Uhuvvet Risalesi

The Twenty-Second Letter

This section belongs to the major work Mektubat · View complete Mektubat (39 sections) →
ஆதாரம்: risaleinur multilingual dataset, risale.site source · Risale-Nur multilingual research corpus
Risale reading plan
§1

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّح۪يمِ اِنَّ اللّٰهَ هُوَ الرَّزَّاقُ ذُو ال۟قُوَّةِ ال۟مَتٖينُ ۝ وَكَاَيِّن۟ مِن۟ دَٓابَّةٍ لَا تَح۟مِلُ رِز۟قَهَا اَللّٰهُ يَر۟زُقُهَا وَاِيَّاكُم۟ وَ هُوَ السَّمٖيعُ ال۟عَلٖيمُ ஈமான் கொண்டவர்களே! முன்னைய அத்தியாயத்தில் குரோதம் வளர்ப்பது எப்படிப்பட்ட தீங்குகளை விளைவிக்கக் கூடியது என்பதை அறிந்துகொண்டீர்கள். அவ்வாறே, பேராசையும் கூட குரோதத்தைப் போன்று இஸ்லாமிய சமூக வாழ்வுக்குப் பாரிய தீங்கு விளைவிக்கும் ஒரு கொடிய நோயாக உள்ளது என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஆம், பேராசை விரக்திக்கான காரணமாகவும் இழிவை வரவழைக்கக்கூடிய பயங்கரமானதொரு வியாதியாகவும் உள்ளது. அது நிராசையையும் வறுமையையும் கொண்டு வந்து சேர்க்கும். ஆம்! பிற சமூகங்களைவிடவும் இவ்வுலகுக்காகப் பேராசையோடும் தீராத மோகத்தோடும் அலையும் யூத சமூகம் அடைந்திருக்கும் இழிவும் அவமானமும் இந்த உண்மைக்கான பலமானதொரு ஆதாரமாகும். ஆம்! உயிரின உலகை எடுத்துக்கொண்டால் மிகவும் விசாலமான வட்டத்திலிருந்து தனியன்கள் வரை எல்லா மட்டங்களிலும் பேராசையின் மோசமான விளைவுகள் பிரதிபலிக்கின்றன. தவக்குலோடு கூடிய வாழ்வாதாரத் தேடலானது மன நிம்மதியைத் தருவதோடு எல்லா மட்டங்களிலும் அதன் அழகிய விளைவுகளையே பிரதிபலிக்கின்றது. ஆம்! ஆகாரத் தேவை உடைய உயிரினங்களுள் ஒன்றாகத் திகழும் கனி மரங்களும் தாவரங்களும் தவக்குல் நிலையில் ஆழ்ந்த ஆத்ம திருப்தியோடு, பேராசையின்றி, தமக்குரிய இடங்களில் அப்படியே இருந்துகொள்வதானது அவற்றுக்கான ஆகாரங்கள் அவற்றின் காலடி வரை கொண்டு செல்லப்படுவதற்குக் காரணமாக உள்ளது. அவை அந்த நிலையில் மிருகங்களைவிடப் பல மடங்கு அதிகமான கன்றுகளை ஈன்று பராமரிக்கின்றன. மிருகங்களோ பேராசையோடு உணவு தேடி அலைந்து கடுமையான கஷ்டங்களுக்கு மத்தியில் குறைவான ஆகாரங்களையே பெற்றுக்கொள்ள முடியுமானவையாக உள்ளன. அவ்வாறே, விலங்குகளின் உலகில் இயலாமையும் பலவீனமும் கலந்த தமது மெய்ம்மொழிகளால் தவக்குலை பிரதிபலிக்கும் இளம் கன்றுகளுக்கு முறையான, ஊட்டச்சத்துமிக்க, மிருதுவான, முழுமையான ஓர் ஆகாரம் நினையாப் புறத்தால் இறை கஜானாவிலிருந்து அனுப்பி வைக்கப்படும் போது, பேராசையுடன் உணவுக்குப் பின்னால் அலைந்து திரியும் விலங்குகள் கடுமையான கஷ்டங்களுக்கு மத்தியில் முறையற்ற விதமாக அசுத்தமான உணவுகளையே பெற்றுக்கொள்கின்றன. இது பேராசை நிராசைக்கான காரணியாகவும் தவக்குலும் மனத்திருப்தியும் இறை கருணையை ஈர்ப்பதற்கான காரணிகளாகவும் இருக்கின்றன என்பதை நிரூபிக்கின்றது. அவ்வாறே, மனித சமூகங்களுக்கு மத்தியில் பிற சமூகங்களைவிட பேராசையோடும் தீராத மோகத்தோடும் உலகத்தைப் பற்றிக் கொண்டு, உலக வாழ்வோடு தம்மை முழு மொத்தமாகப் பிணைத்துக் கொண்ட யூத சமூகம் கடுமையான கஷ்டங்களுக்கு மத்தியில் ஹராமான வட்டியின் மூலம் சம்பாதித்துக் கொண்ட செல்வத்தால் -குறித்த ஒரு காலத்துக்கு அந்த செல்வத்தைக் கட்டிக் காத்து அதற்குக் காவலனாக இருப்பதற்கு அப்பால்- தம்மளவில் வெறுமனே மிகச் சொற்பமானதையே அனுபவிக்க முடியுமாக உள்ளனர். மறுபுறம் அந்தச் செல்வத்தைப் ஈட்டிக் கொள்வதற்காக -பேராசையின் விளைவாக- நயவஞ்சகம், வட்டி, பிரிவினை போன்ற மிக மோசமான கருவிகளைப் பயன்படுத்துகின்ற காரணத்தினால் பிற சமூகங்களிடமிருந்து மிகுந்த கேவலத்தையும் துன்பங்களையும் புறக்கணிப்புகளையும் இன அழிப்புக்களையும் வரலாறு முழுவதும் அனுபவித்து வந்துள்ளனர். இவர்களின் இந்த நிலை பேராசை அழிவுக்கும் இழிவுக்குமான மூலமாக உள்ளது என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கின்றது. மேலும், “பேராசை பெரு நஷ்டம்” என்பது முதுமொழியாகவும் ஒட்டுமொத்த மனித சமூகங்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொது உண்மையாகவும் மாறுகின்ற அளவுக்கு பேராசைக்காரர்கள் நஷ்டத்தையே அடைந் வந்துள்ளனர். யதார்த்தம் இதுவென்பதால், மிகையாகப் பொருள் தேடும் ஆசை இருந்தால் பேராசையோடும் மோகத்தோடும் அவாவோடும் அன்றி மனத்திருப்தியோடும் தவக்குலோடும் பொருள் தேடு. வருகின்ற பொருள் நிறைவாக வந்து சேரட்டும். மனத்திருப்தி உடையவர்களுக்கும் பேராசைக்காரர்களுக்கும் உள்ள வேறுபாடு பின்வரும் இரண்டு மனிதர்களை ஒத்ததாகும்: இரண்டு மனிதர்கள் பெரிய மனிதர் ஒருவரின் மாளிகைக்குச் செல்கின்றனர். ஒருவன் உள்ளத்தில் “என்னை அந்தப் பெரியவர் ஏற்றுக்கொண்டு, வெளியில் வீசும் குளிர் காற்றிலிருந்து பாதுகாப்புத் தருவதொன்றே போதுமானது; சற்று ஓய்வெடுத்துக்கொள்வதற்காக மிகக் கீழுள்ள நிலக்கீழ் மாடியில் ஒரு சாய்மானத்தை தந்தால்கூட அது அவர் எனக்குச் செய்யும் மிகப் பெரிய புண்ணியமாக இருக்கும்” என்று நினைத்துக்கொள்கிறான். இரண்டாவது மனிதனோ, ஏதோ அந்த மாளிகையில் தனக்கும் உரிமை உள்ளது போன்ற தோரணையில், எல்லோரும் தனக்குப் பணிவிடை செய்யக் கடமைப்பட்டுள்ளனர் என்ற நினைப்பில் மிக மேல் மாடியிலிருக்கும் அழகிய படுக்கையறையில் கண் வைத்தவனாக பேராசையோடு அந்த மாளிகையினுள் நுழைகிறான். நுழைந்த மாத்திரத்தில் தனது பார்வையை உயர் இடங்களை நோக்கி உலாவவிடுகிறான். ஆனால், அந்தப் பெரியவர் அவனை அழைத்துச் சென்று கீழ்மாடியில் அமர வைத்தார். இதற்குக் கூட நன்றி செலுத்துவது அவசியமாக இருக்கின்ற போது அவனோ நன்றிக்குப் பதிலாக மனதால் தூற்றுகிறான். நன்றி ஒருபக்கமிருக்க வீட்டுரிமையாளரை உள்ளுற முறைப்பட்டுக்கொள்கிறான். அவரும் அவனோடு ஒவ்வாமனதோடு நடந்துகொள்கிறார். முதலாமவனோ மிகுந்த பணிவோடு மாளிகையினுள் நுழைகிறான். மிகவும் கீழ் மாடியிலிருக்கும் சாய்மானத்தை ஓய்வெடுத்துக்கொள்வதற்காகக் கேட்கிறான். அவனுடைய அந்த உயர்ந்த மனத் திருப்தியுடன் கூடிய நடவடிக்கை அந்தப் பெரியவரை மிகவும் கவர்கின்றது. அவனை ஓய்வெடுப்பதற்காக மேல் மாடியிலுள்ள படுக்கையறைக்கு அழைத்துச் சென்றார். இதனால் அவனது நன்றியுணர்வு மென்மேலும் அதிகரித்ததால், அவன் மீதுள்ள அந்தப் பெரியவரின் நேசமும் அதிகரித்தது. ஆம்! இந்த உலகம் அர்ரஹ்மானுடைய ஒரு மாளிகையாகும். பூமிப் பரப்பானது ஓர் அருள்பாலிக்கப்பட்ட உணவு விரிப்பாகும். ஆகாரங்களும் வாழ்வாதாரங்களும் மாடிகளைப் போன்று பல்வேறு படித்தரங்களைக் கொண்டதாகும். ஆகையால், இந்த மாளிகையில் நிகழும் சிறி சிறு நிகழ்வுகளிலும் கூட அனைவரும் பேராசையின் எதிர் விளைவுகளை அனுபவிப்பர். உதாரணமாக, இரண்டு யாசகர்களுக்கு மத்தியில் பேராசையோடு வற்புறுத்திக் கேட்கும் யாசகனைப் புறந்தள்ளிவிட்டு ஓர் ஓரமாக இருந்து அமைதியாக யாசிக்கும் யாசகன் மீது இரக்கப்பட்டு அவனுக்கு உதவி செய்ய அனைவரும் உள்ளத்தால் முன்வருவர். அவ்வாறே, நள்ளிரவில் உனது தூக்கம் கலைகின்றது. மீண்டும் தூங்க நாடினால் பொருட்படுத்தாது இருந்துவிடு! தூக்கம் உடனே தானாக வந்துவிடும். மாறாக, உடனே தூக்கம் வந்துவிட வேண்டுமே என்று நொடிக்கொரு முறை பேராசைப்பட்டால் இருக்கின்ற தூக்கமும் கலைந்துவிடும். அவ்வாறே, முக்கியமான ஒரு விடயத்துக்காக ஒருவர் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறீர். அவர் சற்று தாமதித்ததால் -“இன்னும் வரவில்லையே, இன்னும் இந்த மனிதனைக் காணவில்லையே” என்று உனது அவசரப்புத்தி காரணமாக, பேராசைக் குணம் உனது பொறுமையை வெற்றி கொண்டு- இறுதிக் கணத்தில் அவ்விடம் விட்டகல்வாய். ஒரு நிமிடத்துக்குப் பிறகு அந்த மனிதன் அவ்விடம் வருவார். ஆனால், நடக்க வேண்டிய அந்த முக்கிய விடயம் நிறைவேறாது போய்விடும். இவ்வாறான நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள தாத்பரியம்: ஒரு ரொட்டியின் உற்பத்தியானது எவ்வாறு வயல், விளைச்சல், ஆலை, அடுப்பு என்பவற்றோடு தொடர்புபட்டுள்ளதோ அவ்வாறே பொருட்களின் ஒழுங்கமைப்பில் ஒரு ஞானம் பொருந்திய படிமுறை வளர்ச்சி காணப்படுகின்றது. மனிதன் பேராசை காரணமாக இந்தப் படிமுறை வளர்ச்சிக்கு உற்படாமல் செயற்பட முனைவதால், அல்லது அவற்றைப் பொருட்படுத்தாமல் அசட்டை செய்வதால் நேர்த்தியான அந்த ஒழுங்கில் உள்ள உணர முடியாத உள்ளார்ந்த படிக்கட்டுக்களைப் புறக்கணிக்கிறான். இதனால் ஒன்றில் இடறிக் கீழே வீழ்வான். அல்லது படிமுறைகள் பூரணப்படுத்தப்படாமையால் அல்லது முழுமை பெறாமையினால் இலக்குப் பிழைக்கும்; விளைவைத் தராது. வாழ்வாதாரம் தேடும் வேட்டையில் தன்னிலை மறந்து, உலக மோகத்தால் போதைக்காளாகியிருக்கும் சகோதரர்களே! பேராசை இப்படிப்பட்ட இழப்புகளும் தரித்திரமும் நிறைந்த ஒன்றாக இருக்கும் போது, இந்தப் பாதையில் கண்ணியமிழந்து, ஹராம் ஹலால் பாராது, எல்லாவித இழிவுகளையும் பொருந்திக்கொண்டு, மறுமைக்குத் தேவையான ஏராளமான விடயங்களை எந்த நம்பிக்கையில்தான் தட்டிக் கழிக்கிறீர்கள்? அனைத்துக்கும் மேலால் இஸ்லாத்தின் ஐம்பெரும் தூண்களுள் ஒன்றான ஸக்காத்தையும் இந்தப் பேராசைக்கடிமைப்பட்டு புறக்கணித்துவிடுகிறீர்களே? ஆனால், அந்த ஸகாத் அல்லவா இரு தரப்பினருக்கும் பரக்கத்துக்கான காரணியாகவும், முஸீபத்துக்களுக்கான தடுப்பாகவும் இருக்கின்றது? ஸக்காத்தைக் கொடுக்காதவனிடமிருந்து எல்லா நிலைமைகளிலும், ஏதாவது ஒரு வழியில் ஸக்காத்தின் பெறுமதியளவு பொருள் வெளியேறிவிடும். ஒன்றில் அவசியமற்ற இடங்களில் செலவழிக்கப்படும் அல்லது ஒரு முஸீபத் வந்து அழித்துவிடும். முதலாம் உலகப் போரின் ஐந்தாம் வருடத்தில் ஆச்சரியப்படத்தக்க உண்மையான மெய்ந்நிலைக் கனவு ஒன்றில் என்னிடம் பின்வரும் வினா முன்வைக்கப்பட்டது: “முஸ்லிம்களைத் தொற்றியிருக்கும் பசி, வறுமை, வேதனைகள் என்பவற்றுக்கான காரணம் என்ன?” கனவில் அளித்த பதில்: வல்லோன் அல்லாஹ் -ஏழைகளின் துஆக்கள் எம்மை வந்தடைந்து அவர்களது வெறுப்பும் பொறாமையும் எம்மைவிட்டும் அகன்றுவிடட்டும் என்பதற்காக- தான் அருளியவற்றுள் சில வகைப் பொருட்களிலிருந்து பத்தில் ஒன்றையும் இன்னும் சில பொருட்களிலிருந்து நாற்பதில் ஒன்றையும் எம்மிடம் கேட்டான். நாமோ பேராசை காரணமாக கஞ்சத்தனம் காட்டி அதைக் கொடுக்கவில்லை. இறுதியில் சேர்ந்து பெருகிய முன்னைய வருடங்களின் ஸக்காத்தையும் சேர்த்து நாற்பதில் முப்பதையும், பத்தில் எட்டையும் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டான். இறை ஞானத்தின் தீர்ப்பு அவ்வாறு அமைந்தது. அவ்வாறே, ஒவ்வொரு வருடமும் வெறுமனே ஒரு மாதம் எழுபது தாத்பரியங்கள் பொதிந்த ஒரு விரதத்தை எம்மிடம் எதிர்பார்த்தான். நாமோ நஃப்ஸுக்கு இரக்கம் காட்டி தற்காலிகமான, ஆனால் இன்பமயமான அந்த விரதத்தைப் புறக்கணித்தோம். அந்த ஞானமிக்க வல்லோன் பாவப்பரிகாரமாக அமையத்தக்க வகையில் எழுபது கோணங்களில் தொந்தரவு நிறைந்த ஒரு வகை நோன்பை ஐந்து வருடங்கள் வலுக்கட்டாயமாக எம்மீது சுமத்தினான். மேலும், இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் ஒரே ஒரு மணித்தியாலத்தை இன்பமும் மேன்மையும் ஏராளமான பயன்களும்மிக்க ஒளிமயமான ஒரு வணக்கத்துக்காக எம்மிடம் எதிர்பார்த்தான். நாம் சோம்பல்பட்டு அந்தத் தொழுகையை நிலைநாட்டத் தவறினோம்; அந்த ஒரு மணி நேரத்தையும் மிகுதி நேரங்களோடு சேர்த்துத் தொலைத்துவிட்டோம். சர்வ வல்லமைமிக்க இரட்சகன் அதற்கான பிரதியீடாக ஐந்து வருடங்கள் கடுமையான பயிற்சிகள், கட்டளைகளூடாக எம்மை ஒரு வகை வணக்கத்தில் ஈடுபடுத்தினான்.” பிறகு விழித்துக் கொண்டு சிந்திக்க ஆரம்பித்தேன். அந்தக் கனவில் மிகவும் ஆழமானதொரு உண்மை பொதிந்துள்ளது என்பதை விளங்கிக்கொண்டேன். ரிஸாலே நூர் தொகுப்பின் இருபத்தைந்தாவது வார்த்தையில் நவீன நாகரிகத்தின் தீர்ப்புகளுக்கும் குர்ஆனிய சட்டங்களுக்கும் மத்தியிலான மதிப்பீட்டில் தெளிவுபடுத்தி, நிரூபிக்கப்பட்டுள்ளதற்கமைய மனிதனின் சமூக வாழ்வில் கோலோச்சியிருக்கும் எல்லா விதமான பண்பாட்டு வீழ்ச்சிகள், கலகங்களுக்குமான ஊற்றுக்கண் பின்வரும் இரண்டு வார்த்தைகளாகும்: ஒன்று: எனது வயிறு நிரம்பிய பிறகு அடுத்தவன் பட்டினியால் செத்தால்தான் எனக்கென்ன? இரண்டாவது: நீ உழைத்துப் போடு, நான் சாப்பிடுகிறேன். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் உயிரூட்டி வாழ்வளிப்பது, வட்டிப் பொறிமுறையும் ஸக்காத்தின் புறக்கணிப்புமாகும். ஆகவே மேற்படி இரண்டு வார்த்தைகளும் எமக்குக் காண்பிக்கின்ற அந்த இரு பெரும் சமூக வியாதிகளுக்கு நிவாரணமளிப்பதற்கான ஒரே வழி, ஸக்காத்தை ஒரு பொதுச் சட்டமாக அமுலுக்கு கொண்டு வந்து கட்டாயமாக்குவதும், வட்டியைத் தடை செய்வதுமாகும். தனிமனிதர்களுக்கிடையில் அல்லது குறித்த குழுக்களுக்கிடையில் மாத்திரமன்றி முழு மனித சமூகத்தினதும் நிம்மதியான வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான தொடர்ச்சிக்கும் அடிப்படையாக உள்ள மிக முக்கியமானதொரு தூண் ஸக்காத்தாகும். மனிதர்களில் சாதாரண வகுப்பினர், உயர் வகுப்பினர் என்று இரண்டு பிரதான வகுப்பினர் காணப்படுகின்றன. மேல் வகுப்பிலிருந்து சாதாரண வகுப்புக்குச் செல்ல வேண்டிய கருணை மற்றும் ஆதரவு என்பவற்றையும் சாதாரண வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்குச் செல்ல வேண்டிய பணிவு மற்றும் கட்டுப்பாடு என்பவற்றையும் உறுதிப்படுத்தி நிலை நாட்டுவது ஸக்காத்தாகும். ஸக்காத் இல்லாமல் போனால் மேலிருந்து அப்பாவி மக்கள் மீது கொடுங்கோன்மையும், அழுத்தமும் கோலோச்சும். சாதாரண வகுப்பினர் மத்தியிலிருந்து செல்வந்தர்களுக்கெதிராக வெறுப்பும், கலகமும் மேலோங்கும். இரண்டு வகுப்புகளுக்கும் மத்தியில் தொடர்ந்தேர்ச்சையான ஒரு பனிப்போரும் தீர்க்க முடியாத கருத்து மோதலும் நீடிக்கும். இந்நிலை இறுதியில் ரஷ்யாவில் ஏற்பட்டது போன்ற ஒரு தொழிலாளர்-முதலாளிப் போராட்டமாக வெடிக்கும். மனசாட்சியுடைய கொடை வள்ளல்களே! கருணையுள்ளம் கொண்ட பரோபகாரிகளே! உங்கள் தர்மங்கள் ஸக்காத்தாக அன்றி வேறு வடிவங்களில் அமையும் போது மூன்று பாதிப்புக்கள் இருக்கின்றன. சிலவேளை பிரயோசனமற்றதாகவும் மாறிவிடும். ஏனெனில், தர்மம் அல்லாஹ்வுக்காக வழங்கப்படாத போது அதைப் பெற்றவரை ஒருவகை உள்ளார்ந்த நன்றிக்கடனுக்கு ஆளாக்குகிறீர்கள். ஏற்கனெவே வக்கற்றவனாக இருக்கும் அந்த ஏழையை ஒரு வகை அடிமைத்தலைக்கு ஆளாக்குகிறீர்கள். அத்துடன் அவர்களின் ஏற்றுக்கொள்ளப்பட அருகதையுள்ள தூய துஆவின் பாக்கியத்தையும் இழந்துவிடுகிறீர்கள். மேலும், யதார்த்தத்தில் அல்லாஹ்வுடைய முல்க்கை அவனது அடியானுக்குக் கொண்டு சேர்க்கும் ஒரு சேவகனாக இருக்கின்ற நீங்கள், ஏதோ அந்தப் பொருளின் உண்மை எஜமானன் போன்று உங்களைக் காட்டிக்கொள்வதால் அல்லது அவ்வாறு நடந்துகொள்வதால் உங்களுக்கு அருளப்பட்ட அருட்கொடைகளுக்கு முன்னால் நன்றி கெட்ட முறையில் நடந்துகொண்ட ஒருவனாக மாறிவிடுவீர்கள். ஸக்காத்தாகக் கொடுப்பீர்களேயானால் இந்தச் சிக்கல்கள் ஏதும் இருப்பதில்லை. ஸகாத் நேரடியாகவே அல்லாஹ்வின் பெயரால் கொடுக்கப்படுகின்ற காரணத்தால் அதற்கான நன்மைகளைப் பூரணமாகப் பெற்றுக்கொள்வீர்கள்; அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்திய புனிதர்களாக மாறிவிடுவீர்கள். அந்தத் தேவையுள்ள மனிதன் உங்களுக்கு முன்னால் கூழைக்கும்பிடு போட்டுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாததன் காரணமாக அவரது சுய கௌரவம் பாதிக்கப்படாது. ஆக, உங்கள் விடயத்தில் அவரது துஆ தூய்மையானது என்பதால் அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான தகுதியைப் பெறும். ஆம், ஸக்காத்தின் அளவு அல்லது அதைவிட அதிகமான சுன்னத்தான அல்லது வேறுவிதமான தர்மங்களை வழங்கி ஒரு புறம் முகஸ்துதி, போலி அந்தஸ்து மறுபுறம் நன்றிக் கடன், இழிவுபடுத்தல் போன்ற அழிவுகளை ஏற்படுத்திக்கொள்வது சிறந்ததா? அல்லது ஸக்காத் மூலம் அந்த நற்செயல்களைச் செய்து கடமையை நிறைவேற்றுவதோடு இஹ்லாஸைப் பாதுகாத்து ஏராளமான நன்மைகளையும் ஏற்றுக்கொள்ளப்பட்ட துஆக்களையும் பெற்றுக்கொள்வது சிறந்ததா? سُب۟حَانَكَ لَا عِل۟مَ لَنَٓا اِلَّا مَا عَلَّم۟تَنَٓا اِنَّكَ اَن۟تَ ال۟عَلٖيمُ ال۟حَكٖيمُ اَللّٰهُمَّ صَلِّ وَ سَلِّم۟ عَلٰى سَيِّدِنَا مُحَمَّدٍ نِ الَّذٖى قَالَ «اَل۟مُؤ۟مِنُ لِل۟مُؤ۟مِنِ كَال۟بُن۟يَانِ ال۟مَر۟صُوصِ يَشُدُّ بَع۟ضُهُ بَع۟ضًا» وَ قَالَ «اَل۟قَنَاعَةُ كَن۟زٌ لَا يَف۟نٰى» وَعَلٰى اٰلِهٖ وَصَح۟بِهٖ اَج۟مَعٖينَ اٰمٖينَ وَال۟حَم۟دُ لِلّٰهِ رَبِّ ال۟عَالَمٖينَ

Private reading note

This note stays on this device and is never uploaded to a server.

Up to 1,200 characters