(இருபத்தி ஐந்தாவது மின்னலின் இணைப்பு) (குழந்தையை இழந்தவருக்கான தேற்றம்) بِاس۟مِهٖ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ கண்ணியத்திற்குறிய மறுமைச் சகோதரன் ஹாஃபிஸ் ஹாலித் அவர்களே! وَبَشِّرِ الصَّابِرٖينَ اَلَّذٖينَ اِذَٓا اَصَابَت۟هُم۟ مُصٖيبَةٌ قَالُٓوا اِنَّا لِلّٰهِ وَاِنَّٓا اِلَي۟هِ رَاجِعُونَ சகோதரனே! உங்கள் குழந்தையின் மரணச் செய்தி என்னையும் ஆழ்ந்த கவலைகுள்ளாக்கியது. ஆனால் اَلْحُكْمُ لِلَّهِ விதியின் தீர்ப்பைப் பொருந்திக் கொள்வதும் இறைவனிடம் சரணடைவதும் இஸ்லாத்துக்கென்றே உள்ள தனித்துவப் பண்புகளாகும். வல்லோன் அல்லாஹ் உங்களுக்கு அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக. மரணித்த அந்தக் குழந்தையையும் உங்களுக்கான மறுமைச் சொத்தாகவும், மறுமையில் பரிந்துரையாகவும் ஆக்கிவைப்பானாக. உங்களுக்கும் உங்களைப் போன்ற முத்தகீயான முஃமின்களுக்கும் பெரியதொரு சுபசோபனத்தையும் உண்மையானதொரு ஆறுதலையும் தரக் கூடிய ஐந்து குறிப்புக்களை இங்கு தெளிவுபடுத்துகிறோம்.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Mektubat
The Seventeenth Letter
وِلْدَانٌ مُخَلَّدُونَ என்ற குர்ஆனிய சுபசோபனத்தில் மிக இனிமையான அர்த்தங்களும் இரகசியங்களும் பொதிந்துள்ளன. அதாவது, இந்த வசனம் வயதுக்கு வர முன்னர் மரணிக்கும் குழந்தைகள் நித்தியமான சுவனத்தில், நித்திய நேசத்துக்குரியவர்களாக, சுவனம் செல்லும் பெற்றோருக்கு நித்தியமான கண்குளிர்ச்சியை வழங்கும் காரணிகளாக இருக்கப் போவதையும், சுவனத்தில் குழந்தைகளுடனான கொஞ்சல்கள், மழலை நேசம் போன்ற மிகவும் இதமான ஒரு இன்பங்களும் இருக்கின்றன என்பதையும், சுவனம் எல்லா வகையான இன்பங்களையும் தருகின்ற ஒரு தங்குமிடம் என்பதையும் சுபசோபனம் கூறுகின்ற ஒரு வசனமாகும். கூடவே “சுவனம் இனப்பெருக்கத்துக்கான இடம் அல்ல என்பதால், பிள்ளைப் பாசம், மழலைகளுடனான கொஞ்சல்கள் போன்ற இன்பங்கள் அங்கு கிடையாது” என்று கூறுபவர்களின் தீர்ப்புக்களில் எந்த வித உண்மைத் தன்மையும் கிடையாது என்பதையும், உலகில் ஏரத்தாழ பத்து வருடங்கள் குறுகியதொரு காலத்தில் கஷ்ட துண்பங்களுடன் கூடிய பிள்ளைப் பாசத்துக்குப் பதிலாக வேதனைகளோ கலப்படமோ அற்ற மில்லியன் கணக்கான வருட நித்திய பாசத்தையும் மலலை வாசத்தையும் ஈமான் கொண்டவர்கள் பெற்றுக் கொள்வார்கள் என்பதையும் وِلْدَانٌ مُخَلَّدُونَ என்ற இந்த வசனம் சாடையாக சுபசோபனம் கூறுகின்றது.
ஒரு சமயம் ஒரு மனிதன் சிறைப்படுத்தப்பட்டான். அவனுடைய அழகிய குழந்தையும் அவனிடம் அனுப்பப்பட்டிருந்தது. அந்த நாதியற்ற சிறைவாசி தனக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவிக்கின்ற அதே சமயம் தனது மகனுக்கு ஒரு நல்வாழ்வை அளிக்க முடியாததை எண்ணி, அவனது கஷ்டத்தையிட்டும் வேதனை அடைபனாகக் காலத்தைக் கடத்தினான். இப்படியிருக்க, இரக்க உள்ளம் கொண்ட அரசன் அவனிடம் ஒரு தூதுவனை அனுப்பி “இந்தப் பிள்ளை உன்னுடைய மகன் என்பதில் எந்த சந்தேகமுமில்லை. ஆனால் எனது அதிகாரத்தின் கீழ் எனது தேசத்தைச் சேர்ந்தவனென்பதால் நான் அவனுக்கு அழகியதொரு வாழ்க்கையை அளிக்க விரும்புகிறேன். எனவே நான் அவனை அழகியதொரு மாளிகையில் வளர்க்கப் போகிறேன்” என்று கூறினார். அந்த மனிதனோ ஓலமிட்டு அழ ஆரம்பித்தான். “எனது கண்குளிர்ச்சியான மகனைத் தர மாட்டேன்” என்று புலம்பினான். அவனது நண்பர்கள் அவனிடம் “உனது இந்தப் புலம்பல்கள் அர்த்தமற்றது. நீ உண்மையாகவே உனது மகன் மீது அனுதாபப்படுகின்றாய் எனில் அவனை இந்த அழுகி நாற்றமெடுக்கும் நோவினை மிக்க சிறைச்சாலையிலிருந்து நிம்மதியும் சந்தோஷமுமிக்க ஒரு மாளிகைக்கு செல்வதற்கு அனுமதி! மாறாக நீ உனது நஃப்ஸுக்கு அடிமைப்பட்டு நஃப்ஸின் சுய நலத்துக்காக மகனை இங்கு தடுத்துக்கொண்டால் தற்காலிகமான சிறியதொரு நலவுடன் கூடவே மகனின் கஷ்டங்களைக் கண்டு அதிகமதிகம் நோவினையும் வேதனையும் அடைவாய். அவன் அங்கே சென்றால் உனக்கு ஆயிரம் நலவுகள் காத்திருக்கின்றன. ஏனெனில் அரசனின் கருணையை உன்பக்கம் ஈர்ப்பதற்கான காரணியாக அவன் அமையலாம். உனக்கான பரிந்துரையாளனாகக்கூட மாறிவிடலாம். அரசன் பிள்ளையை உன்னுடன் சந்திக்க வைக்க விரும்புவார். நிச்சயமாக அந்த சந்திப்புக்காக உனது மகனை சிறைக்கு அனுப்ப மாட்டார். மாறாக உன்னை சிறையிலிருந்து விடுவித்து அந்த மாளிகையில் பிள்ளையுடன் சந்திக்க வைப்பார். ஆனால் இவையெல்லாம் மன்னருக்கு விசுவாசமானவனாகவும் மன்னரின் நம்பிக்கைக்குரியவனாகவும் இருப்பதன் மூலம் மாத்திரமே சாத்தியமாகும்” என்று கூறினர். கண்ணியத்துக்குரிய சகோதரா! இதோ இந்த உதாரணத்தைப் போன்று, உன்னைப் போன்ற முஃமினானவர்களின் குழந்தைகள் வபாத்தாகினால் பின்வருமாறு சிந்திப்பதே பொருத்தமான வழிமுறையாகும்: இந்தக் குழந்தை பாவமறியாததாகும், அதன் படைப்பாளனோ பேரன்பும் அருளும் வல்லமையும் மிக்கவனாக இருக்கிறான். எனது குறைபாடுமிக்க ஆதரவுக்கும் பராமரிப்புக்கும் பதிலாக அவனது பரிபூரணத்துவமான ரஹ்மத்துக்குள்ளும் உவகைக்குள்ளும் அடைக்கலம் கொடுத்துள்ளான். நோவினையும் வேதனைகளும் கஷ்டங்களும் சூழ்ந்த உலக சிறையிலிருந்து விடுவித்து ஜென்னதுல் ஃபிர்தௌஸுக்கு அனுப்பியுள்ளான். நிச்சயமாக அந்தப் பிள்ளையின் மகிழ்ச்சிக்க்கு எந்தக் குறைவும் இருக்காது. இந்த உலகில் தங்கியிருப்பின், எப்படிப்பட்டவனாக ஆகியிருப்பான் என்பதை யாரறிவார்? எனவே நான் அந்தப்பிள்ளைக்காக வருந்த மாட்டேன், அவனை பாக்கியசாலியாகவே காண்கின்றேன். எனது நஃப்ஸின் சுய நலத்துக்காக என் மீது கூட அனுதாபப்பட மாட்டேன், வேதனைப்பட்டு ஓலமிட மாட்டேன். ஏனெனில் உலகில் நீடித்திருப்பின், பத்து வருடங்கள் கழிந்து பார்த்தால் தற்காலிகமான வேதனைகளோடு கூடிய ஒரு இன்பத்தையே எனக்கு வழங்கியிருப்பான். ஸாலிஹான பிள்ளையாக வளர்ந்து உலக விடயங்களிலும் தேர்ந்தவனாக இருந்திருப்பின் சில வேளை எனக்கு உதவி ஒத்தாசையாக இருந்திருப்பான். ஆனால் வபாத் மூலமாக நித்திய சுவனத்தில் பல பத்து மில்லியன் கணக்கான வருட பிள்ளைப் பாசத்துக்குக் காரணியாகவும் எனது நித்திய விமோசனத்துக்கான ஒரு பரிந்துரையாளனாகவும் மாறியிருக்கிறான். உடனடியான ஆனால் சந்தேகத்திற்கிடமான ஒரு நலவை இழந்து அதற்குப் பதிலாக சந்தேகத்திற்கிடமற்ற நிலையான ஆயிரம் நலவுகளை பெற்றுக்கொண்ட ஒருவன், நிச்சயமாக கைசேதப்படுகின்ற அளவு வேதனை அனுபவிக்க மாட்டான்; நம்பிக்கை இழந்து ஒப்பாடி வைக்க மாட்டான்.
மரணித்த அந்தப் பிள்ளை பேரன்பும் அருளும் மிக்க படைப்பாளனாகிய அல்லாஹ்வின் ஒரு படைப்பாகும். அவனுடைய அடிமையாகும். அவ்வாறே வடிவமைப்பின் அடிப்படையிலும் அவனுடைய ஒரு கலைச் சிற்பமாகவும் உடமையாகவும் இருக்க, தற்காலிகமாக பெற்றோருடைய கண்காணிபுக்குக் கீழ் வழங்கியுள்ளான். அவனே அந்தத் தாய் தந்தையரை அந்தப் பிள்ளைக்கு பணிவிடையாளர்களாக ஆக்கினான். பெற்றோரின் அந்தப் பணிவிடைக்குப் பகரமான ஒரு அன்பளிப்பாகவே அவர்களுக்கு இன்பகரமான ஒரு பாசத்தையும் நேசத்தையும் வழங்கியுள்ளான். தற்போது ஆயிரத்தில், தொள்ளாயிரத்துத் தொன்னூற்றொன்பது பங்குகளுக்குச் சொந்தக்காரனான பேரன்பும் அருளும்மிக்க அந்தப் படைப்பாளன் தனது ரஹ்மத்துக்கும் ஹிக்மத்துக்கும் ஏற்ற வகையில் அந்தப் பிள்ளையை உனது கையிலிருந்து எடுத்துக் கொண்டால், உனது பணிக்கு முற்றுப் புள்ளி வைத்தால், மேலோட்டமான ஒரே ஒரு பங்கை வைத்துக் கொண்டு, உண்மையான ஆயிரம் பங்குக்குச் சொந்தக்காரனான எஜமானனை முறைப்பட்டுக் கொள்ளும் விதமாக நம்பிக்கையிழந்து ஒப்பாரி வைப்பது ஈமான் கொண்டவர்களுக்கு அழகல்ல. பொடுபோக்குக் காரர்களுக்கும் வழிகேடர்களுக்கும் வேண்டுமென்றால் அழகானதாக இருக்கலாம்.
ஒரு வேளை உலகம் நித்தியமானதாக இருந்து, மனிதனும் அதில் நிரந்தரமாகத் தங்குபவனாக இருந்து, அதில் ஏற்படும் பிரிவுகளும் நிரந்தரப் பிரிவுகளாக இருந்திருந்தால் துன்பம் பிரவாகிக்கும் ஒப்பாரிகளும் கைசேதத்தை வெளிப்படுத்தும் அவல ஓலங்களும் அர்த்தமுள்ளவையாக இருந்திருக்கும். ஆனால் இந்த உலகம் தற்காலிகமான ஒரு தரிப்பிடமாகும் என்பதே உண்மையாகும். மரணித்த பிள்ளை எங்கு நோக்கிப் பயணித்ததோ நீங்களும் நாங்களும் கூட அங்குதான் செல்வதற்குள்ளோம். மேலும் இந்த மரணம் அந்தப் பிள்ளைக்கு மாத்திரம் உரித்தானதல்ல. அது அனைவருக்குமான பொதுப் பாதையாகும். அவ்வாறே இங்குள்ள பிரிவுகளும் கூட நிரந்தரமானதல்ல. எதிர்வர உள்ள ஆலமுல் பர்ஸஹிலும் சுவனத்திலும் சந்திக்க உள்ளோம். எனவே اَلْحُكْمُ لِلَّهِ என்று கூற வேண்டும். அவனே தந்தான், அவனே எடுத்துக்கொண்டான். “அல்ஹம்துலில்லாஹி அலா குல்லி ஹால்” என்று பொறுமையோடு நன்றி செலுத்த வேண்டும்.
அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் மிக இதமான, மிக அழகான, மிக இனிமையான, மிகக் கண்குளிர்ச்சியான பிரதிபலிப்புக்களில் ஒன்றாக இருக்கின்ற பாசமானது, ஒளிமயமானதொரு நிவாரணியாகும். காதலைவிட அதிக கூர்மை மிக்கதாகும். விரைவாக அல்லாஹ்வை அடைந்து கொள்வதற்கான ஒரு ஊடகமாகும். உருவகக் காதல்களும், உலகியல் காதல்களும் பல்வேறு அசாத்தியப்பாடுகளைத் தாண்டி மிகவும் அரிதாகவே உண்மைக் காதலாக பரிணாமமடைந்து ரப்புல் ஆலமீனை அடைய வழி செய்கின்றது. ஆனால், பாசமானது, எவ்வித அசாத்தியப்பாடுகளுமின்றி மிகக் குறுகிய, மிகத் தூய்மையான ஒரு பாதையில் உள்ளத்தை அல்லாஹ்வுடன் பிணைத்துவிடுகின்றது. தாயாகட்டும் தந்தையாகட்டும் தமது பிள்ளைகளை உலகம் போன்று நேசிப்பார்கள். பிள்ளை அவர்களது கையிலிருந்து எடுக்கப்படும் போது, அவர்கள் பாக்கியசாலிகளாகவும் உண்மை முஃமின்களாகவும் இருப்பின் உலகிலிருந்து தமது முகத்தைத் திருப்பி, உண்மையான அருளாளனை நோக்கி மீள்வார்கள். “சந்தேகமே இன்றி உலகம் தற்காலிகமானதாகும். எனவே இது எந்த வகையிலும் ஆத்மார்த்தமான பற்றுக்கு அருகதையற்றதாகும்” என்று கூறிவிட்டு பிள்ளை எங்கு சென்றதோ அந்த இடத்தைப் பற்றி அலட்டிக்கொள்ள ஆரம்பிப்பார்கள். இதன் மூலம் உயர்வான ஆத்மீக அந்தஸ்துகளை அடைந்துகொள்வார்கள். பொடுபோக்குக்காரர்களும் வழிகேடர்களும் மேற்படி ஐந்து சத்தியங்களிலும் பொதிந்துள்ள நிம்மதிகள், சுபசோபனங்களிலிருந்து தொலைவானவர்களாவர். பின்வரும் உதாரணத்தின் மூலம் அவர்களது நிலமை எவ்வளவு கவலைக்கிடமானது என்பதை விளங்கிக்கொள்ளலாம். உதாரணமாக பொடுபோக்கிலும் வழிகேட்டிலும் மூழ்கி உலகை நிரந்தரமானதாகவும் மரணத்தை சூன்யமாக அல்லது நித்திய பிரிவாகவும் கருதுகின்ற ஒரு மனிதன் தனது மிகவும் நேசத்திற்குரிய அழகிய ஒரே ஒரு பிள்ளையை மரணத்தின் வாசலில் காண்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இப்போது அவன் தனது குழந்தையின் அழகிய சுவனத்து வாழ்வைச் சிந்திக்க முடியாத தன்னுடைய பொடுபோக்கு மற்றும் வழிகேட்டின் காரணமாக அந்தக் குழந்தை உலகின் பஞ்சணை மெத்தைகளுக்குப் பதிலாக மண்ணறையின் மண்தரையில் உறங்குவதை எண்ணிப்பார்க்கின்ற போது எப்படிப்பட்ட கவலைக்கிடமான, பிடிமானமற்ற ஒரு வேதனையை அனுபவிப்பான் என்பதை சிந்தித்துப் பாருங்கள். ஆனால் ஈருலக நிம்மதிக்கும் காரணியான ஈமானும் இஸ்லாமும் முஃமினைப் பார்த்து “மரண வேதனையில் தவிக்கும் உனது பிள்ளையை பேரன்பும் அருளும்மிக்க படைப்பாளன் அல்லாஹ் கோரமான இந்த உலகிலிருந்து விடுவித்து அவன் ஏற்பாடு செய்துள்ள அழகிய சுவனச்சோலைக்கு அழைத்துக் கொள்கிறான். அந்தக் குழந்தை உனக்கான பரிந்துரையாளனாகவும் நிரந்தரமாகவே உனது பிள்ளையாகவும் ஆகப்போகின்றது. இது நிரந்தரமான பிரிவல்ல. எனவே அலட்டிக் கொள்ளாதே. اَلْحُكْمُ لِلَّه * اِنَّا لِلَّهِ وَاِنَّا اِلَيْهِ رَاجِعُونَ என்று கூறி பொறுமையை கைக்கொள்” என்று கூறும். اَل۟بَاقٖى هُوَ ال۟بَاقٖى ஸஈத் நூர்ஸி

