Lem'alar

The Fourteenth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

(இரண்டு கேள்விகளுக்கான பதிலாகும்.) بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ اَلسَّلَامُ عَلَي۟كُم۟ وَ رَح۟مَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ கண்ணியத்துக்கும் நம்பிக்கைக்குமுரிய சகோதரன் ரஃபத்! எருது, மீன் என்பன தொடர்பாக நீங்கள் கேட்ட கேள்விக்கு உண்மையில் வேறு சில பகுதிகளில் பதிலளிக்கப்பட்டுள்ளது. இந்த வகையான கேள்விகளுக்கான பதிலை இருபத்தி நான்காவது வார்த்தையின் மூன்றாவது கிளையில் உள்ள பன்னிரண்டு அடிப்படை விதிகளில் தெளிவாகப் பெற்றுக்கொள்ளலாம். அந்த விதிகள் ஒவ்வொன்றும் ஹதீஸ்களின் பல்வேறுபட்ட விளக்கங்களுக்கான ஒவ்வொரு உரைகல்லாகவும் ஹதீஸ்கள் தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களைக் களைவதற்கான ஒவ்வொரு அடிப்படையாகவும் திகழ்கின்றது. துரதிஷ்டவசமாக தற்போதைக்கு உள்ளத்தில் அவ்வப்போது ஏற்படும் உதிப்புகளைத்தவிர வேறு அறிவுப் பணிகளில் ஈடுபடுவதற்குத் தடையாக உள்ள சில நிலைமைகள் காணப்படுகின்றன. எனவே உங்கள் கேள்விகளுக்கேற்ப பதிலளிக்க முடியாத நிலையில் இருக்கிறேன். உள்ளத்தில் உதிப்புகள் தோன்றும் சந்தர்ப்பங்களில் நிர்ப்பந்தமாக அவற்றோடு தொடர்புபடுகிறேன். சில சமயம் உங்கள் கேள்விகளும் எனக்கு ஏற்படுகின்ற உதிப்புகளும் தவாஃபூக் ஆகுமாக இருந்தால் அதாவது ஒத்துப் போகுமாக இருந்தால் பதில் தருவேன். என்றாலும் கேள்விகளைக் கேட்பதற்குத் தயங்காதீர்கள்.

§2

கேள்வி: முஅல்லிம்கள் இந்த உலகம் எருதுக்கும் (ஸௌர்) மீனுக்கும் (ஹூத்) மேல் இருப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் பூமி அந்தரத்தில் நட்சத்திரங்களைப் போல் நீந்துவதாகவே வானவியல் கூறுகின்றது. அங்கே எருதையும் காண முடியாதுள்ளது, மீனையும் காண முடியாதுள்ளது. பதில்: இப்னு அப்பாஸ் (ரழி) போன்ற ஸஹாபாக்களுக்கு இஸ்னாத் செய்யப்படும் ஸஹீஹான ஓர் அறிவிப்பின் பிரகாரம் ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் “பூமி எதன் மீதுள்ளது?” என்று வினவப்படுகிறது. ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ﻋَﻠَﻰ ﺍﻟﺜَّﻮْﺭِ ﻭَﺍﻟْﺤُﻮﺕِ என்று பதிலளிக்கிறார்கள். வேறோரு அறிவிப்பின்படி ஒரு தடவை கேட்கப்பட்ட போது ﻋَﻠَﻰ ﺍﻟﺜَّﻮْﺭِ என்றும் பிறிதொரு தடவை கேட்கப்பட்ட போது ﻋَﻠَﻰ ﺍﻟْﺤُﻮﺕِ என்றும் பதிலளித்துள்ளார்கள். ஒரு சில முஹத்திஸ்கள் இந்த ஹதீஸை பழங்காலக் கதைகள் அல்லது இஸ்ராயீலிய்யாத்களிலிருந்து புகுத்தப்பட்ட ஒரு கதையாகக் கருதுகின்றனர். உண்மையில் இதற்கான காரணம் குறிப்பாக பனூ இஸ்ராயீல் ஆலிம்களுள் சிலர் இஸ்லாத்துக்கு வந்த பின்னர் முன்னைய வேதங்களில் எருது, மீன் என்பன தொடர்பாக அவர்கள் கண்ட கதைகளை இந்த ஹதீஸோடு இணைத்து இந்த ஹதீஸுக்கு அபரிமிதமான விளக்கங்களை வழங்கியமையாகும். தற்போதைக்கு இந்தக் கேள்வியுடன் தொடர்பாக மிகவும் சுருக்கமாக மூன்று அடிப்படைகள் அல்லது மூன்று பார்வைக் கோணங்களைக் கூறுகிறோம்.

§3

சில பனூ இஸ்ராயீல் உலமாக்கள் இஸ்லாத்துக்குள் நுழையும் போது அவர்களிடமிருந்த பழைய தகவல்களும் கூட அவர்களுடன் சேர்ந்து இஸ்லாத்துக்குள் நுழைந்ததால் காலப்போக்கில் அவை இஸ்லாத்தின் உடமைகளாகக் கருதப்பட ஆரம்பித்தன. ஆனால் அந்தப் பழைய தகவல்களில் பல்வேறு பிழைகளும் குழறுடிகளும் கூடக் காணப்படுகின்றன. அந்தப் பிழைகள் நிச்சயமாக அவர்களுக்குரியதேயன்றி இஸ்லாத்துக்குரியவையல்ல.

§4

சிலேடைகளும் உவமான உவமேயங்களும் சான்றோரிடமிருந்து சாமான்யர்களிடம் வரும் போது அதாவது அறிவின் கரங்களிலிருந்து அறியாமையின் கரங்களில் விழும் போது காலப்போக்கில் சாதனம் என்ற நிலையிலிருந்து யதார்த்தமாகப் பரிமாணம் அடைகின்றது. உதாரணமாக, சிறு வயதில் இருக்கும் போது ஒரு தடவை சந்திரக் கிரகணம் ஏற்பட்டது. நான் தாயிடம் “சந்திரன் ஏன் இவ்வாறு ஆகிவிட்டது?” என்று கேட்டேன். தாய் “ சந்திரனைப் பாம்பு விழுங்கிவிட்டது “ என்று கூறினார். “அப்படியானால் இன்னும் தென்படுகிறதே” என்று கேட்டேன். “மேலே உள்ள பாம்புகள் கண்ணாடி போல் இருப்பதால் உள்ளே இருப்பவற்றைப் பார்க்க முடியும்” என்று கூறினார். இந்த சிறு வயது அனுபவம் என்னைப் பல முறை சிந்திக்க வைத்தது. “இந்த அளவு உண்மைக்குப் புறம்பான ஒரு மூட நம்பிக்கை எனது தாயைப் போன்ற மிகவும் கராரான மனிதர்களுடைய நாவில் எவ்வாறு உலாவ முடியும்?” என்று ஆச்சரியப்பட்டேன். பின்னர் வானியல் கல்வியை ஆராய்ந்த போதுதான், ஒரு சிலேடையே இவ்வாறு உண்மை போன்று பரிமாணம் பெற்று மக்கள் மத்தியில் உலாவுவதை அறிந்துகொள்ள முடிந்தது. அதாவது சந்திரக் கிரகணம் ஏற்படுவதற்கு பூமியின் சுற்றுவட்டப் பாதையும் சந்திரனின் சுற்றுவட்டப் பாதையும் ஒன்றின்மீதொன்று பொருந்த வேண்டும் என்பதால் அந்த சந்தர்ப்பத்தில் அந்த இரண்டு பாதைகளும் ஒவ்வொரு அடைப்புக்குறி போன்ற தோற்றத்தை வழங்குகின்றது. அந்த இரண்டு அடைப்புக்குறிகளையும் வானியல் அறிஞர்கள் சுவாரஷ்யமான ஒரு சிலேடை மூலம் இரு பெரும் பாம்புகள் என்ற அர்த்தத்தில் “தின்னீனைன்” என்று பெயர் சூட்டியுள்ளனர். அத்தோடு அந்த இரண்டு பாதைகளும் இடைவெட்டுகின்ற புள்ளிக்குத் தலை என்ற அர்த்தத்தில் “ரஃஸ்” என்றும் எஞ்சிய பக்கத்துக்கு வால் என்ற அர்த்தத்தில் “ஸனப்” என்றும் பெயர் சூட்டியுள்ளனர். வானியல் கணக்குகளின் பிரகாரம் சந்திரன் தலையையும் சூரியன் வாலையும் அடைகின்ற போது பூமி சரி மத்தியில் நிலைகொள்ளும். அப்போது சந்திரக் கிரகணம் ஏற்படும். அத்துடன் ஏற்கனேவே உள்ள இந்த சிலேடைகளின் தொடரில் சந்திரன் தலைப்பகுதிக்கு வருவதை “சந்திரன் தின்னீனைனுடைய வாய்க்குள் நுழைந்து விட்டது” என்றும் கூறியுள்ளார்கள். இப்போது அறிவியல் பின்புலத்தைக் கொண்ட இந்த உயர்வான சிலேடை சான்றோரிடமிருந்து பாமரர்களை அடைந்த பின்னர் காலப்போக்கில் சந்திரனை விழுங்க முடியுமான பிரமாண்டமான, உண்மையான ஒரு பாம்பின் வடிவத்தைப் பெற்றுக்கொண்டது. அவ்வாறே ஸௌர், ஹூத் என்ற நாமங்களை உடைய இரு பெரும் மலக்குகளுக்கு அர்த்தபூர்வமான சில தாத்பரியங்களை சாடையாகக் குறித்துக் காட்டும் வகையில் ஸௌர், ஹூத் அதாவது எருது, மீன் என்ற நாமங்கள் வழங்கப்பட்டுள்ளன. பின்னர் இந்த விடயம் மேன்மையும் புனிதத்துவமும் வாய்ந்த நுபுவ்வத்துடைய மொழியிலிருந்து பாமர மக்களின் புழக்கத்துக்கு வர ஆரம்பித்த பின்னர் சிலேடை யதார்த்தமாகப் பரிமாணமடைந்து பிரமாண்டமான ஒரு எருதினதும் மீனினதும் வடிவத்தைப் பெற்றுக்கொண்டது.

§5

ஆம், குர்ஆனில் முதஷாபிஹாத்தான வசனங்கள் காணப்படுகின்றன. மிக ஆழமான விடயங்களை உவமான உவமேயங்கள் மூலமும் சிலேடைகள் மூலமும் பாமரர்களுக்கும் புரிய வைக்கின்றது. அவ்வாறே முதஷாபிஹாத்தான ஹதீஸ்களும் காணப்படுகின்றன. அவை மிகவும் ஆழமான உண்மைகளை அறிமுகமான வார்த்தைகள் அல்லது சிலேடைகள் மூலம் முன்வைக்கின்றன. உதாரணமாக, வேறு சில இடங்களிலும் கூறப்பட்டதைப் போன்று, ஒரு சமயம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய அவையில் மிகவும் ஆழத்திலிருந்து வருகின்ற ஒரு பாரிய சத்தம் கேட்டது. அண்ணவர்கள் “எழுபது வருடங்களாக வீழ்கின்ற ஒரு கல் இன்றைய தினம் நரகத்தின் ஆழத்தைத் தொட்டது. அதுவே இந்த சத்தம்” என்று விளக்கமளித்தார்கள். சில நிமிடங்களின் பின்னர் அந்த மஜ்லிஸுக்கு வந்த ஒருவர் பிரபலமான ஒரு முனாபிக் தனது எழுபதாவது வயதில் மரணித்த செய்தியை எத்திவைத்தார். சபையில் இருந்தவர்கள் நபியுடைய வார்த்தையில் இருந்த ஆழமான அர்த்தத்தைப் புரிந்துகொண்டார்கள். இந்த வகையில் மூன்று கோணங்களில் மேற்படி விடயத்தைப் பார்க்க முடியும்.

§6

அர்ஷினதும் வானங்களினதும் சுமப்பர்கள் என்றழைக்கப்படும் நான்கு மலக்குமார்களுள் ஒருவரின் பெயர் நஸ்ர் (கழுகு), இன்னொருவரின் பெயர் ஸௌர் (எருது) ஆகும். இவர்கள் அர்ஷிலும் பிரபஞ்சத்திலும் ருபூபியத்தின் மாட்சிமையைக் கண்காணிக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதைப் போன்றே பிரபஞ்சத்தின் ஒரு சிறிய சகோதரன் என்ற அந்தஸ்துக்குரிய பூமியை சுமப்பதற்காகவும் கண்காணிப்பதற்காகவும் இரண்டு மலக்குமார்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களின் பெயர்களே ஸௌர், ஹூத் என்பனவாகும். இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டமைக்குப் பின்னாலுள்ள தாத்பரியமும் அர்த்தபூர்வமானதாகும். அதாவது பூமி நீர், நிலம் என்ற இரண்டு வகையான பகுதிகளைக் கொண்டதாகும். நீர்ப் பரப்பை செழிப்பாக வைத்திருப்பது மீனாகும். நிலப்பகுதியை செழிப்பாகவும் மனித வாழ்வுக்கு ஆதாரமாகவும் வைத்திருக்கின்ற விவசாயம் எருதின் மீதே தங்கியுள்ளது. எனவே பூமியின் ஓட்டுனர்களாகவும் கண்காணிப்பாளர்களாகவும் உள்ள இரண்டு மலக்குமார்களும் இந்த இரண்டு இனங்களையும் நினைவுகூறும் விதமாக அமைந்திருப்பது மிகவும் அர்த்தபூர்வமானதாகும். ﻭَﺍﻟْﻌِﻠْﻢُ ﻋِﻨْﺪَ ﺍﻟﻠّٰﻪ.ِ அந்தத் தொடர்பு பெயரளவில் மாத்திரமன்றி ஆலமுல் மலகூத்திலும் ஆலமுல் மிஸாலிலும் அவர்களுக்குரிய தோற்றமும் கூட மீன், எருது ஆகியவற்றின் வடிவில் இருக்க முடியும். (குறிப்பு: ) இதோ இந்த அழகிய தொடர்புகளைக் கூறும் விதமாகவும் பூமியின் மீதுள்ள அந்த இரண்டு பிரதான படைப்புகளை அழகிய ஒரு சமிக்ஞை மூலம் நினைவூட்டுகின்ற விதமாகவும் நபித்துவத்தின் அற்புதமான மொழியில் ﺍَﻟْﺎَﺭْﺽُ ﻋَﻠَﻰ ﺍﻟﺜَّﻮْﺭِ ﻭَﺍﻟْﺤُﻮﺕِ என்று கூறியுள்ளார்கள். பல பக்கங்களில் விளக்க வேண்டிய ஆழமான ஓர் உண்மையை ஒரே வார்த்தையில் மிகவும் அழகாகத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

§7

உதாரணமாக “இந்தத் தேசம் எதன் மீது நிற்கின்றது?” என்று கேள்விக்கு “ ﻋَﻠَﻰ ﺍﻟﺴَّﻴْﻒِ ﻭَ ﺍﻟْﻘَﻠَﻢِ அதாவது, வாலின் மீதும் பேனாவின் மீதும்” என்று பதிலளிக்கப்பட்டால் அந்தப் பதில் சரியானதாகும். இங்கு இராணுவத்தின் வீரம் வாலிலும் நிர்வாகிகளின் அறிவுஞானம் பேனாவிலும் குறியீடு செய்யப்படுகின்றது. அவ்வாறே உயிரினங்களின் இருப்பிடமாகத் திகழும் இந்தப் பூமியில் மனிதன் உயிரினங்களின் அரசன் என்ற அந்தஸ்தை உடையவனாக இருக்கிறான். கரையோரப் பிரதேசங்களில் வாழ்கின்ற மனிதர்களின் மிகப் பிரதானமான வாழ்வாதாரம் மீனும் மீன் சார்ந்த தொழில்களுமாகும். மத்திய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் பிரதான வாழ்வாதாரமாக உள்ள விவசாயம் எருதுடைய முதுகின் மீதே உள்ளது. எனவே நிச்சயமாக தேசம் வாலின் மீதும் பேனாவின் மீதும் நிற்கின்றது என்ற பதிலைப் போன்றே உலகம் எருதின் மீதும் மீனின் மீதும் நிற்கின்றது என்ற பதிலும் சரியானதாகும; கருத்தாழமிக்கதாகும். ஆம், எப்போது எருது உழைப்பையும் மீன் மில்லியன் கணக்கான முட்டைகள் இடுவதையும் நிறுத்துகின்றனவோ அப்போது உலகில் வாழ்வாதாரம் பிரச்சினை உண்டாகும். வாழ்க்கை முடங்கும். இதோ, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஞானம் நிறைந்த, அற்புதமான பதில் மூலம் மனித இனத்தின் வாழ்வு ஏனைய உயிரினங்களின் வாழ்வோடு எந்த அளவு பிணைந்துள்ளது என்ற மகத்தான பாடத்தை இரண்டே சொற்களில் கற்றுத்தருகிறார்கள்.

§8

பண்டைய வானியல் சூரியனே சுற்றுவதாக நம்பியது. இந்த வகையில் சூரியனுடைய ஒவ்வொரு முப்பது பாகைக்கும் ஒவ்வொரு உடுத் தொகுதியைக் குறித்து ஒவ்வொரு உடுத் தொகுதிக்குள்ளும் உள்ள உடுக்களை கோடுகளால் இணைத்த போது ஒன்று சிங்கத்துடைய தோற்றத்தில் சிம்மம் என்ற நாமத்தையும் ஒன்று தராசுடைய தோற்றத்தில் துலாம் என்ற நாமத்தையும் ஒன்று எருதுடைய தோற்றத்தில் ரிஷபம் என்ற நாமத்தையும் ஒன்று மீனுடைய தோற்றத்தில் மீனம் என்ற நாமத்தையும் பெற்றது. உடுத்தொகுதிகளின் தோற்றப் பொருத்தம் குறித்த பெயர்களைப் பெறுவதற்குக் காரணியாக அமைந்தது. நவீன வானியலின்படி சூரியன் சுற்றுவதில்லை. சூரியனுக்குப் பதிலாகப் பூமியே சுற்றுகின்றது. எனவே சூரியனுடைய இடத்தைக் குறிக்கும் வகையில், உதாரணமாக சூரியன் ரிஷபத்தில் இருக்கின்றது என்ற ரீதியில் அந்த உடுத்தொகுதிகளின் பயன்பாடு காலாவதியாகிவிட்டது. எனவே பழைய நம்பிக்கைப்படி (சூரியனின் சுற்றுப் பாதையில்) அந்த உடுத்தொகுதிகளின் காலாவதியான பணிகளுக்குப் பதிலாக பூமியின் சுற்றுவட்டப் பாதையை அதே பெயர்களில் அதே மாதிரிகளின் பிரகாரம் பன்னிரண்டு பகுதிகளாகப் பிரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே தற்போது உடுத்தொகுதிகள் பூமியின் சுற்றுவட்டப் பாதையையே பிரதிநிதித்துவம் செய்கின்றன. எனவே பூமி ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு உடுத்தொகுதியின் பகுதிக்குள் நுழைகின்றது. அந்த மாதம் முழுவதும் அதன் மீது இருக்கும். இதோ இந்த அடிப்படையில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஏலவே கூறப்பட்டதைப் போன்று ஒரு தடவை ﻋَﻠَﻰ ﺍﻟﺜَّﻮْﺭِ என்றும் இன்னொரு தடவை ﻋَﻠَﻰ ﺍﻟْﺤُﻮﺕِ என்றும் கூறியுள்ளார்கள். ஆம், அற்புதமான மொழியாகத் திகழும் நுபுவ்வத்துடைய மொழிக்கு மெருகேற்றக்கூடிய அமைப்பில் பல யுகங்கள் கடந்து புரிந்துகொள்ளப்பட முடியுமான ஓர் உண்மையை உணர்த்தும் வகையில் ஒரு தடவை ﻋَﻠَﻰ ﺍﻟﺜَّﻮْﺭِ என்று கூறினார்கள். அப்போது அந்தக் கேள்வி கேட்கப்படுகின்ற சமயம் பூமி எருது அல்லது ரிஷபம் என்ற உடுத்தொகுதியின் பகுதிக்குள் இருந்தது. இன்னொரு தடவை அதே கேள்வி முன்வைக்கப்பட்ட சமயம் பூமி மீன் அல்லது மீனம் என்ற உடுத்தொகுதியின் பகுதிக்குள் இருந்ததால் ﻋَﻠَﻰ ﺍﻟْﺤُﻮﺕِ என்று கூறினார்கள். இதோ எதிர்காலத்தில் புரிந்துகொள்ளப்பட முடியுமான மகத்தான ஓர் உண்மையை, அதாவது சூரியனின் உடுத் தொகுதிகள் சார்பான மாறா நிலையையும் அவை பூமியின் சுற்றுவட்டப் பாதை சார்பாகவே மாறுகின்றன என்பதையும் எனவே சூரியன் அன்றி பூமியே சுற்றுகின்றது என்பதையும் ﻋَﻠَﻰ ﺍﻟﺜَّﻮْﺭِ ﻭَﺍﻟْﺤُﻮﺕِ என்ற வார்த்தை மூலம் அற்புதமாக எடுத்துக் கூறியுள்ளார்கள். ﻭَﺍﻟﻠّٰﻪُ ﺍَﻋْﻠَﻢُ ﺑِﺎﻟﺼَّﻮَﺍﺏِ சில இஸ்லாமிய நூல்களில் எருது, மீன் என்பன தொடர்பாக அறிவுக்கு அப்பாற்பட்ட வர்ணனைகளும் வியாக்கியானங்களும் இஸ்ராயீலியாத் வகையைச் சேர்ந்தவையாகும் அல்லது. அல்லது வெறுமனே சில முஹத்திஸ்களுடைய வியாக்கியானங்களாகும். சிலர் கவனக் குறைவு காரணமாக அவற்றை ரஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு இஸ்னாத் செய்கிறார்கள். رَبَّنَا لَا تُؤَاخِذ۟نَٓا اِن۟ نَسٖينَٓا اَو۟ اَخ۟طَا۟نَا سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

§9

“ஆலு அபா” தொடர்பானதாகும். சகோதரனே! பதிலளிக்கப்படாதிருந்த ஆலு அபா தொடர்பான உங்கள் கேள்விக்கான பதிலாக ஆலு அபா விடயத்திலிருக்கும் ஏராளமான தாத்பரியங்களுள் ஒன்றை மாத்திரம் இங்கு விளக்கத்துக்கு எடுத்துக்கொள்கிறோம். அதாவது, ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான் அணிந்த அருள்பாலிக்கப்பட்ட போர்வையை ஹழரத் அலி (ரழி), ஹழரத் ஃபாதிமா (ரழி), ஹழரத் ஹஸன் (ரழி) மற்றும் ஹழரத் ஹுஸைன் (ரழி) ஆகியோர் மீது போர்த்தி لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا என்ற மறை வசனத்தைக் கொண்டு துஆக் கேட்டமைக்குப் பின்னால் இரகசியமான பல ஞானங்கள் பொதிந்துள்ளன. இங்கு அந்த இரகசியங்கள் சம்பந்தமான விளக்கத்தை தவிர்த்து ரிஸாலத் பணியோடு தொடர்பான ஒரு தாத்பரியத்தை மாத்திரம் தெளிவுபடுத்துகிறோம்: ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது மறைவையும் எதிர்காலத்தையும் அறிந்த நுபுவ்வத்துடைய பார்வை மூலம் முப்பது, நாற்பது வருடங்களின் பின்னர் ஸஹாபாக்களுக்கும் தாபிஈன்களுக்கும் மத்தியில் மகத்தான பித்னாக்கள் தோன்றி இரத்தம் சிந்தப்படப்போகும் விடயத்தைக் கண்டுகொண்டுள்ளார்கள். அப்போது அவர்களுக்கு மத்தியில் மிகவும் உயர்வான ஆளுமைகளாக இருக்கப் போபவர்கள் தனது போர்வைக்குக் கீழ் இருந்த அந்த மூன்று ஆளுமைகளும் தான் என்பதையும் சான்று பகன்றுள்ளார்கள். எனவே, ஹழரத் அலி (ரழி) அவர்களை உம்மத்துக்கு முன்னால் தூய்மைப்படுத்தி, அவர்களது பரிசுத்தத் தன்மையை பிரகடனப்படுத்துவதற்காகவும் ஹழரத் ஹுஸைன் (ரழி) அவர்களுக்கு ஆறுதலையும் அமைதியையும் அளிப்பதற்காகவும் ஹழரத் ஹஸன் (ரழி) அவர்களை வாழ்த்தி, அவர்கள் செய்யப் போகும் ஓர் ஒப்பந்தம் மூலம் உம்மத்தைச் சூழப் போகின்ற பயங்கரமான ஒரு பித்னாவை அகற்றி அவர்கள் பெற்றுக்கொள்ளப் போகும் கண்ணியத்தையும் அவர்களால் உம்மத் அடையப் போகும் மகத்தான நன்மைகளையும் எத்தி வைப்பதற்காகவும் ஹழரத் ஃபாதிமா அவர்களின் சந்ததிகளுடைய பரிசுத்தத்தன்மை, கண்ணியம் என்பவற்றைப் பிரகடனம் செய்து அஹ்லுல் பைத் என்ற உன்னதமான நாமத்துக்கு அவர்கள் அருகதையுள்ளவர்களாக ஆகப்போகின்றார்கள் என்பதை உறுதி செய்வதற்காகவும் அந்த நான்கு உத்தமர்களுக்கும் தன்னோடு இணைந்ததாக “ஆலு அபாவுக்குரிய ஐவர்” என்ற நாமத்தை ஈட்டிக் கொடுத்த அந்த அபாவைப் போர்த்தினார்கள். ஆம்! பித்னாக்கள் தோன்றிய அந்தக் காலத்தில் கிலாபத் உண்மையிலேயே ஹழரத் அலி (ரழி) அவர்களுக்கு வர வேண்டியதாக இருந்தது. ஆனால், சிந்தப்பட்ட இரத்தங்கள் மிகவும் மகத்துவமிக்கவையாக இருந்தமையால் உம்மத்துடைய தப்பெண்ணத்தை விட்டும் ஹழரத் அலி (ரழி) அவர்களைப் பாதுகாத்து அவர்களது பரிசுத்தத்தன்மையைப் பிரகடனப்படுத்துவது - ரிஸாலத் பணியின் அடிப்படையில் அவர்கள் ஆற்றப்போகும் பணிகளின் மகத்துவத்தின் காரணமாக- மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருந்தது. எனவேதான் ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அத்தகைய ஓர் அணுகுமுறையைக் கைக்கொண்டு அவர்களைப் பரிசுத்தப் படுத்தினார்கள். அவர்களை விமர்சித்தும் பொய்ப்பித்தும் வழிகேட்டில் வீழ்ந்து விட்டதாகக் கூறியும் கொட்க்கரிக்கும் கவாரிஜ்களினதும் உமையாக்களுக்கு மத்தியில் தோன்றிய ஒரு சில அக்கிரமக்காரர்களினதும் வாயை அடைத்தார்கள். ஆம்! கவாரிஜ்களும் உமையாக்களுடைய ஒரு பகுதி அக்கிரமக்கார ஆதரவாளர்களும் ஹழரத் அலி (ரழி) அவர்களைப் பொய்ப்பித்து வழிகேட்டுப் பட்டம் சூட்டியமையும் ஹழரத் ஹுஸைன் (ரழி) அவர்கள் முகம்கொடுத்த மிகவும் வக்கிரமான, நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவத்தைத் தொடர்ந்து ஷீஆக்களுடைய தீவிரப் போக்கும் பித்அத்களில் அவர்கள் காட்டிய தீவிர நாட்டமும் ஷைஹைன்களைவிட்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டமையும் இஸ்லாத்தின் குடைக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மிகவுமே பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. ஆம்! ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அந்தப் போர்வையைக் கொண்டும் துஆவைக் கொண்டும் ஹழரத் அலி (ரழி), ஹழரத் ஹுஸைன் (ரழி) ஆகியோரை அந்த அனர்த்தங்களுக்கான பொறுப்பிலும் அத்தகைய குற்றச்சாட்டுக்களிலும் இருந்து பாதுகாத்ததைப் போன்றே தனது உம்மத்தினர் அவர்கள் மீது தப்பெண்ணம் கொள்வதை விட்டும் பாதுகாத்தார்கள். அவ்வாறே ஹழரத் ஹஸன் (ரழி) அவர்களை -அவர்கள் செய்த ஒப்பந்தத்தின் மூலம் அவர்கள் உம்மத்துக்குச் செய்த புண்ணியத்தை- ரிஸாலத் பணிக்கான அவர்களது தொண்டை அடிப்படையாக வைத்து வாழ்த்துகிறார்கள். மேலும், ஹழரத் ஃபாத்திமா அவர்களின் பரம்பரையில் தோன்றும் அருள்பாலிக்கப்பட்ட சந்ததிகள் முஸ்லிம் உலகில் அஹ்லுல் பைத் என்ற நாமத்தைப் பெற்று உன்னதமானதோர் அந்தஸ்தையும் கண்ணியத்தையும் அடையப் போகும் விடயத்தையும் இதன் மூலம் ஹழரத் ஃபாத்திமா (ரழி) அவர்கள் وَ اِنِّى اُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ என்று இறைஞ்சிய ஹழரத் மர்யமின் தாயைப் போன்று தனது சந்ததிகள் மூலம் மிகுந்த உயர்வையும் கண்ணியத்தையும் அடையப் போகின்றார்கள் என்பதையும் சுபசோபனம் கூறுகிறார்கள். اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلٰى اٰلِهِ الطَّيِّبٖينَ الطَّاهِرٖينَ ال۟اَب۟رَارِ وَعَلٰى اَص۟حَابِهِ ال۟مُجَاهِدٖينَ ال۟مُك۟رَمٖينَ ال۟اَخ۟يَارِ اٰمٖينَ

§10

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ உடைய ஆயிரக்கணக்கான மறைவான தாத்பரியங்களிலிருந்து பெறப்பட்ட ஆறு தாத்பரியங்களோடு தொடர்பானதாகும். நினைவூட்டல்: பிஸ்மியின், ரஹ்மத் சம்பந்தமான பிரகாசமான ஓர் ஒளி எனது குன்றிய அறிவுக்குத் தொலைவிலிருந்து தென்பட்டது. அதை சொந்த ஆன்மாவுக்காகக் குறிப்பு வடிவில் பதிவு செய்து கொள்ள விறும்பினேன். அந்த ஒளியைச் சூழ ஓர் அணை எழுப்புவதன் மூலம் இருபது, முப்பதளவிலிருந்த அந்த இரகசியங்களை பற்றிப்பிடித்துப் பாதுகாத்துக் கொள்ள அவசரப்பட்டேன். ஆனால் துரதிஷ்டவசமாக தற்போதைக்கு அந்த ஆசையை நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை. இருபது - முப்பதிலிருந்து ஐந்து ஆறுக்கு இறங்கிவிட்டது. இங்கு “ஓ மனிதா!” என்று கூறும் இடங்களில் எனது ஆன்மாவையே விளிக்கிறேன். இந்தப் பாடம் குறிப்பாக எனது நஃப்ஸுக்கானதாக இருக்க, ஆன்மீக ரீதியில் என்னோடு தொடர்புபட்டவர்களுக்கும் ஆன்மாக்கள் எனது ஆன்மாவை விட விளிப்புள்ள சான்றோருக்கும் சிலவேளை பயனளிக்கும் காரணியாக அமையலாம் என்ற எண்ணத்தில் பதிநான்காம் வெளிச்சத்தின் இரண்டாவது அத்தியாயமாக, ஆய்வு செய்யும் எனது சகோதரர்களிடம் சமர்ப்பிக்கின்றேன். இப்பாடம் அறிவை விட ஆத்மாவையும் நிறுவல்களை விட ஆத்மானந்தத்தையும் விளித்தே பேசுகின்றது. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ قَالَت۟ يَٓا اَيُّهَا ال۟مَلَؤُا اِنّٖٓى اُل۟قِىَ اِلَىَّ كِتَابٌ كَرٖيمٌ ۝ اِنَّهُ مِن۟ سُلَي۟مٰنَ وَ اِنَّهُ بِس۟مِ اللّٰهِ الرَّح۟مٰنِ الرَّحٖيمِ Şu makamda birkaç sır zikredilecektir.

§11

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ உடைய ஒரு பிதிபலிப்பை பின்வருமாறு கண்டேன். பிரபஞ்ச முகம், பூலோக முகம், மனித முகம் என்று ஒவ்வொன்றிலும் ஏனையவற்றின் மாதிரிகளைக் காட்டும் மூன்று ருபூபியத் முத்திரைகள் காணப்படுகின்றன. ஒன்று: ஒட்டுமொத்த பிரபஞ்சத்திலும் கோடான கோடி படைப்பினங்களுக்கு மத்தியில் காணப்படும் பரஸ்பரம் ஒத்துழைத்தல், பரஸ்பரம் ஒன்றையொன்று சார்ந்திருத்தல், பரஸ்பரம் ஒன்றையொன்று அரவணைத்தல், பரஸ்பரம் ஒன்றுக்கொன்று பதிலளித்தல் என்பன பிரபஞ்ச முகத்தில் பதிக்கப்பட்ட மிக மகத்தானதோர் உலூஹியத் முத்திரையாகும். பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீமிலுள்ள “பிஸ்மில்லாஹ்” அந்த உலூஹியத்தை நோக்குகின்றது. இரண்டாவது: பூமியில் தாவரங்கள், விலங்குகளுடைய நிர்வாகம், பரிபாலிப்பு, அவற்றுக்கான முன்னேற்பாடுகள் போன்ற விடயங்களில் காணப்படும் ஒற்றுமை, நீதி, பொருத்தப்பாடு, ஒழுங்கு, நேர்த்தி, ஈகை, ஆதரவு என்பன பூலோக முகத்தில் பதிக்கப்பட்டுள்ள மிக உன்னதமானதொரு ரஹ்மானியத் முத்திரையாகும். “பிஸ்மில்லாஹிர்ரஹ்மான்” என்பது அந்த ரஹ்மானியத்தை நோக்குகின்றது. மூன்றாவது: மனிதனுடைய மொத்த இயல்பையும் எடுத்தால் அந்த முகத்தில் இலையோடிக் காணப்படுகின்ற இறை ஆதரவின் சாயல்களும் இறை அன்பு, இரக்கம், பாசம் என்பவற்றின் பிரதிபலிப்புகளும் அல்லாஹ்வின் பேரன்பிலிருந்துமுள்ள ரஹீமியத்தின் மிகவுமே சங்கைக்குரிய ஒரு முத்திரையாகும். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமிலுள்ள அர்ரஹீம் அந்த ரஹீமியத்தை நோக்குகின்றது. எனவே பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்பது பிரபஞ்சப் பக்கங்களில் ஒளிமயமான ஒவ்வொரு வரியைத் தோற்றுவிக்கும் மூன்று அகதியத் முத்திரைகளின் புனிதமான ஒரு மகுடமாகும்; வலிமையான ஒரு கயிறாகும். அதாவது மிக உயர்ந்த இடத்திலிருந்து இறங்கிய “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” உடைய ஒரு முணை பிரபஞ்ச மரத்தின் கனியாகவும் பிரபஞ்சத்தின் சிறிதுபடுத்தப்பட்ட ஒரு மாதிரியாகவும் திகழும் மனிதனை வந்தடைகின்றது. அதாவது விண்ணையும் மண்ணையும் பிணைக்கின்றது. இந்த வகையில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது மனிதன் அர்ஷை நோக்கி உயர்வதற்கான ஒரு பாதையுமாகும்.

§12

அற்புத குர்ஆன், படைப்பினங்களின் எல்லையற்ற தாராளத் தன்மையினுள் பிரதிபலிக்கும் வாஹிதியத்துக்குள் (தனித் துவம்) மனிதன் தனது அறிவை மூழ்கடித்துக்கொண்டு திண்டாடாதிருப்பதற்காக, வாஹிதியத்தினுள் பிரதிபலிக்கும் அஹதிய்யத்தை (ஏகத்துவம்) நோக்கி சதாவும் பார்வையைத் திருப்பிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக, சூரியன் தனது ஒளி மூலம் எண்ணற்ற பொருட்களை சூழ்ந்துகொள்கின்றது. ஆனால் எங்கும் வியாபித்த ஒளியிலிருந்து சூரியனுடைய ஆற்றலை முழுமையாகச் சிந்தித்தறிந்துகொள்வதற்கு மிக விசாலமான ஒரு கிரகிப்பாற்றலும் மிகப் பரந்ததொரு பார்வையும் அவசியமாகும். இதன் காரணமாக பலருக்கு சூரியனை முழுமையாக சிந்தித்தறிந்துகொள்வது சாத்தியமற்றதாகிவிடும். ஆனால் பலபலக்கும் ஒவ்வொரு பொருளும் ஒளி, உஷ்னம், சக்தி, ஏழு நிறங்கள் போன்ற சூரியனின் அனைத்துப் பண்புகளையும் தம்முள் வெளிக்காட்டுவதன் மூலம் தத்தமது ஆற்றலுக்குட்பட்டவரை முழு சூரியனையும் முழு மொத்தமாகப் பிரதிபலிக்கின்றன. அவ்வாறே சூரியனின் ஒளி, உஷ்ணம், ஒளியிலுள்ள ஏழு நிறங்கள் போன்ற ஒவ்வொரு பண்பும் தனித்தனியாகத் தமக்கு முன்னாலுள்ள ஒட்டுமொத்த பொருட்களையும் சூழ்ந்து கொள்கின்றன. அவ்வாறுதான்: وَلِلَّهِ الْمَثَلُ الْأَعْلَىٰ - மிகச் சங்கையான உதாரணங்கள் அல்லாஹ்வுடையவையாகும். எனவே உதாரணம் பிழைக்காதிருக்கட்டும். அல்லாஹ்வுடைய அஹதியத், ஸமதியத் என்பவற்றின் அடிப்படையில் பார்த்தால் ஒவ்வொரு தனி வஸ்திலும், குறிப்பாக ஒவ்வொரு தனி உயிரினத்திலும், அதிலும் குறிப்பாக ஒவ்வொரு தனி மனிதனின் மாஹியத் அல்லது தன்மை என்ற கண்ணாடியிலும் அல்லாஹ்வின் அனைத்துப் பண்புகளும் பிரதிபலிக்கின்றது. அவ்வாறே, வஹ்தத் (அல்லாஹ்வின் தனித்த நிலை) மற்றும் வாஹிதியத்தின் அடிப்படையில் பார்த்தால், படைப்பினங்களோடு தொடர்பான, அல்லாஹ்வின் ஒவ்வொரு தனிப் பண்பும் ஒட்டுமொத்தப் படைப்புகளையும் சூழ்ந்திருக்கின்றது. அந்த வகையில் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் அல்லாஹ்வின் ஏதேனும் ஒரு தனிப் பண்பின் பிரதிபலிப்பிலிருந்து அல்லாஹ்வை விளங்கிக்கொள்வது பலருக்கு அசாத்தியமான ஒரு விடயமாகும். ஆனால் ஏதேனும் ஒரு படைப்பினத்தில் உதாரணத்துக்கு மனிதனில் பிரதிபலிக்கின்ற அல்லாஹ்வின் அனைத்துப் பண்புகளையும் வைத்து அவனை அனைத்துப் பண்புகளுடனும் சிந்தித்து அறிந்துகொள்வது ஏரத்தாள எல்லோருக்கும் சாத்தியமானதாகும். ஆகவே வாஹிதியத்துக்குள் அறிவு மூழ்கிப் போய், உள்ளங்கள் எவ்விதக் குறைகளுக்குமப்பாற்பட்ட மகா வல்லோனை மறந்து விடாதிருப்பதற்காக குர்ஆன் வாஹிதியத்துக்குள் இருக்கும் அஹதியத் முத்திரையை நோக்கித் தொடர்ந்தேர்ச்சையாக மனிதனுடைய கவனத்தை திருப்புகின்றது. ஆம் அந்த அஹதியத் முத்திரையின் மூன்று முக்கிய முடிச்சுகள் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமில் உள்ளடங்கியுள்ளன.

§13

எல்லை காண முடியாமல் வியாபித்திருக்கும் இந்தப் பிரபஞ்சமெங்கும் காணப்படுகின்ற அழகும் வனப்பும் சந்தேகத்துக்கிடமின்றி அல்லாஹ்வுடைய ரஹ்மத்தாகும். அவ்வாறே இந்தப் பிரபஞ்சத்தில் காரிருளால் சூழப்பட்டுள்ள வஸ்துகளை ஒளியேற்றி வைத்திருப்பதும் அந்த வல்லோனுடைய தெளிவான ரஹ்மத்தாகும். மேலும், முடிவற்ற தேவைகளோடு வக்கற்று அலையும் படைப்பினங்களைச் சீரும் சிறப்புமாக இரட்சித்துப் பரிபாலிப்பதும் தெட்டத் தெளிவாக அந்த ரஹ்மானுடைய ரஹ்மத்தாகும். அவ்வாறே, ஒரு விருட்சத்தின் அனைத்துப் பாகங்களும் அதன் கனிகளுக்காக அதாவது கனிகளை நோக்கி இருப்பதைப் போன்று ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மனிதனுக்காக, மனிதனை நோக்கியிருப்பதும் அதிலுள்ள அனைத்து வஸ்துகளும் அவனது தேவைகளுக்காக இயக்குவிக்கப்படுவதும் எவ்வித சந்தேகத்துக்குமிடமின்றி ரப்புல் ஆலமீனுடைய தெட்டத் தெளிவான ரஹ்மத்தாகும். மேலும் பொட்டல் வெளியைப் போன்று வெறிச்சோடிக் கிடக்கும் ஆகாய வெளியை வஸ்துகளைக் கொண்டு அலங்கரித்து உயிர்ப்போடும் ஆரவாரமாகவும் வைத்திருப்பதும் அந்த வல்லோனின் தெளிவான ரஹ்மத்தாகும். அனைத்துக்கும் மேலால் வெறும் சடமாக இருக்கின்ற இந்த மனிதனை நிரந்தரமான ஒரு வாழ்க்கைக்கான வேட்பாளனாக ஆக்கி, ஆதி அந்தமில்லாத ஏக வல்லோனுடன் தொடர்புபடுத்தியதும் அந்த ரஹ்மானுடைய மகத்தான ரஹ்மத்தாகும். மனிதர்களே! உண்மையில் அல்லாஹ்வுடைய ரஹ்மத் என்பது இப்படிப்பட்ட பலமும் ஈர்ப்பும் கவர்ச்சியும் வாய்ந்த, காதலுக்கும் நேசத்துக்குமுரிய மகத்தான ஒரு சத்தியமாகும். எனவே “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்று மொழிவதனூடாக அந்த சத்தியத்தை பற்றிக்கொள்ளுங்கள். அதன் மூலம் நிரந்தர நிர்க்கதியிலிருந்தும், நிறைவேற்றிக்கொள்ள முடியாத எண்ணற்ற தேவைகள் காரணமாகத் தோன்றும் ஆத்மார்த்தமான வேதனைகளைவிட்டும் பாதுகாப்புப் பெற்றுக்கொள்ளுங்கள். ஆதி, அந்தங்களின் அரசனாகிய ரப்புல் ஆலமீனுடைய சந்நிதானத்தில் ஆஜராகி அவனுடைய ரஹ்மத்தின் ஆதரவாலும் பரிந்துரையாலும் பிரகாசத்தாலும் அந்த அரசனின் உற்ற நண்பனாக ஆகிக் கொள்ளுங்கள்..! ஆம் சர்வலோகங்களும் அவற்றிலுள்ள ஒவ்வொரு படைப்பும் ஒரு ஞானத்தோடும் கட்டுப்பாட்டோடும் மனிதனைச் சூழ ஒன்றுதிரண்டு அவனது அனைத்து விதமான தேவைகளையும் நிறைவு செய்வதற்காக பரிபூரண ஒழுங்கோடும் ஆதரவோடும் அணிவகுத்து நிற்பது பின்வரும் இரண்டு சாத்தியப்பாடுகளுல் ஏதேனும் ஒன்றை மாத்திரமே உண்மைப்படுத்துவதாக இருக்க முடியும். அதாவது, ஒன்றோ பிரபஞ்சத்திலிருக்கும் எல்லாப் படைப்பினங்களும் தாமாகவே மனிதனை அறிந்து, அவனுக்காக இரக்கப்பட்டு, அவனுக்குக் கட்டுப்பட்டு, அவனது உதவிக்காக முந்திக் கொள்கின்றன என்ற முடிவைக் கொடுக்கின்றது. இது பலநூறு மடங்கு அறிவுக்கப்பாற்பட்ட ஒரு சமாச்சாரமாக இருப்பதோடு கூடவே எண்ணற்ற சிக்கல்களையும் அசாத்தியப்பாடுகளையும் தோற்றுவிக்கின்றன. தன் மீது கூட பூரண அதிகாரத்தைக் கொண்டிராத இயலாமையின் மொத்த வடிவமான மனிதன் சர்வ வல்லமையும் பரிபூரணத்துவமும் வாய்ந்த ஏக இரட்சகனின் வல்லமையை உடையவனாக இருக்கிறான் என்பது போன்ற மடத்தனமான நிலைப்பாடுகளை வலுக்கட்டாயமாக ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. எனவே இரண்டாவது சாத்தியப்பாடே சத்தியமானதாகும். ஆம் பிரபஞ்சம் என்ற திரைக்கு அப்பாலிருந்து அனைத்தையும் பரிபாலிக்கும் சர்வ வல்லமைமிக்க ஒருவனின் அறிவு ஞானத்தின் மூலமாகவே அனைத்து வஸ்துகளும் மனிதனுடைய உதவிக்காக விரைகின்றன. எனவே இந்த உதவிகளனைத்தும் பிரபஞ்ச வஸ்துகளனைத்தும் மனிதனை அறிந்து வைத்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்களன்றி மனிதனை அறிந்து, விளங்கி, அவன் மீது கருணை புரிகின்ற ஒருவன் உண்மையாகவே அவனை எந்தக் குறையுமின்றி அறிந்து, விளங்கி வைத்துள்ளான் என்பதற்கான திட்டவட்டமான ஆதாரங்களாகும். மனிதனே! அறிவைத் தீட்டிக் கொள்! ஒட்டுமொத்த படைப்பினங்களையும் உனக்காக, உனது தேவைகளை நிறைவேற்றுவதற்காக “இதோ வந்து விட்டோம்” என்ற அளவில், இறுதிக்கட்டத் தயார் நிலையில் வைத்திருக்கும் கீர்த்தி மிக்க வல்லோன் உன்னை அறியாதவனாகவும் விளங்காதவனாகவும் காண முடியாதவனாகவும் இருப்பது எவ்வாறு சாத்தியமாக முடியும்? நிச்சயமாக அந்த ரஹ்மான் உன்னை அறிவான். தனது பேரன்பின் வெளிப்பாடாக அறிந்திருப்பதை அறியவும் தருகிறான். நீயும் அவனை அறிந்துகொள்வதோடு அறிந்துகொண்டேன் என்பதை நன்றியுணர்வோடு அறியக்கொடு. மேலும் இயலாமை, பலவீனம், வறுமை என்பவற்றின் மொத்த உருவமாக, எவ்வித உதவி ஒத்தாசைகளோ ஆதரவோ இன்றி அழிந்து மறைந்து போகக் கூடிய உன்னைப் போன்ற ஒரு சிறிய படைப்புக்காகப் பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சத்தை இயக்குவிப்பதும் அதிலுள்ள அத்தனை வஸ்துகளையும் அவனது உதவிக்காக ஒன்றுதிரட்டுவதும் நிச்சயமாக அறிவு, ஞானம், கிருபை, வல்லமை என்பவற்றைத் தன்னகத்தே பொதியப்பெற்ற ரஹ்மத் என்ற சத்தியத்தின் வெளிப்பாடாகும் என்பதை தீர்க்கமாக அறிந்துகொள். மேலும் இப்படிப்பட்ட மகத்தான ஒரு ரஹ்மத் நிச்சயமாகத் தூய்மையான அகிலார்ந்த ஒரு நன்றிக்கும் கலப்படமற்ற உண்மையான ஒரு மதிப்புக்கும் அருகதையுடையதாகும். ஆம் அந்தத் தூய நன்றிக்கும் கலப்படமற்ற மதிப்புக்கும் மகுடமாகவும் மொழிபெயர்ப்பாகவும் திகழ்வது பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீமாகும். அதை மொழிவதன் மூலம் அதை அந்த ரஹ்மத்தில் நனைவதற்கான ஊடகமாகவும் ரஹ்மானுடைய சந்நிதானத்தில் உனக்கான பரிந்துரையாகவும் மாற்றிக்கொள். ஆம், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் இருப்பும் வெளிப்பாடும் சூரியனளவு தெளிவானதாகும். ஒரு தறியின் மத்தியில் நையப்படும் கலைப் படைப்பானது எல்லாத் திசைகளிலிருந்தும் வருகின்ற நூல்கள், இழைகளின் ஒழுங்கு, நேர்த்தி, அமைவு என்பவற்றைச் சார்ந்ததாகும். அவ்வாறே ஆயிரத்தோர் இறை நாமங்களின் பிரதிபலிப்பிலிருந்து நீளும் ஒளிமயமான நூல்களும் இழைகளும் பிரமாண்டமான இந்தப் பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ள அத்தனை கலைப்பாடுகளையும் பூர்த்தியான அமைப்பில் வெளிப்படுத்தி, பிரபஞ்ச முகத்தில் அன்பையும் ஆதரவையும் கருணையையும் கிருபையையும் முத்திரைகளாகப் பொதித்து வைத்துள்ளன. அந்த மகத்தான முத்திரைகளின் பிரகாசமானது சூரியனை விடத் தெளிவாகத் தம்மை அறிவுக் கண்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. ஆம், பேரழகுக்குச் சொந்தக்காரனான அந்த ரஹ்மான் சூரியனையும் சந்திரனையும், தாவரங்களையும் விலங்குகளையும், கணியங்களையும் மூலக்கூறுகளையும் -ஒரு மகத்தான தறி கருவியின் நூல்களைப் போன்று- தனது ஆயிரத்தொரு திரு நாமங்களின் ஒளிக் கீற்றுகளால் ஒழுங்குபடுத்தி அவற்றை வாழ்வுக்கான ஆதாரமாகவும் சேவகர்களாகவும் ஆக்கி வைத்தான். அவனே தாவரங்கள், விலங்குகளிலிருந்துமுள்ள ஒட்டுமொத்த தாய்க்குழத்தின் மிகுந்த அர்ப்பணிப்பும் இனிமையும் மிக்க கருணை மூலம் தனது கருணையை வெளிக்காட்டுகின்றான். அவனே ஒட்டுமொத்த ஜீவ இனங்களையும் மனித வாழ்வுக்காக வசப்படுத்திக் கொடுத்து அதன் மூலம் ரஹ்மானியத்தான தனது பரிபாலிப்பின் மிக அழகான, மிகச் சிரேஷ்டமான ஒரு கலைச் சிற்பமாகத் திகழும் மனிதனையும் அவனுடைய பெறுமதியையும் எடுத்துக் காட்டுகிறான். ஆம், இவ்வாறு பிரபஞ்சமெங்கும் கோலோச்சியிருக்கும் பிரகாசமான ரஹ்மத்தையும் அதன் தாத்பரியங்களையும் நிரூபிக்கும் பேரழகுக்குச் சொந்தக்காரனான அந்த ரஹ்மான் நிச்சயமாக தனது முத்லக்கான தன்னிறைவுக்கு முன்னால் முத்லக்கான தேவைகளோடும் முத்லக்கான இயலாமையோடும் முத்லக்கான பலவீனத்தோடும் இருக்கின்ற ஒட்டுமொத்த உயிரினங்களுக்காகவும் குறிப்பாக மனிதனுக்காகவும் தன்னுடைய ரஹ்மத்தையே தனது அவையில் மிகவும் ஏற்றமான ஒரு பரிந்துரையாக ஆக்கி வைத்துள்ளான். மனிதனே! உன்மையில் நீ மனிதனாக இருந்தால் “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்ற மகுடத்தை மொழிந்து நீயும் அந்தப் பரிந்துரைக்குப் பாத்திரமானவனாக ஆகிக்கொள். ஆம், பூமியின் மீதுள்ள நானூறாயிரம் வகையான தாவர மற்றும் விலங்கினங்களுள் எந்த ஒன்றையும் மறவாமல், குழப்பிக்கொள்ளாமல், நேரத்துக்கு நேரம், பூரண ஒழுங்கு நேர்த்தியோடும் மகா ஞானத்தோடும் பேராதரவோடும் இரட்சித்துப் பரிபாலிப்பதும் பூமியின் அழகிய முகத்தில் இத்தகைய ஓர் அஹதியத் முத்திரையைப் பொதித்து வைத்திருப்பதும் நிச்சயமாக ரஹ்மத்தாகும். அந்த ரஹ்மத்தின் இருப்பானது பூமியின் மீதிருக்கும் படைப்பினங்களின் இருப்பளவு உறுதியானதாகும். கூடவே படைப்பினங்களின் எண்ணிக்கையளவு அதை நிரூபிப்பதற்கான வலுவான ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவ்வாறே, மனிதனுடைய ஆத்மீக முகத்தில் புலப்படும் ரஹ்மத்துடைய பிரதிபலிப்பு எத்தகையதெனில் அது பூமிப்பரப்பெங்கும், ஏன் பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ள ரஹ்மத்துடைய மகத்தான பிரதிபலிப்புகளை விட எந்தவிதத்திலும் தாழ்வானதல்ல. உண்மையில் மனிதன் ஆயிரத்தோர் இறை நாமங்களின் பிரதிபலிப்புகளுடைய குவிவுப் புள்ளி என்ற அந்தஸ்த்தில் அகிலார்ந்த ஓர் உள்ளடக்கமாக இருக்கின்றான். மனிதனே! இந்த அழகிய முகத்தோற்றத்தை உனக்கு வழங்கி, அதில் ரஹ்மத்துடைய மகத்தான பிரதிபலிப்புகளையும் அஹதியத்துடைய முத்திரையையும் பொதித்து வைத்த சர்வலோக இரட்சகன் உன்னை வீணுக்கும் விழையாட்டுக்குமாக விட்டு வைத்திருப்பானா? உன்னை மதிப்பும் பெறுமதியுமற்றவனாக ஆக்கியிருப்பானா? உனது செயற்பாடுகளை பொருட்படுத்தாதிருப்பானா? உனக்காகப் படைக்கபட்ட இந்தப் பிரபஞ்சம் எவ்வித நோக்கமுமற்ற ஒன்றாகவும், பிரபஞ்ச விருட்சம் வெறுமனே அழுகிச் சேதமடைந்த கனிகளை உடைய எவ்விதப் பெறுமதியுமற்ற ஒரு பதராகவும் ஆகிச் செல்வதற்கு இடமளிப்பானா? மொத்தத்தில் அந்த ரஹ்மான் சந்தேகங்களோ குறைகளோ அற்ற, சூரியனைப் போன்று தெளிவான தனது ரஹ்மத்தும் அந்த சூரியனின் ஒளியைப் போன்று பிரகாசமான அந்த ரஹ்மத்தின் ஞானமும் முற்று முழுதாக மறக்கடிக்கப்பட்டு நிராகரிக்கபட்டுச் செல்ல இடமளிப்பானா? இவ்வாறு நிகழ்வது சாத்தியமானதென்றா கருதுகின்றாய்!? ஹாஷா, நிச்சயமாக முடியாது. மனிதனே அறிந்துகொள்! உனக்கு முன்னால் அந்த ரஹ்மத்தின் இருப்பிடமான அர்ஷை அடைந்து கொள்வதற்கான விண்ணுலகப் பயணம் ஒன்றுள்ளது. அந்த விண்ணுலகப் பயணமே “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” ஆகும். இந்தப் பயணம் எந்த அளவு மகத்தானது என்பதை அறிந்துகொள்ள விரும்பினால் அற்புதத் தெளிவுரையாகிய குர்ஆனின் அத்தியாயங்களுடைய ஆரம்பங்களையும் எண்ணற்ற அருள்பாளிக்கப்பட்ட புத்தகங்களின் முதல் வரிகளையும் ஒட்டுமொத்த நற் செயல்களின் ஆரம்பங்களையும் பாருங்கள். மேலும் பிஸ்மியுடைய பெறுமதி எந்த அளவு மகத்தானது என்பதற்கான மிகப் பெரிய ஆதாரம், இமாம் ஷாஃபி (ரழி) போன்ற மிகப் பெரும் முஜ்தஹித்கள் கூறுவதைப் போன்று, “பிஸ்மி, தனி ஒரு வசனமாக இருந்த போதிலும், குர்ஆனில் நூற்றிப் பதினான்கு முறை இறக்கியருளப்பட்டுள்ளது” என்ற அம்சமாகும்.

§14

வஸ்துகளின் அளவற்ற தாராளத் தன்மைக்குள் வாஹிதியத்துடைய பிரதிபளிப்பை “إِيَّاكَ نَعْبُدُ - உன்னையே வணங்குகிறோம்” என்று கூறுவதன் மூலம் மாத்திரம் எல்லோராலும் எட்ட முடிவதில்லை. அந்த விசாலமான தாராளத் தன்மைக்குள் சிந்தனைகள் சிதறிச் செல்லலாம். மொத்தத்திலும் உள்ள வஹ்தத்துக்குப் பின்னால் அகதியத்தை உடைய ஏகனை நினைத்தவாறு “إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ - உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்று சொல்வதற்கு பூமிப்பந்தளவு விசாலமான ஓர் உள்ளம் அவசியப்படுகின்றது. ஆதலால், மிகச் சிறியவைகளில் கூட அனைவருக்கும் கட்புலனாகும் வகையில் அஹதியத்துடைய முத்திரை பதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறே ஒவ்வொரு இனத்திலும் கூட அஹதியத்துடைய முத்திரையைத் தெளிவாகக் காண்பிப்பதற்காகவும் அதனூடாக ஏக இறைவனைப் பற்றி சிந்திக்க வைப்பதற்காகவும் அஹதியத் முத்திரையானது ரஹ்மானியத் என்ற முத்திரைக்குள் பொதித்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எல்லோராலும் எல்லா நிலமைகளிலும் எத்தகைய சிரமங்களுமின்றி எவ்வித குறைகளுக்குமப்பாற்பட்ட கீர்த்தி மிக்க இரட்சகன்பால் திரும்பி, அவனை விளித்து “إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ – உன்னையே வணங்குகிறோம், உன்னிடமே உதவி தேடுகிறோம்” என்று பிரகடனம் செய்ய முடியுமாக உள்ளது. இதோ சர்வஞானமிக்க குர்ஆன், இந்த மகத்தான தாத்பரியத்தை தெளிவு படுத்துவற்காகத்தான் பிரமாண்டமான பிரபஞ்ச மண்டலத்தில் வானங்கள், பூமியின் படைப்பு பற்றிப் பேசும் போது திடீரென்று மிகச் சிறியதொரு மண்டலத்தை அல்லது மிகச் சிறியதொரு வஸ்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கின்றது. இதன் மூலம் எல்லோருக்கும் தெளிவாகப் புலனாகின்ற அஹதியத்துடைய முத்திரையை நோக்கியும் கவனத்தைத் திருப்புகின்றது. உதாரணமாக வானம், பூமியின் படைப்பு பற்றிப் பேசுகின்ற இடத்தில் மனிதனுடைய படைப்பு தொடர்பாகவும் அவனுடைய குரல், அவனுடைய தோற்றத்திலுள்ள நுட்பமான தாத்பரியங்கள், அவற்றின் அருட் பெறுமானங்கள் போன்ற விடயங்கள் தொடர்பாகவும் பேச்சை ஆரம்பிக்கும். இதன் மூலம் பிரமாண்டமான, கற்பனைக்கெட்டாத பரந்த வெளிகளுக்குள் சிந்தனைகள் சிதறி அறிவு மூழ்கிப்போகாமல் ஆத்மாவால் தனது வணக்கத்துக்குரியவனை நேருக்கு நேர் கண்டு கொள்ள முடிகின்றது. وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافُ أَلْسِنَتِكُمْ وَأَلْوَانِكُمْ என்ற வசனம் மேற்படி தாத்பரியத்தை மிகவும் அற்புதமான ஓர் அமைப்பில் பிரஸ்தாபித்துக் கொண்டிருக்கின்றது. ஆம், எண்ணற்ற படைப்பினங்களுக்கும் அவற்றின் எல்லையற்ற தாராளத் தன்மைக்கும் மத்தியில் வஹ்தத் முத்திரைகள் கப் பெரியதிலிருந்து மிகச் சிறியது வரை ஒன்றுக்குள் ஒன்றாக உள்ள ஒரு மைய மண்டலங்களைப் போன்று பல்வேறு படித்தரங்களைக் கொண்டதாகக் காணப்படுகின்றன. ஆனால் அந்த வஹ்தத்தானது எவ்வளவு சிறிய பரப்பை உள்ளடக்கியதாக இருந்தாலும், மீண்டும் விசாளமான தாராளத் தண்மைக்குள் உள்ள ஒரு வஹ்தத்தே ஆகும். அந்தப் பிரகடனத்தினுள் உண்மையான அமைப்பில் முழுமையாக உள்ளடக்கப்பட முடியாது. ஆகவே வஹ்தத்துக்குப் பின்னால் அஹதியத்துடைய முத்திரையின் இருப்பு எப்போதும் கட்டாயமானதாகும். அப்போதுதான் தாராளத்தன்மை நினைவுக்கு வராமல், எவ்வித குறைகளுக்குமப்பாற்பட்ட கீர்த்தி மிக்க வல்லோனை நோக்கி உள்ளத்தில் ஒரு பாதை இலகுவாகத் திறக்கப்படும். மேலும் அஹதியத்துடைய முத்திரைகளை நோக்கி கவனத்தை திருப்புவதற்காகவும் உள்ளங்களை கவர்வதற்காகவும் அஹதியத் முத்திரைகளின் மீது மிகக் கண்குளிர்ச்சியான கலையம்சங்களையும் மிகப் பிரகாசமான ஒளிச் சுடர்களையும் மிக இனிமையான சுவைகளையும் மிகுந்த நேசத்துக்குத் தகுதியான அழகியல்களையும் மிகப் பலம் வாய்ந்த சத்தியங்களையும் உள்ளடக்கிய ரஹ்மத் மற்றும் ரஹீமியத் முத்திரைகள் பதிக்கப்பட்டுள்ளன. ஆம் அந்த ரஹ்மத்தின் பலமே பிரக்ஞையுள்ள ஆன்மாக்களைத் தன் பால் ஈர்த்து அஹதியத் முத்திரையை அறிமுகம் செய்கின்றது. கூடவே ஏக இறைவனைப் பற்றி சிந்திக்க வைத்து إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ வசனத்திலுள்ள ஹகீகத்தான பிரகடனத்துக்குப் பாத்திரமானவர்களாக மாற்றுகின்றன. இதோ, “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்பது சூரா ஃபாதிஹா உடைய உள்ளடக்கமாகவும் குர்ஆனுடைய இரத்தினச்சுருக்கமான ஒரு சாராம்சமாகவும் திகழ்கின்றது என்ற வகையில் மேற்கூறப்பட்ட மகத்தான தாத்பரியத்தின் மகுடமாகவும் மொழிபெயர்ப்பியாகவும் ஆக்கப்பட்டுள்ளது. இந்த மகுடத்தைக் கையில் எடுத்துக்கொள்பவன் ரஹ்மத்துடைய பல்வேறு படித்தரங்களில் உலாவரலாம். அவ்வாறே இந்த மொழிபெர்ப்பியைப் பேச வைப்பவன் ரஹ்மத்துடைய ஆழமான இரகசியங்களையும் ரஹீமியத்துடைய பிரகாசமான ஒளிகள், அருள் பாக்கியங்களையும் அறிந்துகொள்வான்.

§15

ஒரு ஹதீஸில் பின்வருமாறு பிரஸ்தாபிக்காப்பட்டுள்து. اِنَّ اللّٰهَ خَلَقَ ال۟اِن۟سَانَ عَلٰى صُورَةِ الرَّح۟مٰنِ – اَو۟ كَمَا قَالَ – இந்த ஹதீஸுக்கு தரீக்காக்களைச் சார்ந்தவர்களுள் ஒரு பிரிவினர் ஈமானுடைய அடிப்படைகளுக்கு பொருந்தாத வகையில் விளக்கம் அளித்துள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இறை காதலில் திலைத்த ஒரு பிரிவினர் மனிதனுடைய ஆன்மீகத் தோற்றத்தை அர் ரஹ்மானுடைய ஒரு தோற்றத்துக்கு ஒப்பானது என்ற கண்ணோட்டத்தில் நோக்கியுள்ளனர். உண்மையில் தரீக்காவைச் சார்ந்தவர்களுள் அதிகமானவர்களிடம் ஒரு வகை மயக்க நிலையும் இறை காதலில் திலைத்தவர்களுள் அதிகமானவர்களிடம் தன்னிலை மறக்கும் தன்மையும் ஒன்றையொன்று குழப்பிக்கொள்ளும் தன்மையும் காணப்படுவதால் சத்தியத்துக்கு மாற்றமான தமது நிலைப்பாடுகளில் மண்ணிப்புக்குட்பட்டவர்களாக இருக்கின்றனர். ஆனால் சிந்திப்பவர்கள் கருத்தளவில் அவர்களின் ஈமானிய அடிப்படைகளுக்கு முரணான விளக்கங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏற்றுக்கொண்டால் தவறிழைத்தவர்களாக ஆகிவிடுவார்கள். ஆம், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் ஒரு மாளிகையைப் போன்று மிகுந்த ஒழுங்கு நேர்த்தியோடு நிர்வகித்து, நட்சத்திரங்களை அணுக்களைப் போன்று சுலபமாகவும் ஞானபூர்வமாகவும் உலாவ வைத்து, அணுக்களை மிகுந்த நேர்த்தியும் ஆற்றலும் மிக்க தொழிலாளர்களைப் போன்று வியக்கத்தக்க வேலைகளில் ஈடுபடுத்தும் கீர்த்திமிக்க வல்லோன் எல்லா வகையான இணை துணைகளுக்கும் ஒற்றுமை வேற்றுமை போன்ற தன்மைகளுக்கும் அப்பாற்பட்டவனாவான். அவ்வாறேﻟَﻴْﺲَ ﻛَﻤِﺜْﻠِﻪِ ﺷَﻰْﺀٌ ﻭَﻫُﻮَ ﺍﻟﺴَّﻤِﻴﻊُ ﺍﻟْﺒَﺼِﻴﺮُ என்ற வசனத்துக்கமைய தோற்றம், உவமான உவமேயங்கள், ஒப்புவமை போன்ற அம்சங்களுக்கும் முற்று முழுதாக அப்பாற்பட்டவனாவான். ஆனால்ﻭَﻟَﻪُ ﺍﻟْﻤَﺜَﻞُ ﺍﻟْﺎَﻋْﻠٰﻰ ﻓِﻰ ﺍﻟﺴَّﻤٰﻮَﺍﺕِ ﻭَﺍﻟْﺎَﺭْﺽِ ﻭَﻫُﻮَ ﺍﻟْﻌَﺰِﻳﺰُ ﺍﻟْﺤَﻜِﻴﻢُ என்ற வசனத்துக்கமைய உதாரணங்கள் உவமானங்கள் மூலம் அவனுடைய பண்புகள், திருநாமங்கள், வல்லமை என்பவற்றை ஆராய முடியும். உண்மையில் தெய்வீக வல்லமைகள், பண்புகள், திருநாமங்கள் விடயத்தில் உவமான உவமேயங்களும் உதாரணங்களும் தாரளமாகவே காணப்படுகின்றன. மேலுள்ள ஹதீஸின் பல்வேறு நோக்கங்களுள் ஒன்று மனிதன் ரஹ்மான் என்ற நாமத்தை முழுமையாக பிரதிபளிக்கின்ற ஒரு தோற்றத்தை உடையவனாக உள்ளான் என்பதாகும். ஆம் ஏலவே குறிப்பிட்டதைப் போன்று பிரபஞ்ச முகத்தில் புலனாகும் ஆயிரத்தியொரு திருநாமங்களின் பிரதிபலிப்புகளிலும், புவி முகத்தில் புலனாகும் முத்லக்கான பரிபாளிப்பின் எண்ணற்ற பிரதிபலிப்புக்களிலும் ரஹ்மான் நாமத்தின் பிரதிபலிப்புகள் இழையோடியிருப்பதைப் போன்றே ஆத்மீக மற்றும் லௌகீக ரீதியான மொத்த மனித முகத்திலும்கூட ரஹ்மான் நாமத்தின் முழுமையான பிரதிபலிப்பைக் காணலாம். மேலும் அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக வல்லோனின் அத்தாட்சிகளாகவும் அவனது திருநாமங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகளாகவும் இருக்கின்ற மனிதனையும் ஏனைய உயிரினங்களையும் எடுத்துக் கொண்டால் அவற்றில் காணப்படும் ஏக வல்லோனின் இருப்புக்கான அத்தாட்சிகள் கண்களுக்குப் புலனாகின்ற அளவு தெளிவும் வலிமையும் மிக்கவையாகும். உண்மையில் அந்தத் தெளிவும் வலிமையும் எத்தகையவையெனில், எவ்வாறு சூரியனைப் பிரதிபலிக்கும் பிரகாசமானதொரு கண்ணாடி, கண்களைப் பறிக்கும் தனது பிரகாசத்தின் மூலம் சூரியனின் இருப்புக்கான தெளிவான ஓர் அத்தாட்சியாக இருக்கின்றது என்ற வகையில் அந்த உண்மையைப் பறைசாற்றும் விதமாக “இந்தக் கண்ணாடி சூரியனாகும்” என்று சொல்லப்பட முடியுமோ அவ்வாறே, “மனிதனில் ரஹ்மானுடைய தோற்றம் உள்ளது” என்பதும் கூட மனிதன் ரஹ்மானுடைய தெளிவான அத்தாட்சிகளுக்கும் பூர்த்தியான பிணைப்புகளுக்கும் பாத்திரமானவனாக இருப்பவன் என்ற வகையில் சொல்லப்பட்டுள்ளது; சொல்லப்பட முடியும். மேலும் இந்தத் தாத்பரியத்துக்கமைவாகவே தரீக்காக்களைச் சார்ந்த ஒரு பிறிவினர் “லா மவ்ஜூத இல்லாஹு - அவனைத் தவிற வேறு எந்த இருப்பும் கிடையாது” என்பதை அத்தாட்சிகளின் மிகத் தெளிவான தன்மைக்கும், பிணைப்புகளின் மிக வலுவான தன்மைக்குமான ஒரு மகுடமாக மொழிந்துள்ளனர். اَللّٰهُمَّ يَا رَح۟مٰنُ يَا رَحٖيمُ بِحَقِّ بِس۟مِ اللّٰهِ الرَّح۟مٰنِ الرَّحٖيمِ اِر۟حَم۟نَا كَمَا يَلٖيقُ بِرَحٖيمِيَّتِكَ وَ فَهِّم۟نَا اَس۟رَارَ بِس۟مِ اللّٰهِ الرَّح۟مٰنِ الرَّحٖيمِ كَمَا يَلٖيقُ بِرَح۟مَانِيَّتِكَ اٰمٖينَ

§16

எல்லையில்லா பலவீனத்திலும் முடிவில்லா வறுமையிலும் தத்தளிக்கும் நாதியற்ற மனிதனே! முதலில் அல்லாஹ்வுடைய ரஹ்மத் என்பது எத்தகைய பெறுமதிவாய்ந்த ஒரு வாய்ப்பு என்பதையும் இறை சந்நிதானத்தில் எந்த அளவு ஏற்றமான ஒரு பரிந்துரையாளன் என்பதையும் விளங்கிக்கொள். ஆம் அந்த ரஹ்மத்தானது சர்வ மாட்சிமைமிக்க ஓர் அரசனை நெருங்குவதற்கான வஸீலாவாகும். அவனது மாட்சிமை எத்தகையதெனில், நட்சத்திரங்களும் அணுக்களும் பரிபூரணத்துவமான ஒழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் அந்த அரசனின் படையில் ஒரே சமயம் ஒன்றாகப் பணி புரிகின்றன. அவன் எத்தகைய தேவைகளுக்கும் அப்பாற்பட்ட முத்லக்கான தன்னிறைவை உடையவனாகவும் எந்தவொரு படைப்பின்பாலும் எத்தகைய தேவையுமற்ற, எல்லையில்லாத செல்வங்களின் எஜமானனாவான். அணு முதல் அண்டசராசரங்கள் வரை ஒட்டுமொத்த வஸ்துகளும் அவனது பரிபாளிப்பின் கீழ் பெருமதிப்போடும் அச்சத்தோடும் கட்டுப்பாட்டோடும் அந்த மாட்ச்சிமை மிக்க அரசனுக்கு முன்னால் தலைசாய்த்து அவனது கட்டளைகளுக்காகக் காத்திருக்கின்றன. மனிதனே! இதோ இந்த ரஹ்மத், எந்தவொன்றின் மீதும் எத்தகைய தேவையுமற்ற மாட்ச்சிமைமிக்க நித்திய அரசனின் சந்நிதானத்தில் உன்னை நிறுத்தி அவனோடு உனக்குத் தொடர்பையும் தோழமையையும் அவனது நேசத்துக்குரிய அடியான் என்ற அந்தஸ்த்தையும் பெற்றுத்தருகின்றது. ஆனால், உனக்கு மிகவும் தொலைவில் உள்ள சூரியனை உன்னால் அடையவோ அண்டவோ முடியாது. ஆனால் சூரியனுடைய பிரகாசமான ஒளி சூரியனுடைய பிரதிபளிப்பை உன்னுடனிருக்கு கண்ணாடி வாயிலாக உனது கையை எட்டச் செய்கின்றது. அவ்வாறே கீர்த்தியும் மாட்ச்சிமையும் மிக்க நித்திய அரசனாகிய அந்த ஏகன் எமக்கு எல்லையற்ற தொலைவில் இருக்கின்றான். எம்மால் அவனை நெருங்கவும் முடியாது. எனினும் அவனுடைய ரஹ்மத்தின் ஒளியின் மூலம் எம்மாக் அவனை அண்மிக்க முடியும். மனிதனே! இந்த ரஹ்மத்தை அடைந்துகொள்பவன் தீராத நித்திய செல்வங்களைத் தனதாக்கிக் கொள்கிறான். அந்த செல்வப் பொக்கிஷங்களிலுள்ள ஐஸ்வர்யங்களைப் பெற்றுக்கொள்வதற்கான வழி ரஹ்மத்துடைய மிகப் பிரகாசமான ஒரு மாதிரியாகவும் அந்த ரஹ்மத்தைப் பற்றிய மிகவும் நம்பிக்கைக்குரிய ஓர் தூதராகவும் அத்தாட்சியாகவும் ரஹ்மதன் லில் ஆலமீன் என்ற நாமத்தோடு புனித குர்ஆன் பட்டம் சூட்டுகின்ற உத்தமராகவும் திகழும் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய சுன்னாக்களுக்கு வழிப்படுவதாகும். மேலும் ரஹ்மத்துடைய மொத்த உருவாகத் திகழும் அந்த “ரஹ்மதன் லில் ஆலமீன்” ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நெருங்குவதற்கான வஸீலா ஸலவாத்தாகும். ஆம் ஸலவாத்தின் அர்த்தம் ரஹ்மத்தாகும். ரஹ்மத்துடைய மொத்த உருவாகத் திகழும் ரஹ்மதன் லில் ஆலமீனை அடைவதற்கான வஸீலாவும் ஸலவாத்தாகும். எனவே இந்த ஸலவாத்தை ரஹ்மதன் லில் ஆலமீனை நெருங்குவதற்கான வஸீலாவாக ஆக்கிக்கொள்ளுங்கள். அந்த நெருக்கமும் கூட ரஹ்மானுடைய ரஹ்மத்தை அடைந்து கொள்வதற்கான ஒரு வஸீலாவாக அமையும். ஆம், அன்பும் அருளும் நிறைந்த அந்த ஸலவாத் ஒட்டுமொத்த உம்மத்தாலும் ரஹ்மதன் லில் ஆலமீன் ஆகிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீது எண்ணற்ற தடவைகள் மொழியப்படுவதானது ரஹ்மத் எந்த அளவு பெறுமதி வாய்ந்த ஓர் அருட்கொடை என்பதையும் எந்த அளவு விசாலமான ஒரு பொக்கிஷம் என்பதையும் பறைசாற்றுகின்றது. சுருக்கமாக: ரஹ்மத்துடைய கஜானாவின் மிகப் பெறுமதி வாய்ந்த ஐஸ்வர்யமாகவும் அதன் நுழைவாயில் வரவேற்பாளராகவும் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் திகழ்வதைப் போன்றே அதன் மிக முதன்மையான திறவுகோளும் கூட “பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்ற மகுடமாகும். மேலும் அந்த கஜானாவுடைய மிகச் சுலபமான திறவுகோலாக ஸலவாத் திகழ்கின்றது. اَللّٰهُمَّ بِحَقِّ اَس۟رَارِ بِس۟مِ اللّٰهِ الرَّح۟مٰنِ الرَّحٖيمِ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى مَن۟ اَر۟سَل۟تَهُ رَح۟مَةً لِل۟عَالَمٖينَ كَمَا يَلٖيقُ بِرَح۟مَتِكَ وَ بِحُر۟مَتِهٖ وَ عَلٰى اٰلِهٖ وَ اَص۟حَابِهٖ اَج۟مَعٖينَ وَ ار۟حَم۟نَا رَح۟مَةً تُغ۟نٖينَا بِهَا عَن۟ رَح۟مَةِ مَن۟ سِوَاكَ مِن۟ خَل۟قِكَ اٰمٖينَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

§17

(இரண்டு அத்தியாயங்களை உள்ளடக்கியதாகும்.)

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters