? பதில்: சத்திய இரட்சகன் தனது மகத்தான அன்பையும் கருணையையுமே இவ்வாறு வெளிக்காட்டுகின்றான்.
வழிகேடர்கள் ஈட்டிக்கொண்ட அடைவுகளும் வெளிக்காட்டுகின்ற பலமும் நேர்வழியிலுள்ளோருக்கெதிராக அவர்கள் பெற்றுக்கொள்கின்ற வெற்றிகளும் அவர்களும் ஏதோ ஒரு சத்தியத்தை அல்லது ஒரு வல்லமையை ஆதாரமாகக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைக் காட்டுவது போன்றுள்ளது. அதாவது ஒன்றோ நேர்வழியிலுள்ளோரிடம் பலவீனம் இருக்க வேண்டும். அல்லது வழிகேடர்களின் கைகளில் ஒரு சத்தியம் இருக்க வேண்டும்.? பதில்: நிச்சயமாக ஒரு போதும் அவ்வாறல்ல. அவர்களிடம் சத்தியத்தின் பெயரால் எதுவுமே கிடையாது. சத்தியவான்களிடமும் கூட பலவீனம் என்ற ஒன்றும் கிடையாது. ஆனால் துரதிஷ்டவசமாக குறுகிய பார்வைகொண்ட சிந்தனைச் சோம்பேறிகளான ஒரு பகுதி பாமரர்கள் சங்கடத்துக்காளாகி சத்தியத்தில் சந்தேகம்கொள்ள ஆரம்பிக்கின்றனர். இது அவர்களுடைய அகீதாவில் குறையை ஏற்படுத்திவிடுகின்றது. ஏனெனில் தமக்குள் பின்வருமாறு கேள்வி எழுப்புகின்றனர். “சத்தியவான்களுடைய கைகளில் இருக்கும் சத்தியம் உண்மையில் முழுமையான சத்தியமாக இருப்பின், இந்த அளவு தோல்விகளும் அவலங்களும் அவர்களை அணுகாதிருப்பது அவசியப்படுகின்றது. ஏனெனில் சத்தியம் பலமானதாக இருக்கின்றது. மேலும் ﺍَﻟْﺤَﻖُّ ﻳَﻌْﻠُﻮ ﻭَﻟﺎَ ﻳُﻌْﻠٰﻰ ﻋَﻠَﻴْﻪِ என்ற அடிப்படை விதிக்கமைய, பலம் எப்போதும் சத்தியத்திலேயே இருக்கின்றது. ஆகவே சத்தியவான்களுக்கு முன்னால் வெற்றி நடைபோடும் வழிகேடர்களிடம் உண்மையான ஒரு பலமும் ஓர் ஆதாரத் தளமும் இல்லாதிருந்தால், அவர்களால் இந்த அளவு வெற்றிகளை ஈட்டிக்கொள்ள முடியாது போயிருக்கும்.” என்று கேட்கின்றனர். பதில்: சத்தியவான்களுக்கு வரும் தோல்விகள் பலமின்மையால் அல்லது சத்தியமின்மையால் வருவதில்லை என்பது முன்னைய அடையாளங்களில் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. அவ்வாறே வழிகேடர்களுக்கு வருகின்ற வெற்றிகளும் கூட தமது பலத்தாலோ அல்லது வல்லமையினாலோ அல்லது ஏதோ ஒரு சத்தியத்தைப் பற்றிக்கொண்டுள்ளார்கள் என்பதனாலோ அல்ல என்பதும் முன்னைய அடையாளங்களில் ஆணித்தரமாக நிறுவப்பட்டுள்ளது. எனவே முன்னர் எழுதப்பட்டுள்ள அனைத்து அடையாளங்களும் இந்தக் கேள்விக்கான பதிலாக இருக்கின்றது. இவ்விடத்தில் அவர்களது சூழ்ச்சிகளையும் அதற்காக அவர்கள் பயன்படுத்துகின்ற சாதனங்களையும் மாத்திரம் அடையாளப்படுத்துகின்றோம். பத்துவீத குழப்பக்காரர்கள் தொண்ணூறு வீதமான ஸாலிஹானவர்களை தோல்வியுறச் செய்ததை பலதடவைகள் நான் கண்ணுற்றுள்ளேன். இந்த நிலைமையைப் பார்த்து ஆச்சரியமேலீட்டால் அங்கலாய்த்துமுள்ளேன். பின்னர் சற்று ஆழமாக ஆய்வுசெய்த பின்னர் அந்த வெற்றிகள் அவர்களிடமிருக்கும் பலம், வல்லமை என்பவற்றின் காரணமாக வருவதில்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றிப் புரிந்துகொண்டேன். மாறாக பித்னாக்கள் பஸாதுகளைப் பரப்புவதன் மூலமாகவும், அக்கிரமங்கள் அழிவுகளைக் கட்டவிழ்த்துவிடுவதன் மூலமாகவும், சத்தியவான்களுக்கு மத்தியிலுள்ள பிளவுகள், முரண்பாடுகளைப் பயன்படுத்திக்கொள்வதன் மூலமாகவும், நயவஞ்சகத்தனமாக அவற்றுக்கு இன்னுமின்னும் எண்ணையூற்றுவதன் மூலமாகவும், அவர்களுடைய பலவீனங்களைத் தடவிக்கொடுத்து ஆர்வமூட்டுவதன் மூலமாகவும், நஃப்ஸானியத்தான இச்சைகளையும் தனிப்பட்ட நலன்களையும் தூண்டிவிடுவதன் மூலமாகவும் மனிதனுடைய இயல்பில் இருக்கின்ற சில மோசமான தன்மைகளைக் கிளறிவிடுவதன் மூலமாகவும், பட்டம், பதவி, புகழ் என்ற பெயரில் முகஸ்துதிக்கும் நஃப்ஸுடைய பிர்அவ்னியத்தான தன்மைகளுக்கும் எண்ணை பூசுவதன் மூலமாகவும் மேற்படி வெற்றிகளை ஈட்டிக்கொள்கின்றனர். இவற்றோடு ஈவிரக்கமற்ற அநியாயங்கள் அக்கிரமங்களுக்கு அனைவரும் பயப்படுவதையும் இவர்கள் தமக்குச் சார்பாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆனால், ﻭَﺍﻟْﻌَﺎﻗِﺒَﺔُ ﻟِﻠْﻤُﺘَّﻘِﻴﻦَ என்ற மறை வசனத்துக்கும் ﺍَﻟْﺤَﻖُّ ﻳَﻌْﻠُﻮ ﻭَﻟﺎَ ﻳُﻌْﻠٰﻰ ﻋَﻠَﻴْﻪِ என்ற விதிக்கும் அமைவாக அவர்களது இந்த உடனடி வெற்றிகளானது, உலகத்தில் அவர்களுக்குப் பெரிதாக எந்த இலாபத்தையும் ஈட்டிக்கொடுக்காதது ஒருபுறமிருக்க, மறுமையில் அவர்களுக்கு நரகத்தையும் சத்தியவான்களுக்கு சுவனத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கான காரணியாக அமைந்து விடுகின்றது. ஆம், வழிகேட்டின் பாதையில் ஆற்றல் இல்லாதவர்கள் ஆலுமைகளாகப் புலப்படுவதாலும், சாமான்யமானவர்கள் சங்கைக்குறியவர்களாகப் போற்றப்படுவதாலும், அற்ப காரியங்களைச் செய்து புகலீட்ட முடியுமாக இருப்பதாலும் புகழ் தேடி அலையும் பிரபல்யப் பித்தர்களும் முகஸ்துதிக் காரர்களும் வழிகேடர்களுக்கு மத்தியில் சில பதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக சத்தியவான்களுக்கெதிராகக் களமிறங்கி அநியாயங்களையும் அக்கிரமங்களையும் அரங்கேற்றுகின்றனர். இவ்வாறு வழிகேடர்கள், அக்கிரமக்காரர்களுடைய பார்வையைத் தன் பக்கம் ஈர்த்து பிரபல்யமும் இலாபமும் அடைய ஆசைப்படுபவர்கள் அதிகமாகக் காணப்படுகின்றனர். பின்னர் தனது அந்த அற்பமான ஈனச் செயலின் மூலம் அரங்கேறிய அழிவு தனது பெயரோடு உச்சரிக்கப்பட வேண்டும் என்றும் ஆசிப்பான். ஒருமுறை இப்படிப்பட்ட பிரபல்யப் போக்கிரிகளுள் ஒருவன் அனைவரும் அவனைப் பற்றி அதிகம் கதைக்க வேண்டும் என்பதற்காக பள்ளிவாசலை அசிங்கப்படுத்தினான். ஆனால் அவனைப் பற்றிக் கதைக்கின்ற அனைவரும் அவனைச் சபித்தே நினைவுகூர்பவர்களாக இருந்தனர். எனினும் அவனிடமிருந்த பிரபல்ய மோகம் அந்த சாபத்துக்குரிய பிரபல்யத்தை அவனுக்கு அழகாகக் காட்டிவிட்டது. இது இந்த வட்டாரத்தில் பிரபல்யமான ஒரு சம்பவமாகும். நித்திய உலகத்துக்காகப் படைக்கப்பட்ட ஆனால் தற்காலிக உலகில் மோகம் கொண்டலையும் நாதியற்ற மனிதனே! ﻓَﻤَﺎ ﺑَﻜَﺖْ ﻋَﻠَﻴْﻬِﻢُ ﺍﻟﺴَّﻤَٓﺎﺀُ ﻭَ ﺍﻟْﺎَﺭْﺽُ என்ற வசனத்தில் பொதிந்துள்ள தாத்பரியத்தையும் அது சொல்ல வருகின்ற செய்தியையும் உன்னிப்பாக அவதானியுங்கள்! அந்த வசனத்தின் தெளிவான பொருள், “வழிகேடர்கள் மரணிக்கும் போது, அவர்களுடன் சதாவும் தொடர்பிலிருந்த வானமும் பூமியும் அவர்களுக்காக அழுது மன்றாடுவதில்லை, மாறாக அவர்களது மரணத்தையிட்டும் பூரிப்படைகின்றன” என்பதாகும். அவ்வாறே, “நேர்வழியிலுள்ளவர்கள் மரணிக்கும் போது வானமும் பூமியும் அவர்களுக்காக அழுது புலம்புகின்றன. அவர்கள் தம்மை விட்டும் பிரிந்துசெல்வதை அவை விரும்புவதிலை” என்ற உண்மையையும் அந்த வசனத்தின் சாடையான அர்த்தம் குறிப்பிடுகின்றது. ஆம், ஈமான்கொண்டவர்களுடன் பூரா பிரபஞ்சமும் தொடர்புபட்டுள்ள அதே சமயம் அவர்களையிட்டும் அவை மகிழ்ச்சிகொள்கின்றன. ஏனெனில் ஈமான்கொண்டவர்கள் தமது ஈமான் மூலமாக பிரபஞ்சத்துடைய படைப்பாளனை அறிந்துகொண்டமையினால், பிரபஞ்சத்துடைய மகிமையைப் புரிந்துகொண்டு அதை சங்கைப் படுத்துவார்கள்; அதனுடன் ஓர் ஆத்மார்த்தமான நேசத்தை வளர்ப்பார்கள். வழிகேடர்களோ மறைவாக அவற்றை சிறுமைப்படுத்தி அவற்றுடன் ஒரு வகையான குரோதத்தையே வளர்த்துக்கொள்கின்றனர். மனிதனே, சிந்தனையைத் தீட்டிக்கொள்! நீ எந்த நிலையில் இருந்தாலும் மரணத்தைச் சுவைத்தே தீருவாய். ஒரு வேளை நீ உனது நஃப்ஸுக்கும் ஷைத்தானுக்கும் வழிப்படுபவனாக இருந்தால், உனது உற்றார் உறவுனர்களும் கூட -உனது தீங்குகளை விட்டும் பாதுகாப்புப் பெற்றுக்கொண்டோம் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டவர்களாக- உனது மரணத்தையிட்டும் மகிழ்ச்சி அடைவார்கள். மாறாக “அஊதுபில்லாஹி மினஷ்ஷைதானிர்ரஜீம்” என்று கூறி, குர்ஆனுக்கும் ஹபீபுல்லாஹ்வுக்கும் வழிப்படுபவனாக நீ இருந்தால், உனது அந்தஸ்துக்கேற்ப, வானம் பூமியும் அவற்றிலுள்ள அத்தனை வஸ்துகளும் உனது பிரிவையிட்டும் கவலையில் மூழ்கி உள்ளூரக் கண்ணீர் சிந்தும். தமது அந்த தூய்மையான அழுகைகள் மூலமாகவும் அகிலார்ந்த பிரியாவிடை மூலமாகவும் நீ மண்ணறை வாயிலாக நுழையப் போகும் நித்திய உலகில் உனக்காகத் தயார்படுத்தப்பட்ட அழகிய ஓர் எதிர்காலம் இருக்கின்றது என்பதைச் சுபசோபனம் கூறும்.
“மூன்று குறிப்புக்களைக் கொண்டதாகும்.”
ஷைத்தானுடைய மிகப் பயங்கரமான ஒரு சூழ்ச்சி விடயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஷைத்தான் ஈமானிய சத்தியங்களுடைய கிரகிப்புக்கு அப்பாற்பட்ட விசாலமான அகிலார்ந்த தன்மையைப் பயன்படுத்தி ஒடுக்கமான உள்ளமும் குருட்டுப் புத்தியும் குறை சிந்தனையும் கொண்ட சில மனிதர்களை ஏமாற்றிவிடுகின்றான். “தனி ஒருவன், அணுக்கள் முதல் அண்டசராசரங்கள் வரை, கோள்கள் முதல் நட்சத்திரங்கள் வரை அத்தனை வஸ்துக்களையும் அவற்றின் அத்தனை நிலைமைகளையும் தனது திட்டத்துக்குக் கீழும் பரிபாலிப்புக்குக் கீழும் இயக்குவதாகவும் நிர்வகிப்பதாகவும் சொல்லப்படுகின்றது. இப்படிப்பட்ட கற்பனைக்கும் எட்டாத அதிசயிக்கத்தக்க விடயங்களை எவ்வாறு நம்பிக்கைகொள்ள முடியும்? உள்ளம் இதை எவ்வாறு சரிகானும்? இது சிந்தனைக்கு ஒத்துப் போகக்கூடிய ஒரு விடயம் அல்லவே?” என்று மனிதனில் ஊசலாட்டத்தை ஏற்படுத்திவிடுகின்றான். அதாவது மனித பலவீனம் என்ற புள்ளியிலிருந்து ஒரு குஃப்ரிய்ய உணர்வைத் தூண்டிவிடுகின்றான். பதில்: ஷைத்தானுடைய இந்த சூழ்ச்சியைச் செயலிலக்கச் செய்யக்கூடிய தாரக மந்திரம் “அல்லாஹு அக்பர்” என்பதாகும். கூடவே அந்த ஷைத்தானிய ஊசலாட்டத்துக்கான திட்டவட்டமான பதிலும் கூட “அல்லாஹு அக்பர்” என்பதாகும். ஆம், இந்த “அல்லாஹு அக்பர்” என்ற வார்த்தை முஸ்லிம்களுடைய புலக்கத்தில் இந்த அளவு அதிகமாக மீட்டப்படுவது ஷைத்தானுடைய இந்த சூழ்ச்சியைத் தவிடுபொடியாக்குவதற்காகவாகும். ஏனெனில் மனிதனுடைய மட்டுப்படுத்தப்பட்ட சிந்தனையாலும், குன்றிய பலத்தாலும், பலவீனமான ஆற்றலாலும் இபடிப்பட்ட எல்லையில்லாத மகத்தான சத்தியங்களை “அல்லாஹு அக்பர்” உடைய ஒளியைக்கொண்டே பார்க்க முடியும்; “அல்லாஹு அக்பர்” உடைய பலத்தைக்கொண்டே சுமக்க முடியும். “அல்லாஹு அக்பர்” உடைய விசாலமான எல்லைக்குள் நின்றே அந்த சத்தியங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும். இதன் மூலம் மனிதன் ஷைத்தானிய ஊசலாட்டத்துக்காற்பட்ட தனது உள்ளத்திடம், “இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் அணுப்பிசகாத ஓர் ஒழுங்கு நேர்த்தியும் அகிலார்ந்த ஒரு நிர்வாகமும் உறுதியான சட்ட திட்டங்களும் கோலோச்சிக்கொண்டிருக்கின்றன. எனவே இவை இரண்டு பாதைகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் மாத்திரமே சாத்தியப்பட முடியும். முதலாவது பாதை: இதுவே சாத்தியமான பாதையாகும். ஆனால் இந்தப் பாதை மிகப் பிரமாண்டமானதும் வியக்கத்தக்கதுமான ஒரு பாதையாகும். உண்மையில் இப்படிப்பட்ட ஈடிணையற்ற ஆக்கங்களும் கலைப்பாடுகளும், ஈடிணையற்ற ஒரு வல்லமையின் மூலமாக, ஈடிணையற்ற ஓர் அமைப்பிலேயே ஆக்கப்பட்டிருக்க வேண்டும். ஆம், அந்த ஈடிணையற்ற வல்லமைக்குறியவன், ஒட்டு மொத்த வஸ்துக்களினதும் ஒட்டுமொத்த அணுக்களினதும் எண்ணிக்கையளவு தனது இருப்புக்கான அத்தாட்சிகளைக்கொண்டிருக்கின்ற அந்த தன்நிகரற்ற ஏக இரட்சகனாவான். அவனது ஆட்சியதிகாரம், வல்லமை, பரிபாலிப்பு என்பவற்றின் மூலமே இந்த முழுப் பிரபஞ்சமும் அதிலுள்ள அத்தனை வஸ்துகளும் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இரண்டாவது பாதை: இது சாத்தியப்பாட்டுக்கான எந்தவிதமான வாய்ப்புகளும் அற்ற, சர்வ அசாத்தியமான, எண்ணற்ற சிக்கல்களால் நிறைந்த, எந்த வகையிலும் அறிவுக்கு ஏற்புடையதாக அமைய முடியாத ஷிர்க் மற்றும் குஃப்ருடைய பாதையாகும். இருபதாவது கடிதம், இருபத்தி இரண்டாவது வார்த்தை போன்ற பல ரஸாஇல்களில் திட்டவட்டமாக நிறுவப்பட்டதற்கிணங்க, இந்தப் பாதையை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற ஒவ்வொரு வஸ்திலும் ஒவ்வோர் அணுவிலும் ஒவ்வொரு முத்லக்கான உலூஹியத்தும் அகிலார்ந்த அறிவு ஞானமும் எல்லையற்ற வல்லமையும் இருப்பது அவசியப்படுகின்றது. அப்போது மாத்திரமே, இந்தப் பிரபஞ்சத்தில் காணப்படுகின்ற அணுப்பிசகாத ஒழுங்கும் நேர்த்தியும் இயக்கமும் முழுமையும் பரிபூரணத்துவமும் அழகும் சாத்தியப்பட முடியும். சுருக்கமாக: முழுமையாகவே அறிவுக்கு ஏற்புடையதாகவும், தெளிவானதாகவும் விசாலமானதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கின்ற ருபூபியத்தை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் எந்த வகையிலும் அறிவுக்கு எட்டாத, சிக்கல்கள் நிறைந்த ஒரு பாதையில் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவான். ஈமானுடைய இந்தப் பிரகாசமான பாதையை விட்டுவிட்டு சுத்த சூன்யமானதொரு அசாத்தியப்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு கூறுவதற்கு ஷைத்தானும் கூட வெட்கப்படுகின்றான்.
ஷைத்தானுடைய இன்னுமொரு முக்கியமான சூழ்ச்சி மனிதனுக்குத் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ளாதிருக்கச் செய்வதாகும். இதன் மூலம் இஸ்திஃபாருக்கும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவதற்குமான தேவையை இல்லாமலாக்கி விடுகின்றான். மனித நஃப்ஸுடைய அனானியத்தை (ஈகோ) தடவிக்கொடுத்து வழக்கறிஞனைப் போன்று அவனுக்காகவே அவனை வாதிடச் செய்கின்றான். இதன் மூலம் மனிதன் தன்னைத் தானே பரிசுத்தவானாகப் பார்க்க வேண்டும் என்று ஆசிக்கின்றான். ஆம் ஷைத்தானுக்கு வழிப்படுகின்ற ஒரு நஃப்ஸ் தனது குற்றம் குறைகளைக் கண்டுகொள்ள விரும்பாது. கண்டுகொண்டாலும் ஆயிரம் சாட்டுப் போக்குகளையும் நியாயங்களையும் கூறி சமாளித்துக்கொள்ளும். இந்நிலையில் ﻭَ ﻋَﻴْﻦُ ﺍﻟﺮِّﺿَﺎ ﻋَﻦْ ﻛُﻞِّ ﻋَﻴْﺐٍ ﻛَﻠِﻴﻠَﺔٌ என்ற விதியின்படி, அவன் தனது நஃப்ஸ் விடயத்தில் முழுப் பொருத்தத்தோடு நடந்துகொள்வதால் அதன் வண்டவாளங்களைக் கண்டுகொள்ள முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றான். இறுதியில் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவதற்கான தேவையை உணராமல் ஷைத்தானுடைய புரோகிதனாக மாறிவிடுவான். ஹழரத் யூஸ்ஃப் அலைஹிஸ்ஸலாம் போன்ற சங்கைக்குறிய ஒரு நபியே ﻭَﻣَٓﺎ ﺍُﺑَﺮِّﺉُ ﻧَﻔْﺴِﻰ ﺍِﻥَّ ﺍﻟﻨَّﻔْﺲَ ﻟَﺎَﻣَّﺎﺭَﺓٌ ﺑِﺎﻟﺴُّٓﻮﺀِ ﺍِﻟﺎَّ ﻣَﺎ ﺭَﺣِﻢَ ﺭَﺑِّﻰ என்று கூறும் போது, நாம் எவ்வாறு தான் இந்த நஃப்ஸை நம்ப முடியும்? நஃப்ஸை கேள்விக்குற்படுத்தி விசாரிப்பவன் தனது குற்றம் குறைகளைக் கண்டுகொள்வான். குற்றம் குறைகளை ஒப்புக்கொள்பவன் இஸ்திஃபார் செய்து பாவமண்ணிப்புக் கேட்பான். பாவமண்ணிப்புத் தேடுபவன் அல்லாஹ்விடம் பாதுகாவலும் தேடுவான். அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுபவன் ஷைத்தானுடைய தீங்குகளைவிட்டும் பாதுகாப்புப் பெற்றுக்கொள்வான். தனது குற்றத்தைக் கண்டுகொள்ளாதிருப்பது அந்தக் குற்றத்தைவிடப் பெரியதொரு குற்றமாகும். குற்றத்தை ஒப்புக்கொள்ளாதிருப்பது அதைவிடப் பெரிய குற்றமாகும். மேலும் குற்றத்தைக் கண்டுகொண்டால் அந்தக் குற்றம், குற்றம் என்ற நிலையிலிருந்து வெளியேறிவிடும். குற்றத்தை ஒப்புக்கொண்டால் அது மண்ணிப்புக்கு அருகதையுள்ளதாக மாறிவிடும்.
மனிதனுடைய சமூக வாழ்வில் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ஒரு ஷைத்தானிய சூழ்ச்சி காணப்படுகின்றது. அதாவது ஷைத்தான் ஒரு முஃமினுடைய ஒரு பாவத்தைக்கொண்டு அவனுடைய ஒட்டுமொத்த நன்மைகளையும் போர்த்திவிடுகின்றான். ஷைத்தானுடைய இந்த சூழ்ச்சிக்கு செவிசாய்க்கும் நடுநிலை தவறிய முன் முடிவுக்காரர்கள் முஃமினுக்கு எதிராகக் குரோதத்தை வளர்ப்பார்கள். ஆனால் யதார்த்தம் என்னவென்றால், சத்திய இரட்சகன் மறுமையில் தனது முத்லக்கான நீதியைக்கொண்டு மனிதர்களுடைய அமல்களை நிறுக்கும் போது பாவங்கள் நன்மைகளை மிகைத்துவிட்டால் மாத்திரமே, தோல்விக்குரியவனாக அல்லது குற்றவாளியாகத் தீர்ப்பு வழங்குகிறான். மாத்திரமன்றி பாவங்களுக்கான பாதைகள் ஏராளமானதாகவும் அவற்றைச் செய்வது இலகுவானதாகவும் இருக்கின்ற காரணத்தினால், சில போது தனி ஒரு நன்மையைக்கொண்டு ஏராளமான பாவங்களைப் போர்த்திவிடுவான். ஆகவே, இந்த உலகிலும் நாம் அல்லாஹ்வுடைய நீதிக்குப் பொருத்தமான அமைப்பில் நடந்துகொள்வது அவசியப்படுகின்றது. ஒரு மனிதனுடைய நலவுகள் தீங்குகளைவிட எண்ணிக்கையளவிலும் தாக்கத்தின் அடிப்படையிலும் அதிகமானதாக இருக்கின்றது எனில் அந்த மனிதன் நேசம்கொள்வதற்கும் மரியாதை செலுத்துவதற்கும் அருகதையுடையவனாகின்றான். சில போது அவனது பெறுமதிவாய்ந்த ஒரு நண்மையின் காரணமாக, பல பாவங்களை மண்ணிப்போடு பார்க்க வேண்டியது அவசியமாகும். ஆனால் மனிதன் தனது இயல்பில் குடிகொண்டிருக்கும் அக்கிரமத் தண்மை காரணமாக, ஷைத்தானுடைய மூலைச்சலவைக்காட்பட்டு, ஒரு மனிதனுடைய நூறு நன்மைகளையும் நலவுகளையும் தனி ஒரு பாவத்தை முன்னிருத்தி மறந்துவிடுகின்றான். இதன் மூலம் உண்மையில் முஃமினான சகோதரனுடன் குரோதத்தை வளர்த்த பாவத்துக்கு ஆளாகின்றான். ஒரு ஈயின் இறக்கையைக் கண்மணிக்கு மேல் வைத்தால் அது ஒரு பெரும் மலையைக்கூட அவனுக்குப் பார்க்க முடியாதவாறு போர்த்திவிடுகின்றது. அவ்வாறே, குரோதம் என்ற நரம்பு அறிவுக்கண்களை மூடிவிட்டால், ஈயின் இறக்கை அளவேயான பாவங்களைக்கொண்டு, மலை போன்ற நன்மைகளைப் போர்த்தி விடுகின்றன. எனவே எத்தனை எத்தனையோ போற்றத்தக்க நன்மைகளை மறந்து தனது முஃமினான சகோதரன் மீது குரோதத்தைக் கக்குகின்றான்; சமூக வாழ்வில் ஒரு குழப்பக்காரனாக மாறிவிடுகின்றான். அத்தோடு ஷைத்தான், இதே சூழ்ச்சியை ஒத்த இன்னுமொரு சூழ்ச்சியைக்கொண்டு மனிதனுடைய சீறிய சிந்தனையை சீர்குழைத்து, ஈமானிய சத்தியங்களுடைய விடயத்தில் நீதியான, ஆரோக்கியமான, நிர்மானம் மற்றும் ஆய்வியல் சார்ந்த சிந்தனையில் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகின்றான். இதன் மூலம் மனிதனுடைய சிந்தனையில் காணப்படுகின்ற இஸ்திகாமத்தான தன்மையை இல்லாமலாக்கிவிடுகின்றான். அதாவது; ஒரு ஈமானிய சத்தியத்துக்கான ஆயிரக்கணக்கான அத்தாட்சிகளையும் அந்த அத்தாட்சிகளின் அடியாகத் தோன்றுகின்ற திட்டவட்டமான முடிவுகளையும், குறித்த சத்தியத்தை நிராகரிப்பதற்கு ஆதாரமாக முன்வைக்கப்படுகின்ற ஏதேனும் ஒரு துரும்பைக்கொண்டு செல்லுபடியற்றதாக ஆக்குவதற்கும் நிராகரிக்கச் செய்வதற்கும் முயற்சிப்பான். ஆனால் யதார்த்தத்தில் இவ்வாறான பல நூறு துரும்புகள் தான் இருந்தாலும் அவை ஈமானியச் சத்தியங்களை நிறுவுகின்ற ஓர் அத்தாட்சிக்குக் கூட ஈடாக முடியாதவையாகும். ஏனெனில் “ஏராளமான நிராகரிப்புகளும் மறுப்புகளும் ஓர் அத்தாட்சி அல்லது ஆதாரத்துக்கு ஈடாக முடியாது” என்பது ஏகோபித்த ஒரு விதியாகும். அதாவது ஒரு வாதத்தை அத்தாட்சிப்படுத்துகின்ற ஒரு சாட்சி, அதை மறுத்தளிக்கின்ற நூறு நிராகரிப்பாளர்களுக்குப் பதிலாக ஏற்றுக்கொள்ளப்படுவார். இந்த சத்தியத்தை ஓர் உதாரணத்தின் மூலம் பின்வருமாறு விளக்க முடியும். ஒரு மாளிகைக்கு நூற்றுக் கணக்கான தாழிடப்பட்ட கதவுகள் இருக்கின்றன. ஏதேனும் ஒரு கதவைத் திறந்துகொள்வதன் மூலம் அந்த மாளிகைக்குள் நுழைய முடியுமானதாக இருப்பதோடு, அதன் மூலம் பிற கதவுகளையும் திறந்துகொள்ள முடியும். நிலைமை இவ்வாறிருக்க பெரும்பாலான கதவுகள் திறந்திருக்கும் போது, வெறுமனே ஓரிரண்டு கதவுகள் மூடப்பட்டிருப்பதைக் காட்டி “இதோ இந்த மாளிகைக்குள் நுழைய முடியாது” என்று கூற முடியாது. ஆம், ஈமானிய சத்தியங்களே அந்த மாளிகையாகும். ஒவ்வொரு அத்தாட்சியும் அந்த மாளிகைக்கான ஒவ்வொரு திறவுகோளாகும். அந்த அத்தாட்சிகள் அந்த மாளிகையுடைய கதவுகளைத் திறந்து அந்தக் கோட்டைக்குள் மனிதனை அழைத்துச் செல்கின்றன. இப்போது தனி ஒரு கதவு மூடப்பட்டிருப்பதை வைத்து அந்த மாளிகையை அதாவது ஈமானிய சத்தியங்களை விட்டுக்கொடுக்கவோ, நிராகரித்துவிடவோ முடியாது. ஆனால், ஷைத்தானோ, சில காரண காரியங்களை வைத்தும் மனிதனது பொடுபோக்குத்தனம், அறியாமை என்பவற்றைப் பயன்படுத்தியும் மூடப்பட்டிருக்கின்ற ஒரு கதவை நோக்கி முழுக் கவனத்தையும் திருப்பி, திறந்திருக்கின்ற அத்தனை கதவுகளையும் அதாவது அத்தாட்சிகளையும் பார்வையிலிருந்து மறைத்துவிடுவான். பின்னர் “இதோ, இந்த மாளிகைக்குள் நுழைய முடியாது. இது ஒரு மாளிகையே அல்ல. இதற்குள் எதுவும் கிடையாது” என்று கூறித் தனது வலைக்குள் மனிதர்களை வீழ்த்திவிடுகின்றான். இதோ ஷைத்தானிய சூழ்ச்சிகளுக்குள் வசதியாக நுழைந்துகொள்ளும் நாதியற்ற மனிதனே! தீனுடைய வாழ்க்கையிலும் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையிலும் நிம்மதியை ஆதரவு வைக்கின்றாய் எனில், சீறிய சிந்தனையையும் தெளிவான பார்வையையும் நிம்மதி அடைந்த உள்ளத்தையும் ஆசிக்கின்றாய் எனில் குர்ஆனிய வரம்புகளினதும் மேலான சுன்னத்துக்களுடைய அளவீடுகளையும் வைத்து உனது நடவடிக்கைகளையும் சிந்தனைகளையும் அளவீடு செய்துகொள்! என்றும் எப்போதும் குர்ஆனையும் மேலான சுன்னாக்களையும் உனது வழிகாட்டியாக எடுத்துக்கொள்! ﺍَﻋُﻮﺫُ ﺑِﺎﻟﻠّٰﻪِ ﻣِﻦَ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥِ ﺍﻟﺮَّﺟِﻴﻢِ என்று கூறி சத்திய இரட்சகனிடம் பாதுகாப்புத் தேடு! இதோ இங்கிருக்கின்ற இந்தப் பதின்மூன்று அடையாளங்களும் பதின்மூன்று திறவுகோள்களாகும். அற்புதமிக்க தெளிவுரையாகிய குர்ஆனுடைய இறுதி அத்தியாயமாகவும் ﺍَﻋُﻮﺫُ ﺑِﺎﻟﻠّٰﻪِ ﻣِﻦَ ﺍﻟﺸَّﻴْﻄَﺎﻥِ ﺍﻟﺮَّﺟِﻴﻢِ என்ற வசனத்துக்கான விரிவான ஒரு வியாக்கியானமாகவும் இருக்கின்ற اَس۟تَعٖيذُ بِاللّٰهِ بِس۟مِ اللّٰهِ الرَّح۟مٰنِ الرَّحٖيمِ قُل۟ اَعُوذُ بِرَبِّ النَّاسِ مَلِكِ النَّاسِ اِلٰهِ النَّاسِ مِن۟ شَرِّ ال۟وَس۟وَاسِ ال۟خَنَّاسِ اَلَّذٖى يُوَس۟وِسُ فٖى صُدُورِ النَّاسِ مِنَ ال۟جِنَّةِ وَ النَّاسِ என்ற அத்தியாயத்தில் உனக்குப் புகழிடம் தர்டுவதற்கான உறுதியான ஒரு பாதுகாப்பு அரண் இருக்கின்றது. அந்தக் கோட்டையை மேற்படி பதின்மூன்று திறவுகோல்களையும் கொண்டு திறந்து அதற்குள் நுழைந்துகொள்! அப்போது நிம்மதியையும் பாதுகாப்பையும் பெற்றுக்கொள்ளலாம். سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ رَبِّ اَعُوذُ بِكَ مِن۟ هَمَزَاتِ الشَّيَاطٖينِ وَاَعُوذُ بِكَ رَبِّ اَن۟ يَح۟ضُرُونِ

