(இது நோயாளிகளுக்கான ஒரு மருந்தாகவும் ஒரு ஆறுதலாகவும் ஒரு ஆன்மீக நிவாரணியாகவும் ஒரு சுகம் விசாரிப்பாகவும் ஒரு பிரார்த்தனையாகவும் எழுதப்பட்டுள்ளது.) நினைவூட்டலும் மன்னிப்புக் கோரலும் இந்த ஆத்மீக நிவாரணி ஏனைய எல்லா ரஸயில்களைவிடவும் வேகமாக எழுதப்பட்டதோடு பிற ரஸாஇல்களைப் போல் கவனத்தோடு மீள்வாசிப்பு செய்ய நேரம் கிடைக்காமையால் எழுதிய அதே வேகத்தில் வெறுமனே ஒரு முறை மாத்திரமே மீள் வாசிப்பு செய்யப்பட்டது. உள்ளத்தில் இயல்பாகத் தோன்றிய உதிப்புகளை அதீத கவனம், ரசனை என்பவற்றைக் கொன்டு சிதைத்துவிடாதிருப்பதற்காக புதிதாக ஒரு மீள்வாசிப்புக்கான தேவையை நாம் உணரவில்லை. இதை வாசிக்கும் கண்ணியவான்களும் குறிப்பாக நோயாளிகளும் சில விரும்பத்தகாத பிரயோகங்கள் அல்லது கடினமான வார்த்தைகள் காரணமாக அலுப்புத்தட்டி வெறுக்காதிருப்பார்களாக! எனக்காகவும் துஆ செய்து கொள்ளுங்கள். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اَلَّذٖينَ اِذَٓا اَصَابَت۟هُم۟ مُصٖيبَةٌ قَالُٓوا اِنَّا لِلّٰهِ وَاِنَّٓا اِلَي۟هِ رَاجِعُونَ وَالَّذٖى هُوَ يُط۟عِمُنٖى وَيَس۟قٖينِ وَاِذَا مَرِض۟تُ فَهُوَ يَش۟فٖينِ இந்த மின்னல் மனித குலத்தின் பத்தில் ஒரு பகுதியைப் பிரதிநிதித்துவம் செய்யும் கஷ்டத்துடன் வாழும் நோயாளிகளுக்கு ஹகீகத்தான ஆறுதல்களையும் பயன் மிக்க மருந்துகளையும் உள்ளடக்கிய இருபத்தி ஐந்து நிவாரணிகளாகும்.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Hastalar Risalesi
The Twenty-Fifth Gleam
ஆதரவற்ற நோயாளியே! கவலையை விட்டுப் பொறுமையைப் பற்றிக்கொள். உனது நோய் உன்னை நிர்க்கதிக்குள்ளாக்க வந்ததல்ல. மாறாக அதுவே ஒரு நிவாரணியாகும். ஏனெனில் வாழ்க்கை செலவழிந்துகொண்டிருக்கின்ற ஒரு மூலதனமாகும். அது கனிகளைத் தராவிட்டால் நஷ்டமே எஞ்சும். நிம்மதியும் பொடுபோக்குத்தனமும் அந்த மூலதனத்தை மிக விரைவாக செலவழித்துவிடுகின்றன. நோய்நொடிக:ஓஅ உனது அந்த மூலதனத்தைப் பெரும் இலாபங்களோடு கனிமயமாக்குகின்ற சாதனங்களாகும். மேலும் வாழ்க்கை விரைவாக கடந்து செல்வதைத் தடுத்து அதன் கனிகள் பெற்றுக்கொள்ளப்படும் வரை நீளமாக்குகின்றது. ஆம், “கஷ்ட காலம் நீண்டதாகும், மகிழ்ச்சியான காலம் குறுகியதாகும்” என்ற முதுமொழியும் கூட ஆயுள் நொய்நொடிகள் காரணமாக நீளமாகின்றது என்பதையே குறிக்கின்றது.
பொருமையிழந்த நோயாளியே! பொறுமையைப் பற்றிக்கொள், இல்லை அதற்கும் மேலால் படைத்தவனுக்கு நன்றி செலுத்து. உனது இந்த நோய் உனது வாழ்வில் கழிந்துகொண்டுள்ள ஒவ்வொரு நிமிடத்தையும் ஒவ்வொரு மணித்தியால வணக்கம் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தக் கூடியதாகும். ஏனெனில் இரண்டு வகையான இபாதத்கள் உள்ளன. ஒன்று: தொழுகை, நோன்பு போன்ற, நாம் அறிந்து வைத்திருக்கும் வெளிப்படையான இபாதத்களாகும். மற்றையது மறைமுகமான இபாதத்களாகும். அதாவது நோய்நொடிகள், இழப்புக்கள் மூலம் கஷ்டத்திற்குள்ளாகும் மனிதன் தனது இயலாமை, பலவீனம் என்பவற்றை உணர்ந்து பேரன்பும் அருளும் மிக்க தனது படைப்பாளனிடம் மண்டியிட்டு இறைஞ்சுவான். இதன் மூலம் தூய்மையான, முகஸ்துதியற்ற, ஆத்மார்த்தமான ஒரு வணக்கத்தை நிறைவேற்றுகிறான். ஆம், நோய்நொடிகளுடன் செலவாகும் ஒரு வாழ்க்கை அல்லாஹ்வை முறைப்பட்டுக் கொள்ளாதிருக்கும் நிபந்தனையுடன் ஈமான்கொண்ட மனிதர்களுக்கு வணக்கமாக மாறுகின்றது என்பதற்கான ஸஹீஹான அறிவிப்புக்கள் காணப்படுகின்றன. ஆம் இவ்வாறு உனது ஆயுளின் ஒரு நிமிடத்தை ஆயிரம் நிமிட அந்தஸ்துக்கு உயர்த்தி நீண்டதொரு ஆயுளை உனக்காக வெற்றியீட்டித் தரும் நோய்நொடிகளுக்காக நன்றி செலுத்து.
சகித்துக்கொள்ளாத நோயாளியே! மனிதன் இந்த உலகுக்கு சொகுசாக வாழ்ந்து இன்பம் அனுபவித்து விட்டுச் செல்வதற்காக வரவில்லை என்பதற்கு, தொடர்ந்தேர்ச்சையாக இங்கு வருபவர்கள் விடைபெற்றுச் செல்வதும் வாலிபர்கள் வயோதிபர்களாவதும் மொத்தமாகச் சொல்லப்போனால் இடைவிடாத இழப்புகள், பிரிவுகளால் உழன்றுகொண்டிருக்கும் இந்த உலகமும் சான்றாகும். மேலும் மனிதன் உயிரினங்களுக்கு மத்தியில் மிகப் பூரணத்துவம் வாய்ந்த, மிக உன்னதமான, அங்க அவயங்கள் விடயத்தில் மிகச் செல்வச் செழிப்புமிக்க ஸ்தானத்தில் உயிரினங்களின் அரசன் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் எதிர்கொண்ட மற்றும் எதிர்கொள்வது சாத்தியமான அனர்த்தங்களையும் கஷ்டங்களையும் சிந்திப்பதன் மூலம் ஒப்பீட்டளவில் மிருகங்களைவிடத் தாழ்ந்த, கவலைகளும் கைசேதங்களும் நிறைந்த ஓர் அவல வாழ்க்கையே வாழ்கிறான். இதன் அர்த்தம் மனிதன் இந்த உலகுக்கு வெறுமனே நிம்மதியாகவும் சொகுசாகவும் வாழ்ந்துவிட்டுச் செல்வதற்காக வரவில்லை என்பதாகும். மாறாக, உன்னதமானதொரு மூலதனத்தைக் கையில் வைத்துள்ள மனிதன் அதனை இங்கு முதலீடு செய்து நித்தியமான, நிரந்தரமான ஒரு வாழ்க்கையின் நிம்மதிக்காக உழைக்கவே வந்துள்ளான். அவனது கையில் ஒப்படைக்கப்பட்டுள்ள மூலதனம் வாழ்க்கையாகும். ஒரு வேளை நோய்நொடிகள் இல்லையேல் ஆரோக்கியமும் நிம்மதியும் பொடுபோக்குத்தனத்தை அதிகரிக்கச் செய்து உலகை இனிமையானதாகக் காட்டி மறுமையை மறக்கடிக்கச் செய்துவிடும். எனவே, மண்ணறையையும் மரணத்தையும் நினைத்துப் பார்க்க விரும்பாமல் ஆயுள் என்ற மூலதனத்தை அநியாயமாகச் செலவளிப்பான். ஆனால், நோய் நொடிகள் திடீரென்று அவனது கண்களைத் திறந்துவிடுகின்றன. உடல் எனும் சதைப்பிண்டத்தைப் பார்த்து “உன்னால் மரணத்தை விஞ்ச முடியாது. வீண் விளையாட்டுகளுக்கு நேரமில்லை. உன் மீது ஒரு கடமை உள்ளது. ஆகவே அகம்பாவத்தை விட்டுவிடு! உன்னைப் படைத்தவனை நினைவில்கொள்! மண்ணறைக்கு செல்ல இருப்பதை எண்ணிப்பார்த்து அதற்காக உன்னைத் தயார் செய்துகொள்” என்று சொல்லும். இதோ மனிதா! இந்தக் கோணத்தில் நோய்நொடிகள் ஒருபோதுமே ஏமாற்றாத புத்திமதியாகவும் எப்போதுமே தட்டியெழுப்பும் ஒரு வழிகாட்டியாகவும் இருக்கின்றது. ஆகவே அதனைக் கடிந்து கொள்வதற்குப் பதிலாக இந்தக் கோணத்தில் நன்றி செலுத்துவதும் வேதனை அதிகரிக்குமெனில் பொறுமையை வேண்டுவதுமே அவசியமாகும்.
முறைப்பட்டுக் கொள்ளும் நோயாளியே! முறைப்பட்டுக் கொள்ளும் உரிமை உனக்குக் கிடையாது. மாறாக நன்றியும் பொறுமையுமே உன் மீது விதிக்கப்பட்டதாகும். ஏனெனில் உனது உடலும் உறுப்புகளும் உனது சொத்துகளல்ல. அவற்றை நீயாக ஆக்கிக்கொள்ளவுமில்லை; வேறு எங்கேனுமிருந்து பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளவுமில்லை. ஆக அது வேறு ஒருவனுடைய சொத்தாகவே இருக்கின்றது. அவற்றின் சொந்தக்காரன் தனது சொத்துகளை விரும்பியவாறு நிர்வகிக்க முடியும். -இருபத்தி ஆறாவது வார்த்தையில் சொல்லப்பட்டதைப் போன்று- உதாரணமாக, மிகுந்த செல்வச் செழிப்பும் தேர்ச்சியும் மிக்கதொரு கலைஞன் தனது விலைமதிப்பற்ற செல்வச் செழிப்புகளை வெளிக்காட்டுவதற்காக எதற்கும் வக்கற்ற சாதாரண ஒருவனை கூலிக்குப் பகரமாக மாடலாகத் தெரிவு செய்து, தான் செய்த கவர்ச்சியும் கலைப்பாடும் மிக்க ஆடையை அவனுக்கு அணிவிக்கின்றான். பிறகு அதற்கு மேலால் சில வேலைப்பாடுகளையும் மாற்றங்களையும் செய்கிறான். மேலும் தனது தேர்ச்சியின் உச்சத்தை நிரூபிப்பதற்காக அந்த ஆடையை வெட்டியும் கூட்டியும் குறைத்தும் செம்மை செய்கிறான். இப்போது கூலிக்காக வந்த வக்கற்ற அந்த மனிதன் அந்தக் கலைஞனைப் பார்த்து “என்னை தொந்தரவு செய்கிறீரே! நிமிர்த்தியும் வளைத்தும் நீர் என்னைப் படுத்தும் பாடு எனக்கு நோவினை அளிக்கின்றது. இது போதாதென்று என்னை அழகுபடுத்தும் இந்த ஆடையை வெட்டியும் கொத்தியும் எனது அழகை அசிங்கப்படுத்துகின்றீர்..!” என்றெல்லாம் கூறும் உரிமையைப் பெற்றுக்கொள்வானா? அல்லது அந்தக் கலைஞனைப் பார்த்து “இரக்கமற்ற ஒரு கொடியவனாக இருக்கிறாயே” என்று சொல்லும் அருகதைதான் அவனுக்கு இருக்கின்றதா? ஆம், இந்த உதாரணத்திலிருந்து விளங்க வருவதைப் போன்றே அனைத்தையும் விஞ்சிய சர்வ வல்லோனான அந்த வடிவமைப்பாளன் உனக்கு அணிவித்த கண், காது, அறிவு, உள்ளம் போன்ற ஒளிமயமான உறுப்புகளாலும் உணர்வுகளாலும் வார்க்கப்பட்ட உடல் என்ற ஆடையை அவனது அழகிய திருநாமங்களின் தொழிற்பாடுகளையும் பிரதிபலிப்புக்களையும் காண்பிப்பதற்காக விதவிதமான நிலைமைகளை அளித்து நிலை மாற்றுகின்றான். நீ பசி காரணமாக அவனது “ரஸ்ஸாக்” என்ற நாமத்தை அறிந்து கொள்வதைப் போன்றே “ஷாஃபீ” என்ற நாமத்தை நோயின் வாயிலாக அறிந்துகொள். இவ்வாறு வேதனைகளும் கஷ்டங்களும் ஒரு பகுதி திருநாமங்களின் நியதிகளை வெளிப்படுத்துவதனால் அவற்றில் ஞானத்தின் கீற்றுகளையும் கருணையின் சுடர்களையும் அந்தக் கீற்றுகள், சுடர்களில் பொதிந்திருக்கும் ஏராளமான அழகியல்களையும் கண்டுகொள்ளலாம். ஒரு வேளை திரை அகற்றப்படுமாயின் நீ அச்சம் கொண்டு வெறுக்கும் நோய் என்ற திரைக்குப் பின்னால் நேசத்துக்குரிய அழகிய அர்த்தங்களைக் கண்டு கொள்வாய்.
கஷ்டத்தால் நொந்து போயிருக்கும் நோயாளியே! நவீன யுகத்தின் அனுபவத்தின் மூலம் நான் இறுதியாக வந்த முடிவு நோய் நொடிகள் சிலருக்கு இறை அருளாகவும் ரஹ்மானிய அன்பளிப்பாகவும் உள்ளன என்பதாகும். கடந்த எட்டு ஒன்பது வருடங்களில் சில வாலிபர்கள் தமது நோய்களுக்கு சுகம் தேடி -அருகதை அற்றவனாக இருக்கின்ற நிலையில்- எனது துஆவைப் பெற்றுக்கொள்வதற்காக என்னை சந்திக்க வந்தனர். நான் சந்தித்த ஒவ்வொரு வாலிப நோயாளியும் ஏனைய வாலிபர்களைவிட அதிகமாக மறுமை பற்றிச் சிந்திப்பவர்களாக இருப்பதை அவதானித்தேன். அவர்களிடம் வாலிபத்தின் போதை களைந்திருந்தது; பொடுபோக்கு மேலீட்டால் மிருக இச்சைகளுக்குப் பின்னால் செல்வதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டவர்களாக இருந்தனர். நானும் அவர்களிடம் பொறுமைக்குட்பட்ட நோய்கள் ஓர் இறை அருளாக இருப்பதை நினைவூட்டுவேன். “என் சகோதரனே நான் உனது இந்த நோய்க்கு எதிரானவனல்லன். ஏன் இந்த நோய் காரணமாக உன் மீது இரக்கப்பட்டு வருந்தவும் இல்லை. ஆகவே உனக்காக துஆ செய்வதற்கான தேவையை நான் உணரவில்லை. இந்த நோய் உன்னைப் பூரணமாகத் தட்டி எழுப்பும் வரை பொறுமையைக் கைக்கொள், நோய் அதன் கடமையை நிறைவேற்றிய பிறகு பேரன்பும் அருளும் மிக்க உனக்கு ஆரோக்கியத்தை வழங்குவான்” என்று கூறுபவனாக இருந்தேன். அத்துடன் பின்வரும் உண்மையையும் நினைவூட்டுவேன்: “உன்னை ஒத்த சிலர் ஆரோக்கிய வியாதியால் பொடுபோக்குத்தனத்துக்கு ஆளாகி, தொழுகையைத் துறந்து, மண்ணறை பற்றிச் சிந்திக்காது, அல்லாஹ்வையும் மறந்து, உலக வாழ்வின் ஒரு மணித்தியால மாயையான இன்பத்துக்காக நித்தியமான மறுமை வாழ்வைப் பாழாக்கி சில வேளை அழித்தும் விடுகின்றனர். நீயோ நோய் என்ற கண்ணாடியினூடாக அனைத்து நிலைமைகளிலும் சென்றடையப் போகும் ஒரு தரிப்பிடமான மண்ணறையையும் அதற்கு அப்பாலுள்ள மறுமை உலகையும் கண்டு, அதற்கேற்ப உனது செயற்பாடுகளை அமைத்துக்கொள்கிறாய். அதாவது உன்னைப் பொருத்தவரை நோயானது ஒரு ஆரோக்கியமாகும். உன்னை ஒத்த சில வாலிபர்களிடம் காணப்படும் ஆரோக்கியமானது ஒரு நோயாகும்.”
வேதனை மிகுதியால் முறைப்பட்டுக்கொள்ளும் நோயாளியே! உன்னிடம் கேட்கிறேன், கடந்து சென்ற உனது வாழ்க்கையை ஒரு கணம் சிந்தித்துப் பார்! அந்த வாழ்க்கையில் இன்பகரமான சொகுசான நாட்களையும் கஷ்டகரமான வேதனை மிக்க பொழுதுகளையும் ஒரு முறை நினைவுபடுத்திப்பார்! அநேகமாக, ஒன்றோ “ஆஹா!” என்பாய் அல்லது “ஓஹோ!” என்பாய். அதாவது, ஒன்றோ “அல்ஹம்துலில்லாஹ்” என்பாய் அல்லது “கைசேதமே” என்று உனது உள்ளமும் நாவும் அங்கலாய்க்கும். அவதானமாகப் பார்த்தால், உன்னை “ஆஹா, அல்ஹம்துலில்லாஹ்” என்று சொல்ல வைப்பது உன்னைக் கடந்து சென்ற கடந்த காலக் கஷ்டங்களும் வேதனைகளுமாகும். அவை ஓர் ஆத்ம இன்பத்தை உனக்களிக்கின்றன. ஆகையால் உனது உள்ளம் நன்றி செலுத்துகின்றது. ஏனெனில் வேதனைகளின் முடிவு இன்பமாகும். அந்த வேதனைகளும் கஷ்டங்களும் தமது முடிவுகளோடு ஆத்மாவில் ஓர் இன்பத்தை வாரிசுச் சொத்தாக விட்டுச் செல்கின்றன. அதை சிந்திப்பதன் மூலம் சற்று கிளறிவிட்டால் ஆன்மாவிலிருந்து இன்பம் ஊற்றெடுக்கின்றது; நாவிலிருந்து நன்றித் துளிகள் சொட்டுகின்றன. “கைசேதமே!” என்று சொல்ல வைப்பது கடந்த காலத்தில் அனுபவித்த சொகுசான, இன்பமான அந்த நாட்களாகும். அவை தமது முடிவுகளோடு ஆத்மாவில் நிரந்தரமானதொரு வேதனையை வாரிசுச் சொத்தாக விட்டுச் சென்றுள்ளன. அவற்றைப் பற்றிச் சிந்திக்கும் போதெல்லாம் அந்த வேதனை மீண்டும் பொங்கியெழுந்து கைசேதத்தையும் அவலக் குரல்களையும் ஊற்றெடுக்கச் செய்கின்றன. ஆகவே ஒரு நாள் முறைகேடான இன்பம் சிலவேளை ஒரு வருடம் நீளமான ஆத்ம வேதனையை அளிக்கின்றது என்பதே உண்மையாகும். மேலும் ஒரு நாள் தற்காலிக நோயினால் வரும் வேதனையில் அது ஈட்டித் தந்த நன்மைகளால் வரும் பல நாட்கள் நீளமான ஆத்ம இன்பத்துடன் கூடவே அதன் முடிவோடு கிடைக்கும் விடுதலையால் கிடைக்கும் மிக நீண்ட ஓர் ஆத்ம இன்பமும் உள்ளது. தற்போதைக்கு உன்னைத் தொற்றியிருக்கும் இந்த தற்காலிக நோயிலுள்ள மேற்படி விளைவுகளையும் அது தன்னகத்தே கொண்டிருக்கும் நன்மைகளையும் சிந்தி. “இதுவும் கடந்து விடும்” என்று கூறி முறைப்பட்டுக்கொள்வதற்குப் பதிலாக நன்றி செலுத்து.
உலக இன்பங்களை அனுபவிக்க முடியாதிருப்பதை எண்ணி நோய் நிலமை காரணமாக வருந்தும் என் சகோதரனே! ஒரு வேளை இந்த உலகம் நிரந்தரமானதாக இருந்து எமது பாதையில் மரணமும் இடைவழியில் பிரிவின் வாடைகளும் எதிர்காலத்தில் கஷ்டங்களும் சூறாவளிகளும் நிறைந்த ஆத்மார்த்தமான வரட்சிக் காலங்களும் இல்லாதிருந்திருப்பின் நானும் உன்னுடன் கூடவே உனது நிலைக்காக வருந்தியிருப்பேன். ஆனால் யதார்த்தம் என்னவோ இதற்கு முற்றிலும் மாற்றமானதாகும். உலகம் ஒரு நாள் எம்மைப் பார்த்து “போதும் இனி, வெளியேறிவிடு” என்று கூறி, எமது ஓலங்களுக்கு முன்னால் செவியை மூடிக் கொள்ளத்தான் போகின்றது. எனவே அது எம்மை வெளியேற்ற முன்னர் நாமே இந்த நோய்நொடிகளின் எச்சரிக்கைக்கமைய இப்போதே அதைக் காதலிப்பதை விட்டுவிட வேண்டும். அது எம்மைப் புறந்தள்ளிவிட முன்னர் உள்ளத்தால் நாமே அதைப் புறந்தள்ளிவிட வேண்டும். ஆம் நோய்நொடிகள் பின்வரும் உண்மையை எமக்கு நினைவூட்டுகின்றன: “உனது உடல் பாறைகளாலோ, உருக்காலோ ஆனதல்ல. மாறாக ஒவ்வொரு கலமும் சிதைந்து செல்லத் தயார் நிலையிலுள்ள பல்வேறு மூலக்கூறுகளின் தொகுப்பாகும். பெருமையை விட்டுவிடு! உனது இயலாமையைப் புரிந்து, உனது இரட்சகனை அறிந்துகொள்! உனது பணியை உணர்ந்து உலகுக்கு எதற்காக வந்தாய் என்பதை விளங்கிக்கொள்!” என்று நோய் இதயத்தின் சுவர்களில் எதிரொலிக்கச் செய்கின்றது. மேலும், உலக இன்பங்கள் சதாவும் இருப்பதில்லை என்பதே யதார்த்தமாகும். குறிப்பாகத் தடுக்கப்பட்டவையெனில் தொடர்ச்சியற்றதாக இருப்பதோடு கூடவே வேதனை மிக்கவையாகவும் பாவமீட்டித் தரக்கூடியவையாகவும் இருக்கின்றன. உன்னைத் தொற்றியிருக்கும் நோய் காரணமாக அந்த இன்பங்களை அனுபவிக்க முடியாதிருக்கின்றதே என்று அங்கலாய்ப்பதை விட்டுவிடு! மாறாக நோய்கள் ஆத்மார்த்தமான வணக்கங்களாக இருப்பதையும் அவற்றில் பொதிந்துள்ள மறுமை சார் நன்மைகளையும் சிந்தித்து மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்.
ஆரோக்கியத்தின் இனிமையை இழந்த நோயாளியே! உனது நோய் ஆரோக்கியத்துடன் ஒட்டியிருக்கும் இறை அருள்களின் இன்பங்களை அழிப்பதில்லை. மாறாக மென்மேலும் சுவைப்பதற்கும் அதிகரிப்பதற்குமே வழி செய்கின்றது. ஏனெனில் ஒரு விடயம் தொடர்ந்தேர்ச்சையானதாக இருந்தால் அது தனது வினைத்திறனை இழந்துவிடுகின்றது. மேலும் اِنَّمَا اْلاَشْيَاءُ تُعْرَفُ بِاَضْدَادِهَا என்பது சத்தியவான்களின் ஏகோபித்த கருத்தாகும். அதாவது “எல்லா வஸ்துக்களும் அவற்றின் முரண் நிலைகளைக் கொண்டே அறியப்படும்.” உதாரணமாக இருள் இல்லாதிந்திருப்பின் வெளிச்சம் அறியப்படாத ஒன்றாகவும் சுவைக்க முடியாத ஒன்றாகவும் ஆகியிருக்கும். குளிர் இல்லாவிட்டால் சூடு உணரவோ அனுபவிக்கவோ முடியாததாக ஆகியிருக்கும். பசி இல்லையேல் உணவு சுவை தராது. தாகம் இல்லையேல் நீர் தெவிட்டாது. அவ்வாறே சுகயீனம் இல்லாவிட்டால் சுகம், சுகம் தரமாட்டாது. நோய்நொடிகள் இல்லாவிட்டால் ஆரோக்கியம் சௌகரியமானதாக இருக்காது. ஆகவே உண்மையில் அனைத்தையுமே பயனுக்காகவும் ஒரு நோக்கத்துக்காகவும் படைத்த சர்வ ஞானமிக்க அந்தப் படைப்பாளன் மனிதனுக்குத் தனது எல்லாவித அருட்கொடைகளையும் உணட்வதற்கும் அனுபவிப்பதற்கும் வழி செய்து அதன் மூலம் மனிதன் சதாவும் தனக்கு நன்றி உடையவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறான். இந்த உண்மையைப் பிரபஞ்சத்திலிருக்கும் வகை தொகையற்ற அருட்கொடைகளை எடைபோட்டு அனுபவிக்க முடியுமான ஏகப்பட்ட அங்க அவயவங்களின் மொத்தமாக மனிதனை வடிவமைத்ததந் மூலம் நிரூபிக்கின்றான். ஆகவே நிச்சயமாக சுகத்தையும் ஆரோக்கியத்தையும் அளித்ததைப் போன்றே நோய்நொடிகள், கஷ்டநஷ்டங்கள் போன்றவற்றையும் அளிப்பான். மனிதா! உன்னிடம் கேட்கிறேன்: “உனது தலையில் அல்லது கையில் அல்லது வயிற்றில் இருக்கும் இந்த நோய் இல்லாதிருந்திருப்பின் தலை, கை, வயிறு என்பவற்றின் ஆரோக்கியத்தில் இருக்கும் இன்பகரமான அருள்களை எண்ணி நீ நன்றி செலுத்தியிருப்பாயா? நிச்சயமாக நன்றி ஒரு புறமிருக்க அநேகமாக சிந்தித்தே இருக்க மாட்டாய். உணர்வுகளை மரத்துப் போக வைக்கும் அந்த ஆரோக்கியத்தை பொடுபோக்கு மேலீட்டால் அநேகமாக பாவங்களில் செலவளித்திருப்பாய்.”
மறுமையை சிந்திக்கும் நோயாளியே! நோய்கள் சவர்க்காரம் போன்று பாவங்களையும் அழுக்குகளையும் அகற்றி சுத்தப்படுத்தி விடுகின்றன. நோய்கள் பாவப்பிரயச்சித்தமாக இருக்கின்றன என்பதற்கு ஸஹீஹான ஹதீஸ்கள் ஆதாரமாக இருக்கின்றன. ஒரு ஹதீஸில் “முற்றிய மரத்தை ஆட்டும் போது எவ்வாறு கனிகள் விழுகின்றதோ அதே போன்று ஈமானுள்ள ஒரு நோயாளியின் உடல் நடுக்கமும் கூட அவனது பாவங்களை உதிரச் செய்துவிடும்” என்று வருகின்றது. பாவங்கள் நித்திய மறுமை வாழ்வைக் குறுக்கிடும் நிரந்தர நோய்களாகும். இந்த உலக வாழ்விலும் கூட உள்ளம், மனசாட்சி, ஆத்மா போன்றவற்றுக்கான ஆத்மார்ந்த நோய்களாக அவை காணப்படுகின்றன. நீ முறைப்பட்டுக்கொள்ளாமல் பொறுமையாக இருந்தால் இந்தத் தற்காலிக நோய் மூலம் ஏராளமான நிரந்தர நோய்களிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வாய். மாறாக பாவங்களைப் பொருட்படுத்தாதவனாக அல்லது மறுமையை மறந்தவனாக அல்லது அல்லாஹ்வை அறியாதவனாக இருப்பின் உன்னை அந்த அற்ப உடலியல் நோயைவிட மில்லியன் மடங்கு பெரிய, பயங்கரமானதொரு நோய் தொற்றியிருக்கின்றது. அழுவதாக இருந்தால் உண்மையில் அதற்காகவே அழுது புலம்ப வேண்டியவனாக இருக்கின்றாய். ஏனெனில் ஒட்டுமொத்த படைப்பினங்களோடும் உனது உள்ளம், ஆத்மா, நஃப்ஸ் என்பன தொடர்புபட்டுள்ளன. தொடர்ந்தேர்ச்சையான பிரிவுகளாலும் அழிவுகளாலும் அந்தத் தொடர்புகள் துண்டிக்கப்படுவதால் அவை உன்னில் எண்ணிலடங்காத காயங்களைத் தோற்றுவிக்கின்றன. குறிப்பாக நீ மறுமையை அறியாதவனாக இருப்பதாலும் மரணத்தை நிரந்தர அழிவாக நினைத்துக்கொண்டிருப்பதாலும் ஏரத்தாள காயங்களாலும் பிணிகளாலும் அவதிப்படும் உலகளவு பெரிதான நோய்வாய்ப்பட்டதொரு ஆத்மார்ந்த உடலைச் சுமக்கிறாய். ஆம், முதலில் எண்ணிலடங்காத காயங்களோடும் பிணிகளோடுமுள்ள அந்தப் பிரமாண்டமான, ஆத்மார்த்த உடலைப் பீடித்திருக்கும் எண்ணற்ற வியாதிகளுக்கான திட்டமான மருந்தாகவும் நிவாரணியாகவும் திகழும் ஈமான் எனும் சஞ்சீவியைத் தேடிப்பெற்று உனது பாதையை நெறிப்படுத்த வேண்டியவனாக நீ இருக்கின்றாய். இப்போதைக்கு அந்த சஞ்சீவியை அடைந்து கொள்வதற்கான மிக இலகுவான பாதை, உனது உடலியல் ரீதியான நோய் கிழித்தெறிந்த பொடுபோக்குத் திரையால் இதுவரை காலமும் திரையிடப்பட்டிருந்த இயலாமை, பலவீனம் என்ற யன்னல்களினூடாக சர்வ மாட்சிமைமிக்க வல்லோனின் வல்லமையையும் ரஹ்மத்தையும் அறிந்து கொள்வதாகும். ஆம் அல்லாஹ்வை அறியாதவனின் தலையில் உலகளவு தரித்திரம் நிரைந்திருக்கும். அல்லாஹ்வை அறிந்தவனின் உலகமோ ஒளியாலும் ஆத்ம இன்பத்தாலும் நிரம்பியதாகும். இந்த உண்மையை ஒவ்வொருவரும் தத்தமது அந்தஸ்துக்கேற்ப தத்தமது ஈமானிய பலத்தின் மூலம் அனுபவிப்பர். ஈமான் மூலம் கிடைக்கும் இந்த ஆத்மார்த்தமான இன்பத்துக்கும் மகிழ்ச்சிக்கும் சுகத்துக்கும் முன்னால் அற்பமான உடலியல் நோய்களிலிருந்து வரும் வேதனைகள் கரைந்து காணாமல் போய்விடும்.
படைப்பாளனை அறிந்து கொண்ட நோயாளியே! நோய் நொடிகளோடு வேதனைகளும் பயமும் பீதியும் ஒட்டிக்கொள்வதற்கான காரணம் நோய்கள் சிலவேளை மரணத்துக்கான காரணியாக அமைந்துவிடலாம் என்பதாகும். மரணம் பொடுபோக்குத்தனமான ஒரு வாழ்கைக்குள் பார்வைக்குப் பயங்கரமாகத் தெரிவதால் அதற்குக் காரணமாக இருக்கும் நோய்களும் அச்சத்தையும் நடுக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. முதலில் “ஆயுள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது, அதில் மாற்றம் கிடையாது” என்பதை அறிந்து, உறுதியாக ஈமான் கொள். கடுமையான நோயாளிகளின் தலைமாட்டில் நின்று அவர்களுக்காக அழுத பலரும் பூரண ஆரோக்கியத்தோடு இருந்த பலரும் மரணித்துள்ளார்கள். அந்த நோயாளிகளோ சுகம் பெற்று நீடூழி வாழ்ந்துள்ளனர். இரண்டாவதாக: மரணம் எமது வெளிப்பார்வைக்குத் தென்படுவது போன்று பயங்கரமானதல்ல. -ரஸாயில்களின் பல பகுதிகளில், சர்வ ஞானம் பொதிந்த குர்ஆனின் ஒளி மூலம் சந்தேகத்துக்கிடமின்றி நிறுவப்பட்டதற்கமைய- மரணம் என்பது ஈமான் கொண்டவர்களைப் பொருத்தவரை வாழ்க்கைப் போராட்டத்தின் கஷ்டங்களிலிருந்து கிடைக்கும் ஒரு விடுதலையாகும்; உலகம் என்ற சோதனைக்களத்தில் ஏவல் விலக்கல்களின் உள்ளடக்கமான உபூதிய்யத் பணியில் கிடைக்கின்ற ஒரு விடுமுறையாகும்; மறு உலகுக்குப் பயணித்த தொண்ணூற்றொன்பது வீதமான உற்றார் உறவினர்களையும் நேசத்துக்குரியவர்களையும் அடைந்துகொள்வதற்கான ஓர் ஊடகமாகும்; உண்மைத் தாயகமான நித்திய நிம்மதிகள் நிறைந்த பூர்வீக இல்லத்துக்குள் நுழைவதற்கான ஒரு நுழைவுச் சீட்டாகும்; உலக சிறைச்சாலையிலிருந்து சுவனத்துச் சோழைகளுக்கான ஓர் அழைப்பாகும்; அளவற்ற அன்பும் நிகரற்ற அருளும் உடைய படைப்பாளனின் அருளில் இருந்து தனது பணிக்குப் பகரமான கூலியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒரு பயணமாகும். ஆம், இதுவே சத்தியத்தின் அடிப்படையில் மரணத்தின் உண்மைத் தன்மையாகும். ஆகவே அதைப் பயங்கரமானதாக அன்றி அருட்கொடைகளுக்கும் நிம்மதிக்குமான ஆரம்பமாகவே பார்க்க வேண்டும். அத்துடன் இறை நேசச் செல்வர்களுல் சிலர் மரணத்தையிட்டுத் தயங்கிய விடயத்தைப் பொருத்தவரை அதற்கான காரணம் மரணத்தின் மீதான அச்சமன்றி அன்றி மென்மேலும் நன்மைகள் செய்ய வேண்டுமே என்ற ஆதங்கமும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வதன் மூலம் அந்த நன்மைகளை அடைந்துகொள்ள முடியும் என்பதுமாகும். ஆம் ஈமான் கொண்டவர்களுக்கு மரணமானது சௌபாக்கியங்களை அடைந்து கொள்வதற்கான ஒரு வாயிலாகும். வழிகேட்டில் உள்ளவர்களுக்கோ முடிவில்லாத, இருண்டதொரு பாதாளமாகும்.
அவசியமின்றி ஏக்கமடையும் நோயாளியே! நோயின் சுமை காரணமாகவே ஏக்கமடைகின்றாய். உனது ஏக்கம் நோயின் சுமையை மென்மேலும் அதிகரிக்கவே வழி செய்யும். நோயின் சுமை குறைய வேண்டுமெனில், ஏக்கமடையாதிருக்க முயற்சிசெய்! அதாவது நோயின் பயன்களையும், நன்மைகளையும் நோய் விரைவாக குணமாகிவிடும் என்பதையும் நினைத்து ஏக்கத்தை அகற்றிவிடு! ஆம், ஏக்கம் நோயை இரட்டிப்பாக்கிவிடுகின்றது. உடலியல் ரீதியான நோயோடு ஏக்கம் காரணமக உளவியல் ரீதியான ஒரு நோயும் உள்ளத்தைப் பீடித்துக்கொள்ளும். உடலியல் நோய் அந்த உளவியல் நோயின் கைப்பிடித்து வளரும். மாறாக அதை ஏற்று, பொருந்திக்கொண்டு, நோயின் தாத்பரியங்களை சிந்திப்பதன் மூலம் அந்த ஏக்கம் அகற்றப்பட்டால் அந்த உடலியல் நோயின் ஆணி வேர் அறுக்கப்பட்டு இலகுவானதாக ஆகிவிடும்; ஒரு பகுதி தேறியும்விடும். ஒரு திர்ஹம் அளவேயான உடலியல் நோய் ஏக்க்த்தின் மூலம் பூதாகரப்படுத்தப்படும் போது பத்து திர்ஹமாகப் பெரிதாகிவிடும். ஏக்கம் அகற்றப்பட்டால் அந்த நோயின் பத்தில் ஒன்பது அகன்றுவிடும். ஏக்கம் நோயை அதிகரிக்கச் செய்வதைப் போன்றே மறுபுறம் இறை ஞானத்தை நிந்தனை செய்வதாகவும் இறை கருணையைக் கடிந்து கொள்வதாகவும் பேரன்பும் அருளும்மிக்க படைப்பாளனை முறைப்பட்டுக் கொள்வதாகவும் இருப்பதால் எப்போதும் முரண் விளைவையே தரும். நோய் மென்மேலும் அதிகரிக்கும். ஆம், இறைவனுக்கு நன்றியுள்ளவனாக இருப்பது அருள்களில் அதிகரிப்பை ஏற்படுத்துவத்தைப் போன்றே முறைப்பட்டுக் கொள்வது நோய்நொடிகளையும் கஷ்ட நஷ்டங்களையும் அதிகரிக்கச் செய்கின்றது. அத்தோடு ஏக்கம் என்பது தன்னளவில் ஒரு நோயாகும். அதற்கான மருந்து நோயில் பொதிந்துள்ள தாத்பரியங்களை விளங்கிக்கொள்வதாகும். ஏலவே அதன் தாத்பரியங்களையும் பயன்களையும் அறிந்துகொண்டோம். ஆகவே அந்த மருந்தை ஆதங்கத்தின் மீது தடவி விமோசனத்தைப் பெற்றுக் கொள்! “கைசேதமே” என்பதற்குப் பதிலாக “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறு
பொறுமையற்ற நோயாளியே! நோய்நொடிகள் ஓர் உடனடி வேதனையை உனக்குத் தந்தாலும், முன்னைய நோய்க்கும் தற்போதைய நோய்க்கும் இடைப்பட்ட காலத்தில் நோயின்றி வாழக் கிடைத்தமையினால் வரும் ஓர் ஆத்ம திருப்தியையும் தற்போதைய நோய் பெற்றுத் தரும் நன்மைகள் காரணமாக வரும் ஓர் ஆத்ம இன்பத்தையும் தருகின்றது. இன்றைக்கு அல்லது இந்த மணித்தியாலத்துக்குப் பிறகுள்ள காலமும் கூட நிச்சயமற்றதாகும். எனவே அதிலும் கூட நோய்களை இல்லாததாகவே கொள்ளவேண்டும். இல்லாமையில் எந்த வலிகளும் இல்லை. இல்லாத ஒன்றுக்காக வருத்திக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. ஆனால் நீயோ பிழையான வழியில் சென்று மாயைகளில் வீழ்ந்து பொறுமையை இழக்கின்றாய். இன்று வரையான நோய்களின் உடலியல் சார்ந்த பகுதிகள் அகன்றுவிட்டதால் அவற்றின் வலிகளும் வேதனைகளும் சேர்ந்தே அகன்றுவிட்டன. எஞ்சியுள்ளவை அவற்றின் நன்மைகளும் அவற்றின் முடிவால் ஏற்பட்ட ஆறுதலும் மகிழ்ச்சியுமாகும். எனவே அவை உனக்கு இன்பமும் மகிழ்ச்சியும் தர வேண்டியிருக்க அவற்றை நினைத்து தன்னைத் தானே வருத்திக்கொள்வதும் பொறுமையின்மைக்கு ஆட்படுவதும் மடமையாகும். நாளைய தினங்களைப் பொருத்தவரை அவை இன்னும் வரவில்லை. அவற்றை இப்போதிருந்தே சிந்தித்து, இல்லாத ஒரு நாளில், இல்லாத ஒரு நோயின், இல்லாத ஒரு வேதனையை கற்பனை செய்து வருத்தப்படுவதும் பொறுமை இழப்பதும் மேற்படி மூன்று கட்ட இல்லாமைகளுக்கு இருப்பு அந்தஸ்த்தை வழங்குவதும் மடமையன்றி வேறென்ன? ஆகவே இந்த மணித்தியாலத்துக்கு முன்னர் நோயுடன் கழிந்த காலங்கள் மகிழ்ச்சியை விட்டுச் சென்றுள்ள அதே சமயம் இந்த மணித்தியாலத்துக்குப் பிறகுள்ள காலமும் அதில் வரக்கூடிய நோய் நொடிகளும்கூட இல்லாத ஒன்றாகும் என்பதே யதார்த்தமாகும். ஆகவே அல்லாஹ் உனக்களித்த ஒட்டுமொத்த பொறுமைச் சக்தியையும் இந்த மணித்தியால வலிக்கு எதிராக ஒன்றுதிரட்டு! “யா ஸப்ர்!” என்று கூறி தாக்குப் பிடி!
நோய் காரணமாக வணக்க வழிபாடுகளையும் திக்ர் அவ்ராதுகளையும் வழமை போன்று நிறைவேற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை எண்ணிக் கவலைப்படும் நோயாளியே! அறிந்து கொள்! தக்வா உள்ள ஒரு முஃமின் போன தொடர்ந்தேர்ச்சையாக செய்து வருகின்ற, ஆனால் நோய் காரணமாக செய்ய முடியாமல் போகின்ற வணக்க வழிபாடுகளுக்கான நன்மைகளை நோய்க்காலங்களிலும் பூரணமாக அடைந்துகொள்வான் என்பது ஹதீஸ்கள் வாயிலாக உறுதியானதாகும். பொறுமையோடும் தவக்குலோடும் பர்ளான வணக்கங்களை முடியுமான வரை நிறைவேற்றும் ஒரு நோயாளியின் நோயானது நோயின் கடுமை காரணமாக அவனால் நிறைவேற்ற முடியாது போகின்ற சுன்னத்தான வணக்கங்களின் இடத்தை மிகவும் தூய்மையான அமைப்பில் நிரப்பிவிடுகின்றது. மேலும் மனிதனுக்கு அவனது இயலாமை, பலவீனம் என்பவற்றை உணர்த்தி அந்த இயலாமையின் மொழியினால் பலவீனத்தின் நாவினால் சொல்லாகவும் செயலாகவும் ஒரு பிரார்த்தனையை செய்ய வைக்கின்றது. ஆம் மனிதன் சதாவும் இறை சந்நிதானத்தில் தஞ்சம் தேடுபவனாகவும் மன்றாடி, உளமாறப் பிரார்த்தனை செய்பவனாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக அவன் எல்லையில்லாத இயலாமையும் முடிவில்லாத பலவீனமும் உடையவனாகப் படைக்கப்பட்டுள்ளான். قُلْ مَا يَعْبَوءُا بِكُمْ رَبِّى لَوْلا دُعَاوءُكُمْ அதாவது “துஆ இன்றேல் உங்களது பெறுமதி தான் என்ன?” என்ற மறை வசனம் உணர்த்துவதற்கமைய மனிதனின் படைப்பிலுள்ள தாத்பரியமாகவும் அவனது மதிப்புக்கான காரணியாகவும் திகழும் தூய துஆவை நாடுவதற்கான ஒரு காரணியாக நோய் இருப்பதால் இந்தக் கோணத்தில் முறைப்பாடன்றி அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும் நோய் திறந்துவிட்ட துஆவுக்கான கதவை ஆரோக்கியத்தை அடைந்த உடனே மூடிவிடாதிருப்பதும் அவசியமாகும்.
நோய் காரணமாக முறைப்பட்டுக்கொள்ளும் நாதியற்ற மனிதனே! நோய் சிலருக்கு விலைமதிப்பற்றதொரு பொக்கிஷமாகவும் பெறுமதிமிக்கதோர் இறை அன்பளிப்பாகவும் உள்ளது. ஒவ்வொரு நோயாளியும் தனது நோயை இந்த வகைக்குட்பட்டதாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது, உண்மையில் அஜலுடைய, அதாவது மரணத்துடைய நேரம் நிச்சயமற்றதாகும். வல்லோன் அல்லாஹ் மனிதனை பூரண நம்பிக்கையீனம், பூரண பொடுபோக்குத்தனம் ஆகிய நிலைமைகளிலிருந்து பாதுகாத்து அச்சம், நம்பிக்கை என்ற இரு துருவங்களுக்கு மத்தியில் உலகத்தையும் மறுமையையும் ஒரே சமயம் பாதுகாத்துக்கொள்வதற்கான அச்சானியில் நிலைப்படுத்துவதற்காக தனது ஞானத்தின் வெளிப்பாடாக அஜலை மறைத்துள்ளான். எனவே எந்த நேரமும் மரணம் வர முடியும் என்பதால், ஒரு வேளை பொடுபோக்கில் இருக்கும் போது பிடித்துக் கொண்டால் நித்திய மறுமை வாழ்வுக்குப் பாரிய பாதகங்களை ஏற்படுத்த முடியும். நோய் நொடிகள் பொடுபோக்கைக் களைத்து மறுமையை நினைவூட்டி அதற்காக மனிதனைத் தயார்படுத்தும். இதன் மூலம் சில போது இருபது வருடங்களில் அடைந்துகொள்ள முடியாமல் போன அந்தஸ்துகளை வெறும் இருபதே நாட்களில் அடைந்துகொள்வான். அந்த வகையில் எமது தோழர்களுள் -அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக- இரண்டு வாலிபர்கள் இருந்தனர். ஒருவர் இலாமாவைச் சேர்ந்த ஸப்ரி, மற்றவர் இஸ்லாம் கிராமத்தைச் சேர்ந்த வஸீர்ஸாதே முஸ்தஃபா. இந்த இருவரும் எனது மாணவர்களுக்கு மத்தியில் எழுத முடியாதவர்களாக இருந்த போதிலும் விசுவாசத்திலும் ஈமானியப் பணிகளிலும் மிகவுமே முன்னனியில் நிற்பதை வியப்புடன் அவதானித்து வந்தேன். அப்போது இதன் தாத்பரியம் எனக்குப் புரியவில்லை. அவர்களுடைய வபாத்தின் பின்னரே இருவரிடமும் கடுமையானதொரு நோய் இருந்ததை அறிந்துகொண்டேன். அந்த நோய் வழங்கிய தெளிவினூடாக பொடுபோக்குத்தனமாகக் கடமைகளைப் புறக்கணித்து வாழும் ஏனைய வாலிபர்களைப் போலன்றி மிக உயர்ந்த தக்வாவுடன், மிகப்பெறுமதி வாய்ந்த ஒரு பணியில் மறுமைக்குப் பயன்ளிக்கக்கூடிய அழகியதொரு வாழ்க்கை வாழ்ந்தனர். இன்ஷா அல்லாஹ் அவர்களது இரண்டு வருடங்கள் அந்த நோயினால் அனுபவித்த கஷ்டங்கள் கோடிக்கணக்கான வருடங்களைவிட அதிகமான நித்திய வாழ்வின் நிம்மதிக்குக் காரணமாக அமைந்துவிட்டது. நான் சிலபோது அவர்களது ஆரோக்கியத்துக்காகக் கேட்ட துஆக்கள் தொடர்பாக, ஒரு வேளை அவை ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் அது அவர்களது மறுமை விடயத்தில் பதுவாவாக மாறியிருக்குமோ என்று எண்ணுகிறேன். இன்ஷா அல்லாஹ் அந்த துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களது ஆரோக்கியமான மறுமை வாழ்வுக்குப் பயனளிக்க வேண்டும் என்று ஆசிக்கிறேன்.. ஆம், அந்த இருவரும் -எனது நம்பிக்கையின்படி- பத்து வருட தக்வா மூலம் அடைந்துகொள்ள முடியுமான சம்பாத்தியங்களையும் இலாபங்களையும் மிகவுமே குறுகிய ஒரு காலத்துக்குள் அடைந்துகொண்டார்கள். ஒருவேளை இருவரும், ஒரு கூட்டம் வாலிபர்களைப் போன்று ஆரோக்கியத்தையும் வாலிபத்தையும் நம்பி பொடுபோக்கையும் பாவங்களையும் நோக்கி விரைந்திருப்பின், மரணமும் அவர்களைச் சுற்றி வளைத்து சரியாக பாவக் கிடங்குக்குள் இருக்கும் போது பிடித்திருப்பின் அந்த ஒளிமயமான இருப்பிடத்துக்குப் பதிலாக தமது மண்ணறைகளை பாம்புகளினதும் விஷ ஜந்துகளினதும் கிடங்காக மாற்றியிருப்பர். எனவே உண்மையில் நோய்களில் இத்தகைய பயன்கள் உள்ளன. எனவே அதைப்பற்றி முறைப்படுவதை நிறுத்தி தவக்குலோடும் பொறுமையோடும் நன்றி செலுத்துவதும் இறை கருணையில் ஆதரவு வைப்பதுமே முறையாகும்.
கண்களில் திரையிடப்பட்ட மனிதனே! ஈமான் கொண்டவர்கள் தமது கண்களுக்கு இடப்படும் திரைக்குப் பின்னால் மகத்தான பாக்கியங்களையும் தொலை தூரம் பார்க்க முடியுமான ஆத்மார்த்தமான கண்களையும் அடைந்துகொள்கின்றனர். இதன் மகத்துவத்தை அறிவாயானால் பார்வை இழந்தமைக்காக உனது ரப்புக்கு கோடி நன்றிகள் கூறுவாய். இதற்கு ஆதாரமாக உள்ள ஒரு சம்பவத்தை கூறுகிறேன். அதாவது, எனக்காக எட்டு வருடங்கள் பூரண விசுவாசத்தோடு எவ்வித சஞ்சலங்களுமின்ற சேவகம் செய்த பார்ளாவைச் சேர்ந்த சுலைமானின் அத்தையுடைய கண்கள் ஒரு சமயம் பார்வை இழந்துவிட்டது. அந்த ஸாலிஹான பெண் என்னை எனது தகுதியைவிட நூறு மடங்கு உயர்த்தி, தனது கண்கள் குணமடையப் பிரார்த்திக்குமாறு என்னைப் பள்ளிவாசல் நுழைவாயிலில் பிடித்துக் கொண்டார். நானும் அருள்பாலிக்கப்பட்ட, இறை காதலில் திளைத்த அந்தப் பெண்ணின் ஸாலிஹான நிலையை எனது துஆவுக்கான பரிந்துரையாக்கி “யா ரப்பி, அவளது ஸாலிஹான நிலையின் புண்ணியத்திற்காக அவளது கண்களை குணப்படுத்திவிடு” என்று இறைஞ்சினேன். அதற்கு இரண்டாவது நாள் புர்தூரைச் சேர்ந்த ஒரு கண் வைத்தியர் அங்கு வந்த போது அவரது கண்களைக் குணப்படுத்தினார். நாட்பது நாட்கள் கழிந்து மீண்டும் அவரது கண்கள் பார்வை இழந்துவிட்டன. நான் மிகவும் கவலைப்பட்டேன். அவருக்காக அதிகமதிகம் துஆ செய்தேன். இன்ஷாஅல்லாஹ் அந்த துஆக்கள் அவரது மறுமைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். இல்லையேல் எனது அந்த துஆக்கள் அவளது விடயத்தில் ஒரு பதுவாவாக மாறும் அபாயம் இருந்தது. ஏனெனில் அவரது அஜலில் நாற்பது நாட்கள் மாத்திரமே எஞ்சியிருந்தன. நாற்பது நாட்கள் கழித்து -அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக- வபாத்தாகிவிட்டார். ஆம் அந்த மர்ஹூமா நாற்பது நாட்கள் பார்ளாவின் அழகிய தோட்டங்களை ஏக்கத்தோடும் வயதான கண்களாளும் பார்ப்பதற்குப் பதிலாக மண்ணறையில் சுவனத் தோட்டங்களை நாற்பதாயிரக்கணக்கான நாட்கள் பார்த்து ரசிக்கும் பாக்கியத்தை அடைந்து கொண்டார். ஏனெனில் பலமான ஈமானோடும் ஸாலிஹான தன்மையில் உத்தமியாகவும் இருந்தார். ஆம் ஒரு முஃமின் கண்கள் திரையிடப்பட்ட நிலையில் மண்ணறையை அடைந்தால் தனது அந்தஸ்துக்கேற்ப ஏனைய கப்றுவாசிகளைவிட மிக அதிகமாக அந்த ஒளி உலகை பார்த்து ரசிக்க முடியும். இந்த உலகில் நாம் ஏராளமான விடயங்களைப் பார்வையிடும் போது கண் பார்வையற்ற முஃமின்களோ பார்வையிட முடியாதுள்ளனர். கப்ருக்கு ஈமானோடு செல்கின்ற கண் பார்வையற்றவர்கள் தத்தமது அந்தஸ்துக்கேற்ப பிற மண்ணறைவாசிகளைவிட சிறப்பாகப் பார்வையிடுவார்கள். தொலை தூரங்கள் வரை சுவனத்துச் சோலைகளை கண்டுகள்ப்பார்கள். இதோ, இவ்வாறு உள்ளொளி பெற்ற கண்களையும் அந்தக் கண்கள் மூலம் மண்ணறையில் இருக்கும் போதே பிரபஞ்ச வெளியில் இருக்கும் சுவனச் சோலைகளைக் கண்டு களிக்கும் பாக்கியத்தையும் கண்களில் ஏற்படும் திரைக்குப் பின்னால் பொறுமையோடும் நன்றியுடையவர்களாகவும் இருப்பதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஆம் அந்தத் திரையை உனது கண்களில் இருந்து அகற்றி அந்தக் கண்களால் உன்னைப் பார்க்க வைக்க முடியுமான கண் வைத்தியர் சர்வ ஞானம் பொதிந்த குர்ஆன் ஆகும்.
கைசேதமே என்று முணுமுணுக்கும் நோயாளியே! நோயின் தோற்றத்தைப் பார்த்து அவல ஓலம் எழுப்புவதை நிறுத்திக்கொள்! மாறாக அதன் அர்த்தத்தைப் பார்த்து ஆஹா! என்று ஆறுதல் பெருமூச்சுவிடு! ஒரு வேளை நோயின் அர்த்தம் அழகியதாக இல்லாதிருந்திருப்பின் பேரன்பும் அருளும் மிக்க படைப்பாலன் தனது மிகவுமே நேசத்துக்குரிய அடியானுக்கு நோய் நொடிகளைக் கொடுத்திருக்கமாட்டான். ஸஹீஹான ஹதீஸில்اَشَدُّ النَّاسِ بَلاَءً َاْلاَنْبِيَاءُ ثُمَّ اْلاَوْلِيَاءُ َاْلاَمْثَلُ فَاْلاَمْثَلُ என்று வருகின்றது. அதாவது “அதிகமான முஸீபத்களுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகுபவர்கள் மனிதர்களில் மிக நல்லவர்களேயாவர்.” ஐயூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதல் நபிமார்கள், அவ்லியாக்கள், நல்லடியார்கள் என்று எல்லோரும் தாம் சந்தித்த நோய்நொடிகளைத் தூய வணக்கங்களாகவும் கருணையுள்ள படைப்பாளனின் ஒரு வகை சத்திரசிகிச்சைகளாகவும் இறை அன்பளிப்புகளாகவும் பார்த்து பொறுமையோடு நன்றி செலுத்தியுள்ளார்கள். அவல ஓலமிட்டு ஒப்பாரி வைக்கும் நோயாளியே! நீயும் இந்தப் பாக்கியம் பெற்ற கூட்டத்தோடு சங்கமமாக ஆசையெனில் பொறுமையோடு நன்றி செலுத்து. அதுவன்றி ஒப்பாரி வைத்து முறைப்படுபவனாக இருந்தால் அந்த உத்தமர்களின் அணியில் சேர்ந்துகொள்வதற்கான தகுதியை இழந்துவிடுவாய். உனக்கான இடம் பொடுபோக்குக்காரர்களின் பாதாளங்களாகவும் இருண்ட பாதைகளாகவுமே இருக்கும். சில நோய்கள், ஒரு வேளை மரணத்தை விளைவாகத் தருமெனில் ஆத்மார்த்தமாக ஒரு ஷஹீதுடைய அந்தஸ்தை அதாவது “ஷஹாதத்” போன்ற ஒரு “விலாயத்” அந்தஸ்தைப் பெற்றுத் தருகின்றன. அந்த வகையில் பகப் பேற்றின் போது ஏற்படும் நோய்கள், வயிற்றோட்டம், நீரில் மூழ்குதல், கொலரா, அம்மை போன்றவற்றால் மரணிப்பவர்கள் ஆத்மார்த்தமான ஷஹாதத் அந்தஸ்தைப் பெறுவதைப் போன்றே இன்னும் பல அருள்பாலிக்கப்பட்ட நோய்கள், அவற்றின் மூலம் மரணம் சம்பவிக்குமானால் “விலாயத்” அந்தஸ்த்தை ஈட்டிக் கொடுக்கின்றன. மேலும் நோய்கள் உலக மோகத்தையும் ஈடுபாட்டையும் குறைப்பதால் உலகாயுதவாதிகளின் பார்வையில் மிகவுமே வேதனையும் நோவினையும் மிக்கதாக இருக்கின்ற உலகை விட்டுமான பிரிவை இலகுபடுத்தும், சிலவேளை நேசிக்கவும் செய்யும்.
அசௌகரியங்களை நினைத்து முறைப்பட்டுக்கொள்ளும் நோயாளியே! நோய்நொடிகள் மனிதனுடைய சமூக வாழ்வின் ஈடேற்றத்தில் மிக முக்கியமான, மிக அழகிய அடிப்படைகளாகத் திகழும் பரஸ்பர அன்பு, மரியாதை போன்ற விடயங்களுக்கு உயிரூட்டுகின்றது. ஏனெனில் நோய்நொடிகள் மனிதனை கொடுமை இழைப்பதற்கும் இரக்கமின்மைக்கும் உந்துகின்ற தன்னிறைவு நிலையிலிருந்து பாதுகாக்கின்றது. ஏனெனில் اِنَّ اْلاِنْسَانَ لَيَطْغَى اَنْ رَاۤهُ اسْتَغْنَى என்ற மறை வசனம் குறிப்பால் உணர்த்துகின்ற கருத்தின் பிரகாரம் ஆரோக்கியம், நிம்மதி என்பவறிலிருந்து வரும் தன்னிறைவை அனுபவிக்கும் நஃப்ஸுல் அம்மாரா மரியாதைக்கும் கண்ணியத்துக்குமுரிய உறவுகளைப் பொருட்படுத்தவோ அன்பில், ஆதரவில் தேவையுள்ள கஷ்டவாளிகளுக்கும் நோயாளிகளுக்கும் இரக்கம் காட்டவோமாட்டது. ஆனால் தனது நஃப்ஸ் நோய்க்கு ஆளாகும் போது அந்த நோய் மூலம் தனது இயலாமையையும் பலவீனத்தையும் உணர்ந்துகொள்வான். மரியாதைக்குரிய உறவுகளுக்கு மதிப்பளிப்பான். தன்னை சுகம் விசாரிக்கவும் தனக்காக உதவி ஒத்தாசை புரியவும் வரக்கூடிய முஃமினான சகோதரர்களுக்கு மதிப்பளிப்பான். மேலும் அவர்களை தனது நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் மனிதாபிமான உணர்வுகள் பசுமை அடைந்து பிறருடைய கஷ்டங்களைப் புரிந்துகொள்வதற்கும் இஸ்லாத்தின் வழிகாட்டலுக்கமைய அத்தகையவர்களுக்கு உதவி செய்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்வதற்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது. எனவே அத்தகையவர்களுக்காக உளப்பூர்வமாக வருத்தப்படுவான்; இரக்கம் காட்டுவான்; கைகூடுமெனில் உதவி ஒத்தாசையும் செய்வான். எதுவுமே சாத்தியப்படவில்லை எனில் துஆக்கள் மூலமும் ஷரீஅத்தின் பிரகாரம் சுன்னத்தாக இருக்கின்ற சுகம் விசாரிப்புக்காகச் செல்வதன் மூலம் நன்மைகளைப் பெற்றுக்கொள்வான்.
நன்றி செலுத்துவதற்குப் பதிலாக முறைப்பட்டுகொண்டு அலையும் நோயாளியே! முறைப்பாடு என்பது ஓர் உரிமையின் அடியாகவே தோன்றுகிறது. முறைப்பட்டுக்கொள்வதற்கு உனக்குச் சொந்தமான எந்த உரிமையும் மீறப்படவில்லையே! மாறாக உன் மீது கடமையாகியும் நிறைவேற்றப்படாத ஏராளமான நன்றிக்கடன்கள் இருக்கின்றன. அல்லாஹ்வுக்கான அந்தக் கடமைகளை நிறைவேற்றாமல் உரிமையற்ற விதத்தில் உரிமை கோரும் பாணியில் முறைப்பட்டுக்கொள்கிறாய். நீ உனக்கு மேலுள்ள ஆரோக்கியவான்களைப் பார்த்து முறைப்பட்டுக்கொள்ள முடியாது. மாறாக ஆரோக்கிய விடயத்தில் உன்னை விட மோசமான நிலையில் உள்ளவர்களைப் பார்த்து நன்றி செலுத்தவே கடமைப்பட்டுள்ளாய். உனது கையில் முறிவு இருக்கின்றது எனில் துண்டிக்கப்பட்ட நிலையிலுள்ள கைகளைப் பார்த்து, ஒரு கண் இல்லை எனில் இரண்டு கண்களுமே இல்லாதவர்களைப் பார்த்து உனது படைப்பாளனாகிய அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து. ஆம் அருள்கள் விடயத்தில் தனக்கு மேலுள்ளவர்களைப் பார்த்து முறைப்பட்டுக்கொள்ள எந்த ஒருவனுக்கும் உரிமை கிடையாது. முஸீபத்களின் போது ஏதேனும் ஒரு உரிமை இருக்குமெனில் அது முஸீபத் விடயத்தில் தன்னை விட மோசமான நிலையில் உள்ளவர்களைப் பார்த்து அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவது மாத்திரமேயாகும். இதிலுள்ள தாத்பரியம் ரிஸாலே நூரின் சில பகுதிகளில் ஓர் உதாரணம் மூலம் நிறுவப்பட்டுள்ளது. அதன் சுருக்கம் இதோ: ஒரு கணவான் வக்கற்ற ஒருவனை ஒரு கோபுரத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்கிறார். கோபுரத்தின் ஒவ்வொரு படித்தட்டிலும் ஒவ்வொரு வேறுபட்ட அன்பளிப்புக்களை அவனுகு வழங்குகிறார். கோபுரத்தின் அதி உச்சத்தில் மிகப் பெரிய ஓர் அன்பளிப்பை வழங்குகிறார். அந்த விதவிதமான அன்பளிப்புக்களுக்குப் பகரமாக அவனிடமிருந்து நன்றியும் நன்றிக்கடனும் வேண்டப்படும் போது அந்தப் பிடிவாதக்கார மனிதனோ அந்த எல்லாக் கட்டங்களிலும் கிடைக்கப்பெற்ற எல்லா அன்பளிப்புக்களையும் மறந்துவிட்டு அல்லது ஒன்றுமே நடக்காதது போல் மேல் நோக்கிப் பார்வையைச் செலுத்துகிறான். கைசேதமே! இந்தக் கோபுரம் இன்னும் உயரமானதாக இருந்திருக்க வேண்டுமே! இன்னுமின்னும் மேல் நோக்கிப் போயிருக்க வேண்டுமே! இந்தக் கோபுரம் அந்த மலையைப் போன்று அல்லது பிற கோபுரங்களைப் போன்று ஏன் உயரமானதாக இல்லை!? என்று புலம்பிக் கொட்டி முறைப்பாடு செய்ய ஆரம்பித்தான். இது எந்த அளவு அவலட்சனமான ஒரு நிலையாகும் என்பதையோ அருட்கொடைகளுக்கு எத்தகைய ஓர் அவமரியாதையாகும் என்பதையோ கூற வேண்டியதில்லை. அவ்வாறே... ஒரு மனிதன் இல்லாமையிலிருந்து இருப்பை அடைந்து அதிலும் கல்லாகவோ மண்ணாகவோ ஆகாமல், மரமாகவோ மிருகமாகவோ ஆகாமல், மனிதனாக ஆகி, அதிலும் முஸ்லிமாக ஆகி, அதிகமான காலம் சுகத்தோடும் தேகாரோக்கியத்தோடும் வாழ்ந்து உயர்தரமான அருட்கொடைகளை அனுபவித்துக்கொண்டிருக்கும் போது உன்னிடமுள்ள சில குற்றம் குறைகள் காரணமாக தேகாரோக்கியத்துக்கு அருகதையற்றவனாக அல்லது பிழையான தெரிவுகள், துஷ்பிரயோகங்கள் காரணமாக ஆரோக்கியத்தையும் அருள்களையும் கைநழுவவிட்டவனாக இருக்கும் நீ, உன்னையே ஒரு முறை மீள்பரிசீலனை செய்வதற்குப் பதிலாக அல்லாஹ்வை முறைப்பட்டுக் கொள்வதும் பொறுமையிழப்பதும் “என்னதான் செய்தேன், அல்லாஹ் எனக்கு இப்படியும் செய்து விட்டானே!” என்று அல்லாஹ்வுடைய ருபூபிய்யத்தை நிந்தனை செய்வதும் உன்னிடமிருக்கும் உடலியல் நோயைவிட மிக மோசமானதொரு முஸீபத்தும் ஆன்மீக வியாதியுமாகும். முறிந்த கையோடு குத்துச் சண்டைக்குச் செல்வது போல் முறைப்பட்டுக்கொள்வதால் நோய் அதிகரிக்கும். மாறாக اَلَّذِينَ اِذَا اَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا اِنَّا لِلَّهِ وَاِنَّا اِلَيْهِ رَاجِعُونَ என்ற வசனம் கற்றுத்தரும் அர்த்தத்துக்கமைய அந்த நோய் தனது கடமையை முடித்துவிட்டுச் செல்லும் வரை சரணாகதியோடு பொறுமையைக் கைக்கொள்பவனே புத்திசாலியாவான்.
பேரழகும் மாட்சிமையும் மிக்க வல்லோன் அல்லாஹ் தனது திரு நாமங்கள் அனைத்தையும் “அஸ்மாஉல் ஹுஸ்னா” என்ற பிரயோகத்தின் மூலம் குறிப்பிடுவது அவனது நாமங்கள் அனைத்தும் அழகியவை என்பதனாலாகும். இருப்புகளுக்கு மத்தியில் மிகவுமே இதமான, மிகவுமே அழகான, மிகவுமே உள்ளடக்கமான ஸமதிய்யத் கண்ணாடி ஹயாத், அதாவது வாழ்வாகும். அழகின் அழகைக் காட்டும் கண்ணாடியும் அழகியதாகும். அத்துடன் அழகின் ஆகர்ஷணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போகப்போக அழகேறும். அந்தக் கண்ணாடியின் விதியில் அந்த அழகிலிருந்து எது வந்தாலும் அழகாக இருப்பதைப் போன்றே ஹயாத்தின் விதியில் எது வந்தாலும் சத்தியத்தின் கோணத்தில் அழகியதாகும். ஏனெனில் அந்த அழகிய திருநாமங்ககளின் அழகிய பதிப்புகளையே காண்பிக்கின்றது. வாழ்க்கை சதாவும் சுகத்தோடும் ஆரோக்கியத்தோடும் ஒரே நாதத்தில் செல்லுமெனில் குறையுள்ளதொரு கண்ணாடியாகிவிடும். சில வேளை, ஒரு கோணத்தால் அழிவு, இல்லாமை, சூன்யம் என்பவற்றை நினைவூட்டி தொந்தரவுபடுத்தும். வாழ்வின் பெறுமதியை குறைத்து இனிமையை நோவினையாக மாற்றும். சோம்பல் மேலீட்டால் நேரத்தை வேகமாக ஓட்டுவதற்காகப் பாவங்களையும் களியாட்டங்களையும் நாடுவான். பெறுமதிமிக்க ஆயுளோடு குரோதம் கொண்டு சிறைச்சாலைத் தவணையைப் போன்று வேகமாகக் கடத்திவிட்டுக் கடந்து செல்ல முயற்சிப்பான். ஆனால் மாற்றங்களோடும் இயக்கத்தோடும் பலதரப்பட்ட நிலமைகளோடும் உருண்டோடும் ஒரு வாழ்வானது வாழ்வின் பெறுமதியையும் முக்கியத்துவத்தையும் இனிமையையும் உணர்த்தி அனுபவிக்கச் செய்கின்றது. கஷ்டங்களும் கவலைகளும் இருந்தாலும் ஆயுள் கடந்து செல்வதை விரும்பமாட்டான். “ஏன் இந்த சூரியன் இன்னும் மறையவில்லை!, ஏன் இந்த இரவு இன்னும் கடக்கவில்லை!” என்று ஏங்கித் தவிக்கமாட்டான். ஆம், மிகவும் செல்வந்தனான, ஆனால் சோலிகள் ஏதுமின்றி அனைத்துமே காலடியில் கிடைக்கப்பெற்ற நிலையில் பஞ்சணைகளில் ஓய்வெடுக்கும் ஒரு மேங்குடியிடம் போய் “வாழ்க்கை எவ்வாறு கழிகின்றது?” என்று கேட்டுப் பாருங்கள்! நிச்சயமாக “நேரம் செல்வதில்லை, வா! சற்று சதுரங்கம் ஆடலாம் அல்லது எங்கேனும் ஏதாவது களியாட்டத்துக்குச் செல்லலாம்” போன்ற கவலைக்கிடமான வார்த்தைகளையே செவிமடுப்பாய். அல்லது இன்னும் தீராத மோகத்தால் வெளிப்படும் “இன்ன இன்ன பொருட்கள் குறைவாக இருக்கின்றன. அநியாயமே! இவற்றையும் அடைந்திருந்தால்..!” போன்ற முறைப்பாடுகளை செவிமடுப்பாய். ஆவ்வாறே, கஷ்டத்தில் உள்ள ஒருவரிடம் அல்லது ஒரு தொழிலாளியிடம் அல்லது ஓர் உழைக்கும் ஏழையிடம் சென்று “நிலைமைகள் எவ்வாறு?” என்று கேட்டுப் பாருங்கள். புத்தி பேதலித்தவனில்லை எனில் “புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே. நலமாக இருக்கிறேன், உழைக்கின்றேன், சூரியஸ்தமனத்துக்கு முன் இன்ன இன்ன சோலிகளையும் முடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், காலம் வேகமாகச் செல்கிறது, எமக்காக நிற்பதில்லை, ஏதோ சிறு சிறு கஷ்டங்கள் இருக்கத்தான் செய்கின்றது. ஆனால் எல்லாம் கடந்துவிடும். கடந்து செல்லாத எதுதான் இருக்கின்றது?” போன்ற வார்த்தைகள் மூலம் உண்மையில் காலம் எவ்வளவு பெறுமதியானது என்பதை அது கடந்து செல்வதால் ஏற்படும் கவலை மூலம் தெரியப்படுத்துவான். ஆம் கஷ்டங்கள் மூலமும் உழைப்பின் மூலமும் வாழ்வின் சுவையையும் பெறுமதியையும் விளங்கிக்கொள்கிறான். தொடர்ச்சியான ஓய்வும் ஆரோக்கியமும் வாழ்வை நோவினை செய்கின்றது. ஆகவேதான் வேகமாகக் கடந்து செல்வதை ஆசிக்கிறான். நோயில் வாடும் சகோதரா, அறிந்துகொள்! ரிஸாலே நூரின் வேறு பகுதிகளில் தெளிவாகவும் உறுதியாகவும் நிறுவப்பட்டதற்கிணங்க ஆத்மீக ரீதியான முஸீபத்ககினதும் தீமைகள், பாவங்களினதும் அசலும் அடிப்படையும் இல்லாமையும் சூன்யமும் ஆகும். இல்லாமையானது சுத்தத் தீங்காகும், இருண்டதாகும். தொடர்ந்தேர்ச்சையான ஓய்வு, அமைதி, அசைவின்மை, செயற்பாடின்மை போன்ற நிலைமைகள் சூன்யம், இல்லாமை என்பவற்றுடனான நெருக்கத்தின் காரணமாகத்தான் இல்லாமையிலிருக்கும் இருண்டகத்தை நினைவூட்டி அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. இயக்கமும் செயற்பாடும் மாற்றமும் வுஜூத் அதாவது இருப்பு சார்ந்தவையாகும்; இருப்பை நினைவூட்டும். இருப்பானது தூய நலவாகும்; ஒளியாகும். இதுவே உண்மையென்பதால் உன்னிடமிருக்கும் நோயானது பெறுமதிமிக்க உனது வாழ்வை தூய்மைப்படுத்துவதற்காகவும் பலப்படுத்துவதற்காகவும் உயர்ச்சி அடையச் செய்வதற்காகவுமே வந்துள்ளது. மேலும் உடலின் ஏனைய உறுப்புகளை அந்த நோய்வாய்ப்பட்ட உறுப்பைச் சூழ ஒத்துழைப்பு வழங்கும் விதமாக ஒன்றுதிரட்ட வைத்து, சர்வஞானமிக்க படைப்பாளனின் பல்வேறு நாமங்களையும் அவற்றின் தொழிற்பாடுகளைப் பிரதிபலிக்கச் செய்கின்றது. இவ்வாறு பல்வேறுபட்ட கடமைகளைச் சுமந்த விருந்தினராக உனது உடம்புக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த நோய் இன்ஷா அல்லாஹ் தனது கடமையை விரைவாக முடித்துவிட்டுச் செல்லும். செல்லும் போது ஆரோக்கியத்திடம் “உனக்கான நேரம் வந்துவிட்டது. எனது இடத்தில் இருந்து உனது கடமையை நிறைவேற்று. இனி இந்த இல்லம் உனக்குரியதாகும். சுகமாக அமர்ந்துகொள்” என்று கூறும்.
நிர்க்கதிக்கு நிவாரணம் தேடும் நோயாளியே! நோயில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று உண்மையானதும் அடுத்தது மாயையானதுமாகும். உண்மையான வகையைப் பொருத்தவரை ஷாஃபிஉல் ஹகீம் ஆகிய வல்லோன் அல்லாஹ் மாபெரும் மருந்தகமான பூமிப்பந்தில் எல்லா வகையான நிர்க்கதிகளுக்கும் நிவாரணிகளை வைத்துள்ளான். அந்த நிவாரணிகள் நிர்க்கதிகளையும் நோய்நொடிகளையும் வேண்டி நிற்கின்றன. ஒவ்வொரு நிர்க்கதிக்கும் ஒவ்வொரு நிவாரணியை படைத்துள்ளான். எனவே நிவாரணத்துக்காக மருந்தை எடுப்பதும் பயன்படுத்துவதும் ஆகுமாக்கப்பட்டதாகும். ஆனால் விளைவையும் ஆரோக்கியத்தையும் அல்லாஹ்வின் புறமிருந்து அறிந்துகொள்வது கட்டாயமாகும். நிர்க்கதியை வழங்கியதைப் போன்றே நிவாரணத்தையும் சுகத்தையும் கூட அவனே வழங்குகிறான். நிபுணத்துவம் வாய்ந்த மார்க்கமுள்ள வைத்தியர்களின் ஆலோசனைகளை கடைப்பிடிப்பது முக்கியமானதொரு மருந்தாகும். ஏனெனில் அதிகமான நோய்கள் துஷ்பிரயோகம், வீண்விரயம், கட்டுப்பாடின்மை என்பவற்றாலும் தவறுகள், அவதானமின்மை போன்ற காரணிகளாலும் பாவங்களாலுமே ஏற்படுகின்றன. மார்க்கமுள்ள வைத்தியர் நிச்சயமாக ஆகுமாக்கப்பட்ட எல்லைக்குள் ஆலோசனைகள் வழங்குவார். துஷ்பிரயோகம், வீண்விரயம் என்பவற்றுக்குத் தடை விதிப்பார். மேலும் நோயாளிக்கு ஆறுதலாக இருப்பார். நோயாளி அந்த ஆறுதலை, ஆதரவைக் கைப்பிடித்து நோயிலிருந்து தேற்றம் பெறுவார். நோவினை அடைந்த இடம் நிம்மதியால் நிரம்பும். ஆனால் மாயையான வகையைப் பொருத்தவரை, அதற்கான மிகவும் வினைத்திறன் மிக்க மருந்து முக்கியத்துவம் அளிக்காதிருப்பதாகும். முக்கியத்துவமளிக்க அளிக்க அந்த நோய் ஊதிப் பெரிதாகும். முக்கியத்துவமளிக்காத போது சிறிதாகி மங்கிப் போய்விடும். ரீங்காரமிடும் பூச்சிக்களோடு மல்லுக்கட்டும் போது அவை முகத்தைச் சுற்றி வட்டாரமிட்டுக்கொண்டே இருக்கும். அலட்டிக்கொள்ளாமல் இருந்துவிட்டால் தொலைந்து விடுகின்றன. அவ்வாறே காரிருளில் தென்படும் அசையும் ஒரு கயிற்றால் ஏற்படும் பிரமைக்கு முக்கியத்துவமளிக்க அளிக்க வீக்கமெடுத்து அவனை பைத்தியம் பிடித்தவனைப் போன்று புத்தி பேதலிக்கச் செய்யும் நிலைக்கு ஆலாக்கும். ஆனால் முக்கியத்துவமளிக்காது விட்டால் அந்த சாமான்யமான கயிறு ஒரு பாம்பு அல்ல என்பதைக் கண்டுகொள்வான்; அந்தப் பிரமையைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பான். இந்த மாயையான நோய் நீண்ட காலம் தொடருமெனில் உண்மையானதாக உருமாறி விடும். மாயையான சந்தேகம், கோபக்கார மனிதனிடம் இருக்கும் மிக மோசமானதொரு நோயாகும். அணுவை அண்டமாக மாற்றி ஆத்ம பலத்தைக் குன்றச் செய்துவிடும். குறிப்பாக ஈவிரக்கமற்ற அரை வைத்தியர்களிடம் அல்லது வேறு நோக்கங்களுடைய வைத்திய வியாபாரிகளிடம் சென்று மாட்டிக்கொண்டால் அந்த மாயைக்கு எண்ணையூற்றி மென்மேலும் பூதாகரப்படுத்திவிடுவர். நோயாளி செல்வந்தனாயின் அவனது செல்வம் போய்விடும். இல்லையேல் ஒன்றோ புத்தி பேதலிக்கும் அல்லது எஞ்சிய ஆரோக்கியமும் போய்விடும்.
நோயாளியான சகோதரனே! ஆம், உனது நோயில் உடலியல் ரீதியான ஒரு வேதனை உள்ளது. ஆனால் அந்த உடலியல் வேதனையை அகற்றிவிடக் கூடிய மகத்தானதோர் ஆத்மீக இன்பம் உன்னைச் சூழ்ந்துகொள்கின்றது. ஏனெனில் உனது தாய் தந்தையரும் உறவினர்களும் இன்னும் உயிர் வாழ்கிறார்கள் எனில் நீண்ட காலத்துக்கு முன்னமே நீ மறந்து போன, தேன் போன்று தெவிட்டும் அவர்களது நெருங்கிய அன்பும் ஆதரவும் உன்னைச் சூழ மீண்டும் களைகட்ட ஆரம்பிக்கும். குழந்தைப் பருவத்தில் கண்ட அந்த அன்பு தோய்ந்த ஆதரவையும் அரவணைப்பையும் மீண்டும் கண்டுகொள்வாய். பல்வேறுபட்ட திரைகளால் மறைந்திருந்த நட்புகள் பசுமையடையும். இவற்றுக்கு முன்னால் நிச்சயமாக உனது இந்த உடலியல் ரீதியான வலிகளும் அசௌகரியங்களும் மிகவும் மலிவாகிவிடும். மேலும் நீ நன்மதிப்பையும் நெருக்கத்தையும் பெற்றுக்கொள்வதற்காக பணிவிடை செய்த பெரியவர்களின் நெருக்கத்தையும் ஆதரவையும் இலகுவாகப் பெற்றுக்கொள்வாய். ஏன் அவர்களே உனக்குப் பணிவிடையும் செய்வார்கள். மேலும் மனிதர்களிடம் காணப்படும் மனிதாபிமானமும் பரஸ்பர நேசமும் உன்னை நோக்கி ஈர்க்கப்படுவதன் காரணமாக செலவின்றியே ஏராளமான நண்பர்களையும் உதவியாளர்களையும் இரக்கமுள்ள தோழர்களையும் பெற்றுக்கொள்கிறாய். மேலும் கடும் வேலைப்பளுக்களுக்கு மத்தியிலிருந்து நீ ஏங்கிக்கொண்டிருந்த விடுமுறைக்கான அனுமதியை இந்த நோயிலிருந்து பெற்றுக் கொண்டு சற்று ஓய்வெடுக்கின்றாய். இவ்வாறு பல்வேறு நன்மைகளைக் கொண்டுவந்து சேர்க்கின்ற உனது இந்த சிறிய கஷ்டங்கள் முறைப்பட்டுக்கொள்வதற்காக அன்றி நன்றி செலுத்துவதற்காகவே அழைப்புவிடுக்கின்றன.
பாரிஸவாதம் போன்ற கடுமையான நோய்களுக்கு ஆளாகியுள்ள சகோதரனே! முதலில், பாரிஸவாதம் போன்ற நோய்கள் முஃமின்களுக்கான ஓர் அருட்கொடையாகும் என்பதை உனக்கு நன்மாராயனம் கூறுகிறேன். இந்த விடயத்தை நீண்ட காலமாக விலாயத்தை உடைய இறை நேசர்களிடமிருந்து செவிமடுப்பவனாக இருந்த போதிலும் அதன் தாத்பரியத்தை அறியாதவனாக இருந்தேன். இப்போது அதன் ஒரு தாத்பரியம் பின்வருமாறு உள்ளத்துக்கு வருகின்றது: இறை நேசர்கள் அல்லாஹ்வை நெருங்குவதற்காகவும் உலகின் பயங்கரமான ஆத்மீக ஆபத்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாப்பதற்காகவும் நித்திய நிம்மதியை அடைந்துகொள்வதற்காகவும் இரண்டு அடிப்படைகளைப் பேணி வந்துள்ளனர். முதலாவது: மரணத்தை சிந்தித்தல். அதாவது உலகமும் வஸ்துகளும் தற்காலிகமானதாக இருப்பதைப் போன்றே தாமும் சில பொறுப்புக்களைச் சுமந்த தற்காலிகமான விருந்தாளிகள் என்பதைச் சிந்தித்து நித்திய வாழ்வின் விமோசனத்துக்காக உழைத்துள்ளனர். இரண்டாவது: நஃப்ஸுல் அம்மாரா, குருட்டு இச்சைகள் என்பவற்றின் தீங்குகளிலிருந்து பாதுகாப்புப் பெற்றுக்கொள்வதற்காக கஷ்டங்களையும் துறவையும் தெரிவுசெய்து நஃப்ஸுல் அம்மாராவை மரணிக்கச் செய்ய முனைந்துள்ளனர். இதோ, அரை உடலின் ஆரோக்கியத்தை இழந்த சகோதரா! குறுகிய வழியில் இலகுவான விமோசனத்துக்குக் காரணியாக இருக்கும் இந்த இரண்டு அடிப்படைகளும் உனது நாட்டமின்றியே உனக்கு அருளப்பட்டுள்ளன. அதாவது உனது உடலின் நிலை தொடர்ந்தேர்ச்சையாக உலகின் முடிவையும் மனிதன் அழிந்து போகக்கூடியவன் என்பதையும் நினைவூட்டக்கூடியதாகும். இனிமேலும் உலகத்தால் உன்னை தனது வலையில் வீழ்த்த முடியாது. பொடுபோக்கு உனது கண்களை குருடாக்கிவிடாது. மேலும் அரை மனிதன் என்ற நிலையிலுள்ள ஒருவனை இழிந்த இச்சைகளைக் கொண்டோ நஃப்ஸானியத்தான ஆசைகளைக் கொண்டோ நஃப்ஸுல் அம்மாராவால் ஏமாற்ற முடியாது. எனவே விரைவாக அந்த நஃப்ஸின் தொல்லைகளிலிருந்து மீட்சி பெறுவான். ஆம் பாரிஸவாதம் போன்ற நோய்களுக்காளாகின்ற முஃமின் தன்னிடமுள்ள ஈமானின் தாத்பரியங்கள் மூலமும் தவக்குல், சரணாகதி நிலை என்பவற்றின் மூலமும் கடும் குறுகிய காலத்தில் அவ்லியாக்களைப் போன்ற உயர்வான அந்தஸ்துகளை அடைந்துகொள்ள முடியும். அப்போது அந்த நோவினைமிக்க நோய் சர்வ சாதாரணமானதாக மாறிவிடும்.
அநாதரவாகத் தனிமையில் வாடும் நாதியற்ற நோயாளியே! நோயுடன் தனிமையில் அநாதரவாக இருக்கும் உனது நிலை மிகக் கடினமான உள்ளங்களையும் கரைய வைத்து அவர்களது இரக்கப் பார்வையை உன்னை நோக்கி ஈர்க்கும் போது, குர்ஆனுடைய அத்தியாயங்களின் ஆரம்பங்களில் ரஹ்மானுர்ரஹீம் என்ற நாமத்தின் மூலம் தன்னை எமக்கு அறிமுகப்படுத்தி, தனது உன்னத கருணையின் ஒரு கீற்றாக ஒட்டுமொத்த பாலகர் குலத்தையும் தாய்க் குலத்தின் அற்புதமான அன்பைக் கொண்டு அரவணைத்து, தனது பேரருளின் ஒரு பிரதிபலிப்பாக ஒவ்வொரு வசந்தத்திலும் பூமியை அருளாகாரங்களால் ததும்பச் செய்து, அனைத்துக்கும் மேலால் சுவனத்தை நித்தியமான ஒரு வாழ்வுக்கான அனைத்து அருள்பாக்கியங்களாலும் நிரம்பிய அன்பின் தேசமாக ஆக்கி வைத்த பேரன்பும் அருளும் மிக்க படைப்பாளனின் அன்பும் அருளும் நிச்சயமாக உன்னுடனேயே இருக்கின்றது. அவனை அறிந்து அவனுடன் ஈமான் மூலமாக உன்னைப் பிணைத்துக்கொள். நோயின் இயலாமை மொழியின் மூலம் அவனிடம் மன்றாடு. உனது தனிமையும் அநாதரவான நிலையும் நிச்சயமாக அவனது கருணைப் பார்வையை உன்பால் ஈர்க்கும். ஆம் அவனது இருப்பு சந்தேகமற உறுதியானதாகும். அவன் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். எனவே உனக்காக அனைத்துமே இருக்கின்றன. ஈமானோடும் தவக்குலோடும் அவனை நெருங்காமல், அவனுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளாமல், அது பற்றி கரிசனையே இல்லாமல் இருக்கின்ற மனிதனே யதார்த்தத்தில் அநாதரவாகவும் தனிமையிலும் இருக்கின்றான்.
அப்பாவியான நோயாளிக் குழந்தைகளையும் குழந்தைகளின் நிலையிலுள்ள வயோதிபர்களையும் பராமரிக்கும் பராமரிப்பாளர்களே! உங்களுக்கு மகத்தானதொரு மறுமை வியாபாரம் வாய்த்திருக்கின்றது. தவறிச் செல்ல முன்னர் ஊக்கத்தோடும் உழைப்போடும் அந்த வியாபாரத்தில் இலாபமீட்டிக்கொள்ளுங்கள். அப்பாவிக் குழந்தைகளுக்கு வரும் நோய்நொடிகளைப் பொருத்தவரை அவை அந்த நலினமான உடல்களுக்கு ஒரு பயிற்சியாகவும் ஒருவகைத் துறவாகவும் இருப்பதோடு எதிர்காலத்தில் எதிர்கொள்ளப் போகும் உலகின் கொந்தளிப்புக்களைத் தாங்குதற்கான ஒரு பலமாகவும் ஒரு தெய்வீகப் பயிற்றுவிப்பாகவும் திகழ்கின்றன. இவ்வாறு நோய்நொடிகள் குழந்தைகள், சிறார்களின் உலக வாழ்க்கை சார்ந்த பல்வேறு ஞானங்களைப் பொதியப்பெற்றுள்ளது. அவ்வாறே வயோதிபர்களுடைய விடயத்தில் அவர்களுடைய கடந்து சென்ற வாழ்க்கையை ஆத்மீக ரீதியில் தூய்மைப்படுத்தும் ஒரு பாவப்பரிகாரமாக இருப்பதைப் போன்று குழந்தைகளுடைய விடயத்தில் எதிர்காலத்திலும் மறுமையிலும் அடையப் போகின்ற ஆத்மீக அடைவுகளுக்கான உந்து சக்தியாகவும் திகழ்கின்றன. எனவே நோய்களிலிருந்து வரும் இப்படிப்பட்ட நன்மைகள் தாய் தந்தையரின் நல்லமல்கள் பதிவேட்டிலும் குறிப்பாக குழந்தையின் ஆரோக்கியத்துக்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணயம் வைக்கும் தாயின் பதிவேட்டில் மிக அழகிய அமல்கள் பதியப்படும் பக்கத்திலும் பதியப்படும். இந்த விடயத்தை அஹ்லுல் ஹகீகத் உறுதிப்படுத்துகின்றனர். அவ்வாறே வயோதிபர்களைப் பராமரிப்பதும் உயர்ந்த நன்மைகளைப் பெற்றுத்தருகின்றது. கூடவே அந்த வயோதிபர்களின் துஆக்களை, குறிப்பாக அவர்கள் பெற்றோர்களாயின் அவர்களின் பெறுமதி வாய்ந்த துஆக்களை பெற்றுக்கொள்ள முடியுமாக உள்ளது. மேலும் அவர்களது உள்ளங்களை பூரிப்படையச் செய்வதும் அவர்களுக்காகத் தியாகத்தோடு பணிவிடை செய்வதும் உலக மற்றும் மறுமை ஈடேற்றங்களுக்குக் காரணியாக உள்ளன என்பதற்கு ஸஹீஹான அறிவிப்புக்களும் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளும் சான்றாக உள்ளன. வயதான தாய் தந்தைக்கு பூரணமாகக் கட்டுப்படும் பாக்கியசாலியான ஒரு மகன் தனது மகன் மூலமாகவும் அதே மதிப்பு, மரியாதையைக் காண்பதைப் போல் பெற்றோரை நோவினை செய்யும் அபாக்கியசாலியான ஒரு மகன் மறுமை வேதனைக்கு முன்னர் உலகிலேயே பல்வேறு வேதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஆளாகித் தண்டனை அனுபவிப்பான் என்பதற்கு ஏகப்பட்ட நிகழ்வுகள் சான்றாக உள்ளன. ஆம், முதியவர்களும் மாஃஸூம்களும் உறவல்லாதவர்களாக இருந்தாலும் -உண்மையில் ஈமானின் தாத்பரியத்துக்கமைய அவர்களோடு ஹகீகத்தான ஒரு சகோதரத்துவம் உள்ளது என்ற வகையில்- முஃமின்கள் அவர்களுள் ஒருவரை சந்திக்க நேரிட்டு, கண்ணியத்துக்குரிய அந்த வயோதிப நோயாளியும் உதவி ஒத்தாசையில் தேவையுடையவராக இருப்பின் ஆத்ம திருப்தியோடு பணிவிடை செய்வது இஸ்லாத்தின் வலியுறுத்தலாகும்.
நோயாளியான சகோதரர்களே! நீங்கள் மிகவும் பயன்மிக்க, எல்லா வகை நிர்க்கதிகளுக்கும் நிவாரணியாக உள்ள, உண்மையான சுகமும் இன்பமும் பொதிந்த, புனிதத்துவம் வாய்ந்த ஒரு சஞ்சீவியை வேண்டுகிறீர்கள் எனில் உங்கள் ஈமானை அதிகரித்துக்கொள்ளுங்கள். தௌபா, இஸ்திஃபார், தொழுகை, வணக்க வழிபாடுகள் மூலமாக அந்த உன்னத சஞ்சீவியான ஈமானையும் ஈமான் மூலம் கிடைக்கும் நிவாரணிகளையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஆம் உலக மோகம், உலகத்துடனான அதீத தொடர்பு என்பன காரணமாக பொடுபோக்குக்காரர்களிடம் உலகம் போன்று பிரமாண்டமான, நோய்வாய்ப்பட்ட, ஆத்மார்த்தமான ஓர் உடல் காணப்படுகின்றது. அழிவின், பிரிவின் பயங்கரமான தாக்குதல்களால் காயப்பட்டு வேதனையில் பரிதவிக்கும் உலகம் போன்ற அந்த ஆத்மார்த்தமான உடலுக்கு ஈமான் உடனடியாக நிவாரணம் வழங்கி, அந்த நிர்க்கதி நிலையிலிருந்து மீட்டெடுத்து, உண்மையான ஆரோக்கியத்தை வழங்குகின்றது என்பதை ரிஸாலே நூரின் பல பகுதிகளில் சந்தேகத்துக்கிடமின்றி நிறுவியுள்ளோம். தலைக்கு சுமையாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக சுருக்கிக்கொள்கிறோம். ஈமானிய மருந்து முடியுமானவரை எல்லா பர்ள்களையும் நிறைவேற்றும் போது பிரதிபலனளிக்க ஆரம்பிக்கின்றது. மாறாக பொடுபோக்குத்தனம், பாவங்கள், நஃப்ஸின் இச்சைகளுக்கு அடிபணிதல், களியாட்டங்கள் என்பன அந்த சஞ்சீவியின் வினைத்திறனை மழுங்கடிக்கும் காரணிகளாகும். உண்மையில் நோய்கள் அந்தப் பொடுபோக்குத்தனத்தை களைத்து, இச்சைகளின் தாகத்தைத் தணித்து, ஹராமான கேளிக்கை, களியாட்டங்களுக்குச் செல்வதற்கும் தடையாக இருக்கின்றன என்ற வகையில் அன் மூலம் பூரண பயணைப் பெற்றுக்கொள்ளுங்கள். உண்மையான ஈமானின் உன்னதமான நிவாரணிகளிலிருந்தும் ஒளியிலிருந்தும் தவ்பா, இஸ்திஃபார் மூலமாகவும் தொழுகை, துஆ மூலமாகவும் பயன் பெற்றுக்கொள்ளுங்கள். சர்வலோக இரட்சகன் உங்களுக்கு நல்லாரோக்கியத்தை தந்தருள்வானாக, உங்கள் நோய்களை பாவப்பரிகாரமாக ஆக்கிவைப்பானாக. ஆமீன் ஆமீன் ஆமீன்.. اَل۟حَم۟دُ لِلّٰهِ الَّذٖى هَدٰينَا لِهٰذَا وَمَا كُنَّا لِنَه۟تَدِىَ لَو۟لَٓا اَن۟ هَدٰينَا اللّٰهُ لَقَد۟ جَٓاءَت۟ رُسُلُ رَبِّنَا بِال۟حَقِّ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ طِبِّ ال۟قُلُوبِ وَ دَوَائِهَا وَ عَافِيَةِ ال۟اَب۟دَانِ وَ شِفَائِهَا وَ نُورِ ال۟اَب۟صَارِ وَ ضِيَائِهَا وَ عَلٰى اٰلِهٖ وَ صَح۟بِهٖ وَ سَلِّم۟
இது பதினேழாவது கடிதமாக கடிதங்கள் தொகுப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதால் இங்கு இணைத்துக்கொள்ளப்படவில்லை.

