بِاس۟مِهٖ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ اَلسَّلَامُ عَلَي۟كُم۟ وَ رَح۟مَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ கண்ணியத்துக்கும் உண்மைக்கும் பாத்திரமான ஸப்ரி ஆலிம், ஹாஃபிஸ் அலி, மஸ்ஊத், முஸ்தஃபா, ஹுஸ்ரவ், ரஃபத், பெகிர் பாய், ருஷ்து, லுத்ஃபி, ஹாஃபிஸ் அஹ்மத், ஷெய்க் முஸ்தஃபா ஆகிய சகோதரர்களே! உங்களுக்கும் உங்களை ஒத்த பெயர் குறிப்பிடப்படாத இன்னும் பல சகோதரர்களுக்கும் உள்ளத்தில் கேள்விக் குறியை ஏற்படுத்திய நான்கு சிறிய விடயங்களை சில உண்மைகளைக் கொண்டு சுருக்கமாக விளக்க வேண்டிய தேவையை உள்ளத்தில் உணர்ந்து கொண்டேன்.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Lem'alar
The Sixteenth Gleam
எமது சகோதரர்களுக்கு மத்தியில் சப்ராஸ்ஸாதே அப்துல்லாஹ் எஃபந்தி போன்ற சில நபர்கள், கடந்த ரமழான் மாதம் அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினருக்குப் பெரியதொரு வெற்றியையும் நிம்மதியையும் கொண்டு வருவதாக அமையும் என்ற ரீதியில் கஷ்ஃபை உடைய இறை நேசர்களின் எதிர்வு கூறல்களைக் கூறியிருந்தார்கள். எனினும் அவ்வாறான எதுவும் நிகழவில்லை. விலாயத்தை உடையவர்களும் கஷ்ஃபை உடையவர்களும் ஏன் இவ்வாறு நடக்காத ஒன்றைப் பற்றி எதிர்வுகூறுகின்றனர்?” என்பதாக என்னிடம் கேட்டனர். நான் அப்போது சடுதியாகத் தோன்றிய ஓர் உதிப்பைக் கொண்டு அளித்த பதிலின் சுருக்கத்தை இங்கு கூறுகிறேன். “சில சமயம், முஸீபத்கள் இறங்கும் போது, ஸதகா முன்னால் வந்து அந்த முஸீபத்தைத் திருப்பி விடுகின்றது” என்பது ஒரு ஹதீஸுடைய அர்த்தமாகும். இந்த ஹதீஸில் பொதிந்துள்ள தாத்பரியம் நிர்ணயிக்கப்பட்ட விடயங்கள் சில நிபந்தனைகள் நிறைவேறும் போது நிகழாமல் தடுக்கப்பட்டுவிடுகின்றன என்பதாகும். இதன்படி, அஹ்லுல் கஷ்ஃப் அறிந்து கொள்கின்ற சில நிர்ணயிக்கப்பட்ட விடயங்கள் தீர்க்கமானவையாக இல்லாதிருந்தால் அல்லது சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவையாக இருந்தால் குறித்த நிபந்தனைகள் நிறைவேறாத போது அந்த எதிர்வுகூறல்களும் நிகழ்வதில்லை. இவ்வாறான நிகழ்வுகள் மூல ஏடாகிய லவ்ஹுல் மஹ்ஃபூழுடைய ஒருவகை இடை நிலை ஏடாக இருக்கும் “லவ்ஹுல் மஹ்வ் வல் இஸ்பாத்” என்ற ஏட்டில் நிர்ணயிக்கப்பட்டு எழுதப்பட்டவையாகும். கஷ்ஃபானது மிகவும் அரிதாகவே லவ்ஹுல் அஸலீ எனப்படும் மூல ஏட்டை அடைகின்றது. அதிகமான கஷ்ஃபுகளால் அந்த இடத்தை எட்ட முடிவதில்லை. இந்த யதார்த்தம் காரணமாகத்தான் கடந்த ரமழானிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் வேறு சில காலங்களிலும் சில அறிகுறிகளையும் கணக்கீடுகளையும் வைத்துச் செய்யப்பட்ட கஷ்ஃபுகளையும் அவற்றின் அடிப்படையில் செய்யப்பட்ட முன்னறிவிப்புகளையும் பார்க்க வேண்டும். ஆம், அந்த முன்னறிவிப்புகள் சில நிபந்தனைகளுக்குட்பட்டவையாக இருந்தமையினாலும் குறித்த நேரத்தில் அந்த நிபந்தனைகள் நிறைவேறாமல் இருந்தமையினாலும் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட விடயங்கள் நிகழவில்லை. எனவே முன்னறிவிப்புகள் நிகழாதிருந்தமையானது அது பற்றி முன்னறிவிப்புச் செய்த இறை நேசர்களைப் பொய்ப்படுத்தவில்லை. அவை உண்மையில் நிர்ணயிக்கப்பட்டவையாகவே இருந்தன. ஆனால் நிபந்தனைகள் நிறைவேறாத காரணத்தினால் குறித்த முன்னறிவிப்புகளும் நிகழவில்லை. உண்மையில் அநியாயக்கார ஆட்சியாளர்கள் முஸ்லிம்களின் மீது திணித்த நூதனங்களின் ஒழிப்புக்காக அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினர் புனித ரமழானில் செய்த ஏராளமான தூய பிரார்த்தனைகள் அனைத்தும் கேட்கப்பட்ட விடயம் நிறைவேறுவதற்கான மிகவும் அடிப்படையானதொரு நிபந்தனையாகவும் காரணியாகவும் அமைந்திருந்தன. ஆனால் துரதிஷ்டவசமாக புனித ரமழானில் பள்ளிவாசல்களுக்குள் ஏராளமான நூதனங்கள் நுழைந்ததன் காரணமாக அவை துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குத் தடையாக அமைந்துவிட்டன. எனவே எதிர்பார்க்கப்பட்ட விடிவு கிடைக்கவில்லை. ஆரம்பமாக உள்ள ஹதீஸின் தெளிவுக்கமைய ஸதகா முஸீபத்துக்களை அகற்றுவதைப் போன்றே பெரும்பான்மையானோரின் தூய துஆக்களும்கூட வெற்றிகளை ஈர்த்தெடுக்கும் சக்தி வாய்ந்தவையாகும். ஆனால் அந்த ஈர்ப்புச் சக்தி பூர்த்தியடையாத காரணத்தினால் எதிர்வு கூறப்பட்ட வெற்றியும் வந்தடையவில்லை.
இரண்டு வருடங்களாக மிகவும் பரபரப்பான அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் சில அரசியல் முஸ்தீபுகளில் இறங்குவதன் மூலம் எனக்கும் என்னோடு தொடர்புபட்ட ஏராளமான சகோதரர்களுக்கும் பெரும்பாலும் சாதகமான விளைவுகளைத் தர முடியுமான ஒரு வாய்ப்பு காணப்பட்ட போதிலும் நானோ கண்முன்னால் தெரிகின்ற அந்த வாய்ப்பைப் பற்றி சற்றும் அலட்டிக்கொள்ளாமல் அதற்கு நேர் மாறாக என்னை நோவினை செய்யும் மார்க்க விரோதிகளுக்குச் சார்பாகத் தோன்றும் ஒரு நிலைப்பாட்டை எடுத்தேன். சிலர் இதை மிகுந்த ஆச்சரியத்தோடு அவதானித்தனர். “நூதனவாதிகளாகவும் முனாஃபிக்களாகவும் திகழும் இந்த அதிகாரவர்க்கத்தின் கைகளுக்குள் சிக்கித் தவிக்கும் அரசியலை, அத்தகையவர்களிடமிருந்து மீட்டெடுப்பதற்காகவேனும் அண்டாருக்கின்ற அளவு இந்த அரசியலில் என்னதான் இருக்கின்றது?” என்று பலர் கேட்கின்றனர். நான் அளித்த பதிலின் சுருக்கம் பின்வருமாறு: இந்த யுகத்தில் இஸ்லாமியர்கள் எதிர்நோக்கியிருக்கின்ற மிகப்பெரிய ஆபத்து, விஞ்ஞானம் மற்றும் தத்துவவியல் போன்ற அறிவியல் புலங்களிலிருந்து தோற்றமெடுக்கும் ஒரு வழிகேடாகும். இந்த வழிகேடு உள்ளங்களை சீர்கெடச்செய்து ஈமானில் கலங்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. இதற்கான மிகப்பெரிய நிவாரணம் நூர் அதாவது ஒளியாகும். அதாவது ஒளியைப் பாய்ச்சி உள்ளங்களைப் பரிசுத்தப்படுத்தி ஈமானைப் பாதுகாப்பதன் மூலமே இந்த வழிகேட்டிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்க முடியும். மாறாக நிவாரணத்துக்காக அரசியல் என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தி அதில் வெற்றியடைந்தாலும் காபிர்கள் முனாபிக் என்ற மட்டத்துக்குத் தாழ்ந்து விடுவார்கள். முனாபிக் காபிரை விட ஆபத்தானவனாவான். எனவே இப்படிப்பட்ட ஒரு காலத்தில் ஆயுதங்கள் உள்ளங்களை வெற்றிகொள்ளாது. அனைத்தையும் மீறிப் பயன்படுத்தப்படுமானால் பகிரங்கமாக இருந்த குஃப்ர் உள்ளத்துக்குள் நுழைந்து ஒளிந்து கொள்ளும். பின்னர் நயவஞ்சகத்தனமாகக் களம் திரும்பும். ஒளி, அரசியல் என்ற இரண்டையும் சமநேரத்தில் பயன்படுத்தலாம் அல்லவா? என்று கேட்கப்பட்டால்: குறிப்பாக இந்தக் காலத்தில் இரண்டையும் ஒரே சமயத்தில் என்னைப் போன்ற ஒரு பலவீனனால் பயன்படுத்த முடியாது. எனவேதன் எனது முழுப்பலத்தையும் திரட்டி ஒளியைப் பற்றிக்கொள்வது கட்டாயம் எனக் கருதுவதால் அரசியல் என்ற ஆயுதத்தை எந்தக் காரணத்துக்காகவும் அண்டாதிருக்கிறேன். மறு புறம் உடல் ரீதியான ஜிஹாதுக்கான தேவைப்பாட்டைப் பொருத்தவரை அந்தக் கடமை இப்போதைக்கு எம்மிடம் இல்லை. உண்மையில் காபிர்கள், முர்தத்களுடைய அத்துமீறல்களைத் தடுப்பதற்காக பொறுப்புள்ளவர்கள் அரசியலையும் ஆயுதத்தையும் பிரயோகிப்பது அவசியமானதுதான். ஆனால் எம்மிடம் இரண்டு கைகள்தான் உள்ளன. நூறு கைகள்தான் இருந்தாலும் ஒளியைப் பற்றிக் கொள்வதற்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் இப்படிப்பட்ட ஒரு காலத்தில் ஆயுதங்களைப் பற்றிக்கொள்வதற்கா கைகள் எம்மிடம் இல்லை.
ஆங்கிலேயர்கள், இத்தாலியர்கள் போன்ற அந்நிய சக்திகள் இந்த அரசாங்கத்தையும் யுத்தத்துக்குள் இழுப்பதற்கான முஸ்தீபுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். இத்தகைய ஒரு யுத்தத்தில் நாமும் பங்கேற்கும் பட்சத்தில் அது ஆரம்ப காலம் தொட்டே இந்த மண்ணின் ஆட்சியாளர்களுக்கான பக்கபலமாகவும் அவர்களது ஆன்மீக பலத்துக்கான ஊற்றுவாயாகவும் திகழ்ந்த மார்க்கப் பற்றையும் மார்க்கத்தைப் பாதுகாக்கின்ற உணர்வையும் தூண்டி, இஸ்லாமிய ஷரீஅத்தைப் பலப்படுத்துவதற்கும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நூதனங்களை ஒழிப்பதற்கும் ஓரளவு துணை புரியலாம் அல்லவா!? எனவே இத்தகைய ஒரு யுத்தத்துக்கு ஆதரவாக இருப்பது அவசியப்படுகின்ற இந்தத் தருணத்தில் ஏன் அதனைக் கடுமையாக எதிர்த்தீர்கள்? ஏன் இந்தச் சிக்கல் சுமுகமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதற்காக அதிகமதிகம் துஆ செய்து, இதன் மூலம் ஒரு வகையில் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தீர்கள்? இது இவர்கள் அறிமுகப்படுத்திய நூதனங்களுக்கு ஒரு வகை ஆதரவாக அமையாதா? பதில் நாம் வெற்றிகளையும் மகிழ்ச்சியையும் நிம்மதியையுமே ஆசிக்கிறோம். ஆனால் அது காபிர்களுடைய ஆயுதங்களைக் கொண்டல்ல. காபிர்களுடைய ஆயுதங்கள் அவர்களுடைய இரத்தங்களையே குடித்து ஏப்பம்விடட்டும். ஆயுதங்கள் மூலம் வருகின்ற வருமானங்கள் எமக்கு அவசியமில்லை. ஏலவே இப்படிப்பட்ட முனாபிக்களை ஈமான் கொண்டவர்களை நோக்கி ஏவிவிட்டதும் ஏகப்பட்ட மார்க்க விரோதிகளை ஊட்டி வளர்த்ததும் அந்த அக்கிரமக்கார அந்நியர்கள் அல்லவா!? இப்போதும் ஏதோ சூழ்ச்சிக்காக யுத்த முஸ்தீபுகளில் இறங்கியிருக்கிறார்கள் போலும். இந்தச் சமாச்சாரம் ஒரு புறமிருக்க, யுத்த சூழலானது எமது குர்ஆனியப் பணிக்குப் பாரிய பங்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். மிகுந்த தியாகத்தோடு உழைக்கும் மிகப் பெறுமதி வாய்ந்த எமது சகோதரர்களுள் அதிகமானவர்கள் நாற்பத்தைந்து வயதுக்குற்பட்டவர்களாக இருப்பதால் யுத்தம் நிகழ்ந்திருப்பின் இந்த மகத்தான குர்ஆனியப் பணியை விட்டுவிட்டு இராணுவத்தில் சேர நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பர். என்னிடம் பணம் இருக்குமானால் இப்படிப்பட்ட பெறுமதிவாய்ந்த சகோதரர்களை இராணுவத்தில் சேராமல் தடுப்பதற்காக தண்டப்பணமாக தலைக்கு ஆயிரம் லீராக்கள் தான் கேட்கப்பட்டாலும் முழுப் பொருத்தத்தோடு கொடுத்திருப்பேன். இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான பெறுமதிவாய்ந்த சகோதரர்கள் இந்த ஒளிமயமான குர்ஆனியப் பணியை விட்டுவிட்டு உடலியல் ரீதியான ஜிஹாத் என்ற ஆயுதம் தரிக்கப் புறப்பட்டால் இலட்சக்கணக்கான லீராக்கள் நஷ்டம் ஏற்படப்போவதை உணர்கிறேன். ஓரிரு வருடமாக கட்டாய இராணுவப் பணிக்குப் போயிருக்கும் எனது மாணவர்களுள் ஒருவரான ஸகாயி அங்கு செலவளித்துக் கொண்டிருக்கும் காலம் எமக்கு இங்கு ஆயிரக்கணக்கான லீராக்கள் ஆத்மார்த்தமான நஷ்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. எப்படியோ.. சர்வ வல்லமைமிக்க அல்லாஹ் கார் மேகங்களால் மூடப்பட்ட வானத்தை ஒரே நிமிடத்தில் கூட்டித் துப்புறவு செய்து தெளிவான வானத்தில் பிரகாசமான சூரியனை எவ்வாறு காட்சிப்படுத்துகின்றானோ அவ்வாறே அவன் நாடினால் இந்த இருள்சூழ்ந்த போர் மேகங்களையும் அகற்றி ஷரீஅத்துடைய சத்தியங்களைச் சூரியனைப் போன்று பிரகாசிக்கச் செய்வான்; அமைதியானதும் செலவு குறைந்ததுமான ஒரு வெற்றியை எமக்களிப்பான். அவனுடைய ரஹ்மத்துக்கு முன்னால் அந்த வெற்றியை அதிக செலவினம் மிக்கதாக ஆக்கிவிடாதிருப்பாயாக என்று யாசிக்கின்றோம். அந்த ரஹ்மான் ஆட்சிக்கு வருபவர்களுடைய தலைகளுக்குப் புத்தியையும், உள்ளங்களுக்கு ஈமானையும் கொடுப்பானாக! இது ஒன்றே போதுமானதாகும். அப்போது காரியங்கள் அதன்பாட்டில் சீராகி விடும்.
“உண்மையில் நீங்கள் கையில் வைத்திருப்பது ஒளியாகும். அரசியலையும் ஆயுதங்களையும் உண்மையாகவே உதறித்தள்ளி விடுகின்றீர்கள். ஒளியை எதிர்த்து நிற்பது முடியாத காரியமாகும். ஒளியிலிருந்து தப்பவும் முடியாது. அதனால் யாருக்கும் எந்தப் பாதிப்புக்களும் ஏற்படாது. இப்படியிருக்க ஏன் உங்கள் தோழர்களிடம் முன்னெச்சரிக்கையாக செயற்படுமாறு வலியுறுத்துகின்றீர்கள்? ஏன் ரஸாஇல்களுள் சிலதை ஆலும்கட்சியைச் சேர்ந்த அதிகாரிகள் காணாதிருக்கட்டும் என்று அவர்களை எச்சரிக்கை செய்கிறீர்கள்? இந்தக் கேள்விக்கான சுருக்கமான பதில்: ஆட்சியிலிருக்கும் அதிகமானவர்களின் தலைகள் போதையில் மூழ்கிப் போயுள்ளன. கொடுத்தால் வாசிக்க மாட்டார்கள். அப்படியே வாசித்தாலும் விளங்கிக்கொள்ள மாட்டார்கள். மாறாகப் பொய்யான அர்த்தங்களைக் கட்டிக்கொண்டு எம்மைத் தீண்ட வருவார்கள். இவ்வாறான அசம்பாவிதங்களைத் தடுப்பதற்காக புத்தி தெளியும் வரை அவர்கள் காணாதிருப்பது ஏற்றமானதாகும். மேலும் ஆட்சியாளர்கள் போடும் பிச்சைக்காகக் கெட்ட எண்ணங்களோடு அழைபவர்களும் அவர்களுடைய அதட்டல்களுக்கு அஞ்சுபவர்களும் தமது மனச்சாட்சியைக் கொலை செய்துவிட்டு ஒளியை மண முரண்டாக நிராகரிக்கின்ற அல்லது ஒளிக்கு முன்னால் கண்களை மூடிக்கொள்கின்ற நிலையில் உள்ளார்கள். இதனால்தான் எனது சகோதரர்களுக்கு முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறும் பெறுமதி தெரியாதவர்களின் கைகளுக்கு இந்த சத்தியங்களைக் கொடுக்காதிருக்குமாறும் வலியுறுத்துகிறேன். கூடவே இந்த உலகப் பித்தர்களின் சந்தேகத்தைத் தூண்டிவிடத்தக்க செயற்பாடுகளிலும் ஈடுபடாதிருப்பார்களாக.
இன்று ர’ஃபத் பாய் அவர்களுடைய ஒரு கடிதத்தைப் பெற்றுக் கொண்டேன். அதில் நபி (ஸல்) அவர்களுடைய புனித தாடி சம்பந்தமாக கேட்கப்பட்ட கேள்விக்கான பதிலாக இதை எழுதுகின்றேன். ஹதீஸ்களின் பிரகாரம் ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தாடியிலிருந்து உதிர்ந்த முடிகள் நாட்பது அல்லது ஐம்பது அளவு குறைந்த எண்ணிக்கையைக் கொண்டதாகும். இப்படியிருக்க ஆயிரக்கணக்கான இடங்களில் அந்தப் புனித தாடியிலிருந்து வீழ்ந்த முடிகள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. எனவே அந்தப் புனிதமான முடிகள் அண்ணவர்களுடைய தாஹிரான தாடியிலிருந்து உதிர்ந்தவையாக மாத்திரம் இருக்க முடியாது. உண்மையில் நபி (ஸல்) அவர்கள் தனது தலை முடியை சிரைக்கின்ற போதெல்லாம் அண்ணாரிடமிருந்துமுள்ள எந்தவொன்றையும் தொலைத்துவிடாமல் பாதுகாத்த ஸஹாபாக்கள் என்றென்றும் நிலைத்திருக்கப் போகும் அந்த அருள்பாலிக்கப்பட்ட முடிகளையும் பாதுகாத்துள்ளார்கள். இவ்வாறு சிரைக்கப்பட்ட முடிகளுள் இன்றுவரை வந்து சேர்ந்தவை ஆயிரக்கணக்கானவையாகும். அதைத் தொடர்ந்து இன்னொரு சந்தேகமும் சிந்தனையில் உதித்தது. அதாவது ஏகப்பட்ட பள்ளிவாசல்களில் புனித முடிகளாகக் கூறப்பட்டு வைக்கப்பட்டுள்ள முடிகள் அனைத்தும் உண்மையில் ஸஹீஹான அத்தாட்சிகளோடு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய முடிகள்தான் என்பது உறுதியானவையா? உறுதிப்படுத்தப்படாதவை எனில் அவற்றைத் தரிசிக்கச் செல்வது பொருத்தமானதா? அப்போது நினைவில் உதித்த பின்வரும் விடயம் அந்த சந்தேகத்தை நிவர்த்தி செய்து வைத்தது. உண்மையில் முடிகளைப் பார்வையிடச் செல்வது ஒரு வஸீலாவாகும். அதாவது, ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறுவதற்கான ஒரு வஸீலாவாகும். அத்துடன் அண்ணவர்கள் மீதான அன்பையும் கண்ணியத்தையும் புதுப்பிப்பதற்கான ஒரு காரணியுமாகும். வஸீலாவாக இருக்கின்ற விடயத்தில் பொருட்கள் அவ்வளவு முக்கியத்துவம் பெறுவதில்லை. மாறாக வஸீலாவாக இருக்கின்ற அதன் தன்மையே முக்கியமானது. இந்த வகையில் அவ்வாறு பள்ளிவாசல்களில் வைக்கப்பட்டுள்ள முடிகளுள் சில யதார்த்தத்தில் புனித தாடியிலிருந்து உதிர்ந்த முடிகளாக இராவிட்டாலும் பொதுக்கருத்தின் பிரகாரம் அவ்வாறே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்ற வகையில் வஸீலாவாக இருக்கின்ற தனது பணியை நிறைவேற்றுகின்றது. நபி (ஸல்) அவர்கள் மீதான கண்ணியத்துக்கும் அவர்கள் பால் திரும்புவதற்கும் அவர்கள் மீது ஸலவாத் சொல்வதற்குமான ஒரு வஸீலாவாக இருக்கின்றது. எனவே அந்த முடி பற்றிய உறுதியான அத்தாட்சிகள் கட்டாயமில்லை. அது புனித முடிகளிலிருந்துமுள்ள ஒன்றல்ல என்பதற்கான உறுதியான அத்தாட்சிகள் இல்லாதிருப்பதே போதுமானதாகும். ஏனெனில் பொதுக் கருத்தும், உம்மத்துடைய உடன்பாடும் ஒரு வகை ஆதாரமாக இருக்கின்றது. சில தக்வாதாரிகள் தக்வா காரணமாக அல்லது எச்சரிக்கையுணர்வு காரணமாக இது போன்ற விடயங்களில் முரண்பட்டாலும் கூட தனிப்பட்ட அளவோடே வைத்துக் கொள்கிறார்கள். சிலர் பித்அத் என்று கூறினாலும் பித்ஆ ஹஸன் என்ற வகைக்குற்பட்டதாகவே இருக்க முடியும். ஏனெனில் ஸலவாத்துக்கான ஒரு வஸீலாவாக இருக்கின்றது. ர’ஃபத் பாய் தனது கடிதத்தில் “இந்த விடயம் எமது சகோதரர்களுக்கு மத்தியில் விவாதத்துக்குக் காரணமாக அமைந்துவிட்டது” என்று குறிப்பிடுகின்றார். சகோதரர்களே பின்வரும் விடயத்தை என்னிடமிருந்து அறிவுரையாக எடுத்துக் கொள்ளுங்கள்: பிளவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் வழிவகுக்கின்ற விவாதங்களில் ஆர்வம் கொள்ளாதீர்கள். மாறாக சிந்தனைப் பரிமாற்றங்களுக்கான ஊடகமாகவும் சத்தம் சந்தடி அற்றதாகவும் யாருடைய தெரிவுச் சுதந்திரத்தையும் கையிலிருந்து பறித்தெடுக்காத பண்பைக் கொண்டதாகவும் இருக்கின்ற பரஸ்பர கலந்துரையாடல்களுக்கு உங்களைப் பழக்கிக் கொள்ளுங்கள். بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ اَلسَّلَامُ عَلَي۟كُم۟ وَ رَح۟مَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ கண்ணியத்துக்கும் உண்மைக்கும் பாத்திரமான ஸெனிர்கன்ட் நகரைச் சேர்ந்த இப்ராஹிம், ஹாஃபிஸ் பெகிர், ஹாஃபிஸ் ஹுஸைன், ஹாஃபிஸ் ரஜப் ஆகிய சகோதரர்களே! ஹாஃபிஸ் தவ்ஃபீக் மூலம் நீங்கள் விளக்கம் கேட்டனுப்பிய மூன்று விடயங்களும் மார்க்க விரோதிகள் ஆரம்பகாலம் தொட்டே கேள்விக்குற்படுத்தி வருகின்ற விடயங்களாகும்.
حَتَّى اِذَا بَلَغَ مَغْرِبَ الشَّمْسِ وَجَدَهَا تَغْرُبُ فِى عَيْنٍ حَمِئَةٍ என்ற மறை வசனம் பிரஸ்தாபிக்கின்ற நேரடி அர்த்தத்துக்கமைவாக “சூரியன் கொதிக்கின்ற சகதியான நீரேரியில் மறைவதை துல்கர்னைன் அவர்கள் கண்டார்கள்” என்ற விடயம்.
துல்கர்னைன் கட்டியதாகக் கூறப்படும் தடுப்பு எங்கிருக்கின்றது என்ற விடயம்.
கடைசிக்காலத்தில் ஹழரத் ஈஸா (அலை) அவர்களது வருகை மற்றும் அவர்களால் தஜ்ஜால் கொள்ளப்படுகின்ற விடயம் என்பனவாகும். இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் மிக நீளமானவையாகும். மிகவும் சுருக்கமாக பின்வரும் விடயத்தை மாத்திரம் அடையாளப்படுத்துகின்றோம். குர்ஆனிய வசனங்கள் அரபு மொழி நடையைத் தழுவியதாகவும் அனைத்துத் தரப்பினராலும் வெளிப்படையான பார்வையைக் கொண்டு கிரகித்துக் கொள்ளக்கூடிய அமைப்பிலும் விடயங்களை முன்வைக்கின்ற காரணத்தினால் அதிகமான உவமான உவமேயங்களும் சிலேடைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆம், இந்த வகையில் تَغْرُبُ فِى عَيْنٍ حَمِئَةٍ என்ற வசனமும் கூட கொந்தளிப்பான ஓர் ஏரியைப் போன்று தோற்றமளித்த அட்லான்டிக் சமுத்திரத்தில் அல்லது தீப்பொறிகளும் புகைமூட்டங்களும் நிறைந்த ஓர் எரிமலைச் சாரலில் துல்கர்னைன் சூரியஸ்தமனத்தைக் கண்டதாகக் கூறுகின்றது. அதாவது, ஒன்றோ கோடை காலத்தின் கடும் வெப்பம் காரணமாக குறித்த இடத்திலிருந்த சகதி நிலங்கள் சூடேறி ஆவி மூட்டங்கள் அந்த வட்டாரத்தைச் சூழ்ந்திருந்த வேளை அதன் பின்புலத்தில், தொலைவாக சிறியதொரு ஏரியைப் போன்று காட்சியளித்த அட்லான்டிக் சமுத்திரத்தில் துல்கர்னைன் அவர்கள் சூரியஸ்தமனத்தைக் கண்டுள்ளார்கள். அல்லது புதிதாக வெடித்தச் சிதறி, கல்லும் மண்ணும் தாதுப் பொருட்களும் கலந்த சகதி நீரைப் போன்று கொதித்துக்கொண்டிருந்த ஓர் எரிமலைக் கண்ணில் வானத்தின் கண்ணாகிய சூரியன் மறைவதை துல்கர்னைன் அவர்கள் கண்டுள்ளார்கள். ஆம், சர்வ ஞானம் பொருந்திய குர்ஆன், இங்கு அற்புதமான ஒரு சொல்லாட்சியைப் பிரயோகிப்பதனூடாக பல தகவல்களை எமக்கு எடுத்துக் கூறுகின்றது. துல்கர்னைனுடைய மேற்கு (மஃரிப்) நோக்கிய பயணம், கடும் வெப்ப காலத்தில் சூரியஸ்தமன நேரத்தில் ஏரிகளும் சேற்று நிலங்களும் காணப்படுகின்ற ஒரு பிரதேசத்தை அவர்கள் அடைந்த விடயம் அல்லது சூரியன் மறையும் நேரத்தில் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்த ஓர் எரிமலைச் சாரலை வந்தடைந்த விடயம், ஆபிரிக்காக் கண்டத்தை துல்கர்னைன் அவர்கள் வெற்றிகொண்ட விடயம் என்று பல்வேறு விடயங்களை இந்த வசனம் எமது சிந்தனைக்கு விடுகின்றது. எமக்குப் புலனாகின்ற சூரிய இயக்கமானது சார்பியக்கம் என்பதையும் இது எமக்கு உணர முடியாதிருக்கின்ற பூமிப்பந்தின் இயக்கத்துக்கான ஓர் அத்தாட்சி என்பதையும் நாம் அறிவோம். மேற்படி வசனம் இந்தச் செய்தியையும் குறிப்பிடுகின்றது. அதாவது, சூரியனுடைய ஹகீகத்தான மறைவு இந்த வசனத்தில் நோக்கமாகக் கொள்ளப்படவில்லை. மேலும் இங்கு ஏரி என்பது உருவகமாகச் சொல்லப்பட்ட ஒரு விடயமாகும். தொலைவிலிருந்து பார்த்தால் பெரியதொரு கடல், சிறியதொரு தடாகத்தைப் போன்றே தோற்றமளிக்கும். சகதி நிலங்களிலிருந்து கடும் வெப்பத்தின் காரணமாகத் தோன்றிய ஆவி மூட்டத்தின் பின்புலத்தில் தெரியும் கடலை சகதிக்குள் ஓர் ஏரியாக உவமாணப்படுத்துவது சாலப் பொருத்தமானதாகும். மேலும் அரபு மொழியில் عَيْنٍ என்ற சொல் சூரியன், கண், ஏரி என்ற அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கியதாகும். இந்த இடத்தில் இவ்வாறான ஒரு சொல் தெரிவு செய்யப்பட்டிருப்பது சொல்லாட்சி விதிகளின் படி மிக அழகிய அர்த்தங்களைத் தரக்கூடியதாகவும் மிகப் பொருத்தமானதாகவும் திகழ்கின்றது. மேலும் மேற்படி பிரயோகம் தொலைவிலிருந்து துல்கர்னைனுடைய பார்வைக்கு கடல் எவ்வாறு புலப்பட்டது என்பதைக் கூறுவதைப் போன்றே, மேலான அர்ஷிலிருந்து சர்வலோகங்களையும் வான் பொருட்களையும் கூட விளித்துப் பேசுகின்ற குர்ஆனுடைய அகிலார்ந்த தன்மையையும் அகிலார்ந்த தொனியையும் கூட எடுத்துக்காட்டுகின்றது. அதாவது ஏக இரட்சகனால் தயார்படுத்தப்பட்ட ஒரு மடமாகத் திகழும் பூமியின் ஒளி விளக்காகக் கடமையாற்றும் சூரியன் அட்லான்டிக் சமுத்திரத்தில் அஸ்தமிப்பதை, குர்ஆன் ஓர் ஏரியில் அஸ்தமிப்பதற்கு ஒப்பிடுகின்றது. அதாவது, வானத்தில் அல்லாஹ்வால் படைக்கப்பட்ட ஏராளமான கண்களுக்கு அந்தப் பிரமாண்டமான சமுத்திரம் ஓர் ஏரியைப் போன்றே காட்சியளிக்கும் என்பதால் குறித்த பிரயோகமானது குர்ஆனுடைய அகிலார்ந்த தன்மையையும் மகத்துவத்தையும் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றது. சுருக்கமாக ஆம், அட்லான்டிக் சமுத்திரத்தை ஒரு சகதி` ஏரியாக பிரஸ்தாபிப்பதன் மூலம் தொலைவிலிருந்து பார்த்த துல்கர்னைனுக்கு அந்தப் பெரிய சமுத்திரம் ஒரு ஏரி போன்று காட்சியளித்த விடயம் தொட்டுக்காட்டப்பட்டாலும், குர்ஆனுடைய பார்வை அனைத்துக்கும் நெருக்கமாக இருப்பதால் துல்கர்னைனுடைய பார்வையிலுள்ள குறைபாடுகள் அதில் இருக்க முடியாது. மாறாக குர்ஆன் முழுப் பிரபஞ்சத்தையும் விளித்துப் பேசுகின்ற காரணத்தினால் இந்தப் பூலோகத்தை சிலபோது ஒரு மைதானமாகவும் சிலபோது ஒரு மாளிகையாகவும் சிலபோது ஒரு தொட்டிலாகவும் சிலபோது புத்தகத்தின் ஒரு பக்கமாகவும் பிரஸ்தாபிக்கின்றது. எனவே பிரமாண்டமான அட்லான்டிக் சமுத்திரத்தை ஒரு தடாகமாக அல்லது ஏரியாகப் பிரஸ்தாபிப்பதும் கூட அதன் மகத்துவத்தையும் அகிலார்ந்த தன்மையையுமே பறைசாற்றுகின்றது.
துல்கர்னைன் கட்டிய தடுப்பு எங்கே இருக்கின்றது? யஃஜூஜ், மஃஜூஜ் என்பவர்கள் யார்? பதில் நீண்ட காலத்துக்கு முன்னர் இந்த விடயம் தொடர்பான ஒரு நூலை எழுதியிருந்தேன். அந்த நூலின் மூலம் அந்தக் காலத்து மார்க்க விரோதிகளின் விதண்டாவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்போதைக்கு அந்த ரஸாயில் கைவசம் இல்லாதமையாலும் எனது மனனசக்தியும் கூட ஒத்துழைக்க மறுப்பதாலும் இருபத்தி நான்காவது வார்த்தையின் மூன்றாவது கிளையில் ஓரளவு இந்த விடயம் விவரிக்கப்பட்டுள்ளதாலும் இங்கு இந்த விடயம் தொடர்பான இரண்டு மூன்று குறிப்புக்களை மாத்திரம் மிகவும் சுருக்கமாக முன்வைக்கிறோம். ஆய்வாளர்களுடைய விளக்கங்களின் படி, யெமனில் “து” என்ற சொல்லோடு ஆரம்பமாகின்ற “துல்யெஸன்” போன்ற மன்னர்களுடைய பெயர்கள் காணப்படுவதால் துல்கர்னைன் என்ற பட்டத்தால் அழைக்கப்படுபவர் ரோமைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் (இஸ்கந்தர்) அன்றி யெமனைச் சேர்ந்த மன்னர்களுல் ஒருவராகவே இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுக்கின்றனர். துல்கர்னைன் அவர்களைப் பொருத்தவரை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்துள்ளதோடு ஹிழ்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கல்வியும் கற்றுள்ளார்கள். ஆனால் இஸ்கந்தரைப் பொருத்தவரை கிறிஸ்துக்கு ஏரத்தாள முன்னூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்து அரிஸ்டோடிலிடம் கல்வி கற்றுள்ளார். மானுட வரலாறு ஆதாரபூர்வமாக தற்போதைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் வரையிலேயே செல்கின்றது. இந்தக் குறுகியதும் குறைபாடுள்ளதுமான வரலாற்றுப் பார்வை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய காலப்பகுதி சம்பந்தமான உண்மையான தீர்ப்புக்களை வழங்க முடியாத நிலையிலேயே இருக்கின்றது. அவ்வாறே இருக்கின்ற சில வரலாறுகளும் கட்டுக் கதைகளை ஒத்தவையாக அல்லது நிராகரிப்புக்குரியவையாக அல்லது மிகவுமே சுருக்கமானவையாகவே காணப்படுகின்றன. எனவே யெமனைச் சேர்ந்த துல்கர்னைன் ஆரம்பமுதலே தஃப்ஸீர்களில் இஸ்கந்தராகப் பிரபல்யம் பெற்றதற்கான காரணம், ஒன்றோ உண்மையான துல்கர்னைனுடைய ஒரு பெயர் இஸ்கந்தராக இருந்திருக்க வேண்டும். இந்நிலையில் அவரைப் பழைய இஸ்கந்தராகக் கொள்ளலாம். அல்லது குர்ஆனிய வசனங்கள் முன்வைக்கின்ற குறிப்பான நிகழ்வுகள் அதை ஒத்த மொத்த நிகழ்வுகளையும் விளங்கிக்கொள்வதற்கான ஒரு தடயமாகும் என்ற ரீதியில் நோக்க வேண்டும். இந்நிலையில் தனது நுபுவ்வத்தை ஒத்த பணிகளைக்கொண்டு அநியாயக்கார சமூகங்களுக்கும் அப்பாவி சமூகங்களுக்குமிடையில் ஒரு திரையாகத் திகழ்ந்த துல்கர்னைன் ஆகிய பழைய இஸ்கந்தர் ஈவிரக்கமற்ற அக்கிரமங்களிலிருந்து அப்பாவி சமூகங்களைப் பாதுகாப்பதற்காக பிரபலமான சீனப்பெருஞ்சுவரின் கட்டுமானத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். அவ்வாறே இஸ்கந்தர் ரூமியைப் போன்ற ஏராளமான சக்கரவர்த்திகள் பௌதீக ரீதியிலும் மனித குலத்தின் ஆன்மீக சக்கரவர்த்திகளாகிய விளங்கிய நபிமார்களும் குதுப்மார்களும் தமக்குக் கிடைத்த ஆன்மீக வழிகாட்டல்களினூடாகவும் துல்கர்னைனுடைய வழியில் சென்று அப்பாவிகளை அநியாயக்காரர்களிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதற்கான மிகப் பெரிய தீர்வாக மலைகளுக்கிடையில் தடுப்புச் சுவர்களையும் பின்னர் மலைகளின் உச்சிகளில் கோட்டைகளையும் கட்டியுள்ளனர். இவ்வாறான மகத்தான கட்டுமானங்களை பௌதீக ஆற்றல்களைக் கொண்டு அல்லது இறை வழிகாட்டல்களைக் கொண்டு நிர்மானித்துள்ளனர். பின்னர் நகரங்களைச் சூழ பாதுகாப்புச் சுவர்களையும் நகரங்களுக்கு மத்தியில் கோட்டைகளையும் இறுதி அரண்களாக துப்பாக்கிகள், நகரும் கோட்டைகளாகிய பெரும் யுத்த தாங்கிகள், யுத்தக் கப்பல்கள் என்பவற்றையும் கட்டியுள்ளனர். மேலும் பூகோலத்தின் மீதிருக்கும் மிகப் பெரிய தடுப்புச் சுவராகவும் பல நாட்கள் பயணம் செய்யும் அளவு நீளமானதாகவும் திகழ்கின்ற சீனப் பெருஞ்சுவரானது குர்ஆனியப் பரிபாஷையில் யஃஜூஜ், மஃஜூஜ் என்றும் வரலாற்றுப் பரிபாஷையில் மொங்கோலியர், மஞ்சூரியர் என்றும் அழைக்கப்படும், இமாலய மலைத் தொடரை அண்டிய பிரதேசங்களிலிருந்து தோன்றிய சமூகத்தவர்களிடமிருந்து மனித சமூகத்தைப் பாதுகாப்பதற்காகக் கட்டப்பட்டதாகும். மேற்கிலிருந்து கிழக்கு வரை மனித குலத்தைப் பலமுறை அழித்து சின்னாபின்னமாக்கிய அந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தினர் அவ்வப்போது இந்தியாவிலும் சீனாவிலுமிருக்கும் அப்பாவி சமூகங்கள் மீது மேற்கொண்டு வந்த அக்கிரமங்கள் அத்துமீறல்களைத் தடுப்பதற்காக இரு பெரும் சிகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட ஒரு தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம், அந்த அப்பாவி சமூகங்கள் பலமுறை அந்த சமூகத்தவர்களின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுள்ளனர். அவ்வாறே, காக்கஸஸ் மலைத்தொடர்களில் டெர்பன்ட் என்ற பெயரில் பாதுகாப்பான பதுங்கு தளங்களாகத் திகழும் ஒரு வகைக் கோட்டைகளும் காட்டுமிராண்டிக் கூட்டங்களிடமிருந்தும் கோத்திரங்களிடமிருந்தும் மக்களைப் பாதுகாப்பதற்காக துல்கர்னைனுடைய வழியில் சென்ற பழைய ஈரானிய மன்னர்களால் நிர்மானிக்கப்பட்டு வந்துள்ளது. இவ்வகையைச் சேர்ந்த ஏராளமான சுவர்கள் காணப்படுகின்றன. சர்வ ஞானம் பொருந்திய குர்ஆன் பூரா மனித சமூகத்தோடும் பேசுவதால் பார்வைக்கு ஒரு நிகழ்வைப் பற்றிப் பேசுவது போல் இருந்தாலும் அதன் மூலம் அதை ஒத்த மொத்த நிகழ்வுகளையும் நோக்கி கவனத்தைத் திருப்புகின்றது. ஆம், இதன் காரணமாகத்தான், தடுப்புச் சுவர் மற்றும் யஃஜூஜ், மஃஜூஜ் சம்பந்தமான ரிவாயத்துகள் விடயத்தில் முஃபஸ்ஸிர்களுடைய நிலைப்பாடுகள் வெவ்வேறுபட்டவையாக இருக்கின்றன. மேலும் சர்வஞானம் பொருந்திய குர்ஆன், விடயப் பொருத்தம் காரணமாக ஒரு நிகழ்வைத் தொடர்ந்து அதிலிருந்தும் மிகத் தொலைவான இன்னுமொரு நிகழ்வைப் பற்றிய பேச்சை ஆரம்பிக்கும். இந்த இடைத் தொடர்பை விளங்கிக் கொள்ளாதவர்களோ இரண்டு நிகழ்வுகளுக்குமிடைப்பட்ட காலங்கள் குறுகியதாகும் என்ற கண்ணோட்டத்தில் சிந்திப்பார்கள். ஆம், தடுப்புச் சுவர் தரைமட்டமாவதோடு கியாமத்துடைய நிகழ்வைச் சேர்த்து உச்சரிப்பதானது இரண்டுக்குமிடைப்பட்ட கால நெருக்கத்தின் காரணமாக அன்றி விடயப் பொருத்தத்தின் காரணமாகவாகும். இந்த இடத்தில் இரண்டு விடயப் பொருத்தங்கள் காணப்படுகின்றன. முதலாவது, இந்த சுவர் எவ்வாறு அழியப் போகின்றதோ அவ்வாறே இந்த உலகமும் அழிந்துவிடும் என்பதாகும். இரண்டாவது, உலகத்தில் ரப்பானிய தடுப்புச் சுவர்களாக நடப்பட்டுள்ள உறுதியான மலைகள் கியாமத்தின் போது எவ்வாறு சுக்கு நூறாகிச் சென்றுவிடுமோ மலைகள் போன்று உறுதியான இந்தக் கட்டுமானங்களும் கூட அதே முடிவையே சந்திக்கப் போகின்றன என்பதாகும். இந்த இரண்டாவது அம்சத்தின் அடிப்படையில் இவ்வாறான கட்டுமானங்கள் காலவோட்டத்தில் உருக்குலைந்து போனாலும் அதிகமானவை கியாமத் நாள் வரை நிலைத்து நிற்கும் என்ற அர்த்தமும் வெளிப்படுகின்றது. ஆம், துல்கர்னைனுடைய “தடுப்புச் சுவர்” என்பதன் மூலம் நாடப்படுகின்ற மொத்தத்தில் ஓர் உதிரியாக இருகின்ற சீனப் பெருஞ்சுவர் ஆயிரக்கணக்கான வருடங்கள் கடந்த பின்னரும் இன்னும் கம்பீரமாக வீற்றிருக்கின்றது; பூமியின் பழைய வரலாற்றுப் பக்கங்களில் மனித கரங்களால் எழுதப்பட்ட கம்பீரமான, உறுதியான, அர்த்தங்கள் பல பொதியப்பெற்ற ஒரு வரியாக வாசிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
ஹழரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தஜ்ஜாலைக் கொலை செய்கின்ற விடயத்தோடு தொடர்பான இந்தக் கேள்விக்கான போதிய பதில் மிகவும் இரத்தினச் சுருக்கமான முறையில் முதலாவது கடிதத்திலும் பதினைந்தாவது கடிதத்திலும் உள்ளது. بِاس۟مِهٖ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ اَلسَّلَامُ عَلَي۟كُم۟ وَ رَح۟مَةُ اللّٰهِ وَ بَرَكَاتُهُ உண்மைக்கும் கண்ணியத்துக்கும் பாத்திரமான தியாகச் செம்மல்கள் ஹொஜா சப்ரி, ஹாஃபிஸ் அலி ஆகிய சகோதரர்களே!
ஐந்து மறைவான விடயங்கள் தொடர்பாக ஸூரா லுக்மானின் இறுதியில் உள்ள வசனம் தொடர்பான உங்கள் கேள்விகள், முக்கியத்துவமான சில விடயங்களை உள்ளடக்கிய பதில்களை வேண்டி நிற்கின்றன. இருப்பினும் துரதிஷ்டவசமாக தற்போதைய எனது உள நிலையும் உடல் நிலையும் அனைத்துக் குறிப்புகளையும் உள்ளடக்கிய விரிவான பதிலை அளிப்பதற்கான தயார் நிலையில் இல்லை. எனவே உங்கள் கேள்வியோடு தொடர்பான ஓரிரு குறிப்புகளை மாத்திரம் மிகவும் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறோம். உங்கள் கேள்வியில் மறைவான ஐந்து விடயங்களுள் மழை பெய்கின்ற நேரம் சம்பந்தப்பட்ட விடயமும், தாயின் கருவரையிலுள்ள சிசுவின் தன்மை பற்றிய விடயமும் மார்க்க விரோதிகளால் விமர்சனத்துக்கும் கேள்விக்கும் உற்படுத்தப்படுகின்றது என்ற விடயத்தைக் குறிப்பிட்டுள்ளீர்கள். அதாவது காலநிலை அவதான நிலையங்கள் சில கருவிகளைக் கொண்டு மழை பெய்கின்ற நேரத்தைக் கணிக்கின்றன. கதிர் வீச்சுக்களைக் கொண்டு தாயின் கருப்பையிலிருக்கும் சிசு ஆனா, பெண்ணா என்ற விடயத்தையும் அறிந்துகொள்ள முடியுமாக உள்ளது. எனவே இவற்றை அல்லாஹ் அல்லாதவர்களாலும் அறிந்துகொள்ள முடியுமாக உள்ளது. எனவே குர்ஆன் மறைவானவை என்று கூறுகின்ற விடயங்களை அறிந்து கொள்ள முடியுமாக உள்ளதே என்று அவர்கள் வாதிப்பதாகக் கூறுகின்றீர்கள். பதில் மழை இறங்கும் நேரம் எவ்வித பொதீக விதிகளோடும் தொடர்புபடாததாக இருப்பதால் எத்தகைய திரைகளுமின்றி நேரடியாகவே அல்லாஹ்வின் விஷேட அருளுக்கும் ரஹ்மத்துக்கும் நாட்டத்துக்கும் உற்பட்டதாக இருக்கின்றது. இதில் பொதிந்துள்ள ஒரு தாத்பரியத்தை இங்கு தெளிவுபடுத்துகின்றோம். ஆம், பிரபஞ்ச வஸ்துகளுக்கு மத்தியில் மிக மகத்தான, மிகப் பெறுமதியான நான்கு சத்தியங்கள் காணப்படுகின்றன. அவை நூர், வுஜூத், ஹயாத், ரஹ்மத் (ஒளி, இருப்பு, வாழ்வு, கருணை) என்பனவாகும். இந்த நான்கும் எத்தகைய திரைகளோ ஆதாரங்களோ காரணகாரியங்களோ இன்றி நேரடியாகவே அல்லாஹ்வின் குத்ரத்தையும் விஷேட நாட்டத்தையும் ரஹ்மத் கஜானாக்களையும் சார்ந்திருக்கின்றன. வேறு சிருஷ்டிகளில் புலனாகின்ற காரணகாரியங்கள் அல்லாஹ்வின் வல்லமைக்குத் திரையாக ஆக்கப்பட்டுள்ளன. அதாவது காரணகாரியங்கள் விதிகள், நியதிகள், நிபந்தனைகள் என்ற வடிவில் சதாவும் புலப்படுக்கொண்டிருப்பதால் அவை அல்லாஹ்வுடைய நாட்டத்துக்கும் தெரிவுக்கும் திரையாக அமைந்துவிடுகின்றன. ஆனால் வுஜூத், ஹயாத், நூர், ரஹ்மத் என்பவற்றுக்கு அந்தத் திரைகள் போடப்படவில்லை. ஏனெனில் திரைகளாக இருக்கின்ற தாத்பரியங்கள் எதுவும் இவற்றின் பொறிமுறைகளில் புலப்படுவதில்லை. இந்த வகையில் வுஜூதை எடுத்துக் கொண்டால், உண்மையில் வுஜூதில் இருக்கின்ற மிகப்பெரிய சத்தியம் ஹயாத்தும் ரஹ்மத்துமாகும். மழையானது ஹயாத்துக்கான ஊற்றாகவும் ரஹ்மத்துக்கான வஸீலாவாகவும் ஒரு வகையில் ரஹ்மத்துகளின் மொத்த வடிவமாகவும் இருப்பதால் காரணகாரியங்களை அதற்கான திரையாக ஆக்காதிருப்பது இறை ஞானத்திலிருந்துமுள்ள ஒன்றாகும். இதன் மூலம் எல்லோரும் எல்லா நிலைமைகளிலும் நன்றி, வணக்கம், பிரார்த்தனைகள், மன்றாட்டங்கள் என்பவற்றுக்கான தேவையை உணர்ந்துகொள்வார்கள். விதிகளுக்குற்பட்டு, ஒரே சீரான சுழற்சியைக் கொண்டுள்ள விடயங்களைப் பொருத்தவரை அல்லாஹ்வின் விஷேட நாட்டம் அவற்றில் இருக்கின்றது என்ற உண்மையை மனிதன் மறந்து போய்விடுகின்றான். எனவே மழையும் அவ்வாறான விதிகளுக்கு உட்பட்டதாக ஆக்கப்பட்டிருப்பின் மனிதன் அந்த விதிகளை நம்பி பராமுகமாக இருந்திருப்பான். எனவே துஆக்கள், மன்றாட்டங்களுக்கான வாயில் மூடப்பட்டிருக்கும். சூரியன் உதிப்பதில் எந்த அளவு நன்மைகள் காணப்படுகின்றன என்பதை விவரிக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், அது சதாவும் ஒரு விதிக்கு உற்பட்டதாக இருப்பதால் சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக துஆக்கள் இறைஞ்சப்படுவதில்லை. உதித்த பின்னர் நன்றியும் செலுத்தப்படுவதில்லை. மேலும் மனித அறிவு அந்த விதிக்கமைய நாளையும் சூரியன் உதிக்கும் என்பதை அறிந்திருப்பதால் அதை மறைவிலிருந்துள்ள ஒரு வல்லமையின் செயலாகவும் கருதுவதில்லை. ஆனால் மழையுடன் தொடர்பான சிறிய ஒரு கூறும் எந்த ஒரு விதியோடும் கட்டுண்டில்லாதிருப்பதால் மழை விடயத்தில் எல்லா சந்தர்ப்பங்களிலும் துஆக்கள், மன்றாட்டங்கள் மூலம் இறை சந்நிதானத்தில் அடைக்கலம் தேட வேண்டிய நிர்ப்பந்தத்தில் மனிதன் இருக்கின்றான். மேலும், மனித அறிவால் மழை பெய்யும் நேரத்தைத் தீர்க்கமாக அறிந்துகொள்ள முடியாதிருப்பதால் அது நேரடியாகவே அல்லாஹ்வின் ரஹ்மத்திலிருந்துமுள்ள ஒரு விஷேட அருளாகும் என்பதை அறிந்து உண்மையும் தூய்மையும் மிக்க ஒரு நன்றியை வெளிப்படுத்த முடியுமாக உள்ளது. ஆம், மேற்படி வசனம் இந்தக் கோணத்தில்தான் மழை பெய்கின்ற விடயத்தை மறைவான ஐந்து அம்சங்களுக்குள்ளும் உள்ளடக்குகின்றது. காலநிலை அவதான நிலையங்களிலுள்ள கருவிகள் மழை பெய்யப் போவதை உணர்ந்து அதன் நேரத்தை எதிர்வு கூறுகின்ற விடயத்தை மறைவை அறிந்துகொள்வதாகக் கொள்ள முடியாது. மாறாக மறைவிலிருந்து வெளிப்பட்டு ஆலமுல் ஷஹாதத் ஆகிய காணும் உலகத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்ற வேளை சில தகவல்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்கின்ற ஒரு தொழினுட்பமே இங்குள்ள சமாச்சாரமாகும். சில போது மிக மறைவான அஜல் அதாவது மரண நேரமும் கூட அன்மிக்கின்ற போது அல்லது அன்மித்த பிறகு ஒருவகை உள்ளுணர்வைக் கொண்டு அறியப்படுகின்றது. இது மறைவை அறிவதன்ற, மறைவிலிருந்து இருப்புலகுக்குள் பிரவேசித்து திரைக்கு வரக் காத்திருக்கும் ஒரு விடயத்தை முன்கூட்டியே அறிந்துகொள்வதாகும். நானும் கூட எனது நரம்புகளில் இருக்கும் ஒரு வகை நுண்துலக்கம் மூலம் இருபத்தி நான்கு மணித்தியாளங்களுக்குப் பிறகு வரப் போகின்ற மழையை சிலவேளை உணர்ந்து கொள்கிறேன். இதன் அர்த்தம் மழைக்கான முன்னேற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன என்பதாகும். அந்த முன்னேற்பாடுகள் அமுக்கம், ஈரப்பதன் என்பவற்றைக் கொண்டு தன்னை வெளிப்படுத்துகின்றது. சற்று நேரத்தின் பின் மழை பெய்யப்போகின்றது என்பதை அறிவிப்புச் செய்கின்றது. இந்தக் காலநிலை மாற்றமும் இறை நியதிகளைப் போன்றே, மறைவிலிருந்து வெளிப்பட்டு அரங்கேறக் காத்திருக்கின்ற நிகழ்வுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மனித அறிவுக்கு வழங்குகின்றது. ஆனால் இன்னும் ஆலமுஷ் ஷஹாதத்தை அடையாத, அதாவது அல்லாஹ்வுடைய விஷேட நாட்டத்திலிருந்தும் ரஹ்மத்திலுருந்தும் வெளிப்படாமல் இன்னும் அவனுடைய புறத்திலுள்ள மழை பெய்கின்ற நேரங்களைப் பற்றிய அறிவை அல்லாமுல் (gh)குயூப் ஆகிய அல்லாஹ் ஒருவன் மாத்திரமே அறிவான்.
கதிர் வீச்சுகள் மூலம் தாயின் கர்ப்பகத்திலிருக்கும் சிசு ஆனா பெண்ணா என்பதை அறிய முடியுமாக இருப்பது وَ يَعْلَمُ مَا فِى اْلاَرْحَامِ என்ற வசனத்தில் பொதிந்துள்ள அர்த்தத்துக்கு முரணான ஒரு விடயமல்ல. அதாவது அந்த வசனம் வெறுமனே குழந்தையுடைய ஆண்மை பெண்மை ஆகிய தன்மைகளை அன்றி, அந்தக் குழந்தையின் தனிப்பட்ட ஆற்றல்கள், எதிர்காலத்தில் அது அடைந்துகொள்ள இருக்கும் நிலைமைகள், அவற்றுக்கான மூலங்களாக அமையக் கூடிய முன்னேற்பாடுகள், அந்தக் குழந்தையின் முகத்தில் பொதிக்கப்பட்டுள்ள தனித்துவமான ரப்பானிய முத்திரைகள் என்று பல அம்சங்கள் அந்த வசனத்துடைய நோக்கமாக இருக்கின்றன. ஆகவே இந்த அனைத்தையும் உள்ளடக்கியதாக ஒரு குழந்தையைப் பற்றிய பூரண அறிவை உடையவன் அல்லாமுல் (gh)குயூப் ஆகிய அல்லாஹ் ஒருவன் மாத்திரமே. ஆம் இலட்சக்கணக்கான கதிர் வீச்சுகளை ஒத்த மனித அறிவுகள் ஒன்றினைந்தாலும் அந்தக் குழந்தையை ஒட்டு மொத்த மனிதர்களிலிருந்தும் வேறுபடுத்துகின்ற அதன் உண்மையான முகத் தோற்றத்தைக் கண்டுபிடிக்க முடியாது. இதை ஒரு பக்கமாக வைத்தாலும் அவனுடைய உள்ளத்தில் முகத்தோற்றத்தை விட பல நூறு மடங்கு அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ள அகத்தோற்றத்தை எங்கு போய் எவ்வாறு கண்டுபிடிக்க முடியும்? ஆரம்பத்தில் வுஜூதும் ஹயாத்தும் ரஹ்மத்தும் இந்தப் பிரபஞ்ச வஸ்துகளுக்கு மத்தியிலுள்ள மிக மகத்தான சத்தியங்களாகும் என்றும் அவை மிக உயர்ந்த அந்தஸ்துக்குரியவை என்றும் குறிப்பிட்டோம். உண்மையில் இந்த சத்தியத்தின் காரணமாகத்தான் மிக விசாலமான உள்ளடக்கங்களைப் பொதியப்பெற்றுள்ள ஹயாத் என்ற சத்தியம் அதன் அத்தனை உபரிகளும் நுட்பங்களும் உள்ளடங்களாக அல்லாஹ்வின் விஷேட நாட்டத்தையும் ரஹ்மத்தையும் சார்ந்துள்ளது. அதாவது ஹயாத் என்பது அதன் அத்தனை கூறுகளும் உபரிகளும் நுட்பங்களும் உள்ளடங்கலாக நன்றி, வணக்கம், இறை துதி என்பவற்றுக்கான மூலமாகும். இதன் காரணமாகத்தான் சிரேஷ்டமான இந்த அருளுக்குத் திரையாக அமைந்துவிடாதிருப்பதற்காக வெளிப்படையான எந்தக் காரணகாரியங்களும் அதனோடு பிணைக்கப்பட்டில்லை. கர்ப்பத்தில் இருக்கும் சிசுக்களின் ஆத்மீக மற்றும் பௌதீக ரீதியான முகங்களில் வல்லோன் அல்லாஹ்வுடைய இரண்டு விதமான பிரதிபலிப்புகள் காணப்படுகின்றன. ஒன்று அவை அல்லாஹ்வுடைய வஹ்தத்தையும் அஹதியத்தையும் சமதியத்தையும் பிரதிபலிக்கின்றன. அதாவது ஒவ்வொரு குழந்தையும் அடிப்படையான உறுப்புகள் விடயத்திலும் உடல் உள ரீதியான சாதனங்கள் விடயத்திலும் பிற மனிதர்களுக்கு ஒப்பாக இருக்கின்றது. இந்த வகையில் ஒவ்வொரு குழந்தையும் படைப்பாளனும் வடிவமைப்பாளனுமாகிய ஏக இரட்சகனுடைய வஹ்தத்துக்கு சான்றுபகர்கின்றது. ஒவ்வொரு குழந்தையும் தத்தமது மெய்ம்மொழியால் “என்னை இந்த முகத்தையும் உறுப்புகளையும் கொண்டு வடிவமைத்தவனே நிச்சயமாக உறுப்புக்கள் விடயத்தில் என்னை ஒத்ததாகப் படைக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்த மனிதர்களையும் படைத்து வடிவமைத்தவனாவான்” என்று சான்றுபகர்கின்றது. ஆம் கருப்பையில் இருக்கும் சிசுவின் இந்த மொழி விளங்கிக்கொள்ள முடியாத ஒன்றல்ல. அது நியதிகளுக்கும் சீரான படிமுறை வளர்சிக்கும் உற்பட்டதாக இருப்பதாலும் தனது இனத்தையும் சார்ந்ததாக இருப்பதால் அந்த மொழியை இலகுவாக அறிந்து கொள்ளவும் விளங்கிக் கொள்ளவும் முடியும். இந்த வகையில் ஒவ்வொரு சிசுவும் மறைவான உலகிலிருந்து இருப்புலகை நோக்கி நீண்டுள்ள ஒரு கிளையாகும்; ஒரு நாவாகும். இரண்டாவது கோணம் ஒரு குழந்தையின் தனிப்பட்ட ஆற்றல்களையும் இயல்புகளையும் உள்ளடக்கிய ஆன்மீக முகம் அல்லது அகத் தோற்றமானது அதன் மெய்ம்மொழியால் தனது வடிவமைப்பாளனுடைய விஷேட நாட்டம், விருப்பம், ரஹ்மத் என்பவற்றையும், தான் எத்தகைய காரணகாரியங்களிலும் தங்கி வெளிப்படவில்லை என்பதையும் வானலாவ உரத்த தொனியில் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றது. இந்த அகத் தோற்றமானது மறைவானவற்றில் மிகவுமே மறைவான இடத்திலிருந்து வெளிப்படுவதால் ஆதி அந்தமில்லாத அறிவின் சொந்தக்காரனைத் தவிற வேறு யாராலும் இருப்பு நிலையை அடையும் வரை அதன் யதார்த்தத்தைப் பார்க்கவோ வரையறுக்கவோ முடியாது. சிசு தாயின் கருவறையில் இருக்கும் போது இந்த முகத்தின் ஆயிரத்தில் ஒன்றேனும் பார்வைக்குத் தெரிவதில்லை. சுருக்கமாக சிசுவின் திறன்களையும் இயல்புகளையும் பொதியப்பெற்றுள்ள அதன் ஆத்மீக மற்றும் பௌதீக முகங்களில் ஒரு பக்கம் அல்லாஹ்வின் வஹ்தானியத்துக்கான அத்தாட்சிகளும் மறுபக்கம் இறை நாட்டம் இறை விருப்பம் என்பவற்றுக்கான வலுவான அத்தாட்சிகளும் காணப்படுகின்றன. அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் மறைவான ஐந்து விடயங்களோடு தொடர்பான இன்னும் சில குறிப்புகளையும் எழுத நினைக்கிறேன். இப்போதைக்கு இதை விட அதிகம் எழுதுவதற்கு நேரமும் சூழலும் எனது நிலைமையும் இடம் தருவதாக இல்லை. எனவே இத்தோடு முடித்துக் கொள்கிறேன். اَل۟بَاقٖى هُوَ ال۟بَاقٖى ஸஈத் நூர்ஸி سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

