ஒன்பது குறிப்புகளை உள்ளடக்கியதாகும். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ நம்பிக்கைக்கும் உண்மைக்கும் பாத்திரமான சகோதரனே! குர்ஆனியப் பணியில் பற்றுறுதிமிக்க தோழனே! என்னுடைய நேரமும் நிலைமைகளும் ஒத்துழைக்காத இந்த நிலையில், உங்கள் இறுதிக் கடிதத்தில் முக்கியமான ஓர் அம்சம் தொடர்பான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறீர் என்பதை அறிந்துகொண்டேன். சகோதரனே! அல்ஹம்துலில்லாஹ், இந்த வருடம் ரஸாயில்களைப் பிரதி செய்து எழுதுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இரண்டாம் கட்டத் திருத்தப் பணிகள் அனைத்தும் என்னிடமே வருகின்றன. காலை முதல் மாலை வரை மிகவும் வேகமாக ஒன்றன் பின் ஒன்றாக அந்தப் பணிகளிலேயே ஈடுபடுகிறேன். இதனால் முக்கியமான பல சோலிகளையும் கூட ஒத்திவைக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. இந்தப் பணியையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதால் அதற்கே முன்னுரிமை அளிக்கிறேன். குறிப்பாக ரமழானில் பகுத்தறிவைவிட உள்ளமும் ஆத்மாவுமே அதிகம் ஒத்துழைப்பு வழங்கும். எனவே இந்த அம்சத்தை பிரிதொரு சந்தர்ப்பத்துக்குப் பிற்போடுகிறேன். அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளத்துக்கு உதிப்புகளும் அர்த்தங்களும் வரும் போது மெது மெதுவாக உங்களுக்கு எழுதுகிறேன். இப்போதைக்கு மூன்று குறிப்புகளை [குறிப்பு: பின்னர் ஒன்பது குறிப்புகளாக முழுமை பெற்றது] உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறேன்.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Mektubat
The Twenty-Ninth Letter
"சர்வ ஞானமிக்க குர்ஆனின் இரகசியங்கள் அறியப்படவில்லை. முஃபஸ்ஸிர்களால் ஹகீகத்தை அறிந்துகொள்ள முடியவில்லை" என்ற அர்த்தத்தில் கூறப்படும் சிந்தனைக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. அதாவது இதைக் கூறுகின்ற இரண்டு வகையான பிரிவினர் உள்ளனர். முதலாவது பிரிவினர்: சத்தியவான்களும் ஆழமான ஆய்வாளர்களுமாவர். அவர்கள் "குர்ஆன் தீராத, தூராத ஒரு செல்வக் களஞ்சியமாகும். ஒவ்வொரு காலத்துக்குரியவர்களும் நஸ்கள் மற்றும் முஹ்கமாத்களை ஏற்று வழிப்படும் நிபந்தனையுடன் அவற்றுக்கான இணைப்புகளாகவும் முழுமைப்படுத்தல்களாகவும் அமையத்தக்க வகையில் அதன் இரகசியமான மற்றும் மூடப்பட்ட சத்தியங்களிலிருந்தும் தமக்குரிய பங்கைப் பெற்றுக்கொள்வர். ஆனால் அவர்களால் பிறிதொரு காலத்துக்குரியவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ள சத்தியங்களைத் தீண்ட முடியாது" என்று கூறுவர். இதன் அர்த்தம் காலம் செல்லச் செல்ல சங்கைமிக்க குர்ஆனின் சத்தியங்கள் முடிவின்றி வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதாகும். மாறாக, இத்தகையவர்களின் நோக்கம் ஸலஃபுஸ் ஸாலிஹீன்கள் கூறிய குர்ஆனின் வெளிப்படையான சத்தியங்கள் மீது சந்தேகங்களைக் கொண்டு வருவதல்ல. அப்படிப்பட்ட ஒரு நோக்கம் அவர்களிடம் அணுவளவேனும் இருந்ததில்லை. ஏனெனில் அவற்றை ஈமான் கொள்வது கட்டாயமாகும். அவையே நஸ்களாகும். அவையே திட்டமானவையாகும். அவையே அடிப்படைகளும் அத்திவாரங்களுமாகும். குர்ஆன் عَرَبِىٌّ مُب۪ينٌ என்ற வாக்கின் மூலம் தன்னுடைய அர்த்தம் தெளிவானதாகும் என்பதை எடுத்துக் கூறுகின்றது. அடி முதல் நுணி வரை அந்த தெய்வீகப் பிரசங்கம் அந்த அர்த்தங்களையே சுற்றிச் சுழல்கின்றது. அவற்றையே மெருகூட்டித் தெளிவான, பிரகாசமான நிலைக்குக் கொண்டு வருகின்றது. அந்தத் தெளிவான, வெளிப்படையான அர்த்தங்களை ஏற்றுக்கொள்ளாதிருப்பதில் -அல்லாஹ் பாதுகாப்பானாக- சத்திய இரட்சகனைப் பொய்ப்பித்தலும் ரிஸாலத்துடைய புரிதலை மலினப்படுத்துவதுமே வெளிப்படும். ஆம், தெளிவான அர்த்தங்கள் ஸில்ஸிலா ஊடாக ரிஸாலத்துடைய ஊற்றிலிருந்து நேரடியாகப் பெறப்பட்டவையாகும். எந்த அளவுக்கெனில் இப்னு ஜெரீர் அத்தபரீ ஒட்டுமொத்த குர்ஆனிய அர்த்தங்களையும் ஸனதுகளுடன் ரிஸாலத்தின் ஊற்றுவாய் வரை ஸில்ஸிலா ஊடாகக் கொண்டு செல்கிறார். இந்த மன்ஹஜின் பிரகாரம் தன்னுடைய மகத்தான, மிகப் பெரும் தஃப்ஸீரை எழுதினார்கள். இரண்டாவது பிரிவினர்: இவர்கள், ஒன்றோ இமை காக்கப் போய் கண்ணைப் பிடுங்கும் புத்தியற்ற அபிமானிகளாவர். அல்லது ஷைத்தானியப் புத்தியுடன் இஸ்லாமிய வரம்புகளுக்கும் ஈமானிய சத்தியங்களுக்கும் எதிராகத் திட்டம் தீட்டும் எதிரிகளாவர். சங்கைமிக்க குர்ஆனின் உருக்காலான கோட்டைகளை ஒத்த அத்தியாயங்களூடாகத் தமக்கென்று ஒரு பாதையை வெட்ட முனைகின்றனர். இவ்வாறானவர்கள் குர்ஆனிய மற்றும் ஈமானிய சத்தியங்களில் சந்தேகங்களைத் தோற்றுவிப்பதற்காக இத்தகைய கருத்துகளைப் பரப்புகின்றனர். அந்தோ பரிதாபம்.
அல்லாஹ் குர்ஆனில் பல்வேறு விடயங்கள் மீது சத்தியம் செய்கிறான். குர்ஆனின் இவ்வகைச் சத்தியங்களில் மிக மகத்தான குறிப்புகளும் இரகசியங்களும் காணப்படுகின்றன. உதாரணமாக: وَالشَّمْسِ وَضُحٰيهَا இல் செய்யப்படுகின்ற சத்தியம் பதினோராவது வார்த்தையிலுள்ள மகத்தான உதாரணத்தின் அடிப்படையைக் குறிப்பு மூலம் காட்டித் தருகின்றது. பிரபஞ்சத்தை ஒரு மாளிகை அல்லது ஒரு நகரத்தின் வடிவில் காண்பிக்கின்றது. அவ்வாறே يٰسٓ ٭ وَالْقُرْاٰنِ الْحَك۪يمِ இல் செய்யப்பட்டுள்ள சத்தியம் குர்ஆனிய அற்புதங்களின் புனித்துவதத்தையும் அது சத்தியம் செய்யக்கூடிய அளவு சங்கையான ஓர் அந்தஸ்த்தை உடையது என்பதையும் நினைவூட்டுகின்றது. அவ்வாறே وَ النَّجْمِ اِذَا هَوٰى ٭ فَلَٓا اُقْسِمُ بِمَوَاقِعِ النُّجُومِ ٭ وَاِنَّهُ لَقَسَمٌ لَوْ تَعْلَمُونَ عَظ۪يمٌ இல் செய்யப்பட்டுள்ள சத்தியமானது நட்சத்திரங்கள் உதிர்வதில் வஹியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற எதுவுமில்லை என்பதையும் ஜின்களும் ஷைத்தான்களும் மறைவான செய்திகளிலிருந்து துண்டிக்கப்படுவதற்கான ஓர் அலாமத்தாகவே அது உள்ளது என்பதையும் உறுதிப்படுத்துகின்றது. கூடவே வியக்கத்தக்க அளவு பிரமாண்டமான அந்த நட்சத்திரங்களை துல்லியமான ஓர் ஒழுங்கில் உரிய இடத்தில் நிலைப்படுத்திக் கோள்களை ஆச்சரியப்படத்தக்க விதமாக சுழலச் செய்வதில் உள்ள மாட்சிமைமிக்க வல்லமையையும் மகத்தான ஞானத்தையும் சிந்திக்கத் தூண்டுகின்றது. அவ்வாறே وَالذَّارِيَاتِ ٭ وَالْمُرْسَلَاتِ இல் செய்யப்பட்டுள்ள சத்தியத்தில் வளியுடைய அலைகள், இடத்துக்கேற்ப இலகுவாக மாறும் அதன் தன்மை என்பவற்றில் உள்ள மகத்தான தாத்பரியங்களை சிந்திக்கத் தூண்டுவதற்காக காற்றின் மீது உத்தியோகத்தை உடைய மலக்குமார்கள் மீது சத்தியம் செய்து மகத்தான ஓர் உண்மையின்பால் கவனத்தை ஈர்க்கின்றது. எதேச்சையானவையாகவும் சுயாதீனமானவையாகவும் கருதப்படுகின்ற வளியிலுள்ள பதார்த்தங்கள் உண்மையில் மிகவும் நுட்பமான தாத்பரியங்களையும் மகத்தான பணிகளையும் சுமந்தவையாக இருக்கின்றன என்ற உண்மையை நோக்கிக் கவனத்தைத் திருப்புகின்றது. இவ்வாறு ஒவ்வொன்றிலும் ஏராளமான தாத்பரியங்களும் குறிப்புகளும் காணப்படுகின்றன. நேரம் போதாமையினால் وَ التّ۪ينِ وَ الزَّيْتُونِ இல் உள்ள ஏராளமான குறிப்புகளுள் ஒன்றை மாத்திரம் உதாரணத்துக்காக சுருக்கமாக விவரிக்கின்றோம். அதாவது: சத்திய இரட்சகன் அத்தி, ஸைத்தூன் ஆகியவற்றின் மீது சத்தியம் செய்வதன் மூலம் தனது வல்லமையின் மாட்சிமையையும் ரஹ்மத்துடைய மிகவும் நுட்பமான பூரணத்துவங்களையும் நினைவூட்டுகின்றான். அதனூடாக அஸ்ஃபல ஸாஃபிலீனை நோக்கித் திரும்பியுள்ள மனிதனுடைய முகத்தை அந்தத் திசையிலிருந்து திருப்பி நன்றி, சிந்தனை, ஈமான், ஸாலிஹான அமல் என்று ஆலாஉ இல்லிய்யூன் வரை உயர்வான ஆத்மீக படித்தரங்களைக் கொண்டுள்ள ஒரு பாதையைக் காண்பிக்கிறான். அருட்கொடைகளுக்கு மத்தியில் அத்தி, ஸைத்தூன் ஆகியவை கூறப்பட்டிருப்பதற்கான காரணம் அந்த இரண்டு கனிகளும் மிகவும் பரக்கத் பொருந்தியவையாகவும் பயன்களின் அடிப்படையில் மிகப் பெறுமதி வாய்ந்தவையாகவும் இருப்பதாகும். அத்துடன் அவற்றின் படைப்பிலும் கூட கவனத்தை ஈர்க்கத்தக்க பல்வேறு அருள்களும் படிப்பினைகளும் காணப்படுகின்றன. சமூக வாழ்வை எடுத்துக்கொண்டால் வியாபாரம், ஆகாரம், இரவில் ஒளியேற்றல் போன்ற அடிப்படையான விடயங்களில் ஸைத்தூன் தவிர்க்க முடியாத ஓர் வகிபாகத்தில் உள்ளது. அவ்வாறே அத்தியின் படைப்பும் வியக்கத்தக்க ஒரு படைப்பியல் தாத்பரியத்தை நோக்கிக் கவனத்தை ஈர்க்கின்றது. அணுவளவு சிறிய ஒரு விதையில பிரமாண்டமான அத்தி மரம் அதன் அத்தனை சாதனங்கள், திட்டங்களோடும் பொதித்து வைக்கப்பட்டுள்ளமை அற்புதமான இறை வல்லமையைக் காட்டித் தருகின்றது. அத்துடன் ஏனைய கனிகளுக்கு மாற்றமான சிரேஷ்டமான அதன் பயன்களும் அருள்களும் அந்த சத்தியம் மூலம் நினைவூட்டப்படுகின்றது. இவ்வாறு மனிதனை ஈமானையும் ஸாலிஹான அமல்களையும் நோக்கி உயர்த்துவதற்கும் அஸ்ஃபல ஸாஃபிலீனில் வீழ்ந்துவிடாமல் பாதுகாப்பதற்கும் வழிகாட்டுகின்றது.
அத்தியாயங்களின் ஆரம்பங்களில் வருகின்ற ஹுரூஃபுல் முகத்தஆகளுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வீகக் கடவுச்சொல்லாகும். தன்னுடைய சிரேஷ்டமான அடியார்களுக்கு அவற்றின் மூலம் சில மறைவான விடயங்களின் தடயங்களைக் காண்பிக்கிறான். அந்தக் கடவுச்சொல்லின் திறவுகோல் குறித்த அடியானிடமும் அவருடைய வாரிஸுகளிடமுமே இருக்கும். ஆம், சங்கைமிக்க குர்ஆன் எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா சமூகங்களை நோக்கியும் பேசுகின்றது. எனவே ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு வகுப்பினருக்குத் தேவையான வெவ்வேறு பங்குகளையும் உள்ளடக்கிய பலதரப்பட்ட அர்த்தங்களை அது கொண்டிருக்கும். ஸலஃபுஸ் ஸாலிஹீன்களைப் பொருத்தவரை மிகத் தூய்மையான, தெளிவான பகுதியை அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். அஹ்லுல் விலாயத்தைப் பொருத்தவரை ஸைருல் ஸுலூக் என்ற ஆத்மீக சஞ்சாரத்துக்குத் தேவையான ஏராளமான குறிப்புகளையும் சுவடுகளையும் குர்ஆனில் கண்டுபிடித்துள்ளனர். இஷாராதுல் இஃஜாஸில் ஸூரா பகராவின் ஆரம்பத்தில் சொல்லாட்சியிலுள்ள அற்புதங்கள் பற்றிப் பேசும் போது ஓரளவு இந்த விடயம் குறித்துப் பேசியுள்ளோம். விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சங்கைமிக்க குர்ஆனின் ஹகீகத்தான மொழிபெயர்ப்பு சாத்தியமற்றது என்பது இருபத்தைந்தாவது வார்த்தையில் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது. மேலும் அதன் ஆத்மார்த்தமான அற்புதங்களுள் ஒன்றாகிய மொழிநடையின் உன்னதத்தை மொழிபெயர்ப்புகளால் நெருங்கவும் முடியாது. ஆத்மார்த்தமான அற்புதங்களுள் ஒன்றாகிய உன்னதமான நடையூடாகக் கிடைக்கின்ற ஓர் இன்ப அனுபவத்தையும் சத்தியத்தையும் கிரகிக்கத்தக்க வகையில் தெளிவுபடுத்துவது மிகவும் சிக்கலானதாக இருந்தாலும், குறைந்தபட்சம் அதற்கான பாதையை இரண்டு கோணங்களில் காண்பிக்க முயற்சிக்கிறோம். உதாரணமாக: சங்கைமிக்க தெளிவுரையாகிய குர்ஆனின் وَمِنْ اٰيَاتِهِ خَلْقُ السَّمٰوَاتِ وَالْاَرْضِ وَاخْتِلَافُ اَلْسِنَتِكُمْ وَ اَلْوَانِكُمْ ٭ وَالسَّمٰوَاتُ مَطْوِيَّاتٌ بِيَم۪ينِه۪ ٭ يَخْلُقُكُمْ ف۪ى بُطُونِ اُمَّهَاتِكُمْ خَلْقًا مِنْ بَعْدِ خَلْقٍ فِى ظُلُمَاتٍ ثَلَاثٍ ٭ خَلَقَ السَّمٰوَاتِ وَالْاَرْضَ فِى سِتَّةِ اَيَّامٍ ٭ يَحُولُ بَيْنَ الْمَرْءِ وَقَلْبِهِ ٭ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ ٭ يُولِجُ الَّيْلَ فِى النَّهَارِ وَيُولِجُ النَّهَارَ فِى الَّيْلِ وَ هُوَ عَل۪يمٌ بِذَاتِ الصُّدُورِ போன்ற வசனங்களின் உன்னதமான நடை மூலமும் அந்த நடையில் உள்ள அற்புதமான அகிலார்ந்த தன்மை மூலமும் அவை எவ்வாறு படைப்பியல் சத்தியங்களைக் கண் முன்னால் கொண்டுவந்து காண்பிக்கின்றன என்பதைப் பாருங்கள். அதாவது “பிரபஞ்சத்தின் படைப்பாளனாகவும் வடிவமைப்பாளனாகவும் திகழும் வல்லோன் சூரியனையும் சந்திரனையும் எந்த சட்டகத்தின் மூலம் உரிய இடத்தில் உரிய பணிகளில் அனுவளவேனும் பிசகாமல் நிலைப்படுத்தி வைத்துள்ளானோ சம நேரத்தில் அதே சட்டகத்தின் மூலம் அணுக்களையும் உரிய இடங்களில், உரிய பணிகளில் -உதாரணமாக உயிரினங்களின் கண் மணிகளில்- நிலைப்படுத்தி வைக்கிறான். ஆகாய வெளியை எந்த ஆத்மார்த்தமான அளவைகள், சாதனங்கள் மூலம் எந்த ஒழுங்கில் திறக்கிறானோ அதே ஒழுங்கில் அதே ஆத்மீக சாதனங்களைக் கொண்டு கண்களின் திரையையும் திறந்து ஒழுங்குபடுத்துகிறான். அவ்வாறே எந்த ஆத்மார்த்தமான சட்டகங்களின் மூலம் எண்ணற்ற நட்சத்திரங்களை வான வெளியில் நிலைப்படுத்தி வைத்துள்ளானோ அதே ஆத்மார்த்தமான சட்டகங்கள் மூலம் மனித முகங்களை வேறுபடுத்தும் எண்ணற்ற முத்திரைகளையும் உள்ரங்கமான மற்றும் வெளிரங்கமான உணர்வுகளையும் ஒவ்வொரு முகத்திலும் நிலைப்படுத்தி வைத்துள்ளான்” என்று பிரஸ்தாபிக்கின்றது. ஆம், அந்த மாட்சிமைமிக்க படைப்பாளன் அந்த மகத்தான செயற்பாடுகளைப் பார்வைகளுக்கும் சிந்தைகளுக்கும் காண்பிப்பதன் மூலம் குர்ஆனிய வசனங்களின் ஒரு சொல் மூலம் அணுவிலும் உடனடியாக அடுத்த சொல் மூலம் சூரியனிலும் அந்த அகிலார்ந்த சட்டகங்களின் இருப்பை நிறுவுகிறான். அதாவது அந்த உயர்வான நடையின் மூலம் வஹ்தானியத்தை அஹதியத்துக்குள்ளும் மகோன்னதமான மாட்சிமையை மகத்தான அழகினுள்ளும் அதி உச்ச கீர்த்தியை மிகச் சிறிய, மிக மறைவான வஸ்தினுள்ளும் அதி உச்ச அகிலார்ந்த தன்மையை அதி உச்ச நுட்பத்துக்குள்ளும் அதி உச்ச பெருமையை அதி உச்ச ரஹ்மத்துக்குள்ளும் அதி உச்ச தொலைவை அதி உச்ச நெருக்கத்துக்குள்ளும் காண்பிக்கிறான். சாத்தியமற்றதாகக் கணிக்கப்படுகின்ற முரண்களுடைய இணைவின் மிகத் தொலைவான அம்சங்களை வாஜிபான அளவு சுலபமாகப் பிரஸ்தாபிப்பது மாத்திரமன்றி நிறுவியும் காட்டுகின்றான். இதோ இப்படிப்பட்ட அதன் நடையே மிகச் சிறந்த இலக்கியவான்களைக் கூட அதன் அணி இலக்கனத்துக்கு முன்னால் ஸுஜூத் செய்ய வைக்கின்றது. அவ்வாறே وَمِنْ اۤيَاتِهِ اَنْ تَقُومَ السَّمَاءُ وَاْلاَرْضُ بِاَمْرِهِ ثُمَّ اِذَا دَعَاكُمْ دَعْوَةً مِنَ اْلاَرْضِ اِذَا اَنْتُمْ تَخْرُجُونَ என்ற வசனமும் அதன் மகத்தான நடையின் மூலம் அற்புதமான அமைப்பில் ருபூபியத்துடைய மாட்சிமையைப் பிரகடனம் செய்கின்றது. அதாவது: வானங்கள், பூமியை கட்டுப்பாடான இரண்டு இராணுவத் தளங்களைப் போன்றும் அவற்றில் உள்ள அனைத்தையும் நேர்த்தியான இராணுவங்களைப் போன்றும் பிரஸ்தாபித்து, அந்த இரண்டு தளங்களிலும் சூன்யத் திரைக்குப் பின்னால் உறங்குகின்ற வஸ்துகள் ஒரு கட்டளையை அல்லது சூர் ஓசையைத் தொடர்ந்து மிக வேகமாகவும் பூர்த்தியாகவும் அடிபணிந்து, “லப்பைக்” என்று கூறியவாறு மஹ்ஷர் மைதானத்தில் கூடும் காட்சியைக் கண் முன்னால் கொண்டுவருகின்றது. இதோ ஹஷ்ரையும் மறுமையையும் எவ்வளவு அற்புதமான, மகத்தான ஒரு நடையூடாகப் பிரஸ்தாபிக்கின்றது என்பதையும் அது எவ்வாறு அந்த வசனம் முன்வைக்கின்ற வாதத்துக்கு, வாதத்தின் இயல்பிலேயே உள்ள ஓர் அத்தாட்சியாகத் திகழ்கின்றது என்பதையும் பாருங்கள். மேலும் “வ்வொரு வசந்த காலத்திலும் எமது கண்களுக்கு முன்னால் பூமிக்குள் மறைந்து, மரணத்துக்கு ஒப்பான நிலையிலுள்ள விதைகளுடன் நீரிலும் நிலத்திலும் வளியிலும் ஆகாயத்திலும் சிதறியுள்ள பதார்த்தங்கள் பூரண ஒழுங்கு நேர்த்தியோடும் வேகத்தோடும் ஒன்று சேர்ந்து மைதானத்துக்கு வருவதைப் பார்க்கிறோம். அந்த வகையில் ஒவ்வொரு விதையும் எவ்வாறு மஹ்ஷருக்கான ஒவ்வொரு சிறிய மாதிரியாக உள்ளது என்பதைப் பார்க்கிறோம். அவ்வாறே, ஹஷ்ருல் அக்பர் எனப்படும் மறுமை நிகழ்வும் மிகச் சுலபமாக நிகழ்ந்தேறும். இதை சந்தேகமின்றி உங்கள் கண்களால் காண்கிறீர்கள், அவ்வாறெனில் அதை உங்களால் நிராகரிக்க முடியாது” என்றெல்லாம் இந்த வசனம் கூற வருகின்ற செய்திகள் தொடர்கின்றன. இவ்வாறு இந்த வசனம் மிக அற்புதமான ஓர் அமைப்பில் வஹ்தானியத்தை அஹதியத்தினுள் காண்பிக்கின்றது. இப்போது இங்கே கூறப்பட்ட உதாரணங்களை வைத்து ஏனைய வசனங்களிலும் காணப்படும் அணி இலக்கண நடையை ஒப்பிட்டுப் பாருங்கள். பின்னர் இப்படிப்பட்ட உயர் தொனியில் உள்ள வசனங்களின் ஹகீகத்தான மொழிபெயர்ப்பு சாத்தியமா என்பதை சிந்தித்துப் பாருங்கள். நிச்சயமாக சாத்தியமில்லை. அதிக பட்சம் அந்த வசனம் கூற வரும் விடயங்களின் சுருக்கமான, சிறிய ஒரு பகுதியாகவே அந்த மொழிபெயர்ப்பு அமையும். அல்லது ஒவ்வொரு வசனத்துக்கும் அதைப் போன்று ஐந்தாறு மடங்கு நீளமான விளக்கம் எழுதுவது அவசியப்படும்.
உதாரணமாக “அல்ஹம்துலில்லாஹ்” என்பது ஒரு குர்ஆனிய வசனமாகும். “இல்முன் நஹ்வ்” மற்றும் பேச்சுக் கலை விதிகளைக் கருத்திற்கொண்டால் இதன் மிகச் சுறுக்கமான அர்த்தம் கீழ்வருமாறு அமைவது அவ்சையமாகின்றது. كُلُّ فَر۟دٍ مِن۟ اَف۟رَادِ ال۟حَم۟دِ مِن۟ اَىِّ حَامِدٍ صَدَرَ وَعَلٰى اَىِّ مَح۟مُودٍ وَقَعَ مِنَ ال۟اَزَلِ اِلَى ال۟اَبَدِ خَاصٌّ وَمُس۟تَحِقٌّ لِلذَّاتِ ال۟وَاجِبِ ال۟وُجُودِ ال۟مُسَمّٰى بِاللّٰهِ அதாவது “எத்தனை எத்தனை ஹம்தும் புகழும் உள்ளனவோ, யார் யாரிடமிருந்தெல்லாம் வருகின்றனவோ, யார் யாருக்கெல்லாம் செல்கின்றனவோ, ஆதி முதல் அந்தம் வரை அவை அனைத்துக்கும் தாது வாஜிபுல் வுஜூதே தகுதியும் உரிமமும் உடையவனாவான். அவனே அல்லாஹ் ஆவான்.” ஆம், “எத்தனை ஹம்துகள் உள்ளனவோ” என்ற அர்த்தம் பொதுமையைக் குறிக்கும் (இஸ்திஃராக்குடைய) “அல்” ஊடாகக் கிடைக்கின்றது. “யாரிடமிருந்தெல்லாம் வருகின்றனவோ” என்ற அர்த்தம் “ஹம்த்” என்பது வினைச் சொல்லின் மூல நிலையாக இருக்க, கர்த்தா பற்றிய விபரம் தவிர்க்கப்பட்டிருப்பதன் மூலம் கிடைக்கின்றது. இவ்வாறான நிலையில் விடயம் பொதுமை பெறுகின்றது. அவ்வாறே செயப்படுபொருள் தவிர்க்கப்பட்டிருப்பதும் “யார் யாருக்கெல்லாம் செல்கின்றனவோ” என்ற அர்த்தத்தைத் தருகின்றது. அவ்வாறே வினை வசனத்திலிருந்து பெயர் வசனத்துக்குக் கடப்பது நிலைத்த தன்மைக்கும் தொடர்ச்சிக்கும் அத்தாட்சியாக இருப்பதால் “ஆதி முதல் அந்தம் வரை” என்ற அர்த்தத்தைத் தருகின்றது. “உரிமம், தகுதி” ஆகிய அர்த்தங்களை “லில்லாஹ்” இல் உள்ள “லாமுல் ஜர்” வழங்குகின்றது. அந்த “லாம்” உரிமம், தகுதி என்பவற்றுக்கானதாகும். அவ்வாறே “தாது வாஜிபுல் வுஜூத்” என்ற அர்த்தம் பின்வருமாறு கிடைக்கின்றது: வாஜிபான இருப்பு என்பது உலூஹியத்தின் தவிர்க்க முடியாத வேண்டலாக இருப்பதாலும் தாது துல் ஜலால் ஆகிய அல்லாஹ்வின் முன்னிலையில் அவனைப் பற்றி ஓரளவு சிந்திப்பதைச் சாத்தியமாக்கும் ஒரு மகுடமாக இருப்பதாலும், “அல்லாஹ்” என்ற நாமம் ஏனைய அனைத்துப் பண்புகள் நாமங்களையும் உள்ளடக்கிய இஸ்முல் ஆஃஸம் என்ற வகையில் தனது சொந்த அர்த்தத்துக்கு அப்பால் ஏனைய எல்லா நாமங்களுக்கான குறிப்புகளையும் தன்னகத்தே கொண்டிருப்பதாலும் இந்தக் கோணத்தில் வாஜிபுல் வுஜூத் என்ற அர்த்தத்தை அது வேண்டி நிற்கின்றது. இதோ, அரபு மொழியின் மொழியியல் அறிஞர்களுடைய ஏகோபித்த உடன்பாட்டின் பிரகாரம் “அல்ஹம்துலில்லாஹ்” என்ற வசனத்தின் மிகக் குறுக்கமான வெளிப்படை அர்த்தம், அதாவது “நஸ்” அர்த்தம் இதுவாக இருக்கு போது இன்னுமொரு மொழிக்கு அதே அற்புதத் தன்மையோடும் அதே வலிமையோடும் எவ்வாறு மொழிபெயர்க்க முடியும்? மேலும் உலக மொழிகளுக்கு மத்தியில் அரபு மொழி தவிர்ந்து “லிஸானுல் நஹ்வ்” என்ற வட்டத்துக்குள் வருகின்ற ஒரு மொழி மாத்திரமே காணப்படுகின்றது. அந்த மொழியாலும் கூட எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அரபு மொழியின் அகிலார்ந்த தன்மையை எட்ட முடியவில்லை. இப்படியிருக்கும் போது அந்த அகிலார்ந்த, அற்புதத் தன்மை வாய்ந்த லிஸானுல் நஹ்வ் மூலம் அற்புதமான ஒரு நடையில் எல்லாக் கோணங்களையும் ஏக காலத்தில் அறிந்து, நிர்வகிக்கின்ற அகிலார்ந்த அறிவு ஞானத்திலிருந்து வெளிப்பட்ட குர்ஆனிய சொற்களையும் வசனங்களையும் அரபு மொழியோடு ஒப்பிடும் போது வெறுமனே சொற்களின் கூட்டாகவும் சட்டங்களைக் கருத்திற்கொள்ளாமலேயே விரும்பியவாறு வளைக்க முடியுமான தன்மை உடையதாகவும் உள்ள ஏனைய மொழிகளுக்கு மொழிபெயர்ப்பதென்பது எவ்வாறு சாத்தியமாக முடியும்? மாத்திரமன்றி தன்ணுடன் சுருங்கிய மனநிலையும் குறுகிய பிரக்ஞையும் குழம்பிய சிந்தனையும் இருண்ட உள்ளங்களும் உடைய மனிதர்களால் மொழிபெயர்க்கப்பட்ட சொற்களும் வசனங்களும் எவ்வாறு அந்தப் புனிதமான சொற்கள், வார்த்தைகளின் இடத்தை நிறப்ப முடியும்? ஏன் “குர்ஆனுடைய ஒவ்வோர் எழுத்தும் ஒரு சத்தியத்தின் கருவூலமாக இருக்க முடியும், வெறும் ஓர் எழுத்து ஒரு பக்கம் அளவு சத்தியங்களைக் கற்றுத் தரக்கூடியவை” என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். தேவைப்பட்டால் நிரூபிக்கவும் தயாராகவே இருக்கிறேன்.
இந்த அர்த்தத்தை இன்னும் ஒளியேற்றுவதற்காக நான் சந்திக்க நேர்ந்த ஒளிமயமான ஓர் அனுபவத்தை அதாவது ஹகீகத்தான ஒரு கற்பனையைக் கூறுகிறேன். அதாவது: ஒரு சமயம் اِيَّاكَ نَعْبُدُ وَ اِيَّاكَ نَسْتَعِينُ இலுள்ள “நாம்” ஐக் குறிக்கும் “نَ - நூன்” ஐச் சிந்தித்தேன். இதைக் கூறுபவர் தன்மை ஒருமையில் இருக்கும் போது அதாவது தனிமையில் கூறும் “நஃபுது” என்று தன்மைப் பன்மையில் கூற வேண்டியதன் காரணத்தை எனது உள்ளம் தேடியது. அப்போது திடீரென்று தொழுகையில் உள்ள ஜமாஅத்தின் சிறப்புகளும் இரகசியங்களும் “நூன்” என்ற எழுத்தினூடாக எனக்குத் திறக்கப்பட்டன. அப்போது அங்கு பாயெஸீத் பள்ளிவாசலிலிருந்த ஜமாஅத் என்னுடன் அணிவகுத்து இணைந்துகொள்வதையும் அதைக் கூறுகின்ற ஒவ்வொருவரும் எனக்கு ஷஃபாஅத்தாகவும் அந்தக் கிராஅத்தின் மூலம் நான் கூறும் தீர்ப்புகள், வாதங்களுக்கு சாட்சியாளர்களாகவும் இருப்பதைக் கண்டேன். எனது குறைகள் நிறைந்த உபூதியத்தை அந்த ஜமாத்தின் பெரிய, அதிகரித்த வணக்கங்களோடு சேர்த்து இறை சந்நிதானத்தில் காணிக்கையாக சமர்ப்பிப்பதற்கான பலத்தைப் பெற்றுக்கொண்டேன். அதைச் சிந்துக்கும் போது திடீரென்று இன்னொரு திரையும் நீக்கப்பட்டது. அதாவது இஸ்தான்பூல் நகரின் எல்லாப் பள்ளிவாசல்களும் எம்முடன் அணிவகுத்து இணைந்துகொண்டன. அந்த நகரமே பாயெஸீத் பள்ளிவாசல் போன்று மாறியது. அவர்கள் எல்லோருடைய துஆக்களுக்கும் சாட்சிகளுக்கும் ஆத்மார்த்தமான ஒரு பங்குதாரனாக ஆவதை உணர்ந்தேன். பின்னர் பூமி என்ற மஸ்ஜிதில் கஃபாவைச் சூழ வளையம் வளையமாக உள்ள வரிசைகளுக்கு மத்தியில் ஒருவனாக நான் நிற்பதைக் கண்டேன். அப்போது இயல்பாகவே “اَلْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ, எனக்கு ஷஃபாஅத் செய்வதற்கு இவ்வளவு பெரிய ஒரு ஜமாஅத் உள்ளதே, நான் கூறும் ஒவ்வொரு வார்த்தையையும் அவர்கள் ஒவ்வொருவரும் அச்சொட்டாகக் கூறி, சாட்சிபகன்று, உண்மைப்படுத்துகிறார்களே” என்று கூறினேன். பின்னர் உண்மையில் திரைகள் திறக்கப்பட்டுவிட்டன. கஃபாவும் மிஹ்ராபுடைய நிலையில் இருந்தது. நானும் இந்த சந்தர்ப்பத்தைத் தவறவிடக் கூடாது என்று சிந்தித்தவனாக அந்த அத்தனை வரிசைகளையும் சாட்சியாக வைத்து, அத்தஹியாத்தில் நான் கூறிய اَشْهَدُ اَنْ لاَ اِلَهَ اِلاَّ اللَّهُ وَ اَشْهَدُ اَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ என்ற ஈமானின் மொழிபெயர்ப்பை முபாரக்கான ஹஜருல் அஸ்வத்திடம் அமானத்தாக வைக்கும் போது இன்னுமொரு காட்சி திறக்கப்பட்டது. அதில் மூன்று வட்டங்களாகக் காணப்பட்ட மூன்று பெரும் ஜமாஅத்களில் ஓர் அங்கத்தவனாக நானும் இருந்தேன். முதலாவது வட்டம்: அதில் முஃமின்கள், முவஹ்ஹிதீன்களை உள்ளடக்கிய ஒரு பெரிய ஜமாஅத் வீற்றிருந்தது. இரண்டாவது வட்டம்: ஒட்டுமொத்த வஸ்துகளும் ஒன்றாக அணிவகுத்து நின்று அகிலார்ந்த ஒரு ஜமாஅத்தாக அகிலார்ந்த ஒரு தொழுகையிலும் அகிலார்ந்த ஒரு தஸ்பீஹிலும் ஈடுபடும் போது அதில் ஒருவனாக நானும் இருந்தேன். எல்லா வகைப் படைப்பினங்களும் தத்தமக்கென்றுள்ள ஸலவாத்துகளிலும் தஸ்பீஹாத்களிலும் மும்முரமாக ஈடுபட்டிருந்தன. வஸ்துகளின் பணிகளும் அவற்றின் சேவகங்களும் அவற்றுடைய உபூதியத்தின் மகுடங்களாக இருந்தன. அந்த மகத்தான அனுவபம் ஏற்படுத்திய வியப்பால் “அல்லாஹு அக்பர்” என்று கூறி தலையைத் தாழ்த்தி, எனது நஃப்ஸைப் பார்த்தேன்: அப்போது மூன்றாவது ஒரு வட்டத்தினுள் வெளிப் பார்வைக்கும் பெறுமதியளவிலும் சிறிதாக இருந்தாலும் ஹகீகத்தின் அடிப்படையிலும் மகத்தான பணிகளின் அடிப்படையிலும் வியக்கத்தக்க அளவு பெரிதாகத் திகழும் சிறிய ஓர் உலகத்தைக் கண்டேன். அதாவது அணுக்கள் முதல் வெளிப்படையான உணர்வுகள் வரை எனது உடலிலுள்ள அனைத்துக் கூறுகளும் கூட்டம் கூட்டமாக உபூதியத்திலும் ஹம்திலும் ஷுக்ரிலும் ஆழ்ந்திருப்பதைக் கண்டேன். முன்னைய இரண்டு ஜமாஅத்களிலும் அவற்றை நிய்யத்து வைத்தவாறு என்னுடைய நாவு கூறியதைப் போன்று இந்த சிறிய வட்டத்துக்குள் எனது உள்ளத்திலுள்ள ஒரு ரப்பானிய உணர்வு அந்த ஜமாஅத்தின் பெயரால் اِيَّاكَ نَعْبُدُ وَ اِيَّاكَ نَسْتَعِينُ என்று கூறியது. சுருக்கமாக: “நஃபுது” உடைய நூன் இந்த மூன்று ஜமாஅத்களையும் அடையாளப்படுத்துகின்றது. இந்த நிலையில் இருக்கும் போது சங்கைமிக்க குர்ஆனின் மொழிபெயர்ப்பாளராகவும் அழைப்பாளராகவும் திகழும் ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மதீனா முனவ்வரா என்ற ஆத்மீக மிம்பரில் தனது ஆத்மார்த்தமான அடையாளத்தோடும் மாட்சிமையோடும் தோன்றி அந்த மூன்று பெரும் ஜமாஅத்களையும் நோக்கி يَا اَيُّهَا النَّاسُ اعْبُدُوا رَبَّكُمْ என்று கூறுவதையும், அதை அந்த ஜமாஅத்களிலிருந்த அனைவரையும் போல் நானும் செவிமடுத்து اِيَّاكَ نَعْبُدُ என்று அதற்குப் பதிலளிப்பதையும் கற்பனையாகத் தரிசித்தேன். அப்போது اِذَا ثَبَتَ الشَّيْءُ ثَبَتَ بِلَوَازِمِهِ என்ற விதிக்கமைய கீழ்வருமாறு ஒரு சத்தியம் எனது சிந்தனையில் ஓடியது. ஆம், ரப்புல் ஆலமீன் மனிதர்களை முகவரியாக வைத்து ஒட்டுமொத்த வஸ்துகளோடும் பேசுகிறான். மேலும் ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஸு அலைஹிவஸல்லம் அவர்கள் அந்தக் கீர்த்திமிக்க பிரசங்கத்தை மனித குலத்துக்கும் பிரக்ஞை உடைய ஒட்டுமொத்த படைப்பினங்களுக்கும் எத்தி வைக்கிறார்கள். அந்த வகையில் கடந்த மற்றும் எதிர் காலங்கள் முழுவதும் நிகழ்காலத்துடைய வடிவத்திலும் ஒட்டுமொத்த மனித குலமும் ஒரு விசாலமான மஸ்ஜிதிலும் இருப்பதைப் போன்று ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு ஸஃப்பாக வீற்றிருப்பதையும் அந்த நிலையில் அவர்களை நோக்கி அந்தப் பிரசங்கம் நிகழ்த்தப்படுவதையும் கண்டேன். அப்போது குர்ஆனுடைய ஒவ்வொரு வசனமும் கீர்த்தியும் சங்கையும் மிக்க அகிலார்ந்த ஒரு பதவியிலிருந்தும் தனது முகவரியாக உள்ள மகத்தான ஒரு ஜமாஅத்திலிருந்தும் தனது மூலமாகிய கீர்த்தியும் மாட்சிமையும் மிக்க பூர்வீக நித்தியனிடமிருந்தும் தனது மொழிபெயர்ப்பாளராகிய சங்கையான மஹ்பூபியத்துடைய பதவியின் சொந்தக்காரராகிய ஹபீபுல்லாஹ்விடம் இருந்தும் பெற்றுக்கொண்ட அகிலார்ந்த பலம், சங்கை, நடை, நயம், அணி இலக்கணம் என்று அனைத்தாலும் சூழப்பட்ட அற்புதமான ஓர் ஒளிக்குள் இருபதைக் கண்டுகொண்டேன். அந்த நிலையில் அந்தக் குர்ஆனின் ஒவ்வோர் அத்தியாயமும் ஒவ்வொரு வசனமும் ஏன் ஒவ்வொரு சொல்லும் மொத்தக் குர்ஆனையும் போன்ற ஒவ்வோர் அற்புதமாகப் பரிணமித்தது. அல்ஹம்துலில்லாஹி அலா நூரில் ஈமானி வல் குர்ஆன் என்று உளமாறக் கூறினேன். பின்னர் அசலான ஒரு சத்தியமாகவும் சத்தியப் பாடமாகவும் இருந்த அந்தக் கற்பனையிலிருந்து நஃபுது உடைய நூன் திறந்து தந்த வாயிலூடாகவே வெளியேறினேன். பின்னர் அந்தக் கற்பனைச் சஞ்சாரத்தை மீண்டும் ஒரு முறை திரும்பிப் பார்த்தேன். குர்ஆனின் அத்தியாயங்கள், வசனங்கள், சொற்களைப் போன்றே “நஃபுது” உடைய நூன் போன்ற சில எழுத்துகளும் கூட மகத்தான சத்தியங்களின் ஒளிமயமான திறவுகோள்களாக இருப்பதைக் கண்டேன். நஃபுது உடைய நூனிலிருந்து வெளியேறிய பின்னர் பகுத்தறிவு அவற்றின் முன்னால் வந்து “எனக்கும் ஒரு பங்கு தேவை. என்னால் உங்களைப் போன்று பறக்க முடியாது. என்னிடம் நடக்க முடியுமான கால்களே உள்ளன. அவை ஆதாரங்களும் அத்தாட்சிகளுமாகும். எனவே نَعْبُدُ விலும் نَسْتَعِينُ இலும் உள்ள வணக்கத்துக்குரியவனையும் உதவியாளனையும் நோக்கிச் செல்கின்ற பாதையை காட்டித் தந்தால் மாத்திரமே என்னால் உங்களோடு வர முடியும்” என்று கூறியது. அப்போது உள்ளத்தில் உதித்த ஒரு விடயத்தைப் பகுத்தறிவிடம் பின்வருமாறு கூறினேன்: இதோ இந்தப் பிரபஞ்சத்தைப் பார். உயிர்களாக இருக்கட்டும் அல்லது சடங்களாக இருக்கட்டும், அனைத்தும் பூர்த்தியான ஓர் ஓழுங்கோடும் கட்டுப்பாட்டோடும் செய்கின்ற பணிகள் உண்மையில் அந்த வடிவில் இருக்கும் அவற்றின் வனக்க வழிபாடுகளாகும் என்பதைக் காண்பாய். பிரக்ஞையோ உணர்வுகளோ அற்றவையாகத்தான் இருந்தாலும் அவை மிகவுமே பிரக்ஞைபூர்வமான, நேர்த்தியான, வணக்கத்துவம் வாய்ந்த பணிகளையே செய்கின்றன. இவை அனைத்தும் உண்மையான வணக்கத்துக்குரியவனாகவும் முத்லக்கான அதிபதியாகவும் உள்ள ஒருவன் உள்ளான் என்பதையும் அவனே அந்த அனைத்தையும் வணக்கத்துவமான உத்தியோகங்களில் அமர்த்தியுள்ளான் என்பதையுமே காட்டி நிற்கின்றன. பின்னர் வஸ்துகளையும் குறிப்பாக உயிரினங்களையும் பார். ஒவ்வொன்றுக்கும் ஏகப்பட்ட, வகை வகையான தேவைகளும் தமது இருப்புக்கும் தொடர்ச்சிக்கும் அவசியமான ஆதாரங்களும் அவசியமாக இருக்கின்ற நிலையில் அவற்றால் தமது தேவைகளுள் மிகச் சிறிய ஒன்றைக் கூடத் தமது கரங்களாலும் பலத்தாலும் எட்ட முடியாத நிலையே காணப்படுகின்றது. ஆனால், அந்த எண்ணற்ற தேவைகளும் வாழ்வாதாரங்களும் நினையாப் புறத்திலிருந்து மிகப் பொருத்தமான, மிக அவசியமான நேரங்களில் அவற்றின் கரங்களில் ஒப்படைக்கப்படுவதைக் காண்கிறோம். ஒரு பக்கம் இந்த வஸ்துகளின் எண்ணற்ற தேவைகளும் மறு பக்கம் அவற்றுக்காக பிரமிக்கத்தக்க வகையில் மறைவிலிருந்து வருகின்ற ரஹ்மானியத்தான ஈகைகள், அருட்கொடைகள், உதவிகளும் அந்த வஸ்துகளைப் போஷித்துப் பாதுகாக்கின்ற முத்லக்கான ஒரு தயாளனின், முத்லக்கான ஒரு வல்லோனின் இருப்பையே காட்டி நிற்கின்றன. எனவே ஒவ்வொரு வஸ்தும், ஒவ்வோர் உயிரும் அவனிடம் உதவியும் ஒத்தாசையும் தேடிக்கொண்டே உள்ளது. ஆத்மார்த்தமாகவும் மெய்ம்மொழியாலும் اِيَّاكَ نَسْتَعِينُ என்று கூறுகின்றது. இவற்றைக் கேட்ட பின்னர் பகுத்தறிவும் “ஆமன்னா வ ஸதக்னா” என்று கூறி ஏற்றுக்கொண்டது.
பின்னர் அதன் தொடராக اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ اَنْعَمْتَ عَلَيْهِمْ என்று கூறிய சமயம் கடந்த காலத்தை நோக்கி எனது பார்வை சென்றது. கடந்த காலத்தில் இந்த உலகைவிட்டும் குடிபெயர்ந்து செல்கின்ற மனிதர்களுக்கு மத்தியில் மிகவும் பிரகாசமான ஒளிச் சுடர்கள் போன்று பரிணமிக்கும் நூரானியத்தான நபிமார்களையும் ஸித்தீகீன்கள், ஷுஹதாக்களையும் அவ்லியாக்கள், ஸாலிஹீன்களையும் கண்டேன். அவர்கள் நித்தியத்தை நோக்கிச் செல்லும் திசையில் எதிர்காலம் என்ற இருள் மூட்டத்தை அகற்றியவண்ணம் ஒரு விசாலமான, முஸ்தகீமான பாதையில் சென்றுகொண்டிருந்தனர். இந்த வார்த்தை எனக்கும் ஓடோடிச் சென்று அந்தக் கூட்டத்துடன் இணைந்துகொள்வதற்கு வழி காட்டியது. இல்லை அவர்களோடு என்னையும் இணைத்துவிட்டதைப் போலிருந்தது. அச்சமயம் என்னை அறியாமலேயே வியப்போடு ஃபஸுபுஹானல்லாஹ் என்றேன். எதிர்கால இருள் மூட்டத்தை ஒளியேற்றியவண்ணம் பூரண அமைதியோடும் நிம்மதியோடும் சென்றுகொண்டிருக்கின்ற இந்த நூரானியத்தான பயணக் கூட்டத்தோடு இணைந்துகொள்ளாதிருப்பது எவ்வளவு பெரிய நட்டமும் அழிவுமாகும் என்பதை அணுவளவு பிரக்ஞையுள்ள ஒருவனும்கூட அறிந்துகொள்ள வேண்டுமல்லவா என்று அங்கலாய்த்தேன். அதற்கு மாற்றமாகப் புதுப் புது நூதனங்களையும் அனுஷ்டானங்களையும் அறிமுகம் செய்து அந்தச் சங்கையான கூட்டத்திலிருந்து விலகிச் செல்பவனால் எங்கிருந்து ஒளியைப் பெற்றுக்கொள்ள முடியும்? எந்தப் பாதையில் ஸலாமாத்தான திசை நோக்கிச் செல்ல முடியும்? அந்தப் பாதையின் வழிகாட்டியான ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் كُلُّ بِد۟عَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِى النَّارِ என்று கூறுகிறார்கள். இப்போது இந்தத் திட்டமான வாக்குக்கு முன்னால் கெட்ட அறிஞர்கள் என்ற பட்டத்துக்கே தகுதியான சில அபாக்கியசாலிகள் எந்த நியாயத்தைக் கொண்டு எந்த ஃபத்வாவின் பிரகாரம் இஸ்லாத்தின் தெளிவான சட்டங்களுக்கு முரணாகச் சென்று அவற்றில் மாற்றம் செய்வதை எந்த அவசியமுமின்றி, மிகவுமே நஷ்டகரமான ஓர் அமைப்பில் அங்கீகரிக்கிறார்கள்? சில வேளை அர்த்தத்தின் குறுகிய ஒரு பிரதிபலிப்பிலிருந்து கிடைக்கும் தற்காலிகமான ஒரு விளிப்பு அந்தக் கெட்ட உலமாக்களை மயக்கியிருக்க வேண்டும். உதாரணமாக: ஒரு மிருகத்தின் அல்லது ஒரு கனியின் தோல் உரிக்கப்பட்டால் அதில் தற்காலிகமான ஓர் அழகு காணப்படும். ஆனால் சொற்ப நேரத்துக்குள்ளே அந்த மிருதுவான சதை, அந்த அழகிய கனி சுற்றி வைக்கப்பட்டுள்ள அன்னியமான, அழுக்கான, கனமான உரைக்குள் கருத்து, அழுகிப் போய்விடும். அவ்வாறே இஸ்லாமிய வழக்கில் உள்ள நபித்துவ மற்றும் தெய்வீகப் பிரயோகங்கள் பயன்மிக்க உயிரோட்டமான தோலைப் போன்றவையாகும். அவை உரிக்கப்பட்டால் அர்த்தத்திலுள்ள நூரானியத் நிர்வான நிலையில் தற்காலிகமாகப் புலனாகினாலும், தோல் உரிக்கப்பட்ட ஒரு கனியைப் போன்று அந்த முபாரக்கான அர்த்தங்களின் ஆத்மாக்கள் வெகு விரைவாகவே பறந்து சென்றுவிடும். இருண்ட உள்ளங்களிலும் தலைகளிலும் மனிதனால் அணிவிக்கப்பட்ட தோல்களே எஞ்சியிருக்கும். ஒளி போய், புகை மாத்திரம் எஞ்சியிருக்கும். எப்படியோ…
இது தொடர்பில் ஹகீகத்தான ஒரு விதியைத் தெளிவுபடுத்த வேண்டும். அதாவது: “ஹுகூகுல் இபாத்” என்றும் -ஒரு வகையில் ஹுகூகுல்லாஹ் ஆகக் கருதப்படும்- “ஹுகூகுல் உமூம்” என்றும் இரண்டு வகையான சட்டங்கள் காணப்படுகின்றன. அவ்வாறே ஷரீஅத்துடைய விடயங்களின் ஒரு பகுதியானது தனி நபர்களோடு தொடர்பானதாகவும் இன்னுமொரு பகுதியானது அவற்றின் உமூமியத் காரணமாக உமூமோடு அதாவது சமூகத்தோடு தொடர்பானதாகவும் உள்ளன. இவை இஸ்லாமிய வழக்காறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த வழக்காறுகள் சமூகத்தோடு தொடர்பானவை என்பதால் மொத்த சமூகமும் அதில் பங்குதாரர்களாவர். எனவே சமூகத்தின் பொருத்தமின்றி அவற்றைத் தீண்டுவது அவர்களுடைய உரிமையில் அத்துமீறும் செயலாகும். அவ்வாறான அம்சங்களின் மிகச் சிறியது (அதாவது ஸுன்னத் என்ற அளவிலுள்ள ஓர் அம்சம்) மிகப் பெரியதின் அளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவை நேரடியாகவே ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகோடும் தொடர்புபடுகின்ற அதே சமயம் ஸஹாபாக்கள் முதல் இன்றுவரை உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய முன்னோடிகளையும் பிணைக்கின்ற நூரானியத்தான சங்கிலிகளாகவும் திகழ்கின்றன. அந்த நூரானியத்தான பிணைப்புகளைத் துண்டிக்கவும் சிதைக்கவும் முயற்சிப்பவர்களும் அதற்கு உதவியாக இருப்பவர்களும் எப்படிப்பட்ட பயங்கரமான ஒரு தவறில் உள்ளார்கள் என்பதை சிந்திக்கட்டும். அணுவளவேனும் பிரக்ஞையுள்ளவர்களாக இருந்தால் நடுநடுங்கட்டும்.
ஷரீஅத்தின் ஒரு பகுதி அம்சங்கள் “தஅப்பூதி” என்று அழைக்கப்படுகின்றன. அவை பகுத்தறிவின் விசாரணைகளுக்கோ பகுப்பாய்வுகளுக்கோ உற்பட்டவையல்ல. கட்டளை என்பதால் கட்டாயம் செய்யப்பட வேண்டியவையாகும். அதற்கான இல்லத், அதாவது மூல காரணி கட்டளையாகும். இன்னுமொரு பகுதி அம்சங்கள் “மாகூலுல் மஅனா” எனப்படுகின்றன. அதாவது அதிலுள்ள தாத்பரியங்களும் பயன்களும் அந்தத் தீர்ப்பு சட்டமாகுவதில் உயர்வான தாக்கத்தை செலுத்தியுள்ளன. ஆனால் அது அந்த சட்டத்துக்கான காரணியோ மூல காரணியோ அல்ல. ஏனெனில் ஹகீகத்தான மூல காரணி தெய்வீக ஏவல் விலக்கல்களாகும். தஅப்பூதீ என்ற பகுதிக்குள் வருகின்ற வழக்காறுகளை எவ்விதமான பயன்கள் அல்லது தாத்பரியங்களையும் காரணமாக வைத்து மாற்ற முடியாது. அவற்றில் எப்போதும் தஅப்பூதியத்தான தன்மையே உயர்வுக்கும் தெரிவுக்குமுரியதாக இருக்கும். இலட்சோப இலட்சம் பயன்கள் கூறப்பட்டாலும் அதை மாற்ற முடியாது. அவ்வாறே பொதுவாக அறியப்பட்ட ஒரு பயனை அல்லது தாத்பரியத்தை மாத்திரம் கொண்டுவந்து “இதுதான் இந்த வழக்காறின் நோக்கம்” என்றும் கூற முடியாது. அவ்வாறு அறிவதும் தவறாகும். மாறாக குறித்த அந்தப் பயன் ஏராளமான பயன்களுள் ஒரு பயனாக மாத்திரமே இருக்க முடியும். உதாரணமாக ஒருவன் “அதானுடைய தாத்பரியம் முஸ்லிம்களைத் தொழுகைக்கு அழைப்பதாகும். எனவே அதற்குப் பதிலாக ஒரு துப்பாக்கி வேட்டு போதுமானதாகும்” என்று கூறுகிறான். பாவம், அதானுடைய பல ஆயிரம் தாத்பரியங்கள் உள்ளன. இது அவற்றுள் ஒன்று மாத்திரமே என்பதை அந்தக் கேடி அறிவானா? என்று கேட்கத் தோன்றுகிறது. வேட்டுச் சத்தம் அந்த ஒரு நோக்கத்தை நிறைவேற்றினாலும், அதனால் மனித குலத்தின் பெயரால் அல்லது ஊர் மக்களின் பெயரால் பிரபஞ்சத்தினதும் மனித குலத்தினதும் படைப்பின் மகத்தான விளைவாக உள்ள தவ்ஹீத், ருபூபியத் என்பவற்றின் வெளிப்பாட்டைப் பறைசாற்றும் ஒரு பிரகடனமாகவும் பிரபஞ்சத்துடைய படைப்பின் விளைவாகிய அந்த வெளிப்பாட்டுக்கு முன்னால் அடியானின் உபூதியத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வஸீலாவாகவும் திகழும் அதானுடைய இடத்தை எவ்வாறு நிரப்ப முடியும்? சுருக்கமாக: நரகம் அவசியமற்றதல்ல. தமது முழுப் பலத்தையும் திரட்டி “வாழ்க நரகம்!” என்று கூறுகின்ற ஏராளமான விடயங்கள் உள்ளன. அவ்வாறே சுவனமும்கூட மலிவானதல்ல. அதற்கான விலையும் மகத்தானதாகும். لَا يَس۟تَوٖٓى اَص۟حَابُ النَّارِ وَاَص۟حَابُ ال۟جَنَّةِ اَص۟حَابُ ال۟جَنَّةِ هُمُ ال۟فَٓائِزُونَ … الخ
ரமழான் மாத நோன்பு இஸ்லாத்தின் முதன்மையான ஐந்து தூண்களுள் ஒன்றும் உயர் அந்தஸ்த்தைக் கொண்ட வணக்க வழிபாடுகளுள் ஒன்றுமாகும். இந்த வகையில் புனித ரமழான் மாத நோன்பில் பல்வேறு நோக்கங்களும் தாத்பரியங்களும் பொதிந்துள்ளன. வல்லோன் அல்லாஹ்வின் அகிலார்ந்த பரிபாலிப்பு, மனிதனின் சமூக வாழ்வு, தனி மனித வாழ்வு, உளப் பயிற்றுவிப்பு என்பவற்றுடன் இறை அருட்கொடைகளுக்கான நன்றி என்பன அவற்றுள் சிலவாகும். முதலில் நோன்பில் காணப்படும் இறை பரிபாலிப்புடன் தொடர்பான தாத்பரியங்களுள் ஒன்றை நோக்குவோம்: வல்லோன் அல்லாஹ், பூமிப் பரப்பை ஓர் ஆகார விரிப்பாகப் படைத்து அத்தனை வகையான அருள் ஆகாரங்களையும் مِنْ حَيْثُ لاَ يَحْتَسِبُ நினையாப் புறத்திலிருந்து என்ற வசனத்திற்கேற்ப அந்த விரிப்பில் ஒழுங்குபடுத்தி வைத்துள்ளான். இவ்வாறு தன்னுடைய பரிபாலிப்பின் பரிபூரணத் தன்மையையும் படைப்புகள் மீதான தனது அன்பு, ஆதரவு, ஈகை என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றான். அலட்சியப் போக்கு என்ற திரைக்குப் பின்னால், காரணகாரிய எல்லைக்குள் இருந்து சிந்திக்கின்ற மனிதன் சூரியன் போல் பிரகாசமான மேற்படி உண்மைகளைக் காண முடியாதவனாக இருக்கிறான். சில வேளை காண்பதை மறந்தும் விடுகிறான். புனித ரமழானில் இந்த நிலை திடீரென்று மாற்றம் பெறுகின்றது. இறை நம்பிக்கையாளர்கள் அனைவரும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஓர் இராணுவ அணியைப் போல் மாறிவிடுகின்றனர். நித்திய அரசனின் விருந்துபசாரத்துக்குச் சமூகமளித்த இராணுவ சிப்பாய்களைப் போன்ற கட்டுப்பாட்டுடன் மாலை வரை அவனது கட்டளைக்காகக் காத்திருந்து தமது அடிமைத்துவத்தைப் பறைசாற்றுகின்றனர். இவ்வாறு அந்த நித்திய அரசனின் அன்பும் அருளும் ஈகையும் பூரணத்துவமுமிக்க பரிபாலிப்புக்கு முன்னால் மிகவும் ஆழமும் மேன்மையும் நேர்த்தியும் மிக்க ஒரு வணக்கத்தின் மூலம் பதிலளிக்கின்றனர். இத்தகைய சிரேஷ்டமான ஒரு வணக்கத்திலும் விஷேடமான ஒரு கௌரவிப்பு நிகழ்விலும் பங்குபற்றாத மனிதர்கள் எவ்வளவு பெரிய அபாக்கியசாலிகள் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
அருள் நிறைந்த ரமழானில் இறை அருள்களுக்கு நன்றி செலுத்துவது தொடர்பான பல்வேறு தாத்பரியங்கள் பொதிந்துள்ளன. அவற்றுள் ஒன்றை அவதானிப்போம்: முதலாவது வார்த்தையில் கூறப்பட்டுள்ளதைப் போன்று, ஓர் அரச சமையலரையிலிருந்து ஒரு சேவகனால் கொண்டு வரப்படும் அறுசுவை உணவுகளுக்கு ஒரு விலையும் மதிப்பும் இருக்கின்றது. பெறுமதிவாய்ந்த அந்த அருள் ஆகாரங்களூடாக அவற்றை அருள்பாலித்த அரசனை அறிந்துகொள்ளாமல் வெறுமனே சேவகனுக்கு மாத்திரம் கையூட்டுக் கொடுத்துவிட்டுச் செல்வது மிகப் பெரிய ஒரு மடமையாகும். வல்லோன் அல்லாஹ் மனித குலத்துக்காக வகை வகையான எண்ணற்ற அருள் ஆகாரங்களைப் பூமிப் பரப்பெங்கும் பரத்தி வைத்துள்ளான். மனிதன் நன்றியுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதே அந்த அருட்கொடைகளுக்காக எதிர்பார்க்கப்படுகின்ற விலையாகும். ஏதோ வெளிப் பார்வைக்கு காரணகர்த்தாக்களாகவும் எஜமானர்களாகவும் தென்படுபவர்களால் அதிகபட்சம் சேவகர்கள் என்ற அந்தஸ்த்துக்கு அப்பால் செல்ல முடியாது. அந்த சேவகர்களுக்காக ஒரு விலை கொடுக்கிறோம். அவர்களுக்கு நன்றியும் தகுதிக்கு விஞ்சிய அளவு பெருமதிப்பும் வைக்கிறோம். வாழ்க்கை பூராகவும் நன்றிக்கடன் பட்டவர்களாக ஆகிவிடுகிறோம். ஆனால் உண்மை அருளாலன் அந்த சேவகர்களைவிட எண்ணற்ற மடங்கு அதிகம் நன்றி செலுத்தப்பட வேண்டிய தகுதியுடையவனாக இருக்கிறான். ஆம்! தூய நன்றிக்கான முதன்மையான அடிப்படைகள் இரண்டாகும். முதலாவது, எந்த விதத் திரையும் இன்றி நேரடியாகவே உண்மை அருளாலனை அறிந்துகொள்வதாகும். இரண்டாவது, அந்த அருட்கொடைகளின் உண்மையான பெறுமதியை அறிந்து அவற்றின்பால் தனக்குள்ள தேவையை உணர்ந்து கொள்வதாகும். இந்த வகையில் புனித ரமழான் நோன்பானது உண்மையும் தூய்மையும் பூர்த்தியும் மிக்க உயர்வான ஒரு நன்றிக்கான திறவுகோளாகும். ஏனெனில் வேறு காலங்களில் கடமைப்பாட்டில் இல்லாத மனிதர்களுள் அதிகமானவர்கள் பசியின் யதார்த்தத்தை அனுபவிக்காதிருப்பதால், அதிகமான அருள்களின் பெறுமதியை புரிந்துகொள்ள முடியாதுள்ளனர். காய்ந்த ஒரு ரொட்டித் துண்டிலிருக்கும் அருட் பெறுமானம் வயிறு நிறைந்த நிலையிலுள்ள மனிதர்களால், குறிப்பாகப் பணம் படைத்தவர்களால் புரிந்து கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஓர் இறையடியான் நோன்பு துறக்கும் நேரத்தில் அந்தக் காய்ந்த ரொட்டித் துண்டின் பெறுமதியை உணர்ந்துகொள்வான். அது மிகப் பெரியதோர் அருட்கொடை என்பதற்கு அந்த நேரத்தில் அதன் சுவையை முழுமையாக உணர்கின்ற சுவையுணர்வும் தேவையை முழுமையாக உணர்கின்ற பசியுணர்வும் சான்று பகரும். ஆம், புனித ரமழானில் மாமன்னர்கள் முதல் பரம ஏழைகள் வரை அனைவரும் அந்த அருட்கொடைகளின் பெறுமதியை உணர்ந்துகொள்வதன் மூலம் நன்றி செலுத்துவதற்குரிய ஆன்மீக ரீதியான அந்தஸ்த்தை அடைந்து கொள்கின்றனர். மேலும் பகல் காலங்களில் உண்பதை விட்டும் தடுக்கப்பட்டுள்ள காரணத்தினால் “இந்த அருட்கொடைகள் எனது சொத்துக்கள் அல்ல, இவற்றை அனுபவிப்பதற்கு எனக்கு எவ்வித சுதந்திரமும் கிடையாது, இவற்றின் உண்மை உரித்தாளன் வேறொருவனாக இருக்கின்றான், அவனது கட்டளைக்காக காத்திருக்கிறேன்” என்று அனைத்தையும் அருள்களாகப் பார்ப்பதற்கும் அதன் மூலம் அருள்பாலிக்கின்ற அருளாலனை நோக்கித் திரும்புவதற்கும் கற்றுக்கொள்வான். எனவே நன்றியும் செலுத்துவான். ஆம், இந்த அடிப்படையில் நோன்பானது பல்வேறு கோணங்களில் மனிதனுடைய அடிப்படைக் கடமையாக உள்ள நன்றியின் திறவுகோள் என்ற அந்தஸ்த்தை அடைகின்றது.
நோன்பில் மனிதனுடைய சமூக வாழ்வோடு தொடர்பான பல்வேறு தாத்பரியங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றை நோக்குவோம்: வாழ்வாதார விடயத்தில் மனிதர்கள் பல்வேறு தராதரங்களை உடையவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்படுகின்ற ஏற்றத் தாழ்வுகளைப் போக்குவதற்காக வல்லோன் அல்லாஹ் வசதியுள்ளவர்களை ஏழைகளின் உதவிக்காக அழைக்கிறான். நோன்பில் பசித்திருக்கும் போது வசதியுள்ளவர்கள் வறியவர்களின் கவலைக்கிடமான நாளாந்த நிலமைகளையும் பசியின் கொடுமையையும் உணர்ந்துகொள்கின்றனர். ஒரு வேளை நோன்பு இல்லாதிருந்தால், வசதி படைத்தவர்களுள் அதிகமானவர்கள் மனோ இச்சையின் செல்வாக்குக்கு உற்பட்டிருக்கின்ற காரணத்தினால், பசியும் வறுமையும் எவ்வளவு கஷ்டகரமானது என்பதையும் உண்ண வசதியற்ற ஏழைகள் எந்த அளவு ஆதரவளிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள் என்பதையும் உணர்ந்துகொள்ள வாய்ப்பற்றவர்களாக ஆகியிருப்பார்கள். மேலும், சக மனிதர்களுக்கு இரக்கம் காட்டும் பண்பானது தூய நன்றிக்கான ஓர் அடிப்படையாகும். எந்த ஒரு மனிதனை எடுத்துக் கொண்டாலும் தன்னைவிட ஏதோ ஒரு வகையில் வறிய நிலையில் உள்ள ஒருவனைக் கண்டுகொள்ளலாம். எனவே ஒவ்வொரு மனிதனும் தன்னை விடக் கீழ் நிலையிலுள்ள மனிதன் மீது ஆதரவு செலுத்தக் கடமைப்பட்டுள்ளான். தனது நஃப்ஸைப் பசியில் போடுவது நோன்பின் மூலம் கடமையாக்கப்பட்டிருக்காவிட்டால் தனக்குக் கீழ் நிலையில் உள்ளவர்கள் மீது இரக்க உணர்வோ தனக்குக் கிடைக்கப் பெற்றுள்ள அருள்களுக்கான நன்றியுணர்வோ உளப்பூர்வமாக வெளிப்பட்டிருக்காது. எனவே நோன்பு தம் மீது கடமையான நன்றியையும் தர்மத்தையும் ஆத்ம திருப்தியோடு நிறைவேற்றுவதற்கான பயிற்சியை வழங்குகின்றது. இல்லாவிட்டால் எல்லோருக்கும் இதற்கான வாய்ப்புக் கிட்டியிருக்காது.
புனித ரமழான் மாத நோன்பில் மனித நஃப்ஸின் பயிற்றுவிப்போடு தொடர்பான பல்வேறு தாத்பரியங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றை நோக்குவோம்: நஃப்ஸானது எப்போதும் சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் இருக்கவே விரும்பும். ஏதோ ஆதியிலிருந்து தான் அவ்வாறு இருப்பதாகவே கருதிக் கொள்ளும். கூடவே ஆழ் மனதில் இயல்பாகவே மாயையான ஓர் அதிகாரத்தையும் சுயாதீனத் தன்மையையும் உணரும். தான் எண்ணிலடங்காத அருட்கொடைகளால் பராமரிக்கப்படுகிறேன் என்பதை சிந்திக்க விரும்பாது. குறிப்பாக சொத்து சுகங்களும் ஆட்சியதிகாரங்களும் வாய்க்கப் பெற்று அலட்சியப் போக்கும் அவற்றோடு இணைந்துகொண்டால் பிறர் நலன் பாராது வெறிபிடித்த மிருகங்களைப்போல் இறை அருட்கொடைகள் மீது பாய்ந்து செல்லும். புனித ரமழானில் கோடீஸ்வரர்கள் முதல் வறியவர்கள் வரை ஒவ்வொரு நஃப்ஸும் தனது அதிகாரத்தின் மாயையும் சுயாதீனப் போக்கின் போலித் தன்மையையும் உணர்ந்துகொள்ளும்; தான் ஒரு சேவகனாகவும் அடிமையாகவுமே இருக்கிறேன் என்பதைக் கண்டுகொள்ளும். அனுமதியில்லாவிட்டால் மிக அற்பமான, மிக இலகுவானதொரு காரியத்தைக் கூட நிறைவேற்ற முடியாது, ஏன் ஒரு மிடர் தண்ணீர் கூட அருந்த முடியாது என்பதைக் காண்கின்ற நஃப்ஸ் தனக்குள் மாயையாகக் கட்டியெழுப்பிய ருபூபியத்துடைய போலித் தன்மையை உணர்ந்துகொள்ளும். தானே தன்னுடைய ரப் என்ற திமிர் அடங்கி உபூதியத் என்ற அடிமைத்துவத்தையும் நன்றியையும் நோக்கித் திரும்பும்.
புனித ரமழான் மாத நோன்பில் நஃப்ஸின் வக்கிர குணங்களைப் பண்படுத்தி அதை கட்டுக்கடங்காத போக்கிலிருந்து விடுவிப்பது தொடர்பான பல்வேறு தாத்பரியங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றை நோக்குவோம்: மனித நஃப்ஸானது அலட்சியப் போக்குக் காரணமாக தன்னைத் தானே மறந்துவிடுகின்றது. தனது இயல்பிலேயே குடிகொண்டுள்ள எல்லையற்ற இயலாமையையும் முடிவற்ற தேவைகளையும் எண்ணற்ற குறைபாடுகளையும் கண்டுகொள்ளாது, கண்டுகொள்ள விரும்பவும் மாட்டாது. மேலும் தனது எல்லையற்ற பலவீனத்தையும் அழிவுகள், அனர்த்தங்களுக்கு முன்னால் தனது சரணாகதி நிலையையும் விரைவாக சிதைந்து அழுகிப் போகக் கூடிய வெறும் சதையாலும் எழும்பாலும் தான் ஆக்கப்பட்டிருப்பதையும் ஒரு போதும் சிந்திக்காது. ஏதோ உருக்காலான உடம்புக்கு சொந்தக்காரன் போலும், இரவா வரம் பெற்று நிரந்தரமாக உலகிலேயே வாழப் போவது போலும் ஒரு வகையான மாயையில் உலகத்தோடு தன்னைப் பிணைத்துக்கொள்ளும். பேராசையுடன், எதிலும் திருப்தியின்றி, ஆன்மாவையும் இழந்து உலகத்துக்காகவென்றே விடுபட்டுவிடும். அற்ப இன்பங்களுக்காகவும் இலாபங்களுக்காகவும் எந்த ஒன்றோடும் தன்னைப் பிணைத்துக்கொள்ளும். அனைத்துக்கும் மேலால் பேரன்போடும் அருளோடும் தன்னைப் போஷித்துப் பரிபாலிக்கும் படைப்பாளனையும் மறந்துவிடுகின்றது. இவ்வாறு நஃப்ஸானது படுபாதகங்களில் உழன்று கொண்டிருக்கும் போது.. நோன்பானது அதிக அலட்சியப் போக்குடையவர்களுக்கும் பிடிவாதக்காரர்களுக்கும்கூட அவர்களுடைய பலவீனத்தையும் இயலாமையையும் இறை ஆதரவின்பாலுள்ள தேவையையும் உணர்த்தும். மனிதன் பசி காரணமாக வயிற்றைப் பற்றி சிந்திப்பான். அதனூடாக எவ்வளவு தேவைப்பாடு உடையவனாக இருக்கின்றேன் என்பதைப் புரிந்துகொள்வான். தனது உடலின் பலவீனத்துக்கு மேல் பலவீனமான நிலையை சற்று சிந்தித்துப் பார்த்து இறை ஆதரவின்பால் தனக்குள்ள தேவையை உணர்ந்துகொள்வான். இவ்வாறு நஃப்ஸின் பிர்அவ்னியத்தான போக்கிலிருந்து விலகித் தன்னுடைய எல்லையில்லாத இயலாமை, பலவீனம் என்பவற்றை அறிந்தவனாக அல்லாஹ்விடம் அடைக்கலம் தேடுவதற்கான தேவையை உணர்ந்துகொள்வான். பின்னர் ஆழமானதொரு ஆத்ம நன்றி ஊடாக இறை கருணையில் ஆசி வைப்பான். (பொடுபோக்குத் தன்மை காரணமாக இன்னும் மரணிக்காத ஆத்மாக்களே நோன்பின் மூலம் இவ்வாறான பயன்களை அடைந்துகொள்ளும்.)
ரமழானில், புனித அல் குர்ஆன் இறக்கியருளப்பட்டமை தொடர்பாகவும் ரமழான் மாதமே புனித அல் குர்ஆன் இறக்கியருளப்படுவதற்கான மிகச் சிறந்த காலம் என்ற வகையிலும் பல்வேறு தாத்பரியங்கள் பொதிந்துள்ளன. அவற்றுள் ஒன்றைப் பார்ப்போம்: சர்வ ஞானம் பொருந்திய குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதம் ரமழானாகும். இதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆகவே புனித குர்ஆன் இறக்கியருளப்பட்ட அந்தக் காலத்திற்காக அடியார்கள் அனைவரும் தம்மைத் தயார் செய்துகொள்வது குர்ஆனுக்குக் கொடுக்கும் மகத்தான ஒரு கண்ணியமாகும். எனவே ரமழானுடைய காலத்தில் அடியார்கள் அனைவரும் அர்ஷிலிருந்து வரும் அந்தத் தெளிவுறைகளை அழகிய முறையில் வரவேற்பதற்காக நஃப்ஸுடைய இச்சைகளிலிருந்தும் வீண்விளையாட்டுகளிலிருந்தும் ஒதுங்கி, உணவு, பானம் போன்றவற்றைத் துறந்து ஒரு வகை மலகானியத்தான நிலைக்கு உயர்கின்றனர். இதன் மூலம் அந்த மாதத்தில் குர்ஆனை அன்றைய தினம் இறக்கியருளப்படுவது போன்று ஓதி, அதிலுள்ள அல்லாஹ்வின் வார்த்தைகளை ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களிடமிருந்து நேரடியாக செவிமடுக்கும் உணர்வில், அல்லது ஜிப்ரீல் (அலை) அவர்களிடமிருந்து அல்லது அந்த வார்த்தைகளின் சொந்தக் காரனாகிய நித்திய அரசன் அல்லாஹ்விடமிருந்தே நேரடியாக செவிமடுக்கும் உணர்வில் செவிமடுப்பதன் மூலம் மகத்தான அந்தஸ்துகளை அடைந்துகொள்கின்றனர். இது இந்த மாதத்தில் குர்ஆன் இறக்கியருளப்பட்டதிலுள்ள தாத்பரியத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகின்றது. ஆம் புனித ரமழான் மாதத்தில் இஸ்லாமிய உலகம் முழுவதும் ஒரு வணக்கஸ்தலமாக மாறிவிடுகின்றது. மில்லியன் கணக்கான ஹாஃபிஸ்கள் அந்த வணக்கஸ்தலத்தின் எல்லா மூலை முடுக்குகளிலும் அமர்ந்து அர்ஷிலிருந்து வரும் வழிகாட்டியான அந்தக் குர்ஆனை பூமியிலுள்ளவர்களுக்கு எத்தி வைக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொரு ரமழானும் شَهْرُ رَمَضَانَ الَّذِى اُنْزِلَ فِيهِ الْقُرْاۤنُ என்ற வசனத்தின் தாத்பரியத்தைப் பிரகாசமாகப் பிரதிபலித்துக்கொண்டும் தான் குர்ஆனுடைய மாதம் என்பதை நிரூபித்துக்கொண்டுமிருக்கின்றது. அந்த விசாலமான வணக்கஸ்தலத்தில் வீற்றிருக்கும் ஜமாஅத்தின் ஏனைய அங்கத்தவர்களில் சிலர் இறை காதலுடன் அந்த வார்த்தைகளுக்கு செவிசாய்ப்பார்கள். இன்னும் சிலரோ தாமாக ஓதிக் கொள்வார்கள். இப்படிப்பட்ட ஆத்மீக மயமான ஒரு வணக்கஸ்தலத்தில் இருந்துகொண்டு நஃப்ஸின் இச்சைகளுக்கு அடிமையாகி உண்டு குடித்து அந்த ஆத்மீக சூழலிலிருந்து வெளியேறுவது தன்னளவில் வெறுக்கத்தக்க ஒரு செயலாக இருப்பது மாத்திரமன்றி அந்த ஜமாஅத்தின் ஆன்மீக ரீதியான வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்ள வழிவகுக்கும். அவ்வாறே புனித ரமழானில் நோன்பாளிகளைத் தூற்றிக் குரோதம் வளர்ப்பவர்களும் முஸ்லிம் உம்மத்துடைய ஆத்ம வெறுப்பை சம்பாதித்துக்கொள்வார்கள்.
மனிதன் உலகத்துக்கு மறுமை வியாபாரத்துக்காக அனுப்பப்பட்டவன் என்ற வகையில், ரமழான் நோன்பில் மனித குலத்துக்கான வெகுமதிகளோடு தொடர்பான பல்வேறு தாத்பரியங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்றைப் பார்ப்போம்: புனித ரமழானில் நல்லமல்களுக்கான கூலி ஒன்றுக்கு ஆயிரமாகும். ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று குர்ஆனின் ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் பதியப்படுகின்றன. அதாவது பத்து அழகிய செயல்களாக மாறி பத்து சுவனத்துக் கனிகளைப் பெற்றுத் தருகின்றன. புனித ரமழானைப் பொருத்தவரை ஒவ்வொரு எழுத்துக்கும் பத்தல்ல ஆயிரம் நன்மைகளும் ஆயதுல் குர்ஸி போன்ற வசனங்களின் ஒவ்வொரு எழுத்துக்கும் பல்லாயிரக்கணக்கான நன்மைகளும் குறிப்பாக ரமழானுடைய ஜூம்ஆ தினங்களில் அதைவிட அதிகமான நன்மைகளும் பதியப்படுகின்றன. லைலதுல் கத்ர் தினத்தில் அந்த நன்மைகள் முப்பதாயிரமாக உயர்கின்றன. ஆம்! ஒவ்வொரு எழுத்துக்கும் முப்பதாயிரம் நித்திய கனிகளை இறை அடியார்களுக்குப் பெற்றுத்தரும் சங்கைமிக்க குர்ஆன் புனித ரமழானில் தூபா மரத்தை ஒத்ததொரு நிலையை அடைந்து கோடிக் கணக்கான நித்திய கனிகளை இறை அடியார்களுக்கு பெற்றுக் கொடுக்கின்றது. இதோ இந்த நஷ்டமே இல்லாத, நித்திய இலாபங்களைத் தரும் புனிதமான வியாபாரத்தைத் தவறவிடாதீர்கள். மேலும் இந்த வியாபாரத்தின் பெறுமதியைப் பொருட்படுத்தாமல் புறக்கணிப்பவர்கள் எப்படிப்பட்ட கணக்கிட முடியாத ஒரு நஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள். ஆம் புனித ரமழான், மறுமை வியாபாரத்துக்கான மிகவும் இலாபகரமான ஒரு சந்தையாகும்; நிரந்தர விளைச்சல்களை பெற்றுத்தரக்கூடிய செழிப்பு மிக்கதொரு விளைச்சல் நிலமாகும்; அமல்கள் பல்கிப்பெருகி பல மடங்குகளாக மாறும் ஒரு ஆன்மீக வசந்த காலமாகும்; இறை பரிபாலிப்புக்கும் ஆட்சியதிகாரத்துக்கும் முன்னால் மனிதனின் அடிமைத்துவத்தை பறைசாற்றுவதற்கான மிகப் புனிதமானதொரு பண்டிகைக் காலமாகும். இப்படிப்பட்ட மகத்துவங்கள் காரணமாகத்தான் நஃப்ஸானது உண்டு, குடித்துப் பொடுபோக்குத்தனத்தில் வீழ்ந்து விடாதிருப்பதற்காகவும் மிருகத்தனமான இச்சைகளுக்கு அடிமைப்பட்டு வீண் விளையாட்டுகள், உலக இன்பங்களில் மூழ்கி விடாதிருப்பதற்காகவும் இம்மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு மிருகத்தனமான இச்சைகளிலிருந்து விடுபட்டு மலகானியத் நிலையை அடைந்து மறுமை வியாபாரத்துக்காக மனிதன் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக்கொள்கிறான். உலகாயுத தேவைகளைவிட்டும் தற்காலிகமாக ஒதுங்கி ஒரு சுவனத்து ஆத்மா உடலுருப் பெற்றதைப் போல் மாறிவிடுகிறான். இவ்வாறு நோன்பினூடாக தனது இரட்சகன்பால் தனக்குள்ள தேவையை ஒரு வகையில் பிரதிபலிக்கின்றான். ஆம் புனித ரமழான் தற்காலிகமான இந்த உலகில் தற்காலிகமான, குறுகிய ஒரு வாழ்வுக்குப் பகரமாக நித்தியமானதும் முடிவற்றதுமான ஒரு வாழ்க்கையை வெற்றியீட்டித் தருகின்றது. ஆம் தனி ஒரு ரமழான் என்பது வருட ஆயுளுக்குச் சமனான நித்திய கனிகளைப் பெற்றுத் தருகின்றது. லைலதுல் கத்ர் குர்ஆன் இறங்கிய காரணத்தினால் ஆயிரம் மாதங்களைவிட சிறப்புப் பெற்றமை இதற்கான சான்றாகும். மாமன்னர்கள் தமது ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு வருடமும் தனது ஆட்சியதிகாரத்துக்கும் கண்ணியத்துக்கும் பெருமை சேர்க்கும் வகையில் குறித்த சில விஷேட தினங்களை விழாக்காலமாக அறிவிப்பார்கள். அன்றைய தினம் வழமையான நடைமுறைகள், சட்டதிட்டங்களுக்கு மாற்றமாகத் தனக்கு விசுவாசமான அந்த மக்களுக்கு முன்னால் ஆஜராகி மக்கள் மீதான தனது விஷேட அன்பை வெளிப்படுத்துவார்கள். அவர்களைப் பல விதமான அன்பளிப்புகள், சலுகைகள் மூலம் மகிழ்வூட்டுவார்கள். இவ்வாறு ஒட்டுமொத்த மக்கள் மத்தியிலும் தன் மீதுள்ள நெருக்கமும் விசுவாசமும் அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆம், ஆதி அந்தமில்லாத அரசனாகவும் பதினெட்டாயிரம் உலகங்களின் சக்கரவர்த்தியாகவும் இருக்கின்ற சர்வ வல்லோன் அந்த அனைத்து உலகங்களோடும் தொடர்பான சர்வ ஞானம் பொருந்திய குர்ஆனை புனித ரமழானில் இறக்கி அருளினான். நிச்சயமாக இப்படிப்பட்ட ரமழான் மாதமானது அதி விஷேடமானதொரு பண்டிகைக் காலமாகவும் ஆன்மீகக் களிப்பால் நிரம்பிய ஓர் ஒன்றுகூடலாகவும் இருக்க வேண்டும் என்பது இறை ஞானத்தின் வெளிப்பாடாகும். இப்படிப்பட்ட ரமழான் மாதத்தில் மனிதர்கள் இன்ன பிற இச்சைகளின் பின்னாலும் வீண் விளையாட்டுக்களின் பின்னாலும் சென்றுவிடாதிருப்பதற்காக நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படிப்பட்ட நோன்புகளுள் மிகச் சிறந்தது வயிற்றைப் போன்றே ஆசாபாசங்களையும் கண், காது, உள்ளம், சிந்தை, கற்பனா சக்தி போன்ற உறுப்புகள், சாதனங்களையும் நோன்பிருக்கச் செய்வதாகும். அதாவது தடுக்கப்பட்டவற்றைவிட்டும் வீண் விளையாட்டுகளைவிட்டும் திசை திருப்பி ஒவ்வொன்றையும் அவற்றுக்கென்றே உள்ள வணக்க வழிபாடுகளை நோக்கி நகர்த்த வேண்டும். உதாரணமாக, நாவை பொய், புறம், மோசமான வார்த்தைகள் என்பவற்றிலிருந்து தடுத்து குர்ஆன் திலாவத், திக்ர், ஸலவாத், பாவமன்னிப்பு போன்றவற்றில் செலவிடுவது நாவை நோன்பு நோற்க வைப்பதாகும். கண்களை ஹராமானவற்றை பார்ப்பதிலிருந்து தடுத்து அல்லாஹ்வின் அற்புத படைப்பினங்களைப் பார்த்துப் படிப்பினை பெறுவதற்காகவும், காதுகளை மோசமானவற்றை கேட்பதிலிருந்து தடுத்து குர்ஆனையும் நல்ல விடயங்களையும் செவிமடுப்பதற்காகவும் பயன்படுத்துவது அந்த உறுப்புகளை நோன்பு நோற்க வைப்பதாகும். மேலும் வயிறு மிகப் பெரியதொரு தொழிற்சாலையாக இருப்பதால் நோன்பு நோற்று அதனை வழிக்குக் கொண்டு வருவதன் மூலம் ஏனைய சிறு அவயவங்களையும் இலகுவாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.
புனித ரமழானில் தனி மனித வாழ்வோடு தொடர்பான பல்வேறு தாத்பரியங்கள் பொதிந்துள்ளன. அவற்றுள் ஒன்றை இவ்விடத்தில் நோக்குவோம்: உடல், உள ரீதியான தடைகளையும் கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்துவது ஆன்மீக ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் மனிதர்களுக்கான மிகப் பெரியதொரு நோய் நிவாரணியாகும். மனிதன் தனது நஃப்ஸுக்கு அடிமைப்பட்டு உண்ணல், குடித்தல் விடயத்தில் மனம் போன போக்கில் செயல்படுவது தனிப்பட்ட பௌதீக வாழ்வுக்கு மருத்துவ ரீதியாகப் பாதகமானது மாத்திரமன்றி கண்ணில் பட்டதையெல்லாம் ஹலால் ஹராம் பாராது உண்டு புடைப்பது எவ்வித சந்தேகமுமின்றி ஆன்மீக வாழ்வையும் நஞ்சூட்டும். அதன் பிறகு ஆத்மாவுக்கும் மனசாட்சிக்கும் செவிசாய்ப்பது அந்த நஃப்ஸுக்கு மிகவும் கடினமானதாக மாறும்; கலகம் விளைவித்து கடிவாளத்தை தன் கையில் எடுத்துக்கொள்ளும். இந்த நிலையை அடைந்த பிறகு மனிதன் நஃப்ஸின் மீது ஏற முடியாது, நஃப்ஸ் மனிதன் மீது ஏறிக்கொள்ளும். இப்படிப்பட்ட நஃப்ஸ் புனித ரமழானில் ஒரு வகையில் கட்டுப்படுவதற்கும் அடிபணிவதற்கும் பழகிக்கொள்ளும்; ஒரு வகையான துறவுக்குத் தன்னைப் பழக்கிக்கொள்ளும்; சொல் பேச்சுக் கேட்பதற்கு கற்றுக்கொள்ளும். எனவே சமிபாடடைவதற்கு முன் உணவுக்கு மேல் உணவைக் கொட்டி அப்பாவியான உடல் நோயாளியாகுவது தடுக்கப்படும். மேலும் இறை கட்டளைக்கு கட்டுப்பட்டு ஹலாலானவற்றைக்கூடப் புறந்தள்ளிவிடுவதால் ஹராத்தைவிட்டும் தவிர்ந்து வாழ்வதற்கான ஷரீஅத்தினதும் மனசாட்சியினதும் கட்டளைகளுக்கு செவிசாய்க்கும் திராணியை வளர்த்துக்கொள்ளும். இவ்வாறு ஆன்மீக வாழ்வு அசிங்கப்படாமல் பாதுகாக்கப்படும். மேலும் மனிதர்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பசிக்கொடுமைக்கும் துன்ப துயரங்களுக்கு ஆளாகின்றனர். ஆகவே மனிதர்கள் பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் மீதும் இவற்றுக்கான மிகப் பெரிய பயிற்றுவிப்பாக உள்ள பட்டினி, துறவு என்பவற்றின் மீதும் தேவை உடையவர்களாக இருக்கின்றனர். புனித ரமழான் நோன்பானது ஏறக்குறைய பதினைந்து மணித்தியாலங்கள், ஸஹர் இல்லாதவிடத்து இருபத்து நான்கு மணித்தியாலங்கள் வரை நீளும் ஒரு பட்டினிக் காலம் என்பதால் பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்குமான மிகப் பெரியதொரு பயிற்சியாகும். இந்த வகையில் கவலைகள் துன்பதுயரங்களை இரட்டிப்பாக்கும் பொறுமையின்மை சகிப்புத்தன்மையின்மை என்பவற்றுக்கு நோன்பு ஒரு மருந்தாக உள்ளது. மேலும் வயிறு எனும் தொழிற்சாலைக்காக வேலை செய்யும் பல பணியாளர்களும், அதனோடு தொடர்புபட்டு அதில் தங்கி வாழ்கின்ற பல்வேறு உறுப்புகளும் மனித உடலில் காணப்படுகின்றன. குறித்த ஒரு மாதம் பகல் பொழுதில் வயிற்றுக்கு ஓய்வு கொடுக்கப்படவில்லை எனில் அந்தத் தொழிற்சாலைப் பணியாளர்களுக்கும் அதனோடு தொடர்பான அங்க அவயவங்களுக்கும் ஓய்வுக்கான வாய்ப்பே கிடைக்காமல் போய்விடும். நஃப்ஸ் அவற்றைத் தொடர்ந்தேர்ச்சையாகத் தனக்காகவே வேலை வாங்கி அடிபணியச் செய்து, அவற்றின் தனிப்பட்ட வணக்க வழிபாடுகளை மறக்கடிக்கச் செய்துவிடும். கூடவே ஆத்மீக சாதனங்களான அறிவு, ஆத்மா, சிந்தை, மனச்சாட்சி போன்றவற்றைக் கூட அந்த தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் இரைச்சல்கள், புகை மூட்டங்கள் மூலம் அசௌகரியப்படுத்தும். இறுதியில் இந்தக் குழப்ப நிலையைப் பயன்படுத்தி ஒட்டுமொத்த உறுப்புகளையும் தனக்காக மாத்திரம் தொழிற்படச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கும். இவ்வாறு அனைத்து உறுப்புகளும் தமக்கென்றுள்ள மிகப் பெரிய கடமைகளை மறந்து நஃப்ஸுடைய சேவகர்களாக மாறிவிடும். இந்தக் காரணத்தினால்தான் ஆரம்ப காலம் தொட்டே நல்லடியார்களும் அவ்லியாக்களும் ஆன்மீக உயர்வை அடைவதற்காக எளிமையையும் குறைவாக உண்பதையும் வழக்கமாக்கிக் கொண்டார்கள். ஆம், ரமழான் நோன்பினூடாக அந்தத் தொழிற்சாலைப் பணியாளர்கள் தாம் அந்தத் தொழிற்சாலைக்குச் சேவகம் செய்வதற்காக மாத்திரம் படைக்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்கின்றன. மேலும் அந்தத் தொழிற்சாலையைச் சார்ந்திருக்கும் பிற உறுப்புகளும் அதனூடாக அனுபவிக்கும் அற்ப இன்பங்களுக்குப் பதிலாக புனித ரமழானில் உன்னதமான ஆத்மீக இன்பங்களில் களிப்படைகின்றன. தமது நேரங்களை அதற்காக செலவிடுகின்றன. இதனால்தான் போலும் ரமழானில் இறை அடியார்கள் தத்தமது படித்தரத்துக்கேற்ப விதவிதமான ஆத்மீக உணர்வுகளையும் இன்பங்களையும் பிரவாகங்களையும் அடைந்துகொள்கின்றனர். உள்ளம், ஆத்மா, அறிவு, சிந்தை, கற்பனா சக்தி போன்ற போஷிக்கப்பட வேண்டிய ஆத்மீக சாதனங்கள் அனைத்தும் பரக்கத் பொருந்திய இந்த மாதத்தில் அதிகபட்ச உயர்ச்சியையும் இன்பத்தையும் அடைந்துகொள்கின்றன. வயிறு அழுது புலம்பினாலும் கூட இந்த சாதனங்கள் மகிழ்ச்சி மேலீட்டால் தமக்கிடையே ஓரக் கண்ணால் புன்னகைத்துக்கொள்கின்றன.
புனித ரமழான் நோன்பில், நஃப்ஸ் தனக்குள் மாயையாக உருவாக்கிக்கொண்ட அதிகாரப் போக்கை உடைத்து, அதன் பலவீனத்தை உணர்த்தி, அடிமைத்துவத்தை நினைவூட்டுவது தொடர்பான பல்வேறு தாத்பரியங்கள் பொதிந்துள்ளன. அவற்றுள் ஒன்றை நோக்குவோம்: நஃப்ஸ் தனது இரட்சகனை, தன்னை இரட்சித்துப் பரிபாலிப்பவனாக அறிந்துகொள்ள விரும்புவதில்லை. பிர்அவ்னைப் போன்று தன்னைத் தானே இரட்சகனாகக் கருதிக்கொள்கிறது. எப்படிப்பட்ட கஷ்ட நஷ்டங்கள், துன்ப துயரங்களைக் கொடுத்தாலும் அந்த அகம்பாவம் அதனை விட்டகழாது. ஆனால் பட்டினி மூலம் அந்த நரம்பை வெட்டியெறிய முடியும். ஆம் புனித ரமழான் மாத நோன்பானது நஃப்ஸுடைய பிர்அவ்னியத்தான அந்த நரம்பின் மீது நேரடியாகவே தாக்குதல் தொடுத்து அழித்துவிடுகின்றது. அதன் இயலாமையையும் பலவீனத்தையும் தேவைகளையும் எடுத்துக்காட்டி அடிமைத்துவத்தை நினைவூட்டுகின்றது. ஒரு ஹதீஸில் வருவதாவது: சர்வ வல்லோன் அல்லாஹ் நஃப்ஸைப் படைத்த பின்னர் நஃப்ஸிடம் “நான் யார்? நீ யார்?” என்று வினவினான். நஃப்ஸ் “நான் நானாவேன், நீ நீயாவாய்” என்று பதிலளித்தது. பின்னர் நஃப்ஸ் நரகத்தில் ஆழ்த்தித் துன்புறுத்தப்பட்ட பின்னர் மீண்டும் அதே கேள்வி கேட்கப்பட்டது: “நான் யார்?, நீ யார்?”. நஃப்ஸிடமிருந்து மீண்டும் அதே பதிலே வந்தது: “நான் நானாவேன், நீ நீயாவாய்” எல்லா வகையான வேதனைகளுக்குப் பின்னரும் நஃப்ஸ் தனது அகம்பாவத்தை விட்டுக்கொடுக்கவில்லை. இறுதியில் பட்டினியால் வேதனைப்படுத்தப்பட்ட பின்னர் அதே கேள்வி மீண்டும் கேட்கப்பட்டது: “நான் யார்? நீ யார்?”. அப்போது நஃப்ஸ் “நீ எனது ரப்பாகிய ரஹ்மானுர் ரஹீம் ஆவாய். நானோ உனது வக்கற்ற ஓர் அடிமையாவேன்” என்று பதிலளித்தது. اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّم۟ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ صَلَاةً تَكُونُ لَكَ رِضَاءً وَ لِحَقِّهٖ اَدَاءً بِعَدَدِ ثَوَابِ قِرَائَةِ حُرُوفِ ال۟قُر۟اٰنِ فٖى شَه۟رِ رَمَضَانَ وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ وَ سَلِّم۟ سُب۟حَانَ رَبِّكَ رَبِّ ال۟عِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى ال۟مُر۟سَلٖينَ وَ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ اٰمٖينَ மன்னிப்புக் கோரல்: இந்தப் பகுதி பெறும் நாற்பது நிமிடங்களில் மிகவும் வேகமாக எழுதி முடிக்கப்பட்டதாலும் நானும் நான் கூறுவதை அதே வேகத்தில் எழுதிய எழுத்தாளரும் என்று இருவருமே சகயீனமுற்றிருப்பதாலும், நிச்சயமாக இதனுள் குழப்பங்களும் குறைகளும் இருக்கும். அவற்றைப் பொருட்படுத்தாதிருக்குமாறு எனது சகோதரர்களாகிய உங்களிடம் தாழ்மையாக வேண்டிக்கொள்கிறேன். பொருத்தமென்று கண்டால் திருத்தவும் முடியும்.
ஏழு அடையாளங்கள் فَاٰمِنُوا بِاللّٰهِ وَرَسُولِهِ النَّبِىِّ ال۟اُمِّىِّ الَّذٖى يُؤ۟مِنُ بِاللّٰهِ وَكَلِمَاتِهٖ وَاتَّبِعُوهُ لَعَلَّكُم۟ تَه۟تَدُونَ يُرٖيدُونَ اَن۟ يُط۟فِئُوا نُورَ اللّٰهِ بِاَف۟وَاهِهِم۟ وَيَا۟بَى اللّٰهُ اِلَّٓا اَن۟ يُتِمَّ نُورَهُ وَلَو۟ كَرِهَ ال۟كَافِرُونَ [மூன்று கேள்விகளுக்கான பதில்களாக அமைந்துள்ள ஏழு அடையாளங்களாகும். முதலாவது கேள்வி நான்கு அடையாளங்களை உள்ளடக்கியது.] முதலாவது அடையாளம்: இஸ்லாமிய ஷரீஅத்தை மாற்றுவதற்கான முஸ்தீபுகளில் இறங்கியுள்ளவர்களின் ஒரே ஆதாரமாகவும் அத்தாட்சியாகவும் இருப்பது அவர்களுடைய எல்லா வகை மோசமான காரியங்களிலும் போல் மேற்கின் மீதான குருட்டுத்தனமான பற்றும் தக்லீதும் ஆகும். அதாவது: “லண்டனில் ஹிதாயத்தை அடைந்து ஈமான் கொண்டவர்கள் அதான், இகாமத் போன்ற பல்வேறு விடயங்களை தத்தமது பிரதேசங்களில் தமது மொழிகளிலேயே செய்கின்றனர். முஸ்லிம் உலகம் அவர்களுடைய விடயத்தில் மௌனமாகவே இருக்கின்றது. எந்த மறுப்பையும் காண முடியவில்லை. இதன் அர்த்தம் ஷரீஅத்தில் இதற்கான ஒரு சலுகை உள்ளது என்பதாகும். எனவேதான் மௌனமாகக் கடந்து செல்கின்றனர்” என்று கூறுகிறார்கள். பதில்: இந்த ஒப்பீட்டில் உள்ள வேறுபாடு பிரக்ஞையுள்ள எந்த ஒருவனாலும் புரிந்துகொள்ள முடியுமான அளவு அப்பட்டமானதாகும். எனவே இப்படிப்பட்ட ஓர் ஒப்பீட்டை செய்வதோ அவர்களைத் தக்லீத் செய்ய முற்படுவதோ பிரக்ஞையுள்ள ஒருவனின் செயலாக இருக்க முடியாது. ஏனெனில் அன்னியப் பிராந்தியங்களை ஷரீஅத்துடைய மொழியில் “தாருல் ஹர்ப்” என்று அழைப்பார்கள். தாருல் ஹர்பில் சலுகை வழங்கப்பட முடியுமான பல்வேறு விடயங்களை தாருல் இஸ்லாமில் அனுமதிக்க முடியாது. அத்துடன் ஐரோப்பா என்பது கிறிஸ்தவ மேலாதிக்கமுள்ள பூமியாகும். அங்கு ஷரீஅத்துடைய பிரயோகங்களையும் முகத்தஸான சொற்களின் அர்த்தங்களையும் சமூக வாழ்வினூடாகவும் சமூகத்தின் மெய்ம் மொழியூடாகவும் ஊட்டவோ உணர்த்தவோ தேவையான சூழல் இல்லாததால் தவிர்க்க முடியாமல் குத்ஸியத்தான அர்த்தம் முகத்தஸான சொற்களுக்குப் பகரமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அர்த்தத்துக்காக சொற்கள் துறக்கப்பட்டுள்ளன. அஹ்வனுஷ் ஷர் என்ற ரீதியில் அணுகப்படுகின்றது. தாருல் இஸ்லாத்தைப் பொருத்தவரை உகந்த சூழல் காணப்படுகின்றது. அந்த சூழல் முகத்தஸான சொற்களின் சுருக்கமான அர்த்தங்களை இஸ்லாமியர்களுக்கு நிதர்சனமான, அனுபவபூர்வமான அமைப்பில் மெய்ம் மொழி மூலம் உணர்த்துகின்றது. வாழையடி வாழையாக வருகின்ற இஸ்லாமிய வழக்காறுகளும் இஸ்லாமிய வரலாறுகளும் ஷரீஅத்தோடும் அடிப்படைகளோடும் தொடர்பான இஸ்லாமியக் கருத்தாடல்கள், போதனைகளும் அந்த முகத்தஸான சொற்களின் சுருக்கமான அர்த்தங்களை தொடர்ந்தேர்ச்சையாக இஸ்லாமியர்களுக்கு ஊட்டிக்கொண்டிருக்கின்றன. ஏன், இந்த மண்ணின் பள்ளிவாசல்கள், மத்ரஸாக்களுக்கப்பால் மையவாடிகளிலுள்ள கற்களும் கூட ஒவ்வோர் ஆசானாகவும் போதகனாகவுமே திகழ்கின்றன. அவைகள் கூட அந்த முகத்தஸான அர்த்தங்களை ஈமான் கொண்ட மக்களுக்கு நினைவூட்டுகின்றன. இத்தனையும் இருக்கும் போது, தன்னை முஸ்லிம் என்று கூறுகின்ற ஒரு மனிதன் தனது உலகியல் நலன்களுக்காக ஒரு நாளில் நாற்பது சொற்களை அன்னிய மொழிகளிலிருந்து கற்றுக்கொள்ளும் போது, ஐம்பது வருடங்களாக ஒவ்வொரு நாளும் ஐம்பது தடவைகள் மீட்டுகின்ற ஸுபுஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் போன்ற முகத்தஸான வார்த்தைகளைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பதை எவ்வாறு நியாயப்படுத்த முடியும். இத்தகைய ஒருவன் மிருகங்களைவிட ஐம்பது மடங்கு மோசமான ஒரு நிலைக்குத் தாழ மாட்டானா? இப்படிப்பட்ட மிருகங்களுக்காக இந்த முகத்தஸான சொற்களை மொழிபெயர்ப்பு மூலம் சிதைப்பதற்கோ மாற்றுவதற்கோ அனுமதிக்க முடியாது. அவற்றை மாற்றுவதும் பிரதியீடு செய்வதும் எமது நாகரிகத்தின் சின்னங்களாக மையவாடிகளில் நடப்பட்டுள்ள ஒட்டுமொத்த கற்களையும் பிடுங்கி எறிவதற்கு சமமாகும். இத்தகைய ஓர் அவமரியாதை மையவாடிகளில் உறங்கும் கபுறுவாசிகளின் சாபத்தைப் பெற்றுத்தருகின்ற செயலாகும். மார்க்க விரோதிகளோடு கூடிக் குழாவும் கெட்ட உலமாக்கள் மக்களை ஏமாற்றுவதற்காக இமாமுல் ஆஸம் அவர்கள் ஏனைய இமாம்களுக்கு மாற்றமாக வழங்கிய ஒரு பத்வாவை விளம்பரம் செய்கின்றனர். இமாமவர்கள் “அவசியமேற்பட்டால், தூரப் பிரதேசங்களில் சற்றும் அரபு மொழி அறியாதவர்கள் தேவையின் அளவுக்கேற்ப பாதிஹாவுக்குப் பதிலாக அதன் பாரசீக மொழிபெயர்ப்பை ஓதலாம்.” என்று சலுகை வழங்குகிறார். இவர்களோ “நாமும் தேவையுடையவர்களாகவே உள்ளோம். எனவே நாமும் துருக்கி மொழியில் ஓதலாம்” என்று கூறுகின்றனர். பதில்: இமாமுல் ஆஸமுடைய இந்த ஃபத்வா விடயத்தில், ஆஸமியத் அந்தஸ்தை உடைய ஏனைய இமாம்களும் முஜ்தஹித்களான ஏனைய பன்னிரண்டு இமாம்களும் மாற்றமான ஃபத்வாவையே வழங்குகின்றனர். இஸ்லாமிய உலகின் விசாலமான பாதை அந்த எல்லா இமாம்களினதும் பாதையாகும். விதிவிலக்குகள் தவிர உம்மத்தின் பெரும்பான்மையினர் அந்தப் பாதையிலேயே செல்ல வேண்டும். எனவே அதுவல்லாத விதிவிலக்கான, தனிப்பட்ட பாதைகளை நோக்கி அழைத்துச் செல்ல முற்படுபவர்கள் வழிகேட்டுக்கே அழைத்துச் செல்கின்றனர். இமாமுல் ஆஸமுடைய ஃபத்வா ஐந்து கோணங்களில் தனிப்பட்ட, விதிவிலக்கான ஒரு ஃபத்வா ஆகும். முதலாவது: இஸ்லாத்தின் மத்திய தளத்திலிருந்து தொலை தூரத்தில் உள்ள மக்களுக்கானதாகும். இரண்டாவது: உண்மையான தேவையின் நிமித்தமாகும். மூன்றாவது: ஒரு ரிவாயத்தின் அடிப்படையில் சுவனவாசிகளின் ஒரு மொழியாகக் கருதப்படும் பாரசீக மொழியோடு மாத்திரம் சுருங்கிய ஒரு சலுகையாகும். நான்காவது: ஃபாதிஹாவை அறியாதவர்கள் தொழுகையை விடாதிருக்க வேண்டும் என்பதற்காக ஃபாதிஹாவுடன் மாத்திம் சுருங்கிய ஒரு ஃபத்வாவாகும். ஐந்தாவது: ஈமானிய உணர்வால் வருகின்ற ஓர் இஸ்லாமியப் பற்றின் காரணமாக, அந்தப் புனிதமான அர்த்தங்களைப் பாமரர்களும் கிரகித்துக்கொள்வதற்கு வஸீலாவாக அமையும் என்ற நோக்கில் வழங்கப்பட்ட ஒரு சலுகையாகும். மாறாக ஈமானியப் பலவீனத்தாலும் இனவாத சிந்தனையின் விளைவாகவும் அது ஏற்படுத்துகின்ற அரபு மொழி மீதான வெறுப்பின் காரணமாகவும் இஸ்லாத்தின் புனிதங்களைச் சிதைக்க வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் மொழிபெயர்ப்பை எடுத்துக்கொண்டு அரபு மொழியிலான அஸலைத் துறப்பது மார்க்கத்தைத் துறக்கின்ற செயலாகும்.
இஸ்லாமிய ஷரீஅத்தை மாற்றுவதற்காகக் கங்கணம்கட்டியுள்ள நூதனவாதிகள் ஆரம்பமாகக் கெட்ட உலமாக்களை நாடி ஃபத்வாக் கேட்டனர். அவர்கள் ஐந்து கோணங்களில் தனிப்பட்டதாகும் என்ற மேலுள்ள எமது ஃபத்வாவைக் காண்பித்துள்ளனர். அதைத் தொடர்ந்து இந்த நூதனவாதிகள் மேற்கின் புரட்சிகர சிந்தனையாளர்களிடமிருந்து தரித்திரமிக்க ஒரு சிந்தனையைத் தத்தெடுத்தனர். அதாவது ஐரோப்பா கத்தோலிக்க மத்ஹபை விரும்பாததால் புரட்சியாளர்களும் புரட்சிகர சிந்தனையாளர்களும் பிரான்சுப் புரட்சியை சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி கத்தோலிக்கர்களால் வழிகேடர்களாகவும் முஃதஸிலாக்கள் போன்றும் கருதப்படும் புரட்டஸ்தாந்து மத்ஹபைத் தோற்றுவித்தனர். கத்தோலிக்க மத்ஹபில் மாற்றங்களையும் கூட்டல் குறைத்தல்களையும் செய்து புரட்டஸ்தாந்து மத்ஹபைப் பிரகடனம் செய்தனர். ஆம், குருட்டுத்தனமான தக்லீதுக்குப் பழகிப் போயிருக்கும் இங்குள்ள பீற்றல் இனப்பற்றாளர்களும் “இதோ, கிறிஸ்தவ மதத்திலும் இப்படிப்பட்ட ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது. ஆரம்பத்தில் புரட்சியாளர்களை முர்தத் என்றே கூறினார்கள். ஆனால் இறுதியில் அவர்களும் கிறிஸ்தவர்களாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். எனவே இஸ்லாத்திலும் இவ்வாறான ஒரு புரட்சியைச் செய்வது சாத்தியமானதே” என்று கூறுகின்றனர். பதில்: இந்த ஒப்பீட்டிலுள்ள வேறுபாடு முதலாவது அடையாளத்தில் வரும் ஒப்பீட்டிலுள்ள வேறுபாட்டைவிடப் பட்டவர்த்தனமானதாகும். ஏனெனில் கிறிஸ்தவ மதத்தில் தீனுடைய அடிப்படைகள் மாத்திரமே ஹழரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ளப்பட்டன. நம்பிக்கைக் கோட்பாடுகளுக்கு அப்பால் சமூக வாழ்வோடும் ஷரீஅத்தோடும் தொடர்பான ஏனைய விடயங்கள் அனைத்தும் ஹவாரிய்யூன்களாலும் தொடர்ந்து வந்த ரூஹானியத் தலைவர்களாலுமே வகுக்கப்பட்டன. அவற்றுள் பெரும்பாலானவை முன்னைய முகத்தஸான கிதாபுகளிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டன. ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உலகளவில் ஆட்சியாளராகவோ அதிகாரமிக்கவராகவோ இருக்காததாலும் எனவே சமூகவியல் சார்ந்த எல்லா சட்டங்களுக்குமாக விண்ணப்பிக்கக்கூடிய ஒரு முகவரியாக இல்லாதிருந்தமையாலும் அண்ணவர்களுடைய தீனின் அடிப்படைகளுக்கு வெளியிலிருந்து அணிவிக்கப்பட்ட ஓர் ஆடையாகவே கிறிஸ்தவ ஷரீஅத் அமைந்துள்ளது. அந்த வகையில் பல்வேறு சம்பிரதாயங்களும் அவ்வப்போதைய நாகரிகங்களின் சட்டதிட்டங்களும் உள்வாங்கப்பட்டு வெவ்வேறு தோற்றங்களைப் பெற்று வந்துள்ளது. எனவே அந்தத் தோற்றம், அதாவது ஆடை மாற்றப்பட்டாலும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தீனின் அடிப்படைகள் நிலைத்து நிற்க முடியும். அவ்வாறான முஸ்தீபுகள் ஹழரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை நிராகரிப்பதாக அமையாது. ஆனால் தீனுல் இஸ்லாத்தினதும் அதன் ஷரீஅத்தினதும் ஸ்தாபகரான ஃபஹ்ருல் ஆலம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஈருலகங்களுக்கும் ஸுல்தான் ஆவார்கள். கிழக்கும் மேற்கும் அந்தலூஸும் இந்து சமவெளியும் அண்ணவர்களுடைய மாட்சிமைக்குக் கீழுள்ளன. தீனுல் இஸ்லாத்துடைய அத்தனை அடிப்படைகளையும் வேறு யாருக்கும் இடம் வைக்காமல் காண்பித்துத் தந்ததைப் போன்று அதன் சட்டதிட்டங்களையும் விலாவாரியான உபரிகளையும் ஏன் மிகச் சிறிய ஆதாபுகளையும் கூட அண்ணவர்களே காட்டித் தருகிறார்கள்; எத்தி வைக்கிறார்கள்; கட்டளையும் பிறப்பிக்கிறார்கள். எனவே இஸ்லாத்தின் ஷரீஅத் என்பது விரும்பியவாறு கழட்டுவதற்கும் மாற்றுவதற்கும் வசதியான ஓர் ஆடையை ஒத்ததல்ல. மாறாக தீனுடைய அடிப்படைகளின் உடலைப் போன்றதாகும். அல்லாவிட்டால் குறைந்தபட்சம் தோலாகவே இருக்க முடியும். அந்த அளவு இரண்டும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்தவையாகும். பிரிப்பது சாத்தியமற்றதாகும். எனவே ஷரீஅத்தை மாற்றினால் அடிப்படைகளும் நிலைக்காது. அதை மாற்றுவதற்கான மூஸ்தீபில் அந்த ஷரீஅத்தின் ஸ்தாபகர் மீதான நிராகரிப்பும் பொய்ப்பித்தலும் நேரடியாகவே வெளிப்படும். மத்ஹபுகளுக்கு மத்தியிலுள்ள வேறுபாடுகளைப் பொருத்தவரை அவை அந்த ஷரீஅத்தின் ஸ்தாபகாருடைய நிலைப்பாடுகளோடு தொடர்பான விதிகளிலுள்ள வேறுபட்ட புரிதல்களின் அடிப்படையில் தோன்றும் வேறுபாடுகளாகும். ஆனால், “ழரூரிய்யாதுல் தீனிய்யாத்” எனப்படும் மாற்றவோ நீக்கவோ முடியாத தீர்க்கமான, முஹ்கமான விடயங்களில் மாற்றங்களோ நீக்கங்களோ செய்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. அவை இஜ்திஹாதுக்கு உற்பட்ட விடயங்களுமல்ல. அவற்றை மாற்ற முனைபவன் மார்க்கத்திலிருந்தே வெளியேறிவிடுகிறான். يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الْقَوْسِ என்ற வட்டத்துக்குற்பட்டவர்களாக மாறிவிடுவார்கள். பின்னரும் இந்த நூதனவாதிகள் தமது மார்க்க விரோதப் போக்கையும் வழிகேட்டையும் நிய்யயப்படுத்துவதற்காக பின்வருமாறு ஒரு சாட்டை எடுத்துக்கொண்டு வருகின்றனர். அதாவது “மனித குலத்தில் சங்கிலித் தொடரான மாற்றங்களுக்குக் காரணமாக அமைந்த மாபெரும் பிரான்சுப் புரட்சியின் போது பாதிரிமார்களும் ரூஹானியத் தலைவர்களும் அவர்களால் கட்டிக் காக்கப்பட்ட கத்தோலிக்க மத்ஹபும் இலக்கு வைக்கப்பட்டது. இதைப் பின்நாட்களில் வந்தவர்கள் வரவேற்றனர். ஐரோப்பியர்கள் அதன் பின்னரே துரிதமாக வளர்ச்சி கண்டனர்”என்று கூறுகின்றனர். பதில்: இந்த ஒப்பீட்டிலும் முன்னைய இரண்டு ஒப்பீடுகளையும் போன்று அப்பட்டமான வேறுபாடுகள் உள்ளன. ஏனெனில் பிரான்ஸியர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவ மதமும் குறிப்பாக கத்தோலிக்க மத்ஹபும் மேல் வகுப்பினரினதும் அதிகார வர்க்கத்தினரினதும் கரங்களில் கீழ் வகுப்பினர் மீதான அராஜகம், அடக்குமுறை என்பவற்றுக்கான சாதனமாக நீண்ட காலமாக இருந்து வந்தது. அதிகார வர்க்கத்தினர் கீழ்த்தட்டு மக்கள் மீதான தமது அதிகாரத்தையும் செல்வாக்கையும் தக்கவைத்துக்கொள்வதற்காவே அதைப் பயன்படுத்தி வந்தனர். அந்த சூழலில் கத்தோலிக்க மத்ஹபானது அதிகார வர்க்கத்தினரால் “போக்கிரிகள்” என்றழைக்கப்பட்ட கீழ் வகுப்பு மக்கள் மத்தியில் தோன்றிய சமூகப் பற்று மிக்கவர்களையும் அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்த சுதந்திரப் பிரியர்களையும் அவர்களுக்கு மத்தியில் தோன்றிய சிந்தனையாளர்களையும் நசுக்குவதற்கான ஒரு சாதனமாக இருந்து வந்தது. இது நானூறு வருடங்களாக ஐரோப்பாவில் கலகங்களுக்கும் சமூக அமைதி குழைந்து போவதற்கும் சமூக வாழ்வு ஸ்தம்பித்துப் போவதற்கும் பிரதானமான ஒரு காரணியாக இருந்து வந்ததால் அந்த மத்ஹப் மார்க்க விரோத சிந்தனையால் அன்றி அதற்குள் இருந்தே தோன்றிய இன்னுமொரு மத்ஹப் சிந்தனையால் இலக்கு வைக்கப்பட்டது. அதாவது அவர்கள் மீது கீழ் வகுப்பு மக்களுக்கும் சிந்தனையாளர்கள், தத்துவ ஞானிகளுக்கும் ஏற்பட்ட வெறுப்பே அந்த வரலாற்று நிகழ்வுக்குக் காரணியாக அமைந்தது. ஆனால் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தீனுல் இஸ்லாத்தையும் அதன் ஷரீஅத்தையும் பொருத்தவரை அவற்றுக்கெதிராக முறையிடுவதற்கு அப்பாவிகளுக்கோ கீழ் வகுப்பினருக்கோ சிந்தனையாளர்களுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் அவை அவர்களுக்கு எந்த வகையிலும் வெறுப்பை ஏற்படுத்துவதில்லை. மாறாக முழுமையான பாதுகாப்பு உத்தரவாதத்தையே வழங்குகின்றது. மேலும், இஸ்லாமிய வரலாறு கண் முன்னால்தான் இருக்கின்றது. இஸ்லாமியர்களுக்கு மத்தியில் ஓரிரண்டு நிகழ்வுகள் தவிர மார்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட யுத்தங்கள் நிகழவில்லை. ஆனால் கத்தோலிக்க மத்ஹபைப் பொருத்தவரை நானூறு வருடங்களாக உள்ளகக் கலகங்களுக்கும் போர்களுக்கும் மதம் சார்ந்த விடயங்களே காரணமாக அமைந்தது. மேலும் இஸ்லாம், மேல் வகுப்பினரைவிட கீழ் வகுப்பினரின் புகலிடமாகவே இருந்து வந்துள்ளது. ஸக்காத்தை வாஜிபாகவும் வட்டியை ஹராமாகவும் ஆக்கியதன் மூலம் மேல் வகுப்பினரைக் கீழ் வகுப்பினரின் அதிகாரிகளாக அன்றி சேவகர்களாக மாற்றுகின்றது. سَيِّدُ الْقَوْمِ خَادِمُهُمْ * خَيْرُ النَّاسِ مَنْ يَنْفَعُ النَّاسَ என்றே பிரகடனம் செய்கின்றது. அவ்வாறே சங்கைமிக்க குர்ஆனின் اَفَلاَ تَعْقِلُونَ * اَفَلاَ يَتَدَبَّرُونَ * اَفَلاَ يَتَفَكَّرُونَ போன்ற புனிதமான கோரிக்கைகள் புத்தியை சாட்சியாக நிறுத்தி எச்சரிக்கை செய்கின்றன. புத்தியை அழைத்து ஆய்வுக்கும் சிந்தனைக்கும் தூண்டுகின்றன. அதன் மூலம் அறிஞர்களுக்கும் சிந்தனையாளர்களுக்கும் பகுத்தறிவாலர்களுக்கும் மார்க்கத்தின் பெயரால் ஓர் அந்தஸ்த்தையும் முக்கியத்துவத்தையும் வழங்குகின்றது. கத்தோலிக்க மத்ஹபைப் போன்று புத்தியை, பகுத்தறிவை இலக்கு வைப்பதில்லை. சிந்திப்பவர்களை மௌனிக்கச் செய்வதில்லை. குருட்டுத்தனமான தக்லீதை ஏற்றுக்கொள்வதில்லை. ஹகீகத்தான கிறிஸ்தவத்துடனன்றி, தற்போதைய கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைகளுடன் இஸ்லாத்தின் அடிப்படைகள் மிகவும் முக்கியமான ஒரு புள்ளியில் பிரிந்து செல்வதால் மேற்குறிப்பிட்ட வேறுபாடுகளைப் போன்று பல்வேறு விடயங்களில் பிரிந்து செல்கின்றனர். இதுதான் அந்த முக்கியமான புள்ளி: இஸ்லாம், ஹகீகத்தான தவ்ஹீதிய மார்க்கமாகும். அது சாதனங்களையும் காரண காரியங்களையும் முற்றாக ரத்துச் செய்கின்றது. அனானியத்தை துவம்சம் செய்து தூய்மையான உபூதியத்துக்கான அடித்தளத்தை ஸ்தாபிக்கின்றது. நஃப்ஸுடைய ருபூபியத்திலிருந்து ஆரம்பித்து எல்லா வகை பாத்திலான ருபூபியத்களையும் அறுத்துப் பலியிட்டு, முற்று முழுதாக நிராகரிக்கின்றது. இஸ்லாத்தின் இந்தத் தாத்பரியம் காரணமாகத்தான் மேல் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெரிய மனிதரும் பூர்த்தியான ஒரு தீன்தாரியாக இருப்பதற்குத் தனது ஈகோவைத் துறக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஈகோவைத் துறக்காத ஒருவர் மார்க்கப் பற்றையும் பகுதியளவு மார்க்கத்தையும் கூட இழந்துவிடுகிறார். தற்போதைய கிறிஸ்தவ மார்க்கத்தைப் பொருத்தவரை “கடவுளின் குமரர்” என்ற அகீதாவை ஏற்றுக்கொண்டமையினால் சாதனங்களுக்கும் காரண காரியங்களுக்கும் ஹகீகத்தான வினை ஆற்றலை வழங்குகின்றது. எனவே தீனுடைய பெயரால் ஈகோவை நிராகரிப்பதில்லை. மாறாக ஹழரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய முகத்தஸான வகீல் அல்லது பிரதிநிதி என்ற பெயரில் அந்த ஈகோவுக்கு ஒரு புனிதத்துவத்தையே வழங்குகின்றது. எனவே உலகியல் ரீதியான மிகப் பெரிய பதவிகளையும் அதிகாரங்கள், அந்தஸ்துகளையும் கைப்பற்றிக்கொள்கின்ற கிறிஸ்தவ உயர் வகுப்பினரால் சம நேரத்தில் முழுமையான தீன்தாரிகளாகவும் மார்க்கப் பற்றுள்ளவர்களாகவும் இருக்க முடிகின்றது. அமெரிக்காவின் முன்னைய அதிபராகிய வில்சன், பிரித்தானியாவின் முன்னைய பிரதமராகிய லோய்ட் ஜோர்ஜ் போன்ற பலர் “அதி சங்கைக்குரிய, வணக்கத்துக்குரிய பாதிரி” என்ற தரத்தில் தீன்தாரிகளாக இருந்தனர். முஸ்லிம்களைப் பொருத்தவரை அத்தகைய பதவிகளை அடைபவர்கள் மிகவும் அரிதாகவே தீன்தாரிகளாகவும் அதில் நிலையாகவும் இருந்துள்ளனர். ஏனெனில் அந்த உயர் பதவிகளில் பெருமையையும் ஈகோவையும் துறக்க முடியாமல் தோல்வி காண்கின்றனர். ஹகீகத்தான தக்வாவானது பெருமை, ஈகோ, அகம்பாவம் என்பவற்றுடன் கூட்டுச் சேராது. ஆம், மார்க்கப்பற்றில் கிறிஸ்தவ மேல் வகுப்பினரின் பற்றுருதியும் முஸ்லிமான மேல் வகுப்பினரின் தளர்வும் எவ்வாறு பாரிய ஒரு வேறுபாட்டைக் காண்பிக்கின்றதோ அவ்வாறே கிறிஸ்தவ மதத்துக்குள் இருந்து தோன்றிய தத்துவ மேதைகள் தமது மார்க்கத்தில் அசட்டையாக அல்லது எதிராக இருப்பதும் இஸ்லாத்தினுள் இருந்து தோன்றிய ஹுகமாக்களின் பெரும்பாலானவர்கள் தமது ஞானங்கள், தத்துவங்களை இஸ்லாத்தின் அடிப்படைகளின் மீது கட்டியெழுப்பியுள்ளமையும் கூட இஸ்லாத்துக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் இடையிலான பாரிய வேறூபாட்டைக் காண்பிக்கின்றது. அவ்வாறே, பெரும்பாலும் சிறை வாழ்க்கைக்கு அல்லது முஸீபத்களுக்கு ஆற்படுகின்ற கீழ் வகுப்புக் கிறிஸ்தவர்கள் தமது மார்க்கத்தில் ஆதரவு வைப்பதில்லை. முன்னைய காலங்களில் அவ்வாறான பலரும் மதத்தைத் துறப்பவர்களாகவே இருந்துள்ளனர். ஏன் பிரான்ஸுப் புரட்சியின் ஆரம்பகர்த்தாக்களாகப் போற்றப்படும் “மதமற்ற போக்கிரிகள்” என்று அழைக்கப்பட்ட பிரபலமான புரட்சியாளர்களும் கூட அந்தக் கஷ்டத்தில் வாழ்ந்த கீழ் வகுப்பு மக்களாகவே இருந்தனர். இஸ்லாத்தைப் பொருத்தவரை பெரும்பாலும் சிறை வாழ்க்கைக்கும் முஸீபத்துக்கும் ஆற்படுபவர்கள் தமது மார்க்கத்தில் ஆதரவு வைப்பவர்களாகவும் தீன்தாரிகளாகவும் மாறிவிடுகின்றனர். இதோ இங்கும் கூடப் பாரிய ஒரு வேறுபாடு காணப்படுகின்றது.
நூதனவாதிகள் மீண்டும் “மார்க்கப் பற்றே எம்மைப் பின்னடையச் செய்தது. இந்தக் காலத்தில் வாழ வேண்டுமாக இருந்தால் மார்க்கப் பற்றைத் துறக்க வேண்டும். ஐரோப்பா மார்க்கப் பற்றைத் துறந்த பின்னரே முன்னேற்றம் கண்டது” என்று கூறுகின்றனர். பதில்: பிழையில் உள்ளீர்கள், ஏமாற்றப்பட்டுள்ளீர்கள். அல்லது தெளிவாக ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். ஏனெனில் ஐரோப்பா தனது மார்க்கத்தில் பற்றுடனேயே இருக்கின்றது. ஏன் சாமான்யமான ஒரு பல்கேரியனிடம் அல்லது பிரித்தானியனிடம் அல்லது தான்தோன்றியாக அலைந்து திரியும் ஒரு பிரான்ஸுப் பிரஜையிடம் போய் தலைப்பாகை அணியுமாறு வற்புறுத்தினால் தனது இனப் பற்றினதும் மார்க்கப் பற்றினதும் வெளிப்பாடாக “என்னைக் கொன்றாலும் அதைச் செய்ய மாட்டேன். அதைச் செய்து எனது இனத்தையும் மதத்தையும் அவமானப்படுத்த மாட்டேன்” என்றே கூறுவான். மாத்திரமன்றி இஸ்லாமியர்கள் எப்போதெல்லாம் தமது மார்க்கத்தை அரவணைத்துக்கொண்டார்களோ அப்போதெல்லாம் குறித்த காலத்துடன் ஒப்பிடும் போது மிக முன்னேற்றமடைந்தவர்களாகவும் எப்போதெல்லாம் அவர்களுடைய உறுதியில் தளர்வுகள் ஏற்பட்டதோ அப்போதெல்லாம் வீழ்ச்சியடைந்தவர்களாகவுமே இருந்துள்ளனர் என்பதற்கு வரலாறு சான்றாகும். கிறிஸ்தவ மதத்தின் நிலை அதற்கு நேர் மாற்றமானதாகும். இந்த வேறுபாடும் அந்த முக்கியமான அடிப்படை வேறுபாட்டிலிருந்தே தோன்றுகின்றது. மேலும் இஸ்லாத்தை ஏனைய மதங்களோடு ஒப்பிட முடியாது. ஒரு முஸ்லிம் இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் அதன் பின்னர் அவன் வேறு எந்த ஒரு நபியையும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஏன் சத்திய இரட்சகனைக் கூட ஏற்றுக்கொள்ள முடியாதவனாகவும் எந்த ஒரு புனிதத்தையும் பொருட்படுத்தாதவனாகவும் மாறிவிடுவான். இறுதியில் தன்னளவில் முதிர்ச்சிக்கும் நன்மைகளுக்கும் காரணமாக அமைகின்ற மனச்சாட்சியையும் கூட இழந்து முற்றிலும் கெட்டுப் போய்விடுவான். எனவேதான் இஸ்லாத்தில் எதிரியான காபிருக்கும் வாழ்வுரிமை உள்ளது. வெளியில் இருக்கும் போது ஒப்பந்தமும் உள்ளே இருக்கும் போது ஜிஸ்யாவும் அவர்களுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்களாகும். ஆனால் முர்ததுகளுக்கு வாழ்வுரிமை வழங்கப்படவில்லை. ஏனெனில் அவனது மனச்சாட்சி முற்றிலும் அணைந்துவிடுகின்றது. அதன் பின்னர் அவன் சமூக வாழ்வுக்கு ஒரு நஞ்சாக மாறிவிடுவான். ஆனால், கிறிஸ்தவத்தைத் துறந்து மார்க்கமின்றி வாழும் ஒருவர் அந்த நிலையிலும் சமூகத்துக்குப் பயனுள்ள ஒரு நிலையில் தரிக்க முடியும். அவன் அந்த நிலையிலும் சில புனிதங்களை ஏற்றுக்கொள்ளவும் சில நபிமார்களை ஈமான் கொள்ளவும் முடியுமான ஒருவனாகவே இருப்பான். சத்திய இரட்சகனை உண்மைப்படுத்தும் ஒருவனாகவும் அவனால் இருக்க முடியும். ஆம், இப்போது இந்த நூதனவாதிகள், சரியாகச் சொல்வதாக இருந்தால் வழிகேடர்கள் இந்த மார்க்க நீக்க முயற்சியின் மூலம் எந்த நலவைக் காணப்போகிறோம் என்பதை சிந்திக்கிறார்களா? நிர்வாகத்தையும் அதில் அமைதியையும்தான் ஆசிக்கிறார்கள் எனில் அல்லாஹ்வை அறியாமல், மார்க்கத்தைத் துறந்து வாழும் பத்துத் தன்னிச்சக்காரர்களை நிர்வகிப்பது ஆயிரம் மார்க்கப் பற்றுள்ள தீன்தாரிகளை நிர்வகிப்பதைவிட சிக்கலானதாகும் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளட்டும். இல்லை அபிவிருத்தியும் முன்னேற்றமுமே அவர்கள் ஆசிக்கின்ற விடயங்களாக இருந்தால், இப்படிப்பட்டவர்கள் நிர்வாகத்தைப் போன்றே முன்னேற்றத்துக்கும் கூடத் தடையாகவே இருப்பார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் இவர்கள் முன்னேற்றம், அபிவிருத்தி, வியாபாரம் என்பவற்றின் அடிப்படையாக இருக்கும் அமைதிக்கு எப்போதும் பங்கமாகவே இருப்பார்கள். உண்மை யாதெனில் அவர்கள் தெரிவு செய்துள்ள பாதையே சிதைத்தலின் சீர்குழைத்தலின் பாதையாகும். இப்படிப்பட்ட தன்னிச்சைக்காரர்களிடம் அமைதியையும் வாழ்வின் நிம்மதியையும் எதிர்பார்ப்பவன் உலகின் மிகப் பெரிய ஒரு மடையானாகவே இருக்க வேண்டும். முக்கியமான ஒரு பதவியை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இப்படிப்பட்ட மடையர்களுள் முக்கியமான ஒருவர் “நாம் அல்லாஹ் அல்லாஹ் என்று கூறிக் கூறியே பின்னடைந்து விட்டோம். ஐரோப்பா துப்பாக்கி, பீரங்கி என்று கூறி முன்னேறிவிட்டது” என்று உளறியுள்ளார். “முட்டாள்களுக்கான பதில் மௌனமேயாகும்” என்ற விதிக்கமைய இப்படியானவர்களுக்கான மிகச் சிறந்த பதில் மௌனமாகும். ஆனால் சில முட்டாள்களுக்குப் பின்னால் சில பாக்கியமற்ற புத்திசாலிகளையும் காணக்கூடியதாக உள்ளதால் கூறுகிறோம்: வக்கற்ற மனிதர்களே! இந்த உலகம் ஒரு மடமாகும். ஒவ்வொரு நாளும் முப்பதாயிரம் சாட்சிகள், தமது மரணங்களின் மூலம் “அல் மௌது ஹக்” என்ற தீர்ப்பின் கீழ் ஒப்பமிட்டு சான்றுபகர்கின்றனர். உங்களால் மரணத்தை மரணிக்கச் செய்ய முடியுமா? அல்லது இத்த சாட்சிகள் அனைவரையும் பொய்ப்பிக்கத்தான் முடியுமா? முடியாததால் தான் மரணம் “அல்லாஹ், அல்லாஹ்” என்று கூறவைத்துக்கொண்டுள்ளது. ஸகராத்தில் “அல்லாஹ், அல்லாஹ்” என்பதற்குப் பதிலாக எந்தத் துப்பாக்கியை அல்லது எந்தப் பீரங்கியை சிந்திக்கிறீர்கள்? அவைதான் ஸகராத்தை அடுத்துள்ள நித்திய இருளை ஒளியேற்றி முத்லக்கான அவநம்பிக்கையை முத்லக்கான நம்பிக்கையாக மாற்றப் போகும் சாதனங்களா? ஆம், மரணத்தை மறுக்க முடியாது. மண்ணறைக்குள் நுழையத்தான் போகிறோம். எந்த சந்தேகமுமின்றி இந்த வாழ்க்கை போய் நித்தியமான ஒரு வாழ்க்கை வரத்தான் போகின்றது. எனவே ஒரு தடவை துப்பாக்கி, பீரங்கி என்று கூறினால் ஆயிரம் தடவைகள் அல்லாஹ், அல்லாஹ் என்று கூறுவது அவசியமாகின்றது. அத்தோடு அல்லாஹ்வின் பெயரால் வெளிக்கிட்டால் துப்பாக்கியும் அல்லாஹ் என்று கூறும். பீரங்கியும் அல்லாஹு அக்பர் என்று முழங்கும். அல்லாஹ்வுடன் அஸ்தமித்து அல்லாஹ்வுடன் உதிக்கும்.
சிதைக்கும், சீர்குழைக்கும் நூதனவாதிகளும் இரண்டு வகைப்படுவர். முதல் வகையினர் -ஏதோ மார்க்கத்தின் பெயராலும் இஸ்லாத்தின் மீதான விசுவாசத்தின் பெயராலும்- மார்க்கத்தை தேசியவாத்தின் மூலம் பலப்படுத்துவதற்காக “நலிவடைந்துள்ள மார்க்கம் என்ற நூரானியத்தான விருட்சத்தை தேசியம் என்ற மண்ணில் நட்டிப் பலப்படுத்த நாடுகிறோம்” என்று மார்க்கத்துக்குச் சார்பான ஒரு நிலையைக் காண்பிக்கின்றனர். இரண்டாம் வகையினரோ இனத்தின் பெயரால், தேசியத்தின் பொருட்டுக்காக தமது இனவாதத்தைப் பலப்படுத்தும் சிந்தனையின் அடிப்படையில் “தேசியத்தை இஸ்லாத்தின் மூலம் வலுப்படுத்தப் போகிறோம்” என்று நூதனங்களை அறிமுகம் செய்கின்றனர். முதலாவது வகுப்பினரிடம் கூறுகிறோம்: விசுவாசமான முட்டாள்களே! வக்கற்ற கெட்ட ஆலிம்களே! அல்லது தன்னிலையிழந்த, புத்தியில்லாத, ஜாஹிலான ஸூஃபிகளே! பிரபஞ்சத்தின் ஹகீகத்தினுள் ஆழ வேரூண்டி, பிரபஞ்ச சத்தியங்களிலெல்லாம் வேர் படர்ந்து கம்பீரமாக நிற்கும் இஸ்லாமிய விருட்சமானது மயக்கமான, தற்காலிகமான, குறுகிய, தனிப்பட்ட, எதிர்மறையான, அடிப்படையற்ற, மாற்றமையும் குரோதமும் பொதிந்த, அநீதிக்கு இட்டுச்செல்கின்ற, இருள்மயமான இனம், தேசியம் போன்ற மண்களில் நடப்பட முடியாது. இந்த விருட்சத்தை அங்கு கொண்டுபோய் நட்ட முயற்சிப்பது முட்டாள்தனமான, சீர்குழைவை ஏற்படுத்தத்தக்க நூதனமான ஒரு முஸ்தீபாகவே அமையும். இரண்டாவது இனவாத வகுப்பினரிடம் கூறுகிறோம்: போதை தலைக்கேறி சமூகப் பற்றாளர்களாகப் பீத்திக்கொள்ளும் கேடிகளே! ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் தேசியவாதத்தின் காலமாக இருந்திருக்க முடியும். ஆனால், இந்த நூற்றாண்டு தேசியவாதத்தின் அல்லது இனவாதத்தின் நூற்றாண்டல்ல. கம்யூனிஸம் ஸோஸியலிஸம் போன்ற விடயங்கள் அனைத்தையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துள்ளன. அவை இனவாத சிந்தனைகளை உடைத்தெறிகின்றன. எனவே இனவாத யுகம் கடந்து போய்க்கொண்டிருக்கின்றது. எனவே நித்திய, நிலையான இஸ்லாமியத் தேசியம் தற்காலிகமான, பரபரப்பான இனவாதத்துடன் பிணைக்கப்படவோ அதன் மூலம் வலுப்படுத்தப்படவோ முடியாது. அவ்வாறு செய்ய முயற்சித்தால் இஸ்லாமியத் தேசியத்துக்குள் பிளவுகளையும் குழப்பங்களையுமே தோற்றுவிக்கும். மாறாக அதன் மூலம் இனத்தை அல்லது தேசியத்தை சீர்திருத்தவோ நிலைத்திருக்கச் செய்யவோ முடியாது. ஆம், இவ்வாறான தற்காலிக வலுவூட்டல்களில் தற்காலிகமான ஓர் இன்பமும் உத்வீகமும் பலமும் தென்படுகின்றது. ஆனால் அது மிகவுமே தற்காலிகமானதாகவும் ஆபத்தான முடிவுகளைத் தருவதாகவுமே இருக்கப் போகின்றது. அத்துடன் துருக்கி இனத்துக்குள் மீண்டும் சரிசெய்யவே முடியாத அளவு நிரந்தரமான ஒரு பிளவை ஏற்படுத்தும். அப்போது இந்தத் தேசத்தின் பலம் -ஒரு பிரிவினர் அடுத்த பிரிவினரின் பலத்தை சமப்படுத்துவதால்- பூச்சியத்துக்கு ஈடாகிவிடும். இரண்டு மலைகள் ஒன்றுக்கொன்று எதிராக ஒரே தராசின் இரண்டு தட்டுகளில் வைக்கப்பட்டால் ஒரு இறாத்தல் பலத்தால் அந்த இரண்டு பெரும் பலங்களோடும் விளையாட முடியும். விரும்பியவாறு ஒன்றை மேலே உயர்த்தி ஒன்றைக் கீழே தாழ்த்த முடியும். İkinci Sual, iki işarettir:
“உங்களின் பழைய மறுப்புரைகளும் இஸ்லாத்துக்கான போராட்டங்கள், முயற்சிகள், அர்ப்பணங்களும் தற்போதைய வழிமுறையில் இருக்கவில்லை. அத்துடன் ஐரோப்பாவுக்கு முன்னால் இஸ்லாத்துக்காக வாதாடும், உழைக்கும் சிந்தனையாளர்களின் வழிமுறையில் செல்வதாகவும் தெரியவில்லை. ஏன் தற்போது பழைய ஸஈதின் வழிமுறையில் செல்வதில்லை? ஏன் அந்த ஆத்மார்த்தமான இஸ்லாமியப் போராளிகளுடைய வழியைத் தெரிவுசெய்யாமல் உள்ளீர்கள்?” என்று கேட்கிறார்கள். பதில்: பழைய ஸஈத் உற்பட மேற்படி சிந்தனையாளர்கள் மனிதர்களின் தத்துவ சித்தாந்தங்களையும் ஐரோப்பாவின் சிந்தனைகள், அறிவு ஞானங்களையும் ஓரளவு ஏற்று, உள்வாங்கிக்கொண்டு அவர்களுடைய ஆயுதங்கள் மூலமே அவர்களை எதிர்ப்பதற்காகக் கிளம்புகின்றனர். அவர்களுடைய சில விதிகளை தீர்க்கமான அறிவியல்கள் விதிகளாகவும் அசைக்க முடியாத, ஆட்சேபனைகளற்ற சட்டங்களாகவும் ஏற்றுக்கொள்வதால் அந்தக் கோணத்தில் இஸ்லாத்துடைய ஹகீகத்தான பெறுமதியை வெளிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர். ஆழமான வேர்களைக் கொண்டதாக நினைத்துக்கொண்டு அவர்களுடைய ஞானத்தின் அத்தாட்சிகள் மூலம் ஏதோ இஸ்லாத்தைப் பலப்படுத்துவதாக நினைக்கின்றனர். இந்த அணுகுமுறை மூலம் அந்த சிந்தனைகள், சித்தாந்தங்கள், ஞானங்களின் குறைகளை அம்பலப்படுத்தி வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதாலும் குறிப்பாக இந்த அணுகுமுறை இஸ்லாத்தின் மகத்துவத்தை ஓரளவு தாழ்த்துகின்றது என்பதாலும் நான் அந்தப் பாதையைவிட்டு முற்றாக விலகிக்கொண்டேன். அத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் இஸ்லாத்தின் அடிப்படைகள் அந்தத் தத்துவ சித்தாந்தங்களின் மிக ஆழமான வேர்களால் நெருங்கவும் முடியாத அளவு மிக ஆழமானவை என்பதையும் ஏன், இஸ்லாமிய அடிப்படைகளின் அந்த ஆழத்துக்கு முன்னால் தத்துவ சித்தாந்தங்களின் மிக ஆழமான வேர்களும் கூட மிகவுமே மேலோட்டமானவையாகிவிடுகின்றன என்பதையும் தெளிவாகக் காண்பித்தும் உள்ளேன். முப்பதாவது வார்த்தை, இருபத்தி ஒன்பதாவது கடிதம், இருபத்தி ஒன்பதாவது வார்த்தை என்பன இந்த சத்தியத்தைத் தெளிவான அத்தாட்சிகள் மூலம் நிரூபிக்கின்றன. பழைய வழிமுறையில் தத்துவ சித்தாந்தங்களை மிக ஆழமானவையாகவும் இஸ்லாத்தின் சட்டகங்களை மிக மேம்போக்கானவையாகவும் கருதி இவற்றை அவற்றின் அத்தாட்சிகளுடன் பிணைப்பது இவற்றை நிரூபிப்பதற்கும் பாதுகாப்பதற்குமான ஒரு முயற்சியாகக் கணிக்கப்படுகின்றது. ஆனால் இஸ்லாத்தின் சட்டகங்களை எட்டுவதற்கு அந்தத் தத்துவ சித்தாந்தங்களுக்கு என்னதான் தகுதி இருக்கின்றது? سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَل۟حَم۟دُ لِلّٰهِ الَّذٖى هَدٰينَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَه۟تَدِىَ لَو۟لَٓا اَن۟ هَدٰينَا اللّٰهُ لَقَد۟ جَٓاءَت۟ رُسُلُ رَبِّنَا بِال۟حَقِّ اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ وَ عَلٰى اٰلِ سَيِّدِنَا مُحَمَّدٍ كَمَا صَلَّي۟تَ عَلٰى سَيِّدِنَا اِب۟رَاهٖيمَ وَ عَلٰى اٰلِ اِب۟رَاهٖيمَ فِى ال۟عَالَمٖينَ اِنَّكَ حَمٖيدٌ مَجٖيدٌ

