(இது பதினேழாவது மின்னலின் பதினாறாவது குறிப்பாக இருக்க, முக்கியத்துவம் காரணமாக இருபத்தி மூன்றாவது மின்னலாக ஆகியது. இந்த மின்னல் இயற்கையிலிருந்து வெளிப்படும் குஃப்ரிய்ய சிந்தனையை மீண்டும் தழைக்க முடியாத வகையில் வேரறுத்து, குஃப்ரின் அத்திபாரத்தை சின்னாபின்னப்படுத்திவிடுகின்றது.) நினைவூட்டல்: இந்தக் கருத்துரை இயற்கைவாதிகளுள் அதை வைத்து இறை மறுப்பை வலியுறுத்தும் பிரிவினர் செல்லும் பாதையின் உள் முகம் எந்த அளவு புத்திக்கு அப்பாற்பட்டது என்பதையும் எந்த அளவு அசிங்கமானது என்பதையும் எப்படிப்பட்ட ஒரு மடமை என்பதையும் நிரூபிக்கின்றது. அந்த வகையில் அவர்கள் முன்வைக்கும் வாதங்களின் அசாத்தியப்பாட்டையும் புத்திக்கு அப்பாற்பட்ட தன்மைகளையும் தெளிவுபடுத்தும் தொண்ணூறுக்கும் மேற்பட்ட அசாத்தியப்பாடுகளின் சாரம்சமாகத் திகழும் ஒன்பது அசாத்தியப்பாடுகள் குறித்து மட்டும் தெளிவுபடுத்தப்படுகிறது. வேறு ரஸாஇல்களில் அந்த அசாத்தியப்பாடுகள் பகுதியளவு நிரூபிக்கப்பட்டுள்ளதாலும் இங்குள்ள விளக்கங்களை நாம் சுருக்கமாக அமைத்துக்கொண்டதாலும் அங்கு விவரிக்கப்பட்ட சில அம்சங்கள் இங்கு சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக இதை மாத்திரம் வாசிப்பவர்களுக்கு, இந்தளவு பட்டவர்த்தனமான சுத்த மடமையை அறிவும் புத்திக் கூர்மையும் மிக்க பெரும் பெரும் தத்துவஞானிகள் எவ்வாறு ஏற்றுக்கொண்டு அந்தப் பாதையில் சென்றார்களோ என்ற கேள்வி இயல்பாகவே தோன்றலாம். ஆம்! உண்மை என்னவென்றால், அவர்கள் தாம் சென்ற பாதையின் உள் முகத்தைக் காண முடியாதவர்களாக இருந்தனர். அத்தோடு, அவர்களுடைய பாதையின் யதார்த்த நிலை தொடர்பாகவும் அந்தப் பாதையின் வேண்டுதல்கள் மற்றும் அதனை அத்தியாவசியப்படுத்துகின்ற காரணிகள் தொடர்பாகவும் சுருக்கமானதொரு விளக்கம் கீழே தெளிவுபடுத்தப்பட இருக்கும் ஒவ்வோர் அசாத்தியப்பாட்டினதும் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளது. அவர்களது அந்தப் பாதையின் யதார்த்த நிலையும், அந்தப் பாதையில் இட்டுச் செல்கின்ற நடத்தைகளும் எவ்வித சந்தேகமுமின்றி அசிங்கமானதும் அருவறுக்கத்தக்கதும் அறிவுக்கு அப்பாற்பட்டதுமாகும் என்பதை சந்தேகமுள்ளவர்களுக்கு மிகத் தெளிவானதும் உறுதியானதுமான அத்தாட்சிகளைக்கொண்டு விலாவாரியாக நிரூபிக்க ஆயத்தமாகவே இருக்கின்றேன். بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ قَالَت۟ رُسُلُهُم۟ اَفِى اللّٰهِ شَكٌّ فَاطِرِ السَّمٰوَاتِ وَال۟اَر۟ضِ இந்த வசனம் நிராகரிப்பின் அத்திபாரத்தையே கேள்விக்குட்படுத்தி, “சத்திய இரட்சகனின் விடயத்தில் எவ்வித சந்தேகமும் கிடையாது; இருக்கவும் முடியாது” என்று கூறுவதன் மூலம் அல்லாஹ்வின் இருப்பும் அவனது வஹ்தானியத் என்ற தனித்துவமும் தெளிவாகப் புலப்படுகின்ற அளவுக்குப் பிரகாசமானது என்பதைப் பறைசாற்றுகின்றது. இதிலுள்ள தாத்பரியத்தை நிறுவுவதற்கு முன்னர் ஒரு சிறிய நினைவூட்டல்: ஹிஜ்ரி 1338ம் ஆண்டு அன்காரா நகருக்குச் சென்றிருந்தேன். அன்று கிரேக்கர்களுடனான யுத்த வெற்றியைத் தொடர்ந்து ஏற்பட்ட மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் மூழ்கியிருந்த அன்காரா நகரில் முஃமின்களுடைய சீரிய சிந்தனைகளையும் பலமான அகீதாவையும் குழப்பி நஞ்சூட்டுவதற்காக நயவஞ்சகத்தனமானதும் மிகப் பயங்கரமானதுமான ஒரு மார்க்க விரோத சிந்தனைப் படையெடுப்புக்கான முஸ்தீபுகள் இடம்பெற்றுக்கொண்டிருப்பதை அவதானித்தேன். அதைக் கண்டு, இந்தப் படை ஈமானுடைய தூண்களை அல்லவா தகர்க்கப் போகின்றது என்று கதிகலங்கினேன். அப்போது மேற்படி வசனம் அல்லாஹ்வின் இருப்பையும் அவனது வஹ்தானியத்தையும் தெட்டத்தெளிவாக எனது கண்களுக்கு முன்னால் தெளிவுறுத்தியது. பின்னர், அதன் உதவியோடு அந்த மார்க்க விரோதச் சிந்தனையின் அடித்தளத்தைத் தகர்க்கக்கூடிய சக்தி வாய்ந்த பலமான ஓர் அத்தாட்சியை சர்வஞானம் பொதிந்த குர்ஆனிலிருந்து பெற்று அரபி மொழியில் ஒரு நூலாக எழுதி அன்காராவிலுள்ள ‘யெனி குன்’ என்ற அச்சகத்தில் அச்சிட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அரபி மொழி தெரிந்தவர்கள் அரிதாக இருந்த காரணத்தினாலும் எழுதப்பட்ட விடயங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்கள் குறைவாக இருந்த காரணத்தினாலும் அந்தப் பலமான அத்தாட்சி ஏதோ ஒரு வகையில் அதன் தாக்கத்தை வெளிக்காட்டவில்லை. எனவே, துரதுஷ்டவசமாக அந்த மார்க்க விரோத சிந்தனை பரவலடைந்து பலம்பெற்றது. எனவே, வலுக்கட்டாயமாக அந்த அத்தாட்சியைத் துருக்கி மொழியில் ஓரளவு தெளிவுபடுத்த முடிவு செய்தேன். அந்த அத்தாட்சியின் சில பகுதிகள் ரிஸாலே நூரின் வேறு பகுதிகளில் முழுமையாக நிறுவப்பட்டுள்ளதால் இங்கு சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளது. வேறு இடங்களில் விலாவாரியாகவும் விரிவாகவும் விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பல்வேறு அத்தாட்சிகள் இங்கு விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட அத்தாட்சிகளோடு ஓரளவேனும் தொடர்புபடுகின்றன. எனவே, அவை ஒவ்வொன்றும் இவற்றுக்கான விரிவான விளக்கங்களாகவே இருக்கின்றன.
மூல உரை பாதுகாக்கப்படுகிறது. மாதிரி கிடைக்கும் போது மொழிபெயர்ப்பு காட்டப்படும்.
Tabiat Risalesi
The Twenty-Third Gleam
மனிதனே அறிந்துகொள்! மனித நாவிலிருந்து வெளிப்படும் வார்த்தைகளுள் இறை நிராகரிப்பின் வாடையை நுகர வைக்கின்ற பயங்கரமான வார்த்தைகள் உள்ளன. ஈமான் கொண்டவர்களும் அந்த வார்த்தைகளைத் தமது அறியாமை காரணமாகப் பிரயோகிக்கின்றனர். அவற்றுள் மிக முக்கியமான மூன்றை இங்கு குறிப்பிடுகின்றேன். முதலாவது: “அவ்ஜதத்ஹுல் அஸ்பாப் - காரணகாரியங்களே வஸ்துகளை உருவாக்கின்றன.” இரண்டாவது: “தஷக்கல ஃபீ நஃப்ஸிஹீ - வஸ்துகள் தாமாகவே உருவாகி, அழிந்துபோய் விடுகின்றன.” மூன்றாவது: “இக்தழத்ஹு அத்தபீஅத் - வஸ்துகள், இயற்கையானதாகும், இயற்கைத் தேர்வால் அவை படைக்கப்படுகின்றன.” ஆம்! வஸ்துகள் இருக்கின்றன. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அவற்றின் இருப்பை நிராகரிக்க முடியாது. அவ்வாறே, ஒவ்வொரு வஸ்தும் அழகிய கலைப்பாடுகளோடு பல்வேறு தாத்பரியங்களைப் பொதிந்ததாகவும் தோற்றம் பெறுகின்றன. மட்டுமன்றி, எந்த ஒரு வஸ்தும் ஆதியோ ஆரம்பமோ இன்றி நித்தியமாகவே இங்கு இருப்பவை அல்ல. மாறாக, அவை புதிது புதிதாகத் தோற்றம் பெறுகின்றன. இறைவனை நிராகரிக்கும் நாத்திகனே! பிரபஞ்சமெங்கும் விரவிக்கிடக்கும் இந்த வஸ்துகளை, உதாரணமாக இந்த மிருகத்தை ஒன்றோ உலகில் உள்ள காரணகாரியங்கள் ஒன்றிணைந்து சிருஷ்டிக்கின்றன. அல்லது தாமாகவே தமது சுய ஆற்றலைக்கொண்டு வெளிப்படுகின்றன. அல்லது இயற்கையின் தெரிவின் மூலமாகவும் ஆற்றலின் மூலமாகவும் அவை ஆக்கப்படுகின்றன. அல்லது சர்வ வல்லமை மிக்க ஒருவன் தனது வல்லமையின் மூலம் சிருஷ்டிக்கிறான். இந்த நான்கு பாதைகளுக்கும் அப்பால் வேறொரு பாதை அறிவுக்கோ, கிரகிப்புக்கோ எட்டுவதில்லை. எனவே, முதல் மூன்று பாதைகளும் அசாத்தியமானவை, செல்லுபடியற்வை, ஏற்புடையவையல்ல என்பது சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாக நிரூபிக்கப்பட்டால் தெளிவாகவும் நிர்ப்பந்தமாகவும் தரீகுல் வஹ்தானியத் ஆகிய அல்லாஹ்வின்பால் மீளுகின்ற நன்காவது பாதை சத்தியமானதாகவும் உறுதியானதாகவும் ஆகிவிடும்.
இது பிரபஞ்சத்திலுள்ள காரணகாரியங்கள் கூட்டுச் சேர்ந்து வஸ்துகளைச் சிருஷ்டிக்கின்றன என்ற வாதமாகும். இந்த வாதத்துக்கான ஏராளமான அசாத்தியப்பாடுகளுள் வெறுமனே மூன்றை மட்டும் இவ்விடத்தில் குறிப்பிடுகிறோம். முதலாவது ஒரு மருந்தகத்தில், விதவிதமான பதார்த்தங்களால் நிரம்பிய நூற்றுக்கும் அதிகமான குப்பிகள் காணப்படுகின்றன. அந்தப் பதார்த்தங்களைக் கொண்டு உயிருள்ள ஒரு பிண்டமும் உயிர்ப்புள்ள ஓர் தைலமும் தயாரிக்க வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய பிண்டங்களுக்கும் தைலங்களுக்கும் மாதிரிகளாக ஏலவே அந்த மருந்தகத்திலேயே தயாரியக்கப்பட்ட ஏராளமான பிண்டங்களும் தைலங்களும் அங்கு காணப்பட்டன. நாம் அந்த உயிருள்ள பிண்டத்தைக் கூர்மையாக ஆராய்ந்த போது மிகவும் நுட்பமான அளவைகள் மூலம் ஒரு குப்பியிலிருந்து இரண்டு மூன்று திர்ஹம், இன்னுமொரு குப்பியிலிருந்து நான்கு ஐந்து திர்ஹம் என்று எல்லாக் குப்பியிலிருந்தும் வெவ்வேறு நுட்பமான அளவுகளில் பெறப்பட்ட பதார்த்தங்கள் அதைத் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. ஒருவேளை, ஏதேனும் ஒரு பதார்த்தத்தின் அளவு ஒரு திர்ஹம் அளவேனும் கூடிக் குறைந்தால் அந்தப் பிண்டம் உயிரற்றதாக ஆகியிருக்கும்; அதன் வினைத் திறன் வெளிப்படாது போயிருக்கும். அவ்வாறே, அந்த உயிர்ப்புள்ள தைலத்தையும் ஆராய்ந்து பார்த்தோம். அதிலும் ஒவ்வொரு குப்பியிலிருந்தும் மிகவும் நுட்பமான அளவைகளில் பதார்த்தங்கள் பெறப்பட்டிருந்தன. அணுவளவேனும் கூடுதல் குறைவு ஏற்பட்டால் அந்தத் தைலம் வினைத்திறன் அற்றதாக ஆகிவிடுகின்றது. அங்கும் ஐம்பதுக்கும் அதிகமான குப்பிகள் காணப்பட்டன. இவ்வாறு ஒவ்வொன்றிலிருந்தும் மிக நுட்பமான அளவைகளைக் கொண்டு அளந்தெடுக்கப்பட்டே அந்தப் பிண்டமும் தைலமும் ஆக்கப்பட்டிருந்தன. இப்போது, விசித்திரமான ஒரு தற்செயல் நிகழ்வின் மூலம் அல்லது ஒரு சூறாவளியின் மூலம் அந்தக் குப்பிகள் கவிழ்ந்து, அவை ஒவ்வொன்றிலிருந்தும் எந்த அளவு தேவைப்படுகின்றதோ சரியாக அதே அளவு கீழே சிந்தி ஒன்று சேர்ந்து அந்த சதைப் பிண்டத்தைத் தோற்றுவிப்பது சாத்தியமானதா? இத்தகைய ஓர் அசாத்தியப்பாடு எவ்வாறு சாத்தியமாக முடியும்! இதைவிட முட்டாள்தனமான, கண்மூடித்தனமான ஒரு கட்டுக்கதை இருக்க முடியுமா? இதை அறிவுள்ள மனிதன் எவ்வாறுதான் ஏற்றுக்கொள்ள முடியும்? கழுதை பல மடங்கு கழுதையாகி பின்னர் மனித உருவில் வந்தாலும், “என்னால் இத்தகைய மூட நம்பிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறி விரண்டோடிவிடும். இதோ இங்குள்ள உதாரணத்தில் உள்ளதைப் போன்று, ஒவ்வொரு ஜீவராசியும் நிச்சயமாக அத்தகைய உயிருள்ள ஒவ்வொரு சதைப் பிண்டமாகும். அவ்வாறே ஒவ்வொரு தாவரமும் உயிர்ப்புள்ள ஒவ்வொரு தைலமாகும். ஒவ்வொன்றும், ஏராளமான கனியங்களிலிருந்தும் விதவிதமான பதார்த்தங்களிலிருந்தும் மிகவும் நுணுக்கமான அளவைகளில் கவனமாக எடுத்து ஒன்றுசேர்க்கப்பட்டு ஆக்கப்பட்டுள்ளன. இந்தச் செயலை காரணகாரியங்களின் அல்லது அந்தக் கனியங்களின் கைகளில் ஒப்படைத்து, “காரணகாரியங்கள் தான் இவற்றை ஆக்கின” என்று கூறினால் அது, “அந்த மருந்தகத்தில் உள்ள பிண்டமும் தைலமும் ஜாடிகள் கவிழ்ந்ததன் மூலமே உருவாகியுள்ளன” என்று கூறுவதைப் போன்ற அல்லது அதைவிட நூறு மடங்கு மோசமான அறிவுக்கு அப்பாற்பட்ட, சாத்தியப்பாடற்ற ஒரு சித்தாந்தமாகவே இருக்கும். சுருக்கமாக இந்த மாபெரும் மருந்தகமான பிரபஞ்சத்தில் ஆரம்பமோ முடிவோ இல்லாத சர்வஞானமிக்க இரட்சகனின் சித்தத்தில் அளந்து நிர்ணயம் செய்யப்பட்ட வாழ்க்கைக்குத் தேவையான மூலப்பொருட்களை மெய்ப்பொருட்களாக மாற்றுவதற்கு எல்லையில்லாத ஒரு ஞானமும் முடிவில்லாத ஓர் அறிவும் அனைத்தையும் வியாபித்ததோர் ஆற்றல் அதிகாரமும் கட்டாயமானதாகும். மாறாக, குருடாகவும் செவிடாகவும் உள்ள, வரம்புகள் எதுவுமின்றி வெள்ளம் போன்று அள்ளுண்டு செல்கின்ற, ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் கனியங்களும் எழுமாறான நிகழ்வுகளும் காரண காரியங்களுமே இவற்றை ஆக்குகின்றன என்று பிதற்றும் துரதிஷ்டக்காரன் “அந்த அபூர்வ தைலம், அந்தக் குப்பிகள் கவிழ்ந்து தாமாகவே ஒன்று சேர்ந்து தோற்றம் பெற்றது” என்று கூறும் புத்தி பேதலித்த ஒரு பித்தலாட்டக்காரனை விட அல்லது போதையில் தத்தளிக்கும் ஒரு மூடனை விட மோசமான ஒரு பித்தலாட்டக்காரனும் மூடனும் ஆவான். ஆம்! இந்த வகைக்குற்பட்ட குஃப்ர் அறிவுக்கு அப்பாற்பட்டதும் புத்தி தெளிந்த நிலையிலுள்ளவர்களால் சீரணிக்க முடியாததுமான ஒரு சித்தாந்தமாகும். இரண்டாவது அசாத்தியப்பாடு படைத்தல் என்ற விடயம் வாஹிதுல் அஹத் ஆகிய சர்வ வல்லமையும் பேராற்றலும் மிக்க ஏகனிடம் ஒப்படைக்கப்படாமல் காரணகாரியங்களின் கரங்களில் ஒப்படைக்கப்பட்டால் ஒவ்வொரு ஜீவனின் உடலிலும் உடலில் பிரபஞ்சத்திலிருக்கும் பெரும்பாலான காரணகாரியங்களின் தலையீடு இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. ஆனால், உண்மை நிலை என்னவென்றால் நுளம்பு போன்ற அற்பமான ஒரு படைப்பின் உடலில் ஒன்றுக்கொன்று முரணான பல்வேறு மூலப்பொருட்களும் காரணகாரியங்களும் முழுமையான ஒழுங்கு நேர்த்தியோடு, மிகவும் நுட்பமான அளவைகளில், ஒரு கூட்டு ஒத்துழைப்புடன் ஒன்றிணைந்துள்ளதைக் காண்கிறோம். இத்தகைய மகத்தான ஒரு நிகழ்வை காரணகாரியங்களிடம் ஒப்படைத்தால் ஈயின் இறக்கை அளவேனும் பிரக்ஞையுள்ள ஒருவன் “இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பம்மாத்தாகும்” என்று கூறுவான். ஆம்! ஓர் ஈயின் சின்னஞ்சிறிய உடல் பிரபஞ்சத்திலிருக்கும் ஏகப்பட்ட மூலக்கூறுகளோடும் காரணகாரியங்களோடும் தொடர்புபட்டதாகும். அவற்றிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட ஒரு சாறாகும் என்றும் கூற முடியும். ஆகவே, அந்த நிகழ்வு ஆரம்பமோ முடிவோ இல்லாத சர்வ ஆற்றல் மிக்க ஏக இறைவனிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், அந்த ஒட்டுமொத்த சடரீதியான காரணங்களும் எப்பொழுதும் அந்த உடலின் அருகில் அல்லது உடலினுள் தயார் நிலையில் இருப்பது அவசியப்படுகின்றது. இல்லை, அதற்கும் அப்பால் அந்த உடலின் சிறியதொரு மாதிரியாக இருக்கும் அதன் கண்ணுக்குள் இருக்கும் சிறியதொரு கலத்தில் அந்த அனைத்துக் காரணகாரியங்களும் தயார் நிலையில் இருப்பது அவசியப்படுகின்றது. ஏனெனில், காரணி பௌதீக ரீதியானது எனில், அந்தக் காரணி விளைவின் அருகில் அல்லது விளைவிற்குள் சதாவும் இருப்பது கட்டாயமானதாகும். எனவே, இந்த நிலையில் ஊசி நுனியைக்கூட நுழைவிக்க முடியாத அந்த நுளம்பின் சிறிய கண்களுக்குள் அல்லது கண்களில் இருக்கின்ற கலங்களுக்குள் பிரபஞ்சத்தின் பெரும் பெரும் மண்டலங்களும் கனியத் தொகுதிகளும் மூலப்பொருட்களும் முழுமொத்தமாக நுழைந்து மிகுந்த தேர்ச்சியோடும் பூரண ஒத்துழைப்போடும் செயற்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். ஆம்! தமதும் பிரபஞ்சத்தினதும் அதன் படைப்பாளனினதும் என்று இருப்பையே நிராகரிக்கின்ற முன்னனி குதர்க்கவாதிகள் கூட இத்தகைய ஒரு சித்தாந்தத்தை இட்டும் வெட்கப்படுகின்றனர். எனவேதான் இதைவிட மொத்த இருப்பையும் நிராகரிக்கின்ற புள்ளிக்குச் செல்கின்றனர். மூன்றாவது அசாத்தியப்பாடு اَلْوَاحِدُ لاَ يَصْدُرُ اِلاَّ عَنِ الْوَاحِدِ என்ற மாறா விதியின்படி ஒரு பொருளில் ஒருமைப்பாடு அல்லது தனித்துவம் என்ற சிறப்பம்சம் காணப்பட்டால் நிச்சயமாக அந்தப் பொருள் ஒருவனால் ஒரு மூலத்திலிருந்து ஒரு கைப்பட ஆக்கப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக, அந்தப் பொருள் எத்தகைய குறைபாடுகளுமற்ற பூரண ஒழுங்கு நேர்த்தியோடும் நுணுக்கமான அளவீடுகளோடும் அனைத்துக்கும் மகுடமாக வாழ்வு என்ற சொத்துக்குப் பாத்திரமானதாகவும் இருப்பின் அது நிச்சயமாக ஒன்றுக்கொன்று முரண்பாடான காரணகாரியங்களிலிருந்தோ பலதரப்பட்ட கரங்களிலிருந்தோ வெளிப்பட முடியாது. மாறாக வாழ்வுக்கும் பாத்திர்மான அத்தகைய நுணுக்கமான ஒருமைப்பாடு குறித்த வஸ்து சர்வ வல்லமையும் மகா ஞானமும் மிக்க ஒருவனின் கரங்களிலிருந்து வெளிப்பட்டது என்பதற்கான அத்தாட்சியாகவே இருக்கும். யதார்த்தம் இதுவாக இருக்கும் போது, அங்கசம்பூரணமான தோற்றத்தையும் அழகிய வடிவமைப்புகளையும் இன்னும் ஏராளமான தனிச்சிறப்புக்களையும் பொதியப்பெற்ற குறித்த ஒரு சிருஷ்டியை அறிவீனமான, வரம்பு மீறக்கூடிய, பிரக்ஞையற்ற, சிக்கல்கள் நிறைந்த, சாமான்யமான, காரணகாரியங்களின் கரங்களில் ஒப்படைக்க முடியாது. அவ்வாறு எழுமறான நிகழ்வுகளுக்குள் உருண்டோடும் குருடான, செவிடான காரணகாரியங்களின் கரங்களில் ஒப்படைப்பது ஒரே சமயத்தில் சர்வ சாத்தியமற்ற ஆயிரம் விடயங்களைச் சாத்தியம் என்று கூறுவதைப் போன்ற அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகும். உண்மையில், இவ்வாறு எண்ணற்ற அசாத்தியப்பாடுகளுக்கு மத்தியில் நிகழும் மோதல்களும் இயக்கங்களும் அந்தக் காரணகாரியங்களின் குருட்டுத் தன்மையையும் செவிட்டுத் தன்மையையும் மென்மேலும் அதிகரிக்கவே வழிசெய்யும். ஒரு பேச்சுக்கு இந்த அசாத்தியப்பாடுகளை ஒரு பக்கமாக வைத்துவிட்டுப் பின்வரும் விடயத்தை அவதானிப்போம். பௌதீகக் காரணிகள் மோதல்கள் மூலமும் தொடுகைகள் மூலமுமே தாக்கங்களையும் விளைவுகளையும் ஏற்படுத்துகின்றன. ஆனால், அந்த இயற்கையான காரணகாரியங்களின் தொடுகைகளும் மோதல்களும் உயிரினங்களின் வெளிரங்கமான பகுதியோடே நிகழ்கின்றன. மறுபுறம், அந்தப் பௌதீகக் காரணிகளின் கரங்களால் எட்ட முடியாத, ஏன் அவற்றால் நெருங்கவும் முயாத அந்த உயிரினத்தின் அந்தரங்கம் வெளிரங்கத்தைவிடப் பத்து மடங்கு நேர்த்தியும் நுட்பமும் நுணுக்கமும் வடிவமைப்பின் அடிப்படையில் பூரணத்துவமும் மிக்கதாகக் காணப்படுகின்றது. மேலும், அந்தப் பௌதீகக் காரணிகளின் கரங்களால் பலபோது வெளிரங்கத்தையே எட்ட முடியாதுள்ள மிகச் சிறிய உயிரினங்களும் கூடக் காணப்படுகின்றன. அவற்றில் காணப்படுகின்ற நுண்கலைப்பாடுகளும் வடிவமைப்புகளும் மிகப் பெரிய படைப்பினங்களைவிட பிரமிப்பூட்டத்தக்க விதமாகக் காணப்படுகின்றன. இத்தகைய அற்புதங்களை வெகு தொலைவில் பார்க்கவோ கேட்கவோ முடியாத நிலையில் உள்ள அந்தச் சாமான்யமான, அறிவீனமான, ஒன்றுக்கொன்று முரணான காரணகாரியங்களிடம் ஒப்படைப்பதை ஏற்றுக்கொள்வதற்கு நூறு மடங்கு குருடனாகவும் ஆயிரம் மடங்கு செவிடனாகவும் இருப்பது அவசியமாகின்றது.
இந்தப் பாதை “தஷக்கல பினஃப்ஸிஹீ” என்பதாகும். அதாவது, “வஸ்துகள் தாமாகவே உருவாகின்றன” என்பதாகும். ஆம்! இந்த நம்பிக்கையிலும் ஏராளமான அசாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் மூன்றை மாத்திரம் இங்கு தெளிவுபடுத்துகின்றோம். முதலாவது பிடிவாதத்தோடிருக்கும் நிராகரிப்பாளனே! உன்னிடமிருக்கும் அனானியத் உனது புத்தியியை மிகவுமே பேதலிக்கச் செய்துவிட்டது. விளைவாக நூற்றுக்கணக்கான அசாத்தியங்களை சாத்தியமானவை என்று நம்பி ஏற்றுக்கொள்கிறாய். சற்று சிந்தி! நீயும் ஒரு படைப்பாவாய். ஆனால் நீ சாமான்யமான ஒரு பொருளல்ல. மாறாக சதாவும் தொடர்ச்சியான மாற்றங்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்க ஒழுங்கும் நேர்த்தியும் மிக்க ஓர் இயந்திரத்தைப் போன்றவனாவாய். அல்லது தொடர்ந்தேச்சையாகப் புத்துருப் பெற்றுக்கொண்டிருக்கின்ற பிரமிக்கத்தக்க ஒரு மாளிகையைப் போன்றவனாவாய். உனது உடலில் ஒவ்வொரு கணமும் எண்ணற்ற அணுக்கள் தொழிற்பட்டுக்கொண்டிருக்கின்றன. உனது மொத்த உடலும், குறிப்பாக வாழ்வாதாரங்கள் விடயத்திலும் அதிலும் குறிப்பாக மனித இனத்தின் தொடர்ச்சி விடயத்திலும் இந்தப் பிரபஞ்சத்தோடு தொடர்புபட்டிருக்கின்றது. பல்வேறு வகையான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுகின்றது. உனது உடலில் வேலை செய்யும் அணுக்கள் அந்தத் தொடர்புகள் அறுபட்டுப் போகாதிருப்பதிலும் உறவுகள் துண்டிக்கப்பட்டுவிடாதிருப்பதிலும் மிகுந்த அக்கரையுடன் காரியமாற்றுகின்றன. தமது ஒவ்வோர் எட்டையும் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு எடுத்து வைக்கின்றன. ஏதோ முழுப் பிரபஞ்சத்தையும் பார்ப்பதைப் போன்றும் பிரபஞ்சத்தோடு உனக்குள்ள தொடர்புகளை மிகத் துல்லியமாக அறிந்து வைத்திருபதைப் போன்றும் அதற்கு உகந்தவாறு தனது நடத்தைகளை அமைத்துக்கொள்கின்றன. உனது அகமும் புறமும் அந்த அணுக்களின் அத்தகைய பிரமிப்பூட்டக் கூடிய நடத்தைகளின் மூலம் பயன்பெற்றுக்கொள்கின்றன. ஆகவே, நீ உனது உடலிலிருக்கும் அணுக்களையும் கலங்களையும் ஆரம்பமோ முடிவோ இல்லாத சர்வ ஆற்றல் மிக்க ஏக இறைவனுடைய சட்டதிட்டங்களுக்கமைவாகச் செயற்படும் சின்னஞ்சிறு உத்தியோகத்தர்களாக அல்லது சிப்பாய்களாக அல்லது அந்த ஏகன் விதித்தவற்றைப் பிரபஞ்சத்தின் பக்கங்களில் எழுதுகின்ற எழுதுகோல்களின் முணைகளாக ஏற்றுக்கொள்வது கட்டாயமாகும். இல்லாவிட்டால், உனது கண்களில் கடமை புரிகின்ற ஒவ்வோர் அணுவுக்கும் உனது மொத்த உடல், நீ தொடர்புபட்டிருக்கும் இந்தப் பிரபஞ்சம் என்று அனைத்தையும் பார்க்கக்கூடிய சக்தி மிக்க ஒரு கண்ணும் உனது கடந்த மற்றும் எதிர்காலங்கள், உனது மூதாதையர்கள், வழித்தோன்றல்கள், உனக்குத் தேவையான வாழ்வாதாரங்களின் ஊற்றுகள் என்று அனைத்தையும் தரம் பிரித்தறியக்கூடிய -ஆயிரம் மகான்களிடம் இருக்க முடியுமான- ஒரு புத்திக்கூர்மையும் இருப்பதை ஒப்புக்கொள்வது இன்றியமையாததாகின்றது. இது தொடர்பான விடயங்களில் அணுவளவேனும் புத்தியைப் பாவிக்காத உன்னைப் போன்ற பிரக்ஞையற்ற ஒருவனின் உடலில் இருக்கும் ஓர் அணுவுக்கு ஆயிரம் பிளேட்டோ அளவு அறிவும் பிரக்ஞையும் இருப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? இது ஆயிரம் மடங்கு மடமையால் நிறைந்த ஒரு மூடநம்பிக்கையாகும். இரண்டாவது அசாத்தியப்பாடு உனது உடல் ஆயிரம் குப்பாக்களைக் கொண்ட பிரமாண்டமானதொரு மாளிகையைப் போன்றதாகும். அந்த ஒவ்வொரு குப்பாவும் எத்தகையதெனில் அதன் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கற்கள் எந்த வகையான தூண்களின் துணையுமின்றி பரஸ்பரம் தோள் கொடுத்தவாறு அந்தரத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆம்! உனது உடல் இப்படிப்பட்ட ஒரு மாளிகையைவிட ஆயிரம் மடங்கு பிரமிப்பூட்டக்கூடியதாகும். ஏனெனில், உனது உடல் என்ற மாளிகையானது சதாவும் பரிபூரண ஒழுங்கோடும் நேர்த்தியோடும் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உனது உடலில் காணப்படுகின்ற ஆத்மா, உள்ளம், உணர்வுகள் போன்ற வியக்கத்தக்க ஆத்மீக சாதனங்களை கருத்திற்கொள்ளாமல் உடலை மாத்திரம் எடுத்துக்கொண்டாலும் அதிலுள்ள ஒவ்வோர் அங்கமும் ஒவ்வொரு தசையும் மேற்போன்ற குப்பாக்களைக்கொண்ட ஒவ்வோர் அறையைப் போன்றகும். அதிலிருக்கும் ஒவ்வோர் அணுவும் ஒவ்வொரு கலமும் அந்தக் குப்பாக்களில் காணப்படுகின்ற கற்களைப் போன்றதாகும். அவை தாம் பணியாற்றுகிண்ற இடங்களில் எத்தகைய குறைபாடுகளையும் வைக்காமல் பரிபூரண ஒழுங்கு, நேர்த்தியோடு ஒன்றுக்கொன்று பக்கபலமாக நின்று பிரமிப்பூட்டக்கூடிய ஆக்கங்களை, அதாவது கண், காது, நாவு போன்ற அதிசயிக்கத்தக்க படைப்புகளை நிர்மாணிப்பதன் மூலம் அற்புதங்களை வெளிக்காட்டிக்கொண்டிருக்கின்றன. ஒரு பேச்சுக்கு இந்த அணுக்கள் இந்தப் பிரபஞ்சத்தை வடிவமைத்த சர்வ வல்லோனின் கட்டளைக்கு அடிபணிந்த உத்தியோகத்தர்கள் அல்ல என்று வைத்துக்கொண்டால் அப்போது உடலிலுள்ள ஒவ்வோர் அணுவும் அந்த உடலிலுள்ள ஏனைய அனைத்து அணுக்கள் மீதும் முழு அதிகாரம் மிக்கதாகவும் அதே நேரம் ஏனைய அனைத்து அணுக்களுக்கும் அடிபணிந்ததாகவும் இருக்க வேண்டும். மேலும், அந்த ஒவ்வோர் அணுவும் ஏனைய எல்லா அணுக்களையும் ஒத்ததாகவும் சம நேரத்தில் ஹாகிமியத் விடயத்தில் முரண் நிலையை உடையதாகவும் சம நேரத்தில் வாஜிபுல் வுஜூத் ஆகிய அல்லாஹ்வுக்கு மாத்திரமே உரிய ஏராளமான பண்புகளின் தோற்றுவாயாகவும் இருக்க வேண்டும். மேலும், அந்த அணு ஏராளமான வரையறைகளுக்கு உட்பட்டதாக இருப்பதோடு சம நேரத்தில் எந்தவிதக் கட்டுப்பாடுகளுமின்றி சுயாதீனமானதாகவும் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே அந்த அணுவால் சுயமாக அந்த வேலையைச் சாதிக்க முடியும். வஹ்தத் என்ற தனிமைத்துவத்தில் பொதிந்துள்ள மேற்படி தாத்பரியங்களுக்கமைய வாஹிதுல் அஹத் ஆகிய அந்தத் தன்னிகரற்ற ஏகனின் படைப்புக்களாக மட்டுமே இருக்க முடியுமான தனித்துவமான, அங்கசம்பூரணமான அந்த சிருஷ்டிகளைத் திக்குத் தெரியாத, பிரக்ஞையற்ற அணுக்களிடம் ஒப்படைப்பது தெட்டத்தெளிவான ஆயிரம் அசாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய ஓர் அசாத்தியப்பாடாகும் என்பதை அணுவளவேனும் பிரக்ஞையுள்ள எந்த ஒருவனும் புரிந்துகொள்வான். மூன்றாவது அசாத்தியப்பாடு உனது உடல் வாஹிதுல் அஹத் ஆகிய ஆரம்பமோ முடிவோ இல்லாத சர்வ ஆற்றல்மிக்க ஏகனுடைய எழுதுகோலால் எழுதப்பட்ட ஒரு கடிதமாகும். மாறாக, அதை இயற்கைக்கும் காரணகாரியங்களுக்கும் சொந்தமான ஓர் அச்சுப் பிரதியாகப் பார்த்தால் உனது உடலிலுள்ள ஓர் உயிரணு முதல் ஒன்றுக்குள் ஒன்றாக உள்ள மண்டலங்களாக பல்லாயிரம் வகையான மைகளைக் கொன்ட இயற்கையான அச்சுகள் இருப்பது அவசியமாகின்றது. உதாரணமாக, எமது கைகளில் இருக்கும் இந்தப் புத்தகம் ஒரு கடிதமாக இருப்பின் அதை எழுதுவதற்கு ஒரு எழுதுகோல் போதுமானதாகும். அந்த எழுதுகோலின் சொந்தக்காரன் தனது அறிவில் தங்கி நின்று அதை இலகுவாக எழுதிவிடுவான். மாறாக, அந்தப் புத்தகம் ஒரு கடிதம் அல்லாவிட்டால், அதாவது அது அதனை எழுதியவருடைய எழுதுகோல்களிடம் ஒப்படைக்கப்படாவிட்டால், அதாவது தானாகவே தோன்றிய ஒன்றாகும் என்று கூறப்பட்டால் அல்லது இயற்கையிடம் ஒப்படைக்கப்பட்டால் அப்போது ஓர் அச்சுப் பிரதியைப் போன்று ஒவ்வோர் எழுத்துக்காகவும் ஒவ்வோர் எழுதுகோள் அவசியப்படுகின்றது. அச்சகங்களில் புத்தகத்திலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கையளவு இரும்பு அச்சுகள் காணப்படுவதையும் இறுதியில் அவை புத்தக வடிவைப் பெறுவதையும் நாம் காண்கிறோம். அதாவது, ஓர் எழுத்தாளனிடம் ஒப்படைத்தால் சாதாரணமான ஓர் எழுதுகோல் போதுமானதாக இருக்கும்போது அவற்றிடமே ஒப்படைத்தால் அதிலுள்ள எழுத்துகளின் எண்ணிக்கையளவு எழுதுகோல்கள் தேவைப்படுகின்றன. மேலும், அந்த ஒவ்வோர் எழுத்துக்குள்ளும் சிறிய எழுத்துகளால் எழுதப்பட்ட பல பக்கங்கள் இருந்தால் அந்த ஒவ்வோர் எழுத்துக்காகவும் இன்னும் ஆயிரக்கணக்கான எழுதுகோல்கள் தேவைப்படுகின்றன. அல்லது அதற்கும் அப்பால் ஒன்றுக்குள் ஒன்றாக மகத்தான ஓர் ஒழுங்கில் தகவமைந்து உனது உடலைப் போன்ற ஒரு வடிவத்தை எடுக்கின்றதெனில் அப்போது அந்த ஒன்றுக்குள் ஒன்றாக உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் ஒவ்வோர் எழுத்துக்காகவும் ஒவ்வொரு கூறுக்காகவும் அவற்றின் எண்ணிக்கையளவு அச்சுகள் தேவைப்படுகின்றன. பரவாயில்லை, பல நூறு அசாத்தியப்பாடுகளைத் தன்னகத்தே கொண்ட இத்தகைய ஒரு சிக்கல் சாத்தியமானதுதான் என்ற உனது வாதத்தை ஒரு பக்கமாக வைத்துவிட்டு, அத்தகைய ஒரு புத்தகத்துக்காகத் தேவைப்படும் அச்சுகளை எடுத்துக்கொள்வோம். ஆம், அந்த அச்சுகளும்கூட நுணுக்கமான வடிவமைப்புகளுடன், எத்தகைய குறைபாடுகளுமற்றதாக இருந்தால்தான் அப்படிப்பட்ட ஒரு புத்தகமும் எத்தகைய குறைபாடுகளுமின்றி வெளியாக முடியும். எனவே அத்தகைய மிகவும் நுட்பமான அச்சுகளையும் கூட சர்வ வல்லமைமிக்க ஒருவனால் மாத்திரமே உருவாக்க முடியும். இல்லாவிட்டால் அந்த அச்சுகளைத் தயாரிப்பதற்கு அந்த அச்சுகளின் எண்ணிக்கையளவு அல்லது அதை விடப் பலமடங்கு அதிகமான வேறு அச்சுக்கள் தேவைப்படும். இந்தச் சங்கிலித் தொடர் இவ்வாறு செல்லச் செல்ல முடிவில்லாமல் சென்றுகொண்டே இருக்கும். நிராகரிப்பாளனே புரிந்துகொள்! இது உன்னுள் இருக்கும் அணுத் துகள்களின் எண்ணிக்கையளவு அசாத்தியப்பாடுகளையும் மூட நம்பிக்கைகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு சித்தாந்தமாகும். பிடிவாதத்தோடும் அகம்பாவத்தோடும் திரியும் நிராகரிப்பாளனே! நீ எத்தகைய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாய் என்பதை எண்ணி வெட்கித் தலைகுணி! இந்த வழிகேட்டிலிருந்து மீண்டுவிடு!
“இக்தழத்ஹு அத்தபீஅத்” அதாவது, “இயற்கை வேண்டுகிறது; இயற்கையே ஆக்குகின்றது” என்ற வாதமாகும். ஆம்! இந்தத் தீர்ப்பில் ஏராளமான அசாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. உதாரணமாக மூன்றை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறோம். முதலாவது பூரா சிருஷ்டிகளிலும் குறிப்பாக உயிரினங்களில் காணப்படும் மிகவுமே ஞானபூர்வமான, மிகவுமே தீர்க்கதரிசினமான, மிகவுமே முனயோசனையான கலையம்சங்களும் வடிவமைப்புகளும் நித்திய ஒளியாகிய ஏக இரட்சகனின் நாட்டம், பேராற்றல் என்பவற்றிடம் ஒப்படைக்கப்படாமல் குருடான, செவிடான, சிந்திக்க முடியாத இயற்கையிடம் ஒப்படைக்கப்பட்டால் இயற்கையானது சிருஷ்டிப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் எண்ணற்ற உள்ளார்ந்த இயந்திரங்களைத் தயாராக வைத்திருப்பது அவசியமாகின்றது. அல்லது ஒவ்வொரு வஸ்திடமும் பிரபஞ்சத்தையே படைத்துப் பரிபாலிக்கக் கூடிய வல்லமையையும் ஞானத்தையும் நிறுவி வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, சூரியனின் பிரதிபலிப்பும் தோற்றமும் பூமிப் பரப்பிலிருக்கும் சின்னஞ் சிறு கண்ணாடித் துண்டுகள் முதல், நீர்த் துளிகள் முதல் பல்வேறு பொருட்களில் தென்படுகின்றது. அந்தப் பிரதிபலிப்புகள் மூலம் புலப்படும் சின்னஞ்சிறு சூரியன்கள் வானவெளியில் இருக்கும் தனி ஒரு சூரியனிடம் சமர்ப்பிக்கப்பட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் ஒரு தீப்பொறிக்கேனும் தஞ்சமடைய முடியாத ஒரு சின்னஞ்சிறிய கண்ணாடித் துண்டினுள் இயற்கையாகவும் இயல்பாகவும் பார்வைக்குச் சிறிய, ஆனால் ஆழமான அர்த்தங்களையும் சூரியனுடைய அதே சிறப்பியல்புகளையும் கொண்ட ஒரு சூரியனின் இருப்பை ஏற்றுக்கொள்வது கட்டாயமாகின்றது. சிலபோது அந்தக் கண்ணாடியில் இருககும் அணுக்களின் எண்ணிக்கையளவு இத்தகைய இயற்கையான சூரியன்களின் இருப்பை ஏற்றுக்கொள்வது கட்டாயமாகின்றது. அவ்வாறுதான் அனைத்து இருப்புகளும் உயிரினங்களும் நேரடியாக நித்திய ஒளியாகிய ஏக இரட்சகனுடைய திருநாமங்களிடம் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அதாவது அந்த நாமங்களின் பிரதிபலிப்புக்களாகப் பார்க்கப்படாவிட்டால், ஒவ்வொரு வஸ்திலும் குறிப்பாக ஒவ்வோர் உயிரினத்திலும் அளவற்ற ஆற்றல் அதிகாரமும் எல்லையில்லாத அறிவு ஞானமும் இருப்பதை ஏற்றுக்கொள்வது அவசியமாகின்றது. வேறு வார்த்தையில் சொல்வதானால் ஒவ்வொன்றினுள்ளும் ஒவ்வோர் இலாஹ், ஒவ்வொரு கடவுள் இருப்பதை ஏற்றுக்கொள்வது அவசியமாகின்றது. இந்த வகை சித்தாந்தமானது பிரபஞ்ச வெளியில் இருக்கும் அசாத்தியப்பாடுகளுள் மிகவுமே அடிப்படையற்றதும் மிகவுமே நூதனமானதுமாகும். பிரபஞ்சத்தின் படைப்பாளனுடைய அற்புதமான அந்தக் கலைப் படைப்புகளை மாயையான, எவ்விதப் பெறுமானமும் பிரக்ஞையுமற்ற இயற்கையிடம் ஒப்படைக்கின்ற மனிதன் நிச்சயமாகத் தான் மிருகத்தைவிட நூறு மடங்கு மிருகமாகவும் பிரக்ஞையற்றவனாகவும் இருப்பதையே நிரூபிக்கிறான். இரண்டாவது அசாத்தியப்பாடு அப்பழுக்கற்ற ஒழுங்கும் நேர்த்தியும் கலையம்சங்களும் மகத்தான ஞானங்களும் பொதியப்பெற்ற இந்த வஸ்துகள் சர்வ ஞானமும் மகா வல்லமையும் கொண்ட ஒருவனிடம் கையளிக்கப்படாமல் இயற்கையிடம் கையளிக்கப்பட்டால் இயற்கையிலிருக்கும் ஒவ்வொரு பிடி மண்ணும் ஐரோப்பாவின் ஒட்டுமொத்த அச்சகங்களும் தொழிற்சாலைகளும் கொண்டிருக்கின்ற அளவு இயந்திரங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பது அவசியமாகின்றது. அப்போது மட்டுமே தாவரங்களின் ஆதாரமாகவும் மூலமாகவும் உள்ள அந்த ஒரு பிடி மண்ணால் பலதரப்பட்ட பூக்கள், கனிகளின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணியாக அமைய முடியும். ஏனெனில் பூக்களுக்குத் கூடையாக இருக்கும் ஒரு கிண்ணம் மண்ணில் தவணை முறையில் விதவிதமான விதைகளைப் போடும் போது அதிலிருந்து விதவிதமான நிறங்களில் விதவிதமான மணங்களில் வடிவங்களில் பூக்கள் வெளியாகின்ற அந்த நிகழ்வைப் பார்க்கும் போது, அந்த மண்ணில் அவற்றை வடிவமைத்து அலங்கரிக்கின்ற ஒரு திறன் இருப்பது போல் தோன்றுகிறது. இந்த நிகழ்வு, சர்வ வல்லமையும் ஆற்றலும் மிக்க ஏக இறைவனிடமும் சமர்ப்பிக்கப்படாவிட்டால், அந்த கிண்ணத்துக்குள் இருக்கும் மண்ணில் ஒவ்வொரு பூவுக்காகவும் வெவ்வேறான, உள்ளார்ந்த, இயற்கையான ஒவ்வோர் இயந்திரம் இல்லாமல் இந்த நிகழ்வுகள் அரங்கேற முடியாது. ஏனெனில், விதைகளைப் பொறுத்தவரை, கருக்களிலும் முட்டைகளிலும் இருப்பதைப் போன்றே அவற்றிலும் ஒரே விதமான மூலக்கூறுகளே உள்ளன. அதாவது அவை ஐதரசன், ஒட்சிசன், காபன், காபனீரொட்சைட் ஆகிய மூலக்கூறுகளாலான ஒழுங்கோ அமைப்போ அற்ற பசை போன்ற ஒரு கலவையாக இருக்கின்றன. மறுபுறம், வளி, நீர், வெப்பம், ஒளி போன்றவையும் கூட சாமான்யமானவையாகவும் பிரக்ஞை அற்றவையாகவும் வெள்ளத்தைப் போன்று முன்னால் வருவது எது என்று தெரியாது அள்ளுண்டு செல்பவையாகவும் இருக்கின்றன. எனவே ஏதேனும் நிகழ்வதாக இருந்தால் அது அந்த மண்ணிலேயே நிகழ வேண்டும். அவ்வாறெனில் பரிசுத்தமான, நேர்த்தி மிக்க, அழகிய கலைப்பாடுகளைக் கொண்ட அந்த விதவிதமான பூக்கள் அந்த மண்ணிலிருந்து வெளிப்பட வேண்டுமாயின் அந்தக் கிண்ணத்திலிருக்கும் மண்ணில் ஆத்மார்த்தமாக மொத்த ஐரோப்பாவின் அளவு தொழிற்சாலைகளும் அச்சகங்களும் இருப்பது இன்றியமையாததாகின்றது. அப்போது மட்டுமே அதனால் ஆயிரக்கணக்கில் இப்படிப்பட்ட உயிர்ப்புள்ள வண்ண வண்ணப் பட்டு இழைகளையும் இதழ்களையும் நெய்ய முடியும். இதோ, இயற்கை வணங்கிகளின் இதையொத்த குஃப்ரிய்ய சித்தாந்தங்கள் எந்த அளவு புத்திக்கு அப்பாற்பட்டது என்பதை ஒப்பிட்டுக்கொள்ளுங்கள்! அத்தோடு, தம்மை விஞ்ஞானிகளாகவும் அறிவாளிகளாகவும் கூறிக்கொண்டு இயற்கையைச் சிருஷ்டிகர்த்தாவாகக் கருதுகின்ற முட்டாள்கள் உண்மையில் அந்த அறிவிலிருந்தும் விஞ்ஞானத்திலிருந்தும் எந்த அளவு தொலைவில் உள்ளார்கள் என்பதையும், எந்த வகையிலும் அறிவுக்கும் ஞானத்துக்கும் எட்டாத சர்வசாத்தியமற்ற ஒரு மூட சித்தாந்தத்தைத் தமது பாதையாகவும் பணியாகவும் தெரிவுசெய்துள்ளார்கள் என்பதையும் கண்டுகொள்ளுங்கள். அவர்களை ஏளனமாகப் பார்த்துத் துப்பிவிட்டு, திரும்பியும் பார்க்காமல் ஒதுங்கிக்கொள்ளுங்கள்! ஒருவேளை வினவுவாயெனில்: சிருஷ்டிகளை இயற்கையிடம் ஒப்படைக்கும் போ இவ்வாறான சர்வ சாத்தியமற்ற அசாத்தியப்பாடுகளும் தீர்க்க முடியாத சிக்கல்களும் தோன்றுகின்றன. சிருஷ்டிகள் அனைத்தும் அஹதுஸ் ஸமத் ஆகிய ஏக இரட்சகனிடம் ஒப்படைக்கப்படும் போது இந்தச் சிக்கல்களும் அசாத்தியப்பாடுகளும் எவ்வாறு அகன்று விடுகின்றன? அந்தச் சிக்கல் நிறைந்த அசாத்தியப்பாடுகள், இலகுவான சாத்தியப்பாடுகளாக எவ்வாறு பரிமாணமடைகின்றன? பதில்: முதலாவது அசாத்தியப்பாட்டில் சூரியன் தனது பிரதிபலிப்பின் மூலம் மிகச் சுலபமாக, தங்கு தடைகள் ஏதுமின்றி, மிகச் சிறிய கண்ணாடித் துண்டு முதல் மிகப் பெரிய சமுத்திரங்கள் வரை தனது ஒளியையும் தாக்கத்தையும் வினைத் திறனையும் உதாரணபூர்வமான சிறிய சூரியன்களைக் கொண்டு சர்வசாதாரணமாகக் காட்டிக் கொண்டிருக்கின்றது என்பதைப் பார்த்தோம். இங்கு, சூரியனோடு அந்தப் பொருளுக்குள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டால், அப்போது ஒவ்வோர் அணுவிலும் சுயமாகவும் இயற்கையாகவும் அமையப்பெற்ற ஒரு சூரியனின் இருப்பை, அதாவது இத்தகைய சர்வ சாத்தியமற்ற ஒரு சிக்கலை ஏற்றுக்கொள்வது அவசியமாகின்றது. அவ்வாறே, ஒவ்வோர் இருப்பும் நேரடியாக அஹதுஸ் ஸமத் ஆகிய அந்த ஏகனிடம் சமர்ப்பிக்கப்பட்டால் எளிதான, சுலபமான படைப்பு வாஜிபாகிவிடுகின்றது. ஓர் இணைப்பு அல்லது ஒரு பிரதிபலிப்பினூடாக ஒவ்வொரு படைப்புக்கும் தேவையான அனைத்து அம்சங்களும் அவற்றை அடையச் செய்யப்பட முடியும். இந்தத் தொடர்பு அறுக்கப்பட்டு, சிருஷ்டிகளில் காணப்படும் அடிமைத்துவம் ஒருதலைப்பட்சமான சுயாதீனத் தன்மைக்கு மாறினால், ஒவ்வொரு வஸ்தின் கடிவாளம் அதனதன் கரங்களில் அல்லது இயற்கையிடம் ஒப்படைக்கப்பட்டால், அப்போது பிரபஞ்சத்தின் சிறியதோர் சாராம்சமாகத் திகழும் நுளம்பு போன்ற ஓர் உயிருடைய அற்புதமான உடலின் சிருஷ்டிகர்த்தாவாக அதனுள் இருக்கும் குருட்டுத் தன்மையும் செவிட்டுத் தன்மையும் வாய்ந்த இயற்கையை ஏற்றுக்கொள்ள வேண்டி ஆகிவிடுகின்றது. அதாவது, அதனுள் இருக்கும் குருடான, செவிடான அந்த இயற்கையை பிரபஞ்சத்தைப் படைத்துப் பரிபாலிக்கக் கூடிய ஆற்றலையும் ஞானத்தையும் பொதியப்பெற்றதாக ஏற்றுக்கொள்வது அவசியமாகின்றது. இது ஒன்றல்ல, பல்லாயிரம் அசாத்தியப்பாடுகளை உள்ளடக்கியதாகும். சுருக்கமாக வாஜிபுல் வுஜூத் ஆகிய ஏகனுக்கு இணையும் துணையும் எந்த வகையிலும் சாத்தியமற்றதாகும். அவ்வாறே, அவனது ருபூபிய்யத்திலும் பரிபாலிப்பிலும்கூட ஏனைய வஸ்துகள் தலையீடு செய்து அவனுக்கு இணையாகவும் துணையாகவும் உதவியாகவும் இருப்பது சர்வசாத்தியமற்றதாகும். ஆனால், இந்த இரண்டாவது அசாத்தியப்பாட்டிலுள்ள சிக்கலைப் பொறுத்தவரை ரஸயிலின் பல்வேறு பகுதிகளில் நிறுவப்பட்டதற்கிணங்க ஒட்டுமொத்த வஸ்துகளும் வாஹிதுல் அஹதிடம் ஒப்படைக்கப்பட்டால் அனைத்து வஸ்துகளும் ஒரு வஸ்தின் அளவு சுலபமானதாகவும் காரணகாரியங்களிடமும் இயற்கையிடமும் ஒப்படைக்கப்பட்டால் ஒவ்வொரு வஸ்தும் ஒட்டுமொத்த வஸ்துகளின் அளவு சிக்கல் நிறைந்ததாகவும் மாறிவிடும் என்பதை வலுவான ஆதாரங்களுடன் நிறுவியுள்ளோம். அவற்றுள் ஓர் அத்தாட்சியின் சுருக்கத்தைப் பார்ப்போம்: ஒரு மனிதன் ஓர் அரசனோடு அந்த அரசனின் ஓர் அதிகாரி அல்லது சிப்பாய் என்ற வகையில் சார்ந்திருந்தால் அந்த அதிகாரி அல்லது சிப்பாய் அந்த அரசனுடனான பிணைப்பிலிருந்து கிடைக்கும் பலத்தின் மூலம் தனது சொந்தப் பலத்தைவிடப் பல இலட்சம் மடங்கு அதிகமான பணிளுக்குக் காரணியாக இருக்க முடியும். அந்த அரசனின் நாமத்தைக்கொண்டு தேவையெனில் ஓர் ஆளுனரையும் கைது செய்யலாம். ஏனெனில் தான் செய்கின்ற பணிகளுக்குத் தேவையான சாதனங்களையும் பலத்தையும் தானாகவே சுமக்க வேண்டிய தேவை அவனுக்கு இல்லை. அரசனுடனான அந்தப் பிணைப்பின் பலனாக அரசனுக்குச் சொந்தமான களஞ்சியசாலைகள் அனைத்தும் அவனுடன், அவனது காரியங்களுக்குப் பக்கபலமாகத் தயார் நிலையில் இருக்கும். அரசனுடைய இராணுவம் அந்த ஆயுதத் தளபாடங்களையும் பலத்தையும் சுமக்கும். எனவே, அவன் செய்கின்ற பணிகள் அதிசயிக்கத்தக்க விதமாக ஓர் அரசனுடைய பணிகளைப் போன்றும் அவனது வேலைகள் ஓர் இராணுவத்தின் வேலைகளைப் போன்றும் சிறப்பாக இருக்கும். ஓர் எறும்பு அந்தப் பிணைப்பின் மூலமாக பிர்அவ்னுடைய மாளிகையைத் துவம்சம் செய்கின்றது. ஒரு கொசு, அந்தப் பிணைப்பின் பலனாக நும்ரூதைப் பிணமாக்கியது. அவ்வாறே, அந்தப் பிணைப்பின் மூலம் கடுகளவேயான ஓர் தேவதாறு விதை பிரமாண்டமான தேவதாறு மரத்தின் மொத்த உள்ளடக்கத்தையும் தன்னில் சுமக்கின்றது. அந்த அதிகாரியின் அல்லது சிப்பாயின் அரசனோடுள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டுத் தன்னிச்சையாகவும் சுயாதீனமாகவும் விடப்பட்டால், அவன் அந்த வேலைகளைச் செய்வதற்கு அரசனுக்குச் சொந்தமான மொத்த சாதனங்களையும் ஆயுதங்களையும் பலத்தையும் தனது கையில் சுமக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. இல்லாவிட்டால் அந்த சின்னஞ்சிறு கைகளில் சுமக்க முடியுமான சாதனங்களின் அளவே அவனால் வேலைகளை செய்ய முடியும். முன்னைய நிலையில் மிகவும் எளிதாகச் செய்த வேலைகளை, தற்போது அவனிடம் செய்யுமாறு வேண்டப்பட்டால், அவற்றைச் செய்வதற்கு அவன் தனது கைகளில் ஓர் இராணுவத்தின் பலத்தையும், தனது முதுகில் ஓர் அரசனின் ஆயுதக் களஞ்சியங்களில் இருக்கின்ற அளவு ஆயுதங்களையும் சுமக்க வேண்டிய அவசியம் ஏற்படுகின்றது. பொழுது போக்குக்காக மூடக் கற்பனைகளையும் கதைகளையும் காப்பியங்களாக எழுதும் கோமாளிகள் கூட இத்தகைய கற்பனைகளை நினைத்து வெட்கப்படுவார்கள்!. சுருக்கமாக இருப்பு வாஜிபாக இருக்கும் வாஜிபுல் வுஜூத் ஆகிய அல்லாஹ்விடம் அனைத்தையும் ஒப்படைப்பதில் வாஜிபானதொரு சுலபம் உள்ளதைப் போன்றே சிருஸ்டிக்கும் காரியத்தை இயற்கையிடம் ஒப்படைப்பதில் அசாத்தியத்துக்கும் அப்பாற்பட்ட ஒரு சிக்கலும், அறிவுக்கும் புத்திக்கும் அப்பாற்பட்ட ஒரு முட்டாள்தனமும் காணப்படுகின்றது. மூன்றாவது அசாத்தியப்பாடு வேறு ரஸாயில்களில் கூறப்பட்டுள்ள இரண்டு உதாரணங்கள் மூலம் இந்த அசாத்தியப்பாட்டைத் தெளிவுபடுத்துகிறோம். முதலாவது உதாரணம்: ஏகாந்தமான ஒரு பாலைவனத்தில் பூரணத்துவம், அலங்காரம், நுண்கலையம்சங்கள் என்று எல்லாக் கோணங்களிலும் ஒட்டுமொத்த நாகரிகங்களுக்கும் மகுடமாக இருக்கத்தக்க வகையில் கட்டப்பட்டிருந்த அழகிய ஒரு மாளிகைக்குள் நுழைந்த மிகவும் மூர்க்கமான ஒரு மனிதன் அந்த அற்புதமான மாளிகையை சுற்றுமுற்றும் அவதானிக்கிறான். அங்கே ஒழுங்கும் நேர்த்தியும் நுண்கலையம்சங்களும் பொதிந்த பல்லாயிரக்கணக்கான பொருட்கள் காணப்பட்டன. அவனோ அவனிடமிருந்த மூர்க்கத்தனம் காரணமாகவும் மூடத்தனம் காரணமாகவும் எத்தகைய புறத் தலையீடுமின்றி அந்த மாளிகைக்குள்ளிருக்கும் பொருட்களுள் ஏதேனுமொன்றே அந்த மாளிகையையும் அதனுள்ளிருக்கும் அனைத்துப் பொருட்களையும் உருவாக்கியிருக்க வேண்டும் என்று கருதி அந்தக் கோணத்தில் அதை ஆராய ஆரம்பிக்கிறான். ஒவ்வொரு பொருளாகப் பார்த்துக்கொண்டு செல்லும் போது அங்குள்ள ஏதேனும் ஒரு பொருளே அந்த அனைத்தையும் ஆக்கியிருக்க வேண்டும் என்பதை அவனது அந்த மூடத்தனமான அறிவு கூட ஏற்றுக்கொள்ள மறுத்தது. இவ்வாறு செல்லும் போது அவன் அந்த மாளிகையின் ஆக்கத் திட்டத்தையும் அங்குள்ள பொருட்களின் தரவுகளையும் நிர்வாகச் சட்டதிட்டங்களையும் உள்ளடக்கிய ஓர் ஏட்டைக் கண்டெடுத்தான். உண்மையில் குருடாகவும் செவிடாகவும் ஆற்றலின்றியும் இருந்த அந்த ஏடும்கூட ஏனைய பொருட்களைப் போன்றே அந்த மாளிகையை நிர்மாணிப்பதற்குத் தேவையான எத்தகைய ஆற்றலையும் வல்லமையையும் பெற்றதாக இருக்கவில்லை. ஆனால் வேறு வழியின்றி, முன்னைய பொருட்களோடு ஒப்பிடும் போது அறிவியல் விதிகளின் ஒரு மகுடமாக அது இருப்பதாலும் அந்த மொத்த மாளிகைக்கும் அந்த ஏட்டுக்கும் இடையிலுள்ள தொடர்பின் காரணமாகவும் “இதோ, இந்த ஏடுதான் இந்த மாளிகையை நிர்மாணித்து, ஒழுங்குபடுத்தி இங்குள்ள பொருட்களை ஊரிய இடங்களில் வைத்திருக்க வேண்டும்” என்று தனது மூடத்தனம் காரணமாகப் புத்தி பேதலித்தவனைப் போன்று புலம்பினான். ஆம், இந்த உதாரணத்தைப் போன்றே, அந்த மாளிகையைவிட எண்ணற்ற மடங்கு பிரமாண்டமான, ஒழுங்கும் நேர்த்தியும் மிக்க, எல்லா வகையான அற்புதங்களாலும் கலை ஞானங்களாலும் நிறைந்த இந்தப் பிரபஞ்ச மாளிகைக்குள் இயற்கை வணங்கிகளின் சித்தாந்தங்களைச் சுமந்து, இறை நிராகரிப்பைத் தனது பாதையாகத் தெரிவு செய்த மூர்க்கமான ஒரு மனிதன் நுழைகிறான். அவன் அந்த மாளிகையையும் அங்குள்ள வஸ்துகளையும் பார்த்துவிட்டு அந்த அனைத்தும் அந்த மாளிகையிலுள்ள வஸ்துகளின் எல்லைக்கு அப்பாலிருக்கும் வாஜிபுல் வுஜூத் ஆகிய வல்லோன் அல்லாஹ்வின் சிருஷ்டிகளாகும் என்பதைச் சிந்திக்காமல் அவனைவிட்டும் தனது முகத்தைத் திருப்பிக்கொண்டு வஸ்துகளின் எல்லைக்குள் உள்ள படைப்புகளை நோக்கிப் பார்வையைச் செலுத்துகிறான். அங்கு இறை விதியால் விதிக்கப்பட்டவை எழுதி அழிக்கப்படுகின்ற ஒரு பலகையைப் போல் இறை வல்லமையின் அமுலாக்க விதிகளுக்கேற்ப மாறுகின்ற ஓர் ஏடாக மட்டுமே இருக்க முடியுமான, மிகவும் தவறான முறையில் “இயற்கை” என்ற நாமம் சூட்டப்பட்ட, இறை சட்டதிட்டங்களையும் வஸ்துகளின் தரவுகளையும் உள்ளடக்கிய ஓர் ஏட்டைக் காண்கிறான். பின்னர், “உண்மையில் இந்த வஸ்துகளுக்கு ஒரு காரணி தேவைப்படுகின்றது. அவற்றுக்கு இந்த ஏட்டோடுள்ள தொடர்பைப் போன்ற தொடர்பு வேறு எதனுடனும் கிடையாது. உண்மையில் கேள்வி பார்வையோ, பிரக்ஞையோ, ஆற்றலோ அற்ற அந்த ஏட்டால் இந்தப் படைப்புகளை சிருஷ்டிக்க முடியாது. ஆனால், என்னால் ஆதி அந்தமற்ற பூர்வீகமான ஒரு படைப்பாளனை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, மிகப் பொருத்தமானது என்ற வகையில் இந்த ஏடே இவற்றை ஆக்கயுள்ளது. அதனால் அதைச் செய்ய முடியும் என்று தீர்ப்பளிக்கிறேன்” என்று கூறினான். நாமும் அவனுக்குப் பதிலாகக் கூறுகின்றோம்: முட்டாள்தனங்களுள் மிக மோசமான முட்டாள்தனத்தால் பாதிக்கப்பட்டு, புத்தி பேதலித்தும் போயுள்ள முட்டாளே! உனது தலையை இயற்கை என்ற சகதிக்குள் இருந்து வெளியேற்று! ஒரு கணம் அண்ணாந்து அணு முதல் அண்டசராசரங்கள் வரை அனைத்து வஸ்துகளும் சர்வ மாட்சிமைமிக்க படைப்பாளனின் இருப்புக்குத் தத்தமது மொழிகளாலும் தம்மிடமுள்ள அத்தாட்சிகளாலும் சான்று பகர்வதைப் பார். அந்த மாளிகையை நிர்மாணித்துவிட்டு அந்த ஏட்டில் அந்த மாளிகையின் திட்டத்தை எழுதிய நித்திய வடிவமைப்பாளனின் பிரதிபலிப்புகள் ஒவ்வொரு வஸ்திலும் புலப்படுவதைக் கண்டுகொள்! அவனது கட்டளைகளைக் கேட்டு குர்ஆனுக்குச் செவிதாழ்த்து! உன்னுடைய அந்தப் பம்மாத்துகளிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்! இரண்டாவது உதாரணம்: மிகவும் முரட்டு சுபாவமுள்ள ஒரு மனிதன் ஓர் இராணுவ முகாமுக்குச் செல்கிறான். அங்கு மிகுந்த ஒழுங்கும் நேர்த்தியும் மிக்க ஒரு பெரும் படை ஒட்டுமொத்தமாக ஒரே நேரத்தில் அணிவகுத்துச் செல்வதையும் அவர்களின் அச்சொட்டான அசைவுகள் செயற்பாடுகளையும் ஒருவரின் அசைவைத் தொடர்ந்து ஒரு பரிவாரமே அமர்வதையும் நிமிர்வதையும் இயங்குவதையும் ஆயுதம் தரிப்பதையும் கண்டான். ஆனால், முரட்டு சுபாவம் காரணமாக வீங்கிப் போயிருந்த அவனது தலையில் அங்கே ஒரு தளபதி இருக்க வேண்டும், அவர் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கும் மன்னரின் கட்டளைகளுக்கும் அமைய அந்த இராணுவத்தை வழிநடாத்துகின்றார் போன்ற விடயங்களெல்லாம் ஏறவில்லை. அப்படியொரு விடயத்தையே நிராகரித்தும் விட்டான். எனவே, அந்த இராணுவ வீரர்கள் ஏதோ ஒரு கயிற்றால் ஒருவரோடொருவர் பிணைக்கப்பட்டுள்ளதாக கற்பனை செய்துகொள்கிறான். பின்னர், தான் கற்பனை செய்துகொண்ட அந்தக் கயிறு எப்படிப்பட்ட அபூர்வமானதொரு கயிறாக இருக்க வேண்டும் என்று சிந்தித்து வியப்பில் ஆழ்ந்தான். பின்னர் ஹாயா ஸோஃபியா போன்ற ஒரு பள்ளிவாசலுக்குச் சென்று ஜுமுஆத் தொழுகையை அவதானிக்கிறான். அங்கே, ஒரு ஜமாத் ஒரு மனிதனின் சத்தத்தைக் கேட்டு நிமிர்வதையும் மடிவதையும் குணிவதையும் அவதானித்தான். அவன் ஷரீஅத் என்ற ஆத்மார்த்தமான, அகிலார்ந்த சட்டத் தொகுப்பைப் பற்றியோ அந்த ஷரீஅத்தின் சொந்தக்காரனுடைய கட்டளைகளில் இழையோடியுள்ள ஆத்மீகப் பிணைப்புக்களைப் பற்றியோ அறியாதிருந்த காரணத்தினால் அந்த ஜமாஅத் சடரீதியான ஏதேனும் ஒரு கயிற்றால் கட்டாயம் பிணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும், அந்தக் கயிறே அவர்களை வலுக்கட்டாயமாக அடிமைப்படுத்தி அவ்வாறு அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றது என்றும் கற்பனை செய்தவாறு, மனித உருவில் நடமாடும் மிகவுமே மூர்க்கமான மூடர்களைக் கூட எள்ளிநகையாட வைக்கும் ஒரு சித்தாந்தத்தைச் சுமந்தவனாக வெளியேறுகிறான். ஆம்! இந்த உதாரணங்களிலுள்ளதைப் போன்றே, சர்வ வல்லமை மிக்க நித்திய அரசனாகிய வணக்கத்துக்குரிய நாயனின் எண்ணற்ற சிப்பாய்களைக்கொண்ட பிரமாண்டமானதொரு முகாமாக அல்லது மிகவும் விசாலமான ஒரு வணக்கஸ்த்தலமாகத் திகழும் இந்தப் பிரபஞ்சத்துக்குள் மடமையினதும் அதன் விளைவாக ஏற்படுகின்ற முரட்டு சுபாவனத்தினதும் மொத்த உருவமான, இயற்கைவாதச் சித்தாந்தத்தைச் சுமந்த ஒரு நிராகரிப்பாளன் நுழைகிறான். அங்கு அந்த நித்திய அரசனுடைய சர்வ ஞானத்தின் பிரதிபலிப்பாகத் திகழும் பிரபஞ்ச ஒழுங்கில் காணப்படுகின்ற ஆத்மார்த்தமான நியதிகளை, ஏதோ சடரீதியான ஒவ்வொரு வஸ்தாக ஊகித்துக்கொள்கிறான். அவ்வாறே மெய்ப் பண்போ பொருண்மையோ அற்ற, பண்புசார் இயல்பை உடைய, வுஜூதுல் இல்ம் எனப்படும் அறிவியல் மற்றும் ஆத்மார்த்தமான இருப்பை மாத்திரமே கொண்ட தெய்வீக பரிபாலிப்பின் சட்டதிட்டங்களையும் விதிமுறைகளையும் புறவயமான, பௌதீகத் தன்மை உடைய, சட ரீதியான இருப்புகளாகக் கற்பனை செய்துகொள்கிறான். பின்னர் தெய்வீக வல்லமையின் இடத்துக்கு வெறுமனே அறிவியல்சார் இருப்பைக்கொண்ட அந்த சட்டதிட்டங்களைப் பிரதியீடு செய்கிறான். பின்னர் அதற்கு ‘இயற்கை’ என்ற நாமத்தைச் சூட்டி, இறை வல்லமையின் ஒரு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க முடியுமான சக்தியைச் சுயாதீனமானதும் சர்வ ஆற்றல் மிக்கதுமான ஒரு வல்லமையாகச் சிலாகித்துக்கொள்கிறான். இவனிடமிருப்பது, உதாரணத்தில் வருகின்ற முரட்டு சுபாவத்தையும் மூடத்தனத்தையும்விட ஆயிரம் மடங்கு மோசமானதாகும். சுருக்கமாக இயற்கை வணங்கிகள் ஓர் ஊகத்தின் அடிப்படையில், யதார்த்தத்துக்குப் புறம்பாக, ‘இயற்கை’ என்று கூறிய விடயமானது, ஹகீகதே ஹாரிஜியா எனப்படும் இருப்பியல் ரீதியான சத்தியத்தைப் பொதியப்பெற்றதாக இருப்பின் அதிக பட்சம் ஓர் ஓவியமாக இருக்க முடியும். ஓவியனாக முடியாது. வடிவமைப்பாகும், வடிவமைப்பாளனாக முடியாது. தீர்ப்பாகும், தீர்மானிக்கும் சக்த்தியாக இருக்க முடியாது. படைப்பியல் விதியாகும், விதிப்பனாக முடியாது. நியதியாகும், நிர்ணயராக முடியாது. திட்டங்களாகும், திட்டகர்த்தாவாக முடியாது. மாட்சிமைக்கு முன்னால் திரைகளாக உள்ள படைப்புகளாகும், படைப்பாளனாக முடியாது. துலங்கல் தன்மையுள்ள ஓர் இயல்பாகும், தூண்டலின் அல்லது காரியத்தின் கர்த்தாவாக முடியாது. சட்டமாகும், அதிகாரமாகவோ ஆற்றலாகவோ இருக்க முடியாது. வரையறைகளாகும், வரையறுப்பாளனாக முடியாது. சுருக்கமாக வஸ்துகள் உள்ளன. அதில் எத்தகைய சந்தேகங்களுமில்லை. இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் கூறப்பட்டதைப் போன்று வஸ்துகளின் சிருஷ்டிப்புக்குப் பகுத்தறிவின் அடிப்படையில் நான்கு பாதைகளைத் தவிர வேறு ஒரு பாதையை கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாது. அந்த நான்கு பாதைகளுள் முதல் மூன்று பாதைகளின் செல்லுபடியற்ற தன்மை தலா மும்மூன்று அசாத்தியப்பாடுகளையும் வலுவான அத்தாட்சிகளையும் கொண்டு நிரூபிக்கப்பட்டுவிட்டது. எனவே, நான்காவது பாதையாகிய வஹ்தத்துடைய அதாவது ஏகத்துவத்துடைய பாதை சந்தேகத்துக்கிடமின்றி உறுதியாக நிரூபிக்கப்படுகின்றது. மாத்திரமன்றி அதுவே இன்றியமையாததாகவும் நிர்ப்பந்தமானதாகவும் மாறிவிடுகின்றது. ஆம், அந்த நான்காவது பாதையைப் பொருத்தவரை ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ள اَفِى اللَّهِ شَكٌّ فَاطِرِ السَّمَوَاتِ وَاْلاَرْضِ என்ற வசனம் வாஜிபுல் வுஜூத் ஆகிய ஏக இறைவனின் உலூஹிய்யத்தையும், எல்லா வஸ்துகளும் நேரடியாக அவனது குத்ரத் கரங்களிலிருந்து வெளிப்படுகின்றன என்பதையும், வானங்களும் பூமியும் அதிலுள்ளவை அனைத்தும் அவனது பரிபாலிப்புக்குக் கீழ் உள்ளன என்பதையும் சந்தேகத்துக்கிடமின்றி தெளிவாகப் பிரகடனம் செய்கின்றது. காரணகாரிய பக்தனே! இயற்கையை வணங்கும் நாதியற்ற மனிதனே! வஸ்துகளின் இயற்கையும் கூட வஸ்துகளைப் போன்றே ஒரு சிருஷ்டியாகும் என்பதே யதார்த்தமாகும். ஏனெனில் கலையம்சங்களைக் கொண்டதாகவும் மாற்றத்துக்குற்படுபவதாகவும் தோன்றி மறையக்கூடியவையாகவும் உள்ளது. மேலும் எல்லா விளைவுகளையும் போன்றே இயற்கையின் வெளிரங்கமான காரணிகளாகவும் படைப்புகளே உள்ளன. அத்துடன், எல்லா வஸ்துகளின் இருப்பும் ஏகப்பட்ட காரணிகளிலும் சாதனங்களிலும் தங்கியுள்ளன. அவ்வாறெனில், அந்த இயற்கையை வகுத்த, அந்தக் காரணிகளையும் சாதனங்களையும் படைத்த சர்வ வல்லமை மிக்க ஒருவன் நிச்சயமாக இருக்க வேண்டும். எனவே அந்த சர்வ வல்லோனுக்கு இத்தகைய பலவீனமான காரணிகளையும் சாதனங்களையும் தனது பரிபாலனத்திலும் படைப்புகளிலும் பங்குதாரர்களாக ஆக்கிக்கொள்வதற்கு என்னதான் தேவை உள்ளது? ஹாஷா! இல்லவே இல்லை. மாறாக நேரடியாகவே தனது திரு நாமங்களின் பிரதிபலிப்புக்களையும் அறிவு ஞானத்தையும் காண்பிப்பதற்காக விளைவை காரணியுடன் ஒன்றாகப் படைக்கிறான். அதாவது ஓர் ஒழுங்குக்குற்பட்ட காரணகாரியத் தொடரையும், காரணகாரியங்களுக்கும் விளைவுகளுக்கும் இடையிலான நெருக்கத்தையும் ஏற்படுத்தி படைப்புகளை, அதாவது விளைவுகளை காரணகாரியங்களுடன் ஒன்றாகப் படைக்கின்றான். இதன் மூலம் மனிதன் வஸ்துகளில் தனக்குக் குறைபாடுகளாக அல்லது இரக்கமின்மையாக அல்லது கொடுமையாகத் தென்படும் விடயங்களுக்கெதிராக எழுப்பும் விமர்சனங்களுக்கான முகவரியாக அமையத்தக்க அமைப்பில் இயற்கையையும் காரணகாரியங்களையும் அவனது மகா வல்லமைக்கான திரைகளாக ஆக்கி வைத்துள்ளான். இந்த வகையில் தனது மகத்துவத்துக்கும் கீர்த்திக்கும் மனித உள்ளங்களில் களங்கம் ஏற்பட்டுவிடாது பாதுகாத்தான். ஒரு கடிகாரத் தயாரிப்பாளன் ஒரு கடிகாரத்தைத் தயாரிப்பதற்காக, சக்கரங்கள் முதல் தேவையான எல்லா அம்சங்களையும் தயார்படுத்திவிட்டு தனது கைப்பட அந்தக் கடிகாரத்தைத் தயாரித்தெடுக்கிறான். இது இலகுவானதா? அல்லது அந்த சக்கரங்களை எடுத்து, அதற்குள் கடிகாரத்தைத் தயாரிக்கும் சக்தி வாய்ந்த அபூர்வமான ஓர் இயந்திரத்தைத் தயாரித்து, கடிகாரத்தைத் தயாரிக்கும் பொறுப்பை அந்த சாமான்யமான இயந்திரத்திடம் ஒப்படைக்க முனைகிறான். இதுதான் இலகுவானதா? நீயே நீதிபதியாக இரு உனது மனசாட்சிக்கு விரோதமாகச் செயற்படும் உனது புத்தியிடம் ஒரு முறை கேட்டுப்பார்!.. அல்லது ஓர் எழுத்தாளன் மையையும் எழுதுகோலையும் காகிதங்களையும் எடுத்து வந்து, அவற்றைக்கொண்டு தனது கைப்பட அவனது புத்தகத்தை எழுதுகிறான். இது இலகுவானதா? அல்லது, அந்தப் பேனா, மை, காகிதம் என்பவற்றினுள் அந்தப் புத்தகத்தைவிட வேலைப்பாடுகள் கூடிய, சிக்கல்களும் சிரமங்களும் நிறைந்த, அந்தப் புத்தகத்துக்கென்றே தனித்துவமான ஓர் இயந்திரத்தை அல்லது சாதனத்தைப் படைத்து, பின்னர் அந்தப் பிரக்ஞையற்ற இயந்திரத்திடம் புத்தகத்தை எழுதும் பணியை ஒப்படைக்க முனைகிறான். இது இலகுவானதா? இதோ இந்தச் சமாச்சாரம், சுயமாக எழுதுவதைவிடப் பல நூறு மடங்கு அசாத்தியமானதும் சிக்கல் நிறைந்ததும் அல்லவா? ஒரு வேளை பின்வருமாறு வினவுவாயெனில்: ஆம், ஒரு புத்தகத்தை எழுதக் கூடிய ஓர் இயந்திரத்தை ஆக்குவது, அந்தப் புத்தகத்தை விடப் பல நூறு மடங்கு சிக்கலானதுதான். ஆனால், அத்தகைய ஓர் இயந்திரத்தைக்கொண்டு ஒரே புத்தகத்தின் பல பிரதிகளை எடுத்துக்கொள்ள முடியும் என்ற வகையில் அது காரியத்தை இலகுவாக்கிவிடுகின்றதல்லவா? பதில்: ஆதி அந்தமில்லாத அழகிய வடிவமைப்பாளன் தனது எல்லையற்ற வல்லமை மூலம் வஸ்துகளில் தொடர்ந்தேர்ச்சையான ஒரு புதுப்பித்தலையும் அதன் மூலம் தனது நாமங்களின் எண்ணற்ற பிரதிபலிப்புக்களையும் வெளிப்படுத்துகிறான். இதற்காக வஸ்துகளின் ஆளுமையாக்கங்களையும் தனிப்பட்ட தோற்றங்களையும் எத்தகைய மகத்தான ஓர் அமைப்பில் சிருஷ்டிக்கிறானெனில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரப்பானியக் கடிதமாக அல்லது புத்தகமாகத் திகழும் ஒவ்வொரு வஸ்தும் பிறிதொரு வஸ்தோடு சரிசமனானதாகவோ, சரிநிகரானதாகவோ இருப்பதில்லை. ஒவ்வொரு நிலைமையிலும் வெவ்வேறு அர்த்தங்களைப் பிரதிபலிப்பதற்காக வெவ்வேறு தோற்றங்கள் அவற்றுக்கு வழங்கப்படுகின்றன. உனது கண்கள் குருடாக இல்லையென்றால் இதோ மனித முகங்களை நோட்டமிடு. ஆதம் (அலை) உடைய காலத்திலிருந்து இன்று வரை, ஏன் மறுமை வரையிலும் இந்தச் சிறிய முகத்தில் அடிப்படை அங்கங்களில் காணப்படும் ஒருமைப்பாட்டுடன் கூடவே ஒவ்வொரு முகத்தையும் ஏனைய முகங்களோடு ஒப்பிடும் போது வேறுபிரித்தறியக்கூடிய தனித்துவமான ஒரு வித்தியாசம் இருப்பதைக் கண்டுகொள்வாய். அதாவது, ஒவ்வொரு முகமும் இரண்டாவது பிரதியற்ற ஒரு தனித்துவமான புத்தகமாகும். ஏதேனும் ஒன்றின் நேர்த்தியான வடிவமைப்புக்காக மாத்திரம் அலாதியான எழுத்தணியும் அலாதியான ஒழுங்கமைப்பும் அலாதியான பதிப்பும் தேவைப்படுகின்றது. அத்துடன் ஒவ்வொன்றுக்கும் தேவையான பதார்த்தங்களைத் திரட்டுவதற்காகவும் விநியோகிப்பதற்காகவும் அவ்வப்போது உடலுக்குத் தேவையான அனைத்தையும் உடனுக்குடன் வழங்குவதற்காகவும் முற்றிலும் பிரத்தியேகமானஓர் ஏற்பாடு அவசியப்படுகின்றது. என்றாலும், ஒரு கருதுகோளுக்கு இயற்கையை ஓர் அச்சகமாக வைத்துக்கொள்வோம். ஆனால், அந்த அச்சகத்துக்குரிய ஒழுங்கை ஸ்தாபித்து நிர்ணயிக்கப்பட்ட அந்த ஒழுங்கின் பிரகாரம் ஓட்டுவதற்கு அப்பால் அதனோடு தொடர்பான, ஆனால் அதைவிட நூறு மடங்கு சிக்கலான காரியங்கள் உள்ளன. உயிரினங்களின் உடலிலிருக்கும் மூலக்கூறுகளை உலகெங்கும் நுணுக்கமான அளவைகளில் சமநிலையில் குழம்பங்கள் ஏற்படாமல் படைத்து, தேவையான சந்தர்ப்பத்தில் தேவையான வடிவத்தில் தேவைக்கேற்ற அளவு அவற்றைத் திரட்டிக்கொண்டு வந்து, ஒவ்வொரு பிரதிக்காகவும் அதற்குரிய அச்சகத்தில் ஒப்படைக்கின்ற துல்லியமான பணிக்கு மீண்டும் அந்த அச்சகத்தை நிர்மாணித்த சர்வ வல்லமை மிக்கவனின் ஆற்றலையும் அதிகாரத்தையுமே நாட வேண்டும். எனவே, மேற்படி கருதுகோளும், கூட அர்த்தமற்றதொரு மூட வாதமாகும். ஆம்! இந்தக் கடிகார மற்றும் புத்தக உதாரணங்களைப் போல் சகலதின் மீதும் ஆற்றலுடைய சர்வ மாட்சிமைமிக்க படைப்பாளனே காரணகாரியங்களைப் படைத்து, விளைவுகளையும் படைக்கிறான். அதன் போது தனது ஞானத்தின் அடிப்படையில் விளைவுகளை காரணகாரியங்களுடன் பிணைக்கிறான். பிரபஞ்ச ஒழுங்குடன் தொடர்பான இறை சட்டங்களின் தொகுப்பாகத் திகழும் தெய்வீக நியதிகளின் ஒரு பிரதிபலிப்பையும் பொருட்களில் அந்தப் பிரதிபலிப்புக்கான ஒரு கண்ணாடியாக அல்லது தெறிப்பிடமாக மாத்திரமே திகழும் பொருட்களின் இயற்கையையும் தான் நாடிய பிரகாரம் பொருட்களில் நிர்ணயித்துள்ளான். மேலும், அந்த இயற்கையில் பகிரங்கமான இருப்புக்குப் பாத்திரமான பகுதியை அவன் தனது வல்லமையைக்கொண்டு படைத்து, வஸ்துகளை அந்த இயற்கையின் மீது சிருஷ்டிகின்றான். இவ்வாறு இரண்டையும் ஒன்றோடொன்று கலந்து வைத்துள்ளான். இப்போது அறிவுக்கேற்றமான, எண்ணற்ற அத்தாட்சிகளின் விளைவாகத் திகழ்கின்ற இந்தச் சத்தியத்தை ஏற்றுக்கொள்வது இலகுவானதா? அல்லது ஏற்றுக்கொள்வது வாஜிபான இந்த சத்தியத்துக்குப் பதிலாக சாமான்யமான, பிரக்ஞையற்ற, தன்னளவில் ஒரு சிருஷ்டியாகவும் சிற்பமாகவும் திகழ்கின்ற, இயற்கை அல்லது காரணகாரணிகள் என்று நீங்கள் கூறும் சரக்குகளிடம் ஒட்டுமொத்த வஸ்துகளையும் படைப்பதற்குத் தேவையான எண்ணற்ற சாதனங்களைக் கொடுத்து, சர்வ ஞானமும் நுணுக்கமான பார்வையும் தேவைப்படுகின்ற மகத்தான அந்தக் காரியங்களை அவை தாமாகவே செய்துகொள்ளட்டும் என்று விட்டுவிடுவது அறிவுக்கேற்றமானதா? உண்மையில், இது எல்லா வகையான அசாத்தியப்பாடுகளையும் விஞ்சிய ஓர் அசாத்தியப்பாடு என்பதைப் புரிந்துகொள்ள முடியாதா? இந்த விடயத்தை உனது அந்த நேர்மையற்ற பகுத்தறிவின் மனசாட்சியிடமே ஒப்படைத்துவிடுகிறோம். இப்போது நிராகரிப்பாளனாக இருந்த அந்த இயற்கை வணங்கி பேச ஆரம்பித்தான்: உண்மையில் என்னை மனச்சாட்சியின் பக்கம், உண்மையின் பக்கம் அழைப்பு விடுக்கிறீர். இப்போது என்னைப் பேச விடுங்கள். இன்று வரை நாம் பிழையாகச் சென்ற பாதை எண்ணற்ற அசாத்தியப்பாடுகளாலும் சிக்கல்களாலும் ஏகப்பட்ட அசௌகரியங்களாலும் அழிவுகளாலும் சூழப்பட்ட அசிங்கமானதொரு பாதையாகும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இவ்வளவு நேரமாக நீங்கள் முன்வைத்த வாதங்களைக் கேட்ட பின்னர் அணுவளவேனும் பிரக்ஞையுள்ள எந்த ஒருவனும் இயற்கையிடமோ காரணகாரியங்களிடமோ சிருஷ்டிக்கும் காரியத்தை ஒப்படைக்கமாட்டான். இது சர்வ சாத்தியமற்ற, எண்ணற்ற சிக்கல்களால் சூழப்பட்ட ஒரு சமாச்சாரமாகும் என்பதைப் புரிந்துகொள்வான். அவவாறே எல்லா வஸ்துகளையும் நேரடியாக வாஜிபுல் வுஜூத் ஆகிய ஏகனிடம் ஒப்படைப்பது வாஜிபாக, கடமையாக ஆகிவிடுகின்றது என்பதையும் உணர்ந்துகொள்வான். எனவே நானும் அல்ஹம்துலில்லாஹி அலல் ஈமான் என்று கூறி அந்த ஏகனை ஈமான் கொள்கிறேன். எனினும், ஒரு சந்தேகம் உள்ளது. அதாவது அல்லாஹ் ஒருவன் மாத்திரமே படைப்பாளன் என்பதை ஏற்று ஈமான் கொள்கிறேன். ஆனால், சில சிறிய காரணகாரியங்கள் அலட்டிக்கொள்வதற்கே தேவையற்ற சில அற்பமான வஸ்துகளின் படைப்பில் தலையீடு செய்வதும் அதன் மூலம் சிறு சிறு புகழ்ச்சிகளைப் பெற்றுக்கொள்வதும் சர்வ வல்லோன் அல்லாஹ்வுடைய மாட்சிமைக்கும் கீர்த்திக்கும் எந்தக் குறைவைத்தான் ஏற்படுத்தும்? பதில்: சில ரஸாஇல்களில் மிகவும் உறுதியாக நிறுவப்பட்டுள்ளதைப் போன்று, ஹாகிமிய்யத்தின், இறையாண்மையின் தன்மை புறத் தலையீடுகளை முற்று முழுதாக நிராகரிப்பதாகும். எந்த அளவுக்கெனில் மிகச் சிறிய ஒரு சிற்றரசனும் தனது ஹாகிமிய்யத் எல்லைக்குள் சொந்த மகனின் தலையீட்டைக்கூட ஏற்றுக்கொள்வதில்லை. தனது ஹாகிமிய்யத்தில் தலையீடு செய்து குழப்பத்தை ஏற்படுத்திவிடுவானோ என்ற பயத்தில் சில மார்க்கப் பற்றுள்ள கலீபாக்கள் கூடத் தமது அப்பாவியான பிள்ளைகளைப் பலியிட்டுள்ளனர். இவை, “ஹாகிமிய்யத்தில் புறத் தலையீட்டின் நிராகரித்தல்” என்ற விதி எந்த அளவு ஆட்சியதிகாரத்தின் அடிப்படையோடு இரண்டறக் கலந்துள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது. ஹாகிமிய்யத்தின் ஸ்திரத்தன்மை வேண்டி நிற்கும் “பங்குதாரர்களை ஏற்றுக்கொள்ளாமை” என்ற விதி ஒரு கிராமத்தில் இரண்டு தலைவர்கள், ஒரு நாட்டில் இரண்டு அரசர்கள் என்று மீறப்பட்ட சந்தர்ப்பங்களிலெல்லாம் அது மனித வரலாற்றில் ஏற்படுத்திய பாரிய அழிவுகளைக்கொண்டு தனது அசைந்து கொடுக்காத தன்மையை நிரூபித்துள்ளது. ஆம், பிறர் உதவியின்பால் தேவையுடைய மனிதனிடமே ஹாகிமிய்யத்தின் இந்தத் தன்மையானது எந்த அளவு புறத் தலையீடுகளையும் பங்குதாரர்களையும் நிராகரிக்கின்றது என்பதையும் அவன் தனது ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்காகப் படுகின்ற கஷ்டத்தையும் பார்! பின்னர் முத்லக்கான, ஹாகிமிய்யத் ருபூபிய்யத் அந்தஸ்திலும் முத்லக்கான கட்டளை அதிகாரம் உலூஹிய்யத் அந்தஸ்திலும் முத்லக்கான சுயாதீனத் தன்மை அஹதிய்யத் அந்தஸ்திலும் முத்லக்கான தன்நிறைவுத் தன்மை முத்லக்கான காதிரியத் அந்தஸ்திலும் உள்ள மாட்சிமைமிக்க வல்லோனிடம் தலையீடுகளையும் பங்கீடுகளையும் இணை துணைகளையும் நிராகரிக்கின்ற தன்மை அவனது ஹாகிமிய்யத்துக்கு எந்த அளவு அடிப்படையானதொரு தேவையாகவும் வாஜிபானதொரு பண்பாகவும் உள்ளது என்பதை ஒப்பிட்டுக்கொள்ள முடியுமாயின் ஒப்பிட்டுக்கொள். வினாவின் இரண்டாவது பகுதி; சில காரணகாரியங்களுக்குச் சில சிறிய வஸ்துகள் தமது நன்றியைத் தெரிவிப்பதால், அதாவது வணக்கத்தைச் செலுத்துவதால் அணுவிலிருந்து அண்டசராசரங்கள் வரை அனைத்தாலும் நன்றிகளும் வணக்கங்களும் சமர்ப்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாஜிபுல் வுஜூத் ஆகிய அல்லாஹ்வுக்கு என்ன குறை ஏற்பட்டுவிடப்போகின்றது என்பதாகும். பதில்: இந்தப் பிரபஞ்சத்தின் சர்வ ஞானமிக்க படைப்பாளன் பிரபஞ்சத்தை ஒரு விருட்சமாகப் படைத்து, அதில் மிகவும் பரிபூரணத்துவமான கனிகளாக ஜீவ இனங்களையும் ஜீவ இனங்களுக்கு மத்தியில் மிக விசாலமான உள்ளடக்கங்களைக் கொண்ட படைப்பாக மனிதனையும் ஆக்கியுள்ளான். இப்படிப்பட்ட மனிதன் படைக்கப்பட்டதன் மூல நோக்கமாகவும் அவனது வாழ்க்கையின் விளைவாகவும் கனியாகவும் இருப்பது நன்றியும் வணக்கமும் ஆகும். அவ்வாறிருக்கும் போது முத்லக்கான ஹாகிமியத்தை உடைய, இணை துணைகளில் தேவையற்ற, தன்னை அறிமுகப்படுத்தி நேசிக்கச் செய்வதற்காகப் பிரபஞ்சத்தையே படைத்த வாஹிதுல் அஹத் ஆகிய அல்லாஹ் பிரபஞ்ச விருட்சத்தின் கனியாகிய மனிதனையும் மனிதனின் மிக உன்னதமான கனியாகிய நன்றி, வணக்கம் என்பவற்றையும் வேறு கரங்களில் தாரைவார்க்க அனுமதிப்பானா? தனது ஞானத்துக்கு முற்றிலும் முரணான அமைப்பில் படைப்பின் விளைவும் பிரபஞ்சத்தின் கனியும் அர்த்தமற்ற பதர்களைப் போல் ஆகிச் செல்ல அனுமதிப்பானா? தனது ஹிக்மத்தினதும் ருபூபிய்யத்தினதும் நிராகரிப்புக்கு வழிவிடுகின்ற வகையில் படைப்புகளின் வணக்கங்கள் அற்ப வஸ்துகளுக்கு வழங்கப்படுவதை ஏற்று, அதற்கு அனுமதியளிப்பானா? அவ்வாறே, இத்தனை மகத்தான இயக்கங்கள், செயற்பாடுகள் மூலம் தன்னை அறிமுகப்படுத்தி, நேசிக்கச் செய்கின்ற அந்த ரப்புல் ஆலமீன் தனது மிகச் சிரேஷ்டமான படைப்பின் நன்றிகளும் நன்றிக் கடன்களும் முஹப்பத்தும் வணக்கமும் அற்பமான காரணகாரியங்களுக்குச் செல்வதை அனுமதித்துத் தான் மறக்கடிக்கப்பட்டுச் செல்வதற்கும் பிரபஞ்சத்திலிருக்கும் மிக உன்னதமான நோக்கம் நிராகரிக்கப்பட்டுச் செல்வதற்கும் இடமளிப்பானா? இயற்கை வழிபாட்டிலிருந்து மீண்டு வந்த நண்பனே! இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நீயே தீர்மானித்துக்கொள்! அந்த நண்பன் “அல்ஹம்துலில்லாஹ்! எனது இந்த இரண்டு சந்தேகங்களும் நிவர்த்தி செய்யப்பட்டுவிட்டது. கூடவே அல்லாஹ்வுடைய வஹ்தானியத்துக்கும் அவன் ஒருவனே வணக்கத்துக்குத் தகுதியானவன் என்பதற்கும் அவனைத் தவிர வணக்கத்துக்குரிய வேறு யாரும் கிடையாது என்பதற்கும் மிகப் பலம்வாய்ந்த இரண்டு அத்தாட்சிகளை முன்வைத்தீர்கள். அவற்றை நிராகரிப்பது சூரியனையும் பகல் பொழுதையும் நிராகரிப்பதைப் போன்றதொரு பிடிவாதத்தனமாகும்” என்று கூறினான்.
இயற்கைவாதக் குஃப்ரிய சிந்தனையிலிருந்து மீண்டு ஈமான் கொண்ட அந்த மனிதன் கூறுகிறான்: அல்ஹம்துலில்லாஹ்! எனது சந்தேகங்கள் தீர்ந்து விட்டன. வெறுமனே அறிந்துகொள்ள ஆவல் கொள்ளும் ஒருசில வினாக்கள் உள்ளன. முதலாவது வினா: சோம்பேறிகளும் தொழுகையைப் புறக்கணிப்பவர்களும் கூறுவதைச் செவிமடுக்கிறோம்; அதாவது “சத்திய இரட்சகன் அல்லாஹ்வுக்கு எமது வணக்க வழிபாடுகளில் என்ன தேவை உள்ளது? குர்ஆன், வணக்க வழிபாடுகளைப் புறக்கணிப்பவர்களை மிகக் கடுமையான, காரசாரமான தோரணையில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நரகப் படுகுழி போன்ற பயங்கரமானதொரு தண்டனையைக்கொண்டு அவர்களை அச்சுறுத்துகின்றது. இவ்வாறு எத்தகைய முக்கியத்துவமுமற்ற சிறியதொரு தவறுக்காக இந்த அளவு கடுமையைப் பிரயோகிப்பது நடுநிலையும் இஸ்திகாமத்தும் நீதியும் பொதியப்பெற்ற குர்ஆனிய வசனங்களுக்கு எவ்வாறு பொருத்தமாக இருக்க முடியும்? பதில்: ஆம்! சத்திய இரட்சகன் அல்லாஹ் உனது வணக்க வழிபாடுகளோ அல்லது வேறு எந்த ஒன்றின் மீதோ எவ்விதத் தேவையும் அற்றவனாவான். ஆனால், நீயோ அந்த வணக்க வழிபாடுகளில் தேவை உடையவனாக இருக்கின்றாய். நீ ஆன்மீக ரீதியில் நோய்வாய்ப்பட்டவனாக இருக்கின்றாய். வணக்க வழிபாடுகள் ஆன்மீக ரீதியான பிணிகளுக்கான சஞ்சீவி போன்ற நிவாரணமாகும் என்பதை ஏராளமான ரஸாஇல்களில் நிறுவியுள்ளோம். எனவே, கருணையுள்ளம் கொண்ட ஒரு வைத்தியர், பயனளிக்கக்கூடிய ஒரு மருந்தை உட்கொள்ளுமாறு ஒரு நோயாளியை வலியுறுத்தும் போது, அந்த நோயாளி வைத்தியரைப் பார்த்து “என்னை இவ்வாறு வற்புறுத்துவதற்கு உங்களுக்கு என்னதான் தேவை உள்ளது?” என்று கேட்டால், அந்தக் கேள்வி எந்த அளவு அர்த்தமற்றது என்பதைப் புரிந்துகொள்வீர்கள். ஆனால், இபாதத்தைப் புறக்கணிப்பவர்களுக்குக் குர்ஆன் முன்வைக்கும் பயங்கர அச்சுறுத்தல்களுக்கும் கடுமையான தண்டனைகள் பற்றிய எச்சரிக்கைகளுக்கும் பின்னாலுள்ள தாத்பரியம் வேறாகும். உதாரணமாக, ஒரு மன்னர் தனது ஆட்சியதிகாரத்துக்குக் கீழுள்ள மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அவர்களது உரிமைகளில் அத்து மீறுபவர்களுக்குக் குற்றத்தின் அளவைப் பொறுத்து கடினமான தண்டனைகளை வழங்குவார். அவ்வாறே, இபாதத்தையும் தொழுகையையும் புறக்கணிக்கும் மனிதன் நித்திய அரசன் அல்லாஹ்வின் ஆட்சியதிகாரத்துக்குக் கீழுள்ள அவனது ஒட்டுமொத்த அடியார்களின் உரிமைகளிலும் பாரியதொரு பங்கத்தை ஏற்படுத்தி, மானசீகமானதோர் அக்கிரமத்தைப் புரிகிறான். ஏனெனில், படைப்பினங்கள் அனைத்தும் தமது படைப்பாளனுக்குத் துதி செய்கின்ற அடியார்களாகும். அவை தமது படைப்பாளனுக்குச் செலுத்தும் வணக்க வழிபாடுகள் மூலமாகவும் தஸ்பீஹ்கள் மூலமாகவுமே பரிபூரணத்துவத்தை அடைகின்றன. எனவே, தனது இபாதத்களைப் புறக்கணிப்பவன் ஏனைய வஸ்துகளின் இபாதத்களைக் கண்டுகொள்ள மாட்டான். உண்மையில் அவனால் கண்டுகொள்ளவும் முடியாது. சிலவேளை நிராகரிக்கவும் செய்வான். இந்த நிலையில் உள்ள மனிதன், தத்தமது வணக்க வழிபாடுகள், துதிகள் மூலம் உயர்வான அந்தஸ்துகளையு கீர்த்தியையும் பெற்று, தம்மளவில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் இறை கடிமாகவும் இறை நாமங்களின் பிரதிபலிப்பாகவும் திகழும் படைப்பினங்களை அவற்றின் உன்னத அந்தஸ்துகளிலிருந்து தாழ்த்தி, சாமான்யமான, இழிந்த, அர்த்தமற்ற, வெற்றுச் சடங்களாகச் சித்திரிப்பதன் காரணமாக வஸ்துகள் அனைத்தையும் சிறுமைப்படுத்தி அவமரியாதை செய்கிறான். அவற்றின் மகத்துவத்தை நிராகரித்து அவற்றுக்கு அநியாயம் இழைக்கின்றான். ஆம்! ஒவ்வொருவரும் உலகைத் தான் அணிந்துள்ள கண்ணாடியூடாகவே பார்ப்பான். சத்திய இரட்சகன் அல்லாஹ் மனிதனைப் பிரபஞ்சத்துக்கான ஓர் அளவையாகவும் மாதிரியாகவும் படைத்துள்ளான். ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகில் பிரத்தியேகமான ஓர் உலகத்தை வழங்கியுள்ளான். அந்த உலகின் நிறத்தை அந்த மனிதனின் நம்பிக்கைக் கோட்பாட்டின்படியே அவனுக்குக் காண்பிக்கிறான். உதாரணமாக, நம்பிக்கை இழந்து, கவலையில் மூழ்கி அழுது புலம்புகின்ற ஒரு மனிதனுக்கு எல்லா வஸ்துகளும் எதிலும் பிடிப்பற்று, நம்பிக்கையிழந்து போய் அழுதுகொண்டிருப்பதாகவே புலப்படும். அவ்வாறே, மிகுந்த மகிழ்ச்சியோடும் கலகலப்பாகவும் நம்பிக்கையோடும் சிரிக்கின்ற ஒரு மனிதன் பிரபஞ்சத்தையும் மகிழ்ச்சியாலும் கலகலப்பாலும் நிரம்பிய குதூகலமான ஓர் இடமாகக் காண்பான். அவ்வாறே, சீறிய சிந்தனையோடு உண்மையான இபாதத்திலும் தஸ்பீஹிலும் ஈடுபடும் மனிதனும் படைப்புகளின் உண்மையான, தூய இபாதத்துகளையும் தஸ்பீஹ்களையும் ஓரளவேனும் உணர்ந்துகொள்வான்; கஷ்ஃபுச் செய்துகொள்வான். பொடுபோக்கு அல்லது நிராகரிப்பின் காரணமாக இபாதத்தைப் புறக்கணிக்கின்ற மனிதனோ வஸ்துகளை அவற்றின் பூரணத்துவத்துக்குப் பின்னாலுள்ள சத்தியத்துக்கு முற்றிலும் முரணான அமைப்பில் சித்திரித்து, அவற்றின் உரிமைகள் மீதும் அந்தஸ்தின் மீதும் மானசீகமான ஓர் அக்கிரமத்தைச் செய்கிறான். மேலும், மனிதன் தனக்குத் தானே அதிபதி அல்ல என்பதால் தொழுகையைப் புறக்கணிக்கின்ற மனிதன் தனது அதிபதியின் ஓர் அடிமையாகத் திகழும் தனது சொந்த நஃப்ஸுக்கே அநியாயம் இழைக்கிறான். எனவே, அந்த நஃப்ஸின் அதிபதி அந்த அடியானின் உரிமையை நஃப்ஸுல் அம்மாராவிடமிருந்து பாதுகாப்பதற்காக மிகக் கடுமையாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறான். மேலும் படைப்பின் நோக்கமாகவும் விளைவாகவும் திகழும் இபாதத்தைப் புறக்கணிப்பது தெய்வீக ஞானத்தையும் ரப்பானிய நாட்டத்தையும் துஷ்பிரயோகம் செய்து அத்துமீறுகின்ற செயலாக ஆகிவிடுவதால் தண்டனைக்குரிய குற்றமாகிவிடுகின்றது. சுருக்கமாக: இபாதத்தைப் புறக்கணிப்பவன் தனது நஃப்ஸுக்கே அநியாயம் இழைக்கிறான். அந்த நஃப்ஸோ சத்திய இரட்சகனின் அடியானாகும். அவ்வாறே, இபாதத்தைப் புறக்கணிப்பது பிரபஞ்சத்தின் பூரணத்துவத்துக்குப் பங்கமாகவும் அந்த வகையில் அதன் உரிமையில் அத்துமீறலாகவும் உள்ளது. ஆம்! குஃப்ர் படைப்பினங்களைச் சிறுமைப்படுத்துகின்ற ஒரு செயலாக இருப்பதைப் போன்றே இபாதத்தைப் புறக்கணிப்பதும் கூட பிரபஞ்சத்தின் பூரணத்துவத்தை நிராகரிக்கின்ற செயலாகும். மேலும், இறை ஞானத்தை நிந்தனை செய்து அதில் அத்துமீறுகின்ற ஒரு செயலாக இருப்பதால், அது கடுமையான எச்சரிக்கைகளுக்கும் பயங்கரமான தண்டனைகளுக்கும் தகுதியான ஒரு செயலாக ஆகிவிடுகின்றது. ஆம்! அவர்கள் அடைந்துகொள்ளும் இந்தத் தகுதியையும் மேலுள்ள ஹகீகத்தையும் பிரஸ்தாபிப்பதற்காக சங்கைமிக்க குர்ஆன் அற்புதமானதோர் அமைப்பில் அந்தக் கடுமையான நடையும் தொணியையும் தெரிவு செய்து சொல்லாட்சி விதிகள் வேண்டி நிற்கின்ற பிரகாரம் முற்றிலும் நிலைமையின் வேண்டுதலுக்குப் பொருத்தமான வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றது. இரண்டாவது வினா இயற்கைவாதத்திலிருந்து மீண்டு ஈமான்கொண்ட அந்த மனிதன் மேலும் கூறுகிறான்: எல்லா வஸ்துகளும் எல்லாக் கோணங்களிலும் எல்லாக் காரியங்களிலும் எல்லா நகர்வுகள், அசைவுகளிலும் எல்லா நிலைமைகளிலும் இறை நாட்டத்துக்கும் இறை வல்லமைக்கும் கீழ் இருக்கின்ற விடயம் உண்மையில் மிக உன்னதமான, மிகச் சங்கையான ஒரு சத்தியமாகும். அதன் உன்னதத் தன்மை காரணமாக எமது குறுகிய அறிவால் கிரகித்துக்கொள்ள முடியாதுள்ளது. என்றாலும் எமது கண்களுக்கு முன்னால் தெரிகின்ற இந்த எல்லையில்லாத ஏராளத் தன்மையும் வஸ்துகளின் வெளிப்பாட்டில் புலப்படுகின்ற அபரிமிதமான இலகுத் தன்மையும் நீங்கள் ஏலவே முன்வைத்த அத்தாட்சிகளில் நிரூபிக்கப்பட்டதற்கிணங்க வஸ்துகளின் சிருஷ்டிப்பு விடயத்தில் ஏகத்துவப் பாதையில் மட்டுமே காணப்படுகின்ற சுலபமும் அந்த சுலபத்தை நேரடியாகத் தெளிவுபடுத்துகின்ற مَا خَلْقُكُمْ وَلاَ بَعْثُكُمْ اِلاَّ كَنَفْسٍ وَاحِدَةٍ * وَمَا اَمْرُ السَّاعَةِ اِلاَّ كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ போன்ற குர்ஆனிய வசனங்களும் என்று அனைத்துமே அந்த உன்னதச் சத்திய எந்த அளவு ஏற்றுக்கொள்ளப்படத்தக்கது என்பதையும் அறிவுக்கேற்புடையது என்பதையும் நிரூபிக்கின்றன. இதோ இந்த சுலபத் தன்மையில் இருக்கின்ற இரகசியமும், தாத்பரியமும் என்ன? பதில்: இருபதாவது கடிதத்தின் பத்தாவது உரையாகிய وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ என்ற வசனத்துக்கான விளக்கத்தில் இந்த இரகசியம் மிகத் தெளிவான, மிக உறுதியான, அறிவுக்கு மிக இணக்கமான அமைப்பில் விளக்கத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்தக் கடிதத்தின் இறுதியில் வருகின்ற இணைப்பில் இந்த விடயம் இன்னும் தெளிவாக நிறுவப்பட்டுள்ளது. அதாவது, ஒட்டுமொத்த வஸ்துகளும் ஏக படைப்பாளனாகிய அல்லாஹ்வுடன் பிணைக்கப்படும் போது ஒட்டுமொத்த வஸ்துகளும் ஒரு வஸ்தின் அளவு சுலபமானதாக ஆகிவிடுகின்றது. மாறாக, அந்த ஏக படைப்பாளனுடன் பிணைக்கப்படாத போது, ஒரு வஸ்தின் படைப்பு ஒட்டுமொத்த வஸ்துகளின் அளவும், ஒரு விதை ஒரு விருட்சத்தின் அளவும் சிரமமும் சிக்கலும் நிறைந்ததாக மாறிவிடுகின்றது. அதையே, ஏக படைப்பாளனாகிய அல்லாஹ்விடம் ஒப்படைத்துவிட்டால் பிரபஞ்சத்தின் படைப்பு ஒரு விருட்சத்தின் அளவும் ஒரு விருட்சத்தின் படைப்பு ஒரு விதையின் அளவும் சுவனத்தின் படைப்பு ஒரு வசந்தத்தின் அளவும் ஒரு வசந்தத்தின் படைப்பு ஒரு பூவின் அளவும் சுலபமானதாக மாறிவிடும். அத்துடன், நாம் கண்களுக்கு முன்னால் காண்கின்ற இந்த எல்லையற்ற தாராளத்தன்மை, மலிவு, ஒவ்வோர் இனத்திலும் சர்வசாதாரணமாக, மிகச் சுலபமான அமைப்பில் ஏராளமான அங்கத்தவர்கள் காணப்படுவது, அவை எந்த அளவு அதிகமாக இருந்தாலும் மிக வேகமாக, மிகச் சுலபமாக, மிகுந்த ஒழுங்கு நேர்த்தியோடும் கலையம்சங்களோடும் வெளிப்படுவதற்குப் பின்னாலுள்ள தாத்பரியங்களைக் காண்பிக்கின்ற நூற்றுக்கணக்கான உதாரணங்களுள் ஏனைய ரஸாயில்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ள ஓரிரு உதாரணங்களை இவ்விடத்தில் சுருக்கமாகக் குறிப்பிடுகிறோம். உதாரணமாக, நூறு சிப்பாய்களை ஒரே இராணுவத் தளபதியின் கட்டளைக்குக் கீழ் வழங்குவது, ஒரு சிப்பாயை நூறு தளபதிகளின் கட்டளைக்குக் கீழ் வழங்குவதைவிட நூறு மடங்கு இலகுவானதாகும். அவ்வாறே ஒரு படைக்குத் தேவையான இராணுவத் தளபாடங்கள் ஒரே மன்னரின் கட்டளைக்கமைய, ஒரே மத்திய நிலையத்தின் தீர்மானங்களின் பிரகாரம், ஒரே சட்டதிட்டங்களுக்குக் கீழ், ஒரே தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் போது உண்மையில் அந்த எல்லாத் தளபாடங்களும் ஒரு சிப்பாய்க்குத் தேவையான தளபாடங்களின் அளவு சுலபமாக மாறிவிடுகின்றது. அவ்வாறே ஒரு சிப்பாய்க்குத் தேவையான ஆயுதங்களும் தளபாடங்களும் ஏராளமான மையங்களுக்கும் ஏராளமான தொழிற்சாலைகளுக்கும் ஏராளமான தளபதிகளுக்கும் வழங்கப்பட்டால் அது உண்மையில் ஒரு படைக்குத் தேவையான தளபாடங்களின் அளவு சிரமசாத்தியமானதாக மாறிவிடுகின்றது. ஏனெனில், ஒரே சிப்பாய்க்குத் தேவையான ஆயுதங்களையும் தளபாடங்களையும் உற்பத்தி செய்வதாக இருந்தாலும் கூட அதற்கும் முழுப்படைக்கும் தேவையான தளபாடங்களை உற்பத்தி செய்யத் தேவைப்படும் இயந்திரங்களும் தொழிற்சாலைகளும் அவசியப்படுகின்றன. மேலும், வஹ்தத்தில் பொதிந்துள்ள தாத்பரியத்துக்கமைய ஒரு விருட்சத்துக்கு ஒரே வேரிலிருந்து, அதாவது ஒரே மையத்திலிருந்து ஒரே சட்டதிட்டங்களின் பிரகாரம் அதன் வாழ்வுக்குத் தேவையான கனிமங்கள் வழங்கப்படும் போது ஆயிரக்கணக்கான கனிகளைத் தருகின்ற அந்த விருட்சம் ஒரு கனியின் அளவு சுலபமானதாக ஆகுவதை நாளாந்தம் காண்கின்றோம். ஒரு பேச்சுக்கு வஹ்தத் என்ற ஏகத்துவத்திலிருந்து பன்மைக்குச் செல்வோமானால், அதாவது ஒவ்வொரு கனிக்கும் தேவையான வாழ்வாதாரங்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து வழங்கப்பட்டால் ஒவ்வொரு கனியும் அந்த விருட்சத்தின் அளவு சிரமசாத்தியமானதாக மாறிவிடும். ஏன் அந்த் விருட்சத்துக்கான ஒரு மாதிரியாகவும் அந்த மரத்தின் உள்ளடக்கமாகவும் திகழ்கின்ற ஒரு விதை கூட அந்த மரத்தின் அளவு சிரமசாத்தியமானதாக மாறிவிடும். ஏனெனில், ஒரு மரத்தின் வாழ்வுக்குத் தேவையான வாழ்வாதாரங்கள் அனைத்தும் அதன் ஒவ்வொரு விதைக்கும் கூட அவசியப்படுகின்றது. ஆம்! இந்த உதாரணங்களைப் போன்ற நூற்றுக்கணக்கான உதாரணங்கள் வஹ்தத் என்ற ஏகத்துவப் பாதையில் மட்டற்ற சுலபத்தன்மையோடு மெய்ந்நிலையை அடைகின்ற எண்ணற்ற வஸ்துகள், பன்மையில் அதாவது ஷிர்க்கில் அசாத்தியமானவையாக மாறிவிடுகின்றன. வேறு ரஸாஇல்களில் இந்த சத்தியம் பகற்பொழுதைப் போன்று தெளிவானதாக நிறுவப்பட்டுள்ளதால் அவற்றை விண்ணப்பிக்குமாறு கூறிக்கொண்டு இவ்விடத்தில் அறிவியல் அடிப்படையிலும் விதியின் அடிப்படையிலும் இறை வல்லமையின் அடிப்படையிலும் அந்த சுலபத்தன்மைக்குப் பின்னாலுள்ள மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தாத்பரியத்தைத் தெளிவுபடுத்துகின்றோம்: நீயும் ஓர் இருப்பாவாய். உனது படைப்பை நித்திய வல்லோன் ஆகிய அல்லாஹ்விடம் ஒப்படைத்தால் இல்லாமையிலிருந்த உன்னை தனது எல்லையற்ற வல்லமையைக்கொண்டு ஒரே கட்டளை மூலம் ஒரு தீக்குச்சை எரிப்பதைப் போன்று கனப்பொழுதில் படைத்துவிடுவான். ஆனால், நீ அவனிடம் ஒப்படைக்காமல் சடரீதியான காரணகாரியங்களிடமும் இயற்கையிடமும் ஒப்படைத்தால் இந்தப் பிரபஞ்சத்தின் ஒரு சிறு மாதிரியாகவும் கனியாகவும் சாராம்சமாகவும் திகழும் நீ, உன்னையே படைத்துக்கொள்வதற்கும் உனது உடலில் பிரபஞ்சத்தின் ஏதோ ஒரு தொங்கலிலிருந்து கொண்டுவரப்பட்ட பதார்த்தங்களைப் பெற்றுக்கொள்வதற்கும், பிரபஞ்சத்தின் நாலாபுறங்களிலும் சிதறிக் காணப்படும் அந்தப் பதார்த்தங்களை நுணுக்கமான கருவிகளைக்கொண்டு சேகரித்து, நுட்பமான அளவைகளைக்கொண்டு அளந்தெடுக்க வேண்டிய தேவை ஏற்படுகின்றது. ஏனெனில், சடரீதியான காரணிகளால் வெறுமனே சேகரித்து ஒன்றுசேர்ப்பதன் மூலம் மாத்திரமே ஒரு பொருளை ஆக்க முடிகின்றது. அவற்றால் இல்லாத ஒன்றை இல்லாமையிலிருந்து உருவாக்க முடியாது என்பது புத்தியுள்ள அனைவராலும் உறுதிப்படுத்தப்பட்டதாகும். எனவே, சிறியதோர் உயிரின் அற்பமான உடலுக்குத் தேவையான அனைத்தையும் அது தானாகவே எப்பாடுபட்டேனும் முழுப் பிரபஞ்சத்திலிருந்தும் சேகரிப்பது நிர்ப்பந்தமாகிவிடுகின்றது. ஆம்! வஹ்தத்தும் தவ்ஹீதும் எந்த அளவு இலகுவானது என்பதையும் ஷிர்க்கும் வழிகேடும் எந்த அளவு அசாத்தியமானதாகவும் கடினமான ஒன்றாகவும் இருக்கின்றது என்பதையும் விளங்கிக்கொள்! அடுத்து, அறிவியல் ரீதியாகவும் கூட எல்லையில்லாத ஓர் இலகுத்தன்மை காணப்படுகின்றது. அதாவது, கத்ர் எனப்படும் விதியானது அறிவின் ஒரு வகையாகும். அந்த விதியானது ஒவ்வொரு பொருளுக்குமான ஆத்மார்த்தமான ஓர் அச்சை ஓர் அளவையை நிர்ணயிக்கும். அது, அந்த வஸ்தின் உடலுக்கான ஒரு திட்டமாகவும் ஒரு நெறிப்படுத்தலாகவும் அமையும். குத்ரத் அந்த வஸ்த்தை சிருஷ்டிக்கும் போது, விதியால் நிர்ணயிக்கப்பட்ட அந்த அளவையின் மீது சிருஷ்டிக்கும். ஆனால் அந்த வஸ்து அனைத்தையும் வியாபித்த, எல்லையற்ற, நித்தியமான அறிவுக்குச் சொந்தக்காரனான வல்லோன் அல்லாஹ்விடம் ஒப்படைக்கப்படாவிட்டால் ஏலவே நிறுவப்பட்டதைப் போன்று பல்லாயிரம் சிக்கல்களுக்குள்ளும் பல நூறு அசாத்தியப்பாடுகளுக்குள்ளும் சிக்கித் தவித்து வெளியேற முடியாமல் போய்விடும். ஏனெனில், அத்தகையதோர் அறிவின் மூலமும் அதன் வெளிப்பாடான விதியின் மூலமும் நிர்ணயம் செய்யப்பட்ட ஓர் அளவை இல்லையென்றிருப்பின் ஒரு சின்னஞ் சிறு உயிரின் உடலில் பல்லாயிரம் பௌதீக ரீதியான அச்சுகளைப் பயன்படுத்துவது இன்றியமையாத ஓர் அம்சமாகிவிடுகின்றது. இதோ, ஏகத்துவத்தில் எல்லையற்றதோர் சுலபத்தன்மையும் வழிகேட்டிலும் ஷிர்க்கிலும் எண்ணற்ற சிக்கல்களும் அசாத்தியப்பாடுகளும் எவ்வாறு ஏற்படுகின்றது என்ற தாத்பரியத்தை விளங்கிக்கொள். وَمَا اَمْرُ السَّاعَةِ اِلاَّ كَلَمْحِ الْبَصَرِ اَوْ هُوَ اَقْرَبُ என்ற மறை வசனம் எந்த அளவு யதார்த்தமானதும் உண்மையானதும் உன்னதமானதுமானதொரு சத்தியத்தைப் பிரகடனம் செய்கின்றது என்பதை விளங்கிக்கொள்! மூன்றாவது வினா முன்னர் எதிரியாகவும் இப்போது நண்பனாகவும் மாறி ஹிதாயத்தை அடைந்த அந்த மனிதன் மேலும் கூறுகிறான்: நவீன காலத்தைச் சேர்ந்த முன்னணி மெய்ஞ்ஞானிகள் “எந்த ஒன்றும் இல்லாமையிலிருந்து ஆக்கப்படுவதுமில்லை, இருப்பு நிலையிலிருந்து அழிந்து போவதுமில்லை. வெறுமனே சேர்தல், சிதைதல் ஆகிய தொழிற்பாடுகளே பிரபஞ்சத் தொழிற்சாலையை இயக்குகின்றன.” என்று கூறுகின்றனரே!? பதில் குர்ஆனிய ஒளியில் வஸ்துகளைப் பார்க்காத மெய்ஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை அவதானித்த போது பிரபஞ்சத்தையும் வஸ்துகளையும் கட்டமைத்து இருப்பு நிலைக்குக் கொண்டுவருவது இயற்கையாலோ காரணகாரியங்களாலோ எந்த வகையிலும் முடியாத, தீர்வே இல்லாத சிக்கல்களால் சூழப்பட்ட சர்வசாத்தியமற்ற சமாச்சாரங்களாகும் என்பதைக் கண்டுகொண்டனர். இதனால் அவர்கள் தமக்குள் இரண்டாகப் பிரிந்தனர். ஒரு பிரிவினர் குதர்க்கவாதிகளாக (ஸோஃபிஸ்டுகளாக) மாறி மனிதனை மனிதனாக்கும் பகுத்தறிவைத் துறப்பதையும் புத்தியற்ற மிருகங்களைவிட மோசமான ஒரு நிலைக்குத் தள்ளப்படுவதைக் கூடப் பொருட்படுத்தாமல் பிரபஞ்சத்தின் இருப்பை, ஏன் தமது இருப்பையே நிராகரிப்பதையும் வழிகேடர்களின் பாதையில் காரணகாரியங்களையும் இயற்கையையும் படைக்கும் சக்திகளாக ஏற்றுக்கொள்ளும் கருமத்தைவிட இலகுவாகக் கண்ட காரணத்தினால் இந்த வழிகேட்டைத் தமது பாதையாகத் தெரிவு செய்தனர். பின்னர், இரண்டாவது பிரிவினரும் பார்த்தார்கள். காரணகாரியங்களையும் இயற்கையையும் சிருஷ்டிகர்த்தாவாக ஆக்கினால் ஓர் ஈயின் அல்லது ஒரு விதையின் படைப்பில் எண்ணற்ற அசாத்தியப்பாடுகளும் சிக்கல்களும் தோன்றுவதைக் கண்டார்கள். காரணகாரியங்களிடம் அறிவியலின் அளவீடுகளுக்கு அப்பாற்பட்ட ஓர் ஆற்றலும் வல்லமையும் அறிவுஞானமும் இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுவதைக் கண்டார்கள். இவை எதுவும் சாத்தியமில்லை என்பதால் வேறுவழியின்றி, நிர்ப்பந்தமாக முன்னையவர்கள் இருப்பை நிராகரித்ததைப் போன்று இவர்களும் படைப்பை நிராகரிக்கின்ற இடத்துக்கு வந்தனர். “இல்லாமையிலிருந்து இருப்பு இல்லை” என்று கூறுகின்றனர். அவ்வாறே, அழிந்து மறைந்து சூன்யத்தை அடைவதையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருப்பதால் “இருப்புகள் இல்லாமையை அடைய முடியாது” என்றும் தீர்ப்பளிக்கின்றனர். வஸ்துகளை வெறுமனே அணுக்களின் அசைவுகள் நடத்தைகள் காரணமாகவும் எதேச்சையான நிகழ்வுகளாலும் எழுமாறான இயக்கங்களாலும் ஏற்படுகின்ற ஒரு வகைப் பிணைதல், சிதைதல் ஆகிய சுற்றுவட்டச் செயற்பாட்டின் விளைவுகளாகக் கருதிக்கொள்கின்றனர். இன்னும் புத்தி பேதலிக்காத மானுடர்களே! இதோ, இது எப்பேர்பட்ட ஓர் அறியாமை என்பதைப் பாருங்கள்! அடிமட்ட அறிவீனத்திலும் மடமையிலும் இருந்துகொண்டு தம்மை மிகச் சிறந்த அறிவாளிகளாக எண்ணிக்கொள்ளும் இவர்களின் இந்த அவல நிலையைப் பாருங்கள்! வழிகேடு, மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும் மடமைக்கும் கேலிக்கூத்துக்கும் ஆளாக்குகின்றது என்பதை இவர்களைப் பார்த்து அறிந்து, படிப்பினை பெற்றுக்கொள்ளுங்கள்! வானங்கள் பூமியை ஆறே நாட்களில் படைத்து, ஒவ்வொரு வசந்த கால ஆரம்பத்திலும் ஆறே வாரங்களில் நுண் கலையம்சங்களும் ஆழமான ஞானங்களும் பொதியப்பெற்ற ஒவ்வொரு ஜீவ உலகைப் படைக்கின்ற ஒரு நித்திய வல்லமையின், ஒரு நித்திய அறிவின் வட்டத்துக்குள் திட்டங்களும் அளவைகளும் நிர்ணயிக்கப்பட்ட, ஆனால் இன்னும் மெய்ந்நிலையை அடையாத அறிவியல் சார்ந்த இருப்புகளுக்கு -புலணாகாத ஒரு திரவியத்தின் மூலம் வரையப்பட்ட ஓர் ஓவியத்தைப் புலப்படுத்துவதற்காக அதன் மீது வேறொரு திரவியம் பூசப்படும் போது நிகழ்வதைப் போன்று- மிகச் சுலபமாக பௌதீக ரீதியான இருப்பு நிலை வழங்கப்படுகின்றது. இவ்வாறு புலனாகாத அறிவியல் சார்ந்த இருப்புக்குப் பௌதீக ரீதியான இருப்பை வழங்குவதை அந்த நித்திய வல்லமையால் முடியாத காரியமாகக் கருதுவதும் படைப்பை நிராகரிப்பதும் உண்மையில் ஸோஃபிஸ்டுகளிடம் இருப்பதைவிட மிக மோசமானதோர் அறிவீனமும் மடமையுமாகும். உண்மையில், இந்த அபாக்கியசாலிகள் முத்லக்கான இயலாமையுடன் தெரிவுச் சுதந்திரத்துக்கு அப்பால் கைவசம் எதுவுமே இல்லாமல் பிர்அவ்னியத் நிலையை அடைந்த சொந்த நஃப்ஸுகளால் எந்த ஒரு பொருளையும் சூன்யத்துக்குள் தள்ளி முற்றாக இல்லாமலாக்கவோ இல்லாமையில் இருக்கும் ஒன்றை, ஏன் ஓர் அணுவையேனும் இருப்பு நிலைக்குக்கொண்டு வரவோ முடியாதிருப்பதாலும் தாம் மிகவுமே நம்பியிருக்கும் காரணகாரியங்களாலும் இயற்கையாலும் கூட இல்லாமையிலிருந்து உண்டுபண்ணும் இந்த வேலையை செய்ய முடியாதிருப்பதாலும் வெறுமனே தனது சொந்த நஃப்ஸையும் பிரபஞ்சத்தின் நஃப்ஸாகிய இயற்கையையும் அடிப்படையாக வைத்துத் தமது உச்சமட்ட மடமையின் வெளிப்பாடாக, “இல்லாமையிலிருந்து இருப்பும் இல்லை, இருப்பால் இல்லாமையை அடையவும் முடியாது” என்று தீர்ப்பு வழங்கி, தாமே வகுத்துக்கொண்ட இந்த அடிப்படையற்ற தவறான விதிக்குள் ஆதி அந்தங்களை விஞ்சிய முத்லக்கான வல்லோனையும் வரையறுக்க முற்படுகின்றனர். ஆம்! கதீரு துல்ஜலால் ஆகிய அல்லாஹ் இரண்டு வழிகளில் சிருஷ்டிக்கிறான். முதலாவது இஹ்திராஃ அல்லது இப்தாஃ எனப்படுகின்றது. அதாவது, இல்லாமையிலிருந்து, எத்தகைய முன்னுதாரணங்களுமின்றிப் படைப்பதாகும். முற்றிலும் இல்லாமையிலிருந்து மெய்ந்நிலையை வழங்கி அந்த வஸ்துக்குத் தேவையான அனைத்தையும் இல்லாமையிலிருந்தே தோற்றுவித்து அவற்றின் கரங்களில் கொடுக்கின்றான். இரண்டாவது இன்ஷாஃ எனப்படுகின்றது. நிர்மாணத்தின் மூலமும் கலையம்சங்களோடும் கட்டம் கட்டமாக, ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு கலையம்சங்களையும் தனித்துவமான சிறப்புகளையும் அதற்கே உரிய பூரணத்துவத்தையும் கொண்டதாகப் படைக்கின்றான். அதாவது தனது ஞானத்தின் பூரணத்துவத்தையும் இன்னும் பல்வேறு திருநாமங்களின் பிரதிபலிப்புகளையும் அவற்றின் தாத்பரியங்களையும் காண்பிப்பதற்காக பிரபஞ்சத்திலிருக்கும் பதார்த்தங்களிலிருந்து வஸ்துகளுள் ஒரு பகுதியை நிர்மாணித்து, ரஸ்ஸாகியத்தின் திட்டத்துக்கமைய தனது கட்டளைக்குக் கீழுள்ள அணுக்களையும் கனியங்களையும் அவற்றிள் பணிபுரிவதற்காக அனுப்பி வைக்கிறான். ஆம்! முத்லக்கான வல்லோன் இப்தாஃ, இன்ஷா என்று இரண்டு வழிகளில் சிருஷ்டிகின்றான். இருப்பை இல்லமையாக்குவதும் இல்லாமைக்கு இருப்பைக் கொடுப்பதும் அவனது வல்லமைக்கு மிக இலகுவான, மிகச் சுலபமான காரியங்களாகும். ஏன், இது சதாவும் எமது கண்களுக்கு முன்னால் நிகழ்கின்ற வெளிப்படையான ஒரு விதியாகும். ஒரு வசந்தத்தில் முந்நூறாயிரம் ஜீவ இனங்களின் வடிவங்களையும் தோற்றங்களையும் சிறப்பியல்புகளையும், ஏன் அவற்றின் அணுக்கள் தவிர்ந்த ஏனைய எல்லா நிலைமைகளையும் தன்மைகளையும் இல்லாமையிலிருந்து உண்டாக்கும் ஒரு வல்லமையைப் பார்த்து “இல்லாமைக்கு இருப்பைக் கொடுக்க முடியாது” என்று கூறும் மனிதன் இல்லாமலாக வேண்டும்!.. இயற்கைவாதத்தைத் தூக்கி எறிந்துவிட்டு சத்தியத்துக்குள் நுழைந்த அந்த மனிதன் கூறுகிறான்: சத்திய இரட்சகன் அல்லாஹ்வுக்கு அணுக்களின் எண்ணிக்கையளவு நன்றிகளும் புகழ்களும் புகழாரங்களும் உண்டாவதாக! பூர்த்தியான ஈமானை அடைந்துகொண்டேன். சந்தேகங்களிலிருந்தும் வழிகேட்டிலிருந்தும் பாதுகாப்புப் பெற்றுக்கொண்டேன். இப்போது உள்ளத்தில் எத்தகைய சஞ்சலங்களும் எஞ்சவில்லை. اَل۟حَم۟دُ لِلّٰهِ عَلٰى دٖينِ ال۟اِس۟لَامِ وَ كَمَالِ ال۟اٖيمَانِ سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ

