Lem'alar

The Seventeenth Gleam

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

இந்த மின்னல் “ஸுஹ்ரா” எனப்படும் பழைய ஏட்டிலிருந்து தொகுக்கப்பட்ட பதினைந்து குறிப்புகளை உள்ளடக்கியதாகும். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ

§2

பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னர் [அதாவது ஹிஜ்ரி 1340 / கி.பி 1921] இறைவனைப் பற்றி அறிந்துகொள்வதற்கான ஆவலில் சிந்தனா ரீதியான ஒரு தேடலிலும் ஆத்மார்த்தமான ஒரு பயணத்திலும் ஏகாந்தமான ஓர் உயர்ச்சியிலும் இருக்கும் போது இறை அருளால் தவ்ஹீதோடு தொடர்பான சில ஒளிச் சுடர்கள் எனக்குப் புலப்பட்டன. அவற்றை அரபு மொழியில் சிறு சிறு குறிப்புகளாக “ஸுஹ்ரா-விண்மீன்”, “ஷூ’லா-சுவாலை”, “ஹப்பா-வித்து”, “ஷம்மா-துணிக்கைகள்”, “(z)தர்ரா-துகள்கள்”, “கத்ரா-துளிகள்” போன்ற சிறு நூல்களில் குறித்துக் கொண்டேன். இந்தக் குறிப்புகள், நீண்ட சத்தியங்களை நினைவூட்டக்கூடிய வகையில் அவற்றின் ஒவ்வொரு அந்தமாக அல்லது பிரகாசமான ஓர் ஒளிப்பிழம்பை கண் முன்னால் காட்சிப்படுத்தக்கூடிய வகையில் அதன் ஓர் ஒளிக் கீற்றாக அடிக்கடி எனக்குள் மீட்டிக் கொள்வதற்கும் நினைவூட்டிக் கொள்வதற்கும் தேவையான அமைப்பில் எழுதப்பட்டதால் பிறரால் அதன் மூலம் குறிப்பிட்ட அளவே பயன்பெற முடியுமாக இருந்தது. கூடவே எனக்கு மிக நெருக்கமாகவும் விசுவாசமாகவும் உள்ள சகோதரர்களுல் அதிகமானவர்கள் அரபு மொழி படிக்காதவர்களாக இருப்பதால் அவர்களும் என்னைத் தொடர்ந்து வற்புறுத்துபவர்களாக இருந்தனர். எனவே இந்த இரண்டு காரணங்களுக்காகவும் அந்தக் குறிப்புகளை ஓரளவு சுருக்கமான விளக்கங்களோடு துருக்கி மொழியில் எழுத நிர்ப்பந்தமானேன். புதிய ஸஈதின் ஆரம்ப நாட்களில் அரபியில் எழுதப்பட்ட மேற்படி சிறிய ஏடுகள் சத்திய ஞானங்களை ஏதோ கண்களால் தரிசித்து விவரிப்பது போன்ற அமைப்பில் எழுதப்பட்டுள்ளதால் இவ்விடத்தில் அமைப்பு ரீதியாக எந்த மாற்றங்களுமின்றி பொருள் ரீதியான விரிவாக்கம் மாத்திரமே செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பிற ரஸாஇல்களில் வருகின்ற சில பகுதிகளும் எந்த மாற்றங்களுமின்றி இங்கும் சேர்க்கப்பட்டுள்ளன. கூடவே, அசலான அழகுகள் மறைந்து போகாதிருக்க வேண்டும் என்பதற்காக மிகவுமே இரத்தினச் சுருக்கமான சில பகுதிகள் எத்தகைய விளக்கங்களும் அளிக்கப்படாமல் உள்ளவாறே விடப்பட்டுள்ளன.

§3

இவை ஒரு தடவை எனது நஃப்ஸை விளித்துப் பேசிய வார்த்தைகளாகும்: பொடுபோக்குக்கார ஸஈதே, அறிந்துகொள்! இந்த உலகமும் இந்தப் பிரபஞ்சமும் அழிந்தொழிந்த பின்னர் உன்னுடைய துணைக்கு வராத, உன்னை விட்டும் பிரிந்து செல்லக் கூடிய எந்த ஒன்றோடும் உனது உள்ளத்தைப் பிணைத்துக்கொள்வது உனக்கு ஏற்றமானதல்ல. அவை அனைத்தும் இந்த வாழ்க்கையின் முடிவோடு உனக்குப் புறமுதுகு காட்டிச் சென்றுவிடும். அத்தகைய விடயங்களோடு உனது உள்ளத்தைப் பிணைத்துக்கொள்வது அறிவுக்குப் பொருத்தமான செயலாக இருக்க முடியாது. அவை எதுவும் மண்ணறையைக் கடந்து நீ பயணிக்கப் இருக்கின்ற நீண்ட பாதையில் உன்னுடைய துணைக்கு வரப் போவதில்லை. குறைந்தபட்சம் மண்ணரை வரை உன்னை வழியனுப்பி வைப்பதற்காகவேனும் அவை வரப் போவதில்லை. ஆனால் சொற்பமான ஒரு காலத்துக்குள் நித்தியமான ஒரு பிரிவை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிடும். போதாக்குறைக்கு ஏராளமான பாவங்களையும் உனது தலையில் கட்டிவிடுகின்றன. நீ மிகவுமே தேவையுடையவனாக இருக்கும் நேரம் பார்த்து அவை உன்னைவிட்டும் புறமுதுகு காட்டி ஓடிவிடுகின்றன. இப்படிப்பட்ட வஸ்துகளோடு உள்ளத்தைப் பிணைத்துக்கொள்வது எந்த வகையில்தான் அறிவுடைமையாக இருக்க முடியும்? இன்னும் உனது புத்தி பேதலிக்கவில்லை என்றால் மறுமை நிகழ்வுகளுக்கும் மண்ணறை மாற்றங்களுக்கும் உலகின் கொந்தளிப்புகளுக்கும் முன்னால் தாக்குப்பிடிக்க முடியாமல் அழிந்து சிதைந்து போய், நீ செல்ல இருக்கும் நீண்ட நித்திய பயணத்தில் உனக்குத் துணைக்கு வராத விடயங்களைவிட்டும் ஒதுங்கிக்கொள்! அவற்றில் மேற்கொண்டு ஈடுபாடு காட்டுவதையும் அவற்றுக்கு முக்கியத்துவமளிப்பதையும் அவை தீர்ந்து அழிந்து போவதைப் பற்றிக் கைசேதப்படுவதையும் விட்டுவிடு! மேலும் உனது இயல்பான தன்மையை ஒரு முறை கூர்ந்து அவதானித்தால் அங்கு நித்தியத்தையும் நித்திய அரசனையும் தவிற வேறு எதைக் கொண்டும் திருப்திப்படாத ஓர் உள்ளுணர்வு ஆழமாக வேரூண்டியிருப்பதைக் கண்டுகொள்வாய். அவனைத் தவிர வேறு எதை நோக்கி நீ முகத்தைத் திருப்பினாலும் அந்த உள்ளுணர்வு திருப்தியடைவதில்லை. அதன் பார்வை என்றுமே சிருஷ்டிகளை நோக்கித் தாழ்வதில்லை. முழு உலகையும்தான் அதற்குக் கொடுத்தாலும் அவற்றால் அந்த உள்ளுணர்வில் இருக்கின்ற இயல்பான தேவையை நிவர்த்தி செய்ய முடியாது. அந்த உள்ளுணர்வே உன்னிலிருக்கும் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் அரசனாக இருக்கின்றது. எதையும் வீணுக்காகப் படைக்காத சர்வஞானமிக்க படைப்பாளனுடைய கட்டளைகளுக்கு முற்று முழுதாக வழிப்பட்டு நடக்கும் அந்த அரசனுக்கு வழிப்படுவதன் மூலம் நீயும் விமோசனத்தைப் பெற்றுக்கொள்!

§4

இவை ஒரு தடவை சத்தியபூர்வமான ஒரு கனவில் மனிதர்களை விளித்துக் கூறிய விடயங்களாகும். “மனிதனே! அல்லாஹ்வைத் தவிற வேறு எந்த ஒன்றையும் -அதை வணக்கத்துக்குரியதாக உயர்த்தும் அளவு- உன்னைவிடப் பெரியதாக எண்ணிக்கொள்ளாதே. அவ்வாறே, -பெருமையில் மதிமயக்குகின்ற அளவு- உன்னை எந்த ஒன்றை விடவும் பெரியவனாகவும் நினைத்துக் கொள்ளாதே! இவை குர்ஆன் எமக்குக் கற்றுத் தருகின்ற பாடங்களுள் ஒன்றாகும். ஏனெனில் வஸ்துகள் அனைத்தும் வணக்கத்துக்குத் தகுதியற்றவை என்ற வகையில் சம அந்தஸ்த்தில் இருப்பதைப் போன்றே, சிருஷ்டிகள் என்ற வகையிலும் சம அந்தஸ்த்திலேயே இருக்கின்றன.”

§5

பொடுபோக்குக்காரனான ஸஈதே, அறிந்து கொள்! உனது உள்ளத்தில் உள்ள சிந்தனைச் சறுக்கல் காரணமாக மிகச் சொற்பமான காலத்தைக்கொண்ட தற்காலிகமான இந்த உலகை நிலையான, நித்தியமான, முடிவற்ற ஓர் இடமாக எண்ணிக்கொள்கிறாய். சுற்றுச் சூழலும் உலகமும் ஏதோ சற்று நீண்ட ஆயுளைக் கொண்டவையாக உனக்குத் தென்படுவதால் விரைவாக அழிந்து போகக்கூடிய உனது நஃப்ஸையும் நிலையானதாகவே கருதிக்கொள்கிறாய். இதனால் கியாமத்துடைய சிந்தனை மாத்திரமே உன்னில் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. ஏதோ கியாமத்துடைய நேரம் வரை வாழப்போவதைப் போன்ற பிரமையில் உனது நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கிறாய். அறிவைத் தீட்டிக்கொள். உனது தனிப்பட்ட உலகமும் நீயும் சதாவும் அழிவு, பிரிவு என்பவற்றின் தாக்குதலை எதிர்நோக்கியுள்ளாய். உன்னைப் பீடித்துள்ள சிந்தனைக் குழப்பமும் மாயையும் பின்வரும் உதாரணத்தை ஒத்ததாகும். ஒரு மனிதன் தனது கையிலிருக்கும் கண்ணாடியை ஒரு வீட்டை நோக்கி அல்லது ஒரு நகரத்தை அல்லது ஒரு தோப்பை நோக்கிப் பிடித்தால் ஒரு வீட்டின் அல்லது ஒரு நகரத்தின் அல்லது ஒரு தோப்பின் விம்பம் கண்ணாடியில் தெரியும். அப்போது கண்ணாடியில் ஏற்படும் சிறியதொரு நடுக்கம் அல்லது மாற்றம் அந்தக் கண்ணாடியிலுள்ள விம்பத்திலும் கூட குழப்பத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிடும். வெளியிலிருக்கும் உண்மையான வீடும் நகரமும் தோப்பும் நிலைத்து நிற்பது உனக்கு எந்தப் பயனையும் அளிக்காது. ஏனெனில் அந்த வீட்டிலும் நகரத்திலும் தோப்பிலும் உனக்குரிய பங்கு அந்தக் கண்ணாடி மூலம் உனக்குக் கிடைத்தவை மாத்திரமே. ஆம், இந்த உலகம் என்ற வீட்டில் உனக்குரிய கண்ணாடி உனது வாழ்வும் ஆயுளுமாகும். அதாவது உனக்குரிய உலகின் தூனாகவும் மத்தியஸ்த்தமாகவும் கண்ணாடியாகவும் இருப்பது உனது ஆயுளும் உனது வாழ்வுமாகும். எனவே உன்னுடைய விடயத்தில் அந்த வீட்டின் அழிவு எந்த நிமிடத்திலும் சாத்தியமானதாகும். எனவே எந்தக் கனத்திலும் உனது உலகம் உன் தலை மீது இடிந்து விழலாம்; உனக்கான கியாமத் நிகழ்ந்தேரலாம். யதார்த்தம் இதுவென்பதால் உனது இந்த வாழ்வின் மீதும் தனிப்பட்ட உலகத்தின் மீதும் தாங்க முடியாத சுமைகளை சுமத்தாதே!

§6

அறிந்துகொள்! பிரபஞ்ச மாற்றங்களுக்குள் பெறுமதியும் முக்கியத்துவமும் வாய்ந்த வஸ்துகளை அதுவாகவே மீளளிப்பது ஒவ்வொன்றையும் ஒரு நோக்கத்துக்காகப் படைத்துப் பரிபாலிக்கின்ற சர்வ ஞானமிக்க இரட்சகனின் ஆதாத் அதாவது வழக்கமாகும். அதிகமான வஸ்துகளை முன்னர் எப்படி இருந்ததோ அவ்வாறே மீளெழுப்புகின்றான். அதாவது யுக மாற்றங்களின் போதும் பருவகால மாற்றங்களின் போதும் வஸ்துகளிடம் அவற்றின் பழைய நிலைமைகள் அனைத்தும் இருந்தவாறே மீளளிக்கப்படுகின்றன. நாளாந்த வருடாந்த மற்றும் யுக ரீதியான அனைத்து விதமான மீளெழுப்பல்களின் போதும் அல்லாஹ்வின் மேற்படி நியதி கோலோச்சுகின்றது. ஆம், இந்தத் தீர்க்கமான நியதிக்கமைய பின்வரும் உண்மையைக் கூறுகின்றோம்: “எல்லா விதமான அறிவியல்களின் அத்தாட்சிக்கும் ஏகோபித்த முடிவுக்கும் அமைய பிரபஞ்ச விருட்சத்தில் தோற்றம்பெற்ற மிகப் பூர்த்தியான கனியாகவும் படைப்புக்களுக்கு மத்தியிலுள்ள மிகச் சங்கைக்குரிய படைப்பாகவும் மனிதனே திகழ்கிறான். அத்தோடு மனித குலத்தைச் சேர்ந்த தனி ஒருவன் ஜீவராசிகளுக்கு மத்தியிலுள்ள ஓர் இனத்துக்கு நிகராவான். மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த முக்கியத்துவம் அவன் அப்படியே அழிந்து மறைந்து போகட்டும் என்பதற்காக அல்ல. மாறாக, வசந்த காலத்தைப் போன்ற அல்லது அதை விட மகத்தான ஒரு நாளில் மனித குலத்தின் ஒவ்வொரு நபரும் உள்ளவாறே, அதே உடலோடும் அதே பெயரோடும் அதே தோற்றத்தோடும் அதே உணர்வுகளோடும் மீளெழுப்பப்படுவான் என்பதையே இந்த அனைத்து விதமான மாற்றங்களும் உறுதிப்படுத்துகின்றன.

§7

ஐரோப்பாவின் விஞ்ஞானமும் நாகரிகமும் பழைய ஸஈதுடைய சிந்தனையில் ஓரளவு தாக்கம் செலுத்தியிருந்ததால் புதிய ஸஈத் தனது ஏகாந்த சிந்தனையில் இருக்கும் போது ஐரோப்பாவின் அந்த விஞ்ஞானமும் நாகரிகமும் உளரீதியான நோய்களாகப் பரிணாமமடைந்து அந்த மாசற்ற சிந்தனையில் ஏராளமான சிக்கல்களை ஏற்படுத்திக்கொண்டிருந்தன. எனவே புதிய ஸஈதாக இந்த சிந்தனைச் சிக்கல்களிலிருந்து விடுதலை பெறுவதாயின் தனது மனதை சுத்திகரித்து மயக்கமான தத்துவங்களின் சுவடுகளையும் இச்சைவயப்பட்ட நாகரிகத்தின் தடயங்களையும் அதிலிருந்து அகற்ற வேண்டிய தேவை இருந்தது. எனவே தனது சொந்த ஆத்மாவில் ஐரோப்பாவுக்கு ஆதரவாக மேலெழுகின்ற நஃப்ஸானிய்யத்தான தூண்டல்களின் குரல் வலையை நசுக்குவதற்காக ஐரோப்பாவுடைய கூட்டான்மாவோடு –ஒரு கோணத்தில் குறுகியதும், ஒரு கோணத்தில் நீண்டதுமான- பின்வரும் கருத்தாடலை மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தவறாகப் புரிந்துகொள்ளப்படக்கூடாது: ஐரோப்பா இரண்டு பக்கங்களைக் கொண்டதாகும். ஒன்று: உண்மையான கிறிஸ்தவ மார்க்கத்திலிருந்து பெற்றுக்கொண்ட நல்லுணர்வுகளைக் கொண்டு மனிதனின் சமூக வாழ்வுக்குப் பயன் தரக்கூடிய கலைத் துறைகளை வளர்ப்பதற்காகவும் மனித சமூகத்தின் நலனுக்காகவும் நீதி நெறிகளை நிலை நாட்டுவதற்காகவும் விஞ்ஞானத்தையும் அறிவியல்களையும் தேடிச் செல்கின்ற ஐரோப்பாவாகும். இங்கு நான் இந்த முதலாவது ஐரோப்பாவை விளித்துப் பேசவில்லை. மாறாக. இயற்கை விஞ்ஞானத்தின் இருண்ட பக்கங்களுக்குள் அகப்பட்டு, அழுக்குகளுக்கும் அநாகரிகங்களுக்கும் நாகரிகத் தோல் போர்த்தி, அவற்றை அழகியவையாக விளம்பரப்படுத்தி மானுட சமூகத்தை இச்சைகளுக்குள்ளும் வழிகேட்டுக்குள்ளும் தள்ளிவிட்ட ஐரோப்பாவின் சீரழிந்து போன இரண்டாவது முகத்தை விளித்தே பேசுகிறேன். இது எனது அந்த ஏகாந்தமான சிந்தனையின் போது நாகரிகம், விஞ்ஞானம் அகியவற்றின் நலவுகளையும் பயன்களையும் விளித்தன்றி, மனித குலத்துக்கு எவ்விதப் பயன்களுமற்ற ஆபத்தான சித்தாந்தங்களையும் இச்சைவயப்பட்ட ஆபத்தான வாழ்க்கைக் கோலத்தையும் கையில் வைத்துக் கொண்டிருக்கும் ஐரோப்பாவுடைய கூட்டாண்மாவை விளித்துக் கூறியவையாகும். ஐரோப்பாவே அறிந்துகொள்! நீ உனது வலது கையில் நோய்வாய்ப்பட்ட, வழிகேடான சில சித்தாந்தங்களையும் இடது கையில் இச்சைமயப்பட்ட ஆபத்தான ஒரு வாழ்க்கைக் கோலத்தையும் வைத்துக்கொண்டு “மானுடத்தின் விமோசனம் இவை இரண்டிலும்தான் உள்ளது” என்று வாதிக்கின்றாய். உனது அந்த இரண்டு கைகளும் உடையட்டும். உனது அந்த இரண்டு அழுகிப்போன அன்பளிப்புக்களும் உன்னையே விழுங்கி ஏப்பம் விடப்போகின்றது. குஃப்ரையும் நயவஞ்சகத்தையும் பரப்புகின்ற அபாக்கியசாலியான ஆத்மாவே! கேட்கிறேன்: உள்ளத்திலும் ஆத்மாவிலும் அறிவிலும் மனசாட்சியிலும் கடும் வேதனைகளையும் கைசேதங்களையும் சுமந்திருக்கும் பரிதாபகரான மனிதனுக்கு உடலில் மாத்திரம் ஏதேதோ ஒத்தடங்கள் போடுவதன் மூலம் ஆறுதலும் அமைதியும் கொடுக்க முடியும் என்று நினைக்கிறாயா? நீ மனிதனுக்கு இன்பங்களையும் வசதி வாய்ப்புகளையும் அள்ளிக் கொட்டி அந்தந்த நேரத்துக்கு மாத்திரம் ஒரு வகை மயக்கத்தை ஏற்படுத்தினாலும் அது அவனுக்கு நிம்மதியைப் பெற்றுக் கொடுக்காது. இத்தகைய ஒரு மனிதன் வாழ்க்கையில் இன்பமாக இருக்கிறான் என்று எவ்வாறு கூற முடியும்? மனிதன், அற்பமான ஒரு நிகழ்வாலும் கூட நம்பிக்கை இழப்பவனாகவும் மாயையான ஓர் ஆசையை வைத்து அவநம்பிக்கைக்கு ஆட்படுபவனாகவும் பொருட்படுத்தவே அவசியமற்ற ஒரு விடயத்தை வைத்து நிராசை அடைபவனாகவும் இருப்பதால் இனிமையான கனவுகள் அவனுக்கு கசப்பாகிவிடுகின்றன; மகிழ்ச்சியான பொழுதுகள் அவனுக்கு வேதனையைக் கொடுக்கின்றன. உலகம் அவனுக்கு ஒடுக்கமான ஒரு சிறையாக ஆகிவிடுகின்றது. இந்த உண்மைகளை நீ ஏன் கண்டுகொள்ள மறுக்கிறாய்? இவ்வாறு மதி மழுங்கிய நிலையில் இருக்கும் நீ உன்னுடைய வழிகெட்ட சிந்தனைகள் காரணமாக உள்ளத்தினதும் ஆன்மாவினதும் அடி ஆழங்களில் கவலைகளையும் கைசேதங்களையும் வேதனைகளையும் சுமந்திருக்கும் நாதியற்ற மனிதனுக்கு எந்த நிம்மதியை பெற்றுக்கொடுக்கப் போகிறாய். உள்ளமும் ஆத்மாவும் நரகத்தில் இருக்கும் போது உடலை மாத்திரம் தற்காலிகமான ஒரு சுவனத்தில் வைத்துவிட்டு அந்த மனிதனிடம் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஆம், நீ நாதியற்ற இந்த மனிதர்களை இவ்வாறுதான் மன நோயாளிகளாக ஆக்கினாய். பொய்யான ஒரு சுவனத்தைக் காட்டி ஏமாற்றினாலும் நரக வேதனையையே உன்னால் வழங்க முடியுமாக உள்ளது. இதோ, நஃப்ஸின் இச்சைகளைத் தூண்டிவிட்டுப் போஷிக்கும் ஐரோப்பாவே! பின்வரும் உதாரணத்துக்குச் செவிதாழ்த்தினால் மனிதனை எங்கு நோக்கி அழைத்துச் செல்கிறாய் என்பதை அறிந்துகொள்வாய். எமக்கு முன்னால் இரண்டு பாதைகள் மாத்திரமே காணப்படுகின்றன. அந்த இரண்டு பாதைகளையும் அவற்றிலுள்ள நிலவரங்களையும் ஒவ்வொன்றாக அவதானிப்போம். இதோ இந்தப் பாதையைப் பாருங்கள். அந்தப் பாதை முழுவதும் நாதியற்ற மனிர்களின் அவலக் குரல்களால் சோகமயமாகக் காட்சியளிக்கின்றது. அதன் இரு மருங்கிலும் அநியாயக்காரர்கள் அக்கிரமங்கள் தலைவிரித்தாடுகின்றது. அந்த அப்பாவிகளின் சொத்து செல்வங்களைக் கொள்ளையடித்து, அவர்களின் இருப்பிடங்களைத் துவம்சம் செய்து, அவர்களையும் கடுமையாக சித்திரவதை செய்கின்றனர். இந்த அவலத்தின் அகோரத்தைப் பார்த்து வானமும் கூட கண்ணீர் சிந்துகிறது. எந்தத் திசையை நோக்கினாலும் நிலமை இவ்வாறே உள்ளது. அந்தப் பாதையில் கேட்க முடியுமாக உள்ள சத்தங்களெல்லாம் ஒன்றோ அக்கிரமக்காரர்களின் கும்மாலங்களாக அல்லது அப்பாவிகளின் அவல ஓலங்களாகவே உள்ளன. அந்தப் பாதை முழுவதையும் துக்க மேகங்கள் சூழ்ந்திருந்தன. மனிதர்கள் இவ்வாறு அல்லல்படுவதைப் பார்க்கின்ற ஒரு மனிதனால் நிச்சயமாக நிம்மதியாக இருக்க முடியாது. ஏனெனில் மனிதன் மனிதாபிமானம் காரணமாக பிறரின் வேதனைகளாலும் வேதனை அனுபவிப்பவனாக இருக்கின்றான். ஆனால் அவனது மனசாட்சி, இந்தப் பாதையில் உள்ள இத்தகைய அவலங்களையெல்லாம் சகித்துக்கொள்ள முடியாததாக இருக்கின்ற காரணத்தினால் அந்தப் பாதையில் செல்கின்ற ஒரு மனிதன் பின்வரும் இரண்டு விடயங்களுள் ஒன்றைக் கட்டாயம் தெரிவு செய்ய வேண்டியவனாக இருக்கின்றான். ஒன்றோ தனது மனிதாபிமானத்தை ரத்துச் செய்துவிட்டு கண் முன்னால் நிகழும் அந்தப் பயங்கர நிலைமைகளை நியாயப்படுத்தக் கூடிய ஓர் உள்ளமாகத் தனது உள்ளத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அப்போது அந்த அழிவுகளுக்கும் அக்கிரமங்களுக்கும் அவலங்களுக்கும் முன்னால் தான் மட்டும் நிம்மதியாக இருப்பது அவனுக்கு வேதனையளிக்காது. அல்லது மனிதனுக்கு மான்பு சேர்க்கும் அழகிய உணர்வுகளை ரத்துச் செய்ய வேண்டும். பாவங்களிலும் வழிகேட்டிலும் மூழ்கி ஈஸா (அலை) அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை விட்டும் தூரமாகிய ஐரோப்பாவே! தஜ்ஜாலைப் போன்று ஒற்றைக் கண்ணை உடைய உனது குருட்டுப் புத்தியைக் கொண்டு மனித ஆத்மாவுக்கு நரகம் போன்ற இத்தகைய ஒரு நிலைமையை முதலில் பரிசளித்தாய். பின்னர், இது மனிதனை அஃலாயு இல்லிய்யூனிலிருந்து அஸ்ஃபல ஸாஃபிலூனுக்குத் (உயர்ந்ததில் உயரமான இடத்திலிருந்து தாழ்ந்ததில் தாழ்வான இடத்துக்குத்) தாழ்த்தி, மிருகங்களை விடக் கேவலமான ஒரு நிலைக்குத் தள்ளிவிடக் கூடிய நிவாரணமற்ற ஒரு வியாதி என்பதை விளங்கிக்கொண்டாய். பின்னர் அந்த வியாதிக்கு நீ கண்டுபிடித்த மருந்து உணர்வுகளைத் தற்காலிகமாக ரத்துச் செய்கின்ற பணியைச் செய்கின்ற வீண் விழையாட்டுகளும் இச்சைகளைத் தூண்டும் கேளிக்கை களியாட்டங்களுமாகும். உனது இந்த மருந்துகள் உன் தலையிலேயே மண்ணை வாரிப் போடப் போகின்றது. ஆம், நீ மனிதனுக்காகத் திறந்து விட்ட பாதையும் நீ வாக்களித்த நிம்மதியும் மேலுள்ள உதாரணத்தின் நிலையை ஒத்ததாதாகும். இரண்டாவது பாதை சர்வ ஞானம் பொதிந்த குர்ஆன் ஹிதாயத்தைக் கொண்டு மனிதனுக்குப் பரிசளித்த பாதையாகும். அந்தப் பாதை நெடுகிலும் உள்ள ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு நகரத்திலும், ஒவ்வொரு தரிப்பிலும் நீதிமிக்க ஓர் அரசனுடைய விசுவாசமான சிப்பாய்கள் காணப்பட்டனர். நாலா புறமும் அவர்களது நடமாட்டமே காணப்பட்டது. அவ்வப்போது அந்த ஆட்சியாளனுடைய கட்டளைக்கமைய சிப்பாய்களுள் ஒரு பிரிவினர் தமது பணிகளை முடித்துக்கொண்டு விடைபெற்றுச் செல்கின்றனர். அவர்கள் செல்லும் போது அவர்களிடம் கொடுக்கப்பட்ட ஆயுதங்களும் சாதனங்களும் அரச உடமைகளும் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டு அவர்கள் வழியனுப்பி வைக்கப்படுகிறார்கள். உண்மையில் அந்த சிப்பாய்கள் தமக்கு அந்த சாதனங்கள், உடமைகளோடு இருந்த மிகவும் நெருங்கிய பிணைப்பின் காரணமாக அவற்றுடனான பிரிவின் போது பார்வைக்கு ஏதோ கவலைப்படுவது போல் தோன்றினாலும் யதார்த்தத்தில் அந்தப் பிரியாவிடையோடு நிம்மதியாகத் தமது அரசனைத் தரிசிப்பதற்காக அவனது சந்நிதானத்துக்குச் செல்வதை நினைத்து ஆனந்தக் களிப்படைகின்றனர். சிலபோது அவர்களை அழைத்துச் செல்வதற்காக வரும் உத்தியோகத்தர்கள் இன்னும் பக்குவப்படாத, அவர்களைப் பற்றி அறியாத ஒரு சிப்பாயை சந்திக்க நேர்கின்றனர். அவர்கள் அந்த அனுபவமற்ற சிப்பாயிடம் “உனது உடமைகளை எம்மிடம் கையளித்துவிடு!” என்று கூறுகின்றனர். அந்த சிப்பாயோ “நான் அரசனின் படையில் பணி புரிகின்ற சேவகனாவேன். அவனிடமே மீளவும் போகிறேன். நீங்கள் யார்? அந்த அரசனின் அனுமதியோடும் பொருத்தத்தோடும் வந்தீர்களாயின் உங்கள் வரவு நல்வரவாகட்டும். முதலில் அவனது அனுமதியைக் காண்பியுங்கள். இல்லையேல் இங்கிருந்து தொலைந்துவிடுங்கள். என்னைவிட்டும் தூரமாகி விடுங்கள். நான் தன்னந்தனியாகத்தான் இருந்தாலும் உங்களில் ஆயிரம் பேரை எதிர்த்து நிற்பேன். இதை நான் எனது நஃப்ஸுக்காகக் கூறவில்லை. ஏனெனில் எனது நஃப்ஸ் எனக்குரியதன்றி எனது அரசனுக்குரியதாகும். என்னிடமிருக்கும் நஃப்ஸும் ஆயுதங்களும் எனது அரசன் எனக்கு அமானிதமாகத் தந்தவையாகும். அந்த அமானிதத்தையும் எனது அரசனுடைய கண்ணியம், மாட்சிமையையும் பாதுகாப்பதற்காக உங்களிடம் சரணடைய மாட்டேன்” என்று கூறுகிறான். ஆம், அந்த இரண்டாவது பாதையில் இருக்கின்ற மகிழ்ச்சிக்கும் நிம்மதிக்கும் காரணமாக இருக்கும் ஆயிரக்கணக்கான நிலைமைகளுள் ஒன்றையே இங்கு உதாரணத்துக்கு எடுத்துக்கொண்டோம். ஏனைய நிலைமைகளையும் நீங்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த இரண்டாவது பாதையிலுள்ள பயணம் முழுவதும் “பிறப்பு” என்ற பெயரில் மகிழ்ச்சிக்கும் கண்குளிர்ச்சிக்கும் காரணியாக இருக்கும் ஒரு சிப்பாய் உள்வாங்கள் இடம்பெறுகின்றது. அவ்வாறே பணியை முடித்துக்கொள்ளும் சிப்பாய்களுக்கு “மரணம்” என்ற பெயரில் மீண்டும் ஆனந்தமயமான ஒரு பிரியாவிடை வைபவம் வைக்கப்படுகின்றது. ஆம், சர்வ ஞானம் பொதிந்த குர்ஆன் மனிதனுக்கு இந்தப் பாதையையே பரிசளித்துள்ளது. இந்த அன்பளிப்பை முழுமையாக ஏற்றுக்கொள்பவனின் ஈருலக வெற்றிக்கான பாதை அதில் தான் உள்ளது. அவன் கடந்தகால நிகழ்வுகள் காரணமாக துக்கம் அனுபவிக்கவோ எதிர்கால நிலமைகளையிட்டு அச்சம் கொள்ளவோமாட்டான். கெட்டுப் போய் குட்டிச்சுவராகக் கிடக்கும் இரண்டாவது ஐரோப்பாவே! மிகப் பெரிய படைப்பு முதல் மிகச் சிறிய மீன் வரை ஒவ்வொரு ஜீவனும் தத்தமது நஃப்ஸுக்கு அரசனாக உள்ளன, ஒவ்வொன்றும் தத்தமது நலனுக்காகவே உழைக்கின்றன, தாம் நிம்மதியாக இருப்பது எவ்வாறு என்பதையே அலட்டிக் கொள்கின்றன என்றும் இந்த வகையிலேயே அவற்றுக்கும் ஒரு வாழ்வுரிமை இருக்கின்றது என்றும் இவை அனைத்தும் சதாவும் இவ்வாறு உழைப்பதன் நோக்கம் இந்த வாழ்வும் அதன் தொடர்ச்சியுமாகும் என்றும் தீர்ப்பளிக்கின்றாய். இவை தான் உனது வெற்று வாதங்கள். இவை தான் உனது அடிப்படையற்ற அடிப்படைகள். சர்வ ஞானமிக்க படைப்பாளனுடைய அகிலார்ந்த தயாளத் தன்மையையும் அதன் நியதிகளையும் பிரமாண்டமான பிரபஞ்சப் பொருட்களின் பூரண கட்டுப்பாட்டில் பிரதிபலிக்கின்ற ஒழுங்கு விதிகளையும் அந்த நியதிகள், விதிகளின் அடிப்படையில் தாவரங்கள் விலங்குகளின் உதவிக்காகவும் விலங்குகள் மனிதனின் உதவிக்காகவும் விரைந்து செல்வதையும் மொத்தமாகக் கூறினால் பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ள இறை அன்பும் அருளும் இழையோடிய சட்டதிட்டங்களையும் ஏதோ ஒரு போராட்டமாக கற்பனை செய்துகொண்டு “வாழ்க்கை ஒரு போராட்டமாகும்” என்று முட்டாள்தனமாகக் குருட்டுத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றாய். கேட்கிறேன்: உடலின் கலங்களைப் போசிப்பதற்காக முந்தியடித்துக்கொண்டு செல்கின்ற உணவுத் துணிக்கைகளில் புலனாகும் பூரண உற்சாகத்தை அவதானித்தால் பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ள பரஸ்பர ஒத்துழைப்புக்கான ஒரு சிறிய உதாரணமாகத் திகழும் இந்த நிகழ்வு எவ்வாறு போராட்டமாக இருக்க முடியும்? எவ்வாறு ஒரு மோதலாக இருக்க முடியும்? மாறாக அந்த ஒத்துழைப்பும் அந்த ஓட்டமும் அந்த உற்சாகமும் மகா கொடையாளனாகிய ரப்புல் ஆலமீனுடைய கட்டளைக்குற்பட்ட ஓர் உதவி ஒத்தாசையாகும். மேலும் “ஒவ்வொரு வஸ்த்தும் தனது நஃப்ஸின் எஜமானனாகும்” என்பது உனது இன்னுமொரு வெற்று அடிப்படையாகும். எந்த ஒன்றும் தனது நஃப்ஸின் மீது அதிகாரம் மிக்கதல்ல என்பதற்கான ஆதாரத்தை ஏன் காண முடியாதவனாக இருக்கின்றாய்? காரண காரியங்களுக்கு மத்தியில் மிக ஏற்றமான காரண காரியமாகவும் தெரிவுச் சுதந்திரம் விடயத்தில் மிக விசாலமான சுதந்திரத்தை உடையவனாகவும் இருப்பவன் மனிதனாவான். ஆனால் இந்த மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள சிந்தித்தல், பேசுதல், உண்ணல் போன்ற மிக வெளிப்படையான செயல் சுதந்திரங்களை எடுத்துக் கொண்டால் அவை ஒவ்வொன்றிலும் நூற்றில் வெறும் ஒரு பகுதியே அவனது அதிகாரத்துக்கும் தெரிவுச் சுதந்திரத்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு தன்னுடைய மிகவுமே வெளிப்படையான செயற்பாடுகளில்கூட நூற்றில் ஒரு பங்குக்கேனும் முழுமையாக அதிகாரம் செலுத்த முடியாத ஒருவனை எவ்வாறுதான் தனக்குத் தானே எஜமானனாக இருக்கிறான் என்று கூற முடியும்? ஆம், இவ்வாறு மிக ஏற்றமும் மிக விசாலமான தெரிவுச் சுதந்திரமும் உடைய மனிதனே இந்த அளவு உண்மையான அதிகாரத்திலிருந்தும் ஹகீகத்தான எஜமானிய அந்தஸ்திலிருந்தும் தூரமானவனாக, கைகள் முடக்கப்பட்ட நிலையில் இருக்கும் போது “பிற ஜீவராசிகளும் வெற்றுச் சடங்களும் தமக்குத் தாமே எஜமானர்களாக இருக்கின்றன” என்று ஒருவன் வாதிட்டால், அவன் மிருகத்தை விட அதிகம் மிருகத்தன்மை வாய்ந்தவனாகவும் கல்லை விட அதிகம் கடினத்தன்மை வாய்ந்தவனாகவும் சடத்தை விட அதிகம் உணர்வற்றவனாகவும் இருக்கின்றான் என்பதற்கு இதை விடப் பெரிய ஆதாரம் தேவையில்லை. உன்னை இந்தத் தவறில் உடன்பட வைத்து அதலபாதாலத்தில் தள்ளிவிட்டது உன்னிடமிருக்கும் ஒற்றைக் கண் விவேகமாகும். அதாவது பிரமாதமான ஆனால் தரித்திரம் நிறைந்த புத்தியாகும். நீ அந்தக் குருட்டு விவேகத்தை நம்பியதால் வஸ்துகள் அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கின்ற படைப்பாளனை மறந்துவிட்டு மாயையான இயற்கையை ஆதாரமாக எடுத்துக்கொண்டாய். அனைத்து வஸ்துகளையும் காரணகாரியங்களிடம் ஒப்படைத்து அந்தப் படைப்பாளனுடைய முல்க்கைப் போலிக் கடவுள்களாகிய தாகூத்களுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கின்ற கைங்கரியத்தைச் செய்தாய். எனவே உன்னுடைய அந்தப் புத்தியின் குருட்டுப் பார்வைக்கு ஒவ்வொரு ஜீவனும் எண்ணற்ற எதிரிகளுக்கும் முடிவற்ற தேவைகளுக்கும் முன்னால் தன்னந்தனியாகக் கைவிடப்பட்டு அனாதரவான நிலையிலேயே இருக்கின்றன. மேலும் அந்த எண்ணற்ற எதிரிகளுக்கும் முடிவற்ற தேவைகளுக்கும் முன்னால் உன் கைவசம் இருப்பது அணுவளவேயான ஓர் அதிகாரமும் மயிர் அளவேயான ஒரு சுதந்திரமும் மினுமினுப்புப போன்ற ஓர் உணர்வும் விரைவாக மறைந்து போகும் தீப்பொறி போன்ற ஒரு வாழ்வும் நொடிப் பொழுதைப் போன்ற ஓர் ஆயுளும் மாத்திரமேயாகும். இந்த மூலதனங்களோ ஒருவன் ஆசிக்கின்ற ஆயிரக்கணக்கான ஆசைகளுள் ஒன்றையேனும் முழுமையாக அடைந்துகொள்வதற்குப் போதாது. இந்த அவல நிலையோடு கூடவே அழிவுகளுக்கும் அனர்த்தங்களுக்கும் முகம்கொடுக்க நேரிடும் போது பார்வையோ கேள்வியோ இல்லாத காரணகாரியங்களிடம் கையேந்தி நிற்பதைத் தவிர அவனது நிர்க்கதி நிலைக்கு வேறு நிவாரணங்களும் கிடையாது. وَمَا دُعَاءُ الْكَافِرِينَ اِلاَّ فِى ضَلاَلٍ என்ற மறை வசனம் வரைகின்ற எல்லைக்குள் சென்றுவிடுகின்றான். உனது அந்தத் தரித்திரம் பிடித்த விவேகத்தின் மூலம் மனித குலத்தின் பகலையும் இரவுக்குள் தள்ளிவிட்டாய். பின்னர் இருண்ட, இன்னல்கள் நிறைந்த பயத்தால் சூழப்பட்ட அந்த இரவை அந்நியோன்யமானதாகக் காட்டுவதற்காக விரைவாக அணைந்து போகக்கூடிய மாயையான, தற்காலிக விளக்குகள் மூலம் அதை ஒளியேற்றினாய். அந்த விளக்குகள் மனிதர்களின் முகங்களைப் பார்த்து ஆனந்தமாகப் புன்னகைப்பதைப் போன்று உனக்குத் தோன்றலாம். ஆனால் அவையோ அழுது புலம்ப வேண்டிய பரிதாபகரமான நிலையில் இருந்தவாறு, கூத்தும் கும்மாலம் போட்டுத் திரியும் மனிதர்களின் நகைப்புக்கிடமான நிலையைப் பார்த்து எள்ளிநகையாடுவதைக் காண முடியாதவனாக இருக்கின்றாய். உனது பக்தர்களின் பார்வையில் ஒவ்வொரு ஜீவராசியும் அக்கிரமக்காரர்களின் அச்சுறுத்தலுக்குற்பட்டு அநாதரவாகத் திரிகின்ற பாவப்பட்ட ஜீவன்களாகும். உலகம் பிரமாண்டமானதொரு இழவுவீடாகும். உலகத்தில் எதிரொலிக்கும் ஓசைகள் மரணங்கள் காரணமாகவும் கவலைகள் கைசேதங்கள் காரணமாகவும் மேலெழும்பும் புலம்பல்களாகும். ஆம், உன்னிடம் முழுமையாகக் கற்ற உனது பக்தன் ஒரு பிர்அவ்னைப் போன்று ஆகிவிடுவான். ஆனால், உனது பக்தர்களிடமிருக்கும் பிர்அவ்னியத்தானது மிகவும் அற்பமான பொருட்களுக்கு முன்னால் மண்டியிட்டு வணங்குவதையும் பிரயோசனம் கிடைக்கின்ற அனைத்தையும் தனது இரட்சகனாகக் கட்பித்துக் கொள்வதையும் பெருமையாக நினைத்துக்கொள்கின்ற அளவு மட்டரகமான ஒரு பிர்அவ்னியத் ஆகும். அவ்வாறே அவன் ஒரு பிடிவாதக் காரனாகவும் ஆகிவிடுவான். ஆனால் அது அற்பமான ஓர் இன்பத்துக்காக எண்ணற்ற இழிவுகளைப் பொருந்திக் கொள்கின்ற அளவுக்கு இழிநிலையை அடைந்த ஒரு பிடிவாதமாகும். அற்பமான ஓர் ஆதாயத்துக்காக ஷைத்தானின் காலை முத்தமிடுகின்ற அளவு அவனது அற்பத்தன்மை வெளிப்படும். மேலும் அவன் அக்கிரமக்காரனாகவும் ஆகிவிடுவான். ஆனால் அவனது உள்ளத்தில் பிடிமானமாக இருக்கத்தக்க எந்த ஆதாரத்தளமும் இல்லாதிருப்பதால் தற்புகழ்ச்சி தேடும் ஓர் அக்கிரமக்காரனாகவே இருப்பான். உனது அந்த பக்தன் அக்கிரமங்கள் புரிவதற்காக எடுத்துக்கொள்ளும் பிரயத்தனங்களுக்கான காரணம் நஃப்ஸின் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான அவாவும் தனது பேராசை, ஆணவம், மமதை போன்ற இழி குணங்களை ஆசுவாசப்படுத்துவதற்கு உந்துகின்ற ஓர் ஊசலாட்டமுமாகும். தேச பக்தி, தியாகம் போன்ற வார்த்தை ஜாலங்கள் அனைத்தும் அந்த இழி குணங்களை மறைப்பதற்கான திரைகளேயாகும். மொத்தத்தில் அந்த பக்தன் தனது நஃப்ஸைத் தவிர வேறு எதையும் உண்மையாக நேசிப்பதில்லை. ஏனைய அனைத்தையும் தனது நஃப்ஸுக்காக அவன் தியாகம் செய்வான். மறுபுறம் முழுமையான ஒரு குர்ஆனிய மாணவனை எடுத்துக்கொண்டால் உண்மையில் அவன் ஓர் அடிமையாவான். ஆனால் அவனுடைய உபூதிய்யத்தும் அடிமைத்துவமும் -எவ்வளவு தான் பெரிதாக இருந்தாலும்- எந்தவொரு படைப்புக்கும் முன்னால் அடிபணிந்து போகாத அளவு உயர்ந்ததும் சங்கையானதுமாகும். எனவே அவனது அடிமைத்துவம் அவனைத் தாழ்த்துவதில்லை. அந்த மாணவன் சுவனம் போன்ற மிகப்பெரிய, மிகச் சிரேஷ்டமான ஒரு அன்பளிப்பைக் கூட தனது உபூதிய்யத்துக்கான நோக்கமாக ஆக்கிக்கொள்ளாத சிரேஷ்டமான ஓர் அடிமையாவான். மேலும் அந்த மாணவன் மென்மையும் சாதுவான தன்மையும் மிக்கவனாவான். ஆனால் அந்த மென்மை மகத்துவமிக்க படைப்பாளனாகிய அல்லாஹ்வைத் தவிற வேறு யாருக்கு முன்னாலும் அவனது அனுமதியோ, கட்டளையோ இன்றி கூனிக்குறுகிப் பணிந்து போகாத நெஞ்சூரம் மிக்க ஒரு மென்மையாகும். அவ்வாறே, அவன் ஓர் ஏழையாவான். ஆனால் அவனுடைய அரசனும் மகா கொடையாளனுமாகிய மாலிகுல் கரீம் அவனுக்காகத் தயார் செய்து வைத்துள்ள சன்பானங்களைப் பார்த்து உள்ளமும் வயிறும் நிரம்பிய நிலையிலுள்ள ஓர் ஏழையாவான். மேலும் அவன் பலவீனமானவனாவான். ஆனால் அந்தப் பலவீனம் எல்லையில்லாத வல்லமையைக் கொண்ட தனது அரசனின் வல்லமையை ஆதாரமாகக் கொண்டிருப்பதால் மிகவும் பலம்வாய்ந்த ஒரு பலவீனமாகும். ஆம் குர்ஆன், தனது உண்மையான ஒரு மாணவனுக்கு நித்திய சுவனத்தைக் கூட அவனுடைய உபூதிய்யத்துக்கும் அடிமைத்துவத்துக்குமான நோக்கமாக ஆக்கிக்கொள்ள அனுமதிக்காதிருக்கும் போது, தற்காலிகமான இந்த உலகை எவ்வாறுதான் அவனது இலக்காகவும் நோக்கமாகவும் ஆக முடியும். இதோ இந்த இரு சாராருடைய பிரயத்தனங்களும் எந்த அளவு ஒன்றுக்கொன்று தூரமானவை என்பதை விளங்கிக்கொள்ளுங்கள் மேலும் ஐரோப்பாவின் -ஏகப்பட்ட வியாதிகளால் தொற்றுக்குள்ளாகி- நோய்க் காவிகளாகத் திகழும் சித்தாந்தங்களைப் பூஜிக்கும் பக்தர்களின் பிரயத்தனங்கள், அர்ப்பனங்களுக்கும் சங்கைமிக்க குர்ஆனின் மாணவர்களுடைய பிரயத்தனங்கள், அர்ப்பனங்கள், தியாகங்களுக்கும் மத்தியிலுள்ள வேறுபாட்டைப் பின்வரும் ஒப்பீடுகளின் மூலமும் புரிந்து கொள்ளலாம். முதலாமவனோ, தனது நஃப்ஸுக்காகத் தனது சகோதரனிடமிருந்தும் கூட விரண்டோடுவான். அவனுக்கெதிராக வாதாடவோ வாலேந்தவோ பின் நிற்க மாட்டான். ஆனால் குர்ஆனுடைய உண்மையான ஒரு மாணவன் வானம் பூமியிலிருக்கும் அல்லாஹ்வின் அனைத்துப் படைப்புகளையும் தனது இரத்த உறவுகளைப் போன்று பார்ப்பான். அவனுடைய துஆக்கள் அவற்றையும் உள்வாங்கியதாகவே இருக்கும். அவற்றின் நல்ல நிலமைகளைக் கண்டு ஆனந்தமடைவான். தனது ஆத்மாவுக்கு அவற்றுடனும் ஆழமான ஒரு பிணைப்பு இருப்பதை உணர்ந்துகொள்வான். மிகப் பெரிய அர்ஷும் சூரியனும் கூட இறை கட்டளைக்கு அடிபணிந்த உத்தியோகத்தர்கள் என்பதையும் தன்னைப் போன்ற அடிமைகள் என்பதையும் ஏற்றுக்கொள்வான். மேலும் இந்த இரு சாராரின் தன்மைகளையும் உள்ளங்களின் விசாலத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஆம், குர்ஆனிய மாணவர்களின் உள்ளங்கள் எந்த அளவு விசாலமானவை எனில், தொன்னூற்றி ஒன்பது மணிகளைக் கொண்ட ஒரு தஸ்பீஹ் கோர்வையைப் போன்று தொன்னூற்றி ஒன்பது திருநாமங்களின் பிரதிபலிப்புகளாகத் திகழும் தொன்னூற்றி ஒன்பது உலகங்களையும் உள்ளடக்கிய ஒரு கோர்வையாகத் தனது மாணவர்களின் கரங்களில் வீற்றிருக்கும் குர்ஆன் அவர்களிடம் “உங்கள் திக்ர், அவ்ராதுகளை இவற்றைக் கொண்டு நிறைவேற்றுங்கள்” என்று கூறுகின்றது. ஆம் குர்ஆனின் சங்கைமிக்க மாணவர்களாகத் திகழ்ந்த ஷாஹ் ஜைலானி, ரிஃபாஈ, ஷாஸுலி (ரழி) போன்ற மாமனிதர்களின் திக்ர், அவ்ராதுகளைக் கேட்டுப் பாருங்கள்! அவர்கள் அணுக்கள் முதல் எல்லா சிருஷ்டிகளினதும் எண்ணிக்கைகளை வைத்துத் தமது அவ்ராதுகளை ஓதுபவர்களாகவும் அவற்றின் சார்பாகத் தமது திக்ருகள் தஸ்பீஹ்களை சமர்ப்பிப்பவர்களாகவும் இருந்துள்ளனர். ஆம், இதிலிருந்தே சங்கைமிக்க தெளிவுரையாகிய குர்ஆனின் அற்புதமான பயிற்றுவிப்பு எத்தகையது என்பதை விளங்கிக் கொள்ளலாம். ஆம், அற்பமான ஒரு கவலை காரணமாக அல்லது நிர்க்கதி நிலமை காரணமாக தன்னிலை மறந்து பித்துப் பிடித்தவனைப் போன்று மாறிவிடுகின்ற, அற்பமானதொரு பக்றீறியாவிடம் தோல்வியடைந்து நம்பிக்கை இழக்கின்ற இந்த அற்பமான மனிதன் குர்ஆன் தரும் பயிற்சிகள் மூலம் எப்படிப்பட்ட சங்கையான ஓர் அந்தஸ்துக்கு உயர்கின்றான் என்பதைப் பாருங்கள். அவ்வாறே அவனுடைய உணர்வுகள் குர்ஆன் தரும் பயிற்சியைக் கொண்டு எப்படிப்பட்ட விசாலத்தன்மையை அடைகின்றன எனில், அவன் பிரமாண்டமான பூமியையும் அதிலுள்ள சிருஷ்டிகளையும் அவனது அவ்ராதுகளிலுள்ள தஸ்பீஹ் மணிகளைப் போன்று சிறிதாகக் காண்கின்றான். மேலும் தனது திக்ர் மற்றும் அவ்ராதுகளுக்கான நோக்கமாக ஆக்கிக்கொள்ளும் விடயத்தில் சுவனத்தைக் கூட குறைவாகப் பார்க்கின்ற அதே வேளை தனது நஃப்ஸை அல்லாஹ்வுடைய மிகச் சிறிய ஒரு படைப்புக்கு முன்னாலும் கூட அவன் உயர்த்திப் பார்ப்பதில்லை. அதாவது மட்டற்ற மேன்மையுடன் மட்டற்ற பணிவை ஒன்றாகப் பேணுகின்றான். இந்த விடயங்களோடு ஒப்பிடும் போது ஐரோப்பா பிரசவித்த சித்தாந்தங்களைப் பூஜிக்கும் பக்தர்கள் எந்த அளவு தாழ்ந்த, இழிந்த நிலையில் உள்ளார்கள் என்பதைக் கண்டுகொள்ள முடியும். ஆம், சத்தியத்தின் உண்மை நிலையை ஐரோப்பியத் தத்துவவியலின் ஒற்றைக் கண் விவேகம் பிழையாகக் கண்டுகொண்டது. ஆனால் சத்தியத்தின் உண்மை நிலையை மறைவானவற்றைக் கூட மிகத் துல்லியமாக பார்க்க முடியுமான இரண்டு பிரகாசமான கண்களின் மூலம் ஈருலகங்களையும் பார்வையிடுகின்ற குர்ஆன் பிரகாசமான ஓர் அமைப்பில் தெளிவுபடுத்துகின்றது. ஆம், அந்தக் குர்ஆனால் மாத்திரமே ஈருலக ஈடேற்றத்துக்கான வழியை மனிதனுக்குக் காட்டித் தர முடியும். அந்தக் குர்ஆன் மனிதனைப் பார்த்து “மனிதனே! உன்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நஃப்ஸும் சொத்து செல்வங்களும் உன்னுடைய உடமைகள் அல்ல. அவை உனக்கு அமானிதமாகத் தரப்பட்டவையாகும். அந்த அமானிதங்களுடைய எஜமானனோ அனைத்தின் மீதும் ஆற்றல் மிக்கவனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் அளவற்ற அருளாலனாகவும் அளவில்லாமல் வாரி வழங்கும் வள்ளலாகவும் இருக்கின்றான். அவன் உனக்களித்த சொத்து செல்வங்கள் அனைத்தையும் உன்னிடமிருந்து விலைகொடுத்து வாங்குவதற்கும் அதன் மூலம் அவை உனக்காகப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் உன்னைவிட்டும் அழிந்து போகாதிருக்க வேண்டும் என்றும் நாடுகிறான். மாத்திரமன்றி இந்த வியாபாரத்துக்குப் பகரமாக உனக்கு மகத்தானதொரு வெகுமதியையும் வழங்க இருக்கிறான். நீயோ பொறுப்புச் சுமத்தப்பட்ட ஒரு உத்தியோகத்தனாக அல்லது ஒரு சிப்பாயாகவும் இருப்பதால் அவனது பெயரைக் கொண்டு அவனுக்காகக் காரியமாற்று. உனக்குத் தேவையானவற்றை எல்லாம் ரிஸ்க்காக அனுப்பி வைப்பதும் உனது சக்திக்கு எட்டாதவைகளின் தீங்குகளிலிருந்து உன்னைப் பாதுகாப்பதும் அவனே. உனது இந்த வாழ்க்கையின் நோக்கமும் விளைவும் அந்த எஜமானனுடைய திரு நாமங்களினதும் புனிதமான நிலைமைகளினதும் பிரதிபலிப்புக்குப் பாத்திரமானவனாக மாறுவதாகும்” என்று கற்றுத் தருகின்றது. இவ்வாறான குர்ஆனியப் பாடங்களைக் கற்றுக்கொண்ட ஒரு மனிதன் ஒரு முஸீபத் தன்னை நெருங்கும் போது اِنَّا لِلّٰهِ وَاِنَّا اِلَيْهِ رَاجِعُونَ என்று கூறுகிறான். அதாவது அவன் அந்த முஸீபத்தைப் பார்த்து “நான் எனது இரட்சகனின் சேவகனாவேன். அவனது அனுமதியும் பொருத்தமும் உள்ளதெனில் உனது வரவு நல்வரவாகட்டும்! என்றேனும் ஒரு நாள் அவனிடமே மீளப்போகிறோம், அதையே ஆசையும் வைக்கின்றோம். நிச்சயமாக ஒரு நாள் நாம் எம்மீது சுமத்தப்பட்ட இந்தப் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட இருக்கின்றோம். எனவே என்னை நெருங்கியிறுக்கும் முஸீபத்தே! அந்த விடுதலையும் அந்தப் பிரிவும் உன் மூலம்தான் விதிக்கப்பட்டிருப்பின் அதில் எனக்கு எந்த ஆட்சேபனைகளும் இல்லை. நான் அதை முழு மனதோடு பொருந்திக் கொள்கிறேன். ஆனால், அமானத்தைப் பாதுகாக்கின்ற எனது பொறுப்புணர்வைச் சோதிப்பதற்காக மாத்திரமே எனது இரடசகன் உனக்கு அனுமதி வழங்கியிருப்பின் நான் உன்னிடம் சரணடைவது அவனது திருப்பொருத்தத்திற்கு அப்பாற்பட்ட செயலாகும். நான் எனது முழு ஆற்றலையும் பிரயோகித்து எனது எஜமான் என்னிடம் ஒப்படைத்த அமானத்தை உன்னிடமிருந்து பாதுகாப்பேன்!” என்று கூறுகிறான். உண்மையில் இது, குர்ஆனியப் பாதைக்கும் மேற்கத்தேய சித்தாந்தங்கள் வரைகின்ற பாதைக்கும் இடையிலுள்ள ஏற்றத்தாழ்வைப் பிரதிபலிக்கும் ஆயிரக்கணக்கான உதாரணங்களுள் ஓர் உதாரணம் மாத்திரமேயாகும். ஆம் இரண்டு வகுப்பினரின் உண்மையான வாழ்க்கை நிலைமைமைகள் மேற்கூறப்பட்ட அமைப்பிலேயே உருண்டோடுகின்றன. ஆனால் இரண்டு பாதைகளிலும் செல்கின்ற மனிதர்களின் தராதரங்களும் வேறுபட்டவையாகும். பொடுபோக்கிலும் கூடப் பல்வேறு தராதரங்கள் காணப்படுகின்றன. அனைவரும் அனைத்துப் படித்தரங்களிலும் இந்த சத்தியங்களை பூரணமாக உணர்ந்துகொள்ள மாட்டார்கள். ஏனெனில் பொடுபோக்குத்தனம் உணர்வுகளைத் துண்டித்து விடுகின்றது. குறிப்பாக இந்தக் காலத்தில் பொடுபோக்கிலும் வழிகேட்டிலும் காணப்படுகின்ற கடுமையான நோவினை தரும் வேதனைகளை நாகரிக மனிதனால் உணர்ந்துகொள்ள முடியாத அளவு இந்த உணர்வுகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஆனால் அறிவின் தூண்டல்களாலும், ஒவ்வொரு நாளும் முப்பதாயிரம் (இந்த எண்ணிக்கை 1940ம் ஆண்டு காலப்பகுதிக்குரிய தரவாகும்) மனிதர்களைப் பிணங்களாக மாற்றும் மரணம் என்ற உபதேசியின் போதனைகளாலும் அந்தப் பொடுபோக்குத் திரை கிழித்தெறியப்படுகின்றது. அனைத்தையும் மீறி ஐரோப்பிய தாகூத்களையும் இயற்கை விஞ்ஞானத்தையும் கைப்பிடித்து வழிகேட்டுக்குச் செல்பவர்களுக்கும் அவர்களை கண்மூடித்தனமாகத் தக்லீத் செய்பவர்களுக்கும் ஆயிரம் ஆயிரம் சாபங்களும் ஆயிரம் ஆயிரம் கைசேதங்களும் காத்திருக்கின்றன. இந்த மண்ணின் மைந்தர்களே! ஐரோப்பாவைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றாதீர்கள். ஆச்சரியமாகத்தான் கேட்கிறேன்; இந்த ஐரோப்பியர்கள் உங்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட, கட்டவிழ்த்துக்கொண்டிருக்கும் மகத்தான அநீதிகள், அக்கிரமங்களைக் கண்ட பின்னரும் எந்த அறிவைக் கொண்டுதான் அவர்களுடைய பாத்திலான, பாவகரமான சிந்தனைகளுக்கு வழிப்பட்டு அவற்றில் நம்பிக்கை வைக்கிறீர்கள்!? இல்லை இல்லை!! அறிவுத் தெளிவோடு போய் சரணடைந்தவர்கள் யாருமிருக்க முடியாது. ஆம், இச்சைவயப்பட்டு பாவங்களுக்கு சோரம் போய் தக்லீத் செய்பவர்களே! நீங்கள் உண்மையாகவே அறிவுத் தெளிவோடு அவர்களுக்கு வழிப்பட்டு அவர்களுடைய அணியில் போய் சேரவில்லை. மாறாகப் பிரக்ஞை அற்றவர்களாகப் போய் அவர்களது அணியில் சேர்ந்து உங்களதும் உங்கள் சகோதரர்களதும் அழிவுக்குக் காரணமாக அமைகிறீர்கள். அறிந்துகொள்ளுங்கள்! நீங்கள் பிரக்ஞையற்றவர்களாக அவர்களுக்கு வழிப்படுகின்ற காலமெல்லாம், நீங்கள் உங்களது தேசாபிமானக் கொள்கையில் பொய்யர்களாக மாறிவிடுகின்றீர்கள்! ஏனெனில் உங்களுடைய இந்த மோகமும் வழிப்பாடும் கண்ணியத்தோடும் சுயத்தோடும் வாழ்ந்த இந்தத் தேசத்தைத் தரம் தாழ்த்தி அதன் கண்ணியமான மக்களை சிறுமைப்படுத்துகின்ற ஒரு செயலாகும்.! هَدٰينَا اللّٰهُ وَ اِيَّاكُم۟ اِلَى الصِّرَاطِ ال۟مُس۟تَقٖيمِ

§8

நிராகரிப்பாளர்கள் பெரும்பான்மையாக இருப்பதையும் பெரும்பாலான ஈமானிய சத்தியங்களை நிராகரிக்கின்ற விடயத்தில் அவர்கள் ஏகோபித்த நிலைப்பாட்டில் இருப்பதையும் பார்த்து ஆட்டம் கண்டு நம்பிக்கை இழக்கும் அபாக்கியசாலியான மனிதனே! அறிந்துகொள்! ஒரு விடயத்தின் பெறுமதியும் மகத்துவமும் அதற்கிருக்கும் பெரும்பான்மையான ஆதரவையோ அதிகரித்த ஈடுபாட்டையோ வைத்து அளக்கப்படுவதில்லை. அதாவது மனிதன் மனிதனாக இருக்காவிட்டால் ஒரு ஷைத்தானிய மிருகமாகப் மாறிவிடுகிறான். பெரும்பாலான ஐரோப்பியர்களையும் அவர்களுடைய சித்தாந்தங்களையும் போல் மனிதன் மிருக இச்சைகளைக்குப் பின்னால் செல்கின்ற போது மிருகங்களை விட மோசமான ஒரு மிருக அந்தஸ்துக்குத் தாழ்ந்து விடுகிறான். மிருகங்கள் எண்ணிக்கையளவில் பல மடங்கு பெரும்பான்மையாகக் காணப்படுகின்ற போதிலும், அவற்றோடு ஒப்பிடும் போது மிகச் சொற்பமாக உள்ள மனிதன் ஒட்டுமொத்த மிருக இனங்களுக்கும் மேலால் அரசனாகவும் பிரதிநிதியாகவும் அவற்றின் மீது அதிகாரமிக்கவனாகவும் திகழ்கின்றான். ஆம், நிராகரிப்பாளர்களும் நிராகரிப்பாளர்களின் வழியில் செல்லும் பாவிகளும் அல்லாஹ் மிருகங்களாகப் படைத்த மிருகங்களை விடவும் தாழ்ந்தவர்களாக இருப்பதால் சர்வ ஞானமிக்க படைப்பாளன் அவர்களை உலகை வழப்படுத்துகின்ற இமாரத் பணிக்காகப் படைத்துள்ளான். மேலும் முஃமினான தனது அடியானுக்குத் தான் அருளிய அருட்பாக்கியங்களின் அந்தஸ்துகள் எத்தகையவை என்பதை அறியப்படுத்துவதற்கான ஓர் ஒப்பீட்டுக் கருவியாகவும் அல்லாஹ் அவர்களை ஆக்கியுள்ளான். இறுதியில் அவர்கள் தமது தகுதிக்கேற்ற இருப்பிடமான நரகத்தில் குடியமர்த்தப்படுவார்கள். எனவே ஒட்டுமொத்த நிராகரிப்பாளர்களும் வழிகேடர்களும் சேர்ந்து ஓர் ஈமானிய சத்தியத்தை ஏகமனதாக மறுத்து, நிராகரித்தாலும் அது எத்தகைய பலமோ பாரமோ பெறுமானமோ அற்றதாகும். ஏனெனில் மறுப்பிலுள்ள சூட்சுமத்தின் அடிப்படையில் ஒரு விடயத்தை மறுப்பதற்காக எத்தனை பேர்தான் உடன்பபாட்டாலும் அல்லது ஐக்கியப்பட்டாலும் அந்த உடன்பாடும் ஐக்கியப்பாடும் சுத்தமான பலவீனமாகவே இருக்கும். ஏனெனில் ஒன்றை மறுக்கின்ற விடயத்தில் ஆயிரம் பேர் ஒருவனுக்கேனும் ஈடாகமாட்டார்கள். உதாரணமாக இங்கு இஸ்தான்பூல்வாசிகள் அனைவரும் சேர்ந்து ரமழான் மாதத் தலைப் பிறை தென்படவில்லை என்று மறுப்புத் தெரிவித்தாலும் இரண்டு சாட்சிகளின் ஒப்புதல் அந்தப் பெரும் கூட்டத்தின் ஏகோபித்த மறுப்பையும் அந்த மறுப்புக்கான உடன்பாடு, ஐக்கியம் என்பவற்றையும் செல்லுபடியற்றதாக ஆக்கிவிடும்; மதிப்பிழக்கச் செய்துவிடும். அவ்வாறே குஃப்ர் மற்றும் வழிகேட்டின் இயல்பும் கூட மறுப்பும் நிராகரிப்பும் அறியாமையும் சூன்யமுமாகும். ஆகவே ஒட்டுமொத்தக் காபிர்களும் சேர்ந்து ஏகமனதாகக் குஃப்ரில் உடன்பட்டாலும் அது எத்தகைய பெறுமானமும் அற்றதாகும். எனவே சத்தியத் தன்மையும் நிலைத்த தன்மையும் மாறாத் தன்மையும் நிரூபணமான ஈமானிய சத்தியங்களின் விடயத்தில் கண்ணால் கண்ட வெறும் இரண்டு முஃமினான சாட்சிகளின் தீர்ப்பானது அவற்றை நிராகரிக்கின்ற விடயத்தில் ஒட்டுமொத்த வழிகேடர்களின் உடன்பாட்டையும் ஐக்கியத்தையும் மிகைத்து விடும். இந்த சத்தியத்தில் பொதிந்துள்ள் சூட்சுமம் மறுப்பவர்களின் வாதங்கள் வெளிப் பார்வைக்கு ஒன்று போல் தென்பட்டாலும் அடிப்படையில் அவை பலதரப்பட்ட அடிப்படைகளை உடையவையாகவும் தமக்குள் கருத்தொற்றுமை அற்றவையாகவுமே இருக்கின்றன. எனவே அவர்களுடைய வாதங்கள் அடிப்படையில் ஒன்றையொன்று உண்மைப்படுத்தவோ ஒன்றுக்கொன்று பக்கபலமாக இருக்கவோ முடியாதவையாகும். ஆனால் ஆதாரங்கள், அத்தாட்சிகள் மூலம் ஒரு விடயத்தை நிரூபிப்பவர்களின் வாதங்கள் இயல்பிலேயே ஐக்கியமானவையாகும். அவை ஒன்றுக்கொன்று பலமாகவும் ஒன்றையொன்று உண்மைப்படுத்துவதாகவும் திகழ்கின்றன. உதாரணமாக ஆகாயத்திலிருக்கும் ரமழான் மாத தலைப் பிறையைக் காணாதவர்களுள் ஒருவர் “என்னால் பிறையைக் காணமுடியாதுள்ளது” என்று கூறுவார். இன்னுமொருவர் “எனது கண்களுக்குப் பிறை தென்படவில்லை” என்று கூறுவார். மற்றவர்களும் அவ்வாறே கூறுவர். அதாவது ஒவ்வொருவரும் தனது பார்வைக்குப் பிறை விளங்கவில்லை என்றே கூறுவர். எல்லோருடைய பார்வைகளும் வெவ்வேறானவையாக இருப்பதாலும் ஒவ்வொருவருடைய பார்வைக்கும் திரையாக அமையக் கூடிய அம்சங்களும் வேறுபட்டவையாக இருக்க முடியும் என்பதாலும் அவர்களுடைய வாதங்களும் வெவ்வேறானவையாகும். அவை ஒன்றையொன்று பலப்படுத்தாது. ஆனால் நிரூபிப்பவர்களைப் பொருத்தவரை அவர்கள் “எனது பார்வைக்குப் பிறை தென்படுகின்றது” என்று கூறுவதில்லை. மாறாக “வானத்தில் நிஜமாகவே பிறை உள்ளது, இதோ தென்படுகின்றது” என்றே கூறுவர். காண்கின்ற அனைவரும் ஒரே வாதத்தை, அதாவது “ஆகாயத்தில் பிறை உள்ளது” என்ற வாதத்தையே முன்வைப்பர். இதன் அர்த்தம் இந்த அடிப்படையில் முன்வைக்கப்படுகின்ற அனைத்து வாதங்களும் ஒன்று என்பதாகும். மறுப்பவர்களின் பார்வைகள் வெவ்வேறானவை என்பதால் அவர்களின் வாதங்களும் வெவ்வேறானவையாகும். அவர்களால் நிஜத்தின் மீது தீர்ப்புச் சொல்ல முடியாது. ஏனெனில் நிஜத்தில் மறுப்பை அல்லது நிராகரிப்பை நிரூபிக்க முடியாது. அவ்வாறே நிரூபிப்பதாக இருந்தால் அனைத்தையும் வியாபித்த பார்வைக்குச் சொந்தக்காரனாக இருக்க வேண்டும் என்ற கட்டாய நிபந்தனை உள்ளது. وَ الْعَدَمُ الْمُطْلَقُ لاَ يُثْبِتُ اِلاَّ بِمُشْكِلاَتٍ عَظِيمَةٍ என்பது ஒரு உஸூல் விதியாகும். ஆம், உலகில் ஒரு பொருள் உள்ளது என்று வாதிட்டால் அந்தப் பொருளைக் காடடுவது மாத்திரம் போதுமானதாகும். வாதத்தை நிரூபித்துவிடலாம். மாறாக அப்படியொன்று இல்லை என்று மறுத்தால் அதை நிரூபிப்பதற்கு உலகம் முழுவதையும் சல்லடை போட்டுக் காண்பிப்பது கட்டாய நிபந்தனையாகும். ஆம், இந்த சூட்சுமத்துன் அடிப்படையில் காபிர்கள் ஒரு சத்தியத்தை மறுப்பது ஊசி ஓட்டைக்குள் ஒட்டகம் நுழைவிப்பதைப் போன்ற அல்லது ஒரு மலையுச்சியிலிருந்து இன்னுமொரு மலை உச்சியைப் பாய்ந்து கடப்பதைப் போன்ற செயலாகும். அதாவது இங்கு ஆயிரமும் ஒன்றும் சமனாகும். ஏனெனில் ஒருவரால் மற்றவருக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. ஆனால் நிரூபிப்பவர்கள் நிஜத்தில் இருக்கும் உண்மை நிலையைப் பார்ப்பதால் அந்த வாதத்தில் ஐக்கியப்படுகின்றனர்; உடன்படுகின்றனர். ஒவ்வொருவரும் மற்றவருக்குப் பக்க பலமாக இருக்கின்றனர். ஒரு பாரையைத் தூக்குவதைப் போன்று, எந்த அளவு கைகள் ஒத்துழைக்குமோ அந்த அளவு ஒவ்வொருவரும் மற்றவரிடமிருந்து உதவியும் பலமும் பெறுவர்.

§9

முஸ்லிம்களை உலகத்தின்பால் கடுமையாக ஊக்குவித்து, அந்நிய காலாச்சாரங்களிம்ர்களின் கலைத் துறைகளை நோக்கியும் அபிவிருத்திகளை நோக்கியும் வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்வதற்காக அதீத சிரத்தை எடுத்துக்கொள்ளும் அபாக்கியசாலியே! எச்சரிக்கையாக இரு! இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினரை மார்க்கத்தோடு பிணைத்து வைத்துள்ள பிணைப்புகள் அறுந்து போகாதிருக்கட்டும். மடமையோடு கண்மூடித்தனமாகப் போய் இந்த வலைக்குள் வீழ்பவர்களின் மார்க்கத்தோடுள்ள தொடர்புகள் முற்று முழுதாகத் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டால் மார்க்கத்தைத் துறந்த அந்தக் கூட்டம் உயிர்கொல்லி நஞ்சைப் போன்று சமூக வாழ்வுக்குத் தீங்காக அமைந்துவிடுவார்கள். ஏனெனில் முர்தத்துடைய மனசாட்சி முற்று முழுதாக மரணித்துவிடுவதால் அவர்கள் சமூக வாழ்வுக்கு நஞ்சாக மாறிவிடுகின்றனர். இதன் காரணமாகத் தான் இல்முல் உஸூலிலும் ஷரீஅத்துடைய உஸூலிலும் முர்ததுக்கான வாழ்வுரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் காபிர்கள் திம்மிகளாக அல்லது பரஸ்பரம் உடன்படிக்கை செய்தவர்களாக தமது இருப்புரிமையைப் பெற்றுக்கொள்கின்றனர். மேலும் ஹனஃபி மத்ஹபின் அடிப்படையில் திம்மிகளான காபிர்களின் சாட்சியை ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஃபாஸிக், அதாவது பாவியுடைய சாட்சி நிராகரிப்புக்குரியதாகும். ஏனெனில் அவன் ஒரு துரோகியாவான். பாவியாக இருக்கும் அபாக்கியசாலியான மனிதனே! பாவிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருப்பதைக் கண்டு ஏமாந்துவிடாதே! “அதிகமானவர்கள் என்னைப் போன்றே சிந்திக்கிறார்கள்; என்னைப் போன்றே வாழ்கிறார்கள்” என்று திருப்திப்பட்டுக்கொள்ளாதே! ஏனெனில் பாவியான மனிதன் தானாக விரும்பிப் போய் பாவக் கிடங்குக்குள் வீழ்வதில்லை. மாறாக உள்ளே வீழ்ந்து வெளியேறிக்கொள்ள முடியாதவனாகத் தவிக்கிறான். தான் ஸாலிஹானவனாக மாற வேண்டும் என்று ஆசை வைக்காமலும் தம்மை நிர்வகிப்பவர்கள் தீன்தாரிகளாக இருக்க வேண்டும் என்பதை விரும்பாமலும் இருக்கின்ற எந்த ஒரு பாவியையும் காண முடியாது. அல்லாஹ் பாதுகாப்பானாக! மார்க்கத்தைத் தூக்கி எறிந்து, மனச்சாட்சியை காலுக்குக் கீழால் போட்டு மிதித்து, பாம்புகளைப் போல் விஷம் உறிஞ்சுவதன் மூலம் இன்பம் அனுபவிக்கின்ற மனிதர்கள் வேண்டுமானால் இதற்கு விதிவிலக்காக இருக்கலாம். மண்டையில் பித்துப் பிடித்தவனாகவும் உள்ளத்தில் அழுக்குகளைச் சுமந்தவனாகவும் நடமாடும் மனிதனே! “முஸ்லிம்கள் உலகத்தை வெறுக்கிறார்கள். அல்லது அதைப் பற்றி அவர்கள் சிந்திப்பதே இல்லை. எனவேதான் வறுமையில் வாடுகிறார்கள். எனவே விளிப்புணர்வூட்டப்பட வேண்டிய நிலையில் உள்ளார்கள். உலகத்திலும் ஒரு பங்கு உள்ளது என்பதை அப்போதுதான் மறந்து போகாதிருப்பார்கள்” என்ற எண்ணத்தில்தான் இவ்வாறெல்லாம் சிந்திக்கிறாயா? உனது நினைப்புப் பிழையானதாகும். உனது கணிப்பில் தவறு இருக்கின்றது. நீ நினைப்பதற்கு மாறாக முஸ்லிம்களின் வறுமைக்கான காரணம் அவர்களிடம் மேலோங்கியுள்ள பேராசையாகும். ஆம் முஃமின்களைப் பொருத்தவரை பேராசையானது நஷ்டத்துக்கும் வறுமைக்குமான காரணியாகும். اَلْحَرِيصُ خَائِبٌ خَاسِرٌ என்பது பிரபலமான ஒரு முதுமொழியாகும். ஆம் மனிதனை உலகின்பால் அழைக்கின்ற, கவர்கின்ற, உந்தித் தள்ளுகின்ற காரணிகள் ஏராளமானவையாகும். நஃப்ஸ், இச்சைகள், மோகங்கள், தேவைகள், உணர்ச்சிகள், ஆசைகள், ஷைத்தான், உலகின் மாயையான இன்பங்கள், உன்னைப் போன்ற கெட்ட நண்பர்கள் என்று ஏராளமான அழைப்பாளர்கள் மனிதனை உலகத்தின்பால் அழைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் நித்திய மறுமையை நோக்கியும் நீண்ட நித்திய மறுமை வாழ்வை நோக்கியும் அழைப்பவர்கள் மிகக் குறைவாகும். உன்னிடம் திக்குத் தெரியாமல் தவிக்கும் சமூகத்தைப் பற்றி அணுவளவேனும் சிரத்தை இருக்குமெனில், உனது மிகையான பிரயத்தனங்களில் பொய் கலப்படமாகாதிருப்பின் மனிதர்களின் நித்திய வாழ்வைப் பாதுகாப்பதற்காக உழைத்துக்கொண்டிருக்கும் சிறு தொகையினருக்கு உதவி செய்வது கட்டாயமானதாகும். மாறாக அந்தச் சொற்ப அழைப்பாளர்களையும் வாயடைக்கச் செய்துவிட்டு பெரும்பான்மையாக இருப்பவர்களுக்கு உதவி செய்வாயெனில் ஷைத்தானுக்கு நண்பனாக ஆகிவிடுவாய். ஆச்சரியமாகத்தான் கேட்கிறேன்: இந்த சமூகத்தில் உள்ள வறுமை நிலைமை மார்க்கம் காரணமாக ஏற்படும் பற்றற்ற நிலை காரணமாகவும் உலகத்தைத் துறப்பதால் ஏற்படுகின்ற ஒரு வகை சோம்பேறித்தனம் காரணமாகவும் தோற்றம் பெற்றதாகவா நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். சீனாவிலும் இந்தியாவிலும் இருக்கின்ற மஜூசீகள், பிராமணர்களையும் இந்தப் பக்கமாக ஆபிரிக்கர்களையும் ஏரெடுத்துப் பார்! அவர்களும் அவர்களைப் போன்று ஐரோப்பிய அக்கிரமக்காரர்களின் காலணித்துவத்துக்கு ஆற்பட்ட சமூகங்களும் எம்மைவிட அதிகம் வறுமை நிலையிலேயே காணப்படுகின்றனர். மேலும் ஏராளமான அடிப்படை வாழ்வாதாரங்களும் கனிய வளங்களும் முஸிம்களிடமிருந்து நீங்கள் நேசிக்கின்ற ஐரோப்பிய அக்கிரமக்காரர்களால் பறித்தெடுக்கப்படுவதை ஏன் காண முடியாதவர்களாக உள்ளீர்கள்? அந்த வளங்களை ஒன்றோ ஐரோப்பாவின் அநியாயக்காரக் காபிர்கள் அல்லது ஆசியாவின் முனாபிக்கள் சூழ்ச்சி செய்து சூரையாடிக்கொள்கின்றனர் அல்லது கொள்ளையடித்துக்கொள்கின்றனர். நீங்கள் இந்த அளவு வலுக்கட்டாயமாக ஈமான் கொண்டவர்களை நாகரிகம் என்று காட்டப்படும் அநாகரிகத்தை நோக்கி அழைத்துச் செல்வதற்கான நோக்கம் இந்த நாட்டில் சுமுக நிலையையும் இஸ்திரப்பாட்டையும் பாதுகாப்பையும் நிலைநாட்டி இலகுவாக ஆட்சி செய்வதற்கான சூழலை ஏற்படுத்துவதாக இருந்தால் நீங்கள் செய்துகொண்டிருப்பது மிகப்பெரியதொரு தவறு என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். மக்களையும் தவறான பாதையிலேயே அழைத்துச் செல்கிறீர்கள். ஏனெனில் ஈமானைப் பறிகொடுத்து, பண்பாடு கெட்டுப்போன நூறு பாவிகளை நிர்வகிப்பதும் அவர்களுக்கு மத்தியில் சுமுக நிலையை ஏற்படுத்துவதும் ஆயிரக்கணக்கான ஸாலிஹானவர்களை நிர்வகிப்பதைவிட மிகச் சிக்கலானதாகும். எனவே இந்த அடிப்படைகளை வைத்துப் பார்க்கும் போது முஸ்லிம்களை, உலகத்தின்பாலும் பேராசையின்பாலும் ஆர்வமூட்ட எத்தகைய அவசியங்களும் கிடையாது. முன்னேற்றமும் இஸ்திரப்பாடும் இவற்றைக் கொண்டு நிலைநாட்டப்பட முடியாது. மாறாக முஸ்லிம்களுக்கு மத்தியில் சீரான வேலைப் பகுப்பு, வேலைப் பகிர்வு போன்ற பெறுமானங்களையும் பரஸ்பர நம்பிக்கை, பாதுகாப்பு, ஒத்துழைப்பு போன்ற விழுமியங்களையும் மீளக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. மார்க்கத்தின் புனித கட்டளைகள் மூலமும் தக்வா, மார்க்கப்பற்று போன்ற அடிப்படைகள் மூலமும் மாத்திரமே முஸ்லிம்களுக்கு மத்தியில் மேற்படி விழுமியங்களை மிகச் சிறந்த முறையில் கட்டியெழுப்ப முடியும்.

§10

உழைப்பில் இருக்கும் சுவையையும் நிம்மதியையும் அறியாத சோம்பேறி மனிதனே அறிந்துகொள்! வல்லோன் அல்லாஹ் தனது ஈகையின் பூரணத்துவத்தைக் காட்டுவதற்காக, உழைப்புக்கான கூலியை உழைப்போடு இரண்டரக் கலந்து வைத்துள்ளான். பணிக்கான வெகுமதியை பணிக்குள்ளேயே பொதித்து வைத்துள்ளான். ஆம் இந்த உண்மையின் காரணமாகத்தான் -ஒரு வகையில் பார்த்தால் உயிரற்றவைகளும் உள்ளடங்கலாக- அனைத்து சிருஷ்டிகளும் தாம் படைக்கப்பட்ட நோக்கத்துக்காகத் தம் மீது சுமத்தப்பட்ட பொறுப்புகளை பூரண ஊக்கத்தோடும் திருப்தியோடும் ஒரு வகை இன்பத்தோடும் நிறைவேற்றி, தம் மீது விதிக்கப்பட்ட ரப்பானிய கட்டளைகளுக்கு வழிப்படுகின்றன. தேனீ, கொசு, கோழி போன்ற சிறிய படைப்புகள் முதல் வானவெளியில் உலாவருகின்ற சூரியன், சந்திரன் வரை அனைத்து சிருஷ்டிகளும் பூரண திருப்தியோடும் ஊக்கத்தோடும் தத்தமது பணிகளில் முனைப்போடு ஈடுபடுகின்றன. அதாவது தத்தமது பணிகளில் ஓர் இன்பம் இருப்பதால்தான் புத்தியற்றவைகளாகவும் இறுதி விளைவுகளைப் பற்றிச் சிந்திக்க முடியாதவைகளாகவும் இருந்தாலும் தமது பணிகளைச் சீரும் சிறப்பாக நிறைவேற்றுகின்றன. ஒருவேலை கேட்கப்பட்டால்: ஜீவராசிகளுக்கு மத்தியில் மேற்கூறப்பட்ட இன்பமும் திருப்தியும் ஏற்றுக்கொள்ளப்பட முடியுமானதாகும். ஆனால் உயிரற்ற சடப் பொருட்களில் எவ்வாறு இன்பமும் திருப்தியும் ஊக்கமும் இருக்க முடியும்? பதில்: சடப்பொருட்கள் தது நஃப்ஸுக்காக அன்றி தம்மில் பிரதிபலிக்கும் அல்லாஹ்வின் திருநாமங்களின் பொருட்டால் ஒரு கண்ணியத்தையும் ஒரு பதவியையும் அழகு, பூரணத்துவம், நேர்த்தி என்பவற்றையும் வேண்டி நிற்கின்றன; தமது மெய்ம் மொழிகளால் அவற்றை ஆசிக்கின்றன. அவை தமது இயல்பான பணிகளைச் செய்யும் போது நூருல் அன்வார் ஆகிய ஏக இறைவனின் நாமங்களுக்கான ஒவ்வொரு பிரதிபலிப்பிடமாகவும் ஒவ்வொரு கண்ணாடியாகவும் மாறுவதால் அவையும் பிரகாசமிக்கவையாகவும் உயர் அந்தஸ்துகளை உடையவையாகவும் மாறுகின்றன. உதாரணமாக, ஒரு நீர்ச்சொட்டு அல்லது ஒரு சிறிய கண்ணாடித்துண்டு தம்மளவில் எத்தகைய பெறுமதியுமற்றவையாக இருந்தாலும் தமது அகம் தூய்மையான நிலையில் சூரியனை நோக்கி முகத்தைத் திருப்பும் போது தம்மளவில் ஒளியைக் கொண்டிராத அந்தப் பெறுமதியற்ற நீர்ச்சொட்டும் கண்ணாடித் துண்டும் ஒரு வகையில் சூரியனின் அர்ஷாக அதாவது சிம்மாசனமாக மாறிவிடுகின்றன. தம்மைப் பார்ப்பவர்களின் முகத்தைப் பார்த்துப் புன்னகைக்கின்றன. ஆம் இந்த உதாரணத்தைப் போன்றுதான் அணுக்கள் முதல் அண்டசராசரங்கள் வரை அனைத்து சிருஷ்டிகளும் முத்லக்கான அழகும் பரிபூரணத்துவமும் மிக்க அல்லாஹ்வின் திருநாமங்களுக்குத் -தமது பணி நிமித்தம்- கண்ணாடிகளாக இருப்பதன் காரணமாக அந்த நீர்ச் சொட்டை அல்லது கண்ணாடித் துண்டைப் போன்று ஒளியையும் பிரகாசத்தையும் பெற்று மிகவும் தாழ்ந்த ஒரு நிலையிலிருந்து மிகச் சங்கையான ஒரு நிலையாகிய புலனாகின்ற அந்தஸ்துக்கு உயர்கின்றன. உண்மையில் தமது பணிகள் காரணமாக அவை இவ்வாறு மிகவும் பிரகாசமான, உயர்ந்த பதவிகளை அடைந்து கொள்ளும் போது இன்பத்தை அனுபவிப்பதற்கான சாதானமாகத் திகழும் முழுப் பிரபஞ்சத்தையும் வியாபித்த ஹயாத் என்ற சத்தியத்திலிருந்து தமக்குரிய பங்குகளைப் பெற்றுக் கொள்வதால் அவையும் தமது பணிகளை நிறைவேற்றும் போது பேரின்பத்தை அனுபவிக்கின்றன என்று கூற முடியும். எல்லா வஸ்துகளும் தத்தமது பணிகளைச் செய்யும் போது இன்பமும் திருப்தியும் அடைகின்றன என்பதற்கான தெளிவான ஓர் அத்தாட்சியை உங்கள் உடலிலுள்ள ஒவ்வோர் உறுப்பும் உணர்வும் தத்தமது பணிகளை நிறைவேற்றும் போது பார்த்துக்கொள்ள முடியும். ஆம் ஒவ்வொரு உறுப்பும் தத்தமது தொடர்ச்சிக்காகவும் தான் சேவகம் செய்கின்ற இனத்தின் தொடர்ச்சிக்காகவும் செய்கின்ற பூர்வீக பணிகளின் போது தமக்கென்றே உள்ள வெவ்வேறு வகையான இன்பங்களையும் திருப்தியையும் கண்டுகொள்கின்றன. ஏன், அவை செய்கின்ற ஒவ்வொரு பணியும் தம்மளவிலேயே அவற்றுக்கான ஒவ்வொரு இன்பமாக அமைந்து விடுகின்றது. எந்த அளவுக்கெனில் அந்தப் பணியை செய்யாமல் புறக்கணிப்பது அல்லது செய்ய விடாமல் தடுக்கப்படுவது அந்த உறுப்புகளுக்கு ஒரு வகை வலியாக, வேதனையாக, அசௌகரியமாக மாறிவிடுகின்றது. நாளாந்தம் காண முடியுமாக உள்ள இன்னுமொரு தெளிவான அத்தாட்சி சேவலும் குஞ்சி பொறித்த கோழிகளும் தமது பணிகளில் காட்டுகின்ற தியாகமும் திட உறுதியும் மிக்க செயற்பாடுகளாகும். சேவல் தான் பசியோடிருந்தாலும் தான் கண்டுபிடித்த உணவை நோக்கிக் கோழிகளை அழைத்துத் தான் உண்ணாமல் கோழிகளுக்கு உணவு புகட்டுகின்றது. தனது நஃப்ஸை விட அந்தக் கோழிகளை முன்னுரிமைப்படுத்தும். அந்தக் காட்சியை அவதானித்தால் அது அந்தப் பணியை ஊக்கத்தோடும் பெரு மனதோடும் பேரின்பத்தோடும் செய்வதைக் காணலாம். அதாவது அந்தப் பணியின் மூலமாக அந்த உணவை விட அதிகமான சுவையையும் மனத் திருப்தியையும் பெற்றுக்கொள்கின்றது. அவ்வாறே தனது சின்னஞ் சிறு குஞ்சுகளின் மேய்ப்பாளனாகப் பணி புரிகின்ற கோழியும் கூட தனது குஞ்சுகளுக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து ஒரு நாயின் மீது பாய்வதற்கும் பின் நிற்பதில்லை. தான் பசியிலிருந்தாலும் அவற்றுக்காக வயிறார உணவு புகட்டும். அந்தப் பணியில் அது அனுபவிக்கின்ற இன்பம் எத்தகையதென்றால் அந்த இன்பத்துக்கு முன்னால் தன்னுடைய பசியின் வலியும் மரணத்தின் வேதனையும் அதற்கு சுகமாக மாறிவிடுகின்றது. ஜீவராசிகளுக்கு மத்தியில் தாய்க் குலத்திடம் சேய்க் குலம் பொறுப்பாகக் கொடுக்கப்பட்டுள்ளதால் அவை அந்தப் பொறுப்பை பேரின்பத்தோடு நிறைவேற்றுகின்றன. தேவைப்பட்டால் சேய்க் குலத்தைப் பாதுகாப்பதற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்கின்ற அளவு மகத்தான அர்ப்பணங்களைச் செய்கின்றன. ஆனால் சேய்கள் வளர்ந்து பெரிதாகிய பின்னர் அந்தப் பொறுப்பு நீங்கி விடுவதால் பொறுப்பிலிருக்கின்ற இன்பமும் நீங்கிவிடுகின்றது. அதன் பின்னர் தனது குட்டியைத் தள்ளி அதன் வாயிலிருக்கின்ற உணவைப் பறித்தெடுத்துக்கொள்கின்றது. ஆனால், மனித குலத்தின் தாய்மார்களுக்கு அவர்களது பொறுப்பும் பணியும் ஓரளவு நீடிக்கும். ஏனெனில் மனிதர்களிடமிருக்கும் அதீத பலவீனம், இயலாமை என்பவற்றின் காரணமாக அவனிடம் சதாவும் ஒரு வகையான சிறுபிள்ளை சுபாவம் காணப்படுகின்றது. எப்போதும் உதவி ஒத்தாசைகளில் தேவையுடையவனாக இருக்கின்றான். ஆம், பூரா ஜீவ இனங்களிலும் மேய்ப்பர்களாகப் பணி புரியும் -சேவல் போன்ற- ஆணினத்தையும் -கோழி போன்ற- பெண்னினத்தையும் நோக்கிக் கவனத்தைச் செலுத்துங்கள்! அவை தமக்காகவோ தமது நலனுக்காகவோ அல்லது தமது முன்னேற்றத்துக்காகவோ அந்தப் பணிகளை செய்வதில்லை என்பதைக் கண்டுகொள்வீர்கள். ஏனெனில் அவை தமது பணிகளின் போது தேவைப்பட்டால் தமது உயிரையே தியாகம் செய்வதற்கு எந்தவிதமான தயக்கங்களும் காட்டுவதில்லை. மாறாக தம்மை அந்தப் பணியில் அமர்த்தி, அந்தப் பணியின் சுயத்திலேயே தனது ரஹ்மத்தைக் கொண்டு ஒரு சுவையையும் திருப்தியையும் ஏற்பாடு செய்து வைத்த பேரன்பும் அருளும் மிக்க படைப்பாளனின் பெயராலேயே அவை அந்தப் பணிகளை நிறைவேற்றுகின்றன. அவ்வாறே ஒவ்வொரு பணியின் சுயத்திலும் அதற்கான கூலியும் சேர்ந்தே இருக்கின்றது என்பதற்கான இன்னுமோர் அத்தாட்சி தாவரங்களும் புற் பூண்டுகளுமாகும். ஆம், அவை தம்மை படைத்துப் பரிபாலிக்கும் மாட்சிமை மிக்க படைப்பாளனின் கட்டளைகளை பேரார்வத்தோடும் உற்சாகத்தோடும் நிறைவேற்றுகின்றன. அவை தம்மைச் சூழப் பரப்புகின்ற நறுமனங்களும், தமது வாடிக்கையாளர்களின் பார்வையைக் கவரும் விதமாகத் தம்மை அலங்கரித்துக்கொள்வதும் சிலபோது கனிகளுக்காக அல்லது அறுவடைக்காகத் தமது உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவு அர்ப்பணங்கள் செய்வதும் அவை இறை கட்டளைகளுக்கு அடிபணிவதில் அளப்பரிய ஓர் இன்பத்தை அனுபவிக்கின்றன என்பதை நுணுக்கமாக அவதானிப்பவர்களுக்கு உணர்த்துகின்றன. அவ்வாறே தமது தலைகளில் தித்திக்கும் பானங்களைச் சுமக்கும் தென்னை, அத்தி போன்ற கனி மரங்களை அவதானமாகப் பாருங்கள். அவை தமது மெய்மொழிகளால் அல்லாஹ்வின் ரஹ்மத் கஜானாவிலிருந்து பால் போன்ற ஒரு பாணத்தை வேண்டிப் பெற்றுக்கொண்டு அதைத் தமது பராமரிப்பிலுள்ள கனிகளுக்கு ஊட்டுகின்றன. ஆனால் அந்த மரங்களோ சேற்றையே புசிக்கின்றன. அவ்வாறே மாதுளை மரம் தூய்மையான ஒரு மதுவை ரஹ்மத் கஜானாவிலிருந்து பெற்று அதைத் தனது கனிகளுக்கு ஊட்டி விட்டுத் தாமோ சேறும் சகதியுமாக உள்ள கழிவு நீரைக் கொண்டு திருப்தி அடைகின்றன. அவ்வாறே தளிர் விடும் போது தானியங்கள், விதைகளின் நடத்தைகளை அவதானியுங்கள். அவை அந்தப் பணிகளில் எந்த அளவு ஆர்வத்தோடும் வேட்கையோடும் ஈடுபடுகின்றன என்பதை கண்டுகொள்ளலாம். ஆம், ஒடுக்கமான ஓரிடத்தில் சிறைப்படுத்தப்பட்ட ஒரு மனிதன் பரந்து விரிந்த ஒரு நந்தவனத்துக்குச் செல்வதற்கு எந்த அளவு ஆவலும் வேட்கையும் கொள்வானோ அவ்வாறே விதைகள் தளிர்விட ஆரம்பிக்கின்ற போது அவற்றின் அந்தப் பணியிலும் அப்படிப்பட்டதோர் ஆவலும் வேட்கையும் இன்பமும் புலப்படுகின்றது. ஆம் “ஸுன்னதுல்லாஹ்” எனப்படும் பிரபஞ்ச விதிகளுள் ஒன்றாகப் பிரபஞ்சமெங்கும் கோலோச்சுகின்ற இந்த மறைவான, அகிலார்ந்த நியதியின் காரணமாகத்தான் சோழிகள் ஏதுமின்றி சோம்பேறிகளாக சுகபோக வாழ்க்கை வாழ்பவர்களுல் அதிகமானவர்கள், அன்றாடம் உழைத்து வேலை செய்கின்ற சாதாரண மனிதர்களை விட அதிகம் கஷ்டத்துக்கும் விரக்திக்கும் ஆளாகின்றார்கள். ஆம், சோழிகள் ஏதுமின்றி வாழ்க்கையைக் கடத்துபவர்கள் எப்போதும் வாழ்வைப் பற்றி முறைப்பட்டுக்கொள்பவர்களாகவே இருப்பார்கள். ஏதாவது கேளிக்கை, களியாட்டங்களில் ஈடுபட்டு காலத்தை வேகமாகக் கடத்திவிடும் முனைப்பு அவர்களிடம் காணப்படும். ஆனால் உழைத்து வேலை செய்பவர்களைப் பொருத்தவரை அவர்கள் நன்றி உடையவர்களாக இருப்பார்கள். எப்போதும் படைத்தவனுக்கு நன்றி செலுத்துகின்ற முனைப்பு அவர்களிடம் காணப்படும். காலம் வேகமாகக் கடந்து செல்ல வேண்டும் என்று ஆசிக்கமாட்டார்கள். ஆம் اَلْمُسْتَرِيحُ الْعَاطِلُ شَاكٍ مِنْ عُمْرِهِ وَ السَّاعِىُ الْعَامِلُ شَاكِرٌ என்பது ஓர் அகிலார்ந்த விதியாகும். மேலும் காலாகாலமாகப் புழக்கத்திலிருந்து வருகின்ற “சுகம் கஷ்டத்தில் உள்ளது, கஷ்டம் சுகத்தில் உள்ளது” என்ற முதுமொழியும் கூட மேற்கூறப்பட்ட தாத்பரியத்தின் நிதர்சனமான சான்றாகும். ஆம், சடப்பொருட்களை அவதானமாக நோக்கினால், அவை தமது இயல்பான தன்மைக்கமைய செயலற்றவைகளாகவும் குறைபாடுடையவையாகவும் இருந்தாலும் கூட அவற்றுள் சக்தி வடிவில் உள்ள விசையானது பொருத்தமான ஒரு தாக்கம் அல்லது தூண்டலுக்கு உற்படும் போது முழுப் பலத்தோடும் வேகத்தோடும் உற்சாகத்தோடும் சக்தியிலிருந்து இயக்கமாக மாறுவதையும் விரிவடைவதையும் காணலாம். சடப் பொருட்களில் புலனாகும் இந்த நடத்தைகளும் கூட மேற்கூறப்பட்ட ஸுன்னதுல்லாஹ் விதிக்கமைவான நிகழ்வுகளாகும். மேலும் அந்த நடத்தையானது, அவை அந்த இயல்பான பணிகளில் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் செயற்படுகின்றன என்பதையும், இன்பத்தை அனுபவிக்கின்றன என்பதையும் உணர்த்துகின்றது. ஆம் சடப்பொருட்கள் பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கும் ஹயாத் (வாழ்வு) என்ற சத்தியத்திலிருந்து தமக்குரிய பங்கைப் பெற்றுக்கொண்டிருப்பின் அதில் புலப்படுகின்ற ஊக்கமும் உற்சாகமும் அதநதன் நஃப்ஸுக்குரியதாகும். இல்லாவிட்டால் அந்த சடப்பொருள் தான் சார்ந்துள்ள, தன்னைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற, தன்னைக் கண்காணிக்கின்ற நஃப்ஸுக்குரியதாகும். இந்தத் தாத்பரியத்தின் அடிப்படையில் மிருதுவான நீர் திண்ம நிலையை அடைவதற்கான கட்டளையைப் பெற்றுக்கொண்ட பின்னர் அந்தக் கட்டளையை எத்தகைய ஓர் ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் அமுலுக்குக் கொண்டு வருகின்றதெனில் அந்த சமயம் அதற்கு முன்னால் இரும்புதான் தடையாக வந்தாலும் அதைச் சிதைத்துத் துண்டாக்கிப் போடுகின்றது. அதாவது மூடப்பட்ட இரும்புப் பாத்திரத்துக்குள் இருக்கும் நீர் மறை வெப்ப நிலையில் குளிர் மொழியைக் கொண்டு வல்லோன் அல்லாஹ்வால் பிறப்பிக்கப்படும் “விரிவடைவாயாக!” என்ற கட்டளைக்கு எந்த அளவு ஊக்கத்தோடும் உற்சாகத்தோடும் பதிலளிக்கின்றதெனில் நீர் தன்னை அடைத்துள்ள அந்தப் பாத்திரத்தைப் பிளந்து இரும்பை சிதைத்துவிடுகின்றது. அந்த இரும்பாலும் கூட நீர் பணிக்கட்டியாக மாறுவதையோ விரிவடைவதையோ தடுக்க முடிவதில்லை. இன்னும் இது போன்ற உதாரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். அனைத்து வஸ்துகளையும் இவ்வாறு ஒப்பிட்டால் சூரியன்களின் இயக்கத்திலிருந்து அணுக்களின் அசைவுகள், சுழற்சிகள், அதிர்வுகள் வரை பிரபஞ்சத்திலிருக்கும் அனைத்து இயக்கங்களும் அசைவுகளும் இறை சட்டதிட்டங்களுக்கு அமையவே உருண்டோடிக்கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டுகொள்வீர்கள். அதாவது அல்லாஹ்வுடைய குத்ரத்திலிருந்து அவனது நாட்டத்தையும் ஞானத்தையும் கட்டளைகளையும் பொதியப்பெற்ற பிரபஞ்ச நியதிகளாக வெளிப்படுகின்றன. மேலும், ஓர் அணுவை அல்லது ஒரு மூலக்கூறை அல்லது ஏதேனும் ஒரு வஸ்தை அல்லது ஒரு ஜீவராசியையும் எடுத்துக்கொண்டால் அவை ஒவ்வொன்றின் நடத்தைக் கோலமும் ஓர் இராணுவச் சிப்பாயுடைய நடத்தைக் கோலத்தை ஒத்திருப்பதைக் காணலாம். ஓர் இராணுவ சிப்பாய்க்கு இராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு தொடர்புகளும் வெவ்வேறு பணிகளும் காணப்படுகின்றன. ஒவ்வோர் அணுவினதும் ஒவ்வொரு ஜீவராசியினதும் நிலையும் இவ்வாறுதான். உதாரணமாக உனது கண்ணில் இருக்கும் ஓர் அணுவை எடுத்துக் கொண்டால் அது கண் மணியில், கண் இழையங்களில், முகத் தசைகளில், நரம்பு நாளங்களில் என்று வெவ்வேறான இடங்களில் இருக்கும் போது வெவ்வேறு தொடர்புகளும் வெவ்வேறு பணிகளும் அந்தப் பணிகளுக்கேற்ப வெவ்வேறு பயண்களும் காணப்படுகின்றன. இவ்வாறு எல்லா வஸ்துகளையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். அப்போது அனைத்து வஸ்துகளும் நித்திய வல்லமை மிக்க இரட்சகனின் வாஜிபான இருப்புக்கு இரண்டு கோணங்களில் சான்றுபகர்வதைக் காண்பீர்கள். ஒன்று: தம்மிடமிருக்கும் ஆற்றலை, திறனைவிட பல்லாயிரம் மடங்கு அதிகமான ஆச்சரியப்படத்தக்க பணிகளை நிறைவேற்றும் வேளை அத்தகைய மகத்தான பணிகளோடு ஒப்பிடும் போது முத்லக்கான பலவீனம் என்ற தம்முடைய மெய்ம் மொழிகளால் அந்த சர்வ வல்லமை மிக்க இரட்சகனின் இருப்புக்குச் சான்று பகர்கின்றன. இரண்டாவது: ஒவ்வொரு வஸ்தும், பிரபஞ்ச ஒழுங்கை நிலைநாட்டும் சட்ட திட்டங்களுக்கும் சிருஷ்டிகளுக்கு மத்தியிலுள்ள சமநிலையைப் பேணும் விதிகளுக்கும் பொருத்தமாக செயற்படுவதன் மூலம் சர்வ ஞானமிக்க வல்லோனின் இருப்புக்குச் சான்றுபகர்கின்றன. ஏனெனில் அணுவைப் போன்ற ஒரு சாமான்யமான சடம் அல்லது தேனீ போன்ற அற்பமான ஓர் உயிரால் கிதாபுல் முபீன் எனப்படும் படைப்போடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் உள்ளடக்கிய ஏட்டில் நிர்ணயிக்கப்பட்ட மகத்தான இரகசியங்களையோ நுணுக்கமான ஒழுங்கு நேர்த்திகளையோ அறிந்து கொள்ள முடியாது. சாமான்யமான ஓர் அணு அல்லது அற்பமான ஒரு தேனீ எங்கே? பிரபஞ்ச மண்டலங்களைப் புத்தகத்தின் பக்கங்களைத் திறந்து மூடுவதைப் போன்று பரிபாலித்துக்கொண்டிருக்கும் சர்வ வல்லோன் அல்லாஹ்வின்பாலுள்ள கிதாபுல் முபீனும் அதில் வரையறுக்கப்பட்டுள்ள மகத்தான நியதிகள், சட்ட திட்டங்களும் எங்கே? அந்த சாமான்ய வஸ்துகளால் இந்த மகத்தான சூட்சுமங்களை எவ்வாறு தான் கிரகித்துக்கொள்ள முடியும்? எனவே, சாமான்யமான ஓர் அணுவில் அந்த ஏட்டிலுள்ள மகத்தான விடயங்களை வாசித்து விளங்கிக்கொள்ளக் கூடிய அற்புதமான ஒரு கண்ணும் அறிவும் இருக்கின்றன என்பதை நிரூபிக்கும் வரை அந்த அணு சர்வ வல்லமை மிக்க இரட்சகனின் சேவகனாக அவனது இருப்புக்கு சான்றுபகன்று கொண்டிருக்கின்றது என்ற சத்தியத்தை உன்னால் நிராகரிக்க முடியாது. ஆம் சர்வஞானமிக்க படைப்பாளன் கிதாபுல் முபீனிலிருக்கும் சட்டதிட்டங்களை மிக அழகிய, மிகக் குறுகிய ஓர் அமைப்பில் தனித்துவமான ஒரு சுவையோடு பிண்ணிப் பிணைத்து, ஒவ்வொன்றாக, ஒவ்வொரு தனிப்பட்ட தேவை நிமித்தம் வெளிப்படுத்துகிறான். இவ்வாறு ஒவ்வொரு வஸ்தும் தனக்கென்றுள்ள ஒரு தனிப்பட்ட ஒவ்வொரு சுவைக்காகவும் தனிப்பட்ட ஒவ்வொரு தேவைக்காகவும் செயற்படுவதால் கிதாபுல் முபீனிலிருக்கும் சட்டதிட்டங்களைத் தாம் அறியாமலேயே நிறைவேற்றுகின்றன. உதாரணமாக, ஒரு நுளம்பு உலகுக்கு வந்த அடுத்த நிமிடமே பறந்து சென்று மனிதனைத் தாக்குகின்றது. தனது ஊசிக் கொம்பால் தோலைத் துளைத்து தனக்குத் தேவையான ஜீவ பாணத்தைப் பெற்றுக்கொள்கின்றது. அச்சமயம் மனிதனின் பதில் தாக்குதலிலிருந்து தப்புவதற்கு மிகவும் தேர்ச்சி பெற்ற் வால் வீரர்களைப் போன்று தனது வித்தகங்களைக் காண்பிக்கிறது. அன்று பிறந்த, அற்பமான, எத்தகைய அனுபவமோ பயிற்சியோ பெற்றுக்கொள்ளாத அந்தப் படைப்புக்கு இந்த நுட்பத்தையும், தற்காப்புக் கலையையும், துளையிட்டு நீரெடுக்கும் உபாயத்தையும் யார் கற்றுக்கொடுத்தது? எங்கு போய் கற்றுக்கொண்டது? அந்த இடத்தில் என்னைப் போன்று வக்கற்ற ஒரு மனிதன் இருந்தால் மிக நீண்ட கற்கைகளுக்கும் அதைத் தொடர்ந்து ஏகப்பட்ட அனுபவங்களுக்கும் பின்னரே அந்த நுற்பங்களையும், கலைகளையும் கற்றுக்கொள்ள முடிந்திருக்கும். ஆம், இல்ஹாம் என்ற உதிப்பைக் கொண்டு கருமமாற்றும் தேனீ, சிலந்தி போன்றவற்றையும் தனது கூட்டை காலுறை போன்று நெய்யும் சிட்டுக்குறுவி போன்ற உயிரினங்களையும் அவதானியுங்கள். தாவர இனங்களையும் கூட இவ்வாறே ஒப்பிட்டுப் பார்க்க முடியும். ஆம், மகா தயாளனாகிய அல்லாஹ், ஒவ்வொரு ஜீவனிடத்திலும் சுவை என்ற காகிதத்தில் தேவை என்ற மையால் எழுதப்பட்ட ஒவ்வொரு பத்திரத்தைக் கையளித்துள்ளான். அந்த ஒப்பந்தம் மூலம் பிரபஞ்ச நியதிகளின் அடிப்படையில் வகுக்கப்பட்ட கட்டளைகளை அவற்றிடம் அமானிதமாகக் கையளித்துள்ளான். இதோ சர்வஞானமிக்க இரட்சகனின் இந்த மகத்தான திட்டத்தைப் பாருங்கள்! பின்னர் சர்வ வல்லோன் ஆகிய அந்த இரட்சகன் கிதாபுல் முபீனில் இருக்கும் சட்டதிட்டங்களில், தேனீக்கென்றே உள்ள பணிகளை அந்தப் பத்திரத்தில் எவ்வாறு எழுதியுள்ளான் என்பதைக் கவனியுங்கள்! பின்னர் அதை எவ்வாறு தேனீயின் தலையிலுள்ள ஒரு பெட்டகத்தினுள் மிகவும் நுட்பமாகப் பூட்டி வைத்துள்ளான் என்பதைப் பாருங்கள்! ஆம் அந்தப் பெட்டகத்தைத் தேனீயால் மாத்திரமே திறக்க முடியும். அந்தப் பெட்டகத்தின் திறவுகோல் தனது பணியை நேசிக்கின்ற தேனீயின் அதற்கு மாத்திரமுள்ள தனித்துவமானதோர் சுவையாகும். பின்னர் அந்தத் தேனீ, தன்னிடமுள்ள அந்தத் திறவுகோலின் மூலம் அந்தப் பெட்டகத்தைத் திறந்து, அதிலுள்ள திட்டத்தை வாசிக்கும்; தனக்கான கட்டளைகள் என்ன என்பதைப் புரிந்து தனது பணியில் இறங்கி وَ اَوْحَى رَبُّكَ اِلَى النَّحْلِ என்ற வசனத்தின் தாத்பரியத்தைப் பறைசாற்றும். இதோ இந்த எட்டாவது குறிப்பை முழுமையாக செவிமடுத்து முழுமையாகப் புரிந்துகொண்டவர்கள் ஈமானிலிருந்து தோன்றும் சடுதியான ஓர் உதிப்பின் மூலம் وَسِعَتْ رَحْمَتُهُ كُلَّ شَيْءٍ என்ற மறை வசனத்திலிருக்கும் ஒரு தாத்பரியத்தையும் وَ اِنْ مِنْ شَيْءٍ اِلاَّ يُسَبِّحُ بِحَمْدِهِ என்ற வசனத்தில் பொதிந்துள்ள ஓரு சத்தியத்தையும் اِنَّمَا اَمْرُهُ اِذَا اَرَادَ شَيْئًا اَنْ يَقُولَ لَهُ كُنْ فَيَكُونُ என்ற வசனத்தில் மறைந்துள்ள ஒரு சத்திய விதியையும் فَسُبْحَانَ الَّذِى بِيَدِهِ مَلَكُوتُ كُلِّ شَيْءٍ وَاِلَيْهِ تُرْجَعُونَ என்ற வசனத்திலிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு குறிப்பையும் விளங்கிக் கொள்வார்கள்.

§11

அறிந்துகொள்ளுங்கள்! நுபுவ்வத், மனித குலத்தின் ஒட்டுமொத்த நலவுகளுக்கும் ஈடேற்றத்துக்குமான அடிப்படையாகும். அவ்வாறே சத்திய மார்க்கமானது ஒட்டுமொத்த மகிழ்ச்சிகள், நிம்மதிகளின் உள்ளடக்கமாகும். ஈமானும்கூட அப்பழுக்கற்ற அழகிய தெளிந்த ஒரு கண்ணாடியாகும். உண்மையில் இந்தப் பிரபஞ்சத்தில் பிரகாசமான ஓர் அழகும் முழுப் பிரபஞ்சத்தையும் வியாபித்த உன்னதமானதுமோர் ஆகார விநியோகமும் தெளிவான ஒரு சத்தியமும் மகத்தான ஒரு பூரணத்துவமும் புலப்படுகின்றன. எனவே சந்தேகத்துக்கிடமின்றி உண்மையும் சத்தியமும் நுபுவ்வத்தில் அதாவது நபிமார்களுடைய கைகளிலேயே உள்ளன. வழிகேடும் தீங்கும் அழிவும் அவர்களுடைய எதிரிகளின் கரங்களிலாகும். உபூதிய்யத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான அழகுகளில் ஒன்றை மாத்திரம் இதோ அவதானியுங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் உபூதிய்யத் மூலம் தவ்ஹீத் மீதுள்ளவர்களின் உள்ளங்களை பெருநாள், ஜுமுஆ உற்பட அனைத்துத் தொழுகைகளின் போதும் ஒன்றிணைத்து விடுகின்றார்கள். அவர்களது நாவுகளை ஒரே வார்த்தைகளில் லயிக்கச் செய்கிறார்கள். ஆதி அந்தமில்லாத வணக்கத்துக்குரிய ஏகனின் அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாக எண்ணற்ற உள்ளங்கள், நாவுகளிலிருந்து துஆக்களும் திக்ருகளும் வெளிப்படுகின்றன. இவ்வாறு ஒன்றையொன்று உண்மைப்படுத்தி, ஒன்றுக்கொன்று பலம் சேர்க்கும் விதமாக வெளிப்படுகின்ற துஆக்களும் திக்ருகளும் வணக்கத்துக்குரிய ஏகனின் உலூஹிய்யத்துக்கு முன்னால் விசாலமான ஒரு அமைப்பில் உபூதிய்யத்தைப் பறைசாற்றுகின்றன. இந்தக் காட்சி ஏதோ பூமியே ஒரு திக்ராளியாகவும் வணக்கவாளியாக மாறி தனது எல்லா உறுப்புகளாலும் திக்ருகளிலும் துஆக்களிலும் தொழுகையிலும் ஈடுபடுவதைப் போன்றுள்ளது. அர்ஷிலிருந்து இருந்து இறங்கிய மகத்துவமும் கீர்த்தியும் மிக்க கட்டளையாகிய اَقِيمُوا الصَّلَوةَ என்ற கட்டளையை பூமியும் சிரமேற்கொண்டு நிறைவேற்றுவதைப் போன்றுள்ளது. ஆம், இவ்வாறு ஒற்றுமையாக ஓரணியில் திரழ்வதிலுள்ள இந்தத் தாத்பரியத்தின் காரணமாகத் தான் பிரபஞ்ச வெளியில் ஓர் அணுவைப் போன்று அற்பமான, பலவீனமிக்க மனிதனால் தனது உபூதிய்யத்தின் மூலமும் அதன் விசாலத்தன்மை மூலமும் வானங்கள் பூமிகளின் படைப்பாளனுடைய நேசத்துக்குரிய ஓர் அடியானாகவும் பூமியின் கலீபாவாகவும் பூரா ஜீவராசிகளின் தலைவனாகவும் பிரபஞ்சத்தின் படைப்பின் நோக்கமாகவும் அதே நேரம் விளைவாகவும் இருக்க முடிகின்றது. ஆம், தொழுககளின் பின்னர், குறிப்பாகப் பெருநாள் தொழுகைகளின் பின்னர் கூட்டாக “அல்லாஹு அக்பர்” என்று கூறும் பல நூறு மில்லியன் மனிதர்களின் ஓசைகள் ஆலமுல் கைப் ஆகிய மறைவான உலகில் ஒன்று சேர்வதைப் போன்று ஆலமுஷ் ஷஹாதத் ஆகிய நிஜ உலகிலும் ஒன்று சேர்ந்தால் அது, இந்தப் பூமியே பெரியதொரு மனிதனாக மாறி, தனது மகிமைக்கேற்ற குரலில் “அல்லாஹு அக்பர்” என்று முழங்குவதற்கு ஒப்பானதாக இருந்திருக்கும். அதாவது தவ்ஹீத் மீதிருப்பவர்கள் ஓரணியில் நின்று கூட்டாக “அல்லாஹு அக்பர்” என்று கூறுவது இந்தப் பூமிப்பந்து கூறும் பிரமாண்டமான ஓர் “அல்லாஹு அக்பர்” முழக்கத்துக்கு ஈடாகின்றது. ஏதோ, எமது கிப்லாவாக இருக்கின்ற கஃபா முகர்ரமா அதன் உள்ளமாக இருக்க, அந்தத் தூய்மையான உள்ளத்தால் நிய்யத்து வைத்துக் கொள்கிவது போலும் மக்கமா நகரம் அதன் வாயாகவும் அரஃபா மழை அதன் நாவாகவும் இருக்க, அவற்றைக்கொண்டு பேரொலியோடு “அல்லாஹு அக்பர்” என்று முழங்குவது போன்றும் அந்த முழக்கம் உலகம் பூராகவுமுள்ள முஃமின்களுடைய வாய்க் குழிகளில் குகைகளுக்குள் போல் எதிரொலிப்பதைப் போன்றும் உள்ளது. இவ்வாறு “அல்லாஹு அக்பர்” என்ற ஒரு வார்த்தையின் எதிரொலி மூலமாக எண்ணற்ற “அல்லாஹு அக்பர்”கள் தோற்றம் பெறுவதைப் போன்றே அந்த ஏற்றுக்கொள்ளப்பட்ட திக்ரும் தக்பீரும் வானலோகங்களையும் கூட அதிரச் செய்கின்றன. அதன் அலைகளும் கூட ஆலமுல் பர்ஸஹ் வரை சென்றடைகின்றன. ஆம், இந்தப் பூமியை இவ்வாறு தனக்கு சுஜூத் செய்கின்ற ஓர் அடியானாகவும் தனது ஏனைய அடியார்களுக்கான ஒரு மஸ்ஜிதாகவும் தனது சிருஷ்டிகளுக்கான ஒரு தொட்டிலாகவும் தனக்குத் தஸ்பீஹும் தக்பீரும் செய்கின்ற ஓர் ஆபிதாகவும் ஆக்கிய சர்வ மாட்சிமைமிக்க ஏக நாயகன் அல்லாஹ்வுக்கு பூமியிலுள்ள அணுக்களின் எண்ணிக்கையளவு புகழ்களும் தஸ்பீஹ்களும் தக்பீர்களும் செய்கிறோம். இத்தகைய மகத்தான ஓர் உபூதியத்தை எமக்குக் கற்றுத்தந்த ரஸுலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய உம்மத்தாக எம்மை ஆக்கியமைக்காக அவனது ஒட்டுமொத்தப் படைப்புகளின் எண்ணிக்கையளவு புகழ்களும் நன்றிகளும் செலுத்துகிறோம்.

§12

குழப்பத்தில் தத்தளிக்கும் பொடுபோக்குக்கார ஸஈதே! அறிந்துகொள்! வல்லோன் அல்லாஹ்வின் மாரிஃபத்துடைய ஒளியை அடைந்துகொள்வதற்கும் அதைப் பார்ப்பதற்கும் ஆயத்துக்கள் அத்தாட்சிகள் என்ற கண்ணாடிகளூடாக பிரதிபலிப்புக்களைக் காண்பதற்கும் ஆதாராங்கள், நிறுவல்கள் என்ற கருவிகளினூடாகத் தொட்டுணர்வதற்கும் சில பண்புகள் அவசியமாகின்றன. உன்னைக் கடந்து செல்கின்ற, உனது உள்ளத்துக்கு வருகின்ற, உன் அறிவுக்குத் தென்படுகின்ற எல்லா ஒளிகளையும் விமர்சனப் பிடியால் பிடித்து ஆராயவோ சந்தேகக் கண்ணோடு விமர்சிக்கவோ முனையாதே! உனக்கு முன்னால் ஒளிர்கின்ற ஓர் ஒளியைப் பற்றிக்கொள்வதற்காக உனது கைகளை நீட்ட முனையாதே! மாறாக பொடுபோக்கான காரணகாரியங்களிலிருந்து நிர்த்தோஷமடைந்து அந்த ஒளிகளை நோக்கி முகத்தைத் திருப்பியவாறு அவ்வாறே அமைதியாக இருந்துகொள்! ஏனெனில் மாரிஃபதுல்லாஹ்விற்கு மூன்று வகையான அத்தாட்சிகளும் ஆதாரங்களும் இருப்பதைக் கண்டுகொண்டேன். முதலாவது வகை: நீரைப் போன்றதாகும். அதைப் பார்க்கவும் முடியும், உணரவும் முடியும் ஆனால் விரல்களால் பிடித்துக்கொள்ள முடியாது. இந்தப் பகுதியில் கற்பனைகள், பிரமைகளைவிட்டும் நிர்த்தோஷ நிலையை அடைந்து முழுவதுமாக அதற்குள் மூழ்கிக்கொள்வது அவசியமாகும். அவற்றை விமர்சனக் கரங்களால் பிடித்துப் பார்க்க முடியாது. அவ்வாறு முயன்றால் அது ஓடி ஒழிந்துவிடும். அந்த ஜீவ நீர் தனக்குரிய இடமாக உனது கை விரல்களை ஏற்றுக்கொள்ளாது. இரண்டாவது பகுதி: காற்றைப் போன்றதாகும். உணர்ந்துகொள்ள முடியும். ஆனால் பார்க்கவோ பிடிக்கவோ முடியாது. உனது முகத்தையும் வாயையும் ஆத்மாவையும் மொத்தமாக அந்தக் காருண்யத் தென்றலை நோக்கித் திரும்பி அதனெதிரில் ஆகாஷமாக நின்றுகொள்! அதுவும் உனது விமர்சனப் பிடிக்குள் அகப்படாது. வேண்டுமானால் உனது ஆத்மாவால் முடியுமானவரை அவற்றை சுவாசித்துக்கொள்! நீ அங்கு சந்தேகத்தோடு கையாட முனைந்தால் திரும்பியும் பார்க்காமல் உன்னைக் கடந்து சென்றுவிடும். அது உனது கைகளை தனக்குரிய தங்குமிடமாக ஏற்றுக்கொள்ளாது. மூன்றாவது பகுதி: ஒளியைப் போன்றதாகும். பார்க்க முடியும். ஆனால் உணரவோ, பிடிக்கவோ முடியாது. அவ்வாறெனில் உள்ளத்தையும் ஆத்மாவின் கண்களையும் அவற்றை நோக்கித் திருப்பு. வழிமேல் விளி வைத்து அதற்காகக் காத்திரு. ஒரு வேளை தானாக அது உன்னை வந்தடையும். ஏனெனில் ஒளியைக் கையால் பிடிக்கவோ அடைத்து வைக்கவோ முடியாது. ஆனால் அந்த ஒளியில் பஸீரத் என்ற ஞானதிருஷ்டியின் ஒளியைக்கொண்டு மேய முடியும். மாறாக பேராசையோடு அதைப் பெற்றுக்கொள்வதற்காக வெற்றுக் கையை நீட்டினால் அல்லது சட ரீதியான அளவைகளைக் கொண்டு அளக்க முயன்றால் அந்த ஒளி அணையாவிட்டாலும் மறைந்துகொள்ளும். ஏனெனில் அப்படிப்பட்ட ஒளி சடத்துக்குள் அடைபட்டுக் கிடப்பதை ஏற்றுக்கொள்ளாது; வரையறைகளுக்குள் அகப்பட்டுக்கொள்ளவும் விரும்பாது; சடத்தைத் தன் மீது அதிகாரியாகவோ எஜமானனாகவோ ஏற்றுக்கொள்ளவும் மாட்டாது.

§13

அறிந்துகொள்! அற்புத தெளிவுரையாகிய குர்ஆனுடைய அணுகுமுறையில் கருணையும் அன்பும் ஆதரவுமே மிகையாக உள்ளது. இதற்கான காரணம் அதைச் செவிமடுப்பவர்களுள் அதிகாமானவர்கள் சாதாரண மக்களாக இருப்பதாகும். அவர்களின் உளப்பாங்கு இலகுவானதும் மென்மையானதுமாகும். அவர்களது பார்வைகளும் கூட நுணுக்கமான விடயங்களைக் காண முடியதவையாகும். எனவே அவர்களுடைய இலகுவான சிந்தனைகளை அரவனைத்துச் செல்வதற்காக பிரபஞ்சத்தின் பக்கங்களில் எழுதப்பட்ட அத்தாட்சிகள் திரும்பத் திரும்ப மீட்டுகின்றது. இலகுவான முறையில் வாசிப்பதற்காகப் பெரிய எழுத்துகள் முன்வைக்கப்படுகின்றது. உதாரணமாக வானங்கள் பூமியின் படைப்பு, வானத்திலிருந்து மழை பொழிவிக்கப்படுவது, அதனைத் தொடர்ந்து பூமி செழிப்படைவது போன்ற தெட்டத்தெளிவாகப் பார்க்கவும் வாசிக்கவும் முடியுமான அத்தாட்சிகள் விவரிக்கப்படுகின்றது. அந்தப் பெரிய எழுத்துக்களுக்குள் சிறிய எழுத்துக்களால் எழுதப்பட்ட நுண்ணிய அத்தாட்சிகளை நோக்கி மிகவும் அரிதாகவே பார்வைகள் திருப்பப்படுகின்றன. இதன் மூலம் உண்மையில் மனிதர்கள் சிரமமின்றி சத்தியத்தைக் கண்டுகொள்ள் வேண்டும் என்பதே நாடப்படுகின்றது. அத்தோடு குர்ஆனிய நடையில் ஈடினையற்ற ஒரு சொல் நயமும் சொல்லாட்சிப் பிரயோகமும் இயல்பான ஓட்டமும் காணப்படுகின்றது. ஏதோ குர்ஆன் பிரபஞ்சத்தைப் பாதுகாத்துப் பரிபாலிக்கின்ற ஒரு சக்தியைப் போன்று பிரபஞ்சத்தின் பக்கங்களில் எழுதப்பட்ட அத்தாட்சிகளை வாசித்துக்கொண்டிருக்கின்றது. ஏதோ பிரபஞ்சப் புத்தகத்துடைய கிராஅத் போன்று பாரெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. அதாவது குர்ஆன், ஆதி அந்தமில்லாத அரசனாகிய அந்த அழகிய வடிவமைப்பாளனுடைய அற்புத வடிவமைப்புக்களை வாசித்துக்கொண்டிருக்கின்றது. இந்த சொல்லணிப் பிரயோகத்திலிருக்கும் அழகைப் பார்க்க விரும்பினால் உள்ளத்தில் தாகத்தோடும் விளிப்போடும் ‘ஸூரதுல் அம்ம’ என்ற அத்தியாயத்தையும் قُلِ اللّٰهُمَّ مَالِكَ الْمُلْكِ போன்ற வசனங்களின் கட்டளைகளையும் செவிமடுங்கள்.

§14

இந்தக் குறிப்புகளை செவிமடுத்திக் கொண்டிருக்கும் தோழர்களே! அறிந்துகொள்ளுங்கள்! அல்லாஹ்விடம் எனது உள்ளத்தின் மன்றாடல்கள், இறைஞ்சல்கள், முறைப்பாடுகளை -உண்மையில் மறைக்கப்பட வேண்டிய விடயங்களாக இருக்கும் போது- எனது வழக்கத்துக்கு மாற்றமாக சிலபோது எழுதிவிடுகிறேன். இதற்கான காரணம்; மரணம் எனது நாவை மௌனிக்கச் செய்த பின்னரும் நாவுக்குப் பதிலாக எனது புத்தகங்கள் பேசுவதாக இருக்க வேண்டும் என்பதும் அவற்றை ரப்புல் ஆலமீன் ஏற்றுப் பொருந்திக்கொள்ள வேண்டும் என்பதுமாகும். ஆம் குறுகிய ஓர் ஆயுளில் எண்ணிலடங்காத எனது பாவங்களுக்குப் பாவப்பரிகாரம் தேட இந்தத் தற்காலிகமான நாவின் தவ்பாக்களும் கைசேதங்களும் பற்றாக்குறை உடையவையாகும். ஆனால் நிலைத்திருக்கக்கூடிய, ஒரு வகையில் நிரந்தரமான புத்தகங்களால் அந்தத் தேவையை நிறைவேற்ற முடியும். ஆம் இங்குள்ள இந்த முனாஜாத், பதிமூன்று வருடங்களுக்கு முன்னர் (இது எழுதப்படுவதற்கு பதிமூன்று வருடங்களுக்கு முன்னர்), எனது உள்ளத்தில் ஏற்பட்ட ஓர் ஆத்மார்த்த கொந்தளிப்பின் விளைவாக, பழைய ஸஈதுடைய சிரிப்புக்கள் புதிய ஸஈதுடைய அழுகைகளாக மாறிய காலப்பகுதியில், இளமையின் போதையிலிருந்து தெளிந்து முதுமை என்ற அதிகாலைப் பொழுதில் கண்விழித்த அந்தக் கணங்களில் எழுதப்பட்டதாகும். அரபியில் எழுதப்பட்ட அந்த முனாஜாத்தின் ஒரு பகுதிக்கான மொழிபெயர்ப்பை இங்கு தருகின்றோம். யா ரப்புர் ரஹீம்! யா ஹாலிகுல் கரீம்! எனது துஷ்பிரயோகம் காரணமாக எனது வாழ்வும் இளமையும் கரைந்தோடி விட்டன. அந்த இளமை எனது கைகளில் விட்டுச் சென்ற கணிகளுள் கைசேதத்தைத் தரும் பாவங்களும் இழிவைத் தரும் துன்பங்களும் வழிகேட்டுக்குக் கொண்டுபோய் சேர்க்கும் சந்தேகங்களுமே இப்போது எஞ்சியுள்ளன. இந்தப் பாரமான சுமையோடும் நோய்வாய்ப்பட்ட உள்ளத்தோடும் அவமானப்பட்ட முகத்தோடும் மண்ணறையை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். திசை மாறிச் சென்று தப்பிக்க முடியாதவனாக, எனது நாட்டமின்றியே மரணித்த உற்றார் உறவுனர்களும் நண்பர்களும் சென்ற அதே பாதையில் அசுர வேகத்தில் மண்ணறையை நோக்கி நானும் பயணித்துக்கொண்டிருப்பதை எனது கண்களால் காண்கிறேன். அந்த மண்ணறை தற்காலிக இருப்பிடத்திலிருந்து நீண்ட நித்திய உலகுக்கான பாதையில் நிறுவப்பட்ட ஒரு தரிப்பிடமாகும். மரணம் என்ற பிரிவானது அந்த இருப்பிடத்துக்கான தலைவாசலாகும். நான் விரும்புகின்ற இந்த உலகமும் கூட அழிந்து போகக் கூடிய, தற்காலிகமான ஒரு தங்குமிடம் என்பதை எத்தகைய சந்தேகத்துக்குமிடமின்றி அறிந்துள்ளேன். மேலும் இங்குள்ள எல்லா சிருஷ்டிகளும் கண் முன்னால் கூட்டம் கூட்டமாக ஒன்றன் பின் ஒன்றாக வருகின்ற வேகத்தில் மறைந்து போய்விடுகின்றன. குறிப்பாக என்னைப் போன்று நஃப்ஸுல் அம்மாராவை உடையவர்களுக்கு இந்த உலகம் மிகக் கொடூரமானதாகவும் மிகுந்த ஏமாற்றமளிக்கக் கூடியதாகவும் உள்ளது. ஓர் இன்பத்தைத் தந்தால் அதனைத் தொடர்ந்து ஆயிரம் கைசேதங்களையும் சேர்த்தே தந்துவிடுகின்றது. ஒரு திராட்சையைத் தந்தால் நூறு திராட்சைகளின் வலியைத் தருன்றது. யா ரப்புர் ரஹீம்! யா ஹாலிகுல் கரீம்! كُلُّ آتٍ قَرِيبٌ என்ற வசனத்தின் தாத்பரியத்துக்கமைய “குறுகிய காலத்தின் பின்னர் கபன் துணி அணிந்து சந்தூக்கில் ஏறியவனாக உற்றார் உறவினர்களுக்குப் பிரியாவிடை அளித்துவிட்டு மண்ணறை நோக்கிப் போய்க்கொண்டிருப்பதை இப்போதே காண்கிறேன். மண்ணறையை நெருங்கும் போது மையித்தாக இருக்கும் எனது சடலத்தின் மெய்ம்மொழியும் எனது ஆத்மாவும் உனது ரஹ்மத் சந்நிதானத்தை நோக்கி “அல்அமான், அல்அமான்! யா ஹன்னான், யா மன்னான்! என்னை எனது பாவக்கறைகளால் ஏற்பட்ட அவமானங்களைவிட்டும் பாதுகாப்பாயாக!” என்று சத்தமிட்டு மன்றாடிக்கொண்டிருந்தன. இப்போது, எனது மையித்து கபுரடியை நெறுங்கி விட்டிருந்தது. அந்நேரம் கபுரடியில் சாய்க்கப்பட்டிருந்த எனது அந்த உடலுக்கு அருகில் கபனைப் போர்த்தி அமர்ந்து கொண்டு தலையை நிமிர்த்தி ரஹ்மத் சந்நிதானத்தை நோக்கிக் கையேந்தியவனாக எனது முழுப்பலத்தையும் பிரயோகித்து “அல்அமான் அல்அமான்! யா ஹான்னான்! யா மன்னான்! எனது பாவச் சுமைகளிலிருந்து எனக்கு விமோசனம் தருவாயாக!” என்று மன்றாடினேன். சற்று நேரத்தின் பின்னர் கபுறுக்குள் நுளைந்திருந்தேன். வழியனுப்ப வந்தவர்களும் என்னைத் தனிமையில் விட்டுச் சென்றிருந்தார்கள். அங்கு எனது ஜனாஸாவுடைய கபனைக் கட்டி அனைத்துக்கொண்டு “உனது கருணையையும், மண்ணிப்பையும் ஆசிக்கிறேன் ரஹ்மானே! உன்னைத் தவிற வேறு எந்தப் புகழிடமும் கிடையாது என்பதை எனது கண்களால் கண்டுவிட்டேன். பாவங்களின் அவலட்சனமான முகத்தோடும் அநியாயங்களின் அகோரமான தோற்றத்தோடும் அந்த இருப்பிடத்தின் நெறுக்கடியில் இருந்தவனாக உன்னிடம் கையேந்துகிறேன். அல் அமான் அல்அமான்! யா ரஹ்மான்! யா ஹன்னான்! யா மன்னான்! யா (d)தய்யான்! என்னை எனது அசிங்கமான பாவங்களின் தோழமையிலிருந்து பாதுகாத்துவிடுவாயாக! எனது இடத்தை விசாலப்படுத்தி வைப்பாயாக! எனது ரப்பே! உனது ரஹ்மத் ஒன்று மட்டுமே எனக்கான புகழிடமாகும். ரஹ்மதன் லில் ஆலமீன் ஆகிய உனது ஹபீப் உனது அந்த ரஹ்மத்தை அடைந்து கொள்வதற்கான எனது வஸீலாவாகும். நான் உன்னை முறைப்பட்டுக் கொள்ளவில்லை யா ரஹ்மானே! மாறாக எனது நஃப்ஸையும் எனது நிலைமையையும் உன்னிடம் முறையிடுகிறேன். யா ரப்புர் ரஹீம்! யா ஹாலிகுல் கரீம்! நொந்து நொடிந்து போன பலவீனனாகவும் பொடுபோக்குக் காரனாகவும் ஜாஹிலாகவும் நோய்வாய்ப்பட்டவனாகவும் தாழ்ந்தவனாகவும், தல்லாடுபவனாகவும் பாவியாகவும் அதே நேரம் எஜமானிடமிருந்து தப்பி ஓடிய ஓர் அடிமையாகவும் இருக்கும் ஸஈத் என்ற பெயரைக்கொண்ட உனது ஓர் அடிமை நாற்பது வருடங்களின் பின்னர் கூணிக் குறுகி மன்றாடியவனாக உன்னை நோக்கி மீள விறும்புகிறான். எண்ணற்ற பாவங்களையும் குற்றங்களையும் ஒப்புக்கொண்டவனாக உன்னிடம் கையந்துகிறான். மாயைகளிலும் ஏகப்பட்ட பராக்குகளிலும் மூழ்கி நிர்க்கதிக்குள்ளாகியவனாக உன்னிடம் இறைஞ்சுகிறான். நீ உனது குறைகளுக்கப்பாற்பட்ட ரஹ்மத்தைக் கொண்டு அவனை ஏற்று, மண்ணித்தருளினால் அது உனது பெருந்தன்மையினாலாகும். நீ அர்ஹமுர்ராஹிமீன் ஆக இருக்கின்றாய். நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால் உன்னைத் தவிற வேறு யாருடைய வாயிலுக்குத்தான் என்னால் செல்ல முடியும் ரஹ்மானே? தஞ்சமடைவதற்கோ புகழிடம் தேடுவதற்கோ எனது உளக்கிடக்கைகளையெல்லாம் மூறையிடுவதற்கோ உன்னைத் தவிர வேறு இரட்சகனோ உனது சந்நிதானத்தைத் தவிர வேறு சந்நிதானங்களோ நீயல்லாத வணக்கத்துக்குரியவைகளோ இல்லை யா ரஹ்மானே!…” لَٓا اِلٰهَ اِلَّا اَن۟تَ وَح۟دَكَ لَا شَرٖيكَ لَكَ اٰخِرُ ال۟كَلَامِ فِى الدُّن۟يَا وَ اَوَّلُ ال۟كَلَامِ فِى ال۟اٰخِرَةِ وَ فِى ال۟قَب۟رِ اَش۟هَدُ اَن۟ لَٓا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَ اَش۟هَدُ اَنَّ مُحَمَّدًا رَسُولُ اللّٰهِ صَلَّى اللّٰهُ تَعَالٰى عَلَي۟هِ وَ سَلَّمَ

§15

தவ்ஹீத் தொடர்பான நான்கு சிறிய அடையாளங்களாகும். முதலாவது அடையாளம் காரணகாரியப் பித்தனான மனிதனே! உலகிலுள்ள மிகப் பெறுமதிவாய்ந்த, மிகப் பிரமிப்பூட்டக்கூடிய ஐஸ்வர்யங்களாலும் கற்களாலும் கட்டப்படுகின்ற அற்புதமான ஒரு மாளிகையைக் காண்கிறாய். அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஐஸ்வர்யங்களுல் சிலதை சீனாவில் மாத்திரமே காண முடியும். இன்னும் சிலதை அந்தலூஸிலும் இன்னும் சிலதை யெமனிலும் இன்னும் சிலதை சைபீரியாவிலும் தவிர வேறு எங்குமே காணவோ பெற்றுக்கொள்ளவோ முடியாது. அந்தக் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளின் போது தேவையான அனைத்தும் தேவையான நேரத்தில் எத்தகைய தாமதங்களோ சிரமங்களோ இன்றி வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தெற்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் மிகச் சுலபமாக அவ்விடத்தை வந்தடைகின்றன. இதை நீ பார்த்த பின்னரும் இத்தகைய மகத்தான ஒரு மாளிகையை நிர்மானிப்பவர் முழு உலகிலும் ஆட்சியதிகாரம் செலுத்தும் மாட்சிமைமிக்க ஒரு மன்னாதி மன்னராகத்தான் இருப்பார் என்பதில் உனக்கு ஏதேனும் ஐயம் ஏற்படுமா? இதோ ஒவ்வொரு ஜீவராசியும் இப்படிப்பட்ட ஒவ்வொரு தெய்வீக மாளிகையாகும். குறிப்பாக மனிதன் அத்தகைய மாளிகைகள் மத்தியில் மிக அழகானதும் மிக ஆச்சரியத்துக்குரியதுமாகும். மனிதன் எனப்படும் இந்த மாளிகையில் வைக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யங்களுள் ஒரு சில ஆலமுல் அர்வாஹிலிருந்தும் இன்னும் சில ஆலமுல் மிஸாலிலிருந்தும் இன்னும் சில லவ்ஹுல் மஹ்ஃபூழ்லிருந்தும் இன்னும் சில வளிமண்டல உலகத்திலிருந்தும் இன்னும் சில ஒளி உலகத்திலிருந்தும் இன்னும் சில கனிய உலகிலிருந்தும் வரவழைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கிறோம். ஆம், தேவைகளோ நித்திய உலகம் வரை நீண்ட, ஆசைகளோ வானம் பூமி வரை விசாலமான, பிணைப்புக்களும் தொடர்புகளுமோ இந்த உலகத்திலிருந்து மறுமை உலகம் வரை வேர் விட்டுப் படர்ந்த ஒரு பிரமிக்கத்தக்க மாளிகையாக மனிதன் காணப்படுகிறான். தன்னை மனிதனாக எண்ணிக்கொள்ளும் மனிதனே! உண்மையில் இதுவே உன்னுடைய தன்மையாகும். எனவே உன்னைப் படைத்துப் பரிபாலிப்பவனின் ஆட்சியதிகாரமும் மாட்சிமையும் எத்தகையது என்பதை சிந்தித்துப் பார். ஆம், துன்யாவையும் ஆகிராவையும் தன்னுடைய இருவேறு மைதானங்களாகவும் வானமும் பூமியும் தனக்கு முன்னால் புத்தகத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றும் ஆதியும் அந்தமும் தனக்கு முன்னால் நேற்றும் இன்றும் போலும் உள்ள ஒருவனே உன்னைப் படைத்துப் பரிபாலிப்பவனாக இருக்க வேண்டும். பிரபஞ்சம் முழுவதையும் இவ்வாறு நிர்வகிக்கின்ற ஒருவனால் மட்டுமே மனிதன் என்ற இந்த அற்புதமான மாளிகையை நிர்மாணிக்க முடியும். அவ்வாறெனில் வானம் பூமியின் இரட்சகனாகவும் துன்யா ஆகிராவின் அதிபதியாகவும் திகழும் அந்த மன்னாதி மன்னனே மனிதனின் வணக்கத்துக்குரியவனாகவும் புகலிடமாகவும் விமோசனமாகவும் இருக்க முடியும். இரண்டாவது அடையாளம் சூரியனை அறியாதிருப்பதால், ஒரு கண்ணாடித் துண்டில் சூரியனைக் காணும் போது அந்தக் கண்ணாடியைக் காதல்கொள்ள ஆரம்பிக்கின்ற ஒரு கூட்டம் முட்டாள்கள் உள்ளனர். பின்னர், அவர்கள் அந்தக் கண்ணாடிக்குள் இருக்கும் சூரியன் அழிந்து போய்விடாதிருக்க வேண்டுமே என்று அந்தக் கண்ணாடியை உளப்பூர்வமான, கடுமையான ஒரு பிரயத்தனத்தோடு பாதுகாக்க முனைகிறார்கள். அந்த முட்டாள் கண்ணாடியின் அழிவோடு சூரியனும் அழிந்து போவதில்லை அல்லது கண்ணாடி உடைந்து நொறுங்குவதோடு சூரியனும் உடைந்து போவதில்லை என்ற உண்மையை எப்போது விளங்கிக் கொள்கின்றானோ அப்போது கண்ணாடியில் தென்படும் சூரியன் கண்ணாடியைச் சார்ந்திருப்பதில்லை, அதன் இருப்பு இதன் இருப்போடு பிணைந்ததல்ல என்ற சத்தியத்தையும் விளங்கிக்கொள்கிறான். அத்துடன் அந்தக் கண்ணாடியை அவ்வாறு பிராகாசிக்கச் செய்வதும் பளபளப்பாக வைத்திருப்பதும் சூரியனே, எனவே சூரியனுடைய வாழ்வின் தொடர்ச்சி கண்ணாடியிலன்றி கண்ணாடியின் பிரகாசமான வாழ்வின் தொடர்ச்சி சூரியனின் பிரதிபலிப்பிலேயே தங்கியுள்ளது என்ற பேருண்மையையும் புரிந்துகொள்வான். ஓ மனதா! உனது உள்ளமும் உனது சிறப்புகளும் உனது தன்மைகளும் ஒரு கண்ணாடியாகும். உனது இயல்பிலும் உனது ஆத்மாவிலும் காணப்படுகின்ற நித்தியத்தின் மீதான கடுமையான காதல், அந்த கண்ணாடிக்கானதோ அந்த உள்ளத்துக்கானதோ அல்லது தன்மைகளுக்கானதோ அல்ல. மாறாக அந்தக் கண்ணாடியின் திறனுக்கேற்ற பிரதிபலிப்பை வெளிக்காட்டுகின்ற நித்திய வல்லோனுடைய பிரதிபலிப்புகளின் மீதான உனது காதலாகும். ஆனால், உனது மடமை காரணமாக அந்தக் காதலின் திசையை வேறு இடத்தை நோக்கித் திருப்பி விட்டாய். உண்மை நிலை இதுவென்பதால், “யா (B)பாகீ, அன்தல் (B)பாகீ” என்று கூறு. அதாவது, “உனது இருப்பு சத்தியமானதாகும். உனது நித்தியமும் சத்தியமானதாகும். எனவே அழிவுகளும் இறப்புகளும் பிரிவுகளும் எமக்கு எதை வேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். அவற்றால் எம்மை எதுவும் செய்து விட முடியாது.” மூன்றாவது அடையாளம் மனிதனே! சர்வஞானமிக்க படைப்பாளன் உனது இயல்பில் பொதித்த மிகவும் விசித்திரமான நிலைமை என்னவெனில் சிலபோது உனக்கு ஒதுங்கிக்கொள்ள இந்த உலகமே போதாமல் போய்விடுகின்றது. ஆனால், இந்த உலகில் ஏதோ ஒடுக்கமான சிறைக்குள் மூச்சுத் திணறித் தத்தளிப்பவனைப் போன்று புலம்பியவனாக உலகத்தை விட விசாலமான ஓர் இடத்தை ஆசிக்கின்ற நீ மறு பக்கம் அணுவளவேயான ஒரு சமாச்சாரத்துக்குள் அல்லது அற்பமான ஒரு நிகழ்வுக்குள் அல்லது சொற்பமான ஒரு நிமிடங்களிற்குள் போய் ஹாஷ்யமாக ஒதுங்கிக்கொள்கிறாய். பிரமாண்டமான உலகத்தில் அமர்ந்துகொள்ள முடியாமல் போன உனது உள்ளமும் சிந்தனையும் அந்த அணுவுக்குள் போய் அமர்ந்துகொள்கிறது. அந்தப் பொழுதுகளுக்குள் அந்த நினைவுகளுக்குள் பொங்கியெழும் உணர்வுகளின் முழு வீச்சோடு சுற்றிச் சுழல்கிறாய். அவ்வாறே சர்வ ஞானமிக்க படைப்பாளன் உனக்களித்துள்ள சில ஆத்மீக சாதனங்கள் எத்தகையவையெனில் இந்த உலகத்தையே விழுங்கினாலும் அவை நிறைவடைவதில்லை. மேலும் சிலதைப் பொருத்தவரை அவற்றின் மீது ஓர் அணுவாலும் அமர்ந்துகொள்ள முடியாது. தலை ஒரு மூட்டை அளவு பாராங்கல்லைச் சுமக்கும் போது கண் முடியளவேயான ஒரு சுமையைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத நிலையில் இருப்பதைப் போல் அந்த ஆத்மீக சாதனங்களில் சிலதும் முடியளவு அற்பமான ஒரு சுமையை, அதாவது பொடுபோக்கு மற்றும் வழிகேட்டிலிருந்து பிறக்கும் ஒரு நிலைமையை தாங்கிக்கொள்வதில்லை. ஏன் சில போது முற்றாக அணைந்து மரணித்துவிடுகின்றது. இது யதார்த்தமான ஓர் உண்மை என்பதால், சுதாகரித்துக்கொள், உனது அடிகளை எச்சரிக்கையாக எடுத்துவை, மூழ்கும் ஆபத்தையிட்டு அஞ்சு, முயற்சிசெய்! ஒரு கவளத்தினுல், ஒரு வார்த்தைக்குள், ஒருசில பொருட்களுக்குள், பளபளக்கும் ஒன்றினுள். ஒரு சமிக்ஞைக்குள். ஒரு முத்தத்தினுள் மூழ்கிப்போய்விடாதே! உலகத்தையே விழுங்கக் கூடிய மகத்தான அந்த ஆத்மீக சாதனங்களை அத்தகைய அற்பமான விடயங்களில் மூழ்கடித்துவிடாதே! ஏனெனில் அவை மிகப் பிரமாண்டமான பொருட்களை ஒரு வகையில் விழுங்கிக்கொள்ள முடியுமான மிகவும் அற்பமான பொருட்கள் உள்ளன. சிறியதொரு கண்ணாடித்துண்டினுள், ஆகாயவெளியானது, பெரும் பெரும் நட்சத்திரங்களோடு போய் மூழ்கிவிடுகின்றது. உனது கடுகு போன்ற சிறிய மனனப் பெட்டகத்தில் உனது ஒட்டுமொத்த அமல்களும் உனது வாழ்க்கைப் பக்கங்களின் எல்லா நிகழ்வுகளும் போய் இலகுவாக இடம்பிடித்துக்கொள்கின்றன. இவ்வாறு, மிகப் பிரமாண்டமான வஸ்துகளை ஒரு வகையில் விழுங்கிக்கொள்கின்ற அல்லது சூழ்ந்துகொள்கின்ற மிகவும் அற்பமான விடயங்களும் பொருட்களும் இருக்கின்றன, நான்காவது அடையாளம் உலகப்பித்தனான மனிதனே! நீ மிகவும் விசாலமானதாக சித்திரித்துக்கொண்ட உனது உலகம் ஒடுக்கமான ஒரு மண்ணறையை ஒத்ததாகும். ஆனால் அந்த ஒடுக்கமான மண்ணறை போன்ற தங்குமிடத்தின் சுவர்கள் கண்ணாடிகளால் ஆக்கப்பட்டுள்ளதால் ஒன்றுக்குள் ஒன்றாகத் தெறிப்படைந்து கண்ணுக்கெட்டும் தூரம் வரை விசாலமடைகின்றது. யதார்த்தத்தில் மண்ணறை போன்று ஒடுக்கமானதாக இருக்கும் போது ஒரு நகரத்தைப் போன்று விசாலமாகத் தென்படுகின்றது. ஏனெனில், அந்த உலகத்தின் வலப் பக்க சுவரான கடந்த காலத்தையும் இடப் பக்க சுவரான எதிர்காலத்தையும் எடுத்துக்கொன்டால் இரண்டுமே மறைவானதாகவும் இல்லாததாகவும் இருந்தாலும் ஒன்றுக்குள் ஒன்றாகத் தெறிப்படைந்து மிகவும் குறுகிய, ஒடுக்கமான நிகழ்காலத்தின் இறக்கைகளை விரித்து விடுகின்றன. பின்னர் யதார்த்தமும் கற்பனையும் ஒன்றோடொன்று கலந்துவிடும் போது இல்லாத ஒரு உலகத்தை இருப்பதாகக் கற்பித்துக்கொள்வாய். மெல்லிய ஒரு கோடு மிக வேகமாக இயங்கும் போது ஒரு சதுரப்பரப்பாக தென்பாட்டாலும் அதன் உண்மையான நிலை ஒரு மெல்லிய கோடேயாகும். இது போன்றே உனது உலகமும் யதார்த்தத்தில் ஒடுக்கமானதாக இருந்தாலும் பொடுபோக்கு மற்றும் மாயையான கற்பனை என்பவற்றால் அதன் சுவர்கள் விசாலமானதாகத் தென்படுகின்றன. இவ்வாறு விசாலமானதாகக் கற்பித்துக்கொண்ட அந்த ஒடுக்கமான உலகத்திலிருக்கும் போது ஒரு முஸீபத் வந்து உன்னை உசுப்பி விட்டால், உனக்கு மிகவுமே நெருக்கமாக இருந்தாலும் மிகத்தொலைவில் இருப்பதாக நீ நினைத்துகொண்டிருக்கும் அந்த சுவரில் போய் உனது தலையை மோதுவாய். அது உனது தலையிலுள்ள கற்பனைகளைப் பறக்கடிக்கச் செய்து உனஹ்டு தூக்கத்தையும் களைத்துவிடும். அப்போதுதான் உனது அந்த விசலமான உலகம் மண்ணறையைவிட மிகவும் ஒடுக்கமானது என்பதையும் ஒற்றையடிப் பாலத்தைவிட மிகவும் வசதியற்றது என்பதையும் உணர்ந்துகொள்வாய். உனது காலமும் ஆயுளும் மின்னலை விட வேகமாகக் கடந்துவிடும்; உனது வாழ்வு கரைபுரண்டோடும் நதிகளை விட வேகமாகப் பாய்ந்தோடும். எத்தகைய சந்தேகமும் இன்றி உலகியல் வாழ்க்கையும் உடலியல் வாழ்வும் மிருகங்களை ஒத்த வாழ்க்கைப் போக்கும் இப்படிப்பட்டதாகும். எனவே மிருகத் தன்மையிலிருந்து வெளியேறிவிடு! உடலியல் மோகங்களைவிட்டும் ஒதுங்கிக்கொள்! வாழ்வின் உயர் அந்தஸ்துகளை உடைய உள்ளத்தினதும் ஆத்மாவினதும் வாழ்க்கை ஓட்டத்துடன் சங்கமித்துக்கொள்! அப்போது நீ மாயையாகக் கற்பனை செய்துகொண்ட விசாலமான உலகத்தை விட பல மடங்கு விசாலமான ஒரு வாழ்க்கை எல்லை இருப்பதைக் கண்டுகொள்வாய். இதோ, அந்த உலகத்துக்கான திறவுகோலானது மாரிஃபதுல்லாஹ்வினதும் வஹ்தானிய்யத்தினதும் இரகசிங்களைப் பிரஸ்தாபிக்கும் “லா இலாஹ இல்லல்லாஹ்” என்ற புனித கலிமாவை உள்ளத்தால் மொழிய வைப்பதும் ஆன்மாவை அதனைக்கொண்டு வழப்படுத்துவதுமாகும்.

§16

“மூன்று அம்சங்களாகும்” முதலாவது அம்சம் فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ என்ற வசனம் “ஹஃபீஸ்” என்ற திரு நாமத்தின் முழுமையான பிரதிபலிப்பைக் குறிப்பிடுகின்றது. குர்ஆன் பிரஸ்தாபிக்கும் இந்த சத்தியத்துக்கு அத்தாட்சிகள் தேவையெனில், கிதாபுல் முபீனில் நிர்ணயிக்கப்பட்ட அளவைகளின் பிரகாரம் எழுதபட்ட இந்தப் பிரபஞ்சப் புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்! அங்கு ஹஃபீஸ் நாமத்துடைய உச்சமட்டப் பிரதிபலிப்புகளையும் மேலுள்ள மறை வசனத்தில் பொதிந்துள்ள மிகப் பெரிய சத்தியத்துக்கான உதாரணங்களையும் பலவேறு கோணங்களில் கண்டுகொள்வாய். உதாரணமாக பல்வேறு வகையான மரம், செடி, கொடி, பூண்டுகளின் ஒரு பிடி விதைகளை எடுத்துக்கொள்! இயல்புகள், தன்மைகள், இனங்கள் என்று அனைத்தும் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட அந்த விதைகளின் ஒரு சிறு சந்தூக்காக இருக்கும் அந்த ஒரு பிடி விதைகளை இருள்சூழ்ந்த ஓர் இடத்தில், அதாவது பிரித்தறிந்துகொள்ள முடியாத, சாமான்யமான, இருள்மயமான மண்ணுக்கடியில் அடக்கம் செய்துவிட்டு அதன் மேல் கட்டுப்பாடற்ற, பிரித்தறியத் தெறியாத, திரும்பும் திசை நோக்கிப் பாய்ந்தோடுகின்ற சாமான்யமான நீரை ஊற்று. பின்னர் வருடாந்தம் திறக்கப்படும் மஹ்ஷர் மைதானமாகிய வசந்த காலத்தில் வந்து அவற்றைப் பார். வசந்த காலத்தில் இடிக்குரிய மலக்கால் எழுப்பப்படும் இஸ்ராஃபீலின் ஸூரைப் போன்ற பெரும் இடியோசையையும் அதனைத் தொடர்ந்து மண்ணுக்கடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள அந்த விதைகளுக்கு ரூஹ் ஊதி புத்தியிரளிக்கப்படு மீண்டும் புதியதொரு வாழ்வைக் கொண்டு நன்மாராயனம் கூறப்படுவதையும் அவதானமாகப் பார்! ஆம், அந்த மகத்தான கொந்தளிப்புக்களுக்குள் ஒன்றோடொன்று களந்து, ஒன்றையொன்று ஒத்ததாக இருக்கும் அந்த சிறிய விதைகள் ஹஃபீஸ் நாமத்துடைய பிரதிபலிப்பின் கீழ் சர்வஞானமிக்க படைப்பாளனிடமிருந்து வரும் கட்டளைகளுக்கு அணுப் பிசகாமல், எவ்விதத் தவறுகளோ குழப்பங்களோ ஏற்பட்டுவிடாமல் தலைசாய்க்கின்றன. மேலும் அவற்றின் அந்த நடத்தைகளிலும் கால, சூழலுக்கமைய செயற்படுவதிலும் நுட்பமான ஒரு பிரக்ஞையும் தூர நோக்கும் தெளிவான ஒரு நாட்டமும் அனைத்தையும் வியாபித்த ஓர் ஆற்றலும் எல்லையற்ற ஓர் அறிவும் முதிர்ச்சியும் மகா ஞானமும் பிரகாசமாகப் புலப்படுவதைக் காண முடிகின்றது அதாவது, ஒன்றையோன்று ஒத்திருக்கின்ற அந்த விதைகள் ஒன்றையொன்று வேறுபிரித்தறிந்து, தத்தமது தனித்துவங்களைப் பாதுகத்துக்கொள்கின்றன. உதாரணமாக, இதோ இந்த விதையைப் பாருங்கள். அது ஓர் அத்தி மரமாகக் கிளை பரப்பி சர்வஞானமிக்க படைப்பாளனுடைய அருட்கொடைகளைத் தமது கைகளில் ஏந்தி எமது தலைக்கு மேலால் நீட்டிக்கொண்டிருக்கின்றன. இதோ தோற்றத்தளவில் அதே விதையை ஒத்த இந்த இரண்டு விதைகளும் சூரியகாந்திப் பூக்களையும் ஊதாப் பூக்களையும் வெளிப்படுத்துகின்றன. எமக்காகத் தம்மை அழகுபடுத்திக்கொண்டு எமது முகத்தைப் பார்த்துப் புன்னகைக்கின்றன. எம்மை அவைகள் மீது காதல்கொள்ள வைக்கின்றன. அங்கிருக்கின்ற இன்னும் சில விதைகள் தளிர்விட்டு விருட்சமாகி இனிய கணிகளை எமக்களிக்கின்றன. வசீகரிக்கும் தோற்றங்களோடும் ஈர்த்தெடுக்கும் வாசனைகளோடும் தெவிட்டுகின்ற சுவைகளோடும் எமது நஃப்ஸுக்கு அழைப்பு விடுக்கின்றன. பின்னர் எமது நஃப்ஸுக்காகத் தமது நஃப்ஸுகளைத் தியாகம் செய்கின்றன. அந்தத் தியாகம் மூலம் தாவர வாழ்விலிருந்து விலங்கியல் வாழ்வு என்ற அந்தஸ்துக்கு உயர்கின்றன. இவ்வாறே ஏனையவற்றையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இதோ அந்த விதைகள் அனைத்தும் ஓங்கி வளர்ந்து செழிப்பான ஒரு தோப்பாக மாறிவிட்டது. அவை தமக்கு மத்தியில் எத்தகைய குழப்பங்களோ குறைபாடுகளோ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَى مِنْ فُطُورٍ என்ற மறை வசனத்தின் தாத்பரியத்தைப் பிரகடனம் செய்கின்றன. ஒவ்வொரு விதையும் ஹஃபீஸ் நாமத்துடைய பிரதிபலிப்பை அதன் அஸலாகிய தாய் மரத்திடமிருந்து அன்பளிப்பாகப் பெற்ற வாரிசுச் சொத்தை ஏனையவற்றுடன் குழப்பிக்கொள்ளாமல் குறைகளின்றி பாதுகாப்பதன் மூலம் வெளிப்படுத்துகின்றன. இதோ, இவ்வாறு எண்ணற்ற விடயங்களை பிரமிக்கத்தக்க விதமாக பாதுகாக்கின்ற அந்தப் பாதுகாவலன் (ஹஃபீஸ்), மறுமையில் மஹ்ஷரில் ஹஃபீஸிய்யத்துடைய மகத்தான, உன்னதமான பிரதிபலிப்பை வெளிக்காட்டுவான். இங்குள்ள சிறு சிறு பிரதிபலிப்புக்கள் அதற்கான சமிக்ஞைகளாகும். ஆம், இவ்வாறு முக்கியத்துவமற்ற, தற்காலிகமான, எழுமாறான நிகழ்வுகளிலும் கூட ஹஃபீஸிய்யத்துடைய பிரதிபலிப்பானது எல்லா குறைபாடுகளையும், தவறுகளையும் விட்டும் தூய்மைபெற்றதாக, தெட்டத்தெளிவாகப் புலப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட நிகழ்வுகளே இந்த அளவு நுணுக்கமாகப் பாதுகாக்கப்படும் போது பூமியின் கலீபாவாகவும் மிகப்பெரிய அமானிதத்தைச் சுமந்தவனாகவும் இருக்கும் மனிதனின் நித்திய விளைவுகளையும் மகத்தான பிரதிபலன்களையும் தரக்கூடிய மிக முக்கியத்துவம் வாய்ந்த அமல்களும் நிலைமைகளும் நன்மை தீமைகளும் அணுப்பிசகாமல் பாதுகாக்கப்படும் என்பதில் எத்தகைய சந்தேகத்துக்கும் இடமிலை. நிச்சயமாக அவை பாதுகாக்கப்பட்டு விசாரனைக்காகக் கொண்டுவரப்படும். ஆச்சரியம்! மனிதன், இப்படியே விட்டுவிடப்படுவோம் என்று நினைத்துக்கொள்கிறானா? நிச்சயமாக அவ்வாறல்ல. மனிதன் நித்தியத்துக்கான பயணியாவான். அதில் நித்திய நிம்மதி அல்லது நிரந்தர கைசேதத்திற்கான வேட்பாளனாக இருக்கின்றான். சிறிய பெரிய, கூடிய குறைந்த அனைத்து அமல்களைப் பற்றியும் விசாரிக்கப்படுவான். விளைவாக விமோசனம் அடைவான் அல்லது அதலபாதாலத்தை அடைவான். ஆம், ஹஃபீஸிய்யத்துடைய பிரமாண்டமான பிரதிபலிப்புக்களுக்கும் மேலுள்ள வசனம் கூறும் சத்தியத்துக்கும் கணக்கிட முடியாத அத்தாட்சிகள் காணப்படுகின்றன. இந்த சிறிய குறிப்பில் எம்மால் தொட்டுக்காட்ட முடியுமாக இருந்த அளவு கடலிலிருக்கும் ஒரு துளி நீரை அல்லது மலையிலிருக்கும் ஓர் அணுவைப் போன்றதாகும். سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters