Mektubat

The Twentieth Letter

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ لَٓا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَح۟دَهُ لَا شَرٖيكَ لَهُ لَهُ ال۟مُل۟كُ وَ لَهُ ال۟حَم۟دُ يُح۟يٖى وَ يُمٖيتُ وَ هُوَ حَىٌّ لَا يَمُوتُ بِيَدِهِ ال۟خَي۟رُ وَ هُوَ عَلٰى كُلِّ شَى۟ءٍ قَدٖيرٌ وَ اِلَي۟هِ ال۟مَصٖيرُ ஸுபஹ் மற்றும் மஃரிப் தொழுகைகளுக்குப் பின்னர் ஓதி வருவதில் ஏராளமான பயன்களைக் கொண்டதாகவும் ஒரு ஸஹீஹான அறிவிப்பின் பிரகாரம் இஸ்முல் ஆஃஸமுடைய அந்தஸ்தைப் பெதியப்பெற்றதாகவும் உள்ள இந்தத் தவ்ஹீதிய வசனத்தில் பதினொரு கூற்றுகள் உள்ளன. அந்த ஒவ்வொரு கூற்றிலும் ஒவ்வொரு சுபசோபனமும் ஒவ்வொரு நற்செய்தியும் ருபூபியத் சார்ந்த ஒவ்வொரு தவ்ஹீதிய அந்தஸ்தும் இஸ்முல் ஆஃஸம் என்ற புள்ளியில் வஹ்தத்துடைய மாட்சிமையையும் வஹ்தானியத்துடைய பூரணத்துவத்தையும் பிரகடனம் செய்கின்ற ஒவ்வொரு குறிப்பும் பொதிந்துள்ளன. இந்த மகத்தான உயர் சத்தியங்களுக்கான தெளிவுகளை வேறு இடங்களில் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் ஒரு வாக்குறுதி என்ற வகையில் இப்போதைக்கு இரண்டு பதவிகளும் ஒரு முன்னுரையும் உள்ளடங்களான மிகவும் சுருக்கமான ஒரு விளக்கத்தைத் தருகிறோம்.

§2

திண்ணமாக அறிந்துகொள்ளுங்கள்: படைப்பின் மிக உயர்வான நோக்கமாகவும் மனித இயல்பின் மிகப் புனிதமான விளைவாகவும் இருப்பது அல்லாஹ்வை ஈமான்கொள்வதாகும். மேலும் மானுடத்தின் மிக உன்னதமான அந்தஸ்தாகவும் மிகப் பெரிய பதவியாகவும் இருப்பது அல்லாஹ் மீதான ஈமானில் பொதிந்துள்ள மாஃரிபதுல்லாஹ் ஆகும். மேலும் மனித, ஜின் வர்க்கத்தினருக்கான மிகத் தெளிவான நிம்மதியாகவும் மிகச் சுவையான அருளாகவும் இருப்பது மாஃரிபதுல்லாஹ்வினுள் உள்ள முஹப்பதுல்லாஹ் ஆகும். அவ்வாறே மனித ஆத்மாவுக்கான மிகத் தூய்மையான மகிழ்ச்சியாகவும் மனித உள்ளத்துக்கான மிகப் பரிசுத்தமான திருப்தியாகவும் இருப்பது முஹப்பதுல்லாஹ்வினுள் உள்ள ஆத்மார்த்தமான இன்பங்களும் சுவைகளுமாகும். ஆம் எல்லா வகை ஹகீகத்தான நிம்மதிகளும் தூய்மையான மகிழ்ச்சிகளும் கண்குளிர்ச்சியான அருட்கொடைகளும் புனிதமான சுவைகளும் நிச்சயமாக மஃரிபதுல்லாஹ்விலும் முஹப்பதுல்லாஹ்விலுமே இருக்கின்றன. இவை இல்லாத போது எந்த ஒரு மகிழ்ச்சியும் நிம்மதியும் இன்பமும் ஹகீகத்தானதாகவோ தூய்மையானதாகவோ இருக்க முடியாது. சத்திய இரட்சகனை அறிந்து, நேசிப்பவன் எல்லையற்ற நிம்மதிகளுக்கும் அருள்களுக்கும் அருளொளிகளுக்கும் இரகசியங்களுக்கும் ஒன்றோ திறனளவில் அல்லது செயலளவில் பாத்திரமாக உள்ளான். அவனை உண்மையாக அறியாமலும் நேசிக்காமலும் இருப்பவன் ஆத்மீக மற்றும் லௌகீக ரீதியில் எல்லையற்ற கஷ்டங்கள் கைசேதங்களிலும் வேதனைகள் சந்தேகங்களிலும் சிக்கித் தவிப்பான். ஆம், கொந்தளிப்பான இந்த உலகில், திக்குத் தெரியாத மனிதர்களுக்கு மத்தியில், எத்தகைய பயன்களையும் கனிகளையும் தராத ஒரு வாழ்வில், முகவரியோ உத்தரவாதமோ பாதுகாப்போ இல்லாமல், கேட்பார் பார்ப்பாரின்றி, இயலாமை, பலவீனம், வறுமை என்பவற்றின் மொத்தமாக உலாவிக்கொண்டிருக்கும் மனிதன் உலகத்துக்கே அரசனாகத்தான் இருந்தாலும் அதற்கு என்ன மதிப்புத்தான் இருக்க முடியும்? இதோ இந்தக் கொந்தளிப்பான தற்காலிக உலகில் திக்குத் தெரியாமல் அலையும் மனித குலத்தோடு அள்ளுண்டு செல்லும் மனிதன் தனது எஜமானனை, அதிபதியை அறியாவிட்டால், தனது ஏக புகலிடமாகிய ரப்புல் ஆலமீனைக் கண்டடையாவிட்டால் அவன் எவ்வளவு கைசேதத்துக்குரியவனாக இருப்பான் என்பதை எல்லோராலும் உணர்ந்துகொள்ள முடியும். மாறாக அவன் தனது அதிபதியைக் கண்டறிந்துவிட்டால் அவனது ரஹ்மத்தில் புகலிடம் தேடுவான், அவனது வல்லமையில் சார்ந்திருப்பான். அப்போது அந்தக் கொந்தளிப்பான உலகம் ஒரு சுற்றுளாத் தளமாகவும் ஒரு வியாபாரத் தளமாகவும் மாறிவிடும்.

§3

மேற்படி தவ்ஹீதிய வசனத்தின் பதினொறு கூற்றுகள் உள்ளன. அந்த ஒவ்வொரு கூற்றிலும் ஒவ்வொரு சுபசோபனமும் ஒவ்வொரு நிவாரணமும் அந்த ஒவ்வொரு நிவாரணத்திலும் ஒவ்வொரு ஆத்மார்த்தமான இன்பமும் பொதிந்துள்ளது.

§4

لاَ اِلَهَ اِلاَّ اللَّهُ என்பதாகும். இந்தக் கூற்றில் உள்ள சுபசோபனம் இதோ: தேவைகளால் சூழப்பட்டவனாகவும் எண்ணற்ற எதிரிகளால் இலக்கு வைக்கப்பட்டவனாகவும் உள்ள மனிதனுடைய ஆத்மா இந்த வார்த்தையில் மகத்தான ஒர் உதவித் தளத்தையும் ஆதாரத் தளத்தையும் கண்டுகொள்ளும். அந்த உதவித் தளம் அவனது சர்வ தேவைகளையும் நிவர்த்தி செய்யக்கூடிய ஒரு ரஹ்மத் கருவூலத்தின் வாயிலை அவனுக்காகத் திறந்துகொடுக்கும். அவ்வாறே அந்த ஆதாரத் தளமும் அவனுக்கெதிராகத் திரண்டுள்ள ஒட்டுமொத்த எதிரிகளின் தீங்குகளையும் பொருட்படுத்தாமல் உறுதியாக நிற்பதற்குத் துணையாக உள்ள ஒரு வல்லோனை, அதாவது தனது வணக்கத்துக்குரிய படைப்பாளனை அறிமுகம் செய்து காண்பிக்கும். அதன் மூலம் அவனது உள்ளம் முத்லக்கான வேதனைகளிலிருந்தும் ஆத்மா கவலைக்கிடமான கைசேதங்களிலிருந்தும் பாதுகாப்புப் பெற்று நித்தியமான அமைதியையும் நிரந்தரமான மகிழ்ச்சியையும் கண்டுகொள்ளும்.

§5

وَحْدَهُ என்ற இந்தக் கூற்றிலும் நிம்மதியும் நிவாரணமும் பொதிந்த ஒரு சுபசோபனம் உள்ளது. அதாவது, பிரபஞ்சத்தின் எண்ணற்ற படைப்புகளுடனான தொடர்புகள் காரணமாகவும் அந்தத் தொடர்புகளால் ஏற்படும் அழுத்தங்கள், குழப்பங்கள், சிக்கல்கள் காரணமாகவும் ஏற்படுகின்ற ஒரு வகையான போதையிலும் மயக்கத்திலும் மூழ்கும் நிலைக்கு ஆளாகின்ற மனித ஆத்மாவுக்கும் உள்ளத்துக்கும் وَحْدَهُ என்ற கூற்று ஓர் புகலிடமாகவும் ஒரு மீற்பராகவும் இருக்கும். அது அவனை எல்லாவிதமான அழுத்தங்கள், குழப்பங்கள், சிக்கல்களிலிருந்தும் பாதுகாக்கும். அதாவது, “அல்லாஹ் ஒருவனாவான். ஏனைய வஸ்துகளிடம் விண்ணப்பிப்பதன் மூலமும் ஆசி வைப்பதன் மூலமும் களைப்படையாதே. அவற்றிடம் தாழ்ந்து சென்று நன்றிக்கடன்களுக்கு ஆளாகாதே. அவற்றுக்காக வக்காளத்து வாங்கித் தலை குணியாதே. அவற்றின் பின்னால் அள்ளுண்டு சென்று கஷ்டங்களைத் தேடிக்கொள்ளாதே. அவற்றைக் கண்டு அஞ்சி நடுங்காதே. பிரபஞ்சத்தின் அதிபதி ஒருவனாவான். அனைத்தின் திறவுகோள்களும் அவனிடமேயாகும். அனைத்தின் கடிவாளங்களும் அவன் கரங்களிலேயாகும். அனைத்தும் அவனது கட்டளை மூலமே தீர்க்கப்படுகின்றன. நீ அவனை அடைந்தால் நீ ஆசிக்கின்ற அனைத்தையும் அடைந்துவிட்டாய். எண்னற்ற நன்றிக்கடன்களிலிருந்தும் அச்சங்களிலிருந்தும் மீட்சி பெற்றுவிட்டாய்” என்று அந்த وَحْدَهُ அவனிடம் ஆத்மார்த்தமாகக் கூறும்

§6

لَا شَرٖيكَ لَهُ ஆகும். அதாவது அவனது உலூஹியத்திலும் ஆதிபத்தியத்திலும் பங்குதாரர்கள் இல்லை. அதாவது அல்லாஹ் ஒருவனாவான், பலராக இருக்க முடியாது. அவ்வாறே அவனது ருபூபியத்திலும் பரிபாலிப்பிலும் நிர்வாகத்திலும் படைப்பிலும் கூட பங்குதாரர்களுக்கு இடமில்லை. சில போது அரசன் ஒருவராக இருப்பார், ஆட்சியில் இணை துணைகள் இருக்காது, ஆனால் நிர்வாகத்தில் அந்த அரசனின் உத்தியோகத்தர்கள் பங்குதாரர்களாகத் தொழிற்படுவதைப் பார்க்கிறோம். அரசனின் சந்நிதானத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாமல் அவர்கள் தடையாக இருப்பார்கள். “எங்களிடம் விண்ணப்பியுங்கள்” என்று கூறுவார்கள். ஆனால் ஆதி அந்தமில்லாத அதிபதியாகிய சத்திய இரட்சகன் ஆட்சி அதிகாரத்தைப் போன்றே ருபூபியத்திலும் நிர்வாகத்திலும்கூட இணை, துணைகளுக்கோ பங்குதாரர்களுக்கோ தேவையற்றவனாவான். அவனது கட்டளையும் நாட்டமும், அதிகாரமும் பலமும் இன்றி எந்த ஒன்றும் எந்த ஒன்றிலும் தலையிட முடியாது. எந்தத் தடைகளுமின்றி அனைத்தும் நேரடியாக அவனிடமே முறையிட முடியும். பங்குதாரர்களோ துணைவர்களோ இல்லை என்பதால் அவனிடம் முறையிடுகின்ற மனிதனிடம் “தடை உள்ளது, உன்னால் நேரடியாக அவனது சந்நிதானத்துக்குச் செல்ல முடியாது” என்று யாராலும் கூற முடியாது. இதோ இந்த வார்த்தை மனித ஆத்மாவுக்கு வழங்குகின்ற சுபசோபனம் மிக மகத்தானதாகும். அதாவது, ஈமானை அடைந்துகொள்ளும் மனித ஆத்மா எந்தத் தடைகளோ தலையீடுகளோ தரகர்களோ இன்றி எல்லா நிலைமைகளிலும் எல்லாத் தேவைகளின் போதும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் ஆதி அந்தங்களின் அரசனாகவும் ரஹ்மத் கஜானாக்களின் அதிபதியாகவும் நித்திய நிம்மதிகளுக்கான ஏக முகவரியாகவும் இருக்கும் சர்வ மாட்சிமையும் அழகும் பூரணத்துவமுமிக்க வல்லோனின் சந்நிதானத்துக்குச் சென்று தனது தேவைகளை முறையிட முடியும். அவ்வாறு அவனது ரஹ்மத்தை அடைந்து அவனது வல்லமையில் சார்ந்து நின்று பூர்த்தியான திருப்தியையும் மனநிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடைந்துகொள்ள முடியும்.

§7

لَهُ ال۟مُل۟كُ ஆகும். அதாவது முல்க் மொத்தமாக அவனுடையதாகும். நீயும் அவனுடைய முல்க் ஆகவும் அதே நேரம் அவனுடைய மம்லூக், அதாவது அடிமையுமாகவும் அதே நேரம் அவனுடைய முல்க்கில் உத்தியோகம் பார்ப்பவனாகவும் உள்ளாய். இதோ, இந்த வார்த்தை நிம்மதியும் நிவாரணமும் மிக்க இனிமையான ஒரு சுபசோபனத்தை உனக்குக் கூறுகிறது: மனிதனே! உனக்கு நீயே மாலிக் என்றும் அதிபதி என்றும் நினைத்துக்கொள்ளாதே. உன்னால் உன்னை நிர்வகிக்க முடியாது. அந்தச் சுமை மிகவும் கடினமானதாகும். நீயாக உன்னைப் பாதுகாத்துக்கொள்ளவும் முடியாது. தீங்குகள், ஆபத்துகளிலிருந்து பாதுகாப்புப் பெற்று உனது தேவைகள் அனைத்தையும் உன்னால் நிறைவேற்றிக்கொள்ளவும் முடியாது. எனவே வீணாக அலட்டிக்கொண்டு நீயே உன்னை வருத்திக்கொள்ளாதே. முல்க் வேறொருவனுடையதாகும். அந்த மாலிக், அந்த அதிபதி சர்வ வல்லமையும் பேரன்பும் மிக்கவனாக உள்ளான். அவனது வல்லமையைச் சார்ந்து நில். அவனது ரஹ்மத்தை நிந்தனை செய்யாதே. கைசேதங்களை உதறித்தள்ளிவிட்டு கையிலிருப்பதைப் பார். கவலைகளைத் துறந்து நிம்மதியைக் காண். மேலும் பின்வருமாறு கூறும்: உன்னுடைய ஆத்மார்த்தமான நேசத்துக்கும் ஆழமான தொடர்புகளுக்கும் பாத்திரமாக இருக்கின்ற அதே சமயம் தாம் சந்திக்கின்ற அவலங்கள், அனர்த்தங்கள் மூலம் உன்னில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்துகின்ற, ஆனால் உன்னால் எதையுமே செய்து அதை மாற்ற முடியாத இந்தப் பிரபஞ்சமும் அதிலுள்ள வஸ்துகளும் பேரன்பும் அருளும் மிக்க ஒரு வல்லோனின் முல்க் ஆகும். முல்க்கை அதன் அதிபதியிடமே கையளித்துவிடு. அதன் நிர்க்கதிகளை அன்றி நிம்மதிகளை அனுபவி. அவன் சர்வ ஞானமும் பேரன்பும் மிக்கவனாவான். அவன் தனது முல்க்கில் விரும்பியவாறு நடந்துகொள்வான். விரும்பியவாறு மாற்றங்களை செய்வான். உனக்கு அதிர்ச்சியாக அமைகின்ற சந்தர்ப்பங்களில் இப்ராஹிம் ஹக்கைப் போன்று “மௌலா என்ன செய்கிறான் என்பதைப் பார்ப்போம், அவன் எதைச் செய்தாலும் அழகியதையே செய்வான்” என்று கூறு. உள்ளே நுழையாமல் யன்னலால் பார்ப்பதைப் போன்று பார்.

§8

وَ لَهُ ال۟حَم۟دُ ஆகும். அதாவது ஹம்தும் புகழும் நன்றிக்கடனும் அவனுக்கு மாத்திரம் உரியவையாகும், அவனுக்கே அருகதையுடையவையாகும். ஆகவே அருட்கொடைகள் அனைத்தும் அவனுடையவையாகும். அவனுடைய கருவூலங்களிலிருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன. அந்தக் கருவூலங்களியப் பொருத்தவரை அவை நித்தியமானவையாகும். இதோ இந்த வார்த்தை பின்வருமாறு சுபசோபனம் கூறுகின்றது: மனிதனே! அருட்கொடைகள் தீர்ந்து போவதேயிட்டுக் கைசேதப்படாதே. ஏனெனில் அவனது ரஹ்மத் கருவூலங்கள் தீர்ந்து போவதில்லை. முடிந்து போகின்ற இன்பங்களைக் கண்டு அவநம்பிக்கை கொண்டு அவல ஓலம் எழுப்பாதே. ஏனெனில் அந்த அருட் கனிகள் எல்லையில்லாத ஒரு ரஹ்மத்தின் கனிகளாகும். மரம் நித்தியமானதெனில் கனிகள் தீர்ந்து போவது வலியைத் தராது. ஏனெனில் அந்த இடம் கனிகளால் நிரம்பிக்கொண்டே இருக்கும். அருட்கொடைகளின் சுவைகள், இன்பங்களுக்குள் அந்த இன்பங்களைவிட பல நூறு மடங்கு இன்பங்கள் உள்ளன. ரஹ்மத்தின் உன் மீதான ஆதரவை சிந்திப்பதன் மூலம் கவலைக்குப் பதிலாக இன்பத்தைப் பல மடங்காக்க அதிகரித்துக்கொள்ளலாம். ஆம், ஒரு கீர்த்தி மிக்க அரசன் உனக்கு அன்பளிப்பாகத் தருகின்ற ஓர் ஆப்பிளின் சுவைக்குள் அரசனின் உன் மீதான ஈடுபாட்டின் மூலம் கிடைக்கின்ற நூறு அல்லது ஆயிரம் மடங்கு அதிகமான ஒரு சுவையும் உள்ளது. அவ்வாறே لَهُ الْحَمْدُ என்ற கூற்றின் மூலம், அதாவது ஹம்த், ஷுக்ர் என்பவற்றின் மூலம், அதாவது அருட்கொடைகளைப் பார்த்து அருள்பாலிக்கப்படுவதை உணர்வதன் மூலம், அதாவது அருளாளனை அறிவதன் மூலமும் அந்த அருளாளனின் ரஹ்மத்தையும் ஆதரவையும் ஈடுபாட்டையும் இரக்கத்தையும் அந்த அருட்கொடைகளின் அழியாத தொடர்ச்சியையும் சிந்திப்பதன் மூலமும் அருட்கொடைகளைவிட ஆயிரம் மடங்கு இனிமைமிக்க ஆத்மார்த்தமான ஓர் இன்பக் கதவு உனக்காகத் திறக்கப்படும்.

§9

يُح۟يٖى ஆகும். அதாவது ஹயாத்தை, வாழ்வை வழங்குபவன் அவனாவான். வாழ்வை வாழ்வாதாரங்கள் மூலம் தொடரச் செய்பவனும் அந்த வாழ்வாதாரங்களை வாழ்வின் தொடர்ச்சிக்காக ஏற்பாடு செய்தவனும் அவனேயாவான். மேலும் வாழ்வின் உன்னதமான நோக்கங்களும் மகத்தான விளைவுகளும் தொன்னூற்றொன்பது வீதமான அதன் கனிகளும் கூட அவனுக்குரியவையாகும்; அவனை நோக்கியவையாகும். இதோ, இந்தக் கூற்று தற்காலிகமான வாழ்வை உடைய, பலவீனத்தின் மொத்தமான மனிதனைப் பார்த்துப் பின்வருமாறு சுசுபசோபனம் கூறுகின்றது: மனிதனே! வாழ்வின் சுமையான சோலிகளையெல்லாம் உனது தோலில் தூக்கி வைத்துக்கொண்டு கவலையோடும் கைசேதத்தோடும் ஆதங்கத்தோடும் காலத்தைக் கடத்தாதே. பெறுமதியோ முக்கியத்துவமோ அற்ற உலகியல் ரீதியான கனிகளை மாத்திரம் பார்த்து உலகுக்கு வந்ததையிட்டுப் பச்சாதாபப்பட்டுவிடாதே. உனது உடல் என்ற கப்பலை இயக்கும் வாழ்வு என்ற இயந்திரம் ஹய்யுல் கய்யூம் ஆகிய அல்லாஹ்வுக்குச் சொந்தமானதாகும். அதற்கான தேவைகளை அவனே விநியோகம் செய்கிறான். அந்த வாழ்வின் ஏராளமான நோக்கங்களும் விளைவுகளும் உள்ளன. அவை அனைத்தும் அவனுக்குரியவையாகும். அவனை நோக்கியவையாகும். நீயோ அந்தக் கப்பலில் சுக்கானியாக இருக்கும் ஓர் உத்தியோகத்தன் மாத்திரமே. நீ உனது பணியை திறம்படச் செய்துவிட்டு சன்மானத்தைப் பெற்றுக்கொள்வதையும் அதை அனுபவிப்பதற்கான வழியையும் பார். வாழ்வு என்ற அந்தக் கப்பல் எந்த அளவு பெறுமதியானது என்பதையும் எப்படிப்பட்ட அழகிய நன்மைகளைத் தருகின்றது என்பதையும் அந்தக் கப்பலின் சொந்தக்காரன் எந்த அளவு அன்பும் அருளும் ஈகையும் தயாள குணமும் கொண்டவனாக இருக்கின்றான் என்பதையும் சிந்தித்து மகிழ்ச்சியோடு நன்றி செலுத்து. மேலும் நீ அந்தக் கப்பலில் உனது பணியை முறைப்படி, இஸ்திகாமத்தோடு செய்து முடித்தால் அந்தக் கப்பல் மூலம் பெறப்பட்ட அத்தனை நலவுகளும் ஒரு வகையில் உனது நல்லமல்கள் பதிவேட்டுக்குச் சென்று, உனக்கு நித்தியமான ஒரு வாழ்வைப் பெற்றுத் தரும், உன்னை நித்தியமாக, நிம்மதியாக வாழ வைக்கும்.

§10

وَ يُمٖيتُ ஆகும். அதாவது மரணத்தையும் அவனே தருகிறான். அதாவது அவனே உன்னை இந்த வாழ்க்கைச் சோலிகளிலிருந்து விடுவித்து, தற்காலிகமான உலகிலிருந்து இடம் மாற்றி, உன் மீதுள்ள வாழ்க்கைச் சுமைகளை இறக்கி வைக்கிறான். அதாவது உன்னை தற்காலிகமான உலகிலிருந்து நித்தியமான உலகுக்கு அழைத்துக்கொள்கிறான். ஆம், இந்தக் கூற்று தற்காலிக வாழ்வை உடைய மனித, ஜின் வர்க்கத்தினரைப் பார்த்து பின்வருமாறு உரக்கக் கூறுகின்றது: உங்களுக்கு சுபசோபனம் உண்டாவதாக! மரணம் என்பது அழிவோ இல்லாமையோ சூன்யமோ இறுதி அஸ்தமனமோ எதேச்சையான ஒரு நிகழ்வோ கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு நிரந்தர முடிவோ அல்ல. மாறாக சகல காரியங்களையும் ஒரு திட்டத்தின் கீழ் நிகழ்த்தும் சர்வ ஞானமும் பேரன்பும் மிக்க வல்லோனால் வழங்கப்படுகின்ற ஓர் இடமாற்றமாகும். நித்திய நிம்மதிகள் நிறைந்த உங்கள் அசலான தாயகத்துக்கான ஓர் அழைப்பாகும். தொன்னூற்றொன்பது வீதமான உங்கள் அன்புக்குரியவர்களை மீண்டும் சந்தித்து மீளிணைவதற்காகத் திறக்கப்படும் ஒரு கதவாகும்.

§11

وَ هُوَ حَىٌّ لَا يَمُوتُ ஆகும். அதாவது பிரபஞ்சத்திலும் பிரபஞ்ச வஸ்துகளுக்கு மத்தியிலும் காதலுக்கு வஸீலாவாக இருக்கும் ஒட்டுமொத்த அழகு, பூரணத்துவம், ஈகை என்பவற்றை வடித்தெடுத்தால் அதைவிட எல்லையற்ற மடங்கு அதிகமான அழகுக்கும் பூரணத்துவத்துக்கும் ஈகைக்கும் சொந்தக்காரனாகவும் ஒட்டுமொத்த காதல்களும் அவனது அழகின் ஒரு சிறு பிரதிபலிப்புக்கு முன்னாள் புஷ்வானமாகிப் போய்விடக்கூடிய பேரழகனாகவும் இருக்கும் வணக்கத்துக்கும் காதலுக்கும் தகுதியான அந்த இறையோன் ஆதியோ அந்தமோ இல்லாத நித்தியமான ஒரு வாழ்வை உடையவனாக இருக்கிறான். அந்த வாழ்வு சகல விதமான அழிவின் சாயல்கள், சந்தேகங்களிலிருந்தும் முடிவு என்ற குறைபாட்டிலிருந்தும் பரிசுத்தமானதாகும். ஆம், இந்த வார்த்தை மனித ஜின் வர்க்கத்தினரையும் பிரக்ஞையுள்ளவர்களையும் காதலுள்ளவர்களையும் நோக்கிப் பின்வருமாறு அறைகூவல் விடுக்கின்றது: உங்கள் மீது சுபசோபனம் உண்டாவதாக. உங்களை நீங்கள் காதலிப்பவற்றிலிருந்து பிரிக்கின்ற முடிவற்ற பிரிவுகளின் காயங்களுக்கு நிவாரணம் தருகின்ற நித்தியமான ஒரு காதல் உள்ளது. அது அழிவோ முடிவோ பிரிவோ இல்லாத நித்திய காதலாகும். காதலிப்பதற்கு மிகவுமே தகுதியான பேரழகும் பூரணத்துவமும் ஈகையும் உடைய நித்தியன் மீதான காதலாகும். ஆம், அவன் நித்தியனாவான். எனவே ஏனையவை பற்றி அலட்டிக்கொள்ளாதீர்கள். காதலிக்கப்படும் ஏனைய அனைத்திலும் உங்கள் காதலுக்குக் காரணியாக உள்ள அழகும் பூரணத்துவமும் ஈகையும் அந்த நித்திய காதலுக்குரியவனுடைய நித்தியமான பேரழகின் ஏராளமான திரைகளைத் தாண்டி வருகின்ற மிகவுமே நலிவான நிழல்களின் நிழல்களாகும். அவற்றின் அழிவோ முடிவோ உங்களைக் காயப்படுத்திவிடாதிருக்கட்டும். ஏனெனில் அவை அனைத்தும் ஒரு வகைக் கண்ணாடிகளாகும். கண்ணாடிகள் மாறுவதன் மூலம் மங்களகரமான அந்தப் பேரழகின் பிரதிபலிப்புகள் புதுப்பிக்கப்படுகின்றன. அவன் இருக்கிறான். எனவே எந்த சந்தேகமுமின்றி அனைத்துமே உங்களுக்காக இருக்கின்றன.

§12

بِيَدِهِ ال۟خَي۟رُ ஆகும். அதாவது எல்லா நலவுகளும் அவனது கரங்களிலாகும். நீங்கள் செய்த அத்தனை நலவுகளும் அத்தனை நல்லமல்களும் அவனது பதிவேடுகளில் பதியப்பட்டுவிடும். ஆம், இந்த வார்த்தை மனிதர்களுக்கும் ஜின்களுக்கும் பின்வருமாறு சுபசோபனம் கூறுகின்றது: வக்கற்றவர்களே! மண்ணறையைக் காணும் போது, “கைசேதமே! எமது சேமிப்புகளனைத்தும் அழிந்து, எமது உழைப்புகளனைத்தும் வீணாகிவிடப் போகின்றனவே! இந்த அழகிய விசாலமான உலகிலிருந்து ஒடுக்கமான ஒரு மண்ணறைக்குள் நுழையப் போகிறோமே!” என்றெல்லாம் கூறி நம்பிக்கையீனத்தோடு அவலக் குரலெழுப்பாதீர்கள். ஏனெனில் உங்களுடைய எல்லா விடயங்களும் பாதுகாக்கப்படுகின்றன. எல்லா அமல்களும் எழுதப்பட்டுவிட்டன. எல்லாப் பணிகளும் பதியப்பட்டுவிட்டன. உங்களுடைய நல்லமல்களைப் பாதுகாத்து அனைத்துக்கும் நிரப்பமான சன்மானங்களைத் தரக்கூடிய, எல்லா வகையான நலவுகளையும் உங்கள் மீது சொரியக்கூடிய அந்த மாட்சிமைமிக்க வல்லோனே உங்களை மண்ணறையில் தற்காலிகமாகத் தங்க வைத்துள்ளான். பின்னர் நீங்கள் அவனது சந்நிதானத்துக்குக் கொண்டுவரப்படுவீர்கள். எனவே உங்கள் மீது சுமத்தப்பட்ட பணிகளை அழகிய முறையில் நிறைவு செய்துவிட்டுச் செல்கின்ற உங்கள் மகிழ்ச்சிக்கு என்ன தடை இருக்க முடியும். இப்போது உங்கள் சிரமங்களை முடித்துக்கொண்டு நிம்மதியையும் ரஹ்மத்தையும் நோக்கிச் செல்கிறீர்கள். உழைப்பையும் கஷ்டங்களையும் நிறைவு செய்துவிட்டு கூலி பெறுவதற்காகச் செல்கிறீர்கள். ஆம், கடந்து சென்ற வசந்த காலத்துடைய பதிவேட்டின் பக்கங்களாகவும் பணிக் கோவைகளின் பெட்டகங்களாகவும் திகழும் மகரந்தங்களையும் விதைகளையும் பாதுகாத்து, தொடர்ந்து வருகின்ற வசந்த காலத்தில் அவற்றை மிகவும் கோலாகலமாகவும், சில வேளை அசலைவிட நூறு மடங்கு அதிகம் பரக்கத் தரக்கூடிய விதமாகவும் மீளப் பிரசுரம் செய்கின்ற மாட்சிமைமிக்க வல்லோன் நிச்சயமாக உங்களுடைய வாழ்க்கைக் கனிகளையும் அவ்வாறே பாதுகாக்கிறான். உங்கள் பணிகளுக்கு அதைவிடப் பண் மடங்கு அதிகமான கூலிகளை அவன் நிச்சமாகத் தருவான்.

§13

وَ هُوَ عَلٰى كُلِّ شَى۟ءٍ قَدٖيرٌ ஆகும். அதாவது அவன் ஏகனாகவும் தனித்தவனாகவும் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். எந்த ஒன்றும் அவனுக்குக் கடினமாக இருக்காது. ஒரு வசந்த காலத்தைப் படைப்பது ஒரு பூவைப் படைப்பது போன்று அவனுக்கு சுலபமானதாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பொழுதும் புதிது புதிதாகப் படைக்கப்படுன்ற எண்ணற்ற வஸ்துகள், அவனது எல்லையற்ற வல்லமைக்குத் தத்தமது எண்ணற்ற நாவுகளால் ஷஹாதத் செய்கின்றன. ஆம், இந்தக் கூற்றும் கூடப் பின்வருமாறு சுபசோபனம் கூறுகின்றது: மனிதனே! நீ செய்த பணிகளும் உனது வணக்க வழிபாடுகளும் வீண் போகாது. சன்மானம் பெறுவதற்கான ஓர் இடமும் நித்திய நிம்மதியான ஒரு வாழ்வும் உனக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளது. உன்னுடைய இந்தத் தற்காலிக உலகுக்குப் பதிலாக நித்தியமான ஒரு சுவனம் உனக்காகக் காத்திருக்கிறது. நீ வணங்கி வழிப்பட்ட, நீ நன்றாக அறிந்த மாட்சிமைமிக்க படைப்பாளனுடைய வாக்கை நம்பு. அவன் தனது வாக்குக்கு முரணாக செயற்படுவது சர்வ சாத்தியமற்றதாகும். அவனது வல்லமையில் எந்த வகையான குறைகளும் இல்லை. அவனது காரியங்களில் இயலாமை என்பது அணுவளவேனும் தலையிட முடியாது. அவன் உனது சிறிய தோட்டத்தைப் படைத்ததைப் போன்று சுவனத்தையும் படைக்க முடியுமானவனாக இருக்கிறான். ஆம், படைத்தான். படைத்துவிட்டே உனக்கும் அதை வாக்களிக்கிறான். வாக்களித்தவன் நிச்சயம் உனக்கும் அதற்குள் இடமளிப்பான். ஆம், ஒவ்வொரு வருடமும் பூமிக்கு மேல் மிக வேகமாகவும் மிகச் சுலபமாகவும் மூன்று இலட்சங்களுக்கும் அதிகமான தாவர மற்றும் விலங்கினங்களைப் பூரண ஒழுங்கு நேர்த்தியோடு மீளெழுப்பி பூமியை உயிரினங்களால் நிரம்பி வழியும் ஓரிடமாக மாற்றுவதைக் கண் முன்னால் காண்கிறோம். நிச்சயமாக இப்படிப்பட்ட ஒரு மாட்சிமைமிக்க வல்லோன் தனது வாக்கை நிறைவேற்றும் ஆற்றல் அற்றவனாக இருக்க முடியாது. மேலும் அந்த சர்வ வல்லோன் ஒவ்வொரு வருடமும் ஹஷ்ருக்கும் சுவனத்துக்குமான ஆயிரமாயிரம் வகை வகையான மாதிரிகளை வெளிப்படுத்திக் காட்டுகிறான். ஒட்டுமொத்த வேதங்கள் மறை வாக்குகள் மூலமும் நித்திய நிம்மதிகள் நிறைந்த சுவன வாழ்வை வாக்களித்து சுபசோபனம் கூறுகிறான். அவனது அத்தனை செயற்பாடுகளும் நிலைமைகளும் ஹக்கும் ஹகீகத்துமாகும்; உண்மையாகவும் தீர்க்கமாகவும் தீட்சண்யத்தோடும் அவன் செய்கின்ற காரியங்களாகும். அவனது ஒட்டுமொத்த ஆக்கங்களும் படைப்புகளும் சான்றுபகர்வதற்கமைய ஒட்டுமொத்த பூரணத்துவங்களும் அவனது எல்லையற்ற முத்லக்கான பூரணத்துவத்துக்கான அத்தாட்சிகளாகும். எந்த வகையான குறைகளோ இயலாமைகளோ அவனிடமில்லை, அவனைப் பீடிக்கவும் முடியாது. அவ்வாறே வாக்கு மீறுவதும் வாக்களித்ததைச் செய்ய முடியாதிருப்பதும் பொய்யும் ஏமாற்றும் மிக அசிங்கமான, மிகத் தாழ்ந்த ஓர் இயல்பும் மிக மோசமான ஒரு குறைபாடுமாகும். எனவே நிச்சயமாக பரிபூரணத்துவம் உடையவனாக இருக்கும் பேரன்பும் அருளும் அழகும் சர்வ ஞானமும் சர்வ மாட்சிமையுமிக்க அந்த வல்லோன் எந்த சந்தேகமுமின்றித் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவான்; நித்திய நிம்மதிகள் நிறைந்த உலகத்தின் கதவுகளைத் திறப்பான்; எமது தந்தையாகிய ஆதமுடைய அசலான தாயகமாகிய சுவனத்துக்கு, ஈமான் கொண்டவர்களே! உங்களை நிச்சயமாக அழைத்துக்கொள்வான்.

§14

وَ اِلَي۟هِ ال۟مَصٖيرُ ஆகும். அதாவது சோதனைக் களமாகிய இந்த உலகுக்கு வியாபாரத்துக்காகவும் உத்தியோகத்துக்காகவும் மகத்தான பணிகள், பொறுப்புகளுக்காகவும் அனுப்பப்பட்ட மனிதர்கள் தமது பணிகளை நிறைவேற்றிய பின்னர் மீண்டும் தம்மை இந்த உலகுக்கு அனுப்பிய மாட்சிமைமிக்க படைப்பாளனிடமே திரும்பி, ஈகையும் தயாள குணமும் மிக்க அந்த இறையோனை அடைந்துகொள்வார்கள். அதாவது இந்தத் தற்காலிகமான இருப்பிடத்திலிருந்து சென்று நிரந்தரமான ஓர் இருப்பிடத்தில் மிகப் பெரிய, மிக மகத்தான அமைதியையும் நிம்மதியையும் கண்டுகொள்வார்கள். காரண காரியக் குழப்பங்களிலிருந்தும் தரகர்கள், இடையகங்களின் இருண்ட திரைகளிலிருந்தும் தப்பித்து ரப்புர் ரஹீமுடைய நித்தியமான சந்நிதானத்தில் திரைகளோ, தரகர்களோ இன்றி அவனை அடைந்துகொள்வார்கள். எல்லோரும் நேரடியாகவே தமது படைப்பளன் யார்? வணக்கத்துக்குரியவன் யார்? இரட்சகன் யார்? அதிபதி யார்? என்பதையெல்லாம் கண்டுகொள்வார்கள். ஆம், இந்தக் கூற்று ஏனைய எல்லா சுபசோபனங்களுக்கும் மேலால் பின்வருமாறு சுபசோபனம் கூறுகின்றது: மனிதனே! எங்கு நோக்கிச் செல்கிறாய், எங்கு நோக்கி அழைத்துச் செல்லப்படுகிறாய் என்பதை அறிவாயா? முப்பத்தி இரண்டாவது வார்த்தையின் இறுதியில் கூறப்பட்டுள்ளதைப் போன்று எத்தகைய ஒரு வாழ்வை நோக்கிச் செல்கிறாயெனில் இந்த உலகின் ஆயிரம் வருடங்கள் நீளமான மகிழ்ச்சிகரமான ஒரு வாழ்வு அதன் ஒரு மணித்தியாள வாழ்வுக்கேனும் ஈடாகாத சுவன வாழ்வை நோக்கிச் செல்கிறாய். மேலும் எத்தகைய ஒருவனை நோக்கிச் செல்கிறாயெனில் அவனது அழகின் ஒரு மணித்தியாள தரிசனத்துக்கு அந்த சுவனத்தில் ஆயிரம் வருடங்கள் நீளமான ஒரு வாழ்க்கைகூட ஈடாகாது. அத்தகைய பேரழகும் மாட்சிமையுமிக்க ஒருவனின் ரஹ்மத்தையும் அவனது சந்நிதானத்தில் ஆஜராகின்ற மகத்தான பாக்கியத்தையும் நோக்கிச் செல்கிறாய். மேலும் உங்கள் உருவகக் காதல்களில் நீங்கள் ஆசையும் மோகமும் காதலும் போதையும் கொண்டுள்ள அம்சங்களிலும் ஏன் ஒட்டுமொத்த வஸ்துகளிலும் காணப்படுகின்ற அழகுகளும் வனப்புகளும் அவனது பேரழகினதும் அழகிய திருநாமங்களினதும் பிரதிபலிப்புகளாகும். அவ்வாறே ஒட்டுமொத்த சுவனமும் அதன் அத்தனை அருட்பாக்கியங்களும் அவனது ரஹ்மத்தின் சிறிய ஒரு பிரதிபலிப்பாகும். மேலும் எல்லா வகையான ஆசைகள், தாகங்கள், நேசங்கள், காதல்கள், மோகங்கள், ஈர்ப்புகளும் அவனது முஹப்பத்துடைய சிறிய ஒரு கீற்றாகும். ஆம் இவ்வாறு காதலுக்கும் வணக்கத்துக்கும் மிகவுமே தகுதியான மஹ்பூபிடமே செல்கிறாய். அவனது நித்தியமான அருள்களால் உங்களுக்காக அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள சுவனத்துக்கு அழைக்கப்படுகிறீர்கள். எனவே மண்ணறை வாயிலை நோக்கி அழுதுகொண்டல்லாமல் புன்னகையோடு செல்லுங்கள். அந்த வார்த்தை மேலும் கூறுகின்றது: மனிதனே! அழிவையும் இல்லாமையையும் சூன்யத்தையும் இருளையும் நோக்கிச் செல்வதாகவும் உக்கி, மண்ணோடு மண்ணாகி, மறைந்து, இந்த எண்ணற்ற வஸ்துகளுக்குள் தடயம் தெரியாமல் காணாமல் போய்விடுவோம் என்றும் மாயையாக அலட்டிக்கொள்ளாதீர்கள். நீங்கள் இல்லாமை நோக்கியன்றி நித்திய இருப்பை நோக்கிச் செல்கிறீர்கள். இருளை நோக்கியன்றி ஒளி உலகை நோக்கிச் செல்கிறீர்கள். உங்கள் எஜமானனிடம், உங்கள் அதிபதியிடம் செல்கிறீர்கள். அந்த நித்திய அரசனின் மிகச் சிறந்த மாளிகைகளை, நகரங்களை நோக்கிச் செல்கிறீர்கள். பண்மைக்குள் காணாமல் போவதற்கன்றி வஹ்தத்தில், ஏகத்தில் சங்கமிப்பதற்காகச் செல்கிறீர்கள். பிரிவுகளையன்றி இணைவுகளை நோக்கிச் செல்கிறீர்கள்.

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters