Mektubat

The Twenty-Eighth Letter

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ அற்புதமிக்க புனித அல்குர்ஆன் தொடர்ந்தேர்ச்சையாக اَفَلاَ يَشْكُرُونَ * اَفَلاَ يَشْكُرُونَ * وَسَنَجْزِى الشَّاكِرِينَ * لَئِنْ شَكَرْتُمْ لاَزِيدَنَّكُمْ * بَلِ اللهَ فَاعْبُدْ وَكُنْ مِنَ الشَّاكِرِينَ போன்ற வசனங்களை மீட்டுவதானது பேரன்பும் அருளும் மிக்க படைப்பாளன் தனது அடியார்களிடம் எதிர்பார்க்கும் மிக முக்கியமான பணி நன்றியாகும் என்பதைக் காட்டி நிற்கின்றது. சர்வ ஞானம் பொருந்திய குர்ஆனில் மிக முக்கியத்துவம் கொடுத்து நன்றிக்காக அழைப்புவிடுக்கிறான். மேலும் நன்றி செலுத்தாமையை அருட்கொடைகளைப் பொய்ப்பித்தலாகவும் நிராகரித்தலாகவும் சிலாகித்து فَبِاَىِّ آلاَءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ என்ற வசனத்தை சூறதுர் ரஹ்மானில் மிகவும் கடுமையானதும் காரசாரமானதுமான தோரணையில் முப்பத்தியொரு தடவை மீட்டுவதனூடாக எச்சரிக்கை செய்கிறான்; நன்றி செலுத்தாமையானது பொய்ப்பித்தலும் நிராகரித்தலும் ஆகும் என்பதை வலியுறுத்துகின்றான். ஆம்! சர்வ ஞானம் பொருந்திய குர்ஆன் இறை நன்றியை படைப்பின் நோக்கமாகவும் விளைவாகவும் காட்டுவது போன்றே குர்ஆனுல் கபீர் ஆகிய இந்தப் பிரபஞ்ச வெளியும் கூட இறை நன்றியையே இப்பிரபஞ்சத்தின் படைப்பிலுள்ள நோக்கமாகவும் விளைவாகவும் காட்டுகின்றது. அதாவது, பிரபஞ்சத்தை நோக்கி எமது அவதானத்தைச் செலுத்தினால் பிரபஞ்சத்தின் கட்டமைப்பில் ஒவ்வொரு பொருளும் நன்றியை விளைவாகத் தரக்கூடிய அமைப்பில் ஓரளவு நன்றியோடு தொடர்புபட்டு அதனை நோக்கி இருப்பதைக் கண்டுகொள்ள முடியும். அதாவது, இந்தப் பிரபஞ்ச விருட்சத்தின் மிகச் சிறப்பு வாய்ந்த கனி நன்றியாகும். மேலும், இந்தப் பிரபஞ்சத் தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் அதி உன்னதமான உற்பத்தி நன்றியாகும். ஏனெனில், பிரபஞ்சத்தின் படைப்பில் நாம் காண்கின்ற விடயம் என்னவென்றால் பிரபஞ்சத்திலுள்ள படைப்புகளனைத்தும் ஒரு மண்டலமாகக் கட்டமைக்கப்பட்டு அதனுள் மையப் புள்ளியாக வாழ்வு படைக்கப்பட்டுள்ளது. அனைத்தும் வாழ்வோடு பிணைக்கப்பட்டுள்ளன; வாழ்வுக்காகவே சேவகம் செய்கின்றன. வாழ்வுக்குத் தேவையானவற்றை வழங்குகின்றன. அதாவது, பிரபஞ்சத்தைப் படைத்தவன் அதிலிருந்து அந்த வாழ்வை ஒரு நோக்கத்துக்காகத் தெரிவு செய்கின்றான் என்பது தெளிவாகின்றது. அவ்வாறே உயிரின உலகங்களை ஒரு மண்டலமாக ஒழுங்கமைத்து, அதன் மையப் புள்ளியில் மனிதனை நிர்ணயித்துள்ளான். ஏறக்குறைய உயிரினங்களிலிருந்து வேண்டப்படும் எல்லா நோக்கங்களையும் அவனில் மையப்படுத்துகிறான்; எல்லா உயிரினங்களையும் அவனைச் சூழ ஒன்று திரட்டி, அவனது சேவகனாக ஆக்கி, அவனது கட்டளைக்காக விட்டு, அவனை அவற்றின் மீது அதிகாரமிக்கவனாக ஆக்குகிறான். இதிலிருந்து மாட்சிமைமிக்க படைப்பாளன் உயிரினங்களுக்கு மத்தியில் மனிதனைத் தெரிவு செய்கிறான் என்பதும் பிரபஞ்சத்தில் தனது நாட்டத்திலும் தெரிவிலும் அவனை முற்படுத்துகிறான் என்பதும் உறுதியாகின்றது. அவ்வாறே மனித உலகையும், ஏன் ஒட்டுமொத்த ஜீவராசிகள் உலகையும்கூட ஒரு மண்டலமாக ஒழுங்கமைத்து அதன் மையப் புள்ளியில் ரிஸ்க்கை அதாவது வாழ்வாதாரங்களை வைத்துள்ளான். ஒட்டுமொத்த மனித குலத்தையும் மிருகங்களையும் ஏறக்குறைய வாழ்வாதாரங்கள் மீது காதல் கொள்ள வைத்து, அவர்களை ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரத்துக்கான சேவகர்களாகவும் அதன் கட்டளைக்குக் கீழ்படிந்தவர்களாகவும் ஆக்கி வைத்துள்ளான். அவர்கள் மீது அதிகாரம் செலுத்துவது வாழ்வாதாரங்களாகும். அனைத்துக்கும் மேலாக வாழ்வாதாரங்களை எல்லையற்ற அருள் பாக்கியங்கள் உள்ளடங்கலான விசாலமான செல்வங்களால் நிரம்பி வழியும் ஒரு கஜானாவாகவும் ஆக்கி வைத்துள்ளான். மேலும், வாழ்வாதாரங்களின் பல்வேறு வகைகளுள் ஒரு வகையான ஆகார வஸ்துகளின் சுவைகளை அறிந்துகொள்வதற்காக நாவிலுள்ள சுவையுணர்வில் ஆகார வஸ்துகளின் எண்ணிக்கையளவு உள்ளார்ந்த நுணுக்கமான அளவீடுகளை வைத்துள்ளான். இதன் அர்த்தம் மிகவும் வியப்புக்குரிய, மிகவும் ஆச்சரியமிக்க, மிகவுமே வளம் கொழிக்கும், மிக உள்ளடக்கமான சத்தியம் வாழ்வாதாரத்திலேயே உள்ளது என்பதாகும். பின்னர், எல்லா வஸ்துகளும் வாழ்வாதாரங்களைச் சூழ ஒன்று திரண்டு அதனோடு தொடர்புபட்டுள்ளதைப் போன்றே வாழ்வாதாரமும்கூட அதன் அத்தனை வகைகளும் உள்ளடங்கலாக, ஆன்மீக மற்றும் லௌகீக ரீதியாகவும் அக மற்றும் புற ரீதியாகவும் என்று எல்லா வகைகளிலும் நன்றியோடு பிணைந்ததாகும்; நன்றியின் வெளிப்பாடாகும்; நன்றியை விளைக்கின்றது; நன்றியைப் பிரதிபலிக்கின்றது. ஏனெனில், வாழ்வாதாரம் மீதான தேவையும் பசியும் கூட ஒரு வகை நன்றியாகும். மேலும், சுவையும் இன்பமும் கூட தன் உணர்வற்ற ஒருவகை நன்றியாகும். எனவே எல்லா ஜீவராசிகளிடமும் இவ்வகை நன்றி காணப்படுகின்றது. ஆனால் மனிதனோ வழிகேட்டின் காரணமாகவும் நிராகரிப்பின் காரணமாகவும் அந்த இயல்பான நன்றியின் தன்மையை மாற்றிவிடுகிறான்; நன்றியை உதாசீனம் செய்துவிட்டு நிராகரிப்பை நோக்கிச் செல்கின்றான். மேலும், வாழ்வாதாரமாக இருக்கின்ற அருளாகாரங்களில் இருக்கும் மிகவும் அழகிய, மிகவும் வனப்பான தோற்றங்களும் மிகவும் வசீகரமான வாசனைகளும் மிகவும் இனிமையான சுவைகளும் நன்றிக்கான அழைப்பாளர்களாகும். உயிரினங்களின் ஆர்வத்துக்கு அழைப்பு விடுத்து அந்த ஆர்வத்தினூடாக ஆகாரங்களின் மீது ஒரு வகை நேசத்தையும் மதிப்பையும் ஏற்படுத்தும்; ஓர் ஆத்ம நன்றியை மொழியச் செய்யும். அதாவது ஜீவராசிகளின் கவனத்தை ஈர்த்து விருப்பம் கொள்ள ஊக்கமளிக்கும். இந்த அருட்கொடைகள் அவற்றின் மீது ஒரு மதிப்புணர்வை வளர்க்கும். அதன் மூலம் சொல்லாலும் செயலாலும் இறைவனுக்கான நன்றியை நோக்கி அவற்றை நேர்வழிப்படுத்தி நன்றி மொழிய வைக்கும். அத்துடன் அந்த நன்றியோடு கூடவே அதி உன்னதமான, இனியதோர் இன்பத்தையும் அனுபவிக்கச் செய்யும். அதாவது இந்தச் சுவைமிக்க அருட்கொடைகள் குறுகிய, தற்காலிகமான, தோற்றத்தளவிலான ஓர் இன்பத்துடன் கூடவே நிரந்தரமானதும் உண்மையானதும் எல்லையற்றதுமான இன்பங்களைக்கொண்ட ரஹ்மானுடைய நெருக்கத்தை நன்றியூடாகப் பெற்றுத் தரும். இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் ரஹ்மத்துடைய கஜானாக்களின் இரட்சகனான சர்வலோக சக்கரவர்த்தியின் எல்லையில்லாத இன்பங்கள் நிறைந்த நெருக்கத்தைப் பற்றிச் சிந்திக்கச் செய்து இந்த உலகிலும்கூட சுவனத்தின் நித்திய இன்பங்களை உளப்பூர்வமாக அனுபவிக்கச் செய்யும். இவ்வாறு வாழ்வாதாரங்கள் நன்றியின் மூலம் மேலே கூறப்பட்டதைப் போன்ற மிகவும் பெறுமதி வாய்ந்த, வளம் கொழிக்கும், உள்ளடக்கமான ஒரு கருவூலமாக இருக்கின்ற போது, நன்றியின்மை காரணமாக அதல பாதாளத்தை நோக்கித் தாழ்ந்துவிடுகின்றது. ரிஸாலே நூர் தொகுப்பின் ஆறாவது வார்த்தையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதைப் போன்று நாவிலிருக்கும் சுவையுணர்வு அல்லாஹ்வுக்காக, அதாவது ஆத்மார்த்தமாக இறைவனுக்கு நன்றி செலுத்தும் பணியோடு வாழ்வாதாரங்களை நாடுகின்ற போது இறை கருணையின் வெளிப்பாடான எண்ணற்ற சமையல் கூடங்களுக்கான நன்றியுள்ள பரிசோதகன் என்ற அந்தஸ்தையும் விசுவாசமான உயர் நிலைக் கண்காணிப்பாளன் என்ற அந்தஸ்தையும் அடைகின்றது. மாறாக இச்சைகளுக்காகவென்று வாழ்வாதாரங்களை நாடும் போது, அதாவது அதை அருள்பாலிப்பவனுக்கான நன்றியுணர்வை வெளிப்படுத்தாதபோது நாவிலிருக்கும் அந்த சுவை உணர்வானது உயர் நிலைக் கண்காணிப்பாளன் என்ற அந்தஸ்திலிருந்து வயிறு என்ற தொழிற்சாலையின் ஒரு வாயிற்காவலன் என்ற மட்டத்துக்குத் தாழ்ந்துவிடும். அவ்வாறே அருட்கொடைகளின் தன்மையும் வாழ்வாதாரத்துக்கான சேவகர்களாக இருக்கும் ஏனைய அங்க அவயங்களும் கூட மிக உன்னதமான அந்தஸ்துகளிலிருந்து மிக இழைந்த மட்டத்துக்குத் தாழ்ந்து பிரபஞ்சத்தின் படைப்பாளனுடைய சர்வ ஞானத்துக்கு முரணானதும் எதிரானதுமான ஒரு நிலையை அடைகின்றன. நன்றிக்கான அளவீடு மனத்திருப்தி, சிக்கனம், உளப்பூர்வமாக வருபவற்றைப் பொருந்திக்கொள்ளுதல் என்பனவாகும். நன்றியின்மைக்கான அளவீடானது பேராசை, வீண்விரயம், மதிப்பளிக்காமை, ஹராம் ஹலால் பாராது கண்டதையெல்லாம் உண்ணுதல் என்பனவாகும். ஆம், பேராசையானது, நன்றியின்மையாக இருப்பதைப் போன்றே இழப்புக்களுக்கும் இழிவுக்குமான காரணியாகவும் அமைகின்றது. உதாரணமாக, சமூக வாழ்வைப் பேணி வாழும் பரக்கத் பொருந்திய எறும்புகள் ஏதோ பேராசை காரணமாகத்தான் போலும், கால்களுக்குக் கீழ் மிதிபட்டு அவதிப்படுகின்றன. ஏனெனில், வருடத்துக்கு ஒரு சில அரிசி மணிகள் போதுமானதாக இருக்கும் போது, திருப்தியின்றி வாய்ப்புக் கிடைக்குமெனில் ஆயிரக் கணக்கானதைச் சேமித்துக்கொள்ளும். அவ்வாறே அருள்பாலிக்கப்பட்ட தேனியும்கூட ஏதோ மனத் திருப்தி காரணமாகத்தான் போலும், ஆகாயத்தில் தலைகளுக்கு மேலால் பறக்கின்றன. அந்த மனத் திருப்தி காரணமாக இனிய தேனை இறை கட்டளைக்கிணங்க மனிதர்களுக்கு அருளி ஆகாரமாக ஊட்டுகின்றன. ஆம்! புனித இரட்சகனுடைய சுயத்தின் மகுடமாகவும் மிக உன்னதமான நாமமாகவும் உள்ள “அல்லாஹ்” எனும் நாமத்துக்கு அடுத்தாக உள்ள அதி உன்னதமான நாமமாகிய “ரஹ்மான்” என்ற நாமம் வாழ்வாதாரத்துடன் தொடர்பானதாகும். வாழ்வாதாரத்தில் இருக்கும் நன்றியின் மூலமே அந்த ரஹ்மானை அடைந்துகொள்ள முடியும். மேலும், ரஹ்மானுடைய மிகவும் வெளிப்படையான அர்த்தம் ரஸ்ஸாக் ஆகும். மேலும் நன்றிக்கான பல வழிகள் காணப்படுகின்றன. அவற்றுள் மிகவும் உள்ளடக்கமானதாகவும் ஒட்டுமொத்த நன்றிகளின் சாரம்சமாகவும் தொழுகை இருக்கின்றது. அத்துடன் நன்றியினுள் கலப்படமற்றதொரு ஈமானும் தூய்மையான தவ்ஹீதும் பொதியப் பெற்றுள்ளன. ஏனெனில், ஓர் அப்பிள் பழத்தைச் சாப்பிட்டுவிட்டு “அல்ஹம்துலில்லாஹ்” என்று மொழியும் மனிதன் அந்த ஹம்த் மூலம் “அந்த அப்பிள் பழமானது நேரடியாக எவ்விதத் திரையுமற்ற இறை வல்லமையின் அத்தாட்சியும் ரஹ்மத் கஜானாவின் அன்பளிப்புமாகும்” என்பதைப் பிரகடனம் செய்து ஈமான்கொள்கிறான். சிறிதாக இருக்கட்டும், பெரிதாக இருக்கட்டும் எல்லா வஸ்துகளையும் அவனது குத்ரத் கரங்களிடம் ஒப்படைக்கின்றான். மேலும், ஒவ்வொரு வஸ்திலுமிருக்கும் ரஹ்மத்தின் சுவடுகளை அறிந்து உண்மையான ஈமானையும் தூய்மையான தவ்ஹீதையும் இறை நன்றியூடாகப் பிரகடனம் செய்கின்றான். பொடுபோக்குக்கார மனிதன் அருட்கொடைகளை நிராகரிப்பதனூடாக எப்படிப்பட்ட அழிவில் வீழ்ந்திருக்கின்றான் என்பதற்கான பல்வேறு அத்தாட்சிகளுள் ஒன்றை மட்டும் இவ்விடத்தில் கூறுகிறோம். அதாவது: மனிதன் சுவைமிக்க ஓர் அருள் ஆகாரத்தை உண்ணும் போது நன்றி கூறினால் அவன் உட்கொண்ட அந்த அருள் ஆகாரம் ஓர் ஒளியாகவும் மறுமைக்கான ஒரு சுவனக் கனியாகவும் மாறிவிடும். அதிலுள்ள சுவையும்கூட அல்லாஹ்வின் கருணையினதும் அரவணைப்பினதும் விளைவினாலாகும் என்பதைச் சிந்திப்பதினூடாக விசாலமானதும் நித்தியமானதுமான இனியதோர் இன்பமாக மாறி விடுகின்றது. அதாவது, அதன் ஆத்மீகக் கூறுகளும் சாரமும் உன்னதமான அந்தஸ்துக்களுக்கு உயர்த்தப்பட்டு, உடலியல் சார்ந்த சாமான்யமான சக்கைகள், அதாவது தமது பணியை முடித்துவிட்ட, இனிமேல் அவசியப்படாத கூறுகள் கழிவாக மாறி மூலத்தை நோக்கிச் சென்றுவிடும். அதாவது, மூலக் கூறுகளாக நிலை மாற்றமடையும். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தாத போது அந்தத் தற்காலிகச் சுவையானது விரைவாக மறைந்து விடுவதால் வேதனையையும் கவலையையும் விட்டுச் செல்வதோடு தன்னளவில்கூட அழுக்குகளாக மாறிவிடும். வைர அந்தஸ்தைக் கொண்ட அந்த அருள் கரிக்கட்டையாகத் திரிபடைந்து விடும். ஆனால், நன்றி காரணமாக குறுகிய தற்காலிக அருட்கொடைகள் நிரந்தர இன்பங்களையும் நித்திய கனிகளையும் பெற்றுத் தரும். நன்றியைவிட்டும் தூரமான அருட்கொடைகள் மிகவும் அழகிய தோற்றத்திலிருந்து மிகவும் அசிங்கமான தோற்றத்துக்கு நிலை மாறிவிடும். ஏனெனில், அந்தப் பொடுபோக்குக்காரனின் பார்வையில் குறுகிய, தற்காலிக ஒரு சுவைக்குப் பிறகு எஞ்சுவது வெறுமனே கழிவாகும். ஆம்! வாழ்வாதாரத்தில் காதல் கொள்ளத் தகுதியான ஒரு தோற்றம் இருக்கின்றது. அந்தத் தோற்றமானது இறை நன்றியூடாகப் பிரகாசிக்கும். இல்லாவிட்டால் பொடுபோக்குக்காரர்கள், வழிதவறியவர்களிடம் காணப்படும் ஆகாரங்கள் மீதான காதலானது மிருகத்தனமாகும். மேலும், இவ்வாறு ஒவ்வொரு விடயத்தையும் ஒப்பீடு செய்வீர்களானால் பொடுபோக்குக்காரர்களும் வழிதவறியவர்களும் முகம்கொடுத்துள்ள அழிவும் இழப்பும் எத்தகையதென்பதைக் கண்டுகொள்வீர்கள். உயிரினங்களுக்கு மத்தியில் மிக அதிகமாக(ன) வாழ்வாதார வகைகள் மீது தேவை உடையவனாக மனிதன் இருக்கின்றான். சர்வ வல்லோன் அல்லாஹ் மனிதனை தனது அத்தனை திரு நாமங்களுக்குமான மிகவும் உள்ளடக்கமான ஒரு கண்ணாடியாகவும் ரஹ்மத்துடைய கருவூலங்களில் காணப்படும் எல்லா வகை ஐஸ்வர்யங்களையும் அறிந்து, அளந்து, அனுபவிக்க முடியுமான அவயவங்களால் அலங்கரிக்கப்பட்ட இறை வல்லமையின் ஓர் அற்புதமாகவும் எல்லாத் திரு நாமங்களினதும் பிரதிபலிப்புகளையும் கலையம்சங்களையும் மதிப்பிட்டு அளக்கக் கூடிய அங்க அவயவங்களின் மொத்தமாகவும் அமைந்த ஒரு தோற்றத்தில் பூமிப் பந்தின் மீது தனது கலீபாவாகப் படைத்துள்ளான். இதன் காரணமாக எல்லையற்ற தேவைகளைக் கொடுத்து ஆன்மீக மற்றும் லௌகீக ரீதியான எண்ணற்ற வகை வாழ்வாதாரங்கள் மீது தேவை உடையவனாக ஆக்கியுள்ளான். இப்படிப்பட்ட உள்ளடக்கங்களின் மொத்தமான மனிதனை அதி உன்னத அந்தஸ்தான “அஹ்ஸன தக்வீம்”இற்கு உயர்த்தக் கூடிய ஊடகம் நன்றியாகும். நன்றி இல்லாவிட்டால் “அஸ்ஃபல ஸாஃபிலீன்” என்ற அதல பாதாளத்தை நோக்கித் தாழ்வான்; மிகப் பெரிய அநியாயக்காரனாக மாறிவிடுவான். சுருக்கமாக: நன்றியானது உபூதியத்துக்கான பாதையின் அடிப்படையும் மஹ்பூபிய்யத் என்ற இறைகாதலுக்கான பாதையின் நான்கு அடிப்படைகளுள் அதி சிரேஷ்டமானதுமாகும். அந்த நான்கு அடிப்படைகளும் பின்வருமாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. “இறைகாதலுக்கான பாதையான தரீக்கதுல் அஜ்ஸில் செல்வதற்குத் தேவையான நான்கு அடிப்படைகள்: பரிபூரண இயலாமை, பரிபூரண வறுமை, பரிபூரண ஊக்கம், பரிபூரண நன்றி என்பனவாகும் ஞானியே!” اَللّٰهُمَّ اج۟عَل۟نَا مِنَ الشَّاكِرٖينَ بِرَح۟مَتِكَ يَا اَر۟حَمَ الرَّاحِمٖينَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ سَيِّدِ الشَّاكِرٖينَ وَ ال۟حَامِدٖينَ وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ اَج۟مَعٖينَ اٰمٖينَ وَ اٰخِرُ دَع۟وٰيهُم۟ اَنِ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters