İhlas Risalesi

The Twentieth Gleam

This section belongs to the major work Lem'alar · View complete Lem'alar (36 sections) →
ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

அதிர்ச்சியூட்டக்கூடிய முக்கியமானதொரு கேள்வி கேள்வி: உலகை நேசிக்கும் பொடுபோக்குக்காரர்களும் வழிகேடர்களும் ஏன் நயவஞ்சகர்களும் கூடத் தமக்கு மத்தியில் குரோதம் மறந்து பரஸ்பர ஒத்துழைப்புடன் செயற்படுகின்ற போது சத்தியவான்களும் மார்க்கப் பற்றுள்ளவர்களும் மார்க்க அறிஞர்களும் ஸூபித்துவ வழியைக் கடைபிடிப்போரும் தாம் பின்பற்றும் சத்திய மார்க்கத்தை மறந்து தமக்குள் பகைமைகளையும் பிணக்குகளையும் வளர்த்துக் கொள்கின்றனரே! இதற்கான காரணம் என்ன? உண்மையில் இவர்களல்லவா அடுத்தவர் போக்கை மதித்து தமக்கு மத்தியில் ஒற்றுமை பாராட்ட வேண்டியவர்களாக இருக்கின்றனர். இந்த ஒற்றுமை ஏன் இடம் மாறியுள்ளது? பதில்: மார்க்கப் பற்றுள்ளவர்களைக் கண்ணீர் சிந்தி அழ வைக்கும் அளவு கவலைக்கும் அவமானத்துக்குமுரிய இந்த நிலை ஏற்படுவதற்குப் பின்னால் பல்வேறு ஆபத்தான காரணிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஏழு முக்கிய காரணிகளை மாத்திரம் இங்கு முன்வைக்கிறோம்.

§2

சத்தியப் பாதையில் உள்ளவர்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற கருத்து வேற்றுமைகள் சத்தியத்திலுள்ள குறைபாட்டால் ஏற்படுவதல்ல. அவ்வாறே வழிகேடர்களுக்கும் பொடுபோக்குக்காரர்களுக்கும் மத்தியில் காணப்படும் ஒற்றுமைக்கான காரணம் அவர்களிடம் சத்தியம் இருக்கின்றது என்பதுமல்ல. யதார்த்தம் வேறு விதமானதாகும். அதாவது உலக விவகாரங்களை எடுத்துக் கொண்டால் அவற்றோடு தொடர்பான பல்வேறு பணிகள் சமூகத்தின் பல்வேறு வகுப்பினருக்கு மத்தியில் அவரவர் தரத்துக்கேற்ப பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளன. அரசியல், நிர்வாகம், கல்வி போன்ற பல்வேறு துறைகளும் பணிகளும் தெளிவாகப் பிரித்தறியப்பட்டுள்ளதோடு அவற்றுக்கான தகைமைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. அவ்வாறே அந்தப் பொறுப்புகளுக்குப் பகரமாக அவர்களது வாழ்க்கையை கொண்டு செல்வதற்காக வழங்கப்படவிருக்கும் சன்மானங்களும் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. தத்தமது பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்றுகின்ற போது கிடைக்க இருக்கின்ற பட்டங்கள், பதவிகள், பதவி உயர்வுகள் போன்ற பொதீக ரீதியான வெகுமதிகளும் மக்களுடைய பாராட்டுகள் போன்ற ஆன்மீக ரீதியான வெகுமதிகளும் கூட தெளிவாக உள்ளன. இவ்வாறான ஒரு சூழலில் முரண்பாடுகளையும் சண்டை சச்சரவுகளையும் போட்டி பொறாமைகளையும் ஏற்படுத்தக்கூடிய பொதுவான விடயங்கள் மிகக் குறைவாகும். எனவே அவர்கள் செல்லும் பாதை எவ்வளதுதான் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தாலும் தமக்கிடையில் ஒற்றுமையையும் இணக்கப்பாட்டையும் பெரிய கஷ்டங்கள் ஏதுமின்றிப் பேணிப் பாதுகாக்கின்றனர். ஆனால் மார்க்கப் பணி செய்பவர்களையும் ஆலிம்கள், தரீக்காதாரிகளையும் பொருத்தவரை அவர்களின் பணிகள் சமூகத்தோடு தொடர்பானதாக இருக்கும் அதே சமயம் அவர்களுக்கான ஊதியங்கள் நிர்ணயமற்ற ஒன்றாகவும் ஆள்வாரியாகத் தீர்மாணிக்கப்படாததாகவும் அவர்களின் சமூக அந்தஸ்து, மக்கள் அங்கீகாரம், மக்கள் ஆதரவு போன்ற விடயங்களும் ஆள்வாரியாகப் வரையறுக்கப்படாததாகவுமே காணப்படுகின்றன. எனவே ஒரே மகாமுக்கு, ஒரே பதவிக்கு ஏகப்பட்டவர்கள் வேட்பாளர்களாக இருப்பார்கள். அந்தப் பரப்பில் கிடைக்க முடியுமான ஒவ்வொரு லௌகீக மற்றும் ஆத்மீக ரீதியான வெகுமதிக்கும் பல்வேறு கரங்கள் நீள முடியும். அந்தப் புள்ளியில் வெளிப்படுகின்ற நெருக்கடியும் போட்டியும் உண்மையை முகஸ்துதியாகவும் ஒற்றுமை, சமாதானத்தை முறுகலாகவும் மாற்றிவிடும். இந்தக் கொடிய வியாதிக்கான மருந்து இஹ்லாஸாகும். அதாவது சுய முனைப்புக்குப் பதிலாக உண்மை மீதான பற்றை முற்படுத்துவதும் சத்தியத்தின் பொருட்டுக்காக அனானியத்தின் பொருட்டை மிகைத்து اِنْ اَجْرِىَ اِلاَّ عَلَى اللَّهِ என்ற அந்தஸ்துக்குப் பாத்திரமாக மாறுவதும் ஆன்மீக மற்றும் லௌகீக ரீதியான கிரயங்களைவிட்டும் தன்னிரைவாக வாழ்ந்து وَمَا عَلَى الرَّسُولِ اِلاَّ الْبَلاَغُ என்ற வழிகாட்டலைப் பேணுவதும் மக்கள் அங்கீகாரம், ஆதரவு, அழகிய விளைவுகள் போன்ற அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருபவை, அவை தனது பொறுப்பாகிய எத்திவைக்கின்ற பணிக்கு உற்பட்டவை அல்ல, ஏன் அந்தப் பணிக்கு அவை அவசியமே அல்ல போன்ற விடயங்களைத் தெளிவாக அறிவதும் இஹ்லாஸை அடைந்துகொள்வதற்கான வழியாகும். இல்லாவிட்டால் இஹ்லாஸ் கைநழுவிச் சென்றுவிடும்.

§3

வழிகேடர்களின் இழிவே அவர்களின் ஒருமைப்பாட்டுக்கான காரணமாகும். நேர்வழி பெற்றவர்களின் மேன்மையே அவர்களின் முரண்பாட்டுக்கான காரணமாகும். அதாவது பொடுபோக்கில் இருக்கும் உலகப் பித்தர்களுக்கும் வழிகேடர்களுக்கும் உண்மை, சத்தியம் போன்ற பலமான ஆதாரப் புள்ளிகள் இல்லாத காரணத்தினால் யதார்த்தத்தில் நலிந்தவர்களாகவும் இழிந்தவர்களாகவுமே இருக்கின்றனர். அதாவது அடிப்படையில் தமது இழிவின் காரணமாகப் பலத்தைப் பெடுக்கிக்கொள்ள வேண்டிய தேவை உடையவர்களாக உள்ளனர். இந்தத் தேவை காரணமாக ஏனையவர்களின் உதவி, ஒத்தாசை, ஒற்றுமை என்பவற்றுக்காக உளப்பூர்வமாக முன்வருவார்கள். அவர்களின் பாதை வழிகேடாகவும் வெவ்வேறானவையாகவும் இருந்தாலும் தமக்கு மத்தியில் ஒருமைப்பாட்டைப் பேணுவார்கள். அந்த வகையில் அந்த அசத்தியக் கூட்டில் சத்தியமான ஒரு பற்றும் அந்த வழிகேட்டுப் பிணைப்பில் தூய்மையான ஓர் இஹ்லாஸும் அந்த மார்க்க விரோத ஒருமைப்பாட்டில் வலுவான ஒரு பிடிப்பும் அந்த முகஸ்துதிக்குள் பரஸ்பரமான ஓர் இணக்கமும் அவர்களுக்குக் கைகூடுகின்றது. உண்மையான ஓர் இஹ்லாஸ் தீமைக்கானதாகத்தான் இருந்தாலும் விளைவற்றதாக இருக்காது. ஆம், இஹ்லாஸுடன் யார் எதைக் கேட்டாலும் அல்லாஹ் வழங்குவான். ஆனால் நேர்வழி பெற்றவர்களுக்கும் ஆலிம்கள், தரீக்காதாரிகளுக்கும் ஹக், ஹகீகத் போன்ற பலமான ஓர் ஆதாரத் தளம் இருப்பதாலும் அந்த ஹக்கான பாதையில் ஒவ்வொருவரும் தனது ரப்பை மாத்திரம் சிந்தித்து அவனது பொருட்டில் மாத்திரம் நம்பிக்கை வைத்தவர்களாக செல்வதாலும் அந்தப் பணியால் ஆத்மார்த்தமாகக் கிடைக்கின்ற ஒரு மேன்மையும் உயர்வும் அவர்கள் எல்லோருக்கும் உள்ளது. பலவீனமாக உணர்கின்ற போது மனிதர்களுக்குப் பதிலாக தனது ரப்பிடமே முறையிடுவார்கள். அவனிடமே உதவியும் தேடுவார்கள். எனவே மஷ்ரபுகளுக்கு மத்தியில் வேறுபாடுகள் இருப்பதால் தனது மஷ்ரபுக்கு மாற்றமானவர்களிடம் உதவி ஒத்தாசைகள் பெற வேண்டிய தேவையை முழுமையாக உணர்வதில்லை. எனவே ஒருமைப்பாட்டுக்கான அவசியத்தையும் காண முடிவதில்லை. கூடவே சுய முனைப்பும் அனானியத்தும் இருந்தால் தாம் மாத்திரம் சத்தியத்தில், ஏனையவர்கள் அசத்தியத்தில் உள்ளார்கள் என்ற நினைப்பில் ஒருமைப்பாட்டுக்கும் அன்பு, சகோதரத்துவத்துக்கும் பதிலாக முரண்பாட்டையும் போட்டியையும் ஏற்படுத்திவிடுவார்கள். அப்போது இஹ்லாஸ் முற்றாக அகன்று அனைத்தும் குழம்பிப் போய்விடும். இது மிகவும் மாரதூரமான ஒரு காரணியாகும். இது ஏற்படுத்துகின்ற ஆபத்தான விளைவுகள் ஏற்படாதிருப்பதற்கான ஏக வழி ஒன்பது ஆணைகளாகும். 1- சாத்வீகமாக செயற்படுவது. அதாவது தன்னுடைய மஸ்லக்கின், பணியின், பாதையின் மீதான முஹப்பத்தை அடிப்படையாக வைத்து செயற்படுவதாகும். அடுத்தவர்களுடைய மஸ்லக் மீது குரோதம் வளர்த்தல், முட்டுக்கட்டையாக அமைதல், குறை காணல், அவர்களின் அறிவு, சிந்தனை என்பவற்றில் தலையிடுதல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு செயற்படுவதிலிருந்தும் அவ்வாறான விடயங்களில் பரபரப்பாவதிலிருந்தும் தவிர்ந்துகொள்ள வேண்டும். 2- அதற்கும் அப்பால், இஸ்லாத்தின் வட்டத்துக்குள் உள்ள எந்த மஷ்ரபைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் முஹப்பத்துக்கும் சகோதரத்துவத்துக்கும் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்குமான பொதுவான பிணைப்புகள் ஏராளமாக உள்ளன என்பதை சிந்தித்து ஒருமைப்பாட்டுக்கான வழிகளைத் தேட வேண்டும். 3- ஒவ்வொருவரும் தனது பக்கம் சத்தியம் இருப்பதாகக் கண்டால் ஏனைய மஸ்லக்கைச் சேர்ந்தவர்களைத் தீண்டாத வகையில் “எனது மஸ்லக் சத்தியமாகும், மிகச் சிறந்ததாகும்” என்று கூற முடியும். மாறாக அடுத்த மஸ்லக்களை அசத்தியமானவையாகவும் அசிங்கமானவையாகவும் சித்திரிக்கின்ற விதமாக “எனது மஸ்லக் மாத்திரமே சத்தியமாகும்” அல்லது “எனது மஸ்லக் மாத்திரமே அழகியதாகும்” என்று கூற முடியாது. எனவே ஒவ்வொருவரும் இந்த நியாய விதியைப் பேணி நடக்க வேண்டும். 4- சத்தியவான்களுடன் ஒற்றுமையாக இருப்பது இறை உதவிக்கான வஸீலாவாகவும் மார்க்கத்தின் கீர்த்தி ஓங்குவதற்கான காரணியாகவும் உள்ளது என்பதை சிந்தித்து நடக்க வேண்டும். 5- அத்துடன் வழிகேடர்களும் அசத்தியவான்களும் -பரஸ்பர ஒத்துழைப்பின் மூலம்- ஒரு ஜமாஅத் வடிவில் கட்டியெழுப்பியுள்ள ஒருங்கிணைக்கப்பட்ட மிகப் பலமான கூட்டாத்மாவின் மேதமைக்கு முன்னால் மிக மிகப் பலம்வாய்ந்த ஒரு தனிநபர் எதிர்ப்பாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்து சத்தியவான்கள் தமக்கு மத்தியில் ஓர் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் வழிகேட்டின் அந்தப் பயங்கரமான கூட்டாத்மாவுக்கு முன்னால் சத்தியத்தின் பலமான கூட்டாத்மாவுடன் பிரவேசித்து சத்தியத்துடைய ஹக்கானியத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. 6- ஹக்கை பாத்திலுடைய தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதற்காக… 7- தனது நஃப்ஸையும் அனானியத்தையும் 8- பிழையான கற்பிதங்களால் கட்டியெழுப்பிக்கொண்ட தத்தமது கண்ணியம், மேன்மைகளையும் 9- எந்தப் பெறுமானமுமற்ற, போட்டி பொறாமை கலந்து உணர்வுகளையும் முற்றாகத் துறப்பதன் மூலம் இஹ்லாஸுக்குப் பாத்திரமானவர்களாக மாறி தத்தமது பணிகளை அதற்கே உடிய ஹக்கைக் கொடுத்து நிறைவேற்ற வேண்டும். (குறிப்பு: )

§4

சத்தியவான்களுக்கு மத்தியிலான முரண்பாடுகள் அவர்களிடம் ஹிம்மத் (மார்க்கப் பற்று, சமூகப் பற்று, நற் பணிகளுக்கான பிரயத்தனம் பிரயத்தனம், ஊக்கம் போன்ற பல்வேறு அர்த்தங்களைப் பொதியப்பெற்ற ஒரு சொல்) இல்லாத காரணத்தினாலோ அல்லது அவர்களுடைய இழி நிலையாலோ ஏற்படுவதல்ல. அவ்வாறே வழிகேடர்களுக்கு மத்தியிலுள்ள ஒருமைப்பாட்டுக்கான காரணம் அவர்களிடம் உன்னதமான ஒரு ஹிம்மத் உள்ளது என்பதுமல்ல. மாறாக நேர்வழியில் உள்ளவர்களுக்கு மத்தியிலுள்ள முரண்பாடு உயர்வான ஒரு ஹிம்மத்தின் துஷ்பிரயோகம் காரணமாகவும் வழிகேடர்களின் ஒருமைப்பாடு ஹிம்மத் இல்லாத காரணத்தினால் தோன்றும் இயலாமையிலுருந்துமே தோற்றம் பெறுகின்றன. நேர்வழியில் உள்ளவர்களை உன்னதமான அந்த ஹிம்மத் ஊடாகவே அதன் துஷ்பிரயோகத்துக்கும் அதிலிருந்து முரண்பாடு, போட்டி பொறாமை என்பவற்றுக்கும் இட்டுச் செல்வது -மறுமையை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போது உண்மையில் மிக அழகிய செயல்களாகத் திகழும்- நன்மைகள் மீதான பேராசை, மறுமைக்கான பணிகளில் திருப்தியின்மை போன்ற நன் நிலைகளில் ஏற்படுகின்ற ஒரு சருக்கலாகும். அதாவது “இந்த நன்மையை நானே பெற்றுக்கொள்ள வேண்டும், இந்த மனிதர்களை நானே நேர்வழிப்படுத்த வேண்டும், என்னையே அவர்கள் செவிமடுக்க வேண்டும்” என்ற எண்ணத்தில், எதிரே உள்ள உண்மையான ஒரு சகோதரனுடன் அதாவது தனக்கு மிகவுமே தேவையான, முஹப்பத்தோடும் உதவி ஒத்தாசையோடும் சகோதரத்துவத்தோடும் தோலுக்குத் தோல் நிற்க முடியுமான ஒரு சகோதரனுடன் போட்டிக்கு நிற்பது போன்ற ஒரு நிலையைத் தோற்றுவிப்பான். இதன் இறுதியில் “என்னிடம் வருபவர்கள் எவ்வாறு அவர்களிடம் செல்ல முடியும்? எனக்கு ஏன் அவருக்கு உள்ள அளவு மாணவர்கள் இல்லை?” என்றெல்லாம் சிந்திக்க ஆரம்பிக்கும் போது அவனது அனானியத் அந்த இடைவெளியைப் பயன்படுத்தி சபிக்கப்பட்ட ஒரு பண்பாகிய புகழாசை, பதவியாசை என்பவற்றை நோக்கி அவனை இழுத்துச் செல்லும். அப்போது இஹ்லாஸைப் பறிகொடுத்தவனாக முகஸ்துதியை நோக்கிச் செல்லும் வாயில் அவன் முன்னால் திறக்கப்படும். இதோ இந்தத் தவறுக்கும் சறுக்கலுக்கும் காயத்துக்கும் ஆபத்தான ஆத்மீக வியாதிக்குமான மருந்தை இறை பொருத்தத்தின் மூலமும் இஹ்லாஸின் மூலமுமே பெற்றுக்கொள்ள முடியும். மாறாக மிகையான முரீதுகள், ஆதரவாளர்கள் மூலமோ அல்லது அதிகரித்த சாதனைகள், காரியச் சித்தங்கள் மூலமோ அல்ல. ஏனெனில் அவை அனைத்தும் அல்லாஹ்வின் பொறுப்போடு தொடர்பானவை என்பதால் ஆசிக்க முடியாதவையாகும். ஒரு வேளை வழங்கப்படலாம். ஆம், சில போது வெறுமனே ஒரு சொல் விமோசனத்துக்கும் இறை பொருத்தத்துக்கும் காரணமாக அமையும். எனவே எண்ணிக்கையை அந்த அளவு அலட்டிக்கொள்ளக் கூடாது. ஏனெனில் சில சமயங்களில் ஒரு மனிதனுக்கு நேர்வழியைக் காட்டுவது ஆயிரம் மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவது போன்று இறை பொருத்தத்துக்குப் பாத்திரமாக அமைய முடியும். மேலும் இஹ்லாஸும் சத்தத்தின் மீதான பற்றும் முஸ்லிம்கள் தமது மறுமை வாழ்வுக்காக எங்கேனும் யார் மூலமாகவேனும் பயன் பெறும் போது அதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகும். மாறாக “என்னிடம் மாத்திரம் கற்று, என் மூலம் மாத்திரம் நன்மை அடையட்டும்” என்ற சிந்தனை நஃப்ஸினதும் அனானியத்தினதும் ஒரு சூழ்ச்சியாகும். நன்மையில் பேராசையும் மறுமைக்கான அமல்களில் திருப்தியீனமும் கொண்ட மனிதனே! குறிப்பிட்ட ஓரிருவரைத் தவிர பின்பற்றிச் செல்வதற்கு யாருமே இல்லாத சில நபிமார்களும் வந்துள்ளார்கள். ஆனால் அவர்கள் அந்தப் புனிதமான நபித்துவப் பணிக்குரிய எல்லையற்ற கூலிகளை எந்த சந்தேகமுமின்றி முழுமையாகவே பெற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையில் எந்தக் கெட்டித்தனமும் இல்லை. மாறாக இறை பொருத்தத்தை அடைந்துகொள்வதிலேயே சிறப்புகள் அனைத்தும் உள்ளன. “எல்லோரும் என்னையே செவிமடுக்க வேண்டும்” என்று கூறுவதற்கு உன்னுடைய சிறப்பும் தகுதியும் என்ன? அல்லது உனது பணியை மறந்து அல்லாஹ்வின் வேலையில் தலையிடும் அளவு உனக்கு மாத்திரம் உள்ள சிறப்புச் சலுகைதான் என்ன? ஏற்றுக்கொள்ள வைப்பதும் உன்னைச் சூழ மக்களைக் கூட்டுவதும் அல்லாஹ்வுடைய பணியாகும். நீ உன்னுடைய பொறுப்பைச் செய்துவிட்டுச் செல்! அல்லாஹ்வின் பணியில் தலையிடாதே! மேலும் சத்தியத்தை எடுத்துச் சொல்பவர்களுக்கு நன்மையைப் பெற்றுத் தருவது வெறுமனே மனிதர்கள் மாத்திரமல்ல. அல்லாஹ்வின் பிரக்ஞையுள்ள படைப்புகளும் ரூஹானிகளும் மலக்குமார்களும் பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளனர். எல்லாத் திசைகளும் அவர்களால் கலைகட்டியுள்ளன. உண்மையாகவே அதிக நன்மைகளை நாடுவதாக இருந்தால் இஹ்லாஸை அடிப்படையாகக்கொண்டு இறை பொருத்தத்தை மாத்திரம் சிந்தனைசெய். அப்போது உன்னுடைய வாயிலிருந்து வெளிப்படும் முபாரக்கான சொற்களின் வளியோடு கலக்கின்ற மாதிரிகள் அந்த இஹ்லாஸ் மூலமும் தூய நிய்யத்தின் மூலமும் உயிரோட்டமானவையாக மாறி எண்ணற்ற பிரக்ஞையுள்ள படைப்புகளின் செவிகளை அடைந்து அங்கெல்லாம் ஒளியேற்றும். உனக்கும் நன்மைகள் வந்து சேரும். ஏனெனில், உதாரணமாக நீ “அல்ஹம்துலில்லாஹ்” என்று கூறுகின்றாய். இந்தக் கலாம் அல்லாஹ்வின் அனுமதியால் சிறியது முதல் பெரியது வரை மில்லியன் கணக்கான அல்ஹம்துலில்லாஹ்களை வளிமண்டலத்தில் பரப்பும். சர்வ ஞானமிக்க படைப்பாளன் எதையும் வீணுக்காகப் படைக்காத காரணத்தினால் அந்த ஏகப்பட்ட முபாரக்கான வார்த்தைகளைக் கேற்கக்கூடிய எண்ணற்ற செவிகளையும் படைத்துள்ளான். எனவே இஹ்லாஸ் மூலமும் தூய நிய்யத்தின் மூலமும் வளியிலுள்ள அந்த வார்த்தைகள் உயிரோட்டம் பெற்றால் சுவையான ஒவ்வொரு கனியைப் போன்று ரூஹானிகளின் செவிகளுக்குள் நுழையும். ஆனால் இஹ்லாஸும் தூய எண்ணமும் வளியிலுள்ள அந்த வார்த்தைகளுக்கு உயிரூட்டாவிட்டால் அவை செவிமடுக்கப்பட முடியாதவையாகும். எனவே நன்மையும் கூட வெறுமனே வாயிலுள்ள வார்த்தையுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக ஆகிவிடும். இதோ இந்த உண்மை, தமது குரல்கள் அவ்வளவு அழகாக இல்லை என்பதால் செவிமடுப்பவர்களின் குறைவையிட்டுச் சோர்வாக உள்ள ஹாஃபிஸ்மார்களின் செவிகளையும் அதிரச் செய்யட்டும்.

§5

நேர்வழி பெற்றவர்களின் போட்டி பொறாமை கலந்த முரண்பாடுகளுக்கு எதிர்காலம் பற்றிய கரிசனையின்மையோ குறுகிய, தூரதிருஷ்டியற்ற பார்வையோ காரணமில்லை. அவ்வாறே, வழிகேடர்களின் தூய ஒருமைப்பாட்டுக்கான காரணம் நல்லெதிர்காலம் பற்றிய கரிசனையோ உயர்வான நோக்குகளோ அல்ல. மாறாக நேர்வழி பெற்றவர்கள் ஹக், ஹகீகத்தின் செல்வாக்குக் காரணமாக நஃப்ஸுடைய குருட்டு உணர்வுகளுக்கு ஆளாகாமல் உள்ளம், பகுத்தறிவு என்பவற்றின் மிகவும் தூரதிருஷ்டியுள்ள உந்தல்களால் ஆகர்ஷிக்கப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆனால் அதில் ஸ்திரப்பாட்டையும் இஹ்லாஸையும் பாதுகாக்கத் தவறும் போது அந்த உயர் அந்தஸ்த்தைப் பேண முடியாமல் முரண்பாட்டில் வீழ்கின்றனர். வழிகேடர்களோ நஃப்ஸின், இச்சைகளின் செல்வாக்கால் குருடான, முன்னாலுள்ளதையோ முடிவையோ காண முடியாத, தயார் நிலையிலுள்ள ஒரு கவளம் இன்பத்தைப் பின்னால் வரக்கூடிய ஒரு குவியல் இன்பத்துக்காகத் தெரிவு செய்யும் தன்மை உடைய உணர்வுகளின் பொருட்டுக்காக அதாவது உடனடியான ஒரு நலனுக்காகவும் தயாராக உள்ள ஓர் இன்பத்துக்காகவும் ஒருவரோடொருவர் தூய்மையாக ஒன்று சேர்ந்து ஒருமைப்படுகின்றனர். அதாவது, உலாகயுத ரீதியில் தயார் நிலையிலுள்ள நலன்களையும் இன்பங்களையும் அடைந்துகொள்வதற்காக உள்ளங்கள் மரணித்து, நஃப்ஸின் கரங்களில் கடிவாளத்தைக் கொடுத்து, இழி நிலையிலுள்ள வழிகேடர்கள் தமக்கு மத்தியில் துய்மையாக ஒன்றுசேர்கின்றனர். நேர்வழி பெற்றவர்களோ உள்ளம், பகுத்தறிவு என்பவற்றின் உயர்வான சிந்தனைகளாலும் கோட்பாடுகளாலும் மறுமை வரை நீள்கின்ற நித்திய வரை எதிர்காலம் பற்றிய பிரக்ஞை உடையவர்களாக இருப்பதால் மிகத் தூய்மையான, மிக அடிப்படையான, மிக ஸ்திரமான, மிகத் தியாகபூர்வமான ஓர் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் சாத்தியமாக இருக்கும் போது தமது அனானியத்தை விட்டுக்கொடுக்காத காரணத்தினாலும் இஃப்ராத், தஃப்ரீத் காரணமாகவும் முஸ்லிம்களின் பலத்துக்கான மிகச் சங்கையான ஓர் ஊற்றுவாயாகிய ஒருமைப்பாட்டையும் இஹ்லாஸையும் இழந்து தமது மறுமைப் பணிகளிலும் பாரிய கலங்கங்களை ஏற்படுத்திக்கொள்கின்றனர். உண்மையில் இதன் காரணமாக இலகுவில் இறை பொருத்தத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு ஆளாகின்றனர். இந்த ஆபத்தான வியாதிக்கான மருந்து “அல் ஹுப்பு ஃபில்லாஹ் - அல்லாஹ்வுக்காக நேசித்தல்” என்ற உன்னதமான கோட்பாட்டின் தாத்பரியத்துக்கமைய ஹக்கான பாதையில் இருப்பவர்களுக்குத் துணையாக இருப்பதைப் பெருமையாகக் கருதுவதும் அவர்களுக்குப் பின்னால் சென்று ஒத்துழைப்பு வழங்கத் தயங்காதிருப்பதும் இமாமாக இருக்கும் சிறப்பை அவர்களிடமே விட்டுவிடுவதும் அந்த ஹக்கான பாதையில் எந்த ஒருவரும் தன்னைவிட சிறந்தவராக இருக்க முடியுமென்ற சாத்தியப்பாட்டின் அடிப்படையில் தனது அனானியத்தைத் துறந்து இஹ்லாஸை அடைந்துகொள்வதும் அவசியமாகும். அத்தோடு இஹ்லாஸான ஒரு பிடி அமல் இஹ்லாஸில்லாத மலை போன்ற அமல்களைவிடச் சிறந்தது என்பதைத் தெளிவாக அறிந்து செயற்படுவதும் அவ்வாறே வழிப்படுவது பொறுப்பும் ஆபத்துமுள்ள வழிநடாத்தும் பணியைவிடச் சிறந்தது என்பதால் வழிப்படுவதைத் தெரிவு செய்வதும் அந்த வியாதியிலிருந்து தேறி, இஹ்லாஸை அடைவதற்கான வழியாகும். அப்போது மறுமைக்கான பணிகளையும் அதற்குரிய ஹக்கோடு செய்யலாம்.

§6

நேர்வழி பெற்றவர்களின் முரண்பாட்டுக்கும் ஒருமைப்பாடின்மைக்குமான காரணம் அவர்கள் பலவீனமானவர்கள் என்பதோ வழிகேடர்களுடைய பலமான ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கான காரணம் அவர்கள் பலமானவர்கள் என்பதோ அதல்ல. மாறாக நேர்வழி பெற்றவர்களின் ஒருமைப்பாடின்மை பூர்த்தியான ஈமானால் கிடைக்கும் பலமான ஆதாரத் தளத்திலிருந்தும் அந்த ஆதாரத் தளத்திலிருந்து பெற்றுக்கொள்கின்ற பலத்திலிருந்துமே தோற்றம் பெறுகின்றது. அவ்வாறே வழிகேடர்கள், பொடுபோக்குக்காரர்களின் ஒருமைப்பாடும் கூட அவர்களின் உள்ளத்துக்குப் பலமான ஓர் ஆதாரத் தளம் இல்லாத காரணத்தினால் ஏற்படும் இயலாமை, பலவீனம் என்பவற்றிலிருந்தே தோற்றம் பெறுகின்றது. ஏனெனில் பலவீனர்கள் ஒருமைப்பாட்டில் மிகத் தேவை உடையவர்களாக இருப்பதால் பலமாக ஒன்றிணைவார்கள். பலவான்களோ அந்தத் தேவையை முழுமையாக உணராத காரணத்தினால் அவர்களுடைய ஒற்றுமை, ஒருமைப்பாடும் கூட நலிவானதாகவே இருக்கும். சிங்கங்கள் நரிகளைப் போன்று ஒருமைப்பட வேண்டிய அவசியமில்லாததால் தனியாகவே வாழ்கின்றன. காட்டு ஆடு, மாடுகளும் கூட ஓநாய் போன்ற விலங்குகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்காக எப்போதும் மந்தைகளாகவே வாழ்கின்றன. எனவே பலவீனர்களின் கூட்டுகளும் கூட்டாத்மாவும் பலமாக இருப்பதைப் போன்றே பலவான்களின் கூட்டுகளும் கூட்டாத்மாவும் பலவீனமானதாகும். இந்தத் தாத்பரியத்தை சூசகமாக உணர்த்துகின்ற நுட்பமான, அழகிய ஒரு குர்ஆனியக் குறிப்பும் உள்ளது. அதாவது, وَ قَالَ نِسْوَةٌ فِى الْمَدِينَةِ என்ற வசனத்தில் பெண்கள் கூட்டத்துக்கு அவர்கள் பண்மையில் இருக்கின்ற காரணத்தினால் இரண்டு மடங்கு பெண்பால் அவசியப்படும் இடத்தில் قَالَ என்று ஆண்பால் வினைச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதும் قَالَتِ اْلاَعْرَابُ என்பதில் ஆண்கள் கூட்டத்துக்கு قَالَتْ என்ற பெண்பால் வினைச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதும் மிகவும் நுட்பமாக மேற்படி தாத்பரியத்தைக் குறிப்பு மூலம் உணர்த்துகின்றது. அதாவது மென்மையும் சாந்தமும் மிக்க நலிவான பெண்கள் கூட்டுச் சேறும் போது அந்தக் கூட்டணி உறுதியும் பலமும் மிக்கதாக ஆகுவதால் வன்மையும் வீரியமும் பெற்று ஒரு வகை ஆண்மைத் தன்மை பெறுகின்றது. எனவே அவ்வாறான ஓர் இடத்தில் ஆண்பால் வினைச் சொல் அவசியப்படுவதால் وَ قَالَ نِسْوَةٌ என்ற பிரயோகம் அந்த இடத்தில் மிகவும் அழகாகப் பொருந்திச் செல்கின்றது. பலமான ஆண்களைப் பொருத்தவரை, அதிலும் குறிப்பாகக் காட்டரபிகளைப் பொருத்தவரை அவர்கள் தத்தமது சுய பலத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதால் அவர்களுடைய கூட்டுகள் மிகவுமே நலிவானதாகவும் முன்னெச்சரிக்கை, மென்மை, நலினம் போன்ற பண்புகளைப் பெற்று ஒரு வகையான பெண்மைத்துவ வடிவை எடுக்கின்றன. எனவே அவ்வாறான ஓர் இடத்துக்குப் பெண்பால் வினைச் சொல் அவசியப்படுவதால் قَالَتِ اْلاَعْرَابُ என்ற பிரயோகம் சிறப்பாகப் பொருந்திப் போகின்றது. ஆம், சத்தியவான்கள் மிகப் பலமான ஓர் ஆதாரத் தளமாக இருக்கும் ஈமான் பில்லாஹ்விலிருந்து கிடைக்கும் தவக்குல், தஸ்லீமிய்யத் என்பவற்றின் காரணமாக ஏனையவர்களில் தங்கியிருக்கவோ உதவி ஒத்தாசை கோரவோ முன்வரமாட்டார்கள். முன்வந்தாலும் மிகுந்த அர்ப்பணத்தோடு அதில் ஈடுபாடு காட்டவும் மாட்டார்கள். உலகாயுதவாதிகளோ ஹகீகத்தான அந்த ஆதாரத் தளத்தைவிட்டும் பொடுபோக்காக இருப்பதால் இயலாமையிலும் பலவீனத்திலும் தத்தளிக்கின்றனர். எனவே மிகத் தீவிரமாக உதவி ஒத்தாசைக்கான தேவையை உணர்ந்து தூய்மையாகவும் மிகுந்த அர்ப்பணங்களோடும் கூட்டுச் சேர்கின்றனர். இவ்வாறு சத்தியவான்கள், ஒருமைப்பாட்டில் உள்ள சத்தியத்தை சிந்திக்காமலும் தேடாமலும் இருப்பதால் அசத்தியமும் தீங்கும் கலந்த கொடிய விளைவாகிய முரண்பாட்டுக்குள் வீழ்கின்றனர். அசத்தியத்தை உடைய வழிகேடர்களோ தமது இயலாமை, பலவீனங்கள் காரணமாக ஒருமைப்பாட்டில் உள்ள பலத்தை உணர்ந்துகொண்டதால் காரியச் சித்தம் பெறுவதற்கான மிக மகத்தான ஒரு வஸீலாவைத் தம்வசப்படுத்திக்கொண்டார்கள். இதோ சத்தியவான்களின் இந்த சத்தியத்துக்குப் புறம்பான வியாதிக்கான மருந்து وَلاَ تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ என்ற மறை வாக்கின் திட்டமான விலக்களையும் وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى எனற மறை வாக்கு சமூக வாழ்வின் மேம்மாட்டுக்காக முன்வைக்கும் அர்த்தபூர்வமான ஏவலையும் எமது செயற்பாடுகளை நெறிப்படுத்தும் கோட்பாடுகளாகக்கொண்டு செயற்படுவதாகும். அத்துடன் இந்த முரண்பாடுகள் இஸ்லாத்துக்கு எந்த அளவு தீங்கானது என்பதையும் அது சத்தியவான்களின் மீது அத்துமீறி அவர்களை அழிக்கக் கங்கணம் கட்டியிருக்கும் இந்த வழிகேடர்களின் காரியங்களை எந்த அளவு இலகுபடுத்துகின்றது என்பதையும் சிந்தித்து, எமது இயலாமைகள் பலவீனங்களையும் உணர்ந்தவர்களாக, சத்தியவான்களின் கூட்டத்தோடு உண்மையோடும் அர்ப்பணத்தோடும் ஒன்றுபட வேண்டும். இந்த விடயத்தில் தற் பெருமைகளை மறந்து, முகஸ்துதி, பாசாங்குகள் என்பவற்றிலிருந்து விடுதலை பெற்று இஹ்லாஸாக நடந்துகொள்ள வேண்டும்.

§7

சத்தியவான்களின் முரண்பாட்டுக்கான காரணம் அவர்கள் துணிவோ ஊக்கமோ சிரத்தையோ இல்லாதவர்களாக உள்ளார்கள் என்பதல்ல. அவ்வாறே பொடுபோக்கில் மூழ்கியுள்ள உலகாயுதவாதிகளிடமும் வழிகேடர்களிடமும் உலக விவகாரங்களில் காண முடியுமாக உள்ள தூய ஒருமைப்பாட்டுக்கும் கூட்டுறவுக்குமான காரணியும் கூட துணிவும் ஊக்கமும் சிரத்தையு உடையவர்களாக இருக்கின்றார்கள் என்பதுமல்ல. மாறாக சத்தியவான்கள் மறுமையோடு தொடர்பான விடயங்களை அதிகமாக சிந்திப்பதால் அந்த முக்கியத்துவம் வாய்ந்த, மிகையான விடயங்களுக்கு அவர்களுடைய துணிவும் ஊக்கமும் சிரத்தையும் பிரிந்து செல்கின்றன. ஹகீகத்தான ஒரு மூலதனமாகிய தமது நேரத்தை ஒரே விடயத்துக்காக செலவளிக்க முடியாதவர்களாக இருப்பதால் தனது சகாக்களுடனான கூட்டுறவு வலுப்பெறுவதில்லை. ஏனெனில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டியுள்ள விடயங்கள் அதிகமானவையாகவும் அவற்றின் பரப்புகளும் கூட விசாலமானவையாகவுமே உள்ளன. ஆனால் பொடுபோக்கில் உள்ள உலகாயுதவாதிகளோ வெறுமனே உலக வாழ்வை மாத்திரம் சிந்திப்பதால் தமது மொத்த உணர்வுகளோடும் முழுப் பலத்தோடும் உளப்பூர்வமாகவும் ஆத்ம திருப்தியோடும் மிகத் தீவிரமாக உலக வாழ்வுடன் தொடர்பான விவகாரங்களில் ஈடுபாடு காட்டுகின்றனர். மேலும் அந்த விடயங்களில் உதவியாக இருப்பவர்களுடன் மிகப் பலமான உறவுகளையும் கட்டியெழுப்புகின்றனர். சில போது -பேராசையால் பித்துப் பிடித்த ஒரு யஹூதி மாணிக்க வியாபாரி ஐந்து காசு பெறுமதியான ஒரு கண்ணாடித் துண்டுக்கு ஐயாயிரம் காசு நிர்ணயித்ததைப் போன்று- சத்தியத்தின் பார்வையில் ஐந்து காசு பெறுமதியற்ற, சத்தியவான்கள் பத்துக் காசும் கொடுக்க முன்வராத விடயங்களுக்கு ஐயாயிரம் காசு பெறுமதியான நேரத்தை செலவு செய்துகொண்டிருப்பார்கள். நிச்சயமாக இந்த அளவு விலை கொடுத்து, முழு மூச்சாகவும் முழு வீரியத்தோடும் ஈடுபடுவது பாத்திலான விடயங்களுக்காகத்தான் இருந்தாலும் அதில் தூய்மையான ஓர் இஹ்லாஸ் உள்ள காரணத்தினால் அவர்களுடைய காரியங்கள் கைகூடுகின்றன. இந்த வகையில் சத்தியவான்களை மிகைக்கின்றனர். இவ்வாறு தோல்விக்கு முகம்கொடுக்கின்ற நேர்வழியில் இருப்பவர்களோ இத்தகைய தோல்விகளால் இழிவுக்கும் கையறு நிலைக்கும் கையாளாகத்தனத்துக்கும் ஆளாகி, இஹ்லாஸை இழந்து முகஸ்துதியை வாங்கிக்கொள்கிறார்கள். இறுதியில் அந்தத் துணிவோ ஊக்கமோ சிரத்தையோ அற்ற உலகாயுதவாதிகளை அண்டிப் பிழைத்துப் பக்கவாத்தியம் பாட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாகிறார்கள். சத்தியவான்களே! சத்தியத்தை நேசிக்கும் அஹ்லுஸ் ஷரீஅத், அஹ்லுல் ஹகீகத், அஹ்லுத் தரீக்கத் மக்களே! முரண்பாடு, பிரிவினைவாதம் போன்ற இந்தக் கொடிய வியாதிகளை அழிப்பதற்காக ஒருவருக்கொருவர் குறைகளைத் தேடுவதற்குப் பதிலாக அடுத்தவருடைய குறைகளைக் காணும் போது கண்களை மூடிக்கொள்ளுங்கள். وَاِذَا مَرُّوا بِاللَّغْوِ مَرُّوا كِرَامًا என்ற குர்ஆனியப் பண்பை ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். மேலும் வெளியிலிருந்து எதிரிகள் தாக்கும் போது உள்ளக முரண்பாடுகளையும் விவாதங்களையும் முற்றாகக் களைந்து சத்தியவான்களை வீழ்ச்சியிலிருந்தும் இழிவிலிருந்தும் பாதுகாப்பது மிக முதன்மையான, மிக மகத்தான மறுமைப் பணியாகும் என்பதை உணர்ந்து, நூற்றுக்கணக்கான வசனங்களும் ஹதீஸ்களும் கடுமையாக ஏவுகின்ற அன்பையும் சகோதரத்துவத்தையும் உதவி ஒத்தாசையையும் உங்களுக்கு மத்தியில் நிலைநாட்டுங்கள். முழு மூச்சோடும் ஒட்டுமொத்த உணர்வுகளோடும் உங்கள் சகோதரர்களோடும் மார்க்க உறவுகளோடும் ஒன்றுபடுங்கள். அதாவது முரண்பாட்டில் வீழாதீர்கள். இவ்வாறான சிறிய காரியங்களில் எமது பெறுமதிவாய்ந்த நேரத்தைச் செலவளிப்பதைவிட திக்ர், ஃபிக்ர் போன்ற பெறூமதிவாய்ந்த விடயங்களில் நேரத்தை செலவளிப்போம் என்று ஒதுங்கிச் சென்று ஒருமைப்பாட்டை நலிவுறச் செய்யாதீர்கள். ஏனெனில் இந்த ஆத்மார்த்தமான போராட்டத்தில் நீங்கள் சிறியதாகக் கருதுகின்ற ஒரு விடயம் மிகப் பெரிய ஒரு விடயமாக இருக்க முடியும். சில சமயங்களில் ஒரு சிப்பாய் தனது தனிப்பட்ட கஷ்டங்களுடன் மிகக் கடுமையான, மிகக் கொந்ஹ்டளிப்பான ஒரு சூழலில் ஒரு மணித்தியாளம் மேற்கொள்கின்ற காவல் பணி ஒரு வருடம் பூராக செய்கின்ற இபாதத்தின் பெறுமதியைப் பெறுவது போன்று சத்தியவான்கள் வீழ்ச்சியில் இருக்கும் இந்தக் காலப்பகுதியில், அதாவது இந்தக் கடுமையான ஆத்மீக மற்றும் மானசீக ரீதியான போராட்டக் காலத்தில் சிறிய ஒரு விடயத்துக்காக அர்ப்பணமாகும் உன்னுடைய பெறுமதிவாய்ந்த ஒரு நாள் ஆயிரம் மடங்கு பெறுமதிமிக்கதாக மாறும். ஒரு நாள் ஆயிரம் நாட்களின் பெறுமதியைப் பெறும். ஆம், அல்லாஹ்வுக்காகத்தான் செய்கிறோம் என்றால் அந்தப் பணியில் பெரியதா? சிறியதா? பெறுமதியானதா? பெறுமதியற்றதா? என்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இஹ்லாஸுக்கும் இறை திருப்திக்குமான பாதையில் ஓர் அணு ஒரு நட்சத்திரத்தைப் போன்றதாகும். வஸீலாவாக இருக்கும் ஒன்றின் தன்னளவிலான பெறுமதியைப் பார்க்க முடியாது. கொண்டு சேர்க்கின்ற விளைவே அதன் பெறுமதியாகும். ஆம், உண்மையில் விளைவு இறை பொருத்தமாகவும் அதன் நொதியம் இஹ்லாஸாகவுமே உள்ளது. எனவே அதில் சிறியது இருக்க முடியாது. நிச்சயமாக அனைத்தும் பெரியதாகும்.

§8

நேர்வழி பெற்ற சத்தியவான்களுக்கு மத்தியிலுள்ள போட்டி பொறாமைகளும் முரண்பாடுகளும் உலக மோகத்தின் அடிப்படையில் ஏற்படுபவையல்ல. அவ்வாறே பொடுபோக்குக்காரர்கள், உலகாயுதவாதிகளுக்கு மத்தியில் காணப்படும் ஒருமைப்பாடும் கூட்டுறவும்கூட பெருந்தன்மை அடிப்படையிலோ உளப் பக்குவத்தின் அடிப்படையிலோ ஏற்படுவதுமல்ல. மாறாக சத்தியவான்கள் சத்தியத்தின் மூலன் வருகின்ற பெருந்தன்மை, உயர்வான ஹிம்மத், சத்தியப் பாதையில் வரவேற்புக்குரிய போட்டி போன்ற விடயங்களை உரிய அமைப்பில் பேணிப் பாதுகாத்துக்கொள்ள முடியாமல் போன காரணத்தினாலும் தகுதியற்ற பலரின் பிரவேசத்தால் அவற்றில் எல்லை மீறல்களும் துஷ்பிரயோகங்களும் நிகழ்வதாலும் போட்டி பொறாமைமிக்க ஒரு முரண்பாட்டுக்குள் வீழ்ந்து தமக்கும் இஸ்லாமிய சமூகத்துக்கும் பாரிய தீங்கை ஏற்படுத்தியுள்ளனர். பொடுபோக்கில் உள்ள வழிகேடர்களோ தாம் மிகவுமே மோகம் கொள்கிண்ற உலகாயுத நலன்கள் கைநழுவிப் போய்விடாதிருப்பதற்காகவும் அந்த நலன்களை அடைந்துகொள்வதற்காகத் தான் ஆதரவு வைத்துள்ள சகாக்களையும் தலைவர்களையும் பகைத்துக்கொள்ளாதிருப்பதற்காகவும் தமது இழிவும் சிறுமையும் துணிவின்மையும் ஊக்கமின்மையும் தம்மை வீழ்த்திவிடாதிருப்பதற்காகவும் எத்தகைய பெறுமானங்களையும் அடிப்படையாகக் கொள்ளாத, ஏன் கீழ்த்தரமான, தீங்கான, துரோகியான சகாக்களோடும் தூய்மையாகக் கூட்டுச் சேர்கின்றனர். அத்தோடு இலாபங்களுக்காகக் கூட்டுச் சேர்பவர்கள் எந்த வகையிலாவது தமக்கு நிகரானவர்களோடு தூய்மையாகக் கூட்டுச் சேர்வார்கள். அந்தத் தூய்மையின் விளைவான பயண்களையும் கண்டுகொள்வார்கள். இதோ முஸீபத்களால் வாடுகின்ற, முரண்பாடுகள், குரோதங்களுக்குள் வீழ்ந்துள்ள சத்தியவான்களே! முஸீபத்கள் மோலோங்கிய இத்தகைய ஒரு காலத்தில் இஹ்லாஸை இழந்ததாலும் அதை இழந்தது பற்றிப் பிரக்ஞையின்றி இருப்பதாலும் இறை பொருத்தத்தை மாத்திரம் ஏக நோக்காகக் கொண்டு செயற்படாத காரணத்தினாலும் சத்தியத்தைச் சுமந்த இந்த சமூகத்தின் வீழ்ச்சிக்கும் இழிவுக்கும் தோல்விக்கும் காரணமாக அமைந்துள்ளீர்கள். மார்க்க விவகாரங்களிலும் மறுமை விவகாரங்களிலும் போட்டி பொறாமை, பகைமை, வெறுப்பு, குரோதம், வயிற்றெரிச்சல், மன உளைச்சல் என்பன இருக்கக் கூடாது. சத்தியத்தின் பார்வையில் இருக்கவும் முடியாது. ஏனெனில் பொறாமை, வயிற்றெரிச்சல் என்பவற்றுக்கான காரணம் ஒரு பொருளை நோக்கிப் பல கரங்கள் நீள்வதும் ஒரு பதவியில் பல்வேறு கண்கள் மோகம் கொள்வதும் ஒரு ரொட்டித் துண்டுக்காகப் பல்வேறு இறைப்பைகள் காத்திருப்பதுமாகும். அதாவது ஆரம்பத்தில் இத்தகைய விடயங்களைச் சூழ ஒரு நெருக்கடியும் போட்டியும் மோதலும் உண்டாகி அவை பகையாகவும் பின்னர் பொறாமையாகவும் பின்னர் வயிற்றெரிச்சலாகவும் மாறும். உலகம் ஒடுக்கமானதாகவும் தற்காலிகமானதாகவும் எண்ணற்ற மனித ஆசைகளைத் திருப்திப்படுத்த முடியாததாகவும் ஏதேனும் ஒன்றுக்குப் பலர் வேட்பாளர்களாகும் நிலையிலும் இருப்பதால் போட்டி, பொறாமை ஏற்படுகின்றது. ஆனால் மறுமையில் ஒரு மனிதனுக்கு ஐநூறு வருடங்கள் விசாலமான ஒரு சுவனம் அருளப்படுவதும் அதில் எழுபதாயிரம் வரை மாளிகைகளும் ஹூர்லீன்களும் வழங்கப்படுவதும் சுவனவாசிகள் அனைவரும் தமக்குரிய பங்கில் முழுமையாகத் திருப்தியும் மகிழ்ச்சியும் அடைவதும் மறுமையில் போட்டி பொறாமையை ஏற்படுத்துவதற்கான எந்தக் காரணங்களும் இல்லை என்பதையே காட்டி நிற்கின்றன. அவ்வாறே மறுமைக்குச் சொந்தமான ஸாலிஹான அமல்களிலும் போட்டியோ பொறாமையோ இருக்க முடியாது. அவை அதற்குரிய இடமுமல்ல. பொறாமை கொள்பவன் ஒன்றோ முகஸ்துதி உடையவனாக இருக்க வேண்டும். அல்லது அந்த ஸாலிஹான அமல்கள் மூலம் உலகாயுத நலன்களை நாடுபவனாக இருக்க வேண்டும். அல்லது ஸாலிஹான அமல்கள் எதை நோக்கியதாகும் என்பதையோ அதன் அடிப்படையும் ஆத்மாவும் இஹ்லாஸ் என்பதையோ அறியாத சுத்த ஜாஹிலாக இருக்க வேண்டும். போட்டி வடிவில் இறை நேசர்களுக்கெதிராக ஒரு வகை முரண்பாட்டையும் குரோதத்தையும் சுமப்பதால் அல்லாஹ்வுடைய விசாலமான ரஹ்மத்தையே உண்மையில் நிந்தனை செய்கிறான். இந்த சத்தியத்தை உறுதிப்படுத்தும் ஒரு நிகழ்வு: எனது பழைய தோழர்களுள் ஒருவர் இன்னொமொருவரோடு கடும் பகையில் இருந்தார். ஒரு சமயம் அவருக்கருகில் அவருடைய அந்த எதிரியின் ஸாலிஹான அமல்களைப் புகழ்ந்து, அவர் விலாயத்தை உடைய ஒருவர் என்ற அளவுக்கு சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த நண்பன் அதை அலட்டிக்கொள்ளவோ அதையிட்டுப் பொறாமை கொள்ளவோ இல்லை. பின்னர் இன்னொருவர் அவரிடம் “அந்த மனிதர் வீரதீரத்திலும் நெஞ்சுரத்திலும் வலிமையிலும் மிகச் சிறந்த ஒருவராவார்” என்று கூறினார். அப்போது அவரிடம் கடுமையான ஒரு பொறாமையுணர்வும் போட்டி மனப்பான்மையும் வெளிப்பட்டதைக் கண்டோம். அப்போது அவரிடம் “விலாயத்தும் ஸலாஹத்தும் நித்தியமான ஒரு வாழ்வுக்கான மிக உயர்ந்த சொத்துகளாகும். நீயோ அவற்றுக்காகப் பொறாமை கொள்ளவில்லை. ஆனால் ஓர் எறுமையிடம் அல்லது ஒரு கொடிய முருகத்திடமும் காண முடியுமான உலகியல் பலத்துக்காக அல்லவா பொறாமைப்படுகிறீர்? இது வைரம் இருக்கக் கண்ணாடித் துண்டுக்காகப் பொறாமைப்படுது போன்ற ஒரு விடயமல்லவா?” என்று வினவினோம். அவர் “இந்த உலகில் ஒரே மகாமுக்காக நாம் இருவரும் கண் வைத்துள்ளோம். அதை எட்டுவதற்காககத் தேவைப்படுகின்ற விடயங்கள் பலமும் நெஞ்சுரமுமாகும். எனவேதான் அந்த விடயங்களில் பொறாமைப்பட்டேன். மறுமையின் மகாம்களோ எண்ணற்றவையாகும். அவர் இங்கு எனது எதிரியாக இருந்தாலும் அங்கு என்னுடைய நேசத்துக்குரிய, தூய ஒரு சகோதரனாக இருக்க முடியும்.” என்று கூறினார். சத்தியவான்களே! தரீக்காதாரிகளே! சத்தியத்துக்கான சேவகம் என்பது மிகப் பெரிய, மிகக் கனமான ஒரு புதையலைப் பாதுகாப்பாகச் சுமக்கும் பணியைப் போன்றதாகும். அந்தப் புதையலைத் தோலில் சுமப்பவர்கள் தமது துணைக்காக வரும் பலமான கரங்களையிட்டு மகிழ்ச்சியும் திருப்தியுமே அடைய வேண்டும். பொறாமைப்படுவது இருக்கட்டும், மிகவும் தூய்மையான ஓர் அன்போடும் பண்போடும் -அவ்வாறு வருபவர்களின் மிகையான பலத்தையும் உதவியையும் எண்ணிப்- பெருமிதத்தோடும் வரவேற்பது அவசியப்படுகின்ற போது, எதற்காக ஹகீகத்தான அந்த சகோதரர்களையும் அர்ப்பணம் மிக்க அந்த உதவியாளர்களையும் போட்டி பொறாமையோடு பார்த்து இஹ்லாஸை இழக்க வேண்டும். ஏன் உங்கள் பணிகளை நீங்களே சந்தேகத்துக்கிடமானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும்? உங்களுடைய உயர்வான பாதையை அதைவிடப் பல நூறு மடங்கு அந்தஸ்த்தில் தாழ்ந்த மார்க்கத்தை விற்று உலகை சம்பாதிக்கும் பாதையாகவும் ஹகீகத்தான அறிவைக் கொண்டு பொருளீட்டும் பாதையாகவும் பேராசைக்காகப் போட்டி போடுகின்ற பாதையாகவும் வழிகேடர்களுக்குக் காட்சிப்படுத்தி அவர்களின் நிந்தனைகளைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும்? இந்த வியாதிக்கான ஏக தீர்வு தனது நஃப்ஸை சதாவும் குற்றம் பிடிப்பதும், தனது நஃப்ஸுக்கன்றி எதிரில் உள்ளவர்களுக்கு சார்பன நிலையை எடுப்பதுமாகும். அத்துடன் இஸ்லாத்தின் பண்பாடுகள் பற்றிப் பேசிய உலமாக்களுக்கும் விவாத ஒழுங்குகளைப் பற்றிப் பேசிய அறிஞர்களுக்கும் மத்தியிலுள்ள சத்தியம் கமழும் நியாய விதியாகிய பின்வரும் விதியில், அதாவது,“ஒரு விடயத்தை வாதிக்கும் போது தனது வாதத்தில் உண்மை வெளிப்பட்டமையைக் கொண்டாடி எதிர்த் தரப்பு பிழையாக இருந்ததையிட்டு மகிழ்வுற்றால் அவன் நீதி, நியாயமற்றவனாவான்” என்ற விதியில் பேணுதலாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் உண்மையின் வெற்றியும் தீங்காகவே அமையும். ஏனெனில் உண்மை தனது பக்கத்தில் வெளிப்பட்டால் அவர் அந்த விவாதத்தால் புதிதாக எதையும் கற்றுக்கொள்வதில்லை. பதிலாகப் பெருமை கொள்வதற்கான சாத்தியப்பாடு உள்ளதால் நஷ்டமடைய முடியும். மாறாக எதிர்த்தரப்பினரின் வாதத்தில் உண்மை வெளிப்பட்டால் தீங்கற்ற, அறியாத ஒரு விடயத்தை அறிந்து பயன் பெறுவதோடு நஃப்ஸின் பாவங்களிலிருந்தும் விடுதலை பெறுவார். ஆம், நியாயவான் எப்போதும் உண்மையின், சத்தியத்தின் பொருட்டுக்காக நஃப்ஸின் பொருட்டை அலட்சியம் செய்வான். எதிரியின் கரங்களில்தான் உண்மையைக் கண்டாலும் முழுப் பொருத்தத்துடன் அதை ஏற்றுக்கொண்டு அதற்கு சார்பானவனாக மாறுவான். அதையிட்டு மகிழ்ச்சியடைவான். ஆம், மேற்படி விதியை மார்க்கப் பற்றுள்ளவர்களும் சத்தியவான்களும் தரீக்காதாரிகளும் அறிஞர் பெருமக்களும் தமது கையேடாகவும் கோட்பாடாகவும் வைத்துக்கொண்டால் இஹ்லாஸை அடைவார்கள். அவர்களுடைய மறுமைக்கான பணிகளும் கைகூடும். மேலும் இந்தக் கவலைக்கிடமான வீழ்ச்சியிலும் பயங்கரமான முஸீபத்களிலும் இருந்து இறையருளால் விடுதலையும் பெறுவார்கள். سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters