உளத்தூய்மை தொடர்பானது (இது பதினேழாவது மின்னலின் பதினேழாவது குறிப்பில் காணப்படும் ஏழு அம்சங்களுக்குள் நான்காவது அம்சமாக இருந்த போதிலும் உளத்தூய்மையுடன் தொடர்புடையது என்பதால் இருபதாவது மின்னலின் இரண்டாவது அம்சமாக இணைக்கப்பட்டது. பின்னர் அதன் முக்கியத்துவத்தையும் நூரானியத்தான தன்மையையும் கருத்திற்கொண்டு தனி ஒரு மின்னலாக, அதாவது இருபத்தியோராவது மின்னலாக இணைத்துக்கொள்ளப்பட்டது.) இந்த மின்னலைக் குறைந்தபட்சம் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையாவது வாசிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ وَلَا تَنَازَعُوا فَتَف۟شَلُوا وَ تَذ۟هَبَ رٖيحُكُم۟ وَ قُومُوا لِلّٰهِ قَانِتٖينَ قَد۟ اَف۟لَحَ مَن۟ زَكّٰيهَا وَ قَد۟ خَابَ مَن۟ دَسّٰيهَا وَلَا تَش۟تَرُوا بِاٰيَاتٖى ثَمَنًا قَلٖيلًا என்னுடைய மறுமைச் சகோதரர்களே! இந்தக் குர்ஆனியப் பணியில் எனக்கு ஒத்துழைப்பாக இருக்கும் ஈமானியத் தோழர்களே! நீங்கள் அறிந்த ஒரு விடயத்தை என்னிடமிருந்தும் அறிந்துகொள்ளுங்கள்: இந்த உலகின் பணிகளிலும் குறிப்பாக மறுமைக்கான பணிகளிலும் மிக மகத்தான அடிப்படையாகவும், மிகப் பெரும் பலமாகவும், இறை சந்நிதானத்தில் மிக ஏற்றமான பரிந்துரையாகவும், மிக வலுவான ஆதாரமாகவும், சத்தியத்துக்கான மிகக் கிட்டிய வழியாகவும், மிகவுமே ஏற்புடைய ஆத்மார்த்த பிரார்த்தனையாகவும், நோக்கத்தை அடைவதில் மிகவுமே கராமத் பொருந்திய ஒரு வஸீலாவாகவும், பண்புகளிலெல்லாம் மிக உன்னதமான பண்பாகவும், மிகத் தூய்மையான வணக்கமாகவும் இருப்பது இஹ்லாஸ் ஆகும். உண்மையில், கொடூரமான எதிரிகளாலும் மூர்க்கத்தனமான அழுத்தங்களாலும் பயங்கரமான வழிகேடுகள், நூதனங்களாலும் சூழப்பட்டுள்ள கடுமையான சோதனைகள் நிறைந்த இந்தக் காலத்தில் மிகப் புனிதமான, அதே நேரம் மிகச் சுமையான இந்த ஈமானியப் பணியும் குர்ஆனியப் பணியும் மிகுந்த பலவீனத்திலும் இயலாமையிலும் வறுமையிலும் இருக்கின்ற எமது தோல்கள் மீது இறை கிருபையால் சுமத்தப்பட்டுள்ளது. எனவே முழுப் பலத்தையும் பிரயோகித்து இஹ்லாஸ் உடையவர்களாக மாறுகின்ற பொறுப்பும் கடமையும் ஏனைய அனைவரையும்விட அதிகமாக எம்மீதே இருக்கின்றது. இஹ்லாஸ் என்பது எமக்கு மத்தியில் எப்போதும் உயிர்ப்பான ஒரு பிணைப்பாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதுவரை எமக்கு வாய்க்கப்பெற்றுள்ள அடைவுகள் அனைத்தும் கைநழுவி முடங்கிப் போகின்ற நிலை ஏற்படலாம். இந்தப் பாவத்தின் சுமை மிகவும் பாரதூரமானதாகும். ﻭَﻟﺎَ ﺗَﺸْﺘَﺮُﻭﺍ ﺑِﺎٰﻳَﺎﺗِﻰ ﺛَﻤَﻨًﺎ ﻗَﻠِﻴﻠﺎً என்ற வசனத்திலுள்ள கடுமையான எச்சரிக்கைக்குப் பாத்திரமானவர்களாகவும் மாறிவிடுவோம். ஆம், அர்த்தமோ அவசியமோ அற்ற, நஷ்டகரமான, சுய நலம், முகஸ்துதி என்பவற்றுக்குள் திணருகின்ற, மனித இயல்புக்கு ஒவ்வாமையை வெளிப்படுத்துகின்ற சில தாழ்ந்த எண்ணங்களினதும் அற்ப இலாபங்களினதும் பொருட்டுக்காக நித்திய வாழ்வையே பணயமாக வைத்து இஹ்லாஸைத் துறந்தால் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த சகோதரர்களின் உரிமைகளில் அத்துமீறியவர்களாகவும் குர்ஆனியப் பணியை இலக்கு வைத்தவர்களாகவும் ஈமானிய சத்தியங்களின் புனிதத் தன்மைக்கு முன்னால் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டவர்களாகவும் ஆகிவிடுவோம். எனது சகோதரர்களே! மகத்தான நற் காரியங்களில் ஏராளமான தடைகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஷைத்தான் நற் பணிகளில் ஈடுபடும் மனிதர்களுடைய பாதையில் அதிகமதிகம் குறுக்கிடுவான். எனவே இந்த ஷைத்தான்களையும் தடைகளையும் முறியடிப்பதற்கு இஹ்லாஸுடைய பலத்தை ஆதாரமாக வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் கடப்பாடும் இருக்கின்றது. சகோதரர்களே! இஹ்லாஸை இல்லாதொழிக்கக்கூடிய அம்சங்களை விட்டும் பாம்பை அல்லது விஷ ஜந்துகளைக் கண்டு விரண்டோடுவதைப் போன்று விரண்டோடுங்கள். யூஸுஃப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறிய ﺍِﻥَّ ﺍﻟﻨَّﻔْﺲَ ﻟَﺎَﻣَّﺎﺭَﺓٌ ﺑِﺎﻟﺴُّٓﻮﺀِ ﺍِﻟﺎَّ ﻣَﺎ ﺭَﺣِﻢَ ﺭَﺑِّﻰ என்ற வார்த்தை நஃப்ஸுல் அம்மாராவை நம்ப முடியாது என்பதையே காட்டி நிற்கின்றது. எனவே அனானியத்தும் நஃப்ஸுல் அம்மாராவும் உங்களை ஏமாற்றி விடாதிருக்கட்டும். இஹ்லாஸை அடைந்து கொள்வதற்காகவும் அதனைப் பாதுகாத்துக்கொள்வதற்காகவும் தடைகளைத் துவம்சம் செய்வதற்காகவும் பின்வரும் விழுமியங்கள் உங்களுடைய வழிகாட்டியாக இருக்கட்டும்.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
İhlas Risalesi
The Twenty-First Gleam
உங்களுடைய அமல்களில் அல்லாஹ்வுடைய பொருத்தம் இருந்தே ஆக வேண்டும். அவன் பொருந்திக்கொண்ட பின்னர் முழு உலகமுமே உதறித் தள்ளினாலும் அது ஒரு பொருட்டல்ல. அவன் ஏற்றுக்கொண்ட பின்னர் எல்லா மனிதர்களும் சேர்ந்து எதிர்த்து நின்றாலும் அதற்கு எந்தப் பெறுமானமும் கிடையாது. அவனுடைய பொருத்தமும் அங்கீகாரமும் கிடைத்த பின்னர் அவனது நாட்டம் இருந்தால் அல்லது அவனுடைய ஞானத்துக்குப் பொருத்தமானதாக இருந்தால் நீங்கள் ஆசிக்காமலேயே மனிதர்களுடைய அங்கீகாரத்தையும் பொருத்தத்தையும் பெற்றுத் தருவான். எனவே இந்தப் பணியில் வேறு நோக்கங்கள் ஏதுமின்றி, நேரடியாக இறை பொருத்தம் மாத்திரமே அடிப்படை நோக்கமாகக் கொள்ளப்பட வேண்டும்.
இந்தக் குர்ஆனியப் பணியில் பங்கெடுக்கும் உங்கள் சகோதரர்களைக் கண்டிக்காதிருப்பதும் அவர்கள் மத்தியில் உங்கள் புகழ்களையும் சிறப்புகளையும் விளம்பரம் செய்து அவர்களின் ஆர்வங்களை அவ்வாறான விடயங்களின்பால் தூண்டிவிடக் காரணியாக அமையாதிருப்பதுமாகும். ஏனெனில் மனிதனுடைய ஒரு கை இன்னொரு கையுடன் போட்டியில் இறங்காது. ஒரு கண் இன்னொரு கண்ணை விமர்சிக்காது. நாவு காதைக் கடிந்து கொள்ளாது. உள்ளம் ஆத்மாவின் குறைகளைக் கண்டு கொள்ளாது. மாறாக ஒவ்வோர் உறுப்பும் பரஸ்பரம் ஏனையவற்றின் குறைகளை நிவர்த்தி செய்யும். பரஸ்பரம் ஏனையவற்றின் பலவீனங்களை மறைக்கும். பரஸ்பரம் ஏனையவற்றின் உதவிக்கு விரையும். பரஸ்பம் ஏனையவற்றின் பணிகளில் ஒத்துழைப்பாக இருக்கும். இல்லாவிட்டால் அந்த மனித உடலின் வாழ்வு அஸ்தமிக்கும்; ஆத்மா உடலைத் துறந்து செல்லும்; உடல் அழிந்து விடும். அவ்வாறே ஒரு தொழிற்சாலையை எடுத்துக்கொண்டால் அதன் சக்கரங்கள் ஒன்றுக்கொன்று ஏட்டிக்குப் போட்டியாக செயற்படுவதோ ஒன்றுக்கொன்று முட்டுக்கட்டையாக இருந்து வேலைகளைப் பாழாக்குவதோ இல்லை. மாறாக அவை தமது மொத்த ஆற்றல்களையும் மொத்த தொழிற்பாடுகளையும் பொது நோக்கத்துக்காக அர்ப்பணிப்பதையும் ஒன்றுக்கொன்று உதவியாகவும் பக்கபலமாகவும் நின்று ஓருடலாக இயங்குவதையுமே பார்க்கிறோம். அவற்றுக்கு மத்தியில் உண்மையான ஓர் ஒற்றுமையையும் ஒத்துழைப்பையும் காண முடியும். மாறாக அதில் அணுவளவேனும் ஒரு குழப்பம் அல்லது புறத்தாக்கம் குறுக்கிட்டால் அது அந்தத் தொழிற்சாலையிலும் குழப்பத்தை ஏற்படுத்தி விளைவோ பயனோ அற்றதாக மாற்றிவிடும். இறுதியில் அந்தத் தொழிற்சாலையின் உரிமையாளன் பயனற்ற அந்தத் தொழிற்சாலையை அழித்து அகற்றிவிடுவான். ரிஸாலே நூர் மாணவர்களே! குர்ஆனின் சேவகர்களே! நாமும் நீங்களும் கூட எமது பணி நிமித்தம் ஒரு பூர்த்தியான மனிதன் என்ற அந்தஸ்துக்குத் தகுதியான ஒரு கூட்டாத்மாவின் உறுப்புகளாக இருக்கிறோம். அல்லது நித்தியமான வாழ்வில் நித்தியமான ஒரு நிம்மதியை உற்பத்தியாகத் தரக்கூடிய மகத்தான ஒரு தொழிற்சாலையின் சக்கரங்களாக இருக்கிறோம். அல்லது உலகம் என்ற கொந்தளிப்பான கடலில் தத்தளித்துக்கொண்டிருக்கும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய உம்மத்தை தாருஸ் ஸலாம் என்ற ஸலாமத்தான கரைக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு ரப்பானியக் கப்பலில் பணி புரியும் சேவகர்களாக இருக்கிறோம். எனவே நிச்சயமாக வெறும் நால்வருக்கு ஆயிரத்து நூற்றிப் பதினொரு நபர்களின் ஆத்மார்த்தமான பலத்தை வழங்குகின்ற இஹ்லாஸுக்குப் பாத்திரமானவர்களாக ஆவதற்கும் அந்தத் தூய இஹ்லாஸுடைய இரகசியத்தைக் கொண்டு உண்மையான ஒற்றுமை, ஒத்துழைப்பு என்பவற்றை நிலைநாட்டுவதற்கும் அதிக தேவையும் கடப்பாடும் உடையவர்களாக நாம் இருக்கின்றோம். ஆம், மூன்று ஒன்றுகள் கூட்டுச் சேராமல் இருந்தால் அவற்றின் மொத்தப் பெறுமதி மூன்றாகும். ஆனால் எண்ணியல் சூட்சுமத்துக்கமைவாக அவை அருகருகே கூட்டுச் சேர்ந்தால் நூற்றிப் பதினொன்று என்ற பெறுமதியைப் பெற்றுக் கொள்ளும். அவ்வாறே நான்கு நான்குகள் வெவ்வேறாக இருக்கும் வரை அவற்றின் பெறுமதி பதினாறாகும். அவை சகோதரத்துவத்தோடு ஏக நோக்கத்துக்காக ஒரே நேர் கோட்டில் தோளோடு தோள் கோர்த்து நின்றால் அப்போது நான்காயிரத்து நானூற்றி நாற்பத்து நான்கு என்ற பலத்தையும் பெறுமதியையும் பெற்றுக்கொள்ளும். உண்மையில் தூய இஹ்லாஸின் மூலம், வெறும் பதினாறு சகோதரர்களின் பெறுமதியும் ஆத்மார்த்தமான பலமும் நான்காயிரத்தையும் மிகைத்ததாக இருந்தமைக்கு பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் அத்தாட்சியாக இருக்கின்றன. இப்போது இந்தத் தாத்பரியத்தில் பொதிந்துள்ள சூட்சுமத்தை நோக்குவோம். அதாவது உண்மையும் தூய்மையும் விசுவாசமும்மிக்க ஒரு கூட்டணியிலுள்ள ஒவ்வொருவராலும் ஏனைய சகோதரர்களுடைய கண்களால் பார்க்கவும் செவிகளால் கேட்கவும் அறிவால் சிந்திக்கவும் முடியும். அதாவது பத்துப் பேரைக் கொண்ட உண்மையான ஒரு கூட்டணியில் உள்ள ஒவ்வொருவரும் இருபது கண்களால் பார்த்து, இருபது காதுகளால் செவிமடுத்து, பத்து அறிவுகளால் சிந்தித்து, இருபது கரங்களால் உழைப்பதைப் போன்ற ஆத்மார்த்தமான பலத்தைக் கொண்டிருப்பார்கள்.
சகோதரர்களே! உங்களுடைய மொத்தப் பலமும் இஹ்லாஸிலும் சத்தியத்திலுமாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆம் பலம் என்பது சத்தியத்திலும் இஹ்லாஸிலுமே உள்ளது. அசத்தியத்தில் இருப்பவர்களும் கூட அசத்தியத்தில் காட்டுகின்ற இஹ்லாஸ், விசுவாசம் என்பவற்றின் காரணமாகவே பலத்தைத் திரட்டிக்கொள்கின்றனர். ஆம் சத்தியத்திலும் இஹ்லாஸிலுமே பலம் இருக்கின்றது என்பதற்கான ஓர் அத்தாட்சி எம்முடைய இந்தப் பணியாகும். உண்மையில் இருபது வருடங்களுக்கும் அதிகமாக சொந்த ஊரிலும் இஸ்தான்பூல் நகரிலும் நான் மேற்கொண்ட அறிவுப் பணிகளோடும் மார்க்கப் பணிகளோடும் ஒப்பிடும்போது, இங்கு வெறும் ஏழெட்டு வருடங்களில் ஆற்ற முடிந்த பணிகளும் சேவைகளும் அவற்றை விட நூறு மடங்கு அதிகமாகும். உண்மையில் சொந்த ஊரிலும் இஸ்தான்பூல் நகரிலும் இங்கு எனக்கு ஒத்துழைப்பாக இருப்பவர்களை விட நூறு அல்லது ஆயிரம் மடங்கு அதிகமானவர்கள் உதவி ஒத்தாசைக்காக இருந்தனர். ஆனால் இங்கு புலம்பெயர்ந்த நிலையில் மிகவும் மூர்க்கத்தனமான அதிகாரிகளின் தொடர்ச்சியான கண்காணிப்புக்குக் கீழ் தனிமையாகவும் அனாதரவாகவும் அரை உம்மியாகவும் வெறும் ஏழு எட்டு வருடங்களில் உங்கள் ஒத்துழைப்புடன் செய்த பணியின் மூலம் அந்த ஆரம்ப காலப் பணிகளைவிட நூறு மடங்கு அதிகமான அடைவுகளையும் காரியச்சித்தியையும் காண முடிகின்றது. இந்த அடைவுகளுக்குப் பின்னாலுள்ள ஆத்மார்த்தமான பலம் உங்களிடமுள்ள இஹ்லாஸேயாகும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறேன். மேலும், உங்களுடைய கலப்படமற்ற இஹ்லாஸ் மூலம் மதிப்பு, மரியாதை, பெயர், புகழ் போன்றவை தேடி வரும் போது நஃப்ஸ் உற்சாகமடைவதால் ஏற்படுகின்ற முகஸ்துதி என்ற நோயிலிருந்தும் என்னை ஓரளவு பாதுகாத்தீர்கள் என்பதை சொல்லியே ஆக வேண்டும். இன்ஷா அல்லாஹ் நீங்கள் முழுமையான இஹ்லாஸுக்குப் பாத்திரமானவர்களாக ஆவதன் மூலம் நானும் முழுமையான இஹ்லாஸை உடையவனாக மாறக் காரணமாக அமைவீர்கள். ஆம் அலி (ரழி) அவர்களும் கௌஸுல் அஃஸம் (க.ஸி) அவர்களும் எதிர்காலம் தொடர்பான தமது அந்த அழகிய கராமத்துகள் மூலம் உங்கள் மீதான தமது ஈடுபாட்டை வெளிப்படுத்துவதும் உங்களை வாழ்த்துவதும் உங்கள் பாதுகாப்பில் அக்கறை செலுத்தி உங்களுக்கு ஆறுதல் கூறுவதும் உங்களிடமிருக்கும் இந்த இஹ்லாஸின் காரணமாகவாகும். ஆம், இவ்வாறான ஈடுபாடுகளும் ஆதரவுகளும் இஹ்லாஸ் காரணமாகவே கிடைக்கின்றன என்பதில் எத்தகைய சந்தேகமும் கொள்ள வேண்டாம். எனவே நீங்கள் அறிந்து கொண்டே இந்த இஹ்லாஸைத் துறப்பீர்களாயின் அதன் மோசமான விளைவுகளையும் கண்டுகொள்வீர்கள். பத்தாவது மின்னலில் குறிப்பிடப்பட்டுள்ள கண்டிப்புகளை நினைவில் கொள்ளுங்கள். எனவே இத்தகைய ஆத்மீகக் கதாநாயகர்கள் பின்னால் உதவியாளர்களாகவும் முன்னால் உஸ்தாத்மார்களாகவும் இருப்பதை விரும்புகிறீர்கள் என்றால் ﻭَ ﻳُﺆْﺛِﺮُﻭﻥَ ﻋَﻠٰﻰ ﺍَﻧْﻔُﺴِﻬِﻢْ என்ற மறைவாக்கின் போதனைக்கமைய பூர்த்தியான இஹ்லாஸை அடைந்து கொள்ளுங்கள். பட்டம், பதவி, பாராட்டு, கண்ணியம், பௌதீக ரீதியான நலன்கள் என்று நஃப்ஸின் விருப்பத்துக்குரிய விடயங்களில் உங்களுடைய நஃப்ஸுக்குப் பதிலாக உங்கள் சகோதரர்களைத் தெரிவு செய்யுங்கள். ஏன், மிகவும் அழகான, ஆழமான ஓர் ஈமானிய சத்தியத்தை தேவையுள்ள ஒரு முஃமினுக்கு எடுத்துக் கூறிகின்ற விடயத்தைப் பொருத்தவரை இது எந்தவிதமான தீங்குகளுமற்ற மிகவும் மஃசூமியத்தான ஒரு நலவாகும். சாத்தியப்பட்டால் இந்த விடயத்திலும் கூட -உங்கள் நஃப்ஸில் சுய முனைப்புகள் ஏதும் வந்து விடாதிருப்பதற்காக- உங்களுக்கு விருப்பமில்லாத ஒரு நண்பரைக் கொண்டு அந்தப் பணியைச் செய்வது உங்களுக்கு விருப்பத்துக்குரியதாக அமையட்டும். “நான் நன்மைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும், இந்த அழகான, ஆழமான விடயத்தை நானே எடுத்துக் கூற வேண்டும்” என்ற எண்ணமிருந்தால், உண்மையில் அது பாவமாகவோ தீங்காகவோ ஆகாது. ஆனால் உங்களுக்கு மத்தியிலுள்ள இஹ்லாஸில் பாதிப்புகளை ஏற்படுத்த முடியும்.
உங்கள் சகோதரர்களுடைய உயர் விழுமியங்களையும் சிறப்புகளையும் உங்களுடைய சிறப்புகளாகக் கருதி, அவர்களுடைய அடைவுகள் மற்றும் கண்ணியத்தையிட்டு நன்றியுணர்வோடு பெருமிதம் கொள்வதாகும். தஸவ்வூஃப் பரிபாஷையில் “ஃபனா ஃபிஷ் ஷைக்”, “ஃபனா ஃபிர் ரஸூல்” (ஷைகில் தன்னை இழத்தல் அல்லது மறத்தல் அல்லது காண்தல், ரஸூலில் தன்னை இழத்தல் அல்லது மறத்தல் அல்லது காண்தல்) போன்ற பிரயோகங்கள் காணப்படுகின்றன. நான் ஒரு ஸூஃபி அல்லன். ஆனால் அவர்களுடைய இந்த விதிகளை எம்முடைய மஸ்லக், மஷ்ரப் என்பவற்றுக்கு உகந்த அமைப்பில் “ஃபனா ஃபில் இஹ்வான்” என்பதாக எடுத்துக் கொண்டால் மிகச் சிறப்பானதாக அமையும். சகோதரர்களுக்கு மத்தியில் இருக்கும் இந்தப் பண்பு “தஃபானி” என்று அழைக்கப்படுகின்றது. தஃபானி என்பது சகோதரர்கள் பரஸ்பரம் தம்மை அடுத்தவரில் இழப்தைக் குறிக்கும். அதாவது, தனது நஃப்ஸானிய உணர்வுகளை மறந்து, சிந்தனையளவில் தனது சகோதரர்களின் சிறப்புகள் மற்றும் உணர்வுகளோடு வாழ்வதாகும். உண்மையில் எம்முடைய மஸ்லக்கின் அடிப்படை சகோதரத்துவமாகும். இது தந்தைக்கும் மகனுக்கும் அல்லது ஷைகுக்கும் முரீதுக்கும் இடையிலான தொடர்பைப் போன்றதல்ல. மாறாக உண்மையான சகோதரர்களுக்கு மத்தியிலுள்ள தொடர்பைப் போன்றதாகும். இங்கு அதிகபட்சம் உஸ்தாத் - மாணவர் என்ற தொடர்பு இடையில் நுழைய முடியும். ஆம், எம்முடைய மஸ்லக் “ஹலீலியா” அதாவது “உயிருக்குயிரான நற்பு” என்பதால் எம்முடைய மஷ்ரபும் கூட “ஹில்லத்” ஆகும். அதாவது “உயிருக்குயிரான தோழமை” ஆகும். ஹில்லத் என்பது மிக நெருக்கமான தோழனாகவும் மிக அர்ப்பணமான நண்பனாகவும் மிக உறுதுணையான உறவாகவும் மிக நலன் விரும்பியான சகோதரனாகவும் இருப்பதை வேண்டி நிற்கின்றது. இப்படிப்பட்ட ஹில்லத்துடைய அடிப்படையின் அடிப்படையாக இருப்பது தூய விசுவாசமான இஹ்லாஸாகும். தூய இஹ்லாஸைத் துறக்கின்ற மனிதன், ஹில்லத் என்ற மிக உயர்ந்த, உன்னதமான கோபுரத்தின் உச்சியிலிருந்து வீழ்ந்துவிடுவான். இடையில் பிடித்துக்கொள்ளத்தக்க பிடிமானங்கள் எதுவும் இல்லாத காரணத்தினால் அந்த வீழ்ச்சி மிக ஆழமான அதலபாதாளத்தில் கொண்டு போய்ச் சேர்ப்பதற்கான சாத்தியப்பாடே அதிகமாகும். ஆம், இரண்டு பாதைகளே தென்படுகின்றன. விசாலமான குர்ஆனியப் பாதையாகிய எமது இந்த வழிமுறையைவிட்டும் இன்று விலகிக்கொள்பவர்கள் தம்மை அறியாமலேயே எமக்கு எதிராக நிற்கின்ற மார்க்க விரோதிகளுக்கு உதவியாக ஆகிவிடுகின்ற அபாயம் இருக்கின்றது. இன்ஷா அல்லாஹ் ரிஸாலே நூரின் பாதை வழியே சங்கைமிக்க குர்ஆனுடைய புனிதமான எல்லைக்குள் நுழைந்தவர்கள் சதாவும் சத்திய ஒளிக்கும் இஹ்லாஸுக்கும் ஈமானுக்கும் பலம் சேர்ப்பவர்களாக இருப்பார்கள். மாறாக அத்தகைய அதலபாதாளங்களில் வீழ்ந்து, அழிந்து போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. குர்ஆனியப் பணியில் என்னுடன் இணைந்திருக்கும் தோழர்களே! இஹ்லாஸை ஈட்டிக்கொள்வதற்கும் அதைப் பாதுகாத்துக்கொள்வதற்குமான மிகவும் வினைத்திறனான ஒரு சாதனம் மௌத்துடைய சிந்தனையாகும். ஆம் தீராத, நீண்ட ஆசைகளும் மோகங்களும் இஹ்லாஸை அழித்து முகஸ்துதியையும் உலகத்தையும் அழகாகக் காட்டுவதைப் போன்றே மௌத்துடைய சிந்தனையும் கூட முகஸ்துதியை வெறுப்பதற்கும் இஹ்லாஸை விரும்புவதற்குமான ஒரு காரணியாகும். அதாவது மௌத்துடைய சிந்தனை உலகத்தின் தற்காலிகமான தன்மையை நினைவூட்டி நஃப்ஸுடைய ஊசலாட்டங்களை விட்டும் மனிதனைப் பாதுகாக்கின்றது. ஆம், தரீக்காக்களைச் சேர்ந்தவர்களும் சத்தியவான்களும் சங்கைமிக்க குர்ஆனின் ﻛُﻞُّ ﻧَﻔْﺲٍ ﺫَٓﺍﺋِﻘَﺔُ ﺍﻟْﻤَﻮْﺕِ ٭ ﺍِﻧَّﻚَ ﻣَﻴِّﺖٌ ﻭَﺍِﻧَّﻬُﻢْ ﻣَﻴِّﺘُﻮﻥَ போன்ற வசனங்களிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்துக்கமைவாக மௌத்துடைய சிந்தனையைத் தமது ஆத்மீக ஈடேற்றத்துக்கான அடிப்படையாகக் கொண்டுள்ளார்கள். தீராத, நீண்ட ஆசைகள், மோகங்களின் ஊற்றாக இருக்கும் மாயையான நித்திய மயக்கத்தை அந்த சிந்தனையின் மூலம் தெளிய வைத்துள்ளார்கள். அவர்களுடைய வழிமுறையைப் பொருத்தவரை தாம் மரணித்துவிட்டதைப் போன்றும் அதனைத் தொடர்ந்து குளிப்பாட்டப்படுவதைப் போன்றும் அதனைத் தொடர்ந்து மண்ணறையில் அடக்கம் செய்யப்படுவதைப் போன்றும் சிந்தனை செய்வார்கள். தொடர்ந்தும் இவ்வாறான சிந்தனையிலும் கற்பனையான சஞ்சாரங்களிலும் இருப்பதன் மூலம் நஃப்ஸுல் அம்மாராவை அடக்கி அதன் தீராத ஆசைகள், மோகங்களிலிருந்து ஓரளவு விடுதலை பெற்றுக்கொள்ள முடிகின்றது. இந்த சிந்தனையின் பயன்கள் ஏராளமானவையாகும். ஹதீஸில் ﺍَﻛْﺜِﺮُﻭﺍ ﺫِﻛْﺮَ ﻫَﺎﺩِﻡِ ﺍﻟﻠَّﺬَّﺍﺕِ என்று அல்லது இது போன்று வந்துள்ளது. அதாவது “இன்பங்களை அழித்துக் கைசேதத்தை விட்டுச் செல்கின்ற மரணத்தை அதிகம் நினைவு கூறுங்கள்” என்று மௌத்துடைய சிந்தனையை இந்த ஹதீஸ் கற்றுத் தருகின்றது. ஆனால் எம்முடைய வழிமுறையோ தரீக்கத் அன்றி நேரடியாகவே ஹகீகத்தாக இருப்பதால் இந்த விடயங்களை அவர்களைப் போன்று அனுபவபூர்வமாக அல்லது கற்பனையான சஞ்சாரங்களின் மூலம் செய்ய வேண்டிய கடப்பாடு எமக்கில்லை. இது எமது ஹகீகத்துடைய வழிமுறைக்கும் பொருத்தமானதுமல்ல. எமது வழிமுறை இறுதி முடிவைக் கற்பனை செய்வதன் மூலம் எதிர்காலத்தை நிகழ்காலத்துக்குக் கொண்டு வருகின்ற தேவையின்றியே சத்தியத்தின் கண்ணோட்டத்தில், சிந்தனை மூலம் நிகழ்காலத்திலிருந்து எதிர்காலத்துக்குச் சென்று அங்குள்ள நிலைமைகளைத் தரிசிப்பதாகும். அப்போது கற்பனைகளுக்கான எந்தத் தேவையுமின்றி தன்னுடைய ஆயுள் என்ற குட்டையான மரத்தின் உச்சியிலிருக்கும் ஏக கனியாகிய தனது ஜனாஸாவைப் பார்க்க முடியும். அவ்வாறு தன்னுடைய ஜனாஸாவைப் பார்த்துவிட்டு இன்னும் சற்று அப்பால் சென்றால் தான் வாழும் யுகத்தின் ஜனாஸாவையும் இன்னும் சற்று அப்பால் சென்றால் இந்த உலகத்தின் ஜனாஸாவையும் கண்டுகொள்வான். இது பூர்த்தியான இஹ்லாஸுக்கான வாயிலைத் திறக்கும். இரண்டாவது சாதனம் தஹ்கீக்கான ஈமானுடைய பலமும் மாஃரிபதுல்லாஹ்வைக் கனியாகத் தருகின்ற படைப்பினங்கள் பற்றிய சிந்தனையும் அதன் மூலம் கிடைக்கின்ற இறை நெருக்கமும் அதன் மூலம் பேரன்பும் அருளும்மிக்க அந்தப் படைப்பாளன் அனைத்துக்கும் அருகில் அனைத்தையும் பார்ப்பவனாக இருக்கின்றான் என்பதைக் காண்பதும் பின்னர் அவனுடைய பார்வைக்கு அப்பால் வேறு பார்வைகளைப் பொருட்படுத்தாதிருப்பதும் அவனிடம் ஆஜராகியிருக்கும் போது பிறரைப் பார்ப்பது, பிறருடைய தயவையும் பாராட்டையும் நாடுதல் போன்ற நடத்தைகள் அவனது சந்நிதானத்துடைய ஒழுக்கத்துக்கு முரணானது என்பதை உணர்வதும் முகஸ்துதியிலிருந்து மீண்டு, இஹ்லாஸை அடைந்துகொள்வதற்கான வழியாகும். எப்படியோ.. இந்தப் பாதையில் ஏராளமான அந்தஸ்துகளும் பதவிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொருவரும் அவரவர் பங்குக்கேற்ப முடியுமானவரை பயனடைந்துகொள்ள வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு முடியுமோ அனைத்தும் இலாபமாகவே அமையப் போகின்றது. ரிஸாலே நூரில் இவ்வாறு முகஸ்துதியிலிருந்து மீண்டு இஹ்லாஸை ஈட்டித் தரக்கூடிய ஏராளமான சத்தியங்கள் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளதால் இதை இத்தோடு சுருக்கிக்கொள்கிறோம். அடுத்ததாக இஹ்லாஸை முறித்து முகஸ்துதிக்கு ஊக்குவிக்கின்ற ஏராளமான காரணிகளுள் மூன்றை சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறோம்: முதலாவது: லௌகீக விடயங்களில் ஏற்படுகின்ற போட்டிகள் மெது மெதுவாக இஹ்லாஸை முறிக்கும். கூடவே உழைப்பின் விளைவுகளையும் மாசுபடுத்தும். இறுதியில் எந்த லௌகீக நலவை எதிர்பார்த்தீர்களோ அதையும் கைநழுவிச் செய்துவிடும். ஆம் சத்தியத்துக்காகவும் மறுமைக்காகவும் சிரத்தை எடுத்துக்கொள்பவர்கள் விடயத்தில் இந்த சமூகம் மகத்தான ஒரு மதிப்பும் மரியாதையும் வைத்து வந்துள்ளது. எனவே அவர்களுக்கு உதவி ஒத்தாசையாக இருப்பதைக் கடமையாகக் கருதுகின்றனர். அந்த வகையில் அவர்களுடைய கவனம் வேறு விடயங்களில் சிதறி இஹ்லாஸில் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களுடைய பொன்னான நேரங்கள் வீணாகிவிடக்கூடாது என்பதற்காகவும் அவர்களுடைய தூய பணியில் தாமும் பங்குதாரர்களாக ஆக வேண்டும் என்ற எண்ணத்திலும் அவர்களுடைய லௌகீகத் தேவைகளையும் நலன்களையும் ஸதகாக்கள், அன்பளிப்புகள் மூலம் பூர்த்தி செய்துள்ளார்கள். இவ்வாறு அவர்களை கண்ணியப்படுத்தியுள்ளார்கள். ஆனால், இவ்வாறான உதவிகளும் நலன்களும் கிடைத்தாலன்றி எதிர்பார்க்கப்பட முடியாது. உள்ளத்தால் அதற்கு ஆதரவு வைப்பது, செய்கைகளால் அல்லது சாடையாக உணர்த்துவது போன்ற வழிகளிலும் அவற்றை எதிர்பார்க்க முடியாது. மாறாக அவை எதிர்பாராத வகையில் கிடைக்கின்ற விடயங்களாகும். இல்லாவிட்டால் இஹ்லாஸ் மாசடையும். ﻭَﻟﺎَ ﺗَﺸْﺘَﺮُﻭﺍ ﺑِﺎٰﻳَﺎﺗِﻰ ﺛَﻤَﻨًﺎ ﻗَﻠِﻴﻠﺎً என்ற வசனத்தின் தடுக்கும்வ் அம்சத்தை நோக்கி நெருங்குவதால் அமல்களை அழிக்க ஆரம்பிக்கும். ஆம், இவ்வாறான லௌகீக நலன்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் போது நஃப்ஸுல் அம்மாராவுடைய சுயநலம் அந்த நலனை பிறருக்குத் தாரைவார்க்காமல் இருப்பதற்கான முஸ்தீபில் இறங்கும். உண்மையான ஒரு சகோதரனுக்கு அல்லது இந்தப் பணியில் தூய்மையாக உழைக்கின்ற ஒரு தோழனுக்கு எதிராக போட்டி மனப்பான்மையை வளர்த்துவிடும். அப்போது இஹ்லாஸ் மாசடைந்து அவனது பணியில் உள்ள புனிதம் மறையும். இந்த நிலையில் அவனில் ஏற்படுகின்ற பசப்பான மாற்றங்களை சத்தியவான்கள் கண்டுகொள்வார்கள். இறுதியில் அவன் எதிர்பார்த்த லௌகீக நலன்களும் அவனைவிட்டுச் செல்லும். எப்படியோ.. இந்த சமாச்சாரம் பேசப் பேச நீண்டு செல்லக்கூடியது. எனவே இத்தோடு முடித்துக்கொண்டு உண்மையான சகோதரர்களுக்கு மத்தியில் இஹ்லாஸையும் விசுவாசமான கூட்டுறவையும் வலுப்படுத்தத்தக்க இரண்டு உதாரணங்களைக் கூறுகிறேன். முதலாவது உதாரணம்: உலகாயுதவாதிகள் மகத்தான செல்வங்களையும் வலுவான பலத்தையும் தம்வசப்படுத்திக்கொள்வதற்காக சொத்துப் பங்குடமை முறையைத் தமது கோட்பாடாக வைத்துள்ளனர். சில அரசியல் சக்திகளும் பல்வேறு சிவில் நிறுவனங்கள் மற்றும் அழுத்தக் குழுக்களும் அதே நோக்கத்துக்காக இந்தக் கோட்பாட்டை வழிமுறையாகக் கொள்கின்றனர். இந்த வழிமுறை பல்வேறுபட்ட துஷ்பிரயோகங்கள் நஷ்டங்களுடன் கூடவே மகத்தான நலவுகளையும் பலத்தையும் அவர்களுக்கு ஈட்டிக் கொடுக்கின்றது. ஏனெனில் சொத்துப் பங்குடமை முறையில் பொதுப் பங்குடமை காரணமாக சொத்துகளின் தன்மை மாறுவதில்லை. அதில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு வகையில் மொத்தத்துக்கும் எஜமானராக இருப்பர். ஆனால் விரும்பியவாறு பயன்படுத்த முடியாது. எதுவாயினும்.. இந்த சொத்துப் பங்குடமைக் கோட்பாட்டை மறுமைக்கான எமது அமல்களில் பிரயோகித்தால் அது நஷ்டமே இல்லாத மகத்தான நலவுகளையும் பயன்களையும் பெற்றுத்தரும். ஏனெனில் மொத்த சொத்துகளும் அதில் பங்குதாரர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய கணக்கிலும் மொத்தமாகச் சேர்கின்ற ஒரு சூட்சுமம் இந்தக் கோட்பாட்டுக்குள் உள்ளது. இதைப் பின்வரும் உதாரணத்தின் மூலம் விளங்கிக்கொள்ளலாம். அதாவது ஒருவர் மண்ணெண்ணெய்யையும் ஒருவர் திரியையும் ஒருவர் சிமிழையும் ஒருவர் கண்ணாடிக் குமிழையும் ஒருவர் தீக்குச்சையுமாக ஐந்து பேர் ஐந்து வகையான பொருட்களை எடுத்து வந்து விளக்கை எரிக்கிறார்கள். இப்போது ஒவ்வொருவரும் முழுமையான ஒவ்வொரு விளக்குக்கு சொந்தக்காரனாக மாறுகின்றனர். அந்த ஒவ்வொருவருக்கும் அந்த அறையின் ஒவ்வொரு சுவரிலும் ஒவ்வொரு பெரிய கண்ணாடி இருக்குமாக இருந்தால் ஒவ்வொருவரும் எத்தகைய குறைவுகளோ தட்டுப்பாடுகளோ இன்றி அந்த அறை உள்ளடங்களாக முழுமையான ஒவ்வொரு விளக்கைத் தத்தமது கண்ணாடி மூலம் பெற்றுக்கொள்வார்கள். அவ்வாறே மறுமைக்கான பணிகளில் தூய இஹ்லாஸ் மூலம் வருகின்ற பங்குடமையும் தூய சகோதரத்துவத்தின் மூலம் வருகின்ற ஒத்துழைப்பும் தூய கூட்டுறவின் மூலம் வருகின்ற வேலைப் பகிர்வும் அந்தப் பணிகளின் ஒட்டுமொத்த விளைவுகளையும் பயன்களையும் ஒளியையும் அதில் பங்குதாரர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய கணக்கிலும் முழு மொத்தமாகச் சேர்த்துவிடும். சத்தியவான்களுக்கு மத்தியில் இதை உண்மைப்படுத்தக்கூடிய ஏராளமான நிகழ்வுகளைக் காணலாம். மாத்திரமன்றி விசாலமான இறை அன்பும் ஈகையும் இதையே வேண்டி நிற்கின்றன. என்னுடைய சகோதரர்களே! இன்ஷா அல்லாஹ் லௌகீக நலன்கள் உங்களுக்கு மத்தியில் போட்டி பொறாமைகளை ஏற்படுத்தாது என்பதில் நம்பிக்கை இருக்கின்றது. ஆனால் மறுமை நலன்கள் விடயத்தில் தரீக்கத்துகளைச் சேர்ந்த சிலர் தவறியது போன்று நீங்களும் தவறுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே தனியாளாக சம்பாதித்துக்கொள்ள முடியுமான நன்மைகள் எங்கே? மேலே கூறப்பட்டவாறு அமல்களில் பங்குடமைக்குச் செல்வதன் மூலம் கிடைக்கின்ற விசாலமான நன்மைககும் ஒளியும் எங்கே? இதை ஒப்பிட்டால் மறுமை நலன்கள் விடயத்திலும் போட்டியில் இறங்குவதைவிட்டும் தவிர்ந்துகொள்வீர்கள். இரண்டாவது உதாரணம்: தொழில்வாண்மையாளர்கள் வேலைப் பகிர்வின் மூலம் தொழிலில் வினைத்திறனை அதிகரித்து மகத்தான வருமானங்களை ஈட்டிக்கொள்கின்றனர். சாதாரண தையல் ஊசி உற்பத்தி செய்கின்ற பத்துப் பேர் ஆரம்பத்தில் வெவ்வேறாக உற்பத்தி செய்த போது ஒரு நாளில் தலைக்கு மூன்று ஊசிகளே அவர்களால் உற்பத்தி செய்ய முடியுமாக இருந்தது. பின்னர் வேலைப் பகிர்வை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் இரும்பைக் கொண்டு வர, இன்னொருவர் அடுப்பை மூட்ட, ஒருவர் அடுப்பில் போட்டு பதப்படுத்த, இன்னொருவர் ஓட்டை போடுகின்ற வேலையை செய்ய, இன்னொருவர் வடிவமைக்கின்ற வேலையை செய்ய என்று அனைவரும் கூட்டுச் சேர்ந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு சிறிய வேலையைப் பொறுப்பெடுத்துச் செய்த போது ஒவ்வொருவரும் ஊசிக் கைத்தொழிலிலில் தமக்குரிய சிறிய பகுதியில் விரைவாக நிபுணத்துவம் பெறுவதால் வேலைகள் மிக வேகமாக நிறைவேறுவதைக் கண்டனர். இறுதியில் மொத்த உற்பத்தியைத் தமக்கு மத்தியில் பிரித்த போது ஒவ்வொருவரும் ஒரு நாளில் மூன்று ஊசிகளுக்குப் பதிலாக முன்னூறு ஊசிகள் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு தொழில்துறையினரை வேலைப் பகிர்வுக்கு உந்திய முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்ததோடு நீண்ட காலம் அவர்களுடைய நாவுகளில் காவியமாக உலாவியது. ஆம், சகோதரர்களே! உண்மையில் லௌகீகப் பணிகளில் கூட கூட்டுறவும் ஒருங்கிணைப்பும் இப்படிப்பட்ட மகத்தான பயன்களையும் விளைவுகளையும் தரக்கூடியவையாக இருக்கும் போது ஒளிமயமான மறுமைப் பணிகளில் எவ்விதப் பிரிவுகளுக்கோ சிதறல்களுக்கோ அவசியமின்றி ஒவ்வொருவரும் ஒட்டுமொத்த ஒளியையும் தத்தமது கண்ணாடிகளின் மூலம் பெற்றுக்கொள்வதும் இறை ஈகை மூலம் எல்லோரும் பெற்றுக்கொண்ட மொத்த நன்மைகளின் அளவான நன்மைகளை ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்வதும் எப்படிப்பட்ட மகத்தான ஓர் இலாபமாகும் என்பதை விளக்க வேண்டியதில்லை. இந்த உன்னதமான இலாபத்தை போட்டி பொறாமைகள் மூலமும் இஹ்லாஸை முறிப்பதன் மூலமும் இழந்துவிடக்கூடாது. இஹ்லாஸை முறிக்கின்ற இரண்டாவது காரணி: ஆம், பதவி ஆசையும் பெயர் புகழ் தேடும் மோகமும் மக்கள் பார்வையைத் தன்பால் திருப்பி அனானியத்தைப் போஷிக்கின்ற தன்மையும் நஃப்ஸுல் அம்மாராவை உயர் பதவிகளில் காண்கின்ற ஆசையும் மிக மோசமான ஓர் ஆத்மீக வியாதியாகும். அவ்வாறே இவை சிறிய ஷிர்க்காக சிலாகிக்கப்படும் முகஸ்துதிக்கான வாயிலைத் திறந்து இஹ்லாஸை முறிக்கின்ற சாதனங்களுமாகும். சகோதரர்களே: சங்கைமிக்க குர்ஆனியப் பணியில் எம்முடைய பாதை சத்தியத்தையும் சகோதரத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டதாகும். தூய சகோதரத்துவத்தின் இரகசியம் ஒவ்வொருவரும் சகோதரர்களுக்கு மத்தியில் தத்தமது அனானியத்தை இழந்து தனது நஃப்ஸுக்குப் பகரமாக சகோதர்களுடைய நஃப்ஸை முற்படுத்துவதாகும். எனவே எமக்கு மத்தியில் புகழ், பதவி மோகங்கள் காரணமாக ஏற்படுகின்ற மேற்போன்ற போட்டி பொறாமைகள் முளைவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியமாகும். இது எம்முடைய பணிக்கு முற்றிலும் முரணானதாகும். உண்மையில் இங்கு உளத்ததூய்மை, சகோதரத்துவம் என்பன காரணமாக எல்லோருக்கும் மொத்தம்மாகக் கிடைக்கின்ற கண்ணியமும் அந்தஸ்துகளும் ஒவ்வொருவருக்கும் முழுமொத்தமாகவே கிடைக்க முடியும் என்பதால் அந்த மகத்தான ஆத்மீக கண்ணியத்தை சுயநலம், போட்டி, தனிப்பட்ட புகழ் என்பவற்றுக்காக இழக்காதிருப்பது அவசியமாகும். ரிஸாலே நூர் மாணவர்கள் இந்தப் போக்கைவிட்டும் ஒப்பீட்டளவில் நூறு மடங்கு தொலைவானவர்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது. ஆம், ரிஸாலே நூர் மாணவர்களுடைய உள்ளமும் அறிவும் ஆத்மாவும் இப்படிப்பட்ட இழிவும் நஷ்டமும் கொண்ட பாதாளத்துக்கு இறங்காது. ஆனால் நஃப்ஸுல் அம்மாரா என்பது எல்லோரிடமும் காணப்படுகின்றது. சில விடயங்கள் நேரடியாக அந்த நஃப்ஸைத் தூண்டிவிடுகின்றன. அப்போது நஃப்ஸ் உள்ளத்துக்கும் அறிவுக்கும் ஆத்மாவுக்கும் மாற்றமாகச் சென்று முடிவெடுக்கின்ற நிலை தோன்றுகின்றது. நான் உங்களுடைய உள்ளத்தையும் அறிவையும் ஆத்மாவையும் கேள்வுக்குற்படுத்தமாட்டேன். ரிஸாலே நூர் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் அவற்றில் நம்பிக்கை வைக்கிறேன். ஆனால், நஃப்ஸும் இச்சைகளும் அவாவும் மாயைகளும் சிலவேளை ஏமாற்றிவிடுகின்றன. எனவேதான் அவ்வப்போது கடுமையான இறை கண்டனங்களுக்கு ஆளாகிறீர்கள். இந்தக் கடுமை உண்மையில் நஃப்ஸையும் இச்சைகளையும் அவாவையுமே இலக்கு வைக்கின்றன. எனவே எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள். ஆம், எம்முடைய பாதை ஷைக், முரீத் என்ற அடிப்படையைக் கொண்டதாக இருந்திருப்பின் பதவி நிலைகள் ஒன்றாக அல்லது ஒரு சிலதாக மாத்திரமே இருந்திருக்கும். அப்போது அந்தக் குறிப்பிட்ட சில பதவிகளுக்காகப் பலர் வேட்பாளார்களாக இருந்திருப்பார்கள். அப்படியான இடங்களில் ஒரு வகையான போட்டி பொறாமைகளும் சுயமுனைப்பும் இருக்க முடியும். ஆனால் எம்முடைய பாதை சகோதரத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். சகோதரன் சகோதரனுக்கு முன்னால் தந்தையைப் போன்ற அல்லது ஷைகைப் போன்ற ஒரு ஸ்தானத்தை எடுக்கவோ கோறவோ முடியாது. சகோதரத்துவத்துடைய பதவிகள் விசாலமானவையாகும். அது போட்டி, பொறாமைகளை ஏற்படுத்தும் காரணியாக அமையாது. மிஞ்சிப் போனால் சகோதரன் சகோதரனுக்கு உதவியாகவும் ஒத்துழைப்பாகவும் குறைகளைப் பூர்த்தி செய்யும் துணையாகவுமே இருப்பான். தந்தைத்துவம் அல்லது குருத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட பாதைகளில் நன்மைகளுக்காகவும் அர்ப்பணங்களுக்காகவும் ஏற்படுகின்ற ஒரு வகைப் போட்டி மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன. மகத்தான நன்மைகள், பலன்களுடன் கூடவே தரீகத்தைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியில் காணப்படுகின்ற போட்டி, பொறாமைகள் ஏற்படுத்திய பயங்கரமான விளைவுகள் இதற்கான சான்றாகும். எனவே அவர்களுடைய அந்த மகத்தான வலிமையும் புனிதமான விளைவுகளும் நூதனங்கள் என்ற சூறாவளிக்கு முன்னால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையிலேயே இருக்கின்றன. மூன்றாவது காரணி: பயமும் பேராசையுமாகும். இந்தக் காரணி வேறு சில காரணிகளுடன் சேர்த்து இருபத்தி ஒன்பதாவது கடிதத்தின் “ஆறு முஸ்தீபுகள்” என்ற பகுதியில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. எனவே அதை இங்கு விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை. அர்ஹமுர் ராஹிமீன் ஆகிய வல்லோன் அல்லாஹ்விடம் அவனுடைய அத்தனை திருநாமங்களையும் ஷஃபாஅத்தாக வைத்துப் பிரார்த்திக்கிறேன்: “எம்மனைவருக்கும் பூர்த்தியான இஹ்லாஸைத் தந்தருள்வாயாக, ரஹ்மானே! ஆமீன்.” اَللّٰهُمَّ بِحَقِّ سُورَةِ ال۟اِخ۟لَاصِ اِج۟عَل۟نَا مِن۟ عِبَادِكَ ال۟مُخ۟لِصٖينَ ال۟مُخ۟لَصٖينَ اٰمٖينَ اٰمٖينَ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ
எழுத்துப் பணிகளில் சோர்வடைந்து வணக்க வழிபாடுகளின் காலமாகிய மூன்று மாதங்களில் வேறு நபிலான திக்ர், அவ்ராதுகளை ஐந்து கோணங்களில் இபாதத்தாக உள்ள ரிஸாலே நூரின் எழுத்துப் பணிகளுக்குப் பகரமாகத் தெரிவு செய்யும் சகோதரர்களுக்கு இரண்டு சங்கையான ஹதீஸ்களில் உள்ள ஒரு குறிப்பைக் கூறுகிறேன். முதலாவது يُوزَنُ مِدَادُ الْعُلَمَاءِ بِدِمَاءِ الشُّهَدَاءِ அவ் கமா கால் அதாவது: “மஹ்ஷரில் ஹகீகத்தான உலமாக்கள் செலவளித்த மை ஷஹீதுகளுடைய இரத்தத்தின் பெறுமதிக்கு ஈடாகும்.” இரண்டாவது مَنْ تَمَسَّكَ بِسُنَّتِى عِنْدَ فَسَادِ اُمَّتِى فَلَهُ اَجْرُ مِاَةِ شَهِيدٍ அவ் கமா கால் அதாவது: “பித்அத்துகளும் வழிகேடும் ஆக்கிரமிக்கின்ற காலத்தில் மேலான சுன்னாக்களையும் குர்ஆனிய சத்தியங்களையும் பேணி நடப்பவர் நூறு ஷஹீதுகளின் நன்மையைப் பெற்றுக்கொள்ள முடியும்.” இதோ சோம்பேறித்தனம் காரணமாக எழுத்துப் பணிகளில் சோர்வடையும் சகோதரர்களே! சூபி மஷ்ரப் சார்ந்த சகோதரர்களே! இந்த இரண்டு ஹதீஸ்களும் இணைந்து கூறுகின்ற செய்தியைப் பாருங்கள். அதாவது இத்தகைய ஒரு காலத்தில் ஈமானிய சத்தியங்களுக்கும் ஷரீஅத்தின் சத்தியங்களுக்கும் மேலான சுன்னாக்களுக்கும் சேவகம் செய்கின்ற முபாரக்கான தூய எழுதுகோள்களிலிருந்து பாயும் கருப்பொளியின் அல்லது ஜீவ நீரை ஒத்த மையின் ஒரு திர்ஹம் ஷுஹதாக்களுடைய நூறு திர்ஹம் இரத்ததுடைய அளவு கியாமத்துடைய தினம் உங்களுக்குப் பயனளிக்கலாம். எனவே அதை அடைந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். “ஹதீஸில் ஆலிம் என்றே கூறப்பட்டுள்ளது. எம்மில் ஒரு பகுதியினர் வெறும் எழுத்தாளர்களாகவே இருக்கிறோம்” என்று கேட்பீர்களேயானால்: பதில்: ஒரு வருடம் இந்த ரஸாயில்களையும் பாடங்களையும் புரிந்தவாறு ஏற்றுக்கொண்டு வாசிப்பவர் இந்தக் காலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஹகீகத்தான ஓர் ஆலிமாக முடியும். புரிந்துகொள்ளாவிட்டாலும் ரிஸாலே நூர் மாணவர்கள் ஒரு கூட்டாத்மாவாக உள்ளார்கள் என்ற வகையில் சந்தேகமின்றி அந்தக் கூட்டாத்மா இன்றைய காலத்தின் ஓர் ஆலுமாகும். உங்களுடைய எழுதுகோல்களைப் பொருத்தவரை அவை அந்தக் கூட்டாத்மாவின் விரல்களைப் போன்றதாகும். என்னுடைய பார்வையில் தகுதியற்றவனாக இருந்தாலும், உங்களுடைய நல்லெண்ணத்தின் பிரகாரம் இந்த ஏழையை உஸ்தாதாகவும் வழிப்படத் தகுந்தவராகவும் கண்டு ஓர் ஆலிமுடைய அந்தஸ்த்தைத் தந்தீர்கள் என்ற வகையில் நீங்களும் என்னுடன் பிணைந்துள்ளீர்கள். நானோ அரை உம்மியாக, எழுதத் தெரியாதவனாக இருப்பதால் உங்கள் எழுதுகோல்கள் என்னுடைய எழுதுகோல்களாகவே கருதப்படும். ஹதீஸில் கூறப்படும் சன்மானங்களைப் பெற்றுக்கொள்வீர்கள். ஸஈத் நூர்ஸி

