[இருபத்தேழாவது வார்த்தையில் இஜ்திஹாதுக்குத் தடையான ஐந்தாவது காரணியின் மூன்றாவது குறிப்பின் மூன்றாவது உதாரணத்துக்கான பிற்குறிப்பாகும்.] முக்கியமான ஒரு கேள்வி: சில ஆழமான ஆய்வறிஞர்கள் கூறுவது போன்று “குர்ஆனிலும் திக்ருகளிலும் ஏனைய தஸ்பீஹ்களிலும் உள்ள ஒவ்வொரு வார்த்தையும் பல்வேறு கோணங்களில் மனிதனுடைய ஆத்மீக கூறுகளை ஒளியேற்றி அவற்றுக்குப் போசனையாக அமைகின்றன. ஆனால் அர்த்தங்களை அறியாத போது வெறுமனே வார்த்தைகள் மாத்திரம் பெரிதாக எதையும் தறுவதில்லை. போதுமானதாக அமைவதும் இல்லை. வார்த்தைகள் என்பது ஆடையாகும். எனவே அவற்றை மாற்றினால், அதாவது ஒவ்வொரு சமூகமும் தத்தமது மொழிகளால் அந்த அர்த்தங்களுக்கு வார்த்தைகளை அணிவித்தால்..” இன்னும் பயனுள்ளதாக அமையாதா? பதில்: குர்ஆன் வசனங்களிலும் நபியுடைய தஸ்பீஹ்களிலும் உள்ள வார்த்தைகள் சாமான்யமான ஆடைகள் போலன்றி உடலின் பிரிக்க முடியாத, உயிரோட்டமான தோலைப் போன்றவையாகும். அல்லது காலவோட்டத்தில் தோலாக மாறிய சிலதும் உள்ளன. ஆடை மாற்றப்பட முடியும். ஆனால் தோலை மாற்றினால் அது உடலுக்குக் கேடாகும். தொழுகை, அதான் போன்றவற்றில் உள்ளவை போன்ற முபாரக்கான வார்த்தைகள் அவற்றின் பாரம்பரிய அர்த்தங்களின் சின்னமாக அல்லது மகுடமாகத் திகழ்கின்றன. நான், எனது நஃப்ஸ் அனுபவிக்கின்ற ஒரு நிலையைப் பல தடவைகள் நுணுக்கமாக ஆராய்ந்த போது அந்த நிலை ஹகீகத்தாகும் என்பதைக் கண்டேன். அந்த நிலை இதோ: நான் அரஃபா தினத்தன்று ஸூரா இஹ்லாஸை நூறு நூறு தடவைகளாக மீண்டும் மீண்டும் ஓதிக்கொண்டிருந்தேன். அப்போது என்னுடைய ஒரு சில ஆத்மீக உணர்வுகள் ஒரு சில தடவைகள் ஓதும் போதே தமக்குத் தேவையான ஊட்டத்தைப் பெற்றுக்கொண்டு விலகி நின்று ஓய்வு நிலைக்குச் செல்வதை அவதானித்தேன். அவ்வாறே சிந்தை போன்ற சில பகுதிகளும் கூட குறித்த சில நேரங்களுக்கு அர்த்தங்களில் கவனம் செலுத்திவிட்டுத் தனது பங்கைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஓய்வுக்குச் சென்றன. அவ்வாறே உள்ளம் போன்ற சில பகுதிகள் ஆத்மார்த்தமான சில இன்பங்களுக்குக் காரணமாக உள்ள சில அர்த்தங்களிலிருந்து தனக்குத் தேவையான போசாக்கைப் பெற்றுக்கொண்டு ஓய்வு நிலைக்குச் சென்றன. இவ்வாறு நேரம் செல்லச் செல்ல அந்த மீட்டலில் ஒரு சில உணர்வுகள் மாத்திரம் மிக நீண்ட நேரம் சலைக்காமல் என்னுடன் தொடர்வதைக் காண முடிந்தது. அவை அர்த்தங்கள் மீதோ அல்லது சிந்தனைகள் மீதோ எவ்வித தேவைப்பாடுகளும் கொள்வதில்லை. பொடுபோக்கு சிந்தையைப் பாதிப்பதைப் போன்று அந்த உணர்வுகளைப் பாதிக்கவில்லை. வார்த்தையின் அதாவது நிறைவான வார்த்தையின் சுருக்கமான ஓர் அர்த்தமும் ஒரு மகுடமாகத் திகழும் அந்த வார்த்தையின் ஒரு பாரம்பரியமான அர்த்தமும் அவைகளுக்குப் போதியதாக அமைந்துவிடுகின்றன. அவ்வாறான சமயங்களில் அர்த்தத்தைச் சிந்தித்தால் அது தீங்காக அமையத்தக்க ஓர் அழுப்பை ஏற்படுத்திவிடுகின்றது. சலிப்புக்கு ஆளாகமல் தொடர்கின்ற அந்த உணர்வுகளுக்கோ கற்றல் அல்லது கிரகித்தல் போன்ற தேவைகள் இல்லை. மாறாக நினைவூட்டல், கவனத்தைத் திருப்புதல், ஊக்கமளித்தல் போன்ற தேவைகளே அவற்றுக்குள்ளன. இவற்றை வழங்குவதற்கு தோலை ஒத்த அந்த வார்த்தைகளே போதுமாக அமைந்துவிடுகின்றன. இந்த இடத்தில் அவை அர்த்தத்தின் பணிகளைச் செய்கின்றன. குறிப்பாக அந்த அரபி வார்த்தைகள் மூலம், அவை நேரடியாகவே அல்லாஹ்வின் வார்த்தைகள் என்பதை சிந்திப்பதும்கூட வற்றாத ஓர் ஆத்மானந்தத்துக்கான ஊற்றாகும். ஆம் அடிக்கடி மீட்டப்படுகின்ற அதான், தொழுகையின் தஸ்பீஹாத்துகள், ஸூரா ஃபாத்திஹா, ஸூரா இஹ்லாஸ் போன்ற சத்தியங்களை வேறொரு மொழியால் பிரஸ்தாபிப்பது மிகவும் கேடாகவே அமையும் என்பதை எனது அந்த அனுபவம் தெளிவாகக் காண்பித்தது. ஏனெனில் அந்த சத்தியங்கள் அவற்றின் நித்திய ஊற்றாக உள்ள தெய்வீக மற்றும் நபித்துவ வார்த்தைகளிலிருந்து பிரிக்கப்படுகின்ற போது அந்த சலிப்படையாத உணர்வுகளுக்குத் தேவையான நிலையான பங்குகளும் சேர்ந்தே போய்விடும். அத்துடன் ஒவ்வோர் எழுத்துக்குமுரிய பத்து நன்மைகள் இல்லாமல் போவது, தொடர்ச்சியான உயிரோட்டம் என்பது எல்லாத் தொழுகைகளிலும் எல்லோருக்கும் வாய்க்காத ஒன்றாக இருப்பதால் அந்தப் பொடுபோக்குடன் கூடவே மொழிபெயர்ப்பின் மனிதப் பிரயோகங்கள் வழியாக ஏற்படும் இன்னுமோர் இருள் ஆத்மாவைச் சூழ்ந்துகொள்தல் போன்ற பல நட்டங்களும் இதனால் ஏற்படும். ஆம், இமாமுல் ஆஃஸம் கூறுவது போன்று “லா இலாஹ இல்லல்லாஹ் என்பது தவ்ஹீதுக்கான மகுடமும் சின்னமும் நாமமுமாகும்”. நாமும் கூறுகிறோம்: திக்ருகளும் தஸ்பீக்களும் குறிப்பாக அதானுக்கும் தொழுகைக்குமுரிய ஓதல்கள் அனைத்தும் அவற்றின் சத்தியங்களுக்குரிய சின்னங்களாகவும் நாமங்களாகவும் உள்ளன. எனவே சின்னங்களில் போன்று அகராதி அர்த்தத்தைவிட அதன் ஷரீஅத்துக்குரிய பாரம்பரிய அர்த்தத்தையே பார்க்க வேண்டும். எனவே அவ்வாறு மாற்றத்துக்குற்படுத்துவதற்கு ஷரீஅத் இடம் கொடுக்காது. எல்லா முஃமின்களும் கட்டாயம் அறிந்து வைத்திருப்பது அவசியமான சுருக்கமான அர்த்தங்களை, அதாவது சுருக்கமான மொழிபெயர்ப்புகளைப் பொறுத்தவரை அவற்றை மிகப் பாமரனான ஒருவனாலும் கூட இலகுவாகக் கற்றுக்கொள்ள முடியும். -இஸ்லாத்துக்குள் இருந்தவண்ணமே- வாழ்க்கை பூராகத் பல ஆயிரம் பராக்கான விடயங்களைத் தலைக்குள் நிறைத்து வைத்துள்ள மனிதர்கள், நித்திய வாழ்வின் திறவுகோள்களாக உள்ள இந்த முபாரக்கான வார்த்தைகளின் சுருக்கமான அர்த்தங்களைக் கற்றுக்கொள்வதற்கு வெறுமனே ஓரிரு வாரங்களையேனும் செலவளிக்காதிருப்பது எவ்வாறு நியாயமாக முடியும்? ஒரு முஸ்லும் எவ்வாறு இப்படி இருந்துவிட்டுச் செல்ல முடியும்? இவர்களைப் புத்திசாலிகள் என்று சொல்லலாமா? எனவே இப்படிப்பட்டவர்களின் பொருட்டுக்காக அந்த ஒளி ஊற்றுகளின் மகுடங்களைச் சிதைப்பது புத்திசாலித்தனமான காரியமல்ல. உதாரணமாக, “ஸுபுஹானல்லாஹ்” என்பதைச் செவிமடுக்கும் மனிதன் எந்த சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் இருக்கட்டும், அது அல்லாஹ்வைப் பரிசுத்தப்படுத்துகின்ற வார்த்தை என்பதை அறிந்துகொள்வான். இதோ இந்தச் சிறப்பு போதாதா? அதன் அர்த்தத்தைத் தன்னுடைய மொழியில் பார்க்க விரும்பினால் பகுத்தறிவுக்குரிய பங்குக்காக ஒரே தடவையி அதைக் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் ஒரு நாளில் நூறு தடவைகள் அதை மீட்டுகின்ற போது பகுத்தறிவின் பங்குக்கு அப்பால் அந்த வார்த்தையுடன் ஒட்டியுள்ள அர்த்தங்களும் அந்த வார்த்தையூடாக ஊற்றெடுக்கின்ற அர்த்தங்களும் பல்வேறு உணர்வுகளுக்குத் தேவையான பல்வேறு ஆன்மீகப் போசனைகளையும் ஒளியையும் பொதியப் பெற்றவையாக உள்ளன. குறிப்பாக கலாமுல்லாஹ் என்ற சிறப்பால் அதில் பொதிந்துள்ள புனிதத்துவமும் அந்தக் புனிதத்துவத்தால் வருகின்ற ஒளிகளும் ஆத்மீகப் பிரவாகங்களும் பரக்கத்துகளும் மிக மகத்தானவையாகும். சுருக்கமாக: தீனுடைய அடிப்படைகளின் பெட்டகங்களாகத் திகழும் புனிதமான தெய்வீக வார்த்தைகளின் இடத்தில் எந்த ஒன்றும் பிரதியீடு செய்யப்பட முடியாது. அவற்றின் இடத்தையும் பணியையும் எந்த ஒன்றாலும் நிவர்த்தி செய்ய முடியாது. தற்காலிகமாக, சத்தியங்களைப் பிரஸ்தாபிக்க உதவினாலும் தொடர்ச்சியாகவும் அதற்கே உரிய உன்னதத் தன்மையுடனும் புனிதத்துடனும் பிரஸ்தாபிக்க முடியாது. ஆனால், தீனுடைய வெளிப்படையான விடயங்களின் பெட்டகங்களாக உள்ள வார்த்தைகளைப் பொறுத்தவரை அவற்றிலும் பெட்டகங்களை மாற்றுவதற்கான தேவைகள் இல்லை. ஏனெனில் நஸீஹத்களும் ஏனைய போதனைகள், கல்வி நடவடிக்கைகள், இல்ம் மஜ்லிஸ்களும் அதற்கான தேவையை இல்லாமலாக்குகின்றது. சுருக்கமாக: மிக ஆழமான, மிக விசாலமான மொழியாகிய அரபு மொழியின் அகிலார்ந்த தன்மையும், அந்த மொழியிலுள்ள குர்ஆனிய வார்த்தைகளின் அற்புதமும் எத்தகையதெனில் அந்த வார்த்தைகளின் மொழி பெயர்ப்பு உகந்ததாக அமைய முடியாது. ஏன் சாத்தியமற்றது என்றே கூற முடியும். இந்த விடயத்தில் சந்தேகம் கொள்பவர்கள் குர்ஆனிய அற்புதங்கள் தொடர்பான இருபத்தைந்தாவது வார்த்தைக்கு விண்ணப்பிக்கட்டும். தர்ஜுமாக்கள் என்று கூறப்படுபவைகள் மிகச் சுருக்கமான, மிகக் குறைபாடான மொழிபெயர்ப்புகளாகும். இப்படிப்பட்ட மொழிபெயர்ப்புகள் எங்கே? அதன் உயிரோட்டமான, பல்வேறு அர்த்த மண்டலங்களையும் கிளைகளையும் கொண்ட ஹகீகத்தான அர்த்தங்கள் எங்கே?
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Mektubat
The Twenty-Sixth Letter
ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus

