Sünnet-i Seniyye Risalesi

The Eleventh Gleam

This section belongs to the major work Lem'alar · View complete Lem'alar (36 sections) →
ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

(சுன்னத்துடைய அந்தஸ்துகளும் பித்அத் வியாதிக்கான நிவாரணியும்) بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ لَقَد۟ جَٓاءَكُم۟ رَسُولٌ مِن۟ اَن۟فُسِكُم۟ عَزٖيزٌ عَلَي۟هِ مَا عَنِتُّم۟ حَرٖيصٌ عَلَي۟كُم۟ بِال۟مُؤ۟مِنٖينَ رَؤُفٌ رَحٖيمٌ (பின்வரும் வசனத்தின் முதலாவது பகுதி “ஸுன்னத்துடைய பாதை” சம்பந்தமானதாகும். இரண்டாவது பகுதி “ஸுன்னத்துடைய அந்தஸ்துக்கள்” சம்பந்தமானதாகும்.) فَاِن۟ تَوَلَّو۟ا فَقُل۟ حَس۟بِىَ اللّٰهُ لَٓا اِلٰهَ اِلَّا هُوَ عَلَي۟هِ تَوَكَّل۟تُ وَهُوَ رَبُّ ال۟عَر۟شِ ال۟عَظٖيمِ ۝ قُل۟ اِن۟ كُن۟تُم۟ تُحِبُّونَ اللّٰهَ فَاتَّبِعُونٖى يُح۟بِب۟كُمُ اللّٰهُ இங்கு இந்த உன்னதமான இரண்டு வசனங்கள் சம்பந்தமான தலா நூறு குறிப்புகளில் பதினொரு குறிப்புக்கள் மாத்திரம் சுருக்கமாகத் தெளிவுபடுத்தப்படும்

§2

மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் مَن۟ تَمَسَّكَ بِسُنَّتٖى عِن۟دَ فَسَادِ اُمَّتٖى فَلَهُ اَج۟رُ مِأَةِ شَهٖيدٍ என்று நவின்றார்கள். அதாவது “எனது உம்மத்தில் பித்னாக்கள் மேலோங்கிய காலத்தில் யார் எனது ஸுன்னாக்களைப் பற்றிப் பிடித்துக்கொள்கின்றார்களோ, அவர்கள் நூறு ஷஹீதுடைய கூலியைப் பெற்றுக்கொள்ள முடியும்” ஆம், மேலான சுன்னாக்களுக்கு வழிப்படுவது நிச்சயமாக மகத்துவமிக்க ஒரு செயலாகும். குறிப்பாக பித்அத்துகள் மேலோங்கிய ஒரு காலத்தில் மேலான சுன்னாக்களின் வழிநடப்பது அதை விட மகத்தானதாகும். அதிலும் குறிப்பாக உம்மத் பித்னாவுடைய காலத்தில் இருக்கின்ற போது மேலான சுன்னாக்களின் சிறியதொரு வழக்கத்தை எடுத்து நடப்பதும் கூட உயர்ந்த தக்வாவையும் பலமான ஈமானையும் உணர்த்துகின்ற அம்சங்களாகும். ஆம், சுன்னாக்களுக்கு வழிப்படுவது, நேரடியாகவே பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நினைவுக்குக் கொண்டு வருகின்றது. அந்த நினைவானது அந்த நிலைமையை இறை உவப்புக்குறிய ஒரு நிலைமையாக, நினைவாக பரிணமிக்கச் செய்கின்றது. உதாரணமாக, உண்ணல், குடித்தல், உறங்கள் போன்ற நிலைமைகளில் உள்ள மிகச் சிறிய ஒரு காரியத்தை மேலான சுன்னாக்களைப் பேணிச் செய்தால், அந்த சாதாரண செயல் அல்லது அந்த இயல்பான நிகழ்வு நன்மையான ஒரு செயலாகவும் ஷரீஅத்துக்குற்பட்ட ஒரு நிகழ்வாகவும் மாறி விடுகின்றது. ஏனெனில் அந்த மனிதன் அந்தச் சாமான்யமான அசைவுகளிலும் கூட கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு எவ்வாறு வழிப்படலாம் என்பதை சிந்திக்கின்றான். தன்னுடைய அந்த சிறிய அசைவும் கூட அண்ணார் கொண்டுவந்த ஷரீஆவின் ஓர் ஆதாபு என்பதையும், அந்த ஷரீஆவின் முன்னோடி அண்ணவர்கள் தான் என்பதையும் நினைவில் கொள்கிறான். இது அந்த ஷரீஆத்துடைய உண்மையான சொந்தக்காரனாகிய சத்திய இரட்சகன் அல்லாஹ்வை நோக்கி அவனது உள்ளத்தைத் திருப்பி விடுகின்றது. இதன் மூலமாக அவன் ஒரு வகை நிம்மதியைப் பெற்றுக் கொள்கிறான். ஒரு வகை இபாதத்தை நிறைவேற்றியவனாக ஆகிவிடுகிறான். ஆம்! இந்தத் தாத்பரியத்தின் அடிப்படையில், மேலான சுன்னாக்களுக்கு வழிப்படுவதைத் தனது வாழ்வில் வழக்கமாக்கிக் கொள்பவன் தன்னுடைய வழக்கங்கள் அனைத்தையும் வணக்கங்களாக மாற்றிக்கொள்வான். அப்போது அவனுடைய மொத்த வாழ்க்கையும் நன்மைகள் நிறைந்ததாகவும் கனிமயமானதாகவும் பரிணமிக்கும்.

§3

இமாம் ரப்பானி அஹ்மத் ஃபாரூகி (ரழி) அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள்: “நான் எனது ஆன்மாவுடைய ஏகாந்திரப் பயனத்தில் ஒவ்வொரு படித்தரங்களாகக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது, அவ்லியாக்கள் சமூகத்துக்குள் மிகப் பிரகாசமானவர்களாகவும், மிக உயர்ந்தவர்களாகவும், மிகுந்த கண்ணியத்திற்குறியவர்களாகவும் மிகப் பாதுகாப்பானவர்களாகவும் மேலான சுன்னாக்களுக்கு வழிப்படுவதை தமது தரீக்குகளுடைய அடிப்படையாகக் கொண்டிருந்த அவ்லியாக்களையே கண்டுகொண்டேன்.” ஆம், முஜத்தித் அல்ஃபுஸானி இமாம் ரப்பானி (ரழி) அவர்கள் சத்தியத்தையே கூறினார்கள். மேலான சுன்னாக்களை அடிப்படையாகக் கொள்பவர்கள் ஹபீபுல்லாஹ் (ஸல்) அவர்களுடைய நிழலில் அல்லாஹ்வுடைய நேசத்துக்குப் பாத்திரமானவர்களாக ஆகுவார்கள்.

§4

இந்த ஏழை ஸஈத், பழைய ஸஈதிலிருந்து விடுதலை பெற முயற்சித்த காலகட்டத்தில் வழிகாட்டலிண்மை காரணமாகவும் நஃப்ஸுல் அம்மாராவுடைய அகம்பாவம் காரணமாகவும் மிகவும் பயங்கரமான ஆத்மார்த்த சூறாவளி ஒன்றுக்குள் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த வேளை, எனது அறிவும் ஆன்மாவும் சத்தியத்தின் சமவெளிகளுக்குள் சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தன. சிலவேளை விண்ணிலிருந்து மண் வரையிலும் சில வேளை மண்ணிலிருந்து வின் வரையிலுமான ஓர் ஏற்ற இறக்கத்துக்கு மத்தியில் அவை தாண்டவமாடிக்கொண்டிருந்தன. அந்தக் கொந்தளிப்பான நிலைமையின் போது மேலான சுன்னாக்களுடைய வழிகாட்டல்கள், ஏன் சிறிய வழக்கங்கள் கூட ஆழ்கடலில் தத்தளிக்கும் கப்பல்களின் இயக்கப் பாதையைக் காட்டும் திசைகாட்டிகளைப் போன்று எண்ணற்ற அபாயகரமான இருள் சூழ்ந்த பாதைகளுக்கு மத்தியில் சரியான பாதையை காட்டித்தரக்கூடிய கருவிகளாக இருப்பதைக் கண்டு கொண்டேன். மேலும் அந்த ஆத்மார்த்தமான பயணத்தின் போது ஏராளமான கஷ்டங்களோடும் கடுமையான சுமைகளோடும் தத்தளித்தவனாக இருந்த வேளை, குறித்த நிலைமைகளோடு தொடர்புடைய நபிவழிகளுக்குக் கட்டுப்பட்டு நடக்கின்ற போதெல்லாம், எனது அத்தனை சுமைகளும் இறக்கி வைக்கப்படுவதைப் போன்ற ஒரு சுகத்தையும் ஒரு புகலிடம் கிடைத்ததைப் போன்ற நிம்மதியையும் அனுபவித்தேன். இதன் காரணமாக மேலான சுன்னாக்களுக்கு முன்னால் ஏற்பட்ட முழுமையான சரணாகதி நிலையானது குழப்பங்கள், சந்தேகங்களிலிருந்தும் “இன்ன இன்ன காரியங்கள் சரியானவையா!? பயன்மிக்கவையா!?” போன்ற அங்கலாய்ப்புகளிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுத் தந்தது. எப்போது அந்த மேலான சுன்னாக்களை விட்டும் எனது முகத்தைத் திறுப்பினேனோ அப்போது மன அழுத்தங்கள் பலமடங்காகின. எங்கு நோக்கிச் செல்கின்றது என்பது தெளிவில்லாத ஏராளமான பாதைகளுக்கான கதவுகள் எனக்கு முன்னால் திறக்கப்பட்டன. சுமைகள் சுமக்க முடியாத அளவு கனதியானவையாக மாறின. இத்தனைக்கும் மத்தியில் நானோ மிகவும் பலவீனனாக இருந்தேன். எனது பார்வையோ மிகவும் குறுகியதாக இருந்தது. முன்னாலிருந்த பாதைகளோ இருள் சூழ்ந்தவையாகக் காணப்பட்டன. எப்போதெல்லாம் இந்த நிலையிலிருந்து மீண்டு மேலான சுன்னாக்களில் புகலிடம் தேட ஆரம்பிப்பேனோ அப்போதெல்லாம் பாதைகளனைத்தும் ஒளியேற்றப்பட்டு ஸலாமத்தான பாதை பிரகாசிக்க ஆரம்பித்துவிடும். அழுத்தங்கள் அகன்று சுமைகள் சுகம் தரத் தொடங்கி விடும். ஆம், இப்படிப்பட்ட நிம்மதியில் திளைத்திருந்த அந்த சந்தர்ப்பத்தில் இமாம் ரப்பானி அவர்களுடைய அந்தத் தீர்ப்பிற்கு சான்றுபகன்றவனாக அதனை உண்மைப் படுத்தினேன்.

§5

ஒரு சமயம், மரணம் பற்றியும் اَلْمَوْتُ حَقٌّ என்ற தீர்ப்பிலிருக்கும் சத்தியத்தைப் பற்றியும் பிரபஞ்சத்தின் அழிவைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். அப்போது அந்த சிந்தனையின் வாயிலாக ஏற்பட்ட ஏகாந்திர நிலையின் காரணமாக நான் அசாதாரணமானதோர் உலகில் ஆஜராகியிருப்பதைக் கண்டுகொண்டேன். அங்கு நான் ஒரு ஜனாஸாவாக இருந்ததோடு மூன்று முக்கிய பிரமாண்டமான ஜனாஸாக்களின் தலைமாட்டில் நின்றிருந்தேன். முதலாவது: எனது வாழ்வோடு தொடர்பானவையாக இருந்து பின்னர் இறந்த கால மண்ணறைக்குள் சங்கமமாகிய ஒட்டுமொத்த உயிர்களினதும் கூட்டாகிய ஒரு ஆத்மார்த்த ஜனாஸாவின் தலைமாட்டில் வைக்கப்பட்ட ஒரு கல்லறைக் கல்லாக நான் நின்றிருந்தேன். இரண்டாவதாக: பூரா மனித குலத்தின் வாழ்வோடும் தொடர்புபட்டதாக இருந்து விட்டுப் பின்னர் பூலோக மையவாடியில் கடந்த கால மண்ணறைக்குள் புதைக்கப்பட்ட பூரா ஜீவ இனங்களினதும் கூட்டாகிய ஒரு பிரமாண்டமான ஜனாஸாவின் தலைமாட்டில் நடப்பட்ட கல்லறைக் கல்லாக இந்த யுகம் இருப்பதைக் கண்டேன். நானோ அந்தக் கல்லறைக் கல்லின் மீது விறைவாக அழிந்து போகக்கூடிய ஒரு புள்ளியாக அல்லது சீக்கிரம் மரணித்துப் போகக்கூடிய ஓர் எறும்பாக அமர்ந்திருந்தேன். மூன்றாவது: கியாமத்துடைய நேரத்தில் இந்தப் பிரபஞ்சத்தின் மரணம் சர்வ சத்தியமானதொரு நிகழ்வு என்பதால் அது எனது பார்வைக்கு நிகழ்ந்து விட்ட ஒன்றாகவே காட்சியளித்தது. அப்போது அந்தக் கிரகிப்புக்கு அப்பாற்பட்ட பிரமாண்டமான ஜனாஸாவுடைய பயங்கரமான ஸகராத் என்னுள் ஏற்படுத்திய வியப்பாலும் பேரதிர்ச்சியாலும் திகைத்து நின்ற போது எதிர்காலத்தில் உறுதியாக நிகழ இருக்கின்ற எனது மரணமும் கூட அந்தக் கனத்தில் நிகழ்வதைக் கண்டேன். அப்போது, எனது மரணத்தோடு பூரா சிருஷ்டிகளும், ஏன் எனக்கு அதிக நேசத்துக்குரியவர்களாக இருந்தவர்களும் கூட என்னைத் தனிமையில் விட்டுவிட்டு எனக்குப் புறமுதுகு காட்டிச் சென்று கொண்டிருந்தார்கள். எனது ஆன்மாவோ எல்லைகளோ முடிவுகளோ இல்லாமல் பரந்து வியாபித்த சமுத்திரமாகக் காட்சியளித்த நித்திய உலகத்தின் பக்கமாக உள்ள எதிர்காலத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. விரும்பியோ விரும்பாமலோ அந்த சமுத்திரத்துக்குள் குதிப்பது கட்டாயமாக இருந்தது. ஆம் இப்படிப்பட்ட ஒரு திகைப்பிலும் ஆழ்ந்த துயரத்திலும் இருக்கும் போது, ஈமானிலிருந்தும் குர்ஆனிலிருந்தும் கிடைத்த ஓர் ஆதரவாக فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِىَ اللّٰهُ لاَ اِلهَ اِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ என்ற வசனம் என்னுடைய மிகுந்த பாதுகாப்பும் நிம்மதயும் மிக்க ஒரு கப்பல் வடிவில் என்னுடைய உதவிக்காக வந்து நின்றது. எனது ஆன்மா பூரண பாதுகாப்போடும் நிம்மதியோடும் அந்தக் கப்பலுக்குள் நுழைந்து கொண்டது. ஆம் அப்போது அந்த வசனத்தில் அதன் தெளிவான அர்த்தத்துகு அப்பால் ஒரு சாடையான அர்த்தமும் இருப்பதைக் கண்டுகொண்டேன். என்னைத் தேற்றி எனக்கு அமைதியையும் நிம்மதியையும் அளித்தது அந்த சாடையான அர்த்தமேயாகும். ஆம் அந்த வசனத்தின் தெளிவான அர்த்தமானது ரஸுலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களை விளித்துப் பின்வருமாறு கூறுகின்றது: “வழிகேடர்கள் உங்களுக்குப் புறமுதுகு காட்டி ஓடினாலும், உங்களது ஷரீஅத்தையும் மேலான சுன்னாக்களையும் புறக்கணித்து முகங்களைத் திருப்பிக்கொண்டாலும், குர்ஆனை செவிமடுக்காமல் தமது காதுகளை மூடிக்கொண்டாலும் நீங்கள் அவர்களை அலட்டிக்கொள்ளாதீர்கள்! அவர்களிடம், எனக்கு எனது ரப் போதுமானவன் என்றும் நான் அவனிடமே தவக்குல் வைக்கிறேன் என்றும், நீங்கள் எனக்கு வழிப்படாவிட்டால் உங்களுக்குப் பதிலாக வழிப்படுபவர்களை அனுப்பி வைப்பதற்கு அவனே போதுமானவன் என்றும் கூறுவீராக. மேலும் அவனுடைய மாட்சிமைக்குரிய அர்ஷ் அனைத்தையும் வியாபித்தது என்பதையும், அவனுக்கெதிராக கலகம் விளைவிப்பவர்கள் அவனது எல்லைகளை விட்டும் தப்பிக்க முடியாது என்பதையும், அவனிடம் உதவி தேடுபவர்கள் ஒருபோதும் உதறித்தள்ளப்பட மாட்டார்கள் என்பதையும் அவர்களுக்கு எத்தி வைப்பீர்களாக!” இந்தத் தெளிவான அர்த்தத்தோடு இலையோடியுள்ள சாடையான அர்த்தமானது, “மனிதர்களே! மனிதர்களின் தலைவரும் வழிகாட்டியுமான உத்தமத் தூதரே! பூரா வஸ்துகளும் உங்களை விட்டும் அழிவுப்பாதையில் சூன்யத்தை நோக்கிச் சென்றாலும், உயிரினங்கள் அனைத்தும் உங்களைப் பிரிந்து மரணப் பாதையில் விரைந்தாலும், மனிதர்கள் அனைவரும் உங்களை விட்டும் மண்ணறையை நோக்கிச் சென்றாலும், பொடுபோக்குக் காரர்களும் வழிகேடர்களும் உங்களுக்கு செவிசாய்க்காமல் இருள்களில் மூழ்கினாலும் நீங்கள் இவற்றையெல்லாம் அலட்டிக்கொள்ளாமல் அவர்களிடம் பின்வருமாறு கூறுங்கள்: எனது ரப் எனக்குப் போதுமானவன். அவன் இருக்கின்றான். ஆகவே எனக்காக அனைத்துமே இருக்கின்றன. இங்கிருந்து சென்றவையெல்லாம் சூன்யத்தை அடைந்து அழிந்து போகவில்லை. மாறாக அவன் ஏற்பாடு செய்து வைத்துள்ள பிரிதொரு உலகத்தை நோக்கியே அவை செல்கின்றன. மாத்திரமன்றி இங்கு வந்தவர்கள் திரும்பிச் செல்லும் போது அந்த இடத்தை நிரப்புவதற்காக அர்ஷுடைய எஜமானன் தனது முடிவில்லாத படை பரிவாரங்களிலிருந்துமுள்ள தொண்டர்களைத் தொடர்ந்தேர்ச்சையாக அனுப்பிக்கொண்டிருக்கின்றான். இங்கிருந்து மண்ணரைக்குச் சென்றவர்களும் அழிந்து போவதில்லை. அவன் தயார் படுத்தி வைத்த வேறு ஓர் உலகத்கே அவர்களும் செல்கிறார்கள். அந்த வல்லோன் அவர்களுடைய இடத்தையும் வேறு சிலரைக்கொண்டு நிச்சயமாக நிரப்பிவிடுவான். மேலும் அவன், வழிகேட்டில் புதைந்து போனவர்களுக்குப் பதிலாக சத்தியப் பாதையில் உமக்கு வழிப்பட்டவர்களாகப் பயணிக்கக் கூடிய உத்தமர்களை அனுப்பி வைக்கும் ஆற்றல் உடையவனாக இருக்கின்றான். பூரா வஸ்துக்களும் ஒரு பக்கமாக இருந்தாலும் அவை நீங்கள் அல்லாஹ்வின்பால் திரும்பாதிருப்பதற்கான சாட்டுகளாக முடியாது” என்ற கருத்தைத் தருகின்றது. ஆம் இந்த சாடையான அர்த்தம் என்னைத் திடுக்கிடச் செய்த மூன்று ஜனாஸாக்களுடைய நிலைமைகளையும் வேறு விதமாகப் பரிணாமமடையச் செய்தன. அப்போது அவையனைத்தும் சர்வஞானமிக்கவனாகவும் சர்வ வல்லமை மிக்கவனாகவும் மகா நீதியாளனாகவும் நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கின்ற ரப்புல் ஆலமீனுடைய மாட்சிமைமிக்க ருபூபியத்தும் முன்னேற்பாடுகளும் கோலோச்சுகின்ற ஒரு மைதானத்தில் நிகழும் அவனுடைய பேரன்பாளும் அருளாலும் ஞானத்தாலும் ஆகர்ஷிக்கப்பட்ட இக்கங்களும் சுழற்சிகளும் பயணங்களும் நிலை மாற்றங்களும் தள மாற்றங்களும் பணி மாற்றங்களுமாகும் என்பதைக் கண்டு கொண்டேன். இவ்வாறே இந்தப் பிரபஞ்சத்துடைய வாழ்க்கை சுற்றிச் சுழல்கின்றது.

§6

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِى يُحْبِبْكُمُ الهُ என்ற மகத்துவமிக்க மறை வசனமானது, சுன்னத்துக்கு வழிப்படுவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் திட்டவட்டமாக வழியுறுத்துகின்றது. ஆம், இந்தப் புனித வசனமனது “ஒப்பீட்டுத் தர்க்கவியல்” பகுதியில் “விதிவிலக்கியல் ரீதியான ஒப்பீடு” என்ற தலைப்பின் கீழ் வருகின்ற மிகப் பலமானதும் மிக ஆணித்தரமானதுமான ஓர் ஒப்பீடாகும். தர்க்கவியலில் விதிவிலக்கியல் ரீதியான ஒப்பீட்டை விளக்குவதற்குப் பின்வரும் உதாரணம் கூறப்படுகின்றது. “சூரியன் உதித்தால் பகல்பொழுது விடிந்துவிடும்” என்ற வசனத்தின் நேர்முக விளைவாக “சூரியன் உதித்துவிட்டது. இதன் மூலம் கிடைக்கின்ற முடிவு இப்போது பகல் நேரமென்பதாகும்” என்று கூறப்படும். அதே வசனத்தின் எதிர்முக விளைவாக “இது பகல் நேரமில்லை எனவே சூரியன் இன்னும் உதிக்கவில்லை என்பதே முடிவாகும்” என்று கூறப்படும். தர்க்கவாதத்தின்படி மேற்படி நேர்முகமான மற்றும் எதிர்முகமான இரண்டு முடிவுகளும் ஆணித்தரமானவையாகும். இவ்வாறே மேற்படி மறை வசனமும், “அல்லாஹ் மீது முஹப்பத் வைத்துள்ளீர்கள் என்றால், ஹபீபுல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்க வேண்டும். வழிப்பட்டு நடக்காவிட்டால் அதிலிருந்துமுள்ள முடிவு அல்லாஹ்வின் மீது முஹப்பத்கொள்ளவில்லை என்பதாகும்” என்று கூறுகின்றது. அதாவது முஹப்பதுல்லாஹ் இருக்கின்றது எனில் அதன் இணைபிரியாத விளைவு ஹபீபுல்லாஹ்வுடைய மேலான சுன்னாக்களுக்கு வழிப்படுவதாகும். ஆம், சத்திய இரட்சகனை ஈமான்கொண்டவர்கள், நிச்சயமாக நபியவர்களுக்கு வழிப்பட்டே ஆக வேண்டும். வழிப்படுவதற்கான பாதைகளுல் மிக ஏற்றுக்கொள்ளப்பட்டதும், மிக நேரானதும், மிகக் குறுகியதுமான பாதை எந்தவித சந்தேகத்துக்குமிடமின்றி ஹபீபுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் காட்டித்தந்த, அண்ணவர்கள் பயணித்த பாதையாகும். ஆம், இந்தப் பிரபஞ்சத்தை இந்த அளவு அருள்பாக்கியங்களால் அலங்கரித்த சர்வ மாட்சிமைமிக்க தயாளன் பிரக்ஞையுள்ள தனது படைப்புக்களிடமிருந்து அந்த அருள்பாக்கியங்களுக்குப் பகரமாக நன்றியை வேண்டுவது நிச்சயமாக அடிப்படையானதும் கட்டாயமானதுமான ஒரு விடயமாகும். அவ்வாறே இந்தப் பிரபஞ்சத்தை இந்த அளவு அற்புதமான கலைப்பாடுகளைக் கொண்டு அலங்கரித்த சர்வ ஞானமும் சர்வ மாட்சிமையும் மிக்க அந்த வல்லோன், நிச்சயமாகத் தனது பிரக்ஞையுள்ள அடியார்களுக்கு வழி காட்டுவதற்காகவும் இமாமாக இருப்பதற்காகவும் அவர்களை நேர் வழியை நோக்கி அழைப்பதற்காகவும் அவர்களுக்கு மத்தியிலிருந்தே மிகவும் தகுதியான, மிகவும் சிரேஷ்டமான ஒருவரைத் தனது பிரதிநிதியாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தெரிவு செய்வது நிச்சயமாக அவனுடைய சர்வ ஞானத்திலிருந்துமுள்ளதாகும். அவ்வாறே இந்தப் பிரபஞ்சத்தை, தனது ஜமால் (பேரழகானவன்) மற்றும் கமால் (பூரணத்துவமானவன்) போன்ற நாமங்களின் எண்ணிலடங்காத பிரதிபலிப்புக்குப் பாத்திரமான ஓர் இடமாக வைத்த எல்லையில்லாத அழகும் பரிபூரணமும் மிக்க அந்த வல்லோன், அந்த அழகும் பரிபூரணத்துவமும் தனது நாமங்களும் அவற்றின் அழகியல்களும் வெளிப்பட வேண்டும் என்பதை விரும்பி அதை நாடியிருக்கின்றான். எனவே பேரழகும் பூரணத்துவமும் மிக்க அந்த வல்லோன், தனது எல்லையில்லாத அழகுக்கும் பரிபூரணத்துவத்துக்கும் ஏனைய அத்தனை நாமங்களுக்கும் அழகிய ஒரு கண்ணாடியாகவும், சர்வசம்பூரணமான ஒரு பாத்திரமாகவும், மொத்தமான ஓர் உள்ளடக்கமாகவும், அச்சொட்டான ஓர் அளவீடாகவும் இருக்கின்ற ஓர் உத்தமருக்கு மிகப் பூர்த்தியான ஓர் உபூதிய்யத் பதவியை அளிப்பதும் அண்ணாருடைய அந்த நிலைமையை பிறருக்கான நடைமுறை உதாரணமாக ஆக்கி ஏனைய அனைவரையும் அண்ணாருக்கு வழிப்படுமாறு ஏவுவதும், அதனூடாக அந்த அழகிய நிலைமைகளை எல்லோருடைய நடவடிக்கைகளிலும் பிரதிபலிக்கச் செய்வதும் நிச்சயமாக அந்த வல்லோனின் மகா ஞானத்திலிருந்துமுள்ளதாகும். சுருக்கமாக முஹப்பதுல்லாஹ், சுன்னத்துக்கு வழிப்படுவதை வேண்டி நிற்பதோடு, அதை விளைவாகவும் தருகின்றது. தனது வாழ்வில் அதிகரித்த சுன்னாக்களுக்குப் பங்குதாரராகின்ற மனிதன் எவ்வளவு பெரிய பாக்கியசாலியாவான்? அவ்வாறே தனது வாழ்வில் அந்த சுன்னாக்களைப் பொருட்படுத்தாமல் பித்ஆக்களை நாடுகின்ற மனிதன் எவ்வளவு பெரிய அபாக்கியசாலியாவான்?

§7

மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அவர்கள் كُلُّ بِد۟عَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِى النَّارِ என்று நவின்றார்கள். அதாவது اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ என்ற மறை வாக்கில் பொதிந்துள்ள தாத்பரியத்துக்கமைவாக, ஷரீஅத்துடைய தெளிவான வரம்புகளும் மேலான சுன்னாக்களுடைய எல்லா வகையான விதிமுறைகளும் பூர்த்தியடைந்து பூரணத்துவத்தை அடைந்து விட்ட பின்னர் நூதனங்களின் மூலமாக அவற்றின் மீதான விருப்பமின்மையை வெளிக்காட்டுவதும், நஊதுபில்லாஹ் அவை குறைபாடுடையவையாகும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தக் கூடிய பித்அத்களை உருவாக்குவதும் வழிகேடாகும்; நெருப்பாகும். ஆம், மேலான சுன்னாக்களுடைய பல படித்தரங்கள் காணப்படுகின்றன. அதில் ஒரு பகுதி வாஜிபானதாகும். இவற்றைப் புறக்கணிக முடியாது. இந்தப் பகுதி இஸ்லாமிய ஷரீஅத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அவை முஹ்கமாத், அதாவது மிகப் பலமானவையாகும். எந்த வகையிலும் மாற்றங்களுக்குட்படுத்தப்பட முடியாது. அடுத்த பகுதி நஃபிலான வகையைச் சேர்ந்ததாகும். நஃபிலான இந்தப் பகுதியும் இரண்டு பகுதிகளைக்கொண்டதாகும். அதில் முதலாவது பகுதி இபாதத்தோடு தொடர்புபட்ட சுன்னாக்கள் சம்பந்தமானவையாகும். இவையும் ஷரீஆ நூல்களில் தெளிவாகப் பேசப்பட்டுள்ளன. இவற்றில் மாற்றம் செய்வதும் பித்அத் ஆகும். இரண்டாவது பகுதி பண்பாடுகள் என்ற தலைப்புக்குக் கீழ் ஸியருந் நபி நூல்களில் பேசப்படுகின்றது. இவற்றுக்கு மாற்றமாக செயற்படுவதை பித்அத் என்று கூற முடியாது. ஆனால், இங்கு நபியுடைய ஆதாபுகளுக்கு ஒரு வகையில் முரனாகக் காரியமாற்றுவதால் அந்த ஆதாபுகளின் ஒளியிலிருந்தும் அவை கற்றுத் தரும் உயர் விழுமியங்களிலிருந்தும் பயனடைய முடியாதவராக ஆகி விடுவார். இந்தப் பகுதியில் மிகவும் ஏற்றமான வழிமுறை, எமது வழக்கங்கள், சம்பிரதாயங்கள் மற்றும் நாளாந்த இயல்பு வாழ்க்கையின் போது மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடமிருந்து உறுதியாக அறியப்படும் வழிகாட்டல்களை அடியொட்டி நடப்பதாகும். பேச்சொழுக்கம் முதல், உண்ணல், குடித்தல், உறங்கள் போன்ற நிலைமைகள் முதல் உறவுமுறை ஒழுங்குகள் வரையிலான ஏராளமான ஆதாபுகள் இந்த வகையைச் சேர்ந்த சுன்னாக்களுக்கான உதாரணங்களாகும். இவை “ஆதாபுகள்” என்றழைக்கப்படுகின்றன. இந்த ஆதாபுகளை எடுத்தொழுகுபவன் தனது வழக்கங்களை வணக்கமாக மாற்றிக்கொள்வான். இதன் மூலமாக மேலான உணர்வுகளையும் அந்தஸ்துக்களையும் பெற்றுக்கொள்வான். மிகச் சிறிய ஓர் ஆதாபை எடுத்தொழுகும் போது அது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நினைவுக்குக் கொண்டுவந்து உள்ளத்துக்கு ஒளியைப் பாய்ச்சப்படுகின்றது. சுனாக்களுக்குள் மிக முக்கியமானது, இஸ்லாத்தின் அடையாளங்களாகக் கொள்ளப்படும் இஸ்லாமிய வழக்கங்களுக்குற்பட்ட சுன்னாக்களாகும். இந்த வகை இஸ்லாமிய வழக்கங்கள், ஹுகூகுல் உமூம், அதாவது சமூகத்துக்குச் செய்ய வேண்டிய கடமைகள் வகைக்குற்பட்டவையாக இருப்பதால் இவை சமூகத்துக்குரிய ஓர் உபூதிய்யத் ஆகும். யாரேனும் ஒருவர் அதை செய்வதனூடாக அந்த சமூகம் ஒட்டுமொத்தமாகப் பயனடைவதைப் போன்றே, அது புறக்கணிக்கப்படும் போது, மொத்த சமூகமும் பொறுப்புதாரியாகிவிடும். இந்த வகையான இஸ்லாமிய வழக்கங்களுக்குள் முகஸ்துதி நுழையாது என்பதால் பகிரங்கப்படுத்தப்படுவது அவசியமாகும். இது நஃபிலான வகைக்குற்பட்டதாக இருந்தாலும் தனிப்பட்ட பர்ள்களை விடவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

§8

மேலான சுன்னாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஒழுக்க நெறியாகும். ஓர் ஒளியை அல்லது ஒரு விழுமியத்தைக் கொண்டிராத எந்த ஒரு வழிகாட்டலும் மேலான சுன்னாக்களில் கிடையாது. ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் பின்வருமாறு நவின்றார்கள். اَدَّبَنِى رَبِّى فَاَحْسَنَ تَاْدِيبِى “எனது ரப், ஒழுக்கத்தை மிகவும் அழகிய ஓர் அமைப்பில் எனக்கு அருள்பாலித்தான்” என்பதே இதன் கருத்தாகும். ஆம், நபியுடைய ஸீராவைப் பார்ப்பவர்களும் அண்ணவர்களுடைய மேலான சுன்னாக்களை அறிந்துகொண்டவர்களும், அத்தனை வகையான ஒழுக்க விழுமியங்களையும் சத்திய இரட்சகன் தனது ஹபீபிடம் சம்பூரணப்படுத்திவிட்டான் என்பதைத் திட்டவட்டமாக அறிந்துகொள்வார்கள். எனவே அந்த உத்தமரின் சுன்னாக்களைப் புறக்கணித்தவன் ஒழுக்க நெறிகளைப் புறக்கணித்தவனாக மாறுவான். கூடவே بِى اَدَبْ مَحْرُومْ بَاشَدْ اَزْ لُطْفِ رَبْ என்ற விதி கூறவரும் சத்தியத்தை உண்மைப்படுத்தி ஒழுக்கப்பிறழ்வு காரணமாக அழிவை நோக்கிச் செல்வான். கேள்வி: அல்லாமுல் (g)குயூப் ஆகிய அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கின்றான். எந்த ஒன்றும் எந்த ஒன்றையும் எந்த வகையிலும் அவனிடமிருந்து மறைத்துக்கொள்ள முடியாது. எனவே அல்லாமுல் (gh)குயூப் ஆகிய அல்லாஹ்வின் முன்னிலையில் ஒழுக்கம் எவ்வாறு சாத்தியமாகும்? வெட்கத்தையும் கூச்சத்தையும் ஏற்படுத்துகின்ற நிலைமைகளை அவனிடமிருந்து மறைத்துக்கொள்ள முடியாதல்லவா? அறுவறுப்பை உண்டாக்குகின்ற நிலைமைகளை ஆடைகளைக்கொண்டு திரையிடுவது ஒழுக்கத்துடைய ஒரு பகுதியாக இருக்க, அல்லாமுல் (gh)குயூபுக்கு முன்னால் திரை சாத்தியமற்றதல்லவா!? பதில்: மிக அழகிய வடிவமைப்பாளனும் சர்வ வல்லமைமிக்கவனுமாகிய அல்லாஹ் தனது குறைகளுக்கு அப்பாற்பட்ட அங்கசம்பூரணமான வடிவமைப்புக்களை அழகானதும் அலாதியானதுமானதோர் அமைப்பில் காட்சிப்படுத்துகிறான். இதன் போது அறுவறுக்கத்தக்க, அசிங்கமான, வெறுப்பையும் மிரட்சியையும் ஏற்படுத்தக்கூடிய நிலைமைகளைத் திரைகளுக்குப் பின்னால் வைத்துவிடுகின்றான். இவ்வாறு அலங்காரப்படுத்துவதன் மூலமாக அவனது அருள்பாக்கியங்களை நோக்கிப் பார்வைகளை ஈர்க்கின்றான். இவ்வாறே, தனது ஒவ்வொரு அடியானும், ஒவ்வொரு படைப்பும் பிற ஜீவ இனங்களுக்கு அழகாகக் காட்சியளிக்க வேண்டும் என்பதை விரும்புகின்றான். இவ்வாறிருக்கும் போது அசிங்கமான தமது நிலைமைகளைக் காட்சிப்படுத்துவதானது, அல்லாஹ்வுடைய அல் ஜெமீல், அல் மு(z)ஸய்யின், அல் லதீஃப், அல் ஹகீம் போன்ற நாமங்களின் முன்னிலையில் கலகம் விளைவிப்பதைப் போன்ற அல்லது அவமதிப்பதைப் போன்ற ஓர் ஒழுக்கக் கேடாகும். ஆம், மேலான சுன்னாக்களில் இருந்துமுள்ள ஒழுக்கநெறிகளானது, மிக அழகிய வடிவமைப்பாளனாகிய அல்லாஹ்வின் நாமங்களிற்கு முன்னால் மிகப்பொருத்தமான, மிக கண்ணியத்துக்குரிய பூரண பண்பாட்டு நிலைமைகளாகும். இரண்டாவதாக: ஒரு வைத்தியர் வைத்தியப் பணியைச் செய்யும் போது மஹ்ரம் அல்லாத ஒருவரின் மிகவுமே மஹ்ரமான ஒரு பகுதியையும் பார்க்க முடியும். கட்டாயமான நிர்ப்பந்த நிலையில் ஒரு வைத்தியருக்குக் காட்டுவதற்கான அனுமதியும் உண்டு. இதை ஒழுக்கப் பிறழ்வு என்று கூற முடியாது. மாறாக வைத்தியத் துறைக்குரிய ஒழுக்கக்கோட்பாடுகள் இதை வேண்டி நிற்கின்றது என்று கூறலாம். ஆனால் அந்த வைத்தியர் தனது ஆன்மையை முன்வைத்தோ அல்லது போதகர், ஆசிரியர் போன்ற பதவிகளை முன்வைத்தோ அல்லது தன்னிடமுள்ள வேறு ஏதாவது பண்புகள், பதவிகளை முன்வைத்தோ அந்த மஹ்ரமல்லாதவர்களைப் பார்க்க முடியாது. இந்த அடிப்படைகளில் காண்பிப்பதற்கு எந்தவோர் ஒழுக்க நெறியும் அனுமதி வழங்காது. இந்த நிலைமைகளில் ஒருவருக்குக் காண்பிப்பது வெட்கமிண்மையாகும்; மானக்கேடான செயலாகும். இவ்வாறே அழகிய வடிவமைப்பாளனும் சர்வ வல்லமை மிக்கவனுமான அல்லாஹ்வின் ஏராளமான நாமங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு நாமங்களினதும் வெவேறான பிரதிபலிப்புக்களும் காணப்படுகின்றன. உதாரணமாக, ‘(G)கஃப்பார்’ நாமம் பாவங்களின் இருப்பையும் ‘சத்தார்’ நாமம் குறைபாடுகளின் இருப்பையும் வேண்டி நிற்கின்றன. இவ்வாறே ‘ஜெமீல்’ நாமமானது அசிங்கங்களைக் கண்டுகொள்ள விரும்புவதில்லை. மேலும் “லதீஃப், கரீம், ஹகீம், ரஹீம்” போன்ற அழகையும் பரிபூரணத்துவத்தையும் வேண்டி நிற்கின்ற நாமங்களானது சிருஷ்டிக்கள் அனைத்தும் மிக அழகிய அமைப்பிலும், சாத்தியப்பாட்டுக்குற்பட்ட அதி சிறந்த நிலையிலும் இருப்பதை வேண்டி நிற்கின்றன. மேலும் அழகையும் பரிபூரணத்துவத்தையும் வேண்டி நிற்கின்ற அந்த நாமங்களானது, அவற்றின் அழகிய பிரதிபலிப்புக்களை சிருஷ்டிக்களின் அழகிய நிலைமைகளைக்கொண்டும் அழகிய ஆதாபுகளைக்கொண்டும் மலக்குமார்களுக்கும், ரூஹானீக்களுக்கும், மனிதர்களுக்கும், ஜின்களுக்கும் காட்சிப்படுத்த விரும்புகின்றன. ஆம் மேலான சுன்னத்துக்களிலிருக்கும் ஆதாபுகள் இந்த மகத்துவமிக்க உன்னதமான ஒழுக்க நெறிகளுக்கான வழிகாட்டிகளும், உதாரணங்களும், விதிமுறைகளுமாகும்.

§9

فَاِنْ تَوَلَّوْا فَقُلْ حَسْبِىَ اللّٰهُ என்ற வசனத்துக்கு முன்னால் வருகின்ற لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ என்ற வசனமானது, பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அண்ணவர்கள் தனது உம்மத் மீதுகொண்டிருக்கின்ற பரிபூரணமான அன்பையும் உச்சமட்ட பாசத்தையும் பிரஸ்தாபிக்கின்றது. பின்னர் தொடர்ந்து வருகின்ற فَاِنْ تَوَلَّوْا என்ற வசனத்தின் மூலம் “மனிதர்களே!, முஸ்லிம்களே! இவ்வாறு அளவிடமுடியாத அன்போடும் பாசத்தோடும் உங்களுக்கு நேரான பாதையையும் விமோசனத்துக்கான வழியையும் கற்றுத்தருவதற்காக தனது ஒட்டுமொத்த ஆற்றல்களையும் அர்ப்பனம் செய்து, தான் கொண்டு வந்த ஷரீஅத்தின் மூலமாகவும் தனது மேலான சுன்னாக்களின் மூலமாகவும் உங்களது ஆன்மீக காயங்களுக்கு நிவாரணமளிக்கின்ற காருண்யக் கடலான அந்த உத்தமரின் தெளிவான அன்பையும் பாசத்தையும் விட்டு உங்கள் முகங்களைத் திருப்பிக்கொள்ளாதீர்கள்!. அண்ணாருடைய சுன்னாக்களை விட்டும் ஷரீஅத்தை விட்டும் முகத்தைத் திருப்பிக்கொள்வது அண்ணாருடைய அந்த அன்பையும் பாசத்தையும் நிராகரித்து அதனைக் கேள்விக்குற்படுத்துகின்ற செயலாகும். இது எந்த அளவு மனச்சாட்சிக்கும் புத்திக்கும் விரோதமான செயல் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.” என்று மனிதர்களை நோக்கி உபதேசம் செய்கின்றது. மேலும் அதே வசனம் நபியவர்களைப் பார்த்து, “காருண்யக் கடலான, பாசத்தின் உருவான நபிகள் நாயகமே! அவர்கள் உங்களுடைய உன்னதமான அன்பையும் பாசத்தையும் புரிந்துகொள்ளாமல் தமது அறிவீனம் காரணமாகப் புறமுதுகு காட்டி ஓடினாலும், உங்களைச் செவிமடுக்காமல் தங்கள் காதுகளை மூடிக்கொண்டாலும் நீங்கள் கவலைப்படாதீர்கள்! வானங்கள் பூமியிலுள்ள பரிவாரங்கள் அனைத்தையும் தனது கட்டளைக்குக் கீழ் வைத்து, அனைத்தையும் வியாபித்த அர்ஷுல் அஸீமிலிருந்து அவற்றை நிர்வகிக்கின்ற ரப்புல் ஆலமீன் ஆகிய மகத்துவமிக்க அல்லாஹ் உங்களுக்குப் போதுமானவனாக இருக்கின்றான். அவன் தனக்கு உண்மையாக அடிபணிந்த சமூகங்களை, உங்களைச் சூழ ஒன்றுதிரட்டி உங்களுக்கு செவிசாய்க்கச் செய்வான். அவர்கள் உங்களுக்கும் நீங்கள் கொண்டு வந்த ஷரீஅத்துக்கும் வழிப்படுபவர்களாக இருப்பார்கள்” என்று கூறுகின்றது. ஆம், முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய மேலான சுன்னாக்களிலும் சங்கையான ஷரீஅத்திலும், பல்வேறுபட்ட ஞானங்களும் தாத்பரியங்களும் பொதியப்பெற்றிராத எந்தவொரு விடயமும் கிடையாது. இந்த ஏழை ஸஈத் ஆகிய நான், என்னிடமுள்ள அனைத்துக் குறைபாடுகளுடனும், இயலாமைகளுடனும் கூடவே இதை ஒரு சவாலாக ஏற்றுக்கொள்கிறேன். இந்த வாதத்தை நிறுவுவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றேன். அத்தோடு இது வரைக்கும் எழுதப்பட்ட எழுபது எண்பது வரையிலான ரஸாஇல்களுல் ஒவ்வொன்றும், நபியுடைய மேலான சுன்னாக்களும் சங்கையான ஷரீஅத்தும் எந்த அளவு ஞானபூர்வமானவையாகவும் அறிவுபூர்வமானவையாகவும் இருக்கின்றன என்பதற்கான ஒவ்வொரு அத்தாட்சியாகத் திகழ்கின்றது. ஒருவேளை வாய்ப்பும் வசதியும் இருந்து, இந்த விடயம் சம்பந்தமாக எழுத ஆரம்பித்தால், எழுபது அல்ல, ஏழாயிரம் ரஸாஇல்களும் அவற்றை எழுதி முடிப்பதற்குப் போதாமல் போய்விடும். மேலும் நான் எனது சொந்த வாழ்வில் மேலான சுன்னாக்களின் வழி நடந்ததன் காரணமாக மன நிம்மதியையும் சுகத்தையும் அனுபவித்த ஆயிரம் விடயங்கள் காணப்படுகின்றன. அதாவது ஷரீஅத்துடைய சட்டங்களும் மேலான சுன்னாக்களின் விதிமுறைகளும் அறிவு, ஆன்மா, உள்ளம் என்பவற்றோடும் குறிப்பாக சமூகத்தோடும் தொடர்புபட்ட பிணிகளுக்கான மிகவும் பயன்மிக்க நிவாரணிகளாக இருப்பதைக் கண்டுகொண்டேன். அத்தோடு, அவற்றின் இடத்தை எந்தவொரு தத்துவார்த்த சித்தாத்தங்களாலும் நிரப்ப முடியாது என்பதை அனுபவபூர்வமாக நான் எனது வாழ்வில் கண்டுகொண்டேன். அவற்றில் ஒரு பகுதியை பிறரும் பயன்பெற வேண்டும் என்பதற்காக ரஸாஇல்களில் ஒரளவு தெளிவுபடுத்தியுள்ளேன். நான் இந்த வாதத்திற்காக இட்ட சவாலில் சந்தேகம் கொள்பவர்கள், ரிஸாலே நூரைப் புரட்டிப் பார்க்கட்டும். ஆம் இப்படிப்பட்ட ஓர் உத்தமரின் -நித்திய வாழ்வின் விமோசனத்துக்கும் உலகவாழ்வின் நிம்மதிக்கும் காரணியாக இருக்கின்ற- மேலான சுன்னாக்களுக்கு முடியுமானவரை வழிப்பட்டு நடக்க முயற்சிப்பது, எந்த அளவு இலாபகரமானது என்பதை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்.

§10

பல வகையான சுன்னாக்களில் எல்லா வகைகளுக்கும் கீழ் வருகின்ற எல்லா சுன்னாக்களையும் சம்பூரணமாக வாழ்க்கையில் எடுத்து நடப்பது மிக சிரேஷ்டமான மனிதர்களுக்கும் கூட ஓரளவே இலகுவானதாக இருக்கும். ஆனால், நிய்யத் மூலமாகவும் நாட்டத்தின் மூலமாகவும் அந்த சுன்னாக்களுக்கு ஆதரவானவர்களாகவும் சார்பானவர்களாகவும் இருப்பது எல்லோருக்கும் கைகூடக்கூடிய ஒரு விடயமாகும். பர்ளான மற்றும் வாஜிபான விடயங்களைப் பொறுத்தவரை ஏற்கனவே வழிப்பட்டு நடக்க வேண்டிய கடமை எல்லோருக்கும் இருக்கின்றது. அத்தோடு வணக்க வழிபாடுகளில் இருக்கின்ற முஸ்தஹப்பான சுன்னாக்களை விட்டுவிடுவதால் பாவம் கிடைக்காவிட்டாலும், அடைந்துகொள்ள முடியுமான பெரும் பெரும் நன்மைகளில் இழப்புக்கள் ஏற்பட்டு விடுகின்றது. கூடவே இவற்றில் மாற்றங்கள் செய்ய முனைவது பெரும் குற்றமாகும். வழக்கங்கள் மற்றும் முஆமலாத் பகுதியில் வருகின்ற சுன்னாக்களைப் பொறுத்தவரை, அவற்றுக்கு வழிப்பட்டு நடக்கின்ற காலமெல்லாம் அந்த வழக்கங்கள் வணக்கங்களாக மாறி விடும். மாற்றமாக அமைகின்ற பட்சத்தில் எச்சரிக்கைகள் இல்லாவிட்டாலும் ஹபீபுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை நெறியின் ஒளியிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமான பயன் குறைந்துவிடும். வணக்க வழிபாடுகளின் சட்டதிட்டங்களில் புதுப் புகுத்தல்கள் பித்அத்களாகும். பித்அத்களானது, اَلْيَوْمَ اَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ என்ற வசனத்தின் மூலம் நாடப்படுகின்ற கருத்துக்கு நேர் முரணானதாக இருப்பதால் நிராகரிக்கப்பட வேண்டியவையாகும். தரீக்கத்துகளில் புழக்கத்திலுள்ள வெவ்வேறு அமைப்பிலான திக்ர், அவ்ராதுகள் மற்றும் மஷ்ரபுகளைப் பொறுத்தவரை அவற்றின் அடிப்படைகள் குர்ஆன் சுன்னாவிலிருந்து தோற்றம்பெற்றவையாகவும், குர்ஆன் சுன்னாவின் திட்டவட்டமான உஸூல்களுக்கும் அடிப்படைகளுக்கும் முரணாகவோ அல்லது அந்த அடிப்படைகளை மாற்றி அமைக்கின்ற விதமாகவோ அமையாமலும் இருந்தால் இந்த நிபந்தனைகளுடன் அவை பித்அத் ஆகக்கொள்ளப்படாது. ஆனால் ஒரு பகுதி அஹ்லுல் இல்ம், இவற்றில் ஒரு பகுதியை பித்அத் வட்டத்துக்குள் உள்வாங்கி, அவற்றிட்கு ‘பித்ஆ ஹஸனா’ என்ற நாமத்தை வழங்கியுள்ளனர். இமாம் ரப்பானி, முஜத்தித் அல்ஃபுஸானி (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள், “நான் ஆத்மார்த்த ஏகாந்திர நிலையில் இருக்கும்போது, ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்களுடைய நாவிலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் ஒளிமயமானவையாக இருப்பதையும், அண்ணார் காட்டித்தந்த வழிமுறைகள் சுடர்விட்டுப் பிரகாசிப்பவையாக இருப்பதையும் கண்டேன். அதே நேரம் அண்ணவர்கள் மொழியாத, ஆனால் வலிமையும் பிரகாசமும்மிக்க வேறு அவ்ராதுகளையும் வழிமுறைகளையும் அவதானித்த போது, அவற்றின் மீது அந்த ஒளி இல்லாதிருப்பதைக் கண்டேன். இரண்டாவதில் அதிக பிரகாசம் மிக்கது முன்னையதில் அதிக மங்களானதற்கும் ஈடாகாதிருந்தது. அப்போது சுன்னத்துடைய சுடர்கள் அதி வினைத்திறன் மிக்க சஞ்சீவிகளைப் போன்றவையாகும் என்பதை உறுதியாக அறிந்துகொண்டேன். மேலும் ஒளியைத் தேடுபவர்களுக்கு சுன்னத்துடைய அந்த ஒளி போதுமானதாகும். வேறெங்கும் போய்த் தேட வேண்டிய அவசியமில்லை.” ஆம், சத்தியத்திலும் ஷரீஅத்திலும் கதாநாயகனாகத் திகழ்ந்த இப்படிப்பட்ட ஓர் உத்தமரின் இந்தத் தீர்ப்பானது, மேலான சுன்னாக்கள் ஈருலக ஈடேற்றத்துக்கான அடிப்படைகளாகவும், பரிபூரணத்தை எட்டுவதற்கான ஊற்றுவாயாகவும் இருக்கின்றன என்பதைக் காட்டி நிற்கின்றது. اَللّٰهُمَّ ار۟زُق۟نَا اتِّبَاعَ السُّنَّةِ السَّنِيَّةِ رَبَّنَٓا اٰمَنَّا بِمَٓا اَن۟زَل۟تَ وَاتَّبَع۟نَا الرَّسُولَ فَاك۟تُب۟نَا مَعَ الشَّاهِدٖينَ

§11

இந்த வசனம், அற்புதமான அர்த்தச் செறிவைக் கொண்ட ஒரு வசனமாகும். இதிலுள்ள மூன்று வார்த்தைகளுக்குள்ளும் ஏராளமான வசனங்கள் பொதியப்பெற்றுள்ளன. இந்த வசனங்கள், “அல்லாஹ்வை (ஜல்ல ஜலாலுஹு) நீங்கள் ஈமான் கொண்டீர்கள் என்றால் நிச்சயமாக அல்லாஹ்வை நேசிப்பீர்கள். உண்மையாகவே அல்லாஹ்வை நேசிக்கின்றீர்கள் என்றால் அல்லாஹ்வின் விருப்பங்களையே அமுல்படுத்துவீர்கள். அவனுடைய விருப்பங்களின் பிரகாரம் நடப்பதென்பது அவனது ஹபீபை அடியொட்டி நடப்பதாகும். அண்ணாரை அடியொட்டி நடப்பதென்பது அண்ணாரை நேசிப்பதாகும். நீங்கள் அண்ணாருக்கு வழிப்படுகின்ற காலமெல்லாம் அல்லாஹ்வும் உங்களை நேசிப்பான். எனவே நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதை வெளிப்படுத்துங்கள், ஆக அல்லாஹ்வும் உங்களை நேசிக்கட்டும்.” ஆம், மேலே கூறப்பட்ட மொத்த வசனங்களும், மேற்படி வசனத்துக்கான சுருக்கமான அர்த்தங்களாகும். ஆகவே, மனிதனைப் பொறுத்தவரை, அவனது அதி முக்கியத்துவம் வாய்ந்த அதி உன்னதமான நோக்கமாக இருக்க வேண்டியது, நித்திய இரட்சகனின் நேசத்துக்குப் பாத்திரமானவனாகத் தன்னை மாற்றிக்கொள்வதாகும். மேலுள்ள வசனத்தின் தெளிவான அர்த்தத்தின்படி அந்த உன்னதமான நோக்கத்தை அடைவதற்கான பாதையல் ஹபீபுல்லாஹ்விற்கு வழிப்பட்டு அண்ணாரின் சுன்னாக்களை எடுத்தொழுகுவதாகும். இந்த இடத்தில் மூன்று விடயங்களை நிறுவினால் இந்த சத்தியம் முழுமையாக விளங்கிவிடும்.

§12

மனிதன், இயல்பிலேயே இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளன் மீது அளவில்லாத ஒரு முஹப்பத்தை ஒரு காதலை வெளிப்படுத்தக்கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். ஏனெனில் மனித இயல்பில் அழகின் மீதான அன்பும், பூரணத்துவத்தின் மீதான பற்றும், ஈகை மீதான நேசமும் மிகவும் ஆழமாகக் குடிகொண்டிருக்கின்றன. அழகு, பரிபூரணத்தன்மை, ஈகை என்பவற்றின் படித்தரத்துக்கேற்ப அந்த முஹப்பத் அதிகரிக்கும். அவை அதிகரிக்க அதிகரிக்க காதல் அதன் உச்ச மட்டத்தை அடையும். இவ்வாறு இந்தச் சிறிய மனிதனுடைய சின்னஞ்சிறிய உள்ளமானது பிரபஞ்சத்தின் அளவு பிரமாண்டமான காதலுக்குத் தன்னுள் புகழிடம் கொடுக்க முடியுமாக இருக்கின்றது. ஆம் உள்ளத்திலிருக்கும் கடுகளவேயான ஒரு பெட்டகமான மனன சக்தியானது, ஒரு பெரும் நூலகத்தைப் போன்று ஆயிரக்கணக்கான நூல்களுக்குள் அடக்க முடியுமான விடயங்களைத் தன்னுள் பாதுகாத்து வைத்திருப்பதோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மனித உள்ளமானது பிரபஞ்சத்தையே தன்னுள் உள்வாங்க முடியுமானதாகவும் அந்த அளவு முஹப்பத்தை சுமக்க முடியுமானதாகவும் இருக்கின்றது இருப்பதிலுள்ள தாத்பரியத்தை விளங்கிக்கொள்ளலாம். ஆம், உண்மையாகவே மனித இயல்பில் ஈகை, அழகு, பரிபூரணத்தன்மை என்பவற்றின் மீது அளவில்லாத ஒரு காதலை வெளிப்படுத்தும் ஆற்றல் இருக்கின்றது. கூடவே இந்தப் பிரபஞ்சத்தின் படைப்பாளன், பிரபஞ்சத்தில் தான் படைத்த வஸ்துகளின் மூலம் எண்ணற்ற புனிதத்துவம் வாய்ந்த அழகியல்களையும், சிருஷ்டிக்களில் காணப்படும் நுண்கலைப்பாடுகள் மூலமாக அளவில்லாத புனிதத்துவம் வாய்ந்த பரிபூரணத்தன்மைகளையும், பூரா ஜீவராசிகளுக்கு வழங்கப்படுகின்ற விதவிதமான ஆகாரங்கள், அருட்கொடைகள் மூலமாக அணுவளவும் சந்தேகத்துக்கிடமற்ற தனது முடிவில்லாத புனித ஈகைகளையும் இந்தப் பிரபஞ்சத்தில் தெட்டத் தெளிவாகவும் நிதர்சனமாகவும் யகீனாகவும் அனுபவபூர்வமாகவும் காட்சிப்படுத்திக்கொண்டிருக்கின்றான். ஆகவே, நிச்சயமாக ஜீவ இனங்களுக்கு மத்தியில் எல்லா வகையான ஆற்றல்களையும் பொதியப்பெற்றவனாகவும், அதே நேரம் அதிக தேவைகளை உடையவனாகவும், அதிகமாக சிந்திக்கக் கூடியவனாகவும், அதிகரித்த ஆசைகளை உடையவனாகவும் இருக்கின்ற மனிதன் இவற்றின் மீது எல்லையற்றதொரு முஹப்பத்தை வெளிப்படுத்துபவனாக இருப்பது அவனுடைய இயல்பான வேண்டலாகும். ஆம், ஒவ்வொரு மனிதனும், அந்த சர்வ வல்லமை மிக்க படைப்பாளன் மீது அளவில்லாத ஒரு முஹப்பத்தை வளர்க்கும் ஆற்றலைக்கொண்டவனாக இருப்பதைப் போன்றே, அந்தப் படைப்பாளனாகிய அல்லாஹ்வும் கூட தனது ஜமால், கமால், இஹ்ஸான் என்ற பன்புகள் காரணமாக அனைத்து வஸ்துக்களை விடவும் மஹ்பூபியத்துக்குறியவனாகவும் நேசத்துக்குறியவனாகவும் இருக்கின்றான். மேலும், முஃமினான மனிதன் தனது வாழ்வு, தனது நித்தியம், தனது உடல், தனது உலகம், தனது உள்ளம் போன்றவற்றின் மீது கொண்டிருக்கின்ற காதலும் வலுவான தொடர்புகளும் அந்த இரட்சகன் மீது முஹப்பத் கொள்வதற்காக மனிதனுக்கு வழங்கப்பட்ட பேராற்றலில் இருந்துமுள்ள கசிவுகளாகும். அவ்வாறே, மனிதனில் பொங்கியெழுகின்ற பல்வேறுபட்ட உணர்வலைகளும் கூட, அல்லாஹ்வின் மீது முஹப்பத்கொள்வதற்காக வழங்கப்பட்ட அந்த ஆற்றலின் திரிபுபடுத்தப்பட்ட பல்வேறு வடிவங்களாகும் அல்லது உருச் சிதைந்த சொட்டுக்களாகும். மனிதன் தனது நிம்மதியைக்கொண்டு ஆனந்தம் அடைவதைப் போன்றே, தான் தொடர்புபட்டுள்ள பிற மனிதர்களின் நிம்மதி நிலைமைகளின் போதும் ஆனந்தம் அடைகின்றான் என்பது நிதர்சனமான உண்மையாகும். அவ்வாறே, தன்னை ஆபத்துக்களிலிருந்து காப்பாற்றிய ஒருவனை நேசிப்பதைப் போன்றே, தனது நேசத்துக்குறியவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியவனையும் நேசிப்பான். ஆம், இந்த மனித மனோபாவத்தின் அடிப்படையில், மனிதன், ஒவ்வொரு மனிதனுக்கும் வழங்கப்பட்டுள்ள விதவிதமான இறை அருட்கொடைகள் விடயத்தில், பின்வருமாறு சிந்திக்க வேண்டும். அதாவது, “எனது படைப்பாளனாகிய ஹாலிகுர் ரஹீம், என்னை நித்திய இருளான சூன்யத்திலிருந்து மீட்டெடுத்து இந்தப் பிரபஞ்சத்தில் அழகியதோர் உலகத்தை எனக்கு அருள்பாலித்தான். அவ்வாறே எனது அஜல் வந்த பிறகு என்னை மீண்டும் நித்திய இல்லாமையான சூன்யத்திலிருந்து பாதுகாத்து நித்தியமானதோர் உலகத்தில் நித்தியமான, ஆனந்தமான ஒரு வாழ்வை எனக்கு அருள்பாலிக்க இருக்கின்றான். அங்கு ஒட்டுமொத்த இன்பங்களையும் அருட்கொடைகளையும் அனுபவிப்பதற்கும் ரசிப்பதற்கும் தேவைப்படுகின்ற அனைத்து விதமான உள்ரங்கமான வெளிரங்கமான உணர்வுகளையும் உறுப்புக்களையும் எமக்கு அருள்பாலிக்கின்றான். இவ்வாறே நான் மிகவுமே நேசிக்கின்ற, அதிக ஈடுபாடுகொண்ட உற்றார் உறவினர்கள், நேசத்துக்குறியவர்கள், வழித்தோன்றல்கள் என்று அனைவரையும் ஈருலகிலும் இப்படிப்பட்ட எல்லையில்லாத அருள்பாக்கியங்களுக்குப் பாத்திரமானவர்களாக ஆக்குகின்றான். இவர்களுக்கு அருள்பாலிக்கப்படும் இந்த ஈகைகள் ஒருவகையில் எனக்கும் சொந்தமாகின்றன. ஏனெனில் அவர்கள் நிம்மதியும் ஆனந்தமும் அடையும் போது நானும் ஆனந்தமடைகின்றேன்.” என்று சிந்திப்பானாயின், اْلاِنْسَانُ عَبِيدُ اْلاِحْسَان என்ற விதியின்படி அனைவரும் இஹ்ஸானை அதாவது ஈகையை விரும்புவார்கள். எனவே நிச்சயமாக, இப்படிப்பட்ட அளவில்லாத ஈகைகளுக்குப் பகரமாக பிரபஞ்சம் அளவான ஓர் உள்ளம் தான் எனக்கு இருந்தாலும் அதனை முஹப்பத்தைக்கொண்டு நிரப்புவது அவசியப்படுகின்றது. உண்மையில் நான் எனது உள்ளத்தை அவ்வாறு நிரப்ப ஆசைப்படுகின்றேன். என்னால் செயல்பூர்வமாக அந்த முஹப்பத்தை நிறைவேற்ற முடியாவிட்டாலும் செயலூக்கம் மூலமாகவும், ஈமான் மூலமாகவும், நிய்யத் மூலமாகவும், இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதன் மூலமாகவும், அதன் மகத்துவத்தை உணர்ந்துகொள்வதன் மூலமாகவும், அதை அடைந்துகொள்ள வேண்டும் என்ற தீராத ஆசை மூலமாகவும், அறிவுபூர்வமாகவும், நாட்டத்தின் மூலமாகவும் அந்த முஹப்பத்தை அடைந்துகொள்வேன், அதற்காக முயற்சிப்பேன் என்று கூறுவான். இவ்வாறே, அழகு மற்றும் பூரணத்துவம் என்பவற்றின் மீது மனிதனுக்குச் செலுத்த முடியுமான முஹப்பத்தையும், இங்கு சுருக்கமாக விளக்கப்பட்ட ஈகை மீது மனிதனுக்கு செலுத்த முடியுமாக உள்ள முஹப்பத்தை வைத்து ஒப்பிட்டுக்கொள்ளுங்கள். நிராகரிப்பாளனைப் பொறுத்தவரை, அவன் தனது குப்ரிய்ய சித்தாந்தத்தின் வேண்டலுக்கேற்ப தனது உள்ளத்தில் முடிவில்லாத ஒரு குரோதத்தை வளர்த்துக்கொள்கிறான். தான் சுமக்கின்ற இந்தக் குரோதத்தின் மூலம் பிரபஞ்சத்தையும், அதிலுள்ள இருப்புக்களையும் சிறுமைப்படுத்தி அநியாயக்காரனாக மாறிவிடுகின்றான்.

§13

அல்லாஹ் மீதான முஹப்பத்தானது, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய சுன்னாக்களுக்கு வழிப்பட்டு நடப்பதை வேண்டி நிற்கின்றது. ஏனெனில் அல்லாஹ்வை நேசிப்பதென்பது அவனது திருப்பொருத்தத்துக்குற்பட்ட செயல்களைச் செய்வதாகும். அவனது பொருத்தத்தைப் பெற்ற அனைத்து செயற்பாடுகளும் உத்தமத் தூதர் முஹம்மத் முஸ்தஃபா (ஸல்) அவர்களிடம் முழுமையான ஒரு வடிவத்தில் வெளிப்படுகின்றது. அந்தத் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு ஒப்பாக எமது செயற்பாடுகளையும் நடத்தைகளையும் அமைத்துக்கொள்வது இரண்டு கோணங்களில் சாத்தியமானதாகும். முதலாவது: சத்திய இரட்சகன் அல்லாஹ்வை நேசிக்கின்ற விடயத்தில், அவனது கட்டளைகளுக்கு அடிபணிந்து, அவனது திருப்பொருத்தத்துக்குற்பட்ட எல்லைக்குள் செயலாற்றுவதானது, ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வழிப்படுவதன் மூலமே சாத்தியமாகும். ஏனெனில் இந்த விடயத்தில் சர்வசம்பூரணமான இமாமாக இருப்பவர் உத்தமத் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களாவார்கள். இரண்டாவது: உண்மையில், அல்லாஹ் மனிதர்கள் மீது சொறிந்த முடிவில்லாத ஈகைகளுக்கும் எல்லையில்லாத சௌபாக்கியங்களுக்கும், உத்தமத் தூதர் முஹம்மத் முஸ்தபா ஸல்லால்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களே அதி சிரேஷ்டமான வஸீலாவாக இருக்கின்றார்கள். ஆகவே நிச்சயமாக சத்திய இரட்சகன் அல்லாஹ்வின் பெயரால் அந்த உத்தமத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அளவில்லாத ஒரு முஹப்பத்துக்கு அருகதையுள்ளவர்களாக ஆகின்றார்கள். மனிதன் தனது நேசத்துக்குரிய ஒருவருக்கு ஒப்பாக நடந்துகொள்ளும் போது, இயல்பான முறையில் ஒப்பாக நடந்துகொள்ளவே முயற்சிக்கின்றான். ஆம், ஹபீபுல்லாஹ்வை நேசிப்பவர்கள், அண்ணாரது சுன்னத்துக்கள் மூலமாக அண்ணாருக்கு ஒப்பாக நடக்க முயற்சி செய்ய வேண்டியது கட்டாயமாக அவசியப்படுகின்ற ஓர் அம்சமாகும்.

§14

சத்திய இரட்சகன் அல்லாஹ், அளவில்லாத கருணை உடையவனாகவும் எல்லையில்லாத முஹப்பத்தை உடையவனாகவும் இருக்கின்றான். பிரபஞ்சத்திலிருக்கும் சிருஷ்டிக்களின் அழகிய நிலமைகள் மூலமாகவும், கண்கவர் அலங்காரங்கள் மூலமாகவும் படைப்பினங்களுக்குத் தன்னை மகத்தான ஓர் அமைப்பில் நேசிக்கச் செய்கின்றான். அவ்வாறே, அந்த அத்தனை வஸ்துகளையும் குறிப்பாக மனித ஜின் வர்க்கத்தினருக்கு மத்தியில் மேற்படி மகத்தான ஏற்பாடுகளுக்குப் பகரமாக நேசத்தை வெளிப்படுத்தும் பிரக்ஞைபூர்வமானவர்களையும் அந்த வல்லோன் அல்லாஹ்வும் நேசிக்கின்றான். ஆம், சுவனத்தில் இருக்கின்ற மிக இனிமையான மிகக் கண்குளிர்ச்சியான இன்பங்களையும் உணர்வுகளையும் சௌபாக்கியங்களையும் கற்பனைக்கெட்டாத எத்தனை எத்தனையோ அருட்கொடைகளையும் தன்னுடைய ரஹ்மத்தின் சிறியதொரு பிரதிபலிப்பாக வைத்திருக்கும் அந்தக் கீர்த்தி மிக்க வல்லோனுடைய முஹப்பத்துக்கும் நேசத்துக்கும் பாத்திரமானவர்களாக இருக்க முயல்வது எந்த அளவு முக்கியத்துவமான, எந்த அளவு உன்னதமான ஓர் இலட்சியமாகும் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள். தெளிவான மறை வசனங்களின் பிரகாரம், சந்தேகத்துக்கிடமின்றி, மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு வழிப்படுவதன் மூலமாக மாத்திரமே அந்த வல்லோனின் முஹப்பத்துக்குப் பாத்திரமானவர்களாக ஆக முடியும். இந்த வகையில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய ஸுன்னாக்களுக்கு வழிப்படுவது மனிதர்களுக்கு முன்னாலுள்ள மிகப்பெரியதோர் இலக்காகவும், மகத்துவமானதொரு பணியாகவும் இருக்கின்றது என்ற விடயம் நிரூபனமாகின்றது.

§15

“மூன்று விடயங்காளாகும்”

§16

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய சுன்னாக்களின் ஊற்றுவாய் மூன்று அடிப்படைகளாகும். அவை சொல், செயல், அங்கீகாரம் எனப்படும். இந்த மூன்று பகுதிகளும் கூட தமக்குள் மூன்று உப பிரிவுகளைக் கொண்டதாகும். அவை, பர்ளானவையும் நஃபிலானவையும் அண்ணாருடைய அழகிய வழக்கங்களும் ஆகும். பர்ள் மற்றும் வாஜிபான பகுதிகளில் கட்டாயமாக வழிப்படும் கடப்பாடு இருக்கின்றது. ஆனால் புறக்கணிக்கப்பட்டால் தண்டனையும் வேதனையும் கிடையாது. அவற்றை எடுத்து நடந்தால் மகத்தான நன்மைகள் இருப்பதோடு கூடவே, அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் திரிபுபடுத்துவதும் பித்அத் ஆகும்; வழிகேடாகும்; பெரிய குற்றமாகும். அண்ணாரது அழகிய வழக்கங்களையும் மேலான நடைமுறைகளையும் பொறுத்தவரை, அவற்றில் பொதியப்பெற்றுள்ள மகத்தான தாத்பரியங்களையும் நன்மைகளையும் அவற்றால் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்வில் கிடைக்கும் பயன்களையும் அடிப்படையாக வைத்து தக்லீத் செய்வது ஏற்றமானதும் விரும்பத்தக்கதுமாகும். ஏனெனில் அண்ணாரின் தனித்தனி ஒவ்வொரு நடவடிக்கையிலும் வாழ்க்கைக்குத் தேவையான ஏகப்பட்ட நன்மைகள் இருப்பதைப் போன்றே, அவற்றை சிரமேற்கொண்டு செய்வதனூடாக அந்த நாளாந்த பழக்கவழக்கங்கள், இபாதத் அந்தஸ்த்தை அடைகின்றன. ஆம் உண்மையில், மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், அண்ணவர்களின் தோழர்களும் ஏன் எதிரிகளும் கூட ஏகமனதாக ஏற்றுக்கொண்டதற்கிணங்க அழகிய பண்பாடுகள் அனைத்துக்கும் அதி உன்னதமான ஓர் உதாரணபுருஷராகத் திகழ்ந்தார்கள். மேலும் திட்டவட்டமாக அண்ணவர்கள் மனித குலத்தில் தோன்றிய மிகப் பிரபல்யமான மிகச் சிரேஷ்டமான ஓர் ஆளுமையாவார்கள். மேலும் அண்ணவர்கள் வெளிப்படுத்திய ஆயிரக்கணக்கான அற்புதங்களின் அத்தாட்சிக்கமைவாகவும் அண்ணவர்கள் கட்டியெழுப்பிய இஸ்லாமிய உலகம், அதன் சம்பூரணத்துவம் என்பவற்றின் அத்தாட்சிக்கமைவாகவும் பிரபஞ்சவெளியில் இருக்கின்ற மிகப்பெரிய சத்தியங்களாகிய குர்ஆனிய சத்தியங்களின் அத்தாட்சிக்கமைவாகவும், அவற்றை நோக்கிய அழைப்பாளராகவும் அதன் மொழிபெயர்ப்பாளராகவும் தான் செய்த அர்ப்பனங்களின் அத்தாட்சிக்கிமைவாகவும் அண்ணவர்கள் சர்வசம்பூரணமான ஒரு மனிதப் புனிதராவார்கள்; ஒரு முர்ஷிதுல் அக்பர் ஆவார்கள். மேலும் அண்ணாருக்கு வழிப்பட்டதன் விளைவாக, மில்லியன் கணக்கான மாந்தர்கள் மனிதப் புனிதர்களாக மாறி ஈருலக வெற்றியை அடைந்துகொண்டுள்ளார்கள். எனவே நிச்சயமாக, சத்தியமாக அந்த உத்தமத் தூதரின் எல்லா வகையான சுன்னாக்களும் வாழ்க்கையில் எடுத்து நடப்பதற்கான மிகச் சிறந்த முன்னுதாரணங்களும், பின்பற்றிச் செல்வதற்கான மிகவும் நம்பகரமான வழிகாட்டல்களும், விதிமுறைகளாக எடுத்துக்கொள்ளத்தக்க திட்டவட்டமான சட்டதிட்டங்களுமாகும். மிகவும் பாக்கியசாலியான மனிதன், அண்ணாருடைய சுன்னத்துக்களுக்கு வழிப்படுகின்ற விடயத்தில் அதிகரித்த பங்குகளுக்குச் சொந்தகாரனான மனிதனாவான். சுன்னாக்களுக்கு வழிப்படாதவன் சோம்பேறித்தனம் காரணமாகத் தவறவிடுகிறான் எனில், அவன் மாபெரும் இழப்புக்கு ஆலாகிவிட்டான். அவற்றை சாமான்யமான சம்பிரதாயங்களாகக் கருதி பொருட்படுத்தாதிருப்பின் மாபெரும் குற்றமிழைத்தவனாகி விடுவான். தக்ஸீப் அல்லது பொய்ப்பித்தலின் வாடை வீசும் விமர்சனத்தின் அடியாக அவற்றை உதறித்தள்ளினால், மாபெரும் வழிகேட்டுக்காலாகி விட்டான்.

§17

சத்திய இரட்சகன் சர்வஞானம் பொருந்திய குர்ஆனில் وَاِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ என்று பிரஸ்தாபிக்கின்றான். ஸஹீஹான அறிவிப்புக்களில் ஹழரத் ஆயிஷா ஸித்தீகா (ரழி) அவர்களைப் போன்ற சிரேஷ்டமான ஸஹாபாக்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை விவரிக்கும் போது, ‘(خ)ஹுலூகுஹுல் குர்ஆன்’ என்று வர்ணிக்கின்றனர். அதாவது “முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குர்ஆன் கூறுகின்ற அழகிய பண்பாட்டு விழுமியங்களின் மொத்த உருவமாகத் திகழ்ந்தார்கள். மேலும் அந்த அழகிய பண்புகளை அதி உச்சமட்டத்தில் கடைப்பிடித்து குர்ஆனுக்கான உதாரணபுருஷராகத் திகழ்ந்தார்கள். மொத்தமாகச் சொன்னால் அண்ணவர்கள் இயல்பிலேயே அந்தப் பண்புகளின் மீது படைக்கப்பட்டுள்ளார்கள்.” இப்படிப்பட்ட ஓர் உத்தமரின் சொல், செயல், அங்கீகாரம், இயல்பான நிலைமைகள் என்று அனைத்துமே மனிதகுலத்துக்கான முன்மாதிரிகளாக இருக்கும் தகுதியைக் கொண்டிருக்கின்ற போது, அண்ணவர்களை ஈமான் கொண்டு அவர்களின் உம்மத்தில் இணந்துகொண்ட பிறகும், அண்ணாரின் சுன்னாக்களைப் பொருட்படுத்தாமல், அவற்றைத் திரிபுபடுத்த முயல்கின்ற பொடுபோக்குக் காரர்கள், எப்படிப்பட்ட அபாக்கியசாலிகள் என்பதை புத்திபேதலித்தவர்கள் கூட விளங்கிக்கொள்வார்கள்.

§18

ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள், படைப்பளவில் மிகவுமே நடுநிலமையானவர்களாகவும், அங்கசம்பூரணமான நடத்தைகளை உடையவராகவும் படைக்கப்பட்டதால், அண்ணாருடைய நடவடிக்கைகளாக இருந்தாலும் அமைதியான நிலைமைகளாக இருந்தாலும் அனைத்துமே இஸ்திகாமத்தை உடையவையாகவும் நடுநிலையானவையாகவுமே காணப்பட்டன. அண்ணாருடைய ஒட்டுமொத்த செயல்களும் இஸ்திகாமத்தை உடையவையாகவும், இஃப்ராத் - தஃப்ரீத் எனப்படும் அதிதீவிர மற்றும் அசமந்த நிலைமைகளை விட்டும் தூய்மையான நடு நிலைமையை உடையவையாகவும் இருந்தன என்பதற்கு அண்ணாருடைய மொத்த வாழ்வும் சான்றாகும். ஆம், ரஸூலே அக்ரம் அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் அவர்கள் فَاسْتَقِمْ كَمَا اُمِرْتَ என்ற வசனத்தின் கட்டளையின் செயல்ரூபமாக வாழ்ந்ததால், அண்ணாரது சொல், செயல், அங்கீகாரங்கள் அனைத்திலும் தெட்டத் தெளிவாக இஸ்திகாமத்தைக் காணமுடியுமாக உள்ளது. உதாரணமாக புத்திக்கூர்மை விடயத்தில், பித்னாக்களுக்கும் பிற்போக்குக்கும் வழிகோலக்கூடிய அதிதீவிர மற்றும் அசமந்த நிலைகளாகிய சூழ்ச்சி மற்றும் மடமை ஆகியவற்றை விட்டும் பரிசுத்தமானவர்களாக இருந்தார்கள்; நடு நிலையானதாகவும் இஸ்திகாமத்தானதாகவும் இருக்கின்ற ஹிக்மத்தோடு காரியமாற்றினார்கள். அண்ணாரது புத்திக்கூர்மை எப்போதுமே இந்த நடுநிலையான கோட்டின் மீதே நிலைத்திருந்தது. அதே போன்றே பாதுகாப்புணர்வு விடயத்தில், பித்னாக்களுக்கு வழிகோலும் அதிதீவிர மற்றும் அசமந்த நிலைகளாகிய பயந்தாங்கொல்லித் தனத்திலிருந்தும் எதையும் பொருட்படுத்தாத முற்கோப நிலைமையிலிருந்தும் பரிசுத்தமானவர்களாக இருந்த அதே வேளை அந்த உணர்வில் இஸ்திகாமத்தை உடையதாகவும் நடுநிலையானதாகவும் புனிதத்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கின்ற அஞ்சா நெஞ்சம் படைத்தவர்களாகத் திகழ்ந்தார்கள். அவ்வாறே உடலியல் வேட்கைகள் விடயத்தில், பித்னாக்களுக்கான காரணியாகவும் அதிதீவிர மற்றும் அசமந்த நிலைகளாகவும் இருக்கின்ற மலட்டுத் தன்மையிலிருந்தும் துர் நடத்தைகளிலிருந்தும் பரிசுத்தமானவர்களாகத் திகழ்ந்த அதே வேளை அந்த வேட்கையின் இஸ்திகாமத்துக்கான காரணிகளாக இருக்கின்ற வெட்கத்தையும் நாணத்தையும் அணிகலனாகக் கொண்டிருந்தார்கள். அண்ணாரது வெட்க உணர்வானது உடலியல் வேட்கைகளை சதாவும் உச்சமட்ட மஃஸூமியத் அந்தஸ்த்தில் வைத்திருந்தது. இதுபோன்ற ஏராளமான உதாரணங்களை அடுக்கிகொண்டே போகலாம். மொத்தத்தில், உத்தமத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், தனது ஒட்டுமொத்த அழகிய நடத்தைகளிலும், இயல்பான நிலைமைகளிலும், ஷரீஅத்திலும் இஸ்திகாமத்துடைய கோட்டைத் தெரிவு செய்து அக்கிரமமாக அல்லது இருளாக இருக்கின்ற அதிதீவிர மற்றும் அசமந்த நிலைகளிலிருந்தும், வீண்விரயம் மற்றும் உலோபித் தனத்திலிருந்தும் விலகி நின்றார்கள். அத்தோடு, பேச்சிலும் உண்ணல் குடித்தல் விடயங்களிலும் சிக்கனத்தை சித்தாந்தமாகக் கொண்டவர்களாகவும் வீண்விரயத்தை வெறுத்தொதுக்குபவர்களாகவும் திகழ்ந்தார்கள். இந்த சத்தியத்துக்கான விரிவுரைகளாக ஆயிரக்கணக்கான புத்தகங்கள் பாகம் பாகமாக எழுதப்பட்டுள்ளன. اَلْعَارِفُ تَكْفِيهِ اْلاِشَارَةُ என்ற விதிக்கமைய, இந்தச் சமுத்திரத்திலிருந்து இந்தச் சொட்டுகளோடு போதுமாக்கிக்கொண்டு இத்தோடு சுருக்கிக்கொள்கிறேன். :اَللّٰهُمَّ صَلِّ عَلٰى جَامِعِ مَكَارِمِ ال۟اَخ۟لَاقِ وَ مَظ۟هَرِ سِرِّ «وَ اِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظٖيمٍ» اَلَّذٖى قَالَ مَن۟ تَمَسَّكَ بِسُنَّتٖى عِن۟دَ فَسَادِ اُمَّتٖى فَلَهُ اَج۟رُ مِاَةِ شَهٖيدٍ اَل۟حَم۟دُ لِلّٰهِ الَّذٖى هَدٰينَا لِهٰذَا وَ مَا كُنَّا لِنَه۟تَدِىَ لَو۟ لَٓا اَن۟ هَدٰينَا اللّٰهُ لَقَد۟ جَٓائَت۟ رُسُلُ رَبِّنَا بِال۟حَقِّ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters