இந்த வார்த்தையில் இரண்டு பாகங்கள் உள்ளன. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ لَقَد۟ خَلَق۟نَا ال۟اِن۟سَانَ فٖٓى اَح۟سَنِ تَق۟وٖيمٍ ثُمَّ رَدَد۟نَاهُ اَس۟فَلَ سَافِلٖينَ اِلَّا الَّذٖينَ اٰمَنُوا وَ عَمِلُوا الصَّالِحَاتِ
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Sözler
The Twenty-Third Word
ஈமானில் பொதிந்துள்ள ஆயிரக்கணக்கான நலவுகளுள் வெறும் ஐந்தை மாத்திரம் ஐந்து குறிப்புகளாகத் தெளிவுபடுத்துகின்றோம்.
மனிதன் ஈமானிய ஒளியின் மூலம் ஆஃலாயு இல்லிய்யூன் என்ற உயர்வானவைகளுள் மிக உயர்ந்த அந்தஸ்துக்கு உயர்ந்து சுவனத்துக்குத் தகுதியான ஓர் அந்தஸ்த்தைப் பெற்றுக்கொள்வான். அவ்வாறே குஃப்ருடைய இருளின் மூலம் அஸ்ஃபல ஸாஃபிலீன் என்ற இழிவானவைகளுள் மிக இழிந்த நிலைக்குத் தாழ்ந்து நரகவாதிகளின் நிலைக்குத் தன்னை ஆளாக்கிக்கொள்வான். ஏனெனில் ஈமான் என்பது ஒரு பிணைப்பாகும். அது மனிதனை மாட்சிமைமிக்க படைப்பாளனுடன் பிணைத்துவிடுகின்றது. எனவே ஈமான் மூலம் மனிதனில் உள்ள ரப்பானிய அற்புதங்களும் ரப்பானிய நாமங்களின் வெளிப்பாடுகளாகத் திகழும் ரப்பானியக் கலையம்சங்களும் அவனுக்கு ஓர் அந்தஸ்த்தையும் பெறுமதியையும் ஈட்டிக் கொடுக்கின்றன. ஆனால் குஃப்ரானது ரப்புடன் உள்ள அந்தத் தொடர்பைத் துண்டித்துவிடுகின்றது. அந்தத் துண்டிப்பின் மூலம் ரப்பானிய அற்புதங்களும் கலையம்சங்களும் மறைந்து, அவற்றின் பெறுமதி வெறுமனே சடப் பொருள் என்ற அளவிலேயே தரித்துவிடுகின்றது. சடம் என்பது அழிந்து மறையக் கூடிய தற்காலிகமான ஒரு விலங்கியல் வாழ்க்கையாக இருப்பதால் அதன் பெறுமதி பூச்சியத்துக்கு ஒப்பானதாகும். இந்தத் தாத்பரியத்தை ஓர் உதாரணத்தின் மூலம் விளங்கிக்கொள்வோம். உதாரணமாக, மனிதர்களின் கலைப் படைப்புகளை எடுத்துக்கொண்டால், அதில் சடப் பொருளின் பெறுமதியும் கலையின் பெறுமதியும் வெவ்வேறானவையாகும். சில போது இரண்டும் சரி சமமான பெறுமதியை உடையவையாகவும் சில போது கலையைவிட சடப் பொருள் பெறுமதி மிக்கதாகவும் சில போது சடப் பொருளைவிட கலை பெறுமதிமிக்கதாகவும் இருக்கும். சில போது வெறுமனே ஐந்து காசு பெறுமதியான ஒரு சடப் பொருள், உதாரணமாக ஓர் இரும்புத் துண்டு, அதில் வடிக்கப்பட்டுள்ள கலையம்சங்கள் காரணமாக ஐநூறு காசுக்கு விலை போகின்றது. ஏன் சில போது கலையம்சங்கள் நிறைந்த தொன்மையான ஒரு பொருள் ஒரு மில்லியன் காசுக்கு விலை போகின்ற போது அதிலுள்ள சடப் பொருளோ வெறும் ஐந்து சதத்துக்கும் பெறுமதியற்றதாகக் காணப்படுகின்றது. ஆம் இப்படிப்பட்ட கலையம்சங்கள் நிறைந்த தொன்மையான ஒரு பொருள் தொல்பொருள் விற்பனை நிலையம் ஒன்றுக்குக் எடுத்துச் செல்லப்பட்டு, அதிலுள்ள சூசகங்கள் முடிச்சவிழ்க்கப்பட்டு, அதன் வரலாற்றுக் கதாநாயகனுடன் அதாவது, அதிலுள்ள அற்புதமான கலைஞானங்களுக்குச் சொந்தக்காரனான கலை விற்பன்னருடன் அந்தக் கலைப் படைப்புக்கு ஒரு தொடர்பு ஏற்படுத்தப்பட்டு, அந்த வரலாற்றுடன் சேர்த்து அது காட்சிப்படுத்தப்பட்டால், அந்த விற்பனை நிலையத்தில் அதன் பெறுமதி பல மில்லியன்களை எட்டிவிடும். மாறாக அது கடின சுபாவம் கொண்ட இரும்புக் கடைக்காரர் ஒருவரிடம் கொண்டு செல்லப்பட்டால் அதை வெறும் ஐந்து சதத்துக்கே கொடுக்க முடியுமாக இருக்கும். ஆம் மனிதனும் சத்திய இரட்சகனுடைய தொன்மையான ஒரு கலைச் சிற்பமாகவும் அவனது மகா வல்லமையின் அற்புதமான ஒரு வெளிபாடாகவும் திகழ்கின்றான். அந்த வல்லோன் மனிதனைத் தனது எல்லா நாமங்களின் பிரதிபலிப்புகளுக்கும் பாத்திரமானவனாகவும் அந்த நாமங்களுக்குரிய எல்லாக் கலையம்சங்களும் பொதியப்பெற்றவனாகவும் மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் இந்தப் பிரபஞ்சத்தின் சிறிதுபடுத்தப்பட்ட ஒரு மாதிரியாகவும் படைத்துள்ளான். ஈமானிய ஒளி அந்த மனிதனுள் செல்லும்போது அவன் மீதுள்ள அத்தனை அர்த்தங்களும் வாசிக்கப்பட முடியுமானதாக மாறுகின்றன. அந்த முஃமின் பிரக்ஞை மூலம் வாசித்து, அந்த தெய்வீகப் பிணைப்பின் மூலம் வாசிக்கவும் வைப்பான். அதாவது தான் மாட்சிமைமிக்க படைப்பாளனின் ஒரு சிருஷ்டியாக இருப்பது, அவனுடைய ஒரு கலைச் சிற்பமாக இருப்பது, அவனுடைய அன்புக்கும் அருளுக்கும் பாத்திரமானவனாக இருப்பது போன்ற பல்வேறு அர்த்தங்களுடன் மனிதனிலிருக்கும் ரப்பானிய கலையம்சங்கள் புலனாகும். ஆம், படைப்பாளனுடனான தொடர்பின் மகுடமாக இருக்கும் ஈமான் மனிதனில் இருக்கும் அத்தனை கலையம்சங்களையும் அர்த்தங்களையும் வெளிப்படுத்துகின்றது. மனிதனுடைய பெறுமதியும் அதற்கேற்ப அதிகரிக்கும். அதாவது அல்லாஹ்வின் சமதியத்தைப் பிரதிபலிக்கின்ற அளவுக்கேற்ப அதிகரிக்கும். அந்த வகையில் பெறுமதியற்ற இந்த மனிதன் அந்தத் தொடர்பின் மூலம் ஏனைய எல்லாப் படைப்புகளையும்விட உன்னதமான ஓர் அந்தஸ்துக்குரியவனாகவும் அல்லாஹ்வின் பிரதிநிதியாகவும் சுவனத்துக்குத் தகுதியான ஒரு ரப்பானிய விருந்தாளியாகவும் மாறுகின்றான்.. மாறாக அந்த தெய்வீகத் தொடர்பை முற்றாகத் துண்டித்துக்கொள்வதன் மகுடமாக இருக்கும் குஃப்ரிய்ய இருள் மனிதனுள் குடிகொள்ளுமாக இருந்தால் அப்போது மனிதனில் இருக்கும் இறை நாமங்களுக்குரிய அத்தனை அர்த்தபூர்வமான அழகிய கலையம்சங்களும் இருளில் மூழ்கி வாசிக்க முடியாத நிலைக்குச் சென்றுவிடும். ஏனெனில், படைப்பாளன் மறக்கடிக்கப்பட்டால் அவனை நோக்கியிருக்கும் ஆத்மார்த்தமான அம்சங்களும் புரிந்துகொள்ள முடியாததாக மாறிவிடும்; தலை கீழாகப் புரண்டதைப் போல் ஆகிவடும். அந்த அர்த்தபூர்வமான கலையம்சங்களும் ஆத்மார்த்தமான ஞானங்களும் மறைந்துகொள்ளும். அதன் பின்னர் எஞ்சுவது அதாவது புறக் கண்களுக்குத் தெரிவது வெறுமனே சடமாக அல்லது பிண்டமாகவே இருக்கும். அந்தப் பிண்டமும்கூட இயற்கையிடமும் தற்செயல் நிகழ்வுகளிடமும் கையளிக்கப்படுவதால் அதுவும் மிகவும் இழிவான ஒரு நிலைக்குத் தாழ்ந்துவிடும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரகாசமான வைரமாக இருக்கின்ற போது மங்களான கண்ணாடித் துண்டுகளாக மாறிவிடும். இந்நிலையில் அதன் பெருமதி சடத்தளவில் வெறுமனே விலங்குகளின் பிண்டத்தைப் போன்றதாகும். நோக்கம், விளைவு என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது -ஏலவே கூறப்பட்டதைப் போன்று- மனிதனுடைய பிண்டத்தின் நிலைமை மிகப் பரிதாபகரமானதாகும். அதாவது குறுகிய ஒரு ஆயுளில் மிருகங்களுக்கு மத்தியில் மிகப் பலவீனமான நிலையில் இருக்கின்ற அதே சமயம் மிக அதிகமான தேவைகளைக் கொண்டதாகவும் மிக அதிகமான அவலங்களைச் சுமந்ததாகவும் இருப்பதால் மிருகங்களைவிட மோசமான ஒரு வாழ்வைக் கடத்திவிட்டு, உக்கி மண்ணோடு மண்ணாகிச் செல்வதே மனிதனுடைய பிண்டத்துக்கு முன்னாலுள்ள நோக்கமும் விளைவுமாகும். ஆம், குஃப்ரானது இவ்வாறு மனிதனுடைய மகிமையைத் வைரத்திலிருந்து கரிக் கட்டையுடைய நிலைக்குத் தாழ்த்திவிடும்.
ஆம், ஈமான் என்பது மனிதன் மீது எழுதப்பட்டுள்ள தெய்வீக தூதுகள் அனைத்தையும் வாசிக்க வைக்கின்ற ஓர் ஒளியாகும். அவ்வாறே இந்தப் பிரபஞ்சத்தையும் ஒளியேற்றி கடந்த மற்றும் எதிர்காலங்களை இருளிலிருந்து மீட்கின்றது. ஒரு முறை இந்தத் தாத்பரியத்தை ஒரு தரிசனத்தின் போது கண்டுகொண்டேன். ﺍَﻟﻠَّﻪُ ﻭَﻟِﻰُّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺍَﻣَﻨُﻮﺍ ﻳُﺨْﺮِﺟُﻬُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻈُّﻠُﻤَﺎﺕِ ﺍِﻟَﻰ ﺍﻟﻨُّﻮﺭِ என்ற வசனத்தின் ஒரு தாத்பரியமாகவும் அமைந்த அந்த உதாரணத்தின் மூலம் இந்த விடயத்தைத் தெளிவுபடுத்துகிறேன். ஒரு முறை கற்பனா ரீதியான ஒரு தரிசனத்தின் போது ஒரு காட்சியைத் தரிசித்தேன்: எதிரெதிரே இரண்டு பெரிய மலைகள் காணப்பட்டன. அந்த இரண்டு மலைகளுக்கும் மத்தியில் திகிலூட்டக்கூடிய வகையில் ஒரு பாலம் நிர்மானிக்கப்பட்டிருந்தது. பாலத்துக்குக் கீழால் மிகவும் ஆழத்தில் ஒரு நதி ஓடிக்கொண்டிருந்தது. நான் அந்தப் பாலத்தின் மேல் இருந்தேன். உலகம் முழுவதையும் அடர்த்தியான ஓர் இருள் ஆக்கிரமித்திருந்தது. அப்போது எனது வலது பக்கத்தை அவதானித்தேன். அங்கு எல்லையில்லாத ஓர் இருளில் மூழ்கியிருந்த ஒரு மாபெரும் புதைகுழி காட்சியளித்தது. இடப்புறமாகப் பார்த்த போது பயங்கரமான அனர்த்தங்களும் கொந்தளிப்புகளும் தாண்டவமாடிக்கொண்டிருப்பதைப் போன்ற ஒரு நிலமை அங்கு காணப்பட்டது. கீழ் நோக்கிப் பார்த்த போது பயங்கரமான ஒரு பல்லத்தாக்காக அது காட்சியளித்தது. இந்தப் பயங்கரமான இருள்களை விலக்குவதற்காக என்னிடம் மங்களான ஒரு கை விளக்கு மாத்திரமே காணப்பட்டது. அதை எரித்து அதன் அரைகுறை ஒளியால் மீண்டுமொரு முறை சுற்றும் முற்றும் பார்த்த போது நிலைமை இருந்ததைவிட படு பயங்கரமானதாகத் தெரிந்தது. அந்தப் பாலத்தின் இரு மருங்கிலும் பயங்கரமான காட்டுமிராண்டி விலங்குகள் நடமாடிக்கொண்டிருந்தன. அந்தக் கை விளக்கைத் திருப்புகின்ற பக்கமெல்லாம் இது போன்ற அதிர்ச்சிகளே காத்திருந்தன. "இப்படி ஒரு விளக்கே இல்லாதிருந்தால், இந்தப் பயங்கரமான நிலைமைகளை அறியாமலேயே இருந்திருந்தால் எவ்வளவோ சிறப்பாக இருந்திருக்கும், இந்த விளக்கே ஒரு தொல்லையாக மாறிவிட்டதே" என்று கூறி அந்த விளக்கை நிலத்தில் ஓங்கி அடித்தேன். அந்த விளக்கு நிலத்தில் பட்டு உடைந்த அதே வேகத்தில் -அது ஏதோ ஓர் அழுத்தியில் பட்டதைப் போன்று- ஒரு பெரும் ஒளி அங்கிருந்த மொத்த இருளையும் அகற்றியது. எல்லாத் திசைகளையும் வியாபித்திருந்த அந்த ஒளி சற்று முன்னர் நான் கண்ட அத்தனை அம்சங்களினதும் உண்மைத் தன்மையை வெளிப்படுத்தியது. ஆம், உண்மையில் அந்தப் பாலம் அழகிய ஒரு சமவெளியில் போடப்பட்டிருந்த, மிகவும் அகண்ட, நேர்த்தியான ஒரு பாதையாக இருந்தது. வலப் புறமாக எனக்குத் தென்பட்ட மாபெரும் மண்ணறை மிகவும் அழகான ஒரு நந்தவனமாக இருந்தது. அங்கு நூரானியத்தான மனிதர்களின் வழிகாட்டலில் வணக்க வழிபாடுகளும் திக்ர் மஜ்லிஸ்களும் கற்றல் வகுப்புகளும் இன்ன பிற பணிகளும் இடம்பெற்றுக்கொண்டிருந்தன. இடப் புறமாகத் தென்பட்ட அனர்த்தங்கள், கொந்தளிப்புகளும் குன்றுகள், பள்ளத்தாக்குகளும் அழகிய, மனோரம்யமான மலை மேடுகளாகவும் அவற்றின் பின்னணியில் உள்ள அறுசுவை ஆகார விரிப்புகளாகவும் அழகிய சுற்றுலாத் தளங்களாகவும் உயர்ந்த விடுதிகளாகவும் காட்சியளித்தன. அவ்வாறே பயங்கரமான காட்டுமிராண்டி விலங்குகள் என்று எண்ணிய கால்நடைகள் அனைத்தும் ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற சாதுவான பிராணிகளாக இருப்பதைக் கண்டேன். அப்போது "அல்ஹம்துலில்லாஹி அலா நூரில் ஈமான்" என்று கூறி ﺍَﻟﻠَّﻪُ ﻭَﻟِﻰُّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺍَﻣَﻨُﻮﺍ ﻳُﺨْﺮِﺟُﻬُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻈُّﻠُﻤَﺎﺕِ ﺍِﻟَﻰ ﺍﻟﻨُّﻮﺭِ என்ற மறை வசனத்தைப் பாராயணம் செய்தவனாக அந்தக் கற்பனைத் தரிசனத்திலிருந்து விளித்தேன். ஆம், அந்த இரண்டு மலைகளும், வாழ்வின் ஆரம்பமும் முடிவுமாகும். அதாவது உலகமும் மண்ணறையுமாகும். அந்தப் பாலம் வாழ்க்கைப் பாதையாகும். வலது பக்கமும் இடது பக்கமும் முறையே கடந்த மற்றும் எதிர்காலங்களாகும். அந்தக் கை விளக்கு சுயநலமியாகவும் தன்னிச்சைப் போக்குடையதாகவும் இறை வஹியை செவிமடுக்க விரும்பாததாகவும் இருக்கின்ற மனிதனுடைய அனானியத் (ஈகோ) ஆகும். அங்கு காட்டுமிராண்டி விலங்குகளாகத் தென்பட்டவைகள் அனைத்தும் பிரபஞ்ச மற்றும் உலகியல் நிகழ்வுகளும் அற்புதமான படைப்புகளுமாகும். ஆம், தனது அனானியத்தை நம்பி இருள்மயமான பொடுபோக்கிலும் வழிகேட்டிலும் இருக்கின்ற மனிதனுடைய நிலை மேற்படி நிகழ்வில் எனது ஆரம்ப நிலையை ஒத்ததாகும். வெறுமனே ஒரு கை விளக்கின் தரத்தில் இருக்கும் அனானியத் தனது மங்களான ஒளியையும் வழிகேட்டில் கிடைத்த குறை அறிவையும் கொண்டு கடந்த காலத்தை ஒரு மாபெரும் புதை குழியாகவும் சூன்யமயமான இருண்டகமாகவுமே கண்டுகொள்ளும். அவ்வாறே எதிர்காலத்தை அனர்த்தங்களும் கொந்தளிப்புகளும் தாண்டவமாடும் குரூரமான ஓர் இடமாகக் காட்டித் தரும். மேலும் பேரன்பும் சர்வஞானமுமிக்க இரட்சகனின் சேவர்களாக இருக்கும் நிகழ்வுகளையும் வஸ்துகளையும் தீங்கு விளைவிக்கக் கூடிய ஒவ்வொரு எதிரியாகக் கண்டுகொள்ளும். இவ்வாறு அந்த அனானியத்தை நம்பிய மனிதன் ﻭَﺍﻟَّﺬِﻳﻦَ ﻛَﻔَﺮُٓﻭﺍ ﺍَﻭْﻟِﻴَٓﺎﺅُﻫُﻢُ ﺍﻟﻄَّﺎﻏُﻮﺕُ ﻳُﺨْﺮِﺟُﻮﻧَﻬُﻢْ ﻣِﻦَ ﺍﻟﻨُّﻮﺭِ ﺍِﻟَﻰ ﺍﻟﻈُّﻠُﻤَﺎﺕِ என்ற தீர்ப்புக்குப் பாத்திரமானவனாக மாறிவிடுவான். ஆனால் அல்லாஹ்வுடைய ஹிதாயத் அவனை அடைந்தால், ஈமான் அவனுடைய உள்ளத்தினுள் நுழைந்தால், நஃப்ஸின் பிர்அவ்னியத்தான அனானியத் உடைத்தெறியப்பட்டால், கிதாபுல்லாஹ்வை செவிமடுத்தால், அந்த மனிதனுடைய நிலை அந்த நிகழ்வில் என்னுடைய பிந்திய நிலையை ஒத்ததாக மாறிவிடும். அப்போது பிரபஞ்சம் முழுவதும் உடனடியாக ஈமானிய ஒளியால் நிறைந்து பகலின் நிறத்தைப் பெற்றுக்கொள்ளும்; ﺍَﻟﻠَّﻪُ ﻧُﻮﺭُ ﺍﻟﺴَّﻤَﻮَﺍﺕِ ﻭَﺍﻟْﺎَﺭْﺽِ என்ற வசனத்தைப் பாராயணம் செய்யும். அந்த மனிதனும் கடந்த காலம் என்பது பிரமாண்டமான ஒரு புதைகுழி அல்ல என்பதையும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு நபியின் அல்லது ஒவ்வொரு இறை நேசரின் தலைமையில் தமது உபூதியத் பணியை நிறைவு செய்து உன்னதமான அந்தஸ்துக்கு உயர்ந்த புனிதமான ஆத்மாக்களின் நித்திய எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்கான தரிப்பு நிலையம் என்பதையும் ஈமானிய ஒளியால் கண்டுகொள்வான். அவ்வாறே எதிர்காலத்தை வழியில் எதிர்ப்படும் பெரும் பெரும் குன்றுகள் போன்ற மண்ணறை நிகழ்வுகளுக்கும் மறுமை நிகழ்வுகளுக்கும் அப்பால் சுவனத்து நந்தவனங்களிலும் மாளிகைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெரும் பெரும் அருட்கொடை விரிப்புகளாக அந்த ஈமானிய ஒளியின் மூலம் கண்டுகொள்வான். அனர்த்தங்களையும் கொந்தளிப்புகளையும் வாழ்க்கை நிகழ்வுகளையும் அல்லாஹ்வுக்கு முழுமையாக வழிப்பட்ட சேவகர்களாகக் கண்டுகொள்வான். வசந்த காலப் புயல்களையும் கடும் மலைகளையும் தோற்றத்தளவில் கடுமையானதாக இருந்தாலும் அவற்றில் பொதிந்துள்ள ஞானங்களின் அடிப்படையில் ஓர் இறை ஈகையாகக் கண்டுகொள்வான். ஏன் மரணத்தைக்கூட நித்திய வாழ்வுக்கான முன்னுரையாகவும் மண்ணறையை நித்திய உலகத்துக்கான வாயிலாகவும் கண்டுகொள்வான். இது போன்று பிற விடயங்களையும் ஒப்பிட்டு மேற்படி உதாரணத்தை சத்தியத்துடன் உரசிப் பாருங்கள்.
ஈமான் ஓர் ஒளியாக இருப்பதைப் போன்றே, அது ஒரு பெரும் பலமுமாகும். ஆம் உண்மையான ஈமானைக் கையில் எடுப்பவன் பிரபஞ்சத்துக்கே சவால்விட முடியும். அவ்வாறே தனது ஈமானியப் பலத்துக்கேற்ப நிகழ்வுகளின் சுமைகள் அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்ளவும் முடியும். அந்தப் பலத்தை வாய்க்கப் பெற்றவன் ﺗَﻮَﻛَّﻠْﺖُ ﻋَﻠَﻰ ﺍﻟﻠﻪِ என்று கூறியவனாக வாழ்க்கை என்ற கப்பலில் உலகம் என்ற சமுத்திரத்தின் மலை போன்று கொந்தளிப்பான அலைகளுக்கு மத்தியில் பூரண பாதுகாப்போடு பயணிப்பான். சர்வ வல்லோனிடம் தனது சுமைகள் அனைத்தையும் ஒப்படைத்தவனாக மன நிம்மதியோடு உலகத்தைக் கடந்து சென்று ஆலமுல் பர்ஸஹில் ஓய்வெடுப்பான். பின்னர் நித்திய நிம்மதிகளால் நிறைந்த சுவனத்து நந்தவனங்களில் சிறகடித்துப் பறப்பான். மாறாகத் தவக்குல் இல்லாவிட்டால் உலகின் சுமைகள் சிறகடித்துப் பறப்பது எப்படிப் போனாலும் அவனை அஸ்ஃபல ஸாஃபிலீனை நோக்கித் தாழ்த்திவிடும். ஆம், ஈமான் தவ்ஹீதையும், தவ்ஹீத் அல்லாஹ்விடம் சரணாகதி அடைவதையும், சரணாகதி நிலைமை தவக்குலையும், தவக்குல் ஈருலக வெற்றியையும் வேண்டி நிற்கின்றன. ஆனால் பிழையாகப் புரிந்துகொள்ளாதீர்கள். தவக்குல் என்பது காரண காரியங்களை முற்றாகப் புறக்கணித்து ஒதுக்கித் தள்ளுவதல்ல. மாறாக, காரண காரியங்கள் இறை வல்லமைக்கான திரைகள் என்பதை அறிந்துகொள்வதும் அந்த கண்ணியத்தோடு அவற்றை நாடுவதும் அனுசரித்துச் செல்வதும் ஒரு வகை செயல் ரீதியான துஆ என்பதை அறிந்துகொள்வதும் அந்த துஆவுக்கான விளைவுகளை அல்லாஹ்விடம் எதிர்பார்ப்பு வைப்பதும் விளைவுகளைக் காணும் போது அவை அல்லாஹ்விடமிருந்துமுள்ளவை என்பதை அறிந்து அவனுக்கு நன்றி செலுத்துவதுமே தவக்குலில் பொதிந்துள்ள தாத்பரியமாகும். தவக்குல் வைப்பவனுக்கும் வைக்காதிருப்பவனுக்கும் இடையிலுள்ள வித்தியாசம் பின்வரும் உதாரணத்தை ஒத்ததாகும்: இரண்டு மனிதர்கள் ஒரு பயணத்துக்காக தோலிலும் தலையிலும் கனத்த சுமைகளோடு ஒரு கப்பலில் ஏறினார்கள். அதில் ஒருவன் தனது சுமைகள் அனைத்தையும் கப்பலில் இறக்கி வைத்துவிட்டு தனக்குரிய இடத்தில் அமர்ந்தவனாகப் பாதை நெடுகிலும் உள்ள அழகிய காட்சிகளை ரசித்தவாறு பயணித்தான். இரண்டாமவனோ மடமையிலும் பிடிவாதத்திலும் இருந்ததால் அவன் தனது சுமைகளை நிலத்தில் வைக்கவில்லை. அப்போது அந்த மனிதனிடம் தனது சுமைகளைக் கப்பலில் வைத்துவிட்டு ஆறுதலாக ஓய்வெடுத்துக்கொள்ளுமாறு கூறப்பட்டது. ஆனால் அந்த மனிதனோ "என்னால் அவ்வாறு வைக்க முடியாது. அவ்வாறு வைத்தால் அவை பாதுகப்பற்று அழிந்து செல்லக் கூடும். எனது பொருட்களை நானே சுமந்துகொள்ளக் கூடிய அளவு பலசாலியாக இருக்கின்றேன். எனவே நானே அதைப் பாதுகாத்துக்கொள்கிறேன்" என்று கூறினான். மீண்டும் அந்த மனிதனிடம் கூறப்பட்டது: "உன்னை மாத்திரமன்றி இங்குள்ள எல்லாப் பயணிகளையும் அவர்களுடைய பொதிகளையும் சுமந்து செல்லும் அரசனுக்குச் சொந்தமான இந்தக் கப்பல் உன்னைவிடப் பலமானதும் பாதுகாப்பானதுமாகும். உன்னால் நீண்ட நேரத்துக்கு இவ்வாறு தாக்குப் பிடிக்க முடியாது. ஒரு கட்டத்தில் உனது பொதிகளுடன் சேர்ந்து நீயும் கடலில் வீழ்ந்து விடலாம். இப்போதே இந்தச் சுமை காரணமாக உனது இடுப்பு வளைய ஆரம்பித்துள்ளது. இது உனது பலத்தை இன்னுமின்னும் குன்றச் செய்யும். மாத்திரமன்றி உனது பிடிவாதக் குணம் கப்பல் தளபதியின் வெறுப்பையே சம்பாதித்துத் தரும். ஒன்றோ பித்துப் பிடித்தவன் என்று கூறி உன்னைத் திருப்பி அனுப்பி வைப்பார். அல்லது எமது கப்பல் மீது வீண் பலி சுமத்தி, எம்மீது அவதூறு கூறும் குழப்பக்காரன் என்று கூறி உன்னைச் சிறையில் அடைக்குமாறு பணிப்பார். மேலும் எல்லோர் மத்தியிலும் நகைப்புக்கிடமானவாக மாறிவிடுவாய். ஏனெனில் அவாதானமாகப் பார்ப்பவர்களுக்கு உனது பெருமையில் உள்ள பலவீனமும் உனது அகம்பாவத்தில் உள்ள இயலாமையும் உனது போலியான பாவனைகளில் உள்ள முகஸ்துதி மற்றும் இழிந்த குணங்களும் அப்பட்டமாகத் தென்படுகின்றன. இதோ எல்லோரும் உன்னைப் பார்த்து எள்ளிநகையாடுகிறார்கள்." இவ்வாறு கூறப்பட்ட போது அவன் புத்தி தெளிந்தவனாகத் தனது சுமையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு ஆறுதலாகத் தனது இடத்தில் அமர்ந்துகொண்டான். தனது நண்பனைப் பார்த்து "அல்லாஹ் உன்னைப் பொருந்திக்கொள்ள வேண்டும். இந்த சுமையிலிருந்தும் சிறையிலிருந்தும் நகைப்புக்கிடமான நிலையிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுக்கொண்டேன்" என்று கூறினான். தவக்குல் இல்லாத மனிதனே! நீயும் இந்த மனிதனைப் போன்று புத்தியைத் தீட்டிக்கொள். அப்போது வஸ்துகளுக்கு முன்னால் கையேந்தி நிற்பதைவிட்டும் பிரபஞ்ச நிகழ்வுகளுக்கு முன்னால் அஞ்சி நடுங்குவதைவிட்டும் தற் புகழ்ச்சிக்காக பாசாங்கு செய்வதைவிட்டும் நகைப்புக்கிடமான நிலைமைகளுக்குத் தள்ளப்படுவதைவிட்டும் உலகின் சுமைகள், மறுமை வேதனைகள் போன்றவற்றைவிட்டும் பாதுகாப்புப் பெற்றுக்கொள்வாய்.
ஈமான், மனிதனை மனிதனாக மாற்றும். இல்லை மாமன்னராகவே மாற்றிவிடும். எனவே மனிதனுடைய அடிப்படையான பணி ஈமானும் துஆவுமாகும். குஃப்ரைப் பொருத்தவரை, அது மனிதனை மிகவும் நலிந்த, குரூரமான ஒரு மிருகமாக மாற்றிவிடும். இந்த உண்மையைத் தெளிவுபடுத்துகின்ற ஆயிரக்கணக்கான அத்தாட்சிகள் உள்ளன. உண்மையில் பிறப்பளவில் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் இடையிலுள்ள வேறுபாடுகளும் கூட இந்த உண்மையைத் தெளிவுபடுத்தப் போதுமான அத்தாட்சிகளாகும். ஆம் உலகத்துக்குப் பிரவேசிக்கும் போதே காண முடியுமாக உள்ள இந்த வேறுபாடுகள் மானுடம் ஈமான் மூலமே மானுடத்தை எட்டுகின்றது என்பதைத் தெளிவாகக் காட்டித் தருகின்றன. ஏனெனில் விலங்குகள் உலகுக்கு வரும் போது ஏதோ வேறோர் உலகத்தில் விருத்தி செய்யப்பட்டதைப் போன்று தனது இனத்துக்குரிய இயல்புகள், குணாம்சங்கள் அனைத்தையும் முழுமையாகப் பொதியப்பெற்ற நிலையிலேயே அனுப்பிவைக்கப்படுகின்றன. அவை வெறும் இரண்டே மணித்தியாளங்களுக்குள் அல்லது இரண்டு நாட்களுக்குள் அல்லது இரண்டு மாதங்களுக்குள் தமது வாழ்க்கைக்குத் தேவையான எல்லா நிபந்தனைகள், சட்ட திட்டங்கள், விதிமுறைகளையும் சூழலோடும் பிரபஞ்சத்தோடும் தனக்குள்ள தொடர்புகளையும் கற்றுத் தேர்ந்துவிடுகின்றன. மனிதன் இருபது வருடங்களில் பெற்றுக்கொள்கின்ற வாழ்க்கைத் தேர்ச்சியையும் பலத்தையும் வீட்டுக் குருவி, தேனீ போன்ற ஜீவன்கள் வெறும் இருபதே நாட்களில் பெற்றுக்கொள்கின்றன. அதாவது அவற்றுக்கு உதிப்பின் மூலம் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இதிலிருந்து விலங்குகளின் அசலான பணி கற்றல் மூலம் தேர்ச்சி அடைவதோ, ஆய்ந்தறிந்து மேன்மை அடைவதோ, இயலாமையையும் பலவீனத்தையும் முன்வைத்து உதவி தேடிப் பிரார்த்தனை செய்வதோ அல்ல என்பது தெளிவாகின்றது. மாறாக அவற்றின் பணி தமது திறனுக்கேற்ப கடமைகளைச் செய்வதும் செயலளவிலான உபூதியத்தை நிறைவேற்றுவதுமாகும். ஆனால் மனிதனோ, உலகுக்கு வரும் போது முழு மொத்தமாக அனைத்தையும் கற்றறிய வேண்டிய தேவை உடையவனாகவே வருகின்றான். ஆரம்பத்தில் வாழ்க்கைச் சட்ட திட்டங்கள் விடயத்தில் சுத்த அறியாமையோடு வருகின்ற அவன் இருபது வயதை எட்டிய பின்னரும் அவற்றை முழுமையாகக் கற்றறிய முடியாதவனாகவும் சில போது இறுதி மூச்சு வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டிய தேவை உடையவனாகவும் காணப்படுகின்றான். அவ்வாறே இயலாமையையினதும் பலவீனத்தினதும் மொத்த வடிவமாக உலகத்துக்கு அனுப்பி வைக்கப்படுகின்ற அவன் ஓரிரண்டு வருடங்களுக்குப் பின்னரே சுயமாக எழுந்து நிற்க ஆரம்பிக்கின்றான். தனக்கு நன்மை விளைவிக்கக் கூடியவற்றையும் தீங்கு விளைவிக்கக் கூடியவற்றையும் பிரித்தறிவதற்கு குறைந்தது பதினைந்து வருடங்களேனும் எடுக்கின்றன. அவ்வாறுதான் பிரித்தறிந்தாலும் நன்மைகளை அடைந்துகொள்வதற்கும் தீங்குகளைத் தடுப்பதற்கும் மனித குலத்தின் உதவி ஒத்தாசையின் பால் தேவையுடையவனாகவே இருக்கின்றான். எனவே மனிதனுடைய இயல்பான பணி கற்றறிதல் மூலம் பூரணத்துவமடைவதும் துஆ மூலம் உபூதியத்தை நிறைவேற்றுவதுமாகும். அதாவது "யாருடைய கருணையால் இந்த அளவு ஞானபூர்வமாக நிர்வகிக்கப்படுகின்றேன்? யாருடைய ஈகையால் இந்த அளவு பேராதரவோடு பயிற்றுவிக்கப்படுகின்றேன்? யாருடைய தயாளத் தன்மையால் இந்த அளவு நுணுக்கமாகப் பராமரிக்கப்படுகின்றேன்? என்பதையெல்லாம் அறிந்துகொள்வதும் தனது தேவைகள், ஆசைகளுள் ஆயிரத்தில் ஒன்றையேனும் அடைந்துகொள்ள முடியாத அளவு இயலாமையிலும் பலவீனத்திலும் இருக்கின்ற தனது நிலையை உணர்ந்து, அந்த இயலாமையையும் பலவீனத்தையும் பரிந்துரையாக வைத்து "காதியுல் ஹாஜாத்" ஆகிய வல்லோனிடம் இறைஞ்சி மன்றாடுவதுமாகும். அதாவது இயலாமை பலவீனம் என்ற இரண்டு இறக்கைகள் மூலமும் உபூதியத்துடைய உன்னதமான பதவிகளை நோக்கிப் பறந்து செல்வதாகும். ஆம், அறிவின் மூலமும் துஆவின் மூலமும் ஈடேற்றத்தை அடைவதற்காகவே மனிதன் இந்த உலகுக்கு வந்துள்ளான் என்பதை இதிலிருந்து தெளிவாக விளங்கிக்கொள்ளலாம். அடிப்படைகளை வைத்துப் பார்த்தாலும் இயல்புகள், தன்மைகளை வைத்துப் பார்த்தாலும் அவனது அத்தனையும் அறிவோடு தொடர்பானவையாகும். அவ்வாறே சத்தியமான அறிவு ஞானங்கள் அனைத்துக்கும் அடிப்படையாகவும் உயிராகவும் ஊட்டமாகவும் ஒளியாகவும் இருப்பது மாரிஃபதுல்லாஹ் ஆகும். மாரிஃபதுல்லாஹ் மூலம் அதாவது அல்லாஹ்வை அறிந்து கொள்வதன் முழு முதல் அடிப்படை அல்லாஹ்வை ஈமான்கொள்வதாகும். அவ்வாறே மனிதன் எல்லையில்லாத இயலாமையுடன் கூடவே முடிவற்ற அனர்த்தங்களால், எதிரிகளின் தாக்குதல்களால் சூழப்பட்டவனாகவும், முடிவில்லாத வறுமையுடன் கூடவே எண்ணற்ற ஆசைகள், தேவைகளில் பற்றுக் கொண்டவனாகவும் இருக்கின்ற காரணத்தினால் அவனது இயல்பில் பொதிந்துள்ள அடிப்படையான பணி ஈமானுக்கு அடுத்ததாக துஆவாகும். துஆ என்பது உபூதியத்துடைய அடிப்படையாகும். ஒரு குழந்தை தனது கைக்கெட்டாத ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக ஒன்றோ அழுவதை அல்லது கேற்பதைப் பார்க்கின்றோம். அதாவது செயல் ரீதியாக அல்லது சொல் ரீதியாகத் தனது இயலாமையின் மொழியால் ஒரு பிரார்த்தனையில் ஈடுபட்டுத் தனது நோக்கத்தை சாதித்துக்கொள்கின்றது. ஆம், ஜீவ இனங்களுக்கு மத்தியில் மனிதனுடைய நிலையும் நலிவான ஒரு குழந்தையின் நிலையை ஒத்ததாகும். எனவே அவன் ரஹ்மானுர் ரஹீம் ஆகிய அல்லாஹ்வின் சந்நிதானத்தில் தனது இயலாமையையும் பலவீனத்தையும் முன் வைத்து அழுது மன்றாடிப் பிரார்த்தனை செய்ய வேண்டியவனாக இருக்கின்றான். இவ்வாறு நோக்கங்கள் அவனுக்கு வசப்படுத்திக் கொடுக்கப்படும். கடிவாளம் கையில் கிடைத்தமைக்கு நன்றியையும் வெளிப்படுத்துவான். மாறாக ஒரு நுளம்புக்கு முன்னால் அழுது புலம்பும், புத்தியில்லாத பிடிவாதக்காரப் பிள்ளையைப் போன்று -தன்னால் கட்டுப்படுத்த முடியாத, தனது பலத்தைவிட ஆயிரம் மடங்கு விஞ்சிய காரியங்களில்- நான் எனது பலத்தைக் கொண்டே இந்த அற்புதமான காரியங்களின் மீது அதிகாரம் செலுத்துகிறேன், எனது அறிவையும் ஆற்றலையும் சிந்தனையையும் கொண்டே இவற்றை எனக்குக் கட்டுப்பட்டு வழிப்படச் செய்கிறேன் என்றெல்லாம் தம்பட்டமடித்து இறை அருளை நிராகரிப்பது மனிதனுடைய இயல்பான தன்மைக்கு முற்றிலும் முரணானதாக இருப்பதைப் போன்றே, அவனை பயங்கரமான தண்டனைக்குரியவனாகவும் மாற்றிவிடும்
ஈமான், துஆவை ஒரு திட்டமான வஸீலாவாக வேண்டி நிற்பதைப் போன்றே மனிதனுடைய இயல்பான தன்மையும் கூட அதைத் தீவிரமாக வேண்டி நிற்கின்றது. அவ்வாறே சத்திய இரட்சகனும்கூட ﻗُﻞْ ﻣَﺎ ﻳَﻌْﺒَﺆُﺍ ﺑِﻜُﻢْ ﺭَﺑِّﻰ ﻟَﻮْﻟﺎَ ﺩُﻋَٓﺎﺅُﻛُﻢْ “துஆ இன்றேல் உங்கள் பெறுமதிதான் என்ன?" என்ற அர்த்தத்தில் துஆவின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறான். மேலும் ﺍُﺩْﻋُﻮﻧِٓﻰ ﺍَﺳْﺘَﺠِﺐْ ﻟَﻜُﻢْ “என்னிடம் கேளுங்கள், நான் பதிலளிக்கின்றேன்" என்று கட்டளையும் பிறப்பிக்கின்றான். கேள்வி: அதிகமதிகம் பிரார்த்தனை செய்தாலும் ஏற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பங்களும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இந்த வசனம் துஆக்களுக்குப் பதிலளிக்கப்படும் என்பதை எல்லோருக்கும் பொதுவாக அல்லவா குறிப்பிடுகின்றது? பதில்: பதிலளிப்பது ஒன்று, ஏற்றுக்கொள்வது வேறொன்றாகும். எல்லா துஆக்களுக்கும் பதிலளிக்கப்படுகின்றது. ஆனால் ஏற்றுக்கொள்வதென்பது, குறிப்பாக கேற்கப்பட்டதையே ஏற்றுக்கொள்வதென்பது இறை ஞானத்தில் தங்கியுள்ள விடயமாகும். உதாரணமாக நோயுற்ற ஒரு குழந்தை வைத்தியரை அழைத்து தனக்கு குறித்த ஒரு மருந்தைத் தருமாறு கேட்டது. வைத்தியர் ஒன்றோ கேட்டதையே கொடுப்பார். அல்லது அதைவிடச் சிறந்த ஒன்றைக் குழந்தைக்கு வழங்குவார். சில வேளை குழந்தைக்குத் தீங்கு ஏற்பட்டுவிடும் என்பதற்காக எந்த மருந்தை வழங்காமலும் இருப்பார். ஆம், சத்திய இரட்சகன் சர்வ ஞானமிக்கவனாகவும் அனைத்தையும் அறிந்தவனாகவும் அனைத்தையும் மிக நுட்பமாகக் கண்காணிப்பவனாகவும் இருப்பதால் நிச்சயமாக அடியானுடைய துஆவுக்குப் பதிலளிக்கின்றான். இதன் மூலம் அடியானுடைய இயலாமையையும் அனாதரவான நிலையையும் நீக்கி அல்லாஹ் என்னுடன் இருக்கின்றான் என்ற உணர்வின் மூலம் நிம்மதியையும் ஆறுதலையும் வழங்குகிறான். ஆனால் அந்தப் பதில் மனிதனுடைய அவாத்தன்மையும் பேராசையும் நிறைந்த முடிவின் பிரகாரம் வழங்கப்படுவதில்லை. மாறாக ரப்பானிய ஞானத்தின் அடிப்படையில் ஒன்றோ வேண்டப்படுவதை அல்லது வேறொன்றை வழங்குவான். அல்லது எதையும் வழங்காதிருப்பான். மேலும் துஆ என்பது வணக்கமாகும். வணக்கத்தின் கனிகள் பெரும்பாலும் மறுமை சார்ந்தவையாகும். உலகியல் தேவைகளும் நோக்கங்களும் இந்த வகை வணக்கங்களுக்கான நேரமாகும். மாறாக அந்த நோக்கங்கள் துஆவின் இலக்குகளல்ல. உதாரணமாக மழை வேண்டித் தொழுவதும் துஆக் கேற்பதும் ஒரு வணக்கமாகும். வறட்சியான காலப்பகுதி அந்த வணக்கத்துக்கான நேரமாகும். மாறாக அந்த வணக்கமோ அந்த துஆவோ மழையைப் பொழிவிப்பதற்கானதல்ல. எனவே இந்த நோக்கத்துக்காக மாத்திரம் செய்யப்படுமாக இருந்தால் அந்த துஆவும் வணக்கமும் துய்மையற்றது என்பதால் அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான தகுதியையும் இழந்துவிடுகின்றது. அதாவது சூரிய அஸ்தமனம் மஃரிப் தொழுகைக்கான நேரமாகும். அவ்வாறே சூரிய அல்லது சந்திரக் கிரகணம் ஏற்படுவது கிரகணத் தொழுகை எனப்படும் இரண்டு குறிப்பிட்ட வணக்கங்களுக்கான நேரமாகும். அதாவது மேற்படி நேரங்கள் வெளிச்சத்தில் புலனாகும் இறை அத்தாட்சிகள் திரையிட்டு மூடப்படுகின்ற நேரம் என்ற வகையில், அவை இறை மாட்சிமையைப் பறைசாற்றும் மா பெரும் நிகழ்வுகளாக இருப்பதால் அந்த நேரங்களில் சத்திய இரட்சகன் தனது அடியார்களை வணக்கத்துக்காக அழைப்புவிடுக்கின்றான். மாறாக அந்தத் தொழுகைகள் -தெளிவான வானியல் கணக்கீடுகளின் அடிப்படையில் நேரங்கள் நிர்ணயமான- கிரகணங்களை நீக்குவதற்கானவையல்ல. அவ்வாறே வறட்சியும் கூட மழை வேண்டித் தொழுவதற்கான நேரமாகும். மேலும் பீடைகளின் பரவல், முஸீபத்துகள் என்பனவும் கூட சில துஆக்களுக்கான நேரமாகும். மனிதன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் தனது இயலாமையை உணர்ந்து துஆவின் மூலம் மாட்சிமைமிக்க வல்லோனின் சந்நிதானத்தில் மன்றாடுவான். ஒரு வேளை அதிகமதிகம் துஆக் கேட்கப்பட்ட பிறகும் முஸீபத்துகள் நீங்காவிட்டால் "துஆ ஏற்றுக்கொள்ளப்படவில்லை" என்று கூற முடியாது. மாறாக "துஆவுடைய நேரத்தில் கழா அல்லது சம்பவம் நிகழவில்லை" என்று கூறுவதே பொருத்தமானதாகும். அல்லாஹ் தனது ஈகையின் மூலமும் தயாளத் தன்மையின் மூலமும் முஸீபத்தை நீக்கிவிட்டால் அப்போது கழா நிகழ்ந்து குறித்த துஆவுக்கான நேரம் நிறைவடைந்துவிடுகின்றது. ஆம், துஆ என்பது வணக்கமாகும். வணக்கம் என்பது தூய்மையாக அல்லாஹ்வுக்காக என்று இருக்க வேண்டும். தனது இயலாமையை உணர்ந்து துஆ மூலம் அவனிடம் மன்றாட வேண்டும். மாறாக ருபூபியத்தில் அதாவது இறை பரிபாலிப்பில் தலையீடு செய்யக் கூடாது. எமது முன்னேற்பாடுகளை முற்றாக அவனிடம் ஒப்படைத்துவிட்டு இறை ஞானத்தைப் பொருந்திக்கொள்ள வேண்டும். அவனுடைய ரஹ்மத்தை நிந்தனை செய்யும் விதமாக நடந்துகொள்ளக் கூடாது. ஆம், நிலைமைகள் அனைத்தும் யதார்த்தத்தில் -தெளிவான வசனங்களின் பிரகாரம் உறுதிப்படுத்தப்பட்டமைக்கமைய- வஸ்துகள் தத்தமது பிரத்தியேகமான துதிகளையும் பிரத்தியேகமான வணக்கங்கள், ஸஜ்தாக்களையும் நிறைவேற்றுகின்ற நிகழ்வுகளாக இருப்பதைப் போன்றே பிரபஞ்சத்திலிருந்து இறை சந்நிதானத்தை நோக்கி உயர்கின்ற துஆக்களாகவும் திகழ்கின்றன. அவை ஒன்றோ "திறன் மொழி"களால் கேட்கப்படுகின்றன. அதாவது தாவர இனங்களின் துஆக்களைப் போன்றதாகும். அதாவது அவை ஒவ்வொன்றும் தத்தமது திறன் மொழியால் முத்லக்கான ஒளியாகிய வல்லோனிடமிருந்து ஒரு தோற்றத்தையும் ஒரு வடிவத்தையும் அவனுடைய நாமங்களுக்குப் பாத்திரமான மலர்ச்சியையும் வேண்டி நிற்கின்றன. அல்லது "இயல்பான தேவைகள்" என்ற மொழியால் கேட்கப்படுகின்றன. அதாவது தத்தமது ஆற்றலுக்கும் அதிகாரத்துக்கும் அப்பாற்பட்ட அடிப்படைத் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஜீவ இனங்களின் துஆக்களாகும். ஒவ்வொரு ஜீவனும் தனது ஜீவனோபாயத்துக்கு அவசியமான ஒரு வகை வாழ்வாதாரத்தையும் தேவைப்பாடுகளையும் “இயல்பான தேவைகள்” என்ற மொழியின் மூலம் சர்வ தயாளனாகிய அல்லாஹ்விடம் வேண்டுகின்றன. அல்லது "நிராதரவு மொழி"யால் கேற்கப்படுகின்றன. அதாவது கதியற்றுப் போய் கையறு நிலையில் இருக்கும் ஆத்மா பலமான ஒரு மன்றாட்டத்தின் மூலம் மறைவான ஒரு பாதுகாவலரை வேண்டி அடைக்கலம் தேடும். சில வேளை ரப்புர் ரஹீமிடம் மன்றாடும். இறை சந்நிதானத்தில், மேற்படி மூன்று வகையான துஆக்களும் ஒரு சில தடைகள் குறுக்கிடாத பட்சத்தில் சதாவும் ஏற்றுக்கொள்ளப்படுபவையாகும். நான்காவது வகையைப் பொருத்தவரை எம் மத்தியில் பிரபலமாக இருக்கும் எமது வழமையான துஆக்களாகும். இதையும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று செயல் அல்லது நடத்தை ரீதியானதாகும். அடுத்தது உள அல்லது மொழி ரீதியானதாகும். உதாரணமாக, காரண காரியங்களை நிறைவேற்றுவது செயல் ரீதியான ஒரு துஆவாகும். இந்த வகையில் காரண காரியங்களை ஒன்றுதிரட்டி, ஒருங்கிணைப்பது விளைவுகளைப் படைப்பதன்றி விளைவை ஈர்த்தெடுப்பதற்குப் பொருத்தமான ஒரு நிலையைத் தோற்றுவிப்பதாகும்; விளைவை செயல் மொழியினால் அல்லாஹ்விடம் கேட்பதாகும். இந்த வகையில் வயலைப் பன்படுத்திப் பசலையிடுவது ரஹ்மத் கருவூலங்களின் கதவைத் தட்டுவதைப் போன்ற ஒரு செயலாகும். இவ்வாறான செயல் ரீதியான துஆக்கள் நேரடியாகவே சர்வ தயாளனாகிய ரப்புல் ஆலமீனுடைய நாமங்களையும் பதவிகளையும் நோக்கித் திரும்பியவை என்பதால் மிகப் பெரும்பான்மையானவை ஏற்றுக்கொள்ளப்படுவதற்குப் பாத்திரமானவையாகும். இரண்டாவது வகை, உள்ளத்தாலும் நாவாலும் பிரார்த்திப்பதன் மூலம் கைக்கெட்டாத சில தேவைகளை அல்லாஹ்விடம் கேற்பதாகும். இந்த துஆவில் பொதிந்துள்ள தாத்பரியமும் அதன் கனியும் மிகவும் இனிமையானதாகும். அதாவது துஆக் கேட்கின்ற மனிதன் தனது ஆழ் மனதின் எண்ண ஓட்டங்களைச் செவிமடுக்கின்ற ஒருவன் இருக்கின்றான் என்பதையும் அவன் எல்லாவற்றின் மீதும் ஆற்றலுடையவனாக இருக்கின்றான் என்பதையும் தனது அத்தனை தேவைகளையும் நிறைவேற்றி, தனது இயலாமைக்கு ஆதரவாகவும் வறுமைக்கு உதவியாகவும் இருக்க முடியுமானவன் அவன் ஒருவனே என்பதையும் உளமாற உணர்ந்துகொள்கிறான். இயலாமையிலும் வறுமையிலும் திக்கித் தவிக்கும் மனிதனே! குன்றாத ஒரு பலத்தின் ஊற்றாகவும் ரஹ்மத் கருவூலங்களின் திறவுகோலாகவும் திகழும் துஆ போன்ற ஒரு சாதனம் கைநழுவிச் செல்ல இடமளித்துவிடாதே. அதன் கைப்பிடித்து ஆலாயு இல்லிய்யூன் எனப்படும் மனிதத்தின் உன்னதமான அந்தஸ்துக்கு உயர்ந்துவிடு. ஒரு மாமன்னரைப் போன்று முழுப் பிரபஞ்சத்தின் துஆக்களையும் உனது துஆவில் உள்வாங்கிக்கொள். ஓர் அகிலார்ந்த அடியானாகவும் பிரதிநிதியாகவும் ﺍِﻳَّﺎﻙَ ﻧَﺴْﺘَﻌِﻴﻦُ என்று மொழிந்து பிரபஞ்சத்தின் அழகிய ஒரு சாராம்சமாக மாறிவிடு.
மனிதனுடைய உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக இருக்கும் ஐந்து விடயங்கள் தொடர்பானதாகும். அஹ்ஸனி தக்வீமில் அதாவது மிக அழகிய, மிகச் சிறந்த பதத்தில் படைக்கப்பட்ட மனிதனுக்கு சில அகிலார்ந்த ஆற்றல்கள், திறன்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் திறன்களின் மூலம் அஸ்ஃபல ஸாஃபிலீனில் இருந்து ஆஃலாயு இல்லிய்யூன் வரை, அணுவிலிருந்து சூரியன் வரை, மண்ணிலிருந்து விண் வரை, விண்ணிலிருந்து அர்ஷ் வரை உயர்வுக்கும் தாழ்வுக்குமிடைப்பட்ட பல்வேறு பதவிகள், அந்தஸ்துகள், தராதரங்களை அடைந்துகொள்ள முடியுமான ஒரு சோதனைக் களத்துக்குள் மனிதன் உள்ளாக்கப்பட்டிருக்கின்றான். அதாவது எல்லையில்லாத இழிவை நோக்கியும் எல்லையில்லாத ஈடேற்றத்தை நோக்கியும் செல்கின்ற இரண்டு பாதைகளுக்கு முன்னால் ஓர் அற்புதமான படைப்பாகவும் பிரபஞ்ச விருட்சத்தின் கனியாகவும் மனிதன் இந்த உலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளான். இங்கு மனிதனுக்கு முன்னால் இருக்கும் இப்படிப்பட்ட படு பயங்கரமான இழிவிலும் மகத்தான ஈடேற்றத்திலும் பொதிந்துள்ள தாத்பரியத்தை ஐந்து குறிப்புகளில் தெளிவுபடுத்துகிறோம்.
மனிதன் பிரபஞ்சத்திலுள்ள பெரும்பாலான வஸ்துகளின்பால் தேவைகளும் தொடர்புகளும் உடையவனாகக் காணப்படுகின்றான். அவனது தேவைகள் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் விரவியதாகவும் அவனது ஆசைகள் நித்தியம் வரை நீண்டதாகவும் காணப்படுகின்றன. ஒரு பூவை நேசிப்பதைப் போன்று பிரமாண்டமான வசந்த காலத்தையும் நேசிக்கின்றான். ஒரு நந்தவனத்துக்கு ஆசை வைப்பதைப் போன்று நித்திய சுவனத்துக்கும் ஆசை வைக்கின்றான். ஒரு நண்பனைக் காண ஆசிப்பதைப் போன்று பேரழகும் மாட்சிமையுமிக்க தனது ரப்பைக் காணவும் ஆசிக்கின்றான். குறித்த ஒரு வீட்டில் வசிக்கும் தனது அன்புக்குரிய ஒருவரைத் தரிசிப்பதற்காக அந்த வீட்டின் கதவைத் திறக்க வேண்டிய தேவையும் ஆசையும் உடையவனாக இருப்பதைப் போன்றே உலகிலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தனது அன்புக்குரியவர்களுள் தொண்ணூற்றொன்பது வீதமானவர்களை சந்தித்து நித்திய பிரிவிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்வதற்காக உலகத்தின் வாசலை மூடிவிட்டு மறுமையின் வாசலைத் திறக்க வேண்டிய தேவையும் ஆசையும் உடையவனாக இருக்கின்றான். எனவே இப்படிப்பட்ட மனிதன் இந்த உலகத்தை அகற்றி அந்த இடத்தில் மறுமை உலகைக் கொண்டுவரும் ஆற்றல்மிக்க சர்வ வல்லோனின் சந்நிதானத்தில் புகழிடம் தேடி மன்றாட வேண்டிய தேவையுடையவனாக இருக்கின்றான். ஆம், நிச்சயமாக இப்படிப்பட்ட மனிதனின் வணக்கத்துக்குத் தகுதியானவன் எல்லா வஸ்துகளின் கடிவாளங்களையும் கைவசம் வைத்திருப்பவனாகவும் எல்லாவற்றுக்கும் மிக நெருக்கமானவனாகவும் எல்லாவற்றையும் பார்ப்பவனாகவும் கேற்பவனாகவும் எல்லாவற்றையும் சூழ்ந்தவனாகவும் இடத்தைவிட்டும் பரிசுத்தமானவனாகவும் இயலாமையைவிட்டும் தூய்மையானவனாகவும் குறைபாடுகளைவிட்டும் புனிதமானவனாகவும் இருக்கின்ற அளவற்ற அருளும் நிகரற்ற அன்பும் சர்வ மாட்சிமையும் சர்வ ஞானமும் மிக்க வல்லோனாக மாத்திரமே இருக்க முடியும். ஏனெனில் மனிதனுடைய எல்லையில்லாத தேவைகள், ஆசைகளை எல்லையற்ற வல்லமையும் அகிலார்ந்த அறிவு ஞானமும் கொண்ட ஒருவனால் மாத்திரமே நிறைவேற்றி வைக்க முடியும். எனவே வணக்கத்துக்குத் தகுதியானவன் அவன் ஒருவன் மாத்திரமே. மனிதனே! நீ அந்த இரட்சகனுக்கு மாத்திரம் அடியானாக இருந்தால் அத்தனை வஸ்துகளையும் மிகைத்த, உயர்வான ஓர் அந்தஸ்த்தை அடைந்துகொள்வாய். மாறாக உன் மீது விதியாக்கப்பட்ட உபூதியத்தை உதறித் தள்ளுவாயாக இருந்தால் பலவீனமான படைப்புகளிடம் கையேந்தி ஆசி வைக்கும் இழிவான ஓர் அடிமையாக ஆகிவிடுவாய். உன்னுடைய அனானியத்தையும் (ஈகோ) சுய அதிகாரத்தையும் நம்பி, தவக்குலையும் துஆவையும் ஒதுக்கித் தள்ளுவாயாக இருந்தால் அப்போது நலவுகளிலும் ஆக்கப் பணிகளிலும் தேனீ, எறும்பு போன்றவற்றைவிடத் தாழ்ந்த, சிலந்தி, நுளம்பு போன்றவற்றைவிடப் பலவீனமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுவாய். அதே சமயம் தீங்குகளிலும் அழிவுப் பணிகளிலும் மலைகள் போன்று கனதியானவனாகவும் பீடை நோய்களைப் போன்று தீங்குபயக்கக் கூடியவனாகவும் ஆகிவிடுவாய். ஆம், மனிதனே உன்னிடம் இரண்டு பக்கங்கள் அல்லது கோணங்கள் காணப்படுகின்றன. ஒன்று: ஆக்கம், நிர்மானம், இருப்பு, நலவு, செயற்பாடு, சாத்வீகம் போன்றவற்றை உள்ளடக்கிய கோணமாகும். அடுத்தது: அழிவு, சூன்யம், தீங்கு, புறக்கணிப்பு, பாதிக்கப்படுதல் போன்றவற்றை உள்ளடக்கிய கோணமாகும். முதலாவது கோணத்தின் அடிப்படையில் ஒரு தேனீயை, ஒரு வீட்டுக் குருவியை, ஒரு சிலந்தியை அல்லது ஒரு நுளம்பைவிடவும் பலவீனனாக இருக்கின்றாய். இரண்டாவது கோணத்தின் அடிப்படையிலோ மலைகளையும் வானம், பூமியையும் விஞ்சக் கூடியவனாக இருக்கின்றாய். அந்தப் பெரும் பெரும் படைப்புகள் தமது பலவீனத்தை முன்வைத்து, முடியாதென்று பின்வாங்கிய சுமைகளைக்கூட சுமக்கிறாய். அவற்றைவிட விசாலமான இடங்களை சுவீகரித்துக்கொள்கிறாய். ஏனெனில் ஒரு நலவான காரியத்தில் அல்லது ஆக்கப் பணியில் ஈடுபடுகின்ற போது உனது வாய்ப்புகளுக்கும் ஆற்றலுக்குமேற்ற அளவு அல்லது கைக்கெட்டுகின்ற அளவே உன்னால் அதனைச் செய்ய முடியும். ஆனால் அழிவுப் பணியில் ஈடுபடுகின்ற போது உனது தீங்குகளும் அத்துமீறல்களும் சேதங்களும் விசாலமான தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாகவும் பரவல் தன்மை உடையதாகவும் காணப்படுகின்றன. உதாரணமாக, குஃப்ர் என்பது ஒரு தீங்காகும்; ஓர் அழிவுப் பணியாகும்; உண்மையை ஏற்றுக்கொள்ளாமையாகும். ஆனால் அந்த ஒரு தீமை ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையும் அதிலுள்ள ஒட்டுமொத்த வஸ்துகளையும் சிறுமைப்படுத்துகின்ற ஒரு செயலாகவும் பிரபஞ்சத்தில் பிரதிபலிக்கின்ற ஒட்டுமொத்த தெய்வீக நாமங்களையும் அசட்டை செய்கின்ற ஒரு நடத்தையாகவும் மனித குலத்தையே இழிவுபடுத்துகின்ற ஒரு கைங்கரியமாகவும் இருக்கின்றது. ஏனெனில் வஸ்துகள் அனைத்தும் உன்னதமான பதவிகளில், மகத்தான பணிகளைச் செய்துகொண்டிருக்கின்றன. அதாவது அவை ரப்பானியக் கடிதங்களாகவும் இறை நாமங்களைப் பிரதிபலிக்கும் ஆடிகளாகவும் ரஹ்மானிய சேவகர்களாகவும் தமது பணிகளை நிறைவேற்றுகின்றன. ஆனால் குஃப்ரானது அவற்றின் அந்தஸ்த்தை ரப்பானியக் கடிதங்கள், கண்ணாடிகள், சேவகர்கள் போன்ற அர்த்தபூர்வமான உயர் பதவிகளிலிருந்து தான்தோன்றித்தனமாக சுற்றித் திரியும் வெற்றுச் சடங்களாக அல்லது அழுகி அழிந்து போகின்ற சாமான்ய வஸ்துகளாகத் தரம் தாழ்த்தி முக்கியத்துவமின்மை, பெறுமதியின்மை, சூன்யம் போன்ற தாழ்ந்த பதவிகளை வழங்குகின்றது. அவ்வாறே பிரபஞ்சத்திலும் வஸ்துகள் என்ற ஆடிகளிலும் தமது கலையம்சங்கள், பிரதிபலிப்புகள், அழகியல்கள் மூலம் புலனாகின்ற இறை நாமங்களை நிராகரிப்பதன் மூலம் சிறுமைப்படுத்துகின்றது. அவ்வாறே இறைவனின் ஒட்டுமொத்த திருநாமங்களின் பிரதிபலிப்புகளையும் மிக அழகிய முறையில் பிரஸ்தாபிக்கின்ற மிகவும் ஞானபூர்வமான ஒரு கவிதையாகவும் நித்தியமான ஒரு விருட்சத்தின் கூறுகளை உள்ளடக்கிய அற்புதமான ஒரு விதையைப் போன்று தெய்வீக வல்லமையின் தெளிவான ஓர் அற்புதமாகவும் மிகப் பெரிய அமானிதத்தைச் சுமந்துகொண்டதன் மூலம் வானம், பூமியைவிட ஏற்றத்துக்குரியவனாகவும் மலக்குமார்களைவிட சங்கைக்குரியவனாகவும் பூமியில் அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற உயர்தரமான பதவிக்குரியவனாகவும் திகழும் மனிதனை மிகத் தாழ்ந்த, தற்காலிகமான ஒரு மிருகத்தைவிட மிகவுமே தாழ்ந்த, மிகவுமே வறிய, மிகவுமே பலவீனமான, மிகவுமே வக்கற்ற, மிகவுமே அற்பமான ஒரு பாதாளத்தில் தள்ளிவிடும். ரப்பானியக் கடிதம் என்ற அந்தஸ்த்திலிருந்த்து விரைவாக அழிந்து போகக்கூடிய அர்த்தமற்ற ஒரு காகிதத் துண்டின் நிலைக்குத் தாழ்த்திவிடும். சுருக்கமாக தீங்குகள், அழித்தல் ஆகிய விடயங்களில் நஃப்ஸுல் அம்மாராவானது எல்லையில்லாத பாதகங்களையும் படுகொலைகளையும் அரங்கேற்ற முடியும். ஆனால் நலவுகளிலும் ஆக்கப் பணிகளிலும் அதன் ஆற்றல், அதிகாரம் என்பன மிகச் சொற்பமானதும் ரையறுக்கப்பட்டதுமாகும். நூறு நாட்களில் நிர்மானிக்க முடியாத ஒரு வீட்டை ஒரே நாளில் தன்னந்தனியாக நிர்மூலம் செய்வான். எனவே மனிதன் ஈகோவைத் துறந்து, நலவுகளையும் ஆக்கத்தையும் இருப்பையும் அல்லாஹ்விடம் ஆசி வைத்து, தீங்குகள், குழப்பங்கள், அழிவுப் பணிகளிலுருந்து விலகி, தனது நஃப்ஸை நம்புவதிலிருந்து மீண்டு இஸ்திஃபார் செய்து, முழுமையாகவே அல்லாஹ்வின் அடியானாக மாறிவிட்டால் ﻳُﺒَﺪِّﻝُ ﺍﻟﻠّٰﻪُ ﺳَﻴِّﺌَﺎﺗِﻬِﻢْ ﺣَﺴَﻨَﺎﺕٍ என்ற தாத்பரியத்துக்குப் பாத்திரமானவனாக ஆகுவான். அப்போது அவனிடமிருக்கும் தீங்கு விளைவிப்பதற்கான எல்லையற்ற திறன் நன்மைக்கான எல்லையற்ற திறனாகப் பரிணமிக்கும். "அஹ்ஸனி தக்வீம் – படைப்பின் மிகச் சிறந்த பதம்" என்ற மதிப்பைப் பெறுவான். ஆலாயு இல்லிய்யூன் என்ற அந்தஸ்துக்கு உயர்வான். பொடுபோக்கில் மூழ்கிய மனிதனே! இதோ, சத்திய இரட்சகன் அல்லாஹ்வுடைய பேரன்பையும் தயாளத் தன்மையையும் பார். ஆம், இந்த அடிப்படையில் ஒரு தீமையை ஆயிரமாக எழுதுவதும் ஒரு நன்மையை எழுதாதிருப்பதுமே நீதியானதாக இருக்கின்ற போது அந்த தயாளனோ ஒரு தீமையை ஒன்றாகவும் ஒரு நன்மையை சில போது பத்தாக, சில போது எழுபதாக, சில போது எழுநூறாக, சில போது ஏழாயிரமாகவும் எழுதுகின்றான். இதிலிருந்து ஒருவன் பயங்கரமான அந்த நரகத்துக்குள் நுழைவதாக இருந்தால் அது அவனது செயலுக்கான கூலியே என்பதையும், சங்கையான சுவன பாக்கியத்தைப் பெற்றுக்கொண்டால் அது முற்று முழுதாக அல்லாஹ்வுடைய அளப்பரிய ஈகை என்பதையும் விளங்கிக்கொள்.
மனிதனில் இரண்டு பார்வைக் கோணங்கள் காணப்படுகின்றன. ஒன்று, அனானியத்தின் அடிப்படையில் இந்த உலக வாழ்வை நோக்கியிருப்பதாகும். அடுத்தது உபூதியத்தின் அடிப்படையில் நித்திய வாழ்வை நோக்கியிருப்பதாகும். முதலாவது கோணத்தின் அடிப்படையில் மனிதன் பலவீனத்துக்கு மேல் பலவீனமான வக்கற்ற ஒரு படைப்பாவான். இந்த வகையில் மனிதனிடமுள்ள மூலதனங்களைப் பார்த்தால் அதிகாரத்தின் அடிப்படையில் முடியைப் போன்று மெல்லிய ஒரு தெரிவுச் சுதந்திரமும் ஆற்றலின் அடிப்படையில் நலிவான ஒரு நாட்டம் அல்லது ஈடுபாடும் வாழ்வின் அடிப்படையில் விரைவாக அணைந்து செல்லும் தீப்பொறியைப் போன்ற ஒரு காலமும் ஆயுளின் அடிப்படையில் விரைவாகக் கடந்து செல்லக்கூடிய ஒரு தவணையும் இருப்பின் அடிப்படையில் விரைவாக சிதைந்து அழுகிச் செல்லக்கூடிய ஒரு பிண்டமுமே அவனிடமுள்ள மூலதனங்களாகும். இந்த நிலைமைகளுடன் கூடவே பிரபஞ்ச மண்டலங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள எண்ணற்ற சிருஷ்டிகளுக்கு மத்தியில் மிகவும் மென்மையான, மிகவும் நலிவான ஒரு சிருஷ்டியாகவும் இருக்கின்றான். இரண்டாவது கோணத்தின் அடிப்படையில், குறிப்பாக உபூதியத்தை நோக்கியுள்ள இயலாமை, வறுமை என்பவற்றின் அடிப்படையில் மனிதன் மிகவும் விசாலமான ஒரு தன்மையும் மகத்தான ஒரு முக்கியத்துவமும் உடையவனாகக் காணப்படுகின்றான். ஏனெனில் சர்வ ஞானமிக்க படைப்பாளன் மனிதனுடைய ஆத்மார்த்தமான தன்மையில் அளவற்ற ஓர் இயலாமையையும் எல்லையற்ற ஒரு வறுமையையும் பொதித்து வைத்துள்ளான். இதன் மூலம் எல்லையில்லாத வல்லமையும் எல்லையில்லாத தயாளத் தன்மையும் கொண்ட பேரன்பும் அருளும் மிக்க வல்லோனின் எண்ணற்ற பிரதிபலிப்புகளுக்குப் பாத்திரமாக அமையத்தக்க மிகவும் உள்ளடக்கமான அகிலார்ந்த ஓர் ஆடியாக ஆக முடியும். மேலும், மனிதன் ஒரு விதையை ஒத்தவனாக இருக்கின்றான். ஆம், அந்த விதைக்கு இறை வல்லமையிலிருந்து முக்கியத்துவம்வாய்ந்த ஆத்மார்த்தமான சாதனங்களும் விதியிலிருந்து நுட்பமான ஒரு திட்டமும் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த விதை நிலத்தின் கீழ் தொழிற்பட்டு, அந்த ஒடுக்கமான உலகத்திலிருந்து விசாலமான வளிமண்டல உலகுக்குள் பிரவேசித்து, தனது படைப்பாளனிடம் தனது திறன் மொழியினால் ஒரு மரமாக ஆகுவதை ஆசித்து தனது தகுதிக்கேற்ற ஒரு பூரணத்துவத்தை எட்ட முடியுமாக உள்ளது. ஒரு வேளை அந்த விதை அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆத்மார்த்தமான சாதனங்களைத் தனது தீய இயல்புகள் காரணமாக தீங்கான பதார்த்தங்களைத் தன்பால் ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தினால் அது அந்த ஒடுக்கமான இடத்திலேயே உக்கி, அழுகி, பயனற்றுப் போய்விடும். மாறாக அந்த விதை, அந்த ஆத்மார்த்தமான சாதனங்களை ﻓَﺎﻟِﻖُ ﺍﻟْﺤَﺐِّ ﻭَﺍﻟﻨَّﻮٰﻯ என்ற இறை நியதிக்கு இசைவாக அழகிய அமைப்பில் பயன்படுத்தினால் அந்த ஒடுக்கமான இடத்திலிருந்து வெளிப்பட்டு கனி தருகின்ற பிரமாண்டமான ஒரு விருட்சமாக மாறும். அதாவது சின்னஞ் சிறிய ஒரு சத்தியம் அல்லது ஆத்மார்த்தமான ஒரு திட்டம் பிரமாண்டமான ஒரு சத்தியத்தின் வடிவத்தைப் பெறும். ஆம், இவ்வாறே மனிதனுடைய இயல்பிலும் இறை வல்லமையிலிருந்து மகத்தான சில சாதனங்களும், விதியிலிருந்து பெறுமதிமிக்க சில திட்டங்களும் அமானத்தாக வைக்கப்பட்டுள்ளன. மனிதன் உலகம் என்ற இந்த ஒடுக்கமான இருப்பிடத்தில், வாழ்க்கை என்ற மண்ணுக்குக் கீழ் அந்த ஆத்மார்த்தமான சாதனங்களை நஃப்ஸுடைய இச்சைகளுக்காகச் செலவழித்தால் அழுகிப் போன அந்த விதையைப் போன்று அற்பமான ஓர் இன்பத்துக்காக, குறுகிய ஓர் ஆயுளில், ஒடுக்கமான ஓர் இடத்தின் நிர்க்கதியான நிலைமைகளுக்கு மத்தியில் அழுகி அழிந்து, தன் மீது சுமத்தப்பட்ட ஆத்மார்த்தமான பொறுப்பை அபாக்கியசாலியான ஆத்மாவின் மீது சுமத்திவிட்டு இந்த உலகை விட்டும் பிரிந்து சென்றுவிடுவான். மாறாக அந்த ஆத்மார்த்தமான விதையை இஸ்லாம் என்ற நீரையும் ஈமான் என்ற ஒளியையும் கொண்டு உபூதியத் என்ற மண்ணுக்குக் கீழ் பதனிட்டு, குர்ஆனிய வரம்புகளைப் பேணி, அந்த ஆத்மார்த்தமான சாதனங்களையும் அவற்றின் உண்மையான நோக்கங்களுக்காகத் திருப்பினால் நிச்சயமாக அந்த விதை ஆலமுல் பர்ஸஹில் கிளை பரப்பி மறுமையிலும் சுவனத்திலும் அளவற்ற அருட் கனிகளைத் தரக் கூடிய ஒரு நித்திய விருட்சமாக ஆகிவிடும். இப்படிப்பட்ட ஒரு விருட்சத்தின் அதாவது நித்தியமான ஒரு சத்தியத்தின் சாதனங்களை உள்ளடக்கிய அந்த ஆத்மார்த்தமான விதையானது நிச்சயமாக இந்தப் பிரபஞ்ச விருட்சத்தின் மிகவும் பிரகாசமான ஒரு கனியாகவே அன்றி இருக்க முடியாது. ஆம் உண்மையான ஈடேற்றம் என்பது மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள உள்ளம், ஆத்மா, புத்தி, சூசகம், சிந்தனை, கற்பனை போன்ற சாதனங்களை நித்திய வாழ்வின் பக்கமாகத் திருப்பி ஒவ்வொன்றையும் அதற்கென்றுள்ள உபூதியத்துடைய பணிகளில் ஈடுபடுத்துவதிலேயே இருக்கின்றது. மாறாக வழிகேடர்கள் முன்னேற்றம் என்று நினைத்துக்கொண்டிருப்பதைப் போன்று உலக வாழ்வின் அத்தனை விடயங்களையும் விலாவாரியாக அறிந்து வைத்திருப்பதும் உலக இன்பங்கள் அனைத்தையும் ஏன் மிகவுமே கீழ்த்தரமானவற்றையும் கூட உச்ச மட்டத்தில் அனுபவிப்பதும் அதற்காக உள்ளம், புத்தி போன்ற ஆத்மீக சாதனங்கள் உற்பட எல்லா வகையான உறுப்புகளையும் நஃப்ஸுல் அம்மாராவுடைய கட்டுப்பாட்டுக்குள் வழங்குவதும் மிகவும் இழிவான ஒரு நிலையாகும். இந்த சத்தியத்தை ஒரு கற்பனை நிகழ்வில் பின்வரும் உதாரணத்தின் மூலம் கண்டுகொண்டேன்: அப்போது ஒரு பெரிய நகருக்குள் நுழைந்து கொண்டிருந்தேன். அங்கு எல்லா இடங்களிலும் பெரும் பெரும் மாளிகைகள் காணப்பட்டன. சில மாளிகைகளைப் பார்த்த போது அவற்றின் நுழைவாயில்கள் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோளம் பூண்டிருப்பதை அவதானித்தேன். அது மங்களகரமான ஒரு நாடக மேடையைப் போன்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்ப்பதாகவும் எல்லோரையும் களிப்படையச் செய்யும் விதமாகவும் காணப்பட்டது. கூர்ந்து அவதானித்த போது அந்த மாளிகையின் எஜமானன் அங்கு ஒரு நாயோடு கூடிக் குலாவி விளையாடிக் கொண்டிருப்பதையும் பெண்கள் அந்நிய ஆண்களோடு மதுக் கிண்ணங்களுடன் அளவலாவிக் கொண்டிருப்பதையும் வயது வந்த பெண்கள் குழந்தைகள் விளையாடுவதற்கு உதவி செய்து கொண்டிருப்பதையும் காண முடிந்தது. வாயிற் காவலனோ அந்த மேடையின் இயக்குனரைப் போன்று மிடுக்கோடு காணப்பட்டான். அப்போது அந்த மாளிகையின் உட்பகுதி பொறுப்புகள் கைவிடப்பட்ட நிலையில் ஆளரவமின்றிப் பாலடைந்து போயிருப்பதைப் புரிந்துகொண்டேன். அவர்களின் பண்பாடுகள் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்ததால் நுழைவாயிலில் இவ்வாறான ஒரு நிலையைப் பெற்றிருந்தனர். பின்னர் இன்னுமொரு பெரிய மாளிகைக்கு முன்னால் வந்தேன். அதன் நுழைவாயிலில் விசுவாசமான ஒரு நாயும் கடின சுபாவமும் அமைதியும் மிக்க ஒரு வாயிட்காவலனும் வீற்றிருப்பதைக் கண்டேன். கலையிழந்து போன, சாந்தமான ஒரு நிலையே அங்கு காணப்பட்டது. அப்போது அது அவ்வாறும், இது இவ்வாறும் இருப்பதற்கான காரணத்தை அறிய ஆவல் கொண்டவனாக அந்த மாளிகைக்குள் நுழைந்தேன். அந்த மாளிகையின் உட்பகுதியோ கோலாகலமாக விழாக்கோளம் பூண்டிருந்தது. எல்லோரும் அவரவருக்குரிய பகுதிகளில் தத்தமது பணிகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். முதலாவது பகுதியில் இருந்தவர்கள் அந்த மாளிகையின் நிர்வாகத்தையும் முன்னேற்பாடுகளையும் கவனித்தனர். அதற்கு மேலுள்ள பகுதியில் வாலிபப் பெண்களும் பிள்ளைகளும் பாடங்களைக் கற்றுக்கொண்டிருந்தனர். அதற்கு மேலுள்ள பகுதியில் பெண்கள் பல்வேறுபட்ட அழகியல் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். மிக உயர்ந்த மாடியில் அந்த மாளிகையின் எஜமான் அரசனோடு தொடர்பில் இருப்பதையும் தனது மக்களின் நிம்மதிக்கும் முன்னேற்றத்துக்கும் ஈடேற்றத்துக்குமாக தனக்கென்றே உள்ள உன்னதமான அலுவல்களில் ஈடுபட்டிருப்பதையும் கண்டுகொண்டேன். அவர்கள் என்னைக் காண முடியாதவர்களாக இருந்ததால் தங்குதடையின்றி நடமாட முடிந்தது. அங்கிருந்து வெளியேறிய பின்னர் அந்த நகரம் முழுவதிலும் இந்த இரண்டு வகை மாளிகைகளையும் காணக்கூடியதாக இருந்தது. விவரங்களைக் கேட்டறிந்த போது கோலாகளமான நுழைவாயில்களுடன் காணப்பட்ட மாளிகைகள் முன்னனிக் காபிர்களுடையவை என்பதையும் ஏனையவை கண்ணியமிக்க முஸ்லிமான சான்றோர்களுடையவை என்பதையும் அறிந்துகொண்டேன். பின்னர் ஒரு மருங்கில் இருந்த இன்னுமொரு மாளிகையை நெருங்கினேன். அதன் மீது "ஸஈத்" என்று எழுதப்பட்டிருப்பதைக் கண்டு ஆர்வத்தோடு உன்னிப்பாக அதை அவதானித்தேன். அதன் மீது என்னுடைய உருவம் இருப்பதை போன்று எனக்குத் தோற்றமளித்தது. அப்போது ஏற்பட்ட பதட்டம் காரணமாக திடீரென்று விளித்துக்கொண்டேன். இப்போது இந்த நிகழ்வை விவரிக்கின்றேன். அல்லாஹ் நல்லதாக அமைத்து வைப்பானாக. அந்த நகரம் மனிதனுடைய சமூக வாழ்வு அல்லது நாகரிகமடைந்த ஒரு நகரமாகும். அந்த ஒவ்வொரு மாளிகையும் ஒவ்வொரு மனிதனாகும். அங்கிருந்த மாளிகைவாசிகள் மனிதனிலிருக்கும் கண், காது, உள்ளம், ஆத்மா, அறிவு, சூசகம் போன்ற சாதனங்களும் நஃப்ஸ், அவா, மோகத் திறன், சீற்றத் திறன் போன்ற அம்சங்களுமாகும். ஒவ்வொரு மனிதனிலும் மேற்படி ஒவ்வொரு சாதனத்துக்கும் ஒவ்வோர் அம்சத்துக்கும் வெவ்வேறான பணிகளும் வெவ்வேறான வணக்கங்களும் வெவ்வேறான இன்பம், துன்பங்களும் காணப்படுகின்றன. நஃப்ஸ், அவா என்பவற்றுடன் மோகம், சீற்றம் ஆகிய திறன்கள் வாயிற்காவலனையும் நாயையும் ஒத்தவையாகும். இப்போது அந்த உன்னதமான உறுப்புகளை நஃப்ஸினதும் அவாவினதும் கட்டுப்பாட்டுக்குள் வழங்குவதும் அவற்றுக்கென்றே உள்ள அசலான பணிகளை மறக்கடிக்கச் செய்வதும் நிச்சயமாக இழிவான ஒரு நிலையாகும். முன்னேற்றமாக இருக்க முடியாது. ஒப்பீட்டிலுள்ள ஏனைய விடயங்களை உங்களாலேயே விவரிக்க முடியும்.
மனிதன் செயல்களின் அடிப்படையிலும் பௌதீக ரீதியான உழைப்பின் அடிப்படையிலும் மிகவும் நலிவான ஒரு விலங்காக அல்லது பலவீனமான ஒரு படைப்பாகவே இருக்கின்றான். இந்த அடிப்படைகளில் அவனுடைய அதிகார எல்லையும் எஜமானியத் தன்மையும் கைக்கெட்டுகின்ற தூரத்தின் அளவு குறுகியதாகும். ஏன் மனிதனுக்குப் பணிவிடை செய்வதற்காக அவனது கரங்களில் கடிவாளங்கள் வழங்கப்பட்டுள்ள வீட்டுப் பிராணிகளுக்கும் கூட மனிதனுடைய சோம்பல், இயலாமை, பலவீனம் போன்ற தன்மைகள் தொற்றியிருப்பதைக் காணலாம். அந்த வீட்டுப் பிராணிகளை அதே இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்குகளுடன் ஒப்பிட்டால் அவற்றுக்கு மத்தியில் மகத்தான வேறுபாடுகள் இருப்பதைக் காணலாம். (வீட்டில் வளரும் ஆடு, மாடுகளையும் காட்டில் வளரும் ஆடு மாடுகளையும் போல்.) ஆனால் அந்த மனிதன் துலங்கள், ஏற்பு, பிரார்த்தனை, கேள்வி போன்ற அடிப்படைகளில் இந்த உலக மாளிகையில் பயணிக்கும் சங்கையான ஒரு பயணியாவான். அவ்வாறே இந்த அடிப்படைகளில் மனிதன் எண்ணற்ற அருட்கொடைகளால் ஆகர்ஷிக்கப்பட்ட ஒரு விருந்தாளியாக இருப்பதோடு அவனுக்கு முன்னால் எண்ணற்ற அருட் பொக்கிஷங்களுக்கான வாயில்களும் திறக்கப்பட்டிருக்கின்றன. இன்னொரு பக்கம் எண்ணற்ற அற்புதமான படைப்புகளும் அவனுடைய கட்டளைக்குக் கீழ் வழங்கப்பட்டு, அவனுக்கு சரணடைந்த சேவகர்களாக ஆக்கப்பட்டுள்ளன. மாத்திரமன்றி அவன் பயன் பெறுவதற்காக அவனைச் சுற்றி கண்களுக்கெட்டுமளவு, ஏன் கற்பனைக்கெட்டுமளவு மிகவும் விசாலமான இடங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. ஆம், மனிதன் அனானியத்தை ஆதாரமாகக் கொண்டு, உலக வாழ்வை வாழ்வின் இலக்காகத் தெரிவு செய்து, வாழ்வாதாரப் போராட்டத்தைத் தற்காலிகமான சில இன்பங்களுக்காகச் செலவளித்தால் மிகவும் ஒடுக்கமான ஒரு வட்டத்துக்குள் புதைந்து அழிந்து போய்விடுவான். அவனுக்கு வழங்கப்பட்ட அத்தனை சாதனங்களும் உறுப்புகளும் உணர்வுகளும் மறுமையில் அவனுக்கெதிராகச் சாட்சி கூறி வாதாடும். மாறாக ஒரு விருந்தாளி என்பதை அறிந்து தனக்கு விருந்தோம்பும் தயாளனுடைய அனுமதிக்குற்பட்ட எல்லைக்குள் வாழ்க்கை என்ற மூலதனத்தை செலவு செய்தால் மேலே கூறப்பட்டதைப் போன்று விசாலமான ஓர் எல்லைக்குள் நித்தியமான ஒரு வாழ்வுக்காக உழைப்பவனாக மாறிவிடுவான். ஓய்வையும் சாந்தியையும் அடைவான். இவ்வாறு அவனால் ஆஃலாயு இல்லிய்யூன் என்ற உன்னதமான பதவி வரை செல்லலாம். மாத்திரமன்றி இந்த மனிதனுக்கு வழங்கப்பட்ட அத்தனை சாதனங்களும் அத்தனை உறுப்புகளும் பெருமிதமாக மறுமையில் அவனுக்குச் சார்பாக சாட்சி கூறும். ஆம், மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அற்புதமான சாதனங்கள் அனைத்தும் அற்பமான உலக வாழ்வுக்காக அன்றி மகத்துவமிக்க மறுமை வாழ்வை அடைந்துகொள்வதற்காக வழங்கப்பட்டுள்ளவையாகும். ஏனெனில் மனிதனை மிருகங்களோடு ஒப்பிட்டால் மனிதன் உறுப்புகள், சாதனங்கள் விடயத்தில் மிகவும் செல்வந்தனாகத் திகழ்வதைப் பார்க்கிறோம். அவற்றைவிட நூறு மடங்கு செழிப்பான நிலையில் காணப்படுகின்றான். ஆனால் அவை உலக வாழ்வின் இன்பங்களுக்காகவும் மிருகங்களைப் போன்று வாழ்வதற்காகவும் உபயோகிக்கப்படுமாக இருந்தால் நூறு மடங்கு தாழ்ந்த நிலைக்குச் சென்றுவிடும். ஏனெனில் அவன் அனுபவிக்கின்ற, காண்கின்ற அத்தனை இன்பங்களிலும் துக்கத்துக்கும் கைசேதத்துக்கும் இட்டுச் செல்கின்ற சுவடுகள் காணப்படுகின்றன. அதாவது கடந்த காலத்தின் துக்கங்களும் எதிர்காலம் பற்றிய அச்சங்களும் கைவசம் உள்ள இன்பங்கள் தீர்ந்து அழிந்து போய்விடுமே என்ற ஆதங்கமும் அவனுடைய அத்தனை இன்பங்களையும் சூரையாடிச் செல்லும் துக்கத்தின் சுவடுகளாகும். ஆனால் மிருகங்களுடைய நிலை இவ்வாறானதல்ல. அவை எந்த ஒன்றை அனுபவிக்கும் போதும் துக்கங்களோ கைசேதங்களோ கலக்காத இன்பத்தை அனுபவிக்கின்றன. கடந்த காலத்தின் கவலைகளோ எதிர்காலத்தின் அச்சங்களோ அவற்றைக் குதறிப் போடுவதில்லை. நிம்மதியாக உண்டு உறங்கி தனது படைப்பாளனுக்கு நன்றி செலுத்துகின்றன. ஆம், மிகச் சிறந்த அமைப்பில் படைக்கப்பட்ட மனிதன் தனது மொத்த சிந்தனையிலும் உலக வாழ்வையே சுற்றிச் சுழன்றால் விலங்குகளைவிட நூறு மடங்கு அதிகமான மூலதனங்களைக் கொண்டிருந்தாலும் வீட்டுக் குருவி போன்று மிகவும் அற்பமான ஒரு ஜீவனைவிடவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவான். இந்த உண்மையை வேறோர் இடத்தில் ஓர் உதாரணத்தின் மூலம் தெளிவுபடுத்தியிருந்தேன். இடப் பொருத்தம் காரணமாக அதை இங்கும் கூறுகின்றேன். ஒரு மனிதர் தனது பணியாட்களுள் ஒருவரனிடம் பத்துத் தங்க நாணயங்களை வழங்கி மிகவும் உயர்தரமான ஒரு துணியால் ஓர் ஆடை தயாரித்து வருமாறு கூறி அனுப்பி வைத்தார். இன்னுமொரு பணியாளனிடம் ஆயிரம் தங்க நாணயங்களை வழங்கி அதனைக் கொண்டு ஆக வேண்டிய காரியங்கள் குறிக்கப்பட்ட ஒரு காகிதத்தையும் ஓர் உரையில் இட்டு அவனுடைய சட்டைப் பைக்குள் போட்டு சந்தைக்கு அனுப்பி வைத்தார். முதலாமவன் மிக உயர் தரமான துணியால் தயாரிக்கப்பட்ட மிகச் சிறந்த ஓர் ஆடையை அந்தப் பணத்தைக் கொடுத்து வாங்கி வந்தான். இரண்டாமவனோ தனது பையிலிருக்கும் காகிதத்தைப் பார்க்காமல் வெறுமனே முதலாமவனைப் பார்த்துவிட்டு முட்டாள் தனமான ஒரு செயலில் இறங்கினான். சந்தையில் ஒரு வியாபாரியிடம் போய் ஆயிரம் தங்க நாணயங்களைக் கொடுத்து ஒரு ஆடை தருமாறு கேட்டான். இவனுடைய முட்டாள் தனத்தை உணர்ந்து கொண்ட இரக்கமற்ற அந்த வியாபாரியும் பெருந்தொகையான அந்தப் பணத்தை வாங்கிக்கொண்டு தன்னிடம் இருந்ததில் மிகவும் மட்ட ரகமான ஓர் ஆடையை அவனுக்கு வழங்கினான். பின்னர் அந்த அபாக்கியசாலியான பணியாள் தனது எஜமானனிடம் வந்த போது கடுமையான ஒரு தண்டனையைப் பெற்றுக் கொண்டான். ஆம், அணுவளவேனும் பிரக்ஞையுள்ள ஒருவன் அந்த ஆயிரம் தங்க நாணயங்களும் வெறும் ஓர் ஆடையை வாங்கி வருவதற்காகக் கொடுக்கப்படவில்லை என்பதையும் மாறாக ஒரு பெரும் வியாபார நடவடிக்கைக்காகக் கொடுக்கப்பட்டது என்பதையும் இலகுவாகப் புரிந்துகொள்வான். அவ்வாறே மனிதனிடமுள்ள ஆத்மார்த்தமான சாதனங்கள், உணர்வுகளுள் ஒவ்வொன்றும் விலங்குகளோடு ஒப்பிடும் போது நூறு மடங்கு விருத்தி அடைந்தவையாகக் காணப்படுகின்றன. உதாரணமாக மனிதனுடைய கண்கள் அழகியல்களின் அத்தனை படித்தரங்களையும் பார்த்து ரசிக்கக் கூடியதாகவும் அவனுடைய நாவிலுள்ள சுவையுணர்வு வகை வகையான எண்ணற்ற ஆகார வஸ்துகளைப் பிரித்தறிந்து தரப்படுத்தக் கூடியதாகவும் அவனுடைய புத்தி எல்லா விதமான சத்தியங்களையும் உண்மைகளையும் அவற்றின் நுணுக்கமான ஆழ அகலங்களுடன் கிரகித்துக்கொள்ளத்தக்கதாகவும் அவனது உள்ளம் சகல விதமான பூரணத்துவங்களின்பாலும் தீராத தாகம் கொண்டதாகவும் காணப்படுகின்றன. மனிதனிடம் காணப்படும் இவையும் இவை போன்ற ஏனைய சாதனங்களும் எங்கே? விலங்குகளிடம் உள்ள மிகச் சாதாரணமான வெறுமனே ஒன்று அல்லது இரண்டு படித்தரங்கள் விருத்தியடைந்த சாதனங்கள் எங்கே? ஆனால் மிருகங்களிடம் ஒரு வேறுபாடு காணப்படுகின்றது. ஒவ்வொரு மிருகமும் தனக்கென்றுள்ள சிறப்புப் பணியில், குறிப்பாக குறித்த அந்தப் பணிக்காக என்றுள்ள உறுப்பு விடயத்தில் உயர் மட்ட விருத்தியைக் காண்கின்றது. சாதனங்கள் விடயத்தில் மனிதனிடம் காணப்படும் செழுமைக்குப் பின்னால் ஒரு சூட்சுமம் உள்ளது. அதாவது மனிதனிடம் புத்தியும் சிந்தனையும் இருப்பதால் அவனுடைய உடல் உள ரீதியான புலனுறுப்புகளும் உணர்வுகளும் அதிகரித்த விருத்திக்குப் பாத்திரமானவையாக அமைந்துள்ளன. மேலும் ஏகப்பட்ட தேவைகள் இருப்பதால் பல்வேறுபட்ட உணர்ச்சிகள் அவனிடம் விருத்தி அடைந்துள்ளதோடு வித விதமான தூண்டல் துலங்கல்களுக்கும் பாத்திரமானவனாக இருக்கின்றான். அவ்வாறே அவனது இயல்பில் இருக்கின்ற அகிலார்ந்த தன்மை காரணமாக ஏகப்பட்ட இலக்குகள், நோக்கங்களை அடைந்துகொள்ளும் நாட்டமுடையவனாக இருக்கின்றான். மேலும் இயல்பளவில் ஏராளமான பணிகளைச் சுமந்தவனாக இருப்பதால் அதற்குத் தேவையான சாதனங்களும் கருவிகளும் உச்ச மட்ட விருத்திக்குப் பாத்திரமானவையாக அமைந்துள்ளன. அவ்வாறே எல்லா வகை வணக்கங்களையும் நிறைவேற்றக் கூடிய திறனைக் உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளமையால் சகல விதமான பூரணத்துவங்களையும் அடைந்துகொள்ள முடியுமான ஓர் அகிலார்ந்த ஆற்றல் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த அளவு செழிப்பான சாதனங்களும் வழமான மூலதனங்களும் இந்த தற்காலிகமான அற்ப உலகத்தை அடைந்துகொள்வதற்காக வழங்கப்பட்டிருக்க முடியாது. மாறாக இப்படிப்பட்ட ஒரு மனிதனின் அசலான பணி எல்லையற்ற நோக்கங்கள் அடைந்துகொள்வதற்கான பொறுப்புகளை நிறைவேற்றுவதும் அந்தப் பாதையில் தனது இயலாமையையும் வறுமையையும் உபூதியத்தாகப் பிரகடனம் செய்வதும் வஸ்துகளுடைய மொத்தமான வணக்கங்களுக்கும் துதிகளுக்கும் சாட்சியாக நின்று சான்றுபகர்வதும் அருட்கொடைகளில் காணப்படும் இறை ஆதரவையும் உதவியையும் கண்டு நன்றி செலுத்துவதும் வஸ்துகளில் காணப்படும் ரப்பானிய வல்லமையின் அற்புதங்களைப் பார்த்து சிந்தனை செய்து படிப்பினை பெறுவதுமாகும். உலகப் பித்தனாகவும் உலக வாழ்வில் மோகம் கொண்டவனாகவும் மிகச் சிறந்த படைப்பு என்ற உண்மையைப் புரிந்துகொள்ளாமல் அசட்டையாகவும் இருக்கின்ற மனிதனே! இந்த உலக வாழ்வின் உண்மை நிலையை பழைய ஸஈதாக இருக்கும் போது ஒரு கற்பனை நிகழ்வில் கண்டேன். இப்போது அந்தப் பழைய ஸஈதைப் புதிய ஸஈதாக மாற்றிய அந்த நிகழ்வைப் பார்ப்போம்: நான் ஒரு பயணியாக இருந்தேன். நீண்ட ஒரு பாதை வழியாகப் பயணித்துக்கொண்டிருந்தேன். அதாவது அனுப்பி வைக்கப்பட்ட ஒருவனாக இருந்தேன். எனது எஜமானன் எனக்காக ஒதுக்கிய அறுபது தங்கங்களில் அவ்வப்போது ஒரு தொகைப் பணம் எனக்கு வழங்கப்பட்டது. நானும் அதை செலவளிப்பதற்காக கோலாகலமான ஒரு களியாட்ட நிகழ்வுக்குச் சென்றேன். அந்த இடத்தில் ஒரே இரவில் பத்துத் தங்கங்களை களியாட்டங்களிலும் சூதிலும் பெருமை சேர்ப்பதிலும் செலவிட்டேன். காலையில் கையில் எந்தப் பணமும் எஞ்சியிருக்கவில்லை. அதைக் கொண்டு வியாபாரம் செய்து பொருளீட்டாத காரணத்தினால் செல்கின்ற இடத்துக்காக எதையும் என்னால் வாங்கிக்கொள்ள முடியவில்லை. வெறுமனே அந்தப் பணத்தால் கிடைத்த பாவங்களும் கைசேதங்களும் துக்கங்களும் வலிகளுமே என்னிடம் எஞ்சியிருந்தன. கவலைக்கிடமான அந்த நிலையில் இருக்கும் போது அங்கு ஒரு மனிதர் தோன்றினார். அவர் என்னிடம் "உனக்கு வழங்கப்பட்ட மூலதனங்களை முழு மொத்தமாகவே அழித்து நாசமாக்கி தண்டனைக்குரிய நிலைக்கு ஆளாகிவிட்டாய். செல்கின்ற இடத்துக்கு வங்குரோத்து நிலையில் வெறும் கையோடே போய்ச் சேர்வாய். ஆனால் இன்னும் உனது புத்தி பேதலிக்கவில்லை என்றால் தவ்பாவுக்கான வாசல் திறந்திருக்கின்றது. இதன் பிறகு உனக்கு வழங்கப்பட இருக்கும் எஞ்சியுள்ள பதினைந்து தங்கங்கள் ஒவ்வொன்றாகக் கைக்குக் கிடைக்கும் போது முதலாவதாக அவற்றில் அரைவாசியை பாதுகாத்துக்கொள். அதாவது செல்கின்ற இடத்தில் உனக்கு அவசியப்படக்கூடிய சில பொருட்களை அதனைக் கொண்டு வாங்கிக்கொள்" என்று கூறினார். அப்போது எனது நஃப்ஸ் அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள மறுப்பதைக் கண்டேன். அப்போது "மூன்றில் ஒன்றை வழங்கு" என்று கூறினார். அதற்கும் நஃப்ஸ் மசியவில்லை. பின்னர் "நாலில் ஒன்று" என்று கூறினார். அப்போதும் நஃப்ஸால் தான் பழக்கப்பட்ட வழக்கத்தை விட்டுக்கொடுக்க முடியாதிருப்பதை உணர்ந்தேன். அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அந்த நிலைமை திடீரென்று மாறியது. நான் ஒரு சுரங்கப் பாதையூடாகப் பயங்கரமான வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் ஒரு தொடருந்துக்குள் இருந்தேன். பதட்டத்தோடு சுற்றும் முற்றும் பார்த்தேன். அதிலிருந்து தப்புவதற்கு எந்த வழியும் இருக்கவில்லை. ஆச்சரியப்படத்தக்க விதமாக அந்தத் தொடருந்தின் இரண்டு பக்கங்களிலும் மிகவும் கவர்ச்சிகரமான பூக்களும் மிக இனிமையான கனி வகைகளும் காணப்பட்டன. நானும் புத்தி பேதலித்து, விபரமறியாத ஒருவனைப் போன்று அந்தப் பூக்களையும் கனிகளையும் பறிப்பதற்காகக் கைகளை நீட்டினேன். ஆனால் அந்தப் பூக்களும் கனிகளும் முட்கள் நிறைந்து காணப்பட்டதால் கைகள் கீறிக் கிழிந்து இரத்தம் கசிந்தது. மறு பக்கம் தொடருந்தின் பயணம் ஏற்படுத்திக்கொண்டிருந்த பிரிவுகள் ஆறாத வடுக்களாக என்னில் பதிந்துகொண்டிருந்தன. மொத்தத்தில் அந்தப் பயணம் எனக்குப் பேரிழப்பாக மாறிக்கொண்டிருந்தது. அப்போது அந்தத் தொடருந்தில் இருந்த ஒரு சேவகன் "ஐந்து காசு தந்தால் அந்தப் பூக்கள் கனிகளுள் தேவையான அளவைத் தருகிறேன். இல்லாவிட்டால் அவற்றைப் பறிப்பதால் உனக்கு ஏற்படும் காயங்கள் நூறு காசு நட்டத்தை ஏற்படுத்திவிடும். மாத்திரமன்றி அனுமதியின்றிப் பறிப்பவர்களுக்குத் தண்டனையும் உள்ளது" என்று கூறினான். அப்போது இந்த அசௌகரியங்களை சகிக்க முடியாமல் தலையைத் தூக்கி இந்தக் குகை எப்போது முடியப் போகின்றது என்று பார்த்தேன். ஆனால் குகை முடிவடைவதற்கான எந்த அறிகுறிகளும் காணப்படவில்லை. அதற்குப் பதிலாக ஆங்காங்கே ஏராளமான ஓட்டைகள் காணப்பட்டன. அந்த நீண்ட தொடருந்திலிருந்து அந்த ஓட்டைகளுக்குள் மனிதர்கள் எறியப்பட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எனக்காகவும் ஓர் ஓட்டை இருப்பதைக் கண்டேன். அதன் இரண்டு முனைகளிலும் இரண்டு நடுகற்கள் நாட்டப்பட்டிருந்தன. உன்னிப்பாகப் பார்த்த போது அந்தக் கற்களில் பெரிய எழுத்துகளால் "ஸஈத்" என்று எழுதப்பட்டிருந்தது. அதிர்ச்சியும் கவலையும் மேலிட "கைசதமே" என்று கத்தினேன். அப்போது ஆரம்பத்தில் என்னிடம் வந்த மனிதருடைய சத்தத்தை மீண்டும் கேட்டேன்: "புத்தி தெளிந்துவிட்டதா?" என்று கேட்டார். "ஆம், புத்தி தெளிந்துவிட்டது. ஆனால் சக்தியற்றவனாகவும் திக்குத் தெரியாதவனாகவும் இருக்கின்றேன்" என்று கூறினேன். "தவ்பா செய்து தவக்குல் வை" என்று கூறினார். நானும் அவ்வாறே செய்தேன். அப்போது திடீரென்று விளித்தெழுந்த போது பழைய ஸஈத் மறைந்து நான் புதிய ஸஈதாக மாறியிருப்பதை உணர்ந்தேன். இப்போது -அல்லாஹ் நல்லதாக ஆக்கி வைப்பானாக- அந்தக் கற்பனை நிகழ்வின் சில பகுதிகளுக்கான விளக்கங்களைத் தருகிறேன். எஞ்சிய பகுதிகளுக்கான விளக்கங்களை நீங்களாகவே சிந்தியுங்கள். அந்தப் பயணமானது ஆலமுல் அர்வாஹில் ஆரம்பித்து கருவறையூடாக வாலிபத்தையும் வயோதிபத்தையும் மண்ணறையையும் ஆலமுல் பர்ஸஹையும் மஹ்ஷரையும் ஸிராத் பாலத்தையும் கடந்து முடிவில்லாத நித்தியத்தை நோக்கிச் செல்கின்ற பயணமாகும். அந்த அறுபது தங்கங்களும் அறுபது வருட சராசரி ஆயுளைக் குறிப்பதாகும். இந்த நிகழ்வைக் கண்ட போது எனது வயது ஏறத்தாழ நாற்பத்தைந்தாக இருந்தது. உத்தரவாதம் இருக்கவில்லை. என்றாலும் எஞ்சியிருந்த பதினைந்து வருடங்களுள் அரைப் பகுதியை மறுமைக்காகச் செலவளிப்பதற்காக சர்வ ஞானமிக்க குர்ஆனின் சங்கையான ஒரு மாணவன் எனக்கு வழிகாட்டினார். அந்தக் களியாட்டத் தளம் என்னுடைய விடயத்தில் இஸ்தான்பூலாக இருந்தது. அந்தத் தொடருந்து காலமாகும். அந்தக் குகை உலக வாழ்க்கையாகும். முட்களால் சூழப்பட்டிருந்த அந்தப் பூக்களும் கனிகளும் தடுக்கப்பட்ட இன்பங்களும் ஹராமான விடயங்களுமாகும். அவற்றை நெருங்கும் போது பிரிவைப் பற்றிய சிந்தனை ஏற்படுத்துகின்ற வலிகள் உள்ளத்தைக் கீறிக் கிழித்து இரத்தம் கசியச் செய்து ஓர் உடனடித் தண்டனையையும் வழங்குவதாக இருந்தது. அந்த சேவகன் "ஐந்து காசு தந்தால் அவற்றிலிருந்து தேவையான அளவு வழங்குவேன்" என்று கூறியதில் ஒரு பேருண்மை பொதிந்துள்ளது. அதாவது, ஹலாலான உழைப்பின் மூலம் ஆகுமாக்கப்பட்ட எல்லைக்குள் அனுபவிக்கின்ற இன்பங்கள் ஹராத்தை நாடுவதற்கான எந்தத் தேவையும் இல்லாத அளவுக்குப் போதுமானவையாகும். எஞ்சியவற்றுக்கான விளக்கங்களை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
மனிதன் இந்தப் பிரபஞ்சத்தில் நலிவான ஒரு குழந்தையை ஒத்தவனாக இருக்கின்றான். அவனுடைய பலவீனத்தில் மகத்தான ஒரு பலமும் இயலாமையில் மகத்தான ஒரு வலிமையும் காணப்படுகின்றது. ஆம், அவனுடைய பலவீனத்தின் பலமும் இயலாமையின் வலிமையுமே பிரபஞ்ச வஸ்துகள் அனைத்தையும் அவனுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளது. எனவே மனிதன் தனது பலவீனத்தையும் இயலாமையையும் உணர்ந்து உள்ளத்தாலும் நாவாலும் செயலாலும் பிரார்த்தனை செய்து உதவி தேடினால் பலவீனம் என்ற பலத்தைப் பெற்றுக்கொண்டதற்காக நன்றி செலுத்தியவனாக ஆவான். கூடவே தனது காரியங்களிலும் நோக்கங்களிலும் மகத்தான அடைவுகளையும், தனது பாதையில் அற்புதமான ஒத்துழைப்புகளையும் கண்டுகொள்வான். மாறாக சுய அதிகாரத்தின் மூலம் அவற்றுள் நூற்றில் ஒன்றையும் அடைந்துகொள்ள முடியாது. ஆனால் மனிதன் சில வேளை செயல் ரீதியான துஆவினால் வாய்க்கப்பெற்ற ஓர் அடைவை தனது சுய அதிகாரத்தின் கணக்கில் சேர்த்துக்கொள்வான். ஆம் பலவீனத்திலிருக்கும் பலம் பிரமிக்கத்தக்கதும் ரஹ்மத்துடைய கண் குளிர்ச்சியான ஒரு பிரதிபலிப்புமாகும். உதாரணமாக, குஞ்சிகளின் பலவீனத்தால் தாய்க் கோழிக்குக் கிடைக்கின்ற பலம் அதை சிங்கத்தின் மீது கூட சீறிப் பாய வைக்கின்றது. அவ்வாறே புதிதாக உலகுக்கு வந்த ஒரு சிங்கக் குட்டி பசியோடிருக்கும் வலிமையான தாய்ச் சிங்கத்தை வசியப்படுத்தி அதைப் பசியில் போட்டுவிட்டு வயிறு நிறைய உண்ணுகின்றது. அவ்வாறே, நலிவான ஒரு குழந்தை அழுகையின் மூலம் அல்லது கேட்பதன் மூலம் அல்லது பரிதாபகரமான ஒரு பார்வையின் மூலம் மகத்தான பல விடயங்களை சாதித்துக் கொள்வதோடு தன்னைவிட மிகவும் பலமானவர்களை வசியப்படுத்திக்கொள்கின்றது. ஆனால் அந்த அடைவுகளின் ஆயிரத்தில் ஒன்றையேனும் தனது சொந்த பலத்தால் அடைந்துகொள்வது சாத்தியமற்றதாகும். ஆம், இயலாமையும் பலவீனமும் அந்தக் குழந்தையின் விடயத்தில் பாசத்தையும் பாதுகாப்பையும் ஈர்த்தெடுப்பதால் சின்னஞ்சிறு விரல்களால் பெரும் பெரும் மனிதர்களைத் தன் வசப்படுத்திக்கொள்கின்றது. இப்போது இப்படிப்பட்ட ஒரு குழந்தை அந்தப் பாசத்தை நிராகரிப்பதன் மூலமும் அந்தப் பாதுகாப்பைப் பொய்ப்பிப்பதன் மூலமும் மடத்தனமான ஓர் அகம்பாவத்தோடும் "நான் எனது சொந்த ஆற்றலின் மூலமே இவற்றையெல்லாம் சாதிக்கிறேன்" என்று தம்பட்டமடித்தால் நிச்சயமாக ஒரு குட்டுக்கு அருகதையுடையதாக மாறிவிடுகின்றது. ஆம், மனிதனும் கூட தனது படைப்பாளனின் அன்பை நிராகரித்து, ஞானத்தைக் கேள்விக்குற்படுத்தி, அருட்கொடைகளைப் பொய்ப்பிக்கும் விதமாக காரூனைப் போன்று "ﺍِﻧَّﻤَٓﺎ ﺍُﻭﺗِﻴﺘُﻪُ ﻋَﻠٰﻰ ﻋِﻠْﻢٍ - இதை நான் எனது அறிவைக் கொண்டும் ஆற்றலைக் கொண்டுமே சம்பாதித்தேன்" என்று கூறினால், நிச்சயமாகத் தண்டனைக்கு அருகதையுடையவனாக மாறிவிடுகின்றான். உண்மையில் மனித சமூகத்தில் நாம் காணும் மானுட முன்னேற்றங்களும் நாகரீக முன்னேற்றங்களும் மனித முயற்சியாலோ உழைப்பாலோ தேடலாலோ கிடைக்கப்பெற்றவை அல்ல. மாறாக அவை அவனது இயலாமைக்காக வசியப்படுத்திக் கொடுக்கப்பட்டவையாகும்; அவனது பலவீனத்துக்கு உதவியாகக் கொடுக்கப்பட்டவையாகும்; அவனது வறுமைக்கு நிவாரணமாக அருளப்பட்டவையாகும்; அவனது அறியாமை அகற்றுவதற்கான உதிப்புகளாக அருளப்பட்டவையாகும்; அவனது தேவைகளுக்கான அன்பளிப்புகளாகும். அவ்வாறே அவனது ஆட்சி அதிகாரங்களுக்கான காரணமும்கூட அவனுடைய ஆற்றல்களும் அறிவியல் பலமும் அன்றி இறைவனுடைய அன்பும் ஆதரவும் உதவியும் ஞானமுமாகும். அவனே வஸ்துகளை மனிதனுக்கு வசப்படுத்திக் கொடுத்தான். ஆம் கண்ணில்லாத தேள், காலில்லாத பாம்பு போன்ற படைப்புகளுக்கு முன்னால் நிலை குலைகின்ற மனிதனுக்கு ஒரு சிறு வண்டிலிருந்து ஆடையையும் ஒரு சிறு பூச்சியிலிருந்து தேனையும் வழங்குவது அவனுடைய சுய அதிகாரமோ ஆற்றலோ அல்ல. மாறாக அவனுடைய இயலாமைக்கான ஆதரவாக இருக்கும் ரஹ்மானிய உதவியாகும். மனிதனே! உண்மையில் சத்தியம் இதுவென்பதால் பெருமையையும் நான் என்ற அகம்பாவத்தையும் விட்டுவிடு! இறை சந்நிதானத்தில் அல்லாஹ்வுடைய உலூஹியத்துக்கு முன்னால் உனது இயலாமை, பலவீனம், வறுமை, தேவைகள் என்பவற்றை முன்வைத்து பணிவோடு மன்றாடி உனது அடிமைத்துவத்தைப் பறைசாற்று! ﺣَﺴْﺒُﻨَﺎ ﺍﻟﻠّٰﻪُ ﻭَﻧِﻌْﻢَ ﺍﻟْﻮَﻛِﻴﻞُ என்று கூறி ஈடேற்றம் பெற்றுக்கொள்! மேலும், "நானோ எந்தப் பெறுமானமுமற்ற ஒருவனாவேன். இந்தப் பிரபஞ்சம் சர்வ ஞானமிக்க அதன் எஜமானனுடைய நாட்டத்தில் எனக்காக வசப்படுத்தித் தரப்படுவதற்கும், அதற்காக என்னிடமிருந்து ஓர் அகிலார்ந்த நன்றி வேண்டப்படுபதற்கும் எனது தகுதி என்ன?" என்று கூறாதே! ஏனெனில், உண்மையில் நீ உனது நஃப்ஸின் அடிப்படையிலும் உடலின் அடிப்படையிலும் எந்தப் பெறுமானமும் அற்றவனாவாய். ஆனால் பணிகள், பதவிகள் விடயத்தில் நீ இந்தப் பிரமாண்டமான பிரபஞ்சத்தின் துல்லியமான ஒரு பார்வையாளனாகவும் இந்த ஞானபூர்வமான வஸ்துகளின் பிரக்ஞைபூர்வமான, பேசும் நாவாகவும் பிரபஞ்சப் புத்தகத்தின் சிந்தித்துணரும் வாசகனாகவும் இறை துதியில் இருக்கும் வஸ்துகளை வியந்து ரசிக்கின்ற ரசிகனாகவும் வணக்கத்தில் இருக்கும் வஸ்துகளின் மரியாதைக்குரிய மேற்பார்வையாளனாகவும் இருக்கின்றாய். மனிதனே! தாவரத் தன்மை வாய்ந்த உனது உடலின் அடிப்படையிலும் மிருகத் தன்மை வாய்ந்த உனது நஃப்ஸின் அடிப்படையிலும் பார்த்தால் நீ சின்னஞ் சிறிய ஒரு புள்ளியாகவும் மிகத் தாழ்ந்த ஒரு கூறாகவும் மிக வறிய ஒரு படைப்பாகவும் மிக நலிவான ஒரு விலங்காகவும் வெள்ளம் போன்று கரைபுரண்டோடும் இந்தப் படைப்புகளுக்கு மத்தியில் அள்ளுண்டு செல்கின்றாய். ஆனால் மனிதன் இறை காதலின் ஒளியைப் பொதியப்பெற்ற ஈமானிய ஜோதியாலும் அதனைக் கொண்டு ஒளிரும் இஸ்லாமிய விழுமியங்களாலும் பூரணத்துவத்தை அடைந்தால் மானுடத் தன்மை வாய்ந்த ஆத்மாவின் அடிப்படையில் அடிமைத்துவத்தை உடைய ஓர் அரசனாக, கூறுகளுக்கு மத்தியில் ஒரு மொத்தமாக, சிறுமைக்கு மத்தியில் ஓர் அகிலமாக, தாழ்மைக்கு மத்தியில் அகிலார்ந்த பார்வையும் பதவியும் உடைய ஒரு பார்வையாளனாக மாறிவிடுகின்றாய். அப்போது உன்னால் "என்னுடைய பேரன்பும் அருளும் மிக்க இரட்சகன் இந்த உலகை எனக்கான ஓர் இல்லமாக ஆக்கி, சந்திரனையும் சூரியனையும் அந்த வீட்டின் விலக்காகவும் வசந்த காலத்தை ஒரு மலர்க் கூடையாகவும் கோடை காலத்தை ஓர் ஆகார விரிப்பாகவும் விலங்குககளை எனக்கான சேவகர்களாகவும் தாவரங்களை அந்த வீட்டின் அலங்காரப் பொருட்களாகவும் ஆக்கினான்" என்று கூற முடியும். முடிவாக: மனிதன் நஃப்ஸுக்கும் ஷைத்தானுக்கும் வழிப்பட்டால் அஸ்ஃபல ஸாஃபிலீன் என்ற அதலபாதாலத்தில் வீழ்வான். சத்தியத்துக்கும் குர்ஆனுக்கும் செவிசாய்த்தால் ஆஃலாயு இல்லிய்யூன் என்ற சங்கையான அந்தஸ்துக்கு உயர்ந்து, பிரபஞ்ச விருட்சத்தின் மிகச் சிறந்த கனிகளுள் ஒன்றாக அதாவது படைப்பின் மிகச் சிறந்த மிக அழகிய பதத்தை உடையவனாக மாறிவிடுவான்.
மனிதன் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஏகப்பட்ட திறன்களுடன் இந்த உலகுக்கு ஓர் உத்தியோகத்தனாக அல்லது ஒரு விருந்தாளியாக அனுப்பப்பட்டுள்ளான். அவனுக்குக் கொடுக்கப்பட்ட ஆற்றல்களுக்கமைய மகத்தான சில பணிகளும் அவன் மீது சுமத்தப்பட்டுள்ளன. மேலும் மனிதன் அந்தப் பணிகளைச் செய்ய வேண்டும் என்பதற்காகவும் தனக்குரிய இலக்கை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் மகத்தான சுபசோபனங்களும் கடுமையான எச்சரிக்கைகளும் செய்யப்படுகின்றான். அந்த வகையில் அஹ்ஸனி தக்வீம் என்பதன், அதாவது மிக அழகிய, மிகச் சிறத்த பதம் என்பதன் தாத்பரியம் விளங்க வேண்டும் என்பதற்காக மனிதன் மீது சுமத்தப்பட்டுள்ள பணிகளினதும் உபூதியத்தினதும் அடிப்படைகளை இவ்விடத்தில் சுருக்கமாகக் குறிப்பிடுகின்றோம். ஆம், மனிதன் இந்தப் பிரபஞ்சத்துக்குள் பிரவேசித்த பின்னர் அவன் மீது இரண்டு வகையான வணக்கங்கள் கடமையாகின்றன. ஒன்று மறைவான வணக்கமாகும். இது சிந்தனை சார்ந்ததாகும். அடுத்தது, நேரடித் தொடர்பாடலை ஒத்த வணக்கங்களும் முனாஜாத்துகளுமாகும். முதலாவது வகை: பிரபஞ்சத்தில் புலனாகும் மாட்சிமைமிக்க தெய்வீகப் பரிபாலிப்பை அதற்கு அடிபணிந்து இணக்கமாகச் மூலம் உளப்பூர்வமாக உண்மைப்படுத்தி, அதன் பூரணத்துவத்தையும் அழகையும் வியப்போடு பார்த்து ரசிப்பதாகும். பின்னர் புனிதமான திருநாமங்களுடைய கலை வண்ணங்களாகத் திகழும் அற்புதமான கலைப் படைப்புகளை பரஸ்பரம் படிப்பினைக்காக எடுத்துக் காட்டுவதன் மூலம் அறைகூவலர்களாகவும் சான்றுபகர்பவர்களாகவும் இருப்பதாகும். பின்னர், ஆத்மார்த்தமான செல்வ ஊற்றுகளாகத் திகழும் ரப்பானிய நாமங்களின் புதையல்களைக் கிரகிப்புத் தராசில் நிறுத்து, உள்ளத்தின் உணர்வுகளால் அவற்றின் ஈடிணையற்ற பெறுமதியை உணர்ந்து கொள்வதாகும். பின்னர், குத்ரத் கரங்களால் எழுதப்பட்ட தூதுக் கடிதங்களாகத் திகழும் வஸ்துகளை வானம், பூமி என்று ஒவ்வொரு பக்கமாகப் புரட்டி வியப்போடு சிந்தனை செய்வதாகும். பின்னர், வஸ்துகளில் காணப்படும் அழகையும் அழகிய கலையம்சங்களையும் ஆவலோடு ரசித்து, அதன் மூலம் அவற்றின் அழகிய படைப்பாளனைப் பற்றிக் கிடைக்கின்ற அறிமுகத்தால் அவன் மீது காதல்வயப்படுவதாகும். பின்னர் அவற்றின் பரிபூரணத்துவமான படைப்பாளனுடைய சந்நிதானத்துக்கு உயர்வதற்காகவும் அவனது பிரத்தியேகப் பார்வையைத் தன்பால் ஈர்ப்பதற்காகவும் தாகிப்பதாகும். இரண்டாவது வகை: இது நேரடியாக ஆஜராகின்ற, தொடர்பாடுகின்ற பதவியாகும். சிருஷ்டிகளிலிருந்து நேரடியாக சிருஷ்டிகர்த்தாவை நோக்கித் திரும்புவதாகும். மாட்சிமைமிக்க படைப்பாளன் அற்புதமான படைப்புகளின் மூலம் தன்னை அறிமுகம் செய்ய நாடுகின்றான் என்பதைக் காண்கின்ற மனிதன் ஈமான் மூலமும் மஃரிபத் மூலமும் பதிலளிக்கின்றான். பின்னர் பேரன்பும் அருளும் மிக்க இரட்சகன் அளவற்ற அருட்கொடைகள் மூலம் தன்பால் நேசத்தை நாடுகின்றான் என்பதைக் கண்டு, அதற்குப் பகரமாக அந்த இரட்சகனிடம் பரிசுத்தமான காதலையும் முழுமையான கட்டுப்பாட்டையும் வெளிப்படுத்துவதன் மூலம் அவனுடைய நேசத்தைப் பெறுகின்றான். பின்னர் சர்வ தயாளனாக இருக்கும் அருளாளன் ஆன்மீக மற்றும் லௌகீக ரீதியான எண்ணற்ற அருட்கொடைகள் மூலமும் அவற்றின் சுவைகள் மூலமும் தன்னைப் பராமரிக்கிறான் என்பதைக் கண்டு, அதற்குப் பகரமாக தனது செயல்கள் மூலமும் நிலைமைகள் மூலமும் நாவின் மூலமும் முடியுமாக இருந்தால் ஒட்டுமொத்த உணர்வுகள், உறுப்புகளின் மூலமும் நன்றியையும் புகழையும் சமர்ப்பிக்கிறான். பின்னர் பேரழகும் கீர்த்தியும் மிக்க இரட்சகன் வஸ்துகள் என்ற கண்ணாடிகளில் தனது மாட்சிமையையும் பூரணத்துவத்தையும் கீர்த்தியையும் பேரழகையும் பிரதிபலிக்கச் செய்து கவனங்களைத் தன்பால் ஈர்க்கிறான் என்பதைக் காண்கிறான். அதற்குப் பகரமாக "அல்லாஹு அக்பர், ஸுபுஹானல்லாஹ்" என்று கூறி பணிவோடும் வியப்போடும் காதலோடும் ஸுஜூதில் வீழ்கின்றான். பின்னர் அந்த முத்லக்கான செல்வந்தன் எல்லையற்ற ஒரு பரோபகாரத்துடன் தனது முடிவற்ற செல்வங்களையும் அருட் பொக்கிஷங்களையும் காண்பிப்பதைக் காண்கிறான். அதற்கு முன்னால் சுத்த வறிய நிலையிலுள்ள மனிதன் கண்ணியத்தோடும் மரியாதையோடும் நன்றியோடும் ஆதரவு வைத்து அவற்றை வேண்டுவான். பின்னர் மாட்சிமைமிக்க படைப்பாளன் பூமிப் பரப்பை ஒரு காட்சிக் கூடமாக ஆக்கி அதில் எல்லாவிதமான அற்புதப் படைப்புகளையும் காட்சிக்கு வைத்திருப்பதைக் காண்கிறான். அவனும் அதற்குப் பகரமாக "மாஷா அல்லாஹ்" என்று வாழ்த்துகளாலும் "பாரகல்லாஹ்" என்று விருப்பத்தாலும் "சுபுஹானல்லாஹ்" என்று வியப்பாலும் "அல்லாஹு அக்பர்" என்று மகிழ்ச்சி, பாராட்டுகளாலும் பதிலளிப்பான். பின்னர் வாஹிதுல் அஹத் ஆகிய ஏக இரட்சகன் இந்தப் பிரபஞ்ச மாளிகையில் நகல் செய்யப்பட முடியாத முத்திரைகள் மூலமும், ஈடிணையற்ற இலாஞ்சனைகள் மூலமும் தனிச் சிறப்பு மிக்க விதிகள் மூலமும் ஒட்டுமொத்த வஸ்துகளிலும் வஹ்தத்தின் முத்திரையையும் தவ்ஹீதின் சான்றுகளையும் செதுக்கி வைத்துள்ளதையும் பிரபஞ்சமெங்கும் வஹ்தானியத்துடைய கொடியை ஏற்றி வைத்திருப்பதையும் தனது ருபூபியத்தைப் பிரகடனம் செய்வதையும் காண்கிறான். இதற்குப் பகரமாக மனிதன் ஏற்பின் மூலமும் உண்மைப்படுத்தல் மூலமும் ஈமான் மூலமும் தவ்ஹீத் மூலமும் தெளிவின் மூலமும் புரிதல் மூலமும் ஷஹாதத் மூலமுன் உபூதியத் மூலமும் பதிலளிக்கின்றான். ஆம், இந்த வகையான இபாதத்தின் மூலமும் சிந்தனையின் மூலமும் மனிதன் உண்மையான மனிதனாக மாறுகின்றான். தான் மிகச் சிறந்த படைப்பு என்பதையும் படைப்பின் மிகச் சிறந்த பதத்தை உடையவன் என்பதையும் பறைசாற்றுகின்றான். ஈமானிய வலிமையின் மூலம் பூமியில் அமானிதத்துக்குத் தகுந்த, மிக விசுவாசமான ஒரு பிரதிநிதியாக ஆகிறான். அஹ்ஸனி தக்வீம் என்ற மிகச் சிறந்த பதத்தில் படைக்கப்பட்ட பின்னர் தெரிவுத் துஷ்பிரயோகத்தின் மூலம் அஸ்ஃபல ஸாஃபிலீன் என்ற அதல பாதாளத்தை நோக்கிப் பயணிக்கும் பொடுபோக்குக்கார மனிதனே! நானும் உன்னைப் போன்று வாலிப போதையில் மூழ்கி உலகை அழகானதாகவும் இனிமையானதாகவும் எண்ணிக்கொண்டிருந்த ஒரு சமயம் வயோதிபத்தின் அதிகாலையில் விளித்தெழுந்தேன். அந்தக் கணம் நான் அழகாக எண்ணியிருந்த உலகத்தைப் பார்க்கின்ற முகம் எந்த அளவு அசிங்கமாக இருந்தது என்பதையும் மறுமையைப் பார்க்கின்ற முகம் எந்த அளவு அழகானதாக இருந்தது என்பதையும் பதினேழாவது வார்த்தையின் இரண்டாவது அத்தியாயத்தில் இருக்கும் சத்தியத்தை உரைக்கும் இரண்டு கவிதைகளில் பார்க்க முடியும். முதலாவது கவிதை: நான் வழிகேடர்களுடைய நிலையில் -ஆனால் போதையில் மூழ்காத நிலையில்- இருக்கும் போது கண்ட பொடுபோக்குக் காரர்களின் பொடுபோக்குத் திரைக்குப் பின்னாலிருக்கும் ஆன்மீக உலகின் அவல நிலையை விபரிக்கின்றது. இரண்டாவது கவிதை: நேர் வழியிலுள்ளோரின் ஆன்மீக உலகம் எந்த அளவு நிம்மதிகளால் நிறைந்தது என்பதை விபரிக்கின்றது. இவை ஆரம்பமாக எழுதப்பட்ட வடிவிலேயே உள்ளன. கவிதையை ஒத்தவையாக இருப்பினும் அவை கவிதையல்ல. سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ رَبِّ اش۟رَح۟ لٖى صَد۟رٖى وَيَسِّر۟ لٖٓى اَم۟رٖى وَاح۟لُل۟ عُق۟دَةً مِن۟ لِسَانٖى يَف۟قَهُوا قَو۟لٖى اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلَى الذَّاتِ ال۟مُحَمَّدِيَّةِ اللَّطٖيفَةِ ال۟اَحَدِيَّةِ شَم۟سِ سَمَاءِ ال۟اَس۟رَارِ وَ مَظ۟هَرِ ال۟اَن۟وَارِ وَ مَر۟كَزِ مَدَارِ ال۟جَلَالِ وَ قُط۟بِ فَلَكِ ال۟جَمَالِ اَللّٰهُمَّ بِسِرِّهٖ لَدَي۟كَ وَ بِسَي۟رِهٖ اِلَي۟كَ اٰمِن۟ خَو۟فٖى وَ اَقِل۟ عُث۟رَتٖى وَ اَذ۟هِب۟ حُز۟نٖى وَ حِر۟صٖى وَ كُن۟ لٖى وَ خُذ۟نٖى اِلَي۟كَ مِنّٖى وَ ار۟زُق۟نِى ال۟فَنَاءَ عَنّٖى وَ لَا تَج۟عَل۟نٖى مَف۟تُونًا بِنَف۟سٖى مَح۟جُوبًا بِحِسّٖى وَاك۟شِف۟ لٖى عَن۟ كُلِّ سِرٍّ مَك۟تُومٍ يَا حَىُّ يَا قَيُّومُ يَا حَىُّ يَا قَيُّومُ يَا حَىُّ يَا قَيُّومُ وَ ار۟حَم۟نٖى وَار۟حَم۟ رُفَقَائٖى وَ ار۟حَم۟ اَه۟لَ ال۟اٖيمَانِ وَ ال۟قُر۟اٰنِ اٰمٖينَ يَا اَر۟حَمَ الرَّاحِمٖينَ وَ يَا اَك۟رَمَ ال۟اَك۟رَمٖينَ وَ اٰخِرُ دَع۟وٰيهُم۟ اَنِ ال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ

