Sözler

The Twenty-Seventh Word

ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

ஐந்து அல்லது ஆறு வருடங்களுக்கு முன்பதாக அரபு மொழியில் எழுதப்பட்ட ஒரு சிறு நூலில் இஜ்திஹாத் தொடர்பான விடயங்களைப் பேசியிருந்தேன். இப்போது இரண்டு சகோதரர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்த விடயத்தில் எல்லை மீறிச் செல்பவர்களுக்கு அவர்களுடைய எல்லைகளைத் தெளிவுபடுத்துவதற்காக இஜ்திஹாத் தொடர்பான இந்த வார்த்தை எழுதப்பட்டது. بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ وَلَو۟ رَدُّوهُ اِلَى الرَّسُولِ وَ اِلٰٓى اُولِى ال۟اَم۟رِ مِن۟هُم۟ لَعَلِمَهُ الَّذٖينَ يَس۟تَن۟بِطُونَهُ مِن۟هُم۟ இஜ்திஹாதுடைய வாசல் திறந்தே உள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் அதற்குள் நுழைவதற்கான ஆறு தடைகள் காணப்படுகின்றன.

§2

கடுமையான புயல் காற்று வீசும் பணிக் காலத்தில் சிறிய ஓட்டைகளைக் கூட அடைத்து விடுவதே பொருத்தமான செயலாகும். மாறாகப் புதிய கதவுகளை அமைப்பது அறிவுடமையல்ல. அவ்வாறே வெள்ளம் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் போது திருத்த வேலைகளுக்காக சுவர்களில் ஓட்டைகளைப் போடுவது வெள்ளத்தில் அள்ளுண்டு செல்வதற்கே காரணியாக அமையும். இவ்வாறுதான் ஹராமான விடயங்களும் அந்நிய வழக்கங்களும் மேலோங்கி பித்அத்களும் வழிகேடுகளும் செல்வாக்குச் செலுத்தும் காலத்தில் இஸ்லாம் என்ற கோட்டையில் இஜ்திஹாத் என்ற பெயரில் புதுப் புதுக் கதவுகளைத் திறப்பதும் அதன் மூலம் சீர்குழைவுகளுக்குக் காரணமாக அமைவதும் இஸ்லாத்துக்குச் செய்யும் துரோகமாகும். இஸ்லாத்தை அழிப்பதற்கு ஒப்பான செயலாகும்.

§3

மார்க்கம் கடமையாக்கிய விடயங்களில் இஜ்திஹாத் நுழைய முடியாது. ஏனெனில் அவை தீர்க்கமாகவும் திட்டவட்டமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்டன. கூடவே அந்தக் கடமைகள் பிரதான ஆகாரங்களை அல்லது போஷனைக் கூறுகளைப் போன்றவையாகும். ஆனால் இன்றைய காலத்தில் இவையே அதிகமாகப் தட்டிக்கழிக்கப்பட்டுகின்றன. இத்தகைய ஒரு காலத்தில் எமது எல்லா உழைப்புகளையும் முயற்சிகளையும் இவற்றை உயிரூட்டி நிலைநாட்டுவதற்காக ஒன்றுதிரட்டி அர்ப்பணம் செய்வதே ஏற்றமானதாகும். நிலமை இவ்வாறிருக்க இஸ்லாத்தின் அடிப்படைகளாக அல்லாமல் தகவல்களாக அல்லது சிந்தனைகளாக இருக்கின்ற பகுதிகளில் புதுப் புது இஜ்திஹாத்களில் ஈடுபடுவது ஆரோக்கியமானதல்ல. கூடவே முன் சென்றவர்களுடைய மறுமையையும் இறை பொருத்தத்தையும் நோக்காகக் கொண்ட தூய இஜ்திஹாத்கள் எல்லாக் காலங்களின் தேவைகளுக்கும் போதுமான சிந்தனைகளாக இருக்கின்ற போது அவற்றை ஒதுக்கிவிட்டு ஒரு வகையான சுய முனைப்போடு புதிய இஜ்திஹாத்களை மேற்கொள்வது பித்அத்வாரியான துரோகமாகும்.

§4

சந்தையில் வெவ்வேறு பருவ காலங்களிலும் வெவ்வேறு கால சூழல்களிலும் வெவ்வேறான பொருட்கள் பெறுமதி மிக்கவையாக மாறுகின்றன. அவ்வாறே உலகம் என்ற சந்தையில் மனித சமூகத்துக்கும் மனித நாகரிகத்துக்கும் மத்தியில் ஒவ்வொரு யுகத்திலும் வெவ்வேறான பண்டங்கள் பெறுமதி அடைந்து பிரபல்யம் பெறுகின்ற போது சந்தையில் குறித்த அந்த யுகத்துக்குரிய பண்டங்களே கோலாகலமாகக் காட்சிக்கு வைக்கப்படும். அப்போது அந்த சமூகத்தினதும் நாகரிகத்தினதும் பார்வைகள், ஈடுபாடுகள் சிந்தனைகள் என்பன அந்தப் பண்டங்களையே சுற்றிச் சுழலும். உதாரணமாக, இன்றைய காலத்தில் அரசியல் என்ற பண்டத்துக்கும் உலக வாழ்வை மேம்படுத்திக்கொள்கின்ற ஆவலுக்கும் விஞ்ஞான, தொழில்நுட்ப மற்றும் தத்துவவியல் சித்தாந்தங்களுக்கும் கிடைத்திருக்கின்ற மவுசைக் குறிப்பிடலாம். ஆனால் ஸலஃபுஸ் ஸாலிஹீன்களுடைய காலத்துச் சந்தையில் படைப்பாளனின் பொருத்தத்தைப் பெற்றுத் தரக்கூடிய செயல்களை அவனுடைய கலாமிலிருந்து தேடிப் பெற்றுக்கொள்வதும் குர்ஆன் மற்றும் நுபுவ்வத்துடைய ஒளியின் மூலம் தெட்டத் தெளிவாகப் பிரகாசிக்கின்ற மறுமை உலகில் நித்திய நிம்மதியான வாழ்வை வெற்றியீட்டித் தரக்கூடிய வஸீலாக்களை ஆராய்வதுமே மிகவும் கேள்விக்குரிய பண்டங்களாகக் காணப்பட்டன. அத்தகைய ஒரு காலத்தில் உள்ளங்களும் ஆன்மாக்களும் சிந்தனைகளும் முழு மொத்தமாக வானங்கள் பூமியின் இரட்சகனாகிய அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தரக்கூடிய செயல்களை விளங்கிக்கொள்வதில் குறியாக இருந்தமையினால் பேச்சுகள், உபதேசங்கள், நிகழ்வுகள், நிலைமைகள், கலைகள் என்று சமூக வாழ்வின் அத்தனை அம்சங்களும் அவற்றோடு பின்னிப் பிணைந்தவையாகவே காணப்பட்டன. எனவே யாரொருவரிடம் ஓர் அழகிய திறன் காணப்படுமோ அந்தத் திறனூடாக அந்த உள்ளம் பிரக்ஞையின்றியே அனைத்திலிருந்தும் மஃரிபத்துடைய பாடங்களைக் கற்றுக்கொள்ள முடியுமான நிலை காணப்பட்டது. நிகழ்வுகள், நிலைமைகள் அனைத்தும் அந்த உள்ளத்துக்கு மஃரிபத்துடைய பாடங்களைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்களைப் போன்றே இருந்தன. அதாவது ஒவ்வொரு விடயமும் அந்த மனிதனுடைய இயல்பிலும் ஆற்றலிலும் இஜ்திஹாதுக்கான முதிர்ச்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்துத. இந்த இயல்பான பாடம் எந்த அளவு பிரகாசமானதெனில் நெருப்பின்றி ஒளி கிடைப்பதைப் போன்று ஈடுபாடின்றியே இஜ்திஹாதுக்கான முதிர்ச்சியை வழங்கிவிடக்கூடியதாக இருந்தது. இவ்வாறு இயல்பான அமைப்பில் பாடங்களைக் கற்றுக்கொள்ளும் அழகிய ஆற்றல் கொண்ட ஒருவர் இஜ்திஹாதுக்கான முயற்சியில் இறங்க ஆரம்பிக்கின்ற போது எப்போதும் எரிவதற்குத் தயாரான தீக்குச்சியை ஒத்த நிலையை அடைந்திருந்த அவருடைய ஆற்றல் உடனடியாக “நூருன் அலா நூர்” இல் பொதிந்துள்ள இரகசியத்துக்குப் பாத்திரமானதாக மாறிவிடும். எனவே குறுகிய ஒரு காலத்துக்குள் முஜ்தஹித் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுக்கொள்வார். ஆனால் இன்றைய காலத்தில் ஐரோப்பிய நாகரிகத்தின் அடக்குமுறை காரணமாகவும் இயற்கை விஞ்ஞானத்தின் மேலாதிக்கம் காரணமாகவும் கனதியான வாழ்க்கைத் தேவைகள் காரணமாகவும் சிந்தனைகள் சிதறி, உள்ளம் அலைக்கழிந்து முயற்சிகளும் ஈடுபாடுகளும் கூறு போடப்பட்டுள்ளன. மனமோ ஆன்மீக விடயங்களுக்கு அந்நியமான நிலையை அடைந்துள்ளது. இதோ இந்தக் காரணத்தினால்தான் இந்தக் காலத்துக்குரிய ஒருவர் நான்கு வயதில் குர்ஆனை மனனம் செய்து ஆலிம்களுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட முஜ்தஹித் ஸுஃப்யான் இப்னு உயைனா அவர்களுடைய அறிவாற்றலையும் விவேகத்தையும் கொண்டிருந்தாலும்கூட சுஃப்யான் அவர்கள் இஜ்திஹாத் செய்வதற்கான தகுதியை அடைந்த காலத்தைவிட பத்து மடங்கு அதிகமான காலம் இந்தக் காலத்துக்குரிய அந்த மனிதருக்குத் தேவைப்படும். ஸுஃப்யான் அவர்கள் பத்து வருடத்தில் இஜ்திஹாதுக்கான தகுதியை அடைந்திருந்தால் இந்த மனிதருக்கு அந்த இடத்தை எட்டுவதற்கு நூறு வருடங்கள் தேவைப்படும். ஏனெனில் இஜ்திஹாதுடைய விடயத்தில் ஸுஃப்யான் அவர்களுடைய பகுப்பாய்வு ரீதியான அறிவுப் பணியானது நன்மை தீமைகளைப் பகுத்தறியும் வயதிலிருந்து இயல்பாகவே ஆரம்பித்தும்விடுகின்றது. பின்னர் மெது மெதுவாக முதிர் நிலையடைந்து எல்லா விடயங்களிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்கின்ற பிரகாசமான அந்தஸ்தை அடையும். இது எரிவதற்குத் தயாராக உள்ள தீக்குச்சியின் நிலையை ஒத்ததாகும். ஆனால் இந்தக் காலத்தில் அவருக்கு ஈடான ஒருவரை எடுத்துக்கொண்டால் மனம் விஞ்ஞானம் சார்ந்த சித்தாந்தங்களையும் பகுத்தறிவு அரசியலையும் உள்ளம் உலக வாழ்வையும் சுற்றிச் சுழன்று கொண்டிருப்பதால் இவற்றோடுள்ள ஈடுபாட்டின் அளவு அவருடைய திறன் ஷரீஅத்துடைய விடயங்களில் இஜ்திஹாத் செய்கின்ற ஆற்றலைவிட்டும் இஜ்திஹாதின் போது சரியான முடிவுகளுக்கு வருகின்ற தன்மையைவிட்டும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கும். எனவே இவரால் “நானும் அவரைப் போன்று புத்திக் கூர்மையும் விவேகமும் ஆற்றலும் உடையவனாக இருக்கின்றேன். ஏன் அவருடைய நிலையை என்னால் எட்ட முடியாது?” என்று கேட்க முடியாது. அதற்கான தகுதியும் இல்லை.

§5

ஓங்கி வளர்வதற்கான விஸ்தரிக்கும் உந்தல் ஒரு வஸ்தில் காணப்பட்டால் -அது உள்ளிருந்துமுள்ள ஓர் உந்தலாக இருக்கின்ற காரணத்தினால்- அந்த வஸ்துடைய உடலுக்கு முதிர்ச்சியை வழங்குகின்ற காரணியாகவே அமையும். ஆனால் அந்தப் பொருளின் வளர்ச்சிக்காக வெளியிலிருந்து கொடுக்கப்படுகின்ற ஒரு விஸ்தரிக்கும் உந்தலைப் பொருத்தவரை அது அந்த உடலில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக சேதத்தையே விளைவிக்கும். அவ்வாறே ஸலஃபுஸ் ஸாலிஹீன்களைப் போன்று பூர்த்தியான தக்வாவுடைய வாயிலால் மார்க்கம் விதியாக்கிய கட்டாயக் கடமைகளை எடுத்தொழுகும் பாதையில் இஸ்லாத்தின் எல்லைக்குள் முழுமையாக நுழைந்தவர்களிடம் இஜ்திஹாதுக்கான ஆற்றலும் ஓங்கி வளர்வதற்கான விஸ்தரிக்கும் உந்தலும் காணப்பட்டால் அது பூரணத்துவமும் முதிர்ச்சியுமாகும். மாறாக கடமைகளை அசட்டை செய்து, உலக வாழ்வை மறுமை வாழ்வுக்குப் பதிலாகத் தெரிவு செய்து, சடவாத சித்தாந்தங்களின் தாக்கத்துக்குள் உள்ளவர்களிடம் காணப்படும் இஜ்திஹாதுக்கான ஆற்றலும் ஓங்கி வளர்வதற்கான விஸ்தரிக்கும் உந்தலும் இஸ்லாத்தின் உடலை சேதப்படுத்துவதற்கும் கழுத்தில் உள்ள ஷரீஅத்துடைய சங்கிலியை அகற்றுவதற்குமே காரணிகளாக அமையும்.

§6

மூன்று அம்சங்கள் இந்தக் கால இஜ்திஹாத்களை அதன் அகிலார்ந்த தன்மையிலிருந்து இறக்கி உலகியல் சார்ந்தவையாக மாற்றிவிடுகின்றன. ஆனால் ஷரீஅத் அகிலார்ந்ததாக இருப்பதால் அதில் செய்யப்படுகின்ற தூய இஜ்திஹாத்களும் கூட ஷரீஅத்தின் மறைவான தீர்ப்புகளை வெளிப்படுத்துகின்ற காரணத்தினால் அகிலார்ந்தவையாகும். முதலாவது: ஒரு தீர்ப்பிலுள்ள ஹிக்மத் வேறு, இல்லத் வேறாகும். ஹிக்மத்தும் நலன்களும் தெரிவு செய்வதற்கான காரணிகளே ஒழிய தீர்ப்பை அவசியப்படுத்துகின்ற காரணிகளோ அல்லது தீர்ப்பின் இருப்புக்கான காரணிகளோ அல்ல. ஆனால் இல்லத் அதாவது மூல காரணியைப் பொருத்தவரை அது தீர்ப்பின் இருப்புக்கான காரணியாகும். உதாரணமாக, பயணத்தின் போது தொழுகை கஸ்ர் செய்யப்படும். அதாவது இரண்டு ரகஅத்களாக சுருக்கித் தொழப்படும். ஷரீஅத்துடைய இந்த சலுகைக்கான மூல காரணி பயணமாகும். அதற்கான ஹிக்மத் கஷ்டமாகும். எனவே பயணத்தில் இருக்கும் போது எந்தக் கஷ்டமும் இல்லாவிட்டாலும் தொழுகை கஸ்ர் செய்யப்படும். ஏனெனில் இங்கு மூல காரணி காணப்படுகின்றது. ஆனால் பயணம் இல்லாத போது ஆயிரம் கஷ்டங்கள்தான் காணப்பட்டாலும் அது தொழுகையை கஸ்ர் செய்வதற்கான மூல காரணியாக அமையாது. இதோ இந்த உண்மைக்கு முற்றிலும் முரணாக இந்தக் காலத்து ஆய்வுகள் ஹிக்மத்களையும் நலன்களையும் இல்லத்தின் இடத்துக்குப் பிரதியீடு செய்து அவற்றின் மீது தீர்ப்புகளைக் கட்டியெழுப்புகின்றன. எனவே நிச்சயமாக இப்படிப்பட்ட இஜ்திஹாத்கள் உலகியல் சார்ந்தவையாகும்; அகிலார்ந்தவையாக அமைய முடியாது. இரண்டாவது: இந்தக் காலத்துப் பார்வைகளும் ஆய்வுகளும் இயல்பளவில் உலகியல் ரீதியான விமோசனத்தையே முதன்மை இலக்காகக் கொண்டிருக்கின்றன. எனவே தீர்ப்புகளும் இயல்பாகவே உலகம் சார்ந்தவையாகவே மாறிவிடுகின்றன. ஆனால் ஷரீஅத்துடைய இயல்பான பார்வையில் முதலாவதாக மறுமை விமோசனமும், மறுமை விமோசனத்துக்கான ஊடகம் என்ற வகையில் இரண்டாம் நிலையில் இம்மை விமோசனமும் கருத்திற்கொள்ளப்படும். இந்த வகையில் இந்தக் காலத்து ஆய்வுகளும் பார்வைகளும் ஷரீஅத்துடைய ரூஹுக்கு அந்நியமானவையாகும். எனவே ஷரீஅத்துடைய பெயரால் இஜ்திஹாத் செய்யவும் முடியாது. மூன்றாவது: ﺍِﻥَّ ﺍﻟﻀَّﺮُﻭﺭَﺍﺕِ ﺗُﺒِﻴﺢُ ﺍﻟْﻤَﺤْﻈُﻮﺭَﺍﺕِ அதாவது, “நிர்ப்பந்தம் ஹராமை ஹலாலுடைய நிலைக்குக் கொண்டு வரும்” என்ற விதி பொதுவானதல்ல. நிர்ப்பந்தம் என்பது ஹராமான வழியில் ஏற்படாதிருந்தால் மாத்திரமே ஹராத்தை ஹலாலாக்குவதற்கான காரணியாக அமையும். மாறாகத் துஷ்பிரயோகம், சட்டவிரோதமான நடவடிக்கைகள் போன்ற காரணிகளால் நிர்ப்பந்தம் ஏற்படுமாக இருந்தால் அப்போது ஹராம் ஹலாலாக மாறாது. எனவே சலுகை ரீதியான தீர்ப்புகளோ மண்ணிப்போ வழங்கப்பட முடியாது. உதாரணமாக, ஒரு மனிதன் தெரிவுத் துஷ்பிரயோகத்தின் மூலம் ஹராமான வழியில் சென்று போதைக்காளாகினால் ஷரீஅத்துடைய உலமாக்களின் முடிவுக்கமைய அவனை மண்ணிப்புக்குரியவனாகக் கொள்ள முடியாது. அவனுடைய விடயங்கள் அனைத்தும் அவனுக்கெதிராகவே அமையும். இந்த நிலையில் அவன் தலாக் செய்தால் தலாக் செல்லுபடியாகும். குற்றமிழைத்தால் குற்றத்துக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொள்வான். ஆனால் போதைக்காளாகியதில் தெரிவுத் துஷ்பிரயோகம் காரணியாக அமைந்திராவிட்டால் தலாக் செல்லுபடியாகாது. தண்டனையும் வழங்கப்படாது. அவ்வாறே மதுவுக்கு அடிமையாகிய ஒருவன் நிர்ப்பந்தம் என்ற அளவுக்கு அடிமையாகியிருந்தாலும் கூட அவனால் “நிர்ப்பந்த நிலையில் உள்ளேன், எனவே இது எனக்கு ஹலாலாகும்” என்று கூற முடியாது. ஆம், இந்தக் காலத்தில் பரவலான ஒரு வியாதியைப் போன்று நிர்ப்பந்தம் என்ற அளவுக்கு மனிதர்களை அடிமையாக்கியுள்ள ஏராளமான விடயங்கள் உண்மையில் தெரிவுத் துஷ்பிரயோகங்களாலும் ஆகுமாக்கப்படாத உந்தல்கள் மற்றும் ஈடுபாடுகளாலும் ஹராமான செயற்பாடுகளாலும் தோன்றியவையாகும். எனவே இவ்வாறான விடயங்கள் சலுகை ரீதியான தீர்ப்புகளுக்கோ ஹராத்தை ஹலாலாக்குவதற்கோ காரணிகளாக அமைய முடியாது. ஆனால் இந்தக் காலத்தில் இஜ்திஹாத் செய்பவர்கள் பரவலாக இவ்வாறான நிர்ப்பந்தங்களையும் ஷரீஅத்தில் தீர்ப்பு வழங்குவதற்கான காரணிகளாக வைத்துக்கொள்வதால் இவ்வாறான இஜ்திஹாத்கள் உலகியல் சார்ந்தவையாகவும் ஆசாபாசங்கள் சார்ந்தவையாகவும் தத்துவார்த்த சித்தாந்தங்கள் சார்ந்தவையாகவுமே இருக்கின்றன. இவை அகிலார்ந்தவையாகவோ ஷரீஅத் சார்ந்தவையாகவோ அமைய முடியாது. அதே சமயம் வானங்கள் பூமியின் படைப்பாளனுடைய தெய்வீகத் தீர்ப்புகளில் அல்லது அடியார்களுடைய இபாதத்களில் தலையீடு செய்வதென்பது படைப்பாளனுடைய ஆத்மார்த்தமான அனுமதி இல்லாத பட்சத்தில் நிராகரிக்கப்பட வேண்டியதாகும். உதாரணமாக சில பொடுபோக்கானவர்கள் இரண்டு காரணங்களுக்காக ஓர் இஸ்லாமியப் பாரம்பரியமாகத் திகழும் குத்பா போன்ற சில விடயங்களில் அரபு மொழியை நீக்கம் செய்து அவரவர் மொழிகளில் நிறைவேற்றுவதை சிறப்புக்குரியதாகக் கருதுகின்றனர். முதலாவது: நடப்பு அரசியல் விவகாரங்களைப் பாமர முஸ்லிம்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கான ஊடகமாகப் பயன்படுத்த முடியுமென்பதாகும். ஆனால் நடப்பு அரசியலைப் பொருத்தவரை அது பொய் புரட்டுகளும் சூழ்ச்சிகளும் ஷைத்தானியத்தும் கலப்படமான ஒரு தளமாக இருப்பதால் எப்போதும் ஷைத்தானிய ஊசலாட்டங்களால் ஆக்கிரமிக்கப்பட்டே காணப்படுகின்றது. மிம்பரோ இறை வஹியின் பிரச்சார மேடையாக இருப்பதால் இந்த அரசியல் ஊசலாட்டங்கள் அந்த உயர்ந்த இடத்தை ஆக்கிரமிக்கும் அருகதையற்றவையாகும். எனவே இந்தக் காரணத்தை வைத்து அரபு மொழியை நீக்கம் செய்ய முடியாது. இரண்டாவது காரணி: குத்பா என்பது குர்ஆனுடைய சில நஸீஹத்களை விளங்கிக் கொள்வதற்கான இடமாக இருக்கின்றது என்பதாகும். ஆம், முஸ்லிம் சமூகத்தில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தின் கடமைகளையும் திட்டவட்டமான தீர்ப்புகளையும் நடைமுறைப்படுத்தும் நிலை இருந்தால், அப்போது மேலதிகமாக பலதரப்பட்ட அர்த்தங்களுக்கு உடன்பாடான விடயங்களையும் நுணுக்கமான தகவல்களையும் மறைவான உபதேசங்களையும் விளங்கிக்கொள்வதற்காக அவரவர் அறிந்த மொழியில் குத்பா ஓதுவதும், -சாத்தியமாக இருந்தால்- குர்ஆனின் மொழிபெயர்ப்பும் [குறிப்பு: குர்ஆனிய அற்புதங்களோடு தொடர்பான இருபத்தைந்தாவது வார்த்தையில் குர்ஆனுக்கான உண்மையான மொழிபெயர்ப்பு சாத்தியமற்றது என்பதியக் காண்பித்துவிட்டது.] ஒரு வகையில் நியாயமானதாக அமைந்திருக்கும். ஆனால் இஸ்லாத்தின் எல்லோராலும் அறியப்பட்ட திட்டவட்டமான தீர்ப்புகளாகத் திகழும் தொழுகை, ஸகாத், நோன்பு போன்ற கடமைகளும் கொலை, விபச்சாரம், குடி போன்ற ஹராமான விடயங்களும் பரவலாகவே அசட்டை செய்யப்படுகின்றன. இந்த விடயங்கள் கடமை என்பதையோ அல்லது ஹராம் என்பதையோ அலாதியாகக் கற்றுக்கொள்ள வேண்டிய தேவை பாமர மக்கள் உற்பட யாருக்குமில்லை. அனைவரும் அறிந்தே இருக்கின்றனர். மாறாக நினைவூட்டல்கள் மூலமும் ஆர்வமூட்டல்கள் மூலமும் இஸ்லாமிய உணர்வையும் ஈமானிய வேட்கையையும் பசுமையாக்கி இஸ்லாத்தின் புனிதமான அந்தத் தீர்ப்புகளைக் கடைப்பிடிப்பதற்கான உந்து சக்தியை வழங்குவதே தேவையாக உள்ளது. குர்ஆன் ஓதப்படும் நேரத்திலும் அரபு மொழி மூல குத்பாக்களின் போதும் மிகவுமே ஜாஹிலான ஒரு பாமரனும் கூட அதில் நினைவூட்டப்படுகின்ற விடயங்களை சுருக்கமாகவேனும் விளங்கிக்கொள்வான். “இமாம் தனது பிரசங்கத்தில் ஈமானின், இஸ்லாத்தின் அடிப்படைகளையே நினைவூட்டுகிறார்” என்பதை விளங்கும் போது உள்ளத்தில் அவற்றின்பால் ஓர் ஈடுபாடு ஏற்படும். ஆம் எந்தப் பிரசங்கத்தால்தான் அர்ஷுல் ஆஃஸமிலிருந்து இறக்கப்பட்ட சங்கைமிக்க குர்ஆனின் ஒளி பாய்ச்சும் அற்புதமான நினைவூட்டல்களுக்கும் ஆர்வமூட்டல்களுக்கும் நிகராக முடியும்?

§7

ஸலஃபுஸ் ஸாலிஹீன்களான மிகப் பெரிய முஜ்தஹித்கள் ஒளியின் காலமாகவும் சத்தியத்தின் காலமாகவும் திகழ்ந்த ஸஹாபாக்களுடைய காலத்துக்கு மிக நெருக்கமானவர்களாக இருந்தமையினால் அங்கிருந்து திரைகளின்றி நேரடியாகக் கிடைத்த ஒளியைக் கொண்டு தூய்மையாக இஜ்திஹாத் செய்ய முடியுமானவர்களாக இருந்தனர். ஆனால் இந்தக் காலத்தில் இஜ்திஹாத் செய்பவர்களைப் பொருத்தவரை ஏராளமான திரைகளைத் தாண்டி மிகத் தொலைவிலுள்ள சத்தியங்களைத் தேடுவதால் அந்தக் காலத்தை ஒளியேற்றிய சத்தியத்தின் ஆத்மாவுடைய தெளிவான ஓர் எழுத்தையும் மிகுந்த சிரமத்துடனே கண்டு கொள்வார்கள். கேள்வி: ஸஹாபாக்களும் மனிதர்களே. எனவே அவர்கள் தவறுகள், குறைகளைவிட்டும் விடுதலை பெற்றவர்களாக இருக்க முடியாது. ஆனால் ஸஹாபாக்களுடைய நீதியும் உண்மையும் இஜ்திஹாத்கள் மற்றும் ஷரீஅத்துடைய தீர்ப்புகளின் அச்சாணியாகவும் ஆதாரமாகவும் உள்ளன. எந்த அளவுக்கெனில் “ஸஹாபாக்கள் ஒட்டுமொத்தமாகவே நீதியானவர்களாவர். உண்மையே உரைப்பார்கள்” என்பது உம்மத்தின் ஏகோபித்த முடிவாக உள்ளது. இதன் தாத்பரியம் என்ன? பதில்: ஆம் ஏறக்குறைய ஒட்டுமொத்த ஸஹாபாக்களும் சத்தியத்தின் மீது காதல் கொண்டவர்களாகவும் உண்மை மீது தாகம் கொண்டவர்களாகவும் நீதியில் வேட்கை உடையவர்களாகவுமே திகழ்ந்தார்கள். ஏனெனில் ஸஹாபாக்களுடைய காலத்தில் பொய்யின் அசிங்கமான முகம் அதன் அத்தனை அசிங்கங்களுடனும், உண்மை நேர்மை என்பவற்றின் அழகிய முகம் அதன் அத்தனை அழகியல்களுடனும் எந்த அளவு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டதெனில் இரண்டுக்கும் மத்தியிலான இடைவெளி விண்ணுக்கும் மண்ணுக்கும் மத்தியிலுள்ள இடைவெளி போன்று விசாலமாகக் காணப்பட்டது. முஸைலமதுல் க(z)ஸ்ஸாபுக்குரிய அஸ்ஃபல ஸாஃபிலீன் என்ற தாழ்வானவற்றில் மிகத் தாழ்ந்த அந்தஸ்துக்கும் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குரிய அஃலாயு இல்லிய்யூன் எனப்படும் உயர்வானவற்றில் மிக உயர்ந்த அந்தஸ்துக்கும் இடைப்பட்ட தொலைவில் உண்மையும் பொய்யும் பிரிந்து காணப்பட்டன. ஆம், முஸைலமாவை அஸ்ஃபல ஸாஃபிலீனுக்குத் தாழ்த்தியது பொய்யாக இருந்ததைப் போன்றே முஹம்மதுல் அமீன் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை அஃலாயு இல்லிய்யூனுக்கு உயர்த்தியது உண்மையும் நேர்மையுமாகும். ஸஹாபாக்களோ நுபுவ்வத் என்ற சூரியனின் பேரொளியால் பிரகாசிக்கின்ற சங்கையான உணர்வுகளையும் அழகிய பண்பாட்டு விழுமியங்களையும் சுமந்தவர்களாகத் திகழ்ந்தார்கள். இப்படிப்பட்ட ஸஹாபாக்கள் முஸைலாமாவுடைய நகைப்புக்கிடமான அழுக்கு மூட்டையில் காணப்படும் இழிவுக்கும் அழிவுக்கும் காரணியான பொய்யை நாடிச் செல்வார்களா? நிச்சயமாக இல்லை. அவர்கள் குஃப்ரை எவ்வாறு வெறுத்தொதுக்கினார்களோ குஃப்ரின் இணைபிரியா நண்பனாகிய பொய்யையும் அவ்வாறே வெறுத்தொதுக்கினார்கள் என்பது திட்டவட்டமானதாகும். அவ்வாறே கண்ணியத்துக்கும் புகழுக்குமான காரணியாகளாகவும் ஈடேற்றத்துக்கான ஏணிப் படிகளாகவும் நுபுவ்வத்தின் மகுடமாகத் திகழ்ந்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய சங்கையான செல்வங்களுள் மிகப் பெறுமதியான செல்வங்களாகவும் பேரழகானவையாகவும் தமது பேரழகின் மூலம் அந்த சமூகத்தின் சமூக வாழ்வை ஒளியேற்றி வளப்படுத்திய சாதனங்களாகவும் திகழ்ந்த உண்மை, நேர்மை, வாய்மை, சத்தியம் என்பவற்றின் மீது அந்த ஸஹாபாக்கள் பேரன்பும் காதலும் தாகமும் மோகமும் கொண்டவர்களாக இருந்தார்கள். இது அந்த உத்தம ஸஹாபாக்களைப் பொருத்தவரை நிர்ப்பந்தம் என்ற அந்தஸ்தில் திட்டவட்டமானதாகும். குறிப்பாக ஷரீஅத்தை அறிவிப்புச் செய்வதிலும் பிரச்சாரம் செய்வதிலும் இதற்கு மாற்றமானது அவர்களைப் பொருத்தவரை சிந்தனைக்கே அப்பாற்பட்டதாகும். ஆனால் இந்தக் காலத்தில் உண்மையும் பொய்யும் தோளோடு தோள் நிற்கின்ற அளவு இரண்டுக்கும் மத்தியிலான இடைவெளி குறைந்துள்ளது. மிகச் சுலபமாக உண்மை, வாய்மையிலிருந்து பொய்க்குக் கடந்து சென்று விடுகின்றனர். அரசியல் வியூகம் என்ற பெயரில் பொய் வாய்மைக்குப் பதிலாகத் தெரிவு செய்யப்படுகின்றது. மொத்தத்தில் மிக அசிங்கமான பொருட்கள் மிகச் சிறந்த பொருட்களோடு ஒரே கடையில் அருகருகே வைத்து ஒரே விலைக்கு விற்கப்படும் போது இப்படிப்பட்ட ஒரு கடைக்காரனின் பேச்சை நம்பி நல்லதை வாங்குவதற்காக கண்ணை மூடிக்கொண்டு அங்கு செல்ல முடியாது. மிக உன்னதமான சத்தியங்களின் மூலத்திலுள்ள உண்மையும் நேர்மையும் அந்தக் கடையில் கிடைக்காது.

§8

யுகங்களுக்கேற்ப ஷரீஅத்கள் மாற்றம் காணலாம். ஏன் ஒரே யுகத்தில் வெவ்வேறு கோத்திரங்களுக்கு வெவ்வேறு நபிமார்கள் வெவ்வேறு ஷரீஅத்களைக் கொண்டு வந்துள்ளனர். ஹாதமுல் அன்பியா ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்குப் பின்னர் அண்ணவர்கள் கொண்டு வந்த ஷரீஅதுல் குப்ரா எல்லாக் காலங்களுக்கும் எல்லா சமூகங்களுக்கும் போதுமானதென்பதால் பல்வேறு ஷரீஅத்களுக்கான தேவை நீங்கிவிட்டது. ஆனால் தஃபர்ருஆத் எனப்படும் கிளையம்சங்களில் வெவ்வேறு மத்ஹபுகளுக்கான தேவை ஓரளவு காணப்படுகின்றது. ஆம், காலநிலைகளுக்கேற்ப ஆடைகள் மாறுகின்றன. இயல்புகளுக்கேற்ப மருந்துகள் வேறுபடுகின்றன. அவ்வாறே யுகங்களுக்கேற்ப ஷரீஅத்களும் சமூகங்களின் இயல்புகளுக்கேற்ப தீப்புகளும் மாறுபடுகின்றன. ஏனெனில் ஷரீஅத்துடைய தீர்ப்புகளிலுள்ள கிளையம்சங்கள் மனிதனுடைய நிலைமைகளோடு தொடர்பானவையாகும். எனவே அவை நிலைமைகளுக்கேற்ற தீர்ப்புகளை வழங்கி பிரச்சினைக்கு மருந்தாக அமையும். முன் சென்ற நபிமார்களுடைய காலத்தில், மனித சமூகங்கள் ஒன்றைவிட்டொன்று மிகத் தொலைவானவையாகவும் இறுக்கமான தன்மைகள், மூர்க்கமான போக்குகளை உடையவையாகவும் சிந்தனையளவில் முதிர்ச்சியடையாத புராதனத் தன்மைகளை உடையவையாகவும் காணப்பட்டமையினால் அந்தக் காலத்து ஷரீஅத்கள் அவர்களுடைய வெவ்வேறு நிலைமைகளுக்குப் பொருத்தமாக அமையும் வகையில் வெவ்வேறாகவே வந்துள்ளன. ஏன் ஒரே காலத்தில் ஒரே நிலப்பரப்பில் வெவ்வேறு நபிமார்களும் வெவ்வேறு ஷரீஅத்களும் காணப்பட்டுள்ளன. இறுதி நபியின் வருகையின் போது மனித சமூகம் ஏகப்பட்ட புரட்சிகரமான மாற்றங்களையும் கொந்தளிப்புகளையும் தாண்டி புராதனத் தன்மைகளிலிருந்து முதிர் நிலைக்கு முன்னேற்றமடைந்திருந்த காரணத்தினால் மேற்கொண்டு எல்லா சமூகங்களும் ஒரே வழிகாட்டியிடமிருந்து ஒரே பாடங்களைக் கற்று ஒரே ஷரீஅத்தின் பிரகாரம் அமல் செய்யக்கூடிய நிலையை அடைந்திருந்தன. எனவே இறுதி நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய வருகையுடன் வெவ்வேறான ஷரீஅத்களுக்கும் வெவ்வேறான வழிகாட்டிகளுக்கும் இருந்த தேவையும்கூட நீங்கிவிட்டது. ஆனால் மனித சமூகம் மொத்தமாக ஒரே நிலையில் இல்லாத காரணத்தினாலும் ஒரே வகையான சமூக சூழ்நிலைகள் இல்லாத காரணத்தினாலும் மத்ஹபுகள் பெருக்கமடைந்தன. ஒரு வேளை மனித சமூகத்தின் கணிசமான பெரும்பான்மையினர் ஒரே பாடசாலையின் மாணவர்களைப் போன்று ஒரே சமூக சூழ்நிலையை அடையுமாக இருந்தால் அப்போது மத்ஹபுகள் ஒன்றிணைக்கப்பட முடியும். ஆனால் இந்த உலகத்தின் நிலை அதற்கு இடம்கொடுக்காததால் மத்ஹபுகளை ஒன்றாக்குவதும் சாத்தியமற்றதாகும். கேள்வி: சத்தியம் ஒன்றாகவே இருக்க முடியும். எவ்வாறு நான்கு அல்லது பன்னிரண்டு மத்ஹபுகளின் வெவ்வேறான தீர்ப்புகள் அனைத்தும் சத்தியமாக அமைய முடியும்? பதில்: ஒரே நீர் ஐந்து வெவ்வேறான தன்மைகளை உடைய நோயாளிகளைப் பொருத்து எவ்வாறு ஐந்து வெவ்வேறான தீர்ப்புகளைப் பெருகின்றன என்பதைப் பாருங்கள். அதாவது ஒரு நோயாளிக்கு நீர் மருந்தாகும். எனவே மருத்துவத்தின் அடிப்படையில் அது அவனுக்கு வாஜிபாகும். இன்னுமொருவனின் நோய்க்கு நஞ்சைப் போன்று ஆபத்தானதாகும். எனவே மருத்துவத்தின் அடிப்படையில் அது அவனுக்கு ஹராமாகும். இன்னுமொருவனுக்கு இலேசான ஆபத்தை உண்டாக்கும். எனவே மருத்துவத்தின் அடிப்படையில் அது அவனுக்கு மக்ரூஹ் ஆகும். இன்னுமொரு நோயாளிக்கு ஆபத்தில்லாமல் நன்மை பயக்கும். எனவே மருத்துவத்தின் அடிப்படையில் அது அவனுக்கு சுன்னத்தாகும். இன்னுமொருவனுக்கு நலவோ தீங்கோ எதுவுமில்லை, ஆரோக்கியமாக அருந்தலாம். எனவே மருத்துவத்தின் அடிப்படையில் அது அவனுக்கு முபாஹானதாகும். இதோ சத்தியம் இங்கு பலதாக மாறிவிட்டது. ஐந்துமே சத்தியமாகும். இப்போது உன்னால் “நீர் என்பது மருந்தாகும். எனவே வாஜிபானதாகும். இதில் வேறு தீர்ப்புகள் வழங்கப்பட முடியாது” என்று கூற முடியுமா? இவ்வாறே இறை தீர்ப்புகளும்கூட அதற்கு வழிப்படுபவர்களின் நிலைமைகளுக்கேற்ப சத்தியத் தன்மை மாறாமல் மாறுபட முடியும். இந்த வகையிலேயே இறை ஞானத்தின் நகர்த்தல்கள் மூலம் சத்திய மத்ஹபுகளும் தோன்றியுள்ளன. அவை சத்தியமானவையும் பயன்மிக்கவையுமாகும். உதாரணமாக, இறை ஞானத்தின் நகர்த்தல் மூலம் ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுபவர்களுள் பெரும்பாலானவர்கள் ஹனஃபி மத்ஹபைப் பின்பற்றுபவர்களோடு ஒப்பிடும் போது கிராமிய வாழ்க்கை முறைக்கு நெருக்கமானவர்களாகவும் சமூகத்தை ஓருடலாக ஆக்குகின்ற சமூக வாழ்வில் குறைவாகத் தொடர்புபடுபவர்களாகவுமே காணப்படுகின்றனர். எனவே ஒவ்வொருவரும் தனித்தனியாக காதியுல் ஹாஜாத் ஆகிய அல்லாஹ்வின் சந்நிதானத்தில் தனது நிர்க்கதிகளை முறையிடுவதற்காகவும் தனிப்பட்ட தேவைகளைச் சொல்வதற்காகவும் இமாமுக்குப் பின்னால் ஃபாதிஹாவை தனித்தனியாக ஓதுகின்றனர். இது தூய சத்தியமும் தூய ஞானமுமாகும். அவ்வாறே ஹனஃபி மத்ஹபைப் பின்பற்றுபவர்களுள் பெரும்பாலானவர்கள் நகர வாழ்க்கைக்கும் நாகரிக வாழ்க்கைக்கும் நெருக்கமானவர்களாகவும் சமூக வாழ்வில் தேர்ந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவே தொழுகையின் போது ஒரு ஜமாஅத் ஏக உடலாக மாறி ஒருவர் அனைவரின் பெயராலும் கூறுவதை அனைவரும் ஏக மனதாக உண்மைப்படுத்துவதால் ஹனஃபி மத்ஹபின் அடிப்படையில் இமாமுக்குப் பின்னால் ஃபாதிஹா ஓதப்படுவதில்லை. இங்கு ஓதப்படாதிருப்பதும் கூட தூய சத்தியமும் தூய ஞானமுமாகும். இன்னுமோர் உதாரணம்: ஷரீஅத் மனிதனில் இயற்கையாக மேலோங்க முடியுமான அத்துமீறல்களுக்குத் தடுப்பமைத்துக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதன் மூலம் நஃப்ஸுல் அம்மாராவைப் பயிற்றுவிக்கின்றது. இந்த வகையில் கிராமிய மக்களாலும் அரை நாடோடி சமூகங்களாலும் உழைக்கும் வர்க்கத்தினராலும் அதிகமாகப் பின்பற்றப்படுகின்ற ஷாஃபி மத்ஹபின் பிரகாரம் “பெண் மீது பட்டால் வுழூ முறிந்துவிடும். சிறிய ஒரு நஜீஸும் வுழூவைப் பாதிக்கும்.” மறு பக்கம் சமூக வாழ்வில் அதிகம் புழக்கமானவர்களாலும் நகரவாசிகளாலும் அரை நாகரிக சமூகங்காளாலும் அதிகமாகப் பின்பற்றப்படுகின்ற ஹனஃபி மத்ஹபின் பிரகாரம் “பெண்ணுடனான தொடுகை வுழூவை முறிக்காது. நஜீஸுடைய விடயத்தில் ஒரு திர்ஹம் அளவு வரை ஃபத்வா இருக்கின்றது.” இப்போது ஒரு கிராமவாசியையும் ஒரு நகரவாசியையும் எடுத்துக்கொள்வோம். தொழிலாளி தனது வாழ்க்கை முறை காரணமாக அஜ்னபியான பெண்களோடு தொடர்பாடுவதிலும் அருகருகே தனிமையில் அமர்வதிலும் அதிக விருப்பம் உடையவனாகக் காணப்படுகின்றான். அவ்வாறே அசுத்தமான விடயங்களை அவ்வளவாகப் பொருட்படுத்தாத நிலையும் அவனிடம் காணப்படுகின்றது. எனவே இந்த சூழ்நிலைகள் காரணமாக இயற்கையான உந்தல்களும் நஃப்ஸுல் அம்மாராவும் சுற்றுவட்டாரம் சாதகமாக அமையும் தருவாயில் அத்துமீற முடியும். எனவே அவர்களுக்கு மத்தியில் அத்துமீறல்கள் இடம்பெறாதிருப்பதற்கான ஒரு தடுப்பாக ஷரீஅத் ஷாஃபி மத்ஹபுடைய பெயரால் “வுழூ முறிந்துவிடப் போகின்றது, படுவதற்கேனும் இடம் வைக்காதீர்கள். தொழுகை முறிந்துவிடப் போகின்றது, அசுத்தங்களைத் துவட்டிக்கொள்ளாதீர்கள்” என்று ஓர் அகிலார்ந்த ஓசையாக அவனை எச்சரிக்கின்றது. ஆனால், அந்த நகரவாசியைப் பொருத்தவரை (கற்பொழுக்கம் உள்ளவராக இருக்கின்ற நிபந்தனையுடன்) சமூக வாழ்க்கை முறை காரணமாகவும் சமூக ஒழுக்கத்தின் பிரகாரமும் அந்நியப் பெண்களைத் தொடுவதற்கான வேட்கை அவரிடம் இருக்காது. அவ்வாறே சுத்தமாக இருப்பதை நாகரிகமாகக் கருதுவதன் காரணமாக அழுக்குகள் விடயத்திலும் எச்சரிக்கையாகவே இருப்பார். எனவே ஷரீஅத் ஹனஃபி மத்ஹபின் பெயரால் அவருடைய விடயத்தில் சற்று இலகுபடுத்தி, சலுகையின் பக்கமாக சாய்ந்து கொடுத்துள்ளது. “கை பட்டால் வுழூ முறியாது. ஆடையில் அசுத்தம் பட்ட இடத்தை நீரால் கழுவிக்கொண்டு மனிதர்கள் மத்தியில் செல்வதற்கு வெட்கமாக இருந்தால் பிரச்சினையில்லை. ஒரு திர்ஹம் அளவு ஃபத்வா இருக்கின்றது” என்று கூறி அவனைச் சந்தேகத்திலிருந்து விடுவிக்கின்றது. இவை இந்த சமுத்திரத்திலிருந்து இரண்டு சொட்டுகள் மாத்திரமேயாகும். இவற்றோடு ஏனையவற்றையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஷஃரானியுடைய “மீஸான்” என்ற நூலை மீஸானாக (அளவையாக) வைத்து ஷரீஅத்துடைய மீஸான்களை இவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க முடியும். முடியுமாக இருந்தால் முயற்சி செய்யுங்கள். سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى مَن۟ تَمَثَّلَ فٖيهِ اَن۟وَارُ مَحَبَّتِكَ لِجَمَالِ صِفَاتِكَ وَ اَس۟مَائِكَ بِكَو۟نِهٖ مِر۟اٰةً جَامِعَةً لِتَجَلِّيَاتِ اَس۟مَائِكَ ال۟حُس۟نٰى وَ مَن۟ تَمَر۟كَزَ فٖيهِ شُعَاعَاتُ مَحَبَّتِكَ لِصَن۟عَتِكَ فٖى مَص۟نُوعَاتِكَ بِكَو۟نِهٖ اَك۟مَلَ وَ اَب۟دَعَ مَص۟نُوعَاتِكَ وَ صَي۟رُورَتِهٖ اَن۟مُوذَجَ كَمَالَاتِ صَن۟عَتِكَ وَ فِه۟رِس۟تَةَ مَحَاسِنِ نُقُوشِكَ وَ مَن۟ تَظَاهَرَ فٖيهِ لَطَائِفُ مَحَبَّتِكَ وَ رَغ۟بَتِكَ لِاِس۟تِح۟سَانِ صَن۟عَتِكَ بِكَو۟نِهٖ اَع۟لٰى دَلَّالٖى مَحَاسِنِ صَن۟عَتِكَ وَ اَر۟فَعَ ال۟مُس۟تَح۟سِنٖينَ صَو۟تًا فٖى اِع۟لَانِ حُس۟نِ نُقُوشِكَ وَ اَب۟دَعِهِم۟ نَع۟تًا لِكَمَالَاتِ صَن۟عَتِكَ وَ مَن۟ تَجَمَّعَ فٖيهِ اَق۟سَامُ مَحَبَّتِكَ وَ اِس۟تِح۟سَانِكَ لِمَحَاسِنِ اَخ۟لَاقِ مَخ۟لُوقَاتِكَ وَ لَطَائِفِ اَو۟صَافِ مَص۟نُوعَاتِكَ بِكَو۟نِهٖ جَامِعًا لِمَحَاسِنِ ال۟اَخ۟لَاقِ كَافَّةً بِاِح۟سَانِكَ وَ لِلَطَائِفِ ال۟اَو۟صَافِ قَاطِبَةً بِفَض۟لِكَ وَ مَن۟ صَارَ مِص۟دَاقًا صَادِقًا وَ مِق۟يَاسًا فَائِقًا لِجَمٖيعِ مَن۟ ذَكَر۟تَ فٖى فُر۟قَانِكَ اِنَّكَ تُحِبُّهُم۟ مِنَ ال۟مُح۟سِنٖينَ وَ الصَّابِرٖينَ وَ ال۟مُؤ۟مِنٖينَ وَ ال۟مُتَّقٖينَ وَ التَّوَّابٖينَ وَ ال۟اَوَّابٖينَ وَ جَمٖيعِ ال۟اَص۟نَافِ الَّذٖينَ اَح۟بَب۟تَهُم۟ وَ شَرَف۟تَهُم۟ لِمَحَبَّتِكَ فٖى فُر۟قَانِكَ حَتّٰى صَارَ اِمَامَ ال۟حَبٖيبٖينَ لَكَ وَ سَيِّدَ ال۟مَح۟بُوبٖينَ لَكَ وَ رَئٖيسَ اَوِدَّائِكَ وَ عَلٰى اٰلِهٖ وَ اَص۟حَابِهٖ وَ اِخ۟وَانِهٖ اَج۟مَعٖينَ اٰمٖينَ بِرَح۟مَتِكَ يَا اَر۟حَمَ الرَّاحِمٖينَ

§9

ஸஹாபாக்கள் தொடர்பானதாகும் மௌலானா ஜாமீஃ அவர்கள் கூறியதையே நானும் கூறுகிறேன்: يَا رَسُولَ اللّٰهِ چِه بَاشَد۟ چُون۟ سَگِ اَص۟حَابِ كَه۟ف۟ دَاخِلِ جَنَّت۟ شَوَم۟ دَر۟ زُم۟رَۀِ اَص۟حَابِ تُو اُو رَوَد۟ دَر۟ جَنَّت۟ مَن۟ دَر۟ جَهَنَّم۟ كَى۟ رَوَاس۟ت۟ اُو سَگِ اَص۟حَابِ كَه۟ف۟ مَن۟ سَگِ اَص۟حَابِ تُو بِاس۟مِهٖ سُب۟حَانَهُ وَ اِن۟ مِن۟ شَى۟ءٍ اِلَّا يُسَبِّحُ بِحَم۟دِهٖ بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيمِ مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِ وَالَّذٖينَ مَعَهُٓ اَشِدَّٓاءُ عَلَى ال۟كُفَّارِ رُحَمَٓاءُ بَي۟نَهُم۟ … اِلٰى اٰخِرِ ال۟اٰيَةِ பின்வரும் கேள்வியைக் கேட்கின்றீர்கள்: “பித்அத்துகள் செல்வாக்குச் செலுத்துகின்ற காலத்தில் ஒரு கூட்டம் ஸாலிஹான ஈமான்தாரிகளும் தக்வாதாரிகளும் ஸஹாபாக்களுடைய அந்தஸ்த்தை அல்லது அதைவிட உயர்ந்த அந்தஸ்த்தை அடைந்து கொள்வார்கள்” என்ற விடயம் அறிவிப்புகளில் காணப்படுகின்றது. இந்த அறிவிப்புகள் ஸஹீஹானவையா? ஸஹீஹ் என்றால் இதன் தாத்பரியம் என்ன? பதில்: நபிமார்களுக்கு அடுத்ததாக மனித குலத்தில் தோன்றிய மிகச் சிறப்புக்குரியவர்கள் ஸஹாபாக்களே என்பது அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தினரின் இஜ்மாவான முடிவாகும். எனவே இவ்வாறான ஹதீஸ்களின் ஸஹீஹான விளக்கம் குறிப்பான சில சிறப்புகளோடு தொடர்பானதாகும். ஏனெனில் குறிப்பான சிறப்புகளின் அடிப்படையில் கீழுள்ளது மேலுள்ளதைவிட மேல்நிலை அடைய முடியும். இல்லாவிட்டால் ஸூரா ஃபத்ஹுடைய இறுதியில் புகழுக்கிடமான ரப்பானிய மகுடங்களுக்குப் பாத்திரமானவர்களாகவும் குர்ஆனுடன் தவ்ராத் மற்றும் இஞ்சீலிலும் புகழாரம் சூட்டி கௌரவிக்கப்பட்டவர்களாகவும் திகழ்கின்ற ஸஹாபாக்களை மொத்த சிறப்புகளையும் தழுவியதாக மிகைப்பதென்பது சாத்தியமற்றதாகும். இந்த சத்தியத்திலுள்ள ஏராளமான தாத்பரியங்களுள் இப்போதைக்கு மூன்றை மாத்திரம் தெளிவுபடுத்துகின்றோம்.

§10

நபியுடைய மஜ்லிஸ்கள் சஞ்சீவி போன்ற மிகவும் வினைத்திறன் மிக்க நிவாரணமாகும். அந்த மஜ்லிஸில் ஒரு நிமிடம் இருக்கும் பாக்கியத்தைப் பெற்ற ஒருவர் தரீகத்துடைய பாதையில் வருடக்கணக்கான முயற்சியின் பின்னர் கண்டுகொள்ள முடியுமான சத்திய ஒளிகளைவிட அதிகமானதை அந்த ஒரு நிமிடத்துக்குள் கண்டுகொள்வார். ஏனெனில் நபியுடைய உரையாடல்களில் இன்ஸிபாஃ, இன்’இகாஸ் என்ற இரண்டு விடயங்கள் நிகழ்கின்றன. அதாவது ஆத்மீக வர்ணங்கள் பூசப்படுவதும் ஆத்மீக ஒளியின் எதிரொளிப்பும் நேரடியாகவே நிகழ்கின்றன். ஆம், நேரடியான எதிரொளிப்புக்குப் பாத்திரமாக அமைவதன் மூலமும் வழிப்படுதல் மூலமும், நுபுவ்வத்துடைய அந்தப் பேரொளியுடன் இணைந்து மிக உன்னதமான ஓர் அந்தஸ்துக்கு உயர முடியும். ஆம், ஓர் அரசனுடைய சேவகன் அரசனுக்கு மிக விசுவாசமாக வழிப்படுவதன் மூலம் அரசனுடன் சேர்ந்து ஓர் ஆளுனராலும் செல்ல முடியாத மிக உயர்வான இடங்களுக்குச் சென்று உயர் பதவிகளையும் அந்தஸ்துகளையும் காண முடியும். இந்தத் தாத்பரியம் காரணமாகத்தான் மிகப் பெரிய வலிமார்களாலும் கூட ஸஹாபாக்களுடைய அந்தஸ்த்தை எட்ட முடியாது. ஏன் ஜலாலுத்தீன் ஸுயூதி போன்று விழிப்பு நிலையில் இருக்கும் போது பல தடவைகள் நபியோடு உரையாடும் பாக்கியம் பெற்ற வலிமார்கள் விளிப்பு நிலையில்தான் உரையாடியிருந்தாலும், அதாவது இந்த உலகிலேயே உரையாடும் பாக்கியத்தைப் பெற்றாலும் அவர்களால் ஸஹாபாக்களை எட்ட முடியாது. ஏனெனில் ஸஹாபாக்கள் நபியுடைய நுபுவ்வத்தின் ஒளியோடு உரையாடி உறவாடினார்கள். அதாவது நபியாக இருக்கும் போது நபியோடு உறவாடினார்கள். வபாத்தின் பிறகு விலாயத் மாத்திரமே தொடர்வதால் அவ்லியாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய வபாத்தின் பிறகு உரையாடிய விடயம் நபியுடைய விலாயத்தின் ஒளியோடுள்ள உரையாடலாகும். எனவே நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இவ்வாறான வலிமார்களின் பார்வையில் புலனாகிய விடயம் நுபுவ்வத்துடைய அடிப்படையில் அன்றி விலாயத்துடைய அடிப்படையிலாகும். எனவே நுபுவ்வத்துடைய அந்தஸ்து விலாயத்துடைய அந்தஸ்தை விட எந்த அளவு உயர்வானதோ அந்த இரண்டு வகையான உரையாடல்களுக்கும் மத்தியிலான வேறுபாடும் அந்த அளவு விசாலமானதாக இருப்பது அவசியப்படுகின்றது. ஆம், நபியுடைய உரையாடல் எப்படிப்பட்ட சஞ்சீவி போன்ற அமிர்தம் என்பதற்கு வரலாறு சான்றாகும். ஒரு காட்டரபி தனது மகளை உயிரோடு புதைக்கின்ற அளவு ஈவிரக்கமற்ற கல் நெஞ்சனாக இருக்கின்ற நிலையில் ஒரு மணித்தியாலம் அளவு நபியோடு உரையாடும் பாக்கியத்தைப் பெறுகிறார். அதன் பின்னர் ஓர் எறும்பைக்கூட மிதிக்காத அளவு அன்பும் பாசமும் உடைய ஓர் உத்தம புருஷராக மாறுகின்றார். அவ்வாறே அறியாமையும் மூர்க்கத்தனமும் உடைய ஒருவர் ஒரு நாள் நபியுடைய மஜ்லிஸில் நபியோடு உரையாடும் பாக்கியத்தைப் பெறுகின்றார். பின்னர் சீனா, ஹிந்துஸ்தான் போன்ற நாகரிகமடைந்த சமூகங்களுக்கு சத்தியத்தைப் போதிக்கும் ஆசான்களாகவும் அவர்களின் விமோசனத்துக்கான வழிகாட்டிகளாகவும் புறப்பட்டார்கள்.

§11

மேலே இருபத்தேழாவது வார்த்தையில் இஜ்திஹாத் தொடர்பான விளக்கத்தில் கூறப்பட்டதைப் போன்று ஸஹாபாக்களுக்கு மத்தியில் மிகப் பெரும்பான்மையானவர்கள் மனித ஈடேற்றத்தில் மிக உன்னதமான அந்தஸ்த்தை உடையவர்களாவர். ஏனெனில் அந்தக் காலத்தில் இஸ்லாத்தின் மூலம் ஏற்பட்ட புரட்சிகரமான மாற்றத்தின் போது நன்மையும் சத்தியமும் அவற்றின் அத்தனை அழகியல்களுடனும் நீமையும் அசத்தியமும் அவற்றின் அத்தனை அசிங்கங்களுடனும் பட்டவர்த்தனமாகத் தென்பட்டதோடு அனைவரும் அதைப் பௌதீக ரீதியில் தெட்டத் தெளிவாக உணர்ந்துகொண்டார்கள். நன்மைக்கும் தீமைக்கும், உண்மைக்கும் பொய்க்கும் மத்தியிலான இடைவெளி ஈமானுக்கும் குஃப்ருக்கும் அல்லது சுவனத்துக்கும் நரகத்துக்கும் இடையிலான தூரமளவு விசாலமானதாகவும் தெளிவானதாகவும் காணப்பட்டது. பொய், தீமை, அசத்தியம் என்பவற்றின் மொத்த அத்தாட்சியாகவும் மாதிரியாகவும் திகழ்ந்த முஸைலமதுல் க(z)ஸ்ஸாபுடைய அவலட்சனமான நிலையையும் நகைப்புக்கிடமான வார்த்தைகளையும் பார்த்த பின்னர், உன்னதமான உணர்வுகளை உடையவர்களாகவும் சிரேஷ்டமான பண்பாடுகளை நேசிப்பவர்களாகவும் கண்ணியமானதை விரும்புபவர்களாகவும் திகழ்ந்த ஸஹாபாக்கள் நிச்சயமாக முஸைலமாவுடைய அவலட்சனமான தாழ் நிலைக்கு விருப்பத்தோடோ நாட்டத்தோடோ சென்றிருக்கமாட்டார்கள். எனவே அந்த இடத்துக்குத் தம்மைத் தாழ்த்துகின்ற பொய்யையும் தீமையையும் கூட நாடிச் சென்றிருக்க மாட்டார்கள். மாறாக, ஸஹாபாக்களுடைய அந்த அத்தனை இயல்புகளும் சிறப்புகளும் உண்மை, வாய்மை, நன்மை, சத்தியம் என்பவற்றின் மொத்த அத்தாட்சியாகவும் மாதிரியாகவும் திகழ்ந்த ஹபீபுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய உயர் அந்தஸ்துகளைப் பார்த்து அவற்றின் பால் ஈர்க்கப்படுவதற்கே உகந்தவையாகக் காணப்பட்டன. எனவே முஸைலமா போன்றவர்களுடைய பக்கத்திலிருந்து வெருண்டோடி ஹபீபுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களில் கண்டுகொண்ட அந்த உயர் அந்தஸ்துகளை அடைந்து கொள்வதற்காகவே தமது முழுப் பலத்தையும் ஆற்றல்களையும் பிரயோகித்தார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இருக்க முடியாது. உதாரணமாக, மனிதனுடைய நாகரிகச் சந்தையில் அவ்வப்போது சில பண்டங்கள் அவற்றின் மிக அசிங்கமான விளைவுகள், தாக்கங்கள் காரணமாக மிகவுமே வேண்டப்படாத, எல்லோராலும் வெறுக்கப்படுகின்ற, காண்பவர்களை ஆட்கொள்ளி விஷத்தைக் கண்டு விரண்டோடுவதைப் போன்று விரண்டோடச் செய்கின்ற நிலையில் உள்ளன. அவ்வாறே வேறு சில விடயங்களோ அவை ஏற்படுத்துகின்ற அழகிய மாற்றங்கள், பயனுள்ள விளைவுகள் காரணமாக பெறுமதிக்க ஒரு வைதூரியத்தின் பால் கவனங்கள் ஈர்க்கப்படுவதைப் போன்று மக்களின் கவனங்களை ஈர்க்கின்றன. அனைவரும் அவற்றை வாங்கிக்கொள்ள போட்டி போடுவார்கள். அவ்வாறே, நபியுடைய சமூகத்தின் நாகரிகச் சந்தையில் அல்லது சமூக வாழ்வு என்ற அங்காடியில் பொய், தீமை, குஃப்ர் போன்ற பண்டங்கள் நித்திய நிர்க்கதிகளையும் முஸைலமதுல் க(z)ஸ்ஸாப் போன்ற இழிந்த நகைப்புக்கிடமான பாத்திரங்களையும் உற்பத்தி செய்ததை நேரடியாகக் கண்ட நற்குண சீலர்களான ஸஹாபாக்கள் விஷத்தை வெறுத்தொதுக்குவதைப் போன்று அவற்றையும் வெறுத்தொதுக்கினார்கள் என்பதில் சந்தேகமில்லை. அவ்வாறே உயர் விழுமியங்களைக் கொண்டிருந்த அந்த ஸஹாபாக்கள் தமது கண்களுக்கு முன்னால் நித்திய நிம்மதி, மன அமைதி போன்ற உன்னத விளைவுகளையும் ரஸூலே அக்ரம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் போன்ற பிரகாசமான கனிகளையும் வெளிப்படுத்திய உண்மை, வாய்மை, சத்தியம், ஈமான் போன்ற விடயங்களின்பால் மிகப் பெறுமதி வாய்ந்த ஐஸ்வர்யங்களின்பால் கவரப்படுவதைவிட தாகத்தோடும் மோகத்தோடும் கவரப்பட்டிருப்பார்கள் என்பது ஆணித்தரமானதாகும். ஸஹாபாக்களுடைய உயர் குணங்களும் சங்கையான உணர்வுகளும் உன்னதமான விழுமியங்களும் இதையே நிர்ப்பந்தம் என்ற அளவுக்குக் கட்டாயமாக்குகின்றன. ஆனால் ஆதனைத் தொடர்ந்து காலம் செல்லச் செல்ல உண்மைக்கும் பொய்க்கும் மத்தியிலான தூரம் படிப்படியாகக் குறைந்து, தோளோடு தோள் கோர்த்து நிற்கின்ற அளவு நெருக்கமாகி, ஒரே கடையில் இரண்டும் விற்பனை செய்யப்படுகின்ற நிலை தோன்றியதால் சமூக ஒழுக்கம் சீர்குழைந்தது. அரசியல் வியூகங்கள் பொய்யின் பெறுமதியையும் கிராக்கியையும் அதிகரிக்கச் செய்தன. பொய்யின் பயங்கரமான அசிங்கம் மூடப்பட்டு உண்மையின் பிரகாசமான அழகு மறைய ஆரம்பித்தது. இப்படிப்பட்ட ஒரு காலத்தில் நீதி, உண்மை, வாய்மை, சங்கை, ஹக்கானியத் போன்ற விடயங்களில் ஸஹாபாக்களுடைய பலத்தையும் உறுதியையும் தக்வாவையும் யாரால்தான் எட்டிப்பிடிக்க முடியும்! மேலுள்ள விடயத்தை ஓரளவு தெளிவுபடுத்தக்கூடிய வகையில் எனக்கேற்பட்ட ஓர் அனுபவத்தை இங்கு குறிப்பிடுகின்றேன். அதாவது ஒரு சமயம் முஹியுத்தீன் அரபி போன்ற அற்புதமான மனிதர்களாலும்கூட ஏன் ஸஹாபாக்களை எட்ட முடியாது? என்ற ஐயம் உள்ளத்தில் எழுந்தது. தொடர்ந்து வந்த தொழுகையில் ﺳُﺒْﺤَﺎﻥَ ﺭَﺑِّﻰَ ﺍﻟْﺎَﻋْﻠٰﻰ என்ற வார்த்தையை ஓதும் போது அந்த வார்த்தையின் அர்த்தம் பிரகாசமாகப் புலப்பட்டது. முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியளவு அதன் சத்தியத்தைக் கண்டுகொண்டேன். அப்போது உள்ளத்தில் “ஒரு தொழுகை முழுவதையும் இந்த வார்த்தையைப் போன்று அனுபவிக்க முடியுமாக இருந்தால் ஒரு வருட இபாதத்தைவிட சிறப்பாக இருக்குமே” என்ற ஆவல் எழுந்தது. தொழுகையின் பிறகு அந்த நிலைமையும் அந்த ஐயமும் ஸஹாபாக்களுடைய இபாதத்தின் அந்தஸ்த்தை எட்ட முடியாது என்பதற்கான ஓர் உதிப்பே என்பதை விளங்கிக்கொண்டேன். ஆம் சங்கைமிக்க குர்ஆனின் ஒளியால் ஏற்படுத்தப்பட்ட அந்தப் புரட்சிகரமான சமூக மாற்றத்தில் முரண்கள் ஒன்றிலிருந்து ஒன்று விலகும் போது தீங்குகள் அவற்றின் அத்தனை இருள்கள், பரிவாரங்கள், பரிமாணங்களோடும் நன்மைகள் அவற்றின் அத்தனை ஒளிகள், கனிகள், விளைவுகளோடும் எதிரெதிரே நிலை கொண்டன. இப்படிப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் ஒரு காலத்தில் ஒவ்வொரு திக்ரும் ஒவ்வொரு தஸ்பீஹும் தமது இளம் பருவத்திலேயே தம்முள் பொதிந்துள்ள எல்லா அந்தஸ்துகளுக்குமுரிய எல்லா அர்த்தங்களையும் பசுமை மாறாமல் வெளிப்படுத்தி, அந்தப் புரட்சிகரமான மாற்றத்தின் அதிர்ச்சிக்குள் இருந்த மனிதர்களின் அத்தனை உணர்வுகளையும் ஆன்மீக ரீதியான திறன்களையும் தட்டியெழுப்பி, ஆகர்ஷித்துக்கொண்டன. அந்த மொத்தமான விளிப்பு நிலையின் போது சிந்தை, கற்பனைத் திறன் போன்ற ஆற்றல்களும் கூட அந்த திக்ர்களிலும் தஸ்பீஹ்களிலும் உள்ள பலதரப்பட்ட அர்த்தங்களைத் தத்தமது ரசனைக்கேற்றவாறு பெற்றுப் பருகிக்கொண்டன. இந்தத் தாத்பரியத்துக்கமைய ஸஹாபாக்களுடைய எல்லாவித உணர்வுகளும் உறுப்புகளும் விளிப்பு நிலையை அடைந்திருந்ததால் ஈமானிய ஒளிகளாகத் திகழ்ந்த அகிலார்ந்த திக்ர்களையும் தஸ்பீஹ்களையும் பாராயணம் செய்யும் போது அவற்றின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒவ்வொரு சொல்லிலிலும் பொதிந்துள்ள அகிலார்ந்த அர்த்தங்களுடன் பாராயணம் செய்தார்கள். அவ்வாறே தமது அத்தனை உணர்வுகள், உறுப்புகளாலும் அவற்றிலிருந்து பயன் பெற்றுக்கொண்டார்கள். ஆனால், காலப்போக்கில் இடம்பெற்ற புரட்சிகரமான மாற்றங்களின் பின்னர் அந்த ஆத்மீக சாதனங்கள் படிப்படியாக உறக்க நிலைக்குச் சென்றதாலும் பசுமையான உணர்வுகள் அனைத்தும் படிப்படியாக சத்தியத்துடைய விடயத்தில் பொடுபோக்குக்கும் அசட்டைக்கும் ஆளாகியதாலும் அந்த அருள்பாலிக்கப்பட்ட வார்த்தைகளும் கூட பழங்கள் பசுமையிழப்பதைப் போன்று பழக்கதோஷம் என்ற திரையாலும் மிகவுமே மேம்போக்கான பார்வையாலும் பசுமையிழந்து காட்சியளிக்கின்றன. இவ்வாறு மிகவும் மேலோட்டமான, பகட்டான காற்றால் வரண்டு போனதைப் போன்று இலேசான ஓர் ஈரமே அவற்றில் எஞ்சியுள்ளன. எனவே பலமான, சிந்தனா ரீதியான ஓர் அறுவை சிகிச்சை மூலமே அந்த அருள்பாலிக்கப்பட்ட வார்த்தைகளை அவற்றின் பழைய பசுமையோடும் இளமையோடும் கண்டுகொள்ள முடியும். இதன் காரணமாகத்தான் வெறும் நாற்பது நிமிடங்களில் ஒரு ஸஹாபி அடைந்து கொண்ட ஈடேற்றங்களை அல்லது பதவிகளை ஏனையவர்களால் நாற்பது நாட்களில் அல்லது நாற்பது வருடங்களில் ஏதோ சுமாராக அடைந்துகொள்ள முடியுமாக உள்ளது.

§12

பன்னிரண்டாம் வார்த்தையிலும் இருபத்தி நான்காவது மற்றும் இருபத்தைந்தாவது வார்த்தைகளிலும் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று நுபுவ்வத்தின் முன்னிலையில் விலாயத்துடைய நிலை சூரியனுக்கு முன்னால் கண்ணாடிகளில் தென்படும் சூரியனுடைய மாதிரிகளை ஒத்ததாகும். ஆம், நுபுவ்வத்துடைய பதவி விலாயத்துடைய பதவியை விட எந்த அளவு உயர்வானதோ நுபுவ்வத்துடைய பதவிக்குக் கீழ் சேவகர்களாகத் திகழ்ந்த ஸஹாபாக்களின் பதவிகளும் கூட விலாயத்துடைய எல்லைக்குள் உள்ள ஸாலிஹீன்களின் பதவிகளை விட அந்த அளவு உயர்வானவையாக இருப்பது அவசியமாகும். ஏன் விலாயதுல் குப்ரா எனப்படும் ஸஹாபாக்களுடைய விலாயத்தாகிய நுபுவ்வத்துடைய வராஸத்தையும் ஸித்தீகிய்யத்தையும் ஒரு இறை நேசர் அடைந்து கொண்டாலும் அவரால் முன் சென்ற ஸஹாபாக்களுடைய பதவியை எட்ட முடியாது. இந்த மூன்றாவது தாத்பரியத்தின் பல்வேறு கோணங்களுள் மூன்றை இங்கு தெளிவுபடுத்துகின்றோம். முதலாவது கோணம்: இஜ்திஹாதில் அதாவது தீர்வைப் பெறுவதில் வேறு வகையில் சொல்வதாக இருந்தால் கலாமிலிருந்து அல்லாஹ்வின் பொருத்தத்துக்குரிய விடயத்தை அறிந்துகொள்வதில் ஸஹாபாக்களை எட்ட முடியாது. ஏனெனில், அந்தக் காலத்துடைய சமூகப் பொறிமுறையானது இறை தீர்ப்புகளையும் இறை பொருத்தத்துக்குற்பட்ட செயல்களையும் விளங்கிக்கொள்வதை அடியொட்டியே சுற்றிச் சுழன்றது. ஒட்டுமொத்த சிந்தனைகளும் இறை பொருத்தத்துக்குற்பட்ட செயல்களை குர்ஆனிலும் சுன்னாவிலும் இருந்து பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருந்தன. அவ்வாறே ஒட்டுமொத்த உள்ளங்களும் எமது இரட்சகன் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறான் என்பதை அறிவதிலேயே அக்கறை செலுத்தின. அந்தக் காலத்துடைய நிலைமைகள் அனைத்திலும் இவற்றின் வாசனை இழையோடியிருப்பதைக் காண முடியும். அவர்களுடைய உரையாடல்கள் அனைத்தும் மேற்படி அர்த்தங்களைப் பொதியப்பெற்றவையாகவே அமைந்திருந்தன. ஆம், அந்த சமூகத்துடைய அத்தனை விடயங்களும் அத்தனை நிலைமைகளும் அத்தனை நடவடிக்கைகளும் மேற்படி அர்த்தங்கள் அனைத்தையும் பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்த காரணத்தினால் அந்த சூழல் ஸஹாபாக்களுடைய ஆற்றல்கள் மற்றும் திறன்களில் விருத்தியையும் பூரணத்துவத்தையும் ஏற்படுத்துவதாகவும் சிந்தனைகளில் ஒளியேற்றுவதாகவும் காணப்பட்டது. எனவே இஜ்திஹாதுடைய விடயத்திலும் மறைவான அர்த்தங்களை அறிந்துகொள்ளும் விடயத்திலும் ஸஹாபாக்களுடைய திறன்களானது தீக்குச்சைப் போன்று சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்குத் தயாராகவே காணப்பட்டன. இந்த வகையில் இஜ்திஹாதுடைய விடயத்திலும் மறைவான அர்த்தங்களை அறிந்துகொள்ளும் விடயத்திலும் ஸஹாபாக்கள் ஒரு நாளில் அல்லது ஒரு மாதத்தில் அடைந்து கொண்ட அந்தஸ்தை, அதே விவேகமும் புத்திக்கூர்மையும் உடைய ஒருவர் இன்று அடைந்துகொள்வதாக இருந்தால் பத்தல்ல, நூறு வருடங்கள் உழைத்தாலும் அது பற்றாக்குறையானதாகவே அமையும். ஏனெனில் இப்போது நித்திய வாழ்வின் நிம்மதிக்குப் பதிலாக உலக வாழ்வின் நிம்மதியே முன்னுரிமைக்குரியதாக மாறியுள்ளது. மனிதனுடைய பார்வையில் மறுமையல்லாத வேறு சமாச்சாரங்களே ஈடுபாட்டுக்குரியவையாக மாறியுள்ளன. தவக்குல் இன்றிய வாழ்வாதாரத் தேடல் ஆத்மாவில் பேதலிப்பையும், படைப்பாளனில்லாத இயற்கை விஞ்ஞானம் பகுத்தறிவில் குருட்டுத் தன்மையையும் ஏற்படுத்திவிட்டதால் இப்படிப்பட்ட சமூக சூழலானது அந்த மனிதனுடைய சிந்தனைக்கும் ஆற்றல்களுக்கும் இஜ்திஹாதுக்கான ஊட்டத்தையோ பலத்தையோ வழங்குவதில்லை. மாறாகக் குழப்பத்தையும் சிந்தனைச் சிதறல்களையுமே ஏற்படுத்துகின்றது. இந்தக் காரணங்களால்தான் இஜ்திஹாத் தொடர்பான விளக்கத்தில் சுஃபியான் இப்னு உயைனா போன்ற ஒருவர் பத்து வருடங்களில் எட்டிய அந்தஸ்த்தை அதே அளவு ஆற்றல்களும் விவேகமும் உடைய ஒருவரால் இந்தக் காலத்தில் நூறு வருடங்களிலேயே எட்ட முடியும் என்று குறிப்பிட்டுள்ளேன். இரண்டாவது கோணம்: இறை நெருக்கத்தின் மூலம் ஸஹாபாக்கள் அடைந்துகொண்ட பதவிகளை விலாயத்தின் மூலம் அடைந்துகொள்ள முடியாது. சத்திய இரட்சகன் அல்லாஹ் எமக்கு அனைத்தைவிடவும் மிக நெருக்கமானவனாக அதாவது அக்ரப் ஆக அதாவது தெய்வீக நெருக்கத்தை உடையவனாக இருக்கின்றான். நாமோ அவனைவிட்டும் மிக மிகத் தொலைவில் இருக்கின்றோம். இந்த நிலையிலுள்ள நாம் அவனை நெருங்குவதற்கு இரண்டு வழிமுறைகள் காணப்படுகின்றன. முதலாவது: இது அக்ரபியத்தின் அதாவது தெய்வீக நெருக்கத்தின் வெளிப்பாட்டால் கிடைக்கின்ற நெருக்கமாகும். இதற்கான உதாரணம் நுபுவ்வத்திலிருக்கும் நெருக்கமாகும். நுபுவ்வத்துடைய வாரிஸுகளாகவும் அதன் நேரடிப் பயிற்றுவிப்புக்குற்பட்டவர்களாகவும் திகழ்ந்த ஸஹாபாக்களும்கூட இந்த வகை நெருக்கத்தில் பொதிந்துள்ள தாத்பரியங்களுக்குப் பாத்திரமானவர்களாக இருந்தார்கள். இரண்டாவது வழி முறை: அதாவது நாம் எமது தொலைவான ஸ்தானத்திலிருந்து படிப்படியாக அந்தஸ்துகளைக் கடந்து செல்வதன் மூலம் ஓரளவு இறை நெருக்கத்தைப் பெற்றுக்கொள்வதாகும். விலாயத்துடைய அதிகமான பாதைகளில் இந்த வழிமுறையே காணப்படுகின்றது. இந்த வழி முறையானது அகமியமான ஏகாந்திரப் பயணம் (ஸைருல் அன்ஃபூஸி) புறமியமான ஏகாந்திரப் பயணம் (ஸைருல் ஆஃபாகி) என்று இரண்டு வகைப் பாதைகளிலும் பிரயோகமானதாகும். ஆம் முதலாவது வழிமுறையானது இறை ஈகையோடு (வஹ்பியத்) மாத்திரம் தொடர்பானதாகும். மாறாக மனித ஈடுபாட்டோடு அல்லது அடைவோடு தொடர்பானதல்ல. இதை மஹ்பூபியத் அல்லது ரஹ்மானிய ஈர்ப்பு என்றும் கூறலாம். இங்கு பாதை மிகக் குறுகியதாகும். ஆனால் மிகத் தீர்க்கமானதும் மிக உயர்ந்ததும் மிகத் தூய்மையானதும் நிழல்களற்றதுமாகும். இரண்டாவது பாதையானது மனித ஈடுபாட்டோடும் அடைவோடும் தொடர்பானதாகும். கூடவே மிக நீண்டதாகவும் நிழல்களால் சூழப்பட்டதாகவும் இருக்கின்றது. இந்தப் பாதையில் விசித்திரமான நிகழ்வுகள் ஏராளமாகக் காணப்பட்டாலும் கூட பெறுமதியின் அடிப்படையிலும் நெருக்கத்தின் அடிப்படையிலும் முன்னையதை நெருங்க முடியாது. உதாரணமாக நேற்றைய தினத்தை அடைந்துகொள்வதாக இருந்தால் இரண்டு பாதைகள் காணப்படுகின்றன. முதலாவது: காலச் சக்கரத்துக்குள் அள்ளுண்டு செல்லாமல் ஒரு புனிதமான சக்தியைக் கொண்டு காலத்தின் பிடியிலிருந்து வெளியேறி நேற்றைய தினத்தை இன்றைய தினத்தைப் போன்று நிதர்சனமாகக் காண்பதாகும். இரண்டாவது: ஒரு வருட தூரத்தைப் படிப்படியாகக் கடந்து நீண்ட பயணத்தின் பின்னர் நேற்றைய தினத்தை அடைவதாகும். ஆனால் மீண்டும் நேற்றைய தினத்தை தன்னகத்தே வைத்துக்கொள்ள முடியாமல் அதைவிட்டுச் சென்றுவிடுகிறான். அவ்வாறே காண்பதிலிருந்து சத்தியத்தை அடைந்துகொள்வதற்கும் இரண்டு வழிகள் காணப்படுகின்றன. முதலாவது: சத்தியத்தின் ஈர்ப்பால் வசப்பட்டு தரீக்கத்தின் சுரங்கங்களுக்குள் நுழையாமல் காண்பவை அனைத்திலும் நேரடியாகவே சத்தியத்தைக் கண்டுகொள்வதாகும். இரண்டாவது: ஏராளமான படித்தரங்களைக் கட்டம் கட்டமாகக் கடந்து செல்வதாகும். விலாயத்தை உடையவர்கள் உண்மையில் நஃப்ஸுல் அம்மாராவை அடக்கி நஃப்ஸைக் கொலை செய்தவர்களாக இருந்தாலும் ஸஹாபாக்களை அவர்களால் நெருங்க முடியாது. ஏனெனில் ஸஹாபாக்களுடைய நஃப்ஸுகள் கொலை செய்யப்படாமல் தஸ்கியா செய்யப்பட்டு பரிசுத்தப்படுத்தப்பட்டதால் நஃப்ஸுடைய இயல்பில் பொதிந்துள்ள ஏராளமான திறன்கள் மூலம் பல்வேறு வகையான உபூதியத்களுக்கும் ஹம்த், ஷுக்ர்களுக்கும் பாத்திரமானவர்களாகத் திகழ்கின்றனர். ஆனால் நஃப்ஸ் கொல்லப்பட்ட பின்னர் அவ்லியாக்களின் உபூதியத்தில் மேலோட்டமான தன்மை கருக்கொள்ள ஆரம்பிக்கின்றது. மூன்றாவது கோணம்: அமல்களுக்கான நன்மைகள், நடத்தைகளின் சிறப்புகள், மறுமைப் பேறுகள் போன்ற விடயங்களிலும் ஸஹாபாக்ககை நெருங்க முடியாது. உதாரணமாக ஒரு சிப்பாய் கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த ஓரிடத்தில் மிகவும் ஆபத்தான சூழலில் ஒரு மணித்தியாலம் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவது ஒரு வருட இபாதத்களை விட அந்தஸ்த்தில் உயர்ந்ததாக இருக்கும். அவ்வாறே ஒரு கனப் பொழுதில் ஒரு தோட்டாவுக்கு இலக்காகுவதன் மூலம் குறைந்த பட்சம் நாற்பது நாட்களில் அடைய முடியுமான விலாயத்துடைய பதவியை எட்டுகின்றார். அவ்வாறே ஸஹாபாக்கள் இஸ்லாத்தின் வளர்ச்சி, குர்ஆனிய சட்டங்களின் பரவல் போன்ற விடயங்களில் ஆற்றிய பங்களிப்புகளும் இஸ்லாத்தைப் பாதுகாக்கின்ற பணியில் நாலா புறங்களிலுமிருந்து வந்த எதிரிகளோடு மேற்கொண்ட போராட்டங்களும் எந்த அளவு உயர்வானவை என்றால் இந்தப் பாதையில் ஸஹாபாக்கள் ஒரு நிமிடத்தில் அடைந்து கொண்ட அந்தஸ்துகளை பிறர் ஒரு வருடம் முயற்சித்தாலும் அடைந்துகொள்ள முடியாது. ஏன் சில போது பிறரின் ஒட்டுமொத்த வாழ்வும் ஸஹாபாக்கள் அந்தப் புனிதமான பணியில் ஷஹாதத்துக்குப் பாத்திரமாக அமைந்த ஒரு நிமிடத்துக்கு ஈடாகாது. அவ்வாறே சிலரின் ஒட்டுமொத்த வாழ்வும் ஸஹாபாக்கள் அந்தத் தீர்க்கமான புள்ளியில் ஒரு மணித்தியாலம் செய்த கடமைக்கு ஈடாகாது. ஆம், உண்மையில் ஸஹாபாக்கள் இஸ்லாத்தின் வளர்ச்சியிலும் குர்ஆனிய சட்டங்களின் பரவலிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்தார்கள். ﺍَﻟﺴَّﺒَﺐُ ﻛَﺎﻟْﻔَﺎﻋِﻞِ என்ற விதியின் பிரகாரம் உம்மத்துடைய ஒட்டுமொத்த நற் செயல்களிலிருந்து அவர்களுக்கும் ஒரு பங்கு சென்றடைகின்றது. மொத்த உம்மத்தும் ﺍَﻟﻠّٰﻬُﻢَّ ﺻَﻞِّ ﻋَﻠٰﻰ ﺳَﻴِّﺪِﻧَﺎ ﻣُﺤَﻤَّﺪٍ ﻭَﻋَﻠٰﻰ ﺍٰﻟِﻪِ ﻭَﺍَﺻْﺤَﺎﺑِﻪِ என்று கூறுவதானது ஸஹாபாக்கள் உம்மத்துடைய மொத்த நல்லமல்களிலும் பங்குதாரர்களாக இருக்கின்றார்கள் என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. மேலும் ஒரு விருட்சத்தின் வேரில் காணப்படும் சிறிய அளவிலான ஒரு சிறப்பு அந்த விருட்சத்தின் கிளைகளில் பெரிய வடிவத்தை எடுக்கும். எனவே வேரில் இருக்கும் அந்த சிறப்பு மிகப் பெரிய கிளையை விடப் பெரிதாகிவிடுகின்றது. அவ்வாறே மையப் புள்ளிக்கு நெருக்கமாக உள்ள சிறிய ஒரு தடை போகப் போக ஒரு மலை போன்று பெரிதாகவும் மையப் புள்ளிக்கு நெருக்கமாக உள்ள ஊசி முனையளவு சிறிய ஒரு வாசல் பெரிய வட்டத்தில் மிக விசாலமான ஒரு வெளியாகவும் மாறி விடுகின்றது. மேற்படி நான்கு உதாரணங்களிலும் உள்ளதைப் போன்று ஸாஹாபாக்கள் இஸ்லாம் என்ற ஒளிமயமான விருட்சத்தின் வேர்களாகவும், இஸ்லாம் என்ற மாளிகையை ஒளியேற்றும் மூலத்துக்கு நெருக்கமானவர்களாகவும், இஸ்லாமிய சமூகத்தின் இமாம்களாகவும், அதன் பாரம்பரிய விழுமியங்களுக்கான முன்னோடிகளாகவும், நுபுவ்வத்துடைய ஒளியினதும் சத்திய ஜோதியினதும் மையப் புள்ளிக்கு மிக நெருக்கமானவர்களாகவும் இருந்த காரணத்தினால் அவர்களுடைய சொற்பமான அமல்கள் அதிகமானவையாகவும் சிறிய பணிகள் பெரியவையாகவும் மாறிவிடுகின்றன. அந்த அந்தஸ்த்தைப் பெருவதாக இருந்தால் உண்மையான ஸஹாபியாக இருப்பது அவசியமாகும். اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ نِ الَّذٖى قَالَ : اَص۟حَابٖى كَالنُّجُومِ بِاَيِّهِم۟ اِق۟تَدَي۟تُم۟ اِه۟تَدَي۟تُم۟ وَ خَي۟رُ ال۟قُرُونِ قَر۟نٖى وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ وَ سَلِّم۟ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ கேள்வி: “ஸஹாபாக்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் கண்டு ஈமான் கொண்டார்கள். நாமோ காணாமல் ஈமான் கொண்டோம். எனவே எனது ஈமான் பலமானதாகும்” என்று கூறப்படுகின்றது. இந்த வகையில் எமது ஈமானின் பலத்தை அறிவிப்புச் செய்யும் ஹதீஸ்களையும் காண முடியுமல்லவா? பதில்: அந்தக் காலத்தில் இஸ்லாத்தின் செய்தியானது மனித குலத்தின் பொதுப் புத்திக்கு முரணாகவும் விரோதமாகவும் இருந்த நிலையில் அந்த சமூகத்தில் மிகவும் சாதாரண ஒரு மனிதராக இருந்த ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களையே ஸஹாபாக்கள் ஈமான் கொண்டார்கள். பல போது அற்புதங்களைக் கூடக் காணாமல் அந்த சமூகத்தின் பொதுப் புத்திக்கு முரணாக இருந்த இஸ்லாத்தின் செய்தியை நபியிடமிருந்து ஸஹாபாக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இவ்வாறான ஒரு சூழலிலும்கூட அவர்களுடைய ஈமான் எந்த அளவு உறுதியானதாக இருந்ததெனில் மனித குலத்தின் எத்தகைய சிந்தனைகள், சித்தாந்தங்களும் அவர்களுடைய ஈமானில் எவ்விதமான தளம்பல்களையும் ஏற்படுத்தவில்லை. சந்தேகங்கள் ஊசலாட்டங்கள் எப்படிப் போனாலும் சஞ்சலங்களுக்குக் கூட அவர்களுடைய உள்ளங்களில் இடமிருக்கவில்லை. நீங்களோ உங்கள் ஈமானை ஸாஹாபாக்களோடு ஒப்பிட்டுப் பார்க்கிறீர்கள். அவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு ஸஹாபாக்கள் இருக்கின்றார்கள். ஒட்டுமொத்த உம்மத்தின் சிந்தனைச் சேகரிப்புகளும் உங்களுடைய ஈமானுக்கான பலமாகவும் ஆதாரமாகவும் இருக்கின்றன. அவ்வாறே இன்று பெரும் விருட்சமாக வளர்ந்து கனிகளைச் சொரிந்து கொண்டிருக்கும் நுபுவ்வத்துடைய விருட்சத்தின் விதையாக இருந்த ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைப் பௌதீக ரீதியாகக் காணாவிட்டாலும் ஒட்டுமொத்த இஸ்லாமிய விழுமியங்களோடும் குர்ஆனிய சத்தியங்களோடும் ஆயிரக்கணக்கான அற்புதங்களோடும் கம்பீரமான ஒரு விருட்சமாக வீற்றிருக்கும் நுபுவ்வத்துடைய கூட்டாத்மாவைத் தெட்டத் தெளிவாகக் காண்கின்றீர்கள். ஆனால் இத்தனைக்கும் பின்னர் ஓர் ஐரோப்பிய சித்தாந்தவாதியின் ஒரு வார்த்தை உங்களுடைய ஈமானில் தளர்வையும் சந்தேகங்கள், சஞ்சலங்ககளையும் ஏற்படுத்திவிடுகின்றது. இந்த நிலையிலிருக்கும் உங்களுடைய ஈமான் எங்கே? தம்மைச் சூழ இருந்த குஃப்ரிய்ய நாகரிகங்களிலும் யூத கிறஸ்தவ சமூகங்களிலும் உள்ள அறிஞர்களால் தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு முன்னால் சற்றும் தளர்வடையாதிருந்த ஸஹாபாக்களுடைய ஈமான் எங்கே? மேலும், அந்த ஈமானின் வெளிப்பாடாக இருந்த பலமான தக்வாவும் பூர்த்தியான இஸ்லாமிய வாழ்க்கை நெறியும் எங்கே? மனிதனே! கடமையான விடயங்களைக் கூட ஒழுங்காக நிறைவேற்ற முடியாத அளவு பலவீனமாக இருக்கும் உன்னுடைய ஈமான் எங்கே? ஆனால் “இறுதிக் காலத்தில் என்னைக் காணாமலேயே ஈமான் கொள்பவர்கள் மிகவும் ஏற்றமானவர்களாக இருப்பார்கள்” என்ற அர்த்தத்தில் வரும் ஹதீஸ் தனிப்பட்ட நபர்களின் சிறப்புகளோடு தொடர்பான ஹதீஸாகும். அதாவது குறித்த சில மனிதர்களோடு தொடர்பானதாகும். இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கும் விடயமோ பொதுவான சிறப்புகளோடு தொடர்பானதாக இருப்பதால் பெரும்பான்மை அடிப்படையிலானதாகும். இரண்டாவது கேள்வி: விலாயத்தை உடைய இறை நேசர்களும் முதிர்ச்சியடைந்த பெரியோர்களும் உலகத்தைத் துறந்தவர்களாக இருப்பதைக் காண்கிறோம். ஹதீஸ்களிலும் கூட “உலகப் பற்று அனைத்து விதமான தவறுகளுக்கும் தலையாயதாகும்” என்று வந்துள்ளது. ஆனால் ஸஹாபாக்களோ உலக விடயங்களில் அதிகமதிகம் தொடர்புபட்டுள்ளார்கள். உலகைத் துறப்பது எப்படிப் போனாலும் சில ஸஹாபாக்கள் அந்தக் காலத்து நாகரிக சமூகங்களைவிட அதிகமாக உலக விவகாரங்களில் ஊடாடியுள்ளார்கள். எனவே இப்படிப்பட்ட ஸஹாபாக்களுள் மிகக் குறைவானவர் மிகப் பெரிய வலியுடைய அந்தஸ்த்தை உடையவராக இருப்பார் என்பதை எவ்வாறு கூறுகின்றீர்கள்? பதில்: முப்பத்து இரண்டாவது வார்த்தையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்களில் தெளிவாக நிறுவப்பட்டுள்ளதைப் போன்று உலகத்தின் மறுமையையும் இறை நாமங்களையும் நோக்கியிருக்கின்ற முகங்களை நேசிப்பது ஒரு குறைபாடன்றி ஈடேற்றத்துக்கான காரணங்களாகும். உலகத்தின் இந்த இரண்டு முகங்களையும் நேசிப்பதில் எந்த அளவு முன்னேற முடியுமோ அந்த அளவு இபாதத்திலும் அல்லாஹ்வை அறிந்துகொள்வதிலும் முன்னேற முடியும். ஸஹாபாக்கள் உலகத்தின் இந்த முகங்களோடே தொடர்பிலிருந்தார்கள். அந்த வகையில் உலகத்தை மறுமைக்கான விளைச்சல் நிலமாகக் கண்டு அதில் அதிகமாகவே பதப்படுத்திப் பயிர் செய்தார்கள். வஸ்துகள் அனைத்தையும் இறை நாமங்களின் கண்ணாடிகளாகக் கண்டு ஆவலோடு அவற்றைப் பார்த்தார்கள். உலகின் அவலங்கள் அனைத்தும் அதன் தற்காலிக முகமாகும். மனித இச்சைகளே அவற்றோடு தொடர்பு வைத்துக்கொள்ளும். மூன்றாவது கேள்வி: தரீக்காக்கள் என்பது ஹகீகத்துக்கான பாதைகளாகும். தரீக்காக்களுக்கு மத்தியில் நக்‌ஷபந்தி தரீக்காவே மிகப் பிரபலமானதாகவும் மிக உயர்ந்ததாகவும் கருதப்படுவதோடு மிகப் பெரும் பாதை (ஜத்ததுல் குப்ரா) என்றும் கூறப்படுகின்றது. அந்தத் தரீக்கத்துடைய இமாம்களுள் சிலர் அதன் அடிப்படையைப் பின்வருமாறு விளக்கியுள்ளார்கள். دَر۟ طَرٖيقِ نَق۟شِبَن۟دٖى لَازِم۟ اٰمَد۟ چَار۟ تَر۟ك۟ : تَر۟كِ دُن۟يَا تَر۟كِ عُق۟بٰى تَر۟كِ هَس۟تٖى تَر۟كِ تَر۟ك۟ அதாவது, நக்‌ஷபந்தி தரீக்காவில் நான்கு விடயங்களைத் துறப்பது அவசியமாகும். “உலகத்தைத் துறப்பது, நஃப்ஸுடைய கணக்கில் மறுமையைக் கூட உண்மை இலக்காகக் கொள்ளாதிருப்பது, தனது இருப்பை மறப்பது, பெருமை கொள்ளாதிருப்பதற்காக இந்தத் துறத்தல்கள் எதையும் சிந்திக்காதிருப்பது” என்பவையே அந்த நான்கு விடயங்களுமாகும். இதிலிருந்து, அல்லாஹ்வைத் தவிர அனைத்தையும் துறப்பதிலேயே அவனைப் பற்றிய உண்மையான அறிமுகமும் (மாரிஃபதுல்லாஹ்) மனித ஈடேற்றமும் தங்கியுள்ளன என்ற முடிவுக்கல்லவா வரவேண்டியுள்ளது? பதில்: மனிதன் வெறுமனே உள்ளத்தை மாத்திரம் உடையவனாக இருந்திருந்தால் ஒட்டுமொத்த வஸ்துகளையும் துறந்து, ஏன் அதற்கும் அப்பால் இறை நாமங்கள், பண்புகளையும் துறந்து சத்திய இரட்சகனின் இருப்போடு அதாவது ழாத்தோடு மாத்திரம் உளத் தொடர்பு வைப்பது அவசியமாகி இருக்கும். ஆனால் மனிதனுக்கோ ஆத்மா, பகுத்தறிவு, புத்தி, விவேகம், நஃப்ஸ் போன்று ஏராளமான புலன்களும் புலனுணர்வுகளும் காணப்படுகின்றன. எனவே, இந்த அத்தனை புலன்களையும் புலனுணர்வுகளையும் தமக்கென்றே உள்ள வெவ்வேறான பாதைகளில் நெறிப்படுத்தி, வணக்கங்களில் ஈடுபடுத்தி சத்தியத்தை நோக்கி வழிப்படுத்துவதன் மூலம் ஸஹாபாக்களைப் போன்று விசாலமான, செழிப்பான ஒரு பயணத்தை மேற்கொள்ளலாம். அப்போது உள்ளம் ஒரு தளபதியாக முன் நின்று சிப்பாய்களாகத் திகழும் ஏனைய எல்லாப் புலனுணர்வுகளையும் அழைத்துக்கொண்டு ஒரு கதாநாயகனைப் போன்று இலக்கை நோக்கிச் செல்லும். மாறாக உள்ளம் தன்னை மாத்திரம் காத்துக் கொள்வதற்காக தனது சிப்பாய்களை விட்டுவிட்டுத் தனியாகச் செல்வது போற்றத்தக்க ஒரு விடயமன்றி நிர்ப்பந்தத்தின் விளைவாகும். நான்காவது கேள்வி: ஸஹாபாக்களைவிட உயர்வடையலாம் என்ற ஒரு வாதம் இப்போது வலியுறுத்தப்படுகின்றது. இவ்வாறான ஒரு கோரிக்கை எங்கிருந்து வெளிப்படுகின்றது? யார் கோருகின்றார்கள்? இந்தக் காலத்தில் ஏன் இந்த விடயத்தைப் பேசுபொருளாக ஆக்குகின்றார்கள்? மேலும் மிகப் பெரும் முஜ்தஹித்களுக்கு முன்னால் சம உரிமை கோரும் போக்கு எங்கிருந்து தோற்றம் பெருகிறது? பதில்: இந்த விடயத்தைக் கூறுபவர்கள் இரண்டு பிரிவினர்களாவர். முதல் பிரிவினர் மார்க்கப் பற்றுள்ள மார்க்க அறிஞர்களாவர். இவர்கள் சில ஹதீஸ்களைக் கண்ட பின்னர் சம காலத்தைச் சேர்ந்த தக்வாதாரிகளையும் மார்க்கப் பற்றுள்ள மக்களையும் ஊக்குவிப்பதற்காக இந்த விடயங்களைப் பேசுகின்றனர். இந்தப் பிரிவினருக்கு எதிராக செல்வதற்குப் பெரிதாக எதுவுமில்லை. ஏலவே அவர்கள் குறைவானவர்களாக இருப்பதோடு, பாரதூரத்தை உணர்ந்து விரைவாக விளித்துக்கொள்வார்கள். இரண்டாவது பிரிவினரைப் பொருத்தவரை இவர்கள் பெருமையும் அகம்பாவமும் கொண்ட ஆபத்தான மனிதர்களாவர். இவர்கள் தம்முடைய மத்ஹப் விரோதப் போக்கை மிகப் பெரும் முஜ்தஹித்களுக்கு முன்னால் சம உரிமை கோருவதன் மூலம் பரப்ப முயற்சிக்கின்றார்கள். இன்னும் சிலர் அதையும் தாண்டிச் சென்று தம்முடைய மார்க்க விரோத செயற்பாடுகளை ஸஹாபாக்களுக்கு முன்னால் சம உரிமை கோருவதன் மூலம் நிலைநாட்ட முயற்சிக்கின்றார்கள். இதற்கான இரண்டு பின்னணிக் காரணங்கள் உள்ளன: முதலாவது: பாவங்களில் மூழ்கி, அவற்றுக்கு அடிமையான வழிகேடர்கள் அந்தப் பாவங்களுக்குத் தடையாக வருகின்ற ஷரீஅத்தின் ஏவல்களை சுமையாகக் கருதுகின்றனர். எனவே தமக்குத் தாமே நியாயம் கற்பித்துக்கொள்வதற்காக “இந்த விடயங்கள் இஜ்திஹாதுக்குற்பட்ட விடயங்களாகும். இவற்றில் ஒன்றுக்கொன்று முரணான நிலைப்பாடுகள் உள்ளன. அவர்களும் கூட எம்மைப் போன்ற மனிதர்களே. அவர்களும் தவறிழைக்க முடியுமானவர்களே. எனவே எம்மாலும் அவர்களைப் போன்று இஜ்திஹாத் செய்ய முடியும். நாம் விரும்பியது போல் எமது இபாதத்களை நிறைவேற்ற முடியும். அவர்களுக்கு வழிப்பட என்ன தேவை இருக்கின்றது?” என்று கூறுகின்றனர். இவ்வாறு இந்த அபாக்கியசாலிகள் இத்தகைய ஷைத்தானிய ஊசலாட்டங்கள் மூலம் மத்ஹப் என்ற சங்கிலியின் பிணைப்பைத் துண்டித்துக்கொள்கின்றனர். இவர்களுடைய இந்த வாதங்கள் எந்த அளவு நோய்வாய்ப்பட்ட, அடிப்படையற்ற வாதங்கள் என்பதை மேலே இருபத்தேழாம் வார்த்தையில் ஆணித்தரமாக நிறுவியுள்ளோம். இரண்டாவது: வழிகேடர்களுள் இன்னுமொரு பிரிவினர் முஜ்தஹித்களில் கை வைப்பதன் மூலம் மாத்திரம் விடயம் முற்றுப் பெருவதில்லை என்பதைக் கண்டுகொண்டார்கள். ஏனெனில் அவர்களிடம் மார்க்கத்தின் வெளிப்படையோடு தொடர்பான விடயங்கள் மாத்திரமே உள்ளன. ஆனால் இந்த வகை வழிகேடர்களோ மார்க்கத்தின் அடிப்படைகளைவிட்டும் விலகுவதற்கு அல்லது அவற்றை மாற்றுவதற்கு விரும்புகிறார்கள். எனவே “முஜ்தஹித்களைவிட எம்மால் முடியும், நாமே சிறந்தவர்கள்” என்று கூறுவதோடு விடயம் முடிந்துவிடுவதில்லை. இதன் மூலம் வெறுமனே வெளிப்படையான விடயங்களிலும் தீர்க்கம் பெறாத கிளை அம்சங்களிலுமே மூக்கை நுழைக்க முடியும். ஆனால், இந்த மார்க்க விரோத வழிகேடர்களோ மார்க்கத்தின் அடிப்படைகளில்கூட தம்முடைய சிந்தனைகளை நுழைவித்து, மாற்ற முடியாத தீர்க்கமான விடயங்களை மாற்றுவதன் மூலம் மார்க்கத்தின் அடிப்படைகளையும் ஈமானின் தூண்களையும் சிதைக்க முனைகின்றார்கள். எனவே தவிர்க்க முடியாமல் மார்க்க அடிப்படைகளின் காவலர்களாகவும் அவற்றைத் தாங்கி நிற்கும் தூண்களாகவும் திகழும் ஸஹாபாக்களின் மீது கை நீட்டுகின்றனர். மனித உருவில் இருக்கும் இந்த மிருகங்களுக்கு இழிவும் கேவலமுமே எஞ்சும்! மேலே இருபத்தேழாவது வார்த்தையில் நிறுவப்பட்டுள்ளதைப் போன்று உண்மையான மனிதர்களாலும் உண்மையான மனிதர்களுள் மிக உயர்ந்த அந்தஸ்திலுள்ள இறை நேசர்களாலும் அவர்களுக்கு மத்தியில் மிக உயர்ந்த அந்தஸ்தை உடைய பெரும் பெரும் அவ்லியாக்களாலும்கூட ஸஹாபாக்களுக்கு மத்தியில் மிகக் குறைந்த அந்தஸ்த்தை உடையவருக்கு ஈடாக முடியாதிருக்கின்ற போது இத்தகைய இழிந்த மனிதர்களுடைய நிலை எங்கே? اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى رَسُولِكَ الَّذٖى قَالَ : لَاتَسُبُّوا اَص۟حَابٖى لَو۟ اَن۟فَقَ اَحَدُكُم۟ مِث۟لَ اُحُدٍ ذَهَبًا مَا بَلَغَ نِص۟فَ مُدٍّ مِن۟ اَص۟حَابٖى صَدَقَ رَسُولُ اللّٰهِ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters